Wednesday, January 28, 2009

சங்கம் பிலிம்ஸ்: பாவனா, பதிவர்கள், பிளாக்-காயணம் Part 1

சங்கம் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "பிளாக்-காயணம்"!
(பிரபல பதிவர்களின் கீமாயணம் - Part 1 - Take 1!)


கலியுகத்தில், கப்சா கண்டத்தில், முதலாம் பேரக் மன்னன் ஆட்சி புரிந்த O-பாமா தேசத்தில், தர்மம் தழைத்தோங்குது! மாதம் முவ்வங்கி திவாலாகுது!
அங்கே பாஸ்டன் என்னும் வெள்ளையர் நகரிலே ஒரு கொள்ளையன்!
பாஸ்டன் பாலா என்ற திருநாமம்! = பா-பா என்று இவரைப் பாடி, ப்ளாக் ஷீப்பை இவருக்குப் பலி கொடுப்பாய்ங்க!
பா-பா ஒரு பெரிய கொள்ளைக் கூட்ட பாஸ்! சுட்டித் திருடன்! பலரின் பதிவுகளைத் திருடித் திருடி, சுட்டி இட்டுக் கொள்வார்!
இவரே திருடன்! இவரே நீதிபதி! இவரே கில்லி! இவரே ஸ்நாப் ஜட்ஜ்!
இட்லி-வடை தான் இவருக்குப் பிடித்தமான படையல்! ப்ளாக்கர், வோர்ட் பிரெஸ், மை ஸ்பேஸ், ட்விட்டர் என்று இவர் அடிக்காத கொள்ளை இல்லை!

ஒரு நாள்......
801 பாடல் பெற்ற தலங்களில் முதல் ஊரான நியூயார்க்! அங்கே மாதவிப் பந்தல் பொக்கிஷத்தைக் கொள்ளை அடிக்க வராரு பா-பா! ஆனால் எதற்கும் கலங்காத ஆண்மீக அருட்கடல் KRYES இதுக்கெல்லாம் கலங்குவாரா என்ன?

"பாபா, இப்படி இத்தனை பேரின் மூளைச் சொத்தைக் கொள்ளை அடிக்கிறீங்களே? இது மகா பாவம் இல்லையா? இந்தப் பாவத்தின் பாரத்தை எப்படித் தாங்கப் போறீங்க?"

"நான் செய்யும் பாவத்தில், டோட்டல் பதிவுலகத்துக்கும் பங்கு உண்டு, கேஆரெஸ்! ஸோ, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!"

"ஆகா! யார் இப்படிச் சொன்னது உங்களுக்கு?"

"குறுக்கெழுத்து-தலையெழுத்துன்னு பதிவு போடும் பதிவுலகப் பிரம்மா! கொத்தனார்! அவர் தான் சொன்னாரு!

"கொத்தனாராவாது! நாத்தனாராவது! உங்க பாவத்தில் ஒருத்தனும் பங்கு போட்டுக்க வர மாட்டானுங்க! யாரை வேணும்னாலும் கேட்டுப் பாத்துட்டு வாங்க!"


பாபா உடனே தனது சர்வேச அவதாரம் எடுக்கிறார்! ஒரு சர்வே பதிவு போடுகிறார்! - "என் பாவத்தில் பங்கு கொள்ளும் பதிவர்கள் யார் யார்?"

ஒரு அனானிப் பின்னூட்டம் கூட வரமாட்டேங்குது! :) சரி, எல்லாருக்கும் தனியா மின்னஞ்சல் தட்டி வுட்டு, நாமினேஷன் வாங்கப் பாக்குறார் தல!
Dear Blogger,
vaNakkam from baba.com! There was a bug in the pinoota petti. Badri has fixed it.
Please visit the same link you used and cast your பாவப் பின்னூட்டம்ஸ்!

ஹூஹூம்! அப்பவும் பாவத்தைப் பங்கு போட்டுக்க எவனும் வர மாட்டேங்குறான்!
என்ன கொடுமை சரவணன்! என் சுட்டியில் பங்கு கொண்ட பதிவர்கள், என் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்களா?
இவங்களுக்கு எல்லாம் போயி, E-Tamil இல் சுட்டி கொடுத்தேனே! அப்பவே கேஆரெஸ் சொன்னாரு! நான் தான் கேட்கலை!
"சுட்டி" சுட்டதடா, கை விட்டதடா!
வெட்டி பட்டதடா! பொட்டி தட்டுதடா!


சரி....இனி நமக்குப் பதிவுகளே வேணாம், கில்லியும் வேணாம்! சற்றுமுன் வேணாம்! தேன் கூடு வேணாம்! ட்விட்டர் ஒன்னே போதும்!-ன்னு ஒரு தூங்கு மூஞ்சி மரத்தின் கீழ் தவத்தில் உக்காந்துட்டாரு நம்ம பா-பா!
அப்போ-ன்னு பாத்து, அங்கிட்டு வராரு விவசாய முனிவர், இளமுறுக்கு.
இவருக்கு கலகம்-ன்னா முறுக்கு சாப்பிடறா மாதிரி! அதான் இளமுறுக்கு!

"பாஸ்டன் பாலனாரே, நீங்க பல திரட்டிகளில் கட்சி சேர்ந்து ரொம்பவே பாவம் பண்ணிட்டீங்க! நான் சொல்ற மந்திரத்தை ஒன் க்ரோர் & செவன்ட்டி செவன் டைம்ஸ் சொல்லுங்க!
அவ்ளோ வாட்டிச் சொல்ல முடியலைன்னா மடிப்பாக்கத்தில் இருக்கும் அதிர்ஷ்டக் கண்ணான் என்பவர் கிட்ட உதவி கேளுங்க! அவர் ஒன் க்ரோர் அலெக்சியா பேஜ் ராங்க் போட்டு அனுப்புவாரு!"


"ஆகா! அது என்ன மந்திரம் இளமுறுக்கு முனிவரே?"

"பா-பா என்பதே அந்த புதரக மந்திரம்! எங்கே சொல்லுங்க, பா-பா!"

"ஹைய்யோ...இது என் வாயிலேயே நுழையவே மாட்டேங்குதே!"

(பின்னால் இருந்து ஒரு குரல்...)
"சார்...வேணும்னா அதைப் பின்னாடி இருந்து சொல்லிப் பாருங்களேன்!
மரா-மரா ன்னு பின்-நவீனத்துவமாச் சொன்னாங்க! அதான் அன்னிக்கே பலிச்சுது! பின்-நவீனத்துவம் தாங்க எப்பமே பலிக்கும்!"

"அட நீங்க யாருங்க, புதுசா? இளமுறுக்குக்குப் போட்டியா?"

"என் பேர் சிறில்! சி-நெடில் இல்லை! சி-குறில்! சி-றில்!"

"ஆகா...ஜெயமோகன முனிவர் உங்களைப் பத்தி ரொம்பவே சொல்லி இருக்காரே! போட்டி வச்சி போட்டி வச்சியே, பின்னூட்டத்தை உங்களுக்கும், பழியை எல்லாம் அவருக்கும் கொடுக்கற ஆளு நீங்க தானா?"

"பாஸ்டன்! இப்போ நடப்பது சிகாகோ ஆட்சி! பாத்து பேசுங்க! எங்கே, பின்-நவீனமா அந்த மந்திரத்தைச் சொல்லுங்க பார்ப்போம்"

"பா-பா! பா-பா! பா-பா!"

"பாருங்க எவ்ளோ ஈசியா வந்துரிச்சி! இதையே சொல்லிக்கிட்டு இருங்க!"

(சிறில் நகர, இளமுறுக்கு: "நல்ல வேளை வந்தீங்க சி-றில்! நீங்க சொன்னபடியே கில்லியை இவர் கிட்ட சல்லீசா விலை பேசி முடிச்சிட்டேன்!")



காவியம் எழுத உட்காருகிறார் இரவு நேரப் பட்சியான பாபா!
மிட்-நைட் மசாலா திரையில் ஓடுது! அரை மணி நேரத்தில் மொத்த காவியமும் எழுதி முடிச்சிட்டார்!

அதை வாங்கிப் பார்த்த இளமுறுக்கு முனிவரும், ஜெயமோகன முனிவரும் ஜெர்க்கோ ஜெர்க் ஆகிறார்கள்! அப்படி என்ன தாங்க இருக்கு அந்த ப்ளாகாயண காவியத்தில்?

மொத்தம் 24000 செய்யுள்கள் அல்ல! மொத்தம் 24000 சுட்டிகள்!
காவியம் ஃபுல்லா ஒரே சுட்டிகள்! சுட்டிகள்! சுட்டிகள்!

சுட்டிச் சுரங்கம் பாபா-வின் ஆதி காவியம் வீணாப் போலாமா? அதைப் பைனரி மொழியில் இருந்து புரியிற மொழியில் மொழியாக்க வருகிறார்கள் இரு பெரும் கதைச் சக்ரவர்த்திகள்! - பெனாத்தல் சக்கரவர்த்தி மற்றும் பட்டர்ஃபிளை ஸ்ரீதர் சக்கரவர்த்தி! இவிங்கள்-ல யாரு கம்பர்? யாரு ஒட்டக் கூத்தர்? :))

இதோ....
பதிவுலக ப்ளாகாயணம்! A Film by Penathal Raja! Hurry Om!
* கதை-திரைக்கதை-வசனம்-டைரக்சன்: பின்னூட்டம் போடும் பதிவர்கள்
* இசை: தேன் கிண்ணம் * ஒளிப்பதிவு: PIT * ஒழிப்பதிவு: ஜீவ்ஸ்
* தயாரிப்பு: SPVR சுப்பையா


Cast & Credit :
இராவணன் = கானா பிரபா
விபீஷணன் = ஜி.ராகவன்
கும்ப.கர்ணன் = கோவி.கண்ணன்

இந்திரஜித் = ரிஷான் ஷெரீப்
சூர்ப்பனகை = ??? (அப்பாவிச் சிறுமி?)
மண்டோதரி = பரிசல்காரன்

* சீதை = "கனவுக் கன்னி" பாவனா
* சீதையின் தங்கைகள் = ஜெனிலீயா, சமீரா ரெட்டி, தமன்னா
* சீதை, தங்கைகளின் ஆருயிர்த் தோழி = மைஃபிரெண்ட்
இராமன் = கேஆரெஸ்
இலக்குவன் = சீவீஆர்
பரதன் = வெட்டிப்பயல்
சத்ருக்னன் = கப்பி பய


ராமனின் மாமா = தேவ்! ராமனின் மச்சான் = ராயல் ராம் (இவிங்க காப்பியத்தில் எங்கே வராங்கன்னு எல்லாம் கேக்கப் பிடாது! மச்சான் வரார்-ன்னா வராரு! அம்புட்டு தேன்! :)

* அனுமன் = ஆயில்யன்
* ஜாம்பவான் = மங்களூர் சிவா
* வாலி = சென்ஷி
* சுக்ரீவன் = குசும்பன்


குகன் = கோபிநாத்
ஜடாயு = நசரேயன்
சபரி = ஷைலஜா
லவ-குசா = ச்சின்னப் பையன்

தசரதன் = குமரன்
கோசலை = ஜீவா
கைகேயி = கைப்புள்ள
சுமித்திரை = ரத்னேஷ்


கூனி = ? ஆங்..மோகன்தாஸ் :)
* அகலிகை = நாட்டாமை Syam
* இந்திரன் = சந்தோஷ் பக்கங்கள்


விஸ்வாமித்ரர் = இலவசக் கொத்தனார்
வசிட்டர் = துளசி கோபால்



மலேசிய நாட்டின் சராவக் காடுகள்!

அங்கே கேஆரெஸ்-ராமபிரானும், சீவீஆர்-இலக்குவத் தம்பியும் ஒரு குடிசையில் இருக்குறாங்க! ஒரு முக்கியமான காரியமாக பயணம்! நாடோடியாக நடந்து நடந்து, அவர்கள் நகர்வது...பெண்களூர் மாநகரம் நோக்கி! குறிப்பாச் சொல்லணும்னா BTM Layout அரண்மனையை நோக்கி!

அங்கே ஜனக-அம்பி மகாராஜா! வயசான காலத்தில், தன் மகளான பாவனாவுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்படறாரு! ஒரு அழகான பெண்ணுடைய, வயசான அப்பாவுடைய, நியாயமான ஆசை தானே! அதான் சுயம்வரம் ஏற்பாடு ஆகி இருக்கு!

ப்ளாக்கர் என்னும் கூகுள்-தனுசு! அதை வளைக்கணும்! பின்னூட்ட நாணேற்றி வளைக்கணும்!
சக்தி வாய்ந்த கூகுள் வில்லை வளைக்கவும் முடியுமா? அதுவும் எத்தனை பின்னூட்டம்-ன்னு போடுறது? எப்படி இழுத்து வளைக்கறது?
ஆனானப்பட்ட அபி அப்பாவாலேயே முன்பு முடியாமப் போச்சே!

தாடி வைத்த விஸ்வாமித்ர கொத்தனார் இதில் கில்லி! ஆயிரம், பத்தாயிரம், பத்து லட்சம், பத்து கோடி-ன்னு பார்த்த ராமலிங்க ராஜனே, இந்த மாதிரி மேட்டருக்கு எல்லாம் கொத்தன ரிஷியைத் தான் கூப்புடுவாரு!
அதான் கொத்தனார் துணையுடன், ராம-இலக்குவ சகோதரர்கள் சுயம்வரத்துக்குக் கெளம்பிட்டாய்ங்க!

ஆனால் அவிங்களுக்கும் முன்னாடியே...பெண்களூர் வந்து விட்டான் ஒரு கட்டழகன்! நெட்டழகன்! அவன் தான் இலங்கை வேந்தன் இராவணப் பிரபா....
அந்தப்புர வீதி வழியாக....பண்பலை வரிசையில் நடந்து வருகிறான் இலங்கேஸ்வரன்!

அங்கே....அந்த அந்தப்புரத்திலே...
ஆப்பிளைக் கடிக்கிறாள் ஒரு ஆப்பிள்..அவள் தான் சீதா (எ) மிஸ். பாவனா
அவள் கூடவே
* சீதையின் தங்கைகள் = மிஸ். ஜெனிலீயா, மிஸ். சமீரா ரெட்டி, மிஸ். தமன்னா!
* சீதையின் தோழி = பதிவர் மைஃபிரெண்ட் !

பாவனா என்னும் ஆப்பிள் கடித்த ஆப்பிள், அந்தப்புர உப்பரிகையில் இருந்து... வாய் தவறி....குடுகுடு என்று உருண்டோடி வருகிறது!
வழியில் வந்து கொண்டிருக்கும் இராவணப் பிரபாவின் மேல் ஆப்பிள் விழ....

ஆப்பிளின் ஆப்பிளை, அண்ணலும் நோக்கினான்....அவளும் நோக்கினாள்!

ராவணா வித் பாவனா?...அடுத்த பகுதிகள் வ.வா.சங்கத்தில் தொடரும்...
Read more »

Sunday, January 25, 2009

தேவாரம்! ஸ்ரீரங்கம்! கருவூர் சித்தர்! இராஜராஜ சோழன்!

வாங்க மக்களே! இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்! அங்கோ, உங்களுக்கு நீண்ட விடுமுறை வார இறுதி! இங்கோ, எங்களுக்கு ஓயாத உழைப்பு! :)
வாங்க, தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்னிக்கி ஒரு சூப்பர் தேவாரம் பார்க்கலாம்! கூடவே பாடவும் சொல்லிக் கொடுக்கறரு ஒருத்தரு! அதோட ஒரு சூப்பர் கதையும் பார்ப்போம்!

தேவாரப் பதிவுகளில்....இது வரை
* சம்பந்தர் - முதல் தேவாரம்,
* அப்பர் - ஆணும் பெண்ணுமாய் பூசை,
* சுந்தரர் - நண்பனை மறந்தாயோ?,
* மணிவாசகர் - தமிழ் அர்ச்சனை!,
* காரைக்கால் அம்மையார் - பெண் தேவாரம் - Icon Poetry!
என்று சில பதிகங்களைப் பார்த்தோம்!

அப்படியே...
* தமிழ் ஈழம் பற்றிப் பாடிய நாயன்மார்கள்!
* நாயன்மார்கள் 63 or 72?
என்றும், தொகையடியார் பற்றிய சில குறிப்புகளையும் பார்த்தோம்! மாணிக்க வாசகர் அறுபத்து மூவருள் ஒருவர் இல்லை என்ற ஒரு தகவலும், அதற்கு சில பெரியோர்கள் அளித்த விளக்கமும் இன்னும் பல் சுவை கூட்டின!

இன்னிக்கி பார்க்கப் போறது, கருவூர் சித்தரின் தேவாரம்!

ஆகா...கருவூர் சித்தரா? அவர் தேவாரம் எல்லாம் கூடப் பாடியிருக்காரா என்ன? சித்த புருஷர்கள், பொதுவாகக் கோயில் பற்றி எல்லாம் பாட மாட்டாங்களே? நட்ட கல்லும் பேசுமோ?-ன்னு, "இடறுவது போலவும், அலர்ஜி போலவும்" தானே அவங்க பாடுவாங்க? "குழப்பவாதம்" போல் தொனிக்குமே அவங்க ஆன்மீகம்? அவங்க எப்போ தேவாரம் எல்லாம் பாடினாங்க? ஹா ஹா ஹா! :)

அட, கருவூர் சித்தர் தேவாரம் பாடியிருக்காருங்க! பார்க்கலாமா?
ஆனால் அதற்கு முன்னாடி ஒரு சிறு குறிப்பை மனசில் வாங்கிக்குங்க! முன்பே சொன்னது போல்...
* நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடிய அத்தனை பேரும் ஆழ்வார்கள் பட்டியலில் இடம் பெற்று இருப்பார்கள்! (அமுதனார் என்ற பின்னாளைய கவிஞரைத் தவிர)!
* ஆனால், 63-உள் இருப்பவர்கள் அத்தனை பேரும், தேவாரம் பாடி இருக்கணும்-ன்னு அவசியமில்லை! அதே போல தேவாரம் பாடியதாலேயே, 63-உள் வைக்கப்படணும் என்ற அவசியமும் இல்லை!

* பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது சிறப்பு! = எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது தான்!
* அதே போல், சேந்தனார், கருவூர் தேவர் போன்றவர்கள் 63-உள் இல்லை! ஆனால் இவர்கள் தேவாரம் பாடி உள்ளார்கள்!


அன்றைய சோழ/சேர நாடுகளின் பெரிய ஊர் கருவூர்! இன்னிக்கி கரூர்! திருச்சியில் இருந்து ஒன்னரை மணி நேரப் பயணத்தில் போயிறலாம்!
அங்கு பிறந்தவர் தான் நம்ம கருவூரார்! சிற்பங்கள் செய்யும் விஸ்வகர்மா குலத் தம்பதியர்க்கு மகவாய்ப் பிறந்தார்! தில்லை நடராஜப் பெருமானின் திருவுருவம் இவர் செய்ததே என்று சொல்லும் ஒரு சுவையான கதையும் உண்டு! இன்று சொல்லப் போவதில்லை! இன்னொரு நாள்!

* இவர் குரு = போகர் சித்தர்! (நவபாஷாண முருகனைத் தந்தவர்)
* இவர் சீடர் = இடைக்காட்டுச் சித்தர்! (தாண்டவக் கோனே என்று பாடல்கள் பாடியவர்)

குருவான கருவூரார், சீடரான இடைக்காடர் இருவருமே சித்தர்கள் அல்லவா! சித்தர்கள் யோக மயமான சிவபெருமானைத் தானே வணங்குவார்கள்? பெருமாளை வணங்குவார்களா என்ன? :)
நம்மாழ்வார் திருவாய் மொழியைத் "தமிழ் வேதம்" என்று முதலில் பாராட்டியதே, சிவச் செல்வரான இடைக்காட்டுச் சித்தர் தான்! இதோ!

சைவ நூல்களையோ, ஏனைய வைணவ நூல்களையோ சொல்லாது, நம்மாழ்வாரை மட்டும் "தமிழ் வேதம்" என்றார்கள் சித்தர்கள்! வேதத்தை, அதன் சாரம் மாறாமல், தமிழ்ப் படுத்தியதால் தான், "தமிழ் வேதம்" என்று இதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார்!
கருவூர் சித்தரும், திருவரங்கத்து நம்பெருமாளைப் போற்றிப் பாடி, அவர் கையால் பிரசாதம் வாங்கினார்! அப்படியே ஒரு வம்பிலும் சிக்கிக் கொண்டார்! பதிவின் இறுதியில் பார்ப்போம் :)



அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்)! மாமன்னன் இராசராசன், இனி வரப் போகும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் சேர்த்தே தந்த கலைப் பொக்கிஷம்!

ஆனால் அன்று பார்த்து, சிவலிங்கம் நிறுவனம் ஆகவில்லை! (பிரதிஷ்டை)!

பெருவுடையார் = பேருக்கு ஏற்றாற் போலே பெரிய பெரிய உடையார் தான்! பெரிய சிலை அல்லவா! அதற்கு முன்பு அப்படி ஒரு சிலையைச் சிற்பிகளும் செய்ததில்லை! அப்படியே செய்தாலும், அதைக் கருவறைக் குழியில் இறக்கியதும் இல்லை! அனுபவம் இன்மை! ஆனால் கும்பாபிஷேக (மூர்த்தி ஸ்தாபன) நாள் அதுவுமா இப்படி ஒரு தடங்கலா?

சிவலிங்கத்தை உள்ளே இறக்கிய சில நிமிடங்களில், கனம் தாங்காமால், சிவலிங்கம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டதே! கோணலான சிவலிங்கமா?
ஐயகோ! இராஜராஜனுக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலைமை! கோயிலைப் பார்த்துப் பார்த்துக் கட்டியது இதற்குத் தானா?
அஷ்ட பந்தனம் என்னும் அந்தக் கலவை கெட்டிப் பட மாட்டேங்கிறது! தலைமைச் சிற்பி, இராஜராஜப் பெருந்தச்சரான குஞ்சரமல்லனும் எவ்வளவோ போராடிப் பார்க்கிறார்! ஹூஹூம்!

இதோ, கருவூரார் வந்து நிற்கிறார்! இராஜராஜனின் பெருமதிப்பைப் பெற்றவர்!

தாம் கொண்டு வந்த மூலிகைப் பொருட்களைக் காய்ச்சி, கலவை செய்கிறார் கருவூரார்! அந்தணர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் பணியில் ஈடுபடுத்துகிறார்! புதிய கலவை காய்ச்சப்பட்டு, தொட்டி தொட்டியாக ஊற்றப்படுகிறது! கொதிக்கக் கொதிக்க, கருவறைக் குழிக்குள் ஊற்றப்படுகிறது!
ஆகா! சிவலிங்கத்தின் மேலேயே கால் வைத்து ஏறிவிட்டாரே கருவூரார்! அதை முட்டி, மோதி, கட்டி, இழுத்துச் சமநிலைப் படுத்த...மருந்து இறுக, இறுக...

தஞ்சைப் பெருவுடையார் நின்று விட்டார்! அஷ்டபந்தன மருந்து நின்று விட்டது! அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்!!
மன்னன் மனங்குளிர, மக்கள் மனங்குளிர, அடியார்கள் மனங்குளிர, ஆண்டவனும் மனங்குளிர்ந்தான்!


பல காலம் கழித்து, தஞ்சையில் இருந்து கிளம்புகிறார் சித்தர்! பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படும் திருவரங்கம் நோக்கிச் செல்கிறார் கருவூர் சித்தர்! தன் சீடன் இடைக்காட்டுச் சித்தன், திருவாய்மொழி நூலை அப்படிச் சிலாகிக்கிறானே! தமிழ் வேதம்-ன்னு வேற சொல்லுறான்!

அதுவும் வேதம் ஓத, குல உரிமை வேண்டும்-ன்னு சொல்லப்படுகிறதே! அப்படி இருக்க, ஒரு வேளாளச் சிறுவன்-மாறன் நம்மாழ்வான், தமிழ் வேதம் செய்தானா? அப்படி என்ன தான் இருக்கு அதுல? இன்னிக்கு அதையும் பார்த்து விடலாம்!

அவர் திருவரங்கம் வந்து சேர்ந்தது தான் தாமதம்.......
* தமிழோசை வேகமாய் முன் செல்ல,
* இறைவன் பரபரத்து, தமிழின் பின் செல்ல,
* இவர்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க மாட்டாமல், வேத கோஷ்டி இறைவன் பின்னால் ஓடி வர...

வீதியுலாவில், நம்மாழ்வாரின் சந்த ஓசையில் பெருமாளே மயங்கி, மாறனுக்குப் பின்னாலே செல்கிறான்! தொண்டர்கள் தலைவனைப் பின் தொடர்வார்கள்! இங்கே தலைவனோ, பயபக்தியுடன், தொண்டர்களைப் பின் தொடர்கிறானே?
அநதக் காட்சியைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கிறார்! காதுக்கு நேராகக் கேட்கிறார் சித்தர்!

அடங்கெழில் சம்பத்து -- அடங்கக் கண்டு "ஈசன்"
அடங்கெழில் அஃதென்று -- அடங்குக உள்ளே!
உள்ளம் உரை செயல் -- உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை -- உள்ளில் ஒடுங்கே!!
அற்றது பற்றெனில் -- உற்றது வீடு, உயிர்
செற்றது மன்னுறில் -- அற்றிறை பற்றே!!!

ஈரடிகளில் ஈர்த்து விட்டதே! சகல வேத ஞானமும் சட்டென்று புரிந்து விட்டதே! அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை கருவூராருக்கு!
அரவணைத் துயிலும் மாயோன் அரங்கனைக் கண்குளிரத் தரிசிக்கிறார்!

தரிசித்து முடித்து வெளியே வந்தால், அவர் காலடிகளில் ஒரு தாசி விழுகிறாள்...பேரு அபரஞ்சி! பேரழகி! அரங்கனைத் தரிசித்த மாத்திரத்தில், இப்படித் தான் ஆளனுப்பிக் கள்ளத்தனம் செய்வானோ? :) அவளோ சிரிக்கிறாள்!

கரு ஊரில் சிக்காத கருவூரார், என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையை வீசுகிறார்! சற்று முன் கேட்ட வேத கோஷத்தில், யோக சாதனையில், தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்கிறாள் இவள்! ஆகா! இப்படியும் ஒரு தாசியா?
பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல், அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது! அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைக்கிறார்!

அடங்குக உள்ளே! உள்ளில் ஒடுங்கே!-ன்னு சித்த புருஷ லட்சணத்தை இப்படி ரெண்டே சொல்லில் சொல்லவும் முடியுமோ?
அவளுக்கு விளக்கத்தை எடுத்துச் சொல்லச் சொல்ல, சித்தருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி! மகிழ்வில் கடவுளையே அதட்டுபவர் அல்லவா கருவூரார்! முன்பு நெல்லையப்பர் படாத பாடு பட்டாரே இவரிடம்! இப்போதும் அதே தொனியில் கருவூர் சித்தர்..."ரங்கா, உன் கழுத்து மாலையை என்னிடம் கொடு"!


தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூரார்-இராசராசன் ஓவியம்


திருக்கழுத்து மாலை! பவழ வாய் கமலச் செங்கண்ணனின் பவழ மாலை கருவூரார் கைகளில் வந்து விழுகிறது!
"அபரஞ்சி, என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய்! இதை என் பரிசாக வைத்துக் கொள்! நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்! சித்தர்கள் தான் ஓரிடத்தில் இருக்க மாட்டார்களே!

மறுநாள் காலை... கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கப் பழவம்! அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு அடுக்குகிறார்கள்! பஞ்சாயத்து நடக்கிறது!
கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அவள் சொல்ல...பிடி கருவூராரை! ஹா ஹா ஹா! காற்றைப் பிடிக்கத் தான் முடியுமா?

அபரஞ்சி, கருவூராரை மனதால் வேண்டி, "இப்படி விளக்கம் சொல்லி இக்கட்டு கொடுத்து விட்டீர்களே சுவாமி", என்று அழுகிறாள்! கருவூரார் அங்கே மீண்டும் வந்து, மாயக் கள்வனைச் சாட்சிக்கு அழைக்கிறார்!
அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைக்க...திருவரங்கக் கோயில் ஸ்தனத்தார்கள், கருவூராரை நிற்க வைத்துப் பேசியமைக்கு மன்னிப்பு கேட்கிறார்கள்! கருவூரார் பின்னர் கருவூருக்கே திரும்புகிறார்!

கருவூர் சித்தர் காட்டில் போய் இருக்காமல், சமூகத்திலேயே இருந்து விட்டார்! அவர் சொல்லும் கருத்துக்கள் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக இருக்கு!
ஆன்மீகப் போலித்தனங்களை அவர் சாடச் சாட, அவர் மேல் வெறுப்பும், பொறாமையும், பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது! குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் சைவ அந்தணர்கள் சில பேர், அவர் மேல் அதீத பகைமை கொள்கின்றனர்!

கருவூரார் ஒரு துர்வேத நிபுணர் என்று குறுநில மன்னனிடம் ஓதி ஓதி, மனதைக் கரைக்கிறார்கள்! மது-மாமிச படையல் வைப்பவர், வாம பூஜை செய்பவர் என்றெல்லாம் காட்ட வேண்டி, சில அத்வைதிகளே அவர் வீட்டில், மது-மாமிசம் ஒளித்து வைக்கின்றனர்! ஆனால் சோதனையில் அவை யாகத் திரவியங்களாக மாறி இருப்பது தெரிய வர, அந்த வைதீகர்களுக்குப் பெருத்த அவமானம்!

அதிக ஆள் பலம், சிஷ்ய பலம் இல்லாத கருவூராரை எளிதாக அடித்துத் துவைத்து விடலாம் என்று அந்தப் போலி அந்தணர்கள் சிலர் கிளம்ப, சித்தர் சிரிக்கிறார்! பயந்து ஓடுவது போல் நடித்து ஆட்டம் காட்டுகிறார்! கரூர் ஆனிலையப்பர் கோயிலுக்குள் ஓடுகிறார்! பசுபதீஸ்வரர் = ஆனிலையப்பர்!
அவர் கருவறைக்கு உள்ளேயே நுழைவதைக் கண்டு இவர்கள் இன்னும் சீற்றம் அடைய, "ஆனிலையப்பா!" என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்!

தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூர் சித்தர் சன்னதி!


கருவில் ஊறாக் கருவூரார், இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி!
இன்றும் ஆனிலையப்பர் கோயிலில் கருவூராரின் சிற்ப வடிவம் உள்ளது!
தஞ்சை பெரிய கோயிலிலும் அவரது சிலை வடிவம் பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது!


வாங்க, கதை முடிந்து, தேவாரத் தமிழிசை கேட்போம்! தேவாரத் தொகுப்பில், கருவூரார் பாடல்கள் ஒன்பதாம் திருமுறை!

பத்து சிவத் தலங்களைப் பாடுகிறார் சித்தர்! இராஜராஜ சோழன் பால் வைத்த அன்பால், தஞ்சை இராச ராசேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய தலங்களையும் பாடியுள்ளார்! மெட்டும், ராகங்களும் தானாகவே அமையும் இனிய இசைப் பாடல்கள்! "திருவிசைப்பா" என்று போற்றப் படுகிறது!

அதில் ஒன்றைக் காண்போம்! கேட்போம்! இதோ சொல்லிக் கொடுக்கிறாரு, கூடவே சொல்வோம்!



பவளமே மகுடம்! பவளமே திருவாய்!
பவளமே திருவுடம்பு! அதனில்

தவளமே களபம்! தவளமே புரிநூல்!
தவளமே முறுவல் ஆடு அரவம்!


துவளுமே கலையும்! துகிலுமே ஒருபால்!
துடியிடை இடமருங்கு ஒருத்தி!
அவளுமே ஆகில், அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே!


* ஈசனின் ஜடா மகுடம், செவ்விதழ், உடம்பு = மூன்றுமே பவளம்! அப்படிச் செக்கச் சிவந்த சிவப்பு!
* ஈசனின் மேனியில் பால் வெண்ணீறு, முப்புரி நூல், சிரித்து வளையும் பாம்பு = மூன்றுமே தவளம் (வெண்மை)! அப்படிப் பால் வெளுத்த வெளுப்பு!
இப்படிச் சிவப்பும் - வெளுப்புமான கலவையில் சிவபெருமான் ஒரு பக்கமாய் மின்ன....

* துவளும் மேகலை (ஒட்டியாணம்), சேலைத் துகில், துடிக்கும் இடுப்பு = இப்படி மூன்றுமான முக்கண்ணி, "ஒருத்தியாய்" நிற்கிறாள்! = அவள் இந்தப் புறம், அவனின் அந்தப் புரம்!
* அவளே நின்று விட்ட படியால், இனி அவரும் நின்று விடுவார்! எங்கே?
திருக்களந்தை என்னும் ஆதித்தேச்சரம்! நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊர்! அதுவே திருக்களந்தை!

அங்கு தான் இப்படி ஒரு சிவ-சக்தி தரிசனத்தை நமக்குக் காட்டுவிக்கிறார் கருவூர் சித்தர்!
பவளமே மகுடம்! தவளமே களபம்!!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


கருவூர் சித்தர் திருவடிகளே சரணம்!!
Read more »

Sunday, January 18, 2009

கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்த நாள்!

இவரும் ஒரு கண்ணப்ப நாயனார் தான்! கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம்! (இவர் பேரில் ஆழ்வார்-ன்னு இருப்பதால்)! இவரின் 1000-வது பிறந்த நாள், Jan-17, 2009 அன்று துவங்கியது! யாருங்க இவரு? இவர் எப்படிக் "கண்ணப்பர்" ஆவாரு?

அதற்கு முன், "ஓம் நம சிவாய" என்று திருவைந்தெழுத்தை உரக்க ஓதி, இந்த ஆழ்வாரின் கதையை இன்னிக்கிப் பார்க்கலாம்!
* தென்னாடுடைய சிவனே போற்றி!
* என்(னுடை)-நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
* திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!



* கண்ணப்பனின் இயற்பெயர் திண்ணன்! இவர் இயற்பெயர் திருமறுமார்வன்!
* கண்ணப்பனுக்கு இறைவனிடத்தில் கூட அசாத்திய வைராக்கியம்! இவருக்கும் அப்படியே!
* கண்ணப்பன் பார்க்கவே கருகரு-ன்னு இருப்பான். நீண்ட ரோமம்! இவரும் அப்படியே. பெரிய தாடி!
* கண்ணப்பன் தான் உண்ட பன்றி இறைச்சியையே இறைவனுக்குக் கொடுப்பான்! இவரோ இறைவன் அன்று உண்ணவில்லை என்றால், தானும் அன்று பட்டினி கிடப்பார்!

* கண்ணப்பன் வேடன், ஆனால் வேட்டுவத் தலைவன்! இவரும் தலைவர் தான்! பிறவிச் செல்வந்தர்! - இருவருமே தங்கள் செல்வங்களைப் பின்னாடி உதறினார்கள்!
* கண்ணப்பர் காட்டிய அன்பு, "ஆச்சாரமில்லை" என்றார்கள்! இவர் காட்டிய அன்பை "மடத்தனம்" என்றார்கள்!

* கண்ணப்பன் செய்வது பக்தி இல்லை! அது மூடம் என்றார்கள்! தாங்கள் வகுத்து வைத்த வழிபாடே "உசத்தி" என்றும் நினைத்துக் கொண்டார்கள்!
இவர் செய்வதும் அடிமைத்தனம் என்றார்கள்! தாங்கள் வகுத்து வைத்ததே "உசத்தி" என்று ஒரு படி மேலே போய், கையெழுத்தே போட்டுத் தரச் சொன்னார்கள்!


* கண்ணப்பன் இறைவனின் கண்களில் ரத்தம் கொட்டியதைப் பார்த்த மாத்திரத்திலேயே பதறிப் போனான்! வகுத்து வைத்தவர்களோ "வேடிக்கை" தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!
இவரோ, குருவின் தலை போகப் போகிறது என்று உணர்ந்த மாத்திரத்தில் பதறிப் போனார்! வகுத்து வைத்தவர்களோ இங்கும் "வேடிக்கை" தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

* கண்ணப்பன் சிவலிங்கத்தின் மீது தன் காலை வைத்தான்! இவரோ தன் ஆடையைக் களைந்து குருவின் துணிகள் மேல் போட்டார்! குருவின் ஆடையைத் "திருட்டுத்தனமாக" தான் போர்த்திச் சென்றார்.

* கண்ணப்பன் வேறு வழியில்லாமல், தன் கண்களையே பிடுங்கி வைத்து, காளத்தி அப்பனைக் காத்துக் கொடுத்தான்! இவரோ வேறு வழியில்லாமல், தன் கண்களைப் பிடுங்கித் தானே எறிந்து, குருவையும் சமயத்தையும் காத்துக் கொடுத்தார்!

இன்றும் ஆலயங்களில் கண்ணிழந்து காணப்படும் கூரேசன்


அவர் கண்ணப்ப நாயனார்! இவர் கண்ணப்ப ஆழ்வார்! அவ்வளவு தான் வித்தியாசம்!

காஞ்சிபுரம் அருகில் உள்ள "கூரம்" சொந்த ஊர் என்பதால் கூரத்தாழ்வார், கூரேசன் என்று கூப்பிடுவார்கள்! இவருக்கே 1000-வது பிறந்த நாள்! அடுத்த ஆண்டு 2010-இல் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெறும்!
இனிய ஆயிரமாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள், கூரேசா!
இன்னும் "பல" நூற்றாண்டு இரும்!

இந்த ஆண்டில், இவரைப் பற்றியும், திருவரங்க ஆலயத்தில் தமிழ் மொழி "நுழைய", இவர் ஆற்றிய பங்கு பற்றியும், அவ்வப்போது பதிவிடுகிறேன்! ஷைலஜா அக்கா எழுதிய கூரேசனின் சுருக்கமான வரலாற்றை இங்கே சென்று அவசியம் படிக்கவும்!

பிறந்த நாள் என்பதால், இவர் கண்ணிழந்த நிகழ்ச்சியை இன்னிக்கி சொல்லாது, இன்னொரு நாள் சொல்கிறேன்!
இன்று ஜாலியான, மகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை மட்டும் பார்ப்போமா? :)


அன்று பெரு மழை! இரண்டு காவிரி ஆற்றிலும் வெள்ளம்!
ஆகா...அது என்ன இரண்டு காவேரி ஆறு? எல்லா ஊரிலும் ஒரு காவேரி தானே ஓடும்?
ஹா ஹா ஹா! அது மற்ற ஊர்! இது உற்ற ஊர்! இங்கே இரண்டு காவிரி!

தென் காவிரி (காவிரி), வட காவிரி (கொள்ளிடம்) என்று ஒரே காவிரி ஆறு, இரண்டாகப் பிரிந்து, சுழித்துக் கொண்டு ஓடுகிறது! இப்படி இரண்டு (ஒரே) ஆற்றுக்கும் நடுவில், இயற்கையாக எழும் மணல் திட்டுக்கு "அரங்கம்" என்று பெயர்!
அங்கு மனித குலத்தின் செல்வம் = "திரு" கொலுவிருப்பதால், திரு+அரங்கம் என்று ஆயிற்று!

இன்னொன்னு கவனிச்சீங்களா? இப்படி முக்கியமான தலங்களில் இருக்கும் இறைவனுக்குத் தனியாகப் பெயர்கள் கிடையாது! ஐயாவுக்குத் தனியாக நித்யவத்சலப் பெருமாள், அந்தப் பெருமாள், இந்தப் பெருமாள்-ன்னு எல்லாம் பேரே இருக்காது!
திரு அரங்க+நாதன், திரு வேங்கடம்+உடையான்-ன்னு ஊரை வச்சித் தான் பேரு! - அது தான் திருத்தலங்களின் (திவ்யதேசங்களின்) பெருமை! பெருமாளை விட அவன் சம்பந்தா சம்பந்தங்களுக்கே ஏற்றம் தரப் படுகிறது!

இப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலை சூட்டி, அதே மாலையை, திருவானைக்கா அப்பனான சிவபெருமானுக்கும் சூட்டி மகிழ்கிறது!

திருச்சிக்கும் முன்பே முக்கொம்பு என்னும் இடத்தில் பிரியும் ஆறு, பிறகு ஒன்று கூடுகிறது! கல்லணையில் மீண்டும் பிரிகிறது!
காவிரியில் அதிக வெள்ளம் கண்டால், ஆங்காங்கே பிரித்து, கொள்ளிடம் பக்கமாக அணை திறந்து, நீரை வடிய விடுவார்கள்! இது தமிழர்கள் அன்றே கையாண்ட நீர்வள உத்தி (Water Management Techniques)! கல்லணை கட்டிய கரிகாற் சோழனைப் "பெருவளத்தான்" என்று சொல்வது தான் எத்தனை பொருத்தம்!

கதைக்கு வருவோம்! காவிரி, கொள்ளிடம் - ரெண்டிலுமே வெள்ளம்-ன்னா, மக்கள் அப்போ என்ன பண்ணுவாங்க? பாவம்! வீட்டில் இருப்பதை வைத்துத் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்! ஆனால் கூரேசனின் வீட்டில் அது கூட இல்லை!

அவரோ அன்றாடம் வகுப்பு நடத்தி, பிட்சை ஏற்று உண்பவர். உஞ்ச விருத்தி என்பார்கள்!
பிட்சை ஏற்பதால் துறவி-ன்னு நினைச்சிறக் கூடாது! அவருக்கு அழகு மிக்க-அறிவு மிக்க மனைவி! பேரு ஆண்டாள்! தியாகராஜரைப் போல் இவரும் வகுப்பு நடத்தி, பிட்சை ஏற்று உண்பவர்!



கூரேசன் இராமானுசரை விட வயதில் மூத்தவர். அறிவில் மூத்தவர் என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் சீடராக அடக்கமுடன் இருந்தார்.
காஞ்சிபுரத்தில் இராமானுசரின் புரட்சிகரமான கருத்துக்களைக் கேள்விப்பட்டு, அவருடன் வந்து தங்கி விட்டார். தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் கொடுத்து விட்டு, அறம் வளர்க்கவென்றே இராமனுசரின் பின்னால் வந்தவர்.

கூரேசன் மனைவி ஆண்டாளும் பணக்கார வீட்டுப் பெண் தான்! ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம்! கருத்துக்களில் கூட!
இராமானுசரின் ஒரு சில நடவடிக்கைகள், சில சமயம் தடாலடியாக அமையும் போது, ஆண்டாளைக் கூப்பிட்டு கருத்து கேட்பாராம் உடையவர்! அப்படி ஒரு பெண் இவள்! :)

அன்று மழையும் வெள்ளமும் என்பதால் கூரேசன் உஞ்ச விருத்திக்குச் செல்ல முடியலை!
வீட்டில் உள்ள துளசி தீர்த்தத்தை, தீர்த்தமாகப் பருகாமல், குவளை நிறைய பருகி விட்டார்!
திருவாய்மொழியை எடுத்துக் கொண்டு நம்மாழ்வாரை ஆதி முதல் அந்தமாகப் படிக்க உட்கார்ந்து விட்டார் மனுசன்!

வேதங்களில் உள்ள பிரம்ம சூத்திரங்களுக்கு, உள்ளது உள்ளபடியே, சொந்தக் கருத்து எதுவும் சேர்க்காமல் உரை எழுதணும்! அபேத-பேத-கடக ஸ்ருதி என்று எல்லாப் பார்வையில் இருந்தும் பாஷ்யம் (உரை) செய்யணும் என்பது அவா!
அதைக் குருவும் சீடனும் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள்! பல விதங்களில் ஹோம் வொர்க் (வீட்டுப் பாடம்) செய்து கொள்வார்கள் போல! அதான் தமிழ் வேதமான திருவாய்மொழியை எடுத்துக்கொண்டு அன்று உட்கார்ந்து விட்டார் கூரேசன்!

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்-என்று எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்? வயிற்றில் கிள்ளாதா?

நேற்று இரவு போய், இன்று காலை போய்...மாலை போய், இரவும் வந்து விட்டது! இன்னும் சாப்பிடலை! ஆண்டாள் கூட இருப்பதையும் மறந்தே போனார் மனுஷன்!
அங்கே சாப்பிடவும் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்! வழக்கமாக விசாரிக்கும் இராமானுசரும் அன்னிக்குன்னு பார்த்து ஊரில் இல்லை! கூரேசன் சற்று மெலிந்தவர்! அவர் களைப்படைவது கண்ணுக்கு நேராத் தெரியுது! ஆண்டாள் அவரை ஏக்கமாகப் பார்க்கிறாள்!

பசியோடு இருப்பது கொடுமைங்க! ஆனா அதை விடக் கொடுமை, அடுத்தவர் பசியைப் பார்த்துக் கொண்டு இருப்பது!

முன்பு சண்டை போட்ட நண்பன், ஒரு வேலையாக அலுவலகம் வந்து பார்த்த போது, எனக்கு கொஞ்சம் லேட் ஆகி விட்டது! ஆனாச் சாப்பிடவே மாட்டேன்-ன்னு வைராக்கியமாச் சொல்லிட்டான்! அவனிடம் கெஞ்சி, கொஞ்சி, சாப்பிட வைத்து, சாப்பிட்ட பொறவு தெம்பாச் சண்டை போடுப்பா ராசா-ன்னு சொல்லி.... :)
பசிக் கொடுமையை விட, பசியைப் பார்க்கும் கொடுமை ரொம்ப ரொம்ப பெருசுங்க!


டங்...டங்...டங்! டங்...டங்...டங்!
அரங்கன் அரவணை அமுது கண்டருளுகிறான்! ஸ்ரீரங்கநாத அரவணாம்ருதம் நிவேதயாமி...
கோயில் மணி, நைவேத்யத்துக்கு ஓங்கி அடிக்கப்படுகிறது! ஆண்டாள் காதிலும் விழுகிறது! அவளோ விரக்திச் சிரிப்பில்...
"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ?"

அதிர்ந்தான் அரங்கன்! நைவேத்தியம் செல்லவில்லை! வாய் வரையில் சென்ற கை அப்படியே நின்று விட்டது! கைத்தல சேவையானுக்கு, கைத்தல உணவாய் தங்கி விட்டது!

திருமார்புத் தாயார்: "என்னங்க சாப்பிடலையா? என்ன அப்படிப் பலமான யோசனை?"

பெருமாள்: "கூரேசன் பசியால் வாடுகிறான்; அவன் இல்லாள், அமுது செய்கிறீரோ?-என்று நம்மைச் சிரித்து விட்டாள்!"

தாயார்: "சாப்பிட்டாச்சா? என்று நம் இராமானுசன் தினமும் கேட்பான்! அதான் அவனை இதத்-தாய் என்று எல்லாரும் சொல்கிறார்கள்!
அவன் இல்லாத வேளையில் நீர் கேட்டிருக்கக் கடவது! ஆனால் கேட்கவில்லை! நம்மையும் படி தாண்டாப் பத்தினி என்று தனிக்கோயில் நாச்சியாராக இருக்கச் செய்து விட்டீர்!"

பெருமாள்: (மெளனம்)

தாயார்: "சுவாமி, ஞாபகம் இருக்கா? காஞ்சிபுரத்தில் இருந்த போது, ஒரு நாள் கூரேசன் வீட்டுக் கதவுகள் "தடங்"-கென்று மூடிய சப்தம் கேட்டதே?"

பெருமாள்: "ஆமாம்! அவன் அப்போது பெரும் செல்வந்தன்! அன்றைய தர்மங்கள் எல்லாம் முடிந்து வீட்டு நடையைச் சார்த்தினான்! அந்த சப்தம் கேட்டு, கோயிலை ஏன் அதற்குள் மூடுகிறார்கள் என்று நீ கூட குழம்பிப் போனாயே?"

தாயார்: "ஆமாங்க! அப்பேர்ப்பட்ட செல்வன்! இன்று உம் அரங்கத்தில் பசியால் வாடுகிறான்! நீர் அல்லவோ கேட்கக் கடவது? உமக்கு இதயம் கொடுத்தவன் தானே என்ற அலட்சியம் ஆயிற்றோ உமக்கு?
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"

பெருமாள்: (பெருத்த, பலத்த, மெளனம்)

கண்ணா! நான் முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள்! பசி ஆவது ஒன்றில்லை! ஓவாதே நமோ நாரயணா என்று
எண்ணா நாளும், இருக்கு-எசுச்-சாம-வேத நாண்மலர் கொண்டு, உன் பாதம்
நண்ணா நாள்! அவை தத்துறும் ஆகில், அன்று எனக்கு, அவை பட்டினி நாளே!!!



வழக்கம் போல் அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் = கண்டருள்வித்தல்!
இராமானுசர் கோயில் வழிபாட்டில், இப்படி மாற்றிக் கொடுத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம்! ஏராளம்!

அம்மா பேரைச் சொல்லி விட்டு, ஆனால் நாமத் தானே நிறையச் சாப்பிடுவோம்?
நாம் சாப்பிடுவோம், அவள் காண்பாள்! ="கண்டு"+அருளப்+பண்ணுதல்! :)
நைவேத்யம் = கண்டு அருளப் பண்ணுதல்! நாம் "உண்டு"+அருளப்+பண்ணுதல்! :)

அர்ச்சகர் உணவைக் கைகாட்டி விட்டார்! சாமி சாப்பிட்டு ஆயிருச்சி-ன்னு வழக்கம் போல நினைச்சிக்கிட்டு, பக்தர்களுக்குக் கொஞ்சம் பிரசாதமாய் கொடுத்துட்டு, மீதியை வீட்டுக்குக் கொண்டு போயிட்டார்! அவர் பேரு உத்தம நம்பி! வீட்டுக்குப் போகும் அவருக்கோ வழியெல்லாம் சந்தேகம்!

"சாமிக்கு நைவேத்தியம் காட்டினோமே! அப்புறம் அந்தப் போஜன தீபத்தை அணைத்தோமோ? அணைக்கலியா? ஐயோ! நடை சார்த்தியாச்சே! இனி காலை வரை திறக்கக் கூடாதே!" - வீட்டில் போயச் சாய்ந்தவர், சாய்ந்தவர் தான்.....

"உத்தம நம்பி...கண்டருளிய தீபம் இன்னும் அணைக்கப்பட வில்லை!
என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! இப்போதே போம்! நான் சொன்னதாகப் போம்! நடை திறந்து போம்! நடை திறப்பு தோஷமாகாது! தாயிடத்தில் குழந்தைக்குத் தோஷமேது?

நடை திறந்து, நமக்குக் கண்டருளப் பண்ணிய அரவணை அமுதைக் கொண்டு போம்! தீபத்தோடு, சகல பரிவார ஜனங்களையும் அழைத்துக் கொண்டு போம்! துந்துபி முழங்க, சிறு பறை கொட்ட, விதானக் கொடிகள் அசைய, பரிவாரங்களோடு போம்!
துளசியும், சடாரியும் சார்த்தி, அதைக் கூரேசனுக்குக் கண்டருளப் பண்ணி வாரும்! இது நம் ஆக்ஞை!
"


உத்தம நம்பிக்கு உடல் பதற்றம் எடுத்து விட்டது! அலறி அடித்துக் கொண்டு எழுகிறார்!
தான் வீட்டுக்குக் கொண்ட வந்த நைவேத்தியத்தை எடுத்துக்கறார்! கோயிலுக்கு ஓடிச் சென்று அங்குள்ள நைவேத்தியம், தீபம்-ன்னு எல்லாத்தையும் எடுத்துக்கறார்!
கொம்பு ஊதும் ஆளுக்குக் குரல் கொடுக்கிறார்! மழையில் நனையாதிருக்க விதானம் விரிக்கப்படுகிறது!

நடு ராத்திரியில் ஒரு குட்டி ஊர்வலம்...
ஊருக்கு வெளியில் ஆற்றோரமான வீடு! அங்கே அந்தச் சின்ன ஊர்வலம் செல்ல...துந்துபி முழங்க...சிறு பறை கொட்ட, விதானம் அசைய...

என்னடா இது? திருவிழா கூட இல்லை! இப்போது என்ன ஊர்வலம்-ன்னு ஆழ்வானும் ஆண்டாளும் வெளியே ஓடி வர...
உத்தம நம்பி அவர்களுக்குச் சகலத்தையும் சொல்கிறார்! துளசி-சடாரி சார்த்துகிறார்! அவர் கை நடுங்குகிறது! மொத்த பிரசாதத்தையும் எடுத்து கூரேசன் முன் வைக்கிறார்!

ஆண்டாள் கண்களில் பொல பொல-ன்னு பொத்துக்கிட்டு வருது! கூரேசன் கண்களில்...!
"அடியேன் நாயேனைப் பார்த்தா, "குழந்தைக்குத் தோஷமேது?" என்று கேட்டார்? ரங்கா, ரங்கா, ரங்கா!... "
தனக்கும், ஆண்டாளுக்குமாய் இரு பெரும் கவளங்களை உருட்டி எடுத்துக் கொண்டார்! மீதியை அங்கு ஆற்றோரமாய் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டார்!

ஊர்வலம் கலைய...வீட்டிற்குள் சென்ற கூரேசன் ஆண்டாளைப் பார்த்து....முதல் கேள்வி: "நீ ஏதும் பெருமாளிடம் வேண்டினாயா?"

"ஆமாங்க! நைவேத்திய மணி அடிச்சாங்க! அடியவர் வாட, அமுது செய்கிறீரோ-ன்னு கேட்கக் கூட இல்லை! சும்மா நினைத்தேன்!"

"தவறு ஆண்டாள்! தவறு! அவன் நம் குழந்தை போல! அவன் சாப்பிட உட்காரும் நேரம் அறிந்தா, இப்படி ஒரு தாய் கேட்பாள்?
ஒன்று தெரிந்து கொள்: இந்தப் பிறவியில் ஏற்பட்ட உறவு நீ! உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் தொடங்கி உறவு! அவனுக்கு எவ்வளவு கரிசனம் இருக்கும்?
இனி, ஒருக்காலும், சாப்பிட உட்கார்ந்த பிள்ளையிடம் இப்படிப் புலம்பாதே!"

"என்னை மன்னிச்சிருங்க!"

"சரி! பரவாயில்லை! உன் நினைப்புக்கே அரங்கனிடம் இவ்வளவு செல்வாக்கா-என்று உடையவர் வந்து உன்னை வழக்கம் போல் வியக்கத் தான் போகிறார்! இப்போ நீ சாப்பிடு"


தாயார்: "என்னாங்க, இப்படியா கூடை கூடையாச் சாப்பாடு அனுப்புவது? அதுவும் கூடையில்? நல்லா அழகா, மடிச்சி அனுப்பத் தெரியாதா?"

பெருமாள்: "ரங்கீ...அம்மா சாப்பாடு போடும் போது பார்த்து இருக்கல்ல? அடுக்கி அடுக்கி, அழகாகவா இருக்கும்? எப்படிப் பார்த்தாலும், ஒரு கை, கூட இருக்குமே தவிர, குறைவா இருக்கவே இருக்காது!"

தாயார்: "ஆமாங்க!"

பெருமாள்: "பார், அவன் மனைவியிடம் சொல்கிறான்....சாப்பிட உட்காரும் போது குழந்தையிடம் புலம்பாதே-ன்னு! நீ முன்பு சொன்னது தாம்மா!
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்
!"


அந்த பிரசாதத்தை உண்ட அன்று இரவே, கூரேசனின் அன்பு மனைவி-ஆண்டாள் திருவயிற்றில், இரட்டைக் குழந்தைகள் வந்து தங்கின!

* வியாச பட்டர், பராசர பட்டர் என்று அந்த இரட்டையருக்குப் பின்னாளில் பெயரிட்டார் இராமானுசர்! தன் குருவான ஆளவந்தாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை, இவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்!
* இந்தப் பராசர பட்டக் குழந்தை தான் வளர்ந்து, பின்னாளில் அடுத்த குரு ஆகியது!
கண்ணிழந்த கூரத்தாழ்வான், இப்படித் தன் கண்ணையும், இன்னும் பல கண்களையும் சமய நெறிக்குக் கொடுத்தவர்!

ஆயிரமாவது பிறந்த நாள் காணும் எங்கள் கூரேசா! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! இல்லையில்லை.....இன்னும் "பல" நூற்றாண்டு இரும்!
கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!
Read more »

Tuesday, January 13, 2009

மார்கழி-31/தை-01: ஆண்டாள் திருமணம்! கோதை மாலை மாற்றினாள்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! தித்திப்பான தமிழ்த் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பொங்கும் மங்கலம், எங்கும் தங்குக!

என்னாங்க? பொங்கல் பொங்கிச்சா? இன்பம் பொங்கிச்சா? கரும்பைக் கடிச்சாச்சா? தொலைக்காட்சியில் மூழ்கிட்டீங்களா? பதிவிலோ, தொலைக்காட்சியிலோ ரொம்ப மூழ்குறவங்களுக்கு, நாளைக்குச் சிறப்புப் பூசை உண்டு! உங்கள் கொம்புகளுக்கு சிறப்பு வர்ணம் அடிக்கப்படும்-ன்னு உங்க வீட்டுல சொல்றது காதுல விழலீங்களோ? :))


கோதைத் திருமணம்! ஆண்டாள் கல்யாணம்!
பொதுவா, மார்கழி முடிஞ்சதும், திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று விடும்! ஆனால் தமிழர் திருநாளான தை-முதல் நாளுக்கு, கோதை பாசுரம் பாடி வச்சிருக்கா-ன்னு பல பேருக்குத் தெரியாது!

சின்னப் பொண்ணுங்களுக்குத் தை மாசம்-ன்னா உயிராச்சே! தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்! வீட்டில் தானியமும் பணமும் கதிராடும் வேளையாச்சே! பொண்ணு மனசுல, காதல் திருமணம் சதிராடாதா? :) தமிழ் மறத்தி-கிராமத்துப் பொண்ணான எங்கள் கோதை, தைப் பிறப்பைப் பாடாமல் தான் இருப்பாளா என்ன?

வாங்க, அதை வேகமாப் பார்த்துட்டு, ஆண்டாள் திருமண வைபோகத்தையும் பார்த்துவிட்டு...மிக மிக மகிழ்ச்சியாகத் திருப்பாவைப் பதிவுகளை முடித்து வைப்போம்! :)
இதோ தை-01: "தை-ஒரு" திங்கள் என்னும் முதல் நாச்சியார் திருமொழி!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!

உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!


வேகமான பொருள்: காமவேளே! மன்மதா! உனக்கு அனங்கன்-ன்னு பேரு! அன்+அங்கம்=உடம்பில்லாதவன்! சிவ பெருமான் நெற்றிச் சோதியில் பொடியாகிய பொடியா!

தையொரு திங்கள் - ஆண்டாள் கல்யாணத்துக்காக,
ஷைலஜா அக்கா பிரத்யேகமாக போட்டு அனுப்பிய,
வண்ணக் கோலம் (தண்-மண்டலம்). க்ளிக்கி, பெரிதாக்கிப் பார்க்கவும்!


தை மாசமான இன்று, தரையை விளக்கி, தண்-மண்டலம் என்னும் குளிர்ச்சியான கோலம் இட்டோம்! மாசியின் முந்தின நாள் வரை (அதாச்சும் தை மாதம் முழுதும்), மணற் பொடிகளாலும், வண்ணப் பொடிகளாலும், தெருவை அழகுபடுத்தினோம்! தை மாசம் என்றாலே நீ வீடு தேடி வரும் வேளையாச்சே! அதான்!

எதற்கு உயிர் வாழ்கிறேன் தெரியுமா? காமன் என்னும் உன்னையும், சாமன் என்னும் உன் தம்பியையும் தொழுதேன்! ஏன் தெரியுமா?
பொறிகள் பறக்கும் அழகிய சக்கரத்தைக் கையில் பிடிச்சிருக்கானே...அந்த வேங்கடவன்! "அவனுக்கு-நான்" என்று விதிப்பாயே!



மார்கழி நோன்பு முடிஞ்சதும், ரெண்டு மாசம் கழிச்சி, பங்குனியில் தான் (பங்குனி உத்திரம்) கோதைத் திருமணம் கொண்டாடுவார்கள் திருவரங்கம் மற்றும் வில்லிபுத்தூரில்!

ஆனால் வேங்கடவன் அதற்கு முன்னதாகவே கோதைக்கு அருள் செய்கிறான்! எப்படா இவள், "வங்கக்கடல் கடைந்த" கடைசிப் பாசுரம் பாடி முடிக்கப் போகிறாளோ?-ன்னு காத்துக்கிட்டு இருக்கான் போல! வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! நோன்பு முடிச்ச கையோடு.....அவளை-அவன்.....அடுத்த நாளே லபக்! :)

இன்றும் திருமலை-திருப்பதியில், தைத் திருநாளான பொங்கலில் தான் ஆண்டாள் திருமணம்-கோதைப் பரிணயம் என்று கொண்டாடப்படும்! காலையில் வேங்கட மாப்பிள்ளை பாரி வேட்டை எல்லாம் நடத்தி, வீரம் கொப்பளிக்க வருவாரு! வந்து கைத்தலம் பற்றுவாரு! மாலை மாற்றல் அற்புதமாக நடக்கும்!
இவ்வளவு நாள், தான் சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!

ஆண்டாள் மாலை மாற்றல் காட்சியை, திருமதி. விசாகா ஹரி, சூப்பர் பாட்டு ஒன்றினால் விவரிப்பதைக் கேளுங்கள்! (மாலை சூட்டும் அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்துக் கொடுத்துள்ளேன்!)


கேட்பதற்கு மட்டுமான ஒலிச்சுட்டி!
மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
மாலடைந்து, மதிலரங்கன், மாலை அவர்தம் மார்பிலே,
மையலாள், தையலாள், மாமலர்க் கரத்தினாள்,

ரங்க ராஜனை, அன்பர் தங்கள் நேசனை,
ஆசி கூறி, பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட,
அன்புடன், இன்பமாய், ஆண்டாள் கரத்தினாள்,

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
பா-மாலை சாற்றினாள்! பூ-மாலை மாற்றினாள்!


அப்படியே கற்பனை பண்ணிப் பாருங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை!

*பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2040 (சர்வதாரி வருடம்), தைத் திங்கள் முதல் நாள் (14-Jan-2009), மகம் நட்சத்திரம் கூடிய தைப்-பொங்கல் நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,

* மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள்,
திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாடுடைத் தலைவன், அமலனாதிப் பிரான்,
திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* அன்பர்கள்-அடியார்கள் நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,
* ஆண்டாள்-அரங்கன் திவ்ய தம்பதிகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,

* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

- இப்படிக்கு,
மாதவிப் பந்தல்: கோதையின் ஆருயிர்-நட்புச் சமூகம்.


வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட....
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத...
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்ட...
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்-தன்னை
காப்பு நாண் கட்ட...
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுத...
(கெட்டி மேளம், கெட்டி மேளம்.....)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்ற...
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மா-களிறு அன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்ய...
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க...
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்ட...
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு, ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட...
(ஆயனுக்காகத் தான் "கொண்ட மணாவினை")
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!


இத்துடன், திருமகள் திருமணத்தோடு கூடிய திருப்பாவைப் பதிவுகள்...
மாதவிப் பந்தலில் நிறைவாகின! கனவுகள் நனவாகின!!


யம்மாடி கோதை, தாயே, என் தோழீ...உன் தோழனை ஒரு காலும் மறக்க மாட்டேன் என்று என் முகம் பார்த்துச் சொல்லிவிட்டு...முகமெல்லாம் இன்பமாப் போய் வாடீ...
பாம்பணையில், உன் பிஞ்சுக் கால் விரல்கள் அழுத்தி,
பரபர என்று மேல் ஏறி, மால் ஏறி,
எங்கள் செல்வ மகள், தென்னரங்கச் செல்வனைச் சேர்ந்தாள்! சேர்ந்தாள்!

பொங்கலோ பொங்கல்! இன்பமே பொங்கல்!
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம்பாவாய்! இன்புறுவர் எம்பாவாய்!
Read more »

மார்கழி-30: வங்கக் கடல் கடைந்த, சங்கத் தமிழ்!

வாங்க வாங்க! இனிய தைத் திருநாள் - பொங்கல் வாழ்த்துக்கள்!
மஞ்சள் கொத்துடனும், கரும்புடனும், நாளைக் காலையில் ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்பதற்கு முன்னாடியே, இன்னிக்கு வங்கக் கடல் கடைஞ்சிருவோம்! :)

இந்த ஆண்டு மார்கழியில் 29 நாட்கள் தான்! அதனால் இன்றே மார்கழி-30 பார்த்து விடலாம்! திருப்பாவைப் பதிவுகளின் க்ளைமாக்ஸ்-க்குப் போகலாமா? :)

பொதுவா எந்த பெரும் ஆன்மீக நூலாக இருந்தாலும், அதற்கு
கடவுள் வாழ்த்து-ன்னு ஒன்னு துவக்கத்தில் இருக்கும்!
நூற் பயன் (பல ஸ்ருதி)-ன்னு முடிவில் இருக்கும்!
ஆனால் திருப்பாவைக்குக் கடவுள் வாழ்த்து-ன்னு தனியா இல்லை!
வாழ்த்து + நூற்பயன் என்று இரண்டையுமே முதலிலேயே சொல்லி விடுகிறாள்!

* கார்மேனி, செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான் = கடவுள் வாழ்த்து(தியான சுலோகம்)!
* நாராயண"னே" நமக்"கே" பறை தருவான் = நூற் பயன்(பல ஸ்ருதி)!


இப்படித் துவங்கும் போதே துவங்கி விடுகிறாள்! Straight to the point! நச்-ன்னு சொல்லத் தான் கோதைக்குப் பிடிக்கும்! மரபு மீறுகிறதா-ன்னு எல்லாம் அப்புறம் தான்! :)

குழந்தைகளுக்கு என்ன பரிசு கிடைக்கும்-ன்னு சொல்லிட்டு, ஆர்வம் ஏற்படுத்தி, அப்புறமா படிக்கச் சொல்லிக் கொடுப்பது போலே!
பாருங்கள், என் தோழி, கோதை = ஒரு சிறந்த Motivator, Psychologist & Managing Director - Human Resource Development! :)

ஆனால், முடிக்கும் போது மட்டும், இன்னொரு முறை, வெளிப்படையாக நூற்பயனைச் சொல்கிறாளே? அதான் முதல் பாட்டிலேயே தியான சுலோகம்+நூற்பயன் சொல்லிட்டாளே!
அப்புறம் எதுக்கு, முப்பதாம் பாட்டில், திருப்பாவைப் பாடல்களால் என்னென்ன பலன் கிடைக்கும்-ன்னு ஒரு லிஸ்ட் போடுகிறாள்?

கோதைக்கு "அவனை"க் காட்டிலும் "அடியார்கள்" தான் முக்கியம்! அடியார்களோடு, "கூடி இருந்து", குளிர்ந்தேலோ தான்!
அதனால் தான் அடியார்களுக்கு என்ன தேவை? என்ன கிடைக்கும்? என்பதை வெளிப்படையாகச் சொல்லி விட்டு, தன் திருப்பாவையை நிறைவு செய்கிறாள்!

* துவங்கும் போதும், நேர் இழையீர்...சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்-ன்னு முதலில் அடியார்களைத் தான் சொல்கிறாள்! அப்புறம் தான் நந்தகோபன் குமரன், யசோதை இளஞ்சிங்கம் எல்லாம்!
* திருவெம்பாவையைப் பாருங்கள் - ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை-ன்னு இறைவனைத் தான் முதலில் வைத்துத் துவங்குகிறார் மணிவாசகப் பெருமான்!

ஆனால் இவளோ பெரிய வம்புக்காரியாச்சே! மரபுக்கு எல்லாம் கட்டுப்படுவாளா என்ன? :)
அதே போல் முடிக்கும் போதும் அடியார்களைக் கொண்டே முடிக்கிறாள்! = எங்கும் திருவருள் பெற்று (அடியார்கள்) இன்புறுவர் எம் பாவாய்! பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,


சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!




வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை = கப்பல்கள் செல்லும் கடலைக் கடைந்த மாதவன்-கேசவன்!
ஆகா திருப்பாற்கடலை யார் கடைந்தார்கள்? இவனா கடைந்தான்? தேவர்-அசுரர் அல்லவா கடைந்தார்கள்? உழைப்பு அவர்களது! கிரெடிட் ஐயாவுக்கா? ஹா ஹா ஹா!
கர்மன்யேவா அதிகாரஸ்தே - செய்யும் கர்மங்களின் மேல் உனக்கு அதிகாரம் இல்லை என்ற கீதா-சாரத்தைக் கோதா-சாரத்தில் வைக்கிறாள்!

ஆமையாய் நடு நின்ற நடுவன் அவன்! அதனால் தானே கடைய முடிந்தது! மொத்த பாரத்தையும் நடுவில் தாங்கிக் கொண்டான்! தேவர் இழுப்பு, அசுரர் இழுப்பு, மலையின் கனம், பாம்பின் விடம், கடலின் அலை என்று மொத்த பாரமும் அவன் மேல் தான்!

ஏதோ வெளியில் இருந்து பார்க்கும் போது, நாம தான் எல்லாம் கடைவது/செய்வது போல இருக்கும்! ஆனால் உண்மையிலேயே கடைவது/செய்வது மாதவன்-கேசவன் தான்!


சரி, அது என்ன வங்கக் கடல்? வங்கம் = பெரும் கப்பல்! அட, திருப்பாற்கடலில் கப்பல் எல்லாம் போகுமா? என்னப்பா கதை விடறீங்க?
ஹிஹி! இங்கே ஆண்டாள் காட்டும் கப்பல் வேற! நம் மனம் என்னும் கப்பல்! அது உலகக் கடலில் மிதந்தும், அலைகழிந்தும் போகிறது! அப்பர் சுவாமிகளும் மனம் எனும் தோணி என்று பாடுகிறார்!
ஆண்டாளும், அப்பர் சுவாமிகளும் பல இடங்களில் ஒரே உவமைகளைக் கையாளுவார்கள்! யாராச்சும் ஆய்வு செய்து பாருங்கள்! தெரியும்!
மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது
மனன் எனும் பாறை தாக்கி, மரியும் போது அறிய ஒண்ணா
உனை எணும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!



திங்கள் திரு முகத்து சேய் இழையார் = நிலவைப் போல மதி முகம் கொண்ட பெண்கள்

"சென்று" இறைஞ்சி = தாங்கள் இருந்து இடத்தில் இருந்தே, இறுமாப்பாய் வணங்காது, "சென்று" வணங்குகிறார்கள்! ஏன்? = அடியார்களுடன் கூடி வழிபடணும்! அது தான் கைங்கர்யம்! அது தான் தொண்டு!
இருந்த இடத்தில் இருந்தே கூட இறைவனை வணங்கலாம் தான்! ஆனால் அது தனித்த வழிபாடு! அற்புதமான வைகறை வேளையில் தனிமை எதுக்கு? அடியார் கூட்டத்தில், கூடி இருந்து, குளிர்ந்து வழிபட்டால், அது தனிப் புத்துணர்ச்சி அல்லவா!

அங்கு அப் பறை கொண்ட ஆற்றை = அங்கே, பெருமாளிடம் பறை வாங்கிக் கொண்ட வழியை...
ஆறு=வழி! ஆற்றுப்படை-ன்னு சொல்லுறோம்-ல! இங்கே பறை என்று சொல்லிவிட்டு பெருமாளையே வாங்கும் வழியை அல்லவோ நமக்குச் சொல்லித் தருகிறாள்!

* திருமுருகாற்றுப்படை = முருகப் பரிசில்!
* ஆண்டாள் ஆற்றுப்படை = பெருமாள் பரிசில்!
அதனால் திருப்பாவையை ஆண்டாள் ஆற்றுப்படை-ன்னு சொல்லலாம் தானே? சரி தானே? திருமாலாற்றுப்படை-ன்னாச்சும் கட்டாயம் சொல்லலாம்!

அணி புதுவை = அழகான புதுவைக் கிராமம், புத்தூர், வில்லிபுத்தூர்!
பைங் கமலத் தண் தெரியல் = பசுமையான குளிர்ச்சியான தாமரை மாலைகள்! தெரியல்-ன்னா தொங்கு மாலை!

தொங்கல், தொடையல், கண்ணி-ன்னு விதம் விதமான மாலைகள் உண்டு!
ஆண்டாள் சூடியது + சூடிக் கொடுத்தது = தெரியல் என்னும் தொங்கு மாலை! ஆண்டாள் மாலைன்னே இப்போ பெயர் ஆயிடிச்சி!

பட்டர் பிரான் கோதை சொன்ன = பட்டர் பிரான் பெரியாழ்வாரின் செல்லப் பொண்ணு (கோதை) சொன்ன...
ஆண்டாளுக்கு பொறந்த வீட்டுப் பாசம் ஜாஸ்தி! என்ன தான் கண்ணா, கண்ணா-ன்னு கொஞ்சினாலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், தன் பெயர் வரும் போதெல்லாம், தன் இனிஷியல் போட்டுப்பா!:)
பட்டர் பிரான் கோதை! பட்டர் பிரான் கோதை! பட்டர் பிரான் பெரியாழ்வாரின் செல்வக் குமாரத்தியான என் தோழியே! சூடிக் கொடுத்த சுடர் கொடியே!

சங்கத்தமிழ் மாலை = அவள் பாடிக் கொடுத்த சங்கத்தமிழ் மாலை!
சங்க காலம் தான் எப்பவோ முடிஞ்சி போயிடுச்சே! இவள் காலம் அப்புறம் தானே? அப்புறம் என்ன சங்கத் தமிழ்?
* நப்பின்னையை முன் வைத்தாள்!
* பழந்தமிழர் பண்பாடு,
* தமிழில் இறையியல்,
* தமிழ்க் கடவுள் மாயோன்,
* வெட்சி-கரந்தை ஆநிரை காத்தல்
என்றெல்லாம் சங்ககாலத் தமிழ்ச் சமயத்தை, தமிழ்ச் சமூகத்தை அவள் இப்போதும் முன்னிறுத்தி நிலைநாட்டியதால் = சங்கத்தமிழ்!

கோதை, வடமொழி தெரிந்திருந்தும், வடமொழியில் பாடினாள் இல்லை! வடமொழியில் எழுதினால் தான் சபையில் மதிப்பு என்று இருந்த ஒரு காலகட்டத்திலும், நம்மைப் போன்ற எளியவர்களுக்காகத் தெய்வத் தமிழில் பாடினாள்!
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!


முப்பதும் தப்பாமே = அந்தக் கோதைத் தமிழ் - முப்பது பாசுரங்கள்! பா+சுரம் = கவிதை+இசை!
இசைக் கவிதையான திருப்பாவைப் பாடல்களை...

இங்கு இப்பரிசு உரைப்பார் = இங்கே இந்தப் பெருமாள் பரிசைப் பாடுபவர்கள் எல்லாரும்...
அங்கு அப் பறை, இங்கு இப் பரிசு = பார்த்தீங்களா சொல்லாட்சியை? பொருளாட்சியை?

* அங்கு-அப் பறை = அங்கு, அங்கு-ன்னு மோட்சம் தேடறீங்களா மக்களே?
* இங்கு-இப் பரிசு = இங்கு, இங்கு-ன்னு இங்கேயே இருக்கு!


கையில் வெண்ணையை வச்சிக்கிட்டு, நெய்க்கு அலையலாமா? "எனக்கு மோட்சம் வேணும், எனக்கு மோட்சம் வேணும்"-ன்னு, சுயநலப் போர்வை போர்த்திக் கொண்டு, கர்மங்களையும், அனுஷ்டானங்களையும் செய்யாதீர்கள்! சுயநலம் இல்லாமல் அனுஷ்டானம் செய்யுங்கள்!

அங்கு அப் பறை, இங்கு இப் பரிசு = நித்ய கைங்கர்யம்!
என் கடன் பணி செய்து "கிடப்பதே"! = இதுவே மோட்சம்! இதுவே இன்பம்! இதுவே இறைவன் உள்ள உகப்பு!
* திருவரங்கமே மோட்சம்! திருவேங்கடமே மோட்சம்! திருக்கச்சியே மோட்சம்! மேலக்கோட்டையே மோட்சம்! திவ்ய தேசங்களே மோட்சம்!
* வாழைப் பந்தல் ஆனைக்கருளிய அருளாளப் பெருமாளே (கஜேந்திர வரதராஜப் பெருமாள்) மோட்சம்! அவரவர் அபிமானத் தலம் எல்லாமுமே மோட்சம்!
* அவரவர் அந்தராத்மாவே மோட்சம்! அந்தர்யாமியே மோட்சம்!

திருப்பாவை = ஒரு பரிசு! பெருமாள், தன்னோட பூமிப் பிராட்டியை அனுப்பி, நம்ம எல்லாருக்கும் கொடுத்த பரிசு! அதை ஓதுவார் எல்லாரும், பரிசு உரைப்பார் எல்லாரும்....

இப்போது பாருங்கள், கோதையின் உன்னிப்பான உத்தியை!
* முதல் பாசுரத்தில் = தியான சுலோகம் + நூற் பயன் வைத்தாள்!
* இறுதிப் பாசுரத்தில் = நூற் பயன் + தியான சுலோகம் வைக்கிறாள்!


ஈர் இரண்டு, மால் வரை தோள் = நான்கு பெரும் மலைத் தோள்கள்!
ஈர்-இரண்டு=நான்கு! மேகம் தங்கும் மலைமுகடு போல, நாம் போய்த் தங்கும் அவன் நான்கு தோள்கள் = சங்கு-சக்கர-அபய-வரதக் கரங்கள்!
செங்கண், திருமுகத்து = செவ்வரி ஓடிய கண்கள்! திவ்யமான திருமுகம்! பால் வடியும் அந்த அழகு முகம்! அய்யோ....
செல்வ+திருமாலால் = திருமகளோடு கூடிய ஸ்ரீ+மன்+நாராயணனால்!

எங்கும் = எங்கும்=எல்லா இடத்திலும், என்றும்=எல்லாக் காலத்திலும்,

திரு-அருள் பெற்று = உலகன்னை மகாலக்ஷ்மியின் பரிபூர்ண கடாட்சத்தாலே, அகலகில்லாக் கருணையாலே...

* தமிழ்க் கடவுள் மாயோன் திரு-அருள் பெற்று...
* ஆண்டவன்-அடியார் திருத்தொண்டில்...
இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்!



* ஆண்டாள் திருவடிகளே சரணம்! எம்பெருமான் திருவடிகளே சரணம்! ஹரி ஓம்!

* அடியேன் திருப்பாவைப் பதிவுகளை நிறைவு செய்கிறேன்!
* அடியார்களான உங்கள் திருவடிகளில் சேவித்துக் கொள்கிறேன்!
* இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்!


இனி வருவன....மரபுப் படி, கோதையின் மேல் பிறர் பாடிய, வாழ்த்துப் பாக்கள் + வாழித் திருநாமம்.....

திருப்பாவை வாழ்த்துப் பாக்கள் - வேதப் பிரான் பட்டர் எழுதியது!

கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்!
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்! - நீதியால்
நல்ல பத்தர் வாழும் ஊர்! நான் மறைகள் ஓதும் ஊர்!
வில்லி புத்தூர்! வேதக் கோனூர்!

பாதகங்கள் தீர்க்கும்! பரமன் அடி காட்டும்!
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்! - கோதைத் தமிழ்
ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு!


சமயத்தின் முப்பெரும் குறிக்கோள் என்ன?
1. பாதகங்கள் தீர்க்கணும்!
2. பரமன் அடி காட்டணும்!
3. வேதம் அனைத்துக்கும் வித்தாகணும்!
இம்மூன்றும் கோதையின் திருப்பாவை வெகு எளிதாகச் செய்து விடுகிறது!
சாஸ்திர விற்பன்னர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களை எல்லாம் கடந்து, எளிய மக்களுக்கும் இதை எடுத்துச் செல்கிறது!

அதனால் தான் திருப்பாவைக்கு மட்டும், எந்தக் காலத்திலும், ஆலயங்களில் தடையில்லை! திருமலையில் வடமொழிச் சுப்ரபாதத்தை நிறுத்தி விட்டு, திருப்பாவையை ஓதுகிறார்கள்!
மந்திரங்களுக்கே உரித்தான மதிப்பு, வேதம் அனைத்துக்கும் வித்து-ன்னு சொன்னாலும்...

மாதவிலக்காய் இருக்கும் போதோ...குளிக்காமலேயோ/குளித்தோ, தீட்டோ, தீட்டு இல்லையோ, என்ன வேணுமானாலும் ஆச்சாரம் சொல்லிக் கொள்ளுங்கள்!
இந்த வேதம் அனைத்துக்கும் வித்து = திருப்பாவையை மட்டும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானுலும் ஓதிக் கொள்ளலாம்!

இது வைணவச் சொத்து அல்ல!
சமயச் சொத்து அல்ல!
குலச் சொத்து அல்ல!
ஆச்சார சொத்து அல்ல!
திருப்பாவை = பொதுச் சொத்து! அதுவே இதன் நீர்மை-செளலப்பியம்-பெருமை!




கோதையின் மேல் தமிழ் அர்ச்சனை! - வாழித் திருநாமம்!
* திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
* திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
* பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
* பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!


* ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
* உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
* மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!
* வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!

ஆண்டாள் திருவடிகளே சரணம்! எம்பெருமான் திருவடிகளே சரணம்!
ஹரி ஓம்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP