திருமலை விழா 5 - மோகினி அவதாரம்
காலை - மோகினி அவதாரம்
சிறு வயதில் ஜகன் மோகினி என்ற படம் வந்தது. யாருக்காச்சும் நினைவு இருக்குதுங்களா? நான் அந்தப் படத்தைப் பாத்து ரொம்பவே பயந்து போயிட்டேன்னு வீட்டுல இப்பவும் சொல்லுவாங்க! இது ஏதோ அந்த மாதிரி மோகினின்னு நினைச்சுக்காதீங்க!
இந்த மோகினி அவதாரம், காணக் கண் கோடி வேண்டும்! அழகுக்கு அழகு, அறிவுக்கு அறிவு. யோகீஸ்வரனான சிவனாரையே சிறிது கணத்துக்குச் சிந்தை கலங்க வைத்த தெய்வீக அழகு!
நல்லார்க்கு நிழலும், பொல்லார்க்கு பாடமும் புகட்ட எண்ணிய இறைவன், பாற்கடல் கடைதல் என்ற ஒன்றை ஏற்படுத்தினான் (project vision). மந்தார மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு தேவர், அசுரர் இருவரும் கடைந்தனர் (project allocation and design). பல சோதனைகள் (project inhibitors). சில சாதனைகள் (project milestones).
தானே ஆமையாகி தாங்கி நின்றான் (project support). தானே தன்வந்திரியாய் தோன்றி அமிர்தம் வழங்க (project beta), அசுரர் பறித்தனர். (project regression). மோகினியாய் உருக்கொண்டான். அசுரர் மயங்க, அமுதினை மீட்டான் (project testing & assurance). எங்கு சேர்ந்தால் தீமை குறைந்து, நலம் பெருகுமோ, அங்கு அமுதினைச் சேர்ப்பித்தான் (project release).
"நன்று ஆற்றல் உள்ளலும் தீது உண்டே அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக் கடை". என்பதை உலகம் உணர்ந்தது. தீயோர் கைகளில் பெரும் பலம் குவியாமல் காக்கப் பட்டது!
திருமலையில், அதே பழைய மோகினி வேடம் பூண்டு, வீதியுலா வருகிறான் இறைவன்.
"இவனுக்குப் பெண் வேடம் சரியாகப் போட வருமா?" என்ற ஐயமோ என்னவோ ஆண்டாளுக்கு! போன முறையே ராகு கேது, இவன் வேடத்தை லேசாக யூகித்து விட்டார்களே!
அதனால் தன் மேக்கப் கிட்-டை திருவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பி வைக்கிறாள்! ஆம், பெருமாளின் இன்றைய அலங்காரம் என்ன தெரியுமா?
அவள் சூடிக் கொடுத்த பூமாலை, பேசிக் களித்த பச்சைக்கிளி.
இரண்டும் வில்லிபுத்தூரில் இருந்து எடுத்து வரப்பட்டு,
எம்பெருமானுக்குச் சார்த்தப்படுகின்றன!
இப்படி அலங்கரித்துக் கொண்டு, பல்லக்கில், பெருமாள் ஒய்யாரமாக வீதி உலா வருகிறான்!
அவன் எதிரே நிலைக்கண்ணாடி, கன்னத்திலே திருஷ்டிப் பொட்டு!
குலுங்கிக் குலுங்கி பல்லக்கு நெளிப்பு! அழகோ அழகு!!
உள்ளம் கொள்ளை போய் விடுமோ என்று அஞ்சுபவர்கள்,
அவன் வரும் போது கண்களை மூடிக் கொள்ளுங்கள்!
அப்போதும் விழித்திரையில் அவனே தெரிவான் :-)) !!!
இன்று,
ஆண்டாளும், திருவேங்கடத்தானும்.
ஒளி வண்ணம் வளை சிந்தை
உறக்கத்தோடு இவையெல்லாம்,
எளிமையால் இட்டு என்னை
ஈடு அழியப் போயினவால்,
குளிர் அருவி வேங்கடத்து என்
கோவிந்தன் குணம் பாடி,
அளி அத்த மேகங்காள்!
ஆவி காத்து இருப்பேனே.
(அளி=இரக்கம்; அத்த=நிறைந்த)
இந்தக் காதல் கவிதைக்கு விளக்கம் சொல்லணுமோ என்று என் மனத்துக்குள் ஒரு எண்ணம். அப்படிச் சொன்னால் கூட, அந்தக் காதல் எங்கே, என் சொற்கள் எங்கே?
இருப்பினும் நயம் கருதி லேசா லேசா சொல்லுகிறேன்.
ஆனால், நீங்கள் நேராகவே பாடலை, ஒருமுறைக்கு இருமுறை, இருமுறைக்குப் பலமுறை, அனுபவித்து விடுங்களேன்!
என்னுடைய ஒளிரும் அழகு மேனி, வளை மற்றும் ஆபரணங்கள், சதா சர்வ காலமும் உன்னை எண்ணும் சிந்தை, தூக்கம் எல்லாம் போய் விட்டதே! அதுவும் உன் எளிமையான ஒரு பார்வையால், சின்னூண்டு சிரிப்பால், என் ஈடும் நிலையும் மொத்தமாக மாறி விட்டதே!
அய்யோ!!
என் மனம் காதல் வெப்பத்தால் வாட, அவனோ குளிரக் குளிர அருவி பாயும் வேங்கடத்தில் நின்று கொண்டு இருக்கிறான்.
ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீரோ! போய் அவனிடம் சொல்லுங்கள்,
கோவிந்தன் குணம் பாடி, என் ஆவியை, உயிரை அவனுக்காக இன்னும் பிடித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன்!
அப்பப்பா, இதற்கு மேல் நம்மால் சொல்ல முடியாது.
ஓ வேங்கடவா, எங்கள் ஆண்டாள், இங்கே உனக்காக உருகுகிறாள்! அவளைத் தவிக்க விடாதே! சொல்லிட்டேன், தவிக்க விடாதே!! அப்பறம் எனக்குக் கோபம் வந்துரும், ஆமாம்!
கருட சேவை! இன்னும் கொஞ்ச நேரத்தில்!
கருடாழ்வார் க்ரீன் ரூமில் இன்னும் என்ன பண்றாரு?
அப்பா கருடா, பெருமாளே ரெடி ஆயிட்டாரு! நீ இன்னுமா ரெடியாவல?
வாப்பா போதும், நல்லா அழகாத் தான் இருக்கே! எல்லாரும் காத்துக்கினு இருக்காங்கப்பா!
வழக்கம் போல அருமை :-)
ReplyDeleteஅந்த மாலையையும் கிளியையும்(கிளிகளையும்) ஆண்டாளுக்கு சாற்றி பின் வீதி உலா எடுத்து வந்த பின் திருமலை புரப்படும்...நாங்களெல்லாம் சின்ன வயதில் ஊர் எல்லை வரை போவோம் :))
ReplyDeleteநான்காவது நாளை மிஸ் பண்ணிட்டேன் ! நன்றாக எழுதியுள்ளீர்கள், என்ன 3வது பத்தியில் கொஞ்சம் comparitive study செய்துள்ளீர்கள் போல உள்ளது. ஒரு திருமங்கை மன்னனின் பாசுரம்:
ReplyDeleteதாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா!
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே.
இதற்கு பொருள் விளக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்:)
எ.அ.பாலா
ஹைய்யோ...........
ReplyDeleteமோஹினியின் அழகே அழகு. இல்லேன்னா மோகினி மாதிரி வந்தான்னு
சொல்வாங்களா?
அடடா........... சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை. மனசே நிறைஞ்சு கிடக்கு.
நம் சுவாமி மோகினி உருவத்தில் எப்போதும் போல் அழகாய் இருக்கிறான். ஆனால் ஏதோ ஒன்று காணவில்லையே. ஓ. என்ன தான் பெண்ணுருவம் எடுத்தாலும் கருணைக் கடல் அன்னை ஆண்டாளின் கருணைக் கடைக்கண் பார்வை போல் வருமா? அது அன்னையிடம் மட்டுமே உண்டு. ஐயனிடம்? நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். :-)
ReplyDelete//வெட்டிப்பயல் said...
ReplyDeleteவழக்கம் போல அருமை :-)//
நன்றி பாலாஜி!
//அன்புடன்...ச.சங்கர் said...
ReplyDeleteஅந்த மாலையையும் கிளியையும்(கிளிகளையும்) ஆண்டாளுக்கு சாற்றி பின் வீதி உலா எடுத்து வந்த பின் திருமலை புரப்படும்...நாங்களெல்லாம் சின்ன வயதில் ஊர் எல்லை வரை போவோம் :)) //
வாங்க சங்கர்! வில்லிபுத்தூர் காரரா நீங்கள்? 'கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்' அல்லவா?
சின்ன வயதில் ஊர் எல்லை வரை போய் பெருமாளுக்கு மாலை அனுப்பித்தீரா! மிகப் பெரும் பேறு!
//கிளியையும்(கிளிகளையும்)//
2 கிளிகள் அல்லவா? நான் பொதுவாகப் பச்சைக்கிளி என்று சொல்லி விட்டேனே! மன்னியுங்கள்!
// enRenRum-anbudan.BALA said
ReplyDeleteஎன்ன 3வது பத்தியில் கொஞ்சம் comparitive study செய்துள்ளீர்கள் போல உள்ளது//
வாங்க பாலா, முரளீதர் சுவாமிகள் ஒரு சொற்பொழிவில் பாற்கடல் கடைதலையும், மேலாண்மையையும் தொட்டுச் செல்வார். அதனால் சொன்னேன். இன்னும் சிறப்பாகச் சொல்லியிருக்க வேண்டுமோ?
//நுன்னைக் காண்பதோர் ஆசையினால்//
அருமையான திருமங்கை பாசுரம். காண்பதற்கு அவ்வளவு ஆசையாம்! என்ன பாசம் பாருங்கள்!
//பொருள் விளக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்//
எளிமையும், தானே புரிந்து கொள்ளும் தன்மையும் தானே ஆழ்வார் கவிதையின் அணிகலன்கள்!
விளக்கம் எல்லாம் அதை இன்னும் அசை போட்டு உண்ண வேண்டும் என்ற நம்முடைய பேராசை தானே? :-)
//துளசி கோபால் said...
ReplyDeleteஹைய்யோ...........மோஹினியின் அழகே அழகு.//
வாங்க டீச்சர்!
"ஹைய்யோ" என்று தான் கம்பனும் சொல்கிறான். வர்ணிக்க வார்த்தை வராத போது, ஹைய்யோ என்று சொல்லி விடுவது அவன் வாடிக்கை.
இப்ப உங்களின் வாடிக்கையும் ஆகி விட்டது! :-)))
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஓ. என்ன தான் பெண்ணுருவம் எடுத்தாலும் கருணைக் கடல் அன்னை ஆண்டாளின் கருணைக் கடைக்கண் பார்வை போல் வருமா? ஐயனிடம்? நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.//
கேட்டு விட்டேன் குமரன்! அவன் சொல்லி விட்டான்....மேக்கப் கிட் மட்டும் தானே அனுப்பி வைத்தாள் ஆண்டாள்! அதனால் தான் கருணைக் கண்கள், ஆண்டாளை விட சற்றே இறக்கமாகத் தெரிகிறது. அடுத்த முறை அவளை, அவளின் கண்ணில் இருந்து மை அனுப்பி வைக்கச் சொன்னான்; அதை அப்படியே தீட்டிக் கொள்கிறானாம். அப்போது உங்களை மீண்டும் வந்து பாக்கவும் சொன்னான் :-))))