கோதை பிறந்த நாள் அன்று ஒரு சுவையான நாடகம் பார்ப்போமா? அவளைக் கல்யாணம் கட்டிக்க, நீ...நான்-ன்னு ஒரே போட்டா போட்டி! யாரு போட்டி போடறாங்க? மொத்தம் 108 பேரு போட்டி போடறாங்க! அவனவன் பெருமையை, அவனவன் அளந்து விடுறான்! ஸ்டைல் பண்ணிக்கிட்டு வந்து நிக்குறான்! ஆனால் இவ யாருக்கு மாலை சூட்டப் போகிறாளோ?...
வாங்க மக்களே வாங்க! இன்னிக்கு Aug-04;
ஆடிப் பூரம்!
நம் கோதைக்குப் பிறந்த நாள்!
ஹேப்பி பர்த்டே சொல்லிருவமா? கேக்குக்குப் பதில் கொஞ்சம் கெட்டியா சக்கரைப் பொங்கல், Candle-க்குப் பதிலா ஆடி மாச மாவிளக்கு!:)
கோதையைப் பற்றி உங்களுக்குச் சொல்லித் தான் தெரியணும்னு இல்ல! சரியான அடாவடிப் பொண்ணு! பாரதி கண்ட புதுமைப் பொண்ணு! அன்பாகவும் இருப்பா! அலேக்கா தூக்கியும் பந்தாடிடுவா! அவ கேக்குற கேள்விக்கு, ஒரு பய புள்ள முன்னாடி நிக்க முடியாது! ஆமாம்!
* மற்ற பதினோரு பேரும் அவனுக்குள்ளே தாங்கள் ஆழ்ந்தார்கள்! = அவர்கள் ஆழ்வார்கள்! அவன் ஆண்டான்!
* ஆனால் இவ ஒருத்தி மட்டும், தனக்குள்ளே அவனை ஆழ்த்தினாள்! =
இவள் ஆண்டாள்! அவன் ஆழ்வான்!இப்படி ஆண்டவனையே ஆழ்வார் ஆக்கிய பெருமை கோதைக்கு மட்டுமே உண்டு!
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை "விஞ்சி நிற்கும்" தன்மையளாய், என்று அதனால் தான் அவளுக்குத் தனிப் பாடல்! வாங்க கதைக்குப் போவோம்!
அன்னிக்கு பெரியாழ்வாருக்கு ஒரே கவலையாப் போச்சு! பொண்ணு இம்புட்டு புத்திசாலியா இருக்கா! தினுசு தினுசா கண்டிஷன் போடுறா? எங்கிட்டு போயி வரன் தேடுவாரு அவரு? பாண்டியன் சபையில் வேதங்களோதி விரைந்து கிழி அறுத்தவர், இன்னிக்கி கதி கலங்கிப் போயி நிக்குறாரு! பாசத்தைக் கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டி வளர்த்த அப்பன் கதை எல்லாம் இப்படித் தான் ஆகும் போல! :)
உடனே அவருக்கு ஒரு யோசனை தோனுது! அன்று திருவடி பட்டு ஒரு கல்லே பெண்ணானதே! இன்று திருவடி பட்டு, நம் பெண்ணுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்காதா என்ன?
யாரு திருவடி? - நம்மாழ்வார் தான் திருவடி!
பெண்ணைக் கூட்டிக்கிட்டு, திருக்குருகூர் என்னும் நெல்லை மாவட்டம் ஆழ்வார் திருநகரிக்கு ஓடுகிறார்! கூடவே ஆண்டாளின் தோழி அனுக்ரகை!
அங்கே குருகூர் புளியமரத்தின் கீழ், அந்த மாறன் என்னும் குழந்தை உட்கார்ந்து கிட்டு இருக்கு! விட்டு சித்தன் என்னும் பெரியாழ்வாரைக் கண்டதும்........படார் என்று எழுந்து கொண்டது! என்ன இருந்தாலும் "பெரீய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆழ்வார்" அல்லவா? அவருக்குப் பின்னாடி தொங்கல் மாலையில், பாவாடைத் தாவணியில், ஒரு அழகு தேவதை!
...இப்போது கையும் கூப்பிக் கொண்டது அந்தக் குழந்தை! ஆண்டாள் என்றால் அப்படி ஒரு பரவசம் அல்லவா?
"நம்மாழ்வாரே! எங்களைப் பார்த்து நீங்கள் கை கூப்பலாமா? தகுமா? நீங்கள் திருப்பாத அம்சம்! திருப் பாதங்கள் கை கூப்பலாமா??
நாங்கள் எல்லாம் பக்திப் பயிர் மட்டுமே வளர்த்தோம்! நீங்கள் அல்லவா நம் வைணவ தர்மத்துக்குத் தத்துவக் கரையைக் கட்டி வைத்தீர்கள்! பயிருக்கு நீர் தடையின்றிக் கிடைக்க அணை கட்டினீர்கள்!"
"ஆகா! தங்கள் புகழ்ச் சொற்களுக்கு அடியேன் தகுதி இல்லை! அடியேன் சிறிய ஞானத்தன்!"
"வேதத்தை மறைத்து வைத்திருந்த கால கட்டம்! அனைவரும் அறியத் தமிழில் ஆக்க வேண்டும் என்று நீங்கள் அல்லவா முடிவு கட்டினீர்கள்!
ஒரே மூச்சாக, திருவாய்மொழி ஆக்கி,
வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன், தாங்கள் அல்லவா?"
"ஆழ்வாரே! பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, பெரிய திருவடி...இவர்கள் வரிசையில் பெரிய-ஆழ்வார்! அடியேன் சிறிய-ஆழ்வார் தான்!
வர வேணும்! வர வேணும்! குருகூரைத் தேடித் தாங்களே வந்த காரணம் என்னவோ? அருகில் யாரது?
அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் வந்துதித்த நம் கோதைப் பெண் தானே இவள்?"
"அவளே தான்! ஆனால் அவளால் தான் இன்று வருத்தமும் தீராது, மகிழாதே ரெம்பாவாய்-ன்னு இருக்கிறேன்!
ஒருமகள் தன்னை உடையேன்! உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்!திருமகள் போல் வளர்த்தவளோ, இன்னிக்கி திருமகள் தலைவனைத் தான் கட்டுவேன் என்று அடம் செய்கிறாள்! அழிச்சாட்டியம் செய்கிறாள்! தாயில்லாத பெண்ணாக வேறு போய் விட்டது! திட்டவோ அடிக்கவோ மனம் வரவில்லை!"
"ஆகா...என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்? உங்கள் பாரத்தை என்னிடம் இறக்கி வைத்து விட்டீர்கள் அல்லவா? மனக் கவலை விடுங்கள்!
தனக்குவமை இல்லாதான் ”தாள்” நான்! - சேர்ந்தார்க்கு
மனக்கவலை மாறும் நாள் இன்று தான்!"
"கோதை! யாரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய் அம்மா? என்னிடம் சொல்! நான் ஆவன செய்கிறேன்! பாவம்! அப்பாவின் கவலையைப் பார்த்தாய் அல்லவா?"
"இது என்ன கேள்வி மாறனாரே?
மானிடர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று எத்தனை முறை தான் சொல்லுவது? பெருமாளை மணம் செய்யத் தான் விரும்புகிறேன்! விரும்புகிறேன்! விரும்புகிறேன்!!"
"அட! அதான் எனக்குத் தெரியுமே! எந்தப் பெருமாளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாய்? அதைச் சொல்! பேரையும் ஊரையும் சொல்லாமல், கட்டி-வை கட்டி-வை என்றால், பாவம் என்ன செய்வார் ஒரு தந்தை?
எந்தை, தந்தை, தந்தை தம் மூத்தப்பனாலும் முடியாதே!"
(ஆண்டாளே ஒரு கணம் அரண்டு விட்டாள்! ஏதேது! இந்தப் புளியமரக் குழந்தை நம்மையே மடக்குகிறது?)
"அதெல்லாம் எனக்குத் தெரியாது மாறனாரே! எனக்குப் பெருமாளைத் தான் தெரியும்! அவன் எந்த ஊர், என்ன பேர் என்பதை எல்லாம் தெரிந்து வச்சிக்கிட்டா காதல் செய்ய முடியும்?
வேண்டுமானால் பெருமாளை இங்கு வரவழையுங்கள்! அவர் வந்து சொல்லட்டும், தான் எந்த ஊர்? என்ன பேர்-னு? கோதைக்காக ஊரும் பேரும் சொன்னால் ஒன்னும் குறைந்து விட மாட்டார்!
கோதைத் தமிழ் ஐ-ஐந்தும்-ஐந்தும் அறியாத பெருமாளை வையம் சுமப்பதும் வம்பு! - இப்படிச் சொல்லி, நான் வரச் சொன்னதாக சொல்லுங்க! வருகிறாரா-ன்னு பார்ப்போம்!"
(இப்போது, நம்மாழ்வாரே அரண்டு மிரண்டு போய் விட்டார்! பெருமாளைச் சுமப்பதும் வம்பா? அம்மாடியோவ்! பாவம் பெரியாழ்வார்! இந்தப் பொண்ணை இம்புட்டு நாள் எப்படி வளர்த்தாரோ...தெரியலையே! :)
பளீர் என்று ஒரு யோசனை, ஆழி போல் மின்னுகிறது, ஆழ்வாருக்கு!)
"அனுக்ரகை, இங்கே வா! நீ தானே கோதையின் தோழி? நான் சொல்வது போல் செய்ய வேண்டும்! சரியா? இதோ...ஓலை! இதில் மொத்தம் 108 பேர்களை எழுதி வைத்து இருக்கிறேன்!
அத்தனை பேரும் வீராதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! அழகு கொஞ்சும் கட்டிளங் காளைகள்! திண் புயத்து மார்பும், திடலெனத் திருமேனியும் கொண்டவர்கள்!
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணர்கள்! அத்தனை பேருக்கும் ஓரே நொடியில் சுயம்வர ஓலை அனுப்பி இருக்கிறேன்!"
"ஆகா, எப்படி அடிகளே?"
"மனத்துளானுக்கு,
மன ஓலையே, மண ஓலையாகப் போனது! மனோ வேகத்தின் வேகம் நீ அறியாதவளா? இல்லை கோதை தான் ஹரி-யாதவளா?
இந்தப் பட்டியலில் உள்ள பேர்களை எல்லாம் நீ கூப்பிடக் கூப்பிட,
ஒவ்வொருவராய் கோதையின் முன்னர் வருவார்கள்!
கோதைக்கு யாரைப் பிடிச்சிருக்கோ, அவனுக்கு மாலை சூட்டிக் கொள்ளலாம்! சரியா?"
"அப்படியே ஆகட்டும் குருவே!"
"சரி, இந்தா,
பட்டியல்! சுட்டிப் பெண், சுயமாக வரன் தேடிக் கொள்ளும் "சுயம்"-வரம் துவங்கட்டும்! மங்கல வாத்தியங்கள் முழங்கட்டும்!"
1) பரமபத நாதன், ஸ்ரீமன் நாராயணன்! திருப் பரமபதம்! பராக்-பராக்-பராக்!
எம்பெருமான்! பரப் பிரம்மம்! உருவம், அருவம், அருவுருவம் எல்லாம் கடந்தவன்! மோட்ச சாம்ராஜ்ஜியத்துக்கு அதிபதி!
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளும், மூவரும், தேவரும், ஏவரும் துதிக்க நின்றவன்!அப்பேர்பட்டவன், உருவம் கடந்தவன்.....வந்த வேகத்தில் எங்கே தலை கலைந்து விட்டதோ, என்று மீண்டும் தன்னை அழகு படுத்திக் கொள்கிறான்! :)
பிரம்மனி மானச சஞ்சரரே என்று மனதில் மட்டுமே சஞ்சரிப்பவன், மயிற் பீலியும், சாயக் கொண்டையுமாய்...இன்று ஆண்டாளின் முன்னே...
"வாருங்கள் நாராயணரே! என்னோடு என் தோழிமார்கள், அடியவர்கள் எல்லாம் புகுந்த வீடான பரமபதம் வருவார்கள்! சம்மதம் தானே?"
"அச்சோ..."
"என்ன அச்சோ? வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-ன்னு சொன்னீங்களாம்? இப்ப என்ன அச்சோ சொல்றீங்க?
புகுந்த ’வீட்டில’ புகுவது மண்ணவர் விதியே இல்லையா?""அப்படியல்ல கோதை! எல்லாரும் புகுவார்கள் தான்! ஆனால்...அப்படிப் புக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்ற வேண்டும்! தோன்றினால் தடையேதும் இல்லை! புகுந்து விடுவார்கள்! ஆனால் அது வரை புக மாட்டார்கள்!
"ஓ! நல்ல சட்ட திட்டம்!...அடியவர்களை ஒதுக்க ஆயிரம் காரணங்கள் சொல்லும் உம்மை நிராகரிக்கிறேன்!...(Rejected...)"
"கோதை....கோதை....நான் என்ன சொல்ல வரேன்னா..."
"Nextttttttttt..."
2) ஒப்பிலி அப்பன் என்னும் உப்பிலியப்பன், திரு விண்ணகரம் பராக்-பராக்-பராக்!
"வேண்டவே வேண்டாம்! என்னால் உப்பில்லாமல் எல்லாம் சாப்பிட முடியாது! நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்று தான் பாடினேன்! உப்பிட்டு உண்ணோம்-ன்னு எல்லாம் பாடலை...தூத்துக்குடி தெக்கத்திச் சீமை உப்பைப் பத்தி என்ன நினைச்சுப்புட்டீங்க?
மன்னிக்கவும்...உங்களையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...)
அடுத்து..."
3) பார்த்தசாரதி என்னும் வேங்கட கிருஷ்ணன், திருவல்லிக்கேணி பராக்-பராக்-பராக்!
(மீசையுள்ள ஆயர் கோன், பயந்து பயந்து வருகிறான்)
"வாருங்கள் பார்த்த சாரதி! நலம் நலம் தானா முல்லை நிலனே? சுகம் சுகம் தானா சின்னக் கண்ணனே?"
"கோதை, என் மனங் கவர்ந்த பேதை! நீ எப்படி இருக்காய் கண்ணே?"
"கண்ணாலம் ஆகும் முன்னர், இந்தக் கண்ணே, மணியே எல்லாம் வேண்டாம்! இந்த வித்தை எல்லாம் அப்பாவி கோபிகைகளோடு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்! என்னிடம் செல்லாது!"
"அடேயப்பா, என்ன ஒரு பொய்க் கோபம் இந்தக் கள்ளிக்கு?"
"சரி...தேரோட்டிக் கொண்டு ஒன்றும் அறியாத பையனுக்கு ஏதோ கீதை சொன்னீர்களே! வள-வள-ன்னு எத்தனை எத்தனை சுலோகம்? எத்தனை எத்தனை அத்தியாயம்?
போரில் ஒருத்தன் தர்மம் அறியாது குழம்பிப் போய் உள்ளான்! நான் இருக்கேன்டா உனக்கு-ன்னு தைரியம் சொல்லாமல்...அவனை மேலும் குழப்பி...வெட்டியாய் வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு இருந்தீர்கள்! நீங்க என்ன வெட்டிப் பயலா? :)"
"ஆகா...என்ன கோதை இப்படிச் சொல்லி விட்டாய்? அதான்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என்னையே சரணம் எனப் பற்று, உனக்கு வீ்டு அளிக்கிறேன்-ன்னு சொன்னேனே பெண்ணே!"
"ஆமாம் சொன்னீர்கள்! ஆனால் எப்போது சொன்னீர்கள்? ஒருவனை நல்லாக் குழப்பி விட்டுட்டு....கடைசியாகச் சொன்னீர்கள்! அவன் கலங்கிய மண்டையில், நீங்க சொன்னது ஏறுமா?
இதே என்னைப் பாருங்கள்...எடுத்த எடுப்பிலேயே, முதல் பாட்டிலேயே சொல்லி விட்டேன்! - நாராயண*னே* நமக்*கே* பறை தருவான்! இப்படித் தெளிவாகப் பேசவே உமக்குத் தெரியாதா?
உம்மையும் நிராகரிக்கிறேன்!...(Rejected...)"
இப்படியாக ஒவ்வொருவரும் நிராகரிக்கப் பட்டுக் கொண்டே வருகிறார்களே ஒழிய, யாரும் தேறுவதாய்க் காணோம்!
நம்மாழ்வார், பெரியாழ்வாருக்கே கூட உதறல் எடுக்கிறது! என்ன பெண் இவள்?
* குடந்தை சாரங்கபாணி வேண்டாமாம்!
* நாகை அழகியார் வேண்டாமாம்!
* பத்ரீ நாதன் வேண்டாமாம்!
* மலையாளத் திவ்ய தேசப் பெருமாள் ஒருத்தனும் வேண்டாமாம்!
* திருக்குறுங்குடி பெருமாள் வேண்டாமாம்! என்னமா அழகு அந்த வடிவழகிய நம்பி?
* சொந்த ஊர் திருவில்லிபுத்தூர் பெருமாள் கூட வேண்டாமாம்!
அடுத்து யாருப்பா? உம், இனி ஒருத்தரா வந்து பயனில்லை! ரெண்டு ரெண்டு பேரா வாங்க! அச்சோ...தவறு தவறு! நல்ல காரியம்! ஒத்தைப் படையா இல்ல வரணும்! மூனு மூனு பேரா வரச் சொல்லுங்க! அடுத்து.....
* திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்,
* மனம் மயக்கும் மதுரைக் கள்ளழகர்,
* எம்பெருமான், திருவேங்கடமுடையான்
மூனு பேரும் இங்கிட்டு வந்து நில்லுங்க! பார்த்து விடலாம் யார் தேறுகிறீர்கள் என்று!
...
(நாளை தொடரும்....)