மதுரை மீனாட்சி & Simple Pendulum!
ஆனால்.....இன்னிக்கி மதுரை மீனாட்சி & Pendulum Technique!
"எலே! எடுப்பட்ட பய புள்ள! Pendulum Technique-ஆ? அதுக்கும் ஆத்தா மீனாட்சிக்கும் என்னலே சம்பந்தம்? கோதையைத் தான் அப்துல் கலாம் கூட ஒப்பிட்டு பதிவு போட்டே! இப்போ மீனாட்சியையும் விடுறதா இல்லியா நீயி?"
"அட, பாண்டி நாட்டுப் பெண்களை ரசிக்காம விட முடியுமா? அவிங்க அழகென்ன? நறுவிசு என்ன? மயிலென்ன? ஒயிலென்ன? :)
கலர் வேணுமின்னா கொஞ்சம் கொறைச்சலா இருக்கலாம்! ஆனால் அந்தக் கலர்லயும் ஒரு காந்தம் இருக்குல்லே? என்ன நாஞ் சொல்லுறது? :)"
"அடப் பாவி மக்கா! பிள்ளைத் தமிழ்-ன்னு ஏதோ வலைப்பூ துவங்கினயே! ஏதோ கொழைந்தயளைப் பத்தித் தான் எழுதப் போறமில்ல-ன்னு நெனச்சோம்? பிள்ளைத் தமிழ்-ன்னா, பெட்டைப் புள்ளைக பிள்ளைத் தமிழா? வெளங்கிரும்!"
"ஹா ஹா ஹா! அட மக்கா, அதுவும் இருக்குல்லே! பெண்பாற் பிள்ளைத் தமிழ்-ன்னு புள்ளைக தமிழை அப்பவே பாடி வச்சிருக்காவ! அதைத் தான் இன்னிக்கி பாக்கப் போறம்! அதுல தான் Pendulum Technique! ஆத்தா மீனாச்சியை அறிவியல் பூர்வமா தரிசிக்கலாமா?" :)
சின்ன வயசுல இயற்பியல் பாடம் படிச்ச ஞாபகம் இருக்கா? ஆறாங் கிளாஸ்ல பெண்டுலம் பத்திச் சொல்லிக் கொடுப்பாய்ங்க! வகுப்புக்கே பெண்டுலம் எடுத்துக்கிட்டு வருவாரு வாத்தி!
அதன் நீள உசரங்களை அட்ஜஸ்ட் பண்ணி, Pendulum Bobஐ சுண்டி இழுத்து விட்டாக்கா அப்படியும் இப்படியும் அசையும்! பக்கத்துல நான் தான் நிப்பேன்!:)
Start = கையில ஒரு ஸ்டாப் வாட்ச் கொடுத்து, அதைப் பொசுக்குன்னு அழுத்தச் சொல்லுவாரு!
Stop = ஸ்டாப் வாட்ச்சில் முள்ளு இருக்கும் எண்ணை உரக்கச் சொல்லணும்! அதை அந்த மாங்காப் பையன் சரவணன் போர்ட்டில் எழுதுவான்!
இப்படியே மாறி மாறி, பெண்டுலம் வெளையாட்டு நடக்கும்! ஒரு பத்து ரீடிங் எடுத்தவுடன், வாத்தி என்னென்னமோ கணக்கெல்லாம் போட்டு, ஒரு Formula-வை உருவாக்கி,
This is Simple Harmonic Motion-ன்னு முடிச்சது தான் ஞாபகத்துல இருக்கு! அதுவும் பெண்கள் இல்லாத ஒரு வகுப்பில் எப்படி நுணக்கமா கான்சன்ட்ரேட் பண்ணுறது? அறிவியல் வகுப்பு நடத்துறவங்க இதைக் கூட அறியலீன்னா எப்படி? :)
அது முடிஞ்சதும், அடுத்து தமிழ் வகுப்பு! அதுல மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்! ஆரம்பிச்சுட்டாருய்யா டேனியல் ஐயா! கிறித்தவரா இருந்தாலும், சும்மா உருகி உருகிப் பாடம் எடுப்பாரு! பாடியே காட்டுவாரு! அதுவும் ஆழ்வார் பாசுரம்-ன்னா சொல்லவே வேணாம்! அவர் கண்களே பனிக்கும்! இப்போ தெரியுதுங்களா தி சீக்ரெட் ஆஃப் கேஆரெஸ்! :)
குமரகுருபரக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை! வயசு அஞ்சு ஆகுது! பள்ளிக்குப் போற வயசில் பேச்சு வரலீன்னா எப்படி? என்னென்னமோ மருத்துவம் செஞ்சிப் பார்த்துவிட்டு, திருச்செந்தூர் முருகப் பெருமான் சன்னிதியில் கொண்டாந்து பிள்ளையைப் போடுறாங்க பெத்தவங்க!
செந்திலாண்டவன் அழகுத் தோற்றம் குழந்தையை இழுஇழு என்று இழுக்கிறது! இலைத் திருநீறு வாயில் கரைகிறது! பேசுகிறான் குமர குருபரன்...
பின்னாளில் அவுரங்கசீபின் அண்ணன் தாரா ஷூகோவிடமே தமிழின் மேன்மையை எடுத்துச் சொல்லப் போகும் குழந்தை அல்லவா! அவன் வாயில் பேச்சைக் கொடுக்க, தமிழ்க் கடவுள் முருகவேள் கடன்பட்டுள்ளானே! குழந்தை வளர்ந்து பெரும் கவிஞன் ஆகிறது! கவி-யோகியும் ஆகிறது!
தென்பாண்டித் தேசமாம் மதுரைக்கு வந்த குமரகுருபரர், அன்னை மீனாட்சியையும், அப்பன் அழகனையும் கண் குளிரத் தரிசிக்கிறார்!
மூன்று அழகர்கள் அல்லவா மதுரைக்கு! = கள்ளழகர், கூடலழகர், மதியழகர் (சோம சுந்தரர்)!
இப்படி அழகர்கள் கூடி இருப்பதால் தானே மதுரைக்கே ஒரு தனி கிறக்கம்! ஆனால் அத்தனை அழகுக்கும் ஆட்சியாள் யார்? அவள் மீது தான் பிள்ளைத் தமிழ் பாடுகிறார் நம் கவிஞர்! இன்றுள்ள பிள்ளைத் தமிழ் நூல்களில் எல்லாம் தலைசிறந்தது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!
மறுநாள் திருமலை நாயக்கர் சபையில் அரங்கேற்றம்! குமரகுருபரர் பாடப்பாட, மொத்த சபையும், துறைத் தீந் தமிழில் கட்டுண்டு கிடக்கிறது!
கடைசி வரிகள்! ஊசல் பருவம்! அன்னை மீனாள் சிறு பெண்ணாய் ஊஞ்சலாடும் அழகு!
எதிரே உள்ள மரத்தைக் காலால் உதைத்து, அன்னை, ஊஞ்சலில் இன்னும் உயர உயர எம்புகிறாள்! உதைத்த மரத்தில் இருந்து பூக்கள் சொரிகின்றன!
அன்னையின் ஊஞ்சல் வீசி வீசி ஆடுகிறது! காற்றைக் கிழித்து.....அவ்வளவு வேகம்!
ஆனால் அதையும் விட வேகமாய் இன்னொன்றும் ஆடுகிறது! எது? = மதுரை மீனாட்சியின் கம்மல்!
பசும்பொன்னில் தொங்க விட்ட கிளிக் கூண்டு போல் ஒரு காதணி! கீழே பாண்டி முத்துக்கள் பதித்த அந்த லோலாக்கு! அது ஊஞ்சலை விட வேகமாக ஆடுகிறதாம்!
ஊஞ்சல் அப்புறம் போய், இப்புறம் வருவதற்குள்...தொங்கட்டான் ஒரு சுற்று முடித்து விடுகிறது! அப்புறம் தான் ஊஞ்சலே ஒரு சுற்று முடிக்கிறது! ஆகா, இது எப்படிச் சாத்தியம்?
கற்பனை செய்து பாருங்கள்!
* ஊஞ்சல் ஒரு பெண்டுலம்!
* ஊஞ்சலில் உள்ளவள் காதில் ஒரு பெண்டுலம்!
ஊஞ்சல் பெண்டுலம் ஆட, ஊஞ்சலில் உள்ளவள் பெண்டுலமும் ஆட...
Both the pendulums are in Simple Harmonic Motion! :)
பெண்டுலத்தைத் தமிழில் ஊசல் என்று சொல்லுவார்கள்!
இரண்டு ஊசல்களை ஒரே நேரத்தில் ஒரே Plane-இல் இயக்கி விட்டால்...
இரண்டும் ஒரே சமயத்தில் கடக்கின்றன!
சமச்சீர் இயக்கத்தில் இயங்குகின்றன! (Simple Harmonic Motion)!
ஆனால் ஊசலின் நீளத்தைப் பொறுத்து தான் அதன் வேகமும் அமையும் என்பது இயற்பியல் சூத்திரம்! ஞாபகம் இருக்கா மக்கா? :)
* ஊஞ்சல் சங்கிலியின் நீளம் அதிகம்! அதனால் நேரமும் அதிகம்!
* கம்மல் சங்கிலியின் நீளம் குறைவு! அதனால் நேரமும் குறைவு!
Given the same acceleration due to gravity at the same place...
the time taken for oscillation
is directly proportional
to the length of the pendulum! :)
எப்படி இருக்கு அன்னை மீனாட்சி செய்யும் Pendulum Experiment (ஊசல் சோதனை)?
சுட்டிப் பொண்ணு மீனாட்சி, மாநிலத்திலேயே முதல் மாணவியா வந்துற மாட்டாளா என்ன? :)
ஊசல் பாடலைப் பார்ப்போமா?
இரைத்திடும் அரிச் சிலம்பும்
இறும் இறு மருங்கு என்று இரங்கு மேகலையும் பொன்
எழுது செம் பட்டு வீக்கும்
இரண்டு கால்களில் மெல்லிய ஜில்ஜில் எழுப்பும் கிண்கிணிக் கொலுசும்,
"அம்மா, தாயே, மீனாட்சி, அங்கயற்கண்ணி" என்று முறையிட்டு முனுகும் சிலம்பும்,
இற்று விடுமோ, இற்று விடுமோ என்னும் ஒயிலான இடுப்பு அணி மேகலையும்,
தங்க ரேக்கு நூலிழை ஓடும் பட்டுத் துணி, அதை இறுக்கி இடுப்பில் கட்டியிருக்கா மீனாட்சி!
திரு இடையும் உடை தாரம் ஒட்டி யாணமும்
செங்கைப் பசுங் கிள்ளையும்
திரு முலைத் தரள உத்தரீயமும் மங்கலத்
திரு நாணும் அழகு ஒழுக நின்
அவள் இடையில் உடையும் ஒட்டியாணமும் புரள...
அவள் கையில் பச்சைக் கிளி கீச் கீச் என்று கத்த...
அவள் முலைகளில் முத்து மாலை வரிசைகள் தவழ...
அவள் மங்கலத் திருக்காப்பை அணியுமாறு அழகாக ஆடிட...
அருள் பொழியும் மதிமுகமும் முகமதியின் நெடுநிலவு
அரும்பு குறு நகையும் ஞான
ஆனந்த மாக்கடல் குடைந்து குழை மகரத்
தோடு அமராடும் ஓடு அரிக்கண்
மீனாட்சியின் அருள் முகம், பூர்ண சந்திரன்! முழு மதி!
அதில் தோன்றும் குறு மென் புன்னகையோ, பிறை மதி!
ஞானாந்தம் என்னும் கடலைக் குடைந்து செய்த மகரத் தோடுகள், தொங்கட்டான்கள் ஆட...அந்த ஆட்டத்தின் வேகம் என்ன தெரியுமா? கண்கள் பாயும் வேகம்! அம்புட்டு வேகம்! ஊஞ்சலை விட வேகம்!
இப்படி மீனாளின் தோடுகளுக்கும், மீனாளின் கண்களுக்கும் இடையே வேகப் போட்டி!
பொரு கயலும் வடிவழகு பூத்த சுந்தர வல்லி
பொன்னூசல் ஆடியருளே!
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி
பொன்னூசல் ஆடியருளே!
தோடு ஆடி, அதோடு கயல் கண் ஆடி, வடிவழகு பூக்கும் வடிவாம்பிகே! சுந்தரேசனின் சுந்தரவல்லி! பொன்னூஞ்சல் ஆடி அருளே!
புனுகும் நெய்யும் பூசிய சொக்கனின் அழகுக்குக் கொஞ்சமும் இளைச்சவள் அல்ல நீ! எங்கள் மீனாட்சிக் குழந்தையே! பொன்னூஞ்சல் ஆடி அருளே!
இதுவே, மீனாட்சி ஊஞ்சலின் வேகம்!
அதை விட, மீனாட்சி தோடு வேகம்!
அதை விட, மீனாட்சி கண்கள் வேகம்!
அதை விட, எங்கள் மனது வேகம் அம்மா!.....உன்னிடம் பறி கொடுத்த மீனாட்சி மனது வேகமோ வேகம்!
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் இறுதிப் பாடல் இது!
குமரகுருபரர் பாடி முடிக்கவும், எங்கிருந்தோ ஓடியே வருகிறாள் ஒரு சுட்டிப் பெண்!
திருமலை நாயக்கர் மடி மேலே பிஞ்சுப் பாதங்களால் ஏறுகிறாள்!
மன்னன் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பிஞ்சுக் கரங்களால் பறிக்கிறாள்!
இறங்கி வந்து, குமரகுருபரர் கழுத்தில் போட்டு விட்டு.....ஓடியே போகிறாள்!
மதுரை அரசாளும் எங்கள் மீனாட்சி திருவடிகளே சரணம்!