Showing posts with label காரைக்கால் அம்மையார். Show all posts
Showing posts with label காரைக்கால் அம்மையார். Show all posts

Tuesday, November 18, 2008

தேவாரம் பாடிய "ஒரே" பெண் - Icon Poetry!

மக்களே, நால்வர் பாடிய தேவாரப் பாடல்கள் சிலவற்றைச் சிவன் பாட்டில் இது வரை பார்த்தோம்! அத்தனை பேரும் ஆண்கள்! இன்னிக்கி ஒரு பெண் பாடிய தேவாரத்தைப் பார்க்கலாமா?
நாயன்மார்கள் 63 பேரில் மூன்று பேர் பெண்கள்! ஆனால் ஒரே ஒரு பெண் மட்டும் தான் வாய் திறந்து பாடியுள்ளார்! அதுவும் ஆண்களை விட நுட்பமாகத் தோண்டி துருவி, தத்துவ விசாரணை செய்துள்ளார்!

மூன்று பெண் நாயன்மார்களில்...
* இசை ஞானியார் = சுந்தர மூர்த்தி சுவாமிகளின் அம்மா!
* மங்கையர்கரசியார் = பாண்டியன் மனைவி!
ஆனால் இவர்கள் இருவரும் பாட்டாக எதுவும் எழுதவில்லை! சுந்தரர் அம்மா என்பதற்காகவும், மதுரைக்கு வாதம் செய்ய சம்பந்தரை அழைத்து வந்தமைக்காகவும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்! அவ்வளவு தான்!

ஆனால் இது போன்ற செல்வாக்குப் பின்புலம் ஏதும் இல்லாமல்...
ஒரு பேதைப் பெண் நாயன்மார் ஆனார்!


கணவன், "இன்னொரு மாம்பழம் எங்கே என்று கேட்டால்", "அதாங்க இது" என்று நகைச்சுவையாகவோ,
இல்லை "ருசியா இருந்தது; அதான் நானே தின்று விட்டேன்" என்றோ பொய் சொல்லக் கூடத் தெரியாத பேதை!

"சிவனடியார்க்கு கொடுத்து விட்டோமே, இப்போது கணவன் இன்னொன்றும் கேட்கிறாரே, என்ன செய்வது?" என்று சற்று நேரம் கலங்கி நின்ற சாதாரணப் பெண் இவள்! "ஈசனே, மந்திர மாங்கனி தா"-என்று மேஜிக் எல்லாம் செய்து காட்டவில்லை! தானாக வந்தது! ஈசனின் எண்ணமோ ஏதோ, கனி வந்தது! வாழ்க்கை போனது!

கணவன் முகக் குறிப்புக்கு நடப்பவள்! ஆனால் கணவன் இவளின் அகக் குறிப்புக்கு நடந்தானா? வெட்கக்கேடு! :(



மனைவி புனிதள் என்றால், கணவன் தள்ளிக் கொள்வானா?
கணவன் புனிதன் என்றால், மனைவி தள்ளிக் கொள்வதில்லையே!


யோகம், வேள்வி, சரியை, கிரியை என்று எல்லாம் அவன் செய்து முடித்த பின்னர், அவளுடன் "அதுவும்" செய்கிறானே! அவளும் குடும்பம் நடாத்திக் குழந்தை பெற்றுக் கொடுக்கிறாளே?

இங்கே மனைவி புனிதள் என்று ஆனவுடன், சொல்லாமல் கொள்ளாமல் வேற்றூருக்குச் சென்று விட்டான் பரமதத்தன்! போதாக்குறைக்கு இளம்பெண் பேரிலேயே "புனித"வதி! கேட்கணுமா?
இவனோ இன்னொருத்தியைக் கட்டிக் கொண்டு, குழந்தையுடன் வந்து நிற்கிறான்! கேட்டால், அந்தக் குழந்தைக்கும் புனிதவதி என்றே "பய-பக்தியுடன்" பெயரும் இட்டானாம்! அடா அடா அடா!

உற்றார், உறவினர், சமூகம் யாரும் எதுவும் கேட்க முடியாது!
கேட்கப் போனாலும், இளம்பெண் புனிதா தான் "புனிதள்" ஆயிற்றே! குடும்பம் நடத்த முடியுமா? கும்பிடத் தானே முடியும்? எல்லாரும் காலில் வீழ்ந்து கும்பிடுங்கள்! :(((

தில்லை இறைவனின் மனைவியும் ஒரு புனிதள் தான்! அந்தப் புனிதள் தான் சிவ-"காமி" ஆகவும் இருக்கிறாள்! குடும்பமும் நடத்துகிறாளே!
அதைப் பாடிப்பாடிக் கும்பிடும் ஒரு சமூகத்துக்கு, புனிதவதியின் நியாயம் மட்டும் தெரியாமல் போனது ஏனோ?

ஆனால் இன்னிக்கும் காரைக்காலில் "மாங்கனி உற்சவம்" மட்டும் வெகு ஜோராக நடத்துகிறார்கள்! அதில் பரமதத்தன் என்னும் கணவனுக்கு மாலை மரியாதைகள் செய்து, பல்லாக்கில் ஏற்றி, அவனை ஆற்றங்கரை விடு விழா வேறு நடத்துகிறார்கள்! :(( - இது இந்தக் காலத்திலும் தேவையா?


புனிதளக்குத் தான் மண வாழ்வு ஒவ்வாதே! அவளும் வேண்டிக் கொண்டாள்! ஈசனும் உடன்பட்டு விட்டான்! பேயாய் மாறி விட்டாள்!
ஒரு இளம்பெண், இன்னும் அம்மா கூட ஆகவில்லை...அவள் பேயாக மாறித் திரிகிறாள் என்றால்?....சுடுகாட்டு வாய்க்கரிசியை உண்டு பசியாறுகிறாள் என்றால்? அங்கேயே வாழ்கிறாள் என்றால்?...இருவது வயசு தான்! :((
பதிகத்தைப் படிச்சிப் பாருங்க! அந்தக் காலப் பேய் மகளிர் பற்றி அம்மையார் பாட்டில் சொல்லுவாங்க! கண்ணுல தண்ணி தான் வரும்!

* ஆண்டாளின் துணிவு, இந்தப் பேதைப் பெண் புனிதவதிக்கு இல்லாமல் போனது ஏன்?
* ஆண்டாளின் வித்தியாசமான எண்ணத்தை ஏற்றுக்கொண்ட சமூகத்தின் ஒரு பகுதி, புனிதவதியை மட்டும் புறம் தள்ளியது ஏன்?
ஆசாரமான குடும்பங்களின் கட்டுக் கோப்பா? ஆணாதிக்கமா? சமூக விதியா? எது? எது?

* ஆணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று குழந்தை சம்பந்தரால் காட்ட முடிகிறது!
* பெண்ணின் இளம் வயது ஆன்மிகத்துக்குத் தடை இல்லை என்று பேதை புனிதவதியால் காட்ட முடியாதோ?
* இளம் சம்பந்தருக்கு கல்யாண ஏற்பாடு பேசத் துணிந்த சமூகம், இளம் புனிதாவுக்கு மட்டும் சுடுகாட்டு வாச ஏற்பாட்டுக்குத் தான் துணியுமா?

தோழி கோதையின் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழும் அடியேன்,
தோழி புனிதாவின் கவிதைகளில் நனைந்து நனைந்து கண்ணீர் வடித்தும் உள்ளேன்! - புனிதா...உன்னை நினைக்கும் போதெல்லாம் எனக்கு......:(

வைணவ இலக்கியத்தின் - தமிழ் மொழி, சாதி, பெண்மை, சமூகம் - என்று மதிக்கும் சாதாரண நடைமுறைக் கோட்பாடுகள்! - இவை தான் சைவக் குடும்பத்தில் பிறந்து ஊறிய என்னை, நாலாயிர ஈர்ப்புக்கும் ஒரு காரணமாகப் போய் விட்டது!



நாம் அம்மையாரிடம் வருவோம்! யம்மா புனிதா, இனிக் காரைக்கால் "அம்மையார்" என்றே உன்னை அழைக்கிறோம்! ஈசனே உன்னை "அம்மா" என்று அழைத்து விட்டானே! நாங்கள் எம்மாத்திரம்?

காரைக்கால் அம்மையார் = சிறந்த கவிதை, மாறுபட்ட சிந்தனை! தமிழ் இலக்கியத்துக்கு அந்தாதி என்ற புதுமையை முதன் முதலில் பிரபலப்படுத்தியவர் அம்மையார் தான்! அனைத்து நாயன்மார்களையும் விடக் காலத்தால் முந்தியவர்! முதலாழ்வார்களின் கால கட்டம்! இலக்கியத்தில் வெண்பா மாறி அந்தாதி துவங்கிய கட்டம்!

Iconographic Poetry என்று பின்னாளில் ஆங்கிலக் கவிஞர்கள்/ சிந்தனையாளர்கள் D.H. Lawrence, Sigmund Freud முதலானோர் பிரபலப்படுத்தினர்.

ஆனால் அந்தக் குறியீட்டுக் கவிதைகளை எல்லாம் அம்மையார் எப்போதோ தமிழில் செய்து விட்டார்!
என்ன..... அது தேவாரம் என்னும் பக்தி இலக்கியத்துக்குள் ஒளிந்து கொண்டது! அதனால் வெளியில் அதிகமாகத் தெரியவில்லை! அட, ஆன்மீகம் தானே, அதுல பெருசா என்ன இலக்கியம் இருக்கப் போவுது என்ற நம்மவர்களின் "பார்வை"! இன்னிக்கி அதில் ஒன்றைத் தான் நாம் தேவாரப் பதிவில் பார்க்கப் போகிறோம்!

அம்மையார் அத்தனை நாயன்மார்களிலும் காலத்தால் மிகவும் மூத்தவர் என்று சொன்னேன் அல்லவா? சொல்லப் போனால், முதல் தேவாரமே அம்மையாருடையது தான் எனலாம்!
ஆனாலும் முதலில் சிவக்கவி செய்த புனிதாவின் நூல்கள், 11ஆம் திருமுறையில் தான் வைக்கப்பட்டுள்ளது!
* அற்புதத் திருவந்தாதி
* திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
* இரட்டை மணிமாலை

அம்மையார் பாடல்களில் தில்லை பற்றிய குறிப்புகள் எல்லாம் இல்லை! அப்போது ஆரூர் தான் தில்லையினும் சிறப்பு!
பிள்ளையார், முருகன் என்ற மற்ற தெய்வங்களைப் பற்றியும் அவர் எங்கும் குறிக்கவில்லை!

திருவாலங்காட்டைப் பற்றி மட்டுமே சில குறிப்புகள் வருகின்றன! அதுவும் கோயில் போன்ற அமைப்பு எல்லாம் அப்போது இல்லை போலும்! உள்ளே போய் தான் கும்பிட வேண்டும் என்று இல்லாத நிலை! சுடுகாடு, ஆல மரக் காடான ஆலங்காட்டிலேயே ஈசனைத் தரிசித்து மகிழ்கிறார் அம்மையார்!

மாதொரு பாகன் வடிவத்தைத் தான் அம்மையார் மிகவும் போற்றுகிறார்! பெண்மைக்குச் சிவனார் தந்த சமத்துவத்தை, சைவச் சமூகமும் வாயளவில் இல்லாமல், வாழ்க்கையிலும் தர வேண்டும் என்ற அவரின் ஆழ்-மன ஏக்கமோ? என்னவோ?
* இராவணன் செருக்கு அழித்தது,
* முப்புரம் எரித்தல்,
* ஆலகால விடம் உண்ணல்,
* ஈசனின் அடி முடிகளைத் திருமாலும் அயனும் தேடியது என்று ஆங்காங்கு பாடினாலும், அம்மையார் பெரிதும் பாடுவது, ஈசனின் மயான நடனமே!

சாம்பல் பூசுதல், பேய் வாழ் காட்டகத்தே ஆடுதல் என்று ஈசனைக் கேலி பேசுவது போல், அம்மையாரையும் கேலி பேசி இருக்கக் கூடும்! அதான் அம்மையார் பேயாகவே, சிவ கணமாகவே மாறி விட்டார் போலும்!
உளவியல் அறிஞர்களுக்கு அம்மையார் வாழ்க்கை ஒரு பெரும் ஆய்வுப் பொக்கிஷம்!

வாங்க, அம்மையார் நகைச்சுவையிலும் எப்படிக் கலக்குகிறார்-ன்னு இன்னிக்கி பார்க்கலாம்!
* ஆன்மீகத்தில் நகைச்சுவையும் வைத்து,
* அதற்குள்ளே பெரும் உளவியல் கருத்தும் வைத்து,
* குறியீட்டுக் கவிதை ஆக்குகிறார் தேவாரப் பதிகத்தை!



சிவனார் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு என்ன பேருங்க? யாரேனும் சொல்லுங்கள்! அந்தச் சிவப் பாம்புக்குச் சுத்தமா அறிவே இல்லை!

ஹிஹி! இது என்ன தடாலடி? பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது - கருடா செளக்கியமா? என்று கண்ணதாசன் தான் பின்னாளில் பாடினார்!
அதற்கு கருடனும் தக்க பதில் கொடுத்துருச்சாம்! ஆனால் அம்மையார் சொல்வதைப் பாருங்கள்!

திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)
அது மதி ஒன்று இல்லா அரா!

ஏனம்=பன்றி; மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து=பிறைச் சந்திரன்;
மதி=நிலவு/அறிவு; அரா=அரவு (பாம்பு)

* திருமார்பில் பன்றியின் கொம்பை மாலையாக அணிந்து இருக்கான்!
* திருமுடியில் வெண் திங்களைப் பிறை சூடி இருக்கிறான் பெம்மான்!
* நடுவில், கழுத்தில் இருக்கும் பாம்பு என்ன செய்யுது? மேலும் கீழும் பார்க்குது!

மேலே பார்த்தால் - தலையில் வெண் பிறைச் சந்திரன்!
கீழே பார்த்தால் - மார்பில் வெண் பன்றிக் கொம்பு!
இப்படி மாறி மாறிப் பார்த்து, ஒரு நாளும் எது உண்மையான மதி என்று தேறவே தேறாது! மதி இல்லாத பாம்பே! மதி பெறாத வரை, நீ தேறவே மாட்டாய்!

இவ்ளோ தான் தேவாரக் கவிதை! இதில் குறியீடு என்னன்னு கேக்கறீங்களா?.....
பாம்பு எதற்குக் குறியீடு? உடல்-உள்ளத்துக்கு!
மனித வேட்கைகளுக்கு! மனித சூட்சுமத்துக்கு!
இன்னும் வெளிப்படையாகச் சொல்லட்டுமா? பாம்பு = மனிதனின் "காமம்"!

இன்றும் பல மருத்துவக் கல்லூரிகளின் இலச்சினையைப் பாருங்கள்!
ஒரு தண்டத்தைச் (கொம்பை) சுற்றிப் பாம்பு இருக்கும்! அட, இந்தியாவில் மட்டும் தானா இது? இல்லை, பல வெளிநாடுகளிலும் கூட இது தான் சின்னம்!
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி என்கிறது ஒளவையின் விநாயகர் அகவல்!

இந்தக் காமப் பாம்பு என்ன செய்கிறது? பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

* கீழே இருப்பது சூடான பன்றிக் கொம்பு என்றும் தெரியும்!
* மேலே இருப்பது குளிர்ந்த சந்திரன் என்றும் தெரியும்!
* இரண்டுமே ஒரே தோற்றம்/வளைவு கொண்டவை, ஆனால் பன்றிக் கொம்பு போலி-ன்னு தெரியும்! இருந்தாலும், பார்த்துப் பார்த்து மயங்குகிறது!

பன்றிக் கொம்பு = கீழான இச்சை என்றாலும், அதுவும் இந்த மனத்துக்கு வேண்டி இருக்கு!
பிறைச் சந்திரன் = மேலான பொருள் என்று தெரிந்தாலும், மேலே செல்ல எண்ணாது, கீழேயும் பார்த்துப் பார்த்து "மயங்கிக்" கொண்டே இருக்கு!
ஒரு நாளும், இது தான் மதி (சந்திரன்) என்று தேறாது! மதி ஒன்று இல்லாத மனது!

சிவனாரின் அழகான திருக்கோல வர்ணனையில், "முட்டாள் பாம்பே" என்று யாரேனும் சொல்லுவாங்களா? அதான் Icon Poetry! குறியீட்டுக் கவிதை!
* திருக்கோல அழகை வர்ணிப்பது போல் வர்ணிக்கிறார்! ஆனால் முழுமையாக வர்ணிக்காமல், "முட்டாள் பாம்பே" என்று ஒரே அறையாக அறைந்து விடுகிறார்!
* அதே சமயம் கீழான இச்சை, மேலான நெறி-ன்னு ஒரு வார்த்தை கூட வெளிப்படையாகச் சொல்லவில்லை! "முட்டாள் பாம்பே" என்ற ஒரே சொல்லில், அத்தனை உள்ளுறையும் வைத்து விடுகிறார்!

இதுவே Iconographic Poetry! குறீயீட்டுக் கவிதை! பாடுவது: இப்போது அம்மையார் ஆகி விட்ட ஒரு சின்னப் பெண்! என் தோழி புனிதா!

எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!
எங்கள் புனிதவதிக்காக, ஆலங்காட்டில் நடம் இட்டனையோ சிவமே!

காரைக்கால் அம்மா திருவடிகளே சரணம்!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


(*** கார்த்திகைச் சோமவாரச் சிறப்புப் பதிவு *** சிவன் பாட்டில் இட்டது! ஆனால் திரட்டிக்கு அனுப்ப முடியவில்லை! அதனால் பந்தலில் பதிக்கிறேன்!)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP