மார்கழி-17: ஆண்களா? பெண்களா?? - Who is தூங்குமூஞ்சி? :)
இறைவன் எம்பெருமானின் ஆசியுடன், தங்கள் இல்லத்தில், இனிதே இன்பம் பொங்க, வாழ்த்துகிறேன்!
இன்றைய பாவை, புத்தாண்டுப் பாவை! குடும்பத்தைக் காட்டும் பாவை! குடும்ப மகிழ்ச்சியைக் காட்டும் பாவை! பார்க்கலாமா?
தூக்கத்தில் பிஸ்து யாருங்க? யாருக்கு நல்லாத் தூக்கம் வரும்? ஆண்களா? பெண்களா??
இதைக் கேட்டா ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாய்ங்க! வாழ்க்கை பூரா அரட்டை அரங்கம் நடத்தும் அளவுக்கு மேட்டர் இருக்கு இந்தக் கேள்வீல! :)
காதலி: எனக்குத் தூக்கமே வரதில்லை! இவன் நினைப்பாவே இருக்கு! இவன் எப்படித் தான் நல்லாக் கொஞ்சிட்டு, வீட்டுக்குப் போனவுடன், என்னை மறந்துட்டு தூங்கறோனா? :)
புது மனைவி: ஏம்ப்பா! தூக்கமே வர மாட்டேங்குது! புது இடமா வேற இருக்கு! நல்லாக் கொஞ்சிட்டு, நீங்க மட்டும் எப்படித் தான் இப்படிக் கொறட்டை விட்டுத் தூங்கறீங்களோ? :)
புது அம்மா: என்னாங்க! குழந்தை அழுவறது காதுல விழலை? அப்படி என்ன தூக்கம்? எழுந்து போயி, குழந்தைக்குக் கொஞ்சம் போக்கு காட்டுங்க! :)
பழைய மனைவி: அலோ! பையன் காலிங் பெல் அழுத்தறான்! எழுந்து போயி கதவைத் திறங்க! எப்பமே நான் தான் எழுந்து போகணுமா? :)
காதலன்/புது கணவன்/புது தந்தை/பழைய கணவன்(மனைவன்): அது எப்படித் தான், வண்டி பின் சீட்டில் ஏறி உட்கார்ந்த அடுத்த நிமிஷம், உங்களுக்கெல்லாம் தானா தூக்கம் வருதோ? :)
இந்த செல்லப் பட்டிமன்றத்துக்கு என்ன தான் தீர்ப்பு? ஆண் தூங்குமூஞ்சியா? பெண் தூங்குமூஞ்சியா?
* கோதை சொல்லுறா: "ஆண்கள் தான் தூங்குமூஞ்சி!" :)
* நானும் சொல்லுறேன்: "ஆண்கள் தான் தூங்குமூஞ்சி!" :)
கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க! :)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)
அம்-பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே,
எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்!
அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த,
உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய்!
செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா,
உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய்!
சென்ற பாட்டில் வாயிற் காப்போனைப் பாடினார்கள். (கவனிக்கவும்: வாயிற் காப்போனை எழுப்பவில்லை! ஜஸ்ட் பாடினார்கள்! ஏன்னா அவன் தூங்கவில்லை! வாயில் "நிஜமாலுமே" காத்துக் கொண்டிருந்தான்:)
இந்தப் பாட்டில் கண்ணனின் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டார்கள்! இதிலிருந்து பாத்துக்குங்க கண்ணன் வீட்டில் எவ்வளவு எளிமை-ன்னு! கெடுபிடிகள் எல்லாம் ஒன்னும் கிடையாது! எல்லா அடியவர்களும் அன்போடே நடத்தப்படுவார்கள் அவன் வீட்டில்!
அம்-பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும் = உடை, தண்ணீர், உணவு என்று மூன்று அறங்களையும் செய்யும்
எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய் = எம்பெருமானின் தகப்பனாரே! பெருமாளுக்கே பெருமானே! நந்த கோபன் அப்பா (மாமா)! எழுந்திருங்க!
அடிப்படைத் தேவை: உடுக்க அம்பரமே=உடையே! உண்ண சோறே=உணவே!
ஏன் உடையை மொதல்ல சொல்லி, உணவை அப்புறமா சொல்றாரு?
ஏன்னா மனிதனுக்கு மானம் முக்கியம்! பசித்த பசியிலும், சோறு வாங்கத் துணியில்லாம வெளியில் வரமுடியுமா? அதான் முதலில் உடை கொடுத்து, பின்னர் உணவும் கொடுத்து, தர்மங்கள் செய்கிறாராம் நந்தகோபன்! தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரும் தண்ணீர் பந்தல் அறங்களும் செய்கிறார்! எங்கூரு தண்ணி உனக்கு கிடையாது-ன்னு சொல்லாதவர்! :)
இன்னொரு பார்வை:
அம்-பரம் = ஓம்! சோ-றே! = நமோ! தண்ணீரே = நாராயணா!
* அம்-பரம் = அந்தப் பரத்துவமான மோட்ச வீடு = ஓம்!
* சோ-றே! = சோற்றைத் தனக்கு-ன்னு சேமிச்சிக்க முடியாது! அழுகிடும்! எனதில்லை = ந+மோ!
* தண்ணீரே = தண்ணீர்/தீர்த்த வடிவாய் இருப்பவன் = நாராயணாய!
நாரணம்=தண்ணீர் என்று முன்னரே சொல்லி இருக்கேன்!
நீர், கலத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு வடிவம் கொள்வது போல், நாரணன் நம் மனத்துக்கு ஏற்றவாறு வெவ்வேறு தெய்வ வடிவம் கொள்கிறான்!
மதங்கள் வேறாக இருந்தாலும், அத்வைத-விசிஷ்டாத்வைத-த்வைத என்று கொள்கைகள் வேறாக இருந்தாலும், அவனே பரப்பிரம்மம் என்பது சங்கரர்-இராமானுசர்-மாத்வர் மூன்று ஆச்சார்யர்களின் வாக்கு!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே = பெண்கொடிகளுக்கு எல்லாம் கொழுந்தே! ஆயர் குலத்தின் விளக்கே!
கொழுந்து இலை = அது துளிர் விடும் போது தான் ஒரு உயிரின் அருமை நமக்குத் தெரியுது! அது போல் யசோதை! அவளை வைத்துத் தான் நமக்கு நம்பிக்கையே பிறக்குது!
குலவிளக்கே = கண்ணன் மனித குலச் செல்வம்! அந்தப் புதையலை எப்படித் தேடுவது? விளக்கை வைத்துத் தானே இருளில் தேடணும்? அதான் குலத்தின் விளக்காக அம்மா யசோதை!
மாதா->பிதா->குரு->தெய்வம்! = அன்னை முதல் விளக்கை ஏற்றி அப்பாவைக் காட்ட, அப்பா இரண்டாம் விளக்கை ஏற்றி நல்ல கல்வியைக் காட்ட, குரு மூன்றாம் விளக்கை ஏற்றி, இறைவனைக் காட்டுகிறார்!
இப்படி அத்தனை விளக்குக்கும் முதல் விளக்கு, அம்மா = குல விளக்கு!
எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய் = எம்பெருமானின் தாயாரே! பெருமாளுக்கே பெருமாட்டியே! யசோதாம்மா (அத்தை)! முழிச்சிக்கோங்க! :)
******* முக்கியமான பாயிண்ட்********
நந்தகோபனுக்கு = எழுந்திராய்! யசோதைக்கு = அறிவுறாய்!
* நந்தகோபனை உலுக்கி, குலுக்கி, அலாரம் வச்சி, சகலமும் செஞ்சி "எழுப்பணும்"
* யசோதையை "அறிவுறாய்" - முழிச்சிக்கோங்க-ன்னா போதும்! உடனே தூக்கத்தில் இருந்து எழுந்திருவாங்க!
இப்போ சொல்லுங்க! தூங்குமூஞ்சி - ஆண்களா? பெண்களா?? :))
அம்-பரம் ஊடு அறுத்து, ஓங்கி, உலகு அளந்த = ஆகாசம் என்னும் வெளியை(அம்பரம்) ஊடு அறுத்து, ஓங்கினான்! உலகு அளந்தான்! நம் எல்லாரையும் அளந்தான்!
அவன் பரத்துவம்(அம்-"பரம்")! அந்தப் பரத்தையே நமக்காக ஊடு அறுத்தான்! பரத்தை விட்டுக் கீழிறங்கி வந்து நமக்காக உலகளந்தான்!
உம்பர் கோமானே, உறங்காது எழுந்திராய் = தேவாதி தேவர்களின் கோமகனே! உறங்கியது போல் உறங்கியது போதும்! நாங்க எல்லாம் வந்திருக்கோம்-ல? எங்களை முதலில் கவனி!
வாமனன் - திரிவிக்ரமன் - உலகளந்த பெருமாள்!
திருக்கோவிலூர் என்ற ஊருக்குப் போய் உள்ளீர்களா? கதை கதையாகச் சொல்லலாம் அந்த ஊரைப் பற்றி!
* அவதாரங்களிலேயே நடு-நாயகமான அவதாரம்! இது வரை ஒன்பதில், ஐந்தாம் அவதாரம் (வாமன-திரிவிக்ரம) இரட்டை அவதாரம்!
* இதற்கு முன்பு விலங்குகள், இதற்குப் பின்பு மனிதர்கள் என்று பகுத்துக் காட்டும் அவதாரம்.
* நடு நின்ற நடுவே என்பார் வள்ளலார்! அப்படி நடுவிலே நின்ற அவதாரம்!
* அழிவு, சம்காரம் என்பதே இல்லாத ஒரே அவதாரம் இது தான்!
* இந்த அவதாரத்தில் தான் பூமிக்கும் பல நன்மைகள் நடந்தன! அதில் மிக முக்கியமான ஒன்று = கங்கை ஆறு தோன்றியது!
அதனால் தான் இந்த அவதாரத்தை மட்டும், எல்லாச் சமயங்களிலும், மதங்களிலும் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்!
கணபதியைப் போலவே குள்ள உருவம் வாமனம்! முருக பக்தர் அருணகிரியும் வாமனனைப் போற்றிப் பாடுகிறார்! சைவ, வைணவ, சாக்த இலக்கியங்கள் மட்டும் இல்லை, ஜைன-பெளத்த இலக்கியங்களிலும் இந்த அவதாரக் குறிப்பு காணப்படுகிறது!
எந்தப் பிரிவினர் செய்யும் யாகத்திலும், மூன்று முறை திரிவிக்ரமனுக்கு அவிர்ப்பாகம் அளித்தே யாகம் செய்ய வேண்டும் என்பது நியதி.
கணபதி ஹோமம் ஆகட்டும், லலிதா-சண்டி ஹோமம் ஆகட்டும், ஈஸ்வரனின் மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகட்டும், வைணவ சுதர்சன ஹோமம் ஆகட்டும், அவ்வளவு ஏன் - காபாலிகள் செய்யும் அகோர ஹோமங்கள ஆகட்டும்! அனைத்திலும் உலகம் காத்த திரிவி்க்ரமனுக்கு மும்முறை துதி வழங்கப்படும்! அத்தனை பெருமை இவனுக்கு மட்டும்!
திருப்பாவையும் ஒரு யக்ஞம் தானே! அதனால் தான்,
* முதல் பத்தில் = ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
* இரண்டாம் பத்தில் = அம்பரம் ஊடறுத்து ஒங்கி உலகளந்த
* மூன்றாம் பத்தில் = அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
என்று ஆண்டாளும் மூன்று முறை அவிர்ப்பாகம் அளிக்கிறாள், வாமன மூர்த்திக்கு!
அப்போது செய்த இலக்குவத் தொண்டுக்கு, இப்போது கால் பிடிச்சி விடறான், பலராமனுக்கு!
செம் பொற் கழலடிச் செல்வா, பலதேவா = செம்பொன்னால் ஆன வீரக் கழல்! அதைத் திருவடியில் மாட்டி இருக்கும் பலதேவா!
பலதேவன் = வாலியோன் என்பது சங்க காலத் தமிழ்ப் பெயர்! இவனுக்குப் பனைமரக் கொடியும், கலப்பையும் கொடுக்குது சங்கத் தமிழ் இலக்கியம்!
ஏன் பலராமன் அவ்வளவு முக்கியம்? அவனுக்கு மட்டும் தனி அவதார அந்தஸ்து ஏன்?
ஏன்-னா அவன் தான் தொண்டின் அடையாளம்!
அவன் தான் சென்ற முறை இலக்குவன்! இந்த முறை பலராமன்!
அன்பு,தொண்டு = இரண்டிலும் சிறந்து விளங்கினான் இலக்குவன்!
மற்றவர்கள் இராமனின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத் தொண்டில் இருந்து சற்றே ஒதுங்கினர்! ஆனால் இவன் மட்டும் தொண்டை விடவே இல்லை! கைங்கர்யம் செய்தே தீருவேன் என்று பெருமாளிடமே சண்டை போட்டு தொண்டு செய்தான்! :)
மனசால் அன்பு செய்தால் மட்டும் போதாது! கையாலும் தொண்டு செய்யணும்! இறைவனைப் பேசி/பாடிக் கொண்டும், பதிவு போட்டுக் கொண்டும் இருந்தால் மட்டுமே போதாது! மானுடத் தொண்டும் கொஞ்சமாச்சும் செய்யணும்!
* இதைக் காட்டவே இலக்குவனை மட்டும் முன்னிறுத்துகிறான் இறைவன்!
* அதான் அவனுக்கு மட்டும் அடுத்த முறை தனி "அவதார அந்தஸ்து = பலராம அவதாரம்"!
நின்றால் மரவடியாம் = பாதுகை!
அதுவே ஆதிசேஷன்! அதுவே இலக்குவன்! அதுவே பலராமன்!
செம்பொற் ***கழல்-அடிச்*** செல்வா! என்று பாதுகையாகவே பலராமனைப் பாடுகிறாள் கோதை! தொண்டுக்குக் கிடைத்த பரிசு இது! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!
உம்பியும் நீயும் உறங்கேல்-ஓர் எம் பாவாய் = பலராமனைத் தான் கோதை முதலில் சொல்கிறாள்! தலைச்சன் புள்ள தான் எப்பமே எல்லாத்தையும் தாங்குது! அதான்:)
கண்ணனை, As Usual, வெளிப்படையாச் சொல்ல மாட்டாள்! பலராமா, நீயும் உன் தம்பியும் என்று சொல்லி விடுகிறாள்! :)
நீயும், உன் தம்பியும் (கண்ணனும்) தூங்காதீர்கள்/தூங்குங்கள் = உறங்கேல்/உறங்கு+ஏல்!
* உறங்கேல் (தூங்காதீர்)+ ஓர் (எண்ணுங்கள்) எம்பாவாய்!
* உறங்கு (தூங்கு)! ஏல்-ஓர் (ஏற்றுக்கொள்-எண்ணுங்கள்) எம்பாவாய்!
ஹா ஹா ஹா! இது என்ன குழப்பமாப் பேசுறாளோ கோதை? காதலன் கண்ணன் பாவமாத் தூங்குறான், சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்-ன்னு விட்டுடறாளோ? ஹிஹி! அடுத்த பதிவு இட்டாகி விட்டது! அதில் படியுங்கள் இப்படி ஏன் சொல்கிறாள் என்று!
நாங்க கண்ணன் இல்லம் வந்திருக்கோம்-ல? இப்போ எங்களை ஏல்-ஒர் எம்பாவாய்! ஏல்-ஒர் எம்பாவாய்!
இலக்குவ-பலராம-தொண்டர்கள்-அடியார்கள் திருவடிகளே சரணம்! சரணம்!