Thursday, April 18, 2013

இளையராஜா-"ஒனப்புத் தட்டு"-தமிழ்ச் சினிமாவில் Folk!

உங்கள் காதலி, இளையராஜா ரசிகையாக இருந்தால்...???
ஒரு "ஒனப்புத் தட்டு" வாங்கி,
இளையராஜா படம் போட்ட பேழையில் வச்சிக்,
குடுத்துப் பாருங்களேன்; Sure Love Workout:)

ஒத்த ரூவா தாரேன் - ஒரு
ஒனப்புத் தட்டும் தாரேன்;
ஒத்துக்கிட்டு வாடீ - நம்ம
ஓடைப் பக்கம் போவோம்

மிகவும் பரவலான (பிரபலமான) பாட்டு; ராஜா இசைக்கே உரிய தெம்மாங்கழகு;
திராவிட முன்னேற்றத் திலகம், நம்ம கு"ஷ்"பு அக்கா வளைஞ்சி வளைஞ்சி ஆடிய பாட்டு:)
இந்த பாட்டில் வரும் "ஒனப்புத் தட்டு" = இதை யாராச்சும் பார்த்து இருக்கீகளா?

இதே ராஜா, இதே ஒனப்புத் தட்டைச்...
சின்ன "ஜ"மீன் படத்திலும் போட்டிருக்காரு - "ஒனப்புத் தட்டு புல்லாக்கு" என்னும் பாடல்!
என் தோழி ஆண்டாள், "உக்கமும் தட்டொளியும்" -ன்னு பாடுவா; தட்டு+ஒளி = கண்ணாடி;
அந்தத் தட்டுக்கும் - ஒனப்புத் தட்டுக்கும் என்ன தொடர்பு?

காதுக்கும்-மூக்குக்கும் பாலம் போட்டாற் போல் அமையும், ஒரு அழகான நகை; வனப்பு!
கண்ணாடி (தட்டொளி) போல் மின்னும் - வனப்புத் தட்டு - ஒனப்புத் தட்டு!

இது நாட்டுப்புறத்துக்கே உரிய நகை; அதான் "நாட்டுப்புறப் பாட்டில்" மட்டும் மின்னுது; பட்டணத்துக் காரவுக, பாடுபட்டுத் தான் இதைப் பார்க்க முடியும்:)


நாட்டுப்புறப் பாடல்கள் - தமிழ்ச் சினிமாவில்?
= ரொம்ப அதிகம் கிடையாது; ஆனா அங்கொன்னும் இங்கொன்னுமா மின்னும்;

முழுப் பாடலும் நாட்டுப்புற இசையா வச்சா, என்ன ஆயீருமோ? -ன்னு பயந்துக்கிட்டு...
முதல் பத்தி மட்டும் "நாட்டுப்புறமா" வச்சி,
மீதியை அந்தக் கவிஞர்-இசையமைப்பாளரே மாத்தீருவாங்க! (பாடறியேன் படிப்பறியேன் போல)

ஆனா, முழுக்க முழுக்க, கிராமத்து மணம் வீசுறாப் போல ஒரு பாட்டு?
= அதுவும், செயற்கையா இல்லாம, இயற்கையா?
= டேய், தமிழ்ச் சினிமா -ன்னு சொல்லிட்டு, "செயற்கை இல்லாம" -ன்னு bit போடுறியே; ஒனக்கு ஏன் இந்த பொழப்பு ரவீ? ன்னு வையாதீக:)

* "இயற்கையா" = இருக்கே, "தண்ணீர் தண்ணீர்" -ங்குற படத்துல!
* "இயற்கையா" = இசையும் போட்டாரு, திரையிசைச் சக்கரவர்த்தி, MSV

இந்தப் படத்துல, எல்லாமே பெரிய பெரிய தலைங்க!
= சரிதா, பாலச்சந்தர், கோமல் சுவாமிநாதன், கண்ணதாசன், வைரமுத்து, சுசீலாம்மா, ஜானகி, MSV
= ஆனா, ஒருத்தரும், தன் "Stamp"ஐப் படத்துல நுழைக்கலை; படத்தைப் படமா இருக்க விட்டாங்க! அதான் "இயற்கை" வாசனை;

இந்த ஒரு பாட்டு = சின்ன வயசில் இருந்தே என் உசுருல கலந்துட்ட பாட்டு;
நெஞ்சாங் கூட்டில், குத்திக் குத்தி நிக்கும்!

ஒரு பாட்டுக்கு - பாடல் காட்சி எப்படி அமையணும்-ங்கிற "சோடிப் பொருத்தம்"... Made For Each Other - நீங்களே பாருங்க!


மானத்திலே மீன் இருக்க
மதுரையிலே நீ இருக்க
சேலத்திலே நான் இருக்க
சேருவது எக் காலம்?
(How many sleepless nights under countless stars? இந்த ஏக்கத்தை = நாலே வரியில்?)

அத்து வானக் காட்டுக்கள்ளே
ஆயக் குழல் ஊதையிலே
சாடை சொல்லி ஊதினாலும்
சாடையிலே நான் வருவேன்...
(Just asking him for one signal = "என் கிட்ட வந்துரு"
I will run away to him; நாலே வரியில்?)

காதை வுடு புள்ள; மனசையும்-ல்ல தீண்டிருச்சி?


நாட்டுப்புறப் பாடல்கள் vs சங்க இலக்கியம் = என்ன வேறுபாடு?
* சங்க இலக்கியம் = உடுத்தி நிக்கும்
* நாட்டுப் பாட்டு = அம்மணமா நிக்கும்;

இதைப், "பண்ணத்தி" -ன்னு காட்டும் தொல்காப்பியம்!

என்னடா இவன்..., சினிமாப் பாட்டுக்குக் கூட, தொல்காப்பியர் கிட்ட இருந்தே தொடங்குறான்-ன்னு முணுகாதீங்கப்பா:)
"Old Xerox Man" & krs are deep friends:)


தமிழ்த் தொன்மத்தை, யார் யாரோ, எப்படி எப்படியோ அழிச்சாலும்.., 
அதெல்லாம் தாங்கிக்கிட்டு,
இன்னிக்கி வரை, காத்துக் குடுக்கும் ஒரே நூல் = "தொல்காப்பியம்"; பாருங்க 2000 yrs முன்னாடியே இருக்கும் நாட்டுப்புறப் பாடல்களைக் காட்டுது;

தமிழைச் சட்டம் போட்டு அடைக்காம, 
* Standardization-ன்னு இலக்கணமும் அமைத்து,
* Flexibility-ன்னு, அதே சமயம் புழங்கி விளையாட இடமும் குடுத்து...
Thol Kaapiyar = Hez a True Parent! You can always be on your own & still count on him, in need;

பாட்டு இடைக் கலந்த பொருள வாகிப்
பாட்டின் இயல பண்ணத்தி இயல்பே

இந்தப் பண்ணத்தி (பண் + நத்தி) தான் நாட்டுப்புறப் பாடல்; தனியாப் பண் (ராகம்) அமைக்க வேணாம்....  தானே, பண் - நத்தும்;
குறுந்தொகை போல், இதுக்கு அடி வரை எல்லாம் கிடையாது; Freelance!

அதுவே தானும் பிசியொடு மானும்
அடி இகந்து வரினும் கடிவரை இன்றே

கரிசல் காட்டு எழுத்தாளர் கி ராஜநாராயணன், "கிசி"-ன்னு சொல்லுவாரு உடம்பின் காதல் பசியை;
வயிற்றில் = பசி; உடலில் = கிசி;
தொல்காப்பியர் காட்டுவதோ = பிசி!

எந்த வரையறையும் இல்லாத = புற உறுப்புப் பாட்டைப் "பண்ணத்தி" என்பர்;
இது நாட்டுப்புற மக்களுக்கே உரியது; இது சங்க காலத்தில் இருந்தே இருக்கு!

ஆசைக்கு மயிர் வளர்த்து - மாமா
அழகுக்கொரு கொண்டை போட்டுச்
சோம்பேறிப் பயலுக்கு நான் - மாமா
சோறாக்க ஆளானேனே...

மாமா மேல் ஆசை வச்சவ...
காலத்தின் கோலத்தால், வேற எவனுக்கோ சோறு பொங்க ஆகிப் போச்சே-ன்னு பாடுறா;
கொண்ட கொழுநனைச் "சோம்பேறிப் பய" -ன்னு  பாட முடியுமா சங்கத் தமிழில்?:))

= பாட முடியும்; ஆனா "வரையறை" உண்டு!

உடலால் ஒன்னு, மனசால் ஒன்னு -ன்னு வாழும் வாழ்வையும் சங்கத் தமிழ் காட்டும்; "கைக்கிளை" பற்றிய ஆய்வுப் பதிவு = இங்கே
சங்கத் தமிழ், எந்த மனித உணர்ச்சியும் ஒதுக்காது; "மதங்கள்" இல்லாமல் இயற்கை வாழ்வு வாழ்ந்தவங்க இல்லீயா?

இன்றைய மாற்றுப் பாலினக் காதல், Male பரத்தை (பரத்தன்) எல்லாம் சங்கத் தமிழ் மறைக்காது காட்டும்;
* பெரும்பான்மை உணர்வே = மனிதம்;
* சிறுபான்மை உணர்வு = மனிதம் அல்ல -ன்னு சொல்லாது சங்கத்தமிழ்!

ஆனா, "சோம்பேறிப் பயலுக்கு, மாமா, சோறாக்க ஆனேனே" -ன்னு நேரடியாச் சொல்ல முடியாது சங்கத் தமிழில்..
மாமனை எண்ணி, "உள்ளுறை/ இறைச்சிப் பொருள்" -ன்னு பாட முடியும்!

அதான் சொன்னேன்;
* சங்கத் தமிழ் = உடுத்திக் கிட்டு நிக்கும்
* நாட்டுப் பாடல் = அம்மணமா நிக்கும்



ஒரு சின்ன வேறுபாடு பார்க்கலாமா? ரெண்டு பாட்டுலயும் "நிலா" திட்டு வாங்குது:)
* sanga tamizh song = decent scolding; * folk song = abrupt scolding

(குறுந்தொகை 47 - நெடுவெண் நிலவனார்)
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டு இடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண் ணிலவே

(Hey Moon, Hez coming to see me in the night = Only "see"?:)
இந்த நேரம் பார்த்து, ஏன் இப்பிடி மினுக்குற? கொஞ்சம் வெளிச்சம் கொறைச்சாத் தான் என்ன? = for our puNarchi privacy:)

பாவம், அவனே வேங்கை மரக் காட்டு வழியா, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு, எனக்கு மெத்தை போட வரான்;
எங்கள் களவுக்கு நீ நற்பொருள் அல்ல! = நல்லை அல்லை! நடுவெண் நிலவே)

இதையே பண்ணத்தி (நாட்டுப் பாடல்) எப்படிப் பாடும்?

வெள்ளை வெண் நிலாவே - வெள்ளி
வெளிச்சமான பால் நிலாவே
கள்ள நிலாவே நீ - கருக்கலிட்டால் ஆகாதோ?

ஆலம் விழுது போலே - குட்டி
அந்தப் பிள்ளைத் தலை மயிரை
ஆளு ஒண்ணும் பார்க்காம - குட்டி ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே;

"நல்லை அல்ல"-ன்னு polished-ஆச் சொல்லாம,
"கள்ள நிலா" -ன்னே திட்டுறா;
"குட்டி ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே" -ன்னு குறுந்தொகையில் பாட முடியுமா?:) நம்ம மக்கள், "குட்டித்" தொகை-ன்னு பேரு வச்சிருவாக:)

ஆனா பாருங்க, இது வரை யாரும் காட்டாத உவமை, நாட்டுப்புறத்தில்;
பெண்ணின் கூந்தல் முடிச்சு = ஆலம் விழுது போல!

இருட்டில், அவன் இன்ப ஆட்டத்துக்கு, அவன் கையில், அந்த விழுதே ஊஞ்சலாகிப் போனதோ?
ச்ச்ச்சீ போ, இதுக்கு மேல எழுத எனக்கு வெட்கமா இருக்குடா முருகா!:)


நண்பர்கள் @kanapraba, @kuumuttai அளவுக்கு இல்லாட்டாலும்...
Youtube-இல், இன்னும் சில "தமிழ்ச் சினிமா - நாட்டுப்புறப் பாடல்"-களை எப்பவோ வலை ஏத்தினேன்;  கேட்டுட்டுச் சொல்லுங்க!

ஓடுகிற தண்ணியில், ஒரசி விட்டேன் சந்தனத்தை 
சேந்துச்சோ சேரலையோ, செவத்த மச்சான் நெத்தியிலே? 

ஓலை ஒன்னு நான் எழுதி, ஓட விட்டேன் தண்ணியிலே 
சேந்துச்சோ சேரலையோ, செவத்த மச்சான் கைகளிலே? 

When susheelamma sings ஒரசி விட்டேன், watch the gap; It will be like real உரசி விட்டேன் effect:)
Lyrics: வைரமுத்து Voice: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா
Music: VS நரசிம்மன் Film: அச்சமில்லை அச்சமில்லை

பொதுவா, பொண்ணுங்க, புருசன் காலடி மண்ணை எடுத்துப் பொட்டு வச்சிப்பாக; ஆனா, என்ன ரவுசு பாருங்க கிராமத்து மண்ணுக்கு? "
ஒங்க பாதம் பட்ட மண்ணெடுத்து, நான் பல்லு வெளக்கப் போறதெப்போ?" :))

இதே பாட்டை, இதே சுசீலாம்மா, முன்னாடியே பாடி இருக்காங்க, ஆனா சீர்காழியோடு:)

என்னாது? சீர்காழி குரலில் நாட்டுப்புறப் பாட்டா? = அதுவும் "ஓடுகிற தண்ணியல ஒரசி விட்டேன்" பாட்டா?
பிள்ளைக் கனியமுது-ன்னு படம்; KV Mahadevan இசை; பாட்டு கெடைச்சா யாராச்சும் குடுங்க Please!


நாட்டுப்புறப் பாட்டில் தான் "Call & Response" ஆக இசை அமையும்;
பக்தி இலக்கியத்தில், பெரும்பாலும் One sided Flow மட்டுமே! (exceptions: ஆண்டாள் & மாணிக்கவாசகர்)
முதல் மரியாதை படத்தில், இந்த நாட்டுப் பாட்டைப் பாருங்க = Call & Response Type!

(he) ஏறாத மலை மேலே - எலந்தை பழுத்து இருக்கு; 
ஏறி உலுப்பட்டுமா? எலுமிச்சம் கண்ணுகளா, எஞ்சோட்டுப் பொண்ணுகளா!

(she) ஏறாத மலை மேலே - எலந்தை பழுத்து இருக்கு; 
ஏறி உலுப்புங்களேன், எளைய கொழுந்தனாரே, என்னாசை மச்சினரே! 

Lyrics: folk (paras added by வைரமுத்து) voice: மலேசியா & ஜானகி
Music: இளையராஜா film: முதல் மரியாதை


குருவிக்கரம்பை சண்முகம் -ன்னு அற்புதமான கவிஞர்;
இது நாட்டுப் பாட்டு அல்ல; ஆனா அந்தவொரு "Feeling"; ராஜா, வேணும்-ன்னே நாட்டுப் பாட்டுல, சரிகமபதநி-யும் கொண்டாந்து சேத்து இருப்பாரு:)

One of the forgotten masterpieces of Ilayaraja!
See how Raja teaches music to folk kids - ஐயோ...ஐயோ... நல்லாக் கேளுங்க; வச்ச மரம் கீழே:)

ஏரியில எலந்தை மரம் - தங்கச்சி வச்ச மரம் 
வச்ச மரம் - தங்கச்சி வச்ச மரம் 
 பூவுமில்ல காயுமில்ல - தங்கச்சி வச்ச மரம் 



தொடர்புடைய பதிவு: தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியப் பாடல்கள்

சங்கத் தமிழும் - உங்க(த்) தமிழும்...
இன்னும் வரும்...
Read more »

Sunday, April 14, 2013

சங்கத் தமிழ் "விஜய வருஷத்" தமிழ்ப் புத்தாண்டு!

அனைவருக்கும் "விஜய வருஷத் தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்!

சென்ற ஆண்டின் "தமிழ்ப் புத்தாண்டு" பதிவு பத்தி, ரெண்டு-மூனு பேரு, மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டுக்கிட்டே இருக்காங்க;
தமிழன்பர்கள் போலத் தான் தெரியுறாங்க; Dunno, why ppl. drill down in panthal & getting old posts;

அந்தப் பதிவைப் படிக்க வேணாம்-ன்னு கேட்டுக்கறேன்;
அப்போ, ஏதோ "தெரியாத்தனமா" எழுதிட்டேன்;

I don't have much internet in this camp; So a real quickie below;
* "ஜயம்" = வெற்றி;
* "விஜயம்" = "பிரமாண்டமான" வெற்றி;

உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி வேணுமா? வேண்டாமா?
வேணும்-ன்னா, "விஜய வருஷம்" தான் = தமிழ்ப் புத்தாண்டு!


இந்த "விஜய வருஷத்தில்" எந்தக் "காரியம்" துவக்கினாலும், அது "க்ஷேமமா" நடக்கும்;
"சத் காரியங்களும்" வரிசை கட்டி வந்தே தீரும் என்று முன்னோர்கள் வாக்கு;

மண்ணில் விஜய , வருடமழை மிகுதி
எண்ணுசிறு தானியங்கள் எங்குமே - நண்ணும்
பயம்பெருகி  நொந்த  பரிவாரம் எல்லாம்
நயங்களின்றி வாடுமென நாட்டு
- இது "சர்வ முகூர்த்த பஞ்சாங்க" வெண்பா(ம்)

இது எட்டுத் தொகையா? எட்டாங் கிளாஸ் தொகையா?.. யாரு எழுதினது?-ன்னு எல்லாம் கேட்கப் படாது;
பாருங்க, "வருஷத்துக்கு" தமிழ் வெண்பாவே இருக்கு; இதுல இருந்தே தெரியலையா? - "விஜய வருஷமும்" தமிழ் ஆண்டு தான் ஐயா;

"ஜிம்"-க்குப் போவதற்குக் கூட வெண்பா(ம்) இருக்கு; உடல் "ஆரோக்கியம்";
ஜிம்மிலே ஓடிபின், ஜம்மென்று கண்டதையும்
சும்மாச் சவைக்கா திருப்பாயே – நண்பாநீ
உப்பைக் குறைத்த உணவினை உண்டுயினி
தப்பான வாழ்வைத் தவிர்
- இதுல இருந்தே தெரியலையா?- "ஜிம்" சங்கத் தமிழிலேயே இருந்துச்சி-ன்னு?

புத்தாண்டு, புத்தாண்டு-ன்னு கூறு கெட்ட "டுமீல் & டுமீலன்ஸ்" பேத்திக்கிட்டு இருக்காங்க; "ஓவரா"த் தமிழார்வம் தலை விரிச்சி ஆடுது;

1st of all,  தமிழை, எழுத்துப் பிழை இல்லாம எழுத முடியுமா, இவனுங்களால?
2nd of all, "அனர்த்தம்" வந்துறாம, தமிழ் பேசத் தெரியுமா, இவங்களுக்கு?

இலக்கணம் முக்கியமா? தமிழுணர்ச்சி முக்கியமா?
= எலக்கணம் தான்-யா முக்கியம்; சகரிக-மநிநிச;
= ரீதி கெளளையில், "நிஷாதத்தை" அசைக்கலாமோ?
சின்னக் கண்ணன் "அசைக்கிறான்":))



இந்த "விஜய வருஷத்தின் ராஜா" = "குரு பகவான்";
குரு பார்க்க, கோடி "தோஷம்" விலகும்;
வாழ்க்கை-ல்ல நல்லா இருக்கணும்-ன்னு ஆசை இருக்கு தானே? எதுக்கு வீணா, "குரு பகவானை", பகைச்சுக்கிட்டு?

எவர் ஒருவர், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில்,  தமிழ்ப்-"பஞ்சாங்கம்" வாசிப்பதைக் கேட்கிறாரோ,
* அவருக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது "ஐதீகம்"
* அவர்களின் "விரோதிகள்" அழிவார்கள்;
* "துஷ்ட" கனவுகள் ஏதும் இல்லாமல் வாழ்வார்கள்;
* "கங்கா ஸ்நானம்" பண்ணின பலன் கிடைக்கும்;

இந்த ஆண்டு "ஆதாயம் 53, விரையம் 56" எனக் கூறப்பட்டுள்ளது;
"ஆதாயத்தை" விட "விரையம்" கூடுதலாக இருப்பதால் அரசுக்கு வருவாய் குறையும்; (even better than CAG forecast)
எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் இருந்தாலும், ஆளும் கட்சியை பாதிக்காது; கருப்புப் பணம் கிடைக்கும்;
நல்ல மழை பெய்யும். அரசாங்க "கஜானா" நிறையும்;

சுக்ல பட்சம், சதுர்த்தி திதி, 
ரிஷப ராசி, மகர லக்னம்,
நவாம்சத்தில் மேஷ லக்னம் 
= இப்படித் தான், "தமிழ்ப்" புத்தாண்டு பிறக்கிறது; ஒங்க கண்ணுக்குத் தெரிகிறதா?

"தன் மானம்" மிகுந்தவர் நீங்கள் (??) ;
உங்களுக்கு 2-வது ராசியில் "வருஷம்" பிறப்பதால், பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள்;
பணப் புழக்கம் கூடும்; உங்களின் "பூர்வ புண்யாதிபதி" சாரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்கள் "அந்தஸ்து" கூடும்;

இதெல்லாம் வாழ்க்கை நன்மைக்கே!
ஏற்கனவே வாழ்க்கையில் ஆயிரம் "கஷ்டங்கள்"; இதுல, நல்லா வாழறதை விட்டுட்டு....
தமிழ்ப் புத்தாண்டு எது? -ன்னு யாராச்சும் கேள்வி கேட்டுக்கிட்டு இருப்பாங்களோ?


சென்ற ஆண்டு,  இங்கே = "தமிழ்ப் புத்தாண்டு" பற்றி ஏதோ "அறியாமையில்" எழுதிட்டேன்;


இன்றைய "இலக்கிய" உலகில்: மேற்கண்ட தமிழ் அறிஞர்கள் எல்லாம் தேவையில்லை; 
= "வணிகத் தமிழ்" அறிஞர்களே, ’அறி’ஞர்கள்! 

"விஷ்ணுபுரம்" தான் தமிழின் ஒரே நாவல்-ன்னு ட்வீட்டத் தெரிஞ்சிருக்கணும்; 
= தமிழ் முனைப்பை விடத், "தன் முனைப்பே" பெரிது; 

தரவு குடுத்தாலே / ஆதாரம் காட்டினாலே...
* ட்விட்டர் பெரிய மனுஷங்க பகையைச் சம்பாதிச்சிக்க வேண்டி இருக்கும்;
* வசவாப் பேசினாக் கூடத் தப்பில்லை; பொண்ணு கூடச் சேந்து, போலீசில் மாட்டி விட்டாக் கூடத் தப்பில்லை; அவங்க கிட்ட கூட உறவாடுவோம்;

ஆனா, வெறுமனே தரவு குடுக்குறவனை?
* ஆயுசுக்கும் மன்னிக்க மாட்டோம்;
* துன்ப காலத்தில் கூட நலம் விசாரிக்க மாட்டோம்;

என் தமிழ்ப் பதிவுகள் = தப்பு தான்!
பெரியவங்க எல்லாரும் மன்னிக்கணும்;

வெறுமனே, "காகைக்கா காகூகை"  -ன்னு சொல் விளையாட்டுப் பதிவுகளா/ கம்ப ரசங்களா இட்டிருக்கணும்; அது மட்டும் தானே தமிழ்??
தமிழ் உணர்ச்சி/ தமிழ் அன்பு -ன்னு, "உணர்ச்சி"யைப் பற்றும் பதிவுகள் தவறல்லவா? உள்-மனதைத் தேடுதலில் ஈடுபடுத்தலாமோ?

அது மட்டுமா? "பகவான் பார்வை - குரு பார்வை".. இதெல்லாம் எனக்கும் வேணும்;
வாழ்க்கையில் நல்லா இருக்கத் தானே ஆசைப்படுவாங்க? பட்ட "கஷ்டம்" எல்லாம் போதும்;

இனிமேல், "சம்போகம்", "சந்தோஷம்" -ன்னு எனக்கு ஒரு வாழ்வைக் குடு முருகா!
இப்பிடி மாறுபட்ட மனசா என்னைப் படைச்சிட்டியே; ஒன்னையே நம்பி வந்துட்டேனே... முருகவா;



குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

மேலே, சிவப்புச் சிவப்பா எழுத்து எதுக்கு? -ன்னு பாக்குறீங்களா?
= அவையெல்லாம் தமிழ்ச் சொற்களே!
நல்லாப் பாருங்க.... சர்வ முகூர்த்த விஜய விருஷம் = இது தமிழ் தானே?

(மனசாட்சி): "இல்ல..."ஸர்வ/ முகூர்த்த/ விஜய/ வருஷ" தமிழ் மாதிரி தெரியல; அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு";

தயக்கமா??? என்ன ஸ்வாமி பேசறீரு?

*சங்கத் தமிழ்க் கடவுள், மாயோன் (எ) திருமால் = முன்னை மரபின் முதுமொழி முதல்வ! 
ஷ் போட்டு-ஷ் போட்டே, "விஷ்ணு" -ன்னு வெற்றிகரமா மாத்தீட்டோம்-ல்ல?

*சங்கத் தமிழ்க் கடவுள், சேயோன் (எ) முருகன் = அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக! 
இவனைத் தான் இன்னும் "பரிபூர்ணமா" மாத்தலை;
ஆனாலும் சுப்ரமணிய ஸ்வாமி தேவஸ்தானம் -ன்னு அறுபடை வீடெல்லாம் எப்பவோ ஆயிருச்சே!

*சங்கத் தமிழ்க் கடவுள், கொற்றவை (எ) சமயபுரத்தாள்;
கொற்றம் + அவ்வை; அவ்வா-ன்னு தெலுங்கிலும் உண்டு = முதுமகள்;
பூர்வகுடி/ நாட்டார் வழக்கமா? போயே போயிருச்சி; "ஸமயபுர ஸ்தல புராணம்" உருவாகி, அங்கும் அஷ்டோத்திர அர்ச்சனை தானே?

Wait Wait Wait, சமயபுர-ஆத்தாளா?
"ஆத்தாள்"??? = ட்விட்டரில் செட்டு (set) சேர்த்துக்கிட்டு... பேசிப் பேசியே நாம தான் அதை bad word ஆக்கிட்டோமே; "அம்பாள்" -ன்னு சொல்லுங்க!

லேசு மாசா, தமிழ் இலக்கணம் எதுக்குப் படிச்சிருக்கோம்?
எவனாச்சும் தமிழ் உணர்ச்சி-ன்னு பேசி, அறியாமல் எழுத்துப் பிழை பண்ணினா, விளாசீற மாட்டோம்?
" டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா, அப்பறம் டுமீல் கோஷம் போடப் போவலாம்"

சுப்ரமணியன் = தமிழ் இல்லீயா?
அப்படீன்னா தமிழ்க் கடவுள் = தமிழ் இல்லீயா?
-ன்னு கேட்டு "பேஜார்" பண்ணீறலாம் ஓய்; ஆடிப் பூடுவாங்க;

* திருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி = தமிழ் தான்!
* அதே போல், சர்வ முகூர்த்த விஜய விருஷம் = தமிழ் தான்; அதுவே தமிழ்ப் புத்தாண்டு!

(மனசாட்சி:) இல்ல... அது அப்பிடியில்ல; தொல்காப்பியம், தொன்மம் -ன்னு தரவு... அதெல்லாம் உண்மை போலத் தான் தெரியுது; அதான்...

யோவ்..
ஆயிரம் "தரவு" இருக்கு ஈழத்துக்கு; ஆனா, எதுனா "புடுங்க" முடிஞ்சுதா?
.......... புரிஞ்சிக்கோ!
சர்வ முகூர்த்த - விஜய வருஷ - "தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகள்;
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP