Showing posts with label திருமங்கையாழ்வார். Show all posts
Showing posts with label திருமங்கையாழ்வார். Show all posts

Tuesday, December 28, 2010

இவன், எந்த முருகன்? கண்டு புடிங்க பார்ப்போம்!

பந்தலில், மார்கழி மாசம் அதுவுமா, ஒரு பதிவு கூடவா இல்லை?-ன்னு என்னிடம் இமெயிலில் குறைபட்டுக் கொண்ட உள்ளங்களுக்காக...இந்தப் பதிவு! :)
மன்னிக்க வேண்டுகிறேன், தனித்தனியா பதில் அனுப்பாமைக்கு! முடிஞ்சா, ஒரேயொரு புதிரா புனிதமா மட்டும் அப்பாலிக்கா போடுறேன்! :)

சென்ற ஆண்டு...இதே நாள் - Dec 28 - மோட்ச ஏகாதசி!
யாரோ ஒரு முகம் தெரியாத குருவாயூர் யானையின் கதை!
.....நினைவுகளில் இப்போ இருக்கேன்!
So, just for a post, here we go,...Can you tell which ooru murugan boy is this?

இவன், எந்த ஊரு முருகன்? கண்டு புடிங்க பார்ப்போம்! - குடை கவிக்க வரும்....இவன் தலையில் சடை, ஜடை, கொண்டை....தோள் மாலை....வேல்...இவன்? இவன்? இவன்?




(one day later....)

என்ன கண்டுபுடிச்சிட்டீங்களா?
இதோ...இந்தத் திருவரங்க "முருகன்"! :) கையில் வேல் வச்சிக்கிட்டு, ஆனா நாமம் போட்டுக்கிட்டு இருக்காரு பாருங்க! :))

மேற்கண்ட படங்கள், கோயில் என்று சிறப்பித்துப் பேசப்படும் திருவரங்கம், அங்கே இந்த ஆண்டு (2010) தமிழ் விழாவில் (இராப் பத்தில்) எடுத்தது! - படங்களுக்கு நன்றி: திருக்கோவிலூர் ஜீயர்!

பெரும்பாலும் வடமொழி உற்சவங்களுக்கிடையே,
இந்தத் தமிழ்ப் பெரும் விழாவை,
ஆயிரத்து முன்னூறு ஆண்டுக்கு முன்பே
துவக்கி வைத்து, பெருமை பெற்ற "முருகன்" இவன்!


நீலன் என்பது இயற்பெயர்!
பரகாலன் என்பது பட்டப் பெயர்!

1. ஆலிநாடன்
2. அருள்மாரி
3. அரட்டமுக்கி
4. அடையார் சீயம்
5. கொங்குமலர் குழலியர் வேள்
6. மங்கை வேந்தன்
7. பரகாலன்
8. கலியன்

என்பதோடு...
9. திருமங்கை ஆழ்வார் என்று சொன்னால் அனைவரும் அறிவார்கள்! :)



கள்ளர் குல முனையரையர் - பிறப்பால் சைவர் - குமுதவல்லியின் காதலுக்காகப் பெருமாளைப் பிடித்துக் கொண்டார்! :)
ஆனால்....அதற்கு அப்புறம்....பெருமாளோ இவரைப் பிடித்துக் கொண்டார்! :)

இவரால் அவரை விடவே முடியவில்லையாம்!
குமுதவல்லியைக் கூட மறக்கத் துணிவு வந்ததாம்! ஆனால் அவரை மறக்க முடியவே இல்லையாம்! :)


இவர் எப்படி "முருகன்" ஆவான்(ர்)? = கையில் வேல் இருப்பதாலா? :)

கூர் "வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்! - திருப்பாவை 01
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி! - திருப்பாவை 24

முருகன்=அழகன்!
இவர் வடிவழகு, தமிழழகு அப்படி! அதனால் இவரை "முருகு+அன்" என்று சொல்வது பாதகமில்லை!
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை, "பெருமாளே=பெரும்+ஆளே" என்று வரிக்கு வரி அருணகிரி பாடவில்லையா?
அதே போல் தான் இதுவும்! திருமங்கை அழகோனே-முருகோனே! :)

* இவரே கருவறைக்குள் தமிழை முதன்முதலில் புகுத்தினார்!
* இவரே தமிழுக்கென்று தனிப்பெரும் விழாவை, தலைநகராம் அரங்க நகரில் எடுப்பித்தார்!
* இவரே தமிழ் வேதமான மாறன் மொழியை, (திருவாய்மொழியை), அரங்கன் முன்னிலையிலே, ஓதுவார்கள் ஒதுங்கி இருந்து ஓதாமல், ஓதுவார்கள்-அர்ச்சகர்கள் உட்பட, அத்தனை பேரையும் ஓதச் செய்தார்!

தமிழுக்கு வாழ்வு என்னும் போது, அங்கே தமிழ்க் கடவுளாம், என் முருகனின் வாசனை வீசாதா என்ன?

* திருமங்கையின் பிறந்த நாள் = முருகன் உகந்த, கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம்!
* திருமங்கையின் கையில் = வேல்!
* காவடிச் சிந்தின் மெட்டை, வழிநடைச் சிந்தாக...முதன் முதலில் இலக்கியத்தில் பாடிச் சேர்த்தார்!
- இப்படி "தெரிந்தோ/தெரியாமலோ" திருமங்கை வரலாற்றில் முருக வாசம் வீசுகிறது!


முருகன் என்றால் அழகு! இந்த மங்கை மன்னனின் முருகை - வடிவழகு என்றே இசைக் கவிதையாக எழுதியுள்ளார் மணவாள மாமுனிகள்!

அணைத்த "வேலும்", தொழுத கையும்,
அழுந்திய திரு நாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும்,
குளிர்ந்த முகமும், பரந்த விழியும்.
...
என்றெல்லாம் போகும்! பின்னர் ஒரு நாள் எழுதுகிறேன்! அதன் கடைசிப் பத்தியை மட்டும் இப்போது பாருங்கள்!

"வேல்" அணைத்த மார்பும், விளங்கும் திரு எட்டெழுத்தும்,
மால் உரைக்கத் தாழ்த்த வலச்செவியும் - தாள் இணைத்த
தண்டையும், வீரக் கழலும், தார்க் கலியன் நன் முகமும்
கண்டு களிக்கும் எந்தன் கண்!

இதுவோ திருவரசு? இதுவோ திருமணங் கொல்லை?
இதுவோ எழிலாலி என்னும் ஊர்? - இதுவோ தான்
வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டு எழுத்தும் பறித்த இடம்!!!

எப்படி, எப்படி? = எட்டெழுத்தைப் "பறித்தாராம்"!
"வேலை"க் காட்டிப் பெருமாளையே பயங் கொள்ளச் செய்து,
எட்டெழுத்தைப் பறித்து,
அதை நமக்கெல்லாம் கொடுத்த திருமங்கை அழகே "முருகு"!


சரி, இவர் கையில், வேல் எப்படி வந்துச்சாம்?

அதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்! பார்ப்போமா?
ஆனால் இது ஒரு "போலிக்" கதை! சுவைக்கு மட்டும் வாசியுங்கள்! :)

திருஞான சம்பந்தர் = தந்தையைக் காணோமே என்ற மலைப்பால் முலைப்பால் உண்ட தமிழ்ப்பால்!

இவரை முருகனின் அம்சமாகவே/அடையாளமாகவே சைவ சித்தாந்தத்தில் சொல்வது வழக்கம்! அருணகிரியும் அப்படியே பாடியுள்ளார்! முன்பெல்லாம், சம்பந்தர் கையிலும் ஒரு வேல் இருக்கும்!

இவரின் சொந்த ஊர் சீர்காழி! பக்கத்து ஊரோ, திருமங்கை மன்னனின் ஊரான திருவாலி! இருவருமே தலம் தலமாகச் சென்று பாடிய அடியார்கள்!

ஒரு முறை, திருமங்கை மன்னன், சீர்காழித் தலத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வர (காழிச் சீராம விண்ணகரம்), கூடவே அவர் குழாமும் வந்தது! விருதுகளைக் கூவிக் கொண்டே வந்தது! அழகன் திருமங்கை, அவன் ஆடல் மா என்னும் குதிரை மேல் வரும் அழகை எண்ணிப் பாருங்கள்!

வீதியில், சம்பந்தப் பிள்ளையின் மடத்தைத் தாண்டிச் சென்றாக வேண்டும்!
என்ன இருந்தாலும் சொந்த ஊர் அல்லவா! தலைவர் அடக்கமாக இருந்தாலும், தலை இருக்க வால்கள் ஆடுமே! சம்பந்தர் மடத்தில் உள்ளவர்கள், சம்பந்தர் வீதியில் மட்டும் கோஷம் போடாமல் மவுனமாகப் போகச் சொன்னார்களாம்!

நம்ம திருமங்கை தான் எதிலுமே பொசுக் பொசுக்-கென்று செயல்படுபவர் ஆயிற்றே! இதென்ன நாட்டாமைத்தனம்-ன்னு நினைச்சாரோ என்னவோ, அவரிடமே கேட்டு விடுவோம் என்று, விறுவிறு-சுறுசுறு...சைவ மடத்துக்குள் வைணவர் நுழைந்தே விட்டார்! :)

உள்ளே சென்றால்...பச்சிளம் பாலகன்! அன்னையின் முலைப்பால் உண்டவன், அவனை மலைப்பால் பார்த்த இந்தக் கள்ளர் குலத் தலைவன்...என்ன இருந்தாலும், கற்றாறைக் கற்றாரே காமுறுவர் அல்லவா?

இருவரும் அன்புடன் முகமன் கூறிக் கொள்ள...நம் திருமங்கை, "உம்ம ஆட்களின் அதிகாரம் பார்த்தீரா" என்று கேட்க...
ஆளுடைய பிள்ளையான சம்பந்தப் பிரான் குறும்பாக, "எம் ஆட்களுக்கு உம்மை நிரூபித்துத் தான் காட்டுங்களேன் பார்ப்போம்" என்று சொன்னாராம்!

இரு பெரும் தமிழ் மலைகள்!
சம்பந்தர் முதலில் பாட...

கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா!

படியுண்ட பெருமானைப் பறித்துப் பாடி
பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே!

ஆலிநாடரான திருமங்கை மன்னா, எம் பெண்ணை மயக்கிக் கொண்டு போய் விட்டீரே, நியாயமா? என்று ஒரு தாய் பாவனையில் சம்பந்தர் கேட்க....
திருமங்கை, தம்மையே தலைவியாகப் பாவித்து, அதே சூட்டில் மறுமொழி உரைக்கிறார், ஞானக் குழந்தைக்கு! :)

வருக்கை நறுங்கனி சிதறிச் செந்தேன் பொங்கி
மருக்கரையின் குளக்கரையில் மதகில் ஓடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்

அருட்குலவு மயிலை தன்னில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே!

நீர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்தது போல், நான் இவளுக்கு உயிர் கொடுத்தால் மட்டும் ஏலாதா என்ன? என்று எதிர்க்கவிதை, எசப்பாட்டு :)
இப்படி வீசியவுடன் சிரித்தே விட்டார் சம்பந்தர்! தம்மையே மடக்கிய மங்கை மன்னனுக்கு, நாலுகவிப் பெருமான் என்று பட்டம் சூட்டி, அதுகாறும் தான் வைத்திருந்த வேலை, கொடுத்துவிட்டதாகக் கதை சொல்கிறார்கள்!


கதை நல்லாத் தான் இருக்கு.....ஆனாலும், கே.ஆர்.எஸ் இதுகெல்லாம் மயங்கீற மாட்டான்! :)
அது வைணவமே ஆனாலும் சரி! பெருமாளே ஆனாலும் சரி, வாய்மையே வெல்லும்! :)

என்னைப் பொருத்தவரை, இதை ஏன் "கட்டுக்கதை", உண்மைக் கதை அல்ல என்று சொல்கிறேன் என்றால்...

1. வரலாற்றின் படி, சம்பந்தர் காலத்தால் முந்தியவர்! மகேந்திர வர்ம - நரசிம்ம வர்ம பல்லவன் காலம் என்றும் சொல்வார்கள்! 640-656 CE!
திருமங்கையோ, நந்தி வர்ம பல்லவன் காலம்! 730-800 CE! குறைந்தது நூறு ஆண்டாச்சும் பின்னால் வந்தவர்! அப்படி இருக்க, இருவரும் எப்படிச் சந்தித்து இருக்க முடியும்? :)

2. திருமங்கை ஆழ்வாரின் வைபவத்தைச் சொல்லும் வைணவ நூல்கள்/குரு பரம்பரை கூட, இந்த நிகழ்ச்சியைச் சொல்லவில்லை!

3. ஐயோ! அப்போ இந்த ரெண்டு பாட்டு? எசப்பாட்டு மாதிரி கொடுத்தியே-ன்னு கேக்குறீங்களா? ஹிஹி! அந்தப் பாட்டெல்லாம் யாரோ பின்னாளில் எழுதியது போலத் தான் இருக்கு! சந்த அமைப்பிலோ/நடையிலோ, ஆழ்வாரைப் போலவும் இல்லை! சம்பந்தரைப் போலவும் இல்லை!
மிகவும் முக்கியம்: அந்தப் பாடல்கள் தேவாரத்திலும் இல்லை! திவ்ய பிரபந்தம் என்னும் அருளிச் செயலிலும் இல்லை!

இப்படி, வைணவ நூல்களே குறிப்பிடாத ஒரு நிகழ்ச்சியை, யாரோ கதை கட்டி விட,
அதையே அங்கொன்றும் இங்கொன்றுமாக, "பகூத் அறிவுள்ள" சிலர் எழுதி வைக்க,
தரவே தராமல்.....பத்து முறை சொன்னதையே சொன்னால், வெறுமனே கும்மி அடித்தால், பொய்யும் "மெய் போல்" ஆகும் அல்லவா நம்ம பதிவுலகில்?

அப்படித் தானே "தொல்காப்பியத் திருமால் தமிழ்க் கடவுள் இல்லை! முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள்" என்று கும்மியடித்து கும்மியடித்து, நம்ப வைக்கப்பட்ட கூட்டம்? :)

* ஏபி நாகராஜன் சினிமாவில், "தமிழ்க் கடவுள்" என்று பத்து முறை வசனம் வருவது தான் தரவு,
* எங்கோ சிவன் கோயில் யானைக்கு ஓம் போட்டு பார்த்து இருக்கேன் என்ற சிங்கைத் தரவு! :))
அது போலத் தான் இதுவும்! திருஞான சம்பந்தர் - திருமங்கை சந்தித்தார்கள்! திருமங்கை வாதில் வென்று, வேலைப் பெற்றார் என்பதெல்லாம்!

அது வைணவமே ஆனாலும்.......தவறான தகவல் என்று ஓப்பனாகச் சொல்லும் அறத் துணிவு, எனக்கு உண்டு! :)
எப்பொருள், "எத்தன்மைத்" தாயினும் - அப்பொருள்
"மெய்ப்பொருள்" காண்பது அறிவு!

இதுக்கு, நான் ரெண்டு பக்கமும் வாங்கிக் கட்டிக் கொள்வேன்-ன்னு நல்லாவே தெரியும்! :) சைவத்திலும் பிடிக்காமல் போகலாம்! வைணவத்திலும் பிடிக்காமல் போகலாம்! :) இருப்பினும்......
சமயம் கடந்து, தமிழைத் தமிழாகவே பார்த்தால், தமிழ் தழைக்கும்!



எல்லாஞ் சரி, இவர் கையில், வேல் எப்படி வந்துச்சாம்? அதைச் சொல்லவே இல்லீயே?

பண்டைத் தமிழ் மறவன் - கள்ளர் குலத் தலைவனான நீலன், திருமங்கை ஆனான்! இவன் பெருநில மன்னன் அல்ல! மிகவும் குறு நில மன்னன்! இவனுக்கு யானை கூடக் கிடையாது! வெறும் குதிரை மட்டுமே! அது போல் தான் வேலும்!

பெரிய வாள் என்பதை விட, கத்தி தான் இருக்கும்! கேடயம் இருக்கும்! வேல் இருக்கும்! அப்படித் தான் வைணவ ஆலயங்களிலும் சிலையாக வடித்துள்ளார்கள்! தொலைவில் இருந்து எறிய வல்ல வேல்! நேருக்கு நேர் வாள் வீசிச் சண்டை போடும் பெருநில மன்னன் அல்ல! கள்ளர் குலத் தலைவன்! ராபின்ஹூட்! :)

இவன் கையில் வேலும், கத்தியும், கேடயமும் தானே!
அப்படித் தான் "வேல்" தாங்கிற்றே அன்றி..........
சம்பந்தரை வென்று வாங்கிய வேலாக இருக்கச் சாத்தியமே இல்லை!

* முருகப் பெருமானின் திருக்கை ஆயுதம் "வேல்" என்பதாலும்,
* இவர் தோன்றிய கார்த்திகை நட்சத்திரத்தாலும்,
* ஆழ்வார் தமிழுக்கு ஆற்றிய தொண்டு கருதியும், - தமிழ்க் கடவுளான முருகனோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம்! அவ்வளவே!

"வேல்" அணைத்த மார்பும், விளங்கு திரு எட்டெழுத்தும்,
மால் உரைக்கத் தாழ்த்த வலச் செவியும் - தாளின் இணைத்த
தண்டையும், வீரக் கழலும், தார்க் கலியன் நன் முகமும்
கண்டு களிக்கும் எந்தன் கண்!


ஆழ்வார்கள் ஈரத் தமிழ் வாழ...ஆலயக் கருவறைக்குள்ளும் தமிழ் வாழவென்றெ வாழ்ந்த............திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்!

அந்தத் தமிழுக்குக் குறிஞ்சித் தலைவனாய் நிற்கும்.............என் காதல் முருகப் பெருமான் இணையடிகளே சரணம்!!

Read more »

Sunday, July 11, 2010

நரசிம்மனைக் கடித்த கவி

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


இடம்: திருக்கோளூர்
நேரம்: ஒரு இனிய மாலை நேரம்

(ஒரு வைணவப் பெரியவர், தன் சீடர்களோடு ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். ஊர் எல்லை அருகே, ஒரு இளம் பெண் கையில் சில மூட்டைகளுடன் எதிரே வந்து கொண்டிருக்கிறாள். இதைக் கவனித்த அந்தப் பெரியவருக்கு, ஒரு விநாடி குழப்பம், பின்னர் ஐயம்! நேரே அந்தப் பெண்ணிடம் செல்கிறார் ...)



பெரியவர்: பெண்ணே! மூட்டைகளுடன் எங்கு சென்று கொண்டிருக்கிறாய், இரவு துவங்கும் இந்த வேளையிலே?

பெண் (அந்தப் பெரியவரை வணங்கி): இந்த ஊரை விட்டுச் சென்று கொண்டிருக்கிறேன்!

பெரியவர் ('சந்தேகப் பட்டது சரிதான்' என்று நினைத்து): ஏனம்மா?

பெண்: இந்த ஊரில் இனிமேல் என்னால் இருக்க முடியாது!

பெரியவர் (அதிர்ச்சியுடன்): இந்த ஊரை விட்டு யாரும் போகமாட்டார்கள் என்று நம்மாழ்வார் சொன்னது பொய்யோ?

பெண்: என்ன? நம்மாழ்வார் உங்களிடம் சொன்னாரா?

பெரியவர்: 'எல்லோரும் திருக்கோளூருக்கு வருவார்கள்' என்று நம்மாழ்வார் சொன்னதால் தானே அடியேனும் சீடர்களும் இங்கு வந்தோம்! இங்கு வந்தால் வேறு விதமாய் இருக்கின்றதே?

பெண் (சற்றுக் குழம்பி): நம்மாழ்வார் பரமபதம் சென்று பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதே? அவர் உங்களிடம் எப்படிச் சொல்லி இருக்க முடியும்?

பெரியவர்: இல்லையம்மா! அவர் தானே தன் பாசுரத்தில், 'திருக்கோளூருக்கு எல்லோரும் வருவார்கள், ஆனால் செல்ல மாட்டார்கள்!' என்றாரே?



(பாசுரத்தைச் சொல்கின்றார் பெரியவர் ...)

*உண்ணும் சோறு பருகு நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்* எம்பெருமான் என்றென்றே* கண்கள் நீர் மல்கி*
மண்ணினுள் அவன் சீர்* வளம் மிக்க அவனூர் வினவி*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே!
திருவாய்மொழி 6-7-1

பெரியவர்: அதுவும், பெண்கள் புகும் ஊர் (இளமான் புகும் ஊர்) என்றாரே ஆழ்வார்! பெண்கள் 'வெளியே செல்லும் ஊர்' என்று சொல்லவே இல்லையே?

(பாசுரத்தைக் கேட்ட அந்தப் பெண், சற்றுத் தயங்கி நிற்கின்றாள் ...)

பெரியவர்: சரி ... நீ எதற்கு இந்த ஊரில் இருக்க முடியாது என்கின்றாய்?

பெண்: இந்த ஊரில் இருக்க எனக்குத் தகுதியே இல்லை!

பெரியவர்: அப்படி என்ன தகுதி வேண்டும், திருக்கோளூரில் இருப்பதற்கு?

(அந்தப் பெண் சொல்லத் துவங்குகின்றாள் - 81 வரிகள் ...)

அழைத்துவரச் சென்றேனோ அக்ரூரரைப் போலே!
...
பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
...
ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
...
இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
...

(இதைக் கேட்கின்ற பெரியவர் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய, பிரமை பிடித்து நிற்கின்றார் - அந்தப் பெண் முடித்த பின்பும், வெகு நேரம் வரை!

அந்தப் பெண் மீண்டும் உரக்கக் கூப்பிட்டவுடன் தான், பெரியவருக்கு நினைவு திரும்புகின்றது ...)

பெண் (வருத்தத்துடன்): பெரியவரே! முனிவர்களும், ஆழ்வார்களும், ஆசாரியர்களும், அடியவர்களும் செய்ததில் ஒன்று கூட அடியேன் செய்யவில்லையே! எனவே, அவர்களும், வைத்த மாநிதியும் இருக்கும் இந்தப் புகழ் பெற்ற திருக்கோளூரிலே அடியேன் இருப்பதற்குத் தகுதியே இல்லை! எனவே இங்கிருந்து புறப்பட முடிவு செய்துள்ளேன்!

(திகைத்து நிற்கின்றார் அந்தப் பெரியவர் ...)

உண்மையிலேயே அந்தப் பெண்ணிற்குத் தகுதி இல்லையா?

***



ந்தப் பெண்ணின் மன நிலையும், திருமாலை அருளிச் செய்யும்போது, தொண்டரடிப்பொடியாழ்வாருக்கு இருந்த மன நிலையும் சற்றே ஒத்து நோக்கத் தக்கது.


'என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை; எனவே எம்பெருமான் எனக்குக் காட்சி தரப் போவதில்லை!' என்று அடிப்பொடியார், அரங்கன் சன்னிதியில் இருந்து விலகிச் செல்கின்றார் [...வெள்கி, போய், விலவறச் சிரித்திட்டேனே - திருமாலை-34].

எங்கே இருக்கின்ற உண்மையான ஒரே தொண்டனும் விலகிச் சென்று விடுவானோ என்று பயந்து, அரங்கன் தொண்டரடிப்பொடியாழ்வாரைக் கூவி அழைத்தானாம்!

"ஆழ்வீர்! போகோதீர்! திரும்பி வாரும்! எப்போது நீர் 'எனக்குத் தகுதியில்லை' என்று நினைக்கும் நிலைக்கு வந்து விட்டீரோ, அப்போதே உமக்கு எம்மை அடையத் தகுதி வந்தது" என்று கூறுகின்றான்.

தான் உலகளந்த கோலத்தை அவருக்குக் காட்டி, அவரைத் தன் பக்கம் சேர்த்துக் கொள்கின்றான்.

அரங்கனைக் கண்டு கொண்ட ஆழ்வார், அடுத்த பாசுரத்தில் தான் உலகளந்த காட்சியைப் பாடி மகிழ்கிறார் [தாவி அன்று உலகமெல்லாம் தலை விழாக் கொண்ட எந்தாய் ...' - திருமாலை 35])

இந்தப் பெண்ணின் தகுதிக்கு வருவோம் ...

***

தொண்டரடிப்பொடி ஆழ்வார் போலவே, 'எனக்குத் தகுதியே இல்லை' எனும் மன நிலை வந்தவுடனேயே அந்தப் பெண்ணுக்கும் அவனை அடையத் தகுதி வந்து விட்டது!

ஆனால், எம்பெருமான் வரவில்லை! பதிலாக, எம்பெருமானார் வந்து விட்டார்!

ஆம்! அந்த வைணவப் பெரியவர் வேறு யாருமல்ல! ஸ்ரீ இராமாநுஜர்!



அந்தப் பெண்ணின் பெயர் குறிக்கப்படாவிட்டாலும், அவள் கூறிய 81 அழகான வரிகள், 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்' என்று அழைக்கப் படுகின்றது ('திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்' என்றும் கூறப்படுவதுண்டு)! வைணவத்தின் சாரம் என்றே இதனைக் குறிப்பிடலாம்!


(இருவரில் யார் முதலில் வரவேண்டும்? எம்பெருமானா, எம்பெருமானாரா?


நாம் தவறு செய்யும் நேரங்களில், நம் உள்ளே இருக்கும் அவன் [ஆத்மா/மனசாட்சி/...], 'இது இவன் விதி, முன் வினைப் பயன்; அனுபவிக்கிறான்' என்று எதுவும் செய்யாது இருந்து விடுவான். ஆனால், நம் ஆசானோ, நாம் செய்யும் தவற்றைச் சுட்டிக் காட்டி, நம்மை நல்வழிப் படுத்துகின்றார்! எனவே, உள்ளே இருக்கும் அவனை விட, வெளியே இருக்கும் ஆசானே நன்று!)


இந்தப் பெண் ஊரை விட்டுச் செல்வது கண்டு பொறுக்காத வைத்த மாநிதிப் பெருமானே இவளுக்கு ஆசானாக, எம்பெருமானாரையே அனுப்பி வைக்கின்றான்!

ஆசானே எதிரே வந்து ஆட்கொள்ளும்படி இருந்த அந்தப் பெண் புண்ணியம் செய்தவள் தானே?

சரி, இந்தப் பெண்ணின் கதையைத் தொடருமுன்பு, கொஞ்சம் புராணம் படிக்கலாம் வாருங்கள்!

***

பிரம்மாவின் ஐந்தாவது மகன், கர்த்தமப் பிரஜாபதி. படைப்புக்காகப் படைக்கப் பட்ட அவன், அதை வெறுத்து, திருமால் அருகில் இருக்கும் மோட்சம் வேண்டுமெனத் தவம் செய்கின்றான். இவன் தவத்தைக் கண்ட ஸ்ரீதேவி, 'ஏன் இவனுக்கு அருள் தர மறுக்கிறீர்கள்?' என்று எம்பெருமானிடம் கேட்க, அவனிடமிருந்து, புன்சிரிப்பே பதிலாக வருகின்றது.

திருமால் பதில் சொல்லாததால் கோபமடைந்த ஸ்ரீதேவி, பூவுலகில் வில்வாரண்யம் எனும் தலத்திற்கு வந்து, அங்குள்ள ஒரு தாமரையில் தன்னை மறைத்துக் கொள்கிறாள்.

திருமகளைத் தேடி வில்வாரண்யத்திற்கு வந்த திருமால், தன் இரு கண்களையும் ஒவ்வொன்றாக மூடித் திறக்கின்றார்! மற்ற எல்லாத் தாமரைகளும், மலர்ந்து, குவிந்து, பின் மீண்டும் மலர, ஒரே ஒரு தாமரை மட்டும் எப்போதும் மூடியிருக்கின்றது! ஸ்ரீதேவி அந்தத் தாமரையில் இருக்கின்றாள் என்று தெரிந்து, மலருடன் சேர்த்துத் திருமகளையும் அணைத்துக் கொள்கின்றார் திருமால்!

(வில்வாரண்யம், ஸ்ரீதேவி வந்து இருந்ததால் ஸ்ரீபுரி என்றும், திருமால் ஸ்ரீதேவியை அணைத்துக் கொண்டதால் ஆலிங்கன புரி என்றும் அழைக்கப் படுகிறது)


திருமாலைப் பின் தொடர்ந்து வந்த கர்த்தமன், 'இது தான் தக்க சமயம்' என்றெண்ணி, தனக்கு மோட்சம் வேண்டுமெனக் கேட்டு, இருவரின் கால்களையும் பிடித்துக் கொண்டான். திருமால், அவனிடம், 'உனக்கு மோட்சம் கலியுகத்தில் தான் கிட்டும்! அதுவரையில் ஒவ்வொரு யுகத்திலும் நீ பிறப்பாய்!' என்று கூறி மறைகின்றார்.

***

ர்த்தமன், அடுத்த யுகமான திரேதா யுகத்தில் உபரிசரவசு எனும் வடநாட்டு (நாட்டின் பெயர் தெரியவில்லை) மன்னனாகத் தோன்றினான். அரசை விட்டு, தவம் செய்யக் கிளம்பினான். தன் தவ வலிமையால், ஆகாயத்தில் பறக்கக் கூடிய சக்தி பெற்றான் (உபர் - ஆகாயம்).

உபரிசரவசு ஒரு முறை ஸ்ரீபுரியின் மீது பறக்கும்போது, மேலே செல்ல முடியாமல் கீழே விழ, அங்கேயே அவன் தவம் செய்ய ஆரம்பிக்கிறான். எம்பெருமான் அவன் முன் தோன்றி, முன்பிறப்பைப் பற்றிக் கூறி, ஸ்ரீபுரிக் கோயிலில் தொண்டு செய்து வருமாறு பணித்தார்.
***

துவாபர யுகத்தில், காவிரி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில், ககூஸ்த பட்டினம் எனும் நாட்டை, வஜ்ரகோசன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவன் மந்திரி, சங்கபாலன். வஜ்ரகோசனுக்குப் பிள்ளைகள் இல்லாதலால், சங்கபாலன் மகனான வைரமேகன் என்பவனைத் தத்து எடுத்து, இளவரசுப் பட்டம் சூட்டினான். விரைவிலேயே இறந்துவிடுகின்றான் வஜ்ரகோசன்.

நாட்டை ஆளும் பொறுப்பு, சங்கபாலனிடம் வருகின்றது. தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்து, யாத்திரை செல்கின்றான் சங்கபாலன். ஸ்ரீபுரிக்கு வருகின்றான். அந்த இடத்தின் மகிமையைக் கேள்விப் பட்டு, அங்கேயே இருந்து, யாகங்கள் பல செய்து வந்தான். ஒருமுறை யாகத்தில் அவிர் பாகத்தை ஏற்கத் திருமால் தோன்றிய போது, சங்கபாலனுக்குத் தன் முந்தைய பிறவிகள் பற்றித் தெரிந்து கொள்கின்றான். அவன் திருமாலிடம், 'கலியுகத்திலாவது எனக்கு மோட்சம் நிச்சயம் தானே?' என்று கேட்க, அவர் புன்னகையுடன் மறைகின்றார்.
***

ர்த்தமனே கலியுகத்தில், கலியனாகத் தோன்றுகின்றான்!


கர்த்தமன் தவம் செய்த ஸ்ரீபுரியே - நம் (திருவாலி) திருநகரி! (ஸ்ரீ - திரு, புரி - நகரி) இதன் அருகில் உள்ள திருக்குறையலூரில் தான் நம் கலியனின் திருவவதாரம்!

நான்கு யுகங்களிலும் பிறந்த ஒரே ஆழ்வார் இவர் தான்!

(கர்த்தமனின் தந்தையான பிரம்மன், 'உன்னைப் படைத்ததன் காரணமே படைப்புத் தொழிலைச் செய்யத்தான்! எனவே அதைச் செய்!' என்று ஆணையிட்டதைக் கேட்காமல், தவம் செய்யச் சென்றதாலேயே கர்த்தமனுக்கு நான்கு யுகங்களிலும் பிறப்பு ஏற்பட்டது என்றும் சொல்வதுண்டு!)

திருக்கோளூர்ப் பெண் பிள்ளையின் கதையையும் முடித்து விடலாம் ...

***
இராமாநுஜர், அந்தப் பெண்ணை மீண்டும் ஊருக்குள் அழைத்துச் செல்கிறார். வைத்தமாநிதியைத் தரிசித்து விட்டு, அந்தப் பெண்ணையும் தன் சீடர்களில் ஒருவளாக்கிக் கொள்கிறார்.

அதுவரை வேறு எந்த வீட்டிலும் உணவு அருந்துவதைப் பழக்கமாகக் கொள்ளாத ஸ்ரீ இராமாநுஜர், அன்று அவள் வீட்டில் உணவு அருந்தியதாகக் கதை!

இராமானுஜரிடம், நம் திருக்கோளூர் பெண் பிள்ளை, தன் 81 வரிகளில் 12 ஆழ்வார்களைப் பற்றியும் கூறியுள்ளாள்.

***

ம் ஒவ்வொருவரையும் எம்பெருமான் தன்னிடமும், தன் அடியார்களிடமும் சேர்த்துக் கொள்ளும் விதமே வியப்பானது!

பலருக்கு, ஒரு ’கடினமான சோதனை’ வரும்! அதன் மூலம் அவன் பக்கம் செல்வோம்!

எல்லா ஆழ்வார்களுக்கும் கடினமான சோதனைகள் வந்தன! அதன் மூலம், அவர்கள் பூமிக்குத் தாம் வந்த காரணத்தை அறிந்தனர்!

ஆனால் மங்கையாருக்கு மட்டும், ஒரு 'கடிச்' சோதனை வந்தது! நரசிம்மனுடைய காலைக் கடிக்கும் சோதனை!


ஆழ்வார், எம்பெருமானுடைய காலில் உள்ள நகையைக் கேட்க, அவன், 'நீயே கழற்றிக்கொள்' என்கிறான்! ஆழ்வார் மிக முயன்றும் அது வராமல் போக, அதைக் கழற்ற, கடைசியில் அவன் காலையே கடிக்கிறார் ஆழ்வார்!

(சிலர், எம்பெருமானின் கையில் உள்ள மோதிரத்தை எடுப்பதற்காகவே கடித்ததாகக் கூறுவர்.

வேறு சிலர், தாயாரின் காலில் உள்ள மெட்டியைக் கழற்றவே ஆழ்வார் தாயாரின் காலைக் கடித்ததாகவும் கூறுவர். தாயார், 'ஆழ்வார் மங்களகரமான பொருளைக் கடித்து எடுக்கின்றாரே?' என்று எம்பெருமானைக் கவலையுடன் பார்க்க, 'இது கலியுலகம். இங்கு யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' எனும் பொருளில், 'இவன் கலியனோ!' என்று எம்பெருமான் உரைத்ததாகவும் கூறுவர்.

ஆழ்வார் இருவரில் யாரைக் கடித்தார், எதைக் கடித்தார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 'கடித்தார்' என்பதில் ஒரு வேறுபாடும் இல்லை!)

அதன் பிறகே, திருமங்கையாரின் செவியில் எம்பெருமான் எட்டெழுத்து மந்திரத்தைக் கூறி, அவரைத் தன் பக்கம் அழைத்துக் கொள்கின்றான்.


ஒவ்வொரு ஆழ்வாரையும், எம்பெருமான் எவ்வாறு தம்மிடம் அழைத்துக் கொண்டான் என்பதை, நம் திருக்கோளூர்ப் பெண் பிள்ளை, அழகாகக் கூறுகின்றாள், சில வரிகளில்!

மற்ற ஆழ்வார்களுக்கும், கலியனுக்கும் உள்ள வேறுபாட்டை, நம் பெண் பிள்ளை வார்த்தைகளில் இருந்தே நாம் அறியலாம்:

கடித்து அவனைக் கண்டேனோ கலியனைப் போலே!

***

திருமங்கையாழ்வார் இயற்றிய 6 திவ்வியப் பிரபந்தங்களும், நம்மாழ்வார் இயற்றிய தமிழ் வேதங்களுக்கு விளக்கமான 6 தமிழ் உபநிடதங்களாகத் (மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தஸ், நிமித்தம், ஜோதிடம்) திகழ்கின்றன. மணவாள மாமுனிகள்,

மாறன் பணித்த தமிழ் மறைக்கு* மங்கையர்கோன்
ஆறு அங்கம் கூற அவதரித்த* - வீறுடைய
'கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று!' என்று காதலிப்பார்*
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.


என்று கலியன் பிறப்பினையும், சிறப்பினையும், படைப்பினையும் பற்றிக் கூறுகின்றார்.


நாமும் நம் கலியன் ஆசியுடன், அவர் இயற்றிய முதல் பிரபந்தமான பெரிய திருமொழியில், அவர் அனுபவித்த நரசிம்மனைக் (51 பாசுரங்கள்) கொண்டாடுவோம்!

வாழி பரகாலன் வாழி கலிகன்றி*
வாழி குறையலூர் வாழ் வேந்தன்* - வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள்* மங்கையர்கோன்
தூயோன் சுடர் மானவேல்.
- எம்பெருமானார்

எங்கள் கதியே!* இராமநுச முனியே!*
சங்கை எடுத்தாண்ட தவராசா!* - பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்*
தங்கு மனம் நீ எனக்குத் தா.
- எம்பார்

- பெரிய திருமொழி நரசிம்மர் விரைவில் வருவார்

Read more »

Wednesday, April 08, 2009

மாயவரத்தைக் கலாய்த்த ஆழ்வார்! - திருஇந்தளூர்!

மயிலாடுதுறை! வடமொழியில் மயூரம், மாயூரம்-ன்னு தேய்ஞ்சி தேய்ஞ்சி, கடைசீல மாயவரம்-ன்னு ஆகிப் போச்சு! மாய-வரம் = மாய்ஞ்சி போக, யாராச்சும் வரம் கொடுப்பாய்ங்களா என்ன? :)

மக்களே, நேற்று மதுரை மீனாட்சிக்குக் குடமுழுக்கு-ன்னா, இன்னிக்கி மாயவரத்துல குடமுழுக்கு! மாயவரத்துல முடவன் முழுக்கு தானே?
இது என்னா புதுசா குடமுழுக்கு-ன்னு பாக்கறீங்களா? மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட அண்மையில் உள்ள ஒரு சூப்பர் ஆலயம் = திரு இந்தளூர்!

மயிலாடுதுறை பேருந்து நிலையம், காவிரியாற்றைக் கடந்தாக்கா, இரண்டு கிலோ மீட்டர் தொலைவு கூட இருக்காது...திரு இந்தளூர் கோயில்!
108 திவ்ய தேசங்களில் (திருத்தலங்களில்) ஒன்று! ஆழ்வார் மங்களாசாசனம் பெற்றது! திருமங்கையாழ்வார் மிகவும் வம்பு பண்ணி கலாட்டா செய்த கோயில்! அட, மாயவரத்தானுக்கே ஆப்பா? :)

வாசனை மிக்க ரங்கன் = பரிமள ரங்கன்! அவன் ஆலயத்துக் குட முழுக்கு தான் இன்னிக்கி! (Apr-9-2009)! போவோமா? மாயூரம்ம்ம்ம்ம்? :)

எல்லாருக்கும் நம்ம மாயவரம் மைனர், மயிலாடுதுறை மாணிக்கம், அபி அப்பா டிக்கெட் எடுத்துருவாரு! நீங்க வண்டியில் ஏறி குந்துங்க! :)
மொத்தம் 10,599 பேருப்பா! அபி அப்பா, தலைக்கு 15/-ரூ மேனிக்கு மொத்தம் 1,58,985/-ரூ - கவுன்ட்டர்ல கட்டுங்க! :)


* பொதுவா, சிவாலயங்களில் = கும்பாபிஷேகம் (குடமுழுக்கு)! குடத்து நீரை அப்படியே கொட்டி முழுக்காட்டுவாங்க!
* பெருமாள் கோயில்களில் செய்யப்படுவது = சம்ப்ரோக்ஷணம்! (நன்னீர் தெளித்தல்)! இதைக் கும்பாபிஷேகம்-ன்னு சொல்ல மாட்டாங்க! குட முழுக்காக இல்லாமல், நீர்த் தெளிப்பு மட்டுமே இருக்கும்!

திரு இந்தளூர் எம்பெருமானுக்கு சுகந்தன்-ன்னு பேரு! அதாச்சும் பரிமளம் வீசுபவன்! அழகிய தமிழில் மரு இனிய மைந்தன்!
அவன் மேனியில் எப்போதும் ஒரு சுகந்தம், வாசனை வீசும்! அதான் பரிமள ரங்க நாதன்! மது-கைடப அசுரர்கள் அபகரிப்பால் பொலிவிழந்த வேதங்களுக்கு மீண்டும் நறுமணம் வீசச் செய்தவனும் கூட!

கருவறையில், அரங்கன் தலை மாட்டில் காவிரி அன்னையும், கால் மாட்டில் கங்கை அன்னையும் பணிந்து உள்ளார்கள்!
கங்கையிற் புனிதமாய காவிரி என்ற பட்டமும் கொடுத்து, தென்னகத்துக் காவிரிக்கும் சிறப்பு செய்தமையால் இந்தக் கோலம்!

* திருவரங்கத்தில் காவிரி மாலவனுக்கு மாலையாய்ப் பாய்கிறாள்!
* திருச்சேறையில் அரங்கனுக்கே காவிரி அன்னை ஆகிறாள்!
* திரு இந்தளூரில் அவன் திருமுடியைத் தாண்டியே காவிரி ஓடுகிறாள்!

எம்பெருமான் திருவடிவம் கொள்ளை அழகு! திருவரங்கத்தைக் காட்டிலும் பெரிது! 12 அடி X 6 அடியாய், முழுதும் பச்சைக் கல்லில் ஆனது!
பட்டுப் பீதாம்பரத்தின் மடிப்புகளும், கை விரல் நகங்களும் தெரியும் அளவுக்கு நுணுக்கமாகச் செய்யப்பட்டிருப்பதை, ஆரத்தியின் போது காணலாம்!

பஞ்ச ரங்க தலங்களுள் என்று சொல்வார்கள்!
1. திருவரங்கம் = கஸ்தூரி ரங்கன் = பெரிய பெருமாள்
2. குடந்தை = ஹேம ரங்கன் = ஆராவமுதன்
3. திரு இந்தளூர் = பரிமள ரங்கன் = மருவினிய மைந்தன்
4. கோவிலடி = அப்பால ரங்கன் = அப்பக் குடத்தான்
5. மைசூர்-ஸ்ரீ ரங்கப் பட்டினம் = ஆதி ரங்கன் = ரங்கநாத சுவாமி

* ஆதி ரங்கம் = திருவரங்கம் / * மத்ய ரங்கம் = திருக் குடந்தை / * அந்த ரங்கம் = மயிலாடு துறை (திரு இந்தளூர்) - என்பதும் இன்னொரு வழக்கு!

சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி, அவனுடைய பிராயச்சித்தம் என்னும் கழுவாயை ஏற்று, சாபம் தீர்த்ததால், இந்து+ஊர் = இந்தளூர்!

இதெல்லாம் அப்பால பாத்துக்கலாம்! மொதல்ல மாயவரத்தான் ஆப்பு வாங்கின கதையைப் பார்ப்போம் வாங்க! :)



அன்று செம வெயில்! ராபின்ஹூட் ஆழ்வாரான நம்ம திருமங்கை மன்னன், ஆடல்-மா என்னும் குதிரையின் மேலேறி பறந்து வருகிறார்! மாயவரம் ரங்கனைப் பார்க்க அம்புட்டு ஆசை! பரிமள ரங்கன்-ன்னு சொல்றாங்களே! அவ்ளோ வாசனையா அந்த அரங்கன் மேல?

உச்சி கால நேரம் துவங்க இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு! ஆனால் மாயவரம் சுகவாசி பரிமள ரங்கனோ கோயில் கதவை அடைத்து விட்டான்!
முகத்தில் அடித்தாற் போல கதவு சாத்தியதால், ஆழ்வாருக்குப் பெருத்த ஏமாற்றம்! :( குதிரையின் மேல் அறக்க-பறக்க வந்தது இதற்குத் தானா?

"ரங்கா! இது தகுமா? இன்னும் நேரம் இருக்கே உச்சிக் காலத்துக்கு! அதற்குள் கதவடைப்பா? அதுவும் இப்படி முகத்தில் அடித்தாற் போலவா கதவை மூடுவது?"

"ஆழ்வீர்! இது மாயூரம்! இங்கு எல்லாம் சட்ட திட்டப்படி தான் நடக்கும்! உமக்கு கொஞ்சம் பொறுமை தேவை!"

"இது என்ன நியாயம் ரங்கா? சட்ட திட்டப்படி நடக்கணும்-ன்னா, இன்னும் ஒரு நாழிகை கழித்தல்லவோ, ஆலய நடையை அடைக்கணும்?"

"ஓ......நீர் அப்படி வருகிறீரோ? நான் சொன்ன சட்ட திட்டம் என்னவென்றால், இங்கு நாங்கள் சொன்னதே சட்ட திட்டம்! அதைத் தான் சொன்னேன்! நீர் போய் பிறகு வாரும்! மாயூர மைந்தர்கள் யாருக்காகவும் எதையும் தளர்த்திக் கொள்ள மாட்டார்கள்! அறிவீரோ?"

"ஆகா! நீங்கள் எப்போதுமே அறிவு ஈறாகத் தான் அறிவீர் என்று அடியேனும் அறிவேன்!
அறிவோம்! அறிவோம் என்று வந்த அடியேனை, அரி-ஓம் என்று சொல்ல வைத்தாயே!
அறியோம்! அறியோம் என்றாலும் அரி-ஓம் என்றே வரும்! முதலில் அதை நீர் அறிவீரோ?"

"தமிழ்க் கடவுளிடமே தமிழை வைத்து விளையாட்டா? போதும் இந்த அழகுத் தமிழ்ப் பேச்சு! போம்! போய், பிறகு வாரும்!"

"ஆம்! எம் தமிழ் அழகு தான்! அது உம்மை விட அழகு தான்! அதனால் தானே பச்சைத் தமிழ் பின் சென்ற பசுங் கொண்டலே என்று ஒவ்வொரு புறப்பாட்டிலும், தமிழ் ஓதுபவர்கள் பின்னே ஓடுகிறாய் ரங்கா? அப்புறம் எதற்கு இந்த வீண் அலட்டல்? இதுவும் மாயூரம் சட்ட திட்டமோ?"

(மெளனம்)



"மணம் கமழும் அழகன் என்ற ஆணவத்தில் பேசுகிறாய் பரிமள ரங்கா! அடியாரைப் பழித்தான் அரங்கன் என்று நாளை உன்னைத் தான் எல்லாரும் தூற்றப் போகிறார்கள்! ஞாபகம் வைத்துக் கொள்!"

"அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை! அத்தனை பேருக்கும் என் நடையழகும் குடையழகும் காட்டி விடுவேன்! இப்போது தூற்றும் கூட்டம், அப்போது தூபம் காட்டும்! ஹா ஹா ஹா!"

"என்ன??? அடியவர் என்றால் இளக்காரமா? என்ன ஆணவம் உனக்கு?"

"ஆ! நவம் நவமாகப் பாடும் உமக்கும் ஆ-நவம் தான்! எமக்கும் ஆ-நவம் தான்! இவ்வளவு எதிர் வாதம் செய்கிறீரே! அதற்குப் பதில் ஒரு பாசுரம் பாடி என்னைக் குளிர்விக்கலாமே?"

"உன்னைப் பார்க்கக் கூட இல்லையே! கதவடைத்து விட்டாயே! பார்க்காமல் எப்படிப் பாடுவதாம்?"

"ஏன்? நம்மாழ்வார் என்னும் நம் ஆழ்வார்! அவர் இருந்த இடத்தில் இருந்தே நம்மைப் பார்க்காமலேயே பாடவில்லை? அது போல் பாட முடியாதா?
பார்த்தாலே பரவசம்! பார்க்கா விட்டாலும் பரவசம்! முதலில் அதை நினைவிற் கொள்ளும் நீர்!"

நம்மாழ்வார் என்ற பேரைக் கேட்டதுமே திருமங்கை மனம் கரைகிறது! மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வார் அடியவர்கள் குல முதல்வன் ஆயிற்றே! சங்கரர் எப்படியோ, அதே போல் தமிழுக்கும் வைணவத்துக்கும் இந்த மாறன் அல்லவா?
அதே போல் முப்பத்தி இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, தத்துவக் கரை கட்டிய குழந்தைப் பையன் அல்லவா? மாறன் மொழி திரு-வாய்-மொழி ஆயிற்றே! திருவாய்மொழிக்கு உருகாதார் ஒரு வாய்மொழிக்கும் உருகார்!

சரி, போனால் போகட்டும்! நம்மாழ்வாருக்காக, நாதனைப் பாடத் துவங்குகிறார் ஆழ்வார்! பத்துப் பாசுரங்கள்! இந்தளூர் பரிமள ரங்கன் மீது!
ஆனால் ஒவ்வொரு வரியிலும் உள் குத்து வைத்துப் பாடுகிறார்! மாயவரத்தானுக்கு உன் குத்து, என் குத்து இல்லை! உள் குத்து! தமிழ்க் குத்து! :)


சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில்! நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை!
நல்லார் அறிவீர், தீயார் அறிவீர், நமக்கு இவ்வுலகத்தில்,
எல்லாம் அறிவீர்! ஈதே அறியீர் இந்த ளூரீரே!


இப்ப என்ன? உம்மைப் பாடணும்! அவ்ளோ தானே? நானும் பாடாம போவப் போறதில்லைங்காணும்!
மற்ற அடியார்களைப் போலவே என்னையும் ஏமாத்திடலாம்-ன்னு நினைச்சிட்டீங்க போல!
நல்லவங்க யாரு-ன்னு அறிவீரு! தீயவங்க யாரு-ன்னு அறிவீரு! எல்லாமே அறிவீரு!
எல்லாம் அறிஞ்ச அறிவீரு! திருவாளர். இந்தளூர்! ஆனா, நாஞ் சொல்லுறதை மட்டும் தான் அறிய மாட்டீரு இல்லையா? :))

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு, இங்கு இழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின் றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர்! இந்த ளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!


உம்ம கிட்ட போயி ஆசை வச்சேனே! அடியார்க்கு ஆதரவா திரிகிற எனக்கு நல்ல மரியாதை கொடுத்தப்பா மாயவரத்தானே!
உம்மை என்னா-ன்னு சொல்லி பாடுறது மிஸ்டர். இந்தளூர்? ஆங்! அதான் சரியான வழி! சில பேரு ரொம்ப நல்லா "வாழ்த்துவாங்க"! எப்படித் தெரியுமா? ="நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க டே!" - அதே போல ரங்கா, உம்மை அடியேனும் வாழ்த்தறேன்!

மிஸ்டர் இந்தளூர்! மிஸ்டர் மாயவரம்! மிஸ்டர் பரிமள ரங்கா!
வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ந்தே போம் நீரே! நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க டே! :)))

திருஇந்தளூர் ரங்க நாயகி - பரிமள ரங்கன்
மரு-இனிய-மகள், மரு-இனிய-மைந்தன் திருவடிகளே சரணம்!
ஆலயக் குடமுழுக்கு (நன்னீராட்டுக்கு) வாழ்த்துக்கள்! இதோ அழைப்பிதழ்!
Read more »

Thursday, December 11, 2008

ராபின்ஹுட் ஆழ்வார்! Happy Birthday!!

ஆழ்வார்களிலேயே படு வேகமானவர்!
முதலில் நீலன்; பின்னர் திருமங்கையின் மன்னர்; அதற்குப் பின் கள்வர்; பெருமாளிடமே வழிப்பறி செய்த ராபின்ஹூட்! அவரின் Birthday இன்று! ஆமாம், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபம் அன்று தான் திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள்! (Dec 11, 2008)

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் ஆழ்வார் அவதாரம். (எட்டாம் நூற்றாண்டு); திருக்குறையலூர் என்னும் ஊரில் (சீர்காழிக்கு அருகில்) பிறந்தார்;
உலக வாழ்வில் மிகவும் ஈடுபட்டுப், பின்னர் எல்லாம் அற என்னை இழந்த நலமாய், நாரணன் பணி செய்து கிடந்தார். "வைணவ அருணகிரி" என்றும் நயத்துக்குச் சிலர் சொல்லுவார்கள்!

நிலையில்லாத இந்தப் பூவுலகில், எம்பெருமான் பாதங்களை ஒருவர் நேராகத் தொடத் தான் முடியுமா? காலம் எல்லாம் தவங் கிடக்கிறார்களே, இதற்காக!
வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்! தொட்டது தான் தாமதம்!
இனி வேறு என்ன!!! கலியன் (வலிமை மிக்கவன்) என்று எம்பெருமானே இவரை வாய் விட்டு அழைத்தான்! இவர் காதில் "நாராயண" எட்டெழுத்து மந்திரம் உபதேசித்து அருளினான்.

இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா? மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!
வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!


அவர் பிறந்த நாளில், இதோ அவரின் நெஞ்சை அள்ளும் ஒரு பாசுரம்!
திருவேங்கடமுடையான் மீது தீராத காதல் கொண்டு, கடைத்தேற வழி தெரியாது, "அப்பா... உன்னை வந்து அடைந்தேன்! காப்பாற்று" என்று பாடுகிறார்!
செப்பார் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை என்
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே!

இவரை ஆட்கொண்டானா? அவரே சொல்கிறார்; கீழே மிக முக்கியமான பாசுரம்; பாக்கலாம் வாங்க!
இந்தப் பாசுரம் வைணவர் உலகம் கொண்டாடும் மிக முக்கியமான பாசுரம்!!
மந்திரப் பூர்வமானது! (திரு மந்திரம்-திரு எட்டு எழுத்து- அஷ்டாக்ஷரம்);
இதை சதா சர்வ காலமும், அதிலும் இறுதிக் காலத்தில் கேட்க எல்லாரும் விரும்புவர்! அவ்வளவு விசேடம்!
பெருமாள் தன் காதில் சொன்னதை, அவர் ஊருக்கெல்லாம் சொல்லும் பாசுரம்!


குலம்தரும் செல்வம் தந்திடும்
--அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
--அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
--பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
--நாராயணா என்னும் நாமம்!


நல்ல குலம்/சுற்றத்தைத் தரும் (உத்தமர் தம் உறவு); செல்வம் தரும் (திருமகள் கடாட்சம்).
அடியவர்கள் படும் துன்பங்களை எல்லாம் தரைமட்டமாக்கும்! (நிலந்தரம்)
நீளமான வைகுந்தப் பாதையை (நீள்விசும்பு), நொடியில் அருளும்;
இறைவன் அருளும், கைங்கரியம்/தொண்டு (பெருநிலம்) என்னும் மகா பாக்கியத்தையும் அளிக்கும்!

வலிமை தரும், மற்ற எல்லாம் தரும். (அவனை அடைய என்ன வலிமையும், மற்றவையும் உனக்குத் தேவைப்படுமோ, அவை எல்லாம் தரும்)
பெற்ற தாயை விட அதிகமான பரிவு காட்டும்!
நல்லதே தரும் சொல் ஒன்றே ஒன்று! அது தான் நாராயணா என்னும் நாமம்!
அதை நான் கண்டு கொண்டேன்! நீங்களும் கண்டு கொள்ளுங்கள்!!



ithan meeL-pathivu :)
Read more »

Saturday, December 02, 2006

ராபின்ஹுட் ஆழ்வார்! Happy Birthday!!

ஆழ்வார்களிலேயே படு வேகமானவர்!
முதலில் நீலன்; பின்னர் திருமங்கையின் மன்னர்; அதற்குப் பின் கள்வர்; பெருமாளிடமே வழிப்பறி செய்த ராபின்ஹூட்! அவரின் Birthday இன்று! ஆமாம், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபம் அன்று தான் திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள்! (Dec 03, 2006)

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் ஆழ்வார் அவதாரம். (எட்டாம் நூற்றாண்டு); திருக்குறையலூர் என்னும் ஊரில் (சீர்காழிக்கு அருகில்) பிறந்தார்;
உலக வாழ்வில் மிகவும் ஈடுபட்டுப், பின்னர் எல்லாம் அற என்னை இழந்த நலமாய், நாரணன் பணி செய்து கிடந்தார். "வைணவ அருணகிரி" என்றும் நயத்துக்குச் சிலர் சொல்லுவார்கள்!

நிலையில்லாத இந்தப் பூவுலகில், எம்பெருமான் பாதங்களை ஒருவர் நேராகத் தொடத் தான் முடியுமா? காலம் எல்லாம் தவங் கிடக்கிறார்களே, இதற்காக!
வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்! தொட்டது தான் தாமதம்!
இனி வேறு என்ன!!! கலியன் (வலிமை மிக்கவன்) என்று எம்பெருமானே இவரை வாய் விட்டு அழைத்தான்! இவர் காதில் "நாராயண" எட்டெழுத்து மந்திரம் உபதேசித்து அருளினான்.

இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா? மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!
வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!


அவர் பிறந்த நாளில், இதோ அவரின் நெஞ்சை அள்ளும் ஒரு பாசுரம்!
திருவேங்கடமுடையான் மீது தீராத காதல் கொண்டு, கடைத்தேற வழி தெரியாது, "அப்பா... உன்னை வந்து அடைந்தேன்! காப்பாற்று" என்று பாடுகிறார்!
செப்பார் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை என்
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே!

இவரை ஆட்கொண்டானா? அவரே சொல்கிறார்; கீழே மிக முக்கியமான பாசுரம்; பாக்கலாம் வாங்க!
இந்தப் பாசுரம் வைணவர் உலகம் கொண்டாடும் மிக முக்கியமான பாசுரம்!!
மந்திரப் பூர்வமானது! (திரு மந்திரம்-திரு எட்டு எழுத்து- அஷ்டாக்ஷரம்);
இதை சதா சர்வ காலமும், அதிலும் இறுதிக் காலத்தில் கேட்க எல்லாரும் விரும்புவர்! அவ்வளவு விசேடம்!
பெருமாள் தன் காதில் சொன்னதை, அவர் ஊருக்கெல்லாம் சொல்லும் பாசுரம்!


குலம்தரும் செல்வம் தந்திடும்
--அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
--அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
--பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
--நாராயணா என்னும் நாமம்!


நல்ல குலம்/சுற்றத்தைத் தரும் (உத்தமர் தம் உறவு); செல்வம் தரும் (திருமகள் கடாட்சம்).
அடியவர்கள் படும் துன்பங்களை எல்லாம் தரைமட்டமாக்கும்! (நிலந்தரம்)
நீளமான வைகுந்தப் பாதையை (நீள்விசும்பு), நொடியில் அருளும்;
இறைவன் அருளும், கைங்கரியம்/தொண்டு (பெருநிலம்) என்னும் மகா பாக்கியத்தையும் அளிக்கும்!

வலிமை தரும், மற்ற எல்லாம் தரும். (அவனை அடைய என்ன வலிமையும், மற்றவையும் உனக்குத் தேவைப்படுமோ, அவை எல்லாம் தரும்)
பெற்ற தாயை விட அதிகமான பரிவு காட்டும்!
நல்லதே தரும் சொல் ஒன்றே ஒன்று! அது தான் நாராயணா என்னும் நாமம்!
அதை நான் கண்டு கொண்டேன்! நீங்களும் கண்டு கொள்ளுங்கள்!!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP