திருக்கோவிலூர்: பொன்னார் மேனியனே! பொய் சொன்னாரோ ஆழ்வாரே?
வந்திருப்பதோ நீலமேனி வண்ணன், நாராணன் தானே! நீலமேனி எப்பய்யா பொன்மேனி ஆச்சு? முந்தைய பதிவு இங்கே!
நீலமேகக் கல்-னு ஒரு ரத்தினக் கல் இருக்கு! அது உண்மையான கல்லு தானா என்பதை எப்படிச் சோதனை செய்வது? அதை எடுத்துப் பாலில் போடணும்! போட்டா, முழுப் பாலும் அப்படியே, உஜாலா சொட்டு நீலம் கணக்கா நீலமா மாறிடும்!
அது போல், அன்னை மகாலக்ஷ்மி விலை மதிப்பில்லா பொன் "மணி"! மணிகளுள் அவள் பெண் "மணி"!
ஹிரண்யவர்ணீம் என்று அவளைப் பொன்மயமாகத் தான் சொல்கிறார்கள்.
அன்பர்கள் எல்லாம் இறைவனைச் சேவிக்க வருகிறார்கள். அவர்கள் தொலைவில் வரும் போதே, அவர்களையெல்லாம் இவள் பார்த்து விடுகிறாள். தன் குழந்தையின் வருகையைத் தெருக்கோடியிலேயே காணும் ஒரு தாய் போல, அவன் திருமார்பில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கிறாள்!
கைத்தாங்கலாக, அவன் மார்பிலும் கை வைத்து இன்னும் எட்டிப் பார்க்க.......அவள் தீண்டிய அடுத்த நிமிடம், அந்தக் கருப்பனும் வெளுப்பன் ஆகி விட்டான்!
நீலமேனியாய் இருந்தவன், அவள் பொன்னான ஸ்பரிசம் பட்டு, தகதக என்று ஜொலிக்க ஆரம்பித்து விட்டான்! நீலமேகக் கல் பட்டவுடன், பால் நீலமானதைப் போல், இவனும் பொன் மயமாகி விட்டான்!
அதான் திருக்கண்டேன்-னு அன்னையை முதலில் பார்த்த ஆழ்வார், உடனே அடுத்து பொன்மேனி கண்டேன்-னு சொல்லிட்டார்.
பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்!
பொருட் செல்வம் தரும் திருமகள், அவனையும் ஒரு பொருளாகச் செய்து விட்டாள்!
இப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலர் போய், நல்லா செவ செவன்னு, என்னமா கலரு ஆயிட்டான் ! :-)
அதான் அருக்கண் "அணி" நிறமும் கண்டேன்-னு உண்மையைப் போட்டு உடைக்கறாரு!
அவன் கையில் பொன்னாழி என்னும் சக்கரம் கண்டேன்!
புரிசங்கம் என்னும் வலம்புரிச் சங்கு கண்டேன்!
என் ஆழிவண்ணன் பால் இன்று! - என்று பாடி முடிக்கிறார்!
இப்படி மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!
அவர்களும் புறத்தூய்மை, அகத்தூய்மை என்னும் இரு விளக்குகளும் ஏற்றினார்கள்; அதனால், அவனைக் காணப் பெற்றார்கள்!
இடைக்கழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!
பொதுவா கோயில்களில், பெருமாள் நின்னுக்கிட்டு இருப்பார்! இல்லை உட்கார்ந்துகிட்டு இருப்பார்! இல்லை படுத்த வண்ணம் இருப்பார்!
நின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தத் திருக்கோலங்களைச் சொல்லுவாங்க!
ஆனா இது இல்லாம, நடந்தான்-னு இன்னொரு கோலமும் இருக்கு! அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு போஸ்! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்!
அதில் திருக்கோவிலூர் மிக முக்கியமான ஒன்று!
பொய்கையாழ்வார் ஒரு நூறு வெண்பாவும்,
அதே போல் பூதத்தாழ்வார் ஒரு நூறு, பேயாழ்வார் ஒரு நூறும் பாடினர்.
- இந்த முன்னூறும் தான் தமிழ் வேதங்களின் துவக்கம்!
- அது துவங்கிய இடம்-னு புண்ணியம் கட்டிக் கொண்ட ஊர் திருக்கோவிலூர்!
இன்றும் திருக்கோவிலூர் முதலான எல்லா வைணவ ஆலயங்களிலும் தமிழ் வேதத்தை ஓதுகிறார்கள். அதற்கு இயற் சாற்று என்று பெயர்! வெண்பாவை நீட்டி முழக்கிச் சொல்லும் போது, எழும் செப்பல் ஓசை அனைவரையும் மயங்க வைக்கும்! செப்பல் ஓசை, அகவல் ஓசைன்னா என்னான்னு வெண்பா வாத்தி கிட்ட கேளுங்க! :-)
தமிழ் வேதங்களுக்குப் பேதம் என்பதே இல்லை! - மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை! இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லை!பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்று! சிவனையும் சேர்த்தே போற்றிற்று!
வடமொழி வேதங்களை இன்ன இன்ன ஆட்கள், இன்ன இன்ன காலங்களில், இப்படி இப்படித் தான் ஓத வேண்டும் என்று நெறிமுறைகள் இருக்கு!
ஆனால் தமிழ் வேதம் அப்படி இல்லை!
ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் ஓதலாம்! - எந்தச் சாதியினரும், எந்த வேளையிலும் ஓதலாம்!
அந்தத் தமிழ் வேதங்களைச் செய்த ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேரில், ஒன்பது பேர் மற்ற குலங்களில் இருந்து வந்தவர்கள்!
இவர்கள் செய்து வைத்த வேதத்தைப், பெருமாள் கோவில்களில், உயர் குலம் என்று சொல்லிக் கொண்டவர்கள் இன்றும் ஓதிக் கொண்டு தான் உள்ளனர்!
வேள்விகள், பூசைகள், சடங்குகள் - இது எல்லாம் கடந்தது தான் தமிழ் வேதம்! இதற்கு ஒப்பும் இல்லை! மிக்கும் இல்லை!
சரி...வந்தது வந்தோம்...திருக்கோவிலூரை ஒரு ரவுண்டு சுத்திப் பாக்கலாமா? நண்பர் செந்தழல் ரவி, பல படங்களை அனுப்பி இருக்காரு! - நன்றி தல!
ஆனா ரவிக்கு முன்னாடியே திருமங்கை-ன்னு இன்னொரு நண்பர் வீடியோ அனுப்பி இருக்காரு! அவர் கிட்ட காமிரா இல்லையாம்! அதுனால பாட்டுலயே படம் புடிச்சி அனுப்பி வைச்சிருக்காரு! :-)
திருக்கோவல் ஊருல தென்பெண்ணை ஆறு ஓடுது! வயல்-ல கரும்பு போட்டு இருக்காங்க! புன்னை மரம் வேற எங்க பாத்தாலும்!
வண்டு உய்ங்க் உய்ங்க்-னு பறந்து பாட்டு பாட, கரும்பும் அதைக் கேட்டு, தலைய ஆட்டி ஆட்டித் தூங்குதாம் திருக்கோவலூரில்!
ஆங்குஅரும்பிக் கண்ணீர் சோர்ந்துஅன்பு கூரும்
அடியவர்கட்கு ஆரமுதம் ஆனான் தன்னை,
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்
குழாவரி வண்டுஇசை படும்பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே
-திருமங்கை ஆழ்வார் பாசுரம்.
திருக்கோவிலூர் பெருமாள் ஓவியத்தையும், திருவிக்ரம சுவாமி கோவிலைப் பற்றியும் கொஞ்சமாப் போன பதிவிலேயே பாத்தாச்சு!
பார்ப்பனர் அல்லாதாரும் ஜீயராக/மடத் தலைவராகவும் வரமுடியும் என்பதற்கு இந்த ஊரே சான்று-ன்னும் சொல்லி இருந்தேன்!
திருக்கோவிலூர்ல புகழ் பெற்ற சிவன் கோவிலும் இருக்கு! வீரட்டானத் தலங்களுள் ஒன்று! சிவானந்த வல்லி என்பது இறைவியின் பெயர்! மெய்ப்பொருள் நாயனாரின் சமாதி உள்ள இடமும் கூட! சிவ வேடம் போட்டுக் கொண்டு, கொல்ல வந்தவன் கிட்டேயும் அன்பு காட்டிய நாயனார் அவர்!
இன்னும் கிட்டக்க அறையணி நல்லூர்-னு இன்னொரு சிவாலயம்! இராஜராஜ சோழன் கல்வெட்டுகள் நிரம்பி உள்ள ஊர்!
பக்கத்தில் ஞானாந்த சுவாமிகளின் தபோவனம்! அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு விருந்து செய்த மகான்...சென்ற பதிவில் செந்தழலார் பின்னூட்டங்களைப் படிங்க! நிறைய குறிப்பு கொடுத்திருக்காரு!
உத்தராதி மடத்தின் குருவான ரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனமும் அருகே தான் - மணம்பூண்டியில்!
இன்னும் சற்றுத் தொலைவில், ஆதித் திருவரங்கம் என்னும் தலம்! மிகப் பெரிய அரங்கனின் உருவம் இங்கு தான்!
அனைத்துக்கும் மேலாய், பாரியின் நட்புக்காக தன் உயிரையே கொடுத்த தமிழ்ச் செம்மல் கபிலர் - அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறையும், கபிலர் குன்றாய், பெண்ணையாற்றில்!
இன்னும் அருகே பரனூர் என்னும் ஊரு - பரனூர் அண்ணா, கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் தமிழில் ஆற்றொழுக்காய், அருளுரைகள் ஆற்றும் ஊர்! சீர்காழி, சிதம்பரம்-னு....திருக்கோவிலூரைப் புடிச்சாப் போதும், ஒரு ஃபுல் ரவுண்டு வந்துடலாம்!
எல்லாத்த விட முக்கியமான ஒரு இடம் இருக்கு.....திருக்கோவிலூர் பக்கத்துல தான்! - அங்க, பெருமாளுக்கு விபூதி பூசுறாங்க!
வைணவ பக்தர்களும், பெருமாள் விபூதி பூசிக்கறத பார்த்து, தாங்களும் திருநீறு பூசிக்கறாங்கோவ்! - ஆனா அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம்!
அது வரை வர்ட்டா ஸ்டைலில் வரட்டா? :-)
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, இத்துடன் திருக்கோவிலூர் பதிவுகள் நிறைந்தன....