Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

Sunday, July 10, 2011

நாயன்மார் அல்லாத ஒரு நாயன்மார்: இளையராஜா!

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
பணி நிமித்தமாக Rio de Janeiro பயணம்! ஓர் இரவு, சற்று நலமின்மை! அதனால் ஒரு முக்கியமான பதிவு miss ஆயிருச்சி!

அப்படியென்ன நாளு-ன்னு கேக்கறீங்களா? = Jul-05-2011 (ஆனி மகம்)! ஒரு பெரும் தமிழ்ச் சான்றோரின் குரு பூசை (நினைவு நாள்)!
= யாரு? நாயன்மாரா? அல்ல!
= நாயன்மார் அல்லாத நாயன்மார்! யார் அவர்?


இசைஞானி இளையராஜா செய்த Thiruvaachaga Oratorio அருமையானதொரு படைப்பு!
ஒரு பழந் தமிழ்ப் பதிகத்தை, மேற்கத்திய இசை முறையில் தருவதற்கு நுண்ணிய இசைப் புலமை வேண்டும்! ஆனால்.....

இளையராஜா செய்தது Symphony-ஆ அல்லது Oratorio-வா? என்பதில் சர்ச்சைகள் எழுந்து,.......இன்றும் பேசப்படுகின்றன!
இளையராஜாவே அது Oratorio என்று சொல்லி விட்ட பின்பும்....விளம்பரப் பேரலை எழுப்பக் கருதி, ஒரு சிலர் பரப்பிய Symphony என்ற வணிக முயற்சிகளால், சர்ச்சையாகிப் போனது!
ஆனால் இந்தச் சர்ச்சைகளாலெல்லாம், தமிழ் உலகம் தந்த இசை ஞானியான, இளையராஜாவின் புகழுக்கு, ஒரு போதும் மாசு கற்பித்து விட முடியாது!

List of symphony composers என்று இங்கே Wiki-இல் பார்த்தால், ராஜாவின் பெயர் இருக்காது! ராஜாவே ஒப்புக் கொண்டதும் கூட!
அது வெறும் Oratorio, அவ்வளவே! இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

* Oratorio = நீண்ட இசைக் கோர்வை! புனிதப் பொருட்கள் மீதான இசை! பொதுவாகத் தேவாலயங்களில் பாடவல்லவை! நாடக மேடைகளுக்கு அல்லாமல், இசை மேடைகளுக்கு மட்டுமே உரித்தானது!
* Symphony = அதனினும் நுட்பமான இசைக் கோர்வை! கடினமான இலக்கணங்கள் கொண்டது! நான்கு அசை வடிவுகள் கட்டாயம் இருக்க வேண்டும்!
1. opening sonata or allegro
2. slow movement, such as adagio
3. minuet with trio or solo sonata
4. and... allegro, rondo, or sonata

Symphony=பாடல் வரிகள் முக்கியம் அல்ல! இசை வடிவம் தான் முக்கியம்!
ஒரு முறை வடிவமைத்து விட்டால், பின்னர், திறமையுள்ள யார் வேண்டுமானாலும், அதை மீள் நடத்தி இசைக்கலாம்!
Beethoven, Schubert, Mendelssohn, Schumann போன்றவர்களின் சிம்பனிக்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன! பீத்தோவன் 5th Symphony புகழ், உலகம் அறிந்த ஒன்று!

இந்தியர் ஒருவர் எழுதிய சிம்பனி என்று பார்த்தால்...
இது வரை ஒருவரே! KS Sorabji! ஆனால் இதன் கடினத்தால், இன்று வரை இசைக்கப்படாமலேயே இருக்கிறது! :(

நம்ம இசைப் பொக்கிஷமான ராஜா செய்தது என்ன?
* தான் அமைத்த ஒரு Oratorio இசைக் கோர்வைக்கு ஏற்றவாறு, வரிகளைத் தேடியது! திருவாசகத்தில் எல்லா வரிகளும் அப்படியே பொருந்தி விடுமா?
* அதனால் தன் இசைக்கு/மெட்டுக்குப் பொருந்தி வரக் கூடிய திருவாசகப் பாடல்களை மட்டுமே தேடி, இசையூடே அமைத்து, மாலையாய்க் கட்டினார்!
= அதுவே அழகிய திருவாசக ஓரட்டோரியோ!


இந்நேரம் கண்டு புடிச்சிட்டு இருப்பீங்க-ன்னு நினைக்கிறேன்! :)
யார் அந்த "நாயன்மார் அல்லாத நாயன்மார்"?

தெய்வத் தமிழிசைக்கு வந்து வாய்த்த பெருமகனார் = திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும்படியான...
*** திருவாதவூரர் (எ) மாணிக்கவாசகர்!

சைவ சமயக் குரவர் நால்வருள் மூத்தவர் என்றாலும்...
ஏனோ 63 நாயன்மார்களில், மாணிக்க வாசகரை வைக்கவில்லை! :(((
என்னளவில் இது பெருங்குறையே!

நாயன்மார் கதைகளில் இவர் வரலாறு வராததால், இளந் தலைமுறைக்கு, இவர் கதையைத் தனியே தான் சொல்ல வேண்டும்!:(

சைவத் திருமடங்கள், காலத்துக்கு ஏற்றவாறு மாறி....
மாணிக்கவாசகப் பெருமானின் கதையை, பெரிய புராணத்தோடு சேர்த்து, மற்ற அடியவர் கதைகளோடு ஒன்றாக்கி விட வேணும் என்பது என் பேரவா! சிவ சிவ! துணை நின்றருள்!


மாணிக்கவாசகரின் தெள்ளு தமிழ்த் திருவாசகத்தை,
* இளையராஜாவின் இசையிலும்,
* மரபு வழியிலான ஓதுவார் திருமுறையிலும்
ஒருமுறை கேட்போமா? வாங்க! வாங்க! கேட்டுக்கிட்டே வாசகத்தை வாசிங்க!

8ஆம் திருமுறை - திருவாசகம் 35 - அச்சப் பத்து:
(மாணிக்க வாசகர் அரசாங்கப் பணத்தைக் "களவாடியவர்" என்று கிளம்பிய போது, அவர் மனம் அச்சப்பட்டதா? என்ன சொல்லிற்று? அதுவே இந்த அச்சப் பத்து!)

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்!
பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!
கற்றை வார் சடை எம் அண்ணல்
கண் நுதல் பாதம் நண்ணி....

புற்றில் இருக்கும் கொடும் பாம்பு? = அஞ்ச மாட்டேன்!
பொய்....இன்று பலருக்கு, மெய் போல் தோன்றினாலும் = அஞ்ச மாட்டேன்!
கட்டிய சடையான், நெற்றியிலே கண் உடையவன்,
என் அண்ணல்...அவன் பாதங்களை அடைந்து விட்டு...

மற்றும் ஓர் தெய்வம் தன்னை
உண்டென நினைந்து-எம் பெம்மாற்(கு)
அற்றிலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சு மாறே!!

ஈசனை அடைந்த பின்னர், "மற்ற தெய்வங்களும் உண்டு" என்று...என் பெருமானிடத்திலே அற்று இல்லாதவர்கள் (உறுதியான பற்று இல்லாதவர்கள்)...
இவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!

ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் குரலில்...அதே பாடல்...

வன் புலால் வேலும் அஞ்சேன்!
வளைக் கையார் கடைக்கண் அஞ்சேன்!
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத்து ஆடு கின்ற

மாமிச வேடர்களின் வேல் = அஞ்ச மாட்டேன்!
வளையல் பெண்களின் காமப் பார்வை = அஞ்ச மாட்டேன்!
எலும்பும் உருகுமாறு பார்த்துக் கொண்டே இருப்பேன்! யாரை?

என் பொலா மணியை ஏத்தி
இனிது அருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சு மாறே!!

தில்லைச் சிறு அம்பலத்தில் ஆடுகின்றான்! துளையற்ற மணி = ஈசன்!
அவனைப் போற்றி, அவன் அருளைப் பருகாமல் இருப்பவர்கள்...
அன்பே இல்லாத அவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!


என்ன மக்கா, பாடலைப் படித்தும் + கேட்டும் இன்புற்றீர்களா?

'மற்ற தெய்வங்கள்' என்று சில கருத்துகள் வந்தாலும்...மொத்த திருவாசகத்தையும், இதைக் கொண்டே, அவசரப்பட்டு எடை போட்டு விடாதீர்கள்! :)
இது ராஜா, அவர் இசைக்குப் பொருந்தி வந்ததால் மட்டுமே எடுத்துக் கொண்டது! அதுவும் தீவிரமான மன உளைச்சலில் இருக்கும் போது, மாணிக்க வாசகர் பாடியது! அந்தச் சூழலையும் நோக்க வேணும்!

என்னமாச் சொல்லாட்சி பாருங்கள்! பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!
* பொய் உரைக்கும் அரசியல்வாதிகள், மெய் போல் காட்டும் வித்தைகளை அஞ்ச மாட்டேன்-ன்னும் கொள்ளலாம்!
* நாம் நம்பிய ஒரு உள்ளமே, பொய்யை, மெய்யோ? என்று எண்ணி, என்னை மறுதலித்து விட்டால்? = அப்போதும் அஞ்ச மாட்டேன்-என்கிறார்!

கோபம் வேறு வருகிறது! இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்து விட்டானே ஈசன்!
அரசாங்கப் பணத்தை எடுத்து ஆலயம் அமைத்து விட்டேன் என்று பேசுகிறார்களே! ஐயோ...........
அன்பில்லாத அவரின் மனப்போக்கைக் கண்டே அஞ்சுகிறேன்! அஞ்சுகிறேன்!.....என்று மொத்தம் 10 பாடல்கள்=அச்சப் பத்து!

மாணிக்கவாசகரின் கதை?

பொதுவாக, எல்லா நாயன்மார்களின் நினைவுநாள் போதும், பெரிய புராண புனிதப் பூச்சுக்கள்/ மிகைகளைக் களைந்து, மூலநூலில் உள்ளது உள்ளவாறு, இக்காலத்துக்கும் ஏற்றாற் போல் சொல்வேனே!
இன்று எங்கே அந்தக் கதை? மாணிக்கவாசகரின் கதை?

= நாயன்மார் அல்லாத நாயன்மார் திருவடிகளே சரணம்!
எங்கள் தமிழிசை வாழ வந்த, மாணிக்க வாசகப் பெருமான் திருவடிகளே சரணம்!


தொடர்புடைய பதிவு: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ?
Read more »

Wednesday, September 08, 2010

மூக்கறுத்த நாயன்மார்! மீனவ நாயன்மார்!!

அடியார்களின் திருக்கதைகளைப் புனைவுகள் அதிகம் இன்றி..
மூல நூல்களில் (திருத்தொண்டர் தொகை/திருவந்தாதி) உள்ளது உள்ளவாறு..
அடுத்த தலைமுறைக்கும் ஏற்றாற் போல..
சென்று சேர்க்க வேணும் என்ற ஆசையில்..
ஒவ்வொரு நாயன்மாரின் நினைவு நாளின் (குருபூசை) போதும், இதோ...பந்தல் பதிவுகள்...

அந்த வரிசையில் இன்று...இவர்களைப் பார்க்கலாமா?

1. செருத்துணை நாயனார் (ஆவணிப் பூசம் - Sep 5, 2010)
அரசியின் மூக்கை, பொது மண்டபத்தில், அதுவும் அரசன் இருக்கும் போதே, அனைவரும் பார்க்க அறுத்தவர்! - ஐயோ! ஏன் இப்படிச் செஞ்சார்?
* அரசன் இவர் தலையை உடனே சீவி இருப்பானோ?
* இல்லை தன்னாலும் அடக்க முடியாத பெண்டாட்டியை அடக்கியவரே-ன்னு பரிசு கொடுத்திருப்பானோ? :)

2. அதிபத்த நாயனார் (ஆவணி ஆயில்யம் - Sep 6,2010)
மீனவ நாயன்மார் - மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்று முதலில் பாடியதே இவரு தான்! :)

3. புகழ்த் துணை நாயனார் (ஆவணி ஆயில்யம் - Sep 6,2010)
உறவுகள், உற்ற நண்பர்கள் கூட உதறி விட்டு நீங்கும் காலத்தில்,
பஞ்சம் வந்த போதும், பரமனை விட்டு நீங்காமல்...!


செருத்துணை நாயனார்:

அது என்ன செருத் துணை? செரு = போர்!
"செருவில் ஒருவன்" என்று முருகனைச் சொல்வது சங்கத் தமிழ்!
போரில் துணை நிற்பவர் = செரு+துணையார்!

வேளாளர் குடியில், தஞ்சையில் தோன்றியவர்! திருவாரூருக்கு இடம் பெயர்ந்து, சிவத் தொண்டிலேயே இருந்து விட்டார்! விளைச்சல் பூமியான தஞ்சையை இவரு எதுக்கு திருவாரூருக்கு இடம் பெயரணும்?

"மேன்மை கொள் சைவ நெறி, விளங்குக உலகமெல்லாம்" என்று சைவம் கொடி கட்டிப் பறந்த போது...சைவத்தின் தலை நகரம் எது?

"தென்னாடுடைய சிவனே" என்னும் தென்னாட்டில், தில்லை என்னும் சிதம்பரம் தானே, அப்போதும் இப்போதும் எப்போதும் சைவத்தின் தலைநகரம்?
எப்படி வைணவத்துக்கு ஒரு திருவரங்கமோ, அது போல் சைவத்துக்குத் தில்லை அல்லவா? இதென்னடா புதுசாத் தலைநகரக் கேள்வி-ன்னு நினைக்கறீங்களா? :)

தில்லை-ஆரூர்

தில்லை என்றுமே பெருமை மிக்க தலம் தான்! மறுப்பில்லை!
பொன்னம்பலத்துக்கு உள்ளே ஒரு சிறு அம்பலம்!
ஆடல் வல்லானின் அழகு அம்பலமாகும் அம்பலம் = சிற்றம்பலம்!
ஆனால் தில்லைக்கும் முன்னால்...
சைவத் தலைநகரமாகத் திகழ்ந்து விளங்கியது = திருவாரூர்!


"திருவாரூர் பிறந்தவர் தம் அடியார்க்கும் அடியேன்" என்றெல்லாம் புகழப் பெற்றது! இன்னிக்கும் திருவாரூரில் மாலை விளக்கு ஏற்றிய பின்னரே, பல சுற்று மாவட்ட சிவாலயங்களில் எல்லாம் விளக்கீடு செய்வது வழக்கம்!
"கோயில் பாதி, குளம் பாதி" என்னும் படிக்கு, மொத்த கோயிலின் நிலப்பரப்பும், குளத்தின் நிலப்பரப்பும் ஒன்றே என்று அமைந்த ஆலயம்!

* உலக நன்மைக்காக விடமுண்ட கண்டன்! அந்தத் தியாகத்தை நினைத்துப் பெருமாள் மனத்தளவில் ரசிக்கும் போது, அவரது மூச்சிலே மேலும் கீழும் இறங்கிய ஈசன்! அதே நடனக் கோலம் காட்டும் "தியாகேசன்" = திருவாரூர்!
* சுந்தரர் முதலான பல அடியார்கள் ஒன்று திரண்டு சைவம் வளர்த்த தலம் = திருவாரூர்! தேவாசிரிய மண்டபம் என்றே இன்றும் உள்ளது!

* "புற்றிடம் கொண்ட பெருமான்" என்று இறைவனுக்குப் திருப்பெயர்! இயற்கைச் சூழலில் புற்றில் தோன்றிய பெம்மானாக ஈசன் விளங்கும் தலம் = திருவாரூர்!
* புற்றிடங் கொண்ட பெருமான்-அல்லியங் கோதை என்று மூலவரும், வீதி விடங்கர்-முருகன்-மனோன்மணி அம்மன் என்று உற்சவரும் (ஊருலா மூர்த்தியும்), செங்கழுநீர் ஓடை முதலான செந்தமிழ்ப் பெயர்களை இந்த ஆலயத்தில் காணலாம்!

"ஆரூர்" என்று தமிழ்ச் சமயமாக, சைவம் தழைத்த காலம்!
பின்னர் தில்லைக்குப் பெயர்ந்து..பலவும் பெயர்ந்து போனது!
:(

ஓதுவார்கள், சைவத் திருமுறைகளை ஓதும் போது, "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லி முடிப்பது தான் வழக்கம்! (சிற்றம்பலம் = தில்லைச் சிற்றம்பலம்)
ஆனால் திருவாரூர் தலம், தில்லைக்கும் தொன்மையானபடியால்...இந்தத் தலத்தில் மட்டும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லி முடிப்பதில்லை! தேவாரம் சொல்லி, அப்படியே நிறுத்தி விடுவார்கள்!

அனைத்து ஆழ்வார்களாலும் அதிகம் பாடல்களைப் பெற்ற தலம் என்று திருவரங்கத்துக்கு எப்படிப் பெருமையோ...
அதே போல், அதிகமான தேவாரப் பதிகங்கள் பெற்ற தலம் என்ற பெருமை திருவாரூருக்கே உண்டு! மொத்தம் 353 பாடல்கள்!

பின்னம் அவனுடைய "ஆரூர்" கேட்டேன்!
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்!
திருவாரூர் தியாகேசப் பெருமான் திருவடிகளே சரணம்!


சரி, நாம் கதைக்கு வருவோம், வாங்க...

செருத்துணையார் திருவாரூரில் சிவத் தொண்டில் காலங் கழிக்கலானார்!
என்ன, கொஞ்சம் கோவக்காரர்! வன்-தொண்டர்! சிவத் தொண்டுக்கு யாராச்சும் வலியப் போய் இடையூறு செஞ்சா பிரிச்சி மேஞ்சிருவாரு! :)

ஒரு முறை பல்லவ நாட்டு அரசர், கழற்சிங்கர் தம் மனைவியோடு ஆரூர் ஆலயத்துக்கு வந்தார்! ஒரே படோபடம்! அரசன் சும்மா வந்தாலும், கூட இருப்பவர்கள் அடிக்கும் கொட்டம் அப்பவே இருந்தது போல! ஆலயத்தில் "அனைவரும் அடியார்கள் தான்" என்ற நிலை மறந்து போனது! படோபடங்கள் தலை தூக்கியது! அரசரின் குழாம் தேவாசிரிய மண்டபத்துக்குள் நுழைகிறது!

முன்பு சுந்தர மூர்த்தி நாயனாரையே, அவர் சுற்றியுள்ள அடியார்களை ஏறெடுத்தும் பாராமல், செல்வாக்கால் நேரே வணங்கச் சென்ற போது, இதே தேவாசிரிய மண்டபத்தில் அல்லவா ஒருவர் (விறன்மிண்டர்) வெடித்துக் கிளம்பினார்?
"சுந்தரனும் அடியார் குழாத்தில் இல்லை; அவனுக்கு அருளும் ஈசனும் இனி நம் குழாத்தில் இல்லை! சுந்தரனும் புறகு! அவனை ஆளும் ஈசனும் புறகு!" என்று அறச் சீற்றம் கொண்ட இடம் அல்லவா இந்த தேவாசிரிய மண்டபம்?

அரசன் முன்னே வேகமாகச் சென்று விட...அரசி தான் சற்றுத் தாமதம்!
எப்பமே வீட்டில், பெண்கள் தானே கிளம்ப லேட் ஆகிறது? :)) ஒருவர் Fast Passenger என்றால் இன்னொருவர் Goods வண்டி போல் வந்தால் எப்படி? :))
ஏன் அரசியார் தாமதமாகச் செல்கிறார்? அவரை ஏதோ ஒன்னு ஈர்க்கிறது! என்ன அது?

மல்லிகை, முல்லை, இருவாட்சி, கதம்பம், அல்லி, அளரி, செந்தாமரை என்று பூசைக்காக மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன பூங்கோயில் மண்டபத்துள்!
மொத்த வாசனையும் அழகும் திரண்டு வந்து அரசியை நிலை கொள்ளாமல் செய்கிறது! என்ன தான் அரசியாய் இருந்தாலும், இப்படி அனைத்து மலர்களும் ஒரு சேர அவள் இது வரை கண்டதும் இல்லை! சூடிப் பரப்பி அனுபவித்ததும் இல்லை! ஆசை துடிக்கிறது!

அரண் மனையிலே காணாத சுகத்தை,
அரன் மனையிலே காண்கிறாள்!

முறையாக அனுபவிக்கலாமே? பூசைக்குப் பின் பிரசாதமாக அவளுக்கே தரப்படுமே!
ஆனால் ஆசை வெட்கம் அறியுமா?

இப்போதே அனுபவித்தாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டால்??
யார் தன்னைக் கேட்டு விட முடியும் என்ற அலட்சியத்தில், நடந்தாள் ராணி, தடந்தாள் பேணி! பூந்தொடையல் கையில்! பூவாசம் மெய்யில்! முகர்ந்து முகர்ந்து ஆனந்தித்தாள்!

எங்கிருந்து தான் வந்தாரோ செருத்துணை? இத்தனை படோபடங்களையும் ஆலயத்தில் பார்த்து வெறுத்துப் போனவர், அரசியின் அலட்சியம் கண்டு இன்னும் கோபமானார்! அருகில் உள்ள பூ-நார் சீவும் குறுங்கத்தி எடுத்து, அவள் நாசிக்கும் மலருக்கும் இடையே நீட்ட, வெள்ளல்லி எல்லாம் செவ்வல்லியாகிப் போனது! குபுகுபு என்று இரத்தம்!!


அடப் பாவி, அரசியின் மூக்கில் கத்தி பட்டு விட்டதா? இப்படிப் பெண்மயில் போல் துடிக்கிறாளே! பலரும் பாய்ந்து செருத்துணையைப் பிடித்துக் கொண்டனர்!

முன்னே போன பல்லவ அரசர் கழற்சிங்கர், சத்தம் கேட்டு ஓடோடி வருகிறார்! இந்த அடாத செயலைச் செய்தது யார் என்று சீறுகிறார்! அதிகாரம் அதட்டும் போது, பதில் உடனேவா வருகிறது? அனைவரும் தயங்கத் தயங்க...

செருத்துணை, குற்றத்தை ஒப்புக் கொண்டு, தானே இதைச் செய்ததாகக் கூறுகிறார்! நடந்த அத்தனையும் அவர் எடுத்துச் சொல்லச் சொல்ல...
ச்சே, இப்படியும் ஒரு எதிர்வினையா? அரசன் வாளை உருவி...

ஐயோ, செருத்துணை இன்றோடு காலியா?
யாரும் எதிர்பார்க்கும் முன்பே, மன்னன், அரசியின் கைகளை வாளால் வெட்டுகிறான்! வெட்டித் தலை குனிகிறான்! வெட்கித் தலை குனிகிறான்!
மக்கள் அதிர்ச்சியால் அரண்டு போகிறார்கள்!

காதலியிடம் Public Display of Affection கேள்விப்பட்டுள்ளோம்!
இது என்ன Public Display of Punishment-ஆக அல்லவா இருக்கு! :(

"முதல் தவறு கைகள் மீதல்லவா? அப்புறம் தானே மூக்குக்குச் சென்றது?" - இது அரசன் சொன்னது!
"முதல் தவறு மனதின் மீதல்லவா? அப்பறம் தானே கை மீறியது?" - இது நாம் சொல்வது!

மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ எனவே.....
மனத்தை உணர வைக்காமல்......, விழிக்கோ,கைக்கோ,நாசிக்கோ தண்டனை தந்து பயன் என்ன?
சுழற்றியதோ சாட்டை! சாபம் பம்பரத்துக்கா? இதென்ன போலிப் பண்பு??

* பூசைக்குரிய மலர் என்று பாராதது சிவ அபராதம் என்று சொன்னாலும்...
* ஆலயத்தில் அதிகாரம் காட்டியது அரசியின் பிழையே ஆனாலும்...
* அதற்கு, செருத்துணையார், அவசரத்தில் குறுங்கத்தி நீட்டி விட்டாலும்...
* அரசியே ஆனாலும் சிவாபராதம் அபராதமே என்று...இப்படிப் பலர் முன்னிலையில், அரச நீதி காட்டி விட்டார் கழற்சிங்கர்!

இது அரச நீதி வேண்டுமானால் ஆகலாம்! ஆனால் மேன்மை கொள் சைவ நீதி ஆகுமோ? = அன்பே சிவம்!
* இறைவனுக்குரிய மாலையைத் தான் சூடிக் கொண்டவள் = அவள் கைகளை யாரும் அரியவில்லையே! "சூடிக் கொடுத்த சுடர் கொடி" அல்லவோ ஆனாள்!
* இங்கோ, அரசிக்கு வேறு விதமாய் ஆகிப் போனது! ஏன்?

அவளுக்கோ மாலையின் மேல் ஆசையில்லை! அதை அணிந்தால், தான், அவனுக்கு ஏற்றவளாக இருப்போமா என்ற ஆதங்கம்!
இவளுக்கோ இறைவன் பால் உள்ள பற்றினால் அல்ல! தன் ஆசைக்கு, தன் வேட்கையை, பொதுவில் தணிவித்துக் கொள்ள முயன்று...அதுவும் தன் அதிகார பலத்தால்!

= நோக்கமே முக்கியம்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் "தத்தம்
கருமமே" கட்டளைக் கல்!

என்ன தான் அரச நீதியாகத் தண்டனை தந்தாலும், கழற்சிங்கர் சிறந்த சிவ பக்தரே! சைவத் தொண்டிலே சிறந்து, நாயன்மாராக விளங்கி நிற்கிறார்!
செருத்துணை நாயனார் குரு பூசையின் போது, இந்த இருவரையுமே வணங்கி நிற்போம்!


அதிபத்த நாயனார்:

நாகைப்பட்டினம் நுளைப்பாடி என்னும் மீனவச் சேரியில் பிறந்தவர் அதிபத்தர்! இவருக்கு ஈசனின் பால் எப்படியோ, அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு வந்துவிட்டது! யாரிடமும் போய் வேதமோ, திருமுறையோ கேட்கவில்லை! ஈசனின் செயல்கள் அனைத்தையும் ஆய்ந்து முடித்து அவரைப் பற்றிக் கொள்ளவில்லை! இயல்பாகவே இயற்கையாகவே அமைந்து விட்ட ஈச-அன்பு!

ஒவ்வொரு நாளும் தான் கடலில் பிடிக்கும் மீன்களுள் சிறந்த மீனை, சிவனுக்கே அர்ப்பணம் என்று சொல்லி, மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவார்! மீன் பிடித்து மீண்டும், ஆற்றில் விட ஆசை-ன்னு அப்பவே பாடி இருக்கார் போல! :)

அதென்ன ஒத்தை மீனை மட்டும் விடுவது? அதென்ன, பிடித்துத் தானா விட வேண்டும், அப்படியே விடலாமே-ன்னு ஆளாளுக்குப் சில சக மீனவர்கள் கேலி பேசினாலும்...
அதிபத்தர் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை! அவர் சிவ-அன்பு அவர் மனத்தளவில்! அது ஊருக்கே விளம்பரம் செய்து அளித்த "சிவார்ப்பணமஸ்து" அல்ல! நடுக்கடலில் அளித்த சிவக்கொடை!

ஆனால் அன்றோ, அவர் கெட்ட நேரம், வலையில் ஒரு மீனும் சிக்கவில்லை! இன்னும் ஆழம் சென்று பார்த்தார்! ஆகா! ஏதோ பலமாக இழுக்கிறது! கொழுத்த மீன்கள் போல! வலையை மேலே இழுத்துப் பார்த்தால்...கொழுத்த மீன்"கள்" அல்ல!.........வெறும் ஒரு கொழுத்த மீன் மட்டுமே!

இப்பச் செய்வாரா சிவார்ப்பணம்? கொள்கை?? சிவம்???
ஹிஹி! ஞான, கர்ம யோகம் என்று விதம் விதமாய் அறிவுப் பசியெல்லாம், வயிற்றுப் பசிக்கு அப்புறம் தானே?
நமக்கெல்லாம் வாழ்க்கைக்கு, மிஞ்சி ஃப்ரீ டைமில் தானே தெய்வம்! அதுவும் நமக்கு ஒத்து வரும் கதைகள் கொண்டதாய் இருந்தால்! :)
அதிபத்தருக்கோ தெய்வத்தை மிஞ்சித் தான் வாழ்க்கை! என்ன செய்வார் அந்த ஒரே மீனை?

சிவார்ப்பணம் என்று வழக்கம் போல் கடலிலேயே விட்டார்! இவர் அதி-பத்தரா? அதி-பித்தரா?

அடப் பைத்தியமே, புவ்வா-வுக்கு என்ன பண்ணுவ? என்று சக மீனவர்கள் கேட்க...வெறும் புன்னகை மட்டுமே அவரால் அவர்களுக்குத் தர முடிந்தது!

மறு நாள், அந்த ஒரு மீன் கூடப் பிடிபடவில்லை! போச்சுறா...நல்ல சிவார்ப்பணம்! பகர் ஆர்வம் ஈ என்று கேட்காமலே சிலருக்குத் தரவல்ல இறைவன், இவருக்கு மட்டும் இவர் நிலை கண்டும் தரவில்லை போலும்! ஒரு வேளை ஈசனும் ஆராய்ந்து அருளேலோ ஆகி விட்டாரோ? :(

சேலெல்லாம் செவேல் செவேல் என்று மின்ன, இது சிலா மீனோ அல்லது சிலையோ என்னும் படிக்கு, பொற்சிலையாய் ஒரு பொன் மீன்...
வலையில் வந்து விழுந்தது! தகதகதக தகவென்றே ஓடி வா! சிவ சக்தி சக்தி சக்தியோடு ஓடி வா!

அதிசய மீனை விற்றால் வாழ்க்கையே அதிசயமாய் மாறிப் போகுமே! பொன்மீன், பொன்மீன் என்று உடன் இருந்த பரதவர்கள் எல்லாம் மகிழ்ந்து கூச்சல் இட...
அதிபத்தர் சற்றும் தாமதியாமல், அன்றைக்கு கிடைத்த ஒரே மீனை, பொன் மீன் என்றும் பாராமல்....."சிவார்ப்பணம்".....அலையிலேயே இட்டு விட்டார்!

கடல் நஞ்சை உண்டவன், இவர் ஈந்த மீனையும் உண்டானோ என்னவோ?
கீழைக் கடலில் நஞ்சுண்டவன் மேற்குச் சூரியனும் மறைந்து போகும் அளவுக்கு மின்ன...
பொன்னார் மேனியனே....மின்னார் செஞ்சடை மேல்....மன்னே மாமணியே...

அதிபத்தர் சிரம் மேல் கரம் கூப்பி, சிவசிவா என்றும் சொல்லத் தெரியாது, நாத் தழுதழுக்க...
சிவலோகத்தில் சிறப்புற்றிருக்கும் வண்ணம் இந்த அன்பனைத் தலையளித்து ஆண்டு கொண்டார் அம்பலவாணப் பெருமான்!

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
தங்கக் கவசம், வெள்ளிக் கதவு என்றெல்லாம் கொட்டும் கூட்டத்துக்கு இடையில்... அதிபத்த நாயனார் திருவடிகளே சரணம்!
Read more »

Friday, August 06, 2010

சந்தன வீரப்ப சிவபக்தர்! தலைக்குத் தலையெடுத்த சிவபக்தர்!

அடியார்களின் திருக்கதைகளை, புனைவுகள் அதிகம் இன்றி,
மூல நூல்களில் உள்ளது உள்ளவாறு,
அடுத்த தலைமுறைக்கும் ஏற்றாற் போல,
சென்று சேர்க்க வேணும் என்ற ஆசையில், இதோ..........

இனி, ஒவ்வொரு நாயன்மாரின் நினைவுநாளின் (குருபூசை) போதும், அவர்களைப் பற்றிப் பந்தலில் எழுத முற்படுகிறேன்!
பெருமாளை இடத்தே வைத்த ஈசன் இன்னருள் செய்க!



சென்ற கோட்புலி நாயனார் பதிவில்.....
ஏழைகள் நிதியில் இருந்து பிடுங்கித் தின்றுத் தவறிழைத்த சுற்றத்தை நாயனார் கொன்றார்; பின் தானும் மாண்டார் என்று மட்டும் தான் சொல்லிச் சென்றேன்!

ஆனால்...குழந்தையைக் கூட மேலே எறிந்து வாள் பிடிக்க, அது விழுந்து இரண்டானது என்பதெல்லாம் பின்னாளைய பெரிய புராணத்தில் தான் வரும்!
மூல நூலான திருத்தொண்டத் தொகை/திருத்தொண்டர் திருவந்தாதியில் அப்படி வாராது! நானும் பதிவில் அப்படிச் சொல்லவில்லை! இருப்பினும் கேள்விகள் பறந்து வேள்விகள் செய்தன! எல்லாம் நன்மைக்கே!

இன்று வெளியில் காணலாகும் நாயன்மார் நூல்கள்/சைவத் திருமடங்களின் நூல்கள் பெரும்பாலும் சேக்கிழாரை ஒட்டியே இருக்கும்! உதாரணமாக நீங்களே பாருங்கள்...
"அந்நாளில் வடுக அரசன் நீதிவகையாலன்றிப் படைவலிமையினாலே வலிந்து மண்கவரும் ஆசையால் பெரும் படை கொண்டு வந்தான். பாண்டியனோடு போர் செய்து பாண்டி நாட்டின் அரசாட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் நன்நெறியாகிய சிவநெறியில் செல்லாது தீ நெறியாகிய சமணர் திறத்தில் ஆழ்ந்தான்"

இப்படிச் சமண வெறுப்பு அப்பட்டமாகத் தெரியும்! ஒரு நெறியைத் "தீ நெறி" என்று, ஒரு கதையில் பழித்துச் சொல்ல நாம் யார்?
இது நாளைய தலைமுறைக்கு நன்மை பயக்குமா? அன்பே சிவம் அல்லவா?

சம்பந்தப் பெருமான் போன்றோரின் சில பாடல்களில் இப்படி இருக்கலாம்! அது அந்நாளைய அரசியல் நிகழ்வு! அதற்காக நாம் அவர் பாடலை மாற்றப் போவதும் இல்லை! பூசி மெழுகப் போவதும் இல்லை!
ஆனால் அடியவர் கதைகளில் கூட இது தேவை தானா? "தீ நெறியாகிய சமணம்" என்ற வார்த்தைப் பிரயோகம் ஒரு கதையில் தேவையா? நாயன்மார் சொல்லாத ஒன்றை, அவர் மேல் ஏற்றி, ஏன் நாமே சொல்ல வேண்டும்?

தலைமுறைக்குச் சென்று சேர்ப்பிக்க வேண்டுவது = சிவ அன்பா? அல்லது பழைய காழ்ப்பா? - Where is the Focus??
அடியவர்களின் சிவபக்தி பற்றிப் பேச வரும் போது, அவர்களின் ஊக்கத்தை அல்லவா பேச வேண்டும்?

இதனால் தான் அடியவர் திருக்கதைகளை, மூல நூலில் இருந்து மட்டும் சொல்லிச் செல்கிறேன்!
முன்பு காரைக்கால் அம்மையார் (எ) புனிதா என்னும் பேதையைப் பற்றியும் அவ்வாறு தான் சொல்லிச் சென்றேன்!

அவள் எழுதியது Icon Poetry (குறியீட்டுக் கவிதை)! ஆனால் ஆன்மீகம் என்பதால் அந்த அழகிய கவிதை வெளியில் செல்லவில்லை! வெள்ளைக்காரர் DH Lawrence தான் Icon Poetry-ஐ முதலில் எழுதியவர் என்று அறியாமல் சொல்கிறார்கள்! அதான் புனிதாவை எடுத்துக் கோடிக் காட்டினேன்! அதுவே தமிழ்மண விருதும், வாசகர் விருப்பும் பெற்றது!

மாணிக்கவாசகரின் உருக்கங்கள், நீலநக்க நாயனாரின் மனைவி சாஸ்திரம்/தோஷம் என்று பார்க்காது, சிவலிங்கம் மேல் எச்சில் பட ஊதி, விஷச் சிலந்தியை அகற்றியது....இப்படியெல்லாம் தான் பந்தலில் நாயன்மார் பதிவுகள் வந்தன!

இது ஒரு சிலருக்கு, முக்கியமாகப் பெரியவர்களுக்கு, பிடிக்காமல் போகக் கூட வாய்ப்புண்டு! சைவக் கதைகளை dilute செய்கிறேன் என்று சில சைவப் பற்றாளர்கள் நினைக்கலாம்! சாஸ்திரத்தை "இறக்கி", காதலை/அன்பை "ஏற்று"வதாகவும் கருதலாம்!
வழக்கம் போல் என்னிடம் தூக்கி வரும் "வைணவக் கும்மி", "வைணவ முத்திரை" குத்தி, தங்கள் மனதைத் தாங்களே ஆ(ஏமா)ற்றிக் கொள்ளலாம்! :)

ஆனால், முன்பே சொன்னது போல்...
* சைவம் என்பதை விடச் சிவம் முக்கியம்! வைணவம் என்பதை விட பெருமாள் முக்கியம்!
* பக்தி என்பதை விட, அவனோடு உறவு பாராட்டல் முக்கியம்!

அதனால் இந்தப் பணியில், "வைணவ முத்திரைக்கு" எல்லாம் பயந்து பின் வாங்கப் போவதில்லை! என் காதல் முருகன் காக்கட்டும்!

சைவக் குடும்பத்தில் பிறந்து, சிறு வயதில் என்னைப் பாதித்த கேள்விகள், வேறு எந்தச் சிறுவனையோ/சிறுமியையோ, இனி பாதிக்க வேண்டாம்!
ஏன் புனிதா வாழ்க்கை பாழடிக்கப்பட்டது? ஆண்டாள் வாழ்க்கை மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது? என்ற யோசனைகளையும் தாண்டி...

ஒவ்வொரு தலைமுறைக்கும், அருளாளர்களின் கதைகளை, "அருள்" பொங்க மட்டுமே சென்று சேர்ப்போம்! "காழ்ப்பு" பொங்க அல்ல!
குறைந்த பட்சம், அவற்றைப் பெருமை பேசாமாலாச்சும் இருப்பதே சிறப்பு!

"தீ நெறியாகிய சமணம்" என்றோ, "பச்சைக் குழந்தை என்றும் பாராது சுற்றத்தாரின் குழந்தையை வெட்டினார்" என்றோ...நாயன்மார் கதைகளில் சொல்ல எனக்கு வராது! அதனால்....
* அதீத புனைவுகள் ஏதுமின்றி...
* மற்ற நெறிகளில் உள்ள நல்லதைத் தயக்கமின்றிக் காட்டி...
* இதனால், பெரிய புராணத்துக்கும் சற்றே மாறுபட நேர்ந்தாலும், மாறுபட்டு...
* மூலநூலான திருத்தொண்டத் தொகை/அந்தாதியை மட்டுமே ஒட்டி...

நாயன்மார்களின் கதைகள், இனி அவரவர் குருபூசையில், மாதவிப் பந்தலில் தொடர்ந்து மலரும்!
அந்த வகையில்.....
இன்று (ஆடியில் கிருத்திகை) 1. புகழ்ச்சோழ நாயனார், 2. மூர்த்தி நாயனார் குருபூசை! பார்க்கலாமா?
முதலில் மூர்த்தியைப் பார்ப்போம்! இவருக்காகவே சந்தன வீரப்பன் மரம் வெட்ட வேண்டியிருக்கும்! :)



மூர்த்திக்குச் சொந்த ஊர் மதுரை! வியாபாரி! தேர்ந்த வணிகர்! மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்கும் மீனாட்சி அம்மைக்கும், தினப்படி சந்தனம் அரைத்துக் கொடுப்பவரும் கூட! பூசைக்கு வேண்டிய மொத்த சந்தனமும் தடைபடாமல் நடத்திக் கொடுப்பவர்!

அந்நாளில் வடுக அரசன் (கர்நாடகத்தில் இருந்து) பாண்டிக்குப் படை எடுத்து வந்தான்! பாண்டியனை வீழ்த்தி, மதுரையும் கைப்பற்றிக் கொண்டான்!
அவன் வேறு சமயம் (சமணம்)! மதுரையோ...ஊர் முழுதும் திருநீறு மணம் வீசுவது! வாய் முழுதும் மீனாட்சி மணம் வீசுவது! மக்களை மீனாட்சி கோயிலுக்குப் போகாதே-ன்னா சட்டம் போட முடியும்? ஆலயப் பணிகளுக்கும் பல முட்டுக்கட்டைகளைப் போட்டான்!

ஜீவ காருண்யமே சமணத்தின் அடிப்படை! ஆனால் அருகரை விட்டுவிட்டு சமணம் என்ற "அமைப்பை மட்டும் பற்றிக் கொண்டவன்" கதி என்ன?
அருகதேவருக்கு இச்செயல் உவக்குமா என்று அவன் யோசிக்கவில்லை போலும்! நாம் தான் கருத்தைக் கருத்தாகப் பார்க்காது, ஆட்களை மட்டும் பிடித்துக் கொள்வோமே! :)

அதனால் தான் பலமுறை பந்தலில் எழுப்புவது:
ஆன்மீகம் என்ற பெயரில், ஒரு செயலைச் செய்யும் போது, ஒவ்வொரு முறையும், இதைச் செய்கிறோமே, இதனால் பெருமாள் உள்ளம் உவக்குமா? இல்லை பெருமாள் உள்ளம் வாடுமா? என்று கேட்டுக் கொள்ள வேணும்!
அப்படியெல்லாம் யோசிக்கத் துவங்கினால், வடகலையாவது, தென்கலையாவது? :)


கதைக்கு வருவோம்! மூர்த்தியின் சந்தனப் பணிக்கும் முட்டுக்கட்டை வந்தது! திடீரென்று சந்தனக் கட்டைகள் கிடைக்காமல் நின்று போனது!
தினப்படி அதையே தொண்டாகச் செய்து வந்தவருக்கு, எங்கு விசாரித்தும் சந்தனம் கிடைக்கவில்லை! அதுக்காக வீரப்பனுக்கோ/விஜயகுமாருக்கோ SMS-ஆ அனுப்ப முடியும்? :)

பழைய சந்தனக் கட்டை, தேய்க்கத் தேய்க்கத் தேய்ந்து போனது! இனி அதில் தேய்க்க ஒன்றுமே இல்லை! பார்த்தார் மூர்த்தி! தன் கையையே தேய்க்க ஆரம்பித்து விட்டார்!
முழங்கை தேய, எலும்பு தெரிய, என்ன பைத்தியக்காரத்தனம் இது? கையைத் தேய்ச்சா சந்தன வாசனையா வரும்? ரத்த வாசனை அல்லவா வரும்??

இப்படியெல்லாம் நாம வேணும்-ன்னா யோசிப்போம்!
அதான் நாம் நாமாக இருக்கிறோம்!
அவர் நாயனாராக, ஈசனுக்கு நேயனாராக இருக்கிறார்!

ஒன்னுமே முடியாத நிலையில், இனி என்ன செய்வதென்றே தெரியாத போது, நாமும் இது போன்ற "முட்டாள்தனங்களை" செய்யறது தானே!
என்ன, நாம் சுயநலத்தில் செய்வோம்! மூர்த்தி சிவநலத்தில் செய்தார்! அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு!

ஈசன் அருள் வந்து முந்த, மூர்த்தியைத் தடுத்தாட் கொண்டார் மதுரைச் சொக்கன்! மூடபக்தியோ? இப்படியும் செய்குவையோ? எனக் கேட்க...அன்பினால் தலை கவிழ்ந்து, வெட்கி நின்றார் மூர்த்தி!
அட, தவறு செய்யாதவன் எதுக்குத் தலை குனியணும்? = அட, பின்னே கண்ணீரை எப்படி மறைப்பதாம்? :)

அன்று இரவு, வடுக மன்னன் மாண்டு போக, வாரிசே இல்லாமல் இறந்த அவனுக்குப் பதிலாக, புதிய ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க அமைச்சர்கள் குழுமினர்! ஒரு சிலரின் அந்நாளைய வழக்கப்படி யானையின் துதிக்கையில் பூமாலை! அதுவோ வீதியில் மூர்த்திக்கே மாலையிட்டது!

மூர்த்தி சிறிது நாள் அரசாண்டு, ஆலயப் பணிகள் அனைத்தும் குறைவற நடத்திக் கொடுத்து...
முன்பு, தான் கரைத்த சந்தனம் போலவே, சிவத்தில் கரைந்து...
மூர்த்தி நாயனார் என்னும் சந்தனமாகவே சந்ததமும் மணக்கிறார்!


சரி, இப்போ புகழ்ச்சோழரைப் பார்ப்போம்! யார் இந்தப் புகழ்ச்"சோழர்"? சோழ அரசரா? அப்படி ஒரு சோழன் இருந்ததா எனக்குத் தெரியவே தெரியாதே! கல்வெட்டு இருக்கா? :)

சோழ நாடு பல துண்டுகளாய் இருந்த போது, அதன் பல பகுதிகளை ஆண்ட அரசர்கள் கூட "சோழன்" என்ற பட்டம் கொள்வதுண்டு! கிளிச் சோழன் திருவரங்க ஆலயத்தின் ஆரம்பக் காலப் பகுதிகளை மண்மேட்டில் கண்டுபிடித்தானே! அதே போலத் தான்! புகழ்ச்சோழர் சிறந்த சிவ பக்தர்! திருச்சிக்குப் பக்கத்தில், உறையூரில் இருந்து ஆண்டு வந்தார்!

குடநாட்டில் அதிகன் என்னும் மன்னன் திறைப் பணம் தர மறுத்தான்! திறை திரட்ட வந்த மன்னர், வழியில் கருவூர் வந்து சேர்ந்தார்!
கருவூரில் கோயில் கொண்டுள்ள ஆனிலையப்பர் பற்றியும், கருவூர்த் தேவர் பற்றிய பதிவும் இங்கே!

கருவூர் கோயிலுக்குப் பூக்கூடை சுமந்து செல்லும் வயதான பெண்மணி சிவாகாமியாண்டார்!
அன்னிக்கு-ன்னு பார்த்து, அவர் சுமந்து செல்லும் வீதியில், ஊருக்கு வந்துள்ள அரசரின் யானை, ராஜபாட்டைக்கு வந்தது! சின்ன ஊர்! குறு வீதி, யானைக்குத் தாங்குமா?

யானை, வீதியில் வந்து கொண்டிருந்த சிவகாமியின் பூக்குடலையைச் சிதறச் செய்தது! கூடையில் பச்சை இலைகளும் வண்ண மாலைகளுமாகத் தின்பண்டம்-ன்னு நினைத்திருக்குமோ என்னவோ? வீதிவிடங்கப் பெருமானுக்குச் சேரவேண்டிய பூக்கள் எல்லாம் வீதியில் புரண்டு கிடந்தன!

ஆனால், பாகன்கள் கண்டு கொள்ளவே இல்லை! தவறுக்கு வருந்தவும் இல்லை! வயதான முதியவரைத் தூக்குவோம் என்று கூட இல்லை! கேலியாகப் போய் விட்டார்கள்!
அப்பவே அதிகாரம் கையில் இருந்தால் ஆங்காரம் மனத்தில் இருக்கும் போல! யானைக்கு என்ன தெரியும்? பாகனும், சோழ வீரர்களும் அல்லவா வழிநடத்த வேணும்? ஆனால் அவர்களுக்கோ அரச பட்டாளம் ஊருக்கு வந்த டாம்பீகம்!

சிவகாமி, "சிவதா சிவதா" என்று கேவிக்கேவி அழுகிறார்! என்ன செய்ய முடியும் ஒரு அரசனின் யானையை?
அந்த ஊரில் உள்ள ஒரு வீரர் ஓடோடி வருகிறார்! இந்த மாதிரி விஷயம் நடக்கும் போதெல்லாம் ஊரில் எதிர்ப்புக் குரல் கொடுப்பவர் போல! யார்?


எறிபத்தர்! அவரும் பின்னாளில் ஒரு நாயன்மார் தான்! ரொம்ப ரோஷம் மிக்கவர்! காதலர் தினம் அன்னிக்கி, நம்ம ரோஜாப்பூ பொக்கேயை, ரோட்டில் சண்டிக் கூட்டம் ஒன்று பிடுங்கி நாசப்படுத்தினால், ஹீரோவுக்கு கோவம் வரும்-ல்ல? அது போல வந்தது எறிபத்தருக்கு! :)

எறிபத்தர் எகிறிக் குதித்து, பாகன்களை மடக்கிக் கேள்வி கேட்டார்! ஆனால் பாகன்கள் அரசாங்க அதிகாரிகள் ஆயிற்றே! எகத்தாளமாகப் பேசினர்! - "ராஜா வீட்டு யானை-ன்னா அப்படி இப்படித் தான் இருக்கும்! போய் கெழவியை வேற பூ கட்டிக்கச் சொல்லு!"

வாய்ச் சண்டை முற்றிக், கைகலப்பில் முடிய...அரச வீரர்கள் கொல்ல வாள் உருவ, அவர்களுக்கும் முன்னே, எறிபத்தர் தன் மழுவை உருவிச் சாய்த்து விட்டார்! சேதி கேட்டு, நம்ம புகழ்ச் சோழ மன்னர், யார் அவன்-ன்னு ஓடி வர, வந்து பார்த்தால் சிவ பக்தர்! முழு விவரமும் தெரிய வர...மன்னன் கலங்கி நிற்கிறான்! என்ன சொன்னான்?

"தவறு பாகன்கள் பேரில் இல்லை! அவர்களைப் பொது மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேணும் என்று வரையறுக்காத என் பேரில் தான் உள்ளது!
இதோ என் வாள்! என்னையும் கொன்று, சிவப்பணி தடையானதற்கு தண்டனை தாருங்கள்
!"

இதை எறிபத்தர் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை! இப்படி ஒரு அரசனா? நாம் தான் அவசரப்பட்டு விட்டோமோ-ன்னு, அரசன் தந்த வாளால் தன்னையே மாய்த்துக் கொள்ளத் துணிய...
தென்னாடுடைய ஈசன், வானின்று வாக்காக வெளிப்பட்டு, அவர்கள் இருவரையுமே அரவணைத்துக் கொண்டார்!

சுபம்-ன்னு சொல்லிடுவேன்-ன்னு பார்த்தீங்களா? கதை இன்னும் முடியலை! :)


திறை வாங்க வந்த அரசுக் குழு, போரில் இறந்து போன பகைவர்கள் தலையை எல்லாம் அரசரின் முன்னே அணிவகுப்பு காட்டியது! அதானே அந்நாளைய "வீர லட்சணம்"? ஆனால் புகழ்ச் சோழருக்கோ தூக்கி வாரிப் போட்டது! ஏன்?

அந்தத் தலைகளுக்கு நடுவில் ஒரு சடாமுடித் தலை! சிவனடியார்?
ஆகா! அரசு வீரர்கள், போரில் ஈடுபடாத பலரையும் அல்லவா, எல்லை மீறி வெட்டி வீழ்த்தி இருக்கிறார்கள்!! ஐயோ! யார் இந்த அடியார்? என்ன தொண்டில் இருந்தாரோ? துண்டாகி வந்து நிற்கிறாரே-ன்னு கலங்கினார் புகழ்ச் சோழர்!

திறை மறுத்த அதிகனோடு தானே போர்? அப்புறம் ஏன் இப்படி ஆனது?
அடப் பரவாயில்லை விடுங்க! ஏதோ Judgemental Error! விபத்து-ன்னு எடுத்துக்க வேண்டியது தான்!
இதுக்கெல்லாம் கலங்கிட்டு நிப்பாங்களா? பேசாமல், திறைப் பணத்தை எண்ணுகிற வழியைப் பாருங்க! :) அப்பறமா அவங்க குடும்பத்துக்கு நிவாரண நிதி-ன்னு கொஞ்சம் கொடுத்து சரி பண்ணிக்கலாம்!! :(

புகழ்ச்சோழர் தீ மூட்டச் சொன்னார்! சரி, ஏதோ சிவனடியாருக்கு இறுதி மரியாதை ஈமச் சடங்கு தான் செய்கிறார்-ன்னு பார்த்தால்...
யாரும் எதிர்பார்ப்பதற்குள், குபுக்-கென்று தீயுள் பாய்ந்து ஆயுள் முடித்துக் கொண்டார்!
மன்னவன் காக்கும் தென்புலக் காவல்
என்முதல் பிழைத்தது! கெடுக என் ஆயுள்!
- என்று, அன்று கண்ணகி முன் வீழ்ந்த மன்னனின் இரத்தமோ இவர்? அவனோ பாண்டியன்! இவரோ சோழர்!

புகழ்ச் சோழர், மெய்யாலுமே, "புகழ்" சோழர் ஆனார்! ஈசனிடம் "புகல்" சோழர் ஆனார்!
மூர்த்தி நாயனார் திருவடிகளே சரணம்!
புகழ்ச் சோழ நாயனார் திருவடிகளே சரணம்!

அடியவர்கள் வாழ்வுக்கு...என்றுமே...தலை வணங்குவோம்! மனம் வழங்குவோம்!
Read more »

Friday, July 23, 2010

விருந்துக்கு அழைத்து வெட்டிப் போட்ட சிவ "பக்தர்"!

"பதிவு எழுதி ரொம்ப நாளாச்சி! எப்படி எழுதணும்-ன்னே மறந்து போச்சி! இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :)"

"என்னாது? எப்படி எழுதணும்-ன்னே மறந்து போச்சா? ஆனா எப்படி தலைப்பு வைக்கணும்-ன்னு மட்டும் மறந்து போகலை போல?" :)

"ஹா ஹா ஹா! இன்னிக்கி பதிவு போட்டே ஆகணும்! ஏன்-ன்னா, இரண்டு நாயன்மார்களின் நினைவு நாள்!"

"ஓ! சரி...அது என்ன 'விருந்து கொடுத்து வெட்டிப் போட்ட நாயன்மார்'? - யாரு? சிறுத்தொண்டரா? பிள்ளைக் கறி எல்லாம் கொடுத்தாரே? அவரா?"

"இல்லையில்லை! இவரு வேற! அவரும் விருந்தினரை வெட்டி எல்லாம் போடலையே! விருந்தினரா வந்த சிவபெருமானுக்குத் தன் மகனையே அல்லவா கொடுக்கத் "துணிஞ்சார்"! ஆனா, நாம இன்னிக்கு பார்க்கப் போறது வேற ஒருவரை! உம்ம்ம்...சரியாச் சொல்லணும்-ன்னா வேற இருவரை!"
1. கோட்புலி நாயனார்
2. கலிய நாயனார்

இருவருக்கும் இன்று தான் குரு பூசை(நினைவு நாள்)! ஆடியில் கேட்டை (Jul-22-2010)! பார்க்கலாமா....என்ன விருந்து, என்ன வெட்டு-ன்னு? :)
இன்றைய "குடும்ப" அரசியல் தலைவர்கள் பலருக்கும், இந்த நாயன்மார் கதை, ஒரு நல்ல பாடம்!



நாட்டியத்தான் குடி என்னும் ஊர்! திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வழியில் உள்ளது! அதில் சைவ வேளாளர் மரபில் தோன்றியவர் கோட்புலி!
பிள்ளைப் பருவத்திலேயே வீரம் அதிகம்! அதனால் விவசாயத்தில் அதிக நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை! சோழன் படையில் சேர்ந்தார்!

கொஞ்ச நாளிலேயே சில பல போர்கள்! விறு விறு என்று உச்சத்துக்குப் போய்விட்டார்! சேனாதிபதியாகவும் ஆகி விட்டார்!
ஆனால் மனத்தில் மட்டும் சிவ-பக்தி! சரியாச் சொல்லணும்-ன்னா சிவ-அன்பு!

கோட்புலிக்கு ஒரு முறை வெளியூர் செல்ல வேண்டி வந்தது! எதுக்கு? போருக்குத் தான்! ஆனா இந்த முறை கொஞ்சம் கடுமையான போர், அதனால் திரும்பி வர நாளாகும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்டார்! அதனால் போகும் முன்னே, ஒரு கூடு கட்டினார்!

என்ன கூடு? நெல் கூடு தான்!
குதிர்-ன்னு கிராமத்தில் சொல்லுவாய்ங்க! நெல்லுக் குதிர்! நெல்லு, ஈரம் பூத்துப் போகாமல், குதிரில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்!

திரும்பி வரும் வரை ஆலயத்துக்கான நெல்லுப் படி! அதைத் தான் கூடு கட்டி வைத்தார்! அவனவன், தான் ஊருக்குப் போகும் போது, தனக்குக் கட்டுச் சாதம் கட்டிக்கிட்டுப் போவாங்க! இவரு ஈசனுக்குக் கட்டுச் சாதம் கட்டுறாரு! ஏன்? = எது வந்தாலும் ஈசனுக்குப் பசி வரக் கூடாது!!

அட, ஈசனுக்குப் பசி வருமா? உலகத்துக்கே படி அளக்கறவனுக்குப் பசியா??-ன்னு அறிவாளர்கள் கேட்பாங்க! ஆனா அன்பாளர்கள்?
அதான் முன்பே சொன்னேன்! "சைவ-பக்தி" வேறு! "சிவ-அன்பு" வேறு!
அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லவே இல்லை! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

Even "simple" looks "beautiful", when seen through "Eyes of Love"!
Even the Lord may look hungry, when seen through "Eyes of Love"!


ஆலயத்தில் ஈசனுக்கு அமுதுபடியாகும் நெல்லைக் கூடு கட்டி வைத்தவர், அப்படியே போயிருக்கக் கூடாதா? தன் சுற்றத்தாரை எல்லாம் கூப்பிட்டார்!
தான் சரியா இருந்தாலும், குடும்பம் நடுவால புகுந்து அரசியல் பண்ணுடிச்சின்னா? அப்பவே இந்தப் பயம் அரசியலாருக்கு இருந்திருக்கு போல! :)

"இது ஈசன் அமுதுப்படிக்கு அளந்து விட்ட நெல்! இதில் இருந்து தான் அடியார்களுக்கான தினப்படி அன்ன தானமும் நடத்தப்படுகிறது! எனவே எக்காரணம் கொண்டும் இதில் நீங்கள் கை வைக்கக் கூடாது!
உங்கள் ஆத்திர-அவசரத் தேவைக்கு என் குடும்பக் களஞ்சியத்தில் இருந்து கடனாக எடுத்துக் கொள்ளலாம்! ஆனால் இது திரு இறையாக் கலி! பொதுச் சொத்து! இதில் உங்களுக்கு உரிமை இல்லை! அறவே இல்லை!"

கோட்புலி போன முன்றே மாதத்தில், ஊரில் பஞ்சம் வந்து விட்டது! நாள்பட நாள்பட பற்றாக்குறை அதிகரித்தது!
இதே இந்தக் காலம்-ன்னா.....சுற்றத்தார் பலருக்கு சும்மாவே பத்திக்கும்! பத்தாக்குறையின் போது பத்திக்கலீன்னா எப்படி?

ஆலயத்துக்குச் சென்று அந்த நெல்லை அடவாடியாக அள்ளிக் கொண்டு வந்தார்கள் குடும்ப உறவினர்கள்!
ஆலயப் பூசைக்குப் பின், மக்களுக்குத் தரப்படும் உணவை, வரிசையில் நின்று அவங்களும் வாங்கிச் சாப்பிட்டு இருக்கலாம் தான்! ஆனால் பற்றாக்"குறை"யிலும் கெளரவம் "குறை"யக்கூடாது நினைச்சிட்டாங்க போல!

"நம்ம ஆளு அளந்து விட்ட நெல்லு தானே! நமக்கில்லாத உரிமையா? :) வேணும்-ன்னா பஞ்சம் தீர்ந்தாப் பிறகு, இதே அளவைத் திருப்பிக் கொடுத்துக்கலாம்! ஆனா இப்போ குடும்ப உரிமையை நிலைநாட்டி எடுத்துக் கொள்வோம்!" - இப்படி எடுத்து விட்டனர் சுற்றமும், நட்பும்!

கோட்புலி, பல மாதங்கள் கழித்து, திரும்பி வந்து பார்த்தால்...
சிவபூசைக்கு உணவு இல்லை!
ஆலயத்தில் வழிபாடு இல்லை!
பிரசாதமாச்சும் உண்டு பசியாறிய பல அடியவர்கள் பஞ்சத்தால் இறந்து கிடந்தார்கள்!

ஆனால்.....நம்ம சுற்றமும் நட்பும், அப்பவும் "குடும்ப நியாயம்" பேசிக் கொண்டிருந்தார்கள்!


இவர்களைப் பேசிச் சரிபடுத்த முடியாது என்று புரிந்து கொண்டார் கோட்புலி!
எடுத்ததும் இல்லாமல் எகத்தாளம் வேறு!
அத்தனை பேரையும் விருந்துக்கு அழைத்தார்! வெற்றி விருந்து!

"பஞ்சத்தில் நீங்கள் அனைவரும் ருசியாகச் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்! உணவை அயலூரில் இருந்து தருவிக்கிறேன்! அப்படியே போரில் வென்ற பரிசுப் பொருட்களில் கொஞ்சம் பெற்றுச் செல்லுங்கள்! என் வெற்றியைக் கொண்டாட அனைவரும் விருந்துக்கு வாருங்கள்! சிவ சிவ!!"

உள்ளே திரண்ட அத்தனை பேரும் விருந்தில் களித்து இருக்க...
வெளியே வாயில் காப்போரிடம்...
அத்தனை கதவுகளையும் அடைக்கச் சொன்னார் கோட்புலி!

மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி, மாமி, அக்கா பெண், அக்கா பிள்ளைகள்-மருமகன்கள்...அண்ணன்-தம்பி...பேரப் பிள்ளைகள்....
இன்னும் குடும்பம்-ன்னு சொல்லி ஒட்டியும் உறவாடியும் உண்டவர்கள் அத்தனை பேரையும் வாள் வீசி வெட்டினார்!
உண்டவர் எல்லாம் கண்டம் துண்டம்!!


சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்
இவரோ வேண்டியவர்களே தனக்கு வேண்டாம் என்றல்லவா முடிவு கட்டி விட்டார்! இனமாவது? புணையாவது??
இப்படித் தன் குடும்பமே தவறு இழைத்து, ஊருக்கு இட்ட உணவை அபகரித்து, இன்று தன் சினத்தால் ஒட்டு மொத்தமாய்த் தழைக்காமல் போய் விட்டதே என்று தன்னந்தனியாக கோட்புலி அழ...

ஈசன் அவரை அங்ஙனயே தோன்றி, அவ்வண்ணமே அணைத்துக் கொண்டான்!
"உன் கை வாளினால் உறுபாசம் அறுத்த சுற்றத்தவர், பிற உலகம் முதலிய பூமிகளிற் புகுந்து, கருமம் தொலைத்து, பின்னர் நம் உலகம் அடைய,
நீர் இந்நிலையிலேயே நம்முடன் அணைக, நம் உலகம் அடைக!" என்று மொழிஞ்சருளினார்!


விருந்துக்கு அழைத்து வெட்டிப் போட்டவர்! = கோட்புலி "நாயனார்" ஆனார்!

இதற்கெல்லாம் முன்பே, நன்றாக வாழ்ந்த காலத்தில்....
கோட்புலி, சுந்தரரைத் தம் ஊருக்கு அழைத்து வந்து, தம் ஊர் இறைவன் மேல் அவரைப் பாட வைத்து, சிங்கடி-வனப்பகை என்ற தன் இரு மகள்களையும் சுந்தரரின் சைவப் பணிக்குக் காணிக்கை ஆக்கினார்!
பிள்ளை இல்லாத சுந்தரரோ, அவ்விருவரையும் தன் சொந்த மகள்களாகப் பாவித்து, தம்மைத் தாமே, சிங்கடி அப்பன், வனப்பகை அப்பன் என்று பாடிக் கொண்டார்! (ஏழாம் திருமுறை-திருநாட்டியத்தான் குடி)

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத்தான் குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற்று அறுமே!

பின்னாளில்...கோட்புலி, இவ்வாறு சுற்றத்தைக் கொன்று தானும் இறந்த பின்பு...சுந்தரர் பழசை எல்லாம் நினைத்து மீண்டும் அவரைப் பதிக்கிறார்!
"அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்"
என்று நாயன்மார்களுக்கு எல்லாம் தலைமையாகக் கருதப்படும் சுந்தரர், திருத்தொண்டத் தொகையில் கோட்புலியைப் பாடிப் பரவுகிறார்!

(பின் குறிப்பு: இங்கு பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் பலவும், சேக்கிழாருடைய பெரிய புராணத்தின் படியோ, வெளியிற் கிடைக்கநாயன்மார் கதைப் புத்தகங்களின் படியோ இருக்காது!
சேக்கிழார் நூலில் வேறு பல காரணங்களுக்காக, சில நாடகத் தன்மை கலந்து, வன்மையாக இருக்கும்! இக்காலப் பார்வைக்கும் சரியாகப் படாது! நான் இங்கு எடுத்துக் கொண்டது மூல நூலான திருத்தொண்டர் திருவந்தாதி மட்டுமே)



கலிய நாயனார் குரு பூசையும் இன்னிக்கு தான்-ன்னு சொன்னேன் இல்லையா?
கலிய நாயனார், நம்ம சென்னைக்காரர் - திருவொற்றியூர் பக்கம்!

கிடைக்கும் வருவாயில், திருவொற்றியூர்க் கோயிலில் தினமும் விளக்கேற்றி, பெரிய ஆலயத்தின் இருளில் பக்தர்கள் சிக்கிக் கொள்ளாமல், விளக்கு வெளிச்சத் தொண்டு செய்து வந்தவர்!
பொருளெல்லாம் கரைஞ்ச பின்னும், இதுக்குன்னே ஓரு எண்ணெய் ஆலையில் வேலை வாங்கிக் கொண்டு, விளக்கு கைங்கர்யம் மட்டும் விடாமல் செய்து வந்தார்!

ஒரு நாள்....
துளி எண்ணெய்க்கும் காசில்லாமல் போகவே, ஒரு கட்டத்தில் ஆலயத்தில் இருள் பரவக் கண்டு, பதபதைத்துப் போனார்!
சின்ன பிச்சுவாக் கத்தியால், தன் கழுத்து இரத்தம் குபுகுபு என்று எடுத்தாச்சும் விளக்கில் ஊற்றுவோம் என்று கீறிக் கொள்ள....

"நில்லு கலியா நில்லு!"....என்று ஒரு கரம் தடுக்க...அந்தக் கரத்தில் மானும் மழுவும் சோதியும் ஆதியும்...
இப்படியும் ஒரு ஜீவனா?....... என்று அந்தச் சீவனைச் சிவமே தாங்கிக் கொண்டது!


* பொன்னம்பலத்தில், "சைவப் பிடிப்பாளர்கள்"....எண்ணெயும் ஊற்றி வழுக்கி விழச் செய்வார்கள்!
* மன-அம்பலத்தில் "சிவ அன்பாளர்கள்"....தன் இரத்தமேயும் எண்ணெயாய் ஊற்றித் தருவார்கள்!
ஒன்று சமயப்-பிடிப்பு! இன்னொன்று சிவப்-பிடிப்பு! நாம் சிவத்தைப் பிடிப்போம்!

ஆர் வல்லார் காண், அரன் அவனை? அன்பென்னும்
போர்வை அதனாலே போர்த்தி அமைத்து - சீர்வல்ல
தாயத்தால் நாமும், தனி நெஞ்சினுள் அடைத்து,
மாயத்தால் வைத்தோம் மறைத்து!!!

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? என்று பெருமாள், ஈசன் மேல் கொண்ட "அன்புடைமையை" மாணிக்கவாசகர் வியந்து வியந்து பாடுகிறார்!
ஆழியான் அன்புக்குரிய ஈசனை....
நாமும் தனி நெஞ்சினுள் அடைத்து....
மாயத்தால் வைப்போம் மறைத்து...
நேயத்தால் வைப்போம் நிலைத்து!!


கலிய நாயனார் திருவடிகளே சரணம்!
கோட்புலி நாயனார் திருவடிகளே சரணம்!
Read more »

Sunday, January 25, 2009

தேவாரம்! ஸ்ரீரங்கம்! கருவூர் சித்தர்! இராஜராஜ சோழன்!

வாங்க மக்களே! இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்! அங்கோ, உங்களுக்கு நீண்ட விடுமுறை வார இறுதி! இங்கோ, எங்களுக்கு ஓயாத உழைப்பு! :)
வாங்க, தேவாரப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்னிக்கி ஒரு சூப்பர் தேவாரம் பார்க்கலாம்! கூடவே பாடவும் சொல்லிக் கொடுக்கறரு ஒருத்தரு! அதோட ஒரு சூப்பர் கதையும் பார்ப்போம்!

தேவாரப் பதிவுகளில்....இது வரை
* சம்பந்தர் - முதல் தேவாரம்,
* அப்பர் - ஆணும் பெண்ணுமாய் பூசை,
* சுந்தரர் - நண்பனை மறந்தாயோ?,
* மணிவாசகர் - தமிழ் அர்ச்சனை!,
* காரைக்கால் அம்மையார் - பெண் தேவாரம் - Icon Poetry!
என்று சில பதிகங்களைப் பார்த்தோம்!

அப்படியே...
* தமிழ் ஈழம் பற்றிப் பாடிய நாயன்மார்கள்!
* நாயன்மார்கள் 63 or 72?
என்றும், தொகையடியார் பற்றிய சில குறிப்புகளையும் பார்த்தோம்! மாணிக்க வாசகர் அறுபத்து மூவருள் ஒருவர் இல்லை என்ற ஒரு தகவலும், அதற்கு சில பெரியோர்கள் அளித்த விளக்கமும் இன்னும் பல் சுவை கூட்டின!

இன்னிக்கி பார்க்கப் போறது, கருவூர் சித்தரின் தேவாரம்!

ஆகா...கருவூர் சித்தரா? அவர் தேவாரம் எல்லாம் கூடப் பாடியிருக்காரா என்ன? சித்த புருஷர்கள், பொதுவாகக் கோயில் பற்றி எல்லாம் பாட மாட்டாங்களே? நட்ட கல்லும் பேசுமோ?-ன்னு, "இடறுவது போலவும், அலர்ஜி போலவும்" தானே அவங்க பாடுவாங்க? "குழப்பவாதம்" போல் தொனிக்குமே அவங்க ஆன்மீகம்? அவங்க எப்போ தேவாரம் எல்லாம் பாடினாங்க? ஹா ஹா ஹா! :)

அட, கருவூர் சித்தர் தேவாரம் பாடியிருக்காருங்க! பார்க்கலாமா?
ஆனால் அதற்கு முன்னாடி ஒரு சிறு குறிப்பை மனசில் வாங்கிக்குங்க! முன்பே சொன்னது போல்...
* நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பாடிய அத்தனை பேரும் ஆழ்வார்கள் பட்டியலில் இடம் பெற்று இருப்பார்கள்! (அமுதனார் என்ற பின்னாளைய கவிஞரைத் தவிர)!
* ஆனால், 63-உள் இருப்பவர்கள் அத்தனை பேரும், தேவாரம் பாடி இருக்கணும்-ன்னு அவசியமில்லை! அதே போல தேவாரம் பாடியதாலேயே, 63-உள் வைக்கப்படணும் என்ற அவசியமும் இல்லை!

* பாடணும் என்ற அவசியம் இல்லாமல், தொண்டு மட்டுமே செய்தவர்களும், 63 நாயன்மார்களுள் வைக்கப்பட்டது சிறப்பு! = எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது தான்!
* அதே போல், சேந்தனார், கருவூர் தேவர் போன்றவர்கள் 63-உள் இல்லை! ஆனால் இவர்கள் தேவாரம் பாடி உள்ளார்கள்!


அன்றைய சோழ/சேர நாடுகளின் பெரிய ஊர் கருவூர்! இன்னிக்கி கரூர்! திருச்சியில் இருந்து ஒன்னரை மணி நேரப் பயணத்தில் போயிறலாம்!
அங்கு பிறந்தவர் தான் நம்ம கருவூரார்! சிற்பங்கள் செய்யும் விஸ்வகர்மா குலத் தம்பதியர்க்கு மகவாய்ப் பிறந்தார்! தில்லை நடராஜப் பெருமானின் திருவுருவம் இவர் செய்ததே என்று சொல்லும் ஒரு சுவையான கதையும் உண்டு! இன்று சொல்லப் போவதில்லை! இன்னொரு நாள்!

* இவர் குரு = போகர் சித்தர்! (நவபாஷாண முருகனைத் தந்தவர்)
* இவர் சீடர் = இடைக்காட்டுச் சித்தர்! (தாண்டவக் கோனே என்று பாடல்கள் பாடியவர்)

குருவான கருவூரார், சீடரான இடைக்காடர் இருவருமே சித்தர்கள் அல்லவா! சித்தர்கள் யோக மயமான சிவபெருமானைத் தானே வணங்குவார்கள்? பெருமாளை வணங்குவார்களா என்ன? :)
நம்மாழ்வார் திருவாய் மொழியைத் "தமிழ் வேதம்" என்று முதலில் பாராட்டியதே, சிவச் செல்வரான இடைக்காட்டுச் சித்தர் தான்! இதோ!

சைவ நூல்களையோ, ஏனைய வைணவ நூல்களையோ சொல்லாது, நம்மாழ்வாரை மட்டும் "தமிழ் வேதம்" என்றார்கள் சித்தர்கள்! வேதத்தை, அதன் சாரம் மாறாமல், தமிழ்ப் படுத்தியதால் தான், "தமிழ் வேதம்" என்று இதை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னார்!
கருவூர் சித்தரும், திருவரங்கத்து நம்பெருமாளைப் போற்றிப் பாடி, அவர் கையால் பிரசாதம் வாங்கினார்! அப்படியே ஒரு வம்பிலும் சிக்கிக் கொண்டார்! பதிவின் இறுதியில் பார்ப்போம் :)



அன்று தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்)! மாமன்னன் இராசராசன், இனி வரப் போகும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் சேர்த்தே தந்த கலைப் பொக்கிஷம்!

ஆனால் அன்று பார்த்து, சிவலிங்கம் நிறுவனம் ஆகவில்லை! (பிரதிஷ்டை)!

பெருவுடையார் = பேருக்கு ஏற்றாற் போலே பெரிய பெரிய உடையார் தான்! பெரிய சிலை அல்லவா! அதற்கு முன்பு அப்படி ஒரு சிலையைச் சிற்பிகளும் செய்ததில்லை! அப்படியே செய்தாலும், அதைக் கருவறைக் குழியில் இறக்கியதும் இல்லை! அனுபவம் இன்மை! ஆனால் கும்பாபிஷேக (மூர்த்தி ஸ்தாபன) நாள் அதுவுமா இப்படி ஒரு தடங்கலா?

சிவலிங்கத்தை உள்ளே இறக்கிய சில நிமிடங்களில், கனம் தாங்காமால், சிவலிங்கம் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டதே! கோணலான சிவலிங்கமா?
ஐயகோ! இராஜராஜனுக்கு நெஞ்சே வெடித்து விடும் நிலைமை! கோயிலைப் பார்த்துப் பார்த்துக் கட்டியது இதற்குத் தானா?
அஷ்ட பந்தனம் என்னும் அந்தக் கலவை கெட்டிப் பட மாட்டேங்கிறது! தலைமைச் சிற்பி, இராஜராஜப் பெருந்தச்சரான குஞ்சரமல்லனும் எவ்வளவோ போராடிப் பார்க்கிறார்! ஹூஹூம்!

இதோ, கருவூரார் வந்து நிற்கிறார்! இராஜராஜனின் பெருமதிப்பைப் பெற்றவர்!

தாம் கொண்டு வந்த மூலிகைப் பொருட்களைக் காய்ச்சி, கலவை செய்கிறார் கருவூரார்! அந்தணர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் பணியில் ஈடுபடுத்துகிறார்! புதிய கலவை காய்ச்சப்பட்டு, தொட்டி தொட்டியாக ஊற்றப்படுகிறது! கொதிக்கக் கொதிக்க, கருவறைக் குழிக்குள் ஊற்றப்படுகிறது!
ஆகா! சிவலிங்கத்தின் மேலேயே கால் வைத்து ஏறிவிட்டாரே கருவூரார்! அதை முட்டி, மோதி, கட்டி, இழுத்துச் சமநிலைப் படுத்த...மருந்து இறுக, இறுக...

தஞ்சைப் பெருவுடையார் நின்று விட்டார்! அஷ்டபந்தன மருந்து நின்று விட்டது! அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்!!
மன்னன் மனங்குளிர, மக்கள் மனங்குளிர, அடியார்கள் மனங்குளிர, ஆண்டவனும் மனங்குளிர்ந்தான்!


பல காலம் கழித்து, தஞ்சையில் இருந்து கிளம்புகிறார் சித்தர்! பூலோக வைகுந்தம் என்ற போற்றப்படும் திருவரங்கம் நோக்கிச் செல்கிறார் கருவூர் சித்தர்! தன் சீடன் இடைக்காட்டுச் சித்தன், திருவாய்மொழி நூலை அப்படிச் சிலாகிக்கிறானே! தமிழ் வேதம்-ன்னு வேற சொல்லுறான்!

அதுவும் வேதம் ஓத, குல உரிமை வேண்டும்-ன்னு சொல்லப்படுகிறதே! அப்படி இருக்க, ஒரு வேளாளச் சிறுவன்-மாறன் நம்மாழ்வான், தமிழ் வேதம் செய்தானா? அப்படி என்ன தான் இருக்கு அதுல? இன்னிக்கு அதையும் பார்த்து விடலாம்!

அவர் திருவரங்கம் வந்து சேர்ந்தது தான் தாமதம்.......
* தமிழோசை வேகமாய் முன் செல்ல,
* இறைவன் பரபரத்து, தமிழின் பின் செல்ல,
* இவர்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க மாட்டாமல், வேத கோஷ்டி இறைவன் பின்னால் ஓடி வர...

வீதியுலாவில், நம்மாழ்வாரின் சந்த ஓசையில் பெருமாளே மயங்கி, மாறனுக்குப் பின்னாலே செல்கிறான்! தொண்டர்கள் தலைவனைப் பின் தொடர்வார்கள்! இங்கே தலைவனோ, பயபக்தியுடன், தொண்டர்களைப் பின் தொடர்கிறானே?
அநதக் காட்சியைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கிறார்! காதுக்கு நேராகக் கேட்கிறார் சித்தர்!

அடங்கெழில் சம்பத்து -- அடங்கக் கண்டு "ஈசன்"
அடங்கெழில் அஃதென்று -- அடங்குக உள்ளே!
உள்ளம் உரை செயல் -- உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை -- உள்ளில் ஒடுங்கே!!
அற்றது பற்றெனில் -- உற்றது வீடு, உயிர்
செற்றது மன்னுறில் -- அற்றிறை பற்றே!!!

ஈரடிகளில் ஈர்த்து விட்டதே! சகல வேத ஞானமும் சட்டென்று புரிந்து விட்டதே! அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை கருவூராருக்கு!
அரவணைத் துயிலும் மாயோன் அரங்கனைக் கண்குளிரத் தரிசிக்கிறார்!

தரிசித்து முடித்து வெளியே வந்தால், அவர் காலடிகளில் ஒரு தாசி விழுகிறாள்...பேரு அபரஞ்சி! பேரழகி! அரங்கனைத் தரிசித்த மாத்திரத்தில், இப்படித் தான் ஆளனுப்பிக் கள்ளத்தனம் செய்வானோ? :) அவளோ சிரிக்கிறாள்!

கரு ஊரில் சிக்காத கருவூரார், என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையை வீசுகிறார்! சற்று முன் கேட்ட வேத கோஷத்தில், யோக சாதனையில், தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்கிறாள் இவள்! ஆகா! இப்படியும் ஒரு தாசியா?
பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல், அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது! அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைக்கிறார்!

அடங்குக உள்ளே! உள்ளில் ஒடுங்கே!-ன்னு சித்த புருஷ லட்சணத்தை இப்படி ரெண்டே சொல்லில் சொல்லவும் முடியுமோ?
அவளுக்கு விளக்கத்தை எடுத்துச் சொல்லச் சொல்ல, சித்தருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி! மகிழ்வில் கடவுளையே அதட்டுபவர் அல்லவா கருவூரார்! முன்பு நெல்லையப்பர் படாத பாடு பட்டாரே இவரிடம்! இப்போதும் அதே தொனியில் கருவூர் சித்தர்..."ரங்கா, உன் கழுத்து மாலையை என்னிடம் கொடு"!


தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூரார்-இராசராசன் ஓவியம்


திருக்கழுத்து மாலை! பவழ வாய் கமலச் செங்கண்ணனின் பவழ மாலை கருவூரார் கைகளில் வந்து விழுகிறது!
"அபரஞ்சி, என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய்! இதை என் பரிசாக வைத்துக் கொள்! நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார்! சித்தர்கள் தான் ஓரிடத்தில் இருக்க மாட்டார்களே!

மறுநாள் காலை... கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கப் பழவம்! அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு அடுக்குகிறார்கள்! பஞ்சாயத்து நடக்கிறது!
கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அவள் சொல்ல...பிடி கருவூராரை! ஹா ஹா ஹா! காற்றைப் பிடிக்கத் தான் முடியுமா?

அபரஞ்சி, கருவூராரை மனதால் வேண்டி, "இப்படி விளக்கம் சொல்லி இக்கட்டு கொடுத்து விட்டீர்களே சுவாமி", என்று அழுகிறாள்! கருவூரார் அங்கே மீண்டும் வந்து, மாயக் கள்வனைச் சாட்சிக்கு அழைக்கிறார்!
அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைக்க...திருவரங்கக் கோயில் ஸ்தனத்தார்கள், கருவூராரை நிற்க வைத்துப் பேசியமைக்கு மன்னிப்பு கேட்கிறார்கள்! கருவூரார் பின்னர் கருவூருக்கே திரும்புகிறார்!

கருவூர் சித்தர் காட்டில் போய் இருக்காமல், சமூகத்திலேயே இருந்து விட்டார்! அவர் சொல்லும் கருத்துக்கள் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக இருக்கு!
ஆன்மீகப் போலித்தனங்களை அவர் சாடச் சாட, அவர் மேல் வெறுப்பும், பொறாமையும், பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது! குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் சைவ அந்தணர்கள் சில பேர், அவர் மேல் அதீத பகைமை கொள்கின்றனர்!

கருவூரார் ஒரு துர்வேத நிபுணர் என்று குறுநில மன்னனிடம் ஓதி ஓதி, மனதைக் கரைக்கிறார்கள்! மது-மாமிச படையல் வைப்பவர், வாம பூஜை செய்பவர் என்றெல்லாம் காட்ட வேண்டி, சில அத்வைதிகளே அவர் வீட்டில், மது-மாமிசம் ஒளித்து வைக்கின்றனர்! ஆனால் சோதனையில் அவை யாகத் திரவியங்களாக மாறி இருப்பது தெரிய வர, அந்த வைதீகர்களுக்குப் பெருத்த அவமானம்!

அதிக ஆள் பலம், சிஷ்ய பலம் இல்லாத கருவூராரை எளிதாக அடித்துத் துவைத்து விடலாம் என்று அந்தப் போலி அந்தணர்கள் சிலர் கிளம்ப, சித்தர் சிரிக்கிறார்! பயந்து ஓடுவது போல் நடித்து ஆட்டம் காட்டுகிறார்! கரூர் ஆனிலையப்பர் கோயிலுக்குள் ஓடுகிறார்! பசுபதீஸ்வரர் = ஆனிலையப்பர்!
அவர் கருவறைக்கு உள்ளேயே நுழைவதைக் கண்டு இவர்கள் இன்னும் சீற்றம் அடைய, "ஆனிலையப்பா!" என்று கூவிச் சிவலிங்கத்தை இறுக்கித் தழுவிக் கொள்கிறார் கருவூரார்!

தஞ்சைப் பெரிய கோயிலில், கருவூர் சித்தர் சன்னதி!


கருவில் ஊறாக் கருவூரார், இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி!
இன்றும் ஆனிலையப்பர் கோயிலில் கருவூராரின் சிற்ப வடிவம் உள்ளது!
தஞ்சை பெரிய கோயிலிலும் அவரது சிலை வடிவம் பின்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது!


வாங்க, கதை முடிந்து, தேவாரத் தமிழிசை கேட்போம்! தேவாரத் தொகுப்பில், கருவூரார் பாடல்கள் ஒன்பதாம் திருமுறை!

பத்து சிவத் தலங்களைப் பாடுகிறார் சித்தர்! இராஜராஜ சோழன் பால் வைத்த அன்பால், தஞ்சை இராச ராசேச்சரம், கங்கை கொண்ட சோழேச்சரம் ஆகிய தலங்களையும் பாடியுள்ளார்! மெட்டும், ராகங்களும் தானாகவே அமையும் இனிய இசைப் பாடல்கள்! "திருவிசைப்பா" என்று போற்றப் படுகிறது!

அதில் ஒன்றைக் காண்போம்! கேட்போம்! இதோ சொல்லிக் கொடுக்கிறாரு, கூடவே சொல்வோம்!



பவளமே மகுடம்! பவளமே திருவாய்!
பவளமே திருவுடம்பு! அதனில்

தவளமே களபம்! தவளமே புரிநூல்!
தவளமே முறுவல் ஆடு அரவம்!


துவளுமே கலையும்! துகிலுமே ஒருபால்!
துடியிடை இடமருங்கு ஒருத்தி!
அவளுமே ஆகில், அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே!


* ஈசனின் ஜடா மகுடம், செவ்விதழ், உடம்பு = மூன்றுமே பவளம்! அப்படிச் செக்கச் சிவந்த சிவப்பு!
* ஈசனின் மேனியில் பால் வெண்ணீறு, முப்புரி நூல், சிரித்து வளையும் பாம்பு = மூன்றுமே தவளம் (வெண்மை)! அப்படிப் பால் வெளுத்த வெளுப்பு!
இப்படிச் சிவப்பும் - வெளுப்புமான கலவையில் சிவபெருமான் ஒரு பக்கமாய் மின்ன....

* துவளும் மேகலை (ஒட்டியாணம்), சேலைத் துகில், துடிக்கும் இடுப்பு = இப்படி மூன்றுமான முக்கண்ணி, "ஒருத்தியாய்" நிற்கிறாள்! = அவள் இந்தப் புறம், அவனின் அந்தப் புரம்!
* அவளே நின்று விட்ட படியால், இனி அவரும் நின்று விடுவார்! எங்கே?
திருக்களந்தை என்னும் ஆதித்தேச்சரம்! நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊர்! அதுவே திருக்களந்தை!

அங்கு தான் இப்படி ஒரு சிவ-சக்தி தரிசனத்தை நமக்குக் காட்டுவிக்கிறார் கருவூர் சித்தர்!
பவளமே மகுடம்! தவளமே களபம்!!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


கருவூர் சித்தர் திருவடிகளே சரணம்!!
Read more »

Tuesday, November 18, 2008

தேவாரம் பாடிய "ஒரே" பெண் - Icon Poetry!

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?
நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!

மூன்று பெண் நாயன்மார்களில்...
* இசை ஞானியார் = சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அம்மா!
* மங்கையர்கரசியார் = பாண்டியன் மனைவி!
ஆனால் இவர்கள் இருவரும் பாட்டாக எதுவும் எழுதவில்லை! சுந்தரர் அம்மா என்பதற்காகவும், மதுரைக்கு வாதம் செய்ய சம்பந்தரை அழைத்து வந்தமைக்காகவும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்! அவ்வளவு தான்!

ஆனால் இது போன்ற செல்வாக்குப் பின்புலம் ஏதும் இல்லாமல்...
ஒரு பேதைப் பெண் நாயன்மார் ஆனார்!


கணவன், "இன்னொரு மாம்பழம் எங்கே என்று கேட்டால்", "அதாங்க இது" என்று நகைச்சுவையாகவோ,
இல்லை "ருசியா இருந்தது; அதான் நானே தின்று விட்டேன்" என்றோ பொய் சொல்லக் கூடத் தெரியாத பேதை!

"சிவனடியார்க்கு கொடுத்து விட்டோமே, இப்போது கணவன் இன்னொன்றும் கேட்கிறாரே, என்ன செய்வது?" என்று சற்று நேரம் கலங்கி நின்ற சாதாரணப் பெண் இவள்! "ஈசனே, மந்திர மாங்கனி தா"-என்று மேஜிக் எல்லாம் செய்து காட்டவில்லை! தானாக வந்தது! ஈசனின் எண்ணமோ ஏதோ, கனி வந்தது! வாழ்க்கை போனது!

கணவன் முகக் குறிப்புக்கு நடப்பவள்! ஆனால் கணவன் இவளின் அகக் குறிப்புக்கு நடந்தானா? வெட்கக்கேடு! :(



மனைவி புனிதள் என்றால், கணவன் தள்ளிக் கொள்வானா?
கணவன் புனிதன் என்றால், மனைவி தள்ளிக் கொள்வதில்லையே!


யோகம், வேள்வி, சரியை, கிரியை என்று எல்லாம் அவன் செய்து முடித்த பின்னர், அவளுடன் "அதுவும்" செய்கிறானே! அவளும் குடும்பம் நடாத்திக் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாளே?

இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! போதாக்குறைக்கு இளம்பெண் பேரிலேயே "புனித"வதி! கேட்கணுமா?
இவனோ இன்னொருத்தியைக் கட்டிக் கொண்டு, குழந்தையுடன் வந்து நிற்கிறான்! கேட்டால், அந்தக் குழந்தைக்கும் புனிதவதி என்றே "பய-பக்தியுடன்" பெயரும் இட்டானாம்! அடா அடா அடா!

உற்றார், உறவினர், சமூகம் யாரும் எதுவும் கேட்க முடியாது!
கேட்கப் போனாலும், இளம்பெண் புனிதா தான் "புனிதள்" ஆயிற்றே! குடும்பம் நடத்த முடியுமா? கும்பிடத் தானே முடியும்? எல்லாரும் காலில் வீழ்ந்து கும்பிடுங்கள்! :(((

தில்லை இறைவனின் மனைவியும் ஒரு புனிதள் தான்! அந்தப் புனிதள் தான் சிவ-"காமி" ஆகவும் இருக்கிறாள்! குடும்பமும் நடத்துகிறாளே!
அதைப் பாடிப்பாடிக் கும்பிடும் ஒரு சமூகத்துக்கு, புனிதவதியின் நியாயம் மட்டும் தெரியாமல் போனது ஏனோ?

ஆனால் இன்னிக்கும் காரைக்காலில் "மாங்கனி உற்சவம்" மட்டும் வெகு ஜோராக நடத்துகிறார்கள்! அதில் பரமதத்தன் என்னும் கணவனுக்கு மாலை மரியாதைகள் செய்து, பல்லாக்கில் ஏற்றி, அவனை ஆற்றங்கரை விடு விழா வேறு நடத்துகிறார்கள்! :(( - இது இந்தக் காலத்திலும் தேவையா?


புனிதளக்குத் தான் மண வாழ்வு ஒவ்வாதே! அவளும் வேண்டிக் கொண்டாள்! ஈசனும் உடன்பட்டு விட்டான்! பேயாய் மாறி விட்டாள்!
ஒரு இளம்பெண், இன்னும் அம்மா கூட ஆகவில்லை...அவள் பேயாக மாறித் திரிகிறாள் என்றால்?....சுடுகாட்டு வாய்க்கரிசியை உண்டு பசியாறுகிறாள் என்றால்? அங்கேயே வாழ்கிறாள் என்றால்?...இருவது வயசு தான்! :((
பதிகத்தைப் படிச்சிப் பாருங்க! அந்தக் காலப் பேய் மகளிர் பற்றி அம்மையார் பாட்டில் சொல்லுவாங்க! கண்ணுல தண்ணி தான் வரும்!

* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
* ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?
ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?

* ஆணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!
* பெண்ணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?
* இளம் சம்பந்தருக்கு கல்யாண ஏற்பாடு பேசத் துணிந்த சமூகம், இளம் புனிதாவுக்கு மட்டும் சுடுகாட்டு வாச ஏற்பாட்டுக்குத் தான் துணியுமா?

தோழி கோதையின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன்,
தோழி புனிதாவின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்! - புனிதா...உன்னை நினைக்கும் போதெல்லாம் எனக்கு......:(

வைணவ இலக்கியத்தின் - தமிழ் மொழி, சாதி, பெண்மை, சமூகம் - என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!



நாம் அம்மையாரிடம் வருவோம்! யம்மா புனிதா, இனிக் காரைக்கால் "அம்மையார்" என்றே உன்னை அழைக்கிறோம்! ஈசனே உன்னை "அம்மா" என்று அழைத்து விட்டானே! நாங்கள் எம்மாத்திரம்?

காரைக்கால் அம்மையார் = சிறந்த கவிதை, மாறுபட்ட சிந்தனை! தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதன் முதலில் பிரபலப்படுத்தியவர் அம்மையார் தான்! அனைத்து நாயன்மார்களையும் விடக் காலத்தால் முந்தியவர்! முதலாழ்வார்களின் கால கட்டம்! இலக்கியத்தில் வெண்பா மாறி அந்தாதி துவங்கிய கட்டம்!

Iconographic Poetry என்று பின்னாளில் ஆங்கிலக் கவிஞர்கள்/ சிந்தனையாளர்கள் D.H. Lawrence, Sigmund Freud முதலானோர் பிரபலப்படுத்தினர்.

ஆனால் அந்தக் குறியீட்டுக் கவிதைகளை எல்லாம் அம்மையார் எப்போதோ தமிழில் செய்து விட்டார்!
என்ன..... அது தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்துக்குள் ஒளிந்து கொண்டது! அதனால் வெளியில் அதிகமாகத் தெரியவில்லை! அட, ஆன்மீகம் தானே, அதுல பெருசா என்ன இலக்கியம் இருக்கப் போவுது என்ற நம்மவர்களின் "பார்வை"! இன்னிக்கி அதில் ஒன்றைத் தான் நாம் தேவாரப் பதிவில் பார்க்கப் போகிறோம்!

அம்மையார் அத்தனை நாயன்மார்களிலும் காலத்தால் மிகவும் மூத்தவர் என்று சொன்னேன் அல்லவா? சொல்லப் போனால், முதல் தேவாரமே அம்மையாருடையது தான் எனலாம்!
ஆனாலும் முதலில் சிவக்கவி செய்த புனிதாவின் நூல்கள், 11ஆம் திருமுறையில் தான் வைக்கப்பட்டுள்ளது!
* அற்புதத் திருவந்தாதி
* திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
* இரட்டை மணிமாலை

அம்மையார் பாடல்களில் தில்லை பற்றிய குறிப்புகள் எல்லாம் இல்லை! அப்போது ஆரூர் தான் தில்லையினும் சிறப்பு!
பிள்ளையார், முருகன் என்ற மற்ற தெய்வங்களைப் பற்றியும் அவர் எங்கும் குறிக்கவில்லை!

திருவாலங்காட்டைப் பற்றி மட்டுமே சில குறிப்புகள் வருகின்றன! அதுவும் கோயில் போன்ற அமைப்பு எல்லாம் அப்போது இல்லை போலும்! உள்ளே போய் தான் கும்பிட வேண்டும் என்று இல்லாத நிலை! சுடுகாடு, ஆல மரக் காடான ஆலங்காட்டிலேயே ஈசனைத் தரிசித்து மகிழ்கிறார் அம்மையார்!

மாதொரு பாகன் வடிவத்தைத் தான் அம்மையார் மிகவும் போற்றுகிறார்! பெண்மைக்குச் சிவனார் தந்த சமத்துவத்தை, சைவச் சமூகமும் வாயளவில் இல்லாமல், வாழ்க்கையிலும் தர வேண்டும் என்ற அவரின் ஆழ்-மன ஏக்கமோ? என்னவோ?
* இராவணன் செருக்கு அழித்தது,
* முப்புரம் எரித்தல்,
* ஆலகால விடம் உண்ணல்,
* ஈசனின் அடி முடிகளைத் திருமாலும் அயனும் தேடியது என்று ஆங்காங்கு பாடினாலும், அம்மையார் பெரிதும் பாடுவது, ஈசனின் மயான நடனமே!

சாம்பல் பூசுதல், பேய் வாழ் காட்டகத்தே ஆடுதல் என்று ஈசனைக் கேலி பேசுவது போல், அம்மையாரையும் கேலி பேசி இருக்கக் கூடும்! அதான் அம்மையார் பேயாகவே, சிவ கணமாகவே மாறி விட்டார் போலும்!
உளவியல் அறிஞர்களுக்கு அம்மையார் வாழ்க்கை ஒரு பெரும் ஆய்வுப் பொக்கிஷம்!

வாங்க, அம்மையார் நகைச்சுவையிலும் எப்படிக் கலக்குகிறார்-ன்னு இன்னிக்கி பார்க்கலாம்!
* ஆன்மீகத்தில் நகைச்சுவையும் வைத்து,
* அதற்குள்ளே பெரும் உளவியல் கருத்தும் வைத்து,
* குறியீட்டுக் கவிதை ஆக்குகிறார் தேவாரப் பதிகத்தை!



சிவனார் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு என்ன பேருங்க? யாரேனும் சொல்லுங்கள்! அந்தச் சிவப் பாம்புக்குச் சுத்தமா அறிவே இல்லை!

ஹிஹி! இது என்ன தடாலடி? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா? என்று கண்ணதாசன் தான் பின்னாளில் பாடினார்!
அதற்கு கருடனும் தக்க பதில் கொடுத்துருச்சாம்! ஆனால் அம்மையார் சொல்வதைப் பாருங்கள்!

திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)
அது மதி ஒன்று இல்லா அரா!

ஏனம்=பன்றி; மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து=பிறைச் சந்திரன்;
மதி=நிலவு/அறிவு; அரா=அரவு (பாம்பு)

* திருமார்பில் பன்றியின் கொம்பை மாலையாக அணிந்து இருக்கான்!
* திருமுடியில் வெண் திங்களைப் பிறை சூடி இருக்கிறான் பெம்மான்!
* நடுவில், கழுத்தில் இருக்கும் பாம்பு என்ன செய்யுது? மேலும் கீழும் பார்க்குது!

மேலே பார்த்தால் - தலையில் வெண் பிறைச் சந்திரன்!
கீழே பார்த்தால் - மார்பில் வெண் பன்றிக் கொம்பு!
இப்படி மாறி மாறிப் பார்த்து, ஒரு நாளும் எது உண்மையான மதி என்று தேறவே தேறாது! மதி இல்லாத பாம்பே! மதி பெறாத வரை, நீ தேறவே மாட்டாய்!

இவ்ளோ தான் தேவாரக் கவிதை! இதில் குறியீடு என்னன்னு கேக்கறீங்களா?.....
பாம்பு எதற்குக் குறியீடு? உடல்-உள்ளத்துக்கு!
மனித வேட்கைகளுக்கு! மனித சூட்சுமத்துக்கு!
இன்னும் வெளிப்படையாகச் சொல்லட்டுமா? பாம்பு = மனிதனின் "காமம்"!

இன்றும் பல மருத்துவக் கல்லூரிகளின் இலச்சினையைப் பாருங்கள்!
ஒரு தண்டத்தைச் (கொம்பை) சுற்றிப் பாம்பு இருக்கும்! அட, இந்தியாவில் மட்டும் தானா இது? இல்லை, பல வெளிநாடுகளிலும் கூட இது தான் சின்னம்!
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி என்கிறது ஒளவையின் விநாயகர் அகவல்!

இந்தக் காமப் பாம்பு என்ன செய்கிறது? பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

* கீழே இருப்பது சூடான பன்றிக் கொம்பு என்றும் தெரியும்!
* மேலே இருப்பது குளிர்ந்த சந்திரன் என்றும் தெரியும்!
* இரண்டுமே ஒரே தோற்றம்/வளைவு கொண்டவை, ஆனால் பன்றிக் கொம்பு போலி-ன்னு தெரியும்! இருந்தாலும், பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

பன்றிக் கொம்பு = கீழான இச்சை என்றாலும், அதுவும் இந்த மனத்துக்கு வேண்டி இருக்கு!
பிறைச் சந்திரன் = மேலான பொருள் என்று தெரிந்தாலும், மேலே செல்ல எண்ணாது, கீழேயும் பார்த்துப் பார்த்து "மயங்கிக்" கொண்டே இருக்கு!
ஒரு நாளும், இது தான் மதி (சந்திரன்) என்று தேறாது! மதி ஒன்று இல்லாத மனது!

சிவனாரின் அழகான திருக்கோல வர்ணனையில், "முட்டாள் பாம்பே" என்று யாரேனும் சொல்லுவாங்களா? அதான் Icon Poetry! குறியீட்டுக் கவிதை!
* திருக்கோல அழகை வர்ணிப்பது போல் வர்ணிக்கிறார்! ஆனால் முழுமையாக வர்ணிக்காமல், "முட்டாள் பாம்பே" என்று ஒரே அறையாக அறைந்து விடுகிறார்!
* அதே சமயம் கீழான இச்சை, மேலான நெறி-ன்னு ஒரு வார்த்தை கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை! "முட்டாள் பாம்பே" என்ற ஒரே சொல்லில், அத்தனை உள்ளுறையும் வைத்து விடுகிறார்!

இதுவே Iconographic Poetry! குறீயீட்டுக் கவிதை! பாடுவது: இப்போது அம்மையார் ஆகி விட்ட ஒரு சின்னப் பெண்! என் தோழி புனிதா!

எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
எங்கள் புனிதவதிக்காக, ஆலங்காட்டில் நடம் இட்டனையோ சிவமே!

காரைக்கால் அம்மா திருவடிகளே சரணம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


(*** கார்த்திகைச் சோமவாரச் சிறப்புப் பதிவு *** சிவன் பாட்டில் இட்டது! ஆனால் திரட்டிக்கு அனுப்ப முடியவில்லை! அதனால் பந்தலில் பதிக்கிறேன்!)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP