Sunday, June 20, 2010

நரசிம்மருக்கு பிரகலாதன் மேல் மட்டும் அதிகப் பாசம் ஏன் ?


அரங்கன் தானே தன் அவயங்கள் எல்லாவற்றையும் காட்ட, ஒரு முனிவரின் மீது அமர்ந்து, அவன் திருமுடி முதல் திருவடி வரை அமலனாதிபிரான் எனும் 10 பாசுரங்கள் கொண்ட திருமொழி மூலம் அனுபவித்து, தன் கண்கள் மற்ற எதையும் பார்க்கக் கூடாது என்று அரங்கனிடமே சேர்ந்தவர் திருப்பாணாழ்வார்.

அமலனாதிபிரான், பிரணவ சாரம் என்பர் பெரியோர்!

அ - உ - ம

முதல் மூன்று பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் பிரணவத்தையும் (அ+உ+ம = ஓம்), 5,6,7 பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் நாம் பற்ற வேண்டியதைப் பற்றியும் (பா+து + கை = திருவடி) கூறுகின்றன.

எட்டாம் பாசுரத்தில், நரசிம்மனின் கண்களைப் பற்றிப் பாடுகிறார் திருப்பாணாழ்வார்.

***

பரியனாகி வந்த* அவுணன் உடல் கீண்ட* அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான்* அரங்கத்து அமலன் முகத்து*
கரியவாகிப் புடை பரந்து* மிளிர்ந்து செவ்வரி ஓடி* நீண்ட அப்
பெரியவாய கண்கள்* என்னைப் பேதமை செய்தனவே.
அமலனாதிபிரான்-8

(பரி - உயர்ச்சி, கருமை, பெருமை; பரியன் - உயர்ந்தவன், பெருமை படைத்தவன், பருத்த உடம்புடையவன்; ஆதிப்பிரான் = ஆதி + பிரான் - முதிலில் தோன்றியன், முதல் தெய்வம்; புடை பரந்து - மலர்ந்து; மிளிர்ந்து - பிரகாசத்துடன்; செவ்வரி ஓடி - சிவந்த கோடுகள் பெற்று)

மிகவும் பெருத்த உருவத்துடன் வந்த இரணியன் உடலைப் பிளந்த, தேவர்களும் அருகில் செல்ல அஞ்சும்படி இருக்கின்ற ஆதிப்பிரானாகிய அரங்க நரசிம்மனின் திருமுகத்திலே, கருமை நிறமாய், விசாலமாய், பிரகாசத்துடன், சிவந்த கோடுகளுடன், அவன் திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள், என்னை கிறங்கடிக்கின்றன.
***

திருப்பாணாழ்வார், 'ஆதிப்பிரான்' என்று அரங்கனை வருணிக்கிறார். ’முதலில் தோன்றியவன், பிறருக்குக் கொடுப்பவன்' என்று பொருள். இந்த ஆதிப்பிரானின் பெருமைகளை, பெரிய திருமொழில் நரசிம்மனைக் காணும்போது விவரிக்கின்றேன்.

நம்மாழ்வார் அவதரித்த 'திருக்குருகூர்' எனும் திவ்ய தேசத்தில் (#87) எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பெயரும் ’ஆதிப்பிரான்’.

நம்மாழ்வார், 'ஒன்றும் தேவும்' என்று தொடங்கும் திருமொழியில் (திருவாய்மொழி 4-10), இந்த ஆதிப்பிரானுடைய பெருமைகளை வர்ணித்துள்ளார் - முடிந்தால் படியுங்கள்.
***

ரங்கனை அங்கம் அங்கமாக ஒவ்வொரு பாசுரத்திலும் வர்ணித்து வந்த திருப்பாணாழ்வார், இந்தப் பாசுரத்தில், அவன் கண்களைப் பற்றிச் சொல்லுகின்றார்.

சிலருடைய கண்களைப் பார்த்தால், அவர்கள் அழைக்காமலேயே அவர்கள் கண்கள் மட்டும் நம்மை அழைக்கும்! சிலருடைய கண்களைப் பார்க்க முடியாமல், பயங்கரமாக இருக்கும்! சிலருடைய கண்கள், நம்மை வெறுப்பு கொள்ளச் செய்யும்! சிலருடைய கண்கள், நம்மை மயக்கும்! சில கண்கள், எப்போதும் சிவந்து, கோபமாகவே இருக்கும்! சில கண்கள், எப்போதும் சோகமாகவே இருக்கும்!

மனிதக் கண்களில், இப்படி பல உணர்ச்சிகள் தெரிந்தாலும், அவை ஒரே சமயத்தில் தெரிவதில்லை!


ஒரே சமயத்தில், சிலருக்குக் குளிர்ச்சியும், சிலருக்குக் அருளும், சிலருக்குக் கோபமும் - மொத்தத்தில் நவரசமும் - தரும் ஒரே கண்கள் - அந்த அதே கண்கள் - அரங்கனுடையது மட்டுமே! எனவே தான் திருப்பாணாழ்வார், அவன் கண்களை, 9 விதமாக வர்ணிக்கின்றார்! எப்படி?

முகத்தின் அழகே - முகமே - கண்கள் (அமலன் முகத்து)! கருப்பு (கரியவாகி)! விசாலம் (புடை பரந்து)! ஒளி வீசும் (மிளிர்ந்து)! நீண்ட கண்கள் (நீண்டு)! செம்மை (செவ்-)! வரி ஓடும் (வரி ஓடி)! கண்களே முகம் என்று சொல்லும்படி, பெரியது (பெரியவாய)! அந்தக் கண்களை (கண்கள்) யார் பார்த்தாலும், அவர் பாதிக்கப் படுவது நிச்சயம் (பேதமை செய்தன)!

அவன் திருமுக மண்டலத்தை நாம் பார்க்கும்போது, நமக்கு அதிகமாகத் தெரிவதும், பார்க்கத் தோன்றுவதும், அந்தக் கண்கள் தான்! அவன் கண்களால் நம்மைப் பார்க்க மாட்டானா? என்று தோன்றும்!

திருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம்? பின்னர் தானே முடி, அடி எல்லாவற்றுக்கும் ஒரு வினாடி செலவிடுகின்றோம்?

இந்த அரங்கனின் கண்களைப் பார்த்துத் தானே, பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் மனைவியையும், குடும்பத்தையும் துறந்தார்!

ஆண்டாள், ‘அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து’ என்று தானே பாடுகின்றாள்!

இந்த அரங்கனே, அன்று இரணியனின் உடல் பிளந்தவன்! பின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஆதிப்பிரானான நரசிம்மன் கண்களில் கோபம்! மற்ற தேவர்கள் எல்லோரும் நெருங்க பயப்பட, பிரகலாதனுக்கு மட்டும், அந்தக் கண்களில் கோபம் தெரியவில்லை! குளிர்ச்சியும், பரிவும், அருளும் தெரிகின்றது!


’பிரகலாதனுக்கு மட்டும் குளிர்ச்சி, கடாக்ஷம், என்னை மட்டும் பைத்தியம் ஆக்குகிறாயே!’ என்று அந்தக் கண்களிடமே கேட்கின்றார்.

அதனால் தான், மேலே அவன் அழகு பற்றிப் பாசுரம் இயற்ற இயலாமல், 'அரங்கா! நீ அழகு! உன் கண்கள் அழகு! இந்த அழகு முடிவில்லாதது! 'உன்னையும், உன் கண்களையும் பார்த்த என் கண்கள், வேறு எதையும் பார்க்கக் கூடாது' எனும் நிலைக்கு வந்து விடுகிறார் திருப்பாணாழ்வார்!


ஆதிப்பிரானான நரசிம்மனுக்கு, பிரகலாதன் மேல் ஏன் இவ்வளவு - நம்மிடம் இருப்பதை விட மிக அதிகமான - அன்பு?
***

இடம்: பிரயாகை
நேரம்: கதை சொல்லும் நேரம்

ஸஹஸ்ராணிகர்:
ஓ மார்க்கண்டேயரே! பகவானுக்கு, பிரகலாதனுக்கு மீது மட்டும் என்ன இவ்வளவு அன்பு? அப்படி அவன் என்ன செய்தான்?

மார்க்கண்டேயர்:
அவன் கதையைச் சொல்வதற்கு முன், அவன் தந்தையின் கதையைச் சற்றுக் கேள்!
தாயாருக்கும், தம்பி மனைவிக்கும் அறிவுரை சொல்லி விட்டு, இரணியன், தவம் செய்யக் கிளம்புகிறான். அப்போது, பூகம்பம் ஏற்படுகின்றது; காடுகள் பற்றி எரிகின்றன. பல கெட்ட சகுனங்களைக் கண்ட அசுர குரு, ’நீ இப்போது தவம் செய்யப் போகக் கூடாது’ என்று கூற, குருவின் அறிவுரைகளையும் மீறித் தவம் செய்யக் கைலாயத்திற்குச் செல்கிறான்.

(மார்க்கண்டேயர், அந்தக் காட்சிகளை விவரிக்கிறார் ...)
***

இடம்: பிரம்ம லோகம்
நேரம்: குழம்பும் நேரம்

நாரதர்: அப்பா! வணக்கங்கள்!


பிரமன்: வாப்பா! இன்று என்னிடமேயா? நானே குழப்பத்தில் இருக்கிறேன்! நீயும் சேர்ந்தால் அவ்வளவு தான்!


நாரதர்: நாராயணா! ... அப்பா! விளையாடாதீர்கள்! என்ன குழப்பம் உங்களுக்கு?

பிரமன்: இரணியன் மிகவும் கடுமையான தவம் செய்கிறான்!


நாரதர்: அதனால் என்ன? உலகில் இருப்பவர்களுக்காகக் கவலைப் பட்டால் நம்முடைய ஆயுள் விரைவில் முடிந்து விடும்!

பிரமன்: அவன் செய்யும் தவத்தைப் பார்க்கும்போது, எனக்கு ஏதோ விபரீதம் ஏற்படும் என்று தோன்றுகிறது!

நாரதர்: நீங்கள் நாராயணனின் புத்திரர் ஆயிற்றே! உங்கள் நெஞ்சில் அவர் இருக்கும் வரை, நீங்கள் கவலைப் படத் தேவையில்லை!

பிரமன்: இருந்தாலும், பயமாக இருக்கிறது!

நாரதர்: இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

பிரமன்: அவன் தவத்தைக் கலைத்தே ஆகவேண்டும். உன்னால் முடியுமா?

நாரதர்: முயற்சி செய்கிறேன் அப்பா! எம்பெருமான் அருளால் எனக்கு வெற்றி கிட்டட்டும் என்று நீங்கள் அவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்!

(நாரதர் மறைந்து விடுகிறார்)
***

(மார்க்கண்டேயர் மீண்டும் தொடர்கிறார் ...)

மார்க்கண்டேயர்: நாரதரும், பர்வத முனிவரும், இரு கலவிங்கப் பட்சிகளாக (Red Strawberry Finch) உரு மாறி, இரணியன் தவம் செய்யும் மரத்திற்கு வந்து அமர்கின்றனர். அவன் தவத்தைக் கலைக்க முற்படுகின்றனர்.


மார்க்கண்டேயர்: முனி பட்சிகள் எவ்வளவு பேசியும், அவன் கவனத்தைக் கெடுக்க முயற்சித்தாலும், முடியவில்லை. கடைசி உபாயமாக, நாரதர், 'ஓம் நமோ நாராயணாய' என்று மூன்று முறை சொல்லி, நிறுத்தி விடுகின்றார்.

எம்பெருமானின் நாமம் கேட்டுத் தவம் கலைந்த அவன், அருகில் இருந்த அம்பை பறவைகள் மீது விட, அதற்குள் பறவைகள், இரணியன் தவம் கலைந்த உற்சாகத்துடன் பறந்து விடுகின்றன.

(இதன் பின்னர், மார்க்கண்டேய முனிவர், இரணியனின் அரண்மனையில் நடந்ததை விவரிக்கிறார்)
***

(தவம் கலைந்த இரணியன், அரண்மனைக்குத் திரும்புகிறான். அன்று இரவு இரணியனும், அவன் மனைவி கயாதுவும் தனிமையில் அந்தரங்கமாக இருக்கின்றனர் ...)

கயாது: நாதா! என்ன கோபம் உங்களுக்கு?

இரணியன்: தவத்தில் இருந்தபோது, இரண்டு பட்சிகள் வந்து தவத்தைக் கெடுக்கும் விதமாகப் பேசிக்கொண்டே இருந்தனர்.

கயாது: அதனால் என்ன நாதா? தேவதைகள், தவம் செய்பவர்களைக் கெடுப்பதும், சோதிப்பதும் வழக்கம் தானே? நாம் தானே அதற்கெல்லாம் செவி சாய்க்க்காமல் தவம் செய்ய வேண்டும்?



இரணியன்: அதனால் கூட நான் கவலைப் படவில்லை. ஆனால், கடைசியில் அந்தப் பறவைகள் மிகவும் சப்தமாக, 'ஓம் நமோ நாராயணாய' எனும் சொற்களை மூன்று முறை, எனக்காகவே சொல்வது போலச் சொல்லின. என் எதிரியின் பெயரைச் சொன்னவுடன், என் கோபத்தினால் தவம் கலைந்து விட்டது.

(14 உலகங்களிலும் எல்லோரும் மதித்துப் போற்றக் கூடிய அஷ்டாக்ஷர மந்திரத்தை அன்று இரவு இரணியன் தன் வாயாலேயே சொல்லி விடுகிறான். அவன் சொல்லும் அந்த - சரியான, 'அ'ரி யான - சமயம் பார்த்து, கயாது கருத்தரிக்கிறாள்)

கயாது: நீங்கள் மீண்டும் தவம் செய்யச் செல்லுங்கள்! இம்முறை, அவன் நாமம் சொல்லப் பட்டாலும் தவம் கலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

(அடுத்த சில நாட்களில், இரணியன் மீண்டும் தவம் செய்யச் செல்கிறான்)
***

தைச் சொல்லி, கதையை நிறுத்திய மார்க்கண்டேய முனிவர், அங்கு கூடியிருந்த முனிவர்களைப் பார்த்து,

'நம்மைப் போல் அல்லாது, விஷ்ணுவின் அந்தரங்கனான சங்கு கர்ணன், விஷ்ணுவின் அருளாலும், பிரம்மன் மற்றும் நாரதரின் ஆசீர்வாதத்துடனும், அஷ்டாக்ஷர மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே கருவில் நுழைந்து விடுகிறான்! இப்படிப் பிறந்தவனே பிரகலாதன்!

இப்படி, அஷ்டாக்ஷ்ர மந்திரத்தினாலேயே கருவில் நுழைந்ததால் தான் நமக்கெல்லாம் இல்லாத ஏற்றம், பிரகலாதனுக்கு - கருவிலே திரு! நமக்கெல்லாம் கிடைக்காத பரிவு, பிரகலாதன் மீது எம்பெருமானுக்கு'

***

ரு வழியாக, முதலாயிரத்தையும், பிரகலாதன் பிறப்பையும், நரசிம்மன், KRS, Raghavan, Kumaran, போன்றோரின் உதவியுடனும், இதனைப் பொறுமையுடன் படித்து, தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பல அன்பர்கள் மூலமும், முடித்துக் கொடுத்து விட்டார்!

இப்படி, அதிசயமாகப் பிறந்த பிரகலாதனைப் பற்றியும், அவனுக்காக எம்பெருமான் என்னவெல்லாம் செய்தான் என்பதையும்,

நாலயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாவது ஆயிரமான பெரிய திருமொழி மூலம் நரசிம்மனை திருமங்கையாழ்வார் அனுபவிக்கும்போது நாமும் சேர்ந்து அனுபவிக்கலாம்.

அனைவருக்கும் எனது நன்றியுடன், முதலாயிரத்தை முடித்துக் கொள்கிறேன்.


நரசிம்மன் திருவடிகளே சரணம்!

காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா பிரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து
Read more »

Thursday, June 10, 2010

குறுங்குடி நரசிம்மன்



திருமழிசையாரின் நரசிம்ம வைபவம் தொடர்கிறது ...
***

*கரண்டமாடு பொய்கையுள்* கரும் பனைப் பெரும் பழம்*
புரண்டு வீழ, வாளை பாய்* குறுங்குடி நெடுந்தகாய்!*
திரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்*
இரண்டு கூறு செய்து உகந்த* சிங்கம் என்பது உன்னையே?!
திருச்சந்த விருத்தம்-62

(கரண்டமாடு = கரண்டம் + ஆடு - கரண்டம் - நீர்க் காக்கை, ஆடு - விளையாடும்; கரண்ட மாடு - கறவைக் கூட்டம்; வாளை - வயல்களில் வாழும் மீன்; நெடுந்தகாய் = நெடும் + தகை - பெரும் சக்தி, பெருமை, அறிவு; ஆகம் - உடல்)

நீர்க்காக்கைகள் விளையாடும் பொய்கையிலே, கரிய பெரிய பனம்பழங்கள் விழுந்து புரள, வாளை மீன்கள் அதைத் தின்ன பாய்ந்து வருகின்றன. இப்படிப்பட்ட திருக்குறுங்குடியில் உள்ள எம்பெருமானே! திரண்ட தோள்களுடன், கோபத்துடன் வரும் இரணியனுடைய உடலை, இரண்டு கூறுகளாகச் செய்த நரசிம்மம் என்பது நீதானோ?

***

ரு பெரிய பொய்கை! அதில் (பொய்கையுள்), நீர்க் காக்கைகள் (கரண்டம்) விளையாடுகின்றன (ஆடு).

பொய்கையின் கரை ஓரத்தில், சில பனை மரங்கள்! அவற்றிலிருந்து, கருமை நிறம் (கரும்) கொண்ட பெரிய (பெரும்) பனம் (பனை) பழங்கள் (பழம்) கீழே விழுகின்றன. அவை நிலத்திலே விழுந்தாலும், சில பழங்கள் உருண்டு புரண்டு, நீரிலே வந்து விழுகின்றன (புரண்டு வீழ)!


அந்தப் பொய்கையில் இருக்கும் வாளை மீன்கள் (வாளை), புரண்டு நீரில் விழும் பனைப் பழங்களை, நீர்க்க்காக்கைகள் என்று நினைத்து, 'நமக்கு இன்னிக்கு பார்ட்டி தான்' என்று அவற்றின் மீது பாய்கின்றன (பாய்)! பாவம் மீன்கள்!

ஆழ்வாரின் வார்த்தைகளைச் சற்று கவனித்தால், இயற்கைக் காட்சி எப்படி உள்ளது என்று விளங்கும்:

பனைப் பழம்’ என்றோ, ‘பெரும் பனைப் பழம்’ என்றோ மட்டும் வர்ணித்தால், அது வாளை மீன்களைக் கவரும் அளவு இருக்காது! வாளை மீன்கள் பாய்ந்து வருமளவு இருக்கவேண்டுமென்றால், அவை, நீர்க்காக்கைகளைப் போல, கருப்பாக, பெரியதாக, இருக்க வேண்டும். எனவே, ஆழ்வார் இந்தக் காட்சியை, ‘கரும் பனைப் பெரும் பழம்’ என்று வர்ணிக்கிறார்.

கீழே விழும் பழங்கள், உருண்டையாக இருந்ததால், அவை விழுந்த வேகத்தில், அதிக தூரம் புரண்டு விழுந்தன என்பதை, ‘புரண்டு வீழ’ என்கின்றார் (நீர்க்காக்கைகள், சாதாரண காக்கைகளை விட, சற்றே பருத்து இருக்கும். எனவே, இதனைப் பார்த்த வாளை மீன்களுக்கு, இவை நீர்க்க்காக்கைகளைப் போலத் தோன்றைனவாம்!)

இப்படி ஒரு காட்சி எப்போதும் நடப்பது - திருக்குறுங்குடியிலே (திவ்விய தேசம் #78)!

('கரண்டமாடு' எனும் சொற்றொடருக்கு, 'கறவை மாடுகள் கூட்டம்' எனும் பொருள் கொண்டு,

'கறவை மாடுகள் கூட்டம் பொய்கை உள்ளே இருக்க, பனம் பழங்கள் உருண்டு வீழ, வாளை மீன்கள் பாய ...',

என்றும் பாசுரத்தின் பொருள் கூறுவது உண்டு. இந்த விளக்கத்தை, அடியேன் '108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு' எனும் நூலில் கண்டுள்ளேன்.

ஆனால், முதல் இரண்டு வரிகளையும் சேர்த்துப் பொருள் கற்பிக்கும் போது, 'கறவை மாடுகள் கூட்டம்' எனும் பொருள் அவ்வளவு பொருந்தாது என்பது அடியேன் கருத்து.

வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அவர்களும், 'கரண்டமாடு பொய்கையுள்' என்பதற்கு, 'நீர்க்காக்கைகள் பொய்கையில் ஆட' எனும் பொருளிலேயே வியக்கியானம் செய்துள்ளார்)

நீர்க்காக்கைகள் விளையாடும் பெரிய பொய்கையைத் தவிர, திருக்குறுங்குடிக்கு வேறு ஏதும் விசேடம் உள்ளதா?

***

குறுங்குடியில் (அருகே உள்ள மஹேந்திரகிரி மலை அடிவாரத்தில்) பிறந்த நம்பாடுவான் எனும் பாணன், ஒரு ஏகாதசியில் விரதம் இருந்து, குறுங்குடி எம்பெருமான் (அழகிய நம்பி, வைஷ்ணவ நம்பி, திருக்குறுங்குடி நம்பி, வராஹ நம்பி, நம்பி ராயர் எனப் பல பெயர்கள்) மீது கைசிகப் பண் பாடி அவனை உகப்பித்து, அதனால் கிடைத்த பயனில் பாதியைத் தானம் செய்து, ஒரு பிரம்ம ராட்சதனுக்கு சாப விமோசனம் அளிக்கிறான்!



உயர்ந்த ஏகாதசி விரதத்தின் பலனையே தானம் செய்ததால், நம்பாடுவான் நினைவாக, இந்த ஏகாதசி (கார்த்திகை மாதம், வளர்பிறை), கைசிக (22-வது மேளகர்த்தா ராகமான கரகரப்ரியாவின் ஜன்ய ராகம், கைசிகம்) ஏகாதசி எனப்படுகிறது!

வைணவர்களைப் பொருத்தவரையில், வைகுண்ட ஏகாதசியை விட, கைசிக ஏகாதசி மிக உயர்வாகக் கருதப்படுகிறது!

இதன் காரணத்தினாலேயே, கைசிக ராகத்தை தொடர்ந்து பாடியோ, கேட்டோ வந்தால், ஆயுள் நீடிக்கும் என்றும், மோட்சமும் உறுதி என்றும் கருதப்படுகிறது!


இவ்வரலாற்றை, வராக மூர்த்தியே தன் மடியில் இருந்து பூமிப் பிராட்டிக்கு உரைத்ததாக, வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது!
***

வ்வூர்க் கோயிலின் கோபுரத்தில் உள்ள சிற்பங்களின் உயர்வு கருதி, இது சித்ரகோபுரம் எனப்படுகிறது.

நம்பாடுவானுக்கு தரிசனம் கொடுப்பதற்காகவே கோயில் கொடிமரம் நகர்ந்ததால், இங்கு கொடிமரம் எம்பெருமானுக்கு நேராக இல்லை!

திருமங்கை மன்னன் பரமபதம் பெற்ற ஊர் இதுவே! இங்கிருந்தே மங்கையாரின் மங்கள விக்கிரகத்தை திருவாலி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

திருக்குறுங்குடி = திரு + குறு + குடி - பெரும் உருவமாக இருந்த வராகப் பெருமான், குறுகிய உருவம் கொண்டு, பூமாதேவியுடன் சில காலம் இங்கு இருந்ததாலேயே, இந்த ஊருக்கு பெரும் புகழ்!


எம்பெருமானே இராமாநுஜரின் சீடரான வடுக நம்பி வேடமிட்டு, அவருக்குத் திருமண் காப்பிட்ட வைபவம், இந்தத் தலத்திலேயே நடந்தது!

நம்மாழ்வாரின் பெற்றோர், பிள்ளைப் பேறு வேண்டி, வைஷ்ணவ நம்பியை ஆராதித்து வந்ததாலேயே நம்மாழ்வார் அவதரித்தார். இன்றும் பிள்ளைப் பேறு வேண்டி, இந்தத் தலத்திற்கு வந்து வேண்டிச் செல்வோர் பலர்!

இராமாநுஜர், குறுங்குடி நம்பிக்கே, நாராயண மந்திரத்தை உபதேசம் செய்துள்ளார்! இறைவனே உபதேசம் வாங்கிக் கொண்ட தலம் இது!

இந்தத் தலத்தில் சிவபெருமான் சன்னிதி உண்டு. மங்கையார், 'அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்' என்று சிவன் இவரோடு இருக்கும் நிலையை உணர்த்துகிறார். இப்போதும், குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள், 'பக்கம் நின்றார்க்குக் குறையேதும் உண்டோ?' என்று கேட்கும் வழக்கம் நடைமுறையில் உண்டு.



ஒரு சமயம், சில மன்னர்கள் நம்பியைச் சேவிக்க வந்தனர். அப்போது, தெய்வநாயகன் (வானமாமலைப் பெருமான்), இவர்கள் முன் அசரீரியாய், 'நான் பூமியில் அமிழ்ந்து கிடக்கிறேன். நீங்கள் அங்கு செல்லுங்கள். கருடன் எந்த இடத்தைச் சுற்றிப் பறக்கிறானோ அங்கு நான் கிடப்பேன்' என்று சொல்ல, அதன் பின்னரே வானமாமலை திவ்விய தேசம் (#79) உருவாயிற்று என்பர்!

பெரியாழ்வார், மங்கையார், மழிசையார், நம்மாழ்வார் தவிர, இராமாநுஜர், ஒட்டக்கூத்தர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், புகழேந்திப் புலவர் போன்றோரும் அழகிய நம்பிக்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

அறிவரிய பிரானை* ஆழி அங்கையனயே அலற்றி*
நறிய நன்மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன் மேல்*
அறியக் கற்று வல்லார்* வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.
திருவாய்மொழி 5-5-11

என்று, நம்மாழ்வார், 'குறுங்குடியையும், அதன் பெருமைகளையும் பற்றி அறிந்தால் மட்டுமே ஒருவன் வைணவன்' என்று கூறுகின்றார் அவ்வளவு சிறப்பு இந்த ஊருக்கு!

(பிரபந்தங்களின் பலன்களைக் கூறும் பாசுரங்களிலேயே, சிறிது வித்தியாசமான பாசுரம் இது! 'இதைச் சொன்னால் இந்தப் பலன்' என்று பெரும்பாலான பாசுரங்கள் கூறும். ஆனால், 'இதைச் சொன்னால் தான் நீ வைஷ்ணவன்' என்று கூறுகின்ற 'தகுதிப் பாசுரம்' இது!)

***

ப்படிப்பட்ட திருக்குறுங்குடியில் இருக்கும் பெருமானைப் பார்த்து, திருமழிசையாழ்வார், 'பெருமையுடையவனே (தகாய்!)! நீ தானே அன்று, வலிமை வாய்ந்த இரணியனை, விளையாட்டாகக் கிழித்தாய்?' என்று கேட்கின்றார்.

உன்னையே! - உன்னைப் பார்த்தால், மிக அமைதியாக, அழகாக, கருணை உள்ளவனாக இருக்கின்றாய்! நீயா அன்று பயங்கரமான சிங்க உரு எடுத்தாய்? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? என்று, ஆச்சரியமும், சந்தேகமும் தொனிக்க, 'உன்னையே?' என்று விளிக்கிறார்!

***

சென்ற பதிவில், சங்க நூல்களுக்கும், திருச்சந்த விருத்தத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்று கூறியிருந்தேன்.

சங்க நூல்களிலும், ஆழ்வார்களின் பிரபந்தங்களிலும் கூறப்பட்டுள்ள திருமால் பெருமையும், கதைகளும், வேத முறைகளும், அடியவர்களின் வாழ்க்கை நெறியும், அதிக ஒற்றுமை கொண்டதாய் அமைந்துள்ளன.



பல ஒற்றுமைகள் இருந்தாலும், நரசிம்மர் பாசுரங்கள் நான்றிற்கும், சங்கநூல்களுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

உதாரணத்திற்கு, பரிபாடலில் நரசிம்மாவதாரக் காட்சி:

...
செயிர் தீர் செங்கச் செல்வ! நிற்புகழப்-
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்-
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட, அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு, இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியொடு
தடி தடி பல பட - வகிர் வாய்த்த உகிரினை;
...
பரிபாடல்-4:10-22

கடுவன் இளவெயினனார் இயற்றிய நான்காம் பரிபாடலில், இவ்வாறு நரசிம்மாவதாரத்தைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது.


இதே போல, நம் நரசிம்மர் பாசுரத்தில் கூறப்பட்ட வாமனாவதார வைபவமும் (கங்கைநீர் ... - திருச்சந்த விருத்தம்-24), முருகனைப் பற்றிய 9-ம் பரிபாடலில் (9.4-7) கூறப்பட்டுள்ளது.

(கடைச் சங்கத்துப் புலவர்கள் எழுதிய எட்டுத் தொகையில், 5-வது தொகை, பரிபாடல். 13 புலவர்கள் இயற்றிய 70 பாடல்கள் இருந்ததாக வரலாறு கூறினாலும், கிடைத்திருப்பது, 22 முழுப் பாடல்களே! புறத்திரட்டுத் தொகையில் இருந்து, மேலும் இரண்டு பாடல்களும், சில உறுப்புக்களும், பகுதிகளும் கிடைத்துள்ளதாக அறிஞர்கள் கூறுவர். பரிபாடலில், 6 பாடல்கள் - 1,2,3,4,13,15 - திருமால் மேல் இயற்றப் பட்டவை)

***

ழிசையார் வாக்கில், நம் நாராயணன், 'பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன்' (திருச்சந்த விருத்தம்-23)! அவன் வயிற்றில் இருந்த தாமரையில் இருந்து பிரமன் தோன்றினான்.

பெரும்பாணாற்றுப் படையில், காஞ்சி மாநகரின் மாண்பு பேசப்படுகிறது. அதில், பிரமன் பிறந்த காட்சி கீழ்க்கண்டவாறு விவரிக்கப் படுகிறது:
...

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்
...
பெரும்பாணாற்றுப்படை 402-405

'நீல நிறத்தில் உள்ள நெடியவனான நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் தோன்றிய நான்முகன்' என்கின்றது ஆற்றுப் படை!


(பெரும்பாணாற்றுப் படை, சங்க நூற்தொகைகளில் ஒன்றான பத்துப் பாட்டில் 4-வது. இதை இயற்றியவர், தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்க்கண்ணனார்)

இப்படி, சங்க நூல்களில் பல கருத்துக்கள், ஆழ்வார் பாசுரங்களை ஒட்டி அமைந்துள்ளன. ஆனால் இவை அனைத்தையும் படித்து (எழுதவும் தான்!) அனுபவிக்க, இந்த ஆயுள் போதாது!
***

திருமழிசையார் அநுபவித்த நரசிம்மர், திருப்பாணாழ்வாரிடம் சென்று, தன்னைப் பாடச் சொல்கிறார் ...

- நரசிம்மர் வருவார் ...

Read more »

Wednesday, May 26, 2010

பித்துக்குளி - ஜிரா - "நின்று" என்றால் என்ன?

முன்பு கண்ணன் பாட்டில், பித்துக்குளி ஹிட்ஸ்-இல், Fast Beat கண்ணன் பாட்டு ஒன்றைப் பார்த்தோம் அல்லவா!
அதே அலைவரிசையில் இன்று, பித்துக்குளியார் முத்துக் குளித்த முருகன் பாடல்களையும் காண்போம்! வாருங்கள்! ஆனா, அதுக்கும் முன்னாடி...

"‘நின்று’ என்றால் என்ன? சொல்லுங்க பார்ப்போம்!"

"‘நின்றா’?? அட போடா வென்று - ரவி"

"ஹா ஹா ஹா! சரி, நான் வென்றாவே இருந்துக்கிட்டு போறேன்!
ஆனா, சிந்திக்கிலேன், "நின்று" சேவிக்கிலேன்-ன்னு அருணகிரி பாடுறாரு!
மாயோனைப் பற்றி "நின்றேன்", வாயார என்று கொலோ வாழ்த்து நாளே?-ன்னு ஆழ்வார் பாசுரம்!

இப்படி எல்லாரும், "நின்று", "நின்று"-ன்னு சொல்லுறாங்களே!
ஏன், நின்னுக்கிட்டுத் தான் கும்பிடணுமா?
உட்கார்ந்து கும்புட்டா ஏலாதா?
படுத்துக்கிட்டு மனசால கும்பிட்டா ஆகாதா? - ஏன் இந்த "நின்று"???



இன்று மிகவும் இயைந்து வரும் தினம்! மூவரின் பிறந்த நாள்!
1. தமிழ்க் கடவுள் - என் காதல் முருகப் பெருமான்
2. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் (எ) நம்மாழ்வார்

இருவருமே வைகாசி விசாகத்தில் தோன்றியவர்கள் தான்!

இந்த ஆண்டோ, வைகாசி விசாகம், May-27 அன்று வருவதால்...
இவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிக் கொள்ளும்...
3. தோழன் இராகவன் (எ) ஜிரா...


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முருகா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாறா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா!
:)
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பல்லாண்டு பல்லாண்டு!


மகரந்தம் என்றும், இனியது கேட்கின் என்றும்...முன்னொரு காலத்தில் பல பதிவுகள் வாரி வழங்கிய கைகளால்......

ஜிரா (எ) இராகவன் கைகளால்...

ரொம்ப நாள் கழிச்சி....இன்றைய முருகனருள் பதிவு எழுதப்படுகிறது! இதோ - இங்கிட்டு செல்லுங்கள்!




சிந்திக்கிலேன், "நின்று" சேவிக்கிலேன்! அன்பே, உன்னை "நின்று" சேவிக்கிலேன்! முருகாஆஆஆ!
Read more »

Wednesday, May 19, 2010

துள்ளி வரும் நரசிம்மன்


மஹீசார க்ஷேத்திரத்தில், சக்கரத்தாழ்வாரின் அம்சமாகப் பிறந்து, பல மதங்களைத் தழுவி (இதை, அவரே பாடலாக இயற்றியுள்ளார்), கடைசியில், வைணத்திற்கு வந்தவர் திருமழிசையாழ்வார். இவருக்கு, பல பெருமைகள் இருந்தாலும், 3 மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை:

'பிரான்' என்பது, எம்பெருமானுக்கே உரித்தான பெயர் (பிறருக்கு உதவுபவன் - இதைப் பற்றி, நரசிம்ம சரணாகதியில் முன்னமேயே எழுதியுள்ளேன்). ஆனால், 'பரம்பொருள் யார்?' என்பதை உலகுக்கு உணர்த்தி, அவர்களுக்கு நல்வழி காட்டியதால், திருமழிசை ஆழ்வாருக்கு மட்டும், திருமழிசைப் பிரான் என்ற பெயர் உண்டு!

திருமழிசைப்பிரான், கிடந்த நிலையில் இருக்கும் திவ்விய தேச எம்பெருமானைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார். இவர் எழச் சொன்னதும் எழுந்து, படுக்கச் சொன்னதும் மீண்டும் எம்பெருமான் படுத்த பெருமை, இந்த ஆழ்வாருக்கு மட்டுமே உண்டு! இவருக்கு உகந்து, உற்றவனாக, பேசிக்கொண்டு இருந்த திருக்குடந்தை எம்பெருமானுக்கு மட்டும், 'ஆராவமுது ஆழ்வான்' என்ற பெயர் உண்டு!


திருமழிசைப்பிரானின் வேண்டுதலுக்கு இணங்க, திருமால், ஆழ்வார் உடம்பிலேயே, தேவியர் சகிதமாக, தான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நிலையை, பெரும்புலியூர் அந்தணர்களுக்குக் காட்டியது பிரசித்தம்.


தாம் எழுதிய ஓலைச் சுவடிகளை இவர் திருக்குடந்தை திருக்குளத்தில் சமர்ப்பிக்க, திருச்சந்த விருத்தம் (முதலாயிரம்), நான்முகன் திருவந்தாதி (இயற்பா) எனும் இரண்டே பிரபந்தங்கள் மிதந்து மேலே வந்தன.

(சில வரலாற்று நூல்கள், ஆழ்வார் ஓலைச் சுவடிகளை திருக்குடந்தை ஆற்றில் விட, இந்த இரண்டு சுவடிகள் பட்டும் நீரில் அடித்துச் செல்லப் படாமல், நீரை எதிர்த்து இவர் திருவடிகளை அடைந்ததாகவும் கூறும்)

***

திருமழிசையாழ்வார் காலம், தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு போன்ற நூல்கள் இயற்றப் பட்ட சங்க காலம் (திருக்குறள் முதலான 18 கீழ்க்கணக்கு நூல்களுக்கு முந்தைய காலம் இது) என்பதை தமிழ் அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

தமிழ்ச் சங்க நூல்களுக்கும், திருச்சந்த விருத்தத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன (ஆழ்வார்கள் காலங்களை நிர்ணயிக்க, சங்க நூல்களும் உதவியாக உள்ளன). மேலும், புராணங்களைக் கொண்டு நாயன்மார்கள் காலத்தில் திருமாலுக்குச் சொல்லப்படும் தாழ்வுகள் எதுவுமே சங்க நூல்களில் காணப் படவில்லை (கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியான முகவுரை, ப-4, 1995).

வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் திருமழிசையாழ்வார் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு என்கின்றனர்.

***

'எல்லாப் பொருள்களும் எப்பொருளில் இருந்து தோன்றுகின்றதோ, தோன்றிய பிறகு, எந்தப் பொருளில் மீண்டும் மறைகிறதோ, அதுவே பரம்பொருள்' என்று உபநிடதம் கூறுகிறது (எல்லாப் பொருள்களும் ஒரு பொருளில் தோன்றி, வேறு ஒரு பொருளில் மறைந்தால், அந்த இரண்டு பொருள்களுமே பரம்பொருள்கள் அல்ல).

'பரம புருஷனே பெரியவன் என்று வாதம் செய்வாயாக' என்று விதிக்கின்றது வேதம் (முண்டக உபநிடதம் 1-1-4).

பரம்பொருள் எது என்பதை ஆதாரங்களுடன் நிர்ணயித்துக் காட்டியவர்கள் ஆழ்வார்கள். பெரியாழ்வார், பாண்டிய மன்னன் வல்லப தேவன் அவையில் இதைச் செய்து காட்டினாலும், திருமழிசை ஆழ்வார் மட்டுமே 'பரம்பொருள் எது' என்று நிர்ணயம் செய்வதையே தமது இரு பிரபந்தங்களிலும் பொழுது போக்காகக் செய்துள்ளார்.


திருச்சந்த விருத்தத்தில், குறிப்பாக பரம்பொருள் எது, அதன் தன்மைகள் யாவன, எம்பெருமான் எப்படிப் பரம்பொருள் ஆகிறான் என்பதை நமக்கு எளிமையாக விளக்குகிறார்:

'கடல் நீரில் இருந்து, அலைகள் தோன்றுகின்றன. மீண்டும் அவ்வலைகள், கடல் நீரிலேயே அடங்குகின்றன. அது போல, திருமாலிடத்தில் இருந்து எல்லாத் தேவர்களும், மனிதர்களும், பிராணிகளும், மற்ற பொருட்களும் தோன்றி, ஊழிக்காலத்தில் மீண்டும் அவனுள்ளே அடங்குகின்றன. எனவே திருமாலே ஆதி தேவன்! அவனே பரம்பொருள்!' என்று ஒரு பாசுரத்தில் கூறுகின்றார் (தன்னுளே ... திருச்சந்த விருத்தம்-10).

திருச்சந்த விருத்தம் - திரு + சந்த(ம்) + விருத்தம். விருத்தப் பா எனும் பா வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. துள்ளல் இசையுடன் (சந்தத்துடன்) ஆழ்வாரால் இயற்றப் பட்டது இந்தப் பிரபந்தம் (பதிவுத் தலைப்பின் காரணம் இது தாங்க!). இதில் விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் நிறைய இடம் பெற்றுள்ளன.

***

வால் நிறத்தொ(தோ)ர் சீயமாய்* வளைந்த வாள் எயிற்றவன்*

ஊனிறத்து உகிர்த்தலம்* அழுத்தினாய்! உலாய சீர்*
நால் நிறத்த வேத நாவர்* நல்ல யோகினால் வணங்கு*
பால் நிறக் கடல் கிடந்த* பற்பநாபன் அல்லையே?
திருச்சந்த விருத்தம் - 23

(வால் - வெண்மை; எயிற்றவன் = எயிற்று + அவன் - பற்களை உடையவன்; ஊனிறத்து - உடம்பின் மர்மத்தில், இதயத்தில்; உலாய சீர் - எங்கும் புகழ் பெற்ற; நிறம் - உடம்பு; நல்ல - சிறந்த; யோகு - உபாயம்)

வெளுத்த நிறத்தை உடைய ஓர் சிங்கமாய் அவதரித்து, வளைந்து, ஒளி உடைய பற்கள் கொண்ட இரணியன் உடலின் மர்மத்திலே நகங்களை நீ அழுத்தியவனே! எங்கும் புகழ் பெற்ற நான்கு வகை நிறங்களை உடைய வேதத்தை அறிந்தவர்கள், நல்ல உபாயங்களினால் வணங்குகின்ற, பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் பத்மநாபன், நீ அல்லவோ?

சிங்கம் வெண்மை நிறமா?
***

எம்பெருமான் நிறம் கருமை! இரணியனை அழிப்பதற்காக, அவன் பெற்ற வரங்களின் தன்மைக்கு ஏற்ப, தன் இயற்கை நிறத்தை அழித்துக் கொண்டு, வெண்மை நிறமாக்க முயற்சித்தானாம்! மேலும், எம்பெருமானின் ஜோதியினால், நரசிம்மம், வெளிர் நிறமாகவே எல்லோருக்கும் தெரிந்ததாம்! எனவே, திருமழிசையார், வெளிர் (வால்) நிற (நிறத்த) சிங்கம் (சீயம்) என்கின்றார்!


(வெளுத்த நிறத்தை உடைய பலராமன், 'வாலியோன்' என்றும் அழைக்கப் படுகின்றான்)

'வால் நிறம்' என்பதற்கு, 'ஒப்பற்ற தன்மை' என்ற பொருளும் கொள்ளலாம்.

பிறப்பில்லாத எம்பெருமான் எடுத்த பல அவதாரங்களிலே, இரண்டு யோனி கலந்து பிறந்த அவதாரம், நரசிம்மனைத் தவிர வேறு எதுவும் இல்லை!

ப்ரஹ்ம புராணம், 'உடம்பை மனிதனைப் போலச் செய்து கொண்டும், தலையை சிங்கத்தைப் போலச் செய்து கொண்டும் பிறந்தான் நரசிங்கன்' என்று கூறுகிறது (103-61).

எனவே, இந்த அவதாரத்தையே அதன் தன்மையிலும், அழகிலும், ஜோதியிலும் ஒப்பற்றது என்று ஆழ்வார் கூறுகின்றாரோ?


(நான்முகன் திருவந்தாதியிலும், திருமழிசையார் 'அரியே அழகு' எனும் பொருளில் பாடியுள்ளார். இயற்பாவில் நரசிம்மனைக் காணும்போது இதனை நாம் அனுபவிக்கலாம்)

சிங்கத்தின் நிறம் 'வால்' என்றது சரி, ஆனால் வேதத்தின் நிறம் நான்கு என்கிறாரே ஆழ்வார்?

***

'நிறம்' எனும் சொல்லுக்கு, மேனி (உடம்பு) என்ற பொருளும் உண்டு. மனிதனுடைய ஆத்மாவுக்கு உடம்பைப் போல, வேதத்திற்கு உடம்பு, அதன் ஸ்வரங்கள். வேதத்திற்கு, நான்கு வகையான ஸ்வரங்கள் உண்டு - உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம். இதனையே ஆழ்வார் இங்கு குறிப்பிடுகின்றார்.

'நால் நிறத்த வேத நாவர்' என்பதற்கு, நான்கு ஸ்வரங்களால் ஆன வேதங்களை, நன்கு கற்றவர்கள் என்ற பொருள்.

உலாய சீர் - எங்கும் புகழ் பெற்ற. 'நால் நிறத்த வேத'திற்கு அடைமொழி. ஆனால் சொற்களைச் சற்று மாற்றி அமைத்து - 'நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு பால் நிறக் கடல் கிடந்த, உலாய சீர் பற்பநாபன்' - என்று பத்மநாபனுக்கு அடைமொழியாகவும் பொருள் கொள்ளலாம்.

***

கங்கை நீ பயந்த பாத* பங்கயத்து எம் அண்ணலே!*
அங்கை ஆழி சங்கு தண்டு* வில்லும் வாளும் ஏந்தினாய்!*
சிங்கமாய தேவ தேவ!* தேனுலாவு மென் மலர்*
மங்கை மன்னி வாழு மார்ப!* ஆழி மேனி மாயனே!
திருச்சந்த விருத்தம் - 24

(பயந்த - உண்டாக்கிய; அங்கை = அம் + கை - அழகிய கை; தண்டு - கதை; மங்கை - திருமகள்)


கங்கை நீரை உண்டாக்கிய தாமரை போன்ற திருவடிகளை உடைய எங்கள் தலைவனே! உன் அழகிய திருக்கைகளில், சக்கரம், சங்கு, கதை, வில், வாள் ஆகியவற்றை ஏந்தியிருக்கின்றாய்! தேவர்களின் தலைவனான நரசிம்மனே! தேன் நிறைந்த மென்மையான தாமரை மலரில் மலர்ந்த திருமகள், அகலாமல் எப்போதும் இருக்கும் மார்பு உடையவனே! கடல் போன்ற பெரிய திருமேனியை உடைய மாயன் நீ!

***

முந்தைய பாசுரத்தில், பாற்கடலில் துயின்ற பத்மநாபனே, நரசிங்க அவதாரம் எடுத்ததாகக் கூறியவர், அவன் பெருமைகளில் ஈடுபடுகிறார் இப்பாசுரத்தில்.

பாசுரத்தில், ஆழ்வார் திருமகளையும், பஞ்சாயுதங்களையும் (சுதர்ஸனன், பாஞ்சசன்னியம், கௌமேதகம், சார்ங்கம், நந்தகம்) மட்டுமே குறிப்பிட்டுள்ளதன் காரணம்?

இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை! அனைவரும், அவன் உடம்பில் வசிப்பவர்கள் (மார்பு, கைகள்)! எனவே, இவர்களைத் தவிர வேறு யாராலும் நரசிங்கனின் பெருமைகளை முழுவதும் அறிய முடியாது என்று நமக்குச் சொல்லவே!

(திருமழிசை ஆழ்வார் சக்கரத்தாழ்வானின் அம்சம் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது; எனவே தான் இவரால் அவனை முழுவதும் அறிந்து, பாசுரங்களால் பரதத்துவ நிர்ணயம் செய்ய முடிந்தது)

'அண்ணலே!' (என் தலைவனே) என்று எம்பெருமானைக் குறிப்பிட்டதன் காரணம்?

'ஆழ்வார், எம்பெருமானை அடைய ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்தும், ஆழ்வார் பிறந்தவுடனேயே வந்து தரிசனம் கொடுத்து அருளும் கொடுத்துச் சென்றதனால் வந்த நன்றி உணர்ச்சியே' என்று பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்.

***

வரத்தினில் சிரத்தை மிக்க* வாள் எயிற்று மற்றவன்*
உரத்தினில் கரத்தை வைத்து* உகிர்த்தலத்தை ஊன்றினாய்!*
இரத்தி நீ! இதன்ன பொய்?* இரந்த மண் வயிற்றுளே கரத்தி?*
உன் கருத்தை* யாவர் காண வல்லர்? கண்ணனே!
திருச்சந்த விருத்தம் - 25

(சிரத்தை - நம்பிக்கை; வாள் - ஒளி, கத்தி; மற்றவன் - இரணியன்; இரத்தி - யாசித்தாய்; கருத்து - எண்ணம், செயல்)


கண்ணனே! பிரம்மாவிடம் பெற்ற வரத்தில் அதிக நம்பிக்கை வைத்தவனாய் இருந்த ஒளி வீசும் பற்களைக் கொண்ட இரணியனுடைய மார்பிலே தன் கைகளை வைத்து, நகங்களை ஊன்றினாய்! பின் வாமனனிடம், மூவுலகங்களையும் யாசித்துப் பெற்றாய்! என்ன பொய் இது? மாவலியிடம் பெற்ற உலகங்களை, பிரளயத்தின் போது, வயிற்றில் வைத்துக் காத்தாய்! உன் எண்ணங்களை யார் அறிய முடியும்?

அது என்ன ’வரத்தினில் சிரத்தை’?

***

சாகா வரம் பெறாவிட்டாலும், பெற்ற வரங்களின் மூலமாகவே, அந்தத் தன்மை கிடைத்து விட்டது என்று நினைக்கிறான் இரணியன்! வரங்களைப் பெற்றதனாலேயே, தன்னை ஈஸ்வரன் என்று நினைத்துக் கொள்கிறான்!

'அறிவு கெட்டவனே! இவ்வுலகிற்கு ஈஸ்வரனாகிய என்னிடம் அடிக்கடி சொல்கிறாயே, அந்த விஷ்ணு யாரடா?' என்று தன் மகனைக் கேட்கின்றான் அவன் (விஷ்ணு புராணம் 1-17-21).

பிரம்மனிடம் தான் பெற்ற வரங்களையும் மீறி, உடல் வலிமையையும் மீறி, இரணியனை அழிக்க வல்லவன் சிங்கப்பிரான் என்று அறியாதவனாகி விட்டான் இரணியன் - (பெற்ற) வரத்தினில் (வரத்தினில்) உள்ள நம்பிக்கையினால் (சிரத்தை)! அதனால் வந்த கர்வத்தினால்!

நரசிம்மனைப் பற்றி உயர்வாகச் சொன்னவர், திடீரென்று கண்ணன் பொய் (இதென்ன பொய்?) சொன்னதாகச் சொல்கிறாரே? அவன் 'ஏலாப் பொய்கள் உரைப்பான்' என்பதனாலா?
***


நரசிங்கமாகத் தோன்றியதைக் இரணியனை (மற்றவன்) வதம் செய்ததைக் கண்டால், நீ பேராற்றல் உடையவன் என்று தோன்றுகிறது!

நீ வாமனனாக வந்து யாசித்ததால் (இரத்தி), நீ சக்தி இல்லாதவன் என்று தோன்றுகிறது!

கிடைத்த உலகங்களை (இரந்த மண்) வயிற்றில் வைத்துக் காத்ததைப் (வயிற்றுளே கரத்தி) பார்த்தால், உன்னைப் போன்று வேறு யாரும் இல்லை என்று தோன்றுகிறது!

பேராற்றல் உடைய நீ, வாமனனாக நீ வந்தது, ஆச்சரியமான பொய்! (இதென்ன பொய்!) என்று, உண்மையில் அவனைப் புகழ்கின்றார் ஆழ்வார் (வஞ்சப் புகழ்ச்சி)!

இப்படி, மாறி மாறி, சக்தியையும், சக்தியின்மையையும் காட்டி, நீ செய்யும் மாயச் செயல்களை (உன் கருத்தை) யாரும் அறிய முடியாது (யாவர் காண வல்லரே)! மற்றவர்களாலும் செய்ய முடியாது! எனவே நீ பரம்பொருள் என்கின்றார்.

***

தொடர்ந்து வரும் இந்த 3 பாசுரங்களும், மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், மூன்று நரசிம்மாவதாரப் பாசுரங்கள் என்றே தோன்றும்!

'சைவ சமயத்தின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க, வைணவ சமயம் வீறு கொண்டு எழ வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தவே, ஆவேச அவதாரமாகிய நரசிம்ம அவதாரம் பற்றி, அடுத்தடுத்த 3 பாசுரங்களில் பாடினார்'

என்று முனைவர் கமலக் கண்ணன், தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் ('நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - மூலமும் விளக்கவுரையும்' - Vol-1 பக்கம் 43).
- நரசிம்மன் வருவான்!

Read more »

Monday, May 10, 2010

மேக விடு தூது - ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ



கண்ணனைத் திருமணம் செய்து கொண்டாலும், அது கனவில் தானே? மின்மினி பறந்தது போல இருந்தது. அவள் நெஞ்சில் நிலையாக இல்லை!

அடுத்துக் கிடைத்த கிருஷ்ணானுபவத்திலும், இவளது அன்பை அதிசயப் படுத்துவதற்காகவும், அதிகப் படுத்துவதற்காகவும், தொடக்கத்திலேயே அவளிடம், 'நான் எப்ப வருவேன், எப்படி வருவேன், என்பது தெரியாது; ஆனால் வர வேண்டிய சமயத்துக்குச் சரியாக வந்துவிடுவேன்!' என்று சொல்லிச் செல்கிறான் கண்ணன்! ஆனால் வரவே இல்லை!

தான் பெற்ற அனுபவத்தை நினைக்கிறாள் நம் பாவை! நினைக்கும்போதெல்லாம் பரவசம்! அதை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது! ஆனால், அவனோ வர மறுக்கிறான்!

அவனுடன் பேசுவதற்கு, மற்றக் கலியுலகத்து ஆண்கள் மாதிரி, Mobile, Pre-Paid SIM Card வாங்கித் தரவில்லை அவன்! எனவே, அவனைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள, அவன் அருகிலேயே எப்போதும் இருக்கும் சங்கிடம் பேசுகின்றாள்.

பாவை கூறியவற்றைப் பொறுமையாகக் கேட்ட சங்கு, பதில் சொல்லாமல் ஓடிவிடுகிறது!

ஓடிய சங்கம், மீண்டும் வரவில்லை! கண்ணனும் வரவில்லை! சங்கு கண்ணனிடம் ஏதாவது சொல்லிற்றா என்றும் தெரியவில்லை! 'சங்கம், கண்ணனின் அந்தரங்கனானதால், அவன் சொன்னதை மட்டுமே கேட்கும், நான் சொன்னால் கேட்காது', என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறாள் பாவை.

சென்ற முறை பிரியும் தருணத்தில், மழைக் காலத்தில் கண்ணன் மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்! மழைக் காலமும் வந்தது. கருமை நிறக் கண்ணன் வரவில்லை. ஆனால் அவன் போல் நிறமுள்ள கருத்த மேகங்கள் முன்னே வந்து நின்றன!

கவலையுற்ற பாவை, மேகங்களை, திருவேங்கவனிடம் தூது அனுப்புகின்றாள்!

***
காலம் காலமாக, மன்னர்கள், காதலர்கள், மற்றவர்களும், தேவைப்படும்போது தூது அனுப்புவதை வழக்கமாகவே கொண்டு இருந்தனர்.

மன்னர்கள் அனுப்பும் தூதுவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், தூதுவன் இன்னொரு அரசனிடம் செய்தி சொல்ல வேண்டிய முறை என, பல நியதிகள் தமிழ் இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன.

தூதுவன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று, நம் வள்ளுவனார் ஒரு அத்தியாயமே (69-தூது) வகுத்துள்ளார். மாதிரிக்கு, அதில் ஒன்று:

தொகச் சொல்லி, தூவாத நீக்கி, நகச் சொல்லி நன்றி பயப்பதாம் தூது.
குறள் 69-5

(காரண காரியங்களை எடுத்துச் சொல்லி, இன்னாத சொற்களை நீக்கி, கேட்பவர்கள் மனம் மகிழ உரைத்து, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடித்து, தம் அரசனுக்கு நன்மை பயப்பவனே தூதன் ஆவான்!)

தூது செல்பவன், நால்வகை உபாயங்களையும் (அறிவுறுத்துதல், கெஞ்சல், மிரட்டல், பொருள் கொடுத்தல்) கையாண்டு, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும்!


நம் எல்லோருக்கும் தெரிந்த முதல் தூதுவன் - தூதுவனுக்கு மிகச் சிறந்த உதாரணம் - அனுமனே (அனுமனுடைய தகுதிகளே வள்ளுவன் இந்த அத்தியாயம் எழுதக் காரணமாயிற்று என்றும் கூறப்படுவதுண்டு)!

மன்னர்கள், மனிதர்களையும், அனுமனைப் போன்றோரையும் தூது அனுப்பினாலும், காதலர்கள்/காதலிகள் தனிமையில் தவிக்கும்போது, தூது விடுவது மனிதர்கள் மூலம் அல்ல!



கிளிப்பத்து, குயில் பத்து, புறாக்கடிதம், மயில் பத்து, மேக விடு தூது, என்று, பதில் பேசாதவைகளைப் பல விதமாகத் தூது விடுபவர்களே நம் காதலர்கள்!


இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை,
பயன் பெறு மேகம், பூவை, பாங்கி,
நயந்த குயில், பேதை, நெஞ்சம், தென்றல்,
பிரமம் ஈரைந்துமே தூதுரைத்து வாங்கும் தொடை.


(அன்னம், கிளி, மயில், மேகம், நாகணவாய்ப் பறவை, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு, தோழி ஆகியோர் தூது செல்லத் தகுந்தவை)


மன்னர்களிடையே தூது செல்ல பெரும்பாலும் ஆண்களே அனுப்பப்பட்டாலும், ஒளவையார், அதியமானுக்காக, தொண்டைமானிடம் தூது சென்று, போரை நிறுத்தியதாக வரலாறு உண்டு!

நம் பாவை, மேகத்தையும், குயிலையும் தூது விட, சில ஆழ்வார்கள், மற்ற பறவைகளையும், நெஞ்சத்தையும் தூது விட்டுள்ளனர்!

மதுரைச் சொக்கநாதர் அருளிய 'தமிழ் விடு தூது' எனும் நூல் (உ.வே.சாமிநாத ஐயர் தேடிக் கண்டுபிடித்தது) சற்று வித்தியாசமான தூதாக இருப்பது குறிப்பிடத் தக்கது!

***

மேகத்தைத் தூது விடுபவர்கள், ஏனோ, வெயில் கால வெண் மேகத்தைத் தூது விடுவதில்லை (அவை வெகுதூரம் செல்லாததால் இருக்குமோ?). மழை மேகத்தையும், பொழிகின்ற மழையையும் பற்றித்தான் எழுதுகின்றனர்!

மேக விடு தூதிலும், 'தலைவன் வருவான்' என்று மேகம் செய்தி கூறுதல், 'தலைவனிடம் போய்ச் சொல்' என்று தூது அனுப்புதல், இடியுடனும், மழையுடனும், மேகம் பதில் பேசுதல், போன்ற பல வகைகள் உண்டு!

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய 'திருநறையூர் நம்பி மேக விடு தூது' எனும் கலி வெண்பா இயற்றியுள்ளார் ('இது இவரால் எழுதப் பட்டது அல்ல' என்ற கருத்தும் உண்டு).

ஒரு தலைவி, திருநறையூர் எனும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள நம்பி எம்பெருமான் மீது காதல் கொண்டு, 'நான் அணிந்து கொள்ள, நம்பியிடம் இருந்து துளசி மாலை வாங்கி வா' என்று மேகத்தைத் தூது அனுப்புகிறாள்.

(200 கண்ணிகள் - சிறிய/பெரிய திருமடல்கள் போல் - கொண்டது. கலி வெண்பாக்களுக்கே உரித்தான கணக்கு விவாதம் - 400 வரிகளா, 200 கண்ணிகளா, 100 பாக்களா, எல்லாம் சேர்த்து ஒரே பாடலா? - இதற்கும் உண்டு. எது எப்படி இருந்தாலும், இதன் சொற்சுவையும், பொருட்சுவையும் மிகவும் நன்றாக உள்ளது)

பதிணெண் கீழ்க் கணக்கு நூல்களில், ’கார் நாற்பது’ (மதுரைக் கண்ணன் கூத்தனார் இயற்றியது) எனும் சிறு நூல் உண்டு. மழைக் காலம் வந்து விட்டதை, நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுளும் உரைக்கும். இது தூது உரைக்கும் நூல் அல்ல என்றாலும், ஒரு செய்யுள்,

கடும் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடும் காடு நேர் சினம் ஈன - கொடுங்குழாய்!
'இன்னே வருவர் நமர்!' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து.
கார் நாற்பது-2

(சூரியன் வெப்பம் குறைந்து, மழைக் காலம் துவங்கி, காட்டில் எல்லாம், சிறு புல்கள் வளர, 'நம் தலைவர் இப்போதே வருவார்' என மேகம் தலைவர் அனுப்பிய தூதை அறிவித்தது என்று, தோழி தலைவியிடம் கூறுகின்றாள்)

'மழைக்காலம் ஆரம்பித்ததே, தூது உரைக்கத் தான்' என்ற பொருளில் வந்துள்ளது.


கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிப் புலவனான காளிதாசன் எழுதிய 'மேகதூதம்' உலகப் புகழ் பெற்றது! தவறு செய்ததனால், குபேரனால் நாட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு யக்ஷன், மழைக்கால மேகங்கள் மூலம் தன் மனைவிக்குத் தூது அனுப்புகிறான்!

கலியுகமாயிற்றே! இவன் சொன்னால் மேகங்கள் உடனே தூது செல்லுமா? அவை தூது செல்வதற்கு, ஏதாவது Incentive வேண்டுமே!

'நீ போகும் வழியில், இயற்கைக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும்; உன் மனம் நிறையும்; நீ போகும் வழியில் எல்லாம் மழை பொழிந்து கொண்டே சென்றால் பலர் உன்னை வாழ்த்துவர்' என்று அவற்றிற்கு, போக வேண்டிய காரணத்தை எடுத்துச் சொல்கிறான்!

111 சந்தங்கள் கொண்ட இந்தக் காவியத்தை, Horace Hayman Wilson எனும் ஆங்கிலேயர், 1813-ஆம் ஆண்டு 'Megha Duta: The Cloud Messenger' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ('Water' படத்திலும் இதைப் பற்றிய குறிப்பு வருகின்றது).

மேகதூதம், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

***

வான் கொண்டு கிளர்ந்தெழுந்த* மாமுகில்காள்!* வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதற* திரண்டேறிப் பொழிவீர்காள்!*
ஊன் கொண்ட வள்ளுகிரால்* இரணியனை உடலிடந்தான்*
தான் கொண்ட சரிவளைகள்* தருமாகில் சாற்றுமினே.
நாச்சியார் திருமொழி 8-5

'ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களே! திருமலையிலே உள்ள, தேன் நிறைந்துள்ள மலர்கள் சிதறும்படி, திரளாக மழை பொழியும் மேகங்களே! கூர்மையான நகங்களாலே இரணியன் உயிர் கொண்ட நரசிம்மன், என்னிடம் இருந்து எடுத்துச் சென்ற என் கைவளைகளை திருப்பித் தருவதாக இருக்கிறானா என்று நான் கேட்டதாகச் சொல்லுங்கள்'.

(ஊன் கொண்ட - சதைப் பற்றுள்ள, சக்தி வாய்ந்த; சரிவளை - கைகளில் இருந்து சரிந்து விழும் கைவளைகள்; சாற்றுமின் - சொல்லுங்கள்)
***

இந்தத் திருமொழியின் நான்காம் பாசுரம் வரை, 'மழை பொழியும் மேகங்கள்' என்று சாதாரணமாகக் குறிப்பிட்ட ஆண்டாள், இப்போது, 'கிளர்ந்து எழுங்கள்' (வான் கொண்டு கிளர்ந்தெழுந்த) என்கின்றாள்! எப்படி?

ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளர்ந்து எழ வேண்டுமாம்! இரணியனை வதைக்க நரசிம்மன் தூணில் இருந்து கிளர்ந்து எழுந்தது போல!


'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று திருப்பாவையில் சொன்ன அதே ஆண்டாள், இங்கு, மலர்கள் அழியும்படி, சிதறும்படி (தேன் கொண்ட மலர் சிதற) ’திரண்டு வந்து மழை பொழியும் மேகங்களே’ (திரண்டேறிப் பொழிவீர்காள்)' என்று சொல்கின்றாள்! ஏன்?

நரசிம்மன், இரணியன் உடன் வந்த அசுரர்கள் சிதறும்படி கிளர்ந்து எழுந்தானாம்! அது போன்று, திருமலையில், 'தேன் ஊறிக் கிடந்த மலர்கள் சிதறும்படி மழை பெய்ய வந்த மேகங்களே!' என்கின்றாள்!

அவை என்ன செய்ய வேண்டுமாம்?

'பிரகலாதன் கூப்பிடாமலேயே, அவனுக்காக, உன் வலிமையான (ஊன் கொண்ட) கைகளால், ஒரு இரணியனை அழிக்க வந்தாய்! ஆனால், நானோ உன்னை அழிக்க வரச் சொல்லவில்லை! என் கைவளைகளை (சரிவளைகள்) மட்டும் திருப்பித் தா! (தருமாகில்)' என்று நரசிம்மனிடம் சொல்ல வேண்டுமாம் (சாற்றுமின்)!

’கைவளைகள்’ என்று கூறாது, ‘சரிவளைகள்’ என்று ஆண்டாள் ஏன் கூற வேண்டும்? கண்ணனைப் பிரிந்த ஏக்கத்தினால், அவள் மிகவும் மெலிந்து போயிருந்தாள். கைகளில் இருந்த வளைகள், கையில் இருந்து சரிந்து விழுந்தன. அதையே கண்ணன் எடுத்துச் சென்றான்!


(’சரிவளை’- வினைத் தொகை = சரிந்த வளை, சரிகின்ற வளை, சரியும் வளை!)

"'சக்தியுள்ள கைகளால் இரணியன் உடலைக் கிழித்தாய்! அதே கைகளால், என் வளையைத் திருடிச் சென்றாய்! அதே கைகளால், என் கைகளில் வளைகளை மீண்டும் அணிந்து விடு!' என்று, நான் சொன்னதாக, திருவேங்கட மலையில் இருக்கும் நரசிம்மனிடம் சொல்" என்று மேகத்தின் மூலம் தூது விடுகின்றாள் ஆண்டாள்!

('வளைகளைத் திருப்பித் தா', என்பதன் பொருள், 'நீயே நேரில் வந்து, உன் கைகளால் என் கையில் அணிவித்தால் தான் நான் வளையல்களை அணிவேன்; அதற்காகவாவது, நீ நேரில் வரவேண்டும்' என்பதே!)

(இத்துடன், ஆண்டாள் அனுபவித்த நரசிம்மன் நிறைவு பெறுகிறது. அடுத்து, திருமழிசை ஆழ்வாரின் அனுபவத்தைப் பார்க்கலாம்)
- நரசிம்மன் வருவான்!

Read more »

Friday, April 23, 2010

பித்துக்குளி ஹிட்ஸ் கேட்போமா? பால் வடியும் முகம்!

பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :)
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!

எல்லாஞ் சரி! "ஊத்துக்குளி" வெண்ணெய் தெரியும்! அது என்ன "பித்துக்குளி"?
சின்ன வயசில், தெருவில் விளையாடும் போது, ரோட்டுல போற ஒருவர் மேல கல்லெறிஞ்சி இருக்கான் இந்த வாலுப்பையன்!
அடிபட்ட பெரியவரோ....பரம பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார்! நெற்றியில் இரத்தம் வடிய...
"அடேய்...நீ என்ன பித்துக்குளியா (பைத்தியமா)?".....


மேலும் வாசிக்க...பாட்டைக் கேட்க.... இங்கிட்டு போங்க! இனியது கேளுங்க!

பின்னே? பந்தல் வாசகர்கள், பந்தலை மட்டும் எட்டிப் பார்த்தா எப்படி?
கண்ணன் பாட்டிலும், My Honey - முருகனருள் வலைப்பூவிலும் தானே என் மூச்சு இருக்கு! Thatz why this Intro & Redirect from Panthal! :)
Read more »

Tuesday, April 20, 2010

பிறந்தநாள்: இராமானுசர் தவறு? சுட்டிக் காட்டியது யார்?

ஆகா! இராமானுசர் தவறு செய்வாரா? அடப்பாவி! அங்க வச்சி, இங்க வச்சி, கடேசீல இவர் மேலேயே கைய வச்சிட்டியா?-ன்னு ஒரு சிலர் பொங்கி எழுவது எனக்குத் தெரிகிறது!
அவர்களுக்கு இராமானுசர் மேல அன்பு இருக்கோ இல்லீயோ...அடியேன் மேல் "பாஆஆசம்"...இருப்பதென்னவோ உண்மை! :)

வணக்கம் மக்களே! இன்று சித்திரைத் திருவாதிரை (Apr 20, 2010)!
உடையவர், எம்பெருமானார் என்று போற்றப்படும்.....காரேய்க் கருணை, இராமானுசரின் பிறந்த நாள்!
Happy Birthday Ramanuja! இன்னும் பல நூற்றாண்டு இரும்! :)

* தமிழ் வேதமான மாறன் மொழியை, ஆலயம் தோறும், "கருவறைக்குள்ளே-யும்" ஒலிக்கச் செய்து...
* தமிழை இறைவனுக்கு முன்னே ஓதி வர, இறைவன் பின் தொடர, வடமொழி வேதங்களை அதற்கும் பின்னால் ஊரறிய ஓதி வரச் செய்து...

* வேதங்களின் விளக்க நூலும், விசிட்டாத்வைத (விதப்பொருமை) நூலுமான ஸ்ரீபாஷ்யத்துக்கு, பிரம்ம சூத்திரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல், திருவாய் மொழியையும் ஆதாரமாகச் சேர்த்து...

* திருவாய் மொழிக்கு, பல ஈடு வியாக்யானங்களை எழுதப் பண்ணி...
* வைணவத் தலைநகரமான திருவரங்கத்தில், மார்கழி ஏகாதசியின் போது, தமிழுக்கென்றே தனித்த திருநாள் - திருவாய்மொழித் திருநாள் - 21 நாட்கள் இன்றளவும் நடக்க வைத்து...

இப்படி, பெற்ற தாயான நம்மாழ்வாரைக் காட்டிலும், வளர்த்த தாயாய், வளர்த்து விட்ட உடையவருக்கு.....இந்தப் பாடல் ஒரு பிரார்த்தனை!
வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன்! மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் நம் இராமானுசன்!




சரி, இராமானுசர் பிறந்த நாள் பதிவுக்கு வருவோம்! அது என்ன இராமானுசர் செய்த தவறுகள்? இராமானுசர் தவறெல்லாம் செய்வாரா என்ன? :)

மனுசனாப் பொறந்த எல்லாருமே தவறுவது இயல்பு தான்!
நமக்குப் பாடம் காட்ட வந்த அவதாரங்களும், ஆசார்ய புருஷர்களும், நல்லது மட்டும் தான் செய்து காட்டுவாங்களா என்ன?
தவறும் செய்து காட்டுவார்கள்! அப்படித் தவறிய பின், அதை எப்படி எதிர்கொள்ள வேணும் என்றும் நடந்தும் காட்டுவார்கள்!

இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான்! அதை அவனே தவறு என்று ஏற்றுக் கொண்டு, அடுத்த அவதாரத்தில், அதே போல் மறைந்திருந்து, கண்ணன் கொல்லப்பட்டு, கழுவாய் தீர்த்துக் கொண்டான்!

ஆனால் நம் பண்டித சிகாமணிகள் தான், ஓவர் புனிதப் பூச்சுகளைப் பூசி, வாலி வதம் சரியே! சீதையின் அக்னிப் பிரவேசம் சரியே! என்று ராமாயண இண்டு இடுக்குகளில் புகுந்து, இன்றும் பட்டிமன்றம் நடாத்திக் கொண்டிருப்பார்கள்! :)
இதனால் இராமன் மேல் மதிப்பு வருவதற்குப் பதிலா, ஓவர் புனிதப் பூச்சு பூசி, வெறுப்பு வரவே இவர்கள் துணை போய்க் கொண்டு இருப்பார்கள்!

இராமன் காட்டிய வழியில் தானே இராம-அனுஜனும்? இராமானுச வைபவத்தில் அவர் "தவறிய" இடங்களும், மறைக்காது குறிப்பிடப் பட்டிருக்கும்! அவற்றில் சிலதை இன்று காணலாமா? :)
பயப்படாதீங்க! ஆசார்ய அபச்சாரம் எல்லாம் இல்லை! இதனால் அவர் பால் புரிதலும் மதிப்பும் இன்னும் கூடவே செய்யும்!


திருவரங்கம் - இராமானுசர் பள்ளிப்படுத்தப்பட்ட இடம்


ஸ்ரீபாஷ்யம் எழுதத் துவங்கிய காலம்! மூல நூலான போதாயன விருத்தியை, இராமானுசர் நடையாய் நடந்து வாங்கிய பின்னால், சிறிது நாளிலேயே களவாடிக் கொண்டார்கள்!
அட, இதுவும் வேதம் தானே! விரிவுரை சொல்லிவிட்டுப் போகட்டுமே-ன்னு கூட அந்த வைதீகோத்தமர்களுக்குத் தோனவில்லை!
வேதமா முக்கியம்? தங்கள் உள்ள உகப்பு தானே இவிங்களுக்கு எப்பவும் முக்கியம்! தமக்கும், தம் நம்பிக்கை/பழக்க வழக்கங்களுக்கும் சரிப்பட்டு வரும் வரை தான் வேதம்! :(

இப்போ என்ன செய்வது? முழுசாப் படிப்பதற்குள் மூல நூல் திருடு போய் விட்டதே! எப்படி குருவான ஆளவந்தார் ஆசையை நிறைவேற்றி வைப்பது?
சமய சஞ்சீவியாக, எப்போதும் உடன் இருக்கும் நண்பரும்-முதன்மைச் சீடருமான கூரத்தாழ்வான் முன்னுக்கு வந்தார்!

"உடையவரே, தாங்கள் இரவில் படிக்கத் துவங்கிய போது, அசதியில் உறங்கி விடுவீர்கள்! அப்போது நான் பின் வரிசையாக, ஒவ்வொரு பாகமாகப் படித்து, உருவேற்றி விட்டேன்! ஒப்பிக்கிறேன்! கேட்கிறீர்களா? பிறகு நீங்களே முடிவுக்கு வாருங்கள்!"

இராமானுசருக்குப் போன உயிர் திரும்பி வந்தது!
குருவால் புகழ் பெற்ற சீடர்கள் பலர்! ஆனால் குருவுக்கே புகழ் சேர்த்த சீடர்கள் உண்டென்றால் அது உடையவரும்-அவர் சீடர்களும் தான்!
அந்த அளவுக்கு அங்கே அதிகாரம் காட்டாது, கொடுக்கல்-வாங்கல் இருந்தது! இனி பாஷ்யம் எழுத வேண்டியது தான் பாக்கி!

"கூரேசா, நான் ஸ்ரீபாஷ்யம் சொல்லிக் கொண்டே வருகிறேன்! வேதங்களில் இருந்தும், திருவாய் மொழியில் இருந்தும் என் விளக்கங்கள் அமையும்!
நீர் மூல நூலையும் வாசித்து உள்ளதால், நான் எங்கேனும் தவறான விளக்கம் சொல்லும் பட்சத்தில், என்னைத் தடுத்து நிறுத்தும்! சரியா?"

"ஐயோ! சுவாமி! உலகாசான்-ஜகத்குரு என்று ஊரே உங்களைக் கொண்டாடுகிறது! உங்கள் விளக்கத்துக்கு நான் மறுப்பு சொல்வதா? இதெல்லாம் சரிப்பட்டு வருமா? வேண்டாம் இராமானுசரே!"

"சரி! இப்படிச் செய்வோம்! நான் சொல்லும் விளக்கம், மூல நூலின் கருத்தோடு மாறுபட்டு இருந்தால், நீர் எழுதுவதை நிறுத்தி விடும்!
உடனே அது எந்த இடம் என்று நானும் புரிந்து கொள்வேன்! சரியா? இதனால் யாருக்கும் எந்தச் சங்கடமும் இல்லை!"



இதோ, விசிட்டாத்வைத கலங்கரை விளக்கமாக, ஸ்ரீபாஷ்யம் நிறைவுறும் நிலைக்கு வந்து விட்டது! உடையவர் பொழியும் பொழிவை, கூரேசன் வயற்காட்டுக்குப் பாய்ச்சி விடுவது போல், எழுதி விடுகிறார்! ஆனால்...ஆனால்...இன்று.....

கூரேசன் எழுதுவதை நிறுத்தி விட்டார்! பாஷ்யம் நிறையப் போகும் சந்தோஷத்தில் பொழிவைத் தொடர்ந்து கொண்டே இருந்த உடையவருக்கு அதிர்ச்சி!
தான் போட்டுக் கொடுத்த திட்டப்படி தானே கூரேசன் செய்கிறார் என்பது கூட மறந்து போனது! பாஷ்யம் முடிய வேணுமே என்ற பேராவல் மட்டுமே ததும்பும் நிலையில்...

"கூரேசா, தொடர்ந்து எழுதும்!"

மெளனம்...

"கூரேசா..."

"சுவாமி, ஜீவாத்மாவை ஞானம் மிக்கவன், ஞானம் மிக்கவன் என்று தான் சொல்லிக் கொண்டே இருக்கிறீரே அன்றி...
பரமாத்மனைச் சரணம் அடைந்து இருப்பதே அந்த ஞானத்தின் பயன் என்று விரிக்கவே இல்லையே! அதான்....."

"ஓ...அதான் உம்ம கை மறுக்கிறதா? பலே! அப்போ நான் எதற்கு? பாஷ்யத்தை சுயமாக நீரே எழுதிக் கொள்ளும்!"

எங்கிருந்து தான் அப்படியொரு கோவம் வந்ததோ இராமானுசருக்கு!
கோவமே வராதவர்களுக்கு கோவம் வந்தால்?
அதுவும் தப்பு செய்யாதவன் மேல் தப்பு செய்தான் என்று கோவம் வந்தால்???

உடையவர் விறுவிறு என்று எழுந்து, கூரேசன் கையில் இருந்த ஓலையெல்லாம் வீசி எறிந்து விட்டு, ச்சீ, நன்கு முடியப் போகும் தக்க சமயத்தில் இப்படி ஒரு தடையா என்று கடுப்புடன் வெளியேறி விட்டார்!

கூரேசனுக்கு மூச்சே நின்று போனது!
அய்யோ! நீங்க ஆரம்பிக்கும் போது சொன்னீர்களே! அதைத் தானே நானும் செஞ்சேன்?-என்று தன் பக்க நியாயங்களைச் சொல்லக் கூட, அவருக்கு வாய் வரவில்லை!
பரிபூர்ண சரணாகதர்களின் லட்சணம் இது தான்! தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை! "தன்னை அவன் கதிக்கே" விட்டு விடும் நிலை!

"என்ன ஓய் கூரேசரே, இராமானுஜர் இப்படிக் கோவப்பட்டு நாங்க பார்த்ததே இல்லைங்காணும்! இனி நீர் என்ன செய்யப் போகிறீர்?
ரொம்ப பணிவானவர் போல வளைய வந்தீரே! இராமானுஜரையே எதிர்க்கும் அளவுக்கு அடடா என்னவொரு பணிவய்யா உமக்கு! குட்டு வெளிப்பட்டுருச்சி-ங்காணும்! பேசாம மடத்தைக் காலி பண்ணிட்டு போம்!"

எள்ளல்கள்!!! கருடன், சரணாகதியில் ஒடுங்கி இருந்தால்...மண்புழு கூட "கருடா செளக்கியமா"-ன்னு கேட்கும் அல்லவா? :)

"என்னது?....அவரே கோபித்தாலும்....அவரை விட்டுப் போவதா?.....ஹைய்யோ!
எத்தனையும் வான் மறந்த காலத்தும், பசும் பயிர்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்.....வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!
என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்றல்லால் பற்றில்லேன்!

என் வாழ்வோ தாழ்வோ,
உன் கையால் நடப்பது என்னவோ,
அதுவே எனக்கு இனியது, இனி எது, இனி அது...கேட்கின்...?"


அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால், எவ்வளவு தான் நெருக்கமானவராக இருந்தாலும், சச்சரவு உண்டாகி விடுகிறதே...அதுவும் இந்த அறிவியல் காலத்திலேயே!
கருத்தைக் கருத்தாக மட்டுமே பார்க்காது...
மாற்றுக் கருத்து சொன்னாலே, மாற்றான் ஆக்கி விடும் நிலைமை! ஒரு வேளை இராமானுசரும் அப்படிப் பட்டவர் தானோ?

இராமானுசர் எழுந்து அவர் அறைக்குச் சென்று விட்டாரே தவிர, அவருக்கு எதுவுமே நிலை கொள்ளவில்லை! மறுபடியும் மறுபடியும் அதே யோசனை!

"கூரத்தாழ்வான் அப்படிப்பட்டவன் இல்லையே! தன் சொத்தையெல்லாம் விட்டுவிட்டு என் பின்னால் வந்தவன், இன்று மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்ள வேணும்? அப்படி என்ன நான் தப்பாகச் சொல்லி விட்டேன்? ஞானத்தை முதலில் சொல்லி, இன்னும் சிறிது நேரத்தில் சரணத்தைப் பற்றிச் சொல்லத் தானே போகிறேன்! அதற்குள் என்ன அவசரம்?"

ஆலயத்தில், சாற்றுமுறையில், கோயில் திருவாய்மொழி ஓதும் சத்தம் கேட்கிறது!
ஒண்சங்கு கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே!!
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கல்லாம்
படியன் அல்லன் பரம் பரன்!!!

"ஆகா...ஆகா...இதைத் தானே கூரேசனும் சொன்னார்?
"என்"னுள்ளும் இறைவன் உள்ளான்-ன்னு சொல்லாது,
"அடியேன்" உள்ளான் என்று வருகிறதே மாறன் மொழி! அப்படீன்னா...அப்படீன்னா...

"என்" ஞானம் என்று ஒன்றும் கிடையாது!
"என்" கர்மம் என்ற ஒன்றும் கிடையாது!
அதான், இறைவன், "என்"-உள்ளான் என்று சொல்லாது
"அடியேன்"-உள்ளான் என்கிறாரோ நம்மாழ்வார்?

ஆகா! ஒரே சொல்லில், ஒத்தைச் சொல்லில்...
அவன் "அடிக்"கீழ் நாம் இருப்பதைக் காட்டி...
அப்படி "அடிக்"கீழ் இருக்கும் நமக்காகவே, அவனும் இருப்பதைக் காட்டி...
"அடி"யேன் உள்ளான்! "அடி"யேன் உள்ளான்!!

ஓ! ஞாபகம் வருது! வேதத்திலும் பகவத் சேஷ பூத: ஜீவ: என்று தான் வருகிறது அல்லவா! அடா, அடா, அடா! வேதத்தில் கூட நாலு சொற்கள்!
நம்மாழ்வார் எப்படி இவ்வளவு அழகா, நறுவிசா, திராவிட வேதத்தில், ஒரே சொல்லால்? - அடியேனுள்ளான்! அடியேனுள்ளான்!

கூரேசன் சொன்னது சரியே! கூரேசன் சொன்னது சரியே!
நாம் தான் அவசரப்பட்டு விட்டோம்! ஐயோ! கூரேசன் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ? கூகூகூரேசா....."



இராமானுசர் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்! அங்கே கூரேசன், கண்களில்.....வழிய....
பசியிலும், தனிமையிலும், "அவரே" என்று ஒடுங்கிய நிலையில்.....

"கூரேசா! என்னை மன்னித்து விடும்! என்னை மன்னித்து விடும்!"

"ஐயோ! சுவாமி, என்ன இது? உம்ம கண்ணில் இருந்து எதுக்கு இப்படி தண்ணி கொட்டுது? என்ன ஆயிற்று?"

"உம் கண்ணில் இருந்து கூடத் தான் தண்ணீர் கொட்டுது? என்னை மட்டும் கேட்கிறீரே?"

"சுவாமி..."

"ஒன்னும் பேச வேணாம்! நான் தான் அப்பவே சொன்னேன்-ல்ல? மூல நூலில் இருந்து நான் விலகிச் சென்றால், எழுதுவதை நிறுத்தி விடும், புரிந்து கொள்கிறேன்-ன்னு! அதை எனக்கு எடுத்துச் சொன்னால் என்னவாம்? எதுக்கு நான் திட்டிய போதும் மெளனம் காத்தீர்?"

"உங்கள் முக வாட்டமும், கோபமும் கண்டு, எனக்கு தற்காத்து கொள்ளக் கூட, பேச வரவில்லை! கண்ணீர் தான் வந்தது! அதான்....."

"ஐயோ! கூரேசா! இப்படியா இருப்பார்கள்?
உம்மைத் திட்டிவிட்டு, நான் மட்டும் உம்ம யோசனை இல்லாமல் இருப்பேனா? அரங்கன் சன்னிதி ஓதல் காட்டிக் கொடுத்து விட்டது! - அடியேனுள்ளான், அடியேனுள்ளான்! திருவாய்மொழி சொல்வது அதுவே! நீர் சொன்னதும் அதுவே!

இதோ, என் கருத்தை நான் மாற்றிக் கொள்கிறேன்! ஸ்ரீபாஷ்ய உரையை மாற்றிச் சொல்கிறேன்! தொடர்ந்து எழுதும் கூரேசா! எனக்காக, இந்த இராமானுசனுக்காக...தொடர்ந்து எழுதும்!"


* அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால்? = "நெருக்கமா"னவர் "வெறுக்க"மானவர் ஆவாரா?
* மாற்றுக் கருத்து வந்தால்? = மனத்துக்கு இனியான், மாற்றான் ஆகி விடுவானா?
* மாற்றுக் கருத்து....சரியானது என்னும் பட்சத்தில்...மாற்றிக் கொள்ள மனம் இடங் கொடுக்குமா? எப்போது இடங் கொடுக்கும்?

காரேய்க் கருணை மனத்தில் இருந்தால்...இடம் கொடுக்கும்! "அடம்" கொடுக்காது! "இடம்" கொடுக்கும்!

காரேய்க் கருணை இராமானுசா இக் கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
இராமானுசர் திருவடிகளே சரணம்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP