வெட்டிப்பயலின் மணல் கயிறு பதிவை ரீமேக் பண்ணா என்ன? எப்பவும் தெலுங்குப் படத்தையே தான் ரீமேக் பண்ணனுமா? ஃபார் ஏ சேஞ்ச்,
ஒரு தெலுங்குப் பதிவை ரீமேக் பண்ணா என்ன? :-) கற்பனை செஞ்சி பார்த்ததால வந்த எஃபக்ட் இதோ!
சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண்ணுங்க போடாத கண்டிஷனே இல்ல! இதுக்கு "வெட்டி"யோட அந்த வித்யாவே சாட்சி!
ஏன்.....நம்ம பசங்க கண்டிஷன் போட மாட்டானுங்களா? இல்ல கண்டிஷன் போடத் தான் தெரியாதா? பதிவு போடறானுங்க! மொக்கை போடறானுங்க! அட, கண்டீசன் போட மாட்டானுங்களாப்பா?
போட்ட கண்டிஷன்ல, அவுங்க அப்பா, அம்மா கதி கலங்கிப் போயி நம்ம நாரதர் நாயுடுவோட வொய்ஃப், சரோஜினி நாயுடு கிட்ட வராங்க.
அந்த பையனுக்கு ஏதாவது பேரு வைக்கனுமே? சரி, வித்யாவுக்கு ரைமிங்கா விக்ரம்-னு வெச்சிடுவோம்.
சரோஜினி நாயுடு: வாப்பா விக்ரம். நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு மாசமா பிரியாணியே இறங்கலயாமே? எங்கே...அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லு! நானே உனக்கு நல்ல பொண்ணா பாக்கறேன்.
விக்ரம்: ஓ...அப்படியா நாயுடு ஆன்ட்டி! நான் BE Mechanical படிச்சிருக்கேன்.
ச.நா: அதுக்கென்னப்பா! அதுக்கேத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்துடலாம்.
விக்ரம்: BE Mechanical படிச்சாலும், நான் கம்ப்யூட்டர் கம்பெனி-ல தான் வேலை பாக்குறேன்!
ச.நா: அடடா! கம்ப்யூட்டர் கம்பெனி-ல கியர் பாக்ஸ் ஏதாச்சும் மாத்துற வேலையா தம்பி?
விக்ரம்: அட! அது இல்லீங்க! எலெக்டிரிக்கல் படிச்சவன் கூடத் தான் கம்ப்யூட்டர்-ல இருக்கான்! அவன் என்ன கலர் கலரா ஒயரையா புடுங்கிக்கிட்டு இருக்கான்?
எம்.எஸ்சி கணக்கு படிச்சவன் கூடத் தான் கம்ப்யூட்டர்-ல இருக்கான்! அவன் என்ன கலர் கலரா ஃபிகரையா கணக்கு பண்ணிக்கிட்டு இருக்கான்?
கம்ப்யூட்டர்-க்குள்ள யாரு வேணா வரலாம் ஆன்ட்டி! ஆனா இங்கிருந்து தான் வேற எங்கேயும் போக முடியாது!
ச.நா: ஏம்பா?
விக்ரம்: ஆடுன காலும், பாடுன வாயும், தட்டுன பொட்டியும் என்னைக்காச்சும் சும்மா இருக்குமா?
வொர்க் பிரம் ஃபாக்டரில, எப்படி வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணறதாம்? டயத்துக்கு வேலை பாத்தாவணும்! வேலை பாத்தே வெளங்காமப் போயிருவானுங்க ப்சங்க!
ச.நா: ஓ, அதானா சங்கதி?
அன்டர்வேர் கம்பெனிக்காரன் கூட, சாஃப்ட்வேர் கம்பெனி மாப்பிள்ளையா ஏன் கேக்குறான்-ன்னு இப்பல்ல புரியுது!
சரி, மேட்டருக்கா வா! உனக்கு எந்த வேலை செய்யற பொண்ணைப் பாக்கட்டும்? அதைச் சொல்லு ராசா!
விக்ரம்: எனக்கும் சாப்ட்வேர்-ல வேலை பாக்குற பொண்ணு தான் வேணும்!
ச.நா: ஏன்பா, ஒரே உறையில எப்படிப்பா ரெண்டு கத்தி இருக்கும்? நல்லா யோசிச்சிச் சொல்லு! இது வாழ்க்கைப்பா வாழ்க்கை!
அப்பறம் நீ பொட்டி தட்ட மாட்ட!
வாழ்க்கை ஃபுல்லா ரொட்டி தான் தட்டுவ!
விக்ரம்: அட...இதெல்லாம் நாங்க யோசிக்காம பேசுவமா? ஏதோ பதிவு எழுதறோம், பின்னூட்டம் போடறோம்-ங்கிறதுக்காக, யோசனையே பண்ண மாட்டோம்-னு நெனச்சிக்காதீங்க! நான் ஒரு டெவலப்பர்...அதனால...
ச.நா: அதனால என்னா இப்போ?
விக்ரம்: கண்டிஷன் நம்பர் 1: பொண்ணு சாப்ட்வேர்ல இருக்கணும்! ஆனா டெஸ்ட்டரா இருக்கக் கூடாது! டெவலப்பராத் தான் இருக்கணும்!
ச.நா: என்னாடா பொழைப்பு இது? ஏதோ ரியல் எஸ்டேட் டெவலப்பர் ரேஞ்சுக்குப் பேசறியே!
விக்ரம்: நல்லாக் கேட்டுக்கோங்க ஆன்ட்டி.
டெஸ்ட்டருங்களுக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
யூசருக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
அனலிஸ்ட்டுக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
மேனேஜருக்கு டெவலப்பர கண்டாலே ஆவாது!
ச.நா: அப்ப, யாருக்குத் தான் ஆகும்?
விக்ரம்: டெவலப்பருக்குத் தான் ஆகும்!
ஒரு டெவலப்பரோட மனசு ஒரு டெவலப்பருக்குத் தான் தெரியும்!அதுனால எனக்கு வரப் போற பொண்ணு ஒரு டெவலப்பராத் தான் இருக்கணும்!
ச.நா: என்னமா அலசி, ஆராய்ஞ்சி, முடிவு எடுத்திருக்குற? மொதல் கண்டிஷனே சூப்பர்! மேல சொல்லு!
விக்ரம்: கண்டிஷன் நம்பர் 2. எனக்கு என் கெரியர் தான் முக்கியம்!
ச.நா: டிபன் கெரியரா? அதுக்கென்னபா நல்லதா பார்த்து வாங்கி தரச் சொல்றேன். ஆனா மத்தியானச் சாப்பாட்டுக்கு, டிபன் கெரியர்-ல தான் சாப்பாடு கொண்டாறணும்-னு எல்லாம் கண்டிஷன் போட்டுறாத ராசா! கண்ணகியோட கசின் பிரதர் கூட, இப்பல்லாம் இப்படிக் கேக்கறது கிடையாது!
விக்ரம்: ஆன்ட்டி. நான் சொல்றது என்னோட ப்ரஃபொஷன். எந்தக் காரணத்துக்காகவும் என் வேலையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்! வொர்க் இஸ் வொர்சிப்! மத்ததெல்லாம் கர்ச்சீப்!
டெட்-லைன் போது, டேமேஜர் போட்டு நெருக்குனார்-னா வைங்க, வேலைய வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வருவேன்! அதைக் கூடமாட இருந்து அந்தப் பொண்ணு தான் முடிச்சிக் கொடுக்கணும்! என்னா சரியா?
ச.நா: அடடா! உன் ஆபீஸ் வேலையில கூட அவளுக்குச் சம உரிமை கொடுக்குறியேப்பா!
விக்ரம்: எக்ஜாக்ட்ல்லி! அப்பறம் இதுலயே ஒரு முக்கியமான சப் கண்டிசன்!
2b. நான் அப்பாவான பிறகு, குழந்தையை அந்தப் பொண்ணு தான் பாத்துக்கணும்! எனக்கு என் கெரியர் தான் முக்கியம்! வேணும்னா வாரத்துல அஞ்சு நாள் மட்டும், நான் வொர்க் ப்ரம் ஹோம் பண்ணிக்கிட்டே, டயாபர் மாத்த ரெடியா இருக்கேன்!
ச.நா: அடடா! ஆம்பளைப் புள்ளன்னா இப்பிடியில்ல இருக்கணும்! அந்த மாதிரி பொண்ணையே பாத்துடறேன் ராசா! அடுத்து?
விக்ரம்: கண்டிஷன் நம்பர் 3. அவ பாக்கறதுக்கு....ஒவ்வொரு கிழமையும், ஒவ்வொரு ஹீரோயின் மாதிரி இருந்தா தேவலாம்!
மண்டேன்னா மாளவிகா,
செவ்வாய்-னா செரீன்,
புதன்-னா பூமிகா,
வியாழன்-னா வேதிகா,
வெள்ளி-ன்னா, அந்தக் கள்ளி பாவனா மாதிரி இருக்கணும்!
ச.நா: ஹூம்! சனி, ஞாயிறு? அதை மட்டும் ஏன் வுட்டுட்ட?
விக்ரம்: அய்யய்யோ! வீக் என்ட் நாங்க அவுட்டிங் போவோம்-ல! என்னைப் பக்கத்துல வச்சிக்கிட்டே, அவனவன் அவளைச் சைட் அடிச்சிக்கிட்டு இருந்தானா? சேச்சே அதெல்லாம் வேலைக்காவாது! சனிக்கெழமை குஷ்பூ, சண்டே-ன்னா ராதிகா மாதிரி மேக்-அப் பண்ணிக்கிட்டாப் போதும்! நான் ரொம்பல்லாம் எதிர்பார்க்கல!
ச.நா: ரொம்ப நல்ல பையனா இருக்கியேப்பா! பொண்டாட்டியை யாருக்கும் தெரியாம, கைக்குள்ள வச்சித் தாங்கற பையன்-னா அது நீ தான்!
விக்ரம்: கண்டிஷன் நம்பர் 4. அவளுக்கு நல்லாச் சமைக்கத் தெரியணும்! அது வாய்க்கு ருசியா இருக்கணும்-னு எல்லாம் கேக்குற கொடுமைக்கார பையன் நான் இல்லீங்க! பொண்ணுங்க என்ன பசங்களுக்கு சமைச்சிப் போடவா பொறந்து இருக்காங்க?
ச.நா: அடா! அடா! அடா! சாப்ட்வேர் தொறைல இப்படி ஒரு பாரதியார் இருக்காரா?......சரி, அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ ராசா?
விக்ரம்: வாரம் ஃபுல்லா மைக்ரோவேவ்-ல போட்டுக் கொடுத்தாப் போதும்! நான் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்! ஆனா என்னைப் பாத்திரம் மட்டும் கழுவச் சொல்லக் கூடாது! எனக்குத் தண்ணில கண்டம் இருக்கு-ன்னு ஆன்மீகப் பதிவர்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க!
ச.நா: வெரி குட்! இதுல சப்-கண்டிசன், சப்பைக்-கண்டிசன் ஏதாச்சும் இருக்கா?
விக்ரம்: 4b. வீக் என்ட் ஆனா, அத்தையும் மாமாவும், எங்க வீட்டுக்கு வந்தே ஆகணும்!
ச.நா: அடடா! என்னா ஒரு மனசு! யாரு, அந்தப் பொண்ணோட அம்மா, அப்பா! அவங்க தானே?
விக்ரம்: அட, அவங்க எனக்கும் அம்மா அப்பா மாதிரி தானே!
அவங்க வரும் போது பெரிய டிபன் கேரியர்-ல சிக்கன் பிரியாணி, மட்டன் குருமா, வறுத்த எறா, பொரிச்ச மீனு-ன்னு ஏதாச்சும் லைட்டாப் பண்ணிக் கொண்டு வந்தாப் போதும். அப்படியே சாயங்காலம் டிபனுக்கு கொத்து பரோட்டா இருந்தாக் கூட ஓக்கே தான்!
ச.நா: சூப்பர் கண்டிசனா இருக்கே! அப்போ உங்க அம்மா, அப்பா?
விக்ரம்: எங்க அம்மா-அப்பா, என் பிரெண்ட்ஸ்...இவங்கெல்லாம் யாரும் வீட்டுக்கு வரவே மாட்டாங்க! நான் கியாரண்ட்டி! கவலைப்பட வேணாம்-னு பொண்ணு வீட்ல சொல்லுங்க!
அப்படியே பசங்க வீட்டுக்கு வரேன்னு சொன்னாக் கூட, "டேய் ஓட்டலுக்கு வாடா நாயே"-ன்னு சொன்னா, பிரெண்ட்ஸ் வராமயா போயிடுவானுங்க?
ச.நா: அடடா! என்னா ஒரு ஷிப்பு!
டைட்டானிக் ஷிப்பு கவுந்தாக் கூட உங்க ஃப்ரெண்ட்ஷிப்பு மட்டும் கவுறவே கவுறாதுடா! இவ்ளோ தானா? வேற எதாச்சும் இருக்கா?
விக்ரம்: கண்டிஷன் நம்பர் 5. எந்த காரணத்தை கொண்டும் எனக்கு ஆன்-சைட் கெடைச்சா கூடவே வருவேன்-ன்னு அடம் புடிக்கக் கூடாது!
நான் அங்க, யாரைப் பாக்கணுமோ பாத்து, நல்லாப் பேசிப் பழகி, "எல்லாத்தையும்" செட்டப் பண்ணனும்-ல? ஒரு வருசம் கூட ஆகலாம்!...அது வரைக்கும், அவ அவங்க அம்மா வீட்டிலயே கூட இருந்துக்கலாம்!
வேணும்னா ஒரு IP Phone வாங்கித் தாரேன்! அதுல டெய்லி எல்லாம் என்னைக் கூப்டாம, வாரா வாரம் என்னைக் கூப்டுறணும்!
ச.நா: என்னா பாசம்! என்னா பாசம்! போதும் ராசா!
அஞ்சு கண்டிசன் மேல போட்டீன்னா, பஞ்சாப் பறந்து, பஞ்ச்சராயிடுவ நைனா!
விக்ரம்: இருங்க! இருங்க! ரொம்ப முக்கியமான கண்டிஷன் ஒன்னு இருக்கு! எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆயிடுச்சின்னு வைங்க....
ச.நா: அட...ஏம்பா இப்படி அபசகுணமா பேசற? மொதல்ல வாயை கிங்-பிஷ்ஷர் ஊத்திக் கழுவுப்பா!
விக்ரம்: இருங்க ஆன்ட்டி.....சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனைன்னு வந்து டைவர்ஸ் ஆகிடுச்சுனா அவ கண்டிப்பா, ரெண்டே மாசத்துல வேற கல்யாணம் பண்ணிக்கனும்.
ச.நா: இது! இது! இங்க தாம்பா நீ ஒரு பெண்ணீயம் பேசும் பெருமகன்-னு நிரூபிக்குற.
விக்ரம்: அதெல்லாம் இல்லை ஆன்ட்டி. அதுக்கப்பறம் அவளுக்கு நான் மாசா மாசம், கப்பம் கட்ட வேணாம் பாருங்க! அதுக்குத் தான்!
சரோஜினி நாயுடு மயக்கம் போட்டு கீழே விழுகிறார்...
நாரதர் நாயுடு என்னும் வெட்டிப்பயல் ஆசை ஆசையா ஓடியாந்து சரோவுக்குக் கொஞ்சம் தண்ணி தெளிச்சி விடுகிறார்....