தியாகராஜ ஆராதனை: திருமலையில் தீ வைத்த பாட்டு! - 2
அந்தத் திரை கல்லால் ஆன மதில் போல் அப்படியே கெட்டியாக நிற்கிறதே! "ஏமிரா இது! ஈ பெத்த மொகோடு-கி எந்த அகங்காரம்? எந்த அகங்காரம்?" - அர்ச்சகர்கள் இப்போது கைப்பிடித்துத் தள்ளி விடாத குறையாக விரட்டுகின்றனர்! முந்தைய பாகம் இங்கே!
"சுவாமிகளே, திரை மட்டும் தானே போட்டு இருக்கீங்க! இன்னும் நடை சார்த்தி விடவில்லையே! தயவு பண்ணித் தரிசனம் செய்து வையுங்கள்!
அடியேன் பெயர் தியாகராஜன். காவிரிக் கரையான திருவையாற்றில் இருந்து வருகிறேன்! வழியெல்லாம் அவனைப் பார்க்கும் ஏக்கத்தோடயே வந்து விட்டோம்!
ஒரே ஒரு கணம் பெருமானைக் கண்ணாரக் கண்டுவிட்டு போய் விடுகிறோம்! மீண்டும் நாளை காலை வந்து ஆர அமரச் சேவிக்கிறோம். இப்போது நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணனும்!"
"ஓஹோ...நீங்க பக்தியில் அப்படியே உருகுறவரோ?
போதும் போதும்யா உருகினது! நாளைக்கு உருகறத்துக்குக் கொஞ்சம் மிச்சம் மீதி வச்சிக்குங்க! இப்போ ஜருகண்டி! ஜருகண்டி பாபு!"
தியாகராஜரும், அவரது மூன்று சீடர்களும் சற்றே தயங்கி நிற்கிறார்கள்!
"அர்ச்சகர்களே! இவர் பெருமை அறியாமல் பேசுகிறீர்கள்!
இவர் சங்கீத மேதை, நாதப் பிரம்மம், திருவையாறு தியாகராஜ சுவாமிகள்! தஞ்சாவூர் மகாராஜாவின்...." அவர்கள் சொல்லி முடிப்பதற்குள், சன்னிதியில் சுய பிரதாபங்கள் தேவையில்லை என்று தியாகராஜர் தடுத்து விடுகிறார்.
"நீங்க யாரா இருந்தா எங்களுக்கென்ன? உங்களைப் பார்த்தா அப்படி ஒன்னும் செல்வாக்கு இருக்குற மாதிரி எல்லாம் தெரியலையே! பஞ்சத்தில் அடிபட்டவங்க மாதிரி இருந்துகிட்டு, பேச்சு மட்டும் நீளுகிறதே?
இப்படி இங்கேயே நின்னுன்டு இருந்தீங்கன்னு வச்சிக்கோங்க, வாசக் கதவைப் புடிங்கிண்டு வந்து உங்க எல்லாரையும் பெருமாள் பாத்துருவாரு! ஹாஹா ஹாஹா!" - கேலியாகச் சிரிக்கிறார் பட்டை நாமம் போட்ட ஒரு அர்ச்சகர்.
"ஐயா பக்த சிகாமணிகளே! உங்களை எல்லாம் பார்க்காம பெருமாள் ஒன்னும் கரைஞ்சிப் போயிட மாட்டாரு! மனசுக்குள்ள அப்படியே பெரிய ஆழ்வார்-ன்னு நெனைப்பா? என்னமோ அப்படியே ஏங்கறாங்களாமில்ல ஏங்கறாங்க!" - இன்னொரு அர்ச்சகரும் கேலியில் சேர்ந்து கொள்கிறார்.
வாலாஜாப்பேட்டை வேங்கடரமணன் என்னும் சீடனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது! "இன்னும் அர்த்த ஜாம பூஜை கூட முடியவில்லை! அதற்குள் நீங்கள் எப்படி நடையை மூடலாம்?"
"இத்தனை பக்தர்களையும் முதலில் எதுக்கு உள்ளே வர விட்டீங்க? கோயிலை மூடுவதாய் இருந்தால் வாசலிலேயே தடுத்து இருக்கலாமே! உங்கள் சவுகரியத்துக்கு, எல்லாம் செய்து விட்டு, இப்போது ஏளனம் வேறு செய்யறீங்களா? ஜாக்கிரதை!"
தியாகராஜர் வேங்கடரமணின் கையைப் பற்றிக் கொள்கிறார். "வேண்டாம் ரமணா வேண்டாம்! விட்டுவிடு!
ஆலயத்தில் ஜாக்கிரதை அது இதுன்னு அந்நிய வார்த்தைகளை எல்லாம் பேசாதே! நம் அப்பனின் வீட்டில், நாமே அப்படி நடந்து கொண்டால் நல்லாவா இருக்கு?
இப்போ என்ன? நாம் தான் அவனைப் பார்க்கவில்லையே தவிர, அவன் நம்மை எல்லாம் பார்த்திருப்பான் அல்லவா! அது போதும்! வா போய் விடலாம்! நாளை காலையில் திரும்பி வருவோம்!"
"ஆகா, சாது மாதிரி என்னமா நடிக்கறாருப்பா! புனித பிம்பம்-னு இதைத் தான் சொல்லுறாங்க போல!
போன்னு சொன்னா உடனே போகாம, எங்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டியதே நீங்க தான்! இப்போ அடிபட்ட குழந்தை போல் வேஷம் போடுறீங்களா? நகருங்கள் இங்கிருந்து! இதுவே இறுதி எச்சரிக்கை!!"
தியாகராஜரும் சீடர்களும் வந்த வழியே திரும்பி வந்து, திருமாமணி மண்டபத்தில் நின்று கொள்கிறார்கள்.
தியாகராஜர், துவார பாலகர்களான ஜய விஜயர் இருவரையும் பார்க்கிறார். எதிரில் கை கூப்பி நிற்கும் கருடனைப் பார்க்கிறார்! சதா சர்வ காலமும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்! நீங்கள் செய்த புண்ணியமே புண்ணியம் என்பது போல அவர் கண்கள் பனிக்கின்றன.
"குருவே, நீங்களே இப்படி நாலு பேர் பார்க்கிறா மாதிரி அழலாமா? உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க! வருவது வரட்டும்!
வேகமாக ஓடிப் போய், படீர்னு திரையை விலக்கி விடுகிறேன்! அந்தக் கண நேரத்தில் நீங்க பெருமாளைப் பார்த்து விடுங்கள்!"
"வேண்டாம் ரமணா! வேண்டாம்!
இது அவங்க போட்ட திரை-ன்னு தானே நினைச்சுகிட்டு இருக்கே! இல்லை!!
இது எனக்கு நானே போட்டுக் கொண்ட திரை!!
எந்தப் பிறவியில்...எந்தப் பக்தனை ஆணவத்தால், மனம் நோகப் பேசினேனோ? அது எல்லாம் ஒன்னாச் சேர்ந்து, இப்படித் திரையாக வந்து முன்னால் தொங்குது!
எப்பவும் மற்றவர்கள் மனம் வலிக்கப் பேசுகிறோமே! ஆனா நமக்குன்னு வலிக்கும் போது தானே வலி-ன்னா என்னன்னு தெரியுது!"
பெருமாளே! தயா சிந்து! உன்னை ஆசை ஆசையாய்த் தேடி வந்தவனைத் தள்ளி நிற்க வைத்து ஒரு புதிய கீதை சொல்கிறாயா நீ?"
திருவையாறு காவிரி ஆறு, தியாகராஜர் கூடவே புறப்பட்டு வந்துவிட்டதா என்ன? அவர் கண்களில் அப்படி ஒரு ஆடிப் பெருக்கு! எந்தப் பொறியாளனால் இதுக்கு அணை கட்ட முடியும், சொல்லுங்கள்? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்!
நாதப் பிரம்மத்துக்கு நா எழவில்லை! பா எழுந்தது!! - தெர தீயக ராதா!!
தெர தீயக ராதா...நா லோனி
திருப்பதி வேங்கட ரமணா...மத்சரமுனு
(தெர தீயக ராதா)
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதி - நா லோனி
(தெர தீயக ராதா)
(பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்கலாம்....)
* மதுரை மணி குரலில்
** எம்.எஸ்.அம்மா குரலில்
*** ரஞ்சனி-காயத்ரி யூ-ட்யூப் வீடியோ
திரை விலக்க மாட்டாயா - என்னுடைய
திருப்பதி வேங்கட ரமணா...தீய எண்ணத்
(திரை விலக்க மாட்டாயா)
பரம புருஷா, தர்மாதி மோட்சம் தன்னை
பற்ற விடாது, அடாது செய்யும் - என்றன்
(திரை விலக்க மாட்டாயா)
வலை தனை அறியாமல் - விலங்கினங்கள்
வகை யாய்ச் சிக்கினவே - நானும் உன்றன்
தயவால் குறிப்பறிந்தேன் - அனுசரித்தே
தியாகராஜன் வேண்டுகிறேன் - தீய எண்ணத்
(திரை விலக்க மாட்டாயா)

கெளளிபந்து ராகத்தில், தியாகராஜர் உள்ளம் எரிந்து பாடுகிறார்.....
பற்றி எரிகிறது திரை!
சுற்றி எரிகிறது திரை!
கண்மூடிக் கண் திறப்பதற்குள்.....
குபுகுபு என்று தீ பற்றிக் கொண்டது திரையில்!
கருவறைக்கு முன்னுள்ள பட்டுத் திரை சில நிமிடத்தில் அறுந்து, விழுந்து.....பஸ்பமாகிப் போனது!
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்! - என்று கோதை சொன்னது உண்மை தானோ?
எம்பெருமான் கருவறை விளக்குகள் எல்லாம் இன்னும் ஒரு படிச்சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன!
பெருமானின் ஏகாந்த சேவை! - அர்ச்சகர்கள் செய்து வைக்காத சேவையை, அன்பு செய்து வைத்தது!
தியாகராஜர் மூச்சடைத்து நிற்கிறார்!
சீடர்கள் பேச்சடைத்து நிற்கிறார்கள்!
அர்ச்சகர்கள் அரண்டு போய் கதிகலங்கி நிற்கிறார்கள்!!
அங்கிருந்த இதர பக்தர்கள் ஆகாகாரம் செய்கிறார்கள்!!
கோவிந்தா என்னும் கோஷம் போடக்கூட யாருக்கும் நாக்கு வரவில்லை! ஆனால் அனைவருக்கும் கைகள் மட்டும் தன்னை அறியாமல் தலைக்கு மேல் போகின்றன!
தியாகராஜரின் கண்களுக்குத் தன்னையே தான் நம்ப முடியவில்லை! எல்லாரும் ஆகா ஓகோ என்று சொல்லும் இவனா....அந்தத் திருவேங்கடமுடையான்?......
முதல் முறை பார்க்கிறார் அல்லவா? உடம்பு கிடுகிடு என்று நடுங்குகிறது!
கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே!
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே!
பெரிய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!
நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!
இவன் சக்ரவர்த்தி திருமகன் இராமன் போலவே தெரிகிறானே! கெளசல்யா சுப்ரஜா "ராமா" என்றல்லவா இவனை எழுப்புகிறார்கள்! ஆம்! இவன் இராமனே தான்! வேங்கட ராமன்! வேங்கட ரமணன்!
நான் அன்றாடம் போற்றிய இராமனே தான் இவன்! - அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுகிறார்! சீடர்கள் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்!
அர்ச்சகர்கள் கருவறைக்குள் செல்லவே பயப்படுகிறார்கள்!
சற்று முன்னர் தானே, எரியும் திரையைக் கண்டார்கள்? அதான் உள்ளே செல்ல அப்படி ஒரு நடுக்கம்! ஒருவர் மட்டும் ஓடி வந்து சீடன் வேங்கடரமணனிடம் மன்னிப்பு கேட்கிறார்!
மயக்கம் போக்கத் தண்ணீர் தேவைப்படுகிறது! எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்த மனிதர் கருவறைக்குள் ஓடிச் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருகிறார்!
நீர் தெளிக்கப்பட, தியாகராஜரின் மயக்கம் தெளிகிறது! அர்ச்சகர்கள் எல்லாரும் ஓடோடி வந்து மன்னிப்பு கேட்கிறார்கள்! அதன் பின்னரே, ஏகாந்த சேவையை முறையாகச் செய்து வைத்து நடை சாத்துகிறார்கள்!
பக்தர்கள் அனைவருக்கும் இரவு நேரப் பிரசாதம் - திராட்சை முந்திரிகள் தூவிய கெட்டிப் பாலும்-பழமும், தொன்னையில் வைத்துத் தரப்படுகிறது!
தியாகராஜரையும் சீடர்களையும் அன்றிரவு தங்க வைக்க ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள், அலுவலர்கள்.
மறுநாள் காலையில் பல முறை அப்பனைத் தரிசனம் செய்து மகிழ்ந்த தியாகராஜர், "வேங்கடேச நின்னு சேவிம்பனு" என்று இன்னொரு கீர்த்தனையை மத்யமாவதி ராகத்தில் பாடுகிறார். திருமலையிலேயே வாழ்ந்து மறைந்த அன்னமாச்சார்யருக்கு மறக்காமல் தன்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறார்!
பின்பு எம்பெருமானிடம் பி்ரியாவிடை பெற்றுக் கொண்டு திருமலையை விட்டுக் கீழே இறங்கி, தம் ஆருயிர் நண்பரான கோவூர் சுந்தரேச முதலியாரைக் காணச் சென்னை நோக்கிப் பயணமாகிறார்!
வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் நின்றிருக்க,
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!!
மக்களே,
சென்ற ஞாயிற்றுக்கிழமை (Jan 27, 2008) நடந்த தியாகராஜர் நினைவு நாள் - ஆராதனையை ஒட்டி எழுதியதே இந்த இரண்டு பதிவுகள்!
தியாகராஜ ஆராதனையின் ஹைலட்டே (முக்கிய கட்டமே) "எந்தரோ மகானுபாவுலு" என்னும் கடைசிக் கீர்த்தனை தான்! கீழே யூ-ட்யூப் வீடியோவில் கண்டு மகிழுங்கள்!
பாட்டின் இறுதிக் கட்டத்தில், வெறும் கைத்தட்டல் ஓசை மட்டுமே தாளமாகக் கொண்டு முடியும் சூப்பர் காட்சி! தவறாது காணுங்கள் (Track position 05:00)!
எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனை எத்தனை மகான்கள், பக்தி உள்ளங்கள், இந்த ஞான பூமியில்! அத்தனை பேருக்கும் என் வந்தனங்கள்!
































