Showing posts with label ஆதி சங்கரர். Show all posts
Showing posts with label ஆதி சங்கரர். Show all posts

Sunday, April 18, 2010

பிறந்தநாள்: ஆதி சங்கரர்! ஹே சண்டாள, விலகு விலகு!

பந்தல் வாசகர்களுக்கு இனிய வணக்கம்!
இப்போ தான், ரங்கன் அண்ணா, ஆண்டாளின் வைதீக திருமண வைபவத்தையும், ஆளரிப் பெருமாளான நரசிம்ம வைபவத்தையும் எடுத்துக் காட்டி நிறுத்தியுள்ளார்!
அவர் அடுத்த பனுவலான, இரண்டாம் ஆயிரத்துக்குச் செல்லும் முன், இதோ இடையில் சிக்கெனப் புகுந்து, சில இதர பதிவுகள்! :)

* நாளை சங்கரர் பிறந்த நாள்! = சித்திரைத் திருவாதிரை! (Apr, 20, 2010)
ஆதி சங்கரர் தோன்றிய நாள்! வேத தர்மம் அழியாது காக்கப்பட்ட நாள்!

* நாளை இராமானுச ஜெயந்தியும் கூட! = அதே சித்திரைத் திருவாதிரை!
இராமானுசர் தோன்றிய நாள்! தமிழும் சமயமும் தலை தூக்கிய நாள்!
சாதியைத் தாண்டிய நாள்! சரணாகதி ஈண்டிய நாள்!

இன்னிக்கி ஒரு பதிவுக்குப் பதிலா, இரு பதிவா பார்ப்போமா?
முதலில் முதல்வரிடம் இருந்து துவங்குவோம்! ஆதி சங்கரர் காலத்தால் முதல்வர்! 788-820 CE!
* பிளவு பட்டுக் கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து தந்தவர் = மக்களுக்கு!
* கூடவே, வேத நெறிகளை ஆராய்ந்து, திரட்டியும் தந்தவர் = ஞானிகளுக்கு!

ஆதி சங்கரர் இல்லாமல், இந்தியச் சமய வரலாற்றை எழுதவே முடியாது! அப்படி நீக்கமற நிறைபவர்! இளம் விஞ்ஞானி, இளம் மெய்ஞானி!
பொதுவாகவே, பிரபலங்களைச் சுற்றிப் பல கதைகள் பின்னர் எழும்பினாலும்...
அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்ச்சிகள், அவர்களுக்கே ஒரு திருப்பு முனையாக அமையும்!
அப்படி ஒரு திருப்பு முனை ஆதி சங்கரருக்கு நடந்தது! அது என்ன?


என்ன தான் ஆன்மீகச் சிம்மமாக, தத்துவப் புலியாக இருந்தாலும், ஆதி சங்கரன் சிறு பிள்ளை தானே! 32 வயதிலேயே அனைத்தும் முடித்துக் கொண்டவன்!
அவனுக்கு இள வயது "வீறு" என்ற ஒன்றும் இருக்கும் அல்லவா! எவ்வளவு தத்துவம் பேசினாலும், நடைமுறை என்று வரும் போது???

குரு கோவிந்தபாதர் கருணையால், அ-த்வைதம் (அல்-இருமை) என்ற கோட்பாட்டை வேதங்களில் இருந்து விரித்துக் காட்டியாகி விட்டது!
ஆன்மீக உலகெங்கும் சங்கரா சங்கரா என்று பரவி விட்டது! கூட்டம் அலை மோதுகிறது! சீடர்கள் அலை மோதுகிறார்கள்!

சங்கரன் கல்விக் கடல்! ஞானக் கடல்!
ஆனால் அவனைச் சுற்றி ஒரு வளையம்...அறிந்தோ அறியாமலோ...
சீடர்களும் கடலில் கலந்த ஞான ஆறுகள்!
அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் - ஞானிகள், யோகிகள், அரசர்கள், பண்டிதர்கள் என்று இவர்கள் தான்...

* புத்திக்குத் தீனியான "தத்துவம்" பேசப்பட்டதே அன்றி,
* பத்திக்குத் தீனியான "அன்பு" அதிகம் பேசப்படாத காலம்!
=> ஆன்மீகம் = ஆண்டவனுக்கா? அடியவருக்கா??

உலகத்தைப் பற்றி உலக நாதனும், உலக நாயகியும் தானே கவலைப்பட வேணும்? காசி விஸ்வநாதனும், விசாலாட்சியும்....சங்கரனுக்குத் திருப்பு முனை காட்ட முனைந்து விட்டார்கள் போலும்!
சங்கரா, உன் வெறும் வாய்ச் சொல், இன்று வாய்மைச் சொல்லாகும் நேரம் வந்து விட்டதடா!


காசி நகரத்துப் பண்டிதர்களின் கல்வி கேள்வியில் திளைத்திருந்த சங்கரரும் சீடர்களும், அன்று ஆலய தரிசனம் செய்து வரப் புறப்பட்டார்கள்!
காசி நகரத்தின் மணிகர்ணிகா காட்! பொங்கு நீர் புரந்து பாயும் தூய்மையே உருவான கங்கை!

ஆ! காசியின் கங்கை "தூய்மையே உருவானதா"? என்னப்பா சொல்லுற நீய? அதில் தான் என்னென்னமோ மிதக்குதாமே?

உண்மை தான்! மிதக்குது தான்! ஆனால் அப்படியே தங்குகிறதா? இல்லையே! அடித்துச் செல்லும் ஆற்றல் கங்கைக்கு உண்டு! அதை யோசித்தீர்களா?
கூவத்திலோ, ஹட்சனிலோ குளிக்கத் தான் முடியுமா? ஆனால் கங்கையில் குளிக்கிறார்களே! உடல் கருமை அடைந்து விடுகிறதா என்ன? இல்லையே!
காசியின் கங்கை, அதன் கரைகள் மட்டுமே அல்ல! தயவு பண்ணி, கரையைத் தாண்டிக் கொஞ்சம் எட்டித் தான் பாருங்களேன்! அதன் விரிவு விரியும்!

காசியின் கங்கையைப் பற்றி ஒரு மாயத் தோற்றம் ஊடகங்களில் அண்மைக் காலமாக எழும்பி விட்டன!
கங்கையைத் தூய்மைப் படுத்தும் நீர் மேலாண்மை (Water Management) பணிகள் நிச்சயம் தேவை தான்! ஆனால் கண்டிப்பாக கங்கை என்பவள் கூவம் ஆகி விடவில்லை! நினைவில் வையுங்கள்: கங்கை செத்த நதி இல்லை! இன்றளவும் "ஜீவ" நதியே!

கதைக்கு வருவோம்!
இளம் சங்கரன் காவி உடையில் சிவ சிவ என்று சிவக்க ஜொலிக்க நடந்து வருகிறார்! பெனாரஸ் பட்டில் காவியும், தங்க ருத்திராட்சமும், கட் அவுட்டுகளும் அண்மையில் ஜொலித்ததே! அது போல் அல்ல! :)
சிவந்த தேகத்தில் சிவந்த காவி! தங்கத்தால் ஒளிராது ஞானத்தால் மட்டுமே ஒளிரும் தேகம்!
மெலிந்த உடல்! மெல்லிய பாதம்! படீரென குறுக்கே.....ஒரு பைராகி! so called சண்டாளன்!


சண்டாளன்! ஞானப் பெண்டாளன்!
அழுக்கு உடைகள்! கலைந்த கேசம்! கையில் கோல்! போதாக்குறைக்கு நாலு நாய்கள்!

ஏதோ காசி நகரத்து அகோரி போல-ல்ல இருக்கான்! தான் உண்ணாது, நாய்களுக்குப் பிய்த்து போட்ட படி வருகிறான்! ச்சே...என்ன இது...?
இப்படி ஒருவர், பேருந்தில், நம் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தால்? நம் மனசு முதலில் என்ன சொல்லும்?? ஆனால் ஆன்மீகம்-ன்னா மட்டும் எப்பமே வேறு கோலால் அளப்போம் அல்லவா? :)

சங்கரனும் நாம் செய்வதையே தான் செய்கிறார்! முகம் சுளிக்கிறார்! ஒதுங்கி ஓரமாக நடக்கப் பார்க்கிறார்!
ஆனால் பைராகியோ, ஒட்டினாற் போலத் தான் எதிர் திசையில் நடந்து வருகிறார்! கூடவே இந்த நாய்கள் வேறு, வீதி முழுக்க வட்டமடிப்பது போல் வருகின்றன! ஆச்சார சீலர்கள் போற்றிப் புகழும் சங்கரனுக்கோ தர்ம சங்கடம்! பிரைவேட் செக்யூரிட்டி வைத்து விரட்டும் அளவுக்கெல்லாம் அவர் படோபடானந்தா இல்லை! என்ன செய்வது?

ஆசார்யர் உம்மென்றால், உம் உம் உம் என்னும் சீடர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள் போல! "ஏய்..விலகு விலகு" என்கிறார்கள்!
ஆனால் அச்சச்சோ...பைராகி...இதோ வெகு அருகில் வந்து விட்டான்!

இவர் உடலில் வரும் விபூதி வாசனையை மிஞ்சும் அளவுக்கு, அவன் உடலில் சுடுகாட்டுச் சாம்பல் வாசனை! ஹா ஹா ஹா! ஈசன் பூசுவது என்னவோ சாம்பல் தான்! ஆனால் நாம் பூசுவோமா? இல்லை, பேசுவோம்! :)

கல்விக் கடலான சீடர்கள் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்! சங்கரன் கை அமர்த்துகிறார்! "ஹே...கச்ச...கச்ச..." என்று வெறுப்பான குரலில், வேகமாகச் சொல்கிறார்! "ஏய்...விலகு...விலகு..."!

அதென்னமோ தெரியலை, மூத்தவராக இருந்தாலும், தன் நிலைக்கு கீழானவர்களையோ, வேலைக்காரர்களையோ, "ர்" போடாமல், "ன்/ள்" போடுகிறோம் பல பேர்!
நம் ஆதி சங்கரன், "விலகுங்கள்" என்றாவது சொல்லி இருக்கலாம்! ஆனால் "விலகு" என்று தான் அவர் வாயிலும் வந்தது!

எத்தனை ஆன்மீகம் பேசினாலும், வாசிப்பு, சு-வாசிப்பு ஆகா விட்டால் வரும் பிரச்சனை இது தான்! :)



வாயைத் திறந்தார் பைராகி! உலகத்துக்கே படியளப்பவர் எப்படி பேசத் துவங்குவார்? "அன்னம்" என்றே துவங்குகிறார்!
"அன்ன மயாத் அன்ன மயம், அதவா,
சைதன்யம் ஏவ சைதன்யாத்!"
"அன்னம் தின்கிறேன், அன்னம் தின்கிறாய்! உனக்கும் உயிர், எனக்கும் உயிர்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் நீரும் நானும் வேறு வேறா?"

சங்கரன் ஒரு கணம் திகைத்து விட்டார்! என்னாது....பார்க்கறதுக்கு இப்படி இருக்காரு! ஆனா "சைதன்யம்"-ன்னு எல்லாம் பேசறாரே!
நாம் ஒருமையில் விளித்தாலும், அவர் நம்மை, "யதி வர-முனிவரே" என்றல்லவா அழைக்கிறார்! வெட்கம் பிடுங்கித் தின்றது சங்கரனுக்கு!

"ஹே ஆதி சங்கர, எதை விலகு விலகு என்று வெறுப்பு காட்டுகிறீர்! எதை விலக்க வேணும்? என் உடம்பையா? என் ஆத்மாவையா?
எதை விலக்கினால் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்? சொல்லுங்கள்! சொல்லுங்கள்!"

"ஹா...."

"மூச்சுக்கு மூச்சு, அ-த்வைதம் என்கிறீரே! அ-த்வைதம் என்றால் இரண்டு இல்லை என்பது தானே?
இப்போ மட்டும், ஆச்சார சீல ஒன்று, சண்டாளன் ஒன்று - என்று இரண்டாகி விட்டதா உங்கள் தத்துவம்
? எங்கே நீர் பேசிய அ-த்வைதம்??"

அவ்ளோ தான்! இடியே இறங்கி விட்டது நம்ம சங்கரனுக்கு! இப்படியொரு எடக்கு மடக்கு கேள்வியை, இது வரை, அவர் எந்த வாத சபையிலும் கேட்டதே இல்லை!
எல்லா வாதங்களுமே தத்துவம், புஸ்தகம் என்ற அளவில் மட்டுமே பார்த்தவருக்கு, முதல் முறையாக, உண்மை உறுத்து வந்து ஊட்டுகிறது!

கையெடுத்து கும்பிடுகிறார் சங்கரன் - சண்டாளனை(ரை)!

வாயில் கிடுகிடு-வென்று, படித்த உண்மையெல்லாம், அருவியாய்க் கொட்டுகிறது! மொத்தம் ஐந்து பாடல்கள் - மனீஷா பஞ்சகம்!

அது என்ன மனீஷா? மனீஷா கொய்ராலா மேலே பாடிய பஞ்சப் பாட்டு-ன்னு நினைச்சிக்காதீக! :)
மனீஷம் = புரிதல், உணர்தல், உறுதி கொள்ளல்! மனீஷா பஞ்சகம் = உறுதிப்பாடு ஐம்பதிகம்!
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

இப்படி ஞான யோகத்திலும், கர்ம அனுஷ்டானங்களிலும் மட்டுமே தோய்ந்திருந்த சங்கரருக்கு அன்று உலகநாதன் சுட்டிய உண்மை சுட்டது!
அ-த்வைதம் என்பது பேச்சு அளவில் நில்லாது, வாழ்வு முறை ஆகிப் போனது!
* இறை-"தத்துவம்" என்னும் தீனியில் மட்டும் திளைக்காது,
* இறை-"அன்பு" என்னும் அமுதம் கண்டு கொண்டான் சங்கரன்!

அகம் பிரம்மாஸ்மி, நேதி நேதி, தத்-த்வம்-அசி என்று பலவாறாகச் சங்கர பாஷ்யம் எழுதிய அதே சங்கரன்......
முதல் முதலாக.....பக்திப் பாடலாக....அதே காசியில்....பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் என்று ஈர மழை பொழியத் தலைப்பட்டான், இந்தச் சங்கரத் தலைவன்!



இந்த மனீஷா பஞ்சகம், இணையத்தில் அவ்வளவாக இல்லை! kamakoti.org (அ) sringeri.net போன்ற சங்கரத் தளங்களிலேயே அதிகம் காணோம்!
அதனால் இதையே ஆதி சங்கரப் பிறந்த நாள் பரிசிலாய்த், தமிழாக்கித் தருகின்றேன்!

வாசித்துப் பாருங்கள்! பாடலும் பொருளும் பொருந்தி வருகிறதா என்றும் சொல்லுங்கள்! வடமொழிப் பொருளைச் சரி பார்த்துக் கொடுத்த டாக்டர். சர்மா சாருக்கு, அடியேன் நன்றி!


சண்டாளனின் "தைக்கும்" கேள்விகள்:

அன்னமயாத் அன்னமயம், அதவா, சைதன்யம் ஏவ சைதன்யாத்!
யதி வர, தூரீ கர்த்தும் வாஞ்சஸி, கிம் ப்ரூஹி, கச்ச கச்சேதி?


அத்தைத் தின்று அங்கே கிடக்கும்
சிறியதின் வயிற்றில் நீயும் நானும்!
ஆதி சங்கரா, தூரம் தேவையோ?
எதனைச் சொன்னாய் "விலகு விலகே"?

ப்ரத்யக வஸ்துனி நிஸ்தரங்க, சகஜானந்தா அவபோத அம்புதௌ
விப்ரோ அயம், ச்வபசோ அயம், இதி அபி மகான், கோ அயம் விபேத பி்ரம்ம?


அனைவர் அகத்திலும் அமைதி என்றொரு
அலைகள் ஆடா அலைகடல் அன்றோ!
உன்குலம் ஏது? என்குலம் ஏது?
அ-த்வைதம் வெறும் வாய்மொழி தானோ?

கிம் கங்கா அம்புதி, பிம்பத அம்பர, மனெள சண்டாள வீதி பயா:
பூரே வா அந்தரம் அஸ்தி, காஞ்சன கடே, மி்ருத் கும்ப யோர்வா அம்பரே?


கங்கையில் ஒளிரும் கதிரவன் கதிர்கள்
சேரியின் நீரில் கறுத்தும் விடுமோ?
மண்குடம் ஒன்று, பொன்குடம் ஒன்றென
வானின் நீழலும் வீழ்ந்திடப் போமோ?


ஆதி சங்கரர் அருளிச் செய்த மனீஷா பஞ்சகம் - உறுதிப்பாடு ஐம்பதிகம்!


1
ஜாக்ரத ஸ்வப்ன சுஷூப்திஷூ, ஸ்புட தரா, யா ஸம் விது ஜ்ரும்பதே
யா பிரம்மம் ஆதி, பிபீலிக அந்த, தனு ஷூ ப்ரோதா, ஜகத் சாட்சிணீ
ச ஏவ அகம் ந, ச த்ருச்ய, வஸ்த்து இதி, த்ருட பிரக்ஞாபி யஸ்யஸ்தி சேத்
சாண்டாளோ அஸ்து, சது த்விஜோஸ்து, குருர் இதி, யேஷா மனீஷா மம!


விழிப்பில் கனவில், ஆழ்துயில் நிலையில்
பளபள வென்றே, பலதில் ஒளிர்வது!
பிரம்மம் முதலாய், எறும்பும் ஈறாய்
பரந்தும் கரந்தும், சாட்சி மிளிர்வது!
அறிந்தேன் அல்லேன், இவ்விரு நிலையில்
இருந்தேன் இருப்பை, இன்றே புரிந்தேன்!
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

2
பரம்மைவ அகம் இதம் ஜகச்ச! சகலம் சின்மாத்ர விஸ்தாரிதம்!
சர்வம் சைதத் அவித்ய யா! திரிகுண யா சேஷம் மயா கல்பிதம்!
இத்தம் யஸ்ய த்ருடாமதி: சுக தரே, நித்யே, பரே நிர்மலே!
சாண்டாளோ அஸ்து, சது த்விஜோஸ்து, குருர் இதி, யேஷா மனீஷா மம!


கடவுள் நானே! உலகில் நானே!
அணுவுள் அணுவாய், விரிவில் விரிவாய்!
எல்லா உயிர்ப்பும், அறியா மாயை!
முக்குண யுத்தம், என்-மீதம் பேதம்!
கறைகள் இல்லாக் குறைகள் இல்லாச்
சுகமே உணர்வான், எனக்கு அவனே
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

3
சச்வ நச்வரம் ஏவ விச்வம், அகிலம் நிச்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரம்ம, நிரந்தரம் விம்ருசதா, நிர் வியாஜ சாந்த ஆத்மனா!
பூதம் பாவி ச, துஷ் க்ருதாம், ப்ரதஹதா சம் வின்மயே பாவகே
ப்ராரப்த ஆய சமர்ப்பிதம், ஸ்வ வபுர் இத்யேஷா, மனீஷா மம!


இன்றோ உண்டு, நாளை இல்லை
உலகம் இதுவே! குருவின் விதியே!
இன்றும் உண்டு, என்றும் உண்டு
அதுதான் மாறா அமைதிப் பிரம்மம்!
போயின பிழையும், புகுதரு பிழையும்
தோற்றம் காட்டி மாற்றம் செய்யும்!
ஞானத் தீயில், தூசாக் கிடுவான்
சத்தியன்! சங்கரன் உறுதிப் பாடே!

4
யா திர்யங், நர தேவதாபிர் அகமிதி அந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாசா ஹ்ருதய அக்ஷ தேக, விஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:
தாம் பாஸ்யை: பிஹிதா அர்க்க மண்டல நிபாம், ஸ்பூர்த்திம் சதா பாவயந்
யோகீ நிர் விருத மானசோ, ஹி குருர் இத்யேஷா மனீஷா மம!


விலங்கு மனிதன், தேவருள் எல்லாம்
விளங்கி நிற்கும், நானே கடவுள்!
இதயம் விழிகள், உடலால் உணர்ந்து
உணர்வது எல்லாம் உண்மை ஆகா!
மேகம் போலே, கதிரைச் சூழும்
விளக்க அல்ல! மறைக்கத் தானே!
இதனை அறிவோன் ஞான யோகி
சத்தியன்! சங்கரன் உறுதிப் பாடே!

5
யத் செளக்ய அம்புதி லேசலேசத, இமே சகர ஆத்யோ நிவ்ருதா
யச் சித்தே ந இதராம் பிரசாந்த கலன, லப்த்வா முனிர் நிர்வ்ருத
யச் மிந் நித்ய சுக ஆம்புதௌ, கலித தீர் ப்ரம்மைவ, ந பிரம்மவித்
ய: கஸ் சித்ச, சுரேந்த்ர வந்தித, பதோ நூனம் மனீஷா மம!


இன்பக் கடலாம், பிரம்மம் அதிலே
ஒருதுளி பிரம்மமும் இன்பக் கடலே!
வானோர் வாசவன், முனிவரும் மூழ்கும்
வேறொன் றில்லாச் சித்தம் இதுவே!
இதனுள் மூழ்கி, அறிவார் எல்லாம்
அறிவார் அல்லார், அதுவே ஆவார்!
இந்திரன் துதிப்பான் இவர்தம் பாதம்
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

இதி ஸ்ரீமத் சங்கராச்சார்ய விரசித மனீஷா பஞ்சகம் சம்பூர்ணம்!

இத்துடன் சீர்வளர்சீர் சங்கராச்சார்யர் அருளிய உறுதிப்பாடு ஐம்பதிகம் நிறைந்தேலோ!

ஜகத்குரு ஆதி சங்கரர் திருவடிகளே சரணம்!
Read more »

Wednesday, September 02, 2009

நிர்வாண சிவோஹம் - ஓணம் ஸ்பெஷல்!

மக்கா, எல்லாவர்க்கும் என்டே ஹ்ருதயம் நெறைஞ்ச ஓண ஷம்சகள்! :)
நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு!
நன்மை நெறைஞ்ச பொன்னோணம் அஸம்சிக்குன்னு!
ஹிஹி! இனிய ஓணம் வாழ்த்துக்கள், அனைவர்க்கும்! :)

* ஓ"ண"த்துக்கு - மூனு சுழி "ண" போடனும் மக்கா! தப்பித் தவறீ ரெண்டு சுழி "ன" போட்டுறப் போறீக! பொருளே மாறீரும்! ஓ"ன"ம் = விஷச் செடி :)
பார்த்தாலே பரவசம் படத்துல, விவேக் மலையாளம் சம்சாரிச்சி, அடி வாங்குன கதையா முடிஞ்சீறப் போவுது! :)



* ஓணம் = திருவோணம் = ஷ்ரவணம் = Shravanam, எல்லாமே திருவோண நட்சத்திரத்தைக் குறிக்கும்! Aquarii Star!
* திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பாசுரம்! ஓணம் அம்புட்டு பெருமையான நட்சத்திரம்! பெருமாளின் திருநட்சத்திரம்!

ஆனா பாருங்க.....இன்னிக்கி (Sep-2-2009), ஓணத்தோடு, பிரதோஷமும் சேர்ந்தே வருகிறது!
பெருமாளும், சிவனாரும் ஒன்னா வந்தா...
ஒருத்தரோடு ஒருத்தர் சேர்ந்து ஒய்யாரமா வந்தா எப்படி இருக்கும்? சும்மா கற்பனை பண்ணிப் பாருங்க! :)

அட, அவிங்க எப்பமே சேர்ந்து தான் வாராங்க!
மனுசங்களுக்குத் தான் அவிங்க தனித்தனியா வரதுல ஒரு லூசுத்தனமான களிப்பு! :)
ஈசனும் பெருமாளும் தில்லையில் ஒன்னா வந்த அழகுக் காட்சி, தாருகா வனத்தின் கர்ம ரிஷிகளையே, செயலற்றுப் போக வைத்ததாம்! பொறுக்க மாட்டாம, சிவன் மேலயே மந்திரம் ஏவி விட்டாங்க, ரிஷிகள்! :)

பெருமாளும், ஈசனும் ஒன்னா வருவது.....
திருவோணம், திரயோதசி (பிரதோஷம்) ஒன்னா வருவது.....
இந்த இனிய நாளில் ஒரு இனிய பாட்டைப் பார்க்கலாமா?
பெருமாள் கேட்ட கேள்விக்கு, சிவனார் பாடும், பதில் பாட்டு! எச பாட்டு! :)

இந்த பாட்டு சந்தப் பாட்டு மட்டுமல்ல! சதா அலைபாயும் மனசுக்கு, அமைதியை, நிமிடத்தில் அளிக்கவல்ல பாட்டு!
இருள் மனத்தில், மின்னல் போல், வெளிச்சம் பாயும் பாட்டு!

நண்பர் ஸ்ரீவத்ஸ், ரொம்ப நாளா, இதை எழுதச் சொல்லி, என்னைய கேட்டுக்கிட்டு இருக்காரு!
பொருள் அறிஞ்சு, மனசுக்குள் ஒரு மெல்லிய காட்சியை ஓட்டும் போது,
அதுல கிடைக்கும் ஆனந்த அனுபவமே தனி! அதனால் ஸ்ரீவத்ஸ்-க்காக இன்றைய பதிவு! :)

பஜேஹம்! பஜேஹம்! சிவோஹம்! சிவோஹம்!
Part 2
Part 1
Very mesmerizing chant! கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்கோள்! :)



திருவோணப் பிரதோஷப் பதிவு!

சிவோஹம் சிவோஹம் -ன்னு சொல்லுறாங்களே! அப்படீன்னா என்ன?
சிவோஹம் = சிவ + அஹம்!
சிவம் நான்! நானே சிவம்-ன்னும் கூடச் சிலர் சொல்லிக்கிடுவாய்ங்க! :)

என்னாது.....நான் தான் சிவமா?
* அப்ப நான் தான் சகல சக்தி படைச்ச சிவனா? என்னால எதுவும் பண்ணீற முடியுமா?
* பத்து வேலை பண்ண நினைச்சா, அதுல எட்டு வேலை நடக்க மாட்டேங்குது! ரெண்டு தான் நடக்குது!
* அதுலயும், எது நடக்காது-ன்னு நினைச்சோமோ, அது நடக்குது! எது நடக்கணும்-ன்னு நினைச்சோமோ, அது நடக்க மாட்டேங்குது!
* இந்த லட்சணத்துல நான் எப்படிச் சிவம் ஆக முடியும்? சிவோஹம்-ன்னு சொல்ல முடியும்? :)

அட, நம்ம இரண்யகசிபு கூட அப்படித் தானே சொன்னான்?
நானே கடவுள்! அஹம் பிரம்மாஸ்மி! சிவோஹம்!
அப்போ, இரண்யகசிபு தான் உத்தம புருஷன் இல்லையா? :)
நாம கூட இரண்யகசிபு போல ஆயிறணும்! அப்படித் தானே? அதானே சிவோஹம்! சிவோஹம்! :))

ஹிஹி! சிவோஹம் = நானே சிவம்! இது சரியா? தவறா? :)
இது கிட்டத்தட்ட "அஹம் பிரம்மாஸ்மி" - "நான் கடவுள்" கான்செப்ட் தான்! நாம இன்னிக்கி அதைப் பார்க்க வேணாம்! இன்னொரு நாள் பார்ப்போம்!
மொதல்ல பசி எடுக்கட்டும்! அப்பறமா பந்திக்கு முந்துவோம்! இன்னிக்கி வெறும் Starters & Appetizers! :))

சிவோஹம் = சிவோ + அஹம்
= சிவம் என் அகத்துள் = அந்தர்யாமி!


* "சிவோஹம்" என்று சொல்வது...ஏதோ...."நான் தான் சிவம்" என்பது பொருள் அல்ல!
* சிவம் என் அகத்துள் வந்து பொங்குவதால், நான் சிவ மகிழ்ச்சியில், சிவ சொரூபத்தில் மிளிர்கிறேன் - அதான் உண்மையான பொருள்!


சிவோஹம் = நானே சிவம்-ன்னு கொள்ளக் கூடாது! அப்படிக் கொண்டால், நாமளும் இரண்யகசிபு ஆயிருவோம்! :))
ரெண்டே வாரம் தியான யோகம் பழகிட்டு, அஹம் பிரம்மாஸ்மி, நான் கடவுள், நானே சிவம்-ன்னு சொல்லிக்கிடறவங்க சில பேரு! அவிங்களை நிக்க வச்சி,
"ஐயா, நீங்க தானே சிவம்? உலக நன்மைக்காக கொஞ்சூண்டு விஷம் குடிங்களேன்?"-ன்னு சொல்லிப் பாருங்க! :)))))

"நான்" என்பது எங்கே அழிகிறதோ, அங்கே தானே "சிவம்" வரும்?
அப்பறம் "நானே" சிவம், "நானே" சிவம்-ன்னு, "நான்"-ஐ புடிச்சிக்கிட்டு இருந்தா எப்படி? :)
நான் மறையைக் கற்றவனா ஞானி?
"நான்" மறையக் கற்றவனே ஞானி!


சிவோஹம் = சிவோ + அஹம்
* இங்கே "அஹம்" என்பது = "ஆத்மாவைக்" குறிப்பது!
* இங்கே "சிவம்" என்பது = "ஆத்மாவின் ஆத்மாவைக்" குறிப்பது! = அந்தராத்மா = பரமாத்மா!
என் ஆத்மா, அந்தராத்மா என்னும் சிவத்தில் நிறைந்து தளும்புகிறது! சிவோஹம்!

சிவோ அஹம் = என் "ஆத்மாவில் வந்து நிறைந்த" சிவம்! வந்து நெஞ்சு நிறையப் புகுந்தான்!
திருமாலிருஞ் சோலைமலை என்றேன்! என்ன திருமால் "வந்து என் நெஞ்சு நிறையப்" புகுந்தான்! சிவோஹம்! சிவோஹம்!

எப்படிப் பொருந்தி வருது பார்த்தீங்களா பாசுரமும் சிவோஹமும்? திருவோணமும், பிரதோஷமும்?
* தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம் = சிவோஹம்! சிவோஹம்!
* நெஞ்சு நிறையப் புகுந்தான்! = சிவோஹம்! சிவோஹம்!
* அந்தர்யாமியாய் அகத்துளே நின்றான்! = சிவோஹம்! சிவோஹம்!

அந்தர்யாமியாய் நெஞ்சு நிறைதல் = இது தான் "சிவோ அஹம்" என்பதற்கு உண்மையான பொருள்!



இப்போ பாட்டைப் பார்க்கலாமா? ஆதி சங்கரர், சின்ன பொடிப் பையனா இருக்கும் போது எழுதியது! :)
தன் கேள்விகளுக்கான பதிலைத் தேடி, குருவைத் தேடி அலைந்த போது எழுதியது! மொத்தம் ஆறே பாட்டு தான்!

* இந்தப் பாட்டு, மொத்தம் ஐந்து கேள்விகளுக்கான விடை!
* ஆறு பாட்டாகப் பாடினார்!
அட, அஞ்சு கேள்விக்கு எப்படிப்பா ஆறு பதில் கொடுக்க முடியும்? ஹா ஹா ஹா!
அட, கேள்வி கேக்குறவங்க வாயை அடைக்கிறாப் போல, கூடவே ஒரு எக்ஸ்ட்ரா பதிலைக் கொடுக்குறா மாதிரியா இது? :)))

* ஐந்து கேள்விகளைக் கேட்டது திருவோணம் - பெருமாள்!
* ஆறு பதில்களைத் தந்தது பிரதோஷம் - சிவ பெருமான்!
எம்பெருமானின் ஜகன் மோஹனா காரத்தில் லயித்து, ஐந்து ஆறானது! ஆறு முகமான "பொருள்" நீ அருள வேண்டும்!

1. ஜீவன் எது?
2. பரம் எது?
3. ஜீவன் எதை அடைய வேணும்?
4. அடையும் வழிகள் என்ன?
5. அடையும் வழியில் தடைகள் என்ன?

ஐந்தே ஐந்து கேள்விகள்! ஆறே ஆறு பாடல்கள்! வாய் விட்டுப் படிங்க, சந்தம் தானா வந்துரும்!
பொருள் அறிஞ்சு, மனத்துக்குள் ஒரு மெல்லிய காட்சியை ஓட்ட...அதே மெட்டில் தமிழ் மொழி பெயர்ப்பும் செய்துள்ளேன்...பொருளும் இசையும் சேர்ந்து வருதா-ன்னு நீங்களே பார்த்துச் சொல்லுங்கள்!



விடுதல் ஆற்றுப்படை - நிர்வாண ஷட்கம்

பஜேஹம்! பஜேஹம்! சிவோஹம்! சிவோஹம்!
பஜேஹம்! பஜேஹம்! சிவோஹம்! சிவோஹம்!

1. ------------------------------------------------------------------------
மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்,
ந-ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந-ச க்ராண நேத்ரே,
ந-ச வ்யோம பூமிர், ந-தேஜோ ந-வாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!


மனம் புத்தி, ஆணவச் சித்தங்கள் இல்லை!
சினம் தங்கு செவி நாக்கு, கண்களும் இல்லை!
வானாகி மண்ணாகி, வளி ஒளியும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


2. ------------------------------------------------------------------------
ந-ச ப்ராண சங்க்யோ, நவை பஞ்சவாயு:
ந-வா சப்த தாதுர், ந-வா பஞ்சகோச:
ந-வா பாணி பாதம், ந- சோப ஸ்தபாயு:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

உயிர் மூச்சு மில்லை! ஐங் காற்றும் இல்லை!
எழு தாதும் இல்லை! ஐம் போர்வை இல்லை!
கை கால்கள் இல்லை! சினை வினையும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


3. ------------------------------------------------------------------------
ந-மே த்வேஷ ராகௌ, ந-மே லோப மோஹௌ,
மதோ நைவ, மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந-தர்மோ ந-ச அர்த்தோ, ந-காமோ ந-மோக்ஷ:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!


விரு வெறுப்பில்லை! மையல் பற்றும் இல்லை!
கரு கருவம் இல்லை! அழுக் காறும் இல்லை!
அறம் பொருள் நல்லின்ப, வீடும் நானில்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


4. ------------------------------------------------------------------------
ந-புண்யம் ந-பாபம், ந-சௌக்யம் ந-துக்கம்!
ந-மந்த்ரோ ந-தீர்த்தம், ந-வேதா ந-யக்ஞ:
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந-போக்தா,
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை!
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை!
துப்பில்லை, துப்பாக்கித் துப்பாரும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


5. ------------------------------------------------------------------------
ந-ம்ருத்யுர் ந-சங்கா, ந-மே சாதிபேத:
பிதா நைவ, மே நைவ மாதா, ச-ஜன்மா
ந-பந்துர் ந-மித்ரம், குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!

மரணங்கள் கரணங்கள், சாதிகள் இல்லை!
தாய் தந்தை இல்லை! தரும் பிறப்பில்லை!
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

6. ------------------------------------------------------------------------
அஹம் நிர்-விகல்போ, நிராகார ரூபோ,
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்
ந-ச சங்கடம் நைவ, முக்திர் ந-மே யா
சிதானந்த ரூபம்! சிவோஹம்! சிவோஹம்!


மாற்றங்கள் இல்லை! பல தோற்றங்கள் இல்லை!
எங்கெங்கும் எங்கெங்கும், எதிலும் நான் நானே!
தளையில்லை! தடையில்லை! தரும் முக்தி இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


* மந்திர ஒலி வடிவில் - வேகமாக!
* இசை வடிவில் - மென்மையாக!



தியானம், Meditation, யோகா, கீதா, நிர்விகல்ப சமாதி என்று...இன்னிக்கி பல இடங்களில் விதம் விதமாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்! நல்லது தான்!
யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், ஆசனம், தாரணம், சமாதி-ன்னு அடுக்கிக்கிட்டே போவலாம்! இன்னும் அஹம் பிரம்மாஸ்மி, அகோரி என்றெல்லாம் கூட சினிமா வரை யோசித்தாகி விட்டது!

ஆனால் அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது! இதைப் பழகாமல், எது பழகியும், ஒன்றுமில்லை!

வேணும்னா ஒரு குட்டி 5 watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்! :))
நமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கும்!
வட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி, ஏதோ ஒன்னு சுத்துதா?
தானா தூக்கம் வந்துரும்! உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு மாஸ்டர் சொல்லீருவாரு! படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :))))

எனவே தியானமோ, யோகமோ, எதைச் செய்யத் துவங்கும் முன்னும்....
அனைத்துக்கும் ஆதாரம் = சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது!
இதை இயல்பாகப் பாவித்து, பழகிக் கொள்ளுங்கள்!

* சிவோஹம் என்றால் "நானே சிவன்" என்பது அல்ல!
* சிவோஹம் என்றால் "சிவ-என்-அஹம்"!

வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்! அதனால் சிவ சொரூபமாக, மகிழ்ச்சியில் பொங்குகிறேன்!

இனி...
* அடுத்த முறை சிவோஹம் என்று சொல்லும் போதும்.....
* தியானத்தில் அமரும் போதும்.....
* உங்கள் அகத்தில்.....
* சிவம் வந்து நெஞ்சு நிறையப் புகுவது போல எண்ணிக் கொள்ளுங்கள்! நெஞ்சை ஈரப்படுத்திக் கொள்ளுங்கள்!

அப்படி ஈரப்படுத்திக் கொண்டு, அப்புறம் தியானம் செய்தால்.....
நிற்கும் போதும், நடக்கும் போதும்,
அலுவலகத்திலும், வீட்டிலும்,
நண்பர்களோடு பேசும் போதும்,
கோபத்தில் சண்டை போடும் போதும் கூட.....தியான மயமாகவே இயல்பாக இருக்கும்!
அனைத்தும் சிக்கலின்றி சீரான ஓடையில் இருக்கும்!
நெஞ்சு நிறையப் புகுந்த சிவன், அங்கேயே உங்களுடன் தங்கியும் விடுவான்!

உங்கள் அகத்தில்.....
"சிவம்" வந்து "நெஞ்சு நிறையப்" புகட்டும்! = சிவோ அஹம்!
சிவ சொரூபமாக, மகிழ்ச்சியில் பொங்குங்கள்! மகிழ்ச்சியில் பொங்குங்கள்!

சிவோஹம்! சிவோஹம்!
சிவோஹம்! சிவோஹம்!
ஸ்ரீ ஹரீ: ஓம்!

Photo Courtesy: Simply CVR :)

Read more »

Monday, November 24, 2008

கேஆரெஸ் சிவம்! துளசி சிவம்! பதிவர் சிவம்! பரமம் சிவம்!

கேஆரெஸ் சிவம்! ஜிரா சிவம்! துளசி டீச்சர் சிவம்! நம்ம ஜீவா சிவம்!
குமரன் சிவம்! கோவி கண்ணன் சிவம்! எஸ்.கே. சிவம்! மெளலி அண்ணன் சிவம்!
தேவும் சிவம்! வெட்டிப் பயலும் சிவம்! ஆயில்ஸ் சிவம்! அந்த அதிஷா சிவம்!
கானா சிவம்! கொத்த னாரும் சிவம்! துர்கா சிவம்! மை ஃபிரெண்டும் சிவம்!
பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்! பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்!!

அடப்பாவி கேஆரெஸ்! நல்லாத் தானே இருந்தே? என்ன ஆச்சுறா உனக்கு?
சுப்ரபாதம் போட்ட கையோடு, இப்படிச் சூடா வெண்பொங்கல் கணக்கா கொழ கொழ-ன்னு ஆயிட்டே? - அப்படின்னு பாக்கறீங்களா மக்களே? ஹா ஹா ஹா!

ஆல் பிகாஸ் ஆஃப் திஸ் குமரன்! இருங்க, அதுக்கு முன்னாடி ஒரே ஒரு சிவத்தை விட்டுபுட்டேன்! அவிங்களையும் சொல்லிடறேன்!
கீதா சிவம்! ஓ! அது அவங்க பேர்-ல ஏற்கனவே இருக்கா! சரி சரி!
கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! :)

மேட்டர் என்னான்னா, நம்ம கூடலார்-குமரனார் ஒரு பதிவு போட்டிருக்காரு! நானே சிவன்! நானே சிவம்-ன்னு!
அதைப் படிச்சதிலிருந்து, எனக்கு வேற வேலையே ஓடலை! அப்படியே ஒட்டிக்கிச்சி! ஏன்னா, நான் ரொம்ப நாளாய், அதுவும் நாத்திகனில் இருந்து ஆத்திகனாய் மாறிய காலம் தொட்டு, மிகவும் விரும்பிப் படிக்கும் பாட்டு அது!

இல்லை, இல்லை-ன்னு தான் அந்தப் பாட்டில் வரும்!
இல்லை-ன்னு சொல்லும் நாத்திகத்தை விட்டு வர, எனக்கு இந்த "இல்லை-இல்லை" பாட்டு தேவைப்பட்டுதோ என்னமோ? :)

ஆத்ம ஷட்கம் (நிர்வாண ஷட்கம்) என்பது அதற்குப் பெயர்! விடுதல் ஆற்றுப்படை-ன்னு, தமிழில் மொழி பெயர்த்து இருக்கேன்! :)
நிர்வாணம் = விடுபடுதல்! விடுபட்ட நிலை
ஷட்கம் = ஆறு பாடல்கள்
அதான் நிர்வாண ஷட்கம் = விடுதல் ஆறு! விடுதல் ஆற்றுப்படை!
ஆறு செய்யுளும் இருக்கு! நமக்கு ஆற்றுப் படையாகவும் இருக்கு!

இது ஜகத்குரு ஆதி சங்கரரின் அருளிச் செயல்!
பல தத்துவங்களை உள்ளடக்கிய பாட்டு! அத்வைதம் என்றால் என்ன என்று படிக்கத் துவங்குபவர்கள், இதைப் படிச்சிட்டுத் துவங்கினா, அத்வைதத்தின் நுண்ணிய கருத்துகள் பலவும் மிக எளிதாகப் புலப்படும்! ஏன் தெரியுமா?

ஆதி சங்கரரே, இதைப் பாடி விட்டுத் தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சாராம்!
அடியேன் சங்கரனும், இதைப் படிச்சிட்டு தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சேன்!
வாங்க, எப்பமே கதையைச் சொல்லிட்டுக் கருத்தைச் சொல்லுறது தானே என் கெட்ட பழக்கம் :)


ஆதி சங்கரர், என்ன தான் கருவிலே திரு உடையவர் என்றாலும், ஒரு நல்ல குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்! அப்போது தான் முதலை வாயில் இருந்து தப்பித்து, தாயின் இசைவோடு ஆபத் சன்னியாசம் பெற்று இருந்தார்! அது தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட சன்னியாசம்! முறையான ஒன்று அல்ல!

அப்படியே நடந்து நடந்து, இமயமலையில் உள்ள பத்ரிநாத் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார் சங்கரர்! கோவிந்தன் துணைகொண்டு ஞானம் பெற வேண்டும்! பரந்து விரிந்த ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம் போலும்!

திருவதரீ என்றும் பத்ரிகாச்ரமம் என்றும் சொல்லப்படுவது பத்ரிநாத்! 108 திவ்யதேசங்களிலே ஒன்றாக வைத்துப் போற்றப்படுவது! அதரி என்றால் இலந்தைப் பழ மரம்!
அதனடியில் பத்ரி நாராயணனாக, ஞான குருவாக இறைவன் வீற்றிருக்கிறான்! யோக முத்திரை காட்டியபடி! அவனுடன் மகாலக்ஷ்மி, சேனை முதலியார் என்று ஆசார்ய பரம்பரை!
கூடவே கருடன், வியாழன், நாரதர், குபேரன், உத்தவர், நர-நாராயணர்கள்!
பத்ரிநாதப் பெருமாள் ஞான குருவாக அமர்ந்து உபதேசிப்பதை, அர்த்த பஞ்சக ஞானம் என்று குறிப்பிடுவார்கள்!
1. ஜீவாத்மா எது?
2. பரமாத்மா எது?
3. ஜீவாத்மா எதை அடையணும்?
4. அடையும் வழிகள் என்ன?
5. அடையும் வழியில் தடைகள் என்ன?

சங்கரர் தப்த குண்டம் என்று சொல்லப்படும் சுடு நீர் ஊற்றிலே குளித்து விட்டு, பத்ரீநாதனை மனதால் சேவித்துக் கொண்டார்! பின்னாளில் அந்த ஆலயத்தின் இறைவனை ஆற்றில் இருந்து தாம் தான் எடுத்து மீட்கப் போகிறோம் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை! தன் அடி மன வேட்கையான ஒரு நல்ல குருவை அடையணுமே என்று வேண்டிக் கொண்டு, இமயமலையின் மேல் நடக்க ஆரம்பித்தது தான் தாமதம்...

கண் முன்னே அந்த ஞான குரு! பெயர் கோவிந்த பாதர்!
அடியேனைத் தங்கள் சீடனாய் வரிக்க வேண்டும் என்று இந்தப் பிள்ளை வேண்ட,
யாரப்பா நீ? என்று வந்தது ஒரே ஒரு கேள்வி!

சங்கரர் அதுகாறும் மனத்தில் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் மள மளவென்று மழை போல் பொழியத் துவங்கி விட்டார்!
* நான் மனம் இல்லை! நான் புத்தி இல்லை!
* நான் சினம் இல்லை! நான் சித்தம் இல்லை!
* நான் வான் இல்லை! மண் இல்லை! வளி இல்லை! ஒளி இல்லை!
* நான் அதுவும் இல்லை! நான் இதுவும் இல்லை! நேதி! நேதி!

எதுவுமாக இல்லாத நான், "நான் யார்?" என்பதை அறியவே தங்களை நாடி வந்துள்ளேன் குருவே என்று மொழிந்தார்!
தன் காலடிக் கதையைச் சொல்லிக் காலடியில் வீழ்ந்தார் அண்ணல்!
"நான் இல்லை! நான் இல்லை!" என்று சங்கரர், குருவிடம் சொன்ன முதல் சுலோகம் இதுவே! ஆத்ம ஷட்கம்! நிர்வாண ஷட்கம் என்றும் பெயர்!

கோவிந்தபாதருக்கு இந்தப் பிள்ளையின் ஞானத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு உண்டாகிவிட்டது! உடனே சன்னியாசத்தை முறையாக அளித்து, தன் சீடனாகச் சேர்த்துக் கொண்டார்!
அத்வைத நான்கு மகா வாக்கியங்களையும், அபேத சுருதிகளையும் சொல்லித் தர ஆரம்பித்தார்! அத்வைத விசாரணையும் படிப்பும் படிப்படியாகத் துவங்கியது!

பின்னாளில் ஞானம்-கர்மம்-பக்தி என்று மூன்று மார்க்கத்துக்குமே ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கப் போகும் சங்கரனின் பாடம் துவங்கியது இப்படித் தான்!
(* கோவிந்த பாதரை பத்ரிநாத்தில் சந்திக்காமல், நர்மதை நதிக் கரையில் சந்தித்தார் என்று சொல்வாரும் உண்டு)



குமரன் பதிவு இதோ! சொல்-ஒரு-சொல்லாய், பொருளும் கொடுத்திருக்காரு!
ஆறே ஆறு பாட்டு தான்! வாய் விட்டுப் படிக்கும் போது, சந்தம் தானா வந்துரும்!
இதைச் சந்தம் மாறாமல் தமிழ்ச் செய்துள்ளேன் அடியேன்!
சொல்லும் பொருளும் இசையும் சேர்ந்து வருதா என்று நீங்களே பார்த்துச் சொல்லுங்களேன்!

மந்திர ஒலி வடிவில் - வேகமாக! (கேட்டுக்கிட்டே படிங்க)


விடுதல் ஆற்றுப்படை

* அதுவும் இல்லை! இதுவும் இல்லை! நேதி! நேதி!

மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்


மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை!
சினம் தங்கு செவி நாக்கு கண்களும் இல்லை!
வானாகி மண்ணாகி வளி ஒளியும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(சிதானந்தம் = சித்தம்(ஞானம்) + ஆனந்தம்; சச்சிதானந்தம்/திருச்சிற்றம்பலம் என்பது போல் சித்+ஆனந்தத்தை மட்டும் தூய தமிழில் ஆக்காது, சிதானந்தம் என்றே வைத்து விட்டேன்! சிவோஹம் = சிவ + அஹம்)

ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

உயிர் மூச்சு மில்லை! ஐங் காற்றும் இல்லை!
எழு தாதும் இல்லை! ஐம் போர்வை இல்லை!
கை கால்கள் இல்லை! சினை வினையும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(ஐங்காற்று: ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று

எழு தாது: ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை

ஐம் போர்வை: அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


விரு வெறுப்பில்லை! மையல் பற்றும் இல்லை!
கரு கருவம் இல்லை! அழுக் காறும் இல்லை!
அறம் பொருள் நல்லின்ப வீடும் நானில்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


வினை வேட்கை இன்பங்கள் துன்பங்கள் இல்லை!
மறை வேத தீர்த்தங்கள் வேள்விகள் இல்லை!
துப்பில்லை துப்பாக்கித் துப்பாரும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(துப்பில்லை=உணவில்லை; துப்பாக்கித் துப்பாரும் இல்லை=உணவை உருவாக்கலும் இல்லை! உண்டு துய்ப்பவனும் இல்லை!)

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

மரணங்கள் கரணங்கள் சாதிகள் இல்லை!
தாய் தந்தை இல்லை! தரும் பிறப்பில்லை!
உற்றார்கள் சுற்றார்கள் குரு சீடர் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

அஹம் நிர்விகல்போ நிராகார ரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


மாற்றங்கள் இல்லை! பல தோற்றங்கள் இல்லை!
எங்கெங்கும் எங்கெங்கும், எதிலும் நான் நானே!
தளையில்லை! தடையில்லை! தரும் முத்தி இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


இதி ஸ்ரீ மத் சங்கராச்சார்ய விரசித, நிர்வாண ஷட்கம் சம்பூர்ணம்!
சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்! சிவோஹம்!
(***கார்த்திகைச் சோமவாரம் சிறப்புப் பதிவு***)


இசை வடிவில்:
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP