இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான். முழங்கால் முறிச்சு என்று சொல்லப்படும் படிக்கட்டுகள் எல்லாம் தாண்டி வந்து விட்டோம்.
பெரிய பெரிய மின்-காற்றாடிகள் தெரிகின்றன மலை மேல். அடைந்தாயிற்று வேங்கடத்தை! இருள் சூழத் தொடங்கி விட்டது. வனத்தில் தான்; மனத்தில் இல்லை! பூந்தோட்டங்கள் தென்படுகின்றன.
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமேஎன்ற நம்மாழ்வார் பாடல் நிழல் ஆடுகிறது.
எதற்கு இவர் இறைவனைத் தொழச் சொல்லாது, மலையைப் போய் தொழச் சொல்கிறாரே!
சரி, உடைமைகளை எடுத்துக் கொண்டு, பதிவு செய்த அறையில் போய் நண்பர்கள் எல்லாரும் தங்கினோம். உடல் தூய்மை மட்டும் செய்து கொண்டோம்.
நண்பர் ராஜ் iodex தைலம் தானும் தடவி, எங்களுக்கும் தடவி விட்டார். பின்ன ஸ்ரீதேவிய எங்களுக்கு முந்திப்போய் படம் எடுத்தாரே, எப்படி பிராயச்சித்தம் செய்வதாம்? :-)
சரி பசி எல்லோருக்கும். ஒரு வெட்டு வெட்டி விட்டு, கொங்குரா ஊறுகாய ஒரு கடி கடிச்சிக்கினோம். நேராக ஸ்வாமி புஷ்கரிணி என்று சொல்லப்படும் குளத்துக்கு சென்று, நீர் தெளித்துக் கொண்டோம்.
கோனேரி என்ற அழகிய தமிழ்ப் பெயர் இதற்கு உண்டு. முதலில் கோனேரியின் வடமேற்கு மூலையில் உள்ள வராகப் பெருமாள் ஆலயம் சென்று வழிபட்டோம்.
திருமலை "ஆதி வராகத் தலம்". எனவே திருவேங்கடமுடையானைத் தரிசிக்கும் முன்னர், வராகப் பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்பது நியமம். கோவிலில் முதல் பூஜையும், நிவேதனமும் இவருக்கே!
சிறிய உருவம். பூமகளை மடியில் சுமந்து, அவளுக்கு ஞான உபதேசம் செய்யும் ஞான வராகராக திகழ்கிறார்! வராகத்தை
கேழல் என்று ஆழ்வார் தூயதமிழில் அழைத்தது நினைவுக்கு வந்தது! சொன்னேன் ஆனந்திடம். அவன் என்னை ஒரு முறை முறைத்தான், செல்லமாக!
அனந்த நிலையம் எனப்படும் அவன் கருவறைக் கோபுரம் தங்கப் பூச்சில் தகதக என மின்னியது! மின்னுவதெல்லாம் பொன்னல்ல! ஆணிப்பொன் மேனி உள்ளே இருக்கிறது! வாருங்கள் என்பது போல மின்னியது!!
கையில பார் கோட் போட்ட டோக்கனைக் கீழ்த் திருப்பதியிலேயே கட்டிக்கிட்டோமே! நேரே வரிசையில் போய் நின்னுட்டோம்.
இந்த பார் கோட் ஐடியா IIM மாணவர்கள் பிராஜெக்டாம்! சூப்பர் அப்பு! இதனால் முன்பு போல் பல மணி நேரம் கொட்டகையில் அடைந்து கிடைக்காமல் திருமலையின் மற்ற ஆன்மீகப் பகுதிகளைப் பார்த்து வரலாமே.அம்மணிகளுக்கு ஷாப்பிங் டைம் வேறு எக்ஸ்ட்ரா கிடைக்கும்:)
வரிசையில் நின்று விட்டோம். பலவிதமான மனிதர்கள். ஆனால் ஒரே நோக்கம்! இறை முகம் காணல்!
பணம் படைத்தவர்கள், அவ்வளவாகச் செல்வச் செழுமை இல்லாதவர்கள்,
குணம் படைத்தவர்கள், அவ்வளவாகக் குணச் செழுமை இல்லாதவர்கள்,
பல மொழிகள், பல உடைகள், பல கதைகள், பல சுவைகள்!
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே"நின்றனரே" என்று நம்மாழ்வார் வரிசையில் நிற்பதையும் சேர்த்தே தான் குறிப்பிட்டாரோ?
சுற்றுலா சென்றால் கூட, ஒரே குடும்பத்தார் கூட அவர் அவர் விரும்பும் ஸ்பாட்டுகளுக்குச் சென்று திரும்பலாம். ஆனால் இங்கே எல்லோரும் ஒரே பொருளைக் காணத் தான் ஓயாது நிற்கிறார்கள்!
அவர்கள் மேம்போக்காக தரிசனம் செய்கிறார்களோ, இல்லை.... "வினையேன் அழுது" அவனைப் பெறுகிறார்களோ, ஆக மொத்தம் அந்தப் "புன்னகை மன்னன்" குளிர் முகம் காணத் தான் இவ்வளவு விழைவு. அதுவன்றிப் பிறிதொன்று இல்லை!
ஆகவே, அந்தக் கணத்தில் எல்லாருமே அவன் அடியார் தான்! அடியார்க்கு அவனே ஆரமுதன்!பிரபலங்கள், பிரபலங்களின் சபலங்கள் என சிறப்பு அனுமதியோ, பணம் கொடுத்தவரோ, பண்பாளரோ, தொண்டரோ, துறவியோ எவராயினும் எனக்கென்ன? எவராயினும் சரி, சற்றுக் கூட கைபடாது கால்படாது உள்ளே செல்லத் தான் முடியுமா? அப்படிச் சொல்லத் தான் முடியுமா?
வரிசையில் ஊர்ந்து கோபுர வாசல் கிட்டே வந்து விட்டோம். இரவு சுமார் 10:30 மணி. கோவில் மணியோசை, பேரிக் கொம்பு முழக்கம். ஓகோ அவனுக்குப் பசி போலும்! நிவேதனம் ஊட்டுகிறார்கள்! சரி சாப்பிடட்டும். பசியால் வாடும் முகத்தைப் பார்க்க மனம் வருமா? நாம் காத்திருந்து பொறுமையாகவே பார்ப்போம்! ஹேய்....என்ன ஏதோ சலசல சத்தம் கேட்கிறதே? எதற்கு கூச்சல்??
ஆனந்த் தான் கூவினான். "டேய் ஸ்ரீதேவி தான்பா; அங்கே பாரேன்!".
மச்சி, குச்சி என்ற விளிப்புகள் ஏனோ அப்போது அவன் வாயில் வரவில்லை!
ஆமாம் ஸ்ரீதேவி தான், குடும்பத்தாருடன்!
வழியில் பார்த்தற்கும் இப்போதைக்கும் வித்தியாசங்கள்! பொறுப்பான உடுப்புகள் உடுத்தி இருந்தனர். நாங்கள் கூப்பிடும் தொலைவே இருந்தனர்!கோவில் அதிகாரியும், அவர் கூட திருமண்காப்பு நெற்றியில் துலங்கும் ஒரு அர்ச்சகரும் அவர்களை வரவேற்றனர்!
உள்ளே அவர்கள் அனைவரும் நுழையும் போது, வரிசையில் உள்ள கூட்ட மிகுதியாலும், அந்தக் கோபுர வாசலில் தடுப்புகள் வெறும் கயிறாகவே இருந்த காரணத்தாலும் சற்றே தள்ளு முள்ளு!
உடனே அந்த அர்ச்சகர், பணியாளர்களை விட்டு வரிசையை நிறுத்தச் சொன்னார்! நல்லது தான்!!ஆனால் ஒருபடி மேலே போய் "இந்தக் காட்டுமிராண்டிக் குரங்கு கூட்டம் எப்பவுமே இப்படித் தான்; ஏமி புத்தி லேது ஈ கோட்டி (குரங்கு) ஜனாலுக்கி.....xxxxxxxxxxxxxxxxxx.....நு ராம்மா", என்று படபடவென பொரிந்து விட்டார்... பல வார்த்தைகள் பதிவின் தன்மை கருதி சென்சார்!!
எங்கிருந்து தான் எனக்குக் கோபம் வந்ததோ தெரியவில்லை. குரலை நன்றாக ஓங்கி, "யாரைக் காட்டுமிராண்டிக் குரங்குகள்-ன்னு சொல்றீங்க? ஆஞ்சனேயர் அவதரித்த மலையில் அடியார்களை இழிவாகப் பேச உங்களுக்கு நாக்கு எப்படி வந்தது?
'
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ' என்று அடியவரைத் தான் தினம் தினம் முதலில் துதிக்கிறீங்க. மறந்துடாதீங்க!
'
சர்வ அந்தர் ஆத்மனே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம்' என்பதை மறந்து விட்டீர்களா?
சமூகத்தில் பிரமுகர்கள்-னா அவர்களுக்கு மரியாதை செய்து அழைத்து போங்க, வேண்டாம்-ன்னு சொல்லலை. அதற்காக வாய்த்துடுக்கு வேண்டாம்" என்று கண்கள் பனிக்கக் கத்தி விட்டேன்.
ஒரே நிசப்தம். நண்பர்கள் என்னைப் பிடித்துக் கொண்டனர். அர்ச்சகர் சற்று விக்கித்து தான் போய் விட்டார். அந்த அதிகாரி என்னை ஒரு முறைமுறைத்தார். யாரும் மேற்கொண்டு பேசவில்லை!
நடிகையும் கணவரும் மட்டும் அருகில் வந்து "Sorry; we didn't mean it; really sorry" என்றனர். அனைவரும் உள்ளே சென்று விட்டனர்.கூட்டம் என்னையே பார்த்தது! எனக்கே ஒருமாதிரி ஆகி விட்டது!
நண்பர்கள், "டேய், உனக்கு இவ்ளோ கோபம் கூட வருமா? முன்ன பின்ன நீ இப்படிக் கத்தி பாத்ததே இல்லடா. போலீஸ்-ல்லாம் பக்கத்துல இருக்காங்க. பாத்து டா." என்றனர்.
ஆனந்த் மட்டும் "அந்த நாமக்கார ஐயிருக்கு இருக்குடா. வச்சி வாங்கணும். இவ்ளோ பேசிட்டு ராம்மா ராம்மா -ன்னு கொஞ்சி கொஞ்சி கூட்டினு போறாரு.இதே நாங்க சத்தம் போட்டிருந்தா எகிறி இருப்பாங்க; ஆனா நீ ஏதோ மந்திரம் எல்லாம் சொன்னியா. வுட்ட சவுண்டுல ஆளூ கப்சிப்", என்றான்.
"சரிடா விடு, வயசுல பெரியவர்" என்றேன். மனம் மட்டும் கனம்!! நாம ஏதும் தப்பா பேசிடலையே என்ற பயம்!
நகர்ந்தோம்....நகர்ந்தோம். கொடி மரம் கடந்து, சன்னிதியில் நுழைந்து...கருடன் இரு கரம் கூப்பிச் சேவித்துக் கொண்டிருந்தான்.
சரி நாமும் முகத்தை இப்படி இடப்பக்கம் திருப்பினால்...அய்யோ!
நெடிது உயர்ந்த நீல மேனி நெட்டழகன், முகம் கொள்ளாச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
என்ன சொல்வேன்? எப்படிச் சொல்வேன்??
கண் அழகா? சிவந்த வாய் அழகா?
சிரிக்கும் முகம் அழகா? திரண்ட தோள் அழகா?
கை அழகா? கருத்த இடுப்பழகா?
கால் அழகா? இல்லை மால் அழகா?
அய்யோ!
தீப விளக்கொளியில், பூலங்கி சேவை (பூக்களால் ஆன அங்கி).இளங்கோவடிகள் வியந்தது போல்,
பகை அணங்கு ஆழியும்(சக்கரம்) பால் வெண் சங்கமும்(சங்கு)
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம் பூ ஆடையில் பொலியத் தோன்றிய திருவேங்கடமுடையான் திருமுகம், திருமார்பு, திருக்கரங்கள்...சேவித்து....அதற்கு மேல் முடியவில்லை. ஜரிகண்டி, ஜரிகண்டி, தய சேசண்டி....திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே, கண்கள் பனிக்க வெளியே வந்தோம்.
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான் என்று ஆண்டாளே தரிசன மகா பாக்கியம் கிடைக்க வில்லையே என்று புலம்பும் போது, நாமெல்லாம் எங்கே?
தீர்த்தம், திருப்பாதம்(சடாரி) பெற்று, உடையவர், நரசிம்மர் சேவித்து, உண்டியல் செலுத்தி, வலம் வந்து, வெளி வந்தோம். முன்பெல்லாம், கோவில் மற்றும் அதன் பகுதிகள், கிணறு, அன்னக்கூடம், யமுனைத்துறை, மற்றும் பல சரித்திர நிகழ்வுகள் அதன் இடங்களைப் பார்ப்பேன். உடனிருப்பார்க்கு விரும்பினால் சொல்லுவேன். இம்முறை ஏனோ லயிக்கவில்லை!
அருண் மீண்டும் பழைய நிகழ்ச்சியைப் பற்றி எழுப்பினான். லட்டு சாப்பிட்டுக் கொண்டே, "ஒண்ணுமே இல்லீங்க. எல்லாம் பணம் தான் பேசுது! எப்படியோ நல்லா ஏத்தி வுட்டுட்டாங்க இந்தக் கோயிலை!
நம்ம தஞ்சாவூர் பக்கம் எல்லாம், எவ்ளோ பெருமாள் கோயில் ஆள் அரவம் இல்லா இருக்குது! யாரோ பெரிய பெரிய முனிவங்க, அப்பறம் ஆழ்வார்-ன்னு சொல்றாங்களே, அவுங்க எல்லாம் பாட்டு படிச்சு இருக்காங்களாம் தஞ்சாவூர்ல! ரொம்ப பக்தி கதையெல்லாம் இருக்குதாம். இந்த திருப்பதி-ல அதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னாலும் பணம் மட்டும் கொழிக்குது! அதை வச்சிக்குனு இவங்க ரொம்பவே ஆட்டம் போடறாங்க", என்றான்.
நான் அப்போது அவனுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஒன்றும் சொல்லவில்லை.
பூமாலைக்கே வழியின்றி இருந்த திருவேங்கடமுடையான் பற்றியும் அவன் அருளுக்கு உருகி உருகிக் காதலித்த ஆழ்வார்கள், இராமானுசர், அனந்தாழ்வான், திருமலை நம்பிகள், தியாகராஜர், அன்னமாச்சார்யர், வட இந்திய ஹதிராம்ஜி மற்றும் பலப்பல கதைகளைப் பதிவாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் அப்போது தான் உதித்தது. அதற்கு இப்போது தான் வேளை வந்தது!
//இன்று நாம் காணும் பணக்காரத் திருமலைக்கும் உள்ளே, பலப் பல அன்புத் திருக்கதைகள் எல்லாம் ஒளிந்து உள்ளன. அவற்றை எல்லாம் எழுதலாம் என்று என் சிந்தனை// என்று குமரன் பதிவு ஒன்றில் பின்னூட்டம் இட்டேன். வெறும் கதையாக இல்லாமல், இலக்கிய நயமாகச் சொன்னால், வடையுடன் கூடிய பொங்கலாக இருக்கும் அல்லவா:-) ? இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம மீட் பண்ணலாம். பயந்துறாதீங்க, இனி குறும்-பதிவாகவே இடுகிறேன்!!!
பி.கு:திருமலையான் பிரம்மோற்சவம் Sep 25 துவங்கி Oct 3 வரை, ஒன்பது நாட்கள்!
ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிப் பதிவு! ஒரு/இரு வாகனம் (படத்துடன்);
ஒரு ஆழ்வார் பாடல் (12-இல், 10 பேர் நம்ம பாலாஜி மேல ஒரே லவ்-ஸ் பா)
அனைவரும் அவசியம் வந்து கலந்துக்குங்க!