ஆகா! இராமானுசர் தவறு செய்வாரா? அடப்பாவி! அங்க வச்சி, இங்க வச்சி, கடேசீல இவர் மேலேயே கைய வச்சிட்டியா?-ன்னு ஒரு சிலர் பொங்கி எழுவது எனக்குத் தெரிகிறது!
அவர்களுக்கு இராமானுசர் மேல அன்பு இருக்கோ இல்லீயோ...அடியேன் மேல் "பாஆஆசம்"...இருப்பதென்னவோ உண்மை! :)
வணக்கம் மக்களே!
இன்று சித்திரைத் திருவாதிரை (Apr 20, 2010)!
உடையவர், எம்பெருமானார் என்று போற்றப்படும்.....காரேய்க் கருணை, இராமானுசரின் பிறந்த நாள்!
Happy Birthday Ramanuja! இன்னும் பல நூற்றாண்டு இரும்! :)* தமிழ் வேதமான மாறன் மொழியை, ஆலயம் தோறும், "கருவறைக்குள்ளே-யும்" ஒலிக்கச் செய்து...
* தமிழை இறைவனுக்கு முன்னே ஓதி வர, இறைவன் பின் தொடர, வடமொழி வேதங்களை அதற்கும் பின்னால் ஊரறிய ஓதி வரச் செய்து...
* வேதங்களின் விளக்க நூலும், விசிட்டாத்வைத (விதப்பொருமை) நூலுமான ஸ்ரீபாஷ்யத்துக்கு, பிரம்ம சூத்திரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல், திருவாய் மொழியையும் ஆதாரமாகச் சேர்த்து...
* திருவாய் மொழிக்கு, பல ஈடு வியாக்யானங்களை எழுதப் பண்ணி...
* வைணவத் தலைநகரமான திருவரங்கத்தில், மார்கழி ஏகாதசியின் போது, தமிழுக்கென்றே தனித்த திருநாள் - திருவாய்மொழித் திருநாள் - 21 நாட்கள் இன்றளவும் நடக்க வைத்து...
இப்படி, பெற்ற தாயான நம்மாழ்வாரைக் காட்டிலும், வளர்த்த தாயாய், வளர்த்து விட்ட உடையவருக்கு.....இந்தப் பாடல் ஒரு பிரார்த்தனை!
வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன்! மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் நம் இராமானுசன்!
சரி, இராமானுசர் பிறந்த நாள் பதிவுக்கு வருவோம்! அது என்ன இராமானுசர் செய்த தவறுகள்? இராமானுசர் தவறெல்லாம் செய்வாரா என்ன? :)மனுசனாப் பொறந்த எல்லாருமே தவறுவது இயல்பு தான்!
நமக்குப் பாடம் காட்ட வந்த அவதாரங்களும், ஆசார்ய புருஷர்களும், நல்லது மட்டும் தான் செய்து காட்டுவாங்களா என்ன?
தவறும் செய்து காட்டுவார்கள்! அப்படித் தவறிய பின், அதை எப்படி எதிர்கொள்ள வேணும் என்றும் நடந்தும் காட்டுவார்கள்!
இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான்! அதை அவனே தவறு என்று ஏற்றுக் கொண்டு, அடுத்த அவதாரத்தில், அதே போல் மறைந்திருந்து, கண்ணன் கொல்லப்பட்டு, கழுவாய் தீர்த்துக் கொண்டான்!
ஆனால் நம் பண்டித சிகாமணிகள் தான், ஓவர் புனிதப் பூச்சுகளைப் பூசி, வாலி வதம் சரியே! சீதையின் அக்னிப் பிரவேசம் சரியே! என்று ராமாயண இண்டு இடுக்குகளில் புகுந்து, இன்றும் பட்டிமன்றம் நடாத்திக் கொண்டிருப்பார்கள்! :)
இதனால் இராமன் மேல் மதிப்பு வருவதற்குப் பதிலா, ஓவர் புனிதப் பூச்சு பூசி, வெறுப்பு வரவே இவர்கள் துணை போய்க் கொண்டு இருப்பார்கள்!
இராமன் காட்டிய வழியில் தானே இராம-அனுஜனும்? இராமானுச வைபவத்தில் அவர் "தவறிய" இடங்களும், மறைக்காது குறிப்பிடப் பட்டிருக்கும்! அவற்றில் சிலதை இன்று காணலாமா? :)
பயப்படாதீங்க! ஆசார்ய அபச்சாரம் எல்லாம் இல்லை! இதனால் அவர் பால் புரிதலும் மதிப்பும் இன்னும் கூடவே செய்யும்!
திருவரங்கம் - இராமானுசர் பள்ளிப்படுத்தப்பட்ட இடம்
ஸ்ரீபாஷ்யம் எழுதத் துவங்கிய காலம்! மூல நூலான போதாயன விருத்தியை, இராமானுசர் நடையாய் நடந்து வாங்கிய பின்னால், சிறிது நாளிலேயே களவாடிக் கொண்டார்கள்!
அட, இதுவும் வேதம் தானே! விரிவுரை சொல்லிவிட்டுப் போகட்டுமே-ன்னு கூட அந்த வைதீகோத்தமர்களுக்குத் தோனவில்லை!
வேதமா முக்கியம்? தங்கள் உள்ள உகப்பு தானே இவிங்களுக்கு எப்பவும் முக்கியம்! தமக்கும், தம் நம்பிக்கை/பழக்க வழக்கங்களுக்கும் சரிப்பட்டு வரும் வரை தான் வேதம்! :(
இப்போ என்ன செய்வது? முழுசாப் படிப்பதற்குள் மூல நூல் திருடு போய் விட்டதே! எப்படி குருவான ஆளவந்தார் ஆசையை நிறைவேற்றி வைப்பது?
சமய சஞ்சீவியாக, எப்போதும் உடன் இருக்கும் நண்பரும்-முதன்மைச் சீடருமான கூரத்தாழ்வான் முன்னுக்கு வந்தார்!
"உடையவரே, தாங்கள் இரவில் படிக்கத் துவங்கிய போது, அசதியில் உறங்கி விடுவீர்கள்! அப்போது நான் பின் வரிசையாக, ஒவ்வொரு பாகமாகப் படித்து, உருவேற்றி விட்டேன்! ஒப்பிக்கிறேன்! கேட்கிறீர்களா? பிறகு நீங்களே முடிவுக்கு வாருங்கள்!"
இராமானுசருக்குப் போன உயிர் திரும்பி வந்தது!
குருவால் புகழ் பெற்ற சீடர்கள் பலர்! ஆனால் குருவுக்கே புகழ் சேர்த்த சீடர்கள் உண்டென்றால் அது உடையவரும்-அவர் சீடர்களும் தான்!அந்த அளவுக்கு அங்கே அதிகாரம் காட்டாது, கொடுக்கல்-வாங்கல் இருந்தது! இனி பாஷ்யம் எழுத வேண்டியது தான் பாக்கி!
"கூரேசா, நான் ஸ்ரீபாஷ்யம் சொல்லிக் கொண்டே வருகிறேன்! வேதங்களில் இருந்தும், திருவாய் மொழியில் இருந்தும் என் விளக்கங்கள் அமையும்!
நீர் மூல நூலையும் வாசித்து உள்ளதால், நான் எங்கேனும் தவறான விளக்கம் சொல்லும் பட்சத்தில், என்னைத் தடுத்து நிறுத்தும்! சரியா?""ஐயோ! சுவாமி! உலகாசான்-ஜகத்குரு என்று ஊரே உங்களைக் கொண்டாடுகிறது! உங்கள் விளக்கத்துக்கு நான் மறுப்பு சொல்வதா? இதெல்லாம் சரிப்பட்டு வருமா? வேண்டாம் இராமானுசரே!"
"சரி! இப்படிச் செய்வோம்! நான் சொல்லும் விளக்கம், மூல நூலின் கருத்தோடு மாறுபட்டு இருந்தால், நீர் எழுதுவதை நிறுத்தி விடும்!உடனே அது எந்த இடம் என்று நானும் புரிந்து கொள்வேன்! சரியா? இதனால் யாருக்கும் எந்தச் சங்கடமும் இல்லை!"
இதோ, விசிட்டாத்வைத கலங்கரை விளக்கமாக, ஸ்ரீபாஷ்யம் நிறைவுறும் நிலைக்கு வந்து விட்டது! உடையவர் பொழியும் பொழிவை, கூரேசன் வயற்காட்டுக்குப் பாய்ச்சி விடுவது போல், எழுதி விடுகிறார்! ஆனால்...ஆனால்...இன்று.....
கூரேசன் எழுதுவதை நிறுத்தி விட்டார்! பாஷ்யம் நிறையப் போகும் சந்தோஷத்தில் பொழிவைத் தொடர்ந்து கொண்டே இருந்த உடையவருக்கு அதிர்ச்சி!
தான் போட்டுக் கொடுத்த திட்டப்படி தானே கூரேசன் செய்கிறார் என்பது கூட மறந்து போனது! பாஷ்யம் முடிய வேணுமே என்ற பேராவல் மட்டுமே ததும்பும் நிலையில்...
"கூரேசா, தொடர்ந்து எழுதும்!"
மெளனம்...
"கூரேசா..."
"சுவாமி, ஜீவாத்மாவை ஞானம் மிக்கவன், ஞானம் மிக்கவன் என்று தான் சொல்லிக் கொண்டே இருக்கிறீரே அன்றி...
பரமாத்மனைச் சரணம் அடைந்து இருப்பதே அந்த ஞானத்தின் பயன் என்று விரிக்கவே இல்லையே! அதான்....."
"ஓ...அதான் உம்ம கை மறுக்கிறதா? பலே! அப்போ நான் எதற்கு? பாஷ்யத்தை சுயமாக நீரே எழுதிக் கொள்ளும்!"
எங்கிருந்து தான் அப்படியொரு கோவம் வந்ததோ இராமானுசருக்கு!
கோவமே வராதவர்களுக்கு கோவம் வந்தால்?
அதுவும் தப்பு செய்யாதவன் மேல் தப்பு செய்தான் என்று கோவம் வந்தால்???
உடையவர் விறுவிறு என்று எழுந்து, கூரேசன் கையில் இருந்த ஓலையெல்லாம் வீசி எறிந்து விட்டு, ச்சீ, நன்கு முடியப் போகும் தக்க சமயத்தில் இப்படி ஒரு தடையா என்று கடுப்புடன் வெளியேறி விட்டார்!
கூரேசனுக்கு மூச்சே நின்று போனது!
அய்யோ! நீங்க ஆரம்பிக்கும் போது சொன்னீர்களே! அதைத் தானே நானும் செஞ்சேன்?-என்று தன் பக்க நியாயங்களைச் சொல்லக் கூட, அவருக்கு வாய் வரவில்லை!
பரிபூர்ண சரணாகதர்களின் லட்சணம் இது தான்! தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை! "தன்னை அவன் கதிக்கே" விட்டு விடும் நிலை!"என்ன ஓய் கூரேசரே, இராமானுஜர் இப்படிக் கோவப்பட்டு நாங்க பார்த்ததே இல்லைங்காணும்! இனி நீர் என்ன செய்யப் போகிறீர்?
ரொம்ப பணிவானவர் போல வளைய வந்தீரே! இராமானுஜரையே எதிர்க்கும் அளவுக்கு அடடா என்னவொரு பணிவய்யா உமக்கு! குட்டு வெளிப்பட்டுருச்சி-ங்காணும்! பேசாம மடத்தைக் காலி பண்ணிட்டு போம்!"
எள்ளல்கள்!!! கருடன், சரணாகதியில் ஒடுங்கி இருந்தால்...மண்புழு கூட "கருடா செளக்கியமா"-ன்னு கேட்கும் அல்லவா? :)
"என்னது?....அவரே கோபித்தாலும்....அவரை விட்டுப் போவதா?.....ஹைய்யோ!
எத்தனையும் வான் மறந்த காலத்தும், பசும் பயிர்கள்மைத்தெழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும்!உன் அந்தமில் சீர்க்கு அல்லால்.....வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்றல்லால் பற்றில்லேன்!என் வாழ்வோ தாழ்வோ,
உன் கையால் நடப்பது என்னவோ,
அதுவே எனக்கு இனியது, இனி எது, இனி அது...கேட்கின்...?"
அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால், எவ்வளவு தான் நெருக்கமானவராக இருந்தாலும், சச்சரவு உண்டாகி விடுகிறதே...அதுவும் இந்த அறிவியல் காலத்திலேயே!
கருத்தைக் கருத்தாக மட்டுமே பார்க்காது...மாற்றுக் கருத்து சொன்னாலே, மாற்றான் ஆக்கி விடும் நிலைமை! ஒரு வேளை இராமானுசரும் அப்படிப் பட்டவர் தானோ?இராமானுசர் எழுந்து அவர் அறைக்குச் சென்று விட்டாரே தவிர, அவருக்கு எதுவுமே நிலை கொள்ளவில்லை! மறுபடியும் மறுபடியும் அதே யோசனை!
"கூரத்தாழ்வான் அப்படிப்பட்டவன் இல்லையே! தன் சொத்தையெல்லாம் விட்டுவிட்டு என் பின்னால் வந்தவன், இன்று மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்ள வேணும்? அப்படி என்ன நான் தப்பாகச் சொல்லி விட்டேன்? ஞானத்தை முதலில் சொல்லி, இன்னும் சிறிது நேரத்தில் சரணத்தைப் பற்றிச் சொல்லத் தானே போகிறேன்! அதற்குள் என்ன அவசரம்?"
ஆலயத்தில், சாற்றுமுறையில், கோயில் திருவாய்மொழி ஓதும் சத்தம் கேட்கிறது!
ஒண்சங்கு கதை வாள் ஆழியான்ஒருவன் அடியேன் உள்ளானே!!அடியேன் உள்ளான் உடல் உள்ளான்அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்படியே இது என்று உரைக்கல்லாம்படியன் அல்லன் பரம் பரன்!!!"ஆகா...ஆகா...இதைத் தானே கூரேசனும் சொன்னார்?
"என்"னுள்ளும் இறைவன் உள்ளான்-ன்னு சொல்லாது,
"அடியேன்" உள்ளான் என்று வருகிறதே மாறன் மொழி! அப்படீன்னா...அப்படீன்னா...
"என்" ஞானம் என்று ஒன்றும் கிடையாது!
"என்" கர்மம் என்ற ஒன்றும் கிடையாது!
அதான், இறைவன், "என்"-உள்ளான் என்று சொல்லாது
"அடியேன்"-உள்ளான் என்கிறாரோ நம்மாழ்வார்?
ஆகா! ஒரே சொல்லில், ஒத்தைச் சொல்லில்...அவன் "அடிக்"கீழ் நாம் இருப்பதைக் காட்டி...அப்படி "அடிக்"கீழ் இருக்கும் நமக்காகவே, அவனும் இருப்பதைக் காட்டி..."அடி"யேன் உள்ளான்! "அடி"யேன் உள்ளான்!!ஓ! ஞாபகம் வருது! வேதத்திலும்
பகவத் சேஷ பூத: ஜீவ: என்று தான் வருகிறது அல்லவா! அடா, அடா, அடா! வேதத்தில் கூட நாலு சொற்கள்!
நம்மாழ்வார் எப்படி இவ்வளவு அழகா, நறுவிசா, திராவிட வேதத்தில், ஒரே சொல்லால்? -
அடியேனுள்ளான்! அடியேனுள்ளான்!கூரேசன் சொன்னது சரியே! கூரேசன் சொன்னது சரியே!நாம் தான் அவசரப்பட்டு விட்டோம்! ஐயோ! கூரேசன் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ? கூகூகூரேசா....."
இராமானுசர் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்! அங்கே கூரேசன், கண்களில்.....வழிய....
பசியிலும், தனிமையிலும், "அவரே" என்று ஒடுங்கிய நிலையில்.....
"கூரேசா! என்னை மன்னித்து விடும்! என்னை மன்னித்து விடும்!"
"ஐயோ! சுவாமி, என்ன இது? உம்ம கண்ணில் இருந்து எதுக்கு இப்படி தண்ணி கொட்டுது? என்ன ஆயிற்று?"
"உம் கண்ணில் இருந்து கூடத் தான் தண்ணீர் கொட்டுது? என்னை மட்டும் கேட்கிறீரே?"
"சுவாமி..."
"ஒன்னும் பேச வேணாம்! நான் தான் அப்பவே சொன்னேன்-ல்ல? மூல நூலில் இருந்து நான் விலகிச் சென்றால், எழுதுவதை நிறுத்தி விடும், புரிந்து கொள்கிறேன்-ன்னு! அதை எனக்கு எடுத்துச் சொன்னால் என்னவாம்? எதுக்கு நான் திட்டிய போதும் மெளனம் காத்தீர்?"
"உங்கள் முக வாட்டமும், கோபமும் கண்டு, எனக்கு தற்காத்து கொள்ளக் கூட, பேச வரவில்லை! கண்ணீர் தான் வந்தது! அதான்....."
"ஐயோ! கூரேசா! இப்படியா இருப்பார்கள்?
உம்மைத் திட்டிவிட்டு, நான் மட்டும் உம்ம யோசனை இல்லாமல் இருப்பேனா? அரங்கன் சன்னிதி ஓதல் காட்டிக் கொடுத்து விட்டது! - அடியேனுள்ளான், அடியேனுள்ளான்! திருவாய்மொழி சொல்வது அதுவே! நீர் சொன்னதும் அதுவே!
இதோ, என் கருத்தை நான் மாற்றிக் கொள்கிறேன்! ஸ்ரீபாஷ்ய உரையை மாற்றிச் சொல்கிறேன்! தொடர்ந்து எழுதும் கூரேசா! எனக்காக, இந்த இராமானுசனுக்காக...தொடர்ந்து எழுதும்!"
* அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால்? = "நெருக்கமா"னவர் "வெறுக்க"மானவர் ஆவாரா?* மாற்றுக் கருத்து வந்தால்? = மனத்துக்கு இனியான், மாற்றான் ஆகி விடுவானா?* மாற்றுக் கருத்து....சரியானது என்னும் பட்சத்தில்...மாற்றிக் கொள்ள மனம் இடங் கொடுக்குமா? எப்போது இடங் கொடுக்கும்?காரேய்க் கருணை மனத்தில் இருந்தால்...இடம் கொடுக்கும்! "அடம்" கொடுக்காது! "இடம்" கொடுக்கும்!காரேய்க் கருணை இராமானுசா இக் கடல் நிலத்தில்யாரே அறிவர் நின் அருளாம் தன்மை? அல்லலுக்குநேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற பின்புசீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
இராமானுசர் திருவடிகளே சரணம்!