சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்!
இருவர் பிறந்த நாளும் ஒன்று தான் - இன்று தான்! சித்திரைத் திருவாதிரை (Apr 29th 2009)!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கரா! பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராமானுசா! :)
* இராமானுசர் அவருக்குப் பிந்தியவர் - 1017 AD! சாதியால் உடைந்து கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து பிணக்குகள் தீர்த்தவர்!
சைவமும் வைணவமும் கொண்டாட வந்த இரு ஜகத்குருக்களும்,
ஆதி குருவான சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரையில் பிறந்து, அறம் வளர்த்தது வியப்பிலும் வியப்பே!
கோடைக் காலம்! அன்று காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது! மணல் வெள்ளம் தான்! :)
விடுமுறைக் காலத்தில் சின்னப் பசங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்! ஒன்னாச் சேர்ந்து கில்லி அடித்து விளையாடலாம்! உயரம் தாண்டலாம்!
களைப்பெடுத்தா அதே மணலில் ஊற்று நீரைக் கீறிக் குடிக்கலாம்! கம்பை நட்டு, பாலத்தில் இருந்து கரைக்கும், கரையில் இருந்து பாலத்துக்குமாய் ஒரு எம்பு எம்பலாம் (Pole Vault)! மணற் புதையல் விளையாட்டு கூட விளையாடலாம்!
அன்னைக்கு அப்படித் தான், சின்னப் பசங்க பத்து பேரு, ஒன்னாச் செட்டு சேர்ந்துடுச்சுங்க! ஒரு வேளை நானும் அந்தச் செட்டில் இருந்திருப்பேன் போல! பதினோராம் நூற்றாண்டு! :))
ஆளாளுக்கு ஒவ்வொரு வேஷம்! ஒருத்தன் கோயில் அர்ச்சகர்! இன்னொருத்தன் வாகன புறப்பாட்டு ஆள்! இன்னொருத்தன் மடப்பள்ளி! இன்னொருத்தன் கோஷ்டியில் தமிழ் வேதம் சொல்பவன்! எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து மணலைக் குவிச்சி குவிச்சி, ஒரு சின்ன விமானத்தையே கட்டிட்டாங்க பசங்க!
ஒரு மினி திருவரங்கம் காவிரிக் கரையில்! அந்த ரங்கனுக்கு பிரணவாகார விமானம்-ன்னா இந்த ரங்கனுக்கு மணலாகார விமானம்! :)
வீட்டில் இருந்து பல மரச் சாமான்களைக் கொண்டாந்தாச்சு! சாப்பாட்டுத் தட்டும், தயிர் கடையும் மத்தும் தான் மேள தாளம்! அடுப்புல ஊதும் ஊதாங்குழல் தான் நாதசுரம்! கொட்டாங்குச்சி தான் கங்காலம் என்னும் பாத்திரம்! கடைத்தெருவில் கடை கடையாப் போகுதுங்க பசங்க!
"உங்க கடையில் புது அரிசி எப்படி இருக்கு-ன்னு பார்க்க, அம்மா ஒரு கைப்பிடி வாங்கியாரச் சொன்னாங்க நாடாரே"-ன்னு சொல்லுதுங்க! இப்படிக் கைப்பிடி கைப்பிடியாவே அரிசியைத் தேத்தியாச்சு! அரிசி வசூல் :)
ஆற்றங்கரையில் சின்னதா தீ மூட்டி, பழைய ஈயப் பாத்திரத்தை ஏத்தி, அரிசி பொங்குதுங்க! கைக்கு சல்லீசாக் கிடைச்ச கறிவேப்பிலை, கொத்துமல்லி-ன்னு எதை எதையோ அதில் கொண்டாந்து போடுதுங்க! வெந்தும் வேகாமல் ஒரு மாடர்ன் பிரசாதம் ரெடி! :)
பிரசாதம் ரெடியானாப் போதுமா? பகவான் வேணாமா?
தொழில் தர்மம்-ன்னு ஒன்னு இருக்குல்ல? எப்பமே அவனுக்குக் கண்ணால காட்டிட்டு தானே நாம ஒரு வெட்டு வெட்டுவோம்!
அவன் "கண்டு" அருளப் பண்ணுதல்! நாம் "உண்டு" அருளப் பண்ணுதல்! :)
குட்டீஸ் யானை வாகனம் :)
படங்களுக்கு நன்றி: இராமானுச தாசர்கள் Pbase குழு!
பிரசாதம் ரெடியானாப் போதுமா? பகவானுக்கு எங்கே போறது?
வீட்டுல இருந்து பெருமாள் படத்தை எடுத்துக்கிட்டு வந்தா பெருசுங்க பொலி போட்டுருவாங்க!
மரக்குச்சிகளை விதம் விதமாக் கட்டி, ஒரு மனுசன் போல உருவத்தை உருவாக்குதுங்க!
அதுக்குப் பொட்டு இட்டு, உதிரிப் பூவை மாலையாகப் போட்டு, நூல் கண்டை மஞ்சள் பட்டாடையாகக் கட்டி....அட...சங்கு சக்கரம் இல்லாமல் பெருமாளா?
கோலியே சக்கரம்!
சோழியே வெண்சங்கு!
இதோ மரக்குச்சி ரங்கன் ரெடி!
- பத்மநாபோ "மரப்" பிரபு! பத்மநாபோ "மரப்" பிரபு!
பத்மநாபோ "அமரப்" பிரபு என்ற சகஸ்ரநாமம், இங்கே மரக்குச்சியால், பத்மநாபோ "மரப்" பிரபு என்று ஆகி விட்டதே!
ஒரு பையன் கருடன் போல் குத்திட்டு உட்கார்ந்து கொள்கிறான்! அந்தப் பையன் மேல் குச்சி ரங்கனை வைத்தாகி விட்டது! ஆகா! கருட சேவை காணீரே!
* அந்த ரங்கனுக்கு இணையான எங்கள் அந்தரங்கன் கருட சேவை காணீரே!
வீட்டில் உள்ள தாழங் குடைகள்/கருப்புக் குடைகள் திருக் குடைகளாய்ப் பிடிக்கப் படுகின்றன!
பனை விசிறிகளே வெண்சாமரமாய் வீசப்படுகின்றன!
வடமொழி மந்திரங்களுக்கு இணையாக, உபய வேதாந்தம் என்று பெயர் கொடுத்து,
தமிழ்ப் பாசுரங்களைக் கருவறையில் ஓத ஏற்பாடு செஞ்சாலும் செஞ்சார்!
வேற வூட்டுப் பொடிசுங்க கூட, எளிமையாப் புரிஞ்சிக்கிட்டு, ஓதுறாப் போலவே பாடுதுங்களே! ஆகா! இது என்ன அழகான காட்சி!
பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
சங்கு சக்கரத்தன் என்கோ! சாதி மாணிக்கத்து ஐயே!
அச்சுவைக் கட்டி என்கோ! அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேனும் என்கோ! கனி என்-கோ-பாலன் என் கோ!
தட்டில் சும்மனாங் காட்டியும் தீபம்!
கொட்டாங்குச்சியில் சடாரி!
ஒரு பழைய பாத்திரத்தில் காவேரி தீர்த்தம்!
- முதல் தீர்த்தம் யாருக்கு?
கோயிலில் "ஜீயோம்"-ன்னு கூப்பிடுவாங்களே! அப்போது இராமானுசர் அல்லவா வந்து தீர்த்தம் வாங்கிக் கொள்வார்! இப்போ யாருக்குடா கொடுக்கலாம்?
ஆங், அது தான் சரி! போன வாரம் அவங்க வீட்டில் சுட்ட மெதுவடையை எடுத்தாந்து எனக்குப் பாசமாய்க் கொடுத்தானே கோபால்!
"எலே, கோபால்! வாடா! நீ தான் இன்னிக்கி இராமானுஜர் வேஷம் கட்டுற! உனக்குத் தான் மொதல் தீர்த்தம்!" - அர்ச்சக வேஷம் கட்டியிருக்கும் அந்தப் பையன், மெதுவடைக்கு "மெது"வாக நன்றிக் கடன் தீர்க்கிறான்! :)
காவிரிக்கரையில் மக்கள் எல்லாரும் இந்த "லோக்கல்" கருட சேவையை, குச்சி ரங்கனை ஒரு செல்லமான கேலியுடன் பார்த்துக் கொண்டே செல்கிறார்கள்!
சரி, ஏதோ பசங்க வித்தியாசமா வெளையாடுது! வெளையாடிக்கிட்டு போவட்டும்! என்று வேடிக்கை பார்த்தவாறு அவரவர் நடையைக் கட்டுகிறார்கள்! கருப்புக் குடையும், சாப்பாட்டுத் தட்டில் மேளமும் அடிச்சி ஒரே டமாஷா-ல்ல இருக்கு? :)
அந்த வழியாக வருகிறார் உடையவர், எம்பெருமானார் என்று பலவாறாக அழைக்கப்படும் இராமானுச முனிகள்!
சீடர்கள் புடை சூழ அவரும் இந்தக் குச்சி ரங்கன் கருட சேவையைப் பார்க்கிறார்! சீடர்களின் முகத்திலும் பிள்ளைத்தனமான ஒரு நமுட்டுச் சிரிப்பு! :)
ஆகா! இது என்ன பதட்டம்? நிஜ இராமானுசர் ஓடுகிறாரே? அதுவும் நாலு கால் பாய்ச்சலில்? சீடர்கள் விவரம் புரியாமல் பின்னாடியே ஓட....
சிறுவர்கள்......."ஜீயோம்" என்று சொன்ன போழ்திலே....
இராமானுசர்......."அடியேன் நாயிந்தே, ஜீயேன்!" - என்று நெடுஞ்சாண் கிடையாக ஆற்று மணலில் வீழ்கிறார்! மரக்குச்சி ரங்கன் முன்பாக வீழ்ந்து சேவிக்கிறார்!
குட்டிப் பசங்களுக்கு இன்ப அதிர்ச்சி! பின்னால் வந்த சிஷ்யர்களுக்கோ இன்னும் அதிர்ச்சி!
ஒரு சிலருக்கு எங்கே தங்களையும் விழச் சொல்லி விடுவாரோ-ன்னு பயம்! :)
அந்தப் பழைய டப்பாவில் இருந்து சிறுவர்கள் அவருக்குத் தீர்த்தம் தருகிறார்கள்! மூன்று முறை கேட்டு வாங்கித் தீர்த்தம் பருகுகிறார் உடையவர்!
* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம் = வினைத் திட்பம்! செயலில் வெற்றி பெற!
* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம் = அறன் வலியுறுத்தல்! தர்மம் செய்ய!
* மூன்றாம் தீர்த்தம் = த்ரீதீயம் மோக்ஷப் ப்ரோக்தம் குணார்னவம்! = மெய் உணர்தல்! மோட்ச உபாயம்!
இராமனுசருக்குச் சிறுவர்கள் சடாரி சார்த்துகிறார்கள்! கொட்டாங்குச்சி சடாரி! :)
உகப்புடன் ஏற்றுக் கொள்கிறார்!
ஒரு சின்ன இலையில் அதுகள் வடித்த சோறு வைத்து கொடுக்கப்படுகிறது! கொத்தமல்லிச் சோறு அரவணைப் பிரசாதம் ஆகிறது! :)
நெய்யிடை நல்லதோர் சோறும், நியதமும், அத்தாணிச் சேவகமும்,
கையடைக் காயும், கழுத்துக்குப் பூணொடு, காதுக்குக் குண்டலமும்,
மெய்யிடை நல்லதோர் சாந்தமும் தந்து, "என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல"
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே!
- என்று கருட சேவைப் பல்லாண்டை உடையவர் பாடுகிறார்! சிறுவர்கள் அத்தனை பேரின் பெயரையும் கேட்டறிந்து, தட்டிக் கொடுத்து விடை பெறுகிறார்! அதுகளுக்கோ ஒரே பூரிப்பு! :)
மடத்தில்.....
வயதில் மூத்த சீடர்: "தேவரீர் இப்படிச் செய்யலாமா? சின்னப் பொடியன்கள் ஏதோ விளையாட்டாய் விளையாடியதற்கு, அனைவரும் பார்த்துப் பரிகசிக்குமாறு, ஒரு மரப்பாச்சி பொம்மையைப் போய், விழுந்து சேவித்தீரே! என்ன ஜீயரே இது?"
உடையவர்: "ஆகா! அபசாரம்! பகவானைப் பொம்மை என்று நீங்களே சொல்லலாமா? அடியேன் தவறாக ஒன்றும் செய்து விடவில்லையே!
ஏன் இந்த மனக் கிலேசம்? அந்த மரக்குச்சி ரங்கனில் அரங்கன் இல்லை என்று நினைக்கீறீரோ?"
சீடர்: "அப்படியில்லை சுவாமி! அரங்கன் எங்கும் இருக்கிறான் என்பது பாமர வழக்கு! அது எங்களுக்கும் தெரியும்! ஆனால் சான்னித்யம்-ன்னு ஒன்னு இருக்கில்லையோ? என்ன இருந்தாலும் சிறுவர்கள் விளையாடிய ஒரு மரப்பாச்சிப் பொம்மைக்கு எப்படிச் சான்னித்யம் வரும்?"
உடையவர்: "ஓ...சான்னித்யம் இருக்கா இல்லையா என்று பகவானையே சோதித்துப் பார்த்துவிட்டு ஏற்றுக் கொள்வது தான் உம்ம வழக்கமோ நம்பிகளே?"
சீடர்: "இப்படி வார்த்தை ஜாலமாய் பேசினால் எப்படி? நீர் வர வர கண்ட பயல்களுக்கும் கொஞ்சம் அதிகமாகவே இடம் கொடுக்கிறீர் ஜீயரே! :("
உடையவர்: "உம்ம்ம், எதனால் அந்த மரக்குச்சி ரங்கனில் சான்னித்யம் இல்லை என்று கருதுகிறீர்கள்?"
சீடர்: "என்ன கேள்வி இது? சம்ப்ரோக்ஷணம்/கும்பாபிஷேகம் எல்லாம் செய்து, அஷ்ட பந்தனம் இட்டு, ஜீவாதார மந்திரங்கள் ஜபித்து, பிரதிஷ்டை-ன்னு செய்யும் போதல்லவா ஒரு சான்னித்யம் உண்டாகுது? ஒரு கருங்கல்லும் கடவுளாகிறது!
அதற்குச் சதா மந்திரம் ஜபித்து, சிரத்தையாக உருவேற்றி உருவேற்றி, சாஸ்திரத்தில் சொன்னபடி, நாங்களே பூஜிப்பதால் அல்லவோ சான்னித்யம் உண்டாகிறது?"
உடையவர்: "ஓ...அப்போது நீங்கள் சிரத்தையாகப் பூஜித்தால் சான்னித்யம்! அடுத்தவர் சிரத்தையாகப் பூஜித்தால் அதெல்லாம் ஒன்றுமில்லை! அப்படித் தானே?"
சீடர்: "ஸ்வாமி! எடக்கு மடக்காகப் பேசினால் எப்படி? ஆகமம் தாங்கள் அறியாதது அல்ல! இருந்தாலும் வேண்டுமென்றே இப்படியெல்லாம் பேசுகிறீர்களே! இது நியாயமா?"
உடையவர்: "அன்பர்களே! உங்கள் சிரத்தையை அடியேன் தாழ்த்தவில்லை! அடுத்தவர் சிரத்தையை நீங்களும் தாழ்த்தக் கூடாது என்பதே நான் சொல்லுவது!
ஆலய மந்திரப் பிரதிஷ்டையை, அடியேனோ, இல்லை அந்தச் சிறுவர்களோ மறுத்துப் பேசினோமா? இல்லையே! ஆலயத்திலும் வந்து பணிவாகச் சேவிக்கிறோம் அல்லவா?
அங்கு பணியில் இருக்கும் உம்மையும் மதிக்கிறோம் அல்லவா?
நீங்கள் மட்டும் ஏன், அதே மரியாதையை அவர்களுக்கும் தர மறுக்கிறீர்கள்?"
சீடர்கள்: (மெளனம்...)
உடையவர்: "நீங்கள் அறிந்த முறையில், உளமாரப் பூஜிக்கும் போது, சான்னித்யம் கிடைக்கிறது என்றால்...
அவர்கள் அறிந்த முறையில், உளமாரப் பூஜிக்கும் போது, சான்னித்யம் வராது என்று எப்படி நினைக்கிறீர்கள்?"
சீடர்கள்: (மெளனம்...)
உடையவர்: "பிரகலாதன், ஜீவாதார மந்திரங்கள் எல்லாம் ஜபித்து, பிரதிஷ்டை செய்த பின்னரா, தூணில் எம்பெருமான் சான்னித்யம் ஆனான்?"
சீடர்கள்: (பலத்த மெளனம்...)
ஆனால் ஒரு குரல் மட்டும்..."எல்லாரும் பிரகலாதன் ஆகி விட முடியாது இராமானுசரே!"
உடையவர்: "யாரது??? முன்னே வாருங்கள்! ஓ...நீங்களா? அதை அவர்கள் சொல்லட்டும் பெரியவரே!
உங்களால் பிரகலாதன் ஆக முடியாது என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம்!
அவர்களால் பிரகலாதன் ஆக முடியாது என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும்!
நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?"
சீடர்கள்: (மெளனம்...)
உடையவர்: "எப்படி உம் வழிபாட்டு முறைகளில் அவர்களும் ஆனந்தமாகத் திளைக்கிறார்களோ, அதே போல், அவர்கள் வழிபாட்டு முறையிலும் நீங்கள் மதிப்பளிக்கக் கடவீர்களாக!
குழந்தைத்தனமாக வணங்கினாலும், ஆகமப் ப்ரீதியாக வணங்கினாலும், வணக்கம் வணக்கமே!"
சீடர்கள்: "ஸ்வாமி! கூடக்கூட வாதாடும் எங்களை மன்னித்து விடுங்கள்! இருந்தாலும் சாஸ்திரமானது நாங்கள் செய்வது போலத் தானே செய்யச் சொல்கிறது? சாஸ்திரம் முக்கியம் அல்லவா? அது தானே நமக்குப் பிரமாணம்?"
உடையவர்: "இந்த மரக்குச்சி ரங்கன் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கான்! மரக்குச்சி ரங்கனுக்கென்று ஒரு திவ்யதேசமே இருக்கு! அதைக் காட்டினால் ஒப்புக் கொள்வீர்களா?"
சீடர்கள்: "ஆகா....சாஸ்திரம் எதைச் சொன்னாலும் ஒப்புக் கொள்கிறோம் ஸ்வாமி! பாமரத்தனமான விளக்கத்தைத் தான் மனம் ஒப்புக் கொள்ள மாட்டேங்கிறது!"
உடையவர்: "ஹா ஹா ஹா...கண்ணெதிரே உள்ள உண்மையை ஒப்புக் கொள்ளப் பாமரம் என்ன? சாத்திரமென்ன?
சரி, ஆழ்வார்கள் அருளிச் செயல் கூட சாஸ்திரம் தானே! அதையாச்சும் ஒப்புக் கொள்கிறீரா?"
சீடர்கள்: "ஐயோ! என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள்? நமாமி திராவிட வேத சாகரம்! ஆழ்வார்கள் சொன்னால் அதுவும் சாஸ்திரம் தான்!
ஆனால் மரக்குச்சி ரங்கனை எல்லாம் அவர்கள் பாடியதாக நாங்கள் அறிந்த வரையில் இல்லை!"
உடையவர்: "ஓ! அப்படியா சேதி! இதோ கேளுங்கள்!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே!
தமர் உகந்தது எப்பேர், மற்று அப்பேர்! - தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் அழியான் ஆம்!
முதல்-முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் (சரஸ் முனிம்) பாடிய சாஸ்திரம் ஆயிற்றே இது!"
சீடர்கள்: (மெளனம்...)
உடையவர்: "தமர் எதில் உகக்கிறார்களோ, அதில் பகவான் வந்து அழியாது இருந்து விடுவதாக சாஸ்திரம் சொல்லி இருக்கே!
ஆழ்வார்கள் சொன்னது தமிழில் இருப்பதால் ஏற்றுக் கொள்ளக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறதா? சம்ஸ்கிருதத்தில் வேணும்-ன்னா சொல்லட்டுமா?"
சீடர்கள்: (மெளனம்...)
உடையவர்: "யத் யத் தியாய த, உருகாய விபவ யந்தீ
தத் தத் வபு, ப்ரண யசே, சத் அனுக்ரஹ யா! - இது பாகவதம்! என்ன சொல்கிறீர், ஸ்ரீமத் பாகவதம் என்பது சாஸ்திரம் தானே?
சீடர்கள்: (கப் சிப்...)
அன்புள்ள மடத்துச் சிஷ்யர்களே! நீங்களே ஒரு முறை "மனசாட்சியுடன்" எண்ணிப் பாருங்கள்!
அந்தச் சிறுவர்கள் அவர்கள் அளவில் பகவானை உகந்தார்கள் அல்லவா?
தமர் உகந்த அவ்வுருவம், அவன் உருவம் தானே!
அதனால் அல்லவோ அந்த மரக்குச்சி ரங்கனைச் சேவித்தேன்! அது தவறா?
உங்களுக்கு எல்லாம் குரு ஸ்தானத்தில் இருந்து கொண்டு,
என்னைத் "தமர் உகந்த" என்னும் சாஸ்திர வாக்கியத்தை மீறச் சொல்கிறீர்களா?"
சீடர்கள் வாயடைத்துப் போகிறார்கள்! இவருடன் வாதம் செய்ய முடியாது போலிருக்கே! இவர் கருத்துக்களை எடுத்து வைக்கும் போது,
எம்பெருமானார் வாதாடுகிறாரா?
இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா?
பிரம்ம சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதிய இவர் மகா வேதாந்தியா?
இல்லை, மரப்பாச்சி பொம்மையைக் கூட விழுந்து வணங்கும் இவர் ஈரப் பாசுர உள்ளமா?
* சாஸ்திரம் என்பதை எழுத்தில் மட்டுமே பார்த்த தாங்கள் எங்கே?
* சாஸ்திரத்தை அதன் ஆத்மாவில் பார்த்த இராமானுசர் எங்கே?
அவர் பிறந்த நாள் அதுவுமாய், எம்பெருமானார் திருவடிகளே சரணம்! ஹரி ஓம்!
பட்டர்கள் பெரிய கருட சேவை! பிள்ளைகள் மினி கருட சேவை! :)
குறிப்பு:இன்றும் சென்னைத் திருவல்லிக்கேணி - பார்த்தசாரதி பெருமாள் கோயிலில்,
சிறுவர்கள் சொப்பு விளையாட்டு போலவே நடத்தும் சின்னஞ்சிறு உற்சவம், பெரிய உற்சவத்துடன் சேர்த்தே கொண்டாடப்படுகிறது!
கோயில் பிரம்மோற்சவத்தின் போது, அக்கம் பக்கத்துச் சிறுவர்கள், அவர்களின் சின்னப் பெருமாளை வீதியுலா கொண்டு வருகிறார்கள்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குட்டி வாகனத்தில் அலங்காரம்!
* பெரிய பெருமாள், பெரிய யானை வாகனத்தில் வந்தால்,
* குட்டிப் பெருமாள், குட்டி யானை வாகனத்தில் வருவது வாடிக்கை!
அண்மைக் காலங்களில் இந்தக் குட்டி உற்சவம் இன்னும் பிரபலம் ஆகியுள்ளது!
அதனால்.....
தமர் உகந்த பகவத் அனுபவத்தை, ஏதோ விளையாட்டுத்தனமானது என்றோ, லோக்கல் பாஷையில் எழுதப் படுகிறது என்றோ, அசூயை கொள்ளாதீர்கள்!
ஏன் அப்படி செய்யப்படுகிறது என்ற ஆத்மாவைப் பார்த்தால் ஆன்மிகத்தைப் பார்க்கலாம்!
தமர் உகந்த எவ்வுருவம், அவ்வுருவம் தானே!
சொப்பு விளையாட்டுப் பெருமாள் திருவடிகளே சரணம்! :)