வைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் பெருமாள்!
தள்ளியது!...
என்ன தள்ளியதா? - ஆமாம்...பலகையின் மீது ஏற்கனவே இருந்த நூல்களை எல்லாம் கீழே தள்ளிக் கொண்டது!
திருவாய்மொழியை மட்டும் அள்ளிக் கொண்டது!
இதைக் கண்ட மக்கள் எல்லாரும் "ஆகா"காரம் செய்ய, ஆகாரம் ஆனது மன்னுயிர்க்கு எல்லாம், இந்தத் திருவாய்மொழி!
சங்கப் புலவர்கள் எல்லாரும் திகைத்துப் போய் விட்டனர்.
இது தமிழ் மறை தான் என்று முழு மனதுடன் ஒப்புக் கொண்டனர்.
தமிழ்ச் சங்கம் இதை ஏற்றுக் கொண்டு, தனது நூற் களஞ்சியத்திலே சேர்த்துக் கொண்டது!
சங்கப் புலவரின் தலைவர், மதுரகவிகளை அணைத்துக் கொண்டார்!
தவறுக்கு வருந்தி, கண்ணிர் மல்கி, ஒரு ஆசு கவி பாடிச் சிறப்பித்தார்!
ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே?
இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ?
நாய் ஆடுவதோ உறு வெம்புலி முன்?
நரி, கேசரி முன் நடை ஆடுவதோ?
பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன்?
பெருமாள் வகுளா பரணன் அருள்கூர்ந்து,
ஓவாது உரைஆயிரம் தமிழ் மாமறையின்
ஒரு சொற் பெறுமோ உலகில் கவியே!!
(கருடனுக்கு முன் ஈ ஆடுமோ? சூரியனுக்கு முன் மின்மினி தான் ஆடுமோ?
புலி முன் நாயும், சிங்கத்தின் முன் நரியும் தான் ஆடிடுமோ?
ஊர்வசி முன் பேய் ஆடுமோ?
வகுளாபரணன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வார் ஓதிய ஆயிரம் பாடல் கொண்ட திருவாய்மொழி. அது வேத நெறிகளின் சாராம்சம்!
மானுடம் உய்ய வந்த அதுவே தமிழ் வேதம்!
அதன் ஒரு சொல்லுக்கு ஈடாகுமோ, உலகில் உள்ள கவி?)
நம்மாழ்வார் புளியமரக் காட்சித் திருகோலம் - ஆழ்வார் திருநகரி
புலவர்கள் அனைவரும் முழு மனதுடன், விழாவை மீண்டும் நடத்திக் கொடுத்தனர்!அன்றில் இருந்து இன்று வரை, முன்பு சொன்ன கட்டியத்தை உரக்கச் சொல்லிக் கொண்டு தான், எல்லா ஆலயங்களிலும் நம்மாழ்வார் புறப்பாடு நடைபெறுகிறது!
அட, எல்லாம் சரி!
திருவாய்மொழி வைணவப் பாட்டாச்சே! அதைப் போய் மற்ற மதங்களும் சமயங்களும் எப்படிப் படிப்பாங்க?
இப்படித் தான் சில சைவர்கள் கேட்டார்களாம்,
இடைக்காட்டுச் சித்தர் என்னும் சிவநெறிச் செல்வரிடம்.
இவர் யாருன்னு தெரிகிறதா? தாண்டவக் கோனே, தாண்டவக் கோனே என்று முடியும் சித்தர் பாடல்கள் வருமே! அவரே தான் இவர்! பழுத்த சைவர்!
அவரு, ஒரு படி மேலே போய்,
"ஐயா...இது தமிழ் வேதம். வேதத்துக்கு சிவன் என்றோ, திருமால் என்றோ, அம்பாள் என்றோ பிரிவு உண்டா?...வாங்க எல்லாரும் படிக்கலாம்", என்று கேட்டவர்களுக்கு வகுப்பே எடுக்கத் துவங்கி விட்டாராம்!
அவர் செய்த திருவாய்மொழித் தனிப்பாட்டைப் (தனியன்) பாருங்க!
ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்து அமைந்த
செம்பொருளை, எம் மறைக்கும் சேண் பொருளை - தண் குருகூர்
சேய்மொழி அது என்பர் சிலர், யான் இவ்வுலகில்
தாய்மொழி அது என்பேன் தகைந்து
(பரம்பொருளின் பரம், வியூகம் முதலான ஐந்து நிலைகளும்
வேதத்தின் நான்கு நிலைகளும் ,
தத்துவத்தின் சித், அசித், ஈஸ்வரன் (பசு,பதி,பாசம்) என்னும் மூன்று நிலைகளும்
ஒருங்கே பொழிந்த நூல் இந்தத் திருவாய்மொழி! எம்மறைக்கும் அது செம்மறை!
அது குருகூர் சடகோபனின் (நம்மாழ்வார்) தமிழ் மறை!
அது ஒரு குழந்தை பாடிய மொழி என்பார்கள் சிலர்! ஆனால் இடைக்காடர் நான் சொல்கிறேன்.
அது சேய் மொழி அல்ல! எல்லாத் தத்துவங்களுக்கும் தாய் மொழி!)
இப்படிச் சைவ நெறிச் சீலர்களின் மனங்களையும் கவர்ந்தவர் நம்ம நம்மாழ்வார்!
முருகனின் வைகாசி விசாகத்தில் பிறந்த அந்தக் கொழுந்து.
அது செய்த தமிழைச், சைவரும் விரும்பியதில் வியப்பில்லையே!
இறைவனே இப்படித் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தருகிறார்! நாம் தான் மெத்தப் படித்து விட்டு, சொத்தை வாதங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்!
சொத்தை வாதங்களால், பெருஞ் சொத்தை இழந்து கொண்டிருக்கிறோம்! :-)
நம்மாழ்வார் அடிநிலையில் இருக்கும் சடாரி |
இடைக்காடர், சைவத்தில் இருந்து கொண்டு வைணவத்தைப் புகழ்ந்தார்...சரி தான்!
அதே போல், வைணவம் சைவத்தைப் புகழ்ந்துள்ளதா?
- இது நல்ல கேள்வி!
வைணவத் தத்துவத்துக்கே தலைவரான நம்மாழ்வார், சிவபெருமானை வணங்கி வாழ்த்துவதைப் பாருங்கள்!
அற்றது பற்று எனில் உற்றது வீடு என்று பாடிய நம்மாழ்வார், அந்தப் பற்றை எப்படி அறுத்தார்?
பெருமாள், பிரமன், சிவன் என்று அனைவரையும் அழுது தொழுது, பற்றை அறுத்து, வீடு பெற்றாராம்!
இதை, இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல, அக்காலத்தில் எவ்வளவு துணிவு இருந்திருக்க வேண்டும்?:-)
அது என்ன பற்று?
இருப்பதிலேயே மிக பயங்கரமான பற்று, உன் சமயம் தாழ்த்தி, என் சமயம் உசத்தி என்ற பற்று.
வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளா விட்டாலும்,
அடி மனம் அதை அசை போட்டு மகிழ்வதில் ஒரு ஆனந்தம் காணுமாம்! அந்தப் பற்று... அது அற்றது பற்று எனில், உற்றது வீடு!
அவாவற சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.
இது திருவாய்மொழியின் நிறைவுப் பாடல்! அதில் மறக்காமல் சிவனையும் சேர்த்துப் பாடித், தமிழ் மறையைப் பொது மறை ஆக்குகிறார் நம்ம ஆழ்வார்!
முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா என்றும் அதற்கு முன்னால் பாடிப் பரவுகிறார்!
பொதுவாக வைணவர்கள் தீவிரப் பற்றாளர்கள் என்ற ஒரு வழக்கு உண்டு! அவர்கள் மதுரைக் கோவிலுக்குப் போனாலும்,
மீனாட்சியை மட்டும் தரிசித்து விட்டு, வந்து விடுவார்கள் என்றும் சொல்லுவர்.
அதெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒரு சிலரே! மிக மிகச் சொற்பம்!
உண்மை என்னவென்றால், திருச்சின்னங்களான சங்கு சக்கர முத்திரை பதித்துக் கொண்டவர்கள், அந்த விரதப்படி, சிவனார் ஆலயங்களில் வீழ்ந்து வணங்க மாட்டார்கள்! அவ்வளவு தான்!
ஒருமுறை வாரியார் சுவாமிகள், காஞ்சி மாமுனிவர் - மகா பெரியவருடன் கலந்துரையாடப் போய் இருந்தார்.
பெரியவரைக் கண்டவுடன், அவர் காலில் வீழ்ந்து வணங்க முற்பட,
பெரியவர் பதறிப் போய், வாரியாரைத் தடுத்து நிறுத்தினார்.
"மார்பிலே சிவலிங்க மணியைத் தரித்திருக்கும் வீரசைவன் நீ...சிவாலயங்கள் தவிர இப்படிப் பிற இடங்களில் கீழே விழுந்து, சிவலிங்கம் நிலம்பட வணங்கக் கூடாது.
இது தெரிந்தும் என் முன்னே நீ விழலாமா?", என்று வாரியாரைச் செல்லமாகக் கடிந்து கொண்டாராம்.
இதே தான் சங்கு சக்ர முத்திரை பதித்துக் கொண்டவர்க்கும்!
ஆனால் "வைணவர்கள் எல்லாம் தீவிரப் பற்றாளர்கள், பா", என்று சொல்லிச் சொல்லியே, வைணவரிடம் காரியம் சம்பாதித்துக் கொண்டு,
ஆனால் மனத்தளவில் மறந்தும் புறந் தொழாச் சைவர்களும் உண்டு :-)
இப்படித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் சைவர், வைணவர் இருவருக்குமே...ஏன்.....மற்ற எல்லாருக்குமே,
நம்மாழ்வார் சொல்லிக் கொள்வதைக் கேளுங்கள்!
வணங்கும் துறைகள் பல பலவாக்கி, மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தொறும்
அணங்கும் பலபல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண், வேட்கை எழுவிப்பனே
வணங்கும் துறைகள் = ஒரு மாபெரும் குளம்/ஏரி...
அதன் ஒவ்வொரு பக்கமும் ஒரு துறை...
தனக்குச் சொந்த ஊர் என்பதால், அந்த ஊர்த் துறையில் வசதியாகத் தண்ணீர் எடுத்துக் கொள்கிறான் ஒருவன்!
அதற்காக, பக்கத்துத் துறையின் தண்ணீரைப் பழித்துப் பேசுவானா?
அப்படியே பழித்துப் பேசினால், அது அந்தத் தண்ணீரின் குற்றமாகி விடாதா?
அதே ஏரியின் தண்ணீர் தானே இங்கும்? அதனால் தான் "வணங்கும் துறைகள்" என்றார் ஆழ்வார்!
அப்படி நீரின் பிழை இல்லையானால், அது யாரின் பிழை?
"மதி விகற்பால்" பிணங்கும் சமயம் = அவரவர் மதி விகற்பு. அவரவர் அறிவுக்கு எட்டிய வரை கற்பனையான வாதம். தான் தோன்றித் தனம்
அவை அவை தொறும், "அணங்கும் பலபல ஆக்கி" = இது போதாதென்று அதற்குள்ளேயே இன்னும் பலப் பலக் கருத்துகள்/கொள்கைகள்.
தென்கலை/வடகலை...வீரசைவம்/சைவ சித்தாந்தம்...இப்படிப் பலப்பல!
நின்கண் வேட்கை எழுவிப்பனே = இவ்வளவு பிரிவுகளுக்கு இடையேயும், உன் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, வேட்கை எழுவிப்பனே!
இது தான் திருவாய்மொழியின் சாரம்!
இப்போது சொல்லுங்கள், திருவாய்மொழியையும் நம்மாழ்வாரையும் வைணவத்துக்குள் மட்டும் அடக்கி வைக்க முடியுமா?
முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நன்னாளும் இன்று தான்!
புத்த பிரான் ஞானம் பெற்ற புத்த பூர்ணிமாவும் இன்று தான்!
இந்நாளில் தோன்றிய நம்மாழ்வார், எந்நாளும் காட்டிய வழி இது!
இந்த வைகாசி விசாகத்தில்,
நம்மையே ஏமாற்றித் திரியும் நம் மனதினுடைய ஓரத்தில்...இதை போட்டு வைப்போம்! எப்பவாச்சும் இருட்டில் மாட்டிக் கொள்ளும் போது, நந்தா விளக்காய் ஒளி கொடுக்கும்!
மன்னு பொருள் நால் வேதம் தமிழ் செய்தான் வாழியே!
மகிழ் மணக்கும் குருகையர் கோன் மலர் அடிகள் வாழியே!!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
என்னங்க, இந்தப் பதிவில் தத்துவக் கருத்துக்கள் மிகுந்து விட்டனவா?
அடுத்த பதிவில்...
நம்மாழ்வார், ராமானுசரை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டு எடுத்து விட்டார். அந்தக் கதையையும், இன்னும் சில தித்திக்கும் பாசுரங்களையும் பார்ப்போம்!