Showing posts with label மார்கழி-05. Show all posts
Showing posts with label மார்கழி-05. Show all posts

Friday, December 19, 2008

மார்கழி-05: யார் தமிழ்க் கடவுள்? கோதையின் மதுரை பக்தி!

யார் தமிழ்க் கடவுள்??? யார் வீட்டில் தமிழ் மொழி, அன்றும்/இன்றும்/என்றும் இடையறாது ஒலிக்குதோ, யார் தமிழுக்குப் பெரும் மதிப்பு கொடுக்கறாங்களோ, யார் தமிழ் முன்னே செல்ல, தான் பின்னே செல்றாங்களோ, யார் தமிழை ஏட்டில் மட்டும் இல்லாமல், நாட்டிலும் வளர்க்கிறாங்களோ.....அவர்களே தமிழ்க் கடவுள்! தமிழர் கடவுள்!

புதிர்-05:
யமுனைத் துறைவன் என்ற ஒரு அரசர்/குரு இருந்தார்! அவரின் பிரபலமான இன்னொரு பெயர் என்ன? மாலை கட்டும் மண்டபமாக அவருடைய நினைவு இன்னிக்கும் ஒரு திவ்ய தேசத்தில் போற்றப்படுகிறது! எந்தத் தலம்?


முருகப் பெருமானைப் போல் கண்ண பெருமானும் தமிழ்க் கடவுளே! பழந் தமிழரின் கடவுளே! இதை ஆண்டாளும் உறுதி செய்கிறாள்! அதை நாமும் புரிந்து கொண்டு விட்டோம்! இது பற்றிய முந்தைய விவாதப் பதிவு இங்கே! அதுனால, இன்னிக்கி நாம நேராப் பாட்டுக்குப் போயிறலாம், வாங்க! :)

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

மாயனை, மன்னு வட, மதுரை மைந்தனைத்,
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்,

தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்,
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!




மாயனை = மாயோன் என்னும் தமிழ்ப் பெரும் தெய்வம்!

அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் முதற் பெரும் பதிவு எது? தமிழின் கண்ணாடி எது? தமிழில் எழுதப்பட்ட முதல் பதிவு எது? = தொல்காப்பியம்!
இதில் மாற்றுக் கருத்தே இல்லை! அது தன் பொருளதிகாரத்தை எப்படித் துவங்குகிறது?
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்
,
...
இப்படித் தமிழ் இலக்கணத்தின் துவக்கமே மாயோன்! ஆண்டாளும் இந்தப் பாசுரத்தை "மாயனை" என்றே துவக்குகிறாள்!

இயற்கை வழிபாட்டின் படி, மாயோன் முல்லை நிலக் கடவுள் ஆனான்!
முல்லை நிலத்தின் கருப்பொருள்/உரிப்பொருளைக் கொஞ்சம் கவனிச்சிப் பாருங்க! தமிழ் வகுப்பில் படிச்ச நினைவிருக்கா? இல்லை சாய்ஸில் வுட்டுட்டீங்களா? :-)

முல்லை: காடும் காடு சார்ந்த இடமும் = காடு பச்சைப் பசேல்-ன்னு தானே இருக்கும்? = பச்சை மாமலை போல் மேனி!
முல்லை: பெரும்பொழுது = கார் காலம்! அதனால் கார் மேனி வண்ணன்!
முல்லை: சிறுபொழுது = மாலை! = மால்! திருமால்!
முல்லை: ஆயர்கள் நிலம்! = ஆயர் தம் கொழுந்தே!
முல்லை: தொழில் = ஆநிரை மேய்த்தல்! அதனால் தான் பசுக்களை மேய்த்தான்!
முல்லை: விளையாட்டு = ஏறு தழுவுதல் = காளைகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிந்தான்!
முல்லை நிலத்தில் காதல் மிகுதி! அதனால் தான் இவன் காதல் மன்னன்! :-)
இப்படி எல்லாமே இயற்கையை ஒட்டிய வழிபாடு தான்! இயற்கைக் கடவுளாகத் தான் மாயோன்/திருமால் அறிமுகமானான்!
தொல்காப்பியருக்குப் பின் வந்த காலம்....சிலப்பதிகாரத்தில் வேங்கட மலை மேல், திருமால் சங்கு சக்கரங்களோடு நிற்கும் காட்சியை இளங்கோ வர்ணிக்கிறார்! திருவரங்கக் காட்சிகள் தனியாகச் சொல்லப்படுகின்றன!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
என்று வேங்கடத்தானை இளங்கோ பாடுகிறார்! கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே! என்றும் கேட்கிறார்! மணிமேகலையும் அப்படியே! மாயோனின் கூத்து = ஆய்ச்சியர்கள் ஆடும் குரவைக் கூத்து! இதைப் பற்றியும் பேசுகின்றன! இப்படிப் பொது மக்களின் அன்றாட வாழ்விலும், கூத்திலும், வீட்டிலும் திருமாலைக் காட்டுகின்றன தமிழ் இலக்கியங்கள்!

புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, முல்லைப்பாட்டு, பரிபாடல் என்ற எல்லாச் சங்க நூல்களிலும் திருமாலைப் பற்றிய பலப்பல குறிப்புக்களைக் காணலாம்.
"ஆனானப்பட்ட" மறைமலை அடிகளே, மாதாங்கு மார்வன் = திருமகளை மார்பில் தாங்கும் மார்பன் என்று பொருள் கொள்ள வேணும் என்று உரைக்கிறார்!

(*** தமிழ்க் கடவுளுக்கான தரவு முடிந்தது! அடுத்து கோதையின் சொந்த ஊர்ப் பாசத்தால் விளையும் சுவையான கற்பனைகளைப் பார்ப்போம்!)



மன்னு வட மதுரை மைந்தனை = ஹா ஹா ஹா! "வட" மதுரை மைந்தனாம்! வடக்குய்யா வடக்கு! ஆண்டாள் வச்சாய்யா ஆப்பு உனக்கு! - அப்படின்னு சில பேரு ரொம்பவே சந்தோஷப் பட்டுக்கலாம்! ஆனால் கோதை அவர்களை எல்லாம், ஏளனமாகச் சிரிக்கிறாள்! :)

சில பேருக்கு இந்த வடை-ன்னாலும் அலர்ஜி! "வட"-ன்னாலும் அலர்ஜி!
வட- என்று பேர் வருவதாலேயே அது ஆரியம்-ன்னு "பகுத்தறிவா" யோசிக்க ஆரம்பிச்சிருவாய்ங்க!
வட-பழனியில் "வட" வருதே-ன்னு கூட யோசிக்க மாட்டாய்ங்க! :) வடபழனி, வடபெண்ணை, வடவாறு, வட காவேரி, வடக்குவாசல்-ன்னு தமிழில் இல்லாத வடக்குகளா? வட-கயிலை கயிலை மலையும், வடவெற்பு என்னும் கந்த வெற்பும், இவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா ஆகி விடும்! கருத்தில் நேர்மையாளர்கள் அல்லவா? அதான்! :)

தமிழரின் முதல் நூலான தொல்காப்பியமே "வட" என்பதில் தான் துவங்குது-ன்னு தெரியாது இந்த செலக்டிவ் மக்களுக்கு!
வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
- என்பதே தொல்காப்பியத் துவக்கம்! தொல்காப்பியர் என்ன வடக்கத்தி வித்தகரா? :)

நாம நம்ம கற்பனைச் சுவை "வட"-மதுரை மைந்தனுக்கு வருவோம்!

இங்கே எத்தனை பேர் மதுரையின் மைந்தர்கள்? மண்ணின் மைந்தர்கள்?
மதுரை = வஞ்சனை இல்லா நெஞ்சினை!
அவர்கள் போயி வஞ்சமாப் பேசுவாகளா? மதுரைக்காரியான எங்கள் கோதைக்கா வஞ்சனை? மதுரை-ன்னு சொல்லைக் கேட்டாலே அவள் இதயம் களிக்குமே! தமிழ் வளர்த்த தனிக்குடி அல்லவா மதுரைக் காரவுக! கோபம் இருக்கும் இடத்தில் குணமும் இருக்குமே!

NH-208ஆ? NH-7ஆ? மறந்து போச்சு! அடியேனுக்குச் சொல்லுங்கப்பு! கோதையோட ஊரு தெரியும்! சீவில்லி புத்தூரிலிருந்து, தி.கல்லுப்பட்டி, திருமங்கலம், திருப் பரங்குன்றம்-ன்னு....அப்படியே வடக்கால வாங்க!

வில்லியில் இருந்து வடக்கால வந்தாக்கா "வட" மதுரை!
அந்த மண்ணின் மைந்தன் யாரு? = அட, நம்ம அழகரு!

இப்போ விளங்குதுங்களா?
மாயனை, மன்னு, வட மதுரை மைந்தன் = கள்ளழகர்!


தூய பெரு நீர் யமுனைத் துறைவனை = ஆகா, மதுரையில் எங்கேப்பா யமுனை வந்திச்சி? இப்போ மாட்டினியா? வட-மதுரைக்கு ஏதோ கப்சா விட்டியே! இப்போ யமுனையில் மாட்டினியா? :)

நான் மாட்டலையே! ஹா ஹா ஹா! பாட்டைப் படிக்கும் போது எப்படிப் படிக்கணும்? நம்ம "கால்குலேஷன் போடும்" மனசில் இருந்து படிக்கக் கூடாது! :)
ஆண்டாள் மனசில் இருந்து படிக்கணும்! ஏன்னா பாட்டுக்குச் சொந்தக்காரி அவ!

கோதையின் இப்போதைய நிலைமை என்ன? = இப்போ அவள் கோபிகையா ஆயிட்டா! கண்ணன் கூட ஆடுறா, பாடுறா, ஒடுறா, சண்டை போடுறா :)
அவள் கோபிகையா ஆனாளே தவிர, பாண்டி நாட்டை விட்டு ஓடினாளா? காதலனே முக்கியம்-ன்னு தேசத்தை விட்டுக் கொடுத்தாளா?

சேச்சே! அவ ரத்தத்துல அது கிடையாது! அம்புட்டு தேச பக்தி எங்க கோதைக்கு!
கண்ணாலம் கட்டிக்கிட்டும் கயிலைக்குப் போவாம, மருதையில் ஆட்சி செய்யும் மீனாட்சி வழியில் வந்த பொண்ணுப்பா அவ! தன் காதலனை பாண்டி நாட்டுக்கு வரச் சொல்லுறா! அவன் தொடர்பான எல்லாமும் எங்க பாண்டிக்கு ஓடி வாங்கடே!

கண்ணன், கோபிகைகள், படகு = இப்படி அத்தனையும் அவளுக்காக மதுரைக்கு/தென் பாண்டி நாட்டுக்கு வருகிறது! யமுனையும், யமுனைத் துறையும் கூட பாண்டிக்கு வருகிறது! சேலை விளையாட்டு மதுரைக்கு வருது! சேலை ஒளிக்க கண்ணனும் மதுரை வருகிறான்! இப்போ புரியுதுங்களா? தூய பெருநீர் யமுனைத் துறைவன் = யாமுனத்துறைவன் = மதுரை மைந்தன் = கள்ளழகன்!

அட இன்னமும் மனசு ஒப்பலையா? ஹா ஹா ஹா! மனசுல வேற எதையோ வச்சிக்கிட்டு இருந்தா ஒப்பாது தான்! காதல் நேர்மையை வச்சிக்கிட்டு இருந்தா ஒப்பும்! :)
சரி, பரவாயில்லை! ஒரே ஒரு நாச்சியார் திருமொழி! எப்படி அது "வட"மதுரை ஆச்சு? எப்படி அது யமுனைத் துறை ஆச்சு?-ன்னு, அடியேன் சொல்லிக் கேட்க வேணாம், ஆண்டாளே அவள் வாயால் சொல்லிக் கேளுங்க!
* பாண்டி "வட"த்து என்னை உய்த்திடு மின்!
* யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடு மின்!

* சோலை மலைப் பெருமான் = துவராபதி எம் பெருமான்,
ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே!

பாருங்கள், சோலை மலைப் பெருமான் (கள்ளழகர்) = துவராபதி எம் பெருமான் என்று சொல்லி விடுகிறாள்! "வட" பாண்டி தேசமாம்! வில்லி புத்தூருக்கு வடக்காம் வட மதுரை! உள்ளத்தை அழிக்கும் கள்ளழகன்! ஆங்கே யமுனைக் கரைக்கு என்னை உய்த்து விடுங்கள்! - இப்படி, காதலிலும் தென் பாண்டியை விட்டுக் கொடுக்காது, கோகுலத்தையும், ஆயர்பாடியும் மதுரைக்கு ஷிஃப்டு செய்கிறாளே! கோதையின் மதுரைப் பக்தி தான் என்னே! என்னே! ஆண்டாள் திருவடிகளே சரணம்!


ஆயர் குலத்தினில் "தோன்றும்" அணி விளக்கை = பால் உணவை அடிப்படைத் தொழிலாக வைத்திருக்கும் ஆயர் குலம்! பால் போல அவிங்க மனசும் வெள்ளை! அந்த ஆயர் குலத்துக்கே விளக்கேற்ற வந்தவன் கண்ணன்! ஆயர் குலத்தில் "தோன்றினான்"!
அவன் பிறக்கவில்லை! கர்ப்பத்தில் வந்து "தோன்றினான்"!
முருகனை "உதித்தான்" என்கிறார் கச்சியப்பர்! கண்ணனைத் "தோன்றினான்" என்கிறாள் ஆண்டாள்! ஒரு திருக் கண்ணன் வந்து, உதித்தனன் உலகம் உய்ய! :)
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை = தாய்க்கும், தாய் மண்ணுக்கும் பெருமை தேடித் தந்தவன் கண்ணன்! தாயின் குடலை (வயிறை) விளங்கச் செய்தான்!
தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் அல்லவா யசோதையும், தேவகியும்!
நம்மைப் பெத்த அம்மா, வயிறு குளிர்ந்து பேசுவதை எப்பவாச்சும் கேட்டு இருக்கீங்களா? பேச்சே வராது! நீர் தான் வரும் பேதையாம் அம்மாவுக்கும்!

தாமோதரன் = தாம+உதரன் = கயிறு+வயிறான்!
தன் வயிற்றைக் கயிற்றால் கட்டிய தாயின் வயிற்றை விளங்கப் பண்ணியவன் திருவடிகளே சரணம்!

தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது = நல்ல மனசோட வந்து, நல்ல மலர்களைத் தூவித் தொழுவோம்! (அது என்ன நல்ல மலர்? மொத்தம் எட்டு மலர்கள் நல்ல மலர்கள்! தனிப் பதிவில்! :)

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க = இதுக்குப் பேரு தான் உண்மையான தொழுகை!
தூவித் தொழுது-ன்னு இதைத் தான் சொல்லுறா ஆண்டாள்! வாயினால் மந்திரம் ஜபம் பண்ணா மட்டும் போதாது! வாயால் திருப்பாவை பாடினால் மட்டும் போதாது! மனத்தினால் "சிந்திக்கணும்"! இறைவனையும், அவன் அடியார்களையும், அவர்கள் இருக்கும் இந்தச் சமூகத்தையும் சிந்திக்கணும்!

போய பிழையும்/புகு தருவான்/நின்றனவும், தீயினில் தூசாகும் = இப்படி வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால்.....
* இது வரை மூட்டை கட்டி வைத்துள்ள பாவங்களும் (சஞ்சிதம்),
* அதிலிருந்து, இந்தப் பிறவிக்கு மட்டும் எடுத்த வந்த கட்டுச்சோறு பாவங்களும் (பிராரப்தம்),
* இனி மேல் Fixed Deposit-இல் போட்டுக் கொள்ளப் போகும் பாவங்களும் (ஆகாம்யம்)

என்று அத்தனையும்...தீயினில் தூசாகும்! தீயினில் தூசாகும்! பொலிக பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்! செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!

தென்-வில்லி ஆண்டாள் திருவடிகளே சரணம்!
வட-மதுரைக் கள்ளழகன் திருவடிகளே சரணம்!
அன்னை மீனாச்சி, அப்பன் சுந்தரன் திருவடிகளே சரணம்! ஹரி ஓம்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP