Showing posts with label பிரகலாதன். Show all posts
Showing posts with label பிரகலாதன். Show all posts

Thursday, May 07, 2009

நரசிங்கத்தின் முன்னே பிரகலாதனா? அனுமனா?

பிரகலாதக் குழந்தைக்காக அல்லவா ஓடோடி வந்தான் இறைவன்? இரணியன் எந்த இடத்தைக் காட்டி குழந்தையை என்ன கேள்வி கேட்பானோ? அது பதிலுக்கு என்ன சொல்லுமோ? என்று பதபதைத்து, பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்தது யாருக்காக? = பிரகலாதனுக்காகவா? அனுமனுக்காகவா? அட, அனுமன் எப்படிப்பா நரசிம்ம அவதாரத்தில் வந்தாரு? :)

இன்று சுதர்சன-நரசிம்ம ஜெயந்தி (May-07-2009)!
சுதர்சனம், நரசிம்மம் இரண்டுமே "உதித்த" நாள்! ஒரு திரு சிம்மம் வந்தாங்கு, "உதித்தது" உலகம் உய்ய!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சுவாதியில் வருவது நரசிம்ம ஜெயந்தி! சாந்தமே உருவான சுவாதி நட்சத்திரக் காரவுங்க, அந்த சுவாதியிலா உக்கிரமே உருவான நரசிம்மர் உதித்தார்? :)

ஹிஹி! உண்மை என்னான்னா, பலர் நினைப்பது போல நரசிம்மம் உக்கிரமே அல்ல! நரசிம்ம பூசை பண்ணவே பல பேரு பயப்படுவாய்ங்க! சுத்த பத்தமா இருக்கணும்! ஏதாச்சும் தெரியாம தப்பு ஆயிட்டாக் கூட உக்கிரமா ஆயிடுவாரு, நமக்குத் தீங்காயிரும்-ன்னு தாங்களா நினைச்சிக்கிட்டு தயங்குவாங்க! இந்தப் பயமே தேவையில்லை!

ஏன்னா நரசிம்மப் பெருமாள் (ஆளரிப் பெருமாள்) அவ்வளவு அழகு, அவ்வளவு கருணை, அவ்வளவு வாத்சல்யம்! குளிக்காம கூட நரசிம்ம பூசை பண்ணி இருக்காங்க! மரத்தின் கீழ் சதா யோகத்தில் இருந்த நம்மாழ்வார் குளித்து விட்டா நரசிம்ம பூசனை செய்கிறார்?
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி - "எங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!
என்று பயந்து பூசிக்காமல், அகம் கரைந்து ஆளரியைப் பூசிக்கிறார் நம்ம மாறன்!

கல்யாணம் ஆகப் போவுது! மணப்பந்தலில் உட்கார்ந்து இருக்கும் அந்த இளம் பொண்ணு, "உக்கிரமான" நரசிம்மத்தை நினைக்குமா? "ரொமான்டிக்" கண்ணனை நினைக்குமா? ஹிஹி! இந்தப் பொண்ணு நரசிம்ம-ஆளரியைத் தான் நினைக்கிறாள் பாருங்க! :)
"அரி-முகன்" அச்சுதன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!


இதில் இருந்து என்ன தெரிகிறது? ஐயோ நரசிம்ம உபாசனையா? நரசிம்ம பூஜையா?-ன்னு நீங்களா கண்டதையும் மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு பயப்படாதீர்கள்!
"என்ன பயந்துட்டியா? வாடா, என் கிட்டக்க வா" என்று கைகாட்டிக் கூப்பிடும் கோலம் தான் இன்றும் திருவல்லிக்கேணியில்! ஆஹ்வான ஹஸ்தம்! ஆ-வா என்னும் கைகள்!
அன்பே உருவான ஆளரி! அழகிய சிங்கன்! தெள்ளிய சிங்கன்!
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே!


பிரம்மனே,
* உன்னால் படைக்கப்பட்ட எந்த உயிராலும்
* வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ
* பகலோ, இரவோ
* வானமோ, பூமியோ
* மிருகமோ, மனிதனோ
* எந்த ஆயுதத்தாலும்...
* உயிருள்ளதோ, உயிரற்றதோ
* சிறு தேவதையோ, பெரு தேவதையோ
* தேவரோ, அசுரரோ...யாராலும் நான் சாகக் கூடாது!

எல்லா பதிவையும் ஒன்னாத் திரட்டி, ஒரே பக்கத்தில் தெரிய வைப்பது போல்...
எல்லா வரத்தையும் ஒன்னாத் திரட்டி, ஒரே லபக்கில் வாங்க நினைத்த நம்ம "அறிவாளி" தான் இரணியகசிபு! அவன் தான் திரட்டிகளின் ஆதி காலத் தந்தையோ? :)
"ஓ* இரணியகசிபுவே நம" என்று அகில உலகத்தையே உருட்டி மிரட்டி சொல்ல வைத்தாகி விட்டது! ஆனால் தன் இரத்த சம்பந்தத்தை மட்டும் சொல்ல வைக்க முடியவில்லை!

ஜய விஜயர்கள் இறை அடியார்கள் ஆயிற்றே! அவர்களுக்கு முகமன் சொல்லிட்டு, பணிவாகக் கேட்டறிந்து பெருமாளைச் சேவிப்போம்-ன்னு இல்லாமல், திமிராய் உள்ளே நுழைந்த சனகாதி முனிவர்கள்!

அன்றைக்கு அடியார்களுக்கு ஒரு முறை முகமன் சொல்லத் தவறியவர்கள், இன்று அன்றாடம் "இரணியகசிபுவே நம" என்கிறார்கள்! :))
இறைவன், எதை எதை, எப்படியெல்லாம் கோர்த்து விடுகிறான் பாருங்கள்! அவதாரம்-பிரகலாதன்-இரண்யகசிபு-ஜய விஜயர்கள் என்று அத்தனைக்கும் நடுவில், பணிவை மறந்த முனிகளுக்கும் தக்கதொரு பாடம்!

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்! அவனிடமா கணக்கு போட்டு வாங்கிய வரம் செல்லும்? நீ dy/dx என்ற சிறு கணக்கு போட்டால், அவன் lim x->infinity என்ற பெருங்கணக்கு போட்டு விடுவானே! :)
* உன்னால் படைக்கப்பட்ட எந்த உயிராலும் = பிரம்மனுக்கும் மேலே ஒரு பகவான் உண்டு என்பதை பாவம் இரணியன் அறியவில்லை போலும்!
* வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ = வாயிற்படியில்
* பகலோ, இரவோ = அந்தி மாலையில்
* வானமோ, பூமியோ = தொடைகளின் மேலே
* மிருகமோ, மனிதனோ = மிருக+மனிதன் = ஆள்+அரி

* எந்த ஆயுதத்தாலும் = கை நகத்தில் சுதர்சனாழ்வார் வந்து அமர...
* உயிருள்ளதோ, உயிரற்றதோ = வளரும் ஆனால் உயிர் அற்றதான நகங்களில்
* சிறு தேவதையோ, பெரு தேவதையோ = தெய்வங்களுக்கே தெய்வம் ஆனாலும் தெய்வம் என்ற சொல்லில் கூட அடைபடாதவன்
* தேவரோ அசுரரோ = தேவருக்கும் அசுரருக்கும் பொதுவில் நிற்கும் எம்பெருமான்...

ஆகா! அந்தக் குழந்தை கும்பாபிஷேகம் செய்த பின்னரா அவன் தூணில் சான்னித்யம் ஆனான்? மனத்தில் ஆழமாகச் சான்னித்யம் ஆனதால் அன்றோ, மற்றுள்ள அரக்க வீட்டிலும் சான்னித்யம் ஆனான்!
துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலனம் முடிந்தது! 24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகக் குறுகிய கால அவதாரம் இது ஒன்றே!



இந்த குறுகிய கடிகை நேரத்தில் "உக்கிரம்" எங்கேயிருந்து வந்தது?
உக்கிரத்தைத் தணிக்க பதில் உக்கிரம் கொண்ட சரப மூர்த்தி, பல நாள் சண்டையிட்டு, நரசிங்கத்தைக் குத்திக் கிழித்தார் என்பதெல்லாம் பின்னாளைய புனைவு! அடித்து அடித்து இல்லாததை உண்மையாக்கும் கும்மி டெக்னிக்குகளில் இதுவும் ஒன்று! இன்னொரு சமயம் இது பற்றி விரிவாகச் சொல்கிறேன்!

* பிரம்மாவுக்கோ, ஆராயாமல் கொடுத்த குற்ற பயம்!
* ரிஷிகளுக்கோ, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்கள் கர்ம யோகைத்தைக் கைவிட்ட குற்ற பயம்!
* தேவர்களுக்கோ, தங்கள் சுயநலம் பற்றிய குற்ற பயம்!
அவரவர் செய்த குற்றங்களுக்கு அவரவர் மனசாட்சியே குத்தியதால், எம்பெருமான் "உக்கிரமாய்" தெரிகிறான்!
ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்? நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்! :)

எல்லாரும் சூழ்ந்து கொண்டு குட்டிப் பிரகலாதனை மறைக்கிறார்களே! அதனால் அல்லவோ நரசிங்கம் பிடரியை உலுக்கி அங்கும் இங்கும் தேடுகிறது? இதுவா "உக்கிரம்"? சொல்லப் போனால் நரசிம்மத்துக்கு அசதியும் வருத்தமும் தான் அப்போது வந்ததாம்!

அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே


பந்தனை =அசதி, வருத்தம்! எதுக்கு பகவானுக்குப் போயி வருத்தம்?
குழந்தைக்குத் தந்தை இன்றிப் போனதே என்று வருத்தம்! அந்தத் தந்தை தன் சுய பிரதாபத்துக்குக் குழந்தையைப் பல வழிகளில் கொல்லத் துணிந்தான்!
அன்றோ தந்தையின் பாசம் இல்லாமல் போனது!
இன்றோ தந்தையே இல்லாமல் போனது!
அதான் பந்தனை = வருத்தம்! அந்த வருத்தம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என்கிறார் பெரியாழ்வார்! ஒரு ஜென்மத் தந்தைக்குப் பதிலாய் ஒவ்வொரு ஜென்மத் தந்தையாய் தானே இருக்க முடிவு செய்து விட்டான் இறைவன்!

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்...

இப்படி மற்ற சுயநலமிகள் எல்லாம் "உக்கிரம்" கண்டு பயப்பட...இறைவனோ "பந்தனை" என்னும் அசதியில் பக்தனுக்காக வாட...
பக்தனையும்-இறைவனையும், ஆச்சார்யனே(ளே) சேர்த்து வைக்கிறான்(ள்)!
பிரகலாதனுக்கு, இறைவனை, அலைமகளான மகாலக்ஷ்மியே ஆச்சார்யனாய் இருந்து பகவானைக் காட்டி வைக்கிறாள்!

லக்ஷ்மீ நாத சமாரம்பாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் என்பதல்லவோ குருபரம்பரை சுலோகம்! அவள் தானே ஆதி குரு! அதான் கூட்டத்தில் இருந்து குழந்தையை விலக்கி, அவனை முன்னே செல்விக்கிறாள் செல்வி!

"உன்னைத் தான்-ப்பா திரும்பிப் பார்த்து, திரும்பிப் பார்த்து தேடுறாரு! அதை உக்கிரம் என்று தப்பாக நினைச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்! நீ எதுக்கும் கவலைப்படாமல் முன்னே போ" என்று ஆற்றுப்படை செய்து வைக்கிறாள் அன்னை!
பிரகலாதனும் இறைவனுக்கு அருகில் சென்று, அணைப்பைப் பெற்று, பக்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஆகி விட்டான்! இதோ அந்த முந்தைய பதிவு!


சரி, இதில் அனுமன் எங்கு வந்தான்?
இராமாவதாரம் நரசிம்மத்துக்குப் பல யுகம் கழித்து அல்லவா? அப்புறம் எப்படி-ன்னு யோசிக்கறீங்களா? அதுக்கு திருக்கடிகை என்னும் ஊருக்குப் போகணும்! வரீங்களா?
சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கபுரமே அந்தத் திருக்கடிகை! கரிகாற் சோழன் அமைத்த கடிகைக் கோட்டம்!

ஆளரி அவதாரம் நிகழ்ந்த போது சப்த ரிஷிகள் பயந்து நடுங்கி, எம்பெருமானின் வடிவழகைச் சேவிக்க முடியாமல் கோட்டை விட்டார்கள் அல்லவா? அதனால் மனம் வருந்தி மீண்டும் சேவிக்க விழைந்த போது, கடிகாசலம் என்னும் சோளிங்கபுர மலையிலே, யோகத்தில் இருக்கும் கோலத்தில், யோக நரசிம்மனாகக் காட்சி கொடுக்கிறான்! விஸ்வாமித்ரரும் இங்கே பிரம்ம ரிஷி பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்!

முனிவர்கள் இங்கே தவம் இயற்ற, இந்திரத்துய்மன் என்னும் மன்னன் அவர்கள் தவத்தைக் காக்கின்றான்! ஆனால் முனிவர்களுக்கு காலன், கேயன் என்ற இரு அசுரர்களின் தொல்லை அளவுக்கு மீறிப் போகிறது!
மன்னனால் வெறுமனே போர்ப் படைகளை மட்டும் வைத்துக் கொண்டு அசுரனின் மாயப் படையை ஒடுக்க முடியவில்லை! முனிவர்களைக் கலைத்து விஷயத்தைச் சொல்லவும் அவனுக்கு விரும்பவில்லை! யோக நரசிம்மரிடமே முறையிடுகிறான்!

இராமாவாதார முடிவில் இறைவனுடன் செல்லாமல், அடியார்களோடு அடியாராக, இங்கேயே தங்கி விட்டான் அல்லவா அனுமன்? அந்தப் பெரும் பக்திக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் இராமனால்?
சீதையின் உயிரைக் காத்து, இலக்குவன் உயிரைக் காத்து, பரதனின் உயிரைக் காத்து, இதனால் இராமனின் உயிரையே காத்த ஒரு சிறிய திருவடி,
சுயநலமான மோட்சமும் வேண்டாம், எனக்கு அடியவர் தொடர்பே போதும் என்கிறது! இவனுக்கு என்ன செய்து நன்றிக் கடன் தீர்ப்பது?

சோளிங்கபுரம் - அனுமன் - மூலவர்


பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி என்று பிரகலாதனைப் பல யுகங்கள் முன்பே பட்டாபிஷேகம் செய்தாகி விட்டது! அனுமனுக்கு என்ன பட்டாபிஷேகம் செய்து வைப்பது? ஆங்! அது தான் சரி!
ஒவ்வொரு அவதாரத்திலும் தன்னை விட்டுப் பிரியாத சங்கு சக்கரங்களையே அனுமனிடம் கொடுத்து விடுகிறான்! தன் அடையாளத்தையே பக்தனின் அடையாளமாகவும் ஆக்கி விடுகிறான்!

அதை வைத்துக் கொண்டு இந்திரத்துய்ம மன்னனுக்கு உதவுமாறு, இறைவனே அனுமனைச் சோளிங்கபுரம் அனுப்பி வைக்கிறான்! பணி முடிந்ததும், அனுமனும் யோக நரசிம்மனைப் பார்த்தவாறு, யோக ஆஞ்சநேயனாக அமர்ந்து விடுகிறான்!
சின்ன மலையின் மேல் சிறிய திருவடியும், பெரிய மலையின் மேல் நரசிம்மனும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்கின்றனர்! அவர்கள் பார்த்துக் கொள்ளும் சாளரமும் (ஜன்னல்) இன்றும் உள்ளது!

இராமனை அன்றி வேறு ஒருவரையும் வணங்காதவர், கண்ணனைக் கூட வெறுமனே மதித்து விட்டு வணங்காது சென்றவர், அனுமன்! நரசிம்மப் பெருமாளான ஆளரியை மட்டும் வணங்கி வீற்றிருக்கிறார்!
இன்றும் அனுமனின் கைகளில் சங்கு சக்கரங்களைக் காணலாம்! அனுமன் சங்கு சக்கரங்கள் ஏந்திக் காட்சி தருகிறான்! ஒரு அடியவன் பகவானின் ரூபமாகவே ஆகிவிட்ட அபூர்வக் காட்சி, இங்கு மட்டுமே காண முடியும்!

சோளிங்கபுரம் - அனுமன் - உற்சவர்


இப்படி பக்தர்களுக்காகத் தன்னையும், தன் உடைமைகளையும் கூடக் கொடுத்து விடும் ஆளரிப் பெருமான் உக்கிர ரூபி அல்ல! சக்கர ரூபி! அக்காரக் கனி!
யோக ஆஞ்சநேயன் முன்னுறை, பிரகலாதக் குழந்தை உடனுறை ஆளரிப் பெருமாள் திருவடிகளே சரணம்!


குறிப்பு:
நண்பர் ரிஷான் மிக மோசமான உடல்நிலையில் இருந்ததை அறிவீர்கள். நச்சுணவு ஆகிப் போய் நீலம் பாய்ந்து இருந்ததாக அவர் தம் சகோதரி பஹீமா ஜெகானும் குழுமத்தில் சொல்லி இருந்தார்.
ரிஷான் நன்முறையில் உடல் நலம் தேறி, முன்பு போல் ஓடோடி வர, மருத்துவக் குளம் கொண்ட தக்கான், சோளிங்கபுரம் நரசிம்ம பெருமாளுக்கு அடியோங்கள் பிரார்த்தனைகள்!
Read more »

Saturday, May 17, 2008

பக்தர்களில் சிறந்தவன் தேவனா? அசுரனா??

உங்க பிறந்தநாள் அரை மணி நேரத்திலேயே முடிஞ்சி போனா உங்களுக்கு எப்படி இருக்கும்?
ச்சே அவன் பரிசு கொடுக்கறதாச் சொன்ன அந்த ஐபாடும் வரல, PIT போட்டிப் ட்ரைபாடும் வரல! அதுக்குள்ள பிறந்த நாள் முடிந்து விட்டால் எப்படி?-ன்னு மனசு கிடந்து அலை பாயாதா?

உலகத்திலேயே மிகவும் குறுகிய நேரப் பிறந்தநாள் கொண்டாடியது யாரு? சொல்லுங்க பார்ப்போம்! இருங்க...கேள்வியைச் சற்றே மாற்றிப் போடுகிறேன்!
அவதாரங்களிலேயே மிகக் குறுகிய காலமே நடைபெற்ற அவதாரம் எது?


இறைவன்: குழந்தையே! உன் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், உன் எல்லையில்லா அன்புக்கும் மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்?

குழந்தை: இறைவா...உன் மீது அன்பாக இருப்பது என்னுடைய சுபாவம் தானே! இதுக்குப் போய் நான் என்னவென்று பதிலுக்குக் கேட்பேன்?

இறைவன்: பரவாயில்லை! மனத்தில் தோன்றுவதைக் கேள்! இல்லையென்றால் உனக்கு உடனே புனித வேடம் கட்டி விடுவார்கள்! உறவு என்றால் அதில் ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் நடைமுறை!
அவர்களால் முடியாததை இன்னொருவர் செய்தால், உடனே அதற்குப் புனித வார்த்தை கொடுத்து, பீடத்தில் ஏற்றி ஒதுக்குவது தான் மானிட சூட்சுமம்! :-)

குழந்தை: அப்படி என்றால் தங்களைக் கணப்பொழுதும் மறக்கக் கூடாது; காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதும் வரத்தை எனக்குத் தாருங்கள் சுவாமி!

இறைவன்: இதெல்லாம் ஒரு வரமா? நானே உன்னை மறந்தாலும், உன்னால் என்னை மறக்க முடியாதே!
ஏன்னா உன் குணம் அப்படி! வேறு ஏதாவது கேள்! என் திருப்திக்காக ஏதாவது கேள்!

குழந்தை: அப்படி என்றால் செய்யும் பக்திக்குப் பிரதிபலனாக வரம் கேட்கலாம் என்ற வியாபர எண்ணமே தோன்றக் கூடாது!
வரம் கேட்காமல் இருக்கும் வரத்தை அடியேனுக்கு அருளுங்கள்!

இறைவன்: அட, இப்படி ஒரு அப்பாவியா இருக்கியேப்பா!
வரம் கொடுத்துத் தான் இது போன்ற எண்ணமெல்லாம் உனக்குச் சித்திக்க வேண்டும் என்பதில்லை!
ஏதாவது கேள், ஏதாவது கேள் என்று, என்னையே கெஞ்ச வைக்கிறாய் பார்த்தாயா? கேள், என் திருப்திக்காக ஏதாவது கேள்!


குழந்தை: சரி...என் தந்தை பொன்வண்ணர் (ஹிரண்ய கசிபு) நற்கதி அடைய வேண்டும்! அவருடைய ஆணவம் தான் அவருக்கு பெரிய பகையாய் போய்விட்டது. ஆணவம்-கன்மம்-மாயை அல்லவா?
ஆணவம் தொலைந்தால் தானே, தான் நம்புவது மட்டுமே சரியானது என்கிற விடாப்பிடி எண்ணம் தொலையும்? பிறர் என்ன தான் சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்கும் எண்ணம் வளரும்!

ஆணவத் திரை அகன்றால் தேடல் என்னும் வெளிச்சம் வரும்!
தேடினால் தானே மாயை அகலும்!
இப்படிச் செய்யாமல் ஆணவத்தினால் அழிவு தேடிக் கொண்டார் என் தந்தை! அவர் உஜ்ஜீவிக்க நீங்கள் தான் அருள வேண்டும்!

இறைவன்: உஜ்ஜீவனமா? உன் தந்தையின் ஜீவனை மறுபடியும் கொடுக்கச் சொல்கிறாயா?
விதி முடிந்த ஒருவன் உயிரைக் கேட்டு என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தலாமா நீ?

குழந்தை: அச்சோ! மன்னியுங்கள் சுவாமி! உடலைக் காப்பது ஜீவனம்! ஆன்மாவைக் காப்பது உஜ்ஜீவனம்!
அடியேன் கேட்டது உஜ்ஜீவனம் அல்லவா! தங்களுக்குத் தெரியாததா? சிறுபிள்ளையிடம் தங்கள் விளையாட்டா? அவருக்கு உங்கள் திருவடியைக் காட்டி நற்கதி அருளுங்கள்!

இறைவன்: ஆகா...ஒருவன் என்னிடம் சரணாகதி செய்தால் அவனின் முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் ஈடேறும்! இது நானே கொடுத்த வாக்கல்லவா?
இதை நீ வரம் என்று ஏன் தனியாகக் கேட்கிறாய் குழந்தாய்? உன் சரணாகதிக்கு அது தானாகவே நடந்து விடுமே!
மேலும் உன் தகப்பன் = என் ஜய விஜயன்! அவன் இந்நேரம் வைகுந்த வாசலில் மீண்டும் பணிக்குப் போய் நின்றிருப்பான்!

அட என்னடா இது! இவன், எதுவும் கேட்கக் கூடத் தெரியாதவனாக இருக்கிறானே? என்னையே திகைப்பில் ஆழ்த்தும் இவனை என்ன செய்து அடக்கலாம்?
எல்லாம் அற என்னை இழந்த நலம் என்றல்லவா ஆகி விட்டது!
"இழந்த" என்பது எப்படி ஒருவனுக்கு நலமாகும்? வரவு அல்லவோ நலம்?
இழப்பை நலமாகக் கருதும் அறியாச் சிறுவனோ இவன்?

இவனுக்கு என்ன வரம் கொடுத்து விட்டு மறையலாம்? இன்னும் சில நாழிகை தான்! அதற்குள் மிகக் குறுகிய கால அவதாரம் பூர்த்தி ஆக வேண்டுமே! (இறைவனே கவலையுடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்)

இவனுக்கு என்ன தரலாம்?
* பூமண்டல அதிபதி? - வேண்டாம்!
* சொல்லாய், சுர பூபதி? தேவர்கள் தலைவன்? - வேண்டவே வேண்டாம்!
* அசுரர் தலைவன்? - இப்போது தந்தைக்குப் பின் அதான் அவனே ஆகி விட்டானே!
* சரி, பிரம்ம பதவி? - அதுவும் இவன் பக்திக்கு முன் நிற்காதே?

சரி...
* வைகுண்டபதி? = அது கூட இவனுக்குச் சமானம் ஆகுமா தெரியலையே?
இவன் நம் பேரில் காட்டும் அன்பில் ஒரு பாதியாவது, நாம் பக்தர்கள் பேரில் காட்ட முடியுமா? திருமகள் கூடப் பொதுவாகக் கருணை உள்ளவள்! ஆனால் அவளும் பல வேளைகளில் சினந்துள்ளாளே!

ஆனால் இவனோ கருணையைத் தவிர வேறு எதுவும் தெரியாமல் இருக்கிறானே! கொல்ல வரும் சூலத்தைக் கூட நாராயண உருவமாகக் கண்டதால், அதுவும் இவனுக்கு அப்படியே அல்லவா ஆகிப் போனது! இவனுக்கு என்ன தான் தர முடியும்?

ஆங்...அதுவே சரி!
சாம்ராஜயத்தின் சக்ரவர்த்தி ஆக்கி விடுவோம்! - பக்த சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி!
அதுவே இவனுக்கு உரிய பட்டாபிஷேகம்! அதுவே இவனுக்கு உரிய வரம்!
பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி - அடியார்க்கு அரசன்! அடியார்க்கு நல்லான்!
இதையே கொடுத்து விடுவோம்!




இறைவி: பெருமாளே! ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் என்று எதையும் ஆராய்ந்து தானே நீங்கள் அருளுவீர்கள்?
உங்கள் புதல்வன் பிரம்மனைப் போலவோ, மைத்துனர் சிவனாரைப் போலவோ வரங்களை உடனே உடனே தூக்கிக் கொடுத்துவிட மாட்டீர்களே!

வரத்தால் அவனுக்கு நன்மையா? அவன் எதிர்காலத்துக்கு நன்மையா? அவன் சமூகத்துக்கு நன்மையா? என்றெல்லாம் ஆராய்ந்து அருளும் நீங்களா இவனுக்கு இவ்வளவு பெரிய பட்டத்தைத் தூக்கிக் கொடுப்பது?

இறைவன்: ஆகா, கருணைக் கடலான அலர்மேல் மங்கையா இப்படிச் சொல்வது? வயிற்று வலி உள்ள குழந்தை பலாப் பழத்துக்கு அழுதால் அப்போது ஆராய்ந்து அருளலாம்! ஆனால் இவன் வலி உள்ள குழந்தை அல்ல, திருமகளே!

இறைவி: அதில்லை சுவாமி! இவனுக்கு இப்படிக் கொடுத்து விட்டால் நம் மற்ற பக்தர்களின் கதி எல்லாம் என்னாவது? அவர்கள் எல்லாரும் முனிவர்கள், தேவர்கள், மானிடர்கள் - ஓரளவு நல்லவர்கள்! என்ன இருந்தாலும் இவன் ஒரு அசுரன் ஆயிற்றே!

இறைவன்: ஹிஹி. அசுரன் என்பதாலா உனக்கு இந்தத் தயக்கம் தேவி? தேவர்களிடமோ முனிவர்களிடமோ இல்லாத அசுரத்தனமா? ஹா ஹா ஹா! வேண்டுமென்றே தானே இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? இவர் வாயால் அசுரர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்று ஆவலா?

இறைவனைக் காலால் எட்டி உதைக்கவில்லையா ஒரு முனிவன்? நீ கூட அதற்குக் கோபித்துக் கொண்டாயே!
தன்னலத்துக்காக பழி பாவங்கள் செய்யாதவர்களா என்ன தேவர்கள்? நீயே தேவர்களைப் பலமுறை தண்டித்துள்ளாயே!

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்

- இது தான் சூட்சுமம்! குணமோ, குற்றமோ, எது மிகையோ - அதை நாடி அருள வேண்டும்!

கண்ணாடி முன் நின்று பார்த்துள்ளாய் அல்லவா?
அது நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே தான் காட்டும்!
உடுத்திக் கொண்டிருந்தால், உடுத்தியதாகத் தெரிவார்கள்!
அலங்கோலப் பட்டிருந்தால், அலங்கோலமாகத் தான் தெரிவார்கள்!
இறைவனும் அந்தக் கண்ணாடி போலத் தானே!


* குழந்தையாய்ப் பார்த்தால் குழந்தை! = தேவகி, யசோதை, பெரியாழ்வார், சபரி போன்றவர்களுக்கு!
* காதலனாய்ப் பார்த்தால் காதலன்! = மீரா, ஆண்டாள், கோபியருக்கு!
* தலைவனாய்ப் பார்த்தால் தலைவன்! = விபீஷணன், விதுரன், அக்ரூரன், அப்பர் போன்றவர்களுக்கு!
* நண்பனாய் பார்த்தால் நண்பன்! = குசேலன், அர்ச்சுனன், சுந்தரர் போன்றவர்களுக்கு!
* எதிரியாய்ப் பார்த்தால் எதிரி! = இராவணன், துரியோதனன், சூரபத்மன் போன்றவர்களுக்கு!
* நண்பன் தான்; ஆனால் அவனுடன் உரிமையாகச் சண்டை போட வேண்டும் என்று பார்த்தால் சண்டையிடும் நண்பர்கள்! = விருஷபாசுரன், குபேரன் போன்றவர்களுக்கு

இதில் அசுரன் தேவன் மனிதன் விலங்கு என்ற பாகுபாடே இல்லை! எனக்கு என்று தனியாக ஒரு குணம் கிடையாது!
யார் யார் எப்படி எப்படிப் பார்க்கிறார்களோ அப்படி அப்படிப் பெற்றுக் கொள்கிறார்கள்!
இவன் அசுரனாகத் தான் இருக்கட்டுமே! ஆனால் ஆத்மார்த்தமான பக்தியில் இவனுக்குப் பின்னே தான் எல்லாரும்!

பிரகலாத நாரத பராசர புண்டரீக
வயாச அம்பரீச சுக சௌனக பீஷ்மதால்பியான்
ருக்மாங்கத அர்சுன வசிஷ்ட விபீஷணாதீன்
புண்யானிமான் பரம பாகவதாம் ஸ்மராமி


என்று சுலோகங்களில் கூட அனைவருக்கும் முன்னால்,
ஏன் வியாசர், சுகப் பிரம்ம மகரிஷிக்கும் முன்னால்
இந்தப் பிரகலாதன் என்னும் அசுரனே இனி முன் நிற்பான்!
இப்போது என்ன சொல்கிறாய் மகாலக்ஷ்மீ?

இதோ பட்டாபிஷேகம்!
பிரகலாதனே பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி!
அடியார்க்கு நல்லான்!
அருளினோம்! அருளினோம்! அருளினோம்!

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் சிலீர் என்று மறைந்தது! அன்று முதல் எந்த ஒரு வழிபாட்டிலும், அடியார்களை முன்னிறுத்திச் செய்யும் பூசைகளில் எல்லாம்....
பிரகலாதன் என்னும் அசுரனே முதலில் முன்னிறுத்தப்படுகிறான்!


நான் சிவ பக்தன், பெருமாள் பக்தன், முருக பக்தன், அம்பிகை பக்தன், புத்த பக்தன், இயேசு பக்தன் என்று நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! பதிவு எழுதி ஆடலாம்! ஆனால்...

ஆனால் "இவன் என் பக்தன்" என்று இறைவன் சொல்ல வேண்டுமே?
நம்மைப் பார்த்து அப்படிச் சிவனோ பெருமாளோ முருகனோ அம்பிகையோ புத்தரோ சொல்வார்களா? :-)

அப்படி, "இவன் என் பக்தன், இவன் என் பக்தன்" என்று இறைவனே தன் வாயால் சொல்லிச் சொல்லிச் சொந்தம் கொண்டாடியது இரண்டு பேரை மட்டுமே!

அந்த இருவரில்...
ஒருவர் கூட முனிவர் இல்லை, தேவர் இல்லை, மனிதர் இல்லை!

* ஒருவன் அசுரன்!
* இன்னொருவன் விலங்கு!


பிரகலாதன் திருவடிகளே சரணம்!
அனுமன் திருவடிகளே சரணம்!

முடிந்தால் யோசித்து, மனத்தளவில் இந்த அசுரன் ஆகப் பார்ப்போம்! இல்லை இந்த விலங்காகப் பார்ப்போம்! :-)
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி - "ஏங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!
(நரசிம்ம ஜெயந்தி வரும் ஞாயிறு 18th May 2008. அதற்காக இட்ட சிறு பதிவு)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP