Sunday, September 24, 2006

பாகம்2 - கண்டேன் ஸ்ரீதேவியை!

(முன்குறிப்பு: இப்பதிவின் முதல் பாகம் இங்கே! இது இறுதிப் பாகம்)

இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான். முழங்கால் முறிச்சு என்று சொல்லப்படும் படிக்கட்டுகள் எல்லாம் தாண்டி வந்து விட்டோம்.
பெரிய பெரிய மின்-காற்றாடிகள் தெரிகின்றன மலை மேல். அடைந்தாயிற்று வேங்கடத்தை! இருள் சூழத் தொடங்கி விட்டது. வனத்தில் தான்; மனத்தில் இல்லை! பூந்தோட்டங்கள் தென்படுகின்றன.


குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே

என்ற நம்மாழ்வார் பாடல் நிழல் ஆடுகிறது. எதற்கு இவர் இறைவனைத் தொழச் சொல்லாது, மலையைப் போய் தொழச் சொல்கிறாரே!

சரி, உடைமைகளை எடுத்துக் கொண்டு, பதிவு செய்த அறையில் போய் நண்பர்கள் எல்லாரும் தங்கினோம். உடல் தூய்மை மட்டும் செய்து கொண்டோம்.
நண்பர் ராஜ் iodex தைலம் தானும் தடவி, எங்களுக்கும் தடவி விட்டார். பின்ன ஸ்ரீதேவிய எங்களுக்கு முந்திப்போய் படம் எடுத்தாரே, எப்படி பிராயச்சித்தம் செய்வதாம்? :-)

சரி பசி எல்லோருக்கும். ஒரு வெட்டு வெட்டி விட்டு, கொங்குரா ஊறுகாய ஒரு கடி கடிச்சிக்கினோம். நேராக ஸ்வாமி புஷ்கரிணி என்று சொல்லப்படும் குளத்துக்கு சென்று, நீர் தெளித்துக் கொண்டோம்.
கோனேரி என்ற அழகிய தமிழ்ப் பெயர் இதற்கு உண்டு. முதலில் கோனேரியின் வடமேற்கு மூலையில் உள்ள வராகப் பெருமாள் ஆலயம் சென்று வழிபட்டோம்.
திருமலை "ஆதி வராகத் தலம்". எனவே திருவேங்கடமுடையானைத் தரிசிக்கும் முன்னர், வராகப் பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்பது நியமம். கோவிலில் முதல் பூஜையும், நிவேதனமும் இவருக்கே!
சிறிய உருவம். பூமகளை மடியில் சுமந்து, அவளுக்கு ஞான உபதேசம் செய்யும் ஞான வராகராக திகழ்கிறார்! வராகத்தை கேழல் என்று ஆழ்வார் தூயதமிழில் அழைத்தது நினைவுக்கு வந்தது! சொன்னேன் ஆனந்திடம். அவன் என்னை ஒரு முறை முறைத்தான், செல்லமாக!

அனந்த நிலையம் எனப்படும் அவன் கருவறைக் கோபுரம் தங்கப் பூச்சில் தகதக என மின்னியது! மின்னுவதெல்லாம் பொன்னல்ல! ஆணிப்பொன் மேனி உள்ளே இருக்கிறது! வாருங்கள் என்பது போல மின்னியது!!

கையில பார் கோட் போட்ட டோக்கனைக் கீழ்த் திருப்பதியிலேயே கட்டிக்கிட்டோமே! நேரே வரிசையில் போய் நின்னுட்டோம்.
இந்த பார் கோட் ஐடியா IIM மாணவர்கள் பிராஜெக்டாம்! சூப்பர் அப்பு! இதனால் முன்பு போல் பல மணி நேரம் கொட்டகையில் அடைந்து கிடைக்காமல் திருமலையின் மற்ற ஆன்மீகப் பகுதிகளைப் பார்த்து வரலாமே.அம்மணிகளுக்கு ஷாப்பிங் டைம் வேறு எக்ஸ்ட்ரா கிடைக்கும்:)

வரிசையில் நின்று விட்டோம். பலவிதமான மனிதர்கள். ஆனால் ஒரே நோக்கம்! இறை முகம் காணல்!
பணம் படைத்தவர்கள், அவ்வளவாகச் செல்வச் செழுமை இல்லாதவர்கள்,
குணம் படைத்தவர்கள், அவ்வளவாகக் குணச் செழுமை இல்லாதவர்கள்,
பல மொழிகள், பல உடைகள், பல கதைகள், பல சுவைகள்!
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே

"நின்றனரே" என்று நம்மாழ்வார் வரிசையில் நிற்பதையும் சேர்த்தே தான் குறிப்பிட்டாரோ?


சுற்றுலா சென்றால் கூட, ஒரே குடும்பத்தார் கூட அவர் அவர் விரும்பும் ஸ்பாட்டுகளுக்குச் சென்று திரும்பலாம். ஆனால் இங்கே எல்லோரும் ஒரே பொருளைக் காணத் தான் ஓயாது நிற்கிறார்கள்!
அவர்கள் மேம்போக்காக தரிசனம் செய்கிறார்களோ, இல்லை.... "வினையேன் அழுது" அவனைப் பெறுகிறார்களோ, ஆக மொத்தம் அந்தப் "புன்னகை மன்னன்" குளிர் முகம் காணத் தான் இவ்வளவு விழைவு. அதுவன்றிப் பிறிதொன்று இல்லை!
ஆகவே, அந்தக் கணத்தில் எல்லாருமே அவன் அடியார் தான்! அடியார்க்கு அவனே ஆரமுதன்!

பிரபலங்கள், பிரபலங்களின் சபலங்கள் என சிறப்பு அனுமதியோ, பணம் கொடுத்தவரோ, பண்பாளரோ, தொண்டரோ, துறவியோ எவராயினும் எனக்கென்ன? எவராயினும் சரி, சற்றுக் கூட கைபடாது கால்படாது உள்ளே செல்லத் தான் முடியுமா? அப்படிச் சொல்லத் தான் முடியுமா?

வரிசையில் ஊர்ந்து கோபுர வாசல் கிட்டே வந்து விட்டோம். இரவு சுமார் 10:30 மணி. கோவில் மணியோசை, பேரிக் கொம்பு முழக்கம். ஓகோ அவனுக்குப் பசி போலும்! நிவேதனம் ஊட்டுகிறார்கள்! சரி சாப்பிடட்டும். பசியால் வாடும் முகத்தைப் பார்க்க மனம் வருமா? நாம் காத்திருந்து பொறுமையாகவே பார்ப்போம்! ஹேய்....என்ன ஏதோ சலசல சத்தம் கேட்கிறதே? எதற்கு கூச்சல்??

ஆனந்த் தான் கூவினான். "டேய் ஸ்ரீதேவி தான்பா; அங்கே பாரேன்!".

மச்சி, குச்சி என்ற விளிப்புகள் ஏனோ அப்போது அவன் வாயில் வரவில்லை!
ஆமாம் ஸ்ரீதேவி தான், குடும்பத்தாருடன்!

வழியில் பார்த்தற்கும் இப்போதைக்கும் வித்தியாசங்கள்! பொறுப்பான உடுப்புகள் உடுத்தி இருந்தனர். நாங்கள் கூப்பிடும் தொலைவே இருந்தனர்!கோவில் அதிகாரியும், அவர் கூட திருமண்காப்பு நெற்றியில் துலங்கும் ஒரு அர்ச்சகரும் அவர்களை வரவேற்றனர்!
உள்ளே அவர்கள் அனைவரும் நுழையும் போது, வரிசையில் உள்ள கூட்ட மிகுதியாலும், அந்தக் கோபுர வாசலில் தடுப்புகள் வெறும் கயிறாகவே இருந்த காரணத்தாலும் சற்றே தள்ளு முள்ளு!

உடனே அந்த அர்ச்சகர், பணியாளர்களை விட்டு வரிசையை நிறுத்தச் சொன்னார்! நல்லது தான்!!ஆனால் ஒருபடி மேலே போய் "இந்தக் காட்டுமிராண்டிக் குரங்கு கூட்டம் எப்பவுமே இப்படித் தான்; ஏமி புத்தி லேது ஈ கோட்டி (குரங்கு) ஜனாலுக்கி.....xxxxxxxxxxxxxxxxxx.....நு ராம்மா", என்று படபடவென பொரிந்து விட்டார்... பல வார்த்தைகள் பதிவின் தன்மை கருதி சென்சார்!!

எங்கிருந்து தான் எனக்குக் கோபம் வந்ததோ தெரியவில்லை. குரலை நன்றாக ஓங்கி, "யாரைக் காட்டுமிராண்டிக் குரங்குகள்-ன்னு சொல்றீங்க? ஆஞ்சனேயர் அவதரித்த மலையில் அடியார்களை இழிவாகப் பேச உங்களுக்கு நாக்கு எப்படி வந்தது?

'அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ' என்று அடியவரைத் தான் தினம் தினம் முதலில் துதிக்கிறீங்க. மறந்துடாதீங்க!
' சர்வ அந்தர் ஆத்மனே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்' என்பதை மறந்து விட்டீர்களா?
சமூகத்தில் பிரமுகர்கள்-னா அவர்களுக்கு மரியாதை செய்து அழைத்து போங்க, வேண்டாம்-ன்னு சொல்லலை. அதற்காக வாய்த்துடுக்கு வேண்டாம்" என்று கண்கள் பனிக்கக் கத்தி விட்டேன்.

ஒரே நிசப்தம். நண்பர்கள் என்னைப் பிடித்துக் கொண்டனர். அர்ச்சகர் சற்று விக்கித்து தான் போய் விட்டார். அந்த அதிகாரி என்னை ஒரு முறைமுறைத்தார். யாரும் மேற்கொண்டு பேசவில்லை!
நடிகையும் கணவரும் மட்டும் அருகில் வந்து "Sorry; we didn't mean it; really sorry" என்றனர். அனைவரும் உள்ளே சென்று விட்டனர்.கூட்டம் என்னையே பார்த்தது! எனக்கே ஒருமாதிரி ஆகி விட்டது!

நண்பர்கள், "டேய், உனக்கு இவ்ளோ கோபம் கூட வருமா? முன்ன பின்ன நீ இப்படிக் கத்தி பாத்ததே இல்லடா. போலீஸ்-ல்லாம் பக்கத்துல இருக்காங்க. பாத்து டா." என்றனர்.

ஆனந்த் மட்டும் "அந்த நாமக்கார ஐயிருக்கு இருக்குடா. வச்சி வாங்கணும். இவ்ளோ பேசிட்டு ராம்மா ராம்மா -ன்னு கொஞ்சி கொஞ்சி கூட்டினு போறாரு.இதே நாங்க சத்தம் போட்டிருந்தா எகிறி இருப்பாங்க; ஆனா நீ ஏதோ மந்திரம் எல்லாம் சொன்னியா. வுட்ட சவுண்டுல ஆளூ கப்சிப்", என்றான்.
"சரிடா விடு, வயசுல பெரியவர்" என்றேன். மனம் மட்டும் கனம்!! நாம ஏதும் தப்பா பேசிடலையே என்ற பயம்!

நகர்ந்தோம்....நகர்ந்தோம். கொடி மரம் கடந்து, சன்னிதியில் நுழைந்து...கருடன் இரு கரம் கூப்பிச் சேவித்துக் கொண்டிருந்தான்.
சரி நாமும் முகத்தை இப்படி இடப்பக்கம் திருப்பினால்...அய்யோ!

நெடிது உயர்ந்த நீல மேனி நெட்டழகன், முகம் கொள்ளாச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
என்ன சொல்வேன்? எப்படிச் சொல்வேன்??

கண் அழகா? சிவந்த வாய் அழகா?
சிரிக்கும் முகம் அழகா? திரண்ட தோள் அழகா?
கை அழகா? கருத்த இடுப்பழகா?
கால் அழகா? இல்லை மால் அழகா?
அய்யோ!
தீப விளக்கொளியில், பூலங்கி சேவை (பூக்களால் ஆன அங்கி).

இளங்கோவடிகள் வியந்தது போல்,
பகை அணங்கு ஆழியும்(சக்கரம்) பால் வெண் சங்கமும்(சங்கு)
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய


திருவேங்கடமுடையான் திருமுகம், திருமார்பு, திருக்கரங்கள்...சேவித்து....அதற்கு மேல் முடியவில்லை. ஜரிகண்டி, ஜரிகண்டி, தய சேசண்டி....திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே, கண்கள் பனிக்க வெளியே வந்தோம்.
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான் என்று ஆண்டாளே தரிசன மகா பாக்கியம் கிடைக்க வில்லையே என்று புலம்பும் போது, நாமெல்லாம் எங்கே?

தீர்த்தம், திருப்பாதம்(சடாரி) பெற்று, உடையவர், நரசிம்மர் சேவித்து, உண்டியல் செலுத்தி, வலம் வந்து, வெளி வந்தோம். முன்பெல்லாம், கோவில் மற்றும் அதன் பகுதிகள், கிணறு, அன்னக்கூடம், யமுனைத்துறை, மற்றும் பல சரித்திர நிகழ்வுகள் அதன் இடங்களைப் பார்ப்பேன். உடனிருப்பார்க்கு விரும்பினால் சொல்லுவேன். இம்முறை ஏனோ லயிக்கவில்லை!

அருண் மீண்டும் பழைய நிகழ்ச்சியைப் பற்றி எழுப்பினான். லட்டு சாப்பிட்டுக் கொண்டே, "ஒண்ணுமே இல்லீங்க. எல்லாம் பணம் தான் பேசுது! எப்படியோ நல்லா ஏத்தி வுட்டுட்டாங்க இந்தக் கோயிலை!
நம்ம தஞ்சாவூர் பக்கம் எல்லாம், எவ்ளோ பெருமாள் கோயில் ஆள் அரவம் இல்லா இருக்குது! யாரோ பெரிய பெரிய முனிவங்க, அப்பறம் ஆழ்வார்-ன்னு சொல்றாங்களே, அவுங்க எல்லாம் பாட்டு படிச்சு இருக்காங்களாம் தஞ்சாவூர்ல! ரொம்ப பக்தி கதையெல்லாம் இருக்குதாம். இந்த திருப்பதி-ல அதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னாலும் பணம் மட்டும் கொழிக்குது! அதை வச்சிக்குனு இவங்க ரொம்பவே ஆட்டம் போடறாங்க", என்றான்.

நான் அப்போது அவனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஒன்றும் சொல்லவில்லை. பூமாலைக்கே வழியின்றி இருந்த திருவேங்கடமுடையான் பற்றியும் அவன் அருளுக்கு உருகி உருகிக் காதலித்த ஆழ்வார்கள், இராமானுசர், அனந்தாழ்வான், திருமலை நம்பிகள், தியாகராஜர், அன்னமாச்சார்யர், வட இந்திய ஹதிராம்ஜி மற்றும் பலப்பல கதைகளைப் பதிவாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அப்போது தான் உதித்தது. அதற்கு இப்போது தான் வேளை வந்தது!

//இன்று நாம் காணும் பணக்காரத் திருமலைக்கும் உள்ளே, பலப் பல அன்புத் திருக்கதைகள் எல்லாம் ஒளிந்து உள்ளன. அவற்றை எல்லாம் எழுதலாம் என்று என் சிந்தனை// என்று குமரன் பதிவு ஒன்றில் பின்னூட்டம் இட்டேன். வெறும் கதையாக இல்லாமல், இலக்கிய நயமாகச் சொன்னால், வடையுடன் கூடிய பொங்கலாக இருக்கும் அல்லவா:-) ? இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம மீட் பண்ணலாம். பயந்துறாதீங்க, இனி குறும்-பதிவாகவே இடுகிறேன்!!!

பி.கு:திருமலையான் பிரம்மோற்சவம் Sep 25 துவங்கி Oct 3 வரை, ஒன்பது நாட்கள்!
ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிப் பதிவு! ஒரு/இரு வாகனம் (படத்துடன்);
ஒரு ஆழ்வார் பாடல் (12-இல், 10 பேர் நம்ம பாலாஜி மேல ஒரே லவ்-ஸ் பா)
அனைவரும் அவசியம் வந்து கலந்துக்குங்க!

25 comments:

 1. KRS,

  விளையாட்டாப் படிச்சுக்கிட்டே வந்து கடைசியில் பெருமாளைப் பத்திச் சொன்னதும்
  கண்ணு நிறைஞ்சு வழிஞ்சிருச்சுப்பா.

  அந்தப் பெருமாளொட அனுக்கிரகம் உங்களுக்கு எப்பவும் இருக்கணுமுன்னு மனதார
  வேண்டிக்கறென். ஆசிகள்.

  அருமையான நடை அமைஞ்சுருக்கு. இன்னும் அதை சிறப்பா வளர்த்திக்கலாம்.

  நல்லா இருங்க.

  ReplyDelete
 2. // மனம் மட்டும் கனம்!! நாம ஏதும் தப்பா பேசிடலையே என்ற பயம்!//
  நீங்க பேசனது தப்பே இல்லை.
  இந்த மாதிரி திருப்பதில காச வாங்கிட்டு இவுங்க பண்ற தப்பெல்லாம்தான் அங்க போகிற ஆசையையே மறக்கவைத்தது.

  //திருமலையான் பிரம்மோற்சவம் Sep 25 துவங்கி Oct 3 வரை, ஒன்பது நாட்கள்!
  ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிப் பதிவு!
  ஒரு வாகனம் (படத்துடன்);
  ஒரு ஆழ்வார் பாடல் (12-இல், 10 பேர் நம்ம பாலாஜி மேல ஒரே லவ்-ஸ் பா)
  அனைவரும் அவசியம் வந்து கலந்துக்குங்க!
  //
  அருமை! அருமை!!!
  கண்டிப்பாக கலந்து கொள்கிறோம்!!!

  ReplyDelete
 3. உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

  http://www.desipundit.com/category/tamil/

  ReplyDelete
 4. அருமையான நடை.அழகான புகைப்படங்கள்.கட்டுரை நீளம் எல்லாம் பொருட்டே இல்லை.

  தஞ்சையில் ஆயிரம் கோயில்கள் இருக்க திருமலையில் மட்டும் கூட்டம் ஏன்?நல்ல விவாதத்தத்துக்குரிய கேள்வி.உன்னுள் இருக்கும் ஆண்டவனை காண தஞ்சை கோயில் மட்டும் ஏன் என இன்னொரு எதிர்கேள்வி எழுப்பினால் சில விடைகள் கிடைக்கும்.

  எங்கும் நிறைந்தானை ஏன் கோயிலில் மட்டும் காணும் பக்குவம் நமக்கு வருகிறது?ஏன் அதுவே பல சமயங்களில் கடினமாக இருக்கிறது?

  தூணிலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான் என்பதை நாம் கண்டு உணரவே அவனை தேடி அலைகிறோம்.கோயில் கோயிலாக அலைகிறோம்.கடைசியில் நமக்குள் கண்டுகொள்கிறோம்.கடைசில் நாமே அதுவாக ஆகிவிடுகிறோம்

  ReplyDelete
 5. என் முந்திய காமெண்ட் வந்து சேரலையா? (-:

  ReplyDelete
 6. துளசி கோபால் said...

  //என் முந்திய காமெண்ட் வந்து சேரலையா? (-://
  Blogger சொதப்பச்சுன்னு நினைக்கிறேன் டீச்சர்; இப்ப வந்திடுச்சு. நீங்க தானே எப்பவும் முதலில் வருவீங்க, வகுப்பில் கூட :-)

  //உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்//
  மிக்க நன்றி டீச்சர்!

  //மனதார வேண்டிக்கறென். ஆசிகள்.//
  நீங்க "ஆசிகள்" ன்னு சொன்னதே எனக்கு சந்தோஷமா இருக்கு டீச்சர்!

  //அருமையான நடை அமைஞ்சுருக்கு. இன்னும் அதை சிறப்பா வளர்த்திக்கலாம்//
  உரிமையுடன் தங்கள் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுவேன். உங்க மின்மடல் முகவரியை என் profile-இல் இருந்து ஒரு மெயில் தட்டி வுடுங்க!

  ReplyDelete
 7. //வெட்டிப்பயல் said...
  நீங்க பேசனது தப்பே இல்லை.
  இந்த மாதிரி திருப்பதில காச வாங்கிட்டு இவுங்க பண்ற தப்பெல்லாம்தான் அங்க போகிற ஆசையையே மறக்கவைத்தது//

  இப்ப கொஞ்சம் பரவாயில்லை-ன்னு நினைக்கிறேன் பாலாஜி. புரிதல் மற்றும் தொலைநோக்கு உள்ள தலைமை வாய்த்தால், நல்ல மாற்றங்கள் நிகழும். எப்படி இருந்தாலும், சூரியன் சுட்டெரிக்கிறதே என்று ஒதுக்கி விடுகிறோமா? அதற்கு காரணம் சூரியன் இல்லை என்பது நாம் அறிந்தது தானே? நமக்கும் அவனுக்கும் உள்ள பிணைப்பும் அப்படித் தானே? என்ன சொல்றீங்க :-)

  ReplyDelete
 8. வேங்கடவனை நினைத்தேன்; உங்கள் பதிவிற்கு கொண்டுவந்து விட்டான். அவனருள் உங்களுக்கு பூரணமாக உள்ளது. சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 9. செல்வன்
  //தூணிலும் இருப்பான்,துரும்பிலும் இருப்பான் என்பதை நாம் கண்டு உணரவே அவனை தேடி அலைகிறோம்.கோயில் கோயிலாக அலைகிறோம்.கடைசியில் நமக்குள் கண்டுகொள்கிறோம்.கடைசில் நாமே அதுவாக ஆகிவிடுகிறோம் //

  சூப்பரா சொல்லி இருக்கீங்க! உங்க கருத்தை அப்படியே "சுட்டு" பொய்கையாழ்வார் சொன்னதா அடுத்த பதிவ போட்டுட்டேன். வந்து பாருங்க!
  "உள்ளத்துள் எல்லாம் உளன்" ன்னு உங்க எண்ணத்தையே அவரும் சொல்லி இருக்கார் :-)

  ReplyDelete
 10. //சூரியன் சுட்டெரிக்கிறதே என்று ஒதுக்கி விடுகிறோமா? அதற்கு காரணம் சூரியன் இல்லை என்பது நாம் அறிந்தது தானே? நமக்கும் அவனுக்கும் உள்ள பிணைப்பும் அப்படித் தானே? என்ன சொல்றீங்க :-) //
  ஒதுக்கறதுனு இல்ல...
  இப்பவெல்லாம் கூட்டம் இருக்குற கோவிலுக்கே போக மனதிற்கு பிடிக்கவில்லை. கோவில்ல என்னைத்தவிர யாருமே இல்லாம இருந்தா கூட சந்தோஷமாத்தான் இருக்கும்னு தோனுது.

  விசேஷ நாட்களிலும் நான் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து விடுவேன். அதே மாதிரி கோவில்ல யாராவது என்னிடம் வந்து பேசினாலும் பிடிக்காது.

  ReplyDelete
 11. அந்த மீசைக்கார புலவன் ரௌத்திரம் பழகு என்று சொன்னது இதற்குதானோ.கடல் கட்ந்தாலும் கண்ணனை விடவில்லை.அருமையான பதிவு வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.ஆனாலும் வயதில் பெரியவன் என்ற முறையில் சொல்லுகிறேன் நீண்ட ஆயுளுடன் குறை ஒன்றுமில்லாமல் வள்முடன் வாழ்க.

  ReplyDelete
 12. அனைவரும் அவசியம் வந்து கலந்துக்குங்
  அதைவிட வேறு வேலை என்ன? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று தினமும் வருவேன்

  ReplyDelete
 13. அவசியம் வருகிறோம். திருப்பதிக்கு தான் போக முடியவில்லை, உங்கள் பதிவுகளைப் பார்த்தாவது திருப்தி பட்டுக்கொள்கிறோம்.

  ReplyDelete
 14. வாங்க திராச
  //கடல் கட்ந்தாலும் கண்ணனை விடவில்லை//
  கடலில் தானே அவனும் உள்ளான்! விடவும் மனம் வருமோ? நாம விட்டாத் தான் அவன் விட்டிடுவானா? :-) பின்னாடியே வந்து காமெடி கீமெடி ஏதாச்சும் பண்ணிடுவான் :-):-)

  //அருமையான பதிவு வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.ஆனாலும் வயதில் பெரியவன் என்ற முறையில் சொல்லுகிறேன் நீண்ட ஆயுளுடன் குறை ஒன்றுமில்லாமல் வள்முடன் வாழ்க//

  வணங்குகிறேன் திராச! உங்கள் வாழ்த்தே ஒரு நல்ல வரம் தான்!

  ReplyDelete
 15. வாங்க அனானி
  //உங்கள் பதிவுகளைப் பார்த்தாவது திருப்தி பட்டுக்கொள்கிறோம்//

  எனக்கும் அதே திருப்தி தாங்க. அதனால் தான் சோம்பலான ஆசாமியான நான், கொஞ்சம் எழுதலாமே-ன்னு முனைந்தேன். தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 16. KRS,
  புரட்டாசி மாதம் புண்ணியம் தேடிக் கொண்டீர்கள்.
  திருப்பதி நினைத்தாலே புண்ணியம் தரும் பூமி.
  பணம் விளையாடும் ஆட்டத்துக்கு அவர் காரணம் இல்லையே. அலுத்துப் போகும் வேளையில் அவரைப் பார்த்த நொடி கண்ணில் நீர் விழக் காத்து இருக்கிறது. அவ்வளவுதான் பட்ட சிரமம் மறந்துவிடுகிறது.
  மீண்டும் என்னைக் கூப்பிடு கோவிந்தா' என்று இறைஞ்சி விட்டு வருவோம்.நிறைய எழுதுங்கள்.காத்து இருக்கிறோம்.

  ReplyDelete
 17. வாங்க வள்ளி
  //KRS,
  பணம் விளையாடும் ஆட்டத்துக்கு அவர் காரணம் இல்லையே. அலுத்துப் போகும் வேளையில் அவரைப் பார்த்த நொடி கண்ணில் நீர் விழக் காத்து இருக்கிறது. அவ்வளவுதான் பட்ட சிரமம் மறந்துவிடுகிறது.//

  முற்றிலும் உண்மை! பணம் விளையாடும் ஆட்டத்தைப் பார்த்து அவனுக்குள் அவனே சிரித்துக் கொள்கிறான். பணக்காரக் கடவுள் என்ற இமேஜையும் தாண்டி, அடியார்க்கு அன்பனான அவனின் பொலிவை ரசிக்கவே இப்பதிவை அவனிடம் இருந்தே துவக்கி்னேன்.

  //நிறைய எழுதுங்கள்.காத்து இருக்கிறோம்//
  மிக்க நன்றி வள்ளி! கண்டிப்பாக எழுதுகிறேன்.

  ReplyDelete
 18. kannabiran,
  First, sorry for writing in English !

  You are improving in leaps and bounds, I mean your writing style ! Beautifully written post. Nice pictures too.

  //நடிகையும் கணவரும் மட்டும் அருகில் வந்து "Sorry; we didn't mean it; really sorry" என்றனர்.
  //
  This was your intention, right ;-)

  ReplyDelete
 19. enRenRum-anbudan.BALA said...
  kannabiran,
  First, sorry for writing in English !

  You are improving in leaps and bounds, I mean your writing style ! Beautifully written post. Nice pictures too.//

  நன்றி பாலா. உங்கள் feedback-ஐ எப்போதும் மதிக்கிறேன். எங்கே இன்னும் முன்னேற்ற வேண்டியுள்ளது என்பதையும் குறிப்பிடுங்கள். fyi கல்லூரியில் தான் நான் கடைசியாக எழுதியது. அப்பறம் நின்று விட்டது. இப்போ மீண்டும் தட்டு தடுமாறி வரேன். thanks to thamizmanam!!

  //நடிகையும் கணவரும் மட்டும் அருகில் வந்து "Sorry; we didn't mean it; really sorry" என்றனர்.
  //
  This was your intention, right ;-) //

  அய்யோ, அப்படி எல்லாம் இல்லீங்கோ சாமி. நம்ம intention, "என்னடா திருமலையான் பக்கத்திலேயே இருக்கும் பாக்கியம் பெற்ற ஒருவர், வகை அறியாது பேசி விட்டாரே" என்ற திடீர் கோபம் தான்! Sridevi நம்ம favorite heroine தானுங்கோ. அவர் மேல நமக்கு கோபம் இல்லீங்கோ :=)

  ReplyDelete
 20. //இருள் சூழத் தொடங்கி விட்டது. வனத்தில் தான்; மனத்தில் இல்லை!// அருமையான சிந்தனை. :-)

  //கோனேரி என்ற அழகிய தமிழ்ப் பெயர் இதற்கு உண்டு// ஒரு முறை சொல் ஒரு சொல் பதிவில் எஸ்.கே. ‘பல வடமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல் சொல்லும் போது வடமொழிச் சொல்லைப் போல் ஒரே சொல்லாகச் சொல்ல முடிவதில்லை; தொடர்ச் சொல்லாகத் தான் சொல்ல வேன்டி இருக்கிறது’ என்று வருந்தினார். ஆனால் இந்தச் சொல்லைப் பாருங்கள். வடமொழியில் ஸ்வாமி புஷ்கரிணி என்று இரண்டு சொல்லாக இருப்பது தமிழில் கோனேரி என்று ஒரே சொல்லாக இருக்கிறது. :-)

  திருமலையானைச் சேவிக்கும் முன்னர் ஞானக் கேழலைச் சேவிக்க வேண்டும் என்ற நியதி நிறைய பேருக்குத் தெரியாமல் தான் இருக்கிறது ரவிசங்கர். நீங்கள் இந்த யாத்திரையை நியதியின் படி நிகழ்த்தியிருக்கிறீர்கள். தாயாரைச் சேவித்துவிட்டுப் பின்னர் தான் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்றும் ஒரு நியதி உண்டு. நீங்கள் முதலில் திருச்சானூர் சென்று அம்மாவைப் பார்த்துவிட்டுப் பின்னர் தான் அப்பனைப் பார்க்கச் சென்றிருக்கிறீர்கள். :-)

  ஆனந்த நிலையத்தின் புகைப்படம் சிறப்பாக இருக்கிறது. எப்போதும் முன்னாலிருந்தோ பின்னாலிருந்தோ எடுத்தப் படம் தான் கிடைக்கும். இதில் வலப்பக்கத்தில் இருந்து எடுத்தப் படம் அதிலும் அந்த கோபுர ச்ரினிவாசனுடன் கூடிய படமாக இருப்பது மிகச் சிறப்பு. உள்ளே எம்பெருமானைப் பார்க்க ஒரு நொடி தான் கிடைக்கிறது; இந்த கோபுர ச்ரினிவாசனை ஆரா அமுதினை கண் குளிரப் பார்க்கலாம்.

  நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்கள் குதித்துக் குதித்து வருகின்றனவே. :-) என் நீங்கள் ஒரு தனி வலைப்பூ தொடங்கி திருவாய்மொழிப் பாசுரங்களுக்குப் பொருள் சொல்லக் கூடாது?

  ‘நின்றனரே’க்கு உங்கள் விளக்கம் அருமை. :-)

  அடியேனும் இந்த மாதிரி கோபப் பாட்டிருக்கிறேன். அடியார்களைக் கேவலமாகப் பேசிய இன்னொரு அடியாரை அவரின் திருமண் காப்பைப் பார்த்துத் தடுமாறாமல் சினந்தது மிகச் சரி.

  எனக்கும் திருமலை என்றாலே நினைவிற்கு வரும் பாசுரங்கள் 'குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்'னும் 'அகலகில்லேன் இறையுமென்று'ம் தான்.

  ReplyDelete
 21. அதெப்படிங்க பூவாடைப் பிரானாரைப் பார்த்தவுடனே ‘பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய’ அப்படிங்கற சிலப்பதிகார வரிகள் நினைவிற்கு வருகிறது? ஆரியமும் செந்தமிழும் கரைச்சுக் குடிச்சிருப்பீங்க போல இருக்கே!

  கோவில் மற்றும் அதன் பகுதிகள், கிணறு, அன்னக்கூடம், யமுனைத் துறை, மற்றும் பல சரித்திர நிகழ்வுகள் அதன் இடங்கள் – இவற்றைப் பற்றி எனக்குத் தெரியவில்லையே? எப்போது எழுதப் போகிறீர்கள்? விரும்புகிறேன். சொல்லுங்கள்.

  வடையுடன் கூடிய பொங்கலாகிய உடுத்துக் கலத்ததுண்ண நான் உண்டு. வாரம் ஒரு முறை தான் கிடைக்குமா? :-(

  ReplyDelete
 22. வாங்க குமரன்.
  //ஒரு முறை சொல் ஒரு சொல் பதிவில் எஸ்.கே. ‘பல வடமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல் சொல்லும் போது வடமொழிச் சொல்லைப் போல் ஒரே சொல்லாகச் சொல்ல முடிவதில்லை; தொடர்ச் சொல்லாகத் தான் சொல்ல வேன்டி இருக்கிறது’ என்று வருந்தினார். ஆனால் இந்தச் சொல்லைப் பாருங்கள். வடமொழியில் ஸ்வாமி புஷ்கரிணி என்று இரண்டு சொல்லாக இருப்பது தமிழில் கோனேரி என்று ஒரே சொல்லாக இருக்கிறது. :-) //

  இது போல் இன்னும் பல சொற்கள் உள்ளன குமரன். வடமொழியில் விரிந்து, தமிழில் சுருங்கிச் சுவையாக இருக்கும். தனி மடலில் எனக்குத் தெரிந்த சில சொற்களை அனுப்புகிறேன். "சொல் ஒரு சொல்" பதிவுக்கு என்னாலான ஒரு சிறு பங்கு :-)

  நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாடல்கள் குதித்துக் குதித்து வருகின்றனவே. :-) என் நீங்கள் ஒரு தனி வலைப்பூ தொடங்கி திருவாய்மொழிப் பாசுரங்களுக்குப் பொருள் சொல்லக் கூடாது?
  //
  ஆழ்வார் அருளும், தங்கள் உதவியும் இருந்தால் எனக்கும் ஆசை தான் குமரன் :-) நாதமுனிகளுக்கு அருளிய சடகோபர், நமக்கும் அருள வேண்டுகிறேன்.

  //எனக்கும் திருமலை என்றாலே நினைவிற்கு வரும் பாசுரங்கள் 'குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்'னும் 'அகலகில்லேன் இறையுமென்று'ம் தான்//

  'அகலகில்லேன் இறையுமென்று', மற்றும் எ.அ. பாலா சொன்ன 'ஒழிவில் காலமெல்லம்' பாடல்களை 9ஆம் நாள் நம்மாழ்வார் பதிவுக்கு எண்ணியிருந்தேன். நீங்கள் இருவரும் என் மனதை scan எடுத்து விட்டீர்கள்!!

  ReplyDelete
 23. //கோவில் மற்றும் அதன் பகுதிகள், கிணறு, அன்னக்கூடம், யமுனைத் துறை, மற்றும் பல சரித்திர நிகழ்வுகள் அதன் இடங்கள் – இவற்றைப் பற்றி எனக்குத் தெரியவில்லையே? எப்போது எழுதப் போகிறீர்கள்? விரும்புகிறேன். சொல்லுங்கள்//

  அடியார்களைப் பற்றிப் பதிவுகள் வரும் போது, அதனூடே தருகிறேன் குமரன்! உங்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும் :-)

  //வடையுடன் கூடிய பொங்கலாகிய உடுத்துக் கலத்ததுண்ண நான் உண்டு. வாரம் ஒரு முறை தான் கிடைக்குமா? :-( //
  ஆகா, வாரம் ஒரு முறை தானா என்று கேட்கும் பேராசைப் பிரானாரே
  :-) தங்கள் எழுத்தின் வேகம் வாயு வேகம்; மனோ வேகம்!
  எனக்கோ ஆமை வேகம் தான்! :-)

  ReplyDelete
 24. அட இப்ப தான் ஆழ்வார் பாடல்களோட விஞ்ஞான கதை எழுதனும்னு என்னோட தமிழ் கடவுளும் ஒளவைப்பாட்டியும்!பதிவிலே, இதபத்தி பதில் சொல்லி எழுதி இருந்தேன், நீங்க உங்க அனுபவத்தை அழகா பாடல்களோட பின்னி எழுதிட்டீங்க, வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. // வெளிகண்ட நாதர் said...
  அட இப்ப தான் ஆழ்வார் பாடல்களோட விஞ்ஞான கதை எழுதனும்னு என்னோட தமிழ் கடவுளும் ஒளவைப்பாட்டியும்!பதிவிலே, இதபத்தி பதில் சொல்லி எழுதி இருந்தேன், நீங்க உங்க அனுபவத்தை அழகா பாடல்களோட பின்னி எழுதிட்டீங்க, வாழ்த்துக்கள்//

  வாங்க வாங்க உதயகுமார் ஐயா.
  உங்கள் தமிழ் கடவுளும் ஒளவைப்பாட்டியும் பதிவு கண்டேன். நானும் ஒளவைப்பாட்டியிடம் இருந்து தான் ஆரம்பித்தேன். என்ன ஒற்றுமை பாருங்கள்!

  பிரம்மோற்சவம் நவ நாட்களும் தாங்கள் அவசியம் வர வேண்டும்! மீ்ண்டும் நன்றி!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP