அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் இன்று (Sep 15th). நூற்றாண்டு விழாவுக்கு ஓராண்டு முன்னோடி (99).
அவர் இன்னும் சற்று நாள் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதி எப்படி ஆகி இருக்குமோ இல்லையோ, நிச்சயம் இப்படி ஆகியிருக்காது என்று சொல்வாரும் உண்டு!
அவர் பிறந்த நாள் அஞ்சலியாக இந்தப் பதிவு! - அவர் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டசபை தீர்மானத்தைப் பார்க்கலாம் வாங்க!
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரம் என்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு
- இப்படி தமிழ்நாடு, தமிழ்நாடு என்று பாரதி கூவி விட்டுப் போனாலும், தமிழ்நாடு என்னவோ மதறாஸ் ராஜதானியாகவே இருந்தது!
இனி, அந்த நாள் ஞாபாகம் - பத்திரிகைக் குறிப்பை, History Channel போல அப்படியே பார்ப்போம்! நன்றி - மாலை மலர்!
"தமிழ்நாடு" பெயர் மாற்றக் கோரிக்கை. காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்; 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார்மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் அழைக்கப்பட்டது.
"சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும்" என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957ல் உண்ணா விரதம் இருந்தார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர்.
"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.
விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.
காமராஜர் பதில்இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.
"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார். மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார்.
"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே" என்று அண்ணா கூறினார்.
"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.
நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.
அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 76_வது நாளில் (1957 அக்டோபரில்) அவர் மரணம் அடைந்தார்.
தமிழில் "தமிழ்நாடு" ஆங்கிலத்தில் "மெட்ராஸ்"இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின.
இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.
இதுபற்றிய அறிவிப்பை 24_2_1961_ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம்.
இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும்.
எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.
இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.
தி.மு.க. வலியுறுத்தல்
எனினும், "ஆங்கிலத்திலும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
18_7_1967
"தமிழ்நாடு" பெயர் மாற்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது. "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ்நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது.
சட்டசபையில் தீர்மானம்:இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18_7_1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார்.
"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக்கூடாது" என்று கூறினார்.
ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார்.
தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:
"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக _ உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந் தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.
பாரதிக்கு தாய்நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா?
முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக்கொண்டேன்.
தமிழ்நாடு என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை" என்று இருப்பதை "திருவள்ளுவர் கோட்டை" என்று மாற்ற வேண்டும்."
இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.
அண்ணா பதில்விவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:
"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.
இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ்நாடு" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.
10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் "டமில்நாட்" (தமிழ்நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி. தமிழ ரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.
மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது.
சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.
நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அண்ணா கூறினார்.
பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
"தமிழ்நாடு வாழ்க"பின் அண்ணா எழுந்து, "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார்.
எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள்.
சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.