கைசிகம் - புராணமா? புரட்சியா??
கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)
இன்று கைசிக ஏகாதசி (Dec-01, 2006). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!
சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!
ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!
அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன் ஒருவன், சாபம் நீங்கி முக்தி அடைந்தான்!
இப்போது சொல்லுங்கள் இது புரட்சியா என்று!
தொட்டதற்கு எல்லாம் புரட்சி, புரட்சி என்று சொல்லும் அரசியல் காலம் இது; ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு? அதுவும் இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழமையான வராகப் புராணத்தில் வருகிறது என்றால்....
நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள்!!
அவன் பேரே நம்பாடுவான்; நம்+பாடுவான்; பிறந்ததோ பஞ்சமர் குலம்!
வைணவத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை எல்லாம் "நம்" என்று சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை, அவ்வளவு ஏன் திருவரங்கம் இறைவனை "நம்பெருமாள்" என்றே அழைக்கின்றனர்!
அவ்வகையில் நம்பாடுவான்! அவன் பாடுவது கைசிகப் பண்; இது ஒரு தமிழ்ப்பண்; பைரவி ராகம் போல ஒலிக்கும்!
இப்போதுள்ள நெல்லை மாவட்டம், நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி; 108 திவ்ய தேசத்தில் ஒன்று! பெருமாளை நம்பி என்று தான் அழைக்கிறார்கள் இங்கு!
இங்கு வாழ்ந்த நம்பாடுவான், தனது யாழினால் பெருமாளைப் பாடி, இசைத்து வணங்கியவன்.
குறுங்குடி நம்பி | அரையர் சேவை |
ஹா ஹா ஹா என்ற ஒரு நடுங்க வைக்கும் பேய்க்குரல்;
என்ன என்று பார்த்தால் எதிரில் ஒரு பெரும் பேய்; பிரம்ம ராட்சசன்!!
அந்தணனாக இருந்து, ஆனால் மதி கெட்டு, தகாத செயல்களைச் செய்வோர் தான் சாபம் பெற்று இப்படி ஆவார்கள்! நம்பாடுவானை பிடித்துக் கொண்டான் ராட்சசன்;
அடே, பாடிக் கொண்டா போகிறாய்? சரியான பசி எனக்கு; உன்னைக் கொன்று தின்றால் தான் என் பசி அடங்கும், வா...!
இன்று ஏகாதசி அல்லவா?....
அடே மூடா, உபவாசம் எல்லாம் பேய்க்கு ஏது?"
உயிர் போவது பற்றி நம்பாடுவான் கவலைப் படவில்லை;
வந்து வழிவழி ஆட்செய்கின்ற ஏகாதசி பூசையில், பெருமாளைப் பாடுவது நின்று போகிறதே என்று தான் வருந்தினான்;
அடியார்கள் எல்லாம் பாட்டுடன் பூசிக்கக் காத்து இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் ஏமாந்து போவார்களே!
"நான் பூசித்து வந்து விடுகிறேன்; பின்னர் என்னைப் புசித்துக் கொள்கிறாயா?" என்று பிரம்ம ராட்சசனிடம் கேட்டுப் பார்த்தான்.
"டேய், மானிட வாக்கைப் பேய் கூட நம்பாது!"
என்ன செய்வான் நம்பாடுவான்? பண்ணிசைத்துப் பரமனைப் பாடினான்.இசை என்றால் பேயும் இரங்காதோ?
அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது.
ஓட்டமாய் ஓடினான்; கோவிலுக்குச் சென்று கண்கலங்கி வணங்கினான்; கடைசி வணக்கம் ஆயிற்றே!
அடியார்களின் உள்ளம் எல்லாம் அவன் பாடிய கைசிகப் பண்ணில் கரைந்து போனது; பெருமாளுக்குத் திவ்ய மங்கள கற்பூர ஆரத்தி.
தீர்த்தம் பெற்றுத், திரும்பி வருகிறான் நம்பாடுவான். வழியில் ஒரு கிழவர்!
வேறு யார்? நம் குறுங்குடிப் பெருமாள் தான்!
"நம்பாடுவானே, நான் ஒரு ஞானி; எனக்கு எல்லாம் தெரியும்; ஆபத்துக்குப் பாவமில்லை! நீ தப்பிச் சென்று விடு", என்று ஆசை காட்டினார் கிழவர்!
"என்ன சொன்னீர்கள் தாத்தா? பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா? வைணவ அடியான் சொன்ன சொல் தவறலாமா?"
விடுவிடு என்று பிரம்ம ராட்சசனிடம் வந்து சேர்ந்தான். "பேயே, பயந்து விட்டாயா ஏமாற்றி விடுவேன் என்று? நான் பெருமாளின் அன்பன்! இதோ வாக்கு மாறவில்லை! புசித்துக் கொள்", என்று சொன்னான். சதா ஏமாற்றும் மானிடர்களையே கண்ட அது, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
மனம் மாறியது பேய்! இசைக்காகத் தான் போனால் போகட்டும் என்று அவனை அப்போது விட்டது!
"உன்னைக் கொல்ல எனக்கு மனமே வரவில்லை. நீ கைசிகப் பண்ணில் பாடியதின் புண்ணியத்தை எனக்குக் கொடுத்து விடு! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு" என்று தன் பழைய கதையைச் சொல்லி மன்றாடிக் கேட்டது.
நான் பெற்ற பேறு, இவ்வையகமும் பெறுக என நினைக்கும் நல்ல மனசு கொண்ட வைணவ அடியான் அல்லவா நம்பாடுவான்!
"சரி நீயே விரும்பிக் கேட்பதால்,கடைத்தேற இதோ", என்று புண்ணிய பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தான்.
பிரம்ம ராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த அந்தணன், சாபம் நீங்கினான்;
நம்பாடுவானை அந்த அந்தணன் விழுந்து வணங்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றி, மேல் நாடு அடைந்தான்.
(Re-enactment) |
இன்று திருவரங்கத்தில் பெருமாள் முன்னேயும் இக்கதை படிக்கப்படுகிறது! இப்படிப் பாடி நடிப்பதை, அரையர் சேவை என்று சொல்லுவார்கள்!
இந்தப் புரட்சிக்கு, ஆரவாரம் ஆடம்பரம் எதுவும் இல்லை!
விளம்பரங்கள்/போஸ்டர் ஒட்டி, வழியெல்லாம் தோரணம் கட்டி, "புரட்சி செய்தேன், புரட்சி செய்தேன்" என்றெல்லாம் ஆடாமல்,
இறைவனின் முன்னால், ஆழ்ந்த மனத்துடன், கொண்டாடுகிறார்கள்!
இறைவனைத் துதிக்கச் சாதியில்லை!
அடியவர் குழாங்களில், வந்து வழிவழி ஆட்செய்வது ஒன்றே போற்றப்படும்! இதை உறுதியாக விதித்து நடைமுறையும் படுத்தியவர் எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர்!
என்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,
அடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார்! யார் தெரியுமா?
அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்! இதுவல்லவோ செயலில் புரட்சி!
"அமர ஓர்அங்கம் ஆறும், வேதம் ஓர்நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்கள் ஏலும்,
நுமர்களைப் பழிப்பார் ஆகில் நொடிப்பதுஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகர் உளானே"
இந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் என்று அருளி உள்ளார்கள் நம் பெரியவர்கள் மற்றும் ஆச்சாரியர்கள்!
வாருங்கள், நாமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போம்!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!