Tuesday, October 31, 2006

அமெரிக்கா கொண்டாடும் பேயாட்டம்

பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.

சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு.
"முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு"
விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.

பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு, இங்கும் பூசணிக்காயா?
ஆமாம். எல்லா வீடுகளிலும் பூசணிக்காய் (பூசணிப்பழம்) கட்டி வைக்கிறார்கள். ஏன்? எதற்கு?

என்ன ஆச்சு இந்த அமெரிக்காவுக்கு-ன்னு கேட்கறீங்களா?
Oct 31 இரவு - பேய்களின் திருவிழா - பேரு ஹாலோவீன் (Halloween).

இன்னாது? பேய்க்கு எல்லாம் திருவிழாவா?...
வாங்க என்னன்னு பாக்கலாம்.

ஸ்காட்லாண்டு மற்றும் ஐரிஷ் மக்கள் கொண்டாடிய இந்த விழா, அவர்களுடன் அப்படியே புலம் பெயர்ந்து, அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டது!
ஆன்மாக்களுக்கும் (All Souls), புனிதர்களுக்கும் (All Saints) கொண்டாடப்பட்ட விழா, இன்று பேய்களின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
All Hallows Eve என்பது Halloween என்றாகி விட்டது.

ஐரிஷ் நாட்டு கெல்ட் இன மக்கள், குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் ஆவிகள் எல்லாம், பூமிக்கு விஜயம் செய்வதாக நம்பினர்.
உணவுக்கும், இறைச்சிக்கும், உற்சாக பானத்துக்கும் மட்டும் இன்றி, தங்களுக்கு ஆள் எடுக்கவும் அவை பூமிக்கு வருமாம்.

ஆனால் பெரிய பெரிய தீ மூட்டிக் கொண்டாடினால், அவை பயந்து ஓடி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
மேலும் மக்கள் எல்லாரும் பேய்களின் உடை அணிந்து கொண்டு, பேய் வேடம் போட்டு, ஊருக்குள் உலாவினர்.

அவர்களைப் பாத்து, 'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல; சரி மனிதர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்லலாம்', என்று பேய்கள் போய்விடும் என்று நம்பினர்.

அறுவடைக் காலம் நெருங்குவதால், சல்லீசாக கொட்டிக் கிடக்கும் பூசணிப் பழங்கள்; அவற்றைத் தோண்டி, ஓட்டை போட்டு, அதன் மேல் கண்டபடி வரைவார்கள்.
பின்னர் அதை ஒரு கூடை போல் ஆக்கி, அதற்குள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு, ஊர் சுற்ற வேண்டியது தான்!
இப்படித் தீயவைகளை ஏமாற்ற, தீயவர் போல் நடிக்கும் ஒரு விழா உருவாகி விட்டது! :-))

அட்சய திருதியை அன்று அலைமகளை வணங்கி, நமக்கு இருக்கும் செல்வத்தில் சிறிது தானம் செய்ய வேண்டும் என்பது நியதி.
அதை அப்படியே உல்டாவாக்கி, இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று நம்ம ஊர் வியாபார காந்தங்களும், மக்கள்ஸும் சேர்ந்து, (ஏ)மாற்றி விட்டார்கள் அல்லவா?

இது நம்மூருக்கு மட்டும் இல்லைங்க, எல்லா ஊருக்கும் பொது தான் போல இருக்கு!
அமெரிக்காவிலும் இதை அப்படியே மாற்றி, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் விழாவாக மாற்றி விட்டன நிறுவனங்கள்.

இன்றைய ஹாலோவீன் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் ஒரே ரகம் தான்.
பேய், ஆவி, கிழவிகள், பூனை மீசை, தேவதை எனப் பலவாறாக குழந்தைகள் வேடமிட்டுக் கொள்வர்; இதற்கான உடைகளைப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்.

வீடுகளையும் பேய் வீடு போல அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். (கெட்டுது போ...ன்னு யாரோ அங்க முணுமுணுக்கறாப் போல இருக்கே?:-)
ஒட்டடை, சிலந்தி வலை, பூசணி, பூனை முகம், ஆந்தை, ஒளி விளக்கு இப்படி பல வழி இருக்கு!

அப்புறம் என்ன, வேடமிட்ட குழந்தைகள் வீடு வீடாய்ப் போய் 'கோவிந்தா' போட வேண்டியது தான். பூசணி உண்டியல் குலுக்க வேண்டியது தான்!
ட்ரிக் ஆர் ட்ரீட் (Trick or Treat?? ) -
என்னை ட்ரீட் செய்கிறாயா இல்லை உன் மேல் ட்ரிக் பண்ணட்டுமா என்று சிறார்கள் கேட்க,
ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகளின் பூசணிப் பையில் நிறைய மிட்டாய்களைப் போட்டு ட்ரீட் செய்கிறார்கள்!




உணவு இல்லாத பண்டிகையா?
சோள மிட்டாய் (candy corn), பூசணிப் பிரட் (pumpkin bread), பூசணி அல்வாத் துண்டு (pumpkin pie)...இன்னும் நிறைய!

தண்ணித் தொட்டியில், காசுகளை ஆப்பிளுக்குள் புதைத்து, ஆப்பிள்களை மிதக்க விடும் விளையாட்டும் உண்டு. (Bobbling for Apples)
சிறார்கள் வாயாலேயே ஒடும் (மிதக்கும்) ஆப்பிளைப் பிடிக்கும் விளையாட்டு!
மின்னசோட்டாவில் உள்ள அனோகா நகரம் தான் ஹாலோவீன் கொண்டாட்டங்களின் தலைநகரம். (என்ன குமரன்... கொண்டாடப் போனீங்களா?)சேலம் (அட நம்மூரு...?) , (அட, இது வெட்டிப்பையல் பாலாஜிக்கு பக்கத்து ஊராச்சே), கீன் (நியு ஹாம்ப்ஷையர்), மற்றும் நியுயார்க் நகரங்களிலும் பெரும் கொண்டாட்டங்கள் உண்டு!

அட... டிவியைப் போட்டாக் கூட ஒரே பேய்ப் படமால்ல இருக்கு!
மொத்த ஊரையே இப்பிடி பேய் பிடிச்சு ஆட்டினா, என்ன பண்றது?
யாராச்சும் பேய் ஒட்டறவங்க இருக்கீங்களாப்பா? :-))

ஊரே பூசணி மஞ்சளில் மூழ்கியிருக்க, என்ன நாமளும் கோவிந்தா போடலாம் வாரீகளா?
"பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தனை", கண்களே காணுங்கள்-ன்னு அப்பர் சுவாமிகள் சொல்வார்; அது மாதிரி நம்ம சிவபெருமானுடைய பூத கணங்களின் விழா-ன்னு வேணும்னா நினைச்சிக்குனு ஒரு ரவுண்டு கொண்டாடிட்டாப் போச்சு! என்ன சொல்றீங்க?

சென்னைக்கு அடுத்த முறை போகும் போது அம்மாவிடம் சொல்லி பூசணிக்கா கூட்டும், பூசணிப் பழ அல்வாவும் செய்யச் சொல்லணும்! :-)

மறக்காம அமெரிக்கப் பூசணிக்காய் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லி
....ய்ப்பா யாருப்பா அது பூசணிக்காய நடுரோட்டுல போட்டு உடைக்கிறது...அதெல்லாம் இங்க allowed இல்ல சொல்லிட்டேன்...
Trick or Treat??.........
அன்பே வா......அருகிலே....!!!

Read more »

Thursday, October 26, 2006

சென்னையிலே செந்திலாண்டவர் ஷோக்கா கீறாரா?

"தருமம் மிகு சென்னை" என்று எழுதும் போதே, அதன் செந்தமிழ் அப்படியே வந்து தென்றலாய்(?) ஒட்டிக் கொள்கிறது:-) என்ன செய்ய!

"அது சரி...அது இன்னாப்பா 'தருமம் மிகு சென்னை'?
மெட்ராஸ்-க்குள்ள அம்மாந் தருமம் கீதா? இல்லாங்காட்டி நீயா எதுனா பிகிலு வுடுறியா? மேட்டருக்கு ஸ்டெரெயிட்டா வா மாமே", என்று அங்கு செளகார்பேட்டையில் யாரோ மொழிவது, இங்கு என் காதில் தேன் வந்து பாய்கிறது!
அதனால ஸ்டெரெயிட்டா மேட்டருக்கு வருகிறேன்! இன்று கந்த சஷ்டி!! (Oct 27, 2006)

(ஒவ்வொரு அமாவாசை/பெளர்ணமி முடிந்து ஆறாவதாக வரும் நாளே சஷ்டி! வடமொழியில் சஷ்டி என்றால் ஆறாம் நம்பர்! முருகனுக்குரிய நாள்!
அப்பிடின்னா மத்த நாளுல்லாம் என்ன சும்மாவா?...பிறந்த நாள் அன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்வதால், அப்ப மற்ற நாள் எல்லாம் அழுவணுமா என்று எடக்குவாதமா செய்கிறோம்? இல்லையே! :-)
அதே போல, எல்லா நாளும் இறைவன் நாளே! ஆனால் முருகனின் பல அருட்செயல்கள், சஷ்டி அன்று நிகழ்ந்ததால் சிறப்பு!)

தீபாவளி-அமாவாசை முடிந்து ஆறாவதாக வரும் நாள், கந்த சஷ்டி!



தருமம் மிகு சென்னை-ன்னு நான் சொல்லவில்லை! 'அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெருங் கருணை' என்று சொன்னாரே வள்ளலார்!!! அவர் தான் சென்னையை இப்படிச் சிறப்பிக்கிறார்! ஏன் தெரியுமா?
அங்கு வந்து குடி கொண்டான் ஒரு மிகப் பெரும் செல்வந்தன்! அவனால் தான் சென்னைக்கு இத்தனை பெருமை!
அவனிடம் 'எனக்கு அது கொடு, இது கொடு', என்று கேட்டுக் கேட்டு வாங்குகிறார் வள்ளலார்!
வள்ளலாரா இப்படி...சேச்சே இருக்காதுப்பா.... உண்மையான துறவிப்பா அவரு!
அப்ப இன்னா நான் சொல்லறது பொய்யா?
'வேண்டும் வேண்டும்', என்று அந்த அடியவர், வேண்டி வேண்டிப் பாடுவதைப், பதிவின் இறுதியில் காணலாம். அது சரி; அந்த செல்வந்தன் யாருன்னு நினைக்கிறீங்க? சாட்சாத் நம்ம முருகப்பெருமான் தான்!!

சென்னையில் இரண்டு கோட்டம் உண்டு;
ஒன்று வள்ளுவர் கோட்டம் - முப்பால் முனிவனுக்கு!
மற்றொன்று கந்த கோட்டம் - முப்பால் மொழியை முத்தமிழாய் தந்தவனுக்கு!
சென்னை பாரிமுனையில், (ஜார்ஜ் ட்வுன், பூக்கடை ஏரியா), ராசப்ப செட்டித் தெருவில் உள்ள இக்கோவில், சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒன்று!
கந்த கோட்டம் என்று பெயர். கந்தசாமி கோயில் என்று தான் சென்னை மக்களிடையே பிரபலம்!
மிகப் பெரிய கோவில், குளம், மண்டபங்கள்; வெளியில் இருந்து பார்த்தால் கோபுரம் கூட கண்ணுக்குக் கஷ்டப்பட்டுத் தான் தெரியும். ஏன்னா இப்போ சுற்றிலும் அடுக்கு மாடிக் கடைகள், பாத்திரக் கடைகள், என்று வணிக வளாகம் போல் ஆகி விட்டது.

வடபழனிக் கோவிலுக்கும் முந்தியது. சென்னையின் முதல் கோவில்களுள் ஒன்று எனலாம்.
திருப்போரூர் வேம்புமரப் புற்றில் இருந்து மாரிச்செட்டியாரால் கொண்டு வரப்பட்ட முருகன். ஒரு கை வேலும், மறு கை அபயமும் காட்டி, வள்ளி, தேவயானையுடன் சாந்த சொரூபத் திருக்கோலம்.
ராமலிங்க வள்ளலார், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், அண்மையில் திருமுருக கிருபானந்த வாரியார் என்று பல மகான்கள் வழிபட்ட தலம் என்று சென்னை வாசிகளுக்கே அவ்வளவாகத் தெரியாது!


மூலவர்
கந்தசுவாமி (ஓவியம்)


உற்சவர்
முத்துக்குமாரசுவாமி



கந்த சஷ்டி அன்று தெருவில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது
! திருச்செந்தூர் போலவே மிக அழகாக இருக்கும்!
பத்மாசுரன், தாருகன், சிங்கமுகன், இறுதியில் சூரபத்மன் ஆகியோர் மீது, சுவாமியின் திருக்கை வேல் பாயும் கம்பீரம் காணக் கண்கோடி வேண்டும்!
"சுற்றி நில்லாதே, போ பகையே! துள்ளி வருகுது வேல்!!" என்ற பாரதியாரின் கவிதை தான் நினைவுக்கு வரும்!
பின்னர் கொலு மண்டபத்தில், பேரழகன், தமிழ்ப்பாக்களுக்கு இசைந்து ஆடும் ஊஞ்சல் உற்சவம் அழகோ அழகு!
அடுத்த முறை சென்னை சென்றால், பாரீஸ் கார்னர் ஷாப்பிங் முடித்து, அவசியம் இந்த அழகனைக் கண்டு வாருங்கள்!

திருச்செந்தூர் சூரசங்காரம்
(படங்களுக்கு நன்றி: Chennai Online)



வேண்டாம் என்று சகலமும் துறந்த வள்ளலார், கந்த கோட்டம் வாழும் கந்தனைக் கண்டதும்,
'வேண்டும் வேண்டும்', என்று வேண்டி வேண்டிப் பாடுகிறார்; இதோ!
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம்உறவு வேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்

பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்


மருவு பெண் ஆசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்

மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

(பாடலின் சுட்டி கிடைத்து விட்டது; கேட்டு மகிழுங்கள். க்ளிக் செய்த பின், புதிய விண்டோவில், ராப்சடி ப்ளேயரில் திறக்கும்)
மிகவும் எளிமையான பாடல் தான்; அதனால் பொருளாக உரைக்க வில்லை! கவிதை நயம் மட்டும் சிறிது சுவைப்போம்.
தனக்காக எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை. போனஸ் கொடு, நிலம் கொடு, பணம் கொடு, செல்வாக்கு கொடு, தேர்தலில் வெற்றி கொடு, எனக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவனுக்குத் தோல்வி கொடு, என்று எல்லாம் கேட்கவில்லை!
இந்தத் தலை நகர முருகனிடம், நற் சிந்தனைகள் தலைக்குள் நகர வேண்டிப் பாடுகிறார்.


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற அடியார்கள் உறவு = அது என்ன ஒருமை?... அப்படின்னா பன்மை-ன்னு வேற இருக்கா? ஆமாம் இருக்கு!
பல எண்ணங்களுக்குள் ஆழ்ந்து போய், கடவுள் அன்பை, பத்தோட பதினொன்னு, அத்தோட இதுவும் ஒன்னு என்றில்லாமல்,
உலக வாழ்வில் பல கடமைகள், பன்மையாக இருந்தாலும், அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதோடு நின்று விடக் கூடாது;
இறை விழைவை, ஒருமையாக , primary ஆக, மனத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
முடிகிறதோ இல்லையோ, மனத்தில் வைத்துக் கொண்டால் என்றாவது ஒரு நாள் துளிர் விடும் அல்லவா?
அப்படிப்பட்ட நல்ல இதயங்கள் உள்ளவரோடு பழகினாலே, அரைக்க அரைக்க அம்மிக்கும் வாசம் வந்து விடும். அதனால் அடியார் உறவை வேண்டுகிறார்.

உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார் உறவு கலவாமை = இது போன்ற ஆட்களை வெறுத்து ஒதுக்கச சொல்லவில்லை; ஆனால் உறவு கொண்டு, நாமும் அதில் கலந்து விடக் கூடாது என்று எச்சரிக்கிறார். அதனால் நாமும் கெட்டு, அவன் திருந்தும் வாய்ப்பையும் நாமே கெடுத்து விடுவோம்.

பெருமைபெறு நினது புகழ் பேசல் = இப்படிப் பேசிக் கொண்டு இருந்தாலே, 'வாசி வாசி' என்பது போய், 'சிவா சிவா' வந்து விடும்.
பொய்மை பேசாது இருத்தல் = பொய்யும் சொல்லிட்டு, சப்பைக்கட்டு கட்ட மேலும்மேலும் சொல்ல, வட்டி குட்டி போட்டு விடும்; அதனால் வேண்டாம் என்கிறார்.

பெருநெறி பிடித்து ஒழுகல் = அவன் நெறி (ஒழுக்கம்) பிடித்துக் கொண்ட பின், தவறவிட்டு விடக் கூடாது. அப்பறம் right from scratch என்று ஆகி விடும்.
மதமான பேய் பிடியாது இருத்தல் = இது மிக முக்கியம்; 'ஆன்மீகம்' என்ற தேவதை போய், 'மதம்' என்று பேய் பிடித்துக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் இறங்காது! மதம் பிடித்த யானை போல் ஊரையே ஒருவழி பண்ணிவிடும்.

மருவு பெண் ஆசை மறத்தல் = பெண்ணை ஆணோ, ஆணை பெண்ணோ, விட்டுவிட்டு ஓடச் சொல்லவில்லை; அதையே பிடித்து உழன்று கொண்டு இல்லாமல் (மருவு), பருவ தாகம் தீர்ந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக காமத்தை மறந்து (மன மருத்துவர்கள் கவனிக்கவும்: 'மறந்து' தான்; 'துறந்து' இல்லை), காதலை முன்னுக்குத் தள்ளச் சொல்கிறார்.

உனை என்றும் மறவாது இருத்தல் = இது தான் கொஞ்சம் கஷ்டமோ கஷ்டம்; ஆனால் முயற்சி வேண்டும்.

மதி = குதர்க்கம் பேசாத நல்லறிவு
கருணைநிதி = அய்யோ...நம்ம தமிழக முதல்வர்-ன்னு யாரும் தப்பா நினைச்சி வம்புக்கு வந்துடாதீங்கப்பா! வள்ளலார் சொல்வது இறைவனின் கருணை தான், நமக்குப் பெரிய நிதி; அதுவே கருணாநிதி! அருட்செல்வம்!! மிக அழகிய சொல் இது!
நோயற்ற வாழ்வில் வாழல் = இது துறவிக்கும் தேவையான ஒன்று! சுவர் இருந்தால் தான் சித்திரம்!!

பல தான தருமங்கள் நடக்கும் தலை நகரமாம் சென்னையில் உள்ள கந்த கோட்டத்து கந்தசாமியே!
அடியேன் இப்படி 'வேண்டும் வேண்டும்' என்று கேட்டது எல்லாம் தானமாகத் தாப்பா! எனக்கு மட்டும் இல்லை; அன்பர் எல்லார்க்கும் தா! (அவர்கள் கேட்காவிட்டாலும், அவர்கள் சார்பாக நான் தான் கேட்டு விட்டேனே!);
அன்பர் அனைவருக்கும் அருள் செய்யப்பா, ஆறுமுகத் தெய்வமணியே!!

Read more »

Saturday, October 21, 2006

அமெரிக்கப் பெருசுகள் சாப்பிட்ட தீபாவளி மைசூர்பாக்

வாங்க; அனைவருக்கும் குதூகலம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!
ஷாம்பூ குளியல் முடிஞ்சு, புது ஜீன்ஸ், மிடி எல்லாம் போட்டுக் கொண்டு, பட்டாசு எல்லாம் வெடிச்சாச்சா?
குட்டிகள் அடிக்கும் கும்மாளம், வெடிச்சத்தத்தை விடப் பெரிதாகக் கேட்கிறதா?
இந்த ஒரு பண்டிகை, நம்ம நாடு முழுமைக்கும் கொடுக்கும் சந்தோஷமே தனி தான்!

நம்ம நாடுன்னு இல்லாம, புலம் பெயர்ந்த அனைத்து இந்தியர்கள் வீட்டிலும், முடிஞ்ச வரை களை கட்டுது!
நண்பர்கள் குடும்பங்களோடு pot luck கொண்டாட்டம், தமிழ்ச் சங்க விழா இப்படி ஏதாச்சும் ஒண்ணு!
வண்ண மத்தாப்பு கூட கொளுத்தாலாம் என்றால் பாருங்களேன்!

நியூயார்க்கில் Jul 4 Independence Day போது, நடைபாதைக் கடைகளில் கம்பி மத்தாப்பு விற்பார்கள்;
அதை வாங்கி, குருவி போல (பாதுகாப்பாக) சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
தீபாவளி அன்று, வீட்டு வாசலுக்கு போய், தண்ணி பக்கெட் ஒன்றைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு,
யாருக்கும் தெரியாமல், பயந்து பயந்து, மத்தாப்பு கொளுத்தலாம்! :-))
மீண்டும் வீட்டுக்குள் வந்து, இணையத்தில் கிடைக்கும் வெடிச்சத்தத்தை,
ஹோம் தியேட்டரில் உரக்க வைத்து, ஹைய்யா...பட்டாசு வெடிச்சாச்சுன்னு ஒரு அல்ப சந்தோஷம்!

ஆனா, என்ன தான் இருந்தாலும், நம் அம்மா, அப்பா, தங்கை, தம்பி, குழந்தைகள், குடும்பம், நண்பர்கள்-ன்னு சேர்ந்து கொண்டாடுற சந்தோஷம் வருமா?
ஏதோ வேற தேசம் வந்ததனால நமக்குத் தான் இப்பிடின்னா,
நம்மூரிலேயே யாரும் இல்லாமல் தனியாகக் கொண்டாடும் சிறு குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் இருக்கத் தான் செய்கின்றனர்;

ஆதரவுக்கு ஆட்கள் இருந்தும், காலத்தின் கோலத்தாலோ நமக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்றோ, தனியே வாழும் பெற்றோர் கூட, இப்படித் தான்.
அவர்களுக்குத் தீபாவளி என்பது just any other day!
இவர்கள் முகங்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாமா?
அந்நியத் நாட்டுத் தனிமை நமக்குச் சில பாடங்களையும் சேர்த்தே தான் கற்றுத் தருகிறது!
அந்நியம் போய் அந்'நேயம்' வளர்க்கிறது மனத்தில்!!



அப்படித் தான் சென்ற ஆண்டு, ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. நாம் ஏன் முதுமையில் தனித்து வாழும் சீனியர்களைப் போய் சந்திக்கக்கூடாது?
அமெரிக்கா தான்! தீபாவளி பற்றி அம்முதியவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!!
பணம் சற்று இருந்தாலும், பாசம் காணாது வாழும் சிலரை ஏதோ கிராமத்து தாத்தா பாட்டி போல் நினைத்துக் கொள்ளலாமே!
தீபாவளி அன்று கொஞ்சம் பலூன்கள், மலர்கள், இனிப்புகள், நம் குடும்பப் படங்கள், இவற்றுடன் போய்க் கொண்டாடுவதை வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்? முயன்று தான் பார்ப்போமே!
SeniorCorps.org இதற்கு மிகவும் உதவுகிறது.

நியுயார்க், லாங்க் ஐலேண்டில் உள்ள Court Square முதியோர் இல்லம் சென்றோம்.
கம்ப்யூட்டர்/இன்டெர்நெட் பயன்படுத்தும் போது ஏற்படும் சில சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி என்று சும்மா கலந்துரையாட வருவதாகப் பேச்சு.
இல்லப் பொறுப்பாளரைச் சந்தித்து மேலும் விளக்கினோம்; மிகவும் மகிழ்ந்தார் அந்தப் பெண்மணி.

உள்ளே சென்றால், ஒரு பேரமைதி. மிகவும் சுத்தமாக இருந்தது. மொத்தம் 28 முதியவர்களாம். அதில் ஒரு குஜராத்தி தம்பதியரையும் பார்த்தோம்.
எல்லாருடனும் சென்று கைகுலுக்கி விட்டு, ரோஜாப்பூ ஒன்னு கொடுத்து விட்டு, சும்மா ஜாலியாகப் பேசிக் கொண்டு இருந்தோம்.
ஈராக், போப்பாண்டவர், ஃபுட்பால் இன்னும் என்னன்வோ உளறிக் கொட்டினேன். வாய் விட்டுச் சிரித்தோம்.
ஒரு சிலர் இமெயிலில் நிறைய படங்கள் அனுப்புவது பற்றிக் கேட்டார்கள்.
நம்ம அதிமேதாவித்தனத்தைக் காட்டிவிட்டு (:-)), அப்படியே flicker-இல் சேமிப்பது பற்றி எல்லாம் சொன்னேன். சாட்டிங், வெப்காம் பற்றியெல்லாம் பேச்சு திரும்பியது.

இந்த வயதிலும் தங்கள் துக்கத்தையும், இயலாமையும் மறைத்துக் கொண்டோ, அல்லது உதறி்விட்டோ, மிகவும் சகஜமாக இவர்களால் பேசவும் பழகவும் முடிகிறதே!
நம்மால் அலுவலகத்தில் மூட்-அவுட் ஆகாமல், இது போல் இருக்க முடியுமா? என்னையே கேட்டுக் கொண்டேன்.

தீபாவளி பற்றிச் சும்மா கொஞ்சமா எடுத்துச் சொன்னேன் அமெரிக்கப் பெருசுகளுக்கு (பெரியவர்களுக்கு!). இன்டெர்நெட் youtube-இல் கொஞ்சம் தீபாவளி பிலிம் காட்டினேன்.
நல்ல வேளை, அந்த குஜராத்தி தம்பதியர் இருந்தனர். அவர்கள் ஒரு காலத்தில் அவங்க எப்படி எல்லாம் தீபாவளி கொண்டாடுவார்கள் என்பது பற்றி எல்லாம் எல்லாருக்கும் எடுத்துச் சொன்னார்கள்.
இப்போது தனிமைப்படுத்தப்பட்டு விட்டதால், அன்று தீபாவளி என்றே தெரியாது என்று அவர்கள் சொல்லும் போது, அவர்கள் கண்களில் கண்ணீர் இல்லை. வேறு ஏதோ ஒரு....

மதியம் ஆகி விட்டது; அப்புறம் ராஜ்போக்-இல் முன்பே வாங்கிச் சென்ற மெல்லிய மைசூர்பாக், காஜூகத்லி, போளி எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டோம்.
கூடவே சாலட், பாஸ்டா, சிக்கன், சான்ட்விச் என்ற அவர்களின் வழக்கமான உணவு. போளி செம ஹிட்; பற பற எனப் பறந்தே விட்டது.
மைசூர்பாக்கை ஒரு பாட்டி கடி கடிக்க, ஐயோ என்று வேண்டிக் கொண்டேன் :-) ஆனால் மிக மிருதுவாகத் தான் இருந்தது.
எல்லாரும் ஜாலியாகக் கைகுலுக்கி விடைபெற்றோம். ஒரு பிரேசில் முதாட்டி எனக்குப் படம் ஒன்றை இமெயிலில் அனுப்புவதாகச் சொன்னார்!
'சரிப்பா, ஊருக்குப் போயி கடுதாசி போடுறேன்', என்று அந்த அம்மா சொல்வது போலத் தோன்றியது எனக்கு!

திரும்பி வீட்டுக்கு வரும் வழியில், இந்தியா கூப்பிட்டுத் தொலைபேசினேன். எல்லாரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
தங்கையின் சுட்டிப் பெண் அவள் வீர தீர சாகசங்களை மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்;
பெருமாள் சங்கு சக்கரத்தை இன்று மட்டும் தீபாவளி அதுவுமாக அவள் கையில் எடுத்துக்கொண்டு சுற்றினாளாம்; கதை சூப்பராகச் சொன்னாள்.
அம்மா வழக்கம் போல், தீபாவளி பட்சணங்களை வேலைபார்க்கும் பணியாளர்கள் வீட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு வந்தார்களாம்.
அது சரி, அவரவர், அவர்களால் முடிந்ததைச் செய்து கொண்டு இருப்பதனால் தானே உலகம் ஓடுகிறது!
தீபாவளித் திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினோம்.
மாலை கோவிலுக்குச் செல்லலாம் என்று எண்ணம். பார்ப்போம். நண்பரின் இல்லத்துக்கும் செல்ல வேண்டி உள்ளது.

இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பவே ஸ்வீட் & ஸ்பீட். நாம் கூகுள் என்றால், அவை கூகுள் வீடியோ என்று சொல்லிக் கலக்கதுங்க.
அடிப்படை நம்பிக்கைகள் மாறி வரும் உலகில், குழந்தைகளுக்குக் கூட seeing is believing; walk the talk தான். நம்மையே ஆயிரம் எதிர்க் கேள்விகள் வேறு!
பிஞ்சிலேயே சில நல்ல செயல்களைக் கண்ணிலும், மனதிலும் விதைப்பது, வளர்ந்த பின்னர் வரப்போகும் வணிக உலகில், ஒரு கொழுகொம்பாக இருக்கும் அல்லவா?
இப்பதிவையும் ஆன்மீகம் category-இலேயே பதிவு செய்கிறேன்.

எண்ணங்கள் செயல்கள் ஆனால் சிறப்பு தான்;
ஆனால் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே சிறப்பு தானே!
அந்த வரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. அதான் இதை எழுதினேன்.

மீண்டும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் குதூகலம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!
நரகாசுரனோ இல்லை நம்பாத கதையோ, எதுவாயினும்,
'அகல் தீபம்' மட்டும் அல்லாது 'அகத் தீபங்களும்' ஏற்றி வைப்போம் வாருங்கள், இந்த நன்னாளில்!
திருவேங்கடமுடையான் திருவருளால், தீபாவளி இன்னும் ஜொலிக்கட்டும்! Happy Diwali !!

Read more »

Sunday, October 15, 2006

புதிரா? புனிதமா??

தலைப்பைப் பாத்துட்டு டாக்டர் மாத்ருபூதம் அவர்கள் தொடர்புடைய ஏதோ ஒரு வலைப்பூன்னு, யாரும் வலையில் வந்து விழுந்துடாதீங்க சொல்லிட்டேன் :-)

தமிழ்மணத்தில் ஒரே புதிர் போட்டிகளும், "படம் பாத்துக் கதை சொல்" போட்டிகளுமா இருக்கே, நாமளும் ஜோதியில் ஐக்கியம் ஆகிடலாமே என்ற எண்ணத்தில்...இதோ ஒரு போட்டி!!!

துளசி டீச்சரும் கிளாசுக்கு அஞ்சு நாள்(?) வரமாட்டாங்களாம். இதான் சமயம்ன்னு நாமளே கேள்வித்தாள் செட் பண்ணி, நாமளே மார்க் போட்டுக்கலாமே! நம்ம மக்கள்ஸ் நிறைய பேரை பாஸாக்கி, டிஷ்டிங்கஷனும் போட்டுக் கொள்ள இதை விட வேறு சான்ஸ் கிடைக்குமா? :-))

இதோ கேள்விகள்; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரே சரியான விடை மட்டுமே. ஆன்மீக வினாடி வினா என்பதால், அனைவருக்கும் இலவசமாக மார்க்-பிரசாதம் உண்டு!
சரியான விடைகள் நாளை இரவு 10:00 மணிக்கு (நியுயார்க நேரப்படி) அறிவிக்கப்படும்!

அதற்குள் கலந்து பேசலாம்; பிட் அடிக்கலாம்; செல்பேசியில் SMS அனுப்பிக்கூட பதில்கள் வாங்கலாம். ஆக மொத்தம் Break the Rules!
டீச்சர் வருவதற்குள் வகுப்பைத் தலைகீழாக மாற்றக் கணேசா, நீ தான்பா அருள் புரியணும்!! :-)



1

கண்ணன் வெண்ணெய்த் திருடன் என்பது எல்லாருக்கும் தெரியும்; ஆனால் இந்தக் கோவிலில் பிள்ளையாரும் ஒரு கள்வராகவே வணங்கப்படுகிறார். எந்தத் தலம்?

1

அ) பிள்ளையார்பட்டி

ஆ)திருக்கடையூர்

இ)மதுரை

ஈ)காணிப்பாக்கம்

2

எந்தத் தலத்தில் முருகப்பெருமானுக்கு மலை மீதும் ஒரு கோவில்; மலை கீழும் ஒரு கோவில்! கீழே உள்ள கோவில் காலத்தால் மிக முந்தியது; ஆனால் இக்காலத்தில் பலர் அறிவதில்லை! போவதில்லை!!

2

அ)பழனி

ஆ)திருச்செங்கோடு

இ)திருத்தணி

ஈ)குன்றக்குடி

3

சிவபெருமான் துயில் கொண்ட நிலையில் உள்ள தலம் எது?

3

அ)சிதம்பரம்

ஆ)சீர்காழி

இ)ராமேச்வரம்

ஈ)சுருட்டப்பள்ளி

4

ஆதிசங்கரர் அன்னை பார்வதிக்குக் காதணி அளித்து அவள் கோபத்தைத் தணித்த தலம் எது?

4

அ)சமயபுரம்

ஆ)படவேடு

இ)திருவானைக்கா

ஈ)கொல்லூர் மூகாம்பிகை

5

பெருமாளும், சிவனாரும் (லிங்கமாக) ஒரே கருவறையில் காணக்கூடிய கோவில் எது?

5

அ)திருவனந்தபுரம்

ஆ)சங்கரநாராயணன் கோவில்

இ)காஞ்சிபுரம்

ஈ)கேதார்நாத்

6

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றில் மட்டும், படியேறிச் செல்லும் போது, அந்தப் 60 படிகளுக்கும், ஒவ்வொரு தமிழ் ஆண்டின் பெயர் உண்டு? எத்தலம்??

6 (இதற்கு No multiple choice)

7

விவேகானந்தர் சென்னையில் இத்தலம் சென்று வழிபட்டார்; பின்னர் அத்தலம் குறித்துக் கட்டுரையும் எழுதினார்? எந்தத் தலம்??

7

அ)மயிலாப்பூர்

ஆ)தங்கசாலை காளிகாம்பாள்

இ)திருவல்லிக்கேணி

ஈ)ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பசுவாமி ஆலயம்

8

இந்து-முஸ்லிம் நல்லிணக்கமாக, எந்தத் தலத்தில் இறைவனுக்கு “லுங்கி”யை ஆடையாக அணிவித்து, “சப்பாத்தி/ரொட்டி” நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது?

8

அ)சபரிமலை

ஆ)நாகப்பட்டினம்

இ)ராமேஸ்வரம்

ஈ)ஸ்ரீரங்கம்

9

முருகப்பெருமானுக்கு மயில் தான் பிரதான வாகனம். இருப்பினும் சில கோவில்களில் இதுவும் வாகனமாக உள்ளது? எது?

9

அ)குதிரை

ஆ)சிங்கம்

இ)யானை

ஈ)காளை

10

கடைசியாக ஒரு இலந்தைப்பழம் கேள்வி!எத்தலத்தில் இறைவன் இலந்தைப்பழ மரத்தின் கீழ் வீற்று இருக்கிறார்?

10

அ)துவாரகை

ஆ)கேதார்நாத்

இ)பத்ரிநாத்

ஈ)காசி



--------------------------------------------------------------------------------------------
இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
ஏற்கனவே பின்னூட்டமிட்ட நண்பர்கள் இந்த வசதி அவர்களுக்குத் தரப்படவில்லையேன்னு கோவிச்சிக்க வேணாம் ! :-) எங்க வீட்டு ட்யூப்லைட் (நான் தானுங்கோ) இப்ப தான் ஒளி சிந்தியது!!

(The table was removed after the results were published...)
--------------------------------------------------------------------------------------------




நியுயார்க் தமிழோசை.
உள்ளாட்சித் தேர்தல்களின் இறுதி முடிவுகள் இதோ! :-))
முடிவு நிலவரம் சீக்கிரமே தெரிந்து விட்டதால், அறிவித்த நேரத்துக்கு முன்னராகவே Publish செய்யப்படுகிறது! (4:50pm EDT)


1

கண்ணன் வெண்ணெய்த் திருடன் என்பது எல்லாருக்கும் தெரியும்; ஆனால் இந்தக் கோவிலில் பிள்ளையாரும் ஒரு கள்வராகவே வணங்கப்படுகிறார். எந்தத் தலம்?

ஆ)திருக்கடையூர்

அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன் கோவில் இது. இங்கே கணேசருக்கு கள்ள வாரணப் பிள்ளையார் (எ) சோர (சோர்) கணபதி என்கிற திருநாமம்.

பாற்கடல் கடையும் போது, விநாயகரை முதல் வணங்கி ஆரம்பிக்க தேவர், அசுரர் இருவருமே மறந்து போயினர். பல விக்கினங்கள் தோன்றின. பின்னர் வந்த அமுத கலசத்தையும், ஞான வெளியில் சிறிது நாழிகைக் காலம் , கணபதியான் மறைக்கப் பின்னர் நாரத மகரிஷியின் அறிவுரைப்படி அமரர் விநாயகனைத் துதித்தனர். கலசம் புறக்கண்களுக்குப் புலப்பட்டது! கலசத்தைக் கவர்ந்ததால் கள்ள வாரணர் ஆனார் இந்தக் கணபதி!

2

எந்தத் தலத்தில் முருகப்பெருமானுக்கு மலை மீதும் ஒரு கோவில்; மலை கீழும் ஒரு கோவில்! கீழே உள்ள கோவில் காலத்தால் மிக முந்தியது; ஆனால் இக்காலத்தில் பலர் அறிவதில்லை! போவதில்லை!!

அ)பழனி

கீழே உள்ள ஆலயமே திருவாவினன்குடி என்று போற்றப்பெறும் மூன்றாம் படைவீடு. நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் இதே தலத்தைத் தான் குறிக்கிறார்.

3

சிவபெருமான் துயில் கொண்ட நிலையில் உள்ள தலம் எது?

ஈ)சுருட்டப்பள்ளி

சென்னை-திருப்பதி செல்லும் வழியில் புத்தூர் அருகில் உள்ளது. ஆலகாலம் உண்ட பின் அண்ணல் அசதியால், சிறிது நேரம் அன்னை உமையவள் மடியில் தலை வைத்து உறங்குகிறான். இக்காட்சி அப்படியே சிலை வடிவில் உள்ள தலம். (மறைந்த)காஞ்சி பரமாச்சாரியார் மிகவும் உகந்த தலங்களில் ஒன்று.

4

ஆதிசங்கரர் அன்னை பார்வதிக்குக் காதணி அளித்து அவள் கோபத்தைத் தணித்த தலம் எது?

இ)திருவானைக்கா

அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமம் . இவள் முன்னொரு காலத்தில், காபாலிகள் உபாசனையால், மிகவும் உக்கிரமாக இருக்க, மக்கள் அருகில் செல்லவே அஞ்சினர். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரங்களுடன் கூடிய தாடங்கம் என்ற காதணியைச் செய்வித்து, அன்னைக்கு அணிவிக்க அவள் சினம் தணிந்தது. அன்னையின் அருகில் அவள் இரு மகன்களையும் பிரதிட்டை செய்து, என்றும் சாந்த சொருபீயாக இருக்க வழிவகை செய்தார்.

5

பெருமாளும், சிவனாரும் (லிங்கமாக) ஒரே கருவறையில் காணக்கூடிய கோவில் எது?

அ)திருவனந்தபுரம்

மூவாசல் படிகளில் பத்மநாப சுவாமி தரிசனம். சுவாமி கிடந்த கோலத்தில், தன் வலக்கரத்தை சிவலிங்கம் மீது வைத்து அணைத்தவாறு சயனித்துள்ளார்.

ஆ)சங்கரநாராயணன் கோவில் - பலர் இந்த விடை தநதுள்ளார்கள். இந்த option சற்று குழப்பவே தரப்பட்டு இருந்தது! சங்கரநாராயணன் கோவிலில் சிவவிஷ்ணு ரூபமாய் பாதி சிவன், பாதி விஷ்ணுவாக இருப்பார் மூலவர். ஆனால் லிங்க ரூபமாக ஒரே கருவறையில் இருப்பது காண்பதற்கு அரியது!

காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நிலாத் திங்கள் துண்டம் சந்நிதி பெருமாளுக்கு உண்டு; ஆனால் ஒரே கருவறையில் இல்லை!!

6

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றில் மட்டும், படியேறிச் செல்லும் போது, அந்தப் 60 படிகளுக்கும், ஒவ்வொரு தமிழ் ஆண்டின் பெயர் உண்டு? எத்தலம்??

6 (இதற்கு No multiple choice) - சுவாமி மலை (திருவேரகம்)

மிகச் சரியான் விடை; பலர் தந்துள்ளனர். கொள்ளை அழகு சுவாமி நாத சுவாமி!

7

விவேகானந்தர் சென்னையில் இத்தலம் சென்று வழிபட்டார்; பின்னர் அத்தலம் குறித்துக் கட்டுரையும் எழுதினார்? எந்தத் தலம்??

இ)திருவல்லிக்கேணி

ஆழ்வார்கள் பரவிப் போற்றிய அல்லிக்கேணி; சுவாமி விவேகானந்தர் வருகை குறித்த கல்வெட்டும் கோவில் கோபுர வாயிலில் உள்ளது. கோவிலுக்கு சற்று தள்ளி கடற்கறைச் சாலையில் விவேகானந்தர் இல்லம் என்ற அவர் தங்கிய இடமும் உள்ளது!

8

இந்து-முஸ்லிம் நல்லிணக்கமாக, எந்தத் தலத்தில் இறைவனுக்கு “லுங்கி”யை ஆடையாக அணிவித்து, “சப்பாத்தி/ரொட்டி” நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது?

ஈ)ஸ்ரீரங்கம்

துலுக்கா நாச்சியார் (தில்லி பாதுஷாவின் மகள்) அரங்கனைக் கண்ட பின்னர், அவன் திருக்கண் அழகில் மயங்கி, மூர்ச்சையுற்று, பின்னர் அவன் திருவடி சேர்ந்தாள்! கண்ட மாத்திரத்தில் காதலாகி, கண்ணீர் மல்கி அவன் அடி சேர்ந்ததால் அவள் நினைவாகவே இந்த ஆடையும், நிவேதனமும்.

9

முருகப்பெருமானுக்கு மயில் தான் பிரதான வாகனம். இருப்பினும் சில கோவில்களில் இதுவும் வாகனமாக உள்ளது? எது?

இ)யானை

சுவாமிமலையில் காணலாம்! சில ஆலயங்களில், ஆடு (கிடா) அவனுக்கு ஒரு வாகனம். இராமநாதன் பின்னூட்டத்தில் இருந்து இதோ:

//இப்போதான் வாரியாரோட கந்தபுராண தத்துவம் போட்டேன். எதேச்சையா யானை, ஆடும் கூட வாகனமாகும்னுட்டு சொன்னாரு. மயில், யானை, ஆடு - ஆணவம், கண்மம், மாயை என மும்மலங்களை குறிக்கிறதாம்//

10

கடைசியாக ஒரு இலந்தைப்பழம் கேள்வி!எத்தலத்தில் இறைவன் இலந்தைப்பழ மரத்தின் கீழ் வீற்று இருக்கிறார்?

இ)பத்ரிநாத்

வதரி, பத்ரி என்பது வடமொழியில் இலந்தைப்பழத்தைக் குறிக்கும். கண்ணுக்குப் புலப்படாத இம்மரத்தில் ம்காலக்ஷ்மி வாசம் செய்து யோகத்தில் இருக்கும் பத்ரிநாராயணனைக் காப்பதாக ஐதீகம்.




திராச ஐயா ஏகோபித்த வாக்குகள் பெற்று வெற்றி பெற்று உள்ளார்!
(all but one)
அவருக்கு வெகு அருகில்,
குமரன், ஜெயஸ்ரீ
(all but two)
இவர்களுக்கு மிக அருகில்
இராமநாதன்!
(all but three)
ஹும்...வெற்றிக் கனி பெற்றவர்க்கு என்ன பரிசு தரலாம் என்பதை டீச்சர் முடிவு செய்து, அவரே பரிசையும் வழங்கி விடுவதாக இசைந்துள்ளார்
.......
என்று கனவு கண்டேன் :-)

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நம்ம மக்கள்ஸ் நிறைய பேரை பாஸாக்கி, டிஷ்டிங்கஷனும் போட்டுக் கொண்டோம்!
எல்லாப் புகழும் டீச்சருக்கே!!



Read more »

Thursday, October 12, 2006

பாகம்2 - கடப்பாரையால் இறைவன் வாங்கிய இடி

(முன்குறிப்பு: இப்பதிவின் முதல் பாகம் இங்கே! இது இறுதிப் பாகம்.)

உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!!

அழகாக உடுத்திக்கொண்டு, நகைகள் பூண்டு, ஒரு நடுவயதுப் பாலகனாய், அனந்தனின் மனைவியார் முன் தோன்றினான்.
"அம்மா, இவ்வளவு சிரமப் படுறீங்களே; விலகுங்க நான் உதவி செய்யறேன்; உங்க புருஷனுக்கு மனசாட்சியே இல்லியா? உங்கள இப்படி வேல வாங்குறாரே!"
அய்யோ, அவர் வேணாம்ன்னு தான் சொன்னாரு. நான் தான் தனி ஒரு ஆளா கிடந்து கஷ்டப்படுறாரேன்னு, அவர் திருப்பணியிலும் துணை செய்கிறேன்.
"சரிம்மா, மண்கூடைய இப்பிடி கொடுங்க; நான் கொட்டிட்டு வர்றேன். நீங்க அப்பிடி போய் மர நிழலில் உக்காருங்க.."
கூடையை வாங்கின கூடாரை வெல்லும் கோவிந்தன், தன் வேலையைக் காட்டினான்.

மண்ணை நேராகக் கொண்டு போய் அனந்தன் வெட்டும் பள்ளத்திலேயே, அதன் மறுபக்கத்தில் கொட்டினான். அனந்தனும் இதை கவனிக்க வில்லை!
வெறும் கூடையைக் கொண்டு போய் அவளிடம் கொடுத்து, "போங்கம்மா, போய் எடுத்து வந்து தாங்க. கொட்டிட்டு வர்றேன். நானே போய் எடுத்துக் கொள்வேன்; ஆனா உங்க புருஷனைப் பாத்தா கொஞ்சம் பயமாயிருக்கு. பெருமாள் பக்தர் மாதிரி தெரியாறாரு. அவங்க கிட்டே எல்லாம் நான் வம்பே வச்சிக்க மாட்டேன்!" என்றான் கபடன்!

அவளும் விவரம் அறியாது, சிரித்துக் கொண்டே செல்ல, இதுவே வாடிக்கையானது.
சிறிது நேரத்தில் அனந்தன் கண்டு பிடித்து விட்டார். மெல்லச் செய்யும் மனைவி இன்று இவ்வளவு வேகமாகச் செய்கிறாளே என்று திரும்பிப் பார்க்க, அய்யோ அவருக்கு அழுகையே வந்து விட்டது! பாடுபட்டு வெட்டும் கேணியிலேயே மீண்டும் மண் அள்ளிப் போட்டால், சும்மாவா? நமக்கெல்லாம் கோபம் வரும்; எரிந்து விழுவோம்! ஆனால் இராமானுசரின் அடியவர் ஆயிற்றே! கண்கள் சிவப்பதற்குப் பதிலாகப், பனித்தன!

"ஏம்மா, ஏன் இப்படி செய்தாய்? பேறுகாலக் குழப்பமா? யாராவது வெட்டின இடத்திலேயே மீண்டும் கொட்டுவாங்களா? எவ்வளவு உழைப்பு வீணாப் போச்சு! சரி நானே பார்த்துக் கொள்கிறேன். நீ போ!"
அய்யோ இல்லீங்க, அந்தப் பையன் தான் உதவி செய்யறேன்னு...என்று முழுதும் சொல்லி முடிக்க....பாலகனும் முன்னே வந்து நின்றான்!
"அப்பா, உன்னைப் பாத்தாலே தெரியுது, தங்கச் செம்பில் மண் வைத்து விளையாடுபவன் நீ. அந்த வேங்கடவன் போல! இந்த மாதிரி வேலை எல்லாம், உழைக்கும் இராமானுசரின் அடியார் கூட்டம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! நீ சென்று வாப்பா"


அனந்தாழ்வான்



அனந்தனும்,
ஆசார்யர் இராமானுசரும்

..அய்யோ எனக்கு வெட்டும் இடம் எதுன்னு சரியா தெரியாதுங்க. இனிமே ஒழுங்கா செய்யறேன் சாமி!
அனந்தனும் சரியெனச் சொல்ல, "மிகச் சரியாக" மீண்டும் அதே இடத்திலேயே வந்து மண்ணைக் கொட்டினான் பாலகன். அவ்வளவு தான்! வந்ததே கோபம் அனந்தனுக்கு! கையில் கடப்பாரையுடன் பையனைத் துரத்தி ஓட, நம் கண்ணனுக்கு ஓடி ஓளியக் கற்றுத் தர வேண்டுமா என்ன?

"சரி பையன் இனி வர மாட்டான், நாம் திரும்பி விடுவோம்", என்று எண்ணிய அனந்தன் காலில் கல் தடுக்கி கீழே வீழ,
பாலகன் என்ன ஏது என்று திரும்பிப் பார்க்க,
விழும் அனந்தன் கையில் இருந்த கடப்பாரை எகிறி, பையன் முகத்தைப் பதம் பார்க்க,
எல்லாம் கணப்பொழுதில் நடந்து விட்டது!
பாலகன் முகவாய்க் கட்டையில் சரியான அடி, வீக்கம், இரத்தம்.
ஓடியே போய்க் கோவிலுக்குள்ளே மறைந்தான் சிறுவன்.
அலைமகளும், மண்மகளும் பதறி விட்டனர்!
ஆனால் நாடகம் இன்னும் முடியவில்லையே!
சிரித்தான் கள்ளச்சிரிப்பழகன்!!
அனந்தன் மிகவும் பயந்து போய் விட்டார். நேராகக் கோவிலுக்குள் ஓடினார்.

அதற்குள் கோவிலில் இருந்து பதறியடித்து அர்ச்சகர் வெளியே ஓடி வர, என்ன ஏது என்று சிறு கூட்டமும் சேர்ந்து விட்டது. "ஐயோ, பெருமாள் முகத்தில், மோவாயில் இருந்து இரத்தம் வழிகிறது" என்பதே எங்கும் பேச்சு! திருமலை நம்பிகளைக் கூட்டி வர ஆள் அனுப்பினார்கள். காலையில் நடை சாத்தும் போது கூட நன்றாகத் தானே இருந்தது! இதுவரை இப்படி ஒன்று நடந்ததே இல்லையே என்று, இயலாமையால் அர்ச்சகர் அரற்றினார்! அனந்தனுக்கு இதயமே வெடித்து விட்டது.

"என்ன காரியம் செய்து விட்டோம். பையனின் விளையாட்டு விபரீதமாகப் போயிற்றே! அறியாது செய்தது தான் என்றாலும் அரியை அல்லவா துன்புறுத்தி விட்டேன்!
மலர்ப்பணி செய்யச் சொன்னால், மாப்பிணி அல்லவா உண்டாக்கி விட்டோம்; எப்படி விழிப்பேன் என் இராமானுசர் முகத்தில்!" என்று கண்ணீர் மல்கினார். குழந்தைக்கு அடிபட்டதால், மாலை வீடு வரும் கணவன் என்ன சொல்வாரோ என்று அஞ்சும் சாதாரணத் தாயின் நிலைமை போல் இருந்தது! கூட்டத்தின் முன்னிலையில், நடந்ததை எல்லாம் சொல்லி அழுதார்கள் கணவனும் மனைவியும்!

"என்ன தான் பக்தியும் ஞானமும் இருந்தாலும், ஹூம், இறைவன் நேரே வந்து நின்ற பின்னர் கூட, அறிய முடியாத பாவியாகிப் போனேனே!
இது தான் என் பக்தியின் லட்சணம்", என்று நொந்து கொண்டார்.
திடீரென்று என்ன தோன்றிற்றோ தெரியவில்லை,

"அய்யோ இறைவனுக்கு வலிக்குமே" என்ற எண்ணம் பளிச்!
உடனே ஓடினார். பச்சைக் கர்ப்பூரம் பொடிசெய்து, மருதஇலை, மகரந்தப்பொடி, துளசிச்சாறு விட்டுப் பிசைந்து, உருண்டையாக்கி அர்ச்சகரிடம் கொடுத்தார்.
"ஐயா, சுவாமிக்கு வலிக்குமே, இதை அடிபட்ட இடத்தில் பூசுங்கள்", என்று சொல்ல, வெறும் கல்லா அவன்? நம் கண்ணுக்குள் நிற்கும் கண்ணன் அல்லவா!!!

பொடியைப் பூசவும் இரத்தம் நிற்கவும் சரியாக இருந்தது!
அடியார் கூட்டம் வாயடைத்து நிற்க, அர்ச்சகர் மேல் சுவாமி அரூபமாகச் சொன்னதை, அத்தனை பேரும் காதாரக் கேட்டார்கள்!
"வருந்த வேண்டாம் அனந்தான் பிள்ளாய்! உன் உள்மனதை இன்று ஊர் அறிந்தது!
எப்படி எம் மார்பில் ஸ்ரீமகாலக்ஷ்மியின் அம்சமாய், ஸ்ரீவத்சம் என்ற மச்சம் (திருமறு) உள்ளதோ, அதேபோல்,
இனி என் மோவாயிலும் இந்தப் பச்சைக் கர்ப்பூரப் பொட்டு அனுதினமும் சார்த்தப்படும்!!
என்னைத் தரிசிப்பவர் எல்லார்க்கும், என் மார்பில்,
அலைமகள் அடையாளம் தெரிவது போல், மோவாயில்
அடியவர் அடையாளமும் தெரிவதாக
!!" என்று அருளினான் நம் அண்ணல்!!

மோவாயில் பொட்டழகன்

இன்றளவும் இந்தப் பச்சைக்கர்ப்பூரப் பொடியை இறைவன் மோவாயில் சார்த்துகிறார்கள்!
பக்தன் கொடுத்த அடியை அவமானமாக மறைக்கத் தோன்றாது, பெருமையுடன் வெளிக்காட்டிக் கொண்டு நிற்கிறான் வேங்கடவன்!!
திருமுகத்தில் உள்ள இந்த வடுக்கு "தயா சிந்து" என்பது பெயர்!
இந்தத் "தாயினும் சாலப் பரிந்து", 'தயை சிந்தும்' உள்ளம் வேறு யாருக்கு வரும்???

பின்னர், நந்தவனமும், கேணியும் அனந்தன் முயற்சியால் அழகாக அமைந்தது. மலர்கள் எல்லாம் மனங்களைப் போல் பூத்துக் குலுங்கின!
துளசியோடு, மல்லிகை, முல்லை, மாலதி என்னும் குடமல்லி, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரி, செந்தாமரை, தவனம், மரு, மகிழம், செண்பகம் எனப் பலப்பல மலர்கள்.
அதுவும் முதலில் பூத்த மகிழச் செடியின் மேல் தனி பாசம் நம் அனந்தனுக்கு!
இன்றும் உற்சவர் மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தில்(அதாங்க, காட்டுல கூட்டாஞ்சோறு:-)), இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்! அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதை தரப்படுகிறது!


அந்த மகிழ மரம்


இவர் அனந்த நாகத்தின் அம்சம் (ஆதி சேஷன் என்றும் சொல்லுவார்கள்). ஒருமுறை தோட்டத்தில் பாம்பு தீண்டியும், "நாகத்தையே நாகம் தீண்டுமா" என்று தன் வேலையுண்டு தான் உண்டு என்று இருந்துவிட்டார்!
மலர் மொட்டுகள் மலர்ந்து, வண்டுகளின் எச்சில் படுவதற்கு முன்பே பறித்து விடுவார்; மாலைகள் கட்டி, திருவேங்கடமுடையானுக்கு மலர்ப்பணி செய்து வந்தார்.

தமிழில், "ஏய்ந்தபெருங் கீர்த்தி" என்ற திருவாய்மொழி தனியன் பாடல், "திருமலைக் கோவில் ஒழுகு விதிகள்" (code of conduct) மற்றும் வடமொழியில் "திருவேங்கடமலை வரலாறு" போன்ற நூல்களும் எழுதினார்!

பின்னர், பலகாலம் திருமலையை விட்டு நீங்காது, நகரப் பணிகளையும் செய்து, தன் குருவான இராமானுசருக்குப் பின், இறைவன் திருவடி நீழலை அடைந்தார் அனந்தன்!

இன்று திருமலையில் உள்ள இவ்வளவு உற்சவச் சிறப்புக்கெல்லாம் ஆதி காரணம் இந்த அடியவர், அனந்தாழ்வார் தான், என்றால் அது மிகையே இல்லை!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!
(அடுத்த பதிவில், அடியார்: பெரிய திருமலை நம்பிகள்;
படங்களுக்கு நன்றி: இராமானுச தாசர்கள் குழு, Tirumala.org, Thanjavurpaintings.com)



ஆர்வம் உள்ளோர்க்கு மேலும் சில தகவல்:

இப்பவும் திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், 'அந்தக்' கடப்பாரையைக் காணலாம்!

அனந்தன் பூத்தொடுத்த இடத்திற்கு யமுனைத்துறை என்று பெயர். இன்றும், அவன் திருமேனியில் சார்த்தப்படும் மாலைகள் இங்கு தான் தொடுக்கப்படும்; தரிசனம் முடிந்து, உண்டியல் செலுத்தி, பின் நரசிம்மர் சந்நிதியைச் சுற்றி வரும் போது இம்மண்டபத்தைக் காணலாம். காலை (அ) மாலை என்றால் மாலை தொடுப்பதையும் நேரே காணலாம்.


திருமலையில், இறைவன் அணிந்த மலர்கள்,மாலைகள், பிரசாதமாக யாருக்கும் தரப்படுவது கிடையாது! அனைத்தும் பூங்கிணறு (தெலுங்கில்:பூல பாவி) என்னும் கிணற்றில் போட்டு விடுவார்கள்! இக்கிணற்றுக்குள் மண்மகள் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

இலவச பிரசாதம், தொன்னையில் வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது இந்தக் கிணற்றைக் காணலாம்! சில சமயம், மேலே பூமாலைகள் வழிந்தும் கிடக்கும்!

அடுத்த முறை திருமலை யாத்திரையில் இவற்றை மறக்காமல் கண்டு,களித்து வாங்க!

Read more »

Friday, October 06, 2006

இறைவன் வாங்கிய அடி/இடி - பாகம் 1

மோவாய்க் கட்டையில் ஒரு பெரிய வெள்ளைப் பொட்டு. எங்கனாச்சும் பாத்தா மாதிரி இருக்குதுங்களா? ஒரு கடவுளின் திருவுருவச் சிலையில் தான்!
யாருன்னு தெரியுதுங்களா?
ஏன் அந்தப் பொட்டு? சும்மா இல்லை! அடிபட்டதற்கு மருந்து! என்னது அடியா?
ஏன் என்ன ஆச்சு, பாக்கலாம் வாரீகளா?

நடந்தாய் வாழி காவேரி!
ஒரே ஆறாக ஓடி வரும் காவேரி, அரங்கத்துக்குச் சற்று முன்னால் இரண்டாகப் பிரிகிறாள்!
அரங்கத்தைத் தாண்டிய பின் மீண்டும் சேர்ந்து ஒரே ஆறாக ஓட்டம்!
தாம் ஓடும் வழியில் அரங்கன் துயில்கிறானே!
அவனுக்கு மாலையாகப் பிரிந்து, நீர் மாலை சூட்டி, பின்னர் மீண்டும் சேர்ந்தாளோ? கங்கையிற் புனிதமாய காவிரி ஆனாளோ!

ஆறிரண்டும் காவேரி...
அழகான தென்னைமரம்!
அழகான மரம் நடுவில், அமைதியாய் ஒரு குடிசை. குடிசைக்குள், சுமார் ஒரு ஐம்பது பேர் உள்ளேயும், வெளியேயும் அமர்ந்து தங்கள் மெய்மறந்து இருந்தனர்.
தீவெட்டி வெளிச்சமும், புகையும் மணமும் அப்படியே அந்தச் சூழலில் கலந்து ஒரு வித ஜொலிப்பை ஏற்படுத்தி இருந்தது!
அத்தனை பேருக்கும் நடுவில் ஒரு வயதான மனிதர். வசீகரமான குரல். கருணை பொழியும் கண்கள்!!

தம் சீடர்கள் அனைவரையும் வரச் சொல்லியிருந்தார். கூடவே அன்று தீவெட்டி பிடிப்போரும், அவர் தம் குடும்பத்தினரும் சிறப்பு விருந்தினர்கள். இது அவர் அன்றாட வழக்கம் தான். ஒவ்வொரு சொற்பொழிவுக்கும், சமூகத்தின் கடைநிலையில் உள்ளவராகக் கருதப்படும் ஒரு பிரிவினரை அழைத்து, அவர்களைத் திருக்குலத்தார் எனச் சிறப்பிப்பார். அவர்களின் தொண்டினைப் பாராட்டிப், பிரசாதங்கள் அளித்துப் பின்னர் தான், தம் உரையைத் தொடங்குவது அவர் வழக்கம்.

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்தமில் புகழ்க் கார்எழில் அண்ணலே
"

என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாட, கூட்டம் அப்படியே சொக்கிப் போய் இருந்தது!
திருவாய்மொழி சொற்பொழிவு அல்லவா?
"என் தந்தை, தந்தைக்கும் தந்தை, முப்பாட்டன், முப்பாட்டனுக்கும் பாட்டன் என்று எல்லாரும் தரிசித்தவனே! அவ்வளவு மூத்தோனே! அழகிய இளையோனே! வானவர்கள், தங்கள் தலைவனோடு வந்து உன்னைத் தரிசிக்கிறார்கள். எங்கும் பூக்கள் சிந்தி, உன் இல்லம் எல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்தப் பூ மணத்தில் மகிழும் இறைவா..." என்று சொல்லிக் கொண்டே சென்றவர், அப்படியே நிறுத்தி விட்டார்! கண்களில் கண்ணீர் தாரை தாரையாக!!

எல்லோருக்கும் அதிர்ச்சி; ஏன் இந்த இராமானுசர் திடீர் என்று அழுகிறார்? ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்! ஒரு சிறுவன் ஓடி வந்து, "தாத்தா, அழுவாதீங்க, இந்தாங்க", என்று தன் முண்டாசைக் கொடுக்கிறான். அவரும் சற்றே ஆறி மேலும் தொடர்கிறார்.

"பாத்தீங்களா இந்தப் பாசுரத்தை. "சிந்துபூ" என்று பூக்கள் குலுங்குவதாகச் சொல்கிறது. எப்போதும் கும்மென்று வாசம் வீசும் மலர்கள் அவன் அணிவதாகச் சொல்கிறார் நம்மாழ்வார்! ஆனால் இன்றைய உண்மை நிலை என்ன தெரியுமா?
ஒரு பூமாலைக்கே வழியின்றி இருக்கிறான் அவன்! ஏதோ காட்டுச் செடிகள் படர்ந்துள்ளன. அவனுக்கா இந்த நிலை? சென்ற முறை நான் சென்ற போது, பார்த்து விட்டு மிகவும் வருந்தினேன்! அடியவரும், என் தாய்மாமனும் ஆன பெரிய திருமலை நம்பிகளை அங்கேயே விட்டு விட்டு வந்தேன். அவரும் வயதானவர்...பாவம் தன்னால் முடிந்த தண்ணீர் கைங்கர்யத்தை அவர் செய்து கொண்டு தான் இருக்கிறார்."
(குறிப்பு: இராமானுசருக்கு இராமாயண பாடம் சொல்லிக் கொடுத்த குருவானவர் திருமலை நம்பிகள்; இருப்பினும் இராமானுசர் இப்போது வைணவ தர்மத்துக்குத் தலைமை வகிப்பதால், ஏனையோர் அனைவரும் தொண்டர்களாகக், கருதப்படுகின்றனர்.)


"என் மனதில் ஒன்று ஓடுகிறது. பேசாமல், திருமலையில் ஒரு குளம் வெட்டி, நந்தவனம் அமைத்து, மலர்களைத் தொடுத்து, அவனுக்கு பூப்பணி (புஷ்ப கைங்கர்யம்) செய்தால் என்ன?

பாம்பணி இறைவனுக்குப் பூப்பணி செய்ய இங்கு உள்ள யாரேனும் முன் வருகிறீர்களா?"

அவ்வளவு தான்; ஒரே நிசப்தம்!
ஒரு சிலருக்கு இராமானுசரைப் பிரிய வேணுமே என்று ஏக்கம். அரங்கனைப் பிரிவதா என்ற துக்கம்.
பல பேருக்கு திருமலைக் குளிர் என்றாலே பயம்.
இன்னும் சிலர் மடத்தில் கிடைக்கும் உணவு மற்றும் இதர வசதிகள் இன்றித் திருமலையில் தனியாக வாழணுமா என்ற தயக்கம்.
ஒருவரும் முன் வரவில்லை.
உடையவருக்கே (இராமானுசர்) வருத்தமாகப் போய் விட்டது. யாரையும் வற்புறுத்திக் கடனே என்று தொண்டு செய்யுமாறு சொல்ல அவர் மனம் இசையவில்லை!

"நானும் என் மனைவியும் செல்கிறோம் சுவாமி!"
ஆ...யார் அது...பின் பக்கத்தில் இருந்து குரல் வருகிறதே! ஓ சில மாதங்களுக்கு முன்பு தான் வந்து சேர்ந்தான் ஒரு அடியவன்! அவன் தான்!
"உன் பேர் என்னப்பா?"
அனந்தாழ்வான்
"உன் மனைவி கர்ப்பவதி ஆயிற்றே"
கவலை வேண்டாம் சுவாமி; நான் பார்த்துக் கொள்கிறேன்.
"ரொம்பவும் குளிருமே"
பாசுரங்களின் கதகதப்பு போதும் சுவாமி.
"ஆகா நீர் அல்லவோ ஆண் பிள்ளை. பயண ஏற்பாடுகளைச் செய். மனைவியை மலை ஏற விடாதே; டவாலிகள் உதவியுடன் தூக்கிச் செல்"
இன்றே கிளம்புகிறேன் சுவாமி. குருவின் ஆணையே பெரிது!

அவன் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் இராமானுசர். பின்னர் சீடர்களைச் சிரித்தபடியே பார்க்க, அனைவரும் தலை குனிந்தனர்! அவருக்குத் தெரியும், "திருமலையில் இனி எல்லாம் சுகமே"!

சொன்ன வண்ணம் செய்தான் அந்தச் சீடன். மலை மேல் மனைவியுடன் சென்று வராகரை வழிபட்டான்.
பின்பு நெட்டழகன, நீல மேனியால் நிறை கொள்ளும் நிவாசனைத் தரிசித்தான்.
குரு சொன்னதை விடக் கொடுமையாக இருந்தது! ஒரே சிறிய விளக்கு; ஆழ்ந்து நோக்கினால், அலங்காரங்கள் ஏதுமின்றி, ஒற்றைத் துணி உடுத்தி, ஓங்கி நின்று கொண்டிருந்தான் செல்வத்தின் நாயகன்!
கண்களில் நீர் வழிய அன்றே பணிகளை ஆரம்பிக்க உறுதி பூண்டார்கள் இருவரும். பெரிய திருமலை நம்பிகள் தன் தள்ளாத வயதில், தன் வீட்டிலேயே இடம் கொடுக்க, அவர்களும் அங்கேயே தங்கினர்!

பூங்காவுக்கு இடம் பார்த்தாயிற்று! பலி தேவதைகளையும் எல்லைக்காவல் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாயிற்று! பூங்காவிற்கு நீர் வேண்டுமே! அருகிலேயே கேணி ஒன்று தோண்ட முடிவாயிற்று! நம் அனந்தன் தோண்டத் தோண்ட, அவன் மனைவி, அவளால் முடிந்த வரை மணலை அள்ளிக் கொட்ட முடிவு செய்தனர். அனந்தன் தானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். ஆனால் அவள் தான் ஜாடிக்கேத்த மூடியாயிற்றே!
நல்ல கணவன், நல்ல மனைவி!

கர்ப்பவதிக்கு மூச்சு வாங்குகிறது. திருமலை வாசனுக்கே பொறுக்கவில்லை. அவளுக்கு உதவி செய்ய வேடம் போட்டு வந்தான் வேதன்.
ஐயாவிற்குத் தான் எப்போதும் பக்தர்களிடம் விளையாடுவதே பொழுது போக்கு ஆயிற்றே!
அதை இங்குக் காட்டலாம் என்று நினைத்தான் போலும்! அவனுக்குத் தெரியாது, நம் அனந்தனுக்குக் குரு பக்திக்குப் பிறகு தான் மறு பக்தி என்று!

உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!!

Read more »

Tuesday, October 03, 2006

திருமலை விழா 9 - சக்ர நீராட்டம் - சுபம்

ஒன்பதாம் நாள் (விழா நிறைவு)

சக்ர நீராட்டம் (சக்ர ஸ்நானம்)

தீர்த்தம் -ன்னா என்னப்பா? இந்த கேள்விக்குப் பலர், பலவிதமாய் பதில் சொல்லுவார்கள்! :-) ஆனா நாம அங்கெல்லாம் போகப் போறது இல்லை :-))
அனைத்து ஆலயங்களிலும், விழா நிறைவுறும் போது, தீர்த்தவாரி என்ற ஒன்று நடைபெறுவது உண்டு. கேரளத்தில் அய்யப்பனுக்கு ஆறாட்டு என்று வழங்குவார்கள். பல ஊர்களில் பல விதமாய் வழங்கி வருகிறது! நீர் நிலைகள் பற்றி நண்பர் ஜிரா ஒரு பதிவு இட்டிருந்தார். நீர் இன்றி அமையாது உலகு என்பதை நன்கு உணர்ந்தவர்கள், நம் முன்னோர்கள். அதனால் தான் புனிதத் தலங்களில் தீர்த்தமாடுவதை, யாத்திரை விதியாக விதித்து இருந்தார்கள்.

என்ன தான் வீட்டுக்குள் முங்கி முங்கிக் குளித்தாலும், நம்ம ஊர் பம்ப்செட்டில் பாஞ்சி பாஞ்சிக் குளிப்பது போல் வருமா?
"குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்?" என்று ஆண்டாளும் கேட்கிறாள் பாருங்கள்!
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் மிகச் சிறப்பு உடையது திருமலை.
இறைவனே கல்லாய்ச் சமைந்தான் = மூர்த்தி
ஆதிசேஷனே மலையாய் ஆனது = தலம்
வைகுண்டத்தில் பாயும் விரஜை நதியே கோனேரியாய் ஆனது = தீர்த்தம்






திருமலையில் பல தீர்த்தங்கள் உள்ளன. சிறிது தான் நாம் அறிந்தவை. மலைக்குள் இன்னும் பல இடங்களில் பலப்பல நீர் ஆதாரங்கள்!
கோனேரி (சுவாமி புஷ்கரிணி), ஆகாச கங்கை, பாப விநாசம், கபில தீர்த்தம், குமார தாரை, பொற்கிணறு, பூங்கிணறு இன்னும் பல!
இன்று தீர்த்தவாரியின் போது, எல்லா தீர்த்தங்களும், கோனேரியில் வந்து கலப்பதாக ஐதீகம். அதனால் இது முக்கோடி தீர்த்த நாள் என்ற பெயர் பெற்றது.

காலையில் சுவாமிக்கு, எண்ணெய்க் காப்பு செய்து (Birthday அல்லவா? தலைக் குளியல் வேண்டுமே! சுவாமி சின்னக் குழந்தையாட்டம் அடம் பிடித்தால் கூட விடுவோமா?)
சூரணம் என்னும் பொடியைத் தலையில் பூசுகிறார்கள். இதற்கு சூர்ணாபிசேகம் என்று பெயர். பின்னர் சுவாமியையும் தேவியரையும், பல்லக்கில் வைத்து, குளக்கரையில் உள்ள வராகப் பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணுகிறார்கள். கூடவே சக்கரத்தாழ்வாரும்!

விழாவில் நடக்கும் குற்றம் குறைகளைக் கண்காணிப்பவர் சக்கரத்தாழ்வார். பெருமாளின் முதற் படைக்கருவி! எவ்வளவு பெரிய நிறுவனமோ, அரசாங்கமோ ஆனாலும் தணிக்கை (audit) வேண்டுமல்லவா?
திருமகள் மார்பனுக்கு இயல்பாகவே இரக்க குணம். போதாக்குறைக்கு, தயையே உருவான தேவியர். அப்ப யார் தான் கண்காணிப்பது.
அதான் சக்கரத்தாழ்வார். பெருமாளை விட்டு என்றும் பிரியாதவர். நரசிம்மனாய் வந்த போதுகூட அவன் நகமாய் வந்தவர்! கோடி சூர்யப் பிரகாசம் கொண்டவர்!! (சுவாமியின் boomerang? :-)))

அனைவருக்கும், குளக்கரையில் நீராட்டம் நடக்கிறது. நீர், பால், தயிர், தேன், இளநீர் என்று பஞ்சாமிர்த அபிஷேகம். அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ பூசப்படுகிறது. துழாய்(துளசி)மாலை சார்த்தப்பட்டு, தீபங்கள் காட்டுகின்றனர்.
ஆயிரம் துளைகள் கொண்ட தங்கத் தாம்பாளத் தட்டின் வ்ழியாக, shower bath வேறு! (சகஸ்ர தாரை).






பின்னர் சக்கரத்தாழ்வாரை, குளத்துக்கு எடுத்துச் சென்று, பட்டர்கள் நீருக்குள் முங்குகின்றனர். அவ்வாறு முங்கும் போது, குழுமியிருக்கும் பல்லாயிரம் பக்தர்களும் தாமும் முங்கி தீர்த்தவாரி செய்கின்றனர்.




விழா இனிதே நிறைவு பெறுகிறது!
மாலையில் ஏற்றிய கொடியினை இறக்கி, வந்த அனைத்து தேவர்களையும், மனிதர்களையும், பிரம்மா வழி அனுப்பி வைப்பதாக ஐதீகம்.
"OK பிரம்மா, See you, it was a grand show, awesome!", என்று நாமும் சொல்லி 'வடை' பெறுகிறோம்! ...ஹிஹி 'விடை' பெறுகிறோம்.
சுப்ரபாத தோத்திரத்தில் ஒரு இனியது கேட்டு நிறைவோம்!

அகம் தூர தஸ்தே, பதாம்போ ஜயுக்ம
பிரணாமேச்ய ஆகத்ய சேவாம் கரோமி
சக்ருத் சேவயா, நித்ய சேவா பலம் த்வ
ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேசா


என் வீடு, மிகத் தொலைவில் உள்ளது. (அகம் தூர தஸ்தே)
ஆனாலும் உன் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொள்ள வந்தேன். (பதாம்போ ஜயுக்ம)
இன்று உன் திருமுக தரிசனம் கண்டேன்!
தினமும் திருமலையிலேயே தங்கி உன்னைச் சேவிக்க ஆசை தான், ஆனால் முடியுமோ?
(பிரணாமேச்ய ஆகத்ய சேவாம் கரோமி)
அதனால் நமக்குள் ஒரு ஒப்பந்தம்!

எப்போதெல்லாம் நான், என் மனம் நிறைய உன்னை நினைக்கிறேனோ,
அப்போதெல்லாம், நீ எனக்கு இப்போது கொடுத்த தரிசனத்தை, அப்போதும் கொடுக்க வேண்டும்!
(சக்ருத் சேவயா, நித்ய சேவா பலம் த்வ)
இறைவா, திருமலைவாசா, வேங்கடவா, இதையே எனக்கு நீ அருள்வாய்! (ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேசா)

இந்த நவ நாட்களும் வந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி!
சொல்லிலோ, பொருளிலோ குற்றம் குறைகள் இருந்தாலும் எனக்காக அவையெல்லாம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
சேர்ந்தாற் போல தமிழில் இவ்வளவு தட்டச்சு செய்வது இதுவே முதல் முறை.
நிறை குறை (நிறைய குறை?:-) -கள் சுட்டிக்காட்டுங்கள்.
அல்லன அகற்றிடத் தயங்க மாட்டேன்!
வாய்ப்புக்கு நன்றி!
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!





இன்று,
நம்மாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

(இவர் நம்ம ஆழ்வார்; நம் ஆழ்வார் என்று அரங்கனே சொன்ன பின்னர், நாம் என்ன சொல்ல!
ஆழ்வார்களுள், மிகவும் குறைந்த வயதினர்! ஆனால் ஆழ்வார்க்கெல்லாம் தலையாயவர் என்று போற்றப்படுபவர். நால் வேதங்களையும் தமிழ் செய்தவர்! தாளாற்றித் தந்த வேளாள மரபினர்.
ஆசார்யர், ஆழ்வார் என்று இரண்டும் ஒன்றாய் இருப்பவர்! எல்லாக் கோவில்களிலும் பெருமாள் பாதங்களைத் தாங்கி, சடகோபமாய் இருப்பவர்! அவன் மென்மலர்ப் பாதங்களை நம் தலைக்கு எடுத்து வந்து கொடுக்கும் சடாரி ரூபமானவர். இன்னும் எவ்வளவோ! "வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது"!)

திருவேங்கடமுடையான் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க, இவர் பாடிய பாடல்களுள், மிகப் பிரபலமானவை இதோ! நண்பர்கள் கண்ணன் சார், குமரன், பாலா, இன்னும் பலர் பின்னூட்டங்களில் இந்தப் பாடல்களை இட்டிருந்தார்கள்! அதை அப்படியே தருகிறேன்!!

ஏனோ இன்று, இந்த ஆழ்வார் பாடலுக்கு மட்டும்,
பொருள் சொல்லவோ, பதவுரை தரவோ முன் வராமல், மனம் அப்படியே நிற்கின்றது!
பாடலைத் தான் மீண்டும் மீண்டும் படிக்கத் தோணுதே அன்றி, மற்றவை அப்படியே நிற்கிறது!
முடிந்த வரை பத்தி பிரித்து தருகிறேன். எளிமையான் தமிழ் தான்
. வரிகளைப் படிக்கப் படிக்க உங்களுக்கே மனதில் ஆயிரம் அர்த்தங்கள் தோன்றும்!! (பின்னூட்டத்தில் நீங்கள் வந்து பொருள் உரைத்தாலும் மிகவும் மகிழ்வேன்; நன்றி!)

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே!
-------------------------------------------------------------------------------------------

வந்தாய் போலே வாராதாய். வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண், செங்கனி வாய், நால் தோள், அமுதே. எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன்பாதம்
அகல கில்லேன் இறையுமே.
(அல்லைப் பகல் செய் = இரவையும் இருளையும் பகல் ஆக்கும்)
-------------------------------------------------------------------------------------------
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய். உலகம் மூன்று உடையாய். என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல்ஒன்று இல்லாஅடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.
-------------------------------------------------------------------------------------------
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர். வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வான் உள் நிலாவுவரே!

(கேழ் இல்லாப் பெருமான் = ஒப்புமை இல்லாத பெருமான்; தன் ஒப்பார் இல் அப்பன்)
(சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் = தான் பாடிய திருவாய்மொழி 1000 பாடல்களில், திருவேங்கடத்துக்கு எனப் பிரத்யேகமாகப் பாடிய இந்தப் பத்து பாடல்களும்)
(பழனம்=நெல் வயல்கள்; குருகூர்=ஆழ்வார் திருநிகரி எனப்படும் திருக்குருகூர் என்ற ஊர்; சடகோபன்=நம்மாழ்வார்; பெரிய வான்=திருநாடு எனப்படும் வைகுந்தம்)
-------------------------------------------------------------------------------------------
இதோ இறைவன் பாதங்கள் பற்றித்

துழாயும் திருப்பாதமும் (துளசியும், சடாரியும்) பெற்றுக் கொள்ளுங்கள்!!

சர்வ லோக நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்!
சரணம் சரணம் திருமலைக்கு அரசே
சரணம் சரணம் வேங்கடா சரணம்!!

Read more »

Monday, October 02, 2006

திருமலை விழா 8 - தேர் திருவிழா / குதிரை வாகனம்

எட்டாம் நாள்

காலை - தேர் திருவிழா (ரதோற்சவம்)

"தேரு வருதே" - இதை அப்படியே திருப்பிப் போடுங்கள்! என்ன வந்தது?
அதே, "தேரு வருதே"!
ஆங்கிலத்தில் இதை Palindrome-ன்னு சொல்லுவாங்க! தமிழில் இதற்குப் பெயர் என்னன்னு தமிழ் ஆய்ந்த யாராச்சும் வந்து சொல்லுங்கப்பா! (இலக்கணத்தில் ஒரு வகையான அணி என்று சொல்லலாமா?)

இன்று காலை திருமலையில் தேர் திருவிழா. வாகனங்கள் போதாதா? அம்மாடியோவ்! இவ்வளவு பெரிய ஆழித்தேரா? ஏன்?
வாகனங்களைத் தேர்ந்த உடல்வலு உள்ளவர்களும், நடையாட்டம் பழகியவர்களும், கோவில் ஊழியர்களும், மடைப்பள்ளி பட்டர்களும், பெரும்பாலும் ஆண்களே சுமக்கின்றனர்! இவர்களை ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று அழைப்பர்.
ஆனால் ஆழித்தேர் அப்படியில்லை!

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், பிரபலங்கள், சாமான்யர், மடாதிபதிகள், தலைவர்கள், ஆன்மீக அறிஞர்கள் என சமுதாயத்தில் உள்ள எவரும் வடம் பிடித்து இழுக்க முடியும்.
பலம் தேவையில்லை! பாசமே தேவை!!
ஒருவர் இழுக்க முடியவில்லை என்றால் இன்னொருவர் ஈடு கொடுக்கிறார்.
Complementing each other என்று சொல்லுவார்கள்!
நான் இழுத்ததால் தான் ஓடியது, நீ இழுத்ததால் தான் ஓடியது என்ற பேச்சுக்கு எல்லாம் இடமேயில்லை!
இப்படி ஊர் கூடித் தேர் இழுக்க, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சமூகப் பாடத்தை எந்தக் கல்லூரிக்கும் செல்லாமலேயே கற்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------
(சுவாமியின் தேர் இழுக்கும் போது ஒலிக்கும் பாடல் இதோ...அன்னாமாச்சார்யரின் 'அதிவோ அல் அதிவோ ஸ்ரீஹரி வாசமு' என்ற பாடல் தான்!!
வேண்டுமானால்,இந்த வரிகளின் மீது க்ளிக் செய்யுங்க; புது விண்டோவில் திறக்கும்; ஒலி அளவைச் சிறிதாகவே வைத்துக் கொள்ளுங்கள்; கோவிந்த கோஷம் பாடலின் இடையே ஒலிக்கும்)
------------------------------------------------------------------------------------------------




ஆழித் தேர் பூக்களாலும், தொங்கல் கொடிகளாலும், பட்டுத் துணிகளாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. உச்சியில் தங்கக் குடை. துவாரபாலகர்கள் ஜயன், விஜயன் இருவரும் தேர் முகப்பில்! குதிரைப் பொம்மைகள் ஏழு தேரின் முன்னால்!

சுவாமியையும் தேவியரையும் தேரில் ஏற்றியாகி விட்டது. பட்டர்கள் சாமரம் வீசுகின்றனர்! ஆரத்தி! மேள தாளங்கள் முழங்க, கொம்புகள் ஊத, கொடி அசைத்து விட்டார் பட்டர். இதோ தேர் நகருகிறது! பெருமான் ஆடி ஆடி வருகிறான்!!



சுவாமியின் முன்னால் அருளிச்செயல் குழாம் என்னும் பெரிய திவ்யப்பிரபந்த கோஷ்டி! அக்கோஷ்டி தமிழ்ப் பாசுரங்கள் முழங்கி முன்னே செல்ல, தமிழ் செல்லும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், தேரில் பெருமான் ஓடோடி வருகிறான்!! சுவாமியே ஓடும் போது, அவன் பின்னால் வரும் சிறிய வேத கோஷ்டி சும்மா இருக்க முடியாதே! பகவான் தமிழின் இனிமையில் மயங்கி, எங்கே நம்மை விட்டு ஓடி விடுவானோ, என்று அக்கோஷ்டியும் ஓடி வர, ஆகா 'ஓடுவார், விழுவார், உகந்து ஆலிப்பார்' தான் போங்களேன்!

(இதனால் வேதங்களைக் குறைத்து மதிப்பிட்டதாக யாரும் வருந்தி விடக் கூடாது!
வேதங்களை மொழிந்தவனே அவன் தானே? அவற்றைக் காக்கவும் மச்சமாய் (மீனாய்) அவன் வரவில்லையா? இரண்டுமே அவன் கண்கள் தான்!
அவன் சொன்னது தான் வேதம்.
அதில், தன்னைத் தானே, தன் பெருமைகளைச் சொன்னாற் போல் ஆகி விட்டது பகவானுக்கு!
பார்த்தான்...தீந்தமிழ் ஆழ்வார்களை அனுப்பி, அவர் தம் பாக்களால் பாடக் கேட்டான்.
தற்பெருமை போய், தமிழால் பெருமை!
அதனால் தமிழுக்குக் கடன் பட்டான்; தமிழுடன் உடன் பட்டான்!
'தமிழ் இறைவனுக்கும் முன்னால்' என்று நண்பர் குமரன், இது பற்றிச் சுவையாக முன்பே பதிந்துள்ளார். இங்கே காணலாம்!)




பேசியது போதும்! வாருங்கள் வடம் பிடிக்கலாம்...
கையில் வடத்தை (கயிறை) நல்லா பிடிச்சுக்கோங்க! ஆங்...அப்பிடித்தான்...சுவாமியைப் பாத்துக்கிட்டே, அப்படியே நடந்துக்கிட்டே, இழுங்க!
ரொம்பல்லாம் மூச்சு முட்ட இழுக்காதீங்க!
சும்மா அப்பிடி நடந்துகிட்டே இழுங்க, போறும்!
உங்கள மாதிரியே நிறைய பேர் இழுக்குறாங்க, திரும்பிப் பாருங்க...ஆட்டோமாட்டிக்கா நகரும்! ஆங் அதே அதே....
இப்ப வந்துடுச்சு வித்தை....அப்பிடியே மெயின்டைன் பண்ணுங்க!
அப்படியே வெக்கப்படாம சொல்லுங்க, "ஏடு கொண்டலவாடா, வேங்கட ரமணா..கோவிந்தா!...கோவிந்தா!!"


தேருக்குள், சுவாமியின் முன் அழகு


பின் அழகு

(சுவாமியின் தேர், மாட வீதிகளில், எட்டு இடங்களில் நிற்கும்.
அந்த அந்த திசைக்குரிய பரிவார தேவதைக்கு, அன்னபலி சார்த்தப்பட்டு, ஆரத்திக்குப் பின் மீண்டும் நகர ஆரம்பிக்கும்.
மக்கள் உப்பும் மிளகும் தேர்க்கால்களில் தூவ, தேர் நிலைக்கு வந்துசேரப் பல மணி நேரம் ஆகும்).



மாலை - குதிரை வாகனம் (அஸ்வ வாகனம்)

மாலையில், மலை குனிய நின்றான் பெருமாள், தேரில் வந்த களைப்பு தீர, ஊஞ்சல் ஆடுகிறான்! பின்னர் விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசனான பெருமாள், கல்கி ரூபத்தில், தங்கக் குதிரை (ஆடல் மா) மேல் அமர்ந்து நகர் உலா வருகிறான்!
ராஜ அலங்காரம். தலையில் மடிப்பு வைத்துத் தைத்த தலைப்பாகை! கையில் சாட்டை! வாள், கேடயம்! பரி மேல் வரும் பரி மேல் அழகன்! காணக் கண் கோடி போதுமோ?





இன்று,
திருமங்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.
(திருமங்கை ஆழ்வார், கலியன் என்று போற்றப்பட்ட குறுநில மன்னர். பெருநிலம் வேண்டிப் பெருமாளைச் சரண் புகுந்தார்.
திருவைணவத்தை ஒரு மக்கள் அமைப்பாக அமைத்துக் கொடுத்தவர்.
பரகாலன், பெருவீரன் என்று அவரைக் குறிப்பிட்டாலும், உள்ளத்தை உருக்கும் பலப்பல காதல் கவிதைகளைப் பொழிந்துள்ளார்.
ஆடல்மா என்பது அவர் குதிரை. இன்று குதிரை வாகனம் ஆதலால், அவர் பாடல் ஒன்றைப் படிப்போம்)


தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துவிட்டேன்,
பெரியேன் ஆயினபின் பிறர்க்கு உழைத்தே ஏழையானேன்,
கரிசேர்ப் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா,
அரியே வந்துஅடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே
.

(கரி=யானை; பொழில்=பூங்கா)
பாலகனான புரியாத பருவத்தில், தெரியாமல் பல தீமைகளைச் செய்து, 'விட்டேன்'.
புத்தி பின்னர் வந்தாலும், இறை அன்பு வரப் பெறவில்லை; அதனால்,
பெரியவன் ஆன பின்னர், நல்லவர் அல்லாத பிறர்க்கு உழைத்தே ஏழையானேன்!
யானைகள் விளையாடும் பல பூங்காக்களை உடைய வேங்கட மலையானே,
ஹரியே, உன்னை வந்து சரண் அடைந்தேன்! அடியேனை ஆட்கொண்டு அருளே!!



பிரசாத ஸ்டால்:
வாங்க வாங்க! நம்ம துளசி டீச்சர் தான் இன்னிக்கி பிரசாத ஸ்டால் இன்சார்ஜ்.
அவராப் பாத்து உங்களுக்குப் போட்டுக் கொடுப்பாரு. அதுவரை வரிசையில் பொறுமையா இருங்க பக்த கோடிகளே! பார்சல் பொட்டலம் எல்லாம் கேக்கக் கூடாது. அதெல்லாம் நீங்களே தான் பாத்துக்கணும்!!
அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!






உண்ணும் பிரசாதம் வடை, சரி.
ஆனா அது மட்டும் தான் பிரசாதமா?
இப்ப எல்லாம் திருமலையில் விருக்ஷப் பிரசாதம் (செடிகொடி பிரசாதம்) ரொம்பவே பிரபலம்!
துளசி, பவழமல்லி, இருவாட்சி, தவனம், மரு என்று பல செடிகள், திருமலைத் தோட்டத்தில் தருகிறார்கள். விஜயா வங்கியில் கேட்டு, விவரம் பெறலாம்.
சில செடிகள் அவ்வளவா தண்ணீர் தேவைப்படாதவை; வளர்ப்பதும் எளிது!
இது, வீட்டுக்கும் நாட்டுக்கும், வேங்கடத்தான் அருளால், நல்லது தானே!
ஆகவே செடிகொடி பிரசாதமும் பெற்றுக் கொள்ளுங்கள் பக்தர்களே!

நாளை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் இறுதி நாள்;
ஏழுமலையான் பிறந்த நாள்!! (அவதார நாள்)
ஷ்ரவண நட்சத்திரம்! சக்கரத்தாழ்வார் நீராட்டு!
அவசியம் வாங்க! அமுதனைப் பாத்து போங்க!
Read more »

Sunday, October 01, 2006

காந்தியால் கிடைத்த outsourcing பணம்

வாங்க நண்பர்களே! காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
எனக்குத் தெரிந்த காந்தி ஜெயந்தி:

பள்ளிப் பருவத்தில் காந்தி ஜெயந்தி:
பள்ளியில் assembly-இல் பாட்டுப் பாடி, காந்தியின் படத்துக்கு முன்னர் உறுதி மொழி எடுப்போம். என்ன உறுதி மொழின்னு கேட்காதீங்க, ப்ளஸ் ஒன்லேயே அதெல்லாம் மறந்துட்டோம்!

கல்லூரியில் காந்தி ஜெயந்தி:
ஹாஸ்டல் நண்பர்கள் பலர் லீவு நாள் அதுவுமா அவஸ்தைப் பட்ட நாள்.
பின்ன என்னாங்க எல்லாக் கடையும் லீவு! முன்னாடியே வாங்கி வைக்காத ப்ளானிங்கே இல்லாத மக்கள் எல்லாம் - ஒண்ணு சினிமா போகணும்; இல்லை பிளாக்-ல வாங்கணும்!
இரண்டாம் சாய்ஸ் பசையுள்ள பார்ட்டிகளுக்கு மட்டும்!

வேலைக்குச் சேர்ந்த பின் காந்தி ஜெயந்தி:
ச்சே! ஒரு நாள் லீவு கிடச்சாக் கூட இந்த பிராஜக்ட் மேனேஜர் பய ரவுசு தாங்க முடியல; இன்னிக்கும் வரணுமாம் ஆபீசுக்கு!
போங்கடா! அப்பா காந்தி, சுதந்திரம் நீ நெஜமாலுமே வாங்கிக் கொடுத்தியா?

மணமான பின் காந்தி ஜெயந்தி:
அடையாறில் இருந்தா கிஷ்கிந்தா,மாயாஜால்;
அட்லாண்டாவில் இருந்தா நல்ல நண்பன் எவனா மெயில் பண்ணாத் தெரியும்! நினைவுக்கு வந்துடும். ஓ இன்னிக்கி Oct 2! ச்சே காந்தி is great-ல்ல? ஏதோ பண்ணாலும் நல்லா போல்டாவே பண்ணாருப்பா!

குழந்தைகள் வந்த பின் காந்தி ஜெயந்தி:
கண்ணா, சொல்லு "Gandhiji is the Father of Our Nation"!

காந்தி அண்ணலே!
உன் வழிமுறை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். பிற்போக்குத்தனம் என்று கூடக் கருதலாம். உன்னால் விளைந்த நன்மைகள், தீமைகளை லிஸ்ட் போடலாம்.
ஆனாலும் நீயும், உன் தலைமையில் திரண்ட பலரும் நிச்சயம் உழைத்தீர்கள். வெறும் கோஷத்தோடு நின்று விடவில்லை! இந்தியாவைப் பற்றிக் கனவு கண்டீர்கள்!

நான் தான் கொடியேற்றுவேன் என்று ஓடி வந்து நிற்கவில்லை! மரியாதை கொடுக்கவில்லை என்று கடைசி நேரத்தில் அணிகள் மாறவில்லை!உன்னைச் சுட்டதால் நீ தியாகி ஆனாய் என்றெல்லாம் பேச எனக்கு மனம் வரவில்லை. நீ நிச்சயம் வித்தியாசமான மனிதன். புரட்சித் தலைவர் என்றும் உன்னைச் சிலர் சொன்னாலும் சொல்லலாம்.

எங்கள் மீசைக் கவிஞன் சொன்னான், உன்னைப் பார்த்து,
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!


ஆனால் நான்,
ஒன்று மட்டும், இன்று சொல்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! Happy Birthday to you, from your Nation!

காந்தியால் கிடைத்த outsourcing பணமா? எப்படி? (கவனிக்கவும்; 'காந்தியால் மட்டும்' என்று சொல்லவில்லை!)
இல்லாக்காட்டி துரைகளே இந்தியாவிலும், குத்தகை எடுத்து, hourly rate கொடுத்து, மிச்சத்தையெல்லாம்....என்ஜாய்!
ஆக நம் மக்கள்ஸ் உழைக்கும் நம் பணம், நம் நாட்டுக் கருவூலம் சென்று சேர்கிறதே! அதற்கு நன்றி!

Read more »

திருமலை விழா 7 - சூர்ய / சந்திர வாகனம்

ஏழாம் நாள்

காலை - கதிர் ஒளி வாகனம் (சூர்யப் பிரபை வாகனம்)

இன்னிக்கி சூரியன்FM பல பேர் கேக்கறாங்க. சில பேரால அது இல்லாம இருக்க முடியறது இல்ல. காதோடு ஒட்டிப் பிறந்த கவச குண்டலம் போல், எப்பவும் கூடவே ஒட்டிக்கிட்டு நிக்குது. பாட்டைக் கேட்டுச் சிலர், சில பேருக்கு dedication செய்யறாங்க!
ஆனால் இந்த Total Dedication என்பது உலகத்தில் ஒரே ஒருத்தருக்குத் தாங்க பொருந்தும். அது நம்ம சூரிய பகவான் தாங்க! உலகத்தில தப்பு நடக்குதோ, நல்லது நடக்குதோ, எதுவாயினும், கரெக்டா கன்-டைமுக்கு ஆஜராயிடுவாரு! ஒரே ஒரு நாள், சும்மா ஒரு பத்து பதினைந்து நிமிஷம் லேட்டா எழுந்திருச்சாருன்னு வைச்சுக்குங்க....அவ்ளோ தான்!

இப்படிக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சூரியப் பகவானைப் ப்ரத்யக்ஷ தெய்வம் என்று சொல்லுவார்கள். சூர்ய நாராயணர் என்றுப் போற்றப் படுகிறார். இவருக்குப் பல பெயர்கள்;
ரவி (அட நம்ம பேருங்க; அதான் முதல்ல சொல்லிட்டேன்; கண்டுக்காதீங்க :-)
பாஸ்கரன், ஆதித்யன், தமிழில் ஞாயிறு, பரிதி, பகலவன், வெய்யோன் இன்னும் நிறைய இருக்கு! பல பேர் பின்னூட்டத்தில் சொன்னீங்கனா, தொகுத்து ஒரு தமிழ் அர்ச்சனைப் புத்தகமே போட்டுவிடலாம். 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் சிறப்பிக்கிறது. அட நம்ம தமிழர் திருநாளாம் பொங்கல் கூட இவருக்குத் தானே!

அப்பேர் பட்டவருக்கு ஒரு தனி வழிபாட்டு முறையையே நிறுவினார் ஆதிசங்கரர். "செளரம்" என்று அதற்குப் பெயர்! ஸ்ரீமன் நாராயணனே, சூர்ய சொரூபமாக உலகைக் காப்பதாக ஐதீகம்; யஜூர் வேதத்தில், காயத்ரி வழிபாட்டில்,
"சத சாவித்ரு மண்டல மத்ய வர்த்தே நாராயணஹ
சரஸி ஜாசன சாம்னி விஷ்டஹ
....
க்ரீடீ, ஹாரீ, ஹிரண்மய வபுர்; தித சங்கு சக்ரஹ"
என்று, சூர்ய நாராயணன் என்றே புகழ்கிறது வேதம்!


பஞ்சாயுதம்


இன்று காலை திருமலையில், அந்தச் சூர்ய நாராயணனாக உலா வருகிறான் பெருமாள்;
பின்னால் பெரிய சூரியப் பிரபை(சூரியத் தட்டு). பகலவனின் தேரில் ஏறி, பஞ்ச ஆயுதங்களும் தரித்து,
அருணன் சாரதியாய் தேரோட்ட, இறைவன் தேரின் மையப் பகுதியில் (மத்ய வர்த்தே) வீற்று இருக்கிறான்.
சக்கரம், சங்கு, வாள், கதை, வில் ஆகிய இவையே பஞ்சாயுதங்கள்.
'அங்கையில் நேமி, சங்கு, வாள், தண்டோடு, அடல் சராசனமும் தரித்தோன்', என்று பாடுகிறார் வில்லிபுத்தூரார். (சில சமயங்களில் கிருஷ்ண ரூபமாகவும் சூரியத் தேரில் வலம் வருவதுண்டு)

ஏழு குதிரைகள் பூட்டிய சூரியத்தேர் சுடர்விட்டு பறக்கிறது! நம் மனங்களும் அவனுடன் சேர்ந்தே பறக்கின்றன!!
இரு பெரும் வெண் குடைகள் ஒய்யாரமாக ஆடிஆடி சூரியனுக்கே நிழல் கொடுக்கின்றன!
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!!!


Tent-க்குள்!


(பிரம்மோற்சவத்தில் வாகனத்தின் பின்னால், பல அடி தள்ளி, tent போல ஒரு அமைப்பைத் தூக்கி வருவார்கள்; திருமலையில் எப்போது பனியும் மழையும் பெய்யும் என்று சொல்ல முடியாது.
அதனால், மழையோ தூறலோ பெய்யும் போது, உடனே அந்த tent-ஐ கொண்டு வந்து சுவாமியின் வாகனத்துக்குக் காப்பாக நிறுத்தி விடுவார்கள்!
பின்னர், ஊர்வலம், tent-க்குள் இருக்கும் சுவாமியுடன், மழை பெய்தாலும் தடையில்லாது செல்லும்!
)


மாலை - மதி ஒளி வாகனம் (சந்திரப் பிரபை வாகனம்)

"வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ எந்தன் கதையே" என்ற பாட்டு மிகவும் பிரபலமான பாடல் தானுங்களே? அது என்னங்க, இந்த சந்திரனுக்கும் காதலர்களுக்கும் அவ்வளோ தொடர்பு? காதலில் எதற்கு எடுத்தாலும் நிலாவைக் கூப்புட்டுகிறதே வழமையாப் போச்சு! (ஹைய்யா இலங்கைத் தமிழ் ஒட்டிக்கிடுச்சு, எல்லாம் தமிழ்மணம் புண்ணியத்துல!)

ஏதோ குழந்தைகளுக்குச் சோறூட்டத் தான் அம்புலி மாமா என்றால், காதலில் கூட, 'கண்ணே அந்த நிலவு உனக்கு வேணுமா?', 'நிலவின் பிறை போல நெற்றி', 'நிலவைப் பாத்து வானம் சொன்னது என்னைத் தொடாதே' ன்னு
இப்படி எங்கும் நிலா, எதிலும் நிலா! இந்தப் பதிவை எத்தனை காதலர்கள் படிப்பீங்க. யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்களேன் இந்த நிலா mania பற்றி!


ஏழாம் நாள் மாலையில் நம் காதலன் திருமலை வாசனும், இதே நிலவு வாகனத்தில் தான் உலா வருகிறான். சந்திரப் பிரபை வாகனம்.
முழுதும் நல்ல வெண் முத்துக்களால் அலங்காரம். தக தக என்று ஒளிர் விடும் வெள்ளிப் பிரபை. முத்துக் கொண்டை;
மல்லிகை மலர்களால் ஆன தண்டு மாலை;
இப்படி இன்று எல்லாமே வெள்ளை, நம் வெள்ளை உள்ளத்தானுக்கு!! கையில் வெண்ணெய்க் குடம் கூட உண்டு.

வாருங்கள் நாமும் அவனுடன் காதல் கதைகள் பேசிக் கொண்டே, இரவில் காலாற உலா வருவோம்!
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்!"





இன்று,
திருப்பாணாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

மந்தி பாய் வட வேங்கட மாமலை, வானவர்கள்,
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்,
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே.


(மந்தி=குரங்கு; சந்தி=சந்தியா வந்தனம் (முன்று சந்திகளிலும் வழிபாடு); அரவின் அணை=பாம்புப் படுக்கை; அயன்=பிரம்மா; உந்தி=தொப்புள் கொடி)
மந்திகள் பாய்ந்து ஓடி விளையாடும் வட வேங்கட மாமலை மீது,
வானவர்கள் அனைவரும் கீழிறங்கி வந்து, சந்தி என்னும் மூன்று வேளை வழிபாடு செய்கின்றனர்.
அவன் அரங்கத்தில் பைந் நாகப் பாய் எனப்படும் ஆதி சேஷன் மேல் துயில்பவன்.

அந்தி வேளை நிறம் கொண்ட அழகிய ஆடை உடுத்தி, அவன் திருவயிற்றுப் பகுதியில், தொப்புள் கொடியின் மேல், பிரம்மனைப் படைத்தான்.
அவன் மூலமாக நம் அனைவரையும் படைக்கவும் வைத்தான்.

ஆக எனக்கும், பெருமாளுக்கும் தொப்புள் கொடி உறவு!
அதுவே என் உள்ளத்தின் உள்ளத்தில் உயிராக, உறவாக என்னை வாழ்விக்கிறது!

(வலை நண்பர்களுக்கும், அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
நாளை திருத் தேரோட்டம். ஊர் கூடித் தேர் இழுக்கும் நன்னாள்; எல்லாரும் மறக்காம வந்து ஒரு கை கொடுங்க!
வட வேங்கடன் வடம் இழுக்க அவசியம் வாங்க! - வடம் இழுப்பார்க்கு வடை உண்டு :-)) )
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP