திருமலை விழா 5 - கருட சேவை
"கருடா செளக்கியமா" என்ற பாடல் எல்லாரும் அறிந்த ஒன்று!
கருடன், பெருமாளின் பிரியமான பக்தன். அவனே சுவாமியின் முக்கிய வாகனம். கருடன் இல்லாத பெருமாள் கோயில் ஏது? அந்தரங்க உதவியாளனும் கூட. விநதையின் (வினதை) மகன் என்பதால் "வைநதேயன்" என்ற இன்னொரு பெயரும் இவனுக்கு உண்டு. "பெரிய திருவடி" என்றும் இவனைக் கொண்டாடுவார்கள்!
இவன் சேவையைக் கண்டு, மிகுந்த பாசம் கொண்டு, ஆண்டாள் வில்லிபுத்தூரில் இவனுக்கு ஏக சிம்மாசனம் அளித்தாள். இன்றும் வில்லிபுத்தூரில், அரங்கன், ஆண்டாள், கருடன் என்று மூவரும் ஒரே சிம்மாசனத்தில் இருந்து தான் காட்சி தருகிறார்கள்.
பிரம்மோற்சவத்தில் கருட சேவை மிகவும் முக்கியமான வாகனம்.
கருடன் பறக்கும் வேகம் என்ன தெரியுமா?
'பரம பக்தன், துன்பத்தில் ஆழும் போது, "பெருமாளே" என்று கூவி அழைக்க, இறைவன் ஏறி அமர்ந்து விட்டாரா என்று கூடப் பாராமல், பறக்கத் தயாரானான்', என்று சத்குரு தியாகராஜர் பாடுகிறார். சங்கீதத்தில், கருடனுக்கு ஒரு தனி ராகமே உண்டு! பேர் கருடத்வனி!
அன்று முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரன், மரிக்கும் தருவாயில் கூட, குளத்தில் இருந்த தாமரைப் பூவைப் பார்த்து, "ஆகா, பெருமாளுக்கு இதைச் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்" என்று தான் எண்ணம் போனது. கருட சேவையாக, இறைவன் தோன்றி, கஜேந்திரனைக் காத்ததை எண்ணினாலும் மனம் தான் இனித்திடாதோ?
முன்பே சொன்னது போல, திருமலையில் மிக முக்கிய வாகனம் இந்த கருட சேவை!
இன்று மட்டும் தான், ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, மூலவருக்கு தினமும் அணிவிக்கப்படும் ஆபரணங்கள், அணிகள், வெளியே கொண்டு வரப்பட்டு, கருட வாகனத்தில் இருக்கும் உற்சவருக்கு அணிவிக்கப்படுகின்றன.
பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகர கண்டி, லக்ஷ்மி ஆரம் ஆகிய இந்த இரு அணிகலன்கள் மூலவரை விட்டு என்றுமே பிரியாது இருப்பவை. இன்று மட்டும் கருட வாகனத்தின் மேல் இருக்கும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப் படுகின்றன.
மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, பேரிகைகள் முழங்க, இதோ கிளம்பி விட்டான் திருமலை வாசன், கருடாழ்வாரின் மீது!
எங்கும் "கோவிந்தா, கோவிந்தா" என்ற பக்தி முழக்கம்.
இரு கரம், சிரம் மேல் கூப்பி, எம்பெருமானே, திருவடி சரணே! என்று அடியார்கள் வணங்குகிறார்கள்!
'ராஜ கம்பீர நாடாளும் நாயகன்', கருட கம்பீரமாக, ராஜ நடையில்,
'தொம் தொம்' என்று உலா வரும் அழகைச் சேவிப்பார்க்கு உண்டோ பிறவிப்பிணி!
சரணம் சரணம் கோவிந்தா சரணம்!!
இன்று மாலை,
பெரியாழ்வாரும், திருவேங்கடத்தானும்.
சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய். உலகு
தன்னை வாழ நின்ற நம்பீ. தாமோதரா. சதிரா.
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே?
"உயர்ந்த சிகரங்களைக் கொண்டு, குளிரும் வேங்கட மலையை உடையானே,
உலகம் வாழ வேண்டி, 'குன்றின் மேல் கல்லாக நிற்கின்றாய்' கண்ணா, தாமோதரா, காளிங்க நர்த்தனா!
என்னையும், இப்பிறவியில் எனக்கு வாய்த்த என் உடைமைகள் அத்தனையும், உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டேன். (அதாவது)
உனக்கு வழுவிலா அடிமை செய்வதாக உறுதி பூண்டு, உன் சக்கரச் சின்னத்தைப் பொறித்துக் கொண்டேன்.
பொறித்தால் மட்டும் போதுமா?
உன் அருள் வேண்டி, நன்-செயல்களே செய்து, உன்-செயல்களே செய்து, உன் முகம் பார்த்து இருந்தேன்!
இனி என்னை என்ன செய்யப் போகிறாய்? உன் திருக்குறிப்பு என்னவோ?
எதுவாக இருப்பினும் சரி, உன்னை அன்றிப் பிறிதொருவர் எனக்கில்லை, வேங்கடவா! "
என்று பெரியாழ்வார் பரிபூரண சரணாகதி அடைகின்றார் அவனிடத்தில்.
யாருப்பா அது, அங்க பிரசாதம் கேட்டது? வாங்க வாங்க! நம்ம நண்பர் ஜிரா என்று விளிக்கப்பெறும் ராகவன் தான் பிரசாத ஸ்டால் இன்சார்ஜ். அவரிடம் நயந்து பேசி பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளவும்!
இன்றைய பிரசாதங்கள்: கல்யாண லட்டு (பெரிய லட்டு)
அன்னப் பிரசாதங்கள்: சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, ததியோதனம்(தயிர்ச்சோறு), சகாரா பாத், வெண் பொங்கல்
பிற பிரசாதங்கள்: பாயசம், சுகி, அப்பம், தோசை
மு.கு (முக்கியமான குறிப்பு):
பிரசாதங்கள் விற்பனைக்கு அல்ல! :-)
பக்தியுடன் வருவார்க்கு சிறிது வழங்கப்படும்! :-))
அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
ReplyDeleteவழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
ஓம்கார உட்பொருளாய் அகர உகர மகரங்களின் உட்பொருளாய் நிற்கும் வில்லிப்புத்தூர் திருக்காட்சியைச் சரியான நேரத்தில் சொன்னீர்கள்.
ReplyDeleteஆதிமூலமெனும் மாமத யானையை அருள வந்த நாமம்
நானறியாதெனை ஆண்டருள் செய்தெனை விடாத ஹரி நாமம்
சராசரங்களில் எல்லாம் நிறைந்துள்ள மஹா புனித நாமம்
கெடாதவாறருள் நடாவியே எனை விடாத ஹரி நாமம்
மூலவருக்கு அணிவிக்கும் ஆபரணங்களை கருடசேவை அன்று மலையப்பசுவாமிக்கு அணிவிப்பார்கள் என்பது புதிய செய்தி. நன்றி.
அவன் உண்ட கலத்தில் இருப்பதை எனக்கும் கொஞ்சம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ரவிசங்கர்.
ReplyDeleteஉடுத்துக் களைந்த நீ பீதக ஆடை உடுத்துக்
கலத்தது உண்டு
தொடுத்தத் துழாய்மாலை சூடுமித் தொண்டர்களோம்
விடுத்தத் திசைக்கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்தப் பைநாகணைப் பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
மகரகண்டி, லக்ஷ்மி ஆரம் இருக்கட்டும். நம்மாலே அதைத் தொட்டுப் பார்க்க முடியாது.
ReplyDeleteஆனா பிரசாதங்களை ஒரு வெட்டு வெட்டலாமே!
'லட்டு க்ளோஸப்'லே வந்து வாயைத் திறன்னு சொல்லுது:-))))
சரளமா உங்களுக்கு நகைச்சுவையோடு எழுத வருது கே ஆர் ஏஸ்.
இதெல்லாம்கூட ஒரு வரம்தான்.
இந்த வருஷம் ரொம்ப நல்லா அமைஞ்சுருக்கு எல்லாமே. ரொம்ப சந்தோஷம்.
நின்னருள் புரிந்திருந்தேன்
ReplyDeleteநிதிக்கு அரசனே!
உன்னருள் தாராயோ
உலகம் உய்வதற்கே!
கண்ணபிரான்: திருமலை உற்சவத்தை ரொம்ப குளோசப்பிலே காட்டறீங்க! லட்டு..ம்..ஆசையைத் தூண்டுகிறது. கருடசேவை குறித்து என் பதிவில் எதிரொலி கொடுத்துள்ளேன். இது வசதி கருதிதான். பின்னூட்டத்தில் நிறைய எழுத முடியாது. பேசும் தெய்வம் வேங்கடவன். அவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வழி செய்யும் நின் சேவை வாழி.
ReplyDeleteஎதிரொலி சுட்டி: http://emadal.blogspot.com/2006/09/5.html
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்...//
குமரன் வாங்க. கருட சேவையைத் தரிசித்த கையோடு, பாசுர மழை பொழிந்துள்ளீர்கள். மிகவும் அருமை.
//புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே //
பரிபூர்ண சரணாகதி!
// குமரன் (Kumaran) said...
ReplyDeleteஓம்கார உட்பொருளாய் அகர உகர மகரங்களின் உட்பொருளாய் நிற்கும் வில்லிப்புத்தூர் திருக்காட்சியைச் சரியான நேரத்தில் சொன்னீர்கள்//
அகாரம்=ஆண்டாள்
உகாரம்=ரங்க மன்னார்
மகாரம்=கருடாழ்வார்
'அடியவனை, எவ்வளவு நாள் முன்னே நிறுத்தி வைப்பீர்கள்? நீ வாப்பா, எங்கள் பக்கத்திலேயே வந்து இருந்து கொள்' என்று சொல்ல ஆண்டாளுக்கு எவ்வளவு தயை! தயா சாகரி என்று சும்மாவா சொன்னார்கள்?
//விடாத ஹரி நாமம்//
எளிமையான பாடல்! யார் பாடியது குமரன்?
//அவன் உண்ட கலத்தில் இருப்பதை எனக்கும் கொஞ்சம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ரவிசங்கர்//
ReplyDeleteநன்றி நான் சொல்ல வேண்டும். வைபவம் தன்னில் நீங்கள் கலந்ததற்கு.
அவன் உண்ட கலத்தில் இருக்கும் ஒரு பருக்கை போதாதா, உயிர் கடைத்தேற! "அவன் வாய்ச்சுவையும் நாற்றமும் சொல் ஆழி வெண்சங்கே"...அவன் வாய்ச்சுவை அந்தக் கலத்திலும் இல்லாமலா போகும்?
//துளசி கோபால் said...
ReplyDeleteஆனா பிரசாதங்களை ஒரு வெட்டு வெட்டலாமே!
'லட்டு க்ளோஸப்'லே வந்து வாயைத் திறன்னு சொல்லுது:-))))//
ஆகா, ராகவனைக் கேட்காமல் லட்டு எப்படி உங்களிடம் பேசலாம்? :-))
பிரசாத ஸ்டாலில் என்னமோ நடந்திருக்கு? :-))
//சரளமா உங்களுக்கு நகைச்சுவையோடு எழுத வருது கே ஆர் ஏஸ்.//
உங்களின் தாக்கமாகக் கூட இருக்கலாம்; குரு தட்சிணை கேப்பீங்களோ? :-)
// நா.கண்ணன் said...
ReplyDeleteகருடசேவை குறித்து என் பதிவில் எதிரொலி கொடுத்துள்ளேன்//
வரவேண்டும் கண்ணன் சார்.
எதிரொலிப் பதிவை வேகமாகப் படித்தேன். மீண்டும் ஒரு முறை படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்.
ஆனா ரொம்ப அருமையா தொடர்பு படுத்தி உள்ளீர்கள், முருகனையும், மாயனையும்!
காய்சின வேந்தன் கழலைப் பற்றினேன்! பஞ்சாயுதங்களை அருமையா பட்டியல் இட்டுள்ளீர்கள்! நன்றிகள் பல!!
// SP.VR.SUBBIAH said...
ReplyDeleteநின்னருள் புரிந்திருந்தேன்
நிதிக்கு அரசனே!
உன்னருள் தாராயோ
உலகம் உய்வதற்கே//
வாங்க சுப்பையா சார்! ஆசு இரியரான உங்களுக்கு இல்லாததா அவன் அருள்? மிக்கவே உண்டு!!
நரகாசுரன் கவிதை அருமை. ஹைக்கூ எப்போது?
// ஹைக்கூ எப்போது? //
ReplyDeleteபுவிக் கண்ணனை
புகழ் ரவிசங்கரனை
பெயரினிலே கொண்டுள்ளீர்
உயர்வுண்டு உமக்கு!
அயர்வான அரைக்கவிதை - இறை
அடியார் உமக்கெதற்கு?
நயமானபாசுரங்கள் பல உண்டே
நாளும் படித்து மகிழ்வீர்!
SP.VR.SUBBIAH
கருட ஸேவை பதிவு அமர்க்களமாக உள்ளது. ஆசிகள்
ReplyDeleteதங்களின் கருட சேவைப் பதிவு படத்திலுள்ள லட்டுப் போலப் பிரமாதம் போங்கள்:-)
ReplyDeleteஆழ்வாரிலிருந்து அருணகிரிவரை தொட்டு பக்தியும் நகைச்சுவையும் கலந்து தரும் உங்கள் பதிவு தேனாக இனிக்கிறது. அரிய அறியாப் பொருளையும் அறிகிறோம்.
ReplyDeleteபெருமாளை கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும்; லட்டில் பிளாஸ்டிக் காகிதம் இருந்ததாம் :((
உங்களால் நல்ல கருடசேவை கிடைத்தது. சில தகவல்களும் அறிய வாய்ப்பு.
ReplyDeleteநன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை !
//ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
//
ரிப்பீடு, என்ன சரியா, கண்ணபிரான் :)
ஒரு நம்மாழ்வார் பாசுரமும் விளக்கமும்:
உலகம் உண்ட பெருவாயா! உலப்பு இல் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்கு ஆய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!
குலதொல் அடியேன் உன் பாதம் கூடும் ஆறு கூறாயே!
பதவுரை:
ஒரு சமயம் ஆயர்பாடிக் கண்ணனாய், உலகங்களை உன் திருவாயில் அடக்கியவனே! ஒப்பிலா புகழ் கொண்ட பெருமானே! சோதியால் சூழப்பட்டது போல் ஒளி மிகுந்த திருமேனி கொண்டவனே! உயர்ந்தவனே! என் உயிருக்கு ஒப்பானவனே! இவ்வுலகை காத்து நிற்கும் திருவேங்கடமுடையானே! அடியேன் உன் திருப்பாதங்களை வந்தடையும் வழிமுறையைக் கூறுவாயாக!
என்றென்றும் அன்புடன்
பாலா
புரட்டாசி சனிக்கிழமை நாராயண தரிசனத்திற்கு வழி வகை செய்தது மட்டுமின்றி பிரசாதமும் வழங்கி புண்ணியம் சேத்துக் கொண்டீரய்யா!!!
ReplyDeleteஊரிலிருந்தால் இன்று கருடாழ்வாரை தரிசிக்க ஆற்றுப்பக்கம் போவோம்... அதை இங்கேயே கொண்டு வந்துவிட்டீர்... மிக்க மகிழ்ச்சி.
// SP.VR.SUBBIAH said...
ReplyDelete// ஹைக்கூ எப்போது? //
புவிக் கண்ணனை
புகழ் ரவிசங்கரனை
பெயரினிலே கொண்டுள்ளீர்
உயர்வுண்டு உமக்கு! //
நன்றி சுப்பையா சார்!
//அயர்வான அரைக்கவிதை - இறை
அடியார் உமக்கெதற்கு?
நயமானபாசுரங்கள் பல உண்டே
நாளும் படித்து மகிழ்வீர்!//
சார், "அரைக்கவிதை இறைஅடியார் உமக்கெதற்கு?" என்று இப்படி கேட்டுட்டீங்களே! ஹைக்கூ-வை(அரைக்கவிதை) நாரணன் லீலை சொல்லப் பயன்படுத்தலாம் என்று இருந்தேன்! :-))
//Krishnaswamy said...
ReplyDeleteகருட ஸேவை பதிவு அமர்க்களமாக உள்ளது. ஆசிகள் //
நன்றி திரு. கிருஷ்ணசுவாமி!
//கானா பிரபா said...
ReplyDeleteதங்களின் கருட சேவைப் பதிவு படத்திலுள்ள லட்டுப் போலப் பிரமாதம் போங்கள்:-) //
தாங்கள் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி பிரபா. இந்தாருங்கள், பிடியுங்கள் one more லட்டு!
//மணியன் said...
ReplyDeleteஆழ்வாரிலிருந்து அருணகிரிவரை தொட்டு பக்தியும் நகைச்சுவையும் கலந்து தரும் உங்கள் பதிவு தேனாக இனிக்கிறது. அரிய அறியாப் பொருளையும் அறிகிறோம்.//
வாங்க மணியன். நான் கொஞ்சம் தேனை, சிறு கிண்ணத்தில் ஊற்றினேன். அவ்வளவு தான்! இனிப்பின் காரணம் தேன் தான். அந்தத் தேன் தருவது ஆழ்வாரும், அருணகிரியும் தான்!! :-)
பெருமாளை கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும்; லட்டில் பிளாஸ்டிக் காகிதம் இருந்ததாம் :((
அச்சச்சோ! பாத்துச் சாப்பிடப்பா பெருமாளே, தேவியரே, பக்தர்களே!
// enRenRum-anbudan.BALA said...
ReplyDeleteஉங்களால் நல்ல கருடசேவை கிடைத்தது. சில தகவல்களும் அறிய வாய்ப்பு.
நன்றி. தொடருங்கள் உங்கள் சேவையை !//
வாங்க பாலா, பிரசாதம் வாங்கிக்கிட்டீங்களா? :-) தங்கள் வாழ்த்துடன் நிச்சயம் தொடருகிறேன்!
//ரிப்பீடு, என்ன சரியா, கண்ணபிரான் :)//
சூப்பர் ஸ்டாரே, ரிப்பீட்டுன்னு சொல்றாரு. நம்ம ஆழ்வார், நம்மாழ்வாருக்கு நாம ரிப்பீட்டுன்னு சொல்லாம யாரு சொல்லுவா? :-)
//ஒரு நம்மாழ்வார் பாசுரமும் விளக்கமும்://
ஆகா, பதிவிலே பாசுர மழை பொழிகிறது! என் பாக்கியம் தான்! குமரன் பாசுரங்கள் கொட்ட, பாலா பாசுரங்கள் பாட, ஆகா, மிக அருமை!
நன்றி பாலா, பாசுரம் + பொருளுக்கும்.
"திலதம் உலகுக்கு ஆய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே"
சொல்லவே இனிக்கிறது. பாடினால் எப்படியோ? நன்றி நன்றி!
// வெட்டிப்பயல் said...
ReplyDeleteபிரசாதமும் வழங்கி புண்ணியம் சேத்துக் கொண்டீரய்யா!!!//
பாலாஜி, நாம் எல்லாருமே சேத்துக் கொண்டோம்!
நன்றிப்பா, வைபவத்திற்கு வந்தமைக்கு!
//ஊரிலிருந்தால் இன்று கருடாழ்வாரை தரிசிக்க ஆற்றுப்பக்கம் போவோம்... அதை இங்கேயே கொண்டு வந்துவிட்டீர்... மிக்க மகிழ்ச்சி.//
எந்த ஆறு-ன்னு சொல்லவே இல்லையே பாலாஜி?