Saturday, September 23, 2006

பணமா? பக்தியா? ஸ்ரீதேவியே செப்புமா! - பாகம்1

இந்தப் பதிவில் ஸ்ரீதேவி என்பது நம்ம "மீண்டும் கோகிலா" ஸ்ரீதேவியைத் தான் குறிப்பிடுகிறேன். ஆனால் அவர்களைப் பதிவின் இறுதியில் சந்திக்கும் வரை, கொஞ்சம் அவரை மறந்து விடுவோமே? :-)

ஒரு புரட்டாசி மாதம். நண்பர்கள் ஐவர் புடை சூழ திருப்பதி சென்றோம். ரொம்ப நாள் கழித்துக் கூட்டாகச் செல்கிறோம். அவரவர் வீட்டில் சில நல்ல விஷயங்கள் நடந்து அனைவரும் நல்ல உற்சாக மனநிலையில் இருந்தனர்.
மலை ஏறிச் செல்வதாகப் பேச்சு. ரயிலில் ஒரே கும்மாளம்.

நவீனத் தமிழ் பண்பாட்டின் படி, "நமக்குத் தொழில் கலாய்த்தல்" என்று நாங்கள் எல்லாரும் கருமமே கண்ணாக இருந்தோம்.
ரேணிகுண்டாவில் வடை, சாயா (அட நம்ம SK, மற்றும் மன்னாரு கொடுத்து வுட்டாங்களா-ன்னுல்லாம் கேட்கக் கூடாது, சரியா?)
மலை ஏறப் போவதால் நிறைய சாப்டாதீங்கடா-ன்னு அட்வைஸ் பண்ணாரு ஒரு சின்சியர் சிகாமணி (அட நான் தானுங்க!)

வண்டி நகரத் தொடங்கியதும் சிறிது நேரத்தில் ஆனந்த் என்ற நண்பர், கதவு அருகே போய் நின்று கொண்டார்(ன்). (டேய், வலைப்பூக்காக உன்னை எல்லாம் அவர்,இவர் ன்னு சொல்ல வேண்டியதாப் போச்சே! கொடுமைடா சாமி :-))

என்ன என்று நான் அருகில் போய் கேட்க, அவன் திருப்பதி மலையைத் தூரத்தில் இருந்து பார்ப்பது தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினான்.
பச்சை பார்டர் போட்ட புடைவையில், மலை உச்சிகள் மட்டும் வெறும் செம்பாறைகளாகத் தெரிய, குட்டி குட்டி வெள்ளைக் கோபுரங்கள் கண்ணுக்குப் புலப்பட, இரவு விளக்குகள் மாலையிலேயே ஒளிர்விட, நீல மேகங்கள் சூழ்ந்த மாலை வானத்தை பார்க்கும் போது, ஏதோ rmkv பட்டுப் புடைவை டிசைன் போல பளிச் என்று இருந்தது.வண்டியை விட்டு இறங்கி நேரே திருச்சானூர் சென்றோம். கலாய்த்தல் எல்லாம் நின்று போய் இருந்தது. பசங்க எல்லாம் பக்திமான்களாக மாறி இருந்தாங்க. கோவிலில் கண்ணனை முதலில் கண்டு, பின்னர் தாயாரை மனங்குளிர சேவித்தோம் (கும்பிட்டோம்). கூட்டம் அதிகம் இல்லை. பொறுமையாக பட்டர் (அர்ச்சகர்) தீபாராதனை காட்ட, அலங்காரத்தில் ஜொலித்தாள் மகாலக்ஷ்மி."அம்மா, அடுத்தது உன் புருஷனைத் தான் பாக்க போயிக்குனு இருக்கோம். எதுனா மெசேஜ் இருந்தா சொல்லும்மா, சொல்லிடறோம்" என்று நான் அவளிடம் சொல்ல, இதழ்க் கோட்டோரம் மென்முறுவலாக அவள் சிரிப்பது போல் தோன்றியது. பின்னர் வெளியே வந்து இலவச பிரசாதமான தயிர் சாதத்தைச் சுடச்சுட தொன்னையில் வாங்கிச் சாப்பிட்டோம். நண்பன் அருண், "இதுக்குப் பேர் தாண்டா ததியோதன்னம்" என்று சொன்னான். தயிர்சாதத்தைத் தப்பு தப்பா சொன்ன அவனை ஒரு மொத்து மொத்தி விட்டு, வண்டி பிடித்து மலை அடிவாரம் வந்து சேர்ந்தோம்.

அலிப்பிரி (அடிப்புளி) என்னும் அடிவாரத்தில் சூடம் எல்லாம் கொளுத்தினான் நவீன் என்ற இன்னொரு நண்பன். காலணி, பெட்டி எல்லாம் க்ளோக் ரூமில் கொடுத்து விட்டோம். அவர்கள் இலவசமாக மேல் திருப்பதிக்கு அனுப்பி விடுவார்கள். மேலே சென்றவுடன் பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். "உடன் பிறவா சகோதரன்" காமிராவை மட்டும் எடுத்துக் கொண்டோம். முதல் முதலில் பெருமாள் வாகனமான பெரிய கருடன் சிலையைக் கிளிக்கினோம்.

ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதனால் தான் அதற்கு அடிப்புளி என்று பெயர். ராமானுஜர் இங்கு தான் ராமாயாண பாடத்தை தன் குருவிடம் கேட்டாராம்.
இங்கு பன்னிரு ஆழ்வார்களுக்கும் கோவில் உள்ளது. ஆழ்வார்கள் ஆதிசேடன் ரூபமாக உள்ள திருமலையின் மேல் கால் வைக்கவும் அஞ்சி, மலை ஏறாது கீழே இருந்தே இறைவனை வழிபட்டார்களாம். பெருமாள் பாதம் கோவில் ஒன்றும் உள்ளது. காலணிகளைக் காணிக்கை செலுத்துவார்களாம்.

வணங்கி விட்டு, ஏற ஆரம்பித்தோம். போட்டி வேறு! யார் சளைக்காமல் ஏறுகிறார்கள் என்று. எல்லாம் காளி கோபுரம் வரை தான். அப்புறம் பாக்கணுமே பசங்கள! இஞ்சி மிட்டாய் சாப்பிட்ட ஏதோ ஒன்று மாதிரி இருந்தோம். ஆனந்த், "டேய் மச்சான் ஒரு லெமன் சோடா அடிச்சுட்டு போலாம்டா" என்றான். உப்பு கரிக்க ஆகா, "உழைச்சு சாப்பிட்டா தாண்டா அருமை தெரியும்" என்பது இப்போது தான் தெரிந்தது.

மொத்தம் 4000 படிக்கட்டாமே. 11 கிமீ...இதுக்கே நமக்கு தாவு தீருது! இத்தனைக்கும் gym body! அங்க பாருடா அந்த குண்டு அம்மா, ஒவ்வொரு படியா குனிஞ்சி, குங்குமம் வச்சிகிட்டே வருது! எப்படித் தான் இதெல்லாம் பண்றாங்களோ. நமக்கு சும்மா நடக்குறதுக்கே மூச்சு முட்டுது!
சரி சரி ஒரு ஜென்டில்மேன் அக்ரீமெண்ட். போட்டி எல்லாம் வேண்டாம். அவரவருக்குத் தெரிந்த பாட்டு, கதை எல்லாம் சொல்லிக் கொண்டு, காலாற மெல்ல நடந்து செல்வோம் என்பதே அது!படியேறும் போது, அவ்வளவாகத் திருப்பதியின் பகட்டும், தற்போதைய நாகரீக மயமாக்கலும் தெரிவதில்லை. எளிய மனிதர்கள், எளிய பக்தி தான் பரவலாக தெரிந்தது. இதற்காகவே ஒவ்வொரு முறையும் காலாற மலை ஏறிப்போக வேண்டும் போல் இருந்தது.

மலை ஏறஏற மனதில் ஒரு குளிர்ச்சி, "சில்லுனு ஒரு காற்றில்" செடிகொடிகளின் வாசனை. பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. "மலையில் ரிஷிகளும், இன்ன பிற பக்தி உள்ளங்களும் அரூபமாக வாசம் செய்கிறார்கள். அதனால் கண்டதையும் கூச்சல் போட்டுக் கொண்டு எல்லாம் ஏறக் கூடாது" என்று சொல்லுவாள். லேசான மழைத் தூறல்... தவளைகள் படிகளில் சத்தம் போட்டன. படிக்கட்டுகளும் செங்குத்து குறைந்து, நடக்க எளிதாக இருந்தது.
வழியில் அஞ்சனாத்ரி என்ற தகவல் பலகை. ஆகா திருமலை அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயர் அவதாரத் தலம் அல்லவா? மொத்தம் 7 மலைகள் ஆயிற்றே...மற்ற மலைகளின் பெயர்கள் என்ன? அடடா வழியில் போட்டிருப்பார்கள். நாங்கள் தான் பார்க்காமல் வந்து விட்டோம். வருத்தம் தான். ஆஞ்சனேயர் சிலை மற்றும் நடு வழி நரசிம்மர் கோவிலும் தாண்டி வந்து விட்டோம்.

மான், மயில் கூட்டங்கள் ஒரு இடத்தில். புள்ளி மான்கள் நிறைய இருந்தன. அந்தி மாலை இள வெயில் நேரம். கூட்டம் அவ்வளவாக இல்லை. மழைச் சாரல் வேறு. மேகக் கூட்டங்கள் ஒரு மலை மேல் அப்படியே படர ஆகா! ஏதோ குலு மனாலி மாதிரி ஒரு ஃபீலிங். ஏழைகளின் குலு மனாலி என்று நினைத்துக் கொண்டோம்!

இந்த மேகங்களைத் தான் ஆண்டாள் வேங்கடவனிடம் தூது விட்டாளோ? ஓர் பெண்கொடியை வதைசெய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே. "ஓ மேகங்களே போய் சொல்லுங்கள் உங்கள் வேங்கடத்தானிடம்; இப்படி எல்லாம் அவன் என்னைச் சோதித்தால், உலகில் அவனை யாரும் மதிக்க மாட்டார்கள்!" நண்பர்களிடம் சொன்னேன். ஆச்சரியப் பட்டார்கள். ஒருவன் கேட்டே விட்டான். "என்னடா இது சாமிய இப்படி எல்லாம் திட்டிப் பாட்டு எழுதி இருக்காங்களா...இல்லாக்காட்டி ஏதோ எங்களுக்கு தெரியாதுன்னுட்டு நீயே தமிழ்ல அள்ளி வுடறீயா?"படிகளும் சாலையும் சேரும் இடத்தில், சர்சர் என்று இரண்டு கார்கள்....க்றீச் சப்தம்...காரிலிருந்து ஒரு பெரிய குடும்பம் இறங்கியது. அதற்குள் ஆனந்த் "மச்சான் டேய் 'நம்ம' ஸ்ரீதேவி டா" என்றான். அட ஆஆமாம் 'நம்ம' ஸ்ரீதேவி தான். சேசே...இல்லையில்லை...'நம்ம' வைக் கட் பண்ணுங்கடா!
கணவருடன் வந்துள்ளார் போல. நாங்கள் மற்றும் ஒரு கேரளக் குடும்பம். வேறு யாரும் இல்லை. எங்களைப் பாத்து மெலிதாகச் சிரித்தார். நாங்களும் ஹிஹி என்று சிரித்து வைத்தோம். (வேறு என்ன செய்ய).......?

மேகக் கூட்டங்களைப் பாத்து அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். "Excuse me, could you take a picture of the whole family behind the clouds?" என்று கேட்டார் அவர் கணவர்.
நான் ஒ யெஸ் என்று சொல்லிக் காலை முன்வைக்கும் முன் ராஜ் என்ற இன்னொரு நண்பர்(?) காமிராவை வாங்கி கிளிக்கி விட்டார். வாடா வா இவ்ளோ நேரம் கால்வலி அது இது....நடக்க முடியலன்னு வந்தவன், இப்ப மட்டும் இன்னா ஸ்பீடு! தாங்க்யூ படலம் முடிந்தவுடன் அவர்கள் கிளம்ப, மற்ற நண்பர்கள் எல்லாம் நம்ம ராஜை அன்பாக விசாரித்தார்கள் :-)

ஆனால் யாருக்கும் அப்போது தெரியாது, இதே ஸ்ரீதேவி்-யிடம் கோவில் வாசலில் சண்டை போடப் போகிறோம் என்று!

17 comments:

 1. அருமையான அனுபவம்

  திருப்பதி பல முறை போயிருக்கேன்.ஆனா நடந்து மலை ஏறியது இல்லை.அடுத்த தரம் இந்தியா போனா நடந்து மலை ஏறுவதா வேண்டிருகேன்.நிறைவேத்தணும்.உங்க பதிவை பார்த்ததும் பாலாஜி அதை நினைவுபடுத்துவது போல் தோன்றிவிட்டது

  (ஆனா ஸ்ரிதேவி கடைசிவரைக்கும் வரவே இல்லையே?அடுத்த பாகத்தில் வருவாங்களா?:-)))

  ReplyDelete
 2. அவங்க போட்டோ எல்லாம் இல்லையா?

  ReplyDelete
 3. அருமையான 'நடை'

  நானும் அந்த மலைப்பாதை அனுபவத்தை அடைஞ்சேன்.
  எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பன்/இடும்பிக்கு வேற வழியாம். பழமொழி தெரியுமில்லே? :-)))

  போறப்ப பஸ், வர்றப்ப நடை!

  ஸ்வாமி தரிசனம் முடிஞ்சு மலைப்பாதை வழியா இறங்கி நடந்து கீழே வந்தோம். ராத்திரி 12 மணிக்கு ஆரம்பிச்சுக்
  அதிகாலையிலே கீழ் திருப்பதி வந்து சேர்ந்தோம்.

  நிறையதடவை திருப்பதிக்குப் போய் வந்தாச்சு. ஆனா அனுபவங்கள் ஒவ்வொண்ணும் ஒரு மாதிரி.

  முடிஞ்சாஇதைப் பாருங்களேன்.

  ReplyDelete
 4. படங்கள் எல்லாம் சூப்பராக இருக்கிறது நண்பரே!

  ReplyDelete
 5. சுவாரஸ்யமான எழுத்து.

  அன்புடன் மோகன்.

  http://tamilamudhu.blogspot.com

  ReplyDelete
 6. செல்வன்,
  கண்டிப்பா ஒருமுறையாச்சும் மலை ஏறிடுங்க...நல்ல அனுபவம்!
  உங்கள் அடுத்த திருமலை யாத்திரை இனிதே அமைய மலையப்பன் அருளட்டும்!

  //(ஆனா ஸ்ரிதேவி கடைசிவரைக்கும் வரவே இல்லையே?//
  அதான் வந்தாங்களேங்க! போட்டா எல்லாம் நம்ம மக்கள் எடுத்தாங்கன்னு போட்டிருக்கேனே பதிவுல. அடுத்த பதிவுலேயேம் வருவாங்க - லேசா லேசா

  ReplyDelete
 7. கொத்ஸ் வாங்க! நல்வரவு.

  //அவங்க போட்டோ எல்லாம் இல்லையா? //
  யாருதுங்க கேக்குறீங்க...போனி கபூர் தா? சரியா ஃப்ரேம்குள்ள வரல்லீங்க :-)

  ReplyDelete
 8. //அருமையான 'நடை' //
  நிஜமாலுமே நடை 'அருமை' தான் டீச்சர்....நாம தான் இப்பல்லாம் நடக்கறதையே விட்டுட்டோமே! அதான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, வேர்த்து விறுவிறுக்க, பாவம் போனாப்போட்டும்-ன்னு பெருமாள் கொஞ்சம் தூறலை அனுப்பிச்சு காப்பாத்தினார்.

  //போறப்ப பஸ், வர்றப்ப நடை!//
  அட இதுல ஒரு டெக்னிக்கா?

  //முடிஞ்சாஇதைப் பாருங்களேன்.//
  பாத்தேன் டீச்சர், ரசிச்சேன்! மினிமம் ஒரு ஒன்னரை நிமிஷம் வாய் விட்டு சிரிச்சேன்! சூப்பரா எழுதியிருக்கீங்க!
  திருப்பதி போய் வந்தா திருப்பம் வரும்ன்னு சொல்லுவாங்க!
  நீங்க ஒங்க 'தம்புடு' புண்ணியத்துல, காரைத் திருப்பு திருப்புன்னு, மொத்தமா திருப்பி, பெருமாளைச் சேவிப்பதற்கு முன்பே 'திருப்பம்' ஏற்படுத்திட்டீங்க. பாவம் கோபால் சார்! :-)

  ReplyDelete
 9. ரவிசங்கர். சிறப்பான நடை (பாத்தீங்களா. நீங்க அருமையான நடைக்கு வேற விளக்கம் கொடுத்ததால மாத்தியாச்சு. :-) சிறப்பான நடை).

  மன்னாரு, பண்ணாருன்னு எதுகை மோனை எல்லாம் உரைநடையிலேயே கொண்டுவர்றீங்களே. பெரிய ஆளு தான்.

  அந்த பட்டுபுடவை திருமலை தரிசனத்தை நண்பர் ஆனந்த் மட்டும் தான் பார்த்தாரா? இல்லை நீங்களுமா? நல்ல ரசனையுள்ள நண்பர் கூட்டம் ஐயா.

  தத்யோன்னத்தை நன்றாகச் சாப்பிட்டீர்களா? அதனைச் சாப்பிட்டால் தான் தாயார் தரிசனம் முழுமை பெறும். :-)

  எல்லா படங்களும் சிறப்பு (முதலில் வழக்கம் போல் அருமை என்று சொன்னேன்). அதிலும் கருடன் சிலையுள்ள படம் மிகச் சிறப்பு.

  இராமானுஜர் திருமலை மேல் கால்படக்கூடாது என்று முழங்காலாலேயே ஏறினார் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் ஆழ்வார்களும் திருமலை மேல் ஏறியதில்லை என்பது செய்தி.

  உண்மை தான். படியேறும் வழியில் பகட்டுகள் தெரிவது கொஞ்சம் குறைவு தான். பெரும்பாலும் பக்தியுள்ளவர்களே படியேறிப் போகிறார்கள்.

  திருப்புகழைச் சரியான இடத்தில் முந்தையப் பதிவில் சேர்த்துக் கொண்டீர்கள். நாச்சியார் திருமொழியை மிகச் சரியான இடத்தில் இங்கே சொல்லியிருக்கிறீர்கள். மிகச் சிறப்பு ரவிசங்கர்.

  ReplyDelete
 10. வாத்தியார் அய்யா, வரவேண்டும் மாணவன் வீட்டுக்கு.

  // SP.VR.SUBBIAH said...
  படங்கள் எல்லாம் சூப்பராக இருக்கிறது நண்பரே! //
  மிக்க நன்றி! குமரனும் முதல் படத்தை மிகவும் விரும்பி உள்ளார்.
  மேலும் படங்கள் வரும் என்று அப்போதைக்கு இப்போதே பயமுறுத்தி வைக்கிறேன் :-)

  ReplyDelete
 11. //leomohan said...
  சுவாரஸ்யமான எழுத்து.//

  நன்றி மோகன். தங்கள் வலைப்பூவைத் தான் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறேன். படங்கள் பகுதி வெகு சிறப்பு. பொறுமையாக அருமையாக செய்து இருக்கிறீர்கள்!

  ReplyDelete
 12. கண்ணபிரான்,
  சரளமான நடை ! மலையேறும் அனுபவத்தை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள் !
  எ.அ.பாலா

  ReplyDelete
 13. ரவி சங்கர்,
  அருமையா விவரிச்சிருக்கீங்க.

  நான் காலேஜ் சேரும்வரை வருடா வருடம் சென்று வந்தேன்!!!

  அதற்கு பிறகு நண்பர்களுடன் கடைசி வருடம் சென்றேன். இந்த முறை திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்த செல்ல வேண்டும் என்ற முடிவோடு சென்றோம். நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் முடிவு பண்ணியதை மாற்ற கூடாது என்று மழையில் நனைந்து கொண்டே சென்றோம்.

  அந்த மழையிலும் ஒவ்வொரு படியிலும் குங்குமம் வைத்து கொண்டிருப்பவர்களை பார்த்து நாங்கள் ஆச்சர்யப்பட்டோம்!!!

  ஒரு வழியாக மலையேறி முடிப்பதற்குள் மழை நின்று விட்டது. அன்று இரவே தரிசனம் முடிந்து ஒரு வழியாக கீழே வந்துவிட்டோம். (வரும்பொழுது பஸ்ஸில் வந்தோம்)

  நீங்க எழுதியதை படித்தவுடன் எல்லாம் நியாபகத்திற்கு வந்துவிட்டது :-)

  ReplyDelete
 14. வாங்க குமரன்.
  உங்கள் பின்னூட்டத்திற்கு வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு. பாகம்2 போட்டு ஸ்ரிதேவியப் பத்தி சொல்லலனா அடிக்க வந்துடுவாங்களே! :-)

  //அந்த பட்டுபுடவை திருமலை தரிசனத்தை நண்பர் ஆனந்த் மட்டும் தான் பார்த்தாரா? இல்லை நீங்களுமா? நல்ல ரசனையுள்ள நண்பர் கூட்டம் ஐயா.//
  உண்மை தான் குமரன்! நல்ல ரசனையுள்ள நண்பர் குழாம்! வடிவேலு ஸ்டைலில், பாசக்காரப் பயலுங்க!

  //இராமானுஜர் திருமலை மேல் கால்படக்கூடாது என்று முழங்காலாலேயே ஏறினார் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் ஆழ்வார்களும் திருமலை மேல் ஏறியதில்லை என்பது செய்தி//

  இராமானுஜர் திருமலை முதல் வரவின் போது, மலை ஏற மறுத்தாராம்.
  ஆழ்வார்கள் ஆதிசேடன் மேல் கால்வைக்க அஞ்சியதை பெரியோர் சொல்லக்கேட்டு, ஆழ்வார்க்கே நிலைமை இதுவென்றால், தான் எம்மாத்திரம் என்று சொல்லி விட்டாராம். பின்பு பெரியோர், திருமலை நம்பிகள் எல்லாம் வற்புறுத்திய பின் தான், முழங்காலில் கோணிப் பைகளைக் கட்டிக் கொண்டு மலை ஏறியதாகப் முக்கூர் லக்ஷ்மிநரசிம்மாச்சாரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 15. //மலையேறும் அனுபவத்தை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள் !
  எ.அ.பாலா//

  வாங்க பாலா, உங்க அன்புக்கு நன்றி!
  இந்த 9 நாட்களும் நீங்க கட்டாயம் வரவேண்டும். எ.அ என்பதிலேயே தங்கள் அன்பு என்றும் உண்டு என்பதை நான் அறிவேன் :-)

  ReplyDelete
 16. பாலாஜி

  என்னது மழையில் நனைந்து கொண்டே சென்றீர்களா? உங்களுக்கு நல்ல மன உறுதி தான்!
  திருமலையில் இடி, மின்னல் பயங்கரமாக இருக்கும். ஒரு முறை பார்த்து வியந்துள்ளேன்.

  //அதற்கு பிறகு நண்பர்களுடன் கடைசி வருடம் சென்றேன்.//
  நண்பர்களுடன் சுற்றுலா மட்டும் அன்றி இது போல் யாத்திரை கூட ரொம்ப சுவாரஸ்யமாகவே இருக்கும். எனக்கும் பாதி நாள் நண்பர்களோடு போகத் தான் பிடிக்கும்!

  ReplyDelete
 17. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  பாலாஜி

  என்னது மழையில் நனைந்து கொண்டே சென்றீர்களா? உங்களுக்கு நல்ல மன உறுதி தான்!
  திருமலையில் இடி, மின்னல் பயங்கரமாக இருக்கும். ஒரு முறை பார்த்து வியந்துள்ளேன்.
  //

  நாங்க எல்லாம் சின்ன பசங்க... அதனால சுலபமா ஏறிட்டோம்.

  அதுவும் இல்லாம எனக்கு ரொம்ப பிடித்த விஷயம் "மழை". அதனால அதிகமா கஷ்டம் தெரியல.

  அந்த மழையிலும் குங்குமம் வைத்து கொண்டு வந்தவர்களை நினைத்தால் இன்றும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. எல்லாம் நாராயணன் மேல் அவர்கள் வைத்த பக்தியின் மகிமை.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP