திருமலை பிரம்மோற்சவம் 1 - பெரிய சேஷ வாகனம்!
வேங்கடத்தான் பூவுலகில் அவதரித்த நாள் புரட்டாசித் திருவோணம். இந்த ஆண்டு Sep 23 அன்று வருகிறது! ஷ்ரவண நட்சத்திரம்ன்னு வடமொழியில் சொல்லுவாங்க. "திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே" என்பது பெரியாழ்வார் பாட்டு!
நாம அமெரிக்கால இல்ல சிங்கப்பூர்ல முதலில் காலடி எடுத்து வச்ச நாள் ஞாபகம் வச்சுக்கிறோம் இல்லையா? அது போலத் தான் இறைவன் நம் பொருட்டு பூமியில் கால் பதித்த நாள். அவதாரக் குழந்தையாக எல்லாம் பிறக்காது, நேரே குன்றின் மேல் கல்லாகி நின்ற நாள்.
இந்த நாளை படைப்புக்குத் தலைவர் பிரம்மா முதலில் விழாவாகக் கொண்டாட, பின்னர் தொண்டைமான் அரசன் அதைத் தொடர, பின்னர் பல ஆண்டுகள் தொடர்ந்தோ, விட்டு விட்டோ கொண்டாடி வருகிறார்கள். இன்றைக்கும் ஊர்வலங்களை பிரம்ம ரதம் என்னும் குட்டித்தேர் (பிரம்மன் சிலை வழிபாடு அற்றவர் ஆதலால்) வழி நடத்திச் செல்லும்.
முதல் நாள்
மாலை:
நல்ல மண் எடுத்து, நவதானிய முளை விடுவர். முளைப்பாரிகை என்பது இதற்குப் பெயர். விழா இனிதே நடக்க, செய்வது இது.
பின்னர் பெருமாளின் படைத்தளபதி சேனை முதலியார் (விஷ்வக்சேனர்), அவருடன் பரிவாரங்கள் அங்கதன், அனுமன், அனந்தன், கருடன் எல்லாரும் வீதியுலா வந்து, அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என்று கண்டு வருவர்.
அப்புறம், கருடனைத் துணியில் வரைந்து, கொடி மரம் அருகில் பூசித்து, கொடி ஏற்றுவர்! கருடன் விண்ணுக்குச் சென்று அங்குள்ளவர்கள் அனைவரையும், மற்றும் மண்ணுக்கு வந்து நம்மையும், விழாவுக்கு அழைப்பு வைப்பதாக மரபு. (கருடா செளக்கியமா? கண்டிப்பா வந்துடறோம்பா. நீ போய் ஆக வேண்டிய வேலைகளைக் கவனி!).
துவஜம்=கொடி, ஆரோகணம்=ஏற்றம்
துவஜாரோகணம்=கொடியேற்றம்...அவ்ளோ தாங்க, மத்தபடி வடமொழிப் பேரைப் பாத்து பயந்துடாதீங்க! :-)
இரவு
பெத்த சேஷ வாகனம். (சுந்தரத் தெலுங்கு-ங்க. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்)
நம்ம பெருமாளுக்கு ரொம்ப பிடிச்ச ஒருவர்-ன்னா அது ஆதிசேஷன்.
பாற்கடல், திருவரங்கம் எல்லாத்துலேயும் இந்த சேஷன் மேலே தான் பள்ளி கொள்வார். இந்த சேஷனும் சும்மா இல்லீங்க!
இறைவனை விட்டு ஒரு நொடியும் பிரிய மாட்டார்-ன்னா பாத்துக்குங்க!
ராமனாய் பிறந்த போது இலக்குவன்
கண்ணனாய் பிறந்த போது பலராமன்
கலியுகத்தில் இராமானுசன், மணவாள மாமுனிகள்!
"சென்றால் குடையாம்; இருந்தால் சிங்காசனமாம்; நின்றால் மரவடியாம்" என்பார்கள்! அவ்வளவு ஏன்? திருமலையின் 7 மலைகளும் சேஷனின் திருமுடிகள். அந்த சேஷாசலத்தின் மேல் தான் இறைவன் நிற்கிறான்! அதனால் விழாவின் முதல் நாள் சேஷனின் மீது ஒய்யாரமாக பவனி!
முன்னே அருளிச்செயல் குழாம், தமிழ்ப் பாசுரங்கள் பாடிச் செல்ல,
தமிழைக் கேட்டுக் கொண்டே, நம் பெருமாள் பின் தொடர,
வைகுண்ட நாதன் திருக்கோலத்தில், அலைமகள் (ஸ்ரீ தேவி) மற்றும் மண்மகள் (பூமிதேவி) உடன் வர,
அவன் பின்னே வேத கோஷ்டி வர,
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிவோம் அவனை!
சரி, போன பதிவில் சொன்னபடி ஆழ்வார் பாடலுக்கு வருவோமா? சொன்ன சொல்லைக் காப்பாத்துணம்-ல!
12 ஆழ்வார்களில், தொண்டரடிப்பொடியாழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர ஏனைய பத்து ஆழ்வார்களும் வேங்கடத்தானைப் பரவிப் பாடியுள்ளனர். (மங்களாசாசனம் என்று வடமொழியில் வழங்குவர்)
(தொண்டரடிப்பொடி அரங்கத்தானைத் தவிர எவரையும், மதுரகவி அவருடைய ஆசான் நம்மாழ்வாரைத் தவிர எவரையும் பாட்டாகப் பாடவில்லை)
ஆழ்வார்கள் என்றால் யார்? அவர்கள் என்ன செய்தார்கள் என்று அவ்வளவாக அறியத் தெரியாதவர்கள், கீழ்க்கண்ட சுட்டிகளில் அறிந்து கொள்ளலாம்!
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா - நன்றி, திரு தேசிகன் அவர்கள் வலைப்பதிவு
ஆழ்வார் குறிப்பு - நண்பர் பாலாவின் வலைப்பதிவு. பாலா இப்போது தான் துவக்கியுள்ளார். Archives-இல் தேடப் பொக்கிஷம் கிடைக்கும்.
இன்று,
பொய்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்
உளன் கண்டாய் நன்-நெஞ்சே, உத்தமன் என்றும்
உளன் கண்டாய்,உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தின் உள்ளனன் என்று ஓர்!
(உள்ளுவார்=உள்ளத்தில் ஆழ்ந்து நினைப்பார்; ஒர்=அறி; உணர்) மிக எளிய பாடல் தான்!
நல்ல நெஞ்சமே, உத்தமன் என்றும் உள்ளான். எங்கே உள்ளான்?
உள்ளுவார் (நினைப்பவர்) உள்ளதில் எல்லாம் உள்ளான்.
பாற்கடல் வெள்ளத்தில் இருப்பவனும், வேங்கடத்தில் இருப்பவனும் ஒருவனே!
அவன் விரும்பி உறையும் இடம் நம் உள்ளமே.
இதை நன்றாக உணர்ந்து தெளிவு அடைவாயாக!
இப்பதிவு சென்ற ஆண்டு பிரம்மோற்சவ விழாவின் மீள்பதிவு! (ஹிஹி...அடியேனின் முதல் மீள்பதிவும் கூட :-) சென்ற ஆண்டு செப்டம்பர் இறுதியில் தான் பதிவெழுதத் துவங்கினேன்....ஓராண்டு ஓடி விட்டதா என்ன?)
இந்த ஆண்டு கருடசேவை, ரதோற்சவம், சக்ர ஸ்னானம் மட்டும் மீள்பதிய எண்ணம்!
மற்ற வாகன சேவைகளுக்கு, 2006 Sep/Oct Archives-இல் பார்க்கவும்!
ஆஹா! மறுபடியுமா?
ReplyDeleteகொண்டாட்டம் தான்.
அருமை அருமை! சேஷ வாகனப்பதிவின் ஒவ்வொரு வரியும் அற்புதம்!
ReplyDeleteஅகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திரூவேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!
நம்மாழ்வாரின் பாசுரம் கூறி திருமலைதெய்வத்தை வணங்குகிறேன் இங்கு நீங்கள் அளித்துள்ள மலையப்பர் படங்களைப்பார்த்தபடி! நன்றி ரவி.
கே ஆர் ஸ் மறுபதிவாக இருந்தாலும் இது என்றும் மானதை வீட்டு மாறாத பதிவு. என் நண்பர் ரமண தீக்ஷிதலுவையும் பார்த்தேன்.சிகப்பு பட்டு உடுத்தியவர் நன்றி
ReplyDeleteNaan innikki ozhunga Pillayarai pujithirukkiren ! Adudan udane Sesha Vahana Darisanam kidaithirukku. Nandri Ravi.
ReplyDeleteShobha
புகைப்படங்களும் அழகு.. செய்தியையும் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி..
ReplyDelete// இரவு
ReplyDeleteபெத்த சேஷ வாகனம். (சுந்தரத் தெலுங்கு-ங்க. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்) //
என்னங்க சொல்றீங்க? தீந்தமிழில் பேரரவூர்தி அல்லது பெரும்பாம்பூர்தின்னுதானே இருக்கனும். :) ஓ நீங்க தமிழைச் சொல்றீங்களா? ;)
// உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய், //
இந்த வரிகள்ள ஒரு பொருள் இருக்கு. உளம் தனில் உளன் என்று சொல்கிறோமே. உள்ளுவார் உளத்தில் மட்டும் உளனாயின் அவன் எப்படி எங்கும் உளனாவான். வேண்டுவார் வேண்டாதார் இலந்தானே அவன். ஆகையால் உள்ளுவார் உள்ளார் அனைவர் உளத்திலும் உளன். ஆனால்....உள்ளுவாரே உளத்தில் உளன் எனக் காணபர். ஆகையால்தான் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய். எல்லா எடத்துலயும் இருந்தாலும் மின்விசிறில இருந்துதான் காத்து வருதுன்னு நெனைக்கிறோம்ல. அந்த மாதிரி.
ரவிசங்கர்!
ReplyDeleteபடங்கள் அழகே ..தனி..
அருமையாக வழமை போல் அருள் விளக்கம்.
ஈழத்தில் கொடியேற்றம் எனவே குறிப்பிடுவோம். அத்துடன் பாம்பு வாகனம் எனவே குறிப்பிடுவார்கள்.
பொதுவாக எல்லாப் பெரிய கோவிலிலும் இந்த வாகனமும் இருக்கும்.
சில கோவில்களில் அந்த திருவிழா உபயகாரர்கள் அந்த வாகனத்தைக் கோவிலுக்கு கொடுத்திருப்பார்கள், அதனால் வருடாவருடம் அவர்கள் திருவிழாவுக்கே அந்த வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவார்.வேறு திருவிழாவுக்கு தேவையெனில் அவர்கள் திருவிழாவின் பின்னே, என்பது எழுதாவிதி.
சில பிரபல நாதஸ்வரக் குழுக் கூட அப்படியே.
இவ்வருட திருவிழாவில் வரும் வருசத்துக்கு முற்பணம் கொடுத்து விடுவதுண்டு.
எத்தனை லட்சம் கொடுத்தாலும் அந்தக் குறிப்பிட்ட திருவிழாவுக்கு முன் அந்தக் கோவிலுக்கு வரமாட்டார்கள்.
இதெல்லாம் ஒருகாலம்...
நினைக்க மகிழ்வாக இருக்கிறது. அந்தத் தருணங்கள்..
RAVI sir,vanakkam,
ReplyDeletewhile started reading, i remember that, it is the old?one becaause,ur pdf file is panacea for me,whenever iam homesick, or not feeling well,i am reading this pdf file,and kannan sir pdf file also.thanks.
ARANGAN ARULVANAGA.
Anbudan
k.srinivasan.
இந்த பிரம்மோற்சவம் பதிவைப் படிக்கும் பொழுது அதற்குள்ளே ஒரு வருடம் ஓடிவிட்டதா என ஆச்சரியம்.
ReplyDeleteஅதே சமயம் இவ்வளவு பேர் பெற்ற பதிவர் நீங்கள் எழுத ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகிறதா என்ற ஆச்சரியமும்!!
எல்லாம் அவன் செயல்!
//வடுவூர் குமார் said...
ReplyDeleteஆஹா! மறுபடியுமா?
கொண்டாட்டம் தான்.//
கொண்டாட்டங்கள் வருடா வருடம் நடக்கிறது குமார் சார். ஒவ்வொரு ஆண்டும் நாம கொஞ்சம் புதுமை கலந்து கொண்டாடிக்க வேண்டியது தான்! :-)
//ஷைலஜா said...
ReplyDeleteஅருமை அருமை! சேஷ வாகனப்பதிவின் ஒவ்வொரு வரியும் அற்புதம்!//
வாங்க ஷைலஜா! நீங்க பாசுரம் சொல்லாம மலையப்ப சுவாமி பவன் வரத் தொடங்குவாரா என்ன? :-))
//நம்மாழ்வாரின் பாசுரம் கூறி திருமலைதெய்வத்தை வணங்குகிறேன் இங்கு நீங்கள் அளித்துள்ள மலையப்பர் படங்களைப்பார்த்தபடி! நன்றி ரவி//
பக்கத்தில் ஒரு pdf சுட்டி உள்ளது ஷைலஜா! சென்ற ஆண்டு ஒன்பது நாளும் தொடர் பதிவு இட்டேன்! அதில் இன்னும் நிறைய படங்கள் இருக்கு! உங்களுக்கு மிகவும் பிடிக்கும்! :-))
//தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteகே ஆர் ஸ் மறுபதிவாக இருந்தாலும் இது என்றும் மானதை வீட்டு மாறாத பதிவு.//
நன்றி திராச ஐயா! சென்ற ஆண்டு இதை எழுதத் துவங்கிய போது நீங்க எல்லாம் கொடுத்த உற்சாகம் தான்...அத்தனைக்கும் உந்துதல்!
//என் நண்பர் ரமண தீக்ஷிதலுவையும் பார்த்தேன்.சிகப்பு பட்டு உடுத்தியவர் நன்றி//
ஆமா...சூப்பரா கொடியேற்றம் நடத்திக் கொடுக்கறாரே! டாக்டர் ரமண தீஷிதலு.
//Shobha said...
ReplyDeleteNaan innikki ozhunga Pillayarai pujithirukkiren ! Adudan udane Sesha Vahana Darisanam kidaithirukku. Nandri Ravi.//
ஹிஹி! பிள்ளையாரை வணங்கி கொழுக்கட்டை நன்றாகச் சாப்பிட்டு இருக்கீங்க ஷோபா! அதான் ! :-)))
//இரண்டாம் சாணக்கியன் said...
ReplyDeleteபுகைப்படங்களும் அழகு.. செய்தியையும் சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்.//
நன்றி இரண்டாம் சாணக்கியன்.
நேரம் கிடைத்தால் மேற்சொன்ன pdf சுட்டியைப் பாருங்கள்!
//// இரவு
ReplyDeleteஎன்னங்க சொல்றீங்க? தீந்தமிழில் பேரரவூர்தி அல்லது பெரும்பாம்பூர்தின்னுதானே இருக்கனும். :) ஓ நீங்க தமிழைச் சொல்றீங்களா? ;)//
தமிழ், தீந்தமிழ்-னு தனியாச் சொல்லணுமா ஜிரா?
இனிப்பு வெல்லம், சுவையான வெல்லம்-னு யாராச்சும் சொல்லுவாங்களா? வெல்லம்-னாலே இனிப்பு தானே!
என்னாது
பெரும்பாம்பு ஊர்தியா?
பேர் அரவு ஊர்தியா?
அழகான சொற்கள் தான்! ஆனா மக்களுக்கு இன்னும் எளிதில் சொல்லலாமே! புரிய சற்றுக் கடினமான தத்துவங்களை புரியும் நடையில் சொன்னாலாவது, ஒவ்வாமை நீங்கி, ஓதுவார்கள் அல்லவா? :-)))
பெரிய, நாகம் ரெண்டுமே தமிழ் தான்!
வாகனம் - வடமொழி மாதிரி இருப்பினும், இராம.கி ஐயாவைக் கேட்க வேண்டும்!
இன்னொன்று:
ஊர்தி என்றால் நகர வேண்டும்; சில வாகனங்கள் நகராத வாகனங்கள்.
முத்துப் பந்தல் வாகனம், கற்பகத் தரு வாகனம், இன்னும் சில!
அவற்றுக்கு ஊர்தி என்னும் சொல் சரியாக வருமா?
தோளுக்கு இனியான் என்று சொல்லுவார்கள்! அது போல ஒற்றைச் சொற்றொடரை உருவாக்க வேண்டியது தான்!
அது வரை வாகனமே எளிது!
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ReplyDeleteரவிசங்கர்!
ஈழத்தில் கொடியேற்றம் எனவே குறிப்பிடுவோம். அத்துடன் பாம்பு வாகனம் எனவே குறிப்பிடுவார்கள்//
ஜிரா!
ஈழத்திலும் பாருங்க இப்படியே குறிப்பிடறாங்க!
//பொதுவாக எல்லாப் பெரிய கோவிலிலும் இந்த வாகனமும் இருக்கும்.//
ஆமாங்க யோகன் அண்ணா!
பாம்பு வாகனம் எல்லாத் தெய்வங்களுக்கும் உண்டு!
சிவன், முருகன், பிள்ளையார், பெருமாள், அம்பாள், தாயார் என்று சகலருக்கும் பிரியமானவர் நாகர்!
//எத்தனை லட்சம் கொடுத்தாலும் அந்தக் குறிப்பிட்ட திருவிழாவுக்கு முன் அந்தக் கோவிலுக்கு வரமாட்டார்கள்.
இதெல்லாம் ஒருகாலம்...
நினைக்க மகிழ்வாக இருக்கிறது. அந்தத் தருணங்கள்..//
நீங்கள் சொல்வதைக் கேட்கும் போதே, எங்கோ எங்களை இட்டுச் செல்கிறீர்கள்! எத்தனை லட்சம் பணம் கொடுத்தாலும் அதை எல்லாம் தாண்டி விதிமுறைகளும் ஒழுக்க முறைகளுமே கோவிலின் அடிநாதமாக இருக்க வேண்டும்! இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழக ஆலயங்கள் இப்படி இருப்பதில்லை! :-(
//Anonymous said...
ReplyDeleteRAVI sir,vanakkam,
while started reading, i remember that, it is the old? one becaause,ur pdf file is panacea for me,whenever iam homesick, or not feeling well,i am reading this pdf file,and kannan sir pdf file also.thanks.//
நன்றி ஸ்ரீநிவாசன் சார்!
ஆகா அடியேன் பதிவுக் கோப்பா உங்கள் உற்சாகம்? கேட்கவே ஆனந்தமாக உள்ளது! எம்பெருமான் குணானுபவத்தில் நீங்கள் எவ்வளவு ஆழமா ஈடுபட்டிருந்தா ஹோம்சிக்கில் வைபவத்தைப் படிப்பீர்கள்!
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஇந்த பிரம்மோற்சவம் பதிவைப் படிக்கும் பொழுது அதற்குள்ளே ஒரு வருடம் ஓடிவிட்டதா என ஆச்சரியம்.//
ஆமாம் கொத்ஸ்! போனதே தெரியலை! செப்டம்பர் மாசம் இறுதியில் துவங்கினேன்! இன்னும் 12 நாள் வந்தா ஓராண்டா! பரம்பொருளின் கருணை அன்றி, இப்படி ஆன்மிகம் எழுதி தான் முடியுமா?
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே!
பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே!!
//அதே சமயம் இவ்வளவு பேர் பெற்ற பதிவர் நீங்கள் எழுத ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகிறதா என்ற ஆச்சரியமும்!!//
பேர் பெற்ற பதிவரா? அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க!
பல நல்ல உள்ளங்களை எல்லாம் சந்திக்கும் பேறு பெற்ற பதிவர்-னு வேணும்னா சொல்லுங்க!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//// இரவு
என்னங்க சொல்றீங்க? தீந்தமிழில் பேரரவூர்தி அல்லது பெரும்பாம்பூர்தின்னுதானே இருக்கனும். :) ஓ நீங்க தமிழைச் சொல்றீங்களா? ;)//
தமிழ், தீந்தமிழ்-னு தனியாச் சொல்லணுமா ஜிரா?
இனிப்பு வெல்லம், சுவையான வெல்லம்-னு யாராச்சும் சொல்லுவாங்களா? வெல்லம்-னாலே இனிப்பு தானே! //
ஐயா தீந்தமிழ்னு சொன்னதே நீங்கதான். ஏன் இப்ப மாத்திச் சொல்றீங்க.
// என்னாது
பெரும்பாம்பு ஊர்தியா?
பேர் அரவு ஊர்தியா?
அழகான சொற்கள் தான்! ஆனா மக்களுக்கு இன்னும் எளிதில் சொல்லலாமே! புரிய சற்றுக் கடினமான தத்துவங்களை புரியும் நடையில் சொன்னாலாவது, ஒவ்வாமை நீங்கி, ஓதுவார்கள் அல்லவா? :-))) //
பேருந்துன்னு சொல்லப் பழகுனப்போ இதத்தான் சொன்னாங்க. இப்ப ஊரூருக்குப் பேருந்து நிலையங்க இருக்கு. இங்க பிரச்சனை சொல்லின் கடினத்துல இல்லன்னு நெனைக்கிறேன். சொல்ல விரும்புற எண்ணத்தின் கடினமோ என்னவோ.
// பெரிய, நாகம் ரெண்டுமே தமிழ் தான்!
வாகனம் - வடமொழி மாதிரி இருப்பினும், இராம.கி ஐயாவைக் கேட்க வேண்டும்! //
தெரிஞ்சிக்கலாம். இராம.கி ஐயா எடுத்துச் சொல்லட்டும். நமக்கும் கூட நாலு தகவல் கெடைக்குமே.
// இன்னொன்று:
ஊர்தி என்றால் நகர வேண்டும்; சில வாகனங்கள் நகராத வாகனங்கள்.
முத்துப் பந்தல் வாகனம், கற்பகத் தரு வாகனம், இன்னும் சில!
அவற்றுக்கு ஊர்தி என்னும் சொல் சரியாக வருமா? //
வாகனங்குறது வடமொழிச் சொல்லுன்னே வெச்சுக்குவோம். அதுக்கு என்ன பொருள்? சும்மா உக்காந்துக்கிறதுக்கா? கருட வாகனத்துக்கும் முத்துப்பந்தல் வாகனத்துக்கும் வேறுபாடு இருக்கு. கருட வாகனம்னா கருடன் மேல உக்காந்துக்கிறது. முத்துப்பந்தல் வாகனம்னா முத்துப்பந்தல் மேல உக்காந்த்துக்கிறதா? :))))))))))) வாகனம்னு சொல்றதும் ஊர்வதைக் குறிக்கிறதுதான்.
// தோளுக்கு இனியான் என்று சொல்லுவார்கள்! அது போல ஒற்றைச் சொற்றொடரை உருவாக்க வேண்டியது தான்!
அது வரை வாகனமே எளிது! //
வாகனத்துக்கு இணை ஊர்திதான். ஒற்றைச் சொல்தான். மயிலேறின்னு எங்க ஊர்ப்பக்கம் பேரு வெப்பாங்க. நல்ல வேளை அவங்க கிட்ட இந்த ஒற்றைச் சொற்றொடரை உருவாக்கி ஓத வேண்டியிருப்பது எளிமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நீங்க சொல்லலை. :)
//G.Ragavan said...
ReplyDeleteஐயா தீந்தமிழ்னு சொன்னதே நீங்கதான். ஏன் இப்ப மாத்திச் சொல்றீங்க//
ஐயகோ ஐயா! நான் தமிழ், தீந்தமிழ்-னு பிரிச்சி சொல்லலை. தீந்தமிழில் பெரிய நாக வாகனம்-னு தான் சொன்னேன்.
நீங்க தான் பெரும்பாம்பூர்தி தீந்தமிழ், மற்றது தமிழ்-னு சொன்னீக!
ஏன் ஜிரா மாத்து மாத்துன்னு மாத்தறீக? :-)))
//பேருந்துன்னு சொல்லப் பழகுனப்போ இதத்தான் சொன்னாங்க//
பேருந்து சுருக்கமான சொல்; பழகிடுச்சு. பெரும்பாம்பூர்தி-ன்னு மலையேறும் எளிய குப்பனையும் சுப்பனையும் சொல்லச் சொன்னா மிரளுவான். தமிழைப் படுத்தாம தமிழ்ப்படுத்துதல் என்றும் நிலைக்கும் ஜிரா.
//கருட வாகனம்னா கருடன் மேல உக்காந்துக்கிறது. முத்துப்பந்தல் வாகனம்னா முத்துப்பந்தல் மேல உக்காந்த்துக்கிறதா? :))))))))))) வாகனம்னு சொல்றதும் ஊர்வதைக் குறிக்கிறதுதான்//
அதத் தான் நான் சொன்னேன். முத்துப்பந்தல் என்ன ஊர்கின்றதா?
எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு தான் செல்கிறார்கள்! கருடன் பறக்கும் - அதுனால ஊர்தி.
முத்துப் பந்தலில் உள்ளே அமர்ந்து மண்டப சேவை. அதுல என்ன ஊர்தல்?
சாலியில் புழங்கும் வாகனம் = ஊர்தி; அது வரை சரி!
கோவிலில் வாகனம் என்று புழங்குவதன் பொருள் ஊர்தி அன்று! Carriage என்ற பொருள்! இதுக்கு நலம் தரு சொல்லை நீங்க சொல்லிக் கொடுங்க ஜிரா! தூக்கி, தாங்கியை விட இன்னும் எளிதா, அழகாச் சொல்லுங்க ப்ளீஸ்!
//நல்ல வேளை அவங்க கிட்ட இந்த ஒற்றைச் சொற்றொடரை உருவாக்கி ஓத வேண்டியிருப்பது எளிமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நீங்க சொல்லலை. :)//
ஆமா சொல்லலை! ஏன்னா மயில் ஏறி என்னும் சொல் ஏற்கனவே எளிது தான்! பேரரவூர்தி-ன்னு சொல்லச் சொல்லுங்க தெரியும்! அரவம்-னா பாம்புன்னு மொதல்ல எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கும்! தமிழை ஆக்கும் பணியில் மிக முக்கியமான ஒன்று,
தமிழாக்கம் - தமிழருக்கும் ஆக்கமான தமிழாக்கமா இருக்கணும்!
ஒரு சந்தேகம், கொடியேற்றும் படத்தில் அதென்ன ஒரு பெரிய மூட்டை போன்ற ஒன்றைக் கட்டி இழுக்கிறார்கள்?....
ReplyDelete//மதுரையம்பதி said...
ReplyDeleteஒரு சந்தேகம், கொடியேற்றும் படத்தில் அதென்ன ஒரு பெரிய மூட்டை போன்ற ஒன்றைக் கட்டி இழுக்கிறார்கள்?....//
ஓ அதுங்களா மெளலி சார்.
பல பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்தின் போது மஞ்சள் துணியில் கருடனின் உருவம் வரைந்து, ப்ராணப் ப்ரதிஷ்டை செய்து, அதில் பல மங்கலப் பொருட்கள் (மாலை, சுகந்தம், தாம்பூலம், அகிற்கட்டை, சில மருந்துச் செடி/மூலிகைகள், இன்னும் பிற) - இவற்றை எல்லாம் கொடியினுள் வைத்து, தாம்புக் கயிற்றால் கட்டி மேலே ஏற்றுவார்கள்! அதான் கனமாத் தெரியுது!
கருடன் அவ்வாறு ஏற்றியவுடன், வானுலக மக்களையும், முனி புங்கவர்களையும் அந்த மங்கலப் பொருட்கள் கொண்டு விழாவுக்கு வருமாறு வரவேற்பான் என்பது ஐதீகம்/ஆகம முறை!
//// உள்ளுவார் உள்ளத்து - உளன்கண்டாய், //
ReplyDeleteஇந்த வரிகள்ள ஒரு பொருள் இருக்கு...ஆகையால் உள்ளுவார் உள்ளார் அனைவர் உளத்திலும் உளன். ஆனால்....உள்ளுவாரே உளத்தில் உளன் எனக் காணபர். ஆகையால்தான் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய். எல்லா எடத்துலயும் இருந்தாலும் மின்விசிறில இருந்துதான் காத்து வருதுன்னு நெனைக்கிறோம்ல. அந்த மாதிரி.//
ஜிரா
இதைப் படித்ததும் இந்த அழகான விளக்கத்துக்கு வாழ்த்து சொல்லணும்னு நினைச்சேன்! ஆனா பேரரவூர்தியின் பேரரவத்தில் இது எப்படியோ அடங்கிப் போய் விட்டது போலும்! :-)
அழகான விளக்கம்! உள்ளுவார் உள்ளத்து உளன் - கண்டாய்! "கண்டாய்" என்பது இங்கு முக்கியமான சொல்! உள்ளுவாரே உளத்தில் உளன் எனக் காணபர்! உள்ளாதார் உள்ளத்திலும் உளன்! ஆனால் அவர் "உளன் காணாதார்!"
சர்வ அந்தர் ஆத்மனே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம் - என்று எல்லார் அந்தராத்மாவிலும் இருப்பவனே என்று சுப்ரபாதமும் ஆழ்வார் பாசுரத்தை அடியொற்றித் தான் சொல்கிறது!
அற்புதமான, அர்த்தம் பொதிந்த, அழகுத் தமிழ் கொஞ்சும் பதிவுகளால் ஓராண்டை நிறைவு செய்ததுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteநேரமின்மையால் அடிக்கடி வந்து படிச்சுப் பின்னூட்டம் கொடுக்க முடியலை! :(
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteஅற்புதமான, அர்த்தம் பொதிந்த, அழகுத் தமிழ் கொஞ்சும் பதிவுகளால் ஓராண்டை நிறைவு செய்ததுக்கு வாழ்த்துக்கள்!//
நன்றி கீதாம்மா.
//நேரமின்மையால் அடிக்கடி வந்து படிச்சுப் பின்னூட்டம் கொடுக்க முடியலை! :( //
அதனால் என்ன! நீங்க எப்போ எப்படி வருவீங்க-ன்னு தெரியாது, ஆனா வந்துடுவீங்க! :-))