Wednesday, September 20, 2006

ஒளவையார்–யானையார்

காலை 7:00 மணி; வீட்டில் ஒரே பரபரப்பு. வீட்டுத் தலைவிக்கோ கையும் ஓடலை, காலும் ஓடலை.
பள்ளிக்குச் செல்ல மக்கர் பண்ணும் மகன்.
அடுக்களையில் அவளைப் பார்த்து மாறி மாறி விசில் அடிக்கும் குக்கர்.
வீட்டுத் தலைவருக்குக் கூட இல்ல அந்த உரிமை!
அய்யாவோ பூஜை அறையில்.

காக்க காக்க கனகவேல் காக்க.
"ஏம்மா, இன்னுமா பேப்பர் வரல? ஜோதிகா கல்யாணம் நல்லபடியா நடந்துச்சான்னு பாக்கலாம்னா...நேத்து நியூஸும் பாக்கல!”
நோக்க நோக்க நொடியில் நோக்க
“டேய் ஷ்ரவண், ஒழுங்கா ரெடியாயிடு. வீணா காலங்காத்தால அடி வாங்காத சொல்லிட்டேன்.”
தாக்க தாக்க தடையறத் தாக்க
.....

இது சில பல வீடுகளில் நடக்கும் வாடிக்கையான ஒன்று தான்.
இறை வழிபாட்டின் போது கூட மனம் ஒருமிக்காது அலை பாயும்.
நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் தானே. (என்ன…. நடுவில் வேறு பேச்சுகள் பேசாது/ஏசாது இருக்கலாம்).
ஒளவைப்பாட்டி கூட இதற்கு விதிவிலக்கு இல்லை போலும்!
முன்பு ஒரு முறை, தம்பியால் சுட்ட பழத்தை அறிந்த ஒளவை, இன்று அண்ணனால் ஆட்கொள்ளப்பட வேணும் என்று இருந்தது போலும்!

அன்றும் ஒரு நாள், ஒளவையார் அப்படித் தான் சிவ பூஜையில் இருந்தார்.
சில நாளாகவே அவர் மனதில் யோக ரகசியங்களும், சிவப்பேற்றினை சீக்கிரமே அடைய விழைவும் நிழலாடின. முழு முதற் கடவுளான விநாயகனைத் தொழுது பூஜைகளை ஆரம்பித்தார்.
உடல் சற்றுக் குலுங்கியது. கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.
அகக் கண்ணில் அப்போது தான் “அந்தக் காட்சி” தெரிந்தது.

63 நாயன்மார்களில் இருவர், நம் ஒளவையாருக்கு உற்ற நண்பர்கள்.
தம்பிரான் தோழர் எனப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், மற்றும் அவர்தம் ஆப்த நண்பரான சேரமான் பெருமாள் நாயனார் – ஆகிய இருவருமே அந்த நண்பர்கள்.
“கைலாயம் செல்ல நேரம் வந்துவிட்டது, கிளம்பி வா”, என்று இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பணிக்க, இறைவன் அனுப்பிய குதிரையில், அவரும் கிளம்பி விட்டார்.
கிளம்பிய பின் தான், “அய்யோ, நண்பர் சேரமானையும் உடன் அழையாது கிளம்பி விட்டோமே” என்று மிகுந்த ஆதங்கப்பட்டார்.

ஆகா இது அல்லவோ நட்பு! வாழும் வரை கருத்து, எண்ணம், உணவு, பொருள் மற்றும் பலவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நண்பர்களைப் பார்த்து இருக்கிறோம்.
ஆனால் இறைவன் அருளிய பின், அந்த அருளையும் சேர்த்து நண்பனிடம் பகிர்ந்து கொள்ள முதலில் தோன்ற வேண்டுமே, அதைச் சொல்லுங்கள்!
பேருவகையில் தன்னையே மறக்கும் போதும், நட்பை மறக்க வில்லை பாருங்கள்!!

இந்த எண்ணம் ஒன்றே சேரமானை எட்டியது. (Telepathy??).
அவரும் உடனே அவருடைய வெள்ளைக் குதிரையில் ஏறி அமர்ந்து, அதன் காதுகளில் சிவ மந்திரம் ஜபிக்க, உடனே பரி பறந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகளை அடைந்தது. இனி இருவரும் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தனர்.

அப்போது தான் சேரமான், “அய்யோ, நண்பர் ஒளவையாரை உடன் அழையாது வந்து விட்டோமே” என்று தன் பங்குக்குக் கவலையுற்றார்.
அடடா, என்ன ஒரு நல்ல நண்பர்கள் செட்!! யாருக்கு வாய்க்கும் இப்படி!! ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நட்பு பாராட்டுகிறார்கள்.
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.”
என்பது தானே இது!

இந்தக் காட்சி தான் ஒளவையார் மனத்திரையில் தெரிந்தது.
சற்றே துணுக்குற்றார். இரு நண்பர்களும் சென்று விட்ட பின், தான் மட்டும் தனிமையில் ஆழ்ந்து விடுவோமோ என்ற கலக்கம்.
குடுகுடு கிழவி கிடுகிடு என்று மந்திரங்களைச் சொல்லலானாள்.
நேரம் செல்லச் செல்ல, “பக்தியில் நாம் மட்டும் என்ன குறைந்து விட்டோம்” என்ற குழப்பம்! எப்போது பக்தியில் ஒப்பீடு வந்ததோ, அவ்வளவு தான்!! சும்மாவா சொன்னார்கள் “ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்”?

உடனே பூஜையை வேகம் வேகமாக முடிக்கப் பார்த்தார்.
மனமெல்லாம் எப்படியாவது அவர்களுடன் சேர்ந்து விட வேண்டும் என்று!
அப்போது மிகவும் கழிவிரக்கத்தில், “அய்யனே, கணபதியே, ஆண்டுகள் பல கடந்தும் பெற்ற ஞானம் கைகொடுக்க வில்லையே. பேதை போல் துடிக்கிறேனே! அறிவால் மட்டும் உன்னை அறிய இயலுமோ? இனி ஒன்றும் இல்லை! நின் தாள் சரண்! வித்தக விநாயக விரை கழல் சரணே!!” என்று சிரம் மேல் கரம் கூப்பினார்.

 


நம் கள்ளச் சிரிப்பு அழகன், கணேசனால், இதற்கு மேல் தாங்க முடியவில்லை. கண்ணாமூச்சி விளையாட்டில் பயந்து போன குழந்தைக்கு, தாய் உடனே வெளிவந்து விடுவது போல், தும்பிக்கையான் தோன்றினார் ஒளவையின் முன்!
“தமிழ்ப் பாட்டியே! சஞ்சலம் விடு. தொடங்கிய பூஜையை முறையாக முடித்திடு. அவர்கள் செல்லுமுன் உன்னை நான் கொண்டு சேர்க்கிறேன் கயிலையில்” என்று அபயம் அருளினார்.

ஒளவையும், மனச் சஞ்சலங்களை எல்லாம் விட்டு, “விநாயகர் அகவல்” என்ற அழகிய தமிழ் நூலால் பாடி, பூஜையை முடித்தாள்.
அவள் முடிக்கவும், விநாயகப் பெருமான் அவள் முன் தோன்றவும் சரியாக இருந்தது.
அலேக்!!!
தன் தும்பிக்கையால் ஒளவையைத் தூக்கினார். மண்ணில் இருந்து வி்ண்ணுக்கு மாற்றினார்.
கயிலை மலையில், பனிக்கொடு முடியில், ஈசனின் அடியில், கொண்டு நேரே நிறுத்தினார்.

ஈசனைப் பணிந்து ஒளவை, அவன் திருவடி நீழலில் நிற்கவும், நம் இரட்டை நண்பர்கள் கையிலையில் நுழையவும் சரியாக இருந்தது. சேரமான் திருக்கயிலாய ஞான உலா பாட, நண்பர்கள் மூவர் முகத்திலும் புன்னகை. மீண்டும் சேர்ந்ததில் மென்னகை. “ஈசன் எந்தை இணையடி நீழலில்” அனைவரும் இன்புற்று இருந்தனர்!

“ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டு அவரோடே முந் நாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையில் ஏகி”
என்று அருணகிரி இந்த அழகிய நிகழ்வைத் திருப்புகழில் குறித்து வைத்துள்ளார். (நாத விந்து கலாதீ என்ற பாடலில்)

அடுத்த பதிவில், விநாயகர் அகவலைச் சிறிதே சுவைப்போமா?

15 comments:

  1. காக்க காக்க கனகவேல் காக்க.
    "ஏம்மா, இன்னுமா பேப்பர் வரல? ஜோதிகா கல்யாணம் நல்லபடியா நடந்துச்சான்னு பாக்கலாம்னா...நேத்து நியூஸும் பாக்கல!”
    நோக்க நோக்க நொடியில் நோக்க
    “டேய் ஷ்ரவண், ஒழுங்கா ரெடியாயிடு. வீணா காலங்காத்தால அடி வாங்காத சொல்லிட்டேன்.”
    தாக்க தாக்க தடையறத் தாக்க
    இதைத்தான் தியாகராஜரும்
    மனசு நில்ப சக்தி லேக போதே
    மதுர கண்ட பூஜ எந்துகுரா என்கிறார்
    மனதை அடக்க முடியாமல் மணி அடித்து பூஜை செய்து என்ன பயன் என்கிறார்
    மிக நல்ல பதிவு.நல்ல ஞானத்திற்கு வயது வரம்பில்லை என்பதை உணர்த்திவிட்டீர்கள்

    ReplyDelete
  2. வாங்க திராச. தங்கள் ஊக்கத்துக்கு நன்றி.
    //
    மனசு நில்ப சக்தி லேக போதே
    கண்ட பூஜ எந்துகுரா//
    நீங்கள் இப்படி பத்தி பிரிச்சு சொன்னவுடன் தெலுங்கு அர்த்தமும் படிக்கும் போதே ஓரளவு புரிகிறது.
    வித்வான்களும் இப்படியே புத்தகங்களில் பிரித்து எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    தியாகராஜர், அன்னமாச்சார்யர் போன்றோரின் பாடல்கள் பற்றியும், குறிப்பாக திருமலையான் மீது அவர்கள் கொண்ட பாசம் பற்றியும் எழுத எண்ணி உள்ளேன். புரட்டாசி மாதமாக அமைந்து விட்டதும் ஒரு வசதி தான்!

    ReplyDelete
  3. அருமையாக கதை சொல்ல வருகிறது உங்களுக்கு.

    நான் தினம் சொல்லும் அகவலைக் காண ஆவலாயிருக்கிறேன்!

    ஜெய் கணேசா!

    ReplyDelete
  4. வாங்க SK! தங்கள் ஊக்கத்துக்கு நன்றி.

    //அருமையாக கதை சொல்ல வருகிறது உங்களுக்கு//
    திருப்புகழ் மணக்கும் தங்கள் நாவினால் பாராட்டு என்றால், உடனே பிடித்துக் கொள்ள மாட்டேனா? :-)

    தமிழ் மணத்தில் நீங்கள், குமரன், ஜிரா, திராச இன்னும் பலரின் பதிவுகளைப் படித்து, இப்படியெல்லாம் நமக்கும் எழுத வருமா என்று ஏங்கியிருகிறேன்.

    தாங்கள் அடிக்கடி சொல்வது போல், "முருகன் அருள் முன்னிற்கும்"

    ReplyDelete
  5. புரட்டாசி மாசம். பக்திப் பழம். இன்னும் வேற என்ன வேணும்? அதுவும் நம்ம 'ஆளை' மொதல்லே
    கொண்டு வந்துருக்கீங்க.

    அதானே, அவரை வழிபடாமல் எதையாவது ஆரம்பிக்க முடியுமா?
    சரியான வில்லங்கப் பேர்வழியாச்சே:-))))

    அருமையான நடை.

    நல்லா இருங்க.

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  6. டீச்சர் வாங்க வாங்க!
    கொலு வைத்து விட்டு, இந்த வால் பையனின் வீட்டுக்கு வந்ததில்,
    இந்த மாணவனுக்கு மிக்க மகிழ்ச்சி.

    //அருமையான நடை//
    நன்றி டீச்சர்
    //நல்லா இருங்க//
    தங்களைப் போன்ற நல்லியலார் மூலமாக இறைவன் அருள்!!

    ReplyDelete
  7. தொடக்கம் அருமை ரவிசங்கர். நல்லா இருக்கு. நகைச்சுவையாவும் இருக்கு. :-) உங்க வீட்டுல நடக்கிறதைத் தான் சொல்லியிருக்கீங்களா? :-)

    மிக்கச் சுவையாக வினாயகர் அகவலுக்கு முன்னுரை சொல்லியிருக்கிறீர்கள் ரவிசங்கர். ஆங்காங்கே அற்புதமான சொல்லாடல்கள். அருமை.

    திருமலையான் பாடல்களை எழுத எண்ணமா. நல்லதாப் போச்சு. விரைவில் தொடங்குங்க. இராகவன், யோகன் ஐயா ரெண்டு பேரும் ஒரு முறை என்னை தியாகராஜ க்ருதிகளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். ஞானம் இல்லை என்று சொன்னேன். நீங்கள் எழுதினால் அவர்களும் நானும் மகிழ்வோம்.

    ReplyDelete
  8. வாருங்கள் குமரன்

    //நல்லா இருக்கு. நகைச்சுவையாவும் இருக்கு. :-) உங்க வீட்டுல நடக்கிறதைத் தான் சொல்லியிருக்கீங்களா? :-)//
    சிவசிவ! எப்பிடிங்க கரெக்டா கண்டுபுடிச்சீங்க :-)

    //ஆங்காங்கே அற்புதமான சொல்லாடல்கள்//
    தங்கள் ஊக்கத்துக்கு நன்றி. நிறை குறைகளை நீங்கள் எடுத்துச் சொல்லும் போது அதற்கு effect-ஏ தனி :-)

    //தியாகராஜ க்ருதிகளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். நீங்கள் எழுதினால் அவர்களும் நானும் மகிழ்வோம்//
    திருமலையான் பதிவுகளில் அடியவர் பற்றி எழுதும் போது, தியாகராஜரைப் பற்றியும் எழுத எண்ணியிருந்தேன். அது எப்படி என் மனத்தை நீங்கள் படித்தீர்கள்? :-)

    ReplyDelete
  9. ரவிசங்கர்...!

    நட்பென்ற நல்ல பண்பை
    நயமுடன் எடுத்து இயம்பி
    அவ்வையார் புகழுடன்,
    அன்பரையும் ஏற்றிவிட்டீர்
    இமயமலையில் !

    பாராட்டுக்கள் ! மிக நல்ல பதிவு !

    ஒரு + குத்து !

    ReplyDelete
  10. GK வாங்க வாங்க.
    தங்கள் + குத்துக்கும், ஊக்கத்துக்கும் நன்றி.

    //நட்பென்ற நல்ல பண்பை
    நயமுடன் எடுத்து இயம்பி//
    துறவிகளும் துறக்காத உறவு நட்பு என்று வாரியார் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அதை கப்பெனப் பிடித்து பின்னூட்டமாக இட்டுள்ளீர்கள்!

    சுப்பையா வாத்தியார் சொன்னது போல், "தூங்காமை வரம்" உங்களுக்கு உள்ளது போலும் :-) ராமன் தான் பலா, அதிபலா என்ற மந்திரங்களைப் பெற்று, பசியின்மை, தூங்காமை சக்தி பெற்றான்.
    அது சரி ராமனுக்கு அடுத்தது (கோவி) கண்ணன் தானே? :-)

    ReplyDelete
  11. //ராமன் தான் பலா, அதிபலா என்ற மந்திரங்களைப் பெற்று, பசியின்மை, தூங்காமை சக்தி பெற்றான்.
    அது சரி ராமனுக்கு அடுத்தது (கோவி) கண்ணன் தானே? :-)//

    ரவி...!
    இப்பவே கண்ணக் கட்டுதே !
    :))

    ReplyDelete
  12. நல்ல துவக்கம். நல்ல நடை. அகவலுக்குக் காத்திருக்கிறோம் ரவி. தொடரட்டும் இந்தப் பணி. அதிலும் முடிக்கையில் நாத விந்து கலாதீ திருப்புகழை எடுத்தாண்டமை மிகச் சிறப்பு.

    குமரன், சுட்டிக்காட்டியது போல தியாகராஜரின் பாடல்களைத் தரமுடிந்தால் தரவும். காத்திருக்கிறோம். அகவல் முடிந்ததும் அது தொடரட்டும்.

    ReplyDelete
  13. வாங்க ஜிரா.
    //நல்ல துவக்கம். நல்ல நடை//
    தங்கள் ஊக்கத்துக்கு நன்றி. பெற்றோர் தந்த தமிழும், பெருமான் தந்த கொடையும் அன்றி வேறில்லை.

    //அகவலுக்குக் காத்திருக்கிறோம் ரவி//
    பதித்து விட்டேன் ஜிரா. குறைந்த பட்சம் 3 பதிவுகள், தமிழ்மண விதியாச்சே!

    //தியாகராஜரின் பாடல்களைத் தரமுடிந்தால் தரவும்//
    திருமலையான் தொடர்புள்ள அவரின் பாடல்களை வரும் பதிவுகளில் பதிக்க எண்ணியுள்ளேன்.

    தங்கள் மின்மடல் முகவரி என்ன ஜிரா? என் profile-இல் உள்ள முகவரிக்குத் தட்டி விடுங்களேன்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP