Wednesday, September 27, 2006

திருமலை விழா 3 - சிம்மம் / முத்துப்பந்தல் வாகனம்

மூன்றாம் நாள்

காலை - சிம்ம வாகனம்

"சி்ங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..." என்று, திருமலைச் சிகரத்தில் சிங்க நடையாக சுவாமியைத் தூக்கித் தூக்கி, சுமந்து வரும் அழகே அழகு!

அவதாரங்களிலேயே மிகவும் குறைந்த நேரமே நீடித்தது ஒன்றே ஒன்று தான். என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?
கரெக்ட், ஆளரி அவதாரம்.
அட அப்பிடின்னா என்னாங்க? நாங்க கேள்விப்பட்டதே இல்லியே!
ஆள்+அரி (ஆள்=நரன், அரி=சிம்மம்)
அதே தாங்க, நரசிம்ம அவதாரம். அழகுத் தமிழில் ஆளரி என்று ஆழ்வார்களும் புழங்குகிறார்கள்.

வேதங்கள், பிரபந்தங்கள், வழிபாட்டு முறைகள் என்று ஒண்ணுமே அறியாத பச்சிளங் குழந்தை. அது பிடித்துக் கொண்டதெல்லாம் "நாராயணா என்னும் நாமம்". ஆனால் நம்பிக்கையோடு பிடித்துக் கொண்டது. கொஞ்சம் கூடச் சந்தேகமே இல்லாத நம்பிக்கை. ஆய்ச்சி மகனை ஆராய்ச்சி செய்ததா? இல்லை! அரட்டை அரங்கம் நடத்தியதா? இல்லவே இல்லை!

பெருமாளுக்கே பயம் வந்து விட்டது. குழந்தை எந்த இடத்தைக் காட்டுமோ? இரணியன் எதைப் பிளக்கப் போகிறானோ? முனிவர்கள் மூவாயிரம் ஆண்டு தவம் செய்தாலும் பூமிக்கு வராதவன். இப்போதோ ஒரு குழந்தை சொன்ன சொல்லுக்காக, பூமியில் ஒரு இண்டு இடுக்கு விடாமல், நல்லன, தீயன என்று எதுவும் பாராது எல்லாவற்றிலும் நிறைந்து விட்டான்.

நல்லன, தீயன எதுவும் பாராது நிறைந்தவனே! இன்று எங்கள் கபட உள்ளங்களிலும் நிறைவாயோ?
"அதற்கு என்ன, ஆசைப்படுங்கள்; நிறைந்து விடுகிறேன்!
ஏற்கனவே அங்கே தானே இருக்கிறேன். என்ன, இனிமேல் நிறைவாக நிறைந்து விடுகிறேன்", என்று ஆளரிக் கோலத்தில், யோக நரசிம்மராக உலா வருகிறான்.
ஒரு சிம்மம் இன்னொரு சிம்மம் மேல் ஏறி உலா வருகிறது!
"நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வானுதலே!"





மாலை - முத்துப் பந்தல் வாகனம் (முத்யபு பந்த்ரி வாகனம்-தெலுங்கில்)

தூய்மை அற்றது எச்சில்; ஆனால் அதில் இருந்து உருவான நத்தையின் முத்து தான் எவ்வளவு வெண்மை, எவ்வளவு தூய்மை! முத்து கண்டு மயங்காத பெண்களும் உண்டா? என்ன தான் தங்கத்துக்கு மவுசு என்றாலும், "ஏங்க, என் இரட்டைப் பட்டை தங்கச் செயின் ரொம்ப நாளா சும்மாவே இருக்குது. கொஞ்சம் முத்து வைச்சு கோத்துக்கிறேனே" என்று எங்கேயோ யாரோ(?) நம்ம கிட்ட கேட்டா மாதிரி இருக்குதுங்களா? நல்லா ஞாபகப் படுத்தி சொல்லுங்க பாப்போம் :-)

முத்தங்கி சேவை என்பது வேறொரு தலத்தில் மிகவும் பிரசித்தம் என நினைக்கிறேன்! எந்தத் தலம்?

முத்து குளிர்ச்சியானது; நவ கோள்களில் (கிரகங்களில்) முத்து சந்திரனுக்கு உரியது. சந்திரனின் பரிகாரத் தலம் திருப்பதி என்று சோதிட நூல்கள் கூறும். அந்த முத்துக்களால் முழுதும் அலங்கரித்த விதானத்தில், முத்து நகைகளேயே பெரிதும் பூண்டு, முத்துக்கொண்டை சூடிய தேவியருடன் உலா வருகிறான் எம்பெருமான்.






இன்று,
பேயாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
நூற்பால் மனம்வைக்க நொய்வு இதாம், நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து.

(மாற்பால்=மால்+பால்=மயக்கத்தின் பாற்பட்டு; மனம்சுழிப்ப=மனம் சுழி(whirlpool) போல் சுழல; மங்கையர்தோள் கைவிட்டு; நூற்பால்=நூலின்(வேதம், மறை, இறை நூல்) பால் மனம்வைக்க; நொய்விதாம்=நொய்வு, மன உளைச்சல் இல்லையே!)

மங்கையர் தோள்களைச் சேர்ந்து, அது ஒன்று தான் சுகம், வேறில்லை என்று மயக்கத்தால் மதி மயங்குகிறது மனது! பின்னர் கையைச் சுட்டுக் கொண்டவுடன், அது இல்லை என்று ஆனவுடன், மனம் சுழி போல் சுற்றுகிறது! ஐயோ ஏமாந்து விட்டோமே என்று வருந்தி அதை விட்டு வெளியே வந்து, இறைவன் நூல்களின் பால் மனம் லயிக்க, இனி நொய்வு இல்லை!!

இந்த வேங்கடத்தான் இருக்கிறானே, இவன் நான்கு வேதங்களுக்கும் பொதுவானவன். (நீ சாம வேதம்; நான் யஜூர் வேதம் என்ற பிரிவு எல்லாம் இவனுக்கு இல்லை). அவன் திருவடிகளை விண்ணுலக மக்கள் அனைவரும், தங்கள் முடியும், மகுடமும் நிலத்தில் பட வீழ்ந்து வணங்குகிறார்கள். விழிக்குத் துணை அந்தத் திரு மென் மலர்ப் பாதங்களை நாமும் பணிவோம். நம் நொய்வு நீங்கும்!!

16 comments:

  1. நல்ல தமிழ் பாசுரங்களுடனும் நவீன பாடல் கிறக்கங்களுடனும் சிறப்பாக செல்கிறது திருப்பதி பிரம்மோற்சவம். நன்றி.

    ReplyDelete
  2. ஆஹா அருமை அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  3. கண்ணபிரான்,
    மிக நன்று. திருவேங்கடமுடையானை மனங்குளிர தரிசிக்க வைத்தீர், நண்பரே !

    நம்மாழ்வாரின் திருவேங்கடன் புகழ் சொல்லும் ஒரு பாசுரம்:

    ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி
    வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்
    தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
    எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.

    பதவுரை:
    உலகில் வாழ்கின்ற காலம் முழுதும் எம்பெருமான் அவனருகில் இருந்து, குறைவிலாத தொண்டு நாம் செய்ய வேண்டும்! இனிய ஒலியுடன் விழும் அருவிகள் நிறைந்த திருவேங்கடமலையில் வீற்றிருக்கும், அழகிய தீபத்தை ஒத்த எம்பெருமானே என் தந்தையாவான்!

    எ.அ.பாலா

    ReplyDelete
  4. check this out
    I happened to read this immediately after reading your blog

    http://jebam.wordpress.com/2006/09/27/punnahai/

    ReplyDelete
  5. அருமையான படங்களுடன் அருமையான பதிவு.

    ரொம்பப் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  6. //மணியன் said...
    நல்ல தமிழ் பாசுரங்களுடனும் நவீன பாடல் கிறக்கங்களுடனும் சிறப்பாக செல்கிறது திருப்பதி பிரம்மோற்சவம்//

    மிக்க நன்றி மணியன். நாளை மறுநாள் கருட சேவை. கண்டிப்பா வந்துடுங்க!

    ReplyDelete
  7. //நவீன பாடல் கிறக்கங்களுடனும்//

    என்ன சொல்றீங்க. கிறக்கமான பாடலா? அய்யோ நான் ஒன்னும் "அந்த" மாதிரி பாட்டெல்லாம் போடலீங்களே!

    ஓ நீங்க "சி்ங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு" பத்தி சொல்றீங்களா? அது தலைவர் பாட்டுங்கோ. அதான் தலைவருக்கே தலைவரான நம்ம பாலாஜியும் அந்தப் பாட்டைக் கேட்கட்டும்ன்னு போட்டுட்டேன்!!

    ReplyDelete
  8. //சிவமுருகன் said...
    ஆஹா அருமை அருமை. தொடரட்டும் உங்கள் பணி//

    வாங்க சிவமுருகன்; நல்வரவு; சென்னை எப்படி இருக்கு? மதுரையில் அன்னை மீனாள் அப்பன் சொக்கன் நலமா?

    அவசியம், ஒன்பது நாளும் வந்து விழாவில கலந்துக்குங்க!

    ReplyDelete
  9. // enRenRum-anbudan.BALA said...
    கண்ணபிரான்,
    மிக நன்று. திருவேங்கடமுடையானை மனங்குளிர தரிசிக்க வைத்தீர், நண்பரே !//

    வாங்க பாலா. அன்பில் தலத்தில் இருந்து, இப்போ திருமலை வந்தீர்களா சேவிப்பதற்கு. வாங்க வாங்க!

    "ஒழிவில் காலமெல்லாம்" பாசுரமும், பொருளும் அழகாகச் சொல்லி இருக்கீங்க! "எந்தை தந்தை தந்தைக்கே" என்பது எவ்வளவு சிறப்பா இருக்கு பாத்தீங்களா?

    9ஆம் நாள், நம்மாழ்வாரிடம் வரும் போது, இந்தப் பாசுரத்தையும், குமரன் ஒரு பாசுரம் சொல்லி உள்ளார். அதையும் சொல்லலாம் என்று மனசில் நினைச்சிருந்தேன். நீங்க எப்படியோ என் மனதை scan பண்ணிட்டீங்க. பொருளும் சொல்லிட்டீங்க! என் வேலை சற்று சுளுவாகி விட்டது! கண்டிப்பாக இதைப் பதித்து விடுகிறேன். நன்றி பாலா!

    ReplyDelete
  10. //Anonymous said...
    check this out
    I happened to read this immediately after reading your blog
    http://jebam.wordpress.com/2006/09/27/punnahai/ //

    மிக்க நன்றி அனானி அவர்களே,
    பதிவை முழுமையாகப் படித்துப் பின்னூட்டமும் இட்டேன்.
    இறைவனின் சிரிப்பைப் பார்க்கப் பழகிக் கொண்டால், மனிதரின் கண்ணீர் பார்த்தவுடன், அதைத் துடைக்கத் தான் தோன்றும். ஏன் என்றால் அப்படித் துடைத்து முடித்தவுடன், இறைவன் அங்கே சிரிக்க ஆரம்பிக்கிறான். காதல் மனத்துக்கு, அது தானே வேண்டும்!
    மனதைத் தொட்ட பதிவு!

    ReplyDelete
  11. //துளசி கோபால் said...
    அருமையான படங்களுடன் அருமையான பதிவு.
    ரொம்பப் பிடிச்சிருக்கு//

    வாங்க டீச்சர். படங்கள் பல என் பழைய காலத் தொகுப்பு. சில APweekly. அடுத்த பதிவுல மறுந்துடாம pic courtesy போடணும்!

    //ஏங்க, என் இரட்டைப் பட்டை தங்கச் செயின் ரொம்ப நாளா சும்மாவே இருக்குது. கொஞ்சம் முத்து வைச்சு கோத்துக்கிறேனே"//
    இது பற்றி சொல்லப் போறீங்கன்னு் நினைச்சேன். நீங்க பாக்கல போலிருக்கு! நன்றி, கணவன்மார்கள் எல்லாரும் தப்பினோம்! :-)

    ReplyDelete
  12. ஹாஹாஹாஹா....

    ரெட்டைப் பட்டை.....

    //என் இரட்டைப் பட்டை தங்கச் செயின் ரொம்ப நாளா சும்மாவே இருக்குது.
    கொஞ்சம் முத்து வைச்சு கோத்துக்கிறேனே"//

    நல்லாவே இருக்காது இப்படிப் பண்ணிண்டா. அதான் ச்சும்மா இருந்துட்டேன்
    சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு.

    சங்கிலிக்கு ஒரு முகப்பு ( நல்லா கல் வச்சது. பெருமாள்/ தாயார் மாதிரியெல்லாம்
    கிடைக்குது. லலிதாவுலெ போய்ப் பாருங்க. நானும் ஒண்ணு வாங்கினென்) தான் நல்லா இருக்கும்.

    அந்தக் கொஞ்ச(சும்) முத்துவைத் தனியா ஒரு நெக்லேஸ்ஸா பண்ணிக்கலாம். கொஞ்சமே கொஞ்சம்
    பவளம் சேர்த்தாப் போதும். அதான் பவளச் செவ்வாய், ப(வள)விழச் செங்கண்ன்னு வருதே அதுக்கு மேட்சா
    இருக்கும்.
    கணவன்மாரெல்லாம் தப்பியாச்சா?
    அப்ப அந்த 'செங்கணவன் பாற்திசை' பாட்டு?(-:

    ReplyDelete
  13. சிம்ம வாகனத்தில் வரும் போது ஆளரிக் கோலத்தில் வருகிறாரா? வெகு நாள் அது புரியாமல் ஏன் இரண்டு கைகளையும் இப்படி முன்னால் வைத்துக் கொண்டு வருகிறார் என்று சிந்தித்ததுண்டு. இப்போது புரிகிறது அது யோக நரசிம்மர் கோலம் என்று. :-)

    ReplyDelete
  14. மாரிமலை முழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
    சீரியசிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
    வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப்புறப்பட்டுப்
    போதருமா போலே நீ, பூவைப் பூ வண்ணா!உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
    சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம்
    ஆராய்ந்து அருள் ஏலோரெம்பாவாய்


    இப்படித்தானெ வந்தார் நரசிம்ஹ மூர்த்தி...காணக்கண் கோடி வேண்டும் :)

    நல்லா எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  15. // குமரன் (Kumaran) said...
    சிம்ம வாகனத்தில் வரும் போது ஆளரிக் கோலத்தில் வருகிறாரா? வெகு நாள் அது புரியாமல் ஏன் இரண்டு கைகளையும் இப்படி முன்னால் வைத்துக் கொண்டு வருகிறார் என்று சிந்தித்ததுண்டு//

    ஆம் குமரன்! ஆளரிக் கோலம் தான்.
    கால்களைச் சுற்றி யோக பட்டமும் உண்டு ஐயப்பனைப் போலவே!!

    ReplyDelete
  16. //அன்புடன்...ச.சங்கர் said...
    மாரிமலை முழிஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
    சீரியசிங்கம் //

    சங்கர், வாங்க, வாங்க!
    நல்லாவே எடுத்துக் கொடுத்தீங்க!
    சிங்க நடை பற்றி ஆண்டாளின் 23 ஆம் பாசுரம், அருமையோ அருமை!
    மிக்க நன்றி!!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP