Tuesday, September 26, 2006

திருமலை விழா 2 - சின்ன சேஷன் / அன்ன வாகனம்

இரண்டாம் நாள்

காலை - சின்ன சேஷ வாகனம் (சிறிய நாக வாகனம்)

வீட்டுல இரண்டு குழந்தை இருப்பவர்களுக்கு இது நல்லாவே தெரியும். அப்பா சின்னக்குட்டிய உப்பு மூட்டை தூக்கினால், பெரியக்குட்டி முரண்டு பண்ணும், இன்னமும் தன்னைத் தான் தூக்கணும் என்று. அது போல் தாங்க இந்த சேஷன்! நேத்து இரவும் அவரே வாகனமா (வக்கனமா :-)) வருவாராம். இன்னிக்கு காலையிலும் அவரே தான் வரணுமாம். சரி சரி, பெருமாளுக்கும் வேற வழியில்லை. துயில் கொள்ள இடம் வேணுமே. ஒத்துக்கிட்டாரு! :-)

பெரிய சேஷன்; தங்கத்தில் வாகனம். தேவியருடன் அப்பன் உலா வந்தார்.
சின்ன சேஷன்; வெள்ளியில் வாகனம். இன்று அப்பன் தனியாக உலா!
குடை அழகு, நடை அழகு என்பார்கள்! இன்று கண் கூடாய் காணலாம்! இரு பெரும் குடைகள் கவிக்கப்படும்; தோளுக்கு இனிமையான இறைவனை, ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று அழைக்கப்படும் அடியவர்கள், தோள்களில் தூக்கி, இசைக்கு ஏற்றவாறு ஒய்யாரமாக ஆடி ஆடி அழைத்து வருவார்கள். அதுவும் பாம்புப் பாட்டுக்கு ஆடும் ஆட்டம் கட்டாயம் பார்க்க வேண்டும். கொள்ளை நடை அழகு!!

இப்போதெல்லாம் நாதஸ்வரம் மட்டும் அன்றி, பல இசைக் கருவிகள் வாசிக்கப்படுகின்றன ஊர்வலத்தில். இந்தியாவின் பல பகுதி மக்கள், சேவை மன்றங்களில் சேர்ந்து, அதன் மூலமாக இறைவனின் முன்னும் பின்னும் பல கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டு வருகிறார்கள். வழ்க்கம் போல தமிழ்க் குழு முன்னே செல்ல, எம்பிரான் தமிழைத் தொடர்ந்து ஓட, இறைவனை விட்டுவிடக் கூடாதே என்று பின்னால் வரும் வேதங்கள், வேகங்களைக் கூட்ட....ஒரே ஆட்டம் தான் போங்கள்!

மாலை - அன்ன வாகனம் (ஹம்ச வாகனம்)

சின்ன வயசுல நம்ம வலைப்பதிவு ஆண்மக்களில் யாருக்கேனும், பெண் வேஷம் போட்டு நிழற்படம் எடுத்திருக்காங்களா? போட்டோவை எனக்குத் தனியாக அனுப்பி வைங்க. யாருக்கும் காட்ட மாட்டேன் :-) என் மேலே நம்பிக்கை இல்லீனா, துளசி டீச்சருக்கு அனுப்பி வைச்சாலும் ஓகே தான்! யார் முன்ன வராங்க-ன்னு பார்ப்போம்!!

அதேபோலத் தான் நம்ம மலையப்பன், இன்று இரவு பெண் வடிவில் வருகிறார். இந்தக் குறும்பு எல்லாம் இவர விட்டா செய்யறத்துக்கு வேறே ஆள் இல்லை! கல்விக்கு அரசி, கணக்கறி தேவி, வீணையின் வாணியாக, சரஸ்வதி ரூபத்தில் வருகிறான் எம்பெருமான்! கையில் வீணை, ஜெபமாலை, வெண் பட்டு உடுத்திக் கொண்டை அலங்காரம்.

எதன் மேல் வருகிறான்? அன்னத்தின் மேல். 'அன்ன நடை, சின்ன இடை' என்பார்களே. அதே அதே!! "நீர் ஒழியப் பால் உண் குருகின் தெரிந்து". நீரை விலக்கி பால் மட்டும் உண்ணும் புராதனப் பறவை அன்னம். வித்தைக்கு இது மிகவும் வேண்டிய ஒன்று! படிப்பில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று கட்டாயம் தெரிய வேண்டும் (தேர்வில் மல்டிபில் சாய்ஸ் பத்தி நான் சொல்ல வரலீங்க :-)
அதனால் தான் வித்தைக்கு நாயகன் அன்ன நடை போட்டு வருகிறான். அழகோ அழகு!





(ஒரு சிறு குறிப்பு: கலைகளின் அரசியான சரஸ்வதி ரூபமாக இருக்கும் பெருமாள், கலை தழைக்க வந்த நாட்டியப் பேரொளி - பத்மினி, ஆன்மா அமைதி அடைய அருளட்டும்)



இன்று,
பூதத்தாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

இந்த ஆழ்வார் இயற்கைப் பிரியர். Naturist! சமயம் கிடைக்கும் போது எல்லாம் வர்ணனைகளில் புகுந்து விளையாடுவார். நீங்களே பாருங்களேன்.

பெருகு மதவேழம் மாப் பிடிக்கி முன்னின்று,
இருகண் இளமூங்கில் வாங்கி, - அருகிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான்கலந்த வண்ணன் வரை.
(வேழம்=ஆண் யானை; பிடி=பெண் யானை; வரை=மலை)

மத நீர் கண்ணில் பெருகும் ஆண் யானை ஒன்று, தன் காதல் மடப்பிடியான பெண் யானைக்கு, தானே முன் நின்று,
இரு இரு கண்களாய் உள்ள நல்ல இளசான மூங்கிலாப் பார்த்து தேர்ந்தெடுத்து, பக்கத்தில் இருந்த
தேன் கூட்டில் முக்கி (dip செய்து) , "இதோ இனிப்பான மூங்கில் (honey dip)! சாப்பிடு" என்று நீட்டும் மலைகளை உடைய திருவேங்கடத்தைப் பாருங்கள்..
அந்த மலை தான், நம் வானத்து வண்ணனின் (நீல மேக சியாமளன்) மலை. அம்மலையைத் தொழுவோம்!

(சில படங்கள் உதவி: tirumala.org)

17 comments:

  1. திருப்பதிக்கு போய் பார்த்த திருப்தி. நல்லா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. arumaiyAna oru pathivukku nanRi, kannabiran !

    ReplyDelete
  3. arumaiyAna oru pathivukku nanRi, kannabiran !

    ReplyDelete
  4. நவநீத கிருஷ்ணன் அருமையோ அருமை.

    பிடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப.

    ReplyDelete
  5. //திருப்பதிக்கு போய் பார்த்த திருப்தி//

    அனானி. மிக்க மகிழ்ச்சி உங்கள் திருப்தி கண்டு!

    ReplyDelete
  6. //enRenRum-anbudan.BALA said...
    arumaiyAna oru pathivukku nanRi,//
    என்ன பாலா, திடீர் என்று தங்க்லீஷ்க்கு மாறி விட்டீர்கள்? :-)
    பதிவை விரும்பிப் படிக்கும் உங்களுக்கும் என் நன்றி.

    ReplyDelete
  7. //மத நீர் கண்ணில் பெருகும் ஆண் யானை ஒன்று, தன் காதல் மடப்பிடியான பெண் யானைக்கு, தானே முன் நின்று,
    இரு இரு கண்களாய் உள்ள நல்ல இளசான மூங்கிலாப் பார்த்து தேர்ந்தெடுத்து, பக்கத்தில் இருந்த
    தேன் கூட்டில் முக்கி (dip செய்து) , "இதோ இனிப்பான மூங்கில் (honey dip)! சாப்பிடு" என்று நீட்டும் மலைகளை உடைய திருவேங்கடத்தைப் பாருங்கள்..
    அந்த மலை தான், நம் வானத்து வண்ணனின் (நீல மேக சியாமளன்) மலை. அம்மலையைத் தொழுவோம்!//

    இவ்வளவு அழகான தமிழை கேட்டால் ஆண்டவனையா தொழ தோணும்?இப்படி அழகிய தமிழ் பாடிய கவியை அல்லவா தொழ தோணும்?தமிழை ரசிப்பதா,அதில் உள்ள உவமையை ரசிப்பதா அல்லது அதில் சொல்லப்படும் பொருளை ரசிப்பதா என ஒன்றும் புரியவில்லையே

    தேனில் விழுந்த பலாச்சுளை போல் தமிழில் விழுந்த நாராயணன் நாமம் தேனுக்கும் சுவையூட்டி தமிழால் தானும் சுவையடைந்தது.

    வேதம் தமிழ் செய்த சடகோபனின் மொழி அல்லவா?அதனால் தான் தேன் சுவை

    ReplyDelete
  8. //நவநீத கிருஷ்ணன் அருமையோ அருமை
    பிடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப.//

    நண்றி டீச்சர்! கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பு அல்லவா அந்த நவநீத (வெண்ணெய்) கிருஷ்ணன் !

    ReplyDelete
  9. //தமிழை ரசிப்பதா,அதில் உள்ள உவமையை ரசிப்பதா அல்லது அதில் சொல்லப்படும் பொருளை ரசிப்பதா என ஒன்றும் புரியவில்லையே//

    வாங்க செல்வன்; சில சமயம் நம்மில் பலர் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர். இப்படித் தமிழால் நம்மள மயக்கி கட்டிப்போடும் கவிஞர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்-ன்னு நீங்களே சொல்லுங்கள்! :-)

    //தேனில் விழுந்த பலாச்சுளை போல் தமிழில் விழுந்த நாராயணன் நாமம்//

    ஆகா நீங்களும் அந்தக் கவிஞர் குழாம் தானா? அப்படின்னா உங்களுக்கும் சேத்து தான் தண்டனை கொடுக்கோணும். :-)-:)

    ReplyDelete
  10. ரவிசங்கர். சின்ன சேஷ வாகனத்திற்கும் பெரிய சேஷ வாகனத்திற்கும் இன்னொரு வேறுபாடும் இருக்கிறதே. பெரிய சேஷருக்கு ஏழு தலைகள். சின்னவருக்கு ஐந்து தலைகள். :-) அது மட்டுமில்லை. அப்பன் குடும்பத்தோடு பெரியவர் மேல் ஏறி ‘உக்காந்துக்கிட்டு’ வலம் வரலாம். சின்னவர் மேல் என்றால் தனியாகத் தான் வரவேன்டும். :-)

    இறைவனை விட்டுவிடக் கூடாதே என்று பின்னால் வரும் வேதங்கள். :-)

    அன்னத்தில் வருபவன் சரஸ்வதி உருவத்தில் வரவில்லை ரவி. அது மோஹினி அலங்காரம். மோஹினி அலங்காரத்தில் தான் கையில் வீணையுடனும் வெண்பட்டுடுத்தியும் வருவான். கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் கையில் ஜபமாலை இல்லை என்பது தெரியும். :-)

    வேதம் தமிழ் செய்த மாறன் என்று தானே சொல்வார்கள். நம் செல்வன் பூதத்தையும் அப்படிச் சொல்லிவிட்டாரே. இருக்கட்டும். பூதமும் வேதத்தைத் தமிழ் செய்தவர் தானே. :-) நானும் செல்வன் சொன்ன உவமையை மிகவும் இரசித்தேன்.

    ReplyDelete
  11. //ரவிசங்கர். பெரிய சேஷருக்கு ஏழு தலைகள். சின்னவருக்கு ஐந்து தலைகள். :-) அது மட்டுமில்லை. அப்பன் குடும்பத்தோடு பெரியவர் மேல் ஏறி ‘உக்காந்துக்கிட்டு’ வலம் வரலாம். சின்னவர் மேல் என்றால் தனியாகத் தான் வரவேன்டும். :-)//

    குமரன் வாங்க! உண்மை தான், சின்ன சேஷன் மேல் தான் அவனுக்குக் கொள்ளைப் ப்ரியமாம்.
    தனியா வருகிறான் இல்லையா? ஸ்பீட் லிமிட் பற்றி எல்லாம் கவலை இல்லாது, மனைவியர் என்ன சொல்வரோ வேகமாப் போனால் என்று எல்லாம் கவலைப் படாது.... ஐயா அவர் இஷ்டத்திற்கு வரமுடியும் அல்லவா? :-))))

    //வேதம் தமிழ் செய்த மாறன் என்று தானே சொல்வார்கள். நம் செல்வன் பூதத்தையும் அப்படிச் சொல்லிவிட்டாரே. //
    வேதம் தமிழ் செய்த 'சடகோபனின்' மொழி அல்லவா? என்று தான் சொல்லியுள்ளார், குமரன்!
    ஆனாலும் உங்கள் விளக்கமும் இனிதே!

    ReplyDelete
  12. //அன்னத்தில் வருபவன் சரஸ்வதி உருவத்தில் வரவில்லை ரவி. அது மோஹினி அலங்காரம். மோஹினி அலங்காரத்தில் தான் கையில் வீணையுடனும் வெண்பட்டுடுத்தியும் வருவான். கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் கையில் ஜபமாலை இல்லை என்பது தெரியும். :-)//

    மோகினிக்கு என்று 5ஆம் நாள் உள்ளது குமரன்! இன்று அலங்காரம் சரஸ்வதி தான் எனறே எண்ணுகிறேன்.

    கையில் வீணையுடனும் வெண்பட்டு உடுத்தியும் வருவது இன்னும் சிறப்பு!
    கையில் ஜபமாலை முன்பெல்லாம் பார்ப்பேன். பவழ மாலை ஒன்றையே ஜபமாலை போல் வைத்து இருப்பார்கள்.
    இந்த ஃபோட்டோவில் இல்லை!

    நீங்களே கேட்டுவிட்ட படியால், அடுத்த முறை வீட்டுக்குப் பேசும் போது, பெரியவர்களிடமும் அறிந்து மீண்டும் உரைக்கிறேன்!

    ReplyDelete
  13. // பெருகு மதவேழம் மாப் பிடிக்கி முன்னின்று,
    இருகண் இளமூங்கில் வாங்கி, - அருகிருந்த
    தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
    வான்கலந்த வண்ணன் வரை //

    மிக அருமையான தீந்தமிழ்ப் பா. மிகவும் ரசித்தேன்.

    // மத நீர் கண்ணில் பெருகும் ஆண் யானை ஒன்று //

    பெருகு மதம்...கண்களில் இருக்காது.. :-)

    இந்தச் செய்யுளில் இந்தக் காலத்தில் finger chipsஐ sauceல் முக்கிச் சாப்பிடுவது போல...இளமூங்கில் தண்டைத் தேனில் தோய்த்துத் தின்னக் கொடுக்கிறதாம் காதலும் காமமும் கூடிப் பிடியைப் பிடித்துக் களிக்க விரும்பிய களிறு. என்ன அருமையான் செய்யுள்.

    ReplyDelete
  14. // G.Ragavan said...
    // மத நீர் கண்ணில் பெருகும் ஆண் யானை ஒன்று //
    பெருகு மதம்...கண்களில் இருக்காது.. :-)//

    வாங்க ஜிரா. அப்போ கண்களில் நீர் சில சமயம் சுரந்து கொண்டே இருக்குமே, அது என்ன ஜிரா?

    //இந்தச் செய்யுளில் இந்தக் காலத்தில் finger chipsஐ sauceல் முக்கிச் சாப்பிடுவது போல...இளமூங்கில் தண்டைத் தேனில் தோய்த்துத் தின்னக் கொடுக்கிறதாம் காதலும் காமமும் கூடிப் பிடியைப் பிடித்துக் களிக்க விரும்பிய களிறு//

    எல்லா யானைகளும் சேர்ந்து கொண்டு, மக்கள்ஸ் அதுகள படுத்தறத மாத்த, finger chips கடை போடாம இருந்தா சரி! :-)))

    //பிடியைப் பிடித்து//
    பிடியை ஒரு பிடி பிடிச்சுட்டீங்க போங்க! :-))

    ReplyDelete
  15. படமெல்லாம் பிரமாதம்.
    மதநீர் கண்ணுக்கும் காதுக்கும் நடுவில் ஒரு இடத்தில் ஒழுகும் என்று கேள்வி.

    அது ஒண்ணுதான் இத்தனை வலிமையை வைத்துக் கொண்டு
    சாதுவாக நடக்கும் அப்பிராணி,.

    ReplyDelete
  16. // வல்லிசிம்ஹன் said...
    படமெல்லாம் பிரமாதம்.
    மதநீர் கண்ணுக்கும் காதுக்கும் நடுவில் ஒரு இடத்தில் ஒழுகும் என்று கேள்வி//

    வாங்க வல்லி; தகவலுக்கு நன்றி.

    //அது ஒண்ணுதான் இத்தனை வலிமையை வைத்துக் கொண்டு
    சாதுவாக நடக்கும் அப்பிராணி//

    முற்றிலும் உண்மை; ஆனால் சாது மிரண்டால்? :-)))

    ReplyDelete
  17. ஒரு ஆண் பெண் வேடம் போட்டாவா??
    அனுப்புகிறேன்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP