Showing posts with label தியாகராஜர். Show all posts
Showing posts with label தியாகராஜர். Show all posts

Monday, March 29, 2010

மாதவிப் பந்தலுக்கு கல்யாணமே! சீதா கல்யாண வைபோகமே!

என்னது? மாதவிப் பந்தலுக்குக் கல்யாணமா? எப்போ? எங்கே? ஹா ஹா ஹா! இதோ, இங்கே! போய் ஆசீர்வாதம் பண்ணிட்டு வரீங்களா? :)

* என் தோழி கோதைக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
* மாதவிப் பந்தலுக்கும், என் முருகனுக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!

இன்று பங்குனி உத்திரம்! (Mar-29,2010) !
பழனி மலையில் தைப்பூசக் காவடிகளை விட, பங்குனி உத்திரக் காவடிகள் அதிகம்!...காவடிக் கடல்!
அப்படி என்ன இருக்கு பங்குனி உத்திரம் அன்னிக்கு?-ன்னு யோசிக்கறீங்களா? கீழே படத்தைப் பாருங்க! சொல்ப சொல்ப, நூகே அர்த்தா கொத்தாகும்! :)



* தோழி கோதைக்கும் - அரங்கனுக்கும் திருவில்லிபுத்தூரிலே திருமணம் ஆகும் நாள்!
* என் ஒரு திரு முருகன், அவன் வள்ளியை மணக்கும் நாள்!
* சீதா கல்யாண வைபோகமே என்று சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் ஆகும் நாள்!

* பாற்கடலில் தோன்றி, அன்னை மகாலக்ஷ்மி, பெருமாளுக்கு மாலையிடும் நாள்!
* ஜகத் மாதா-பிதா, பார்வதி பரமேஸ்வரன் திருமண நாள்!
* பூலோக வைகுந்தமான திருவரங்கத்திலே, தாயாருடன் அரங்கன் சேர்த்தி காணும் திருநாள்!

இப்படித் திருமணத்துக்கென்றே தோன்றிட்ட திருநாள் பங்குனி உத்திரம்!
இரு மனம், ஒரு மனம் ஆகி, திரு மணம் ஆகும் திருநாள் = பங்குனி உத்திரம்!

இன்று...முருகனருள்-150 ஆம் பதிவு உதிக்கப் போகின்றது! சென்று சேர்மின்கள்!




சரி, நாம மாதவிப் பந்தல் கல்யாணப் பதிவுக்கு வருவோமோ? :)
இன்று மனத்துக்கினிய இராகவனுக்கும்-சீதைக்கும் கல்யாணம்-ன்னு சொன்னேன்-ல்ல?
சீதை கல்யாணம்-ன்னா என்ன பாட்டு? = சீதா கல்யாண வைபோகமே!

இந்தப் பாட்டைத் தொடாத சினிமா, மேடை, வீடே இல்லை! அப்படி மர்ம ஜாலங்கள் இருக்கு இந்தப் பாட்டில்! பதிவின் முடிவில் சினிமா, இசை என்று பலர் பாடிய தொகுப்பும் இருக்கு, பாருங்க!

இதை மெல்லிசா பாடும் போது...கல்யாணம் முடிஞ்ச கையோட...ரெண்டு பேரும் கைகோர்த்து, இணைபிரியாத அன்னங்கள் போல்,
அப்படியே, அடி எடுத்து வச்சி வராப் போலவே இருக்கும்! அவ்ளோ ஒரு Softness இந்தப் பாட்டில்!

இவ்ளோ மெல்லீசா, ஒரு பாட்டை யார் எழுதினா-ன்னு கேட்கறீங்களா? = நம் அனுமன் தான்!
தெலுங்கில் எழுதியது வேணும்-ன்னா = தியாகராஜரா இருக்கலாம்!
ஆனால், இது மூலமா சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் நடத்தி வச்சதே நம் அனுமன் தான்!

அட, அது எப்படிப்பா? அனுமார் காட்டுல தான் அறிமுகமே ஆவுறாரு?
அதுவும் சீதையத் தொலைத்த பின்பு?
அவர் எப்படி ரெண்டு பேருக்கும் கண்ணாலம் செஞ்சி வைச்சாரு-ன்னு கேட்கறீங்களா? இவனுக்கு டகால்ட்டி பண்றதே வேலையாப் போச்சு-ன்னு பாசமாத் திட்டறீங்களா? :)

ஹிஹி! கல்யாண நாள் அதுவுமா என்னைத் திட்டலாமா? பதிவின் இறுதியில் அனுமன் நடத்தி வைத்த கல்யாணம் பற்றிச் சொல்கிறேன்! இப்போ பாடலைக் கேட்போம்!


வழக்கம் போல் ஜீவனும்+மெட்டும் மாறாது, தமிழில் மொழியாக்க முயன்றுள்ளேன்! படிச்சி-கேட்டுப் பார்த்துட்டு பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!

இதைத் தமிழில் அழகாகப் பாடிக் கொடுத்தவர் யாரு-ன்னு நினைக்கறீங்க? = மீனாட்சி சங்கரன்!
ஞாபகம் இருக்கா? அம்மன் பாட்டு-100 க்கு பாடிக் கொடுத்தாரே! அவரே தான்!
தமிழாக்கச் சொற்களின் கோர்வையை, அழகாப் பாட்டில் கொண்டாந்து கொடுத்த அவருக்கு, அடியேன் இனிய நன்றி! இதோ...நீங்களே...கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

To Download

வரிகள்: தியாகராஜர்
ராகம்: குறிஞ்சி (அ) சங்கராபரணம்
குரல்: பலரும்

சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!

பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர

அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!

(சீதா கல்யாண)

பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பால

தாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்!
இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்!

(சீதா கல்யாண)

பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம

அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்!
அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்!

(சீதா கல்யாண)

சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர
கர்வ மானவ தூர, கனக அக தீர

பார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்!
சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்!

(சீதா கல்யாண)

நிகம ஆகம விஹார, நிருபம சரீர
நக தர அக விதார, நதலோக ஆதார

ஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்!
ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்!

(சீதா கல்யாண)

பரமேச நுத கீத, பவ ஜலதி போத
தரணி குல சஞ்சாத, தியாக ராஜ நுத

சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே!
தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே!

(சீதா கல்யாண)

பாடலின் பொருள் புரிவதற்காகத் தமிழில் கேட்டீர்கள்! மூலப் பாடலைத் தெலுங்கில் கேட்கலீன்னா எப்படி?
இதோ, தம்பி ராகவ் அனுப்பி வைத்த சுட்டி! குழுவாகப் பாடினாலும், கூச்சலாப் பாடாம, எவ்ளோ அனுபவித்து பாடுறாங்க-ன்னு நீங்களே பாருங்க!
கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு அவ சொன்னது சரியாத் தான் இருக்கு!

இதுக்குப் பேரு தான் குணானுபவம் = கூடி இருந்து குளிர்தல்!
பாடலின் முடிவில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த முகத் திருப்தி...
Dont miss this Mesmerizing Effect of Seetha Kalyana Vaibhogame! Just Watch it!





படங்களில் - சீதா கல்யாண வைபோகமே!

மலையாளம்:
படம்=பைத்ருகம்; குரல்=யேசுதாஸ்

அதே படத்தில், அதே பாடல் - சித்ரா


விளம்பரம்:
தனிஷ்க் நகைகள்; குரல்=ஹம்ஸிகா



இசைக் கருவிகளில் - சீதா கல்யாண வைபோகமே!

சாக்ஸோஃபோன் - கத்ரி கோபால்நாத்:


நாதஸ்வரம்:


கீ-போர்ட் - சத்யா:



பாடகர் குரலில் - சீதா கல்யாண வைபோகமே!

விசாகா ஹரி:


பாலமுரளி கிருஷ்ணா:


யேசுதாஸ்:


மகராஜபுரம் சந்தானம்:


விஜய் சிவா:


ராஜா ராம வர்மா



சரீரீரீ...அது என்ன அனுமன் நடத்தி வச்ச சீதா-ராம கல்யாணம்?
இராமாயணத்தில், மொத்தம் மூன்று இடங்களில் சீதை-இராமன் கல்யாணம் வருகிறது!
1. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் - மிதிலையில், தாய் வீட்டில் நடந்த திருமணம்!

2. அத்ரி மகரிஷியின் மனைவியான அனுசூயைக்கு, சீதையே தன் வாயால் விவரிக்கும் கல்யாணம் - சித்ரகூடம், காட்டில் "நடந்த" திருமணம்!

3. அன்னையை முதல் முதலாகக் காணும், நம் அன்பன் ஆஞ்சநேயன்...
தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போன நிலையில்...
வாடிய உடலும், முகமும், உள்ளமுமாய்...
அசோக மரத்தடியில், அந்தக் கொடி, இராகவம் என்னும் கற்பனைக் கொம்பில் படர்ந்து உயிர் வாழ...

அந்தச் சூழ்நிலையை, சுந்தர காண்டமாக ஆக்கி வைக்கிறான்...இந்தச் சுந்தர ஆஞ்சநேயன்!

தன் மனம் என்னும் மேடையில், அவளையும் அவனையும் ஏற்றி,
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ரா = அனுமானும் துதி செய்யும் புண்ணிய சரிதா!
* அன்று நடந்த கல்யாணத்தை, இன்று நடத்திக் காட்டி,
* அன்று நடந்த கல்யாணத்தை எல்லாம், இராகவன் சொல்லக் கேட்டு
* இன்று நடந்த கல்யாணம் போல், ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லி...
* அவளுக்கு, போன உயிரை இழுத்துப் பிடித்துப் பெற்றுத் தந்து...

கல்யாண நிறைவிலே...இதோ...அனுமன் என்னும் ஜீவன் தரும் கல்யாணப் பரிசு = கணையாழி! அவள் இணையாழி! துணையாழி! உடலாழி! உயிராழி! ஆழி ஆழி! உனக்கே நான் ஆழ ஆழி!

சீதா கல்யாண வைபோகமே! இராமா கல்யாண வைபோகமே!
பந்தல் கல்யாண வைபோகமே! கந்தன் கல்யாண வைபோகமே!!

Read more »

Sunday, March 23, 2008

***இசை இன்பம்: தமிழில் ஊஞ்சலாடும் தியாகராஜர்!

நீங்க எத்தனை பேர், நடுக் கூடத்தில் மரப்பலகை ஊஞ்சலில் ஆடி இருக்கீங்க? இல்லை யாரையாச்சும் உட்கார வச்சி ஆட்டி இருக்கீங்களா?
ஊஞ்சலில் தூங்கும் சுகம் என்னன்னு தெரியுமா? அப்பப்பா...! அப்படி ஒரு சாய்வு! இப்படி ஒரு சாய்வு! - சங்கிலிகள் உரசும் சத்தம்! கூடவே ஒரு சுகமான பாட்டு!

இப்பல்லாம் மர ஊஞ்சல் இருக்கான்னு தெரியலை! தோட்டத்துல மூங்கில் கூடையில் ஊஞ்சல் கட்டுறாங்க. அதுல ஆடினா ஒரே குத்தும்! :-) சரி குத்துதேன்னு அதுல ஏதாச்சும் மெத்தை போட்டா, அது கட்டில் ஆயிடுமே தவிர, அந்த ஊஞ்சல் சுகம் போயிடும்! ப்ளாஸ்டிக் கம்பி, இரும்புக் கம்பி போட்டெல்லாம் ஊஞ்சல் புதுப்புது அவதாரங்களில் பட்டினத்தில் வந்தாலும், எங்க கிராமத்து மர ஊஞ்சலுக்கு இருக்கும் மவுசே தனி தான்!

அந்த ஊஞ்சல் சங்கிலிகள் ஒவ்வொன்னும் நல்ல கனமா இருக்கும்! இடம் அடைக்காதபடி அதை சுவர்-ல இருக்கும் ஆணியில் தொங்க விட்டுறலாம்! பலகையைக் கழட்டி வச்சிடலாம்! வேணும் போது மட்டும், எங்க பாட்டி ரெண்டே நிமிஷத்தில் அசெம்பிள் பண்ணிடுவாங்க! :-)

கிழக்குவாசல் படத்துல ரேவதி சாம்பிராணிப் புகையில் தலைவிரித்து, ஊஞ்சலில் ஒய்யாரமாய் தூங்க, கார்த்திக் ஆட்டி விட்டு ஒரு பாட்டு பாடுவாரே! என்னாங்க அது?

இன்னிக்கி நாம பாக்கப் போற ஊஞ்சல் பாட்டு, சும்மானாங்காட்டியும் பாட்டு இல்ல! ஊஞ்சலில் ஆடுவதற்கே என்று ஒரு பாட்டு இருக்கு!
கேட்டுப் பாருங்க! அப்படியே ஊஞ்சலில் போய் வராப் போலவே இருக்கும்! நீலாம்பரி ராகத்தில்...உய்யால லூகவய்யா என்று பாடுகிறார். ஊஞ்சலும் கூடவே ஆடுகிறது! கூடவே அந்தக் க்றீச் க்றீச் சத்தம்!

தமிழில், தியாகராஜரை அணைக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாக....இதோ!

கிட்டத்தட்ட அதே மெட்டில் தமிழிலும் மொழியாக்கி உள்ளேன்.
அப்படியே தமிழில் ஹம் பண்ணிக்கிட்டே, அதே மெட்டு வருதான்னும் பாருங்க!

* தாலாட்டு - வேதவதி பிரபாகர் பாடுவது (nice)
** Saxophone-கத்ரி கோபால்நாத் (Must Hear!)
*** Clarinet - AKC Natarajan



பாடல்: உய்யால லூகவய்யா
எழுதியவர்: தியாகராஜர்
ராகம்: நீலாம்பரி
தாளம்: கண்டசாபு


உய்யால லூகவய்யா - ஸ்ரீராம
உய்யால லூகவய்யா
ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா
ஊஞ்சலில் ஆடுமய்யா


சய்யாட பாடலனு
சத்சார்வ பெளம
உடனுறங்கு பாடலதில்
உலகாளும் உத்தமா
(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

கமலஜாத்ய அகில சுருலு நின்னுகொலுவ
விமலுலைன முனீந்த்ருலு
த்யானிம்ப கமனீய பாகவதலு குணகீர்த்தன-முலு
நலபம்புல செய்யக

தாமரையில் நான்முகனும் தேவரும் உனைத்துதிக்க
முனிவர்களும் தியானிக் கவே
காமரும் குணங்களைக் காதலால் அடியவரும்
கீர்த்தனைகள் வாசிக் கவே

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

நாரதா துலு மெரயசு நுதியிம்ப சாரமுலு, பாகா......வினுச்சு.....
நின்னு நம்முவாரல சதா ப்ரோசுசு, வேதசார சபலனு சூசுசு, ஸ்ரீ்ராம

நாரதாதி முனிவரும் போற்றி-உனைப் பாடிடும்
சாரமதை நன்கு கேட்டு
நம்பியவர் தமைக்காக்க நான்மறைகள் ஓதிடும்
சபையிலுன் காட்சி கண்டு

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

நவமோகன ஆங்குலைன சுரசடுலு விவரமுக, பாடக நா பாக்யமா
நவரத்ன மண்டபமுன த்யாகராஜ வினுத, க்ருதி பூணின ஸ்ரீராமா

இளமுருகு வடிவழகு தேவியர்கள் விரிவாகப்
பாடவும் என் பாக்கியமா
நவரத்ன மண்டபத்தில் தியாகராஜன் வேண்டவும்
உருக் கொண்ட ஸ்ரீராமா

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)


அடிக்குறிப்பு:
தியாகராஜர் கிட்டத்தட்ட 600 சாகித்யங்களைச் செய்துள்ளார். அவர் தமிழில் செய்த சில சாகித்யங்கள் நமக்குக் கிடைக்காமற் போனது, நம் (என்) நற்பேறின்மையே!
சமதர்மத்தில் சத்குரு தியாகராசருக்கு நாட்டம் இருந்ததில்லை போலும்!
அவர் செய்த 600 சாகித்யங்களில்,
ராமன் மேல் செய்த பாடல்கள் 560க்கும் மேல்.
சிவபெருமான் மேல்=4-5,
பர்வதவர்த்தினி அம்பாள் மேல்=6-8,
இதர சிவாலயங்கள் கோவூர் திருவொற்றியூர் முதலானவை=10-15,
இன்ன பிற=5,
முருகப்பெருமான் மேல் செய்தருளியவை=0 (all figures approx)

இனி அடியேனின் ஒவ்வொரு பதிவுகளிலும் இப்படியே கணக்கு வாசிக்கப்படும்! வைணவம் தாண்டி அனைத்தையும் எழுதி என் கணக்கை நானே நேர் செய்து கொள்ளும் வரை இது தொடரும்!
வலையுலக ஆன்மீகத் தணிக்கைப் பெருமக்கள் அனைவரும் கருணை கூர்ந்து என் பதிவுகளைத் தணிக்கை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
Read more »

Wednesday, January 30, 2008

தியாகராஜ ஆராதனை: திருமலையில் தீ வைத்த பாட்டு! - 2

இறைவன்-திரை-தியாகராஜர்!
அந்தத் திரை கல்லால் ஆன மதில் போல் அப்படியே கெட்டியாக நிற்கிறதே! "ஏமிரா இது! ஈ பெத்த மொகோடு-கி எந்த அகங்காரம்? எந்த அகங்காரம்?" - அர்ச்சகர்கள் இப்போது கைப்பிடித்துத் தள்ளி விடாத குறையாக விரட்டுகின்றனர்! முந்தைய பாகம் இங்கே!

"சுவாமிகளே, திரை மட்டும் தானே போட்டு இருக்கீங்க! இன்னும் நடை சார்த்தி விடவில்லையே! தயவு பண்ணித் தரிசனம் செய்து வையுங்கள்!
அடியேன் பெயர் தியாகராஜன். காவிரிக் கரையான திருவையாற்றில் இருந்து வருகிறேன்! வழியெல்லாம் அவனைப் பார்க்கும் ஏக்கத்தோடயே வந்து விட்டோம்!
ஒரே ஒரு கணம் பெருமானைக் கண்ணாரக் கண்டுவிட்டு போய் விடுகிறோம்! மீண்டும் நாளை காலை வந்து ஆர அமரச் சேவிக்கிறோம். இப்போது நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணனும்!"

"ஓஹோ...நீங்க பக்தியில் அப்படியே உருகுறவரோ?
போதும் போதும்யா உருகினது! நாளைக்கு உருகறத்துக்குக் கொஞ்சம் மிச்சம் மீதி வச்சிக்குங்க! இப்போ ஜருகண்டி! ஜருகண்டி பாபு!"


தியாகராஜரும், அவரது மூன்று சீடர்களும் சற்றே தயங்கி நிற்கிறார்கள்!
"அர்ச்சகர்களே! இவர் பெருமை அறியாமல் பேசுகிறீர்கள்!
இவர் சங்கீத மேதை, நாதப் பிரம்மம், திருவையாறு தியாகராஜ சுவாமிகள்! தஞ்சாவூர் மகாராஜாவின்...." அவர்கள் சொல்லி முடிப்பதற்குள், சன்னிதியில் சுய பிரதாபங்கள் தேவையில்லை என்று தியாகராஜர் தடுத்து விடுகிறார்.

"நீங்க யாரா இருந்தா எங்களுக்கென்ன? உங்களைப் பார்த்தா அப்படி ஒன்னும் செல்வாக்கு இருக்குற மாதிரி எல்லாம் தெரியலையே! பஞ்சத்தில் அடிபட்டவங்க மாதிரி இருந்துகிட்டு, பேச்சு மட்டும் நீளுகிறதே?
இப்படி இங்கேயே நின்னுன்டு இருந்தீங்கன்னு வச்சிக்கோங்க, வாசக் கதவைப் புடிங்கிண்டு வந்து உங்க எல்லாரையும் பெருமாள் பாத்துருவாரு! ஹாஹா ஹாஹா!" - கேலியாகச் சிரிக்கிறார் பட்டை நாமம் போட்ட ஒரு அர்ச்சகர்.

"ஐயா பக்த சிகாமணிகளே! உங்களை எல்லாம் பார்க்காம பெருமாள் ஒன்னும் கரைஞ்சிப் போயிட மாட்டாரு! மனசுக்குள்ள அப்படியே பெரிய ஆழ்வார்-ன்னு நெனைப்பா? என்னமோ அப்படியே ஏங்கறாங்களாமில்ல ஏங்கறாங்க!" - இன்னொரு அர்ச்சகரும் கேலியில் சேர்ந்து கொள்கிறார்.

வாலாஜாப்பேட்டை வேங்கடரமணன் என்னும் சீடனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது! "இன்னும் அர்த்த ஜாம பூஜை கூட முடியவில்லை! அதற்குள் நீங்கள் எப்படி நடையை மூடலாம்?"
"இத்தனை பக்தர்களையும் முதலில் எதுக்கு உள்ளே வர விட்டீங்க? கோயிலை மூடுவதாய் இருந்தால் வாசலிலேயே தடுத்து இருக்கலாமே! உங்கள் சவுகரியத்துக்கு, எல்லாம் செய்து விட்டு, இப்போது ஏளனம் வேறு செய்யறீங்களா? ஜாக்கிரதை!"

தியாகராஜர் வேங்கடரமணின் கையைப் பற்றிக் கொள்கிறார். "வேண்டாம் ரமணா வேண்டாம்! விட்டுவிடு!
ஆலயத்தில் ஜாக்கிரதை அது இதுன்னு அந்நிய வார்த்தைகளை எல்லாம் பேசாதே! நம் அப்பனின் வீட்டில், நாமே அப்படி நடந்து கொண்டால் நல்லாவா இருக்கு?
இப்போ என்ன? நாம் தான் அவனைப் பார்க்கவில்லையே தவிர, அவன் நம்மை எல்லாம் பார்த்திருப்பான் அல்லவா! அது போதும்! வா போய் விடலாம்! நாளை காலையில் திரும்பி வருவோம்!"

"ஆகா, சாது மாதிரி என்னமா நடிக்கறாருப்பா! புனித பிம்பம்-னு இதைத் தான் சொல்லுறாங்க போல!
போன்னு சொன்னா உடனே போகாம, எங்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டியதே நீங்க தான்! இப்போ அடிபட்ட குழந்தை போல் வேஷம் போடுறீங்களா? நகருங்கள் இங்கிருந்து! இதுவே இறுதி எச்சரிக்கை!!"



தியாகராஜரும் சீடர்களும் வந்த வழியே திரும்பி வந்து, திருமாமணி மண்டபத்தில் நின்று கொள்கிறார்கள்.
தியாகராஜர், துவார பாலகர்களான ஜய விஜயர் இருவரையும் பார்க்கிறார். எதிரில் கை கூப்பி நிற்கும் கருடனைப் பார்க்கிறார்! சதா சர்வ காலமும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்! நீங்கள் செய்த புண்ணியமே புண்ணியம் என்பது போல அவர் கண்கள் பனிக்கின்றன.

"குருவே, நீங்களே இப்படி நாலு பேர் பார்க்கிறா மாதிரி அழலாமா? உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க! வருவது வரட்டும்!
வேகமாக ஓடிப் போய், படீர்னு திரையை விலக்கி விடுகிறேன்! அந்தக் கண நேரத்தில் நீங்க பெருமாளைப் பார்த்து விடுங்கள்!"

"வேண்டாம் ரமணா! வேண்டாம்!
இது அவங்க போட்ட திரை-ன்னு தானே நினைச்சுகிட்டு இருக்கே! இல்லை!!
இது எனக்கு நானே போட்டுக் கொண்ட திரை!!

எந்தப் பிறவியில்...எந்தப் பக்தனை ஆணவத்தால், மனம் நோகப் பேசினேனோ? அது எல்லாம் ஒன்னாச் சேர்ந்து, இப்படித் திரையாக வந்து முன்னால் தொங்குது!
எப்பவும் மற்றவர்கள் மனம் வலிக்கப் பேசுகிறோமே! ஆனா நமக்குன்னு வலிக்கும் போது தானே வலி-ன்னா என்னன்னு தெரியுது!"
பெருமாளே! தயா சிந்து! உன்னை ஆசை ஆசையாய்த் தேடி வந்தவனைத் தள்ளி நிற்க வைத்து ஒரு புதிய கீதை சொல்கிறாயா நீ?"

திருவையாறு காவிரி ஆறு, தியாகராஜர் கூடவே புறப்பட்டு வந்துவிட்டதா என்ன? அவர் கண்களில் அப்படி ஒரு ஆடிப் பெருக்கு! எந்தப் பொறியாளனால் இதுக்கு அணை கட்ட முடியும், சொல்லுங்கள்? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்!
நாதப் பிரம்மத்துக்கு நா எழவில்லை! பா எழுந்தது!! - தெர தீயக ராதா!!


115858699_771cce968c

தெர தீயக ராதா...நா லோனி
திருப்பதி வேங்கட ரமணா...மத்சரமுனு

(தெர தீயக ராதா)
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதி - நா லோனி

(தெர தீயக ராதா)

(பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்கலாம்....)
* மதுரை மணி குரலில்
** எம்.எஸ்.அம்மா குரலில்
*** ரஞ்சனி-காயத்ரி யூ-ட்யூப் வீடியோ

திரை விலக்க மாட்டாயா - என்னுடைய
திருப்பதி வேங்கட ரமணா...தீய எண்ணத்
(திரை விலக்க மாட்டாயா)

பரம புருஷா, தர்மாதி மோட்சம் தன்னை
பற்ற விடாது, அடாது செய்யும் - என்றன்

(திரை விலக்க மாட்டாயா)

வலை தனை அறியாமல் - விலங்கினங்கள்
வகை யாய்ச் சிக்கினவே - நானும் உன்றன்
தயவால் குறிப்பறிந்தேன் - அனுசரித்தே
தியாகராஜன் வேண்டுகிறேன் - தீய எண்ணத்

(திரை விலக்க மாட்டாயா)




கெளளிபந்து ராகத்தில், தியாகராஜர் உள்ளம் எரிந்து பாடுகிறார்.....
பற்றி எரிகிறது திரை!
சுற்றி எரிகிறது திரை!

கண்மூடிக் கண் திறப்பதற்குள்.....

குபுகுபு என்று தீ பற்றிக் கொண்டது திரையில்!
கருவறைக்கு முன்னுள்ள பட்டுத் திரை சில நிமிடத்தில் அறுந்து, விழுந்து.....பஸ்பமாகிப் போனது!
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்! - என்று கோதை சொன்னது உண்மை தானோ?
எம்பெருமான் கருவறை விளக்குகள் எல்லாம் இன்னும் ஒரு படிச்சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன!

பெருமானின் ஏகாந்த சேவை! - அர்ச்சகர்கள் செய்து வைக்காத சேவையை, அன்பு செய்து வைத்தது!
தியாகராஜர் மூச்சடைத்து நிற்கிறார்!
சீடர்கள் பேச்சடைத்து நிற்கிறார்கள்!
அர்ச்சகர்கள் அரண்டு போய் கதிகலங்கி நிற்கிறார்கள்!!
அங்கிருந்த இதர பக்தர்கள் ஆகாகாரம் செய்கிறார்கள்!!
கோவிந்தா என்னும் கோஷம் போடக்கூட யாருக்கும் நாக்கு வரவில்லை! ஆனால் அனைவருக்கும் கைகள் மட்டும் தன்னை அறியாமல் தலைக்கு மேல் போகின்றன!

தியாகராஜரின் கண்களுக்குத் தன்னையே தான் நம்ப முடியவில்லை! எல்லாரும் ஆகா ஓகோ என்று சொல்லும் இவனா....அந்தத் திருவேங்கடமுடையான்?......
முதல் முறை பார்க்கிறார் அல்லவா? உடம்பு கிடுகிடு என்று நடுங்குகிறது!
கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே!
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே!
பெரிய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!
நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!


இவன் சக்ரவர்த்தி திருமகன் இராமன் போலவே தெரிகிறானே! கெளசல்யா சுப்ரஜா "ராமா" என்றல்லவா இவனை எழுப்புகிறார்கள்! ஆம்! இவன் இராமனே தான்! வேங்கட ராமன்! வேங்கட ரமணன்!
நான் அன்றாடம் போற்றிய இராமனே தான் இவன்! - அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுகிறார்! சீடர்கள் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்!

அர்ச்சகர்கள் கருவறைக்குள் செல்லவே பயப்படுகிறார்கள்!
சற்று முன்னர் தானே, எரியும் திரையைக் கண்டார்கள்? அதான் உள்ளே செல்ல அப்படி ஒரு நடுக்கம்! ஒருவர் மட்டும் ஓடி வந்து சீடன் வேங்கடரமணனிடம் மன்னிப்பு கேட்கிறார்!
மயக்கம் போக்கத் தண்ணீர் தேவைப்படுகிறது! எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்த மனிதர் கருவறைக்குள் ஓடிச் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருகிறார்!

நீர் தெளிக்கப்பட, தியாகராஜரின் மயக்கம் தெளிகிறது! அர்ச்சகர்கள் எல்லாரும் ஓடோடி வந்து மன்னிப்பு கேட்கிறார்கள்! அதன் பின்னரே, ஏகாந்த சேவையை முறையாகச் செய்து வைத்து நடை சாத்துகிறார்கள்!
பக்தர்கள் அனைவருக்கும் இரவு நேரப் பிரசாதம் - திராட்சை முந்திரிகள் தூவிய கெட்டிப் பாலும்-பழமும், தொன்னையில் வைத்துத் தரப்படுகிறது!
தியாகராஜரையும் சீடர்களையும் அன்றிரவு தங்க வைக்க ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள், அலுவலர்கள்.

மறுநாள் காலையில் பல முறை அப்பனைத் தரிசனம் செய்து மகிழ்ந்த தியாகராஜர், "வேங்கடேச நின்னு சேவிம்பனு" என்று இன்னொரு கீர்த்தனையை மத்யமாவதி ராகத்தில் பாடுகிறார். திருமலையிலேயே வாழ்ந்து மறைந்த அன்னமாச்சார்யருக்கு மறக்காமல் தன்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறார்!
பின்பு எம்பெருமானிடம் பி்ரியாவிடை பெற்றுக் கொண்டு திருமலையை விட்டுக் கீழே இறங்கி, தம் ஆருயிர் நண்பரான கோவூர் சுந்தரேச முதலியாரைக் காணச் சென்னை நோக்கிப் பயணமாகிறார்!

வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் நின்றிருக்க,
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!!



மக்களே,
சென்ற ஞாயிற்றுக்கிழமை (Jan 27, 2008) நடந்த தியாகராஜர் நினைவு நாள் - ஆராதனையை ஒட்டி எழுதியதே இந்த இரண்டு பதிவுகள்!
தியாகராஜ ஆராதனையின் ஹைலட்டே (முக்கிய கட்டமே) "எந்தரோ மகானுபாவுலு" என்னும் கடைசிக் கீர்த்தனை தான்! கீழே யூ-ட்யூப் வீடியோவில் கண்டு மகிழுங்கள்!
பாட்டின் இறுதிக் கட்டத்தில், வெறும் கைத்தட்டல் ஓசை மட்டுமே தாளமாகக் கொண்டு முடியும் சூப்பர் காட்சி! தவறாது காணுங்கள் (Track position 05:00)!

எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனை எத்தனை மகான்கள், பக்தி உள்ளங்கள், இந்த ஞான பூமியில்! அத்தனை பேருக்கும் என் வந்தனங்கள்!

Read more »

Saturday, January 26, 2008

தியாகராஜ ஆராதனை: குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா! - 1

நீங்க ரொம்பத் தொலைவில் இருந்து ஒரு பெரிய ஊருக்கு வந்திருக்கீ்ங்க. மிகவும் களைப்பான பயணம். திரும்பிச் சென்று பயணக் கட்டுரை எல்லாம் வேற போடணும்! அந்த ஊரில் இருப்பதோ மிகவும் பிரபலமான கோயில். உங்களுக்கு மிகவும் புடிச்ச சாமி வேற! மதியம் கோயிலை மூடி நடை சாத்தப் போறாங்க. இன்னும் அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு! சரின்னு, ஓய்வு கூட எடுத்துக்காம நேராக் கோயிலுக்கு ஓடறீங்க!

அங்க போயி அப்படி சன்னிதானத்துக்குள் நுழைஞ்சீங்களோ.....இல்லையோ, அர்ச்சகர் கதவைப் படார்னு சாத்திடறாரு! - எப்படி இருக்கும் உங்களுக்கு?

கைக்கடிகாரத்தைப் பார்க்கறீங்க...மணி 11:10 தான் ஆவுது! பொதுவா 11:30 மணிக்குத் சாத்தறது தான் அங்கிட்டு வழக்கம்! அன்னிக்கி மட்டும் என்ன பிரச்சனையோ! ஐயா சாத்திப்புட்டாரு! உடனே நீங்க என்னவெல்லாம் பேச ஆரம்பிப்பீங்க? அதுவும் நீங்க ஒரு பெரும்புள்ளியாகவோ இல்லை பெரிய பெரிய ஆளுங்களைத் தெரிஞ்சவராகவோ இருந்தீங்கன்னா? அப்படியே கற்பனையில் ஓட்டிக் கொள்ளுங்கள்! :-)

இசை உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரின் அஞ்சலி நாள் இன்று! அவர் பாட்டுடன் ராகம் போல், இறைவனுடன் கலந்த நாள்; புஷ்ய பகுள பஞ்சமி.
இன்னிக்கி தியாகராஜ ஆராதனை! (Jan 27, 2008). மேலே சொன்னது போல் அவர் வாழ்விலும் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி நடந்திருக்கு! பார்ப்போம், வாங்க!


சங்கீத மும்மூர்த்திகளில் இன்று முதலாவதாக வைத்துப் போற்றப்படும் தியாகராஜர், அன்றோ பரம ஏழை! அவருக்கோ "நிதியை" விட "சந்-நிதியே" சுகமாய் இருந்தது!

அவருடைய பாடல்கள் கொஞ்ச கொஞ்சமாய் வெளியில் பரவ ஆரம்பித்த போது தான், அவருக்கென்று சில சீடர்கள் வந்து சேர்ந்தனர். ஆனா குருதட்சிணை வாங்கிச் சம்பாதிக்கத் தெரிய மாட்டாமல், நாளொரு இராமன் பொழுதொரு இராமனாகவே இருந்தாரு தியாகராஜர்.

அன்னிக்கு என்னமோ திடீரென்று அவருக்குத் திருப்பதி யாத்திரைக்குப் போகணும் போல ஒரு உணர்வு! இதுவரை போனதே இல்லை!

அவர் இருப்பதோ தென் தமிழ்நாட்டில்! அதுவோ வட வேங்கடம்! தஞ்சாவூருக்குப் பக்கத்தில் இருக்கும் திருவையாறு கிராமத்தில் இருந்து, வண்டி கட்டிக்கிட்டுப் போகணும்னாக் கூட குறைஞ்சது ஏழு நாளாச்சும் ஆகும்! கைச்செலவுக்கு காசு வேறு வேணும்! என்ன செய்யலாம்?...தள்ளிப் போடலாம்!
அன்றிரவு புரண்டு புரண்டு படுக்கிறார்! தூக்கமே வரலை! ஏன் திடீர்னு இப்படி ஒரு உந்துதல்? இராமனிடம் மட்டுமே லயித்த தன் மனம், இன்று வேங்கடவனைக் காணத் துடிப்பது ஏனோ? ச்சே...எல்லாம் அந்தச் சிறுவனால் வந்தது!


போன வாரம் திருவையாற்றுக்கு வந்திருந்த அந்தப் பொடிப் பையன் என்னமாப் பேசி விட்டான்! திருவரங்கம் இராமானுச மடத்தில் இருந்து ஊர் ஊராய் போய்த் தொண்டு செய்யறவன் போல! பேச்சு வாக்கில் வேங்கடவன் கோலமும் இராமனின் கோலமும் எப்படி எல்லாம் ஒத்துப் போகுது என்று அவன் சொல்லச் சொல்ல...இப்படி ஒரு ஆவல் தம்மைப் பற்றிக் கொண்டு விட்டதே!



வேங்கடவனுக்கும் இராமனைப் போல் அதே சடைமுடி! இன்றும் சடைமுடியைச் சற்றே தூக்கி விட்டுத் தானே நீராட்டுகிறார்கள்! மூர்த்தியின் தோளிலே காணப்படும் வில் ஏந்திய தழும்பு!

அதே கஸ்தூரி திலகம்! மார்பில் அதே திருமறு மச்சம்!
முழங்கால் வரை அதே போல் நீண்டு தொங்கும் கைகள்! அதே போல் மெல்லிய புன்சிரிப்பு!
இராமனுக்கு ஒரு சபரித் தாய் என்றால் இவனுக்கோ ஒரு வகுளைத் தாய்!
சபரி எச்சில் பழத்தை இராமனுக்குக் கொடுத்தாள்; அவனும் உண்டான்!
இந்த வகுள மாலிகையும் ருசியைச் சோதிக்க பழத்தைக் கடித்துப் பார்த்துக் கொடுக்கிறாள்! அதை இவனும் உண்கிறானே!

அனுமன் அவதரித்த மலை தானே திருமலை! இராமன் இல்லாமல் அங்கு அனுமன் தோன்றுவானா என்ன?
மேலும், மதுரையில் இருந்து வந்த ஒரு இராமனின் உற்சவ மூர்த்தியைத் திருமலைக் கருவறையில் இராமானுசர் நிறுவி இருக்காராமே!....


இப்படி எல்லாம் யோசித்து யோசித்து, உறங்காமலே உறங்கிக் கொண்டிருக்கும் தியாகராஜருக்கு, சிற்றஞ்சிறு காலை ஒரு வழியாய்ப் புலர்ந்தது!
சிற்றஞ்சிறு காலை, "வந்துன்னைச் சேவிக்க ஒரு வழியும்" சேர்த்தே புலர்ந்தது!...

சென்னையில் இருந்து தன் பரம ரசிகர், கோவூர் சுந்தரம் முதலியார், கொஞ்சம் பொருள் கொடுத்து ஒரு ஓலையும் உடன் அனுப்பி இருக்கிறார்!

திருமலை யாத்திரைக்குத் தியாகராஜர் சென்று வரவேண்டும்; அப்படியே வரும் வழியில் சென்னைக் கோவூரில் உள்ள தன் இல்லத்துக்கு வந்து அளவளாவ வேண்டும் என்றும் எழுதியுள்ளார். அந்தக் கோவூரில் உள்ள சிவபெருமான் மேல் தியாகராஜர் வாயால் சில பாடல்கள் பாட வேண்டும் என்று ஓலையில் தனியாக விண்ணப்பம் வேறு வைத்துள்ளார்.

அட, ரெண்டு நாளுக்கு முன்னால் தானே நமக்கே திருப்பதி போகணும்-னு தோனிச்சி? அதுக்குள்ள முதலியாருக்கு யாரு சொல்லி இருப்பா?
சரி, அப்படியே யாராச்சும் சொல்லி இருந்தால் கூட, சென்னையில் இருந்து திருவையாறு வருவதற்கே அஞ்சு நாள் ஆயிடுமே! - ஒன்றுமே புரியவில்லை தியாகராஜருக்கு! சரி.....இறைவன் திருவுள்ளம் வைத்ததால் தான், தரிசன பாக்கியம் அமைகிறது போலும் என்று நினைத்துக் கொண்டார்.

தம் சீடர்கள் சிலருடன் உடனே கிளம்பி விட்டார். திருமலை யாத்திரை கிளம்பும் முன் மறக்காமல் தன் குலதெய்வத்தையும் வழிபட்டுவிட்டு, பின்னரே கிளம்பினார்.
திருவையாறு, கும்பகோணம், கடலூர்,
விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி,
காஞ்சிபுரம், திருத்தணிகை, புத்தூர்,
ரேனிகுண்டா, சந்திரகிரி, நாகலாபுரம் என்று எல்லா ஊர்களையும் தாண்டி இதோ வந்து விட்டார்கள் திருமலையின் அடிவாரம்!



திருச்சுகனூர் குளக்கரையில் அன்னையை - அலர்மேல் மங்கையைக் கண்ணாரக் கண்டாகி விட்டது! இனி அப்பனைக் காண்பதொன்றே கருத்து! அடிவாரத்தில் ஆழ்வார்களை வணங்கி விட்டு, கிடுகிடுவென்று மலை ஏறுகின்றார்கள் குருவும் சீடர்களும்! அச்சோ, எங்கும் இருள் சூழ்ந்து விட்டதே!

தியாகராஜருக்கும் சற்றே வயதாகி விட்டதல்லவா? முன்போல் அவ்வளவாக நடக்க முடியவில்லை! ஆனாலும் ஆசை விடவில்லை! ஆசை உந்த உந்த, உலகத்தில் "முடவனுக்கும்" வாழ்க்கை "நடக்கிறது" தானே?
தியாகராஜரையும் ஆசை தான் உந்தி உந்தித் தள்ளியது! எந்த ஆசை? பொன்னாசையா? பணத்தாசையா? புகழாசையா? சரி....இசை ஆசையா? - உம் அது கூட இல்லை! பின் எது?
நோயே பட்டு ஒழிந்தேன், "உன்னைக் காண்பதோர் ஆசையினால்"!
நாயேன் வந்து அடைந்தேன், நல்கி என்னை ஆட்கொண்டு அருளே!!
- மெல்லப் பாசுரம் முணுமுணுக்கப்படுகிறது!

இதோ ஏழு மலையும் ஒருவழியாக ஏறி விட்டனர்! இரவும் நன்கு கவிந்து விட்டது! ராத்திரி ஆகி விட்ட படியால், சுவாமி புஷ்கரிணி எனப்படும் கோனேரியில் யாரும் நீராடவில்லை! கை கால்களை மட்டும் சுத்தம் செய்து கொள்கின்றனர்! அது மட்டும் தானா? யாருமே மனதைச் சுத்தம் செய்து கொள்ளவில்லையா என்ன?....அன்று தியாகராஜருக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை! அவர் மனத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டு இருக்கு!

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்து மிட்டேன்!
பெரியேன் ஆயின பின் பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!!

கரிசேர் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா!
அரியே வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டு அருளே!!


குளத்தின் நன்னீரால் சுத்தமாவதற்கு முன்பே, அந்தப் பாசுரத்தைக் கேட்டு வந்த கண்ணீரால், மனது எப்போதோ சுத்தமாகி விட்டது!
குளத்தின் கரையில் உள்ள வராகப் பெருமாளை முதலில் தரிசனம் செய்து விட்டு, அனைவரும் ஓடோடிச் செல்கின்றனர் கோபுர வாசலுக்கு!

தங்க வாசல் தாண்டி இதோ ஆனந்த நிலையத்துக்குள் வந்தாகி விட்டது! சற்றுக் கண் திரும்பினால் போதும், வைத்த மா நிதி கிடைத்து விடும்! எம்பெருமான் அகப்பட்டு விடுவான்! அதோ தீப ஒளி தெரியுது! பச்சைக் கர்ப்பூர வாசனை துளைக்குது!
இதோ கரியவன், நெடியவன் தெரிகி..... ஐயகோ! இது என்ன கொடுமை?
அர்ச்சகர்கள் வேகம் வேகமாகத் திரையை இழுத்துச் சரேல் சரேல்-ன்னு மூடுறாங்களே?.....முழுக்க மூடியாகி விட்டது! ஒன்னுமே தெரியலை!

அன்று ஏனோ, அர்ச்சகர்கள் கடுகடு என்று உள்ளனர்! கொஞ்சம் கூடச் சிரிப்பு இல்லை!! - உம்...எல்லாரும் வெளியே போங்க! போங்க!! இத்தோட நாளைக்குக் காலையில் தான்!
அடப் போங்கைய்யா! எத்தன வாட்டிய்யாச் உங்களுக்கெல்லாம் சொல்லுறது? கேக்கவே மாட்டீங்களா? ஜருகும்மா ஜருகு! பதண்டி பதண்டி!! எவரய்யா அக்கட? வெள்ளு, வெள்ளு!
ஏம்பா...பெரியவரே...காது என்ன செவிடா? உனக்கு மட்டும் தனியாச் சொல்லனுமா? போ...போ!!

தியாகராஜர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் ஒழுகுது! யாராவது திட்டினால் இந்த மனுசன் திருப்பித் திட்ட வேண்டியது தானே? அதை விட்டுட்டு, ஏன் இப்படிக் கண் கலங்குறார்?

ஆசையாய்ச் சாப்பிட உட்கார்ந்த குழந்தையின் தட்டைத் தட்டி விட்டால் எப்படி இருக்கும்?
காதலனைக் அன்புடன் காண வந்த காதலியை, இழித்துப் பேசினால் எப்படி இருக்கும்?
ஆருயிர் நண்பனைக் காணச் சென்ற நண்பனை, முகத்தில் கதவடைத்தால் எப்படி இருக்கும்?
அப்பாவின் மடியில் ஓடோடி உட்காரப் போன பிள்ளையைக் கால் இடறி விட்டால் எப்படி இருக்கும்??

எம்பெருமானுக்கும் தியாகராஜருக்கும்.....இடையே.....அந்தக் கரிய பெரிய திரை!!!

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...
குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா!

(திரை விலகுமா?...அடுத்த பாகத்தில்!)



Read more »

Sunday, January 07, 2007

திருவையாத்துச் சாமீ ஆராதனைங்களா? - எந்தரோ மகானுபாவுலு!

சுந்தரத் தெலுங்கு என்று ஒரு காலத்தில் பாடி வைத்தான் பாரதி. தெலுங்கு தெரியுமோ தெரியாதோ, ஆனால் "எந்தரோ மகானுபாவுலு" என்ற சொற்றொடர் மட்டும் நம்மில் பல பேருக்குத் தெரியும்!
எந்தரோ மகானுபாவுலு - அப்படின்னா என்ன?

இசை உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரின் அஞ்சலி, ஆராதனை இன்று! (Jan 8 2007)
அவர் பாட்டுடன் ராகமாய், இறைவனுடன் கலந்த நாள்; புஷ்ய பகுள பஞ்சமி.

தமிழிசை, இந்துஸ்தானி, கர்நாடக இசை, மெல்லிசை என்று இப்படி எந்தத் துறையில் இருந்தாலும் எல்லாரும் மதித்துப் போற்றி வழிபடும் ஒருவர் ஸ்ரீ தியாகராஜர். அவருக்கும் முன்பாகவே பல கலைஞர்கள் இசையில் கொடி கட்டிப் பறந்துள்ளனர். ஆனால் யாருக்கும் இப்படி ஒரு உன்னத நிலை அமையவில்லை! ஏன்?

உள்ளார்ந்த பக்தியை இசைப்பாடல்களாக வெளிப்படுத்தியவர்.
அவர் இசையில் தான் எத்தனை எத்தனை புதுமைகள் செய்தார்!
எவ்வளவு கஷ்டமான ராகங்களையும், தன் இனிய மெட்டால் எத்தனை எளிமை ஆக்கினார்!

115858699_771cce968c

பணத்தின் மு்ன்னோ, அரசாங்க ஆணையின் முன்னோ, பெரிய மனிதர்களின் சிபாரிசின் முன்னோ, பளபள சரிகை வேட்டிகளின் முன்னோ, பணிந்து வளைந்தாரா இவர்? இல்லையே! மெல்லிய தேகத்தில் தான் எத்தனை வல்லிய மன உறுதி.

நாம் எல்லாம் இன்று தானே, தினம் ஒரு பதிவு போடுகிறோம்! ஆனால் தியாகராஜர் அன்றே தினம் ஒரு பாடல், கவிதை எழுதியவர்!
தேர்ந்த வித்வான்கள் எல்லாம் அவர் பாடல்களை அலசி அராய்ந்து சாரமாய்ப் பொழிய முடியும்.
இல்லை என்றாலும் அந்நியன் படக் காட்சிகள் போல் கிண்டல், நையாண்டி செய்தும் மகிழலாம்! :-)
ஆனால் கிராமத்தில் வாழும் சாதாரண மக்கள் அவர் பாடல்களைப் பாடி மகிழ்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கூட்டமில்லாத நாட்களில் திருவையாறு சென்று பாருங்கள், தெரியும்!
சுத்துப் பட்டு கிராமங்கள், சுந்தர பெருமாள் கோவில், கபித்தலம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் இன்னும் பல இடங்களில் இருந்தும் கிராமத்து மக்கள் யாராச்சும் வருவார்கள்; வந்துக் காவிரிக் கரையோரமாக உட்காருவார்கள்.
"நீ தய ராதா", "சீதம்மா, மாயம்மா", "ரா ரா மா இண்டி", என்று ஏதாச்சும் ஒரு எளிமையான பாட்டை நீட்டி முழக்கிப் பாடிக் கொண்டிருப்பார்கள்!
அவர்களிடம் போய் இது என்ன ராகம் என்றெல்லாம் கேட்டு வைக்கக் கூடாது!:-)

கச்சேரிகளில் கூட இப்படி ரசித்துக் கேட்டிருக்க மாட்டீர்கள்! ஆனால் இங்கே சர்வ சாதாரணமாக, "Casual " என்று சொல்கிறோமே, அது போலப் பாடிக் கொண்டிருப்பார்கள்! அவர்கள் வீட்டு விசேடங்களுக்குச் சென்று பாருங்கள்.
நலங்கு, ஆரத்தி, அழைப்பு இப்படி எல்லாத்துக்கும் இவர் பாட்டு தான். "சீதா கல்யாண வைபோகமே" என்று பாடாவிட்டாலும், வாய்விட்டு சொல்லாதவர் தான் யார்!

இப்படி மக்கள் கலைஞராக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் தியாகராஜர்!
காவிரிக்கரைச் சாமீங்களா, திருவையாத்துச் சாமீங்களா என்று தான் அவர்கள் எல்லாரும் பாசத்துடன் கேட்கிறார்கள்!

நம் அபிமானத்தால் இறைவனைப் பீடத்தில் ஏற்றினாலும் அவன் எங்கும் பரந்து விரிந்து இருக்கிறான் அல்லவா?
அதைப் போலேவே தியாகராஜரின் பக்தியும் இசையும், கச்சேரிகளையும் தாண்டி நிற்கும்;
எங்கும் பரந்து விரிந்து, எளிய மக்களின் மனங்களில் நிழலாடிக் கொண்டே இருக்கும்!


எந்தரோ மகானுபாவுலு! = அன்பால் உயர்ந்த பக்தர்கள் தான் எத்தனை பேர் இந்த உலகத்தில்? அவர்களுக்கு முன்னால் இந்த அடியேன் எங்கே? (எனக்கு மட்டும் ஏன் இந்த போலி அகங்காரம், திமிர் எல்லாம்?)
அந்தரிகி வந்தனமுலு! = அவர்கள் அத்தனை பேரையும் அடியேன் வணங்குகிறேன்!

இது மிகவும் முக்கியமான பாடல்! பணிவு ஒன்றையே பண்பாகக் கொண்ட தொண்டர்களின் பெருமையைப் பற்றிப் பாடும் பாடல் அல்லவா?
கீழே அவருடைய ஆராதனையில், "எந்தரோ மகானுபாவுலு" என்று பாடப்படும் காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

பழைய DD Recording என்று நினைக்கிறேன்.
அன்றைய பல முன்னணி இசைக் கலைஞர்கள், மற்றும் சினிமாக் கலைஞர்கள் தெரிகிறார்கள். யார் யார் என்று நீங்க தான் பார்த்துச் சொல்லணும்! :-)
ஒரு சிலர் என்ன பட்டுப்புடைவை, என்ன அட்டிகை, என்ன நகை, என்ன மோதிரம் தெரிகிறது என்றும் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்வதையும் பார்த்திருக்கிறேன்:-)

ஆனால் அந்தக் கூட்டத்திலும் முகம் தெரியாத ஒருவர் உட்கார்ந்து ஆழ்ந்து பாடிக் கொண்டிருக்கலாம்! அவருக்கும் நம் வந்தனங்கள்!!
கடைசியில் மிக முக்கியமான ஒரு பத்திக்கு மட்டும் விளக்கம் தந்துள்ளேன்; அதில் பலப்பல பக்தர்களையும் வரிசைப்படுத்திப் பாடி வணங்குகிறார் தியாகராஜர்! நாமும் வணங்குவோம்!!

பகுதி-1


பகுதி-2


வீடியோவிற்கு நன்றி: CoolCrave


7 ஆம் சரணம்:
பரம பாகவத மௌனி வர சசி
விபாகர சனக சனந்தன
திகீ்ச சுர கிம்புருஷ
கனகக சிபு சுத நாரத தும்புரு

பவன சுனு பால சந்திர தர சுக
சரோஜ பவபூ சுரவருலு

பரம பாவனுலு கனுலு சாச்வதுலு
கமல பவ சுகமு சதானு பவுலு காக

(எந்தரோ மகானுபாவுலு)

பரம பாகவத = பெரும் பக்தர்கள், அடியவர்கள்
மௌனி = முனிவர்கள்
வர சசி = அழகான் சந்திரன்
விபாகர = சூரியன்
சனக சனந்தன = சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் குழந்தை ரிஷிகள்

திகீ்ச = திக்+ஈச = அஷ்டதிக் பாலகர்கள்; எண் திசைக் காவலர்கள்
சுர = முப்பத்து முக்கோடி தேவர்கள்
கிம்புருஷ = கிம்புருட பிரதேசத்தில் வாழும் இசை ஞானிகள்
கனகக சிபு சுத = கசிபுவின் மகனான பிரகலாதன்
நாரத தும்புரு = நாரதர் மற்றும் தும்புரு ஆகிய ரிஷிகள்

பவன சுனு = பவன (வாயு) புத்திரன்; அன்பன் ஆஞ்சநேயன்
பாலச்சந்திர தர = பாலச் சந்திரனைப் பிறை சூடிய இறைவன், சிவபெருமான்
சுக = சுகப் பிரம்ம மகரிஷி
சரோஜ பவ = தாமரையில் தோன்றிய பிரம்ம தேவர்
பூ சுரவருலு = பூ உலகைக் காக்கும் தன்னலமில்லாத் தலைவர்கள்

பரம பாவனுலு = பரிசுத்தமான நல் இதயம் கொண்டவர்கள்
கனுலு சாச்வதுலு = நித்ய சிரஞ்சீவிகள்
கமல பவ சுகமு = இறைவன் திருவடித் தாமரைச் சுகத்தை
சதா அனுபவுலு காக = எப்போதும் அனுபவித்து, ஆழந்து கொண்டுள்ள
இன்னும் எத்தனையோ முகம் தெரியாத பக்தர்கள்!
இப்படி, எந்தரோ மகானுபாவுலு, அவர்கள் அந்தரிகி வந்தனமுலு!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP