Showing posts with label பிள்ளையார். Show all posts
Showing posts with label பிள்ளையார். Show all posts

Friday, September 10, 2010

பனையோலைப் பிள்ளையாருக்கு ஷிஃப்ட் ஆகறீங்களா?

பந்தல் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் + ஈத் முபாரக்!
ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தியின் போது, பிள்ளையார் தான் பெரும்பாடு படுகிறார்! நாம முழுங்குகிறோம்! அவரோ முழுகுகிறார்! :)

நடக்கும் காரியம் விக்கினம் இல்லாமல் நடக்க நாமெல்லாம் விநாயகரை வணங்கினால்...
அவரோட சதுர்த்திக்கு, அவர் விக்கினமில்லாமல் கரைய,
பாவம்...அவர் எந்த முழுமுதற் கடவுளை வேண்டுவார்? :))

மெரீனாவில் பிள்ளையாரின் அல்லோலகல்லோலங்கள்-ன்னு பதிவு போடலாமா? :)

* களிமண் பிள்ளையாரை ஒவ்வொரு ஆண்டும் கரைக்கக் கஷ்டமாக இருக்கா?
* குளம்/கடல்-ன்னு கரைக்கும் நேரத்தில் மண்ணும் சகதியுமாய் ஆகி, பிள்ளையாருக்கும் கஷ்டம், நமக்கும் கஷ்டமா?

பேசாமல், இந்த ஆண்டு, பனை ஓலைப் பிள்ளையாருக்கு ஷிஃப்ட் ஆகிப் பாருங்களேன்! இதோ...மங்கலம் கொழிக்கும்...அழகியவாரணப் பிள்ளை!ஹாரித் தாரங் என்பவர் எளிமையாக வடிவமைத்துள்ள இந்தப் பிள்ளையார் சுற்றுச் சூழல் கெடாத பிள்ளையார்!
எளிமையான பிள்ளையார்! அழகானவரும் கூட! பனையோலையால் சுருட்டிச் சுருட்டியே தலைப்பாகையும், காதும், துதிக்கையும், தொந்தியும் அழகாகச் செய்துள்ளார்கள்! = தால விருட்ச கணபதி! திருப்பனந்தாள் பிள்ளையார்!

சென்னையில் வாங்கணும்-ன்னா இதோ தகவல்கள்:
Rajen’s Square,
40, Bazzullah Road,
T.Nagar,
Chennai – 600 017.
Phone: 044 – 65275990,
Mobile: 98412-79881, 98419-37297
(http://chennaionline.com/City360/City-Feature/Get-eco-friendly-this-Chaturthi-with-Palm-leaf-Ganeshas/20101409011403.col)


பனையோலை பிள்ளையார்-ன்னா சாஸ்திரத்துக்கு ஒத்து வருமா-ன்னு எல்லாம் குழம்பாதீங்க! :)
நாம நல்லா இருக்கணும்-ன்னு, பிள்ளையாரை அலைக் கழிப்பதுவா பக்தி??? யோசிச்சிப் பாருங்க!

மஞ்சளில் பிடித்து வைக்கும் பிள்ளையார் தான் மங்களகரமானவர்!
அடுத்து இயற்கையாகச் செடி கொடிகளில் செய்யப்படும் விநாயகர்! - வெள்ளெருக்கு விநாயகர் கேள்விப்பட்டு இருப்பீயளே? அதே போலத் தான் பனையோலையும்!

* தோரணத்துக்கு பனையோலை தானே பயன்படுத்துகிறோம்?
* காதோலை/கருகமணி என்று இன்றும் பனையோலையில் தானே கிராமத்தில் அம்மனுக்குச் சார்த்துகிறோம்?
* ஆண்பனைகளை பெண்பனைகளாக மாற்றிப் பாடி, பனையோலைக்குப் பெருமை சேர்த்தவர் அல்லவா ஞானசம்பந்தர்! இந்தத் தலம் = செய்யாறு (திருவத்திபுரம்), எங்கூரு வாழைப்பந்தலுக்கு அருகில் தான்!

வெள்ளை வெளேர் என்று = சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்று பனையோலையிலும் அப்படியே இருக்கிறார்! கரைக்கவும் எளிது! இலைகள் எளிதாகத் தானே மஃகி விடும் அல்லவா? பிள்ளையாரைக் கரைக்கிறேன் பேர்வழி என்று அவரைக் கலங்கடிக்க வேண்டாம் அல்லவா?

அவளை முருகனிடம் கூட்டி வைத்த முதல்வன்! தேனினும் இனிய திருப்புகழ்! அக்குற மகளொடு அச்சிறு முருகனை அக்கண மணம் அருள் பெருமாளே!

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை இளநீர் வண்(டு)
எச்சில் பயறு அப்பவகை பச்சரிசி பிட்டு வெளரிப்
பழம் இடிப் பல் வகைத் தனி மூலம்

மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு
விக்கின சமர்த்தன் எனும் அருளாழி
வெற்ப குடிலச் சடில விற்பரம அப்பர் அருள்
வித்தக மருப்புடைய பெருமாளே!


பிள்ளையார்-ன்னாலே எளிமை தானே? எளிமையானவரை எளிமையாகவே வணங்கலாம்!
நாம் குழந்தையாய் இருந்த போது, நம்மை எளிமையாகவே வந்து தொட்ட முதல் தமிழ்ப் பாடலால் போற்றுவோம்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா!


கோலம் செய் கரிமுகனை,
அலங்-கோலம் செய்யாது,
அலங்-காரம் செய்து வணங்குவோம்!!


உங்கள் தெரிவு என்னவோ?

1) ஜெய் ஸ்ரீ கணேஷா

2) பிள்ளையார் பிள்ளையார்! 3ஆம் நாள்...வரிசை வாய்ந்த பிள்ளையார்!

3) அந்தி வானம் அரைத்த மஞ்சள்! அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்!
தங்கத் தோடு ஜொலித்த மஞ்சள்! கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்!
மஞ்சள்! மஞ்சள்! மஞ்சள்!
Read more »

Sunday, August 23, 2009

சிதம்பரத்தில் தமிழை நுழைத்த பிள்ளையார்!

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் மக்கா! இன்னிக்கி ஒரு நாளாச்சும் வீட்டுல, அண்ணி கையால் பூரிக்கட்டை பறக்காம, கொழுக்கட்டை பறக்க வாழ்த்துக்கள்! :))

விநாயகரைப் பற்றிப் பேசாமல் இந்திய மதங்களின் தத்துவத்தை முழுக்கப் பேச முடியாது!
அப்படி அனைத்திலும் "கலந்து" இருப்பவர் விநாயகர் = லோக்கல் பாஷையில் சொன்னாப் "பிள்ளையார்"! :)

பிள்ளைகளின் மனம் கவர்ந்த எளிமையான பிள்ளையார், அப்படி என்ன தமிழுக்குத் தொண்டு செய்து விட்டார்? அதுவும் சிதம்பரத்தில்-ன்னு கேட்கறீங்களா? ஹிஹி! படிங்க படிங்க! :)


* வரலாற்றில் பிள்ளையார் உண்டா, தமிழ் இலக்கியத்தில் பிள்ளையார் சொல்லப்பட்டு இருக்காரா என்ற ஆராய்ச்சி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்!
* வாதாபியில் இருந்து வந்தாரா? பரஞ்சோதி என்ற சிறுத்தொண்ட நாயனார் தான் விநாயகரைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்ததா? என்பதெல்லாம் இன்னொரு பக்கம் இருக்கட்டும்!
ஆனால் இன்று, தெருவுக்குத் தெரு, குளத்துக்குக் குளம், தமிழகத்தில், பிள்ளையார் தான் இருக்காரு என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை! :)

* அது சாஸ்திரம் படித்த பண்டித சிகாமணிகளாக இருக்கட்டும்! அவர்களும் பிள்ளையாரில் துவங்கியே துவங்குகிறார்கள்!
* சாஸ்திரம்-ன்னா என்னான்னே அறியாத சாமான்யனாக இருக்கட்டும்! அவனும் பிள்ளையார் குட்டு குட்டிக்கிட்டுத் தான் வேலையைத் துவங்கறான்! - ஏன்?


பிள்ளையார் ஓம்கார சொரூபம்! பிரணவ சொரூபம்!
எப்படி, எல்லாம் மந்திரங்களின் முன்னும் "ஓம்" சேர்க்கிறோமோ...
அப்படி, எல்லாம் வழிபாடுகளிலும் "பிள்ளையார்" சேர்க்கப்படுகிறார்!

அவரைச் சுற்றிலும் பல புராணக் கதைகள்! பல வரலாற்று நிகழ்வுகள்!
ஒரு தாய் தந்தையரின் திருமணத்தின் போது, அவர்களின் பிள்ளை இருக்க முடியுமா? = ஆனால் பிள்ளையார் சிவ-பார்வதி திருக்கல்யாணத்தில் இருந்தார்! அவர் ஆதி விநாயகர் என்று வாரியார் அடிக்கடி சொல்லுவார்!
பிள்ளையார் = அது புராணமோ, கதையோ, இல்லை குறியீடோ, எதுவாகிலும் பிள்ளையார் இல்லாமல் ஒரு விழாவோ, பூசனையோ இல்லை!

ரொம்பவும் புறம் தொழாமை பேசும் சில ஸ்ட்ரிக்ட்டான வைணவர்கள் கூட, "தும்பிக்கை ஆழ்வார்" பற்றிப் பேசுவார்கள்! :)
விஷ்வக்சேன கணங்களில் ஒருவராய், கஜமுகர் என்னும் கணநாதரும் அங்கு உண்டு :)

இப்படிப்பட்ட பிள்ளையார், அப்படி என்ன தமிழுக்குத் தொண்டு செய்து விட்டார்? அதுவும் சிதம்பரத்தில்? இனி கதையை மேலப் படிங்க! :)


திருநாரையூர் என்னும் ஊர்! வீராணம்/காட்டுமன்னார் கோயில்-க்கு கிட்டக்க! இந்தப் பக்கம், தில்லை-சிதம்பரத்துக்கும் கிட்டக்க தான்!

அங்கிட்டு அனந்தேசர், கல்யாணி என்னும் அன்பான பெற்றோருக்கு ஒரே மகன் நம்பி! பின்னாளில் நம்பியாண்டார் நம்பி!
அப்பா கோயில்ல வேலை பாக்குறவரு! அம்மா தினமும் பிரசாதம் பண்ணிக் கொடுத்து அனுப்புவாங்க! அதை நைவேத்தியம் பண்ணி, திரளும் மக்களுக்குக் கொடுக்கும் அனந்தேசன், பெரும்பாலும் வீட்டுக்கு வருவது வெறுங்கையுடன் தான்!

அப்பாவின் வருகையை விட, தின்பண்டம் வரும் என்று எதிர்நோக்கி இருக்கும் என்னையப் போல சின்னப் பிள்ளை நம்பி! அந்த நம்பி-கைக்கு பண்டம் வரும் என்ற நம்பிக்கை!

ஆனால் பண்டம் வராது! அப்பா என்ன சொல்ல முடியும்? "பிள்ளையார் சாப்ட்டாரு-ப்பா" என்று சொல்லிச் சமாளித்தார் அந்த அப்பாவிப் பிள்ளையின் அப்பா!
தும்பிக்கையால், நம்பி-கைக்கு வராமல் போனது நம்பிக்கை! :))

இன்னொன்னும் நல்லா கவனிச்சிக்கோங்க! திருநாரையூர் வேற! திருநறையூர் வேற!
அது பறவையான நாரையின் ஊர்! இது நறை=தேன், ஈக்களின் ஊர்!
முன்னது சைவத் தலம்! பின்னது விண்ணவத் தலம்!
அது சிதம்பரம் கிட்ட! இது குடந்தை-திருவாரூர் கிட்ட!
அது சம்பந்தரும் அப்பரும் பாடியது! இது திருமங்கை மன்னன் பாடியது!

திருநாரையூரில் உள்ள இறைவன் = செளந்திரநாதர் (எ) அழகப்பர்!
இறைவி = திரிபுர சுந்தரி (எ) முப்புரத்து எழிலி!
இங்கு இருக்கும் பிள்ளையாரின் பெயர் தான் பொள்ளாப் பிள்ளையார்! ஆனா இவரைப் "பொல்லாப்" பிள்ளையார்-ன்னு நம்ம மக்கள் பொல்லாதவர் ஆக்கீட்டாங்க! :))


பொள்ளுதல் = செதுக்குதல்! கல்லை உளியால் பொள்ளுவாய்ங்க! வீட்டில் கூட அம்மி பழசாயிருச்சுன்னா, ஆள் அனுப்பி அம்மியைக் கொஞ்சம் பொள்ளுவாய்ங்க!
இப்பல்லாம் மம்மியே வீட்டில் இருப்பதில்லை! அப்பறம் தானே அம்மி எல்லாம்? :)

பொள்ளாத பிள்ளையார் = உளியால் பொள்ளப்படாத பிள்ளையார்! அதாச்சும் முழுமையாகச் செதுக்கப்படாது, ஓரளவு வடிவம் மட்டுமே வடிக்கப்பட்ட பிள்ளையார்!

அதைத் தான் நம்ம தமிழ் "கூறும்" நல்லுலகம், கூறு கூறாக்கி, "பொள்ளாப்" பிள்ளையாரைப் "பொல்லாப்" பிள்ளையார்-ன்னு ஆக்கீருச்சி! நல்ல வேளை, பொல்லாதவர் என்பதுக்கு ஏதாச்சும் தல புராணக் கதை கட்டாம இருந்தாங்களே! சந்தோசம்! :)
பிள்ளையாரும் "பொல்லாத" பிள்ளையார் ஆயிட்டாரு! இவரு பண்ண ஒரே பொல்லாத செயல் = தமிழைத் தில்லைக்குள் நுழைக்க உதவியது தான்! :)) ஆகா! அப்படியா சேதி?! நாம மேக்கொண்டு கதையைப் பார்ப்போம், வாங்க!

ஒரு முறை, அப்பா வெளியூர் போக, சின்னப் பிள்ளை பூசைக்குப் போகிறான்!
பிள்ளையார் பூஜை தானே! ரொம்ப ஆச்சார அனுட்டானம் எல்லாம் இல்லையே! யாரு வேணும்-ன்னாலும் பண்ணலாமே!
அம்மா கட்டிக் கொடுத்த கொழுக்கட்டையை ரொம்ப சிரத்தையா நிவேதனம் பண்ணுது புள்ளை! இதே, நானா இருந்தாக்கா?...... லபக் லபக் :))



அப்பா இவ்வளவு நாள் சொல்லியதைக் கேட்டு, பிள்ளையார் நெசமாலுமே சாப்பிடுவாரு-ன்னு நினைச்சிக்கிட்டு, நம்பியாண்டான், பொள்ளாப் பிள்ளை கிட்ட மல்லு கட்டுது! :)
ஆனா அவரு இம்மி கூட அசையலை! பிள்ளைக்குப் பயம் வந்துருச்சி! அப்பா சொல்லிக் கொடுத்த படி, சாஸ்திரப் பிரகாரம் பூஜை பண்ணத் தவறிட்டோமோ? அதான் இப்படி ஆயிரிச்சோ? இப்போ ஊரே பார்க்க, ச்சே....நம்ம அம்மா-அப்பாவுக்குத் தானே அசிங்கம்?

பிள்ளையாரின் காலடியில் தன் தலையை வைத்து உருண்டு பிறண்டு, நம்பி தேம்பித் தேம்பி அழுகிறான்!
தனிமையில் சிந்தும் கண்ணீர் தூய்மையானது! ஆழ்ந்து அழுத ஆழ்-வார்களைப் போல ஆழமானது!

குழந்தைகள் எல்லார் முன்னாடியும் அழும் போது கூடப் பாருங்க! பலர் பார்க்க அழுகைச் சத்தம் மட்டுமே இருக்கும்! ஆனால் கண்களில் நீர் ரொம்பத் தளும்பாது! ஆனால் தனிமைக் கண்ணீரோ தனிமையானது! சத்தம் இல்லாதது! சித்தம் இரங்கியது!

* சாஸ்திரத்துக்கு வராத பிள்ளையார், கண்ணீருக்கு வருகிறார்!
* அன்று காதலுக்கு வந்த பிள்ளையார், இன்று கண்ணீருக்கு வருகிறார்!
* தும்பிக்கையால் நம்பி-கைக்கு ஆங்கே வந்தது நம்பிக்கை!

பிள்ளையார் சிலையில் தும்பிக்கை மட்டும் உயிர்ப்புடன் நிவேதனத்தை உண்ண, சிறுவன் நம்பியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! இந்தக் காலத்தில் பிள்ளையார் பால் குடித்த உடான்ஸ் கதை போல் இல்லாமல், திடப் பொருளும் உள்ளே செல்கின்றதே! இது என்ன விந்தை!

அப்பா அம்மாவிடம்......போய் சொன்ன பிள்ளையை, பொய் சொன்ன பிள்ளை என்றார்கள்! ஆனால் அப்பா மறுநாள் மறைந்திருந்து பார்க்க, தும்பிக்கை மட்டும் நீள்வதைக் கண்டார்! "சர்வ பூஜா நிபுணரான" அவருக்கு அன்று தான் நம்பிக்கையே வந்தது! கடவுள் நம்பிக்கையே வந்தது! :)



தமிழகத்தின் விடிவெள்ளி! மாமன்னன் இராஜராஜ சோழன்!
அருண்மொழி வர்மனாய் அரசுப் பட்டம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த நேரம்! ஊரெங்கும் உத்தம சோழனின் ஆட்சி!
அது சிதம்பரத்தில் மலைநாட்டு தீட்சிதர்கள் கூட்டமாகக் குடியேறிய கால கட்டம்! உடையார்குடி என்னும் தில்லைக்குப் பக்கத்து ஊரில்! சைவ சித்தாந்த பூசைகளாக இல்லாமல், தாந்த்ரீக பூஜைகளாகச் செய்வது இவர் தம் வழக்கம்!
சைவ சித்தாந்த சிவாச்சாரியார்களான தில்லை வாழ் அந்தணர்களுடன் நயந்து சேர்ந்து கொண்டு, பின்பு தாங்கள் தான் மெய்யான தில்லை வாழ் அந்தணர்கள் என்று மாறிப் போனதாகவும் சில குறிப்புகள் வரலாற்று ஆய்வுகளில் உள்ளன!

இராஜராஜனுக்கு நெடுநாளைய ஆசை! தமிழ்த் திருமுறைகளான தேவாரங்களை ஒன்று திரட்டிப் படிக்க வேண்டும் என்று! அதன் செந்தமிழும், இசையும், சந்தமும் தான் எத்துணை இனிமை! எத்தனை கனிவு!
* வேத சப்தங்களுக்கு அதிர்வு என்றால்.....தேவாரச் சத்தங்களுக்கு அன்பு! கனிவு! குழைவு!
* வேத சப்தங்கள் மண்டையில் என்றால்.....தேவாரச் சத்தங்கள் இதயத்தில்!


ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் தேவாரப் பாடல்கள் கிடைக்கிறதே தவிர, முழுமையாகக் கிடைத்த பாடில்லை!
முதல் பத்தி கிடைக்கிறது! ஆனால் அடுத்த பத்தி இல்லாமல், வேறேதோ வருகிறது! இது இராஜராஜனுக்கு நெடுநாளைய உறுத்தல்!

பஞ்சவன் மாதேவி என்னும் தேவரடியார் தளிச்சேரிப் பெண்! தில்லையில் நடனம் பயில்பவள்! பின்னாளில் இராஜராஜன் மனைவியாகப் போகிறவள்! அவள் மூலமாகவே நம்பியாண்டார் நம்பியை அறிகிறான் இராஜராஜன்!

நம்பியாண்டார் நம்பியோ வளர்ந்து வாலிபனாகி விட்டார்! ஆனால் இன்றும் பொள்ளாப் பிள்ளையாரின் தும்பிக்கை அவர் தரும் உணவை மட்டும் வாங்கிக் கொள்கிறது!

நம்பியும் ஊர் ஊராகச் சென்று, கிடைக்கும் தேவாரச் சுவடிகளைத் திரட்டுவார்! அதைப் பிரதி எடுத்து, இசை அமைத்து, விருப்பம் உள்ளோர்க்கு ஆலயங்களில் படிக்கத் தருவார்! இதனால் அப்பவே தீட்சிதர்களுக்கும் நம்பிக்கும் கொஞ்சம் முட்டிக் கொண்டது! :)

அந்தப் பாடல்களுக்கு பஞ்சவன் மாதேவி ஆடவும் செய்வாள்! அவள் செய்த அறிமுகத்தால் இராஜராஜன் திருநாரையூர் வருகிறான்! மன்னன் அல்ல என்றாலும் அரச குலத்தவன் அல்லவா? படோபடங்கள் கூடவே வருகிறது!
பிள்ளையாருக்குப் பிடித்தமான பழங்கள், கரும்பு, தேன், அப்பம், அவல், பொரி, எள்ளுருண்டை ஆகியவற்றை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வருகிறான்!

நம்பியாண்டார் நம்பி அவை அத்தனையும் பொள்ளாப் பிள்ளைக்குக் காணிக்கை ஆக்குகிறார்!

இராஜராஜன் தன் நெடுநாளைய தேவாரத் தேடலைப் பற்றி அவரிடம் மனம் விட்டுப் பேசுகிறான்! அவரும் ஊர் ஊராகப் போய்த் தான் தேடியதை எல்லாம் அவனிடம் எடுத்துச் சொல்கிறார்! இருவருக்கும் நட்பு பூக்கிறது! அவன் அறியாத சில பதிகங்களையும் அவனுக்குப் பாடிக் காட்டுகிறார்! இராஜராஜன் மனம் கரைந்து போகிறான்! தேடல் தீவிரம் ஆகிறது!


அன்றிரவு நம்பிக்கும் உறக்கம் வரவில்லை! தன்னைப் போல் ஆர்வமுள்ள இன்னொருவனைக் கண்ட இன்பம்! இவ்வளவு நாள் பொள்ளாப் பிள்ளையாரிடம் தனக்கென்று எதுவும் வாய் விட்டுக் கேட்டதில்லை! அன்று கேட்டே விட்டார்!

நம்பீ......"தில்லையில், கை முத்திரை கூடிய அடையாளத்துடன் இருக்கும் ஓர் அறையில், தேவாரச் சுவடிகள் உள்ளன!"

கனவில் வந்து விழுகிறது பொள்ளா வார்த்தைகள்! பொங்குகிறது நம்பிக்கு! பொள்ளாப் பிள்ளையார் அன்று காட்டிக் கொடுத்தது தான்!
அன்று "பொள்ளாதவர்" காட்டிக் கொடுத்த வழி தான், தமிழ்ப் பதிகங்கள் அம்பலம் ஏறும் முயற்சியில், முதல் முயற்சி!

நம்பியாண்டார் நம்பி தில்லைக் கோயிலையே சுற்றிச் சுற்றி வருகிறார்! அவ்வளவு பெரிய கோயிலில் எங்கென்று போய்த் தேடுவது? அதுவும் அதிகார பலத்தை மீறி?
பல நாள் ஆலயத்தை வெறுமனே சுற்றச் சுற்ற, ஒரு நாள் கண்டே விட்டார்! ஒரு அறையில் புற்று எறும்புகள் சாரி சாரியாக ஓடுகின்றன! கணக்கில்லாமல் ஆயிரக் கணக்கில் ஓடுகின்றன! ஆகா!

பொள்ளாப் பிள்ளை சொன்ன கை முத்திரை அடையாளத்துடன் கூடிய அறை இது தானோ? அருகே சென்று ஒதுக்குப்புறமான அந்த அறையைப் பார்க்கிறார்!
அதே கை முத்திரை! - அய்யோ! புற்று எறும்புகள் ஓடுகின்றனவே!
கரையான் அரித்து விட்டதோ! வேதங்கள் எழுதாக் கிளவி என்றால் திருமுறைகள் எழுதிய கிளவி ஆயிற்றே! அதன் கதி இது தானா?

நம்பிகள், அந்த அறையைத் திறக்குமாறு தீட்சிதர்களை வேண்ட, உடனே மறுக்கப்படுகிறது! விரட்டப்படுகிறார்!
எங்கு பேச்சு நடக்கிறதோ, அது சாத்வீகமான பேச்சாக இருந்தாலும், அதான் பேச்சு-ன்னாலே பிடிக்கவே பிடிக்காதே! நம்பியாண்டார் நம்பி விரட்டப்படுகிறார்!

நம்பியாண்டார், பஞ்சவன் மாதேவிக்குச் சொல்லி, இராஜராஜனிடம் விஷயத்தைச் சொல்ல, அவன் அலறி அடித்துக் கொண்டு கிளம்பி வருகிறான்!
அவனுக்கும் மறுக்கப்படுகிறது! ஆனால் சற்றுப் பணிவாக! அரச பதவியில் இல்லையே! இருப்பினும் அரச குல வீரனைப் பகைத்துக் கொள்ள முடியுமா?

அரசன் அறையை உடைத்து உள்ளே நுழைந்தால்? அய்யோ! அது அபச்சாரம் என்றல்லவா ஆகி விடும்? நாளை ஊரில் மழை பொழியாவிட்டாலும், அதுக்கு இராஜராஜன் தான் காரணம் என்று சொல்லி விடுவார்களே!
கை முத்திரையுடன் கூடிய அடையாளத்தை முறிக்க வேண்டும் என்றால், எப்பவோ சமாதியான, தேவார மூவரே, முன் வர வேண்டும் என்று சாதுர்யம் பேசப்படுகிறது! மிகவும் "சமத்காரமான" தலைமைத் தீட்சிதர்! :)

* வேதங்களை ஒலிக்க யாக்ஞவல்கியரே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* சூத்திரங்களை விளக்க பதஞ்சலியே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* பாஷ்யத்தைப் பிரஸ்தாபிக்க சங்கரரே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* ஆனால் தேவார மூவர் வர வேண்டும் என்று அதே வாய் பேசியது!

தேவாரம் மூவரின் சொத்தாம்! சொத்துக்கு உரியவர் வர வேண்டும் என்று சட்டத்தைத் திட்டத்துடன், எட்ட நின்று பேசினர்!
மூவருக்கு மதிப்பு குறையக் கூடாது-ன்னு தான் இப்படிக் கெடுபிடி...என்றெல்லாம் வெல்லம் பூசிக் கள்ளம் பேசிய பான்மை!



மூவர் வந்தனரா? அறை திறந்ததா? தமிழ் பிறந்ததா?
இங்கே படித்துக் கொள்ளுங்கள்! என்னுடை நண்பன் முன்பிட்ட பதிவு!

மூவர் சிலையாகிச் சிலையாக வந்தனர்! அறை திறந்தது! சிறை திறந்தது! தமிழ் பிறந்தது! அருள் சுரந்தது!

நம்பியாண்டார் நம்பிகளின் கைவண்ணத்தில் தூசு தட்டப்பட்டு, திருமுறைகள் முதல் முறையாக வகைப்படுத்தப்பட்டன!
பதினெட்டாயிரம் பாடல்கள், முதன் முதலில் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டன!
* சம்பந்தர் = 1,2,3 = திருக்கடைக்காப்பு
* அப்பர் = 4,5,6 = தேவாரம்
* சுந்தரர் = 7 = திருப்பாட்டு

பின்னாளில் இன்னும் பல அடியவர்களின் பதிகங்களைச் சேர்த்து பன்னிரு திருமுறைகளாக வகுக்கப்பட்டன! ஆனால், ஆலயத்தில் தீட்சிதர்களே தேவாரத்தைப் பாடுவார்களா, கருவறையில்? உம்ம்ம்ம்...இராசராசனும் ரொம்ப நெருக்கவில்லை!

பிடிக்காதவர்களிடம் வற்புறுத்தி என்ன பயன்? என்று நினைத்து விட்டான் போலும்!
தேவாரத்தை ஆலயத்தில் பாட "பிடாரர்கள்" என்பவர்களைத் தனியாகவே நியமித்து விட்டான்! இவர்களே அந்நாளைய ஓதுவார்கள்!
இன்றும் ஓரமாய் இருந்து ஓதுகிறார்கள்! அம்மட்டில் மகிழ்ச்சியே! ஆனால் எங்கள் ஈசனின் கருவறைக்குள் தே-ஆரம் செல்லும் நாள் எந்த நாளோ? நாலயிரப் பாசுரம் போல், தென் தமிழ் ஓதி முன்னே வர, தென் நாடுடைய சிவன் பின் வரும் நாள் எந்த நாளோ??

இதில் வியப்பு என்னவென்றால்.....
* தொலைந்த சைவத் திருமுறைகளை மீட்டெடுத்த நம்பியாண்டார் நம்பியும் அதே ஊர் தான்!
* தொலைந்த ஆழ்வார் அருளிச் செயல்களை மீட்டெடுத்த நாதமுனிகளும் அதே ஊர் தான்!

இன்றும் தில்லையில் "திருமுறை காட்டிய விநாயகர்" என்று சின்னூண்டு சன்னிதி உண்டு! :)
இராசராசனும் "திருமுறை கண்ட சோழன்" ஆனான்! அவர் காட்டிய சோழன்! இவன் கண்ட சோழன்! திருமுறை கண்ட சோழன்!

தில்லை அம்பலத்தில்.....
தமிழை ஏற்ற.....
முதலில் வழிகாட்டிய "முதல்வன்" - பொள்ளாப் பிள்ளையார் திருவடிகளே சரணம்!
நம்பியாண்டார் நம்பிகள் திருவடிகளே சரணம்!
Read more »

Wednesday, September 03, 2008

பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தான் அனுமன்!

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிஞ்சு போச்சுடா-ன்னு வழக்கத்தில் சொல்லக் கேட்டிருப்பீங்க! "நல்ல நோக்கத்தில் தான் இந்த வேலையைத் தொடங்கினேன்! ஆனால் கடைசியில் முடிஞ்சதென்னவோ வேற மாதிரி!" - இப்படிச் சொல்வதற்குத் தானே இந்தப் பழமொழியைப் பயன்படுத்தறாங்க, இப்பல்லாம்?

பிள்ளையார் சிலை பண்ணலாம்-னு தான் களிமண்ணைத் திரட்டி, உருட்டி ஆரம்பிச்சேன்!
ஆனால் கடைசியா வந்து நின்னதென்னவோ பிள்ளையார் உருவம் இல்லைப்பா! போயும் போயும் ஒரு குரங்கு உருவம்!
நல்ல நோக்கத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன்! ஆனால் அடிக்கப்பட்ட கும்மியில், கடைசியில் வந்து நின்னதென்னவோ வேற மாதிரி தான்! - இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே? ஹா ஹா ஹா :))

சரி...
அதென்ன பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்த கதை? அப்படி ஒரு கதை நிஜமாலுமே இருக்கா என்ன?
கேட்டா, நொந்து, நூலாகி, நூடுல்ஸ் ஆயிருவீங்க! அப்படி ஒரு பழமொழியே இல்லை!
நம்ம மக்கள் அடிச்ச கும்மியில், நல்ல பழமொழி ஒன்று, வேற மாதிரி ஆகிவிட்டது! :)
சமய ஒற்றுமை சொல்ல வந்த பழமொழி, சலசலத்துப் போய் வேறு மாதிரி ஆகிவிட்டது!

உண்மையான வாசகம் என்னவென்றால்...
பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!

எந்த ஒரு செயல் துவங்கினாலும், யாரை வணங்க வேண்டும்? அது உங்களுக்கே தெரியும்! -பிள்ளையார்!
அதே போல் எந்த ஒரு செயலை முடிக்கும் போது, யாரை வணங்க வேண்டும்? தெரியுமா? -அனுமன்!
ஏன் இப்படி? பார்ப்போம் வாருங்கள்!


சென்னை அடையாறு, மத்திய கைலாச ஆலயத்தில், இந்தப் பழமொழியின் பொருளைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கலாம்! எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க? கை தூக்குங்க பார்ப்போம்! ஆனந்த விநாயகர்! வேங்கடானந்த விநாயகர் என்பது சுவாமியின் திருநாமம்!
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை! ஆதியில் பிடித்து அந்தத்தில் முடிந்த கதை! ஆதி+அந்தம்+பிரபு = ஆத்யந்தப் பிரபு
அதாச்சும், பாதி பிள்ளையார்-பாதி அனுமன் என்ற ஒரு திருவுருவச் சிலையை இங்கே காணலாம்! இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து! இதுவே ஆதியந்த ஸ்வாமி!

* எந்த ஒரு செயல் துவங்கினாலும், பிள்ளையாரை வணங்கிச் செய்வது வழக்கம்! விக்கினங்கள்/தடைகள் இன்றி செவ்வனே நடைபெற!
பிரணவம் தானே மூலாதாரம்! அங்கிருந்து தானே எந்த மந்திரமும் துவக்கம்! அதான் முதலில் பிள்ளையார் பூஜை!

* அதே போல் அந்தச் செயல் முடிக்கும் போது, அனுமனைத் துதித்து முடிப்பது வழக்கம்! நன்றி தெரிவித்துக் கொள்ள!
எப்பேர்ப்பட்ட செயலையும் செய்து விட்டு, நன்றி ஒன்றைக் கூட எதிர்பாராது இருப்பவரிடம் சொல்லும் நன்றி மிகப் பெரிதல்லவா! அதான் இறுதியில் அனுமத் பூஜை!

மத்திய கைலாசத்தில் ஆத்யந்த சுவாமி!

பல உபன்னியாசங்களில், இசை நிகழ்ச்சிகளில் இதைப் பார்க்கலாம்!
முதலில் "மகா கணபதிம்" என்று ஆரம்பித்தால், இறுதியில் அனுமனைக் கொண்டு, "ராமச்சந்த்ராய ஜனக" என்று மங்களம் பாடி முடிப்பார்கள்! பக்தி சார்ந்த எந்தவொரு விடயத்திலும் இந்த மரபு உண்டு!
பிள்ளையாரைப் பிடித்து, செயல் செவ்வனே நடந்து, மங்களகரமாய் முடிந்த கதை! இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!


* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே பிரம்மச்சாரிகள்!
* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே விலங்கின ரூபம் கொண்டவர்கள்!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே சமநிலை மூர்த்திகள்! - யானையும் குரங்கும் நிலத்துக்குச் சமநிலையாகவே நடக்கும்! எதிர்த்து செங்குத்தாய் நடக்காது! அதிலும் குரங்கானது, கைகள் இருந்தும் கூட, நிலத்தை மீறித் "தான்" என்று எழுந்து நடக்காது!
அதே போல் ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் இருவரும்! ஆனால் நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை!
அவருக்கு ஆற்றங்கரை கூட இடம் தான்! மதுரை முக்குறுணியும் ஒரு இடம் தான்! இவருக்கோ தூண் கூட இடம் தான்! விஸ்வரூப நாமக்கல்லும் ஒரு இடம் தான்!

* வடநாட்டிலும் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!

* நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!

* எம்பெருமான் கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்!

* பிள்ளையாரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = "கம்"; ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = "ஹம்"! கம் கணபதயே என்று க-வில் துவங்கி ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.


பொதுவாகச் செயல் துவங்கும் முன்னர் விநாயகரை வணங்குதல் எல்லாருக்கும் தெரியும்! ஆனால் செயல் நிறைந்தவுடன், அனுமனை வணங்குதல் பல பேருக்குத் தெரிவதில்லை! அதான் அடியேன் இங்கு சொல்லி வைத்தேன்!
இராமாயணத்திலும், அனைவரையும் வழியனுப்பி விட்டு, இறுதியில் அனுமன் உபாசனையே நடக்கிறது! அனைவருக்கும் நன்றி சொல்லும் இராமன், அனுமனை மட்டும் மனைவியுடன் சேர்ந்து உபாசிக்கிறான்! நன்றி சொல்லி மாளுமா நன்றி ஒன்று வேண்டாதானிடம்?

பிரணவ மந்திரம் ஓதி, ஜீவன் மண்ணுக்கு வருகிறது! - அது ஐங்கர (விநாயக) சொரூபம்!
அனுமனின் ராம மந்திரம் ஓதி, ஜீவனை மண்ணில் இருந்து அனுப்புகிறார் காசி நகர் ஈசன்! - அது அனுமத் சொரூபம்!
ஆதியில் தொடங்கி, அந்தத்தில் நிறையும் தத்துவம் தான் ஆதியந்த சுவாமி! அடுத்த முறை சென்னை மத்திய கைலாசத்தில் தரிசியுங்கள்!

இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!
ஆதியில் பிடித்து அந்தத்தில் முடித்த கதை!
இனி பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காய் முடிஞ்சி போச்சி-ன்னு சொல்லாதீங்க! :)

அனைத்து நண்பர்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

1. கொழுக்கட்டைகள் பெற வேண்டுமென்றால் நேற்றே இந்தப் பதிவை இட்டிருக்கணும்! ஆனால் வாரயிறுதி அலைச்சலில், காய்ச்சல் பிடித்துக் கொண்டது போல! இன்று அலுவலகத்தில் இருந்து மதியமே வந்து, பதிவை எழுதிட்டு, இதோ சீக்கிரமே தூங்கச் செல்கிறேன்! :)

2. வேலைப்பளுவும் சேர்ந்து கொண்டதால், ரோமாயணம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை! தசாவதாரம் போல் தள்ளிக் கொண்டே போகிறது! Sorry! :)
Read more »

Thursday, September 21, 2006

ஒளவையின் அகவல்

இனி, விநாயகர் அகவலைச் சிறிதே சுவைப்போமா!
(அகவல் பிறந்த கதையை இந்தச் சுட்டியில் படித்த பின் தொடர்வது பொருத்தமாய் இருக்கும்)

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5)


ஒளவை இறைவனின் அடி முடி சேவையைத் தரிசிக்கிறார். திருவடியில் இருந்து தொடங்குகிறார். குளிர்ச்சியான, மணம் மிக்க தாமரைப்பூ திருவடி. அதில் கொஞ்சும் சலங்கை. சற்று மேலே தங்கத்தாலான அரைஞாண் கயிறு, மெல்லிய வெண் பட்டு ஆடை. அழகிய இடுப்பு. உலகமே உள் அடங்கிய பெரிய வயிறு, இன்னும் சற்று மேலே கனமான ஒற்றைத் தந்தம்.
(சீதம்=குளிர்ச்சி; களபம்=மணக்கும் தைலம்; மருங்கில்- இடுப்பில்)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)


யானை முகம், நெற்றியில் திலகம், ஐந்து கரங்கள், அதில் ஒன்றில் அங்குசம். மற்றொன்றில் பாசக் கயிறு. (ஒரு கரத்தில் மோதகம், ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் – இவையே மற்ற கரங்கள்)
(வேழம்=யானை)

யானையை அடக்கத் தானே அங்குசம். அதைப் போய் யானையின் கையிலேயே கொடுக்கலாமா? ஏன் கொடுத்தார்கள்? அடக்குபவனும் அவனே, அன்பால் அடங்குபவனும் அவனே.
Mixture of opposites என்று சொல்லப்படும் எதிர் எதிர் பொருள்கள் எல்லாம் இறைவன் முன் ஒன்றுக்குள் ஒன்று அடங்கி விடுகின்றன.

இந்த தத்துவம் மிகவும் சிறப்பானது. இன்றைய வேதியியலும் எதிர் எதிர் விசைகளால் அணுப்பொருள் இயக்கம் என்று இதைத்தான் சொல்கிறது.
கருடனும், ஆதிசேஷன் என்னும் நாகமும் ஒரு சேரத் திருமால் அன்புக்குப் பாத்திரமாவதும் இப்படித் தானோ!

சற்றே நீலமான மேனி, தொங்கும் துதிக்கையாகிய வாய், நான்கு புஜங்கள்(தோள்கள்), மூன்று கண்கள் (அப்பனைப் போலவே!), யானைக்கே உரிய மதநீர் ஒழுகும் கன்னம்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)


இரு செவிகளும், பொன் மகுடமும், முறுக்கேற்றிய பூணூல் மார்பில் திகழ...
இதற்கு மேல் தமிழ்ப் பாட்டிக்கே வார்த்தை போதவில்லை வர்ணிக்க; சொல் பதங்களை எல்லாம் கடந்தவன் தானே கடவுள்! அந்த ஞான கணபதி அற்புதமாய் நிற்கும் கற்பக மரம்!

(களிறு=ஆண் யானை; மூஷிகம்=எலி)

அவ்வளவு பெரிய உருவம் என்று பயந்து விட வேண்டாம். நிலையில்லாது சதா துள்ளும் சின்ன எலியும், சுமந்து ஓடவல்ல பஞ்சுப் பொதி போலவன். மூஷிக வாகனன்!
விநாயகன் உருவமே மொத்தமும் pair of opposites தானே?
அவனை பாதம் தொட்டு, முழுவதும் தரிசித்த பின், முப்பழங்களையும் (மா, பலா, வாழை) நிவேதனமாகத் தருகிறார் ஒளவை.

“சங்கத் தமிழ் மூன்றும் தா” என்று பழம் மூன்று கொடுத்து, தமிழ் மூன்றும் வாங்கி விடுகிறாள் ஒளவை! கெட்டிக்காரி தான்!!
.......
.......



சற்றே கவனித்தால் ஒளவையின் பாட்டில் எளிமை தெரியும். ஏதோ பாரதியாரைப் படிப்பது போலவே இருக்கும். அருவி போல் கிடுகிடு நடை, அந்தக் காலத்திலேயே கடினமான சொற்களை விடுத்து, எளிமையாக புழங்கும் சொற்கள்.

இன்னும் நிறைய சொல்கிறாள் ஒளவை.

மாயாப் பிறவி மயக்கம் அறுத்து,
உவட்டா உபதேசம் புகட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் புகட்டி,
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்,
குண்டலி யோகம் காலால் எழுப்பும் கருத்தினை அறிவித்து

என்று பலவாறாக யோக ரகசியங்களை எல்லாம் அடுக்கி வைக்கிறாள்.

பூஜை முடித்து கயிலாயம் செல்ல தயாராக உள்ள ஞானி, தனக்குக் கிடைத்த சிறிய காலத்துக்குள், தான் பெற்ற பேற்றினை, உலகத்தோர்க்கு பகிர்ந்துவிட்டுச் செல்வதில் அவ்வளவு ஆர்வம்!

அவை அனைத்தையும் இங்கே சொல்ல முனைந்தால் பதிவு மிகவும் விரிந்து விடும்.

இறுதியாக இப்படி முடிக்கிறாள் ஒளவைபாட்டி.
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

ஓம் என்னும் ஓசையில் உருவம் அற்றவனாய் இறைவனைக் காட்டினாய்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
மனத்துள் ஆத்ம லிங்கமாய், உருவம் உள்ளவனாகவும் இறைவனைக் காட்டினாய்
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
அணுவிற்குள் அணுவாகியும் அண்டமெல்லாம் கடந்து பெரிதாகியும்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
கணுக்கள் முதிர்ந்து உள்ள கரும்புக்குள் உள்ள இனிப்பு போல் நீ இருப்பதைக் காட்டினாய்
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
சிவச்சின்னங்களும், திருநீறும், உலகில் விளங்கி நிலைபெறச் செய்து
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
மெய்யடியார் கூட்டத்தில் என்னையும் ஒருத்தியாகக் கூட்டுவித்து
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
அஞ்சு+அக்கரம்(அக்ஷரம்) – நமசிவாய என்ற ஐந்தெழுத்தின் சூட்சுமமான பொருளை உரைத்து
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
மனதில் ஆழமாக உணர்வித்து
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

பூக்களால் அர்ச்சனை பெற்று, நறுமணம் நிறைந்த உனது திருவடிகளுக்கே சரணாகதி அடைகின்றேன்

“சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதம்” என்று திருவடியில் ஆரம்பித்து, முடிக்கும் போதும், 'விரைகழல் சரணே' என்று திருவடியில் முடிக்கிறாள் ஒளவைப்பிராட்டி.

அவள் முடிக்கவும், விநாயகப் பெருமான் அவள் முன் தோன்றவும் சரியாக இருந்தது.
அலேக்!!!
தன் தும்பிக்கையால் ஒளவையைத் தூக்கினார். மண்ணில் இருந்து வி்ண்ணுக்கு மாற்றினார். கயிலையின் முடியில், ஈசனின் அடியில், கொண்டு நேரே நிறுத்தினார்.

நாமும் சொல்வோம் “வித்தக விநாயக விரைகழல் சரணே!”


Read more »

Wednesday, September 20, 2006

ஒளவையார்–யானையார்

காலை 7:00 மணி; வீட்டில் ஒரே பரபரப்பு. வீட்டுத் தலைவிக்கோ கையும் ஓடலை, காலும் ஓடலை.
பள்ளிக்குச் செல்ல மக்கர் பண்ணும் மகன்.
அடுக்களையில் அவளைப் பார்த்து மாறி மாறி விசில் அடிக்கும் குக்கர்.
வீட்டுத் தலைவருக்குக் கூட இல்ல அந்த உரிமை!
அய்யாவோ பூஜை அறையில்.

காக்க காக்க கனகவேல் காக்க.
"ஏம்மா, இன்னுமா பேப்பர் வரல? ஜோதிகா கல்யாணம் நல்லபடியா நடந்துச்சான்னு பாக்கலாம்னா...நேத்து நியூஸும் பாக்கல!”
நோக்க நோக்க நொடியில் நோக்க
“டேய் ஷ்ரவண், ஒழுங்கா ரெடியாயிடு. வீணா காலங்காத்தால அடி வாங்காத சொல்லிட்டேன்.”
தாக்க தாக்க தடையறத் தாக்க
.....

இது சில பல வீடுகளில் நடக்கும் வாடிக்கையான ஒன்று தான்.
இறை வழிபாட்டின் போது கூட மனம் ஒருமிக்காது அலை பாயும்.
நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே. (என்ன…. நடுவில் வேறு பேச்சுகள் பேசாது/ஏசாது இருக்கலாம்).
ஒளவைப்பாட்டி கூட இதற்கு விதிவிலக்கு இல்லை போலும்!
முன்பு ஒரு முறை, தம்பியால் சுட்ட பழத்தை அறிந்த ஒளவை, இன்று அண்ணனால் ஆட்கொள்ளப்பட வேணும் என்று இருந்தது போலும்!

அன்றும் ஒரு நாள், ஒளவையார் அப்படித் தான் சிவ பூஜையில் இருந்தார்.
சில நாளாகவே அவர் மனதில் யோக ரகசியங்களும், சிவப்பேற்றினை சீக்கிரமே அடைய விழைவும் நிழலாடின. முழு முதற் கடவுளான விநாயகனைத் தொழுது பூஜைகளை ஆரம்பித்தார்.
உடல் சற்றுக் குலுங்கியது. கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.
அகக் கண்ணில் அப்போது தான் “அந்தக் காட்சி” தெரிந்தது.

63 நாயன்மார்களில் இருவர், நம் ஒளவையாருக்கு உற்ற நண்பர்கள்.
தம்பிரான் தோழர் எனப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், மற்றும் அவர்தம் ஆப்த நண்பரான சேரமான் பெருமாள் நாயனார் – ஆகிய இருவருமே அந்த நண்பர்கள்.
“கைலாயம் செல்ல நேரம் வந்துவிட்டது, கிளம்பி வா”, என்று இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பணிக்க, இறைவன் அனுப்பிய குதிரையில், அவரும் கிளம்பி விட்டார்.
கிளம்பிய பின் தான், “அய்யோ, நண்பர் சேரமானையும் உடன் அழையாது கிளம்பி விட்டோமே” என்று மிகுந்த ஆதங்கப்பட்டார்.

ஆகா இது அல்லவோ நட்பு! வாழும் வரை கருத்து, எண்ணம், உணவு, பொருள் மற்றும் பலவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களைப் பார்த்து இருக்கிறோம்.
ஆனால் இறைவன் அருளிய பின், அந்த அருளையும் சேர்த்து நண்பனிடம் பகிர்ந்து கொள்ள முதலில் தோன்ற வேண்டுமே, அதைச் சொல்லுங்கள்!
பேருவகையில் தன்னையே மறக்கும் போதும், நட்பை மறக்க வில்லை பாருங்கள்!!

இந்த எண்ணம் ஒன்றே சேரமானை எட்டியது. (Telepathy??).
அவரும் உடனே அவருடைய வெள்ளைக் குதிரையில் ஏறி அமர்ந்து, அதன் காதுகளில் சிவ மந்திரம் ஜபிக்க, உடனே பரி பறந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகளை அடைந்தது. இனி இருவரும் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தனர்.

அப்போது தான் சேரமான், “அய்யோ, நண்பர் ஒளவையாரை உடன் அழையாது வந்து விட்டோமே” என்று தன் பங்குக்குக் கவலையுற்றார்.
அடடா, என்ன ஒரு நல்ல நண்பர்கள் செட்!! யாருக்கு வாய்க்கும் இப்படி!! ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நட்பு பாராட்டுகிறார்கள்.
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.”
என்பது தானே இது!

இந்தக் காட்சி தான் ஒளவையார் மனத்திரையில் தெரிந்தது.
சற்றே துணுக்குற்றார். இரு நண்பர்களும் சென்று விட்ட பின், தான் மட்டும் தனிமையில் ஆழ்ந்து விடுவோமோ என்ற கலக்கம்.
குடுகுடு கிழவி கிடுகிடு என்று மந்திரங்களைச் சொல்லலானாள்.
நேரம் செல்லச் செல்ல, “பக்தியில் நாம் மட்டும் என்ன குறைந்து விட்டோம்” என்ற குழப்பம்! எப்போது பக்தியில் ஒப்பீடு வந்ததோ, அவ்வளவு தான்!! சும்மாவா சொன்னார்கள் “ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்”?

உடனே பூஜையை வேகம் வேகமாக முடிக்கப் பார்த்தார்.
மனமெல்லாம் எப்படியாவது அவர்களுடன் சேர்ந்து விட வேண்டும் என்று!
அப்போது மிகவும் கழிவிரக்கத்தில், “அய்யனே, கணபதியே, ஆண்டுகள் பல கடந்தும் பெற்ற ஞானம் கைகொடுக்க வில்லையே. பேதை போல் துடிக்கிறேனே! அறிவால் மட்டும் உன்னை அறிய இயலுமோ? இனி ஒன்றும் இல்லை! நின் தாள் சரண்! வித்தக விநாயக விரை கழல் சரணே!!” என்று சிரம் மேல் கரம் கூப்பினார்.

 


நம் கள்ளச் சிரிப்பு அழகன், கணேசனால், இதற்கு மேல் தாங்க முடியவில்லை. கண்ணாமூச்சி விளையாட்டில் பயந்து போன குழந்தைக்கு, தாய் உடனே வெளிவந்து விடுவது போல், தும்பிக்கையான் தோன்றினார் ஒளவையின் முன்!
“தமிழ்ப் பாட்டியே! சஞ்சலம் விடு. தொடங்கிய பூஜையை முறையாக முடித்திடு. அவர்கள் செல்லுமுன் உன்னை நான் கொண்டு சேர்க்கிறேன் கயிலையில்” என்று அபயம் அருளினார்.

ஒளவையும், மனச் சஞ்சலங்களை எல்லாம் விட்டு, “விநாயகர் அகவல்” என்ற அழகிய தமிழ் நூலால் பாடி, பூஜையை முடித்தாள்.
அவள் முடிக்கவும், விநாயகப் பெருமான் அவள் முன் தோன்றவும் சரியாக இருந்தது.
அலேக்!!!
தன் தும்பிக்கையால் ஒளவையைத் தூக்கினார். மண்ணில் இருந்து வி்ண்ணுக்கு மாற்றினார்.
கயிலை மலையில், பனிக்கொடு முடியில், ஈசனின் அடியில், கொண்டு நேரே நிறுத்தினார்.

ஈசனைப் பணிந்து ஒளவை, அவன் திருவடி நீழலில் நிற்கவும், நம் இரட்டை நண்பர்கள் கையிலையில் நுழையவும் சரியாக இருந்தது. சேரமான் திருக்கயிலாய ஞான உலா பாட, நண்பர்கள் மூவர் முகத்திலும் புன்னகை. மீண்டும் சேர்ந்ததில் மென்னகை. “ஈசன் எந்தை இணையடி நீழலில்” அனைவரும் இன்புற்று இருந்தனர்!

“ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முந் நாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையில் ஏகி”
என்று அருணகிரி இந்த அழகிய நிகழ்வைத் திருப்புகழில் குறித்து வைத்துள்ளார். (நாத விந்து கலாதீ என்ற பாடலில்)

அடுத்த பதிவில், விநாயகர் அகவலைச் சிறிதே சுவைப்போமா?
Read more »

Tuesday, September 19, 2006

அண்ணனுக்கு வணக்கம்!

உலகம் முழுமைக்கும் முதற் பொருளாய், முழுமைப் பொருளாய் விளங்கும் வேழ முகத்தான் பாதங்களைப் பற்றிக் கொண்டேன்.
இந்த புரட்டாசி மாதத்தில் என் தமிழ் பதிவுகளுக்குப் பிள்ளையார் சுழி போடுகிறேன்.
மங்கள நாயகனே, பக்கத் துணை இருந்து கூட்டிச் செல்வாய், எமைக் காப்புச் செய்வாய்!










நீ ரொம்ப சமத்து.
உலகத்தின் முழு முதல் கடவுளா இருந்தாலும் மஞ்சளைப் பிடிச்சு வெச்சா, வந்து இறங்கி விடுவாய்.
குழந்தைகளுக்குக் குதூகலமான நண்பனே! சிறுவருடன் சிறுவராய் விளையாடவும் செய்வாய்; பெரிய ஞானிகளைக் கைதூக்கி விடவும் செய்வாய்!

அப்படித் தான் ஒளவையாரை அலேக்காகத் தூக்கி, கயிலாய மலையின் மேல் நிறுத்திய உன் கருணையைச் சொல்வதே எனது அடுத்த பதிவு.

கதை மட்டும் போதுமா? தமிழும் வேண்டுமே! விநாயகர் அகவல் பற்றியும் பார்ப்போம்!

உயர்ந்த ஞான யோகத்தை, எளிய தமிழில், "கிடுகிடு" எனச் சொல்கிறாள் இந்த "குடுகுடு" ஒளவை.
ஏன் அவளுக்கு இந்த “கிடுகிடு” அவசரம்?
Read more »

Tuesday, October 18, 2005

Vaanga Vaanga....Vanakkam






வாங்க, வாங்க. வணக்கம்! எல்லாம் நலமா?


Om Namo Narayana! Om Namo Venkatesa


Hello world, from Kutty Shravan
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP