Sunday, December 27, 2009

உண்மைக் கதை: "யானை" ஏகாதசியா? வைகுண்ட ஏகாதசியா??

அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்!
மாதவிப் பந்தல் நிறைந்தது என்று சொல்லி இருந்தேன்...
இருந்தாலும், பந்தல் பொழிலை வாட விடாது, தண்ணென்று நீர் பாய்ச்சி, சிந்து பூ மகிழும் ரங்கன் அண்ணாவின் அனுமதி பெற்று...

இதோ...உங்கள் முன்னே...அடியேன்...

ஒரு உண்மைக் கதையை, இன்று சொல்லப் போந்தேன்! போதுமினோ நேரிழையீர்?


இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)
மோட்ச ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!

"குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்" - ஜில்லென்று மலையாளப் பாட்டை, கண்ணன் பாட்டில் போய்க் கேட்டுப் பாருங்கள்!

அது என்னங்க "குருவாயூர்" ஏகாதசி?
பொதுவா, "வைகுண்ட" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க?
கேரளத்தில் மட்டும், அத்தனை ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே! :)

= எல்லாத்துக்கும் ஒரு யானை தான் காரணம்!
= வாரணம் தான் காரணம்!

அந்த யானையின் மனசு தான், மொத்த வைகுந்த ஏகாதசிக்கே, "குருவாயூர்" ஏகாதசி என்று பெயர் பெற்றுத் தந்தது!


1914! வல்லிய ராஜா என்னும் நிலம்பூர் நாட்டு ராஜா! உள்நாட்டுக் கலகத்தில் அவஸ்தைப்பட்ட தன் குடும்பத்துக்காக வேண்டிக் கொண்டார்!
தன்னிடம் இருந்த பல யானைகளில் ஒன்றை, குருவாயூர் ஸ்ரீகோயிலுக்கு, தானம் அளித்தார்!
அந்த பத்து வயதுக் குட்டி யானை = கேசவன்! பின்னாளில் புகழ் பெற்ற "கஜராஜன் கேசவன்" ஆனது!

யானை என்னமோ குட்டி தான்! இருந்தாலும் சுட்டி!
பிரகலாதனும் குட்டி தானே! அவனைப் போலவே தான் இதுவும்!

அமைதியான-x-துறுதுறுப்பான சுபாவம், என்னையப் போல! :)
சாப்பிடும் போதும், விளையாடும் போதும், ஸ்ரீகோயிலைப் பார்த்தவாறே தான் எதுவும் பண்ணும்! அங்கிருந்து தன் கண்ணை மட்டும் எடுக்கவே எடுக்காது! இத்தனையும் பத்தே வயசில்!
அவ்வப்போது ஊர்வலத்தில் கண்ணனை அதன் மேலும் ஏற்றுவார்கள்!

கண்ணனையே சுமக்கும் களிப்பிலே, மிதப்பிலே...
இந்த யானை, ஆலயத்துக்கு உள்ளேயே சாணம் போடும்! நீரும் பாய்ச்சும்! :)
நாலம்பலம் என்று சொல்லப்படும் பிரகார வலம்! அதில் வலம் வரும் போதெல்லாம் இப்படித் தவறாது பண்ணும்! :)

வளர வளர, சக யானைகளெல்லாம், விளையாடுவதும், முரண்டு பிடிப்பதும்,
பணக்காரக் கோயிலில் சாப்பாட்டுக்குப் பஞ்சமே இல்லாமல்,
குலைகுலையாய் நேந்திரம் பழம் உண்டு, ஜாலியாகக் கழிப்பதுமாய் இருக்க...

இது மட்டும், ஏகாதசி நாளில் சாப்பிடாமல் இருக்க, எப்படியோ கற்றுக் கொண்டது!
மேலும் விதம் விதமாக வேடிக்கை காட்டவும் வேறு கற்றுக் கொண்டது!
பூவைத் தூவி, தலையைக் குலுக்கி, கழுத்து மணியை ஆட்டி...என்று பல இன்பச் சேட்டைகள்!

போதாக் குறைக்கு, வீதியுலாவின் போது, வித்தியாசமாக நடந்து காட்டும்!
முன்னும் பின்னும், வலமும் இடமும்,
நேர் வாட்டிலும், குறுக்கு வாட்டிலும்,
அசைந்து அசைந்து செல்வது ஏதோ டான்ஸ் ஆடுவது போல இருக்கும்!

குருவாயூரப்பன், திடீரென்று இதனால் அரங்கனைப் போல், நடையழகு உடையவன் ஆகி விட்டான்! :)
மக்களிடம், குறிப்பாகச் சின்னஞ் சிறார்களிடம் கேசவனுக்கு ஏக செல்வாக்கு கூடி விட்டது! ஆனால்...ஆனால்...


பக்கத்து ஊர்களில் நடக்கும் உற்சவங்களுக்கு இது செல்லாது! முரண்டு பிடிக்கும்!
அங்குசத்தால் அடி வாங்கும்!
ஆனால் அலறாது! பிளிறாது! கண்ணீர் உகுக்கும்! நீர் பெருக்கும்! ஆனால் அப்பவும் குருவாயூரை விட்டு மட்டும் செல்லவே செல்லாது!
குருவாயூரப்பனை, சும்மா ஒப்புக்குச் சுமக்காமல், மனசிலே சுமந்து விட்டது போலும்!

மனசிலே சுமக்கத் தொடங்கி விட்டால் வரும் பாரத்தை யார் அறிவார், சொல்லுங்கள்?


குருவாயூரப்பன் ஊருலாச் சிலையை (உற்சவர்), மலையாளத்தில், திரு-வெளி என்பார்கள்! "வெளி"யில் கொண்டு வரும் சிலை என்பதால் திரு-"வெளி"! ஆனால் ஸ்ரீவேளி, சீவேளி என்று பின்னாளில் திரிந்து விட்டது!

திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கும் இந்த ஸ்ரீவேளி உண்டு! பொன்-வெள்ளி என்று இரண்டு ஸ்ரீவேளிகள்!
மூலத்தானத்து முதல்வனின் காலடியில் இரு பக்கமும், இவற்றை இன்றும் காணலாம்!
செந்தூரில், மலையாள முறையில் (குமார தாந்த்ரீகம்) பூசை செய்வதால், இப்படி மலையாள வழக்கம் ஏற்பட்டு விட்டது! இப்போ நாம் குருவாயூருக்கு வருவோம்!

ஸ்ரீவேளி = தட்டையான பலகையில், மாயோனின் உருவம் பொறித்து, அதன் கீழே சின்னூண்டு இருக்கும்!
நம்மூரு சிலை போலவெல்லாம் இருக்காது! கேரளா ஸ்டைலில் இருக்கும்!
அதுக்கு "திடம்பு"-ன்னு பேரு!

நம்ம கேசவன், அந்தத் “திடம்பை“ யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே தன் முன்னங்காலை மடக்கும்!
மற்ற யாராய் இருந்தாலும், பின்னங்கால் வழியாக ஏறித் தான், யானை மேல் உட்கார வேண்டும்!

எவ்வளவு தான் தேங்காய், பழம், கரும்பு இனாமாகக் கொடுத்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி விடும்!
தன் முன்னங் கால்களை மட்டும், வேறு யாருக்கும் மடக்கவே மடக்காது!

உன் அந்தமில் சீர்க்கு அல்லால்,
வேறு எங்கும்,
அகம் குழைய மாட்டேனே-ன்னு ஆழ்வார் பாசுரத்தை நாமே படிச்சதில்லை! படிச்சாலும், நிஜ வாழ்வில் பிடிச்சதில்லை! ஆனா இந்த யானை, இதை எங்கே போயி படிச்சிது/பிடிச்சிது-ன்னு தான் தெரியவில்லை!

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும், செங்கமலம்
அந்தரம் சேர் வெங் கதிரோற்கு அல்லால் அலர் ஆவால்!!
வெந்துயர் வீட்டா விடினும் வித்துவக்கோட்டு அம்மானே-உன்
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!



கேசவனை, "திமிர் பிடித்த யானை" என்று பட்டம் கட்டி விட்டார்கள்!
அது "நார்மலான" யானை இல்லை! "ஈகோ பிடிச்ச" யானை என்று பேர் வாங்கிக் கொண்டது!

* முதலில் கரும்பைக் கொடுத்து ஆசை காட்டியவர்கள், பிற்பாடு சாப்பாடு கூடச் சரியாகப் போடாமல் தண்டிக்கப் பார்த்தார்கள்! = பசி!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* மற்ற யானைகளிடம் இருந்து ஒதுக்கி வைக்கப் பார்த்தார்கள்! = தனிமை!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* சரி யானையின் "ஈகோ"-வை அதன் வழியிலேயே அடக்குவோம் என்று நினைத்தார்கள்!
குருவாயூர் அப்பனைத் தானே மனசால் சுமக்கிறாய்? அவனையே உனக்கு இல்லாமல் செய்து விட்டால்??? ஐயோ!

அன்றில் இருந்து, கேசவன் மேல் மட்டும் குருவாயூரப்பன் "திடம்பை" ஏற்றுவதில்லை!
கேசவனின் முறையே வந்தாலும் கூட, "திடம்பை" அவன் மேல் ஏற்றுவதில்லை! அவனோடு பேசுவதையெல்லாம் குறைத்துக் கொண்டார்கள்!

அவன் மிக அழகாக ஒதுக்கப்பட்டான்! ஒதுக்கப்பட்டான்!
உதாசீனம்! Ignore! - Thatz the Best Insult!
அப்போவாச்சும் அந்தக் கேசவன் "திருந்தினானா"?


ஆனால் அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

பிற யானைகளின் மேல் குருவாயூரப்பன் உலா வருவதைப் பார்க்கும் கேசவனுக்கு, தன்னை ஒதுக்குகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது!
நேற்று வரை கண்ணனைச் சுமந்து வந்த கேசவன்,
இன்று கட்டையை மட்டுமே சுமப்பவன் ஆக்கப்பட்டான்! ஆனால்......ஆனால்...

யானை தனக்கென்று எந்த உரிமையும் கோரவில்லை!
தன்னை மட்டும் தான் குருவாயூர் அப்பனின் உலாவுக்குப் பயன்படுத்த வேணும் என்று அடமும் பிடிக்கவில்லை! மதமும் பிடிக்கவில்லை!

அதன் மனதில் ஒன்றே ஒன்று தான்:
குருவாயூர் அப்பனுக்கு வளைந்த கால்கள், வேறு எங்கும் வளையாமல் இருக்க வேண்டும்!
மற்றபடி, கண்ணன் யார் மீது வலம் வந்தால் என்ன? கண்ணன் ஆசைப்பட்டு வலம் வந்தால் போதாதா?

மயிற் பீலி அசைய அசைய, அவன் வலம் வரும் அழகே அழகு!
மானச சஞ்சரரே! மானச சஞ்சரரே!
அதை நானே கெடுப்பேனா? நானே கெடுப்பேனா?

கேசவன் பொறாமை பிடித்து, வீதியுலாவில் மற்ற யானைகளோடு, முரண்டும் பிடிக்கவில்லை! சண்டைக்கும் செல்லவில்லை!
மற்ற பளு தூக்கும் வேலைகளுக்குத் தயங்காது வந்து நிற்கும்! வேலை செய்யும்!
ஆனால் அதன் கண்களில்? கண்களில்?......அது மட்டும் நிற்கவே இல்லை!

பாகன்களுக்குப் பயம் வந்து விட்டது! யானையின் கண்ணில் தொடர்ந்து நீர் கோர்த்த வண்ணம்!
ஒரு நாளில்லை ஒரு நாள், மதம் பிடித்து விடும் என்று நினைத்து விட்டார்கள்!

ஆனால் மதமாவது? ஒன்றாவது?
குருவாயூரப்பனிடம், தனக்கு"ம்" உரிமை இருக்கு என்று நிலை நாட்டிக் கொள்ள, பாவம்...மட நெஞ்சம், அதற்குத் தெரியவே இல்லை!
அவனே ”கதி” என்ற நிலையில்...”சரணா கதி” என்ற நிலையில்...

தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை...
அவனைக் குருவாயூரப்பனும் கைவிட்டு விட்டானோ? :(



1970 மார்கழி மாசம் - குருவாயூர் ஸ்ரீகோயிலில் ஏகாதசி விளக்கு விழா!
விளக்கு மாடம் முழுக்க சுடர்விடும் விளக்குகள்!
அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்ற கோஷங்கள்!

நம்ம கேசவன் மேல் மாயக் கண்ணன் உலா வர வேண்டிய முறை!
ஆனால் ஸ்ரீவேளி உற்சவத்தை இன்னொரு யானையைக் கொண்டு முடித்து விட்டார்கள்! கோயில் நடை சார்த்தப்பட்டது!
கோயிலுக்கு வெளியே கொட்டடியில் படுத்துக் கொண்டான் கேசவன்! வாரணத்துக்கு ஆயிரம் கனவுகள்! - வாரணமாயிரம் கனவுகள்!

"அதிகாலை நேரத்தில் சூரியன் தன்னிடம் இதமாகத் தானே இருந்தது?
ஆனால் பிற்பாடு சுயரூபம் காட்டி விட்டதே! இப்போ இப்படிச் சுடுகிறதே!
சரி, இனி நம்ம வழி நமக்கு! அவனுக்கு மலர வேணாம் என்று ஒரு தாமரைப்பூ நினைத்திடுமா?

அது போல், என் துயரை நீ வீட்டா விட்டாலும் பரவாயில்லையடா!
உனக்கு அல்லால்,
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!
"

ஈரமே வாழ்வாகிப் போன கேசவனின் தூங்கிய கண்களில் மெல்லிய ஈரம்...நீரில் இருந்து நெருப்பு வருமா என்ன?
பஞ்ச பூதத் தத்துவம் என்ன சொல்லிற்று? = அக்னியில் இருந்து நீர் உண்டானது! அக்னையே இதம் நமம!
அன்றைய ஏகாதசி இரவில் பற்றிக் கொண்டது! - தீ! தீ! தீ!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்! - தீ! தீ! தீ!

மேற்குச் சுற்றம்பலத்தில் பிடித்துக் கொண்ட தீ, கூத்தம்பலத்துக்குப் பரவி, கிடு கிடுவென்று வளர்ந்து, நாலம்பல விளக்கு மாடங்களைப் பற்றிக் கொண்டது!
ஏதோ புகைச்சல் வாசனை பார்த்து, யாரோ கூவ, ஒரு சிலர் மட்டும் விழித்துக் கொண்டு பதறினார்கள்!

யானைகளை அவ்வளவு சீக்கிரம், அதுவும் தூக்கத்தில் இருந்து எழுப்ப முடியுமா என்ன?
அம்பலத்தைத் தன் பார்வையில் இருந்து அகற்றாத கேசவன் மட்டும், நெருப்பைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு, எழுந்து ஓடினான்!

"ஐயோ! என் செல்வப் பிள்ளைக்கு என்ன ஆயிற்றோ? என் சின்னிக் கண்ணனுக்கு என்ன ஆயிற்றோ? "
அதிகம் பிளிறாத கேசவன், அன்று நள்ளிரவில் படு பயங்கரமாகப் பிளிறினான்! - "என்டே குருவாயூரப்பா"!

கேசவன் பிளிறலில் மொத்த குருவாயூரும் விழித்துக் கொண்டது! அவனோ நாலம்பல நடையைச் சுற்றிச் சுற்றி வருகிறான்!
புதிய மண்டபம் கட்டுவதற்காக வைக்கப் பட்டிருந்த மணல் மூட்டைகளை, ஒரே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து, அவன் தொம் தொம் என்று போட...

ஊரே திரண்டது! மணல் கொண்டு வீசியது! தீயணைப்புத் துறை சற்று நேரம் கழித்து வந்து நீரைப் பாய்ச்ச, மொத்த அம்பலமும் மொத்தமாய்க் குளிர்ந்தது!

அனைவரும் உள்ளே சென்று பார்க்க...
இன்னும் மூனே மூனு அடி தான்! கருவறைச் சுவர்!
அது வரை அத்தனையும் மொத்தமாய் கருகி இருக்க...
ஸ்ரீகோயில் வாசல் மாலைகள் மட்டும் கருகாமல் இருக்க...
ஸ்ரீகோயில் தப்பியது! சின்னிக் கிருஷ்ணன் தப்பித்தான்!

துவாரகையில் கண்ணனே வழிபட்டு, பின்னர் உத்தவர் வழிபட்டு,
குருவும் வாயுவும் அந்த விக்ரகத்தைக் கொண்டு வந்து,
அம்மையப்பனான பார்வதி பரமேஸ்வரன் அருளால் பிரதிட்டை செய்யப்பட்ட அந்த.....
குருவாயூரப்பன் தப்பித்தான்! குருவாயூரப்பன் தப்பித்தான்!


மக்கள், கேசவன் மனசைப் புரிந்து கொண்டார்கள்!
கேசவன் "ஈகோ" பிடித்த ஜீவன் அல்ல! "கண்ணனை"ப் பிடித்த ஜீவன் - என்பதை லேட்டாகப் புரிந்து கொண்டார்கள்.......
என்ன பிரயோஜனம்?......அவனோ மனத்தளவில் மிகவும் தளர்ந்து போய் விட்டான்! - கேசவனைப் பாடவும், நீ கேட்டே, கிடத்தீயோ?

மேல்சாந்திகளும், தந்த்ரிகளும், கடுமையான சாஸ்திர சட்டங்களால் ஆளும் குருவாயூரில்,
மனிதர்களுக்கே பல சமயம் நீதி கிடைப்பதில்லை! ஒரு யானைக்கா நீதி கிடைக்கப் போகிறது?

நெஞ்சுக்கு நீதி - அதை யார் தருவார்கள், போயும் போயும் ஒரு யானைக்கு? = நிமலன் நிர்மலன் "நீதி" வானவன்! அவன் அல்லவா தர முடியும் "நெஞ்சுக்கு நீதி"!

குருவாயூரப்பன் ஸ்ரீவேளியான "திடம்பு", மீண்டும் கேசவன் மேல் ஏறியது!
கேசவன் வெகு நாள் கழித்து, முன்னங் கால்களை மடித்தான்!

ஸ்ரீவேளி பிடித்தவர், அவன் கால் மேல் ஏறி, அவன் மேல் ஏறினார்!
பின்னங் கால்கள் வழியாகப் பலரும் ஏறினார்கள்!
குடை பிடிப்பவரும், சாமரம் ஆட்டுவரும், மயில்தோகை விசிறி வீசுவரும் ஏறினார்கள்!

நெடுநாள் கழித்து நடையழகு!
மீண்டும் கேசவன்-கண்ணன் உலா!


வண்ண மாடங்கள் சூழ் "குரு வாயூர்"
"கண்ணன்-கேசவன்" நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!


Dec-1976......இன்றைய நாள்...அன்று! மோட்ச ஏகாதசி என்னும் வைகுந்த ஏகாதசி!
குருவாயூரப்பன் "திடம்பை", கேசவன் மேல் ஏற்றுகிறார்கள்!
ஏற்றிய சில வினாடிகளிலேயே,
கீழே, சரி சரி சரி எனச்.....சரிந்து விழுகிறான் கேசவன்! ஐயோ!!!

அவசரம் அவசரமாக, "திடம்பை", இன்னொரு யானைக்கு மாற்றுகிறார்கள்!
தொடங்கிய புறப்பாட்டை முடிக்கணுமே! சாஸ்திர விதி ஆயிற்றே!

மூச்சு இழுக்க இழுக்க........
ஹோய் கேசவா.....உனக்கா இந்த மரண அவஸ்தை?

இன்னொரு யானையின் மேல், குருவாயூரப்பன் உலா வரும் அழகை,
இன்பமாகப் பார்த்து முடித்தான் கேசவன்!
வீதியுலா முடிந்தது! ஸ்ரீவேளி முடிந்தது! மாறிலா அன்பும் முடிந்தது!
வைத்த கண் வாங்கவில்லை! உயிரை மட்டும் வாங்கிக் கொண்டான்!

எம்பெருமான் ஸ்ரீவேளி முன்பாக,
அந்த மயிலிறகின் முன்பாக,
அந்த மதி வதனம் முன்பாக,
சிரித்த சிறு செவ்விதழ்கள் முன்பாக,
கலைத்த அந்த தலைமுடியின் முன்பாக,
துதிக்கையை நீட்டி விரித்தபடி,
துதிக்-"கையை" நீட்டி விரித்தபடி,

"சரணம்" என்று வாயால் சொல்லக் கூடத் தெரியாது...
அனன்ய சரணஹ, த்வாம் சரணம், சரணம் அஹம் பிரபத்யே!
ஸ்ரீமன் நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

புகல் ஒன்று இல்லா அடியேன்....
மோட்ச ஏகாதசியான வைகுந்த ஏகாதசியும் அதுவுமாய்.....
அகலகில்லேன், உன்னை அகலகில்லேன் என்று உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!



தன் மேல் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை, கண்ணன் வீதியுலா கண்டால் போதும் என்று இருந்த ஜீவன் அல்லவா? அதன் இயற்கையான கம்பீரம் குறைந்து, இப்படி மனத்தளவில் தளர்ந்து, அதன் கதி இப்படி முடிந்து விட்டதே!

தன் கால்களைத் தானே, வேறு யாருக்கும் மடக்காது இருந்தான்?
வேறு யாரும் கண்ணனிடம் செல்வதைத் தடுத்தானா என்ன?
மடக்காது இருத்தலுக்கும், தடுக்காது இருத்தலுக்கும் கூடவா, மாந்தர்க்கு வித்தியாசம் தெரியவில்லை?

அவன் மனத்திலா பொறாமை? ஆணவம்?
அவன் மனத்திலா "தனக்கு மட்டுமே" என்கிற ஒரு எண்ணம்?
தனக்கு ஒத்து வரவில்லை என்பதால், அவனைத் தள்ளி வைக்கும் அளவுக்கா, ஒரு பாழும் வெறி?

அவனையா ஒதுக்கி வைக்க முடிந்தது? உதாசீனப் படுத்த முடிந்தது?
அவனுக்கா பசியைக் கொடுத்து, தனிமையைக் கொடுக்க முடிந்தது?

யார் பெற்ற பிள்ளையோ?
மாயங்கள் செய்யும் மாயோனிடம் மனதைக் கொடுத்து,
இப்படி மண்ணில் இன்று விழுந்து விட்டதே!

அவாவறச் சூழ் ”அரியை அயனை அரனை” அலற்றி
அவா அற்று, வீடு பெற்ற, குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார்......
பிறந்தார் உயர்ந்தே-உயர்வற உயர் நலம், துயர் அறு சுடர் அடி, தொழுது எழென் மனனே!

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

வாழைப்பந்தல் கிராமத்தில், சின்னஞ் சிறு வயதில்...அன்று கண்ட காட்சி...

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!
ஆனை பரிமேல் அழகர் வந்தார் வந்தார்!
கச்சி தன்னில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்!
கருத வரம் தரும், வரதப் பெருமாள் வந்தார்!

முக்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்!
”மூமூமூலம்” என ஓஓஓலம் இட, வல்லார் வந்தார்!


வாழைப்பந்தல் கிராமத்தின் கஜேந்திர வரதராஜப் பெருமாளே! ஆனைக்கு அருளிய அருளாளப் பெருமாளே!

ஹே பெருமானே,
இந்த யானைக்கு முக்தி கொடு! உன்னைக் கொடு!
யம்மாடி கோதை,
இந்த யானைக்கு இனி உன் வீடே வீடு! இதைச் சேர்த்துக் கொள்!

இந்தக் கால் மடங்கா யானைக்கு...
வேறெங்கும் அகங் குழையா யானைக்கு...
பிறர் வீட்டில் ஏறத் தானே மதிப்பில்லை?
உன் "வீட்டில்" ஏற, மிக்கதோர் மதிப்புண்டே!


கேரள அரசு, கேசவனைக் "கஜராஜன்" என்று பிற்பாடு கொண்டாடி...
குருவாயூர் வீதியிலே, பன்னிரெண்டு அடிச் சிலையாக எழுப்பியது!

"வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!" என்று...
இன்றும் எம்பெருமானைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்...
ஐந்தறிவு மட்டுமே கொண்ட அவனுடைய அவன்!

ஐந்து-அறிவால் அறிந்து, உன் இரு-தாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே!
அழகான செம்பொன் மயில் மீது அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!


உன் பேரையே என்றென்றும் சொல்லிய,
என் அலை-வாய்க்கு உகந்த பெருமாளே!
Read more »

Tuesday, December 22, 2009

நம்பன் நரசிம்மன்


பெரியாழ்வாரின் திருக்கோட்டியூர் பெருமையும், புராணமும் தொடர்கின்றன ...

***
கொம்பின் ஆர் பொழில்வாய்* குயிலினம்
கோவிந்தன் குணம் பாடு சீர்*

செம்பொன் ஆர் மதில் சூழ்*
செழுங்கழனி உடைத் திருக்கோட்டியூர்*

நம்பனை நரசிங்கனை*
நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால்*

எம்பிரான் தன் சின்னங்கள்*
இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே.
நாவகாரியம் 4-4-9

கிளைகள் நிறைந்த சோலைகளிலே, குயில் கூட்டங்கள் கோவிந்தன் குணம் பாடுகின்ற இரைச்சலும், சுத்தமான பொன் பொருந்தியுள்ள மதில் சுவர்களாலே சூழப் பெற்றதும், வளம் மிகுந்த வயல்களை உடையதும் ஆன திருக்கோட்டியூரில் வாழும் கடவுளான நரசிம்மனைத் துதிப்பவர்களைக் கண்டால், 'இவர்களே எம்பெருமான் இருப்பதன் அடையாளம் என்று நினைத்து, என் ஆசைகள் தீரப் பெறுவேன்'.

கொம்பு - மரக் கிளை; ஆர் - நிறைந்த, பொருந்திய; சீர் - இரைச்சல், பாட்டுச் சத்தம், சீரான; நம்பன் - கடவுள்)

மரமில்லாது கிளையா? மரங்களா, அல்லது கிளைகளா? ஆழ்வார் குழம்பி விட்டாரோ?
***

ரங்களும், புதர்களும் அடர்ந்து இருந்தால் அது காடு! அங்கு குயில், மயில் போன்ற பறவைகள் இருந்தாலும், கழுகு போன்ற பறவைகளும் உண்டு. பயங்கர மிருகங்களும் இருப்பதால், மனிதர்களும் இருக்க மாட்டார்கள்!

மரங்கள் மிகவும் அதிகமில்லாமல், ஆனால், கிளைகள் அதிகமாகப் படர்ந்து, அங்கு நிழல் அதிகமாக இருந்தால் மட்டுமே அது சோலை! இங்கு தான் மயிலும், குயிலும் அழகாகப் பாடும்! மனிதர்களும் ஓய்வு எடுக்க இயலும்!

இப்படிப்பட்ட சோலைகள் அதிகம் இருப்பதாலேயே, 'மரம் ஆர் பொழில்' என்னாமல், 'கொம்பு ஆர் பொழில்' என்கின்றாரோ ஆழ்வார்?

திருக்கோட்டியூர் கோயில் மதிலில் தங்கம் இருக்கின்றதாம்! ஊரில், செழுமையான வயல்களும் இருக்கின்றதாம்!

அடியேன் இரண்டு வருடங்களுக்கு முன் (கோயில் மதிலில் உள்ள தங்கத்தை கொஞ்சம் சுரண்டி எடுக்கலாம் என்று ஆசைப்பட்டு) திருக்கோட்டியூர் சென்ற பொழுது மதிலில் தங்கமே இல்லை (இது வரைக்கும் தங்கத்தை விட்டு வைத்திருப்பார்களா என்ன?)!

தங்கம் உள்ள மதிலும் திருக்கோட்டியூருக்கு ஒரு சிறப்பு தானே?

***

விட்ட கதையை மீண்டும் தொடலாமா?

மந்தர மலைக்கு சென்று தவம் செய்து, இரணியன் பிரமனிடம் இருந்து வரங்களைப் பெறுகிறான். இவன் பெற்ற வரங்களை, பாகவதம், கம்ப ராமாயணம் வாயிலாக ஏற்கனவே நாம் குறிப்பிட்டாலும், சூடுவாரின் பாடலையும் பார்த்து
விடலாம் (ஒரே ஒரு பாடல் தான்)!

பங்கயப் பொகுட்டின் மேலான்
படைத்தன தம்மின் மாளான்;

அங்கண் வானுலகின், மண்ணின்,
அகத்தினில், புறத்தினில் துஞ்சான்;

கங்குலும், பகலும் மாயான்;
கனல் உமிழ் படையின் பொன்றான்;

வெங்கண் வாள் அவுணன் பெற்ற
வரனை என் விளம்புகேம் ஆல்.
1624

பாகவதத்திலோ, நரசிம்ம புராணத்திலோ, விஷ்ணு புராணத்திலோ, கம்பராமாயணத்திலோ, சூடுவார் பாகவதத்திலோ, இரணியன் முதலில் 'சாகா வரம்' கேட்டதாகக் கூறப்படவில்லை (தன் தாய்க்குக் கூறும் உபதேசத்தில், 'பிறந்தால் கட்டாயம் இறக்க வேண்டும்' என்றும் சொல்கிறான்).

இப்படி வரம் பெற்ற இரணியன், மூவுலகிலும் யாராலும் அழிக்க முடியாத அரசனாக, 71 சதுர் யுகங்கள் ஆள்கிறான்.

அதுவரை? தேவர்கள்? பாவம்!
***

இடம்:
ஒளிந்திருக்கும் இடம்
நேரம்: பயப்படும் நேரம்

(இரணியனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள், உதவியை நாடி, கைலாயம் செல்கின்றனர்)

தேவர்கள்: ஈசனே! சரணம்!

ஈசன்: ஏம்பா தவம் செய்யும்போது தொந்தரவு பண்ணறீங்க!

தேவர்கள்: பிரபோ! இரணியன் லொள்ளு தாங்க முடியலை!

ஈசன்: வரம் கொடுத்த பிரம்மாவிடம் போங்க! நானும் கூட வந்து நல்லா நாலு வார்த்தை கேக்கறேன்!

(எல்லோரும் பிரமனிடம் செல்கின்றனர்)

பிரமன்: வாருங்கள் ஈசனே! தேவர்களே! இன்னும் யாருக்காவது நான் வரம்
கொடுக்கணுமா?

இந்திரன்: ஐயோ! இனிமேல் நாங்கள் யாருக்கும் 'Recommendation'-க்கு உங்களிடம் வரமாட்டோம்!

பிரமன்: பின்னே இப்போ எதுக்கு வந்தீங்க?

இந்திரன்: வரம் கொடுத்தா மட்டும் போதுமா? அதிலிருந்து மீள வழியை யார் சொல்லுவாங்களாம்?

பிரமன்: என் வேலை வரம் கொடுப்பது மட்டும் தான்! காக்கும் கடவுள் தான் உங்களைக் காக்க வேண்டும்!

(கை விரிக்கிறார் அவர்)

ஈசன்: வாருங்கள்! எல்லோரும் பரந்தாமனிடம் செல்வோம்!

(பாற்கடலில், இவர்கள் பிரச்சனையைக் கேட்கிறார் நாராயணன்)


பரந்தாமன்: இரணியன் ஆதிக்கம் எங்கும் உள்ளது. அவன் ஆதிக்கம் எங்கும் இல்லாத இடம் சொல்லுங்கள்! அங்கு சென்று ரகசியமாய்ப் பேசி முடிக்கலாம்!

பிரமன்: பூவுலகில், கதம்ப முனிவர் தவம் செய்யும் வனம் தான் அவன் ஆதிக்கம் இல்லாத இடம்! அங்கு மட்டும் தான், அவர் செய்யும் தவத்தால் எப்போதும் நாராயண நாமம் ஒலிக்கின்றது!

பரந்தாமன்: வாருங்கள்! எல்லோரும் அங்கு செல்வோம்!

(எல்லோரும் கதம்ப வனத்திற்குச் செல்கின்றனர்)

***

இடம்: கதம்ப வனம்
நேரம்: கூட்டம் கூடும் நேரம்

(கதம்ப வனத்தில், எம்பெருமானை நோக்கித் தவம் செய்து கொண்டிருக்கிறார்; ஆனால், மும்மூர்த்திகளும் இங்கு! அவர்களுடன் அங்கு, முப்பத்து முக்கோடி தேவர்களும்! எல்லோரும் அருகே இருந்தும், அவர்களைப் பார்க்கத் தவம் செய்கிறார் கதம்ப ரிஷி!)

(சிறிது நேர உரையாடலின் பின் ...)

பரந்தாமன்: அவனுடைய முடிவை நான் செய்யப் போகிறேன். அந்தக் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

(அருகில் இருக்கும் சங்கு கர்ணனைப் பார்த்து)

நீ சென்று இரணியன் மனைவி வசந்தமாலையின் வயிற்றில் பிரகலாதனாகப் பிற!

முற்றிலும் அடங்கியவனாகிய தன் புதல்வனும், என் பக்தனுமாகிய பிரகலாதனுக்கு எப்பொழுது இரணியன் துரோகம் செய்கிறானோ, அப்போது வரங்களால் பலமுள்ளவனகிலும், நான் தோன்றி, இரணியனைக் கொல்வேன்'.

(இதைக் கேட்ட தேவர்கள் ஆரவாரம் செய்கின்றனர்!)

ஏற்கனவே, மரக்கிளைகளில் உள்ள குயில்கள் கோவிந்தனின் குணம் பாடுவது சத்தமாக இருக்கும்! இப்பொழுது, 33 கோடி தேவர்களும் ஆரவாரம் செய்தால் எப்படி இருக்கும்?

(ஆஹா ... போட்டுட்டான்யா நச்சுன்னு நங்கூரத்த ... கதைக்கும், பெரியாழ்வார் பாசுரத்தில் வரும் மரக்கிளைக்கும், குயில்களுக்கும்!’ என்று நினைக்கிறீர்களா?)

அதுக்குத் தான் பெரியாழ்வார் போன பாசுரத்திலேயே, எல்லாம் ‘Adjust' ஆயிரும்னாரே! ஹி ... ஹி ...


***

வங்க இருந்து பேசின இந்தக் கதம்ப வனம் தாங்க நம்ம திருக்கோட்டியூர்!

நரசிம்மாவதாரம் துவங்கியது இங்க தானுங்க! தூணில் இல்லீங்க!

மேலே கூறிய கதை வருவது, ப்ரம்ம வைவர்த்த புராணம், மற்றும் பிர்ம்மாண்ட புராணத்தில் (பாகவதத்திலும், நரசிம்ம புராணத்திலும் இல்லை)!
இந்தத் தலத்தின் பழைய பெயர், திரு + கோஷ்டி + ஊர். அதாவது, திரு (மும்மூர்த்திகள், தேவர்கள்) கோஷ்டியாய் (கூட்டமாய்) இருந்த ஊர்!

மும்மூர்த்திகளும் இங்கு இருந்ததால், இந்த ஊரின் பெயர், திருக்கு + ஓட்டி + ஓர். அதாவது, பாவங்களை ஓட்டக் கூடிய ஊர்!

இரணிய வதம் முடியும் வரை, தேவர்கள் இங்கு ஒளிந்து இருக்கின்றனராம்! பின்னர் தவம் கலைந்த ரிஷி, இந்திரனிடமிருந்து நடந்ததை அறிகிறார்.


இந்திரன், அவர் வேண்டியதற்கு இணங்க, விஸ்வகர்மா, மயன் இருவரையும் அழைத்து, தேவலோகத்தில் இருப்பது போன்ற அஷ்டாங்க விமானத்தை இங்கு அமைத்துக் கொடுக்கிறான்! மூன்று அடுக்குகள் கொண்ட இந்த விமானம் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி! தனிக் கலை அமைப்பு!

இந்த விமானத்தின் வடபகுதியில், இரணியனைக் கொன்ற நரசிம்மன் உருவமும் (வடக்காழ்வான்), தென் பகுதியில், இரணியனைப் பிடித்துக் கொண்ட நரசிம்ம உருவமும் (தட்சிணேஸ்வரன்) உள்ளன. இவை, காண்போரைப் பிரமிக்கச் செய்யக் கூடியவை!

கோயிலின் உற்சவர் சௌம்ய நாராயணன், மற்ற கோயில்களின் உற்சவர்களைப் போல் பஞ்ச லோகத்தில் இல்லாது, தூய வெள்ளியில் இருக்கின்றார்! இது, கதம்ப ரிஷிக்கு இந்திரன் அளித்ததாக ஐதீகம்!

இந்தப் பெருமை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

***

'ம்பனை, நரசிங்கனை' என்கிறார் ஆழ்வார்!

நம்பன்’ என்றாள், கடவுள்! ஆனாலும், இவனை நம்பியவர்களான பிரகலாதன், கஜேந்திரன், திரௌபதி போன்றோரை, கூப்பிட்டவுடன் உடனே காக்கின்றானாம்! எனவே, இவன் ‘நாம் நம்பத் தகுந்தவன்' என்கிறாரோ ஆழ்வார்?

கோயிலின் முதல் தெய்வம் நரசிம்மன்! எனவே, நம்பனை, நாராயணனை என்னாது, 'நம்பனை, நரசிங்கனை' என்கின்றார் ஆழ்வார்!

தான் எம்பெருமானைப் பார்க்காவிட்டாலும், நரசிம்மனைப் பாடுபவர்களைக் கண்டால், 'அவன் இருக்கின்றான்! இவர்களே அவன் அடையாளங்கள்! இவர்களைப் பார்த்தால், அவனைப் பார்த்தது போல் ஆயிற்று! என் ஆசைகள் தீரும்' என்று, பாகவதர்களின் ஏற்றத்தையும் கூறி, பாசுரத்தை முடிக்கிறார்!

- நம்பனே சரணம்!

Read more »

Wednesday, December 16, 2009

திருக்கோட்டியூர் நரசிம்மன்


தற்கு முந்திய இரண்டு திருமொழிகளில் (4-2, 4-3), திருமாலிருஞ்சோலையில் (மதுரை அழகர் கோயில்) வசிக்கும் எம்பெருமானை ரசித்த பெரியாழ்வார், அடுத்து, திருக்கோட்டியூர் எம்பெருமானை ரசிக்கிறார்.

திருக்கோட்டியூர் எம்பெருமானை, மனம், மொழி, உடலால், 'நாவகாரியம்' (4-4) எனும் திருமொழியில் எம்பெருமானை அனுபவிக்கின்றார் பெரியாழ்வார். இப்படி, தன்னைப் போல் எம்பெருமானை அனுபவிக்காதவரை, பழிக்கவும் செய்கிறார் இத் திருமொழியில்.

இதில், நரசிம்மனை, 2 முறை அழைக்கிறார்.

***

பூதம் ஐந்தொடு, வேள்வி ஐந்து* புலன்கள் ஐந்து, பொறிகளால்*
ஏதமொன்றும் இலாத* வண் கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்*
நாதனை, நரசிங்கனை* நவின்று ஏத்துவார்கள் உழக்கிய*
பாததூளி படுதலால்* இவ்வுலகம் பாக்கியம் செய்ததே.
நாவகாரியம் 4-4-6

ஐந்து பூதங்களாலும், ஐந்து வேள்விகளாலும், ஐந்து புலன்களாலும், ஐந்து பொறிகளாலும், சிறிதும் குற்றமில்லாத உதாரமான கைகளை உடையவர்கள் வாழும் திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள தலைவனாகிய நரசிம்மனைத் துதிக்கும் அடியவர்களின் திருவடிகள் பட்ட தூசிகள் (உலகத்தில் அங்குமிங்கும்) படுவதால் இந்த உலகம் பாக்கியம் செய்தது.


(ஐந்து பூதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்; ஐந்து வேள்வி - பிரம்ம, தேவ, பூத, பித்ரு, மனித வேள்விகள்; ஐந்து புலன்கள் - மெய், வாய், கண், மூக்கு, செவி; பொறிகள் - சுவை, ஒலி, ஊறு, ஓசை, நாற்றம்; ஏதம் - குற்றம்; வண்கையினர் - உதாரமான கைகள் உடையவர்கள்; உழக்கிய - மிதித்த; தூளி - தூசி)

***
ந்து பூதங்கள் - பஞ்ச 'மஹா' பூதங்கள் - இந்த அகிலத்தின் எந்தப் பொருளும், உயிரும், இந்த ஐந்தின் கலவையே! இவையே உலகின் ஆதாரம் (நம் உடலும் தான்)! எனவே, இந்த ஐந்தைத் தான் முதலில் கூறுவர் பெரியோர்!

பிரம்ம வேள்வி - வேதம் ஓதுதல்
தேவ வேள்வி - வேள்வித் தீயில் உணவில் ஒரு பகுதியை இடுதல்
பூத வேள்வி - நாய், பூனை, காக்கைக்கு உணவிடுதல்
பித்ரு வேள்வி - தர்ப்பணம் செய்து உணவின் ஒரு பகுதியை அளித்தல்
மனித வேள்வி - விருந்தினருக்கு உணவளித்தல், தானம் செய்தல்.

புலன்கள் ஐந்து! பொறிகள் எத்தனை? புலன்கள் ஐந்திற்கும், ஒவ்வொரு கடமை! உணர்வது! எனவே, பொறிகளை 'ஐந்து' என்று சொல்லாமல் விட்டு விட்டார்!
ஆழ்வார் ஐந்து பூதங்கள் என்றது, அவைகளால் ஆன நம் உடலையே! இந்த உடலினால் நாம் என்ன செய்ய வேண்டும்?

'இது என்ன அபத்தமான கேள்வி - நல்லா சாப்டு, தூங்கி, 'TV' பார்த்து, 'Party'-களுக்குச் சென்று, 'Enjoy' பண்ணனும்னு தானே!' என்கிறீர்களா?

தொண்டரடிப்பொடியாழ்வார் இதற்குப் பதில் சொல்வார்!

***
வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை*
கொண்டல் மீதணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை*
அண்டர் கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா*
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி* நாய்க்கு இடுமினீரே!
திருமாலை-14

மூன்றாவது வரியின் கடைசியில், 'திருவரங்கம் என்னா மிண்டர்' என்கின்றாரே? இதற்கு என்ன அர்த்தம்?

எம்பெருமான் கொடுத்த வாயினால், நாம் 'அரங்கா!' என்று கூடச் சொல்ல வேண்டாமாம்! அணி அரங்கம் என்று, அவன் இருக்கும் ஊரின் பெயரைச் சொன்னாலே போதுமாம்!

அப்படிச் சொல்லவில்லை என்றால், அவர்கள் நன்றி கெட்டவர்களாம் (மிண்டர்கள்)! அவர்களுக்கு, வாய் இருந்து பயனில்லையாம்! அவன் பெயர் சொல்லாதவர்கள் (வாயினால்) உண்ணும் சோற்றை விலக்கி, நாய்க்கு இடுங்கள் என்கின்றார்!

ஏன் நாய்க்கு இட வேண்டுமாம்? ஒரு நாள் சோறு போட்டாலே நாய், போட்டவரிடம் நன்றியுடன் இருக்குமே! 'மிண்டர்களை விட, நாய்கள் எவ்வளவோ மேல்!' என்கின்றார்!

இனி, குறைந்தது 'அரங்கா' என்று சொல்லி விட்டாவது 'Party'-க¢குச் செல்லலாமே :-)

***
ந்து பூதங்களை - உடலை - முதலில் கூறிய பெரியாழ்வார், பிறகு, அவற்றினால் செய்ய வேண்டியதாக, வேள்விகளைச் சொல்லுகிறார்!

'உடலைப் பெற்ற நீங்கள், அதனால் எம்பெருமானை வழிபடுங்கள்! நம் முன்னோர்களை நினையுங்கள்! தான தர்மம் செய்யுங்கள்!' என்கின்றாரோ?

வேள்விகளுக்குப் பிறகே, நம் புலன்கள், பொறிகள் செய்யும் மற்ற கடமைகளைக் கூறுகின்றார்!உடலாலும், புலன்களாலும், பொறிகளாலும், செய்ய வேண்டியதைச் செய்து வந்தவர்களே 'குற்றம்' ஒன்றும் இல்லாத நல்ல கைகளை உடையவர்களாம் ('ஏதம் ஒன்றுமிலாத வண்கையினார்கள்' என்று, திருக்கோட்டியூர் செல்வ நம்பியையும் சேர்த்துச் சொல்வதாக ஒரு வியாக்கியானம் உண்டு)!

திருமாலிருஞ்சோலை

திருக்கோட்டியூரில் தேவர்களுக்குத் தலைவனான நரசிம்ம மூர்த்தியும் இருக்கிறான்! இப்படி, 'நல்ல கைகளும்', நரசிம்மனும் சேர்ந்து இருப்பதாலேயே (முந்திய இரு திருமொழிகளில் [4-2, 4-3] பாடிய திவ்ய தேசமான திருமாலிருஞ்சோலையை விட) திருக்கோட்டியூர் திவ்ய தேசம் அதிகம் பெருமை உடையதாயிற்றாம்!

திருக்கோட்டியூர்

திருக்கோட்டியூரில் நரசிம்மனா? இது என்ன புதுக்கதை?
***

து ஒன்றும் புதுக் கதை இல்லீங்னா! பெரியாழ்வார், 'நீ முன்னால ஆரம்பிச்சு, நிறுத்தின பழைய கதையை இப்ப 'Continue' பண்ணு; எல்லாம் அடுத்த பாசுரத்தில் 'Adjust' ஆயிரும்' என்று அடியேனுக்குக் கொடுத்த தைரியம் தாங்னா!

இடம்: இரணியன் அரண்மனை
காலம்: 'Advice' காலம்
நேரடி வருணனை: செவ்வை சூடுவார்

(ஜய விஜயர்கள், இரணியகசிபு, இரணியாட்சன் எனும் பலமுள்ள அசுரர்களாக வளர்கின்றனர். வராக உரு எடுத்து வந்த பரந்தாமன் இரணியாட்சனைக் கொல்கிறார். கோபமடைந்த இரணியன், அசுரர் தலைவர்களைத் தன் அரண்மனைக்கு அழைத்துப் பேசுகின்றான்)

'தரையின் மீது போய், "மாயவன் உரு" எனச் சாற்றும்
அரிய வேள்வியே முதலிய அறங்களை அழித்து,
புரியும் அந்தணர் பொன்று உற புரிமினோ!;
புரியின்,
கரிய வன் வலி கெடு உலப்பார் கடவுளரே'.

(தேவர்களுக்கு பலம், மனிதர்கள் வேள்வியில் கொடுக்கும் அவிர்பாகம் தான்! அவற்றைத் தடுங்கள்! தேவர்கள் சக்தி குறைந்து விடும்! பின்னர் நாம் அவர்களை வெல்லலாம்!)

மாபுரங்களை அழித்தனர் சிலர்; பல மணி சேர்
கோபுரங்களை தகர்த்தனர் சிலர்; சிலர் குழுமி
தூபுரங்கள் சூழ் பதத்தினர் நொவ்வுற அலைத்தார்;
ஆபுரங்களைக் செகுத்தனர் சிலர், வெகுண்டு அடர்த்தே.

(உடனே அசுரர்கள் பூமியில் உள்ள நகரங்களை அழித்து, கோயில்களைத் தகர்த்தனர்; தேவ மாதரைத் துன்புறுத்தினர்; பசுக்களைக் கொன்றனர்)

இரணியன் அசுரனாயிற்றே? அடுத்து என்ன செய்ததாக நம் வர்ணனையாளர் கூறுகின்றார்?
***

தம்பி மனைவியான ருஷாபானுவும், அவளுடைய 7 மக்களும் அழுகின்றனராம்! இதைப் பற்றிக் கவலைப் படாது, தம்பி மனைவியை அபகரிக்க நினைக்கிறானாம் இரணியன்! ஆனால் தன் தாயான திதியும் அழுவதால், எல்லோரையும் மயக்க, அவர்களுக்கு 'உபதேசம்' செய்கிறானாம் இரணியன்!

'சுயக்ஞன் எனும் அரசன் போரில் கொல்லப்பட, அவன் உறவினர் அழுகின்றனர். யமன் அங்கு தோன்றி அவன் உறவினருக்கு உபதேசம் செய்கிறான் (இதற்குப் பெயர் தான் Advice-க்குள்-Advice)!

'கண்ணி வீழ்ந்து; அதன் பெடையினை கலந்து அழுகுலில், இங்கு அம்
மண்ணின் வீழ் தர, மாய்த்தனன் வாங்குவில் வேடன்;
எண்ணி மாய்ந்தவற்கு இரங்கல் என்? இறக்கும் இவ்வுடல்;' என்று
அண்ணல் நல்லறக் கடவுள் சொற்றனன்; அவர் தெளிந்தார்.

(உடம்பு என்று இருந்தால், என்றாவது இறக்கும். அதனால், 'அழுகாச்சியை' விட்டு, அடுத்த வேலையைப் பார்!)

(மீண்டும் வர்ணனையாளர் தொடர்கிறார்)

'அன்னை நீ துயர் நீங்கு' என அறைதலும், திதிதான்
இன்னல் தீர்ந்தனள்; இருந்தனள்; இரணியன் ஏகி,
மின்னின் மாய் உடல் விளிவுறா வரம் பெறல் வேண்டி,
மன்னு மாதவம் வளர்ப்ப நன் மந்தரத்து அடைந்தான்.

(இதைக் கேட்ட திதிக்கு மனம் தெளிகிறது; இரணியன், இறக்காமல் இருக்க வரம் வேண்டி தவம் செய்ய மந்தர மலை அடிவாரம் செல்கிறான்)

இத்துடன், பெரியாழ்வார் கதையை நிறுத்தச் சொல்கிறார் ... ஹி ... ஹி ...!

***

ந்த நரசிம்ம மூர்த்தியைப் பார்க்க வருகின்றார்களாம் அடியவர்கள்!

ஏற்கனவே திருக்கோட்டியூருக்குச் சிறப்பு நரசிம்மாரால்! அதிகம் சிறப்பு 'நல்ல கைகளால்'! இன்னும் சிறப்பு, நரசிம்மன் பெயரைச் சொல்லும் அடியவர்களின் பாத தூளி திருக்கோட்டியூரில் இருந்து, இந்த உலகத்தில் படுவதால்!

திருக்கோட்டியூருக்கு இவ்வளவு சிறப்பா, இல்லை இன்னும் இருக்கிறதா?

- திருக்கோட்டியூர் வைபவம் தொடரும்!

Read more »

Monday, December 07, 2009

நரசிம்மனைப் பார்த்தீரா?


இடம்: ஒரு மண்டபம்
காலம்: கலியுகம்
நேரம்: கேள்வி நேரம்

(மண்டபத்தில், ஒரு பாகவதர் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார்; ஒரு கூட்டம் அதை உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது)

ஒரு பக்தன் (திடீரென எழுந்து): ஸ்வாமி! ஒரு கேள்வி கேட்கலாமா?

பாகவதர்: தாராளமாக!

பக்தன்: நான்முகனும், நீலகண்டனும் நாளும் நாடும் நாராயணனை நாம் எங்கு நோக்கலாம்?

பாகவதர்: கண்ணனே நாராயணன்! ருக்மிணியை வலியக் கைப்பற்றி, தேரில் ஏற்றிக் கொண்ட கண்ணனுடன் ருக்மிணியின் அண்ணன் போரிட வருகின்றான். அப்போது இருவருக்கும் நடந்த போரை நன்றாகக் கண்டவர் உளர். கண்ணனைப் பார்த்தால் நாராயணனைப் பார்த்த மாதிரித் தானே!


பக்தன்: யார்? அந்தச் சிறுவனா? அவன் பொல்லாதவன் ஆயிற்றே? தாய் போன்ற பூதனையின் முலையைச் சுவைத்து அவள் உயிர் உண்டதாகச் சொல்வார்களே? பெண்கள் மீது இரக்கமற்றவன் தானே இப்படிச் செய்ய முடியும்?

பாகவதர் ('ஐயோ! மீண்டும் பூதனையா!' என்ற முனகலுடன்): அப்படிப் பேசாதே! அந்தக் கண்ணனே, கம்சன் அடைத்து வைத்திருந்த பதினாயிரம் கன்னிகைகளை விடுவித்து, தானே அனைவரையும் மணந்து கொண்டவன்! இவனா பொல்லாதவன்?


கண்ணன் தன் தேவிமார்களொடு, துவாரகையில் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாண்டதைப் பார்த்தவர்கள் உள்ளனர்!

பக்தன் (மீண்டும்): இவன் ஏழு உலகையும் உண்டதாகச் சொல்வார்களே? இதையாவது யாராவது பார்த்திருக்கின்றனரா?

பாகவதர் (சற்று கோபத்துடன்): நீ இன்று இங்கு நின்று, என்னைக் கேள்வியால் துளைப்பது, அன்று நாராயணன் வராக உருவில் கடலைத் துளைத்து, பூமியை வெளிக் கொணர்ந்ததால் தானே? அதற்காகவாவது அவனிடம் கொஞ்சம் நன்றியோடு நடந்து கொள்!


பக்தன்: ஸ்வாமி! குழப்புகிறீர்களே! நாம் கடைக்குச் சென்று கடைக்காரனிடம் 'பச்சரிசி இருக்கின்றதா' என்று கேட்டால், 'புழுங்கரிசி இருக்கு' என்று கடைக்காரன் சொல்வது போல் அல்லவா இருக்கின்றது?

(பாகவதர் பதில் சொல்வதற்குள், பின்னால் இருந்து, 'ஏய்! உக்காருப்பா! Chance கிடைத்தால் போதுமே! பேசிட்டே இருப்பீங்களே!’ என்று ஒரு குரல் ... அதற்கு சில ஆமாம் சாமிகள் கூட ... அங்கு சிறு சலசலப்பு!)

பாகவதர் (எல்லோரையும் பார்த்து): அமைதி! அவன் கேட்கட்டும்!

இன்னொரு பக்தன் (குறிக்கிட்டு): எங்களுக்கும் Chance கொடுப்பா! ... ஸ்வாமிகளே! எம்பெருமானுக்கு, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்குமே! இந்தக் கண்ணனுக்கு அவை இல்லையே?

பாகவதர்: கொடியில் அனுமன் அமர, வெள்ளைக் குதிரைகளின் கடிவாளத்துடன் அருச்சுனன் தேர் முன் அமர்ந்த கண்ணன், அவனுக்கு ஆயிரம் கைகளுடன் விசுவரூப தரிசனம் தந்தாரே? அந்தக் கைகளில் சங்கு, சக்கரம், வாள், தண்டு, வில் அனைத்தும் இருந்தனவே! அவற்றை, இரண்டு பெரும் படைகள் பார்த்தனவே!

அதே பக்தன்: சரி! கண்ணன் நாராயணன் தான்! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ராமன் நாராயணனா?

பாகவதர் (சற்று யோசித்து): இதில் சந்தேகமென்ன? ராமன் மிதிலையில், சிவனுடைய வில்லை வளைத்தானே? சிவனுடைய வில்லை வளைப்பவன் எம்பெருமானாகத் தான் இருக்க வேண்டும்? மேலும் பிராட்டியை வேறு யாரும் மணக்க முடியுமா?

இதை, அங்கு கூடியிருந்த மிதிலை மக்களும், ஸ்வயம்வரத்திற்கு அங்கு வந்த மற்ற மன்னர்களும் பார்த்திருக்கின்றனரே?


அதே பக்தன்: ஸ்வாமி! இன்னொரு கேள்வி!

(கூட்டத்தில் முணுமுணுப்பு ... 'ஸ்வாமிகள் பாகவதம் சொல்ல வந்தால், இங்கு ராமாயணம் ஆரம்பித்து விட்டார்களே!' என்று ஒரு வயதானவர் புலம்புகிறார்)

பாகவதர் (எரிச்சலுடன்): இன்னும் என்னப்பா?

பக்தன்: இந்த ராமன், கண்ணன் எல்லாம் பாரதத்தில் தான் பிறந்தார்கள். ஆனால், கலியுகத்தில் பிறக்கவில்லையே? இந்த ராமனை நாம் இப்போது எங்கு பார்ப்பது?

பாகவதர் (’எப்ப பாத்தாலும் நமக்கு இப்படி ஒருத்தன் வந்து மாட்டுகிறானே’ என்று நினைத்து): அந்த ராமனைத் தேடுகிறீர்களா? மார்பைப் பிளந்து ரத்தத்துடன் அளைந்த கைகளுடன் நரசிம்மம் இருந்ததைப் பார்த்தவர்கள் இருக்கின்றனர்!

இன்னொரு பக்தன் (பாகவதரை மடக்க, வேகமாக எழுந்து): இதுவும் எப்பொழுதோ நடந்தது தானே? நரசிம்மரை இப்போது எப்படிப் பார்ப்பது?

கூட்டத்தில், ஒருவர் (சத்தமாக): 'நீ எப்பொழுதும் நாராயணனை நன்றாகத் திட்டிக் கொண்டிரு! அவர் வந்து உன் மார்பையும் பிளப்பார்; அப்போது உன் மூலம் நாங்களும் நரசிம்மனைப் பார்ப்போம்!

(மண்டபத்தில் சிரிப்பலை!
Tension ஆன பாகவதர், துண்டால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, கேள்விக்குப் பதில் சொல்லாமல், அத்துடன் அன்றைய பாகவதத்தை முடித்துக் கொள்கிறார் ... சபை கலைகிறது)

***

து அடியேன் கற்பனை அல்ல ... பெரியாழ்வார் எழுதியது!

இதற்கு முன், பல பாசுரங்களில் தன்னை யசோதையாக நினைத்து, கண்ணனை அனுபவித்து மகிழ்ந்த பெரியாழ்வாருக்கு, ஒரு புறம் அவனை மீண்டும் நேரில் காணும் ஆவலும், மறுபுறம், அனுபவ முதிர்ச்சியால் எம்பெருமானை ஏற்கனவே நன்கு பார்த்துவிட்ட ஞானமும் வருகிறது! விளைவு?

தானே 'நாராயணனைக் காண வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்டு, தானே, 'அவனைக் கண்டவர்கள் இருக்கின்றார்களே!' என்று பதிலும் உரைத்துக் கொண்டு, ’கதிராயிரம்’ எனும் இத் திருமொழியை இயற்றியுள்ளார்.

ஒவ்வொரு பாசுரத்திலும், முதல் இரண்டு வரிகளில், எம்பெருமானையோ அவனது அவதாரத்தையோ அல்லது அவதார லீலைகளையோ காண வேண்டுமா என்ற கேள்வி! அடுத்த இரண்டு வரிகளில் அதற்குப் பதில்!

(இதே போல் ஸ்ரீ ஆண்டாளும், 'பட்டி மேய்ந்து' [நாச்சியார் திருமொழி-14] எனும் திருமொழியை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது)

(இத்தகைய தமிழ்ப் பாடல்களுக்கு, ’எதிரும் புதிரும்’ என்ற பெயர் உண்டு என்று கேள்விப் பட்டுள்ளேன்! தமிழ் அறிஞர்களே! இது சரியா? பதில் சொல்லுங்கள்! தெரிந்து கொள்கிறேன்)

பெரும்பாலும், ஆழ்வார் கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பு இருந்தாலும், சில பாசுரங்களில் தொடர்பு நேரடியாக இல்லை. இந்தத் தொடர்பிலும் ஆசாரியர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு!

இதில் முதல் பாசுரத்திலேயே நரசிம்மனைப் பார்க்கின்றார் ஆழ்வார்.

***

கதிராயிரம் இரவி கலந்தெறித்தால் ஒத்த நீள்முடியன்*
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்*

அதிரும் கழற்பொருதோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்*

உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டாருளர்.

கதிராயிரம் 4-1-1

ஆயிரம் கதிர்கள் உடைய சூரியன் ஒளி வீசுவதை ஒத்து இருக்கும் நீண்ட முடியை உடையவனும், ஒப்பு இல்லாத பெருமை உடைய ராமன் இருக்கும் இடத்தைத் தேடுகிறீர்களா?

வீரக் கழல் அணிந்தவனும், போர் புரியும் தோள்களையும் உடைய இரணியனின் மார்பைப் பிளந்து, ரத்தத்தை விலக்க அளைந்த கைகளோடு, நரசிம்மன் இருந்ததைப் பார்த்தவர்கள் இருக்கின்றனர்.

(இரவி - சூரியன்; ஆகம் - மார்பு; எதிரில் = எதிர் + இல் - ஒப்பு இல்லாத)

ஆயிரம் கதிரா? ஆயிரம் இரவியா?

***

திர்கள் ஆயிரம் உண்டு ஒவ்வொரு சூரியனுக்கும்! எனவே, இதைச் சொல்வதில் ஒன்றும் புதிதில்லை! ஆனால், எம்பெருமான் நீள் முடி, ஒரு சூரியன் ஒளி மட்டுமே கொண்டதா? இல்லையே?


இங்கு, 'ஆயிரம்' எனும் வார்த்தை, கதிருடனும், இரவியினுடனும் சேரும்! 'கதிர் ஆயிரம், (ஆயிரம்) இரவி கலந்து எறித்தால் போல்' என்று பொருள் கொள்வதே சரி!

பாசுரத்தில், ராமனை, ‘எதிரில் பெருமை இராமனை’ என்கின்றார். தன்னிகர் இல்லாத பெருமை உடையவனாம் ராமன்!

இதற்குப் பொருள் கூற ஆரம்பித்தால், முன்னால் மண்டபத்தில் ஒருவர் கூறியது போல், நரசிம்மாவதாரத்தில் இருந்து ராமாயணம் ஆரம்பித்து விடும். எனவே ராமனுக்கு ‘எதிர் இல்’ என்று ஒப்புக் கொண்டு, பாசுரத்தில் கவனம் செலுத்துவோம்!

ஆழ்வாரின் கேள்வி: இந்த ராமன் உண்மையிலேயே இருக்கின்றானா? அவன் இருக்கும் இடம் தேடுகிறீர்களா?

அவர் பதில்: நரசிம்மன் இருக்கின்றான்! அவன் இரணியனை அன்று மார்பு பிளந்ததை, பலர் பார்த்தனர்!

ராமரைக் கேட்டால் நரசிம்மரைச் சொல்கிறாரே? இன்னொரு ’பச்சரிசி+புழுங்கரிசி’ கதையா? ஒருவேளை ஆழ்வார் வேறு கணக்குப் போட்டாரோ?

***

a=b, a=c என்றால், ஃ b=c என்று தானே அர்த்தம்?

நாராயணன் = ராமன்; நாராயணன் = நரசிம்மன்; ஃ ராமன் = நரசிம்மன்

இது தான் ஆழ்வார் போட்ட கணக்கு!

கணக்கு இருக்கட்டும்! ஆழ்வார் நமக்கு என்ன சொல்கிறார்?

எம்பெருமான் பாற்கடலிலேயே இருந்தால் நம்மால் அவனைப் பார்க்கவே முடியாது! நமக்காக அவன் அவ்வப் பொழுது கீழே வந்து, ’நான் வந்திருக்கிறேன்! பார்த்துக் கொள்’ என்று தரிசனம் தருகிறான்.

எல்லா அவதாரங்களும் ’தானே’ என்று முத்திரையும் காட்டிவிட்டுப் போகிறான்!

இவனை நீங்கள் நேரிலே பார்க்காவிட்டாலும், ’உங்கள் மூதாதையரில் ஒருவராவது பார்த்திருப்பர்’ என்கிறார்!

கலியுகத்தில் அவன் இன்னும் வரவில்லை! நமக்கு தரிசனம் தருவதற்காகவே கோயில்களில் இருக்கிறான்!


நரசிம்மன், கைகளில் ரத்தத்துடன் இருந்ததைப் பலர் பார்த்தனராமே? யார் அவர்கள்?

***

செவ்வை சூடுவார், சுமார் ஐந்நூறு ஆண்டுகள் (சிலர் 300 என்பர்) முன்பு வாழ்ந்த புலவர்! 'தமிழில் பாகவதம் இல்லையே' என்ற குறையைத் தீர்க்க அவதரித்தவர்! இவர் ஓலைச் சுவடியில் எழுதிய பாகவதத்தை, உ.வே.சாமிநாத ஐயர் வெளிக் கொணர்ந்தார்! இதிலும் பிரகலாத சரித்திரம் விவரமாக இருக்கின்றது!

இரணிய வதத்தின் பின், எம்பெருமான் இருந்த நிலையை வருணிக்கிறார் இவர்! அவற்றுள் சில பாடல்கள் இதோ:

கழை சுளி களிறு அன்னானை, கவானிடைக் கிடத்தி, மாலைக்
குழவி வெண் திங்கள் அன்ன கூருகிர் நுதியின், பைந்தேன்

பொழி மலர் அலங்கல் மார்பம் போழ்ந்து, செங்குருதி ஊறி,

வழி பசுங் குடர் மென் கண்ணி ஆளரி வளைந்தது அன்றே.
1692

யானையைப் போல் இருந்த இரணியனை மடியில் கிடத்தி, சந்திரன் போல் பளபளக்கும் தன் கூர்மையான நகங்களால், மாலை அணிந்த அவன் மார்பைக் கீறி, அவன் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்கிறார் ஆளரி!

ஆர்த்தனர் அமர் ஓடி; அரும்பு அவிழ் பசும்பொற் போது
தூர்த்தனர்; உலகம் உண்ட சுடர் நகைப் பவள வாயும்,

கூர்த்த வாள் உகிரும், கையும், கொழுங்குடர் அணிந்த மார்பும்

பார்த்தனர்; வெருவல் உற்றார், பனி இரு விசும்பு மொய்த்தார்.
1693


தேவர்கள் இதை ஓடி வந்து, மேலிருந்து பார்க்கின்றனராம் (அதுவரை இரணியனிடம் உள்ள பயத்தால் ஒளிந்து இருந்தவர்கள்)! அன்றே பூத்த மலர்களைத் தூவுகின்றனர்! போட்டி போட்டுக் கொண்டு, அந்தரத்தில் இடம் பிடிக்கின்றனர்!

ஆனால் அவர்கள் பார்த்ததோ ஒரு புதிய உருவத்தை! உலகம் உண்ட அந்தப் பவள வாயையும், கூர்மையான அந்த நகங்களையும், குடல் அணிந்த அந்த மார்பையும்! விசுவ ரூபத்தையும்! தேவர்கள் மட்டுமா பார்த்தனர்? மற்றவர்களும் தான்!

வெஞ்சினத் திகிரி மாயன் வெருவரு தோற்றம் நோக்கி,
கஞ்ச நாண் மலரினானும் கண்ணுதல் பிறரும் அஞ்சி,
செஞ்சுடர் விரிக்கும் போதின், 'தெரிவை! நீ, சேறி!' என்ன,
அஞ்சினள் அணங்கு, நண்ண அவ்வுருக் கண்டு; மன்னோ.
1694

அவனுடைய கோபம் தரும் தோற்றம் காண்கின்றனர், பிரமனும், சிவனும், இந்திரனும்! அருகே செல்லப் பயப்படுகின்றனர்! பிரமன், அருகே நிற்கும் திருமகளைப் பார்த்து, 'தெரிவை! நீ சேறி!' என்று கூறுகின்றான்!

ஆனால் அருகில் செல்ல, திருமகளும் பயப்படுகின்றாள்! ஏன்?

***

தற்கு முன்பு, 'ஆளரிநாதன்' பதிப்பில், அடியேன், 'நரசிம்மனை யாரும் இதற்கு முன் பார்த்திருக்க வில்லை என்பதற்குச் சிறந்த சான்று எது?' என்று கேட்டிருந்தேன். இதோ ஒரு விளக்கம்:

பிரமனும் சிவனும் திருமகளைப் பார்த்து, 'நீ செல்!' என்று கூற, திருமகள் அஞ்சுகின்றாளாம்! பயத்தினால் அல்ல!

தான் இதுவரை பார்த்திராத உருவமாம் அது! தன் கணவனையே அடையாளம் தெரியவில்லை அவளுக்கு! ஒரு வேளை இது நாராயணன் இல்லை என்றால்! பிற புருஷனிடம் எப்படிச் செல்வது? எனவே அஞ்சினாளாம் திருமகள்! இதற்கு மேல் வேறு சான்று வேண்டுமா நரசிம்மம் புதிது என்பதற்கு?

திருமகள் தயங்கித் தயங்கிப் பார்க்கின்றாள்!

மலரயன், கிரீசன், தேவர், வாசவன், முனிவர், சித்தர்,
இலகு தென்புலத்தோர், நாகர், இயக்கர், கந்திருவர், ஆதி

அலகிலோர் அணுகார் ஆகி; ஆளரி உருவத்தோனை,

பலமுறை தொழுது, பாத பங்கயம் பரவினார்; ஆல். 1695


எல்லாத் தேவர்களும் பார்க்கின்றனர்! ஆனாலும், அருகில் நெருங்க பயம்! தள்ளி இருந்தே திருவடி தொழுகின்றனர்!

சண்டைக்குப் பின், மீதமுள்ள அசுரர்களும் பார்க்கின்றனர்! அசுரர்களின் ஒரே ஒரு ஆழ்வானான ப்ரகலாதாழ்வானும் பார்க்கின்றான்! இரணியன் அரண்மனையில் அப்பொழுது இருந்த புரோகிதர்களும், மற்ற மனிதர்களும் பார்க்கின்றனராம்!

இப்படி, 'நரசிம்மனைப் பார்த்தவர்கள் பலர் உண்டே' என்கின்றார் ஆழ்வார்! சரிதானே!

- நரசிம்மர் நமக்கும் தரிசனம் தருவார்!

Read more »

Saturday, November 28, 2009

சிங்கம் ஊதிய புல்லாங்குழல்


ண்ணன் குழலூதும் இனிமையை, அவனுடன் கானகம் செல்லும் நண்பர்கள் (நண்பிகளும் தான்) சொல்லக் கேட்கிறாள் யசோதை. தானும் கேட்டு மகிழ்ந்ததைப் போல், 'நாவலம் (3-6)' என்ற திருமொழியை இயற்றியுள்ளாள்!

5-ம் பாசுரத்தில், நரசிம்மரைக் குழலூதச் செய்கின்றாள்!

***
முன் நரசிங்கமதாகி அவுணன்
முக்கியத்தை முடிப்பான்* மூவுலகில்

மன்னரஞ்ச(சும்)* மதுசூதனன் வாயில்

குழலின் ஓசை* செவியைப் பற்றி வாங்க*
நன் நரம்புடைய தும்புருவோடு*
நாரதனும் தம் தம் வீணை மறந்து*

கின்னர மிதுனங்களும் தம் தம்
கின்னரம்* தொடுகிலோம் என்றனரே
.
நாவலம் 3-6-5

முன்பு நரசிங்க வடிவமாகி, இரணியனது பெருமையை அழித்தான்; மூவுலகிலும் உள்ள மன்னர்கள் அஞ்சும்படி; மதுசூதனன் தனது வாயிலே வைத்து ஊதிய குழலின் ஓசை காதுகளைப் பற்றி இழுக்க, நல்ல வீணைகளை உடைய தும்புருவும், நாரதரும், வைத்திருக்கும் வீணையை மறந்தனர். கின்னரர்களும், 'எங்கள் கின்னரங்களை இனிமேல் தொடமாட்டோம்' என்கின்றனர்.

(முக்கியம் - பெருமை; நரம்பு - வீணை; கின்னர மிதுனம் - கின்னரத் தம்பதியர்)

யசோதை, 'முன்' என்கின்றாளே! வேறு வழியின்றி, விளக்கம் எழுதும் அடியேனும் கொஞ்சம் ’முன்பு’ செல்கின்றேன் .. ஹி... ஹி...

***
(சாபத்தினால், சென்ற பாசுரத்தில் விழ ஆரம்பித்த ஜய விஜயர்கள், அடுத்த நரசிம்மர் பாசுரம் வரை காத்திருந்தனர்; அது வந்தவுடன், எங்கு விழலாம் என்று இடம் தேட ...)


இடம்: ஜம்பூத்வீபம் (அட ... பூமி தாம்ப்பா)
காலம்: படைப்புக் காலம்

ஜயன்: விஜயா! பார்த்தா நல்ல இடமாகத் தெரியுது! நேரே பெரிய மனிதர்களாக விழுந்து விடலாம்!

விஜயன்: வேண்டாம்! இந்த இடம் ரொம்பப் பொல்லாததாம்! அப்படியே விழுந்தால் 'தாய், தந்தை பெயர் தெரியாதவர்கள்' என்ற பட்டம் வருமாம்!

ஜயன்: சரி! மற்றவர்களைப் போலவே குழந்தைகளாகப் பிறந்து விடலாம்!

ஜயன் (திடீரென்று ...):
கீழே பார்! திருமணம் நடைபெறுகிறது! பெரிய மண்டபம் வேறு! சாப்பாடும் நடக்கின்றது!

(கீழே, தக்ஷப் பிரஜாபதியின் 13 பெண்களுக்கும், கச்யபப் பிரஜாபதிக்கும் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது!)

விஜயன்: வந்தவுடனே சாப்பாடா! வந்த வேலையைப் பார்!

ஜயன் (யோசித்து ...): இந்தத் தம்பதியரின் குழந்தைகளாகப் பிறந்தால் என்ன?

விஜயன்: நல்ல Idea!

ஜயன் (காலரைத் தூக்கி விட்டு): இதெல்லாம் நமக்குச் சகஜமப்பா!

(கீழே விழ ஆரம்பிக்கிறான்)

விஜயன்: கொஞ்சம் இரு!

ஜயன் (கடுப்புடன்): இப்போ என்ன?

விஜயன்: பார்த்து விழு! நாம் திதிக்குப் பிறந்ததாக விஷ்ணு புராணத்துல போட்டிருக்கு! தப்பா விழுந்தா பின்னால் பிரச்சனை வரும்! வரத்தையும் மறந்து விடாதே! பிறவியில் இருந்தே தேவர்களுக்கும், நாராயணனுக்கும் விரோதிகள் நாம்! அப்பதான் வந்த வேலை சீக்கிரம் முடியும்!

(பூமியில் 'Entry' ஆகின்றனர் இருவரும் - கச்யபருக்கும், தக்ஷனின் இரண்டாம் புதல்வியான திதிக்கும், இரணியகசிபு, இரணியாட்சன் எனும் இரு அசுரர்களாக!)

***

'ரசிங்கமதாகி' என்கிறாள். 'நரசிங்கமாகி' என்று சொல்லியிருக்கலாமே? மீண்டும் 'அது'வா?

நரசிம்மம், மனிதனா, மிருகமா என்று தெரியவில்லை! அதனால் தான் 'அது'வோ?


நரசிம்மம், அவுணனின் 'முக்கியத்தை' முடிக்கின்றதாம் (முக்கியம் - 'பெருமை' என்ற பொருளில் இருந்து, தற்பொழுது மாறியுள்ளதைக் கவனிக்கவும்)!

'மூவுலகில் மன்னர் அஞ்சும்' என்கின்றாள்! வார்த்தைகளைச் சற்று 'Jumble' செய்யலாமா?

'மூவுலகில் மன்னர் அஞ்சும் அவுணன் முக்கியத்தை, முன் நரசிங்கம் அது ஆகி முடிப்பான்' - மூன்று உலகங்களில் உள்ள எல்லா மன்னர்களும் (தேவர்களும் தான்) பயப்படும் இரணியனின் பெருமையை முன்பு நரசிம்மமாக வந்து முடிக்கிறான்!

வேறு விதமாக 'Jumble' செய்யலாமா?

***

'முன் நரசிம்மன் ஆகி, அவுணன் முக்கியத்தை முடிப்பான்; மூவுலகின் மன்னர் அஞ்சும் மது (அது ஆகி), சூதனன்'!

மது எனும் அரக்கனைக் கொல்ல ஹயக்ரீவனாய் (மனித உடல், குதிரை முகம்) உருவம் எடுத்தவனே மது-சூதனன்!


நரசிம்மனை அழைத்தவுடன், உடனே ஹயக்ரீவரும் நினைவுக்கு வருகிறது யசோதைக்கு (இருவருமே மனித உடல், மிருக முகம் கொண்டவர்கள்)! 'அது', இங்கு ஹயக்ரீவரைக் குறிக்கும்!

'மன்னர் அஞ்சும்' - மன்னர்கள் (இரணியன், மது, கம்சன்), தம்முடைய சக்தியின் அளவைக் கடந்த செயல்களைச் செய்யும் நரசிம்மரையும், மதுசூதனனையும் (கண்ணனையும்) கண்டு அஞ்சினார்களாம்!

இங்கு கண்ணனையும் சேர்த்துக் கொள்வதற்கு, அவன் சிறு பிராயத்திலேயே செய்த மாயச் செயல்களே காரணமாம் (பூதனை, சகடம், தேனுகன், காளியன், பிலம்பன், அகாசுரன், சீமாலிகன், கோவர்த்தனோத்தரணம், ...)!

நரசிம்மனே (மதுசூதனனே) குழலூதுகின்றானாம்! எப்படி?

***

இடம்: தேவலோகம்
காலம்: மயங்கும் காலம்
இசை: All தேவலோக Radio
வாசிப்பது: தும்புரு, கின்னரர்

தேவேந்திரன் (கொட்டாவியுடன்): தும்புரு! கின்னரர்களே! ஏதாவது வாசியுங்களேன்!

தும்புரு (இவர் தூங்க, என் வீணை தான் கிடைத்ததா ...): சரி தேவேந்திரா!

(களாவதி எனும் தன் வீணையை ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்கிறார்; எங்கிருந்தோ ஒரு குழல் கானம் கேட்கிறது)

தேவேந்திரன்: தும்புரு! உன் வீணையில் இருந்து புல்லாங்குழல் சத்தமா! அதிசயமாக இருக்கிறதே!

தும்புரு: பிரபோ! நான் இன்னும் ஸ்ருதியே சேர்க்கவில்லை! அதற்குள் எப்படி வாசிக்க முடியும்?

(தேவேந்திரன், ’இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என்ற முணுமுணுக்கிறான்)

தேவேந்திரன்: சரி! வேகமா ஆரம்பி!

தேவேந்திரன் (திடீரென்று): ஆ!! காதை இழுக்காதே! வலிக்கிறது! விடு!

(சுற்றும் முற்றும் பார்க்கிறான்; அருகில் யாரும் இல்லை; நாரதர் வந்து கொண்டிருக்கிறார்)

தேவேந்திரன் (ஐயோ! இப்ப என்ன பிரச்சனையோ!): நாரதரே! நீர் தானே என் காதைப் பிடித்து இழுத்தீர்!

நாரதர்: தேவேந்திரா! விளையாடாதே! இப்போது தானே நான் உள்ளே வருகிறேன்!

(குழல் கானம் இன்னும் சத்தமாகக் கேட்கிறது; நாரதர் சுற்றும் முற்றும் பார்க்கிறார்; பிறகு கீழே பார்க்க, விஷயம் விளங்குகிறது)

நாரதர் (தன் காதையும் தடவிக் கொண்டே):
தேவேந்திரா! யாரும் உன் காதைப் பிடித்து இழுக்கவில்லை! பூவுலகில், கண்ணன் பிருந்தாவனத்தில் குழலூதுகிறான். அவன் இசை, இங்கும் வந்து நம் காதை இழுக்கிறது!

தேவேந்திரன்:
வரும்போதே ஆரம்பித்து விட்டீரா உம் கலகத்தை! இசை எங்காவது காதை இழுக்குமா?

நாரதர்: தேவேந்திரா! நான் கலகம் செய்ததே இல்லை! சாதாரண இசை என்றால், நாம் தான் காதைத் தீட்டிக் கொண்டு கேட்க வேண்டும். சில சமயம் காதைப் பொத்திக் கொள்ள வேண்டி வரும்! ஆனால், கண்ணனின் குழலிசை என்றால், அது, காதுடன் சேர்த்து, நம்மையும் இழுக்கும்!

தேவேந்திரன்: சரி! தும்புரு! கின்னரர்களே! நாரதரே! நீங்கள் இப்படி ஏன் வாசிப்பதில்லை!

(’நீங்கள் கொடுக்கும் 5 காசு சன்மானத்திற்கு, தேவ கானமா கிடைக்கும்! காக்காய் கானம் தான் கிடைக்கும்!’ என்று ஒரு கின்னரன் முணுமுணுக்கிறான்)

தேவேந்திரன்: என்னது!

அதே கின்னரன்: ஒன்றுமில்லை தேவேந்திரா! கண்ணனைப் போல் எங்களால் உங்கள் காதைப் பிடித்து இழுக்க இயலாது என்றேன்!

தேவேந்திரன்: இதெல்லாம் நல்லா பேசு! வாசிக்கும்போது மட்டும் ராகம், தாளத்தை கோட்டை விட்டுரு!

நாரதரும், தும்புருவும் (சேர்ந்து): இனிமேல் நாங்கள் வீணை வாசிப்பதை மறந்து விடுகிறோம்!

கின்னரர்கள் (சேர்ந்து): நாங்களும் இனிமேல் எங்கள் கின்னரங்களைத் தொட மாட்டோம்!

(’உங்களை எல்லாம் 'Recession' என்று சொல்லி வேலையை விட்டுத் தூக்கிடணும் ... வந்து பேசிக்கறேன்’ என்று தேவேந்திரன் முணுமுணுக்கிறான்)

தும்புரு: கூப்பிட்டீர்களா பிரபோ!

தேவேந்திரன்: இதெல்லாம் நல்லா கேக்குமே! எல்லோரும் வாருங்கள்! நாமும் பூலோகத்திற்கே சென்று குழலிசையை நன்கு அனுபவிக்கலாம்!

('நாரதர் வந்தாலே கலகம் தான் ... இப்போது நம் வேலைக்கு வேட்டு!' என்று ஒரு கின்னரன் புலம்ப, அனைவரும் பூமிக்கு வர ஆயத்தமாகின்றனர்)

***

மேலே வருணித்த காட்சியைக் கூறியது அடியேன் அல்ல! யசோதையாழ்வார்!

'மதுசூதனன் வாயில் குழலின் ஓசை, செவியைப் பற்றி வாங்க' என்கின்றாள்! தேவேந்திரன் காதையும் அது இழுத்தால் அதிசயமா என்ன?

'நன்னரம்புடைய தும்புருவோடு, நாரதரும் தம் தம் வீணை மறந்து' விடுகிறார்களாம்!

'கின்னர மிதுனங்களும், தம் தம் கின்னரம் தொடுகிலோம்' (தொட மாட்டோம்) என்கின்றனராம்!

கண்ணனின் குழல் இசை கேட்ட பிறகு, தேவேந்திரன் மனது வேறு எந்த இசையிலும் லயிக்காது! தினமும் தூங்குவதற்கு, 'அந்தக் குழலோசை போல் நீங்களும் வாசிக்க வேண்டும்' என்று கட்டளை இடுவான்! அது போல், இவர்களால் வாசிக்க இயலாதே!

இதிலிருந்து தப்பிக்க வழி? ’இனிமேல் வீணை, கின்னரங்களைத் தொட மாட்டோம்’ என்றது சரியான Strategy' தானே!

***

ல்லாப் பாசுரங்களையும் முடிந்தால் படியுங்கள்! படிக்க முடியவில்லை என்றால், கேளுங்கள்! நமக்கும் அவன் குழலிசை கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்!

கடைசிப் பாசுரத்தில், திருமொழியைப் படிப்பதன் பலனாக பெரியாழ்வார் கூறுவது:

'குழலை வென்ற குளிர் வாயினராகி, சாது கோட்டியுள் கொள்ளப் பாடுவாரே'

குழல் இசையையும் வென்ற, இனிய வாக்குள்ளவர்கள் ஆவார்கள்; அவர்களுக்குப் பேச்சுத் திறமை உண்டாகும் என்ற நம்பிக்கை உண்டு!

ஏதாவது அதி முக்கியமான 'Meeting' இருந்தால், திருமொழியை 3 முறை சொல்லி விட்டுச் செல்லுங்கள்! உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும் (இதை அடியேன் அனுபவத்தில் கண்டுள்ளேன்)!

படிப்பவர்கள், சாதுக்களின் குழுவில் சேர்வர்!

இறைவன் அருள் பெறுவதற்கு, அவன் அருள் பெற்ற சாதுக்களை அடைவதே முதல் படி!

- நரசிம்மர் மீண்டும் வருவார்!

Read more »

Monday, November 23, 2009

குடமாடும் கூத்தன்


கண்ணனை மிகவும் கெஞ்சிக் கூத்தாடி நீராட்டி, குழல் வாரி விடுகிறாள் யசோதை! அவன் மீண்டும் விளையாட ஓடிவிட, அவனை, 'உனக்குப் பூச்சூட வேண்டும்! வா!' என்று அழைக்கிறாள், 'ஆநிரை மேய்க்க' எனும் இந்தத் திருமொழியில்.

இதில் 7-ம் பாசுரத்தில், யசோதை நரசிம்மனைக் கொண்டாடுகிறாள்.

***

குடங்கள் எடுத்தேற விட்டு* கூத்தாடவல்ல எம் கோவே!*

மடங்கொள் மதிமுகத்தாரை* மால்செய்ய வல்ல என் மைந்தா!*
இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இருபிளவாக முன் கீண்டாய்!*
குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.
ஆநிரை 2-7-7

குடங்களை எறிந்து கொண்டு கூத்தாடும் திறமை உள்ள எம் தலைவனே! சந்தரன் போன்ற முகமுள்ள பெண்களை மயக்க வல்ல என் மைந்தனே! மடியில் இருத்தி, இரணியனின் மார்பை இரு கூறுகளாக முன்பு பிளந்தவனே! திருக்குடந்தையில் (கும்பகோணம்) பள்ளி கொண்டிருக்கும் என் தலைவனே! குருக்கத்திப் பூவை
உனக்குச் சூட வேண்டும்! வா!


எம்பெருமான் கூத்தாடுவானா? இது என்ன கூத்து?

***
ண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான்! அவன் பின்னே அஷ்ட லக்ஷ்மிகளும் அங்கு வந்து சேர்கின்றனர். மற்ற தேவர்களும் இவர்கள் பின்னே வந்துவிட்டனர்! ஆயர்களுக்கு அங்கு, உணவு, உடை, செல்வம் எல்லாம் வருகின்றது! பின்னாலேயே கர்வமும்!

இப்படி வருகின்ற செல்வச் செருக்கு நீங்குவதற்காக, ஆயர்கள் ஆடுவதுவே குடக்
கூத்து!

தலையில் அடுக்குக் குடங்கள்! இரு தோள்களிலும், இரு கைகளிலும் இரண்டு குடங்கள்! வானத்தில் தொடர்ந்து ஒரு குடத்தை எறிந்து, அது கீழே விழாதபடி பிடித்து ஆடுகின்றனராம்! குடத்தில் கவனம் இருக்கும்போது, குடம் போல் உள்ள செருக்கு பறந்துவிடுமாம்!

ஆயர்களுக்குச் செருக்கு ஏற்படலாம். எம்பெருமானுக்கு ஏது?

இங்கு, 'எம் தலைவனே' என்றதனால், ஆயர்கள் எல்லோரும் குடமாடுவர் என்றும், அவர்கள் தலைவன் கண்ணன் என்றும் யசோதை கூறுகிறாளோ?

ஒரு வேளை எம்பெருமானும் அவர்களுடன் சேர்ந்து குடமாடினானோ?

***

திருநாங்கூர். 11 திவ்ய தேசங்கள் இருக்குமிடம்! இதில், (திரு) அரிமேய விண்ணகரமும் (#29) ஒன்று. 'அரிமேய விண்ணகரத்திற்கு' வழி கேட்டால் அநேகமாகக் கிடைக்காது. 'குடமாடு கூத்தர் கோயில்' என்று கேட்க வேண்டும்!

எம்பெருமானின் திருநாமமே 'குடமாடு கூத்தர்'. எனவே, எம்பெருமான் குடமாடியிருக்க வேண்டும்!

சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள்,

'வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீணிலம் அளந்தான் ஆடிய குடமும்'
என்கின்றார் (கடலாடு காதை 54-55)

மங்கையார் மங்களாசாசனம் செய்யும்போது, 'குன்றதனால் மழை தடுத்துக் குடமாடு கூத்தன் ... ' என்கின்றார் (பெரிய திருமொழி 3-10-8).


குன்றைக் குடையாக எடுத்தவனாயிற்றே கண்ணன்! 'குடையாடு கூத்தன்' என்றல்லவோ எழுத வேண்டும்?

இதைத் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'குன்று குடையாய் எடுத்தாய் ...' என்று அருளிச் செய்தாள்?

கண்ணன் குடமாடினானா? குடையாடினானா?
***
ம்மாழ்வார், அர்ச்சாவதாரப் பாசுரங்களில், 'பரஞ்சோதியை, குரவை கோத்த குழகனை, மணிவண்ணனை, குடக் கூத்தனை ...' என்றே குறிப்பிடுகிறார்.

மலையாள திவ்ய தேசங்களில், திருக்கடித்தானமும் (#70) ஒன்று. இங்கு, எம்பெருமானுக்கு நடை பெற்ற விழாக்களில், பெண்கள் குடை பிடித்து நடனமாடும் நிகழ்ச்சியும் இருந்ததாம்! காலப் போக்கில் இந்த நடனம் கைவிடப் பட்டது என்றும் கோயில் கர்ண பரம்பரைச் செய்தி.

நம்மாழ்வாரும் இச் செய்தியை,

கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை*
கோயில் கொண்டான் அதனோடு என்னெஞ்சகம்*
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ* வைகுந்தம்

கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே.

என்கின்றார். மேலும் சில ஆழ்வார் பாசுரங்களில், எம்பெருமான் குன்று குடையாக எடுத்த நிகழ்ச்சியே ’குடக் கூத்தன்’ என்பதற்குப் பொருளாக விவரிக்கப் பட்டுள்ளது.

உங்கள் ஓட்டு எதற்கு - குடைக்கா? குடத்துக்கா? இல்லை செல்லாத ஓட்டா (இரண்டிற்கும் போட்டால் செல்லாத ஓட்டு ... ஹி ... ஹி ... )

***
பாசுரத்தின் முதல் வரியில், ஆயர்களுக்குத் தலைவன் என்ற யசோதை, பெருமையுடன், இவன் தன் மகன் என்கின்றாள்! தன் மகன் எந்தப் பெண்ணையும் மயக்க வல்லவன் என்ற பெருமை! பெண்கள் எல்லோரும், 'உங்கள் மகன் எங்களை மயக்கிவிட்டான்' என்று மாளிகைக்கு வந்து இவளைக் குறை கூறுவதால், பாதிப் பெருமை, பாதிக் கவலை (நமக்கு இவ்வளவு மருமகள்கள் தேவைதானா என்றோ?)!

இரணியனை மார்பு பிளந்த களைப்பினால், திருக்குடந்தையில் படுத்துக் கிடப்பதாகச் சொல்வது இனிய கற்பனை!

இரணியனை, 'முன் கீண்டாய்' என்கின்றாள் யசோதை. 'முன்' நடந்தது என்ன?

***

இடம்: வைகுந்த வாசல்

காலம்: சபிக்கும் காலம்

(சிலர் சண்டை போடுவது போல் இரைச்சல் கேட்கிறது)

பரந்தாமன் (பாம்புப் படுக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்து): என்ன இது சத்தம்! இது என்ன வைகுந்தமா, சந்தைக் கடையா?

(அங்கு, நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள், இடையிலே உடையின்றி, ஏழாவது வாயில் காவலர்களான ஜய, விஜயர்களைப் பார்த்துக் கத்திக் கொண்டு இருக்கின்றனர்)

பரந்தாமன் (குழந்தைகளைப் பர்த்து): அடேடே! சனகரே! சனந்தனரே! சனாதனரே! சனத் குமாரரே! வாருங்கள்! வாருங்கள்! உங்களுக்கு என்ன கஷ்டம்! தங்கள் கோபத்திற்குக் காரணம் என்ன?

சனகர்: தங்களை தரிசனம் செய்ய வந்த எங்களை தங்கள் வாயிற்காவலர்கள் உள்ளே விடவில்லை! அவமானப் படுத்திவிட்டனர்!

விஜயன்: நாராயணா! வழி தவறி வந்துவிட்டனர் என்று நினைத்துவிட்டோம்!

ஜயன்: அச்சுதா! சிறுவர்கள் என்று நினைத்து விட்டோம்!

சனந்தனர்: எம்பெருமானே! எல்லோரையும் சமமாக நினைக்கும் வைகுந்தத்தில், இவர்கள் 'பெரியவர், சிறியவர்' என வித்தியாசப் படுத்திப் பார்த்ததால், வித்தியாசம் நிறைந்த பூலோகத்திற்கே செல்லும்படி சபித்தோம்! அப்போது தான் நீங்கள் வந்தீர்கள்!

நாராயணன்: ஜய விஜயரே! நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்!

(இந்தக் காலத்து 'Official' ஆக இருந்தால், வாயிற் காவலருக்கே 'Support' செய்து இருப்பார்)

ஜயன்: பிரபோ! மன்னித்து விடுங்கள்!

நாராயணன்: சரி! ஏழா? மூன்றா?

விஜயன்: என்ன?

நாராயணன்: பிறவியைச் சொன்னேன்! ... என் பக்தனாக வாழும் 7 பிறவி வேண்டுமா அல்லது என்னையே நிந்தித்து, எனக்கு விரோதியாக வாழும் மூன்று பிறவிகள் வேண்டுமா?

ஜயன்: ஒன்றாக மாற்ற முடியுமா?

சனாதனர் (கோபத்துடன், குறுக்கிட்டு): இது ரொம்ப ஓவராத் தெரியலை உனக்கே? மீண்டும் சபிக்கட்டுமா?

விஜயன்: ஐயோ! மூன்று பிறவியே போதும்! நாராயணா! உங்களையே நிந்தித்து, வைகுந்தத்திற்கு மீண்டும் விரைவில் வருவோம்!

(தொபுகடீர்! டமால்! என்ற சத்தம் உலகம் முழுவதும் கேட்கின்றது)
***

விழுந்த அந்த இருவர்!

க்ருத யுகத்தில் இரணியாட்சன், இரணியகசிபு (இரணியன்)!

த்ரேதா யுகத்தில் பின்னர், கும்பகர்ணன், ராவணன்!

துவாபர யுகத்தில் தந்தவக்ரன், சிசுபாலன்!

எம்பெருமானையே விரோதியாகக் கருதி, அவனையே நிந்தித்து, அவன் கையாலே மாண்டு, மீண்டும் அவனிடமே வந்தவர்கள்!

இருவரில் ஒருவனுக்கு மட்டும் அதீத வெறுப்பு (இரணியன், ராவணன், சிசுபாலன்)! இவனே முனிவரைச் சிறுவன் என்று எண்ணியவன் போலும்!

இதனாலேயே, எம்பெருமானைத் தீவிரமாக நிந்தை செய்வதையும் தியானம் என்கின்றனரோ!

சகோதரர்களில், இன்னொருவன் எம்பெருமானின் விரோதியாக இருந்தாலும் (இரணியாட்சன், கும்பகர்ணன், தந்தவக்ரன்), அதீத வெறுப்புக் கொண்டதாகக் கதை இல்லை!

சென்ற பாசுரத்தில், 'உளம் தொட்டு' என்றாரே ஆழ்வார்! அதற்கு இன்னொரு அர்த்தம்!

தான் தொட்ட உள்ளத்தில், பாசம் இருக்கிறதா என்று சோதித்தார்! தப்பித் தவறி இருந்து விட்டால், பின்னர் ஏழு பிறவி வந்து விடுமே! இரணியனே ஆனாலும், வைகுந்தத்தில் இருந்தவனாயிற்றே! எனவே, உடனே உள்ளத்தைச் சோதிப்பதை விட்டு, மார்பைப் பிளந்து, பிறவியில் இருந்து முக்தி அளிக்கிறார்!

***

’Back to the Future':

ஒவ்வொரு பாசுரத்திலும் ஒரு பூவைச் சொல்லி, 'உனக்கு இதைச் சூட்டுகிறேன், வா!' என்கின்றாள் யசோதை.

பலஸ்ருதி இல்லாத மிகச் சில திருமொழிகளில் இதுவும் ஒன்று!

யசோதையாழ்வார் எம்பெருமானுக்குச் சூட்டுவதாக, இந்தத் திருமொழியில் சொன்ன மலர்களில், துளசி இல்லை! ஏன் அவர் துளசியைச் சேர்க்கவில்லை என்பது யாருக்காவது தெரியுமா?

இந்தத் திருமொழி, தினமும் வைணவர்களால் பாராயணம் செய்யப் படவேண்டும் (நித்யாநுசந்தானத்தில் இந்தத் திருமொழி சேர்க்கப் பட்டுள்ளது)!


வீட்டில் மலர்கள் இல்லை என்றாலும், இந்தத் திருமொழியைச் சொன்னால், எம்பெருமானை மலர்களால் அர்ச்சனை செய்வதற்குச் சமம்!

வைணவக் கோயில்களில், திருமஞ்சன காலத்தில், இந்தத் திருமொழி சேவிக்கப் படுகிறது.

இந்தப் பாசுரத்தில், எம்பெருமானைப் பற்றி மேலும் விவரித்திருக்கிறார் ஆழ்வார். கண்டுபிடிக்கிறீர்களா?

- நரசிம்மர் மீண்டும் வருவார்

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP