Thursday, June 30, 2011

தமிழ்ச் சினிமாவிலே சங்க இலக்கியம்! - Part1

"தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியப் பாட்டு போட்டா எடுபடுமா? மிக மிகப் பழங்காலத் தமிழ்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா?
ஆடியன்ஸ் கல்லெறிவார்களே! இசை மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!" :)

"டேய், அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி! காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் சங்கத் தமிழ் ட்யூனைத் தான் ஹம் பண்ணுறாங்கடா!
இதுவரை...தமிழ்ச் சினிமாவில் வந்த சங்கப் பாட்டு, எல்லாமே ஹிட்-ன்னா பார்த்துக்கோயேன்!"

"ஆகா! அப்படியா?"

"ஆமா! சில பேரு, தமிழ்-லயும் வீக்கு! காதல்-லயும் வீக்கு! இந்தப் பாட்டு வந்த போது, என்னைக்கும் இல்லாத திருநாளா, தமிழ் ஆசிரியருக்கு, பசங்க ரொம்பவே மரியாதை காட்டுனாங்க! எதுக்காம்? - இந்தப் பாட்டின் வரிகளை வாங்கி மனப்பாடம் செய்யத் தான்" :)

"உன்னி கிருஷ்ணனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடின பாட்டு! இருவர் படத்தில், AR ரஹ்மான் சங்கத் தமிழும் மெலடியுமாய்க் கொடுத்த மாஸ்டர் பீஸ்!
அப்படி என்ன, சங்கத் தமிழ்ப் பாடல்கள்-ல்ல அப்படி ஒரு மேஜிக் இருக்கு?


குறிஞ்சிப்பூ
முல்லைப்பூ

சங்க இலக்கியம் - அகம்/புறம் - என்று அகத்தைக் கரைத்து, புறத்தையும் கரைக்க வல்லது! ஏன்-ன்னா சங்க இலக்கியக் காதலில் இருப்பது = "உண்மை"!

சங்க காலக் கவிஞர்கள் எல்லாம் "வீறு" மிக்கவர்கள்!
"எங்கள் ரங்கநாயகியே, திருவாரூர் தமிழ்த் தேரே"-ன்னு.......தமிழை, பிச்சிப் போட்டு பிழைப்பு நடத்தத் தெரியும் 'வாலி-கூலி' அல்ல அவர்கள்!

பரிசில் பெற வேண்டி, மன்னனின் அவை நோக்கி அடகு வைப்பதெல்லாம் சங்க காலத்தில் அல்ல! பிற்காலத்தில் தான்! கலம்பகம், உலா -ன்னு அதன் பேரே 'சிற்றிலக்கியம்' என்று ஆகி விட்டது!
எழுபது வயது மன்னன் உப்பரிகையில் 'உலா' வந்ததைப் பாத்து, ஏழு வயசுப் பெண் பூப்படைந்தாள்-ன்னு உலா பாடிய 'கவிஞ்சர்கள்' எல்லாம் உண்டு! :)

நல்ல வேளை, இந்த மட்டமான போக்கை மாற்றி அமைத்து, தெய்வத் தமிழிசையில் திருப்பியது = ஆழ்வார்களும் நாயன்மார்களும்!
நாம் சங்க காலத்துக்கு வருவோம்! கிமு 300-கிபி 300!
ஆற்றுப்படை என்னும் தனிப் பிரிவே இருந்தாலும், அது கலைகளை ஆதரிக்கும் மன்னர்கள் எங்கெங்கு உள்ளனர் என்பதை மட்டுமே சொல்லும்!
கவிஞர்கள், பாணர், விறலியர் எல்லாரும் அங்கு சென்று, மன்னனிடம் உரையாடி, கலையாக்கம் தான் குடுத்தார்களே தவிர, 'துதி' பாடவில்லை!

கவிஞர்-பாணர்-விறலியரா? அப்படி-ன்னா? உதாரணமாகப் பார்க்கலாமா?
* கவிஞர் = கண்ணதாசன் (Lyric Writer)
* பாணர் = எம்.எஸ்.விஸ்வநாதன் (Music Composer cum Singer)
* விறலியர் = பத்மினி (Dancer cum Singer)

சங்க காலத்தில், எல்லாருமே இப்படி இசை நாடகங்களைச் செய்வதில்லை!
சில கவிஞர்கள், மன்னனையே எட்டிப் பார்க்காமல், சமூகத்தை மட்டும் பதிந்து வைக்கும் கவிகளாகவே இருந்து விட்டனர்!
அது போன்ற கவிஞர்களின் கவிதையில் இருக்கும் "காதல்" அப்படியே இதயத்தை அழுத்தி விடும்! அப்படியொரு வீச்சு! அதான் இன்னிக்கும் ஹிட்!

பார்க்கலாமா? - தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியம்!


1. நறுமுகையே நறுமுகையே, நீயொரு நாழிகை நில்லாய் - செம்புலப் பெயனீரார் - குறுந்தொகை!

படம்: இருவர்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து

ரஹ்மான், சங்கத் தமிழை, காதல் தமிழை, இப்படி மெலடியாக்கிக் கொடுப்பதில் வல்லவர்! வைரமுத்து-ரஹ்மான் கூட்டணியே, அதிகமான சங்கப் பாடல்களை, சினிமாவுக்கு கொண்டு வந்தது!
உன்னி கிருஷ்ணன் பாடுவது இனிமை! பாம்பே ஜெயஸ்ரீ, யாயும் ஞாயும் என்பதை யாயும் யாயும்-ன்னு மூச்சு இழுத்துப் பாடுகிறார்கள்! :)


யாயும் ஞாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன?
- இப்படிக் கவிஞர் வைரமுத்து எழுதினாலும், இதன் அடிப்படைப் பாடல் கீழே!

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக் கருதி அஞ்சிய தலைவியின் குறிப்பு கண்டு, தலைவன் கூறியது:
யாயும் ஞாயும், யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும், எம்முறைக் கேளிர்?
யானும் நீயும், எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
- செம்புலப்பெயனீரார், குறுந்தொகை-40, குறிஞ்சித் திணை

எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம்? Made for Each Other மாதிரி?
செம்மண்ணில் தண்ணி கொட்டிருச்சுன்னா
, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே! அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்! - இதான் பொருள்!

சூப்பரு! பொருளை, இந்த மாதிரியே தேர்வில் எழுதினேன்னு வையி, நூத்துக்கு நூறு தான்! :)
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு-ன்னு பாட்டு வருமே, அதுல கூட "செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது"-ன்னு கண்ணதாசன் இதே பொருள்-ல நடுவால எழுதி இருப்பாரு! ஆனால் அதை ஏனோ அண்ணன்-தங்கை உறவுக்குப் பாட்டா எழுதிட்டாரு!

செம்-புலம்-பெயல்-நீர் ன்னு காதலை வித்தியாசமாய் யோசித்து, "ஓவியத் தமிழ்" தீட்டியதால் தான் இந்தப் பாட்டு ஹிட்!
இதுல இன்னொரு குறிப்பும் இருக்கு! அந்த நீர் (பெண்), செம்மண்ணிலே (அவனிலே) கலந்த பின்னாலே, அவள் கலரே மாறி விடுகிறது! அவன் சிவப்பு, இவளுக்குள் முழுமையாக ஓடுகிறது! அப்படி ஸ்ட்ராங்கான கலப்பு! :)
என்ன செய்தாலும், அந்த நீரின் சிவப்பை இனி மாற்ற முடியுமா? அவனில் கலந்த அவள், அவனாகவே மாறி விட்டாள்!


2. தீண்டாய், மெய் தீண்டாய்! தாண்டாய், படி தாண்டாய்! - வெள்ளிவீதியார் - குறுந்தொகை!

படம்: என் சுவாசக் காற்றே
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: SPB, சித்ரா
வரிகள்: வைரமுத்து

இந்தப் பாட்டில், வைரமுத்து பாட்டை மாற்றி எழுதாமல், சங்கப் பாடலை அப்படியே முன்னிகையாக வைத்து விட்டார்!
அதைச் சித்ரா, மிக்க விரகத்தோடு, மிக இனிமையாகப் பாடுகிறார்! ஏக்கம் தொனிக்கும் எழில் தமிழ்! ரஹ்மானின் இசையில், பல இசைக் கருவிகள் பின்னணியில் வண்ண ஜாலம் காட்டுகின்றன!

பிரிவு ஆற்றாள் என்று கவன்ற தோழிக்கு, தலைவி உரைத்தது!

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால், நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல், என் மாமைக் கவினே
- வெள்ளி வீதியார், குறுந்தொகை-27, பாலைத் திணை

நல்ல பசும்பால்-ன்னா ஒன்னு கன்று குடிக்கணும்! இல்லை கலத்தில் கறக்கணும்! ஆனா இப்படி நிலத்தில் வீணே வழிகிறதே!
எனக்கும் உதவாமல், என்-அவருக்கும் உதவாமல், என் மாந்தளிர் மேனியும், வரியுள்ள அல்குலும் (பெண் உறுப்பும்), பசலையால், வீணே அழிந்து உழல்கிறதே!
(*அல்குல் = இடுப்பு (அ) பெண்ணுறுப்பு, அவ்வக் கவிதையில் இடத்துக்கு ஏற்றாற் போல்)

ஏதோ, "காமம்" பிடிச்சிப் போயிப் பாடிட்டாங்க-ன்னு நினைக்காதீங்க!:)
இந்தப் பாடல் மிகவும் சோகமான + புரட்சிகரமான பாடல்!

பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனைகள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு! ஆனால் பெண்கள்? = வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!
அதிலும் உறுப்பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை! வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!

ஒளவையார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தை, பாரி மகளிர் போன்ற 25+ பெண்பாற் புலவர்கள் உண்டு! ஆனால் வெள்ளிவீதியாருக்கு மட்டுமே இத்துணை துணிவு!


வெள்ளி வீதியார் கதை, நெஞ்சைப் பிழியும் கதை!

அவள் தமிழ்த் திறன் கண்டு, மாற்றுக் கொள்கை கண்டு.....,தன்னிலும் அறிவுள்ள இவள் நமக்குச் சரி வருவாளோ?-ன்னு காதலைக் கைவிட்டு விட்டான் காதலன்!
அன்றிலிருந்து ஓடாய் அலைந்து அலைந்தே இவள் மாண்டு போனாள்!

காதலன் இருக்கும் ஊருக்கு நடையாய் நடப்பாள்! ஆனால் இல்லத்தின் சுவரிலே சாய்ந்து விட்டு வந்து விடுவாள்! அவனைத் தொல்லை செய்ய மாட்டாள்!

* சொல்பேச்சு கேளாத இவளைப் பிறந்த வீட்டிலும் புறக்கணித்து விட்டார்கள்!
* இவள் வித்தியாசமான மனசுக்கு நண்பர்களும் புறக்கணித்து விட்டார்கள்!
* ஆனாலும் நெஞ்சின் காதலை...இவள் மட்டும் கடசி வரை மறுதலிக்கவே இல்லை!

இவள் வாழ்ந்த அந்த "வாழ்வை", ஒளவையாரே வேறு சில பாடல்களில் பாடிக் கண்ணீர் விடுகிறார்!

இந்த வெள்ளிவீதியார் எழுதியவை தான், சங்க இலக்கியப் பெண் கவிதைகளிலேயே மிக அதிகம்!
அழகான சொல்லாட்சி & உவமை! ஓவியமாய்க் கவிதையை வரைந்த பெண்!
ஒவ்வொரு வரியும் 'சுருக்' என்று தைக்கும்! கீழ்க் கண்ட காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்!


வெட்ட வெயிலில், வெள்ளைப் பாறையில், வெண்ணைய் உருண்டை!
அதுக்குக் காவல் = கண்ணுள்ள, ஆனால் வாய் இல்லாத + கைகள் இல்லாதவன்!
பாறையிலே வெண்ணைய் உருக உருக,....
அதைக் காப்பாற்றக் கையும் இல்லை! பிறரை உதவிக்கு அழைக்க வாயும் இல்லை!

இடிக்கும் கேளிர், நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ, நன்றுமன் தில்ல!
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமண் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே!!
(- வெள்ளிவீதியார் - குறுந்தொகை 58 - குறிஞ்சித் திணை - கழற்றெதிர்மறை)

அந்த வெண்ணெய் கரைவதைப் பார்த்துப் பார்த்தே, ஏங்கி ஏங்கி...
அது போல்.............,
* அவன் என்னை விட்டுவிட்டான் என்று ஊரார்/நண்பர்கள் முன் வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல்,
* அதே சமயம் தன்னைத் தள்ளும் அவனை அள்ளவும் முடியாமல்...
இவள் தனிமைக் காட்டிலே....கரைந்து, கரைந்து.....முருகா!

வெள்ளிவீதியார் வாழ்க! முருகா, இவளுக்கு இன்பம் கொடு! பேதைக்கொரு "வாழ்வு" அருள், பெருமாளே!


* ரஹ்மான், இளையராஜா, MSV என்று பலரின் இசையில்...
* கலித்தொகை, திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம்...என்று....
* தமிழ்ச் சினிமாவி்லே சங்க இலக்கியம்.....அடுத்த பகுதியில் தொடரும்!

அதுவரை...சங்க இலக்கியம் பற்றிய எளிமையான குறிப்புகள்/வரலாற்றை, இங்கு காணலாம்! (இது சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள் என்பதற்கான குறிப்பு மட்டுமே)
Read more »

Sunday, June 26, 2011

நாயன்மாரை வெறுத்த நாயன்மார்!

தன் சொந்த "காம" விஷயங்களுக்கெல்லாம் இறைவனைத் தூது அனுப்புவதா? என்று சக அடியாரிடம் 'வெறுப்பு' பாராட்டி........., அந்தப் பகையால், உயிரையே விடத் துணிந்த ஒருவரின் கதை!

பந்தலில், நாயன்மார்களின் கதைகளை, பெரிய புராணப் பூச்சுகள் இல்லாமல்...மூல நூலில் உள்ளது உள்ளபடி...
இன்று ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் குரு பூசை (நினைவு நாள்) - Jun 25,2011 (ஆனி மாதம், ரேவதி நட்சத்திரத்தில்...)



ஏயர்-கோன்-கலிக்காம-நாயனார்!

அது என்னாங்க ஏயர் கோன்?
ஏயன் = காங்-கேயன், கார்த்தி-கேயன், நச-ரேயன்(இயேசுநாதர்)...இப்படிப் பல ஏயன்கள்! ஏயன்=தலைவன்!
இன்னும் விவரமாச் சொல்லணும்-ன்னா...ஏயன்=ஈயன்! ஈன்று தரப்படும் குழந்தை, பின்பு தலைவனாகத் திகழ்வது!

* கங்கை ஈன்றதால் = காங்கேயன் (முருகன்)
* கார்த்திகை ஈன்றதால் = கார்த்திகேயன் (முருகன்)
* நசரேத் என்னும் ஊர் ஈன்றதால் = நசரேயன் (இயேசு பிரான்)
* குந்தி ஈன்றதால் = கெளந்தேயன் (அருச்சுனன்)

அது போல பல ஏயன்களுக்கு (வீர மகன்களுக்கு)...கோன்-ஆக (தலைவனாக) விளங்கியதால் = ஏயர் கோன்!
கலிக்காமர் என்பதே இவர் சொந்தப் பெயர்! ஏயர் கோன் = பட்டப் பெயர்!

சீர்காழி/ வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ள 'திருப்பெரு மங்கலம்' தான் இவரோட சொந்த ஊரு!
நந்தனாருக்கு நந்தி விலகுச்சே (திருப்புன்கூர்), அதுக்கும் சற்று கிட்டக்க!
சோழப் படைகளுக்குத் தளபதிகளைக் கொடுக்கும் குடியில் தோன்றியவர்! பெரும் வீரர்! அதை விட, பெரும் சிவ பக்தர்!

ஆனால்.......
ஆனால்.......
இவருக்கு, இன்னொரு சிவபக்தரான சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டாலே ஆகாது!


ஏனாம்? அவரு பாட்டெழுதி பேரு வாங்கிக்கறாரு-ன்னு பொறாமையா? ஏதாச்சும் வாய்க்கால்-வரப்பு தகறாரா? :)
அதெல்லாம் ஒன்னுமில்லை! சுந்தரர், தன் 'காம இச்சைக்காக' ஈசனையே தூது போகுமாறு வேண்டினாராம்! அதான்! :))

'இவன் பண்ணினது தப்பு - அதுக்குத் தூது, இறைவனே போக வேணுமா? அட, அந்தாளு தான் மானங்கெட்டுக் கேட்டா, இந்த ஈசனும் அப்படியே போயிடறதா? சீச்சீ!' - இப்படியான வெறுப்பு கலிக்காமருக்கு! :))
ஆனா சமயக் குரவர் நால்வருள் ஒருவரான, சுந்தரர் நிலை என்ன?
'போடா! என்னை ஈசனே ஒன்னும் சொல்லலை! நீயென்ன பெருசா கருத்து சொல்ல வந்துட்ட'?-ன்னு பதிலுக்கு குதிச்சாரா? :) இல்லை!



சுந்தர மூர்த்தி நாயனார் = சொகுசு மூர்த்தி நாயனார் தான்!:)
ஆனால் அந்த சொகுசிலும், ஈசனையே முன்னிறுத்தி எதையும் செய்பவர்!

ஈசன் தான் அவருக்கு உற்ற தோழன்! அவனிடம் எதையுமே மறைக்கும் வழக்கம் இல்லை அவருக்கு!
* சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சா, அதையும் அவன் கிட்ட சொல்லுவாரு!
* தான் ஸ்டைலாப் போட்டுக்கும் உடுப்பு எப்படி இருக்கு-ன்னு, அதையும் அவன் கிட்டவே கேப்பாரு!
* ஒரு பொண்ணு அழகா நடனம் ஆடுறாங்களா, வாவ் செம ஃபிகர்-ன்னு அதையும் ஈசன் கிட்டயே சொல்லித் தான் அவருக்குப் பழக்கம்:)
அப்படி ஒரு அன்னோன்ய பாவனை! எனக்கு முருகனா வந்து வாய்ச்சானே, அது போல-ன்னு கூட வச்சிக்கோங்களேன்!:))

ஈசன்-ன்னா பெரிய கடவுள், அவரைத் துதிக்கணும், கைலாச பதவி, அவர் முன்பு பணிவோடு நடந்துக்கணும் போன்ற எண்ணமெல்லாம் சுந்தரருக்குத் தோனாது!
ஏதோ தோள் மேல் கை போட்டு பேசுற பாவனை தான் எப்பமே!

ஆனா இது உலகத்தில் எல்லாருக்கும் புரிஞ்சிடுமா? இது "ஒரு வினோதமான" பாவனை!

யாராச்சும் முருகன் சிலையைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு, Bed-ல்ல வச்சிக்கிட்டே தூங்குவாங்களா?:) காலையில் எழுந்திரிச்ச உடனேயே, முருகனுக்கு முத்தம் கொடுப்பாங்களா?:)
யாராச்சும் தன் அந்தரங்க ஆசை, காமம் உட்பட, இதையெல்லாம் போய் தெய்வத்து கிட்ட சொல்லுவாங்களா?

இப்படித் தான் சொகுசு மூர்த்தி நாயனாரான = சுந்தர மூர்த்தி நாயனார், தன் அந்தரங்க ஆசைகளையும் ஈசனிடம் மட்டுமே சொல்லுபவர்!


திருவாரூரில் பரவை நாச்சியோடு காதல் திருமணம்! ஆனால் சென்னை திருவொற்றியூர் ஆலயம் சென்ற போது, அங்கே இன்னொரு நடன மங்கை, சங்கிலி நாச்சியைக் கண்டு இருவருக்கும் காதல்!
அங்கேயே மணம் செய்து கொண்டார்! பின்னர் இறைவனிடம் படவும் பட்டார்! ஆனால் திருமணத்தைக் கேள்விப்பட்ட பரவை நாச்சிக்கு தாங்க மாட்டாத கோவம்! சுந்தரர் மீண்டும் திருவாரூர் சென்ற போது, கதவடைத்து விட்டார்!

அவள் கோபத்தைத் தணிக்க, ஆரூர் அழகேசரான ஈசனையே தூது செல்லுமாறு வேண்டினார் சுந்தரர்!
மாறு வேடத்தில் சென்ற ஈசனுக்கும் கதவு சார்த்தப் பட்டது!
ஒரு முறைக்கு இரு முறை...., வீதி விடங்கப் பெருமான், வீதியில் கால் தேய நடந்து, பரவையின் கோபத்தைத் தணித்தார்!

இதைக் கேள்விப்பட்டுத் தான், நம்ம கலிக்காமருக்கு மனசே ஆறலை!
'மாலும் ஐயனும் தேடித் தேடொணாத் திருவடிகள்...
அதைக் கால் தேய நடக்க விட்டானே...அதுவும் தன் இச்சைக்காக! பாவி! இவனெல்லாம் ஒரு சமயக் குரவனாம்? சுந்தரனாம்....ச்ச்சீ'
- இப்படியொரு வெறுப்பை வளர்த்துக் கொண்டு, அதைப் பலரிடம் சொல்லியும், அவ்வப்போது வெளிக்காட்டியும் வந்தார் கலிக்காமர்!

விஷயம் சுந்தரர் காதுகளுக்குச் சென்றது! சுந்தரருக்குத் தன் மேலேயே வெட்கமாக இருந்தது! 'ஆமாம்-ல்ல? நான் ஈசனை மதிக்காமல் ரொம்பத் தான் வேலை வாங்குறேனோ? ஆனா எனக்கு அவன் தானே எல்லாம்!
இது உலக வழக்கத்துக்கு மாறாக வேணும்-ன்னா இருக்கலாம்! காமமோ? காதலோ? அவன் கிட்டச் சொல்லாம யார் கிட்ட போய்ச் சொல்வது? - இதை கலிக்காமருக்கு எப்படிப் புரிய வைப்பேன்'?

'ஏன் புரிய வைக்க வேண்டும்? போனாப் போறான் கலிக்காமன்! அவன் வழி அவனுக்கு, என் வழி எனக்கு!'
- இப்படி உதறித் தள்ள மனம் வரவில்லை சுந்தரருக்கு! அடியார்கள் குழுவில் இசைந்து இருப்பதல்லவோ அழகு!

கலிக்காமர் நல்ல மனிதர்! நல்ல சிவ பக்தர்! அவர் வெறுக்கும் படி நான் இருக்கிறேனே! அவருக்குப் புரிய வைப்பது எப்படியோ?.....
என்று ஈசனிடமே மறுபடியும் போய்......ஏங்ங்ங்ங்கி.......நிற்க........



கலிக்காமருக்குச் சூலை நோய்! கடும் வயிற்று வலி! மருத்துவர்கள் வந்து மருந்து குடுத்தும் நிற்கவில்லை!
கனவில் ஈசன்...."கலிக்காமரே, நம் சுந்தரன் இங்கு வருவான்...உன் வலி தீரும்!"

திடுக்கிட்டு எழுந்தார் கலிக்காமர்! 'ஆகா! என்ன கொடுமை இது! நம் சுந்தரன்-ன்னு அடைமொழியா? ச்சீ...அவன் வந்தா என் வலி தீர வேண்டும்?
வேண்டவே வேண்டாம்! நான் செத்தாலும் சாவேன்! ஆனால் அவன் வந்து, என் வலி தீர்ந்தது-ன்னு இருக்கக் கூடாது'

அங்கு ஈசன்...."சுந்தரா...நம் கலிக்காமனின் வலியைத் திருநீற்றால் தீர்ப்பாயா? உன்னைப் பிடிக்காதவன் வீட்டுக்கு நீ செல்வாயா?"
சுந்தரர்: 'ஈசனே...நீயே....நம் கலிக்காமன்-ன்னு உறவு கொண்டாடுகிறாயே, அப்படியானால் உன் உறவு என் உறவு அல்லவா! இதோ கிளம்பிப் போகிறேன்!'

இருவருமே சிறந்த பக்தர்கள் தான்! ஆனால் தன்னைப் பின்னுக்குத் தள்ளி, தன் மானத்தையும் பின்னுக்குத் தள்ளி...அவனுக்கே அவனுக்கே....என்று இருக்கும் மனசு??? = பேதை மனசு!



சுந்தரர், திருப்பெருமங்கலம் வருகிறார் என்று தெரிந்து, ஊரே கூடி விட்டது!

பலருக்கும் சுந்தரரின் தெய்வத் தமிழ்ப் பதிகம் கேட்க ஆசை இருக்கோ இல்லையோ.....ஆனால் இரண்டு எதிர் துருவங்கள் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் ரசா பாசம் அரங்கேறுமோ?.....அதைக் 'கண்டு களிக்கும்' ஆவல் கூடி விட்டது :))

ஆனால், கலிக்காமருக்கு, இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை!
என்ன இது...இக்கட்டான நிலைமை!
அவனா? ச்சே...வேண்டவே வேண்டாம்! தனி அறையில்....தன் வாள் எடுத்து, தன் வயிற்றைத் தானே குத்திக் கொண்டார்!

ஐயோ! இரத்த வெள்ளம்!
கலிக்காமரின் மனைவி துடிக்கிறார்கள்!
கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில்...
இப்படிக் குப்-பென்று நடந்து விட்டதே! முருகா!

பொன்னார் மேனியனே....புலித்தோலை அரைக்கசைத்து
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?
ஆகா! வீட்டு வாசலில் தேவாரப் பதிகச் சத்தம் கேட்கிறதே! சுந்தரர் வந்து விட்டாரோ?

வீடேறி வந்து விட்ட ஒருவரை எப்படி நடத்துவது?
குகக் குறிப்போ? அல்லது முகக் குறிப்போ?
வாங்க வாங்க, வந்த அஞ்சே நிமிடத்தில் போங்க போங்க....
.........இப்படியெல்லாம் செய்ய மனம் வருமா அந்தக் குல மகளுக்கு? மானக் கஞ்சாற நாயனாரின் மகள் அல்லவா!

அருமைக் கணவனின் உடலை, அறையில் பத்திரப்படுத்தி இருத்தி, கட்டி அணைத்து...கண்ணைத் துடைத்து...
அழுகை ஒலிகளை அடக்கச் சொல்லி விட்டு, தானும் அடக்கிக் கொண்டு....வெளியில் ஓடுகிறாள்!
சிறந்த சிவத் தொண்டரான சுந்தரரை, உள்ளே வருக, என்று அழைத்து, பணிந்து, இடி விழுந்தது போல் நிற்கிறாள்!

சுந்தரரும், 'அம்மா, கலிக்காமரைக் காண வேண்டுமே!' என பேச்சை ஆரம்பிக்க...விஷயம் ஒவ்வொன்றாய் வெடித்து வெளியில் வருகிறது...

சுந்தரர் அலறி அடித்து, அறைக்குள் ஓட....அங்கே இரத்த வெள்ளத்தில் கலிக்காமர்!
ச்சே...நல்லது செய்ய நினைத்து தீயதாய் முடிந்ததே...இதற்கா இத்தனை தூரம் வந்தேன்...வந்து இவள் மாங்கல்யத்தைக் கெடுத்தேனோ?
இப்படியுமா.....என் மீது வெறுப்பின் உச்ச கட்டம்?....சுந்தரர் கதறி அழ.....

திடுமென்று, யாரும் எதிர்பாரா வண்ணம்....
அருகே இருந்த வாளை உருவி....தன் மீது பாய்ச்சிக் கொள்ள.....

"சுந்தரா...நில்!!!!
எப்படிப் புரிய வைப்பது என்று தவித்தாயே!
உயிரைப் 'பரிந்தால்' புரியும்! பரிவதில் ஈசனைப் பாடி...."

கலிக்காமர் எழுந்தே விட்டார்!
என்ன மாயமோ...கலிக்காமர் எழுந்தே விட்டார்!
சுந்தரரின் உருவிய வாளை இறுகிப் பிடித்து கொண்டார்!

சுந்தரனின் விந்தையான பேதை மனம், அப்போது தான் கலிக்காமருக்குப் புரிந்தது...
* ஈசனே, நம் சுந்தரன் என்று சொல்லியும், தன் கருத்தை மட்டுமே முன்னிறுத்திய தான் எங்கே......
* பலரிடமும் பேசி இழிவு படுத்துகிறேன் என்று தெரிந்தும், ஈசனின் பேச்சை மட்டுமே முன்னிறுத்தி, என் வீட்டு வாசலில் நின்ற சுந்தரன் எங்கே....

வெட்கம் பிடுங்கி தின்ன....சுந்தரர் காலில் கலிக்காமர் வீழ....
அன்பு பிடுங்கித் தின்ன....கலிக்காமர் காலில் சுந்தரர் வீழ....

இருவரும் ஆரத் தழுவிக் கொண்டார்கள்! உயிர் நண்பர்கள் ஆனார்கள்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

திருப்புன்கூர் ஆலயத்துக்குச் சுந்தரரை அழைத்துச் சென்ற கலிக்காமர்...அங்கே இறைவன், நந்தனாருக்கு விலகிய நந்தி....என்று அனைத்தும் காட்ட...
சுந்தரர் தேவாரப் பதிகங்கள் பாடி....அதில் தன் நண்பரான கலிக்காமர் பேரையும் பாடிக் குறித்து வைத்தார்!

ஏத நன்னிலம் ஈராறு வேலி
ஏயர் கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து
பூத வாளி நின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொழில் திருப் புன்கூர் உளானே

உம்பர் ஆளியை உமையவள் கோனை
ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து
அன்பினாற் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு
ஐந்தும் வல்லவர் அருவினை இலரே

பந்தல் வாசகர்களே......நம் மனசாட்சியை நாமே கேட்டுக் கொள்வோமா?
* ஈசனே, நம் சுந்தரன் என்று சொல்லியும், நம் கருத்தை மட்டும் தான் நாம் முன்னிறுத்துவோமா?
* இழிவு படப் போகிறோம் என்று தெரிந்தும், அன்பனின் பேச்சை மட்டுமே முன்னிறுத்தி, இன்னொரு வீட்டு வாசலில் போய் நிற்போமா?....

அவன் உள்ள உகப்புக்கு நாமா?
நம் உள்ள உகப்புக்கு அவனா?

பேதை மனம் கொண்ட சுந்தரரையும், வீர மனம் கொண்ட கலிக்காமரையும் சேர்த்து வைத்த....
திருவாரூர் தியாகேசப் பெருமான் திருவடிகளே சரணம்!
ஏயர் கோன், கலிக்காம நாயனார் திருவடிகளே சரணம்!
Read more »

Tuesday, June 21, 2011

Annamayya Movie-Telugu Group Song ...தமிழில்!

இது மிகப் பிரபலமான பாடல்! அன்னமய்யா படத்தில் எல்லாரும் சேர்ந்து பாடும் கடைசிப் பாடல்....
பிரம்ம கடிகின பாதமு
பிரம்மமு தானினி பாதமு


இங்கே சென்று கேட்கவும்! படிக்கவும்!
பின்னூட்டங்களும் அங்கே! இங்கு பூட்டப்படுகிறது!:)
கண்ணன் பாட்டிலே, அடியேனின் 99th பாடல்!:)
Read more »

Sunday, June 19, 2011

ஒரே இலையில் சாப்பிட்ட அனுமன்-இராமன்!

"இது என்னாது புதுக்கதை? ஒரே இலைச் சாப்பாடா? அதுவும் அனுமனும் இராமனும்? என்னய்யா சொல்றீக? பொதுவா புருசன்-பெண்டாட்டி தானே ஒரே இலையில் சாப்பிடுவாக?"

"நானும், என் தோழனும் ஒரே தட்டில் சாப்பிடறது இல்லையா? தட்டில் இருந்து தட்டுக்கு....படக் படக்-ன்னு டிரான்ஸ்பர் ஆகுமே?":)

"டாய்! அது வேற இது வேற!"

"சரி! இப்போ என்னாங்குற?"

"டாய் கேஆரெஸ்! என்னமோ நீ தான் அனுமனுக்குப் பந்தி பரிமாறினாப் போல பேசுற? அனுமனும் இராமனும் ஒரே இலையில் சாப்பிட்டாங்க-ன்னு சும்மா அடிச்சித் தானே விடுற?":)

"ஹிஹி! அடிச்சி விடும் பழக்கம் எனக்கு இல்லையப்பா!"

"உக்கும்...இவரு பெரிய திருவிளையாடல் சிவாஜி கணேசன், தருமி கிட்ட பேசறாரு! ஒழுங்கா சொல்லுறா வெண்ணெய்":)

"ஹா ஹா ஹா! முடிஞ்ச வரை, தரவோடு பொருத்திப் பார்த்து விட்டு, பதிவில் சொல்லுறது தான் வழக்கம்! Data based and NOT opinion based!
எனக்கும் இது நாள் வரை இந்த விஷயம் தெரியாதுடா! திடீர்-ன்னு ஓவியர் வினு வரைஞ்ச ஒரு ஓவியத்தைப் பார்த்தேனா? Stun ஆயிட்டேன்! நீயே பாரேன்!"

"ஆகா...............! ஆமாம் போலத் தான் இருக்கு"!

"என்னா...இருக்கு, முறுக்கு-ங்குற? நான் சொல்லும் போது மட்டும் ரொம்பவே குதிச்ச?":)

"கோச்சிக்காத ரவி! எழுத்தாளர் ஜெயமோகன் பதிவுல போய் இப்படிக் குதிக்க முடியுமா? உன் கூடத் தானே சீண்ட முடியும்! அதான்!":)


கணவன் உண்ட இலையில் மனைவி உண்பது,
மனைவி உண்ட இலையில் கணவன் உண்பது
- இதெல்லாம் ஒரு அது! ஒரு இது! ஆசை!:)

ஆனா சினிமாவில் பார்த்துப் பார்த்து, அப்படிச் சாப்பிட்டாலே அது மனைவி தான் என்று முடிவு கட்டி விட்டோம்!
முத்தம்-ன்னாலே காதலர்கள் குடுப்பது தானா? என் காதல் முருகனுக்கு சதா முத்தம் குடுக்கும் நான், அதே சமயம் தோழி கோதையின் கைகளிலும் முத்தம் கொடுத்து இருக்கேனே! :)

அது போல ஒரே இலைச் சாப்பாடு என்பது ஒரு நெருக்கம்! அதன் நோக்கத்தைத் தான் பார்க்கணும்! தாறு மாறா யோசிக்கப்பிடாது!:)

சின்ன வயசு இராமானுசர், மூத்த குருவான திருக்கச்சி நம்பிகள் உண்ட இலையில் உண்ண ஆசைப்பட்டார்!
ஏன்? = ஏன்-னா சடங்கு சாஸ்திரம்-ன்னே இருந்த அவருக்குள், ஆழ்வாரின் ஈரத் தமிழை முதலில் விதைத்தது நம்பிகளே!

ஆனால் நம்பியோ so called தாழ்ந்த குலத்தவர்!
தமிழ்ப் பாட்டு பாடித் திரிபவர்! கன்னங் கரேல்!
'அந்தாளு' உண்ட இலையில் நம்ம புருஷன் இராமானுசரா? சீச்சீ! எங்கும் கேட்டிராத புதுப் பழக்கமான்னா இருக்கு? என்ன காரியம்-ண்ணா பண்றேள்?

இராமானுசரின் மனைவிக்கு இது பிடிக்காமல் போய்...எதை எதையோ செய்ய..., அவர்களின் மண முறிவுக்கான வித்து இங்கு தான் ஆரம்பம்!
பின்னர் கிணற்றடியில், பெண் என்ற தன்மையும் மீறி, தகாத வார்த்தைகளைக் கொட்டி, மொத்தமாய் முறிந்து போனது!

நாம மேட்டருக்கு வருவோம்! ஒரே-இலை உணவு என்பது குழந்தை உணவை அம்மா/அப்பா எடுத்து உண்பதும் கூட உண்டு!

இங்கே இராகவனுடன் ஒரே இலை உணவு!
சொல்வது ஆழ்வார் பாசுரம்!
அதைத் தான் ஓவியமா வரைஞ்சி இருக்கார் வினு!



வாத மாமகன் மர்க்கடம் விலங்கு, மற்றோர் சாதி என்று ஒழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருக, செய்த தகவினுக்கு இல்லை கைம்மாறு, என்று

கோதில் வாய்மையினா லொடும், "உடனே உண்பன் நான்" என்ற ஓண்பொருள், எனக்கும்

ஆதல் வேண்டும் என்று அடியிணை அடைந்தேன், அணிபொழில் திருவரங்கத்து அம்மானே!
- திருமங்கை ஆழ்வார்! பெரிய திருமொழி! (1419)

இலங்கையில் இருந்து அயோத்திக்கு ஜெட் வேகத்தில் திரும்புகிறது விமானம்!
இராகவன்-சீதையொடு, இலக்குவன், சுக்ரீவன், வீடணன், அனுமன் முதலானோர்! வழியில் பரத்துவாச முனிவரின் குடில்!
அவரோ நிலைமை புரியாமல், இராமனைக் குடிலுக்கு விருந்துண்ண அழைக்கிறார்! முணுக் எனக் கோபிக்கும் முனிவரிடம் விளக்கி மாளுமோ?

அங்கே பரதன் குறித்த காலத்தில் வராவிட்டால் தற்கொலை என்று இருக்கிறான்! என்ன செய்வது? யார் உதவிக்கு? = எப்போதும்! முப்போதும்!
ஆவி காத்து இருப்பது ஒரேயொரு அடியவன் தான்! எப்போதும், முப்போதும்!

* தற்கொலையில் சீதையின் ஆவி காத்தான்!
* போரிலே இலக்குவன் ஆவி காத்தான்!
* மாயத்தில், இராமனின் ஆவி காத்தான்!
* இதோ, பரதனின் ஆவியும் காத்தான்!

ஆவி காப்பான் எம் ஆஞ்சநேயன்!
சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!

அன்று, அவள் ஆவி காத்தது போல்,
அல்லற்பட்டு, ஆற்றாது அழுத கண்ணீரில்,
என்னையும் காத்தருள்!
'அவனுக்கு என்னை விதி' என்ற இம்மாற்றம், நாம் கடவா வண்ணமே நல்கு!



பரதனின் உயிர் காக்கப் பறந்து சென்ற அனுமன், வழியில் குகனுக்கும் தேறுதல் சொல்லி, பரதனைக் காத்து மீள்கிறான்!
அதற்குள், முனிவரின் குடிலில், உணவு! எல்லாரும் அமர்ந்து உண்ணத் துவங்கி விட்டார்கள்! வந்து நிற்கிறான் ஆஞ்சநேயன்! இடம்?

இதயத்திலே இடம் கொடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் கோமகன்கள் இருக்கின்ற காலத்திலே, அனுமனுக்கு எங்கு இடம் கொடுப்பது?

ஆ! இவன் நம்ம ஊழியன் போலத் தானே உழைக்கிறான்? இவனை எப்படி ட்ரீட் பண்ணாலும் இவன் அன்பு மாறப் போறதில்ல!
So, நாங்கல்லாம் சாப்பிட்டு முடிச்சாப் பொறவு சாப்பிட்டுக்கோ ஆஞ்சநேயா-ன்னு சொல்லி இருக்கலாம்! எப்படி ட்ரீட் பண்ணாலும் இவன் இவன் தானே!

ஆனால் வாழ்விற்கு ஒரே ஒரு இராகவன்! அவன் மனமும் துணியுமோ?
இடமில்லை ஆஞ்சநேயா!
ஆனால்....
என் முன்னே இடமுளது!
வா, என் முன்னே வந்து அமர்ந்து விடு!

ஓர் இலையில்...இப்பக்கம் நான், அப்பக்கம் நீ!
என்ன கூச்சம்? வா!
எச்சிற் பட்ட உணவு என்ற கூச்சமோ?

மாருதி ஓடியே சென்று அமர்ந்து விட்டான்!

தீரச் செயல்கள் செய்யும் அனுமன் திடுக்கிட்டு நிற்கிறான்!
என்ன பேச?
அன்னை சீதை கூட, பக்கத்தில் தனி இலையில் தான் உண்கிறாள்!
ஆனால் இப்படி ஊரறிய உலகறிய...
அண்ணலின் சரி சமானத்தில்...ஓர் இலையில்...
அன்னமிட்ட அண்ணல், தன் உணவையும் கறியும் அப்பக்கம் தள்ள,
போதும் போதும் என்று இவனும் இப்பக்கம் தள்ள...

ஞான, கர்ம யோகிகள் அத்தனை பேரும், நமக்கு இப்படியொரு பேறில்லையா என ஏங்க...
தன் ஞானம், தன் கர்மம், தன் பக்தி என்று இல்லாது.....
உன் 'சரணம்' என்றே இருக்கும் சிறிய திருவடிக்கு அமுது படையல்!


வாத மாமகன் மர்க்கடம் விலங்கு = வாயுவின் மகன், குரங்கெனும் விலங்கு
மற்றோர் சாதி என்று ஒழிந்திலை உகந்து = இது வானர சாதி என்று மனத்தளவும் எண்ணாது, உகப்பாக...

காதல் ஆதரம் கடலினும் பெருக = அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று கடல் போல் பொங்க
செய்த தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று = ஆவி காத்தவனுக்கு ஆவியே கைம்மாறோ என்னுமாப் போலே

கோதில் வாய்மையினா லொடும் = வெறும் பேச்சுக்கு மட்டும் உறவு பாராட்டாது, வாய்மையினால்...
"உடனே உண்பன் நான்" = உன் கூடவே நானும் சாப்பிடுகிறேன்

என்ற ஓண்பொருள், எனக்கும் ஆதல் வேண்டும் = இப்பேர்ப்பட்ட அன்பு எனக்கும் வாய்க்க வேண்டும் பெருமாளே!
என்று அடியிணை அடைந்தேன் = என்று உன் சிறிய திருவடிகளை அடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்து அம்மானே! = அரங்கத்து அம்மானே! என் மீது அன்பு காட்டு!
..........என்று திருமங்கை ஆழ்வார், அனுமனை முன்னிட்டுக் கொண்டு, அரங்கனை வேண்டும் பாசுரம்!

இன்றும் திருவரங்கத்தில், இந்தக் காட்சி நடத்தப்படுவதாக, இப்போதே அறிந்தேன்!

ஓரிலைச் சோறுண்டு...
இன்னமும் தனக்கென மோட்சமும் போகாது...
இங்கேயே, அடியவர்களோடு, குணானுபவத்தில்...
மாதவிப் பந்தலிலும் வந்து அமர்ந்து கொள்ளும் இந்தச் சிறிய்ய்ய்ய்ய்ய திருவடியான எம் ஆஞ்சநேயனை,

பந்தல் வாசகர்கள், அன்பர்கள் எல்லாரும் தொட்டுத் தொட்டுக் கை குலுக்கிக் கொள்ளுங்கள்!

அவனோடு ஓரிலையில் உண்ட....சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!
Read more »

Monday, June 13, 2011

திராவிட வேதம் - முருகன் பிறந்தநாள்!

இன்று என் ஆசைத்திரு முருகனுக்குப் பிறந்தநாள்! (Jun 13-2011 வைகாசி விசாகம்)! Happy Birthday da, MMMMMMuruga! :)

இனிய பிறந்தநாளில், இனியது கேட்டு,
உனக்கு என்றும் பல்லாண்டு பல்லாண்டு!

அந்த விசாக-விசால மனத்தவனுக்கு, என் மேல் மட்டும்...அப்பப்போ ஊடல் வரும்! போடா-ன்னு எனக்கும் கோவம் வரும்!
அந்த நேரம் பார்த்து, சில பேர் என்னிடம் வந்து கேட்பாய்ங்க! - "முருகன்-ன்னு ஒருத்தரு இருக்காரு-ன்னு நல்லாத் தெரியுமா? இதெல்லாம் கற்பனை தானே?"

மேலும் படிக்க...இங்கே...முருகனருள் வலைப்பூவில்..


திராவிட வேதம் செய்த மாறன் நம்மாழ்வாருக்கும் இன்றே பிறந்தநாள்! அது என்ன "திராவிட" வேதம்?

மேலும் படிக்க...இங்கே...கண்ணன் பாட்டில்...

பின்னூட்டங்களை அங்கு இடுங்கள்; இங்கு பூட்டுகிறேன் :)
Read more »

Sunday, June 05, 2011

காவடி ஆடும் பெருமாள்!

இந்த வார இறுதியில் ஒரு பெரிய சண்டையா?
ஓரு ஓரமாய் உட்கார்ந்து தேம்பிக் கொண்டிருந்த போது, திடீர்-ன்னு இந்தப் பாட்டு!
சண்டை போட்டவனே வந்து...ஏய், என்ன, கோபமா, கோபமா?-ன்னு...இந்தப் அசைபடத்தை என் கண் முன்னே ஓட்ட...

என்னால் என்னையே நம்ப முடியலை! இப்படி ஒரு காவடி ஆட்டமா?
முருகா! உன்னைக் கைப்பி்டித்த குற்றத்துக்கு, எந்தையையும் காவடி ஆட வைத்து விட்டாயே! :) ChoShweeeet:)

இந்தப் பதிவுக்கு நான் என்னா-ன்னு எழுதுவேன்?
காவடிப் பாட்டு யாரு எழுதியது, என்னா-ன்னு ஒரு விவரமும் தெரியாது!
ஆனாலும் பாட்டை மட்டும் ஓட்டி ஓட்டி....கேட்டுக் கேட்டு.....டைப் பண்ணேன், உங்களுக்காக!
வாசிச்சிக்கிட்டே ஆடுங்க, என்ன? :)

என்னமா ஆட்டம்!
முருகா, இதே போல்...நீ ஆடி...ஒருநாள்...நான் பார்க்கணும்...ஆடுவியா?



நீலவானம் போல் இலங்கி, நெற்றியிடைச் சந்தனத்தின்
நேர்த்தியாய்த் திலகம் ஒளி வீசுதே - கண்ட
நெஞ்சமோடு அந்தரங்கம் பேசுதே!

நேசமாய் ஒரு வாச மாமலர், ஆசையாய்ப் பிரகாச மாகவும்
நின்றுநின்று காண ஆசை யாகுதே - இந்த
நேரம்கூட ஊழிப் போலத் தோனுதே!

பாடகம் தண்டைக் கொலுசும், பாத கங்கணச் சிலம்பும்
பண்ணும் தவ பேரிகை முழங்குதே - புகழ்
பாடும் நாலு வேதமும் மயங்குதே!

பங்கயத் திரு மங்கையர்க் கொரு, பங்கை இற்று எழில் அங்கை இற்றது
மானச் சந்திரக் காடென விளங்குதே - மனம்
மங்கி நின்ற ஞானமும் துலங்குதே!

சந்தனப் பேழைப் புறத்துச், சாயலிட்ட தன்மை ஒத்து
தக்க நின்ற ஓரச் சாயக் கொண்டையும் - தாவித்
தாவித் தாவித் துள்ளும் விழிக் கெண்டையும்!

தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன, தந்தனத் தன
தானம் ஈவ தெனப் பாதத் தண்டையும் - கண்டு
தாறு மாறாய்ப் போச்சு மாயச் சண்டையும்!


அல்லிக்கேணியில் அப்பாவுக்கு ஒரு ஆட்டம்-ன்னா,
அப்படி உனக்கில்லையா?-ன்னு மனசு அடிச்சிக்குமே முருகா...

வண்ண மயில் தோகை ஒன்று, முன்ன மாகப் பின்னி வைத்து
அங்கும் இங்கும் ஆடிஆடி நோக்குதே - கந்தன்

அழகு மயில் என்னை உற்றுப் பாக்குதே!
மரகதத் திரு, மயில் அணித் திரு, மலர் மணத் திரு, மகள் எனக்கொரு
காதலோடே ஆசை நடை நடந்தனன் - நான்
காணும் முன்னே வாசலைக் கடந்தனன்....


இப்படி ஒரு தினுசா உளறி, முருகனருள் வலைப்பூவில் இன்றே இடுகிறேன்! அவசியம் பாருங்க :) This Dance is Very Contagious! :) இன்று, அம்மா-அப்பாவின் மணநாளும் கூட! :)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP