Showing posts with label அனுமன். Show all posts
Showing posts with label அனுமன். Show all posts

Sunday, June 19, 2011

ஒரே இலையில் சாப்பிட்ட அனுமன்-இராமன்!

"இது என்னாது புதுக்கதை? ஒரே இலைச் சாப்பாடா? அதுவும் அனுமனும் இராமனும்? என்னய்யா சொல்றீக? பொதுவா புருசன்-பெண்டாட்டி தானே ஒரே இலையில் சாப்பிடுவாக?"

"நானும், என் தோழனும் ஒரே தட்டில் சாப்பிடறது இல்லையா? தட்டில் இருந்து தட்டுக்கு....படக் படக்-ன்னு டிரான்ஸ்பர் ஆகுமே?":)

"டாய்! அது வேற இது வேற!"

"சரி! இப்போ என்னாங்குற?"

"டாய் கேஆரெஸ்! என்னமோ நீ தான் அனுமனுக்குப் பந்தி பரிமாறினாப் போல பேசுற? அனுமனும் இராமனும் ஒரே இலையில் சாப்பிட்டாங்க-ன்னு சும்மா அடிச்சித் தானே விடுற?":)

"ஹிஹி! அடிச்சி விடும் பழக்கம் எனக்கு இல்லையப்பா!"

"உக்கும்...இவரு பெரிய திருவிளையாடல் சிவாஜி கணேசன், தருமி கிட்ட பேசறாரு! ஒழுங்கா சொல்லுறா வெண்ணெய்":)

"ஹா ஹா ஹா! முடிஞ்ச வரை, தரவோடு பொருத்திப் பார்த்து விட்டு, பதிவில் சொல்லுறது தான் வழக்கம்! Data based and NOT opinion based!
எனக்கும் இது நாள் வரை இந்த விஷயம் தெரியாதுடா! திடீர்-ன்னு ஓவியர் வினு வரைஞ்ச ஒரு ஓவியத்தைப் பார்த்தேனா? Stun ஆயிட்டேன்! நீயே பாரேன்!"

"ஆகா...............! ஆமாம் போலத் தான் இருக்கு"!

"என்னா...இருக்கு, முறுக்கு-ங்குற? நான் சொல்லும் போது மட்டும் ரொம்பவே குதிச்ச?":)

"கோச்சிக்காத ரவி! எழுத்தாளர் ஜெயமோகன் பதிவுல போய் இப்படிக் குதிக்க முடியுமா? உன் கூடத் தானே சீண்ட முடியும்! அதான்!":)


கணவன் உண்ட இலையில் மனைவி உண்பது,
மனைவி உண்ட இலையில் கணவன் உண்பது
- இதெல்லாம் ஒரு அது! ஒரு இது! ஆசை!:)

ஆனா சினிமாவில் பார்த்துப் பார்த்து, அப்படிச் சாப்பிட்டாலே அது மனைவி தான் என்று முடிவு கட்டி விட்டோம்!
முத்தம்-ன்னாலே காதலர்கள் குடுப்பது தானா? என் காதல் முருகனுக்கு சதா முத்தம் குடுக்கும் நான், அதே சமயம் தோழி கோதையின் கைகளிலும் முத்தம் கொடுத்து இருக்கேனே! :)

அது போல ஒரே இலைச் சாப்பாடு என்பது ஒரு நெருக்கம்! அதன் நோக்கத்தைத் தான் பார்க்கணும்! தாறு மாறா யோசிக்கப்பிடாது!:)

சின்ன வயசு இராமானுசர், மூத்த குருவான திருக்கச்சி நம்பிகள் உண்ட இலையில் உண்ண ஆசைப்பட்டார்!
ஏன்? = ஏன்-னா சடங்கு சாஸ்திரம்-ன்னே இருந்த அவருக்குள், ஆழ்வாரின் ஈரத் தமிழை முதலில் விதைத்தது நம்பிகளே!

ஆனால் நம்பியோ so called தாழ்ந்த குலத்தவர்!
தமிழ்ப் பாட்டு பாடித் திரிபவர்! கன்னங் கரேல்!
'அந்தாளு' உண்ட இலையில் நம்ம புருஷன் இராமானுசரா? சீச்சீ! எங்கும் கேட்டிராத புதுப் பழக்கமான்னா இருக்கு? என்ன காரியம்-ண்ணா பண்றேள்?

இராமானுசரின் மனைவிக்கு இது பிடிக்காமல் போய்...எதை எதையோ செய்ய..., அவர்களின் மண முறிவுக்கான வித்து இங்கு தான் ஆரம்பம்!
பின்னர் கிணற்றடியில், பெண் என்ற தன்மையும் மீறி, தகாத வார்த்தைகளைக் கொட்டி, மொத்தமாய் முறிந்து போனது!

நாம மேட்டருக்கு வருவோம்! ஒரே-இலை உணவு என்பது குழந்தை உணவை அம்மா/அப்பா எடுத்து உண்பதும் கூட உண்டு!

இங்கே இராகவனுடன் ஒரே இலை உணவு!
சொல்வது ஆழ்வார் பாசுரம்!
அதைத் தான் ஓவியமா வரைஞ்சி இருக்கார் வினு!



வாத மாமகன் மர்க்கடம் விலங்கு, மற்றோர் சாதி என்று ஒழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருக, செய்த தகவினுக்கு இல்லை கைம்மாறு, என்று

கோதில் வாய்மையினா லொடும், "உடனே உண்பன் நான்" என்ற ஓண்பொருள், எனக்கும்

ஆதல் வேண்டும் என்று அடியிணை அடைந்தேன், அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
- திருமங்கை ஆழ்வார்! பெரிய திருமொழி! (1419)

இலங்கையில் இருந்து அயோத்திக்கு ஜெட் வேகத்தில் திரும்புகிறது விமானம்!
இராகவன்-சீதையொடு, இலக்குவன், சுக்ரீவன், வீடணன், அனுமன் முதலானோர்! வழியில் பரத்துவாச முனிவரின் குடில்!
அவரோ நிலைமை புரியாமல், இராமனைக் குடிலுக்கு விருந்துண்ண அழைக்கிறார்! முணுக் எனக் கோபிக்கும் முனிவரிடம் விளக்கி மாளுமோ?

அங்கே பரதன் குறித்த காலத்தில் வராவிட்டால் தற்கொலை என்று இருக்கிறான்! என்ன செய்வது? யார் உதவிக்கு? = எப்போதும்! முப்போதும்!
ஆவி காத்து இருப்பது ஒரேயொரு அடியவன் தான்! எப்போதும், முப்போதும்!

* தற்கொலையில் சீதையின் ஆவி காத்தான்!
* போரிலே இலக்குவன் ஆவி காத்தான்!
* மாயத்தில், இராமனின் ஆவி காத்தான்!
* இதோ, பரதனின் ஆவியும் காத்தான்!

ஆவி காப்பான் எம் ஆஞ்சநேயன்!
சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!

அன்று, அவள் ஆவி காத்தது போல்,
அல்லற்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீரில்,
என்னையும் காத்தருள்!
'அவனுக்கு என்னை விதி' என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு!



பரதனின் உயிர் காக்கப் பறந்து சென்ற அனுமன், வழியில் குகனுக்கும் தேறுதல் சொல்லி, பரதனைக் காத்து மீள்கிறான்!
அதற்குள், முனிவரின் குடிலில், உணவு! எல்லாரும் அமர்ந்து உண்ணத் துவங்கி விட்டார்கள்! வந்து நிற்கிறான் ஆஞ்சநேயன்! இடம்?

இதயத்திலே இடம் கொடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் கோமகன்கள் இருக்கின்ற காலத்திலே, அனுமனுக்கு எங்கு இடம் கொடுப்பது?

ஆ! இவன் நம்ம ஊழியன் போலத் தானே உழைக்கிறான்? இவனை எப்படி ட்ரீட் பண்ணாலும் இவன் அன்பு மாறப் போறதில்ல!
So, நாங்கல்லாம் சாப்பிட்டு முடிச்சாப் பொறவு சாப்பிட்டுக்கோ ஆஞ்சநேயா-ன்னு சொல்லி இருக்கலாம்! எப்படி ட்ரீட் பண்ணாலும் இவன் இவன் தானே!

ஆனால் வாழ்விற்கு ஒரே ஒரு இராகவன்! அவன் மனமும் துணியுமோ?
இடமில்லை ஆஞ்சநேயா!
ஆனால்....
என் முன்னே இடமுளது!
வா, என் முன்னே வந்து அமர்ந்து விடு!

ஓர் இலையில்...இப்பக்கம் நான், அப்பக்கம் நீ!
என்ன கூச்சம்? வா!
எச்சிற் பட்ட உணவு என்ற கூச்சமோ?

மாருதி ஓடியே சென்று அமர்ந்து விட்டான்!

தீரச் செயல்கள் செய்யும் அனுமன் திடுக்கிட்டு நிற்கிறான்!
என்ன பேச?
அன்னை சீதை கூட, பக்கத்தில் தனி இலையில் தான் உண்கிறாள்!
ஆனால் இப்படி ஊரறிய உலகறிய...
அண்ணலின் சரி சமானத்தில்...ஓர் இலையில்...
அன்னமிட்ட அண்ணல், தன் உணவையும் கறியும் அப்பக்கம் தள்ள,
போதும் போதும் என்று இவனும் இப்பக்கம் தள்ள...

ஞான, கர்ம யோகிகள் அத்தனை பேரும், நமக்கு இப்படியொரு பேறில்லையா என ஏங்க...
தன் ஞானம், தன் கர்மம், தன் பக்தி என்று இல்லாது.....
உன் 'சரணம்' என்றே இருக்கும் சிறிய திருவடிக்கு அமுது படையல்!


வாத மாமகன் மர்க்கடம் விலங்கு = வாயுவின் மகன், குரங்கெனும் விலங்கு
மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து = இது வானர சாதி என்று மனத்தளவும் எண்ணாது, உகப்பாக...

காதல் ஆதரம் கடலினும் பெருக = அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று கடல் போல் பொங்க
செய்த தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று = ஆவி காத்தவனுக்கு ஆவியே கைம்மாறோ என்னுமாப் போலே

கோதில் வாய்மையினா லொடும் = வெறும் பேச்சுக்கு மட்டும் உறவு பாராட்டாது, வாய்மையினால்...
"உடனே உண்பன் நான்" = உன் கூடவே நானும் சாப்பிடுகிறேன்

என்ற ஓண்பொருள், எனக்கும் ஆதல் வேண்டும் = இப்பேர்ப்பட்ட அன்பு எனக்கும் வாய்க்க வேண்டும் பெருமாளே!
என்று அடியிணை அடைந்தேன் = என்று உன் சிறிய திருவடிகளை அடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்து அம்மானே! = அரங்கத்து அம்மானே! என் மீது அன்பு காட்டு!
..........என்று திருமங்கை ஆழ்வார், அனுமனை முன்னிட்டுக் கொண்டு, அரங்கனை வேண்டும் பாசுரம்!

இன்றும் திருவரங்கத்தில், இந்தக் காட்சி நடத்தப்படுவதாக, இப்போதே அறிந்தேன்!

ஓரிலைச் சோறுண்டு...
இன்னமும் தனக்கென மோட்சமும் போகாது...
இங்கேயே, அடியவர்களோடு, குணானுபவத்தில்...
மாதவிப் பந்தலிலும் வந்து அமர்ந்து கொள்ளும் இந்தச் சிறிய்ய்ய்ய்ய்ய திருவடியான எம் ஆஞ்சநேயனை,

பந்தல் வாசகர்கள், அன்பர்கள் எல்லாரும் தொட்டுத் தொட்டுக் கை குலுக்கிக் கொள்ளுங்கள்!

அவனோடு ஓரிலையில் உண்ட....சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!
Read more »

Thursday, May 07, 2009

நரசிங்கத்தின் முன்னே பிரகலாதனா? அனுமனா?

பிரகலாதக் குழந்தைக்காக அல்லவா ஓடோடி வந்தான் இறைவன்? இரணியன் எந்த இடத்தைக் காட்டி குழந்தையை என்ன கேள்வி கேட்பானோ? அது பதிலுக்கு என்ன சொல்லுமோ? என்று பதபதைத்து, பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்தது யாருக்காக? = பிரகலாதனுக்காகவா? அனுமனுக்காகவா? அட, அனுமன் எப்படிப்பா நரசிம்ம அவதாரத்தில் வந்தாரு? :)

இன்று சுதர்சன-நரசிம்ம ஜெயந்தி (May-07-2009)!
சுதர்சனம், நரசிம்மம் இரண்டுமே "உதித்த" நாள்! ஒரு திரு சிம்மம் வந்தாங்கு, "உதித்தது" உலகம் உய்ய!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சுவாதியில் வருவது நரசிம்ம ஜெயந்தி! சாந்தமே உருவான சுவாதி நட்சத்திரக் காரவுங்க, அந்த சுவாதியிலா உக்கிரமே உருவான நரசிம்மர் உதித்தார்? :)

ஹிஹி! உண்மை என்னான்னா, பலர் நினைப்பது போல நரசிம்மம் உக்கிரமே அல்ல! நரசிம்ம பூசை பண்ணவே பல பேரு பயப்படுவாய்ங்க! சுத்த பத்தமா இருக்கணும்! ஏதாச்சும் தெரியாம தப்பு ஆயிட்டாக் கூட உக்கிரமா ஆயிடுவாரு, நமக்குத் தீங்காயிரும்-ன்னு தாங்களா நினைச்சிக்கிட்டு தயங்குவாங்க! இந்தப் பயமே தேவையில்லை!

ஏன்னா நரசிம்மப் பெருமாள் (ஆளரிப் பெருமாள்) அவ்வளவு அழகு, அவ்வளவு கருணை, அவ்வளவு வாத்சல்யம்! குளிக்காம கூட நரசிம்ம பூசை பண்ணி இருக்காங்க! மரத்தின் கீழ் சதா யோகத்தில் இருந்த நம்மாழ்வார் குளித்து விட்டா நரசிம்ம பூசனை செய்கிறார்?
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி - "எங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!
என்று பயந்து பூசிக்காமல், அகம் கரைந்து ஆளரியைப் பூசிக்கிறார் நம்ம மாறன்!

கல்யாணம் ஆகப் போவுது! மணப்பந்தலில் உட்கார்ந்து இருக்கும் அந்த இளம் பொண்ணு, "உக்கிரமான" நரசிம்மத்தை நினைக்குமா? "ரொமான்டிக்" கண்ணனை நினைக்குமா? ஹிஹி! இந்தப் பொண்ணு நரசிம்ம-ஆளரியைத் தான் நினைக்கிறாள் பாருங்க! :)
"அரி-முகன்" அச்சுதன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!


இதில் இருந்து என்ன தெரிகிறது? ஐயோ நரசிம்ம உபாசனையா? நரசிம்ம பூஜையா?-ன்னு நீங்களா கண்டதையும் மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு பயப்படாதீர்கள்!
"என்ன பயந்துட்டியா? வாடா, என் கிட்டக்க வா" என்று கைகாட்டிக் கூப்பிடும் கோலம் தான் இன்றும் திருவல்லிக்கேணியில்! ஆஹ்வான ஹஸ்தம்! ஆ-வா என்னும் கைகள்!
அன்பே உருவான ஆளரி! அழகிய சிங்கன்! தெள்ளிய சிங்கன்!
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே!


பிரம்மனே,
* உன்னால் படைக்கப்பட்ட எந்த உயிராலும்
* வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ
* பகலோ, இரவோ
* வானமோ, பூமியோ
* மிருகமோ, மனிதனோ
* எந்த ஆயுதத்தாலும்...
* உயிருள்ளதோ, உயிரற்றதோ
* சிறு தேவதையோ, பெரு தேவதையோ
* தேவரோ, அசுரரோ...யாராலும் நான் சாகக் கூடாது!

எல்லா பதிவையும் ஒன்னாத் திரட்டி, ஒரே பக்கத்தில் தெரிய வைப்பது போல்...
எல்லா வரத்தையும் ஒன்னாத் திரட்டி, ஒரே லபக்கில் வாங்க நினைத்த நம்ம "அறிவாளி" தான் இரணியகசிபு! அவன் தான் திரட்டிகளின் ஆதி காலத் தந்தையோ? :)
"ஓ* இரணியகசிபுவே நம" என்று அகில உலகத்தையே உருட்டி மிரட்டி சொல்ல வைத்தாகி விட்டது! ஆனால் தன் இரத்த சம்பந்தத்தை மட்டும் சொல்ல வைக்க முடியவில்லை!

ஜய விஜயர்கள் இறை அடியார்கள் ஆயிற்றே! அவர்களுக்கு முகமன் சொல்லிட்டு, பணிவாகக் கேட்டறிந்து பெருமாளைச் சேவிப்போம்-ன்னு இல்லாமல், திமிராய் உள்ளே நுழைந்த சனகாதி முனிவர்கள்!

அன்றைக்கு அடியார்களுக்கு ஒரு முறை முகமன் சொல்லத் தவறியவர்கள், இன்று அன்றாடம் "இரணியகசிபுவே நம" என்கிறார்கள்! :))
இறைவன், எதை எதை, எப்படியெல்லாம் கோர்த்து விடுகிறான் பாருங்கள்! அவதாரம்-பிரகலாதன்-இரண்யகசிபு-ஜய விஜயர்கள் என்று அத்தனைக்கும் நடுவில், பணிவை மறந்த முனிகளுக்கும் தக்கதொரு பாடம்!

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்! அவனிடமா கணக்கு போட்டு வாங்கிய வரம் செல்லும்? நீ dy/dx என்ற சிறு கணக்கு போட்டால், அவன் lim x->infinity என்ற பெருங்கணக்கு போட்டு விடுவானே! :)
* உன்னால் படைக்கப்பட்ட எந்த உயிராலும் = பிரம்மனுக்கும் மேலே ஒரு பகவான் உண்டு என்பதை பாவம் இரணியன் அறியவில்லை போலும்!
* வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ = வாயிற்படியில்
* பகலோ, இரவோ = அந்தி மாலையில்
* வானமோ, பூமியோ = தொடைகளின் மேலே
* மிருகமோ, மனிதனோ = மிருக+மனிதன் = ஆள்+அரி

* எந்த ஆயுதத்தாலும் = கை நகத்தில் சுதர்சனாழ்வார் வந்து அமர...
* உயிருள்ளதோ, உயிரற்றதோ = வளரும் ஆனால் உயிர் அற்றதான நகங்களில்
* சிறு தேவதையோ, பெரு தேவதையோ = தெய்வங்களுக்கே தெய்வம் ஆனாலும் தெய்வம் என்ற சொல்லில் கூட அடைபடாதவன்
* தேவரோ அசுரரோ = தேவருக்கும் அசுரருக்கும் பொதுவில் நிற்கும் எம்பெருமான்...

ஆகா! அந்தக் குழந்தை கும்பாபிஷேகம் செய்த பின்னரா அவன் தூணில் சான்னித்யம் ஆனான்? மனத்தில் ஆழமாகச் சான்னித்யம் ஆனதால் அன்றோ, மற்றுள்ள அரக்க வீட்டிலும் சான்னித்யம் ஆனான்!
துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலனம் முடிந்தது! 24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகக் குறுகிய கால அவதாரம் இது ஒன்றே!



இந்த குறுகிய கடிகை நேரத்தில் "உக்கிரம்" எங்கேயிருந்து வந்தது?
உக்கிரத்தைத் தணிக்க பதில் உக்கிரம் கொண்ட சரப மூர்த்தி, பல நாள் சண்டையிட்டு, நரசிங்கத்தைக் குத்திக் கிழித்தார் என்பதெல்லாம் பின்னாளைய புனைவு! அடித்து அடித்து இல்லாததை உண்மையாக்கும் கும்மி டெக்னிக்குகளில் இதுவும் ஒன்று! இன்னொரு சமயம் இது பற்றி விரிவாகச் சொல்கிறேன்!

* பிரம்மாவுக்கோ, ஆராயாமல் கொடுத்த குற்ற பயம்!
* ரிஷிகளுக்கோ, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்கள் கர்ம யோகைத்தைக் கைவிட்ட குற்ற பயம்!
* தேவர்களுக்கோ, தங்கள் சுயநலம் பற்றிய குற்ற பயம்!
அவரவர் செய்த குற்றங்களுக்கு அவரவர் மனசாட்சியே குத்தியதால், எம்பெருமான் "உக்கிரமாய்" தெரிகிறான்!
ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்? நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்! :)

எல்லாரும் சூழ்ந்து கொண்டு குட்டிப் பிரகலாதனை மறைக்கிறார்களே! அதனால் அல்லவோ நரசிங்கம் பிடரியை உலுக்கி அங்கும் இங்கும் தேடுகிறது? இதுவா "உக்கிரம்"? சொல்லப் போனால் நரசிம்மத்துக்கு அசதியும் வருத்தமும் தான் அப்போது வந்ததாம்!

அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே


பந்தனை =அசதி, வருத்தம்! எதுக்கு பகவானுக்குப் போயி வருத்தம்?
குழந்தைக்குத் தந்தை இன்றிப் போனதே என்று வருத்தம்! அந்தத் தந்தை தன் சுய பிரதாபத்துக்குக் குழந்தையைப் பல வழிகளில் கொல்லத் துணிந்தான்!
அன்றோ தந்தையின் பாசம் இல்லாமல் போனது!
இன்றோ தந்தையே இல்லாமல் போனது!
அதான் பந்தனை = வருத்தம்! அந்த வருத்தம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என்கிறார் பெரியாழ்வார்! ஒரு ஜென்மத் தந்தைக்குப் பதிலாய் ஒவ்வொரு ஜென்மத் தந்தையாய் தானே இருக்க முடிவு செய்து விட்டான் இறைவன்!

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்...

இப்படி மற்ற சுயநலமிகள் எல்லாம் "உக்கிரம்" கண்டு பயப்பட...இறைவனோ "பந்தனை" என்னும் அசதியில் பக்தனுக்காக வாட...
பக்தனையும்-இறைவனையும், ஆச்சார்யனே(ளே) சேர்த்து வைக்கிறான்(ள்)!
பிரகலாதனுக்கு, இறைவனை, அலைமகளான மகாலக்ஷ்மியே ஆச்சார்யனாய் இருந்து பகவானைக் காட்டி வைக்கிறாள்!

லக்ஷ்மீ நாத சமாரம்பாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் என்பதல்லவோ குருபரம்பரை சுலோகம்! அவள் தானே ஆதி குரு! அதான் கூட்டத்தில் இருந்து குழந்தையை விலக்கி, அவனை முன்னே செல்விக்கிறாள் செல்வி!

"உன்னைத் தான்-ப்பா திரும்பிப் பார்த்து, திரும்பிப் பார்த்து தேடுறாரு! அதை உக்கிரம் என்று தப்பாக நினைச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்! நீ எதுக்கும் கவலைப்படாமல் முன்னே போ" என்று ஆற்றுப்படை செய்து வைக்கிறாள் அன்னை!
பிரகலாதனும் இறைவனுக்கு அருகில் சென்று, அணைப்பைப் பெற்று, பக்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஆகி விட்டான்! இதோ அந்த முந்தைய பதிவு!


சரி, இதில் அனுமன் எங்கு வந்தான்?
இராமாவதாரம் நரசிம்மத்துக்குப் பல யுகம் கழித்து அல்லவா? அப்புறம் எப்படி-ன்னு யோசிக்கறீங்களா? அதுக்கு திருக்கடிகை என்னும் ஊருக்குப் போகணும்! வரீங்களா?
சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கபுரமே அந்தத் திருக்கடிகை! கரிகாற் சோழன் அமைத்த கடிகைக் கோட்டம்!

ஆளரி அவதாரம் நிகழ்ந்த போது சப்த ரிஷிகள் பயந்து நடுங்கி, எம்பெருமானின் வடிவழகைச் சேவிக்க முடியாமல் கோட்டை விட்டார்கள் அல்லவா? அதனால் மனம் வருந்தி மீண்டும் சேவிக்க விழைந்த போது, கடிகாசலம் என்னும் சோளிங்கபுர மலையிலே, யோகத்தில் இருக்கும் கோலத்தில், யோக நரசிம்மனாகக் காட்சி கொடுக்கிறான்! விஸ்வாமித்ரரும் இங்கே பிரம்ம ரிஷி பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்!

முனிவர்கள் இங்கே தவம் இயற்ற, இந்திரத்துய்மன் என்னும் மன்னன் அவர்கள் தவத்தைக் காக்கின்றான்! ஆனால் முனிவர்களுக்கு காலன், கேயன் என்ற இரு அசுரர்களின் தொல்லை அளவுக்கு மீறிப் போகிறது!
மன்னனால் வெறுமனே போர்ப் படைகளை மட்டும் வைத்துக் கொண்டு அசுரனின் மாயப் படையை ஒடுக்க முடியவில்லை! முனிவர்களைக் கலைத்து விஷயத்தைச் சொல்லவும் அவனுக்கு விரும்பவில்லை! யோக நரசிம்மரிடமே முறையிடுகிறான்!

இராமாவாதார முடிவில் இறைவனுடன் செல்லாமல், அடியார்களோடு அடியாராக, இங்கேயே தங்கி விட்டான் அல்லவா அனுமன்? அந்தப் பெரும் பக்திக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் இராமனால்?
சீதையின் உயிரைக் காத்து, இலக்குவன் உயிரைக் காத்து, பரதனின் உயிரைக் காத்து, இதனால் இராமனின் உயிரையே காத்த ஒரு சிறிய திருவடி,
சுயநலமான மோட்சமும் வேண்டாம், எனக்கு அடியவர் தொடர்பே போதும் என்கிறது! இவனுக்கு என்ன செய்து நன்றிக் கடன் தீர்ப்பது?

சோளிங்கபுரம் - அனுமன் - மூலவர்


பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி என்று பிரகலாதனைப் பல யுகங்கள் முன்பே பட்டாபிஷேகம் செய்தாகி விட்டது! அனுமனுக்கு என்ன பட்டாபிஷேகம் செய்து வைப்பது? ஆங்! அது தான் சரி!
ஒவ்வொரு அவதாரத்திலும் தன்னை விட்டுப் பிரியாத சங்கு சக்கரங்களையே அனுமனிடம் கொடுத்து விடுகிறான்! தன் அடையாளத்தையே பக்தனின் அடையாளமாகவும் ஆக்கி விடுகிறான்!

அதை வைத்துக் கொண்டு இந்திரத்துய்ம மன்னனுக்கு உதவுமாறு, இறைவனே அனுமனைச் சோளிங்கபுரம் அனுப்பி வைக்கிறான்! பணி முடிந்ததும், அனுமனும் யோக நரசிம்மனைப் பார்த்தவாறு, யோக ஆஞ்சநேயனாக அமர்ந்து விடுகிறான்!
சின்ன மலையின் மேல் சிறிய திருவடியும், பெரிய மலையின் மேல் நரசிம்மனும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்கின்றனர்! அவர்கள் பார்த்துக் கொள்ளும் சாளரமும் (ஜன்னல்) இன்றும் உள்ளது!

இராமனை அன்றி வேறு ஒருவரையும் வணங்காதவர், கண்ணனைக் கூட வெறுமனே மதித்து விட்டு வணங்காது சென்றவர், அனுமன்! நரசிம்மப் பெருமாளான ஆளரியை மட்டும் வணங்கி வீற்றிருக்கிறார்!
இன்றும் அனுமனின் கைகளில் சங்கு சக்கரங்களைக் காணலாம்! அனுமன் சங்கு சக்கரங்கள் ஏந்திக் காட்சி தருகிறான்! ஒரு அடியவன் பகவானின் ரூபமாகவே ஆகிவிட்ட அபூர்வக் காட்சி, இங்கு மட்டுமே காண முடியும்!

சோளிங்கபுரம் - அனுமன் - உற்சவர்


இப்படி பக்தர்களுக்காகத் தன்னையும், தன் உடைமைகளையும் கூடக் கொடுத்து விடும் ஆளரிப் பெருமான் உக்கிர ரூபி அல்ல! சக்கர ரூபி! அக்காரக் கனி!
யோக ஆஞ்சநேயன் முன்னுறை, பிரகலாதக் குழந்தை உடனுறை ஆளரிப் பெருமாள் திருவடிகளே சரணம்!


குறிப்பு:
நண்பர் ரிஷான் மிக மோசமான உடல்நிலையில் இருந்ததை அறிவீர்கள். நச்சுணவு ஆகிப் போய் நீலம் பாய்ந்து இருந்ததாக அவர் தம் சகோதரி பஹீமா ஜெகானும் குழுமத்தில் சொல்லி இருந்தார்.
ரிஷான் நன்முறையில் உடல் நலம் தேறி, முன்பு போல் ஓடோடி வர, மருத்துவக் குளம் கொண்ட தக்கான், சோளிங்கபுரம் நரசிம்ம பெருமாளுக்கு அடியோங்கள் பிரார்த்தனைகள்!
Read more »

Wednesday, September 03, 2008

பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தான் அனுமன்!

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிஞ்சு போச்சுடா-ன்னு வழக்கத்தில் சொல்லக் கேட்டிருப்பீங்க! "நல்ல நோக்கத்தில் தான் இந்த வேலையைத் தொடங்கினேன்! ஆனால் கடைசியில் முடிஞ்சதென்னவோ வேற மாதிரி!" - இப்படிச் சொல்வதற்குத் தானே இந்தப் பழமொழியைப் பயன்படுத்தறாங்க, இப்பல்லாம்?

பிள்ளையார் சிலை பண்ணலாம்-னு தான் களிமண்ணைத் திரட்டி, உருட்டி ஆரம்பிச்சேன்!
ஆனால் கடைசியா வந்து நின்னதென்னவோ பிள்ளையார் உருவம் இல்லைப்பா! போயும் போயும் ஒரு குரங்கு உருவம்!
நல்ல நோக்கத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன்! ஆனால் அடிக்கப்பட்ட கும்மியில், கடைசியில் வந்து நின்னதென்னவோ வேற மாதிரி தான்! - இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே? ஹா ஹா ஹா :))

சரி...
அதென்ன பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்த கதை? அப்படி ஒரு கதை நிஜமாலுமே இருக்கா என்ன?
கேட்டா, நொந்து, நூலாகி, நூடுல்ஸ் ஆயிருவீங்க! அப்படி ஒரு பழமொழியே இல்லை!
நம்ம மக்கள் அடிச்ச கும்மியில், நல்ல பழமொழி ஒன்று, வேற மாதிரி ஆகிவிட்டது! :)
சமய ஒற்றுமை சொல்ல வந்த பழமொழி, சலசலத்துப் போய் வேறு மாதிரி ஆகிவிட்டது!

உண்மையான வாசகம் என்னவென்றால்...
பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!

எந்த ஒரு செயல் துவங்கினாலும், யாரை வணங்க வேண்டும்? அது உங்களுக்கே தெரியும்! -பிள்ளையார்!
அதே போல் எந்த ஒரு செயலை முடிக்கும் போது, யாரை வணங்க வேண்டும்? தெரியுமா? -அனுமன்!
ஏன் இப்படி? பார்ப்போம் வாருங்கள்!


சென்னை அடையாறு, மத்திய கைலாச ஆலயத்தில், இந்தப் பழமொழியின் பொருளைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கலாம்! எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க? கை தூக்குங்க பார்ப்போம்! ஆனந்த விநாயகர்! வேங்கடானந்த விநாயகர் என்பது சுவாமியின் திருநாமம்!
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை! ஆதியில் பிடித்து அந்தத்தில் முடிந்த கதை! ஆதி+அந்தம்+பிரபு = ஆத்யந்தப் பிரபு
அதாச்சும், பாதி பிள்ளையார்-பாதி அனுமன் என்ற ஒரு திருவுருவச் சிலையை இங்கே காணலாம்! இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து! இதுவே ஆதியந்த ஸ்வாமி!

* எந்த ஒரு செயல் துவங்கினாலும், பிள்ளையாரை வணங்கிச் செய்வது வழக்கம்! விக்கினங்கள்/தடைகள் இன்றி செவ்வனே நடைபெற!
பிரணவம் தானே மூலாதாரம்! அங்கிருந்து தானே எந்த மந்திரமும் துவக்கம்! அதான் முதலில் பிள்ளையார் பூஜை!

* அதே போல் அந்தச் செயல் முடிக்கும் போது, அனுமனைத் துதித்து முடிப்பது வழக்கம்! நன்றி தெரிவித்துக் கொள்ள!
எப்பேர்ப்பட்ட செயலையும் செய்து விட்டு, நன்றி ஒன்றைக் கூட எதிர்பாராது இருப்பவரிடம் சொல்லும் நன்றி மிகப் பெரிதல்லவா! அதான் இறுதியில் அனுமத் பூஜை!

மத்திய கைலாசத்தில் ஆத்யந்த சுவாமி!

பல உபன்னியாசங்களில், இசை நிகழ்ச்சிகளில் இதைப் பார்க்கலாம்!
முதலில் "மகா கணபதிம்" என்று ஆரம்பித்தால், இறுதியில் அனுமனைக் கொண்டு, "ராமச்சந்த்ராய ஜனக" என்று மங்களம் பாடி முடிப்பார்கள்! பக்தி சார்ந்த எந்தவொரு விடயத்திலும் இந்த மரபு உண்டு!
பிள்ளையாரைப் பிடித்து, செயல் செவ்வனே நடந்து, மங்களகரமாய் முடிந்த கதை! இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!


* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே பிரம்மச்சாரிகள்!
* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே விலங்கின ரூபம் கொண்டவர்கள்!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே சமநிலை மூர்த்திகள்! - யானையும் குரங்கும் நிலத்துக்குச் சமநிலையாகவே நடக்கும்! எதிர்த்து செங்குத்தாய் நடக்காது! அதிலும் குரங்கானது, கைகள் இருந்தும் கூட, நிலத்தை மீறித் "தான்" என்று எழுந்து நடக்காது!
அதே போல் ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் இருவரும்! ஆனால் நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை!
அவருக்கு ஆற்றங்கரை கூட இடம் தான்! மதுரை முக்குறுணியும் ஒரு இடம் தான்! இவருக்கோ தூண் கூட இடம் தான்! விஸ்வரூப நாமக்கல்லும் ஒரு இடம் தான்!

* வடநாட்டிலும் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!

* நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!

* எம்பெருமான் கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்!

* பிள்ளையாரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = "கம்"; ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = "ஹம்"! கம் கணபதயே என்று க-வில் துவங்கி ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.


பொதுவாகச் செயல் துவங்கும் முன்னர் விநாயகரை வணங்குதல் எல்லாருக்கும் தெரியும்! ஆனால் செயல் நிறைந்தவுடன், அனுமனை வணங்குதல் பல பேருக்குத் தெரிவதில்லை! அதான் அடியேன் இங்கு சொல்லி வைத்தேன்!
இராமாயணத்திலும், அனைவரையும் வழியனுப்பி விட்டு, இறுதியில் அனுமன் உபாசனையே நடக்கிறது! அனைவருக்கும் நன்றி சொல்லும் இராமன், அனுமனை மட்டும் மனைவியுடன் சேர்ந்து உபாசிக்கிறான்! நன்றி சொல்லி மாளுமா நன்றி ஒன்று வேண்டாதானிடம்?

பிரணவ மந்திரம் ஓதி, ஜீவன் மண்ணுக்கு வருகிறது! - அது ஐங்கர (விநாயக) சொரூபம்!
அனுமனின் ராம மந்திரம் ஓதி, ஜீவனை மண்ணில் இருந்து அனுப்புகிறார் காசி நகர் ஈசன்! - அது அனுமத் சொரூபம்!
ஆதியில் தொடங்கி, அந்தத்தில் நிறையும் தத்துவம் தான் ஆதியந்த சுவாமி! அடுத்த முறை சென்னை மத்திய கைலாசத்தில் தரிசியுங்கள்!

இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!
ஆதியில் பிடித்து அந்தத்தில் முடித்த கதை!
இனி பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காய் முடிஞ்சி போச்சி-ன்னு சொல்லாதீங்க! :)

அனைத்து நண்பர்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

1. கொழுக்கட்டைகள் பெற வேண்டுமென்றால் நேற்றே இந்தப் பதிவை இட்டிருக்கணும்! ஆனால் வாரயிறுதி அலைச்சலில், காய்ச்சல் பிடித்துக் கொண்டது போல! இன்று அலுவலகத்தில் இருந்து மதியமே வந்து, பதிவை எழுதிட்டு, இதோ சீக்கிரமே தூங்கச் செல்கிறேன்! :)

2. வேலைப்பளுவும் சேர்ந்து கொண்டதால், ரோமாயணம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை! தசாவதாரம் போல் தள்ளிக் கொண்டே போகிறது! Sorry! :)
Read more »

Tuesday, December 19, 2006

அனுமனுக்கு மூல நட்சத்திரம்!

இன்று ஹனுமத் ஜெயந்தி (Dec 20); மார்கழி மாதம், மூல நட்சத்திரம் அனுமனின் (மறு) பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது!
"ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்" என்று சிலர் உளறுவதைக் கேட்டிருப்பீர்கள் :-)
இங்கே அனுமன் ஆண் மூலம். அரசாண்டானா? இல்லையே!
அடக்கமான அன்புத் தொண்டனாகத் தானே இருந்தான்!


எகனை மொகனையா யாரோ சொல்லப் போய், இந்த மூல நட்சத்திரப் பெண்கள் (நடுத்தர வர்க்கப் பெண்கள்) பலர் படும் பாடு, பாவம் சொல்லி மாளாது!
சரியா எதுவும் புரிஞ்சுக்காம சில பெரியவங்களும் இதுக்கு உடந்தையா இருக்காங்க! இது மாறனும்...நல்ல விழிப்புணர்ச்சி ஏற்படுத்தனும்.
அட்சய திருதியை-ன்னா என்னான்னே தெரியாம இருந்த பலர், பணம் நகை என்றவுடனே இப்பத் தெரிஞ்சிக்கலையா?
அது தெரியும் போது இதையும் தெரிஞ்சுக்க வைக்கலாமே. :-)))


சரி, ஹனுமத் ஜெயந்திக்கு வருவோம்!
ஆண்டவன் பெருமையைச் சொல்வது எளிது! ஆனால் அடியவர் பெருமையைச் சொல்வது அரிதிலும் அரிது!!
"பெரியது எது என்று கேட்கும் வேலவா.....தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே", என்று திருவிளையாடல் படத்தில் ஒளவையார் பாட்டில் வருமே! கேட்டு இருக்கிறீர்களா?

இராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், இராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை!
ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு பாகம் உள்ளது!
சுந்தர காண்டம்!
இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை! அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! அவன் பெயர் தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது!

அனுமனை விரும்பாதார் தான் யார்?
வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட மாலை - இப்படி மாலை மரியாதைகள் தான் என்ன?
சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன், சமய சஞ்சீவி என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு?
ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கிடைக்குமா?

படங்களுக்கு நன்றி: BG Sharma

சீ்தையின் உயிரைக் காத்தான் - விரக்தி/தற்கொலையில் இருந்து!
இலக்குவன் உயிரைக் காத்தான் - கொடிய நாக பாசத்தில் இருந்து!
பரதன் உயிரைக் காத்தான் - தீ மூட்டி மாய்த்துக் கொள்வதில் இருந்து!
இப்படி எல்லோரையும் காத்து, ராமனையே காத்தான்! உயிர் காப்பான் தோழன் அல்லவா?

அனுமன் சிறந்த அமைச்சன், தொண்டன் மட்டும் அல்ல!
மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான் என்பது தெரியுமா? 'மல்யுத்த வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்', என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார்.
அதனால் தான் இராமாநுஜர், 'தோற்றத்தை வைத்து அடியவரை எடை போடக் கூடாது' என்பதை மிக உறுதியாக விதித்தார்.
இப்பேர்பட்ட அனுமன் பிறந்த இடம்: திருமலை திருப்பதி, அஞ்சனாத்ரியில்!



அனுமனைப் பற்றி என்ன எழுதலாம் என்று யோசித்தால், யோசனை நீண்டு கொண்டே தான் போகிறது!
அதனால் கவிச் சக்ரவர்த்தி கம்பரின் அழகுத் தமிழ்ப் பாடல் ஒன்றினால் அனுமனைத் துதி செய்யலாம் இன்று! வாருங்கள்!!

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு, அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
, அவன் எம்மை அளித்துக் காப்பான்!


இது என்ன அஞ்சு அஞ்சாகப் பாடுகிறாரே கம்பர் என்று பார்க்கிறீர்களா?
(தலைவர் படத்தில் எட்டு எட்டாகப் பாடியதை நினைவில் வையுங்கள்...
தமிழ் மணத்தில் ஆறு விளையாட்டு விளையாடும் போது, கம்பர் அஞ்சு விளையாட்டு விளையாடக் கூடாதா என்ன?:-)

இது பஞ்ச பூதப் பாடல்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் = அஞ்சிலே ஒன்று காற்று; வாயு! அவன் புதல்வன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி = அஞ்சிலே ஒன்று நீர்; கடல்! அந்தக் கடலைத் தாண்டிச் சென்று அன்னையைச் சேவித்தவன் அனுமன்.

அஞ்சிலே ஒன்று ஆறாக = அஞ்சிலே ஒன்று ஆகாயம்; அந்த ஆகாயத்தின் வழியாகப் பறந்தான்! யாருக்காக?
ஆரியர்க்காக ஏகி = அருமையான இயல்பு கொண்டவன் இராமன்; அவனுக்காக ஏகினான்.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு = அஞ்சி்லே ஒன்று பூமி்; மண்! அந்த மண்ணிலே தோன்றிய அணங்கு (பெண்) சீதை!
கண்டு அயலார் ஊரில் = அவளைக் கண்டு, அயலார் ஊரான இலங்கை நகரத்தில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் = அஞ்சி்லே ஒன்று நெருப்பு; தீ! அந்தத் தீயை அவனுக்கு வைக்கப் பார்த்தனர்; அதை அவர்களுக்கே வைத்தான் அனுமன்.
அவன் எம்மை அளித்துக் காப்பான் = அந்த அனுமன், பஞ்ச பூதங்களால் ஆன என்னையே, எனக்கு அளித்துக் காப்பான்!

அது எப்படி என்னையே எனக்கு அளிப்பான்?
அந்தராத்மா என்கிற நான்; அங்கு இதய கமல வாசம் செய்பவன் இறைவன்;
அனுமனின் இதய கமலத்தில் இராமன்.
இப்படி ஆழ் மனதில் புதைந்துள்ள இறைவனையே நமக்குக் கொண்டு வந்து அளிப்பவன் தான் அனுமன்.
என்னை எனக்கு அளிப்பான்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஞ்சநேயா!
பிறந்த நாள் வணக்கங்கள் ஆஞ்சநேயா!


திருநெல்வேலி சஞ்சீவி ஆஞ்சநேயர்

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP