Monday, September 25, 2006

திருமலை விழா 1 - பெரிய சேஷ வாகனம்.

வாங்க வாங்க திருமலையான் பிரம்மோற்சவத்துக்கு! கூட்டம் தான். இருந்தாலும் பரவாயில்லை. நம்ம குழந்தை ஸ்கூல் அட்மிஷனுக்கு கூட்டத்துல போய் நாம நிக்கலையா? அது மாதிரி நினைச்சிப்போமே? ஏதோ பேப்பர், டிவில்ல எல்லாம் விழா அது இதுன்னு போட்டாலும், சுருக்கமா இந்த விழா ஏன், என்ன தான் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கிலாம் வாங்க!

வேங்கடத்தான் பூவுலகில் அவதரித்த நாள் புரட்டாசித் திருவோணம். இந்த ஆண்டு Oct 3 அன்று வருகிறது! ஷ்ரவண நட்சத்திரம்ன்னு வடமொழியில் சொல்லுவாங்க. "திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே" என்பது பெரியாழ்வார் பாட்டு!
நாம அமெரிக்கால இல்ல சிங்கப்பூர்ல முதலில் காலடி எடுத்து வச்ச நாள் ஞாபகம் வச்சுக்கிறோம் இல்லையா? அது போலத் தான் இறைவன் நம் பொருட்டு பூமியில் கால் பதித்த நாள். அவதாரக் குழந்தையாக எல்லாம் பிறக்காது, நேரே குன்றின் மேல் கல்லாகி நின்ற நாள்.

இந்த நாளை படைப்புக்குத் தலைவர் பிரம்மா முதலில் விழாவாகக் கொண்டாட, பின்னர் தொண்டைமான் அரசன் அதைத் தொடர, பின்னர் பல ஆண்டுகள் தொடர்ந்தோ, விட்டு விட்டோ கொண்டாடி வருகிறார்கள். இன்றைக்கும் ஊர்வலங்களை பிரம்ம ரதம் என்னும் குட்டித்தேர் (பிரம்மன் சிலை வழிபாடு அற்றவர் ஆதலால்) வழி நடத்திச் செல்லும்.

முதல் நாள்
மாலை:
நல்ல மண் எடுத்து, நவதானிய முளை விடுவர். முளைப்பாரிகை என்பது இதற்குப் பெயர். விழா இனிதே நடக்க, செய்வது இது.

பின்னர் பெருமாளின் படைத்தளபதி சேனை முதலியார் (விஷ்வக்சேனர்), அவருடன் பரிவாரங்கள் அங்கதன், அனுமன், அனந்தன், கருடன் எல்லாரும் வீதியுலா வந்து, அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்று கண்டு வருவர்.

அப்புறம், கருடனைத் துணியில் வரைந்து, கொடி மரம் அருகில் பூசித்து, கொடி ஏற்றுவர்! கருடன் விண்ணுக்குச் சென்று அங்குள்ளவர்கள் அனைவரையும், மற்றும் மண்ணுக்கு வந்து நம்மையும், விழாவுக்கு அழைப்பு வைப்பதாக மரபு. (கருடா செளக்கியமா? கண்டிப்பா வந்துடறோம்பா. நீ போய் ஆக வேண்டிய வேலைகளைக் கவனி!).

துவஜம்=கொடி, ஆரோகணம்=ஏற்றம்
துவஜாரோகணம்=கொடியேற்றம்...அவ்ளோ தாங்க, மத்தபடி வடமொழிப் பேரைப் பாத்து பயந்துடாதீங்க! :-)
இரவு
பெத்த சேஷ வாகனம். (சுந்தரத் தெலுங்கு-ங்க. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்)

நம்ம பெருமாளுக்கு ரொம்ப பிடிச்ச ஒருவர்-ன்னா அது ஆதிசேஷன்.
பாற்கடல், திருவரங்கம் எல்லாத்துலேயும் இந்த சேஷன் மேலே தான் பள்ளி கொள்வார். இந்த சேஷனும் சும்மா இல்லீங்க!
இறைவனை விட்டு ஒரு நொடியும் பிரிய மாட்டார்-ன்னா பாத்துக்குங்க!
ராமனாய் பிறந்த போது இலக்குவன்
கண்ணனாய் பிறந்த போது பலராமன்
கலியுகத்தில் இராமானுசன், மணவாள மாமுனிகள்!
"சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்; நின்றால் மரவடியாம்" என்பார்கள்!
அவ்வளவு ஏன்? திருமலையின் 7 மலைகளும் சேஷனின் திருமுடிகள்.
அந்த சேஷாசலத்தின் மேல் தான் இறைவன் நிற்கிறான்! அதனால் விழாவின் முதல் நாள் சேஷனின் மீது ஒய்யாரமாக பவனி!


முன்னே அருளிச்செயல் குழாம், தமிழ்ப் பாசுரங்கள் பாடிச் செல்ல,
தமிழைக் கேட்டுக் கொண்டே, நம் பெருமாள் பின் தொடர,
வைகுண்ட நாதன் திருக்கோலத்தில், அலைமகள் (ஸ்ரீ தேவி) மற்றும் மண்மகள் (பூமிதேவி) உடன் வர,
அவன் பின்னே வேத கோஷ்டி வர,
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிவோம் அவனை!




சரி, போன பதிவில் சொன்னபடி ஆழ்வார் பாடலுக்கு வருவோமா? சொன்ன சொல்லைக் காப்பாத்துணம்-ல!
12 ஆழ்வார்களில், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர ஏனைய பத்து ஆழ்வார்களும் வேங்கடத்தானைப் பரவிப் பாடியுள்ளனர். (மங்களாசாசனம் என்று வடமொழியில் வழங்குவர்)

(தொண்டரடிப்பொடி அரங்கத்தானைத் தவிர எவரையும், மதுரகவி அவருடைய ஆசான் நம்மாழ்வாரைத் தவிர எவரையும் பாட்டாகப் பாடவில்லை)
ஆழ்வார்கள் என்றால் யார்? அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவ்வளவாக அறியத் தெரியாதவர்கள், கீழ்க்கண்ட சுட்டிகளில் அறிந்து கொள்ளலாம்!
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - நன்றி, திரு தேசிகன் அவர்கள் வலைப்பதிவு
ஆழ்வார் குறிப்பு - நண்பர் பாலாவின் வலைப்பதிவு. பாலா இப்போது தான் துவக்கியுள்ளார். Archives-இல் தேடப் பொக்கிஷம் கிடைக்கும்.



இன்று,

பொய்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்

உளன் கண்டாய் நன்-நெஞ்சே, உத்தமன் என்றும்
உளன் கண்டாய்,உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தின் உள்ளனன் என்று ஓர்!

(உள்ளுவார்=உள்ளத்தில் ஆழ்ந்து நினைப்பார்; ஒர்=அறி; உணர்) மிக எளிய பாடல் தான்!
நல்ல நெஞ்சமே, உத்தமன் என்றும் உள்ளான். எங்கே உள்ளான்?
உள்ளுவார் (நினைப்பவர்) உள்ளதில் எல்லாம் உள்ளான்.
பாற்கடல் வெள்ளத்தில் இருப்பவனும், வேங்கடத்தில் இருப்பவனும் ஒருவனே!
அவன் விரும்பி உறையும் இடம் நம் உள்ளமே.
இதை நன்றாக உணர்ந்து தெளிவு அடைவாயாக!

15 comments:

  1. //(உள்ளுவார்=உள்ளத்தில் ஆழ்ந்து நினைப்பார்; ஒர்=அறி; உணர்) மிக எளிய பாடல் தான்!
    நல்ல நெஞ்சமே, உத்தமன் என்றும் உள்ளான். எங்கே உள்ளான்?
    உள்ளுவார் (நினைப்பவர்) உள்ளதில் எல்லாம் உள்ளான்.
    பாற்கடல் வெள்ளத்தில் இருப்பவனும், வேங்கடத்தில் இருப்பவனும் ஒருவனே!
    அவன் விரும்பி உறையும் இடம் நம் உள்ளமே.
    இதை நன்றாக உணர்ந்து தெளிவு அடைவாயாக!//

    எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டார் ஆழ்வார்?

    நடப்பது அவ்வளவு எளிதா என்ன?இதுமட்டும் நடந்துவிட்டால் ஜன்மமே அல்லவா கடைந்தேறிவிடும்?

    எங்கும் நிறைந்தாயே,நீ எங்கு மறைந்தாயோ என மீராவை போல் நாம் ஜன்மம்,ஜன்மமாக தேடி அலைந்துகொண்டே தான் இருப்போம்.செய்த பாவம் அனைத்தும் கரைந்தபின்னர் தான் கண்டுபிடிப்போம்

    ReplyDelete
  2. அவன் விரும்பி உறையும் இடம் நம் உள்ளமே.
    இதை நன்றாக உணர்ந்து தெளிவு அடைவாயாக

    இதைப் பார்த்ததும் சமீபத்தில் கேட்ட ஒரு பாடல் விளாக்கம் நினைவுக்கு வருகிறது.
    ஓர் அடியார் ஆண்டவனைப் பார்க்க வருகிறார்.பெரிய மனிதர்களை பார்க்கப் போகும்போது ஏதாவது கொடுக்க வேண்டுமே! என்ன கொடுக்கலாம் என்று யோஜனை. கோவிந்த நீ இருப்பதோ பாற்கடல் என்னும் ரத்னாகரம் அதிலில்லாத மாணிக்கமே கிடையாது. சரி பக்கத்தில் பார்த்தால் சாட்சாத் மஹாலக்ஷிமி அமர்ந்து இருக்கிறாள் அப்படி இருக்கும் போது வேறு செல்வம் வேறு எது வேண்டுமுனக்கு. யோஜித்து கடைசியில் சொல்லுகிறார்
    அப்பா உன்னிடத்தில் இல்லாதது என்ன தெரியுமா? உன்னுடைய மனசு இருக்கு பாரு அது தான் உன்னிடத்தில் கிடையாது ஏன் என்றால் அதை அடியார் இடத்தில் கொடுத்து விட்டாய்.அங்கே ஒரு காலி இடம் இருக்கு அதுனாலே என் மனத்தை உனக்கு அர்பணிக்கிறேன் அதை எடுத்துக்கொள் என்கிறார்

    ReplyDelete
  3. வேற எங்கேயும் தேடித்தேடி அலைய வைக்கவேணாமுன்னு நம்ம மனசுக்குள்ளேயே
    வந்து உக்காந்துக்கறார் கடவுள். அது 'சட்'னு புரியறதைல்லை.

    பிரம்மோத்ஸவம் வீடியோ காஸெட் வச்சுருக்கேன். அப்பப்பப் போட்டுப் பர்த்துக்கறதுதான்.
    'ஹோம்சிக்'க்குக்கு எழுதிக்கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷன்:-)

    ReplyDelete
  4. வாங்க செல்வன்
    //எங்கும் நிறைந்தாயே,நீ எங்கு மறைந்தாயோ என மீராவை போல் நாம் ஜன்மம்,ஜன்மமாக தேடி அலைந்துகொண்டே தான் இருப்போம்.செய்த பாவம் அனைத்தும் கரைந்தபின்னர் தான் கண்டுபிடிப்போம்//

    எப்படிங்க இவ்வளவு சுருக்கமா உங்களால சொல்ல முடியுது? வடிவேலு ஸ்டைலில் உக்காந்து யோசிப்பீங்களோ? :-) மிகவும் உண்மை செல்வன். கரையக் கரையத் தானே கரையேறுவோம்! அருமையா சொல்லி இருக்கிங்க! இந்த 9 நாளும் நீங்க கட்டாயம் வரணும் :-)

    ReplyDelete
  5. //உன்னுடைய மனசு இருக்கு பாரு அது தான் உன்னிடத்தில் கிடையாது ஏன் என்றால் அதை அடியார் இடத்தில் கொடுத்து விட்டாய்.அங்கே ஒரு காலி இடம் இருக்கு அதுனாலே என் மனத்தை உனக்கு அர்பணிக்கிறேன் //

    சூப்பர் திராச அவர்களே. முற்றிலும் சரி. அவன் கிட்ட இல்லாத ஒண்ண தந்தா தானே பொருத்தமா இருக்கும். சுவையான சுகமான கருத்து! அடுத்த முறை உங்க கருத்தை மறக்காமல் எடுத்தாள வேண்டும் :-)

    ReplyDelete
  6. // இந்த 9 நாளும் நீங்க கட்டாயம் வரணும் :-) //


    9 தினம் என்ன?தினமும் எழுதுங்கள்,வருடத்தின் 365 நாளும் வருகிரேன்.ஒருமுறை அல்ல,பலமுறை.

    கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்
    எண்ணும் வண்ணம் திண்ணம் நாரணமே

    ReplyDelete
  7. //தி. ரா. ச.(T.R.C.) said...
    ஓர் அடியார் ஆண்டவனைப் பார்க்க வருகிறார்.பெரிய மனிதர்களை பார்க்கப் போகும்போது ஏதாவது கொடுக்க வேண்டுமே!
    என்ன கொடுக்கலாம் என்று யோஜனை. யோஜித்து கடைசியில் சொல்லுகிறார்
    அப்பா உன்னிடத்தில் இல்லாதது என்ன தெரியுமா? உன்னுடைய மனசு இருக்கு பாரு அது தான் உன்னிடத்தில் கிடையாது ஏன் என்றால் அதை அடியார் இடத்தில் கொடுத்து விட்டாய்.அங்கே ஒரு காலி இடம் இருக்கு அதுனாலே என் மனத்தை உனக்கு அர்பணிக்கிறேன் அதை எடுத்துக்கொள் என்கிறார் //

    இதேபோல் இன்னொரு பாடலின் கருத்து.
    பாடல் வரிகள் நினைவில்லை:-(
    இறைவா, உன்னிடம் எல்லாம் இருக்கின்றன. உன்னிடம் இல்லாது என்னிடம் இருப்பது அறியாமை என்ற இருள்தான். அதை நீ எடுத்துக்கொண்டு, என் அறியாமை இருளை நீக்கிவிடு.

    ReplyDelete
  8. //பிரம்மோத்ஸவம் வீடியோ காஸெட் வச்சுருக்கேன். அப்பப்பப் போட்டுப் பர்த்துக்கறதுதான்.
    'ஹோம்சிக்'க்குக்கு எழுதிக்கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷன்:-)//

    டீச்சர், சரியான ப்ரிஸ்க்ரிப்ஷன்! சென்ற முறை இந்தியா சென்ற போது, TTD சிடியும், அமர் சித்ர கதா சிடியும் வாங்கி வந்தேன். இப்பவும் மூட் அவுட் என்றால் பாத்துக்கறது. esp ஊஞ்சல், பாட்டுடன். அப்படியே லேசாயிடும்.

    ReplyDelete
  9. //வேற எங்கேயும் தேடித்தேடி அலைய வைக்கவேணாமுன்னு நம்ம மனசுக்குள்ளேயே
    வந்து உக்காந்துக்கறார் கடவுள். அது 'சட்'னு புரியறதைல்லை//

    மறந்துட்டேனே! வாரியார் ஒரு முறை சொல்லிக் கேட்டது. மனசுக்குள்ளேயே
    வந்து உக்காந்துக்கறார் கடவுள்.
    ஏன்னா மனிதன் அதைத் தவிர மற்ற எல்லா இடத்துலேயும் தேடுவான்!

    தன்னிடம் தேடுவதை விட்டு விட்டு, வெளியே அடுத்தவன் கிட்ட நமக்கு என்ன கிடைக்கும் என்று தேடுவதிலேயே காலம் கழிகிறதுன்னு சொல்லி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    ReplyDelete
  10. //தி. ரா. ச.(T.R.C.) said...
    பாடல் வரிகள் நினைவில்லை:-(
    இறைவா, உன்னிடம் எல்லாம் இருக்கின்றன. உன்னிடம் இல்லாது என்னிடம் இருப்பது அறியாமை என்ற இருள்தான். அதை நீ எடுத்துக்கொண்டு, என் அறியாமை இருளை நீக்கிவிடு//

    வித்தியாசமான சிந்தனை திராச. இருளை அவன் எப்படி எடுத்துக் கொள்வான்? ஜோதியான் வந்து நின்றாலே இருள் என்ற ஒன்றே இல்லாமல் போய் விடுமே. பாவம் திண்டாட்டம் தான் அவனுக்கு! :-)

    ReplyDelete
  11. //கலியுகத்தில் இராமானுசன்// மணவாள மாமுனிகளை விட்டுவிட்டீர்களே?

    //முன்னே அருளிச்செயல் குழாம், தமிழ்ப் பாசுரங்கள் பாடிச் செல்ல, தமிழைக் கேட்டுக் கொண்டே, நம் பெருமள் பின் தொடர,…, அவன் பின்னே வேத கோஷ்டி வர// என்னுடைய ‘தமிழ் இறைவனுக்கும் முன்னால்’ பதிவைப் படிச்சிருக்கீஙளா? ஈல்லைன்னா சொல்லுங சுட்டியைத் தர்றேன். ஆந்தப் பதிவுல இதனைப் பத்தித் தான் சொல்லியிருக்கேன்.

    //கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிவோம் அவனை!’ திருக்குறளும் திருவாய்மொழியும் சேர்ந்து வருகிறதோ இங்கே? :-)

    பொய்கை ஆழ்வார் பாசுரத்துப் பொருள் சொன்னவிதம் சிறப்பு. ரொம்ப சுருக்காமலும் ரொம்ப விரிக்காமலும் இருக்கு.

    எம்பெருமானின் ஐந்துவித உருவங்களில் நான்கினை இந்தப் பாடலில் சொல்கிறார் என்று தோன்றுகிறது. 'என்றும்' என்றதால் என்றும் நிலையான பர உருவமும், 'வெள்ளத்தின் உள்ளான்' என்றதால் திருப்பாற்கடல் வ்யூஹ உருவமும், 'வேங்கடத்து மேயான்' என்றதால் அர்ச்சை உருவமும், 'உள்ளத்தில் உள்ளனன்' என்றதால் அந்தர்யாமி உருவமும் கூறுகிறார் எனத்தோன்றுகிறது. இராமகிருஷ்ணாதி அவதார விபவ உருவம் மட்டும் சொல்லப்படவில்லை. தேடிப் பார்த்தால் அதனையும் சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  12. //வெட்டிப்பயல் said...
    அருமை! அருமை!!!//

    நன்றி பாலாஜி!

    ReplyDelete
  13. ////கலியுகத்தில் இராமானுசன்// மணவாள மாமுனிகளை விட்டுவிட்டீர்களே?//

    ஆகா! இதுக்குத் தான் குமரன் வேணுங்கிறது! மாமுனிகளை கணப்பொழுதில் மறந்திட்டேனோ?
    சேர்த்து விட்டேன் குமரன்!

    //‘தமிழ் இறைவனுக்கும் முன்னால்’ பதிவைப் படிச்சிருக்கீஙளா? ஈல்லைன்னா சொல்லுங சுட்டியைத் தர்றேன்.//
    ஆகா, கொடுங்க கொடுங்க!
    சுட்டி தாங்க குமரன், சுவைக்கிறேன்!

    //எம்பெருமானின் ஐந்துவித உருவங்களில் நான்கினை இந்தப் பாடலில் சொல்கிறார் என்று தோன்றுகிறது//

    சூப்பர் குமரன்! இது!!இது!!
    அழகாக எடுத்துக் கொடுத்தீர்கள். நன்றி!

    என்றும் உளன்=பரன்
    வெள்ளத்தின் உள்ளான்=வியூகம்
    வேங்கடத்து மேயானும்=அர்ச்சை
    உள்ளத்தின் உள்ளனன் = அந்தர்யாமி

    உத்தமன்=விபவம் ஆகக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் குமரன்.
    "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்று வாமன அவதாரம் - விபவம் பற்றி ஆண்டாளும் "உத்தமன்" என்றே சொல்கிறாள், பாருங்களேன்!
    புருஷோத்தமன்=ராமன் அல்லவா?

    ReplyDelete
  14. ரொம்ப சரியா சொன்னீங்க ரவிசங்கர். 'உத்தமன்' என்றதால் விபவமும் சொன்னதாயிற்று. :-)

    'தமிழ் இறைவனுக்கும் முன்னால்' பதிவின் சுட்டி இதோ.

    http://koodal1.blogspot.com/2006/01/134.html

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP