Saturday, July 25, 2009

கோதையின் பிறந்தநாள்: Kissing For Dummies

மக்களே, என் மனத்துக்கினிய தோழி, என் மன்னவன் காதலி,
தென் பாண்டித் தெள்ளமுது, பேரழகுப் பெட்டகம்,
தமிழன்னையே விரும்பிச் சுவைக்கும் தமிழ் பேச வல்லாள், காதலர்க்கு நல்லாள்
...அவளுக்கு இன்று பிறந்த நாள் (Jul-25-2009, ஆடிப் பூரம்)!

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
தோள் மேல் கை போட்டுப் பேச வல்ல தோழியே!
நாள் எல்லாம் உன் நட்பில் நானும் வாழி வாழியே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-டீ, கோதை!
Happy Birthday dee, my sweet lil' village girl! :)

அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, இன்னும் பல நூற்றாண்டு இரு!


பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


மற்ற ஆழ்வார் பாடல்களை எல்லாம் கோதை பாடியிருந்தா எப்படிப் பாடி இருப்பா? சும்மா கற்பனைக் குதிரையில் போய் வருவோமா?
வாங்க மக்கா! ஆடல் மா என்னும் வெண் புரவி காத்துக்கிட்டு இருக்கு! :) மொதல்ல அரங்கத்தில் இருந்தே ஆரம்பிப்போம்!

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே!
- இது தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பாடல்! இதையே என் தோழி ஆண்டாள் பாடினா?

இச்சு தா, இச்சு தா! கன்னத்துல இச்சு தா-ன்னு "ரன்" படப் பாடல் போல பாடலாம் தான்! ஆனால் பாசுரச் சந்தம் வரணும்-ல்ல? இலக்கிய மருவாதை-ன்னு ஒன்னு இருக்குல்ல? :)

இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-இச்" சுவை!
அதான் ஆண்டாள் "இச்" சுவையைப் பாடுகிறாள்! :)
"இச்" சுவையைத் தவிர, இந்திர லோகத்துச் சுகமே கொடுத்தாலும் வேணவே வேணாம் என்கிறாள்! :)

"இச்" சுவை தவிர யான் போய், இந்திர லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகர் உளானே!


காதல் விளையாட்டை...முத்தத்திலேயே துவங்கி, முத்தத்திலேயே முடிப்பது என்பது ஒரு பெரிய கலை!
ஏழு ஜென்ம பந்தத்து முத்தம் கொடுப்பது எப்படி?
கோதை கிட்டயே கேட்கலாம் வாரீகளா?
Here we go...முத்தம் For Dummies :)



1. முதலில் கோச்சிக்கணும்! அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்! :) ஏன்னா, கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்குச் சுவை அதிகம்! :)

அட, வேங்கடத்தில் உலாவும் கொழுத்த மேகங்களே! போயி உங்க ஆளிடம் சொல்லுங்க! திரு-வேங்கடம்-உடையானை இந்த உலகத்தில் ஒருத்தனும் மதிக்க மாட்டான்!
எப்பவும் அவனே கதி என்று கிடந்த என்னை, அவன் கேவலமா நினைச்சிட்டான்-ல்ல? இவ இளிச்ச வாயி, அன்பைத் தானாவே கொடுத்துருவா-ன்னு நினைச்சிட்டான்-ல்ல?

கதி என்றும் தான் ஆவான்,
கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
வையகத்தார் மதியாரே!



2. இப்போ கோவம் தணிக்க அவன் வந்தாகணும் இல்லையா? அப்போ என்ன பண்ணனும்? உடனே "இச்" கொடுத்துறதா? நோ நோ! :)

அவன் ஆடையைப் பிடித்து இழுத்து அவனை வம்பு செய்யணும்! அது என்ன எப்பமே அவன் தான் சேலையை ஒளிக்கணுமா? அவன் இடுப்புத் துணியை நான் ஒளிச்சி வச்சா என்ன?

அவன் இடுப்புத் துணியின் வாசத்தில் அவன் வாசம் வீசுகிறதே! அந்தத் துணியைப் பிடித்திழுத்து என் மேல் சுற்றிக் கொள்கிறேன்!
அவனுக்குத் தெரியாமல், அவன் ஆடையை, அவன் சூட்கேசில் இருந்து களவாடி, என் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறேன்! :)

பெண்ணின் வருத்தம் அறியாத,
பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை,
வாட்டம் தணிய வீசீரே!



3. அடுத்து??? ஆளு கிட்டக்க கிட்டக்க வரான்! கண்ணு படக் படக்-ன்னு அடிச்சிக்குது! இதயம் தடக் தடக்-ன்னு அடிச்சிக்குது!
ச்சே! என்ன வீரம் பேசினாலும், அவன் கிட்டக்க வரும் போது மட்டும் மனசு லாஸ்ட் மினிட் கூட்டணிக் கட்சியா மாறிடுதே! :)

அய்யோ! என் உதடே! அவன் கிட்டக்க போயிறாதே! அதுக்கப்புறம் நானோ கண்ணை மூடிக்குவேன்! அதுனால அவனைச் சரியாப் பார்க்க முடியாது போயிடும்!

* அவன் முடியைக் கோதி விடும் குழல் அழகு!
* தொடர் வண்டியில் என்னுடன் விசில் அடித்து வரும் வாய் அழகு!
* என்னை முழுங்குவது போல் பார்க்கும் கண் அழகு!
* அவனுடைய தொப்புளில் (கொப்பூழ்) நான் விடும் பம்பரம் அழகு!

அதையெல்லாம் நான் முத்தம் கொடுப்பதற்கு முன்பே பார்த்து விடுகிறேன்! அதுக்கு அப்பறமா என் மூடின கண்ணு மூடினது தான்! :)
எனவே, இதழொடு இதழ் கலக்கும் முன், கண்ணோடு கண் கலக்கட்டும்!
* முதலில் மேலோர் = கண்கள்!
* அப்பறம் தான் கீழோர் = இதழ்கள்!

எழிலுடைய அம்மனை மீர்! என் அரங்கத்து இன் அமுதர்,
குழல் அழகர்! வாய் அழகர்! கண் அழகர்! கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர்! எம்மானார்! எம்மானார்!




4. ஹைய்யோ! அவன் பச்சைக் கர்ப்பூர நெடி என் பச்சை உடம்பை என்னமோ பண்ணுதே! அவன் கிட்டக்க வந்துட்ட்ட்ட்ட்ட்டான்! அவன் உதடுகள் கிட்ட்ட்ட்ட்ட்டக்க வந்துரிச்சி!

என்ன டூத் பேஸ்ட் யூஸ் பண்ணுவான்-ன்னு தெரியலையே?
சரியான வெண்ணையா இருப்பானோ??? வெண்ணைய் வீச்சம் அடிக்குதே!
Pepsodent Butter-ன்னு புது பிராண்ட் ஏதாச்சும் வந்திருக்கா என்ன? :)

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் "வாய்ச் சுவையும்+நாற்றமும்"
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே!

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
அண்ணலும் தேக்கினான்! அவளும் தேக்கினாள்!

சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடய
"வாய்த் தீர்த்தம்" பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!


அடியார்க்கு நீர்த் தீர்த்தம்! எனக்கோ அவன் வாய்த் தீர்த்தம்!
* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம்! = உன்-என் வாழ்வில், செயல் வெற்றி!
* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம்! = உன்-என் வாழ்வில், அறன் வலியுறுத்தல்!
* மூன்றாம் தீர்த்தம் = த்ரிதீயம் மோக்ஷ ப்ரோக்தம்! = உன்-என் வாழ்வில், வாழ்வாங்கு வாழல்!


5. முத்தம் கொடுத்து முடித்த பின்னர், தேன் உண்ட மயக்கத்தில்,
"ஆகா, வாழ்வின் பயனை அடைந்தேன்"-ன்னு தப்பித் தவறிக் கூட டயலாக் விட்டுறாதே!
லேசு மாசா, "I am not that satisfied, But ’twaz Just Okay" என்பது போல் ஒரு லுக்கு விடணும்! :)

அப்போ தானே அடுத்த முறை, இன்னும் அறிவா அழகா வேறு மாதிரி முயல்வான்? :)
ஞாபகம் வச்சிக்க மனசே! வேடனுக்குத் தானே சென்று விழும் பறவையை விட, வேட்டையாடி விழும் பறவை மேலத் தான் காதல் அதிகம்!
அதனால் நீ அவனிடம் விழ நினைச்சாலும், வேட்டை நாடகம் நடத்தி, அப்புறமா விழு! :)

மாலாய்ப் பிறந்த நம்பியை,
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்கள் உரைப்பானை,
இங்கே போதக் கண்டீரே?

ஏலாப் பொய் சொல்லும் என் செல்லப் Porkki-ன்னு கொஞ்சம் திட்டி அனுப்பு!
அப்போ தான் ஏக்கமாப் போவான்! அப்போ தான் அடுத்த முத்தச் சுவை இன்னும் சுவை பெறும்! :))


கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!


"அடியே! கோதை! அவனைக் கட்டிக்கிட்டா எங்கேடி இருப்பாய்? அவனுக்கு-ன்னு தனியா வீடு-ன்னு கெடையாது! வெளியில் இருந்து பார்க்க வேணும்-ன்னா ரொம்ப பணக்கார மலைவீடு போல இருக்கும்! ஆனா மொத்தமா முப்பது நிமிஷம் கூடத் தூங்க விட மாட்டானுங்க! :)
108 வீடு வீடாச் சுத்தணும்! வேர்வை பொங்கி வழியும் அவன் கரு-அறையில்! ஏசி கூட இருக்காது! கரென்ட் கூட இருக்காது! பாம்புப் படுக்கை! சொர சொர-ன்னு இருக்கும்! என்னடி பண்ணுவ?"

Kothai Says:
"Just a small room, power cuts ok...
Even with a lil' candle light,
His sight is tight that makes me light!

Soothing music from the street
My windows open, welcome beat...
Gentle breeze that brings in ease

High Definition in his Eyes...
Sub Woofer as he Whispers...
Home Theater in his Prank
That makes me really crank...
Armani, CK, Obsession
Are dull and dumbest possession!
His fragrance comes and fascinates
The "Smell of my Lover" oscillates!

Thatz my home, Thatz my home!
His arms have rooms that are large enough!
Thatz my home! Thatz my home!

* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
* "உன்" தன்னோடு உற்றோமே ஆவோம்!
* "உனக்கேஏஏஏ" நாம் ஆட் செய்வோம்!
* மற்றை நம் காமங்கள் மாற்று!

அவனுக்கு என்னை "விதி!"
என்ற இம் மாற்றம் நான் கடவா வண்ணமே நல்கு!



இவள் விசித்திர விறுவிறு காதல், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிர முத்தங்களுடன் வாழியே! வாழியே!!
Read more »

Tuesday, July 21, 2009

சூரிய கிரகணம் For Dummies: தமிழில் என்ன? அறிவியலில் என்ன?

வாங்க மக்கா! முப்பது நாளில் மூன்று கிரகணங்கள், கிரகண காலத்தில் என்ன செய்யக் கூடாது?, கிரகண கால நன்மை தீமைகள், கிரகணமும்-அரசியலும்-மஞ்சள் துண்டும் - இப்படி விதம் விதமாப் படிச்சி ஓய்ஞ்சிருப்பீங்க! :)

1. ஆன்மீகத்தில் கிரகணம்
2. தமிழில் கிரகணம் (கரவணம்)
3. அறிவியலில் கிரகணம்-ன்னு மூனாப் பிரிச்சி, லேசு மாசாப் பாத்துருவமா? :)



1. ஆன்மீகத்தில் கிரகணம்:

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கிரகணப் பதிவையும் ஒருகா வாசித்து விடுங்கள்! மூட நம்பிக்கையான பழக்கங்களை அதிகம் சொல்லாது இயல்பாக எழுதியுள்ளார்! :)

இன்று அதிகாலை (July-22-2009),
பிரம்ம முகூர்த்தம் என்னும் சிற்றஞ் சிறு காலையில்,
05:28 முதல் 07:14 வரை சூரிய கிரகண காலம்!
அதுவும் முழுமையான பூர்ண சூரிய கிரகணம்!

ஜப்பான், சீனா, இந்தியா என்று தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் தெரியும் இந்த கிரகணத்தில், இந்தியாவில் பீகார்-தாரிக்னா என்னும் கிராமத்தை நோக்கிப் பலரும் ஓடுகிறார்கள்!
தெளிவான வானம் என்பதால் ஆர்யபட்டா முன்பு முகாம் இட்ட இந்த ஊர், கிரகணத்தின் போது மட்டும் வெளிச்சத்துக்கு வருகிறது! :)

கிரகண காலத்தில் செய்யப்படும் தியானமும், ஜபமும், யோகமும்
பல லட்சம் மடங்கு பயன் தர வல்லவை என்று யோக நூல்கள் சொல்லும்!


அதனால் ஆலயங்களில் வழக்கமான சாங்கிய பூசைகள், கூட்டான பிரார்த்தனைகள், மேள தாள மணிச் சத்தங்கள் இதெல்லாம் ஏதும் இல்லாது,
கிரகண காலத்தில், கோயில் நடையைச் சார்த்தி வைப்பார்கள்!
இது ஏதோ மூட நம்பிக்கைக்காகவோ, கிரகணத்துக்குப் பயந்து கொண்டோ செய்வது அல்ல! :)

கூட்டத்தோடு கூட்டமாக வெறுமனே இறைவனைக் கண்ணால் மட்டுமே தரிசிக்காது,
தனிமையில் தியானமும்,
அவனைப் பற்றிய நினைவுகளை நம்முள் இருத்திக் கொள்ளவுமே இவ்வாறு செய்யப்படுகிறது!

புறக் கண்களால் மட்டுமே தரிசனம் செய்யாது, அகக் கண்களாலும் உணரும் பொருட்டே இந்தக் கோயில் நடை சாத்தல்!
கிரகண கால உணர்தல்கள் நமக்குப் பன்மடங்கு பயன் தரும் என்பதால் இப்படி!

கிரகண காலத்தில் தியானம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை! அனைவரும் இறைவனைப் பற்றி வாசித்து, மனத்தில் உணரவாவது முயற்சி செய்ய வேண்டும்! இதோ வாசியுங்கள்:
1. ஓம் என்றால் என்ன?
2. நமோ என்றால் என்ன?
3. நாராயண என்றால் என்ன? - என்ற தொடர்பதிவுகளின் தொடர்ச்சியை இன்றிரவு இட முயல்கிறேன்! :)



2. தமிழில் கிரகணம் (கரவணம்):

* கிரகணம் என்ற சொல்லுக்குத் தமிழில் பெயர் இல்லையா?
* தமிழர்கள் வானியல் ஆராய்ச்சி செய்தார்களா இல்லையா?

இதெல்லாம் தனி ஆய்வு! :) கோதை என்னும் கிராமத்துப் பெண், Ascent of Venus & Descent of Jupiter பற்றியெல்லாம் குறித்து வைக்கிறாளே! இதோ! வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று!

கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!
காக்கை "கரவா" கரைந்துண்ணும் என்பது குறள்!
நிலவோ, பூமியோ சூரியனை மறைப்பதால் (கரத்தலால்) = கரவணம்!
தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதைப் பேசும்!

கரவணம் பற்றிய சங்கப் பாடல்கள் பற்றியெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்!
ஏன்னா அதில் அறிவியலும் உண்டு! அறிவில்லாத இயலும் உண்டு! :)
அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல
என்று நற்றிணைப் பாடல்! பறவைகள் கிரகண காலத்தில் ஒளிந்து கொள்ளும் பாடல்கள் பலவும் சங்கத் தமிழில் உண்டு!

அருணகிரியும், பாரதப் போரில் செயற்கையாக எழும்பிய கிரகணத்தைப் பற்றி திருப்புகழ் முதல் பாட்டில் பாடுகிறார்! ஆழ்வார்களும் பாடுகிறார்கள்!

முத்தைத் தரு பத்தித் திருநகை என்னும் முதல் திருப்புகழில், "பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக" - என்று பேசுகிறார் அருணகிரி!
கண்ணன் தன் ஆழியால் கதிரவனை மறைத்து நிழல் உண்டாகச் செய்து,
இருள் காட்டிச் செயத்ரதனை வெளிக் கொணர்ந்தமை பற்றி இன்றும் ஆய்வு செய்கிறார்கள்!

* பாரதப் போர் தொடங்கும் முன்னர் ஏற்பட்ட நிலாக் கரவணம் (சந்திர கிரகணம்) பற்றிய குறிப்பும்,
* அதற்குப் பதின்மூன்று நாள் கழித்து, சக்கர மறைப்பு (அ) கதிர்க் கரவணம் (சூரிய கிரகணம்) பற்றியும் பேசப்படுவதை வைத்து,
மகாபாரத காலம் (Dating of the Mahabharata War) பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே உள்ளது!
போரின் காலத்தை ஆறு வகையாகக் கணிக்கிறார்கள்: 3129 BCE - 1397 BCE

சில புராணங்களில் ராகு, கேது, பாம்பு விழுங்கல் என்று கதைகளை அளந்தாலும், அதற்கெல்லாம் தத்துவம் என்று விவஸ்தை இல்லாமல் சிலர் பெயர் கொடுத்தாலும்.....

* நம் விஞ்ஞானிகளான வராக மிஹிரர் போன்றவர்கள் சந்திரன்/ பூமியின் கருநிழல் - அயனிழல் (அயல் நிழல்) - Umbra & Penumbra - இதுவே கிரகணத்துக்குக் காரணம் என்று தெளிவாகக் காட்டிச் சென்றுள்ளனர்!

* ஆனால் பிரம்மகுப்தர் போன்ற சில விஞ்ஞானிகளோ அதை ஒப்புக் கொள்ளாமல், "நிழல்" கிரகங்களான (சாயாக் கிரகங்கள்) - Ascending & Descending Nodes - ராகு & கேதுவின் மறைப்பே என்றும் மாற்றி வாதிட்டுள்ளனர்! ஆனால் ராகு/கேதுவை பாம்பாகக் கருதாமல், சாயா-நிழலாகவே கருதிப் பேசியுள்ளனர்.

எது எப்படியோ, பாம்பு விழுங்குதல் கிடையாது! நிழலின் பொருட்டே இந்த வானக் கோலம் என்பது இந்திய விஞ்ஞானத்தில் அப்போதே தெளிவு!
நாம் தான் ஓவர் புனிதப் பூச்சால், செய்த தவறுகளை/அறியாமையை இப்படியெல்லாம் கதைகட்டி மறைத்து விட்டோம்!
இந்திய விஞ்ஞானத்தை இந்திய மதங்களே அறிந்தோ அறியாமலோ சம்பிரதாயப் போர்வையில் மறைத்து விட்டன!


3. அறிவியலில் கிரகணம் (கரவணம்):

இதான் எல்லாருக்குமே தெரியுமே-ங்கறீங்களா? சும்மா படம் பாருங்க! அப்பறம் எப்பமே மறக்க மாட்டீங்க! அறிவியல் பூர்வமா யாரு கேட்டாலும் உங்களால வாயாலயே அத்தனையும் விளக்க முடியும் :)

நிலவின் நிழலில் எப்படி மறைந்து வெளி வருகிறது என்ற அருமையான படம்:


சூரிய கிரகணம் ஏன் வருகிறது?
அதுவும் ஏன் அமாவாசை அன்னிக்கி மட்டுமே வருகிறது?
ஹிஹி! சூரிய கிரகணம்-ன்னாலும் சந்திரனை வைச்சித் தான் எதுவுமே பேச முடியும்! :)

* சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் போகும் போது,
* அதன் நிழல் பூமி மேல் விழுந்தா,
* அந்த நிழல் பட்டு, சூரியத் தகடு மறைவது போல் ஒரு தோற்றம்
* அதான் சூரிய கிரகணம்-ன்னு எல்லாருக்குமே தெரிஞ்சது தான்!

ஆனால் ஏன் அமாவாசை அன்னிக்கி மட்டும் இது நடக்கிறது? அதான் மாசா மாசம் அமாவாசை வருதே! அப்புறம் ஏன் மாசா மாசம் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை?

= ஏன்னா நிலவின் சுற்று வட்டப் பாதையும், பூமியின் சுற்று வட்டப் பாதையும் ஒரு 5 டிகிரி சாய்வு! அதுனால முக்கால் வாசி நேரம், இந்த நிழல் விழாம நாம எஸ்கேப் ஆயிடறோம்!

ஆனால், வருசத்துக்கு ரெண்டு முறையாச்சும், எப்படியோ நிழல் எங்கேயாச்சும் விழுந்துடுது! அதுனால அப்படி விழுந்த இடத்தில் மட்டும் கிரகணம் தெரியுது!
அமாவாசை அன்னிக்கு நமக்குத் தான் நிலவு தெரியலையே தவிர, சூரியனில் இருந்து பார்த்தா நல்லாவே தெரியும்! :)

நிலவின் நிழல் ரெண்டு தினுசா விழும்!
1. கருநிழல் - Umbra - உள் நிழல்
2. அயல் நிழல் (அயனிழல்) - Penumbra - வெளி நிழல்
நீங்களே சுவற்றுக்கு அருகில் போய் நின்னு உங்க நிழலைப் பாருங்க! ரெண்டு தினுசா தெரிவீங்க! :)

* உள் நிழல் விழுந்தா முழு கிரகணம்! (Total Eclipse)
* வெளி நிழல் விழுந்தா முழுமையற்ற கிரகணம்! (Partial Eclipse)

முழுமையற்ற கிரகணம் பார்வைக்கு இன்னும் டேஞ்சர்! ஏன்னா, சூரிய ஒளி மறைஞ்சும் மறையாமலும் இருக்கு! மங்கலாத் தானே இருக்கு-ன்னு பார்த்தா அம்புட்டு தான்!

முழுமையான கிரகணத்தின் போது ஏற்படும் வைர மோதிர சேவை பார்த்து இருக்கீயளா? :) (Diamond Ring Effect)
நிழல் விலக ஆரம்பிக்கும் போது, நிலவின் பள்ளத்தாக்கில் உள்ள மலை முகட்டு இடுக்குகள் வழியாக லேசா ஒளி சிந்த ஆரம்பிக்கும் போது, இந்த வைர மோதிர டகால்ட்டி நடக்குது! :)

முழுமையான கிரகணத்தில்,
நிலவு ஒரு தகடு போல் முழுக்க சூரியனை மறைத்துக் கொள்ளும் போது, சூரியனின் வெளி வட்டமான கரோனா (Corona) என்னும் ப்ளாஸ்மா நன்கு தெரியும்!
ஆனால் கொஞ்ச நேரம் தான்! அந்தக் கொஞ்சூண்டு நேரத்துக்கு விஞ்ஞானிகள் காத்திருக்கும் அழகைப் பார்க்கணுமே! திருப்பதி தரிசனம் கதை போலத் தான்! :)

இன்னும் நிறைய சொல்லலாம்! ஆனால் அதெல்லாம் விக்கி பசங்க பதிவில் வரவேண்டியது! ஆனால் பதிவர் இலவசக் கொத்தனார் இப்போ என்ன வீடு கட்டிக்கிட்டு இருக்காரு-ன்னு தான் தெரியலை! :)
கீழ்க்கண்ட காணொளிகளையும் பாருங்கள்! "ஏன் சில இடங்களில் மட்டும் கிரகணம் தெரிகிறது?" என்பதற்கும் விளக்கம் கிடைக்கும்!

கிரகண செய்முறை விளக்கம்:


கிரகணம் ஏன் சில இடங்களில் மட்டும் தெரிகிறது?



இப்போ கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ் :)

1. ஏன் சூரிய கிரகணம்-ன்னா அமாவசை மட்டுமே? சந்திர கிரகணம்-ன்னா பெளர்ணமி மட்டுமே?

2. சூரியனும் சந்திரனும் பார்க்க ஒரே சைசில் இருப்பதால் நம்ம பூமியில் பார்க்கும் கிரகணத்துக்கு மவுசே தனி! :)
ஏன் நம்ம சந்திரன் சூரியனைப் போல ஒரே சைசில் தெரியறான்?

3. நாம செயற்கையா செயற்கைக் கோள் எல்லாம் ஏவுறோமே? அதன் நிழல் எல்லாம் விழுந்து ஏன் கிரகணம் தெரிவதில்லை? :)

4. கிரகணம் என்பது பூமியில் மட்டும் தானா? இல்லை செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter) போன்ற கோள்களில் கூடத் தெரியுமா?

அறிவியல் புலிகள் சொல்லுங்க பார்ப்போம்! ஆன்மீகப் புலிகளும் பதில் சொல்லலாம்! :)
கிரகணம் என்னும் வடமொழிச் சொல், தமிழில் "கரவணம்" என்பதையும் மறக்காதீக! :)
Read more »

Friday, July 17, 2009

குமரனின் அப்பாவுக்கு அஞ்சலியும், ஆதி சங்கரர் அம்மாவும்!

ஆதி சங்கரர்! அவர் அன்னையின் ஒப்புதலுக்காக, எட்டு வயதில் ஒரு முதலை நாடகம் ஆடி, துறவறம் பூண்டார்! பூணும் முன்னர், தான் துறவியாகப் போய் விட்டாலும், அன்னையின் இறுதி நேரத்தில் தாமே வருவதாக வாக்களித்துச் செல்கிறார்! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார்!

நாட்கள் நகர்ந்து, அத்வைத அரசாங்கம் நாடெங்கும் வளர்கிறது! சிருங்க-கிரி என்னும் சிருங்கேரியில் முதல் மடம் கண்டாகி விட்டது!
*ஞானப் பிழம்பாக ஞான யோகி,
* கர்மாக்களை மதிக்கும் கர்ம யோகி,
என்று சங்கரர் துவி (இரண்டு) யோகச் சக்கரவர்த்தியாக விளங்குகிறார்!

அப்படி இருந்தும்,
நஹி நஹி ரட்சதி டுக்ருண் கரணே = வெறுமனே மந்திரம் உருப் போடுதல் உன்னை ரட்சிக்காது!
பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்! கோவிந்தம் பஜ, மூட மதே! = மூட அறிவே, மூட ஞானமே! - கோவிந்தனைத் துதி! துதி! என்றே பக்தி மார்க்கமாகப் பாடுகிறார்!

கோதை இந்த "கோவிந்த" சப்தத்தை மூன்று முறை க்ளைமாக்ஸில் அடுத்தடுத்து வைக்கிறாள்!
* கூடாரை வெல்லும் சீர் "கோவிந்தா"
* குறை ஒன்றும் இல்லாத "கோவிந்தா"
* இற்றைப் பறை கொள்வாம் அன்று காண் "கோவிந்தா" - எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு!

கோ+விந்தன் = பசுக்களை உரிமை கொண்டாடிக் கொள்பவன்! காப்பவன்! நல்ல மேய்ப்பன்!
மேயும் உயிர்களைக் கூடவே இருந்து,
1. கொண்டு
2. காத்து
3. கொள்வதால்
இந்த கோவிந்த சப்தத்துக்கு மட்டும் மற்ற நாராயண சப்தங்களை விடத் தனிச் சிறப்பு! குறிப்பாக, "இறுதி" நேரங்களில் இந்தச் சப்தத்தை மென்மையாக எடுத்து ஓதுவார்கள்!



சிருங்கேரியில் இருக்கும் சங்கரருக்கு அன்று ஏனோ ஒரு உள்ளுணர்வு பொங்குகிறது! பகவான் காட்டிக் கொடுக்கிறான் காலடியை!

எப்பமே தன் காலடியைக் காட்டிக் கொடுக்கும் கோவிந்தன்,
இன்று அவர் காலடியைக் காட்டிக் கொடுக்கிறான்! அவர் ஊரான காலடியை!


அன்னையின் முடிவினை அறிந்து.....விரைகிறார் துறவி.....தவ யோகச் சீலர்!
அந்த பிரம்ம வேதாந்த மனசுக்கே மனம் பேதலித்துக் கொள்கிறது!
ஆற்றிலோ பெருக்கு அதிகம்! கடக்கவோ நேரம் ரொம்ப ஆகிறது!
விமானக் காலமா என்ன? நேரம் கடந்தே தாய்க்கு அருகில் வருகிறார்!

இதோ இன்னும் ஒரு சில நிமிடங்கள் தான்.....

தாய்க்கு வாக்களித்த படி "வெறுமனே" வர முடிந்ததே தவிர,
குறித்த காலத்தில் வந்து கோ தானம், மந்திர ஜபம் எல்லாம் செய்து வைக்க முடியவில்லை!
"மாத்ரு பஞ்சகம்" என்னும் உள்ளம் கரைக்கும் ஐந்தே பாடல்கள் பாடுகிறார் சங்கரர்!

1. தனன்யா தஸ்மை ஜனன்யை நமஹ!
= தனயன் சேவிக்கிறேன்! தாயே நமஹ! தந்தையும் ஆனாய் நமஹ!

2. காவி உடையில் என்னைக் கனவு கண்டு கலங்கிய அன்னையே! நமஹ!

3. நேரத்தில் வர முடியவில்லை! நீர்த் தானம், மந்திர ஜபம் முழங்க உனக்கு எதுவும் ஏற்பாடு செய்ய முடியவில்லை! என்னை மன்னிப்பாய் அன்னையே! நமஹ!

4. முத்தே என்று கொஞ்சிய உனக்கு வெத்து அரிசி ஈவேனோ? அன்னையே நமஹ!

5. பிரசவத்தில் அன்று நீ வலியால் கூவிய சொல்லை எல்லாம் இன்று நானும் கூவுகிறேன்! - அப்பா, கோவிந்தா, சிவா, முகுந்தா!
அஹோ ஜனன்யை! ரசிதோ யம் அஞ்சலீம்! அஞ்சலீம்!



.....அன்னை கிளம்பி விட்டாள்!

தகப்பானாயும் இருந்து தனக்கு வழி காட்டினாளே! அவளுக்கு ஒரு வழி காட்ட சங்கரருக்குத் துடிக்கிறது!
சிவபெருமானைத் துதிக்கிறார்! - ஈசனே! நேசனே! நேயத்தே நின்ற நிமலா!

பூத கணங்கள் உடனே வருகின்றன!
ஆனால் பாம்புத் தோல் போர்த்தி வரும் கணங்களைக் கண்டு அன்னையோ நெளிகிறாள்! அஞ்சி நடுங்குகிறாள்!
சிவாய நம என்று சிந்தித்து இருப்பார்க்கு அபாயம் ஏது? என்று அந்தப் பேதைக்குத் தெரியவில்லை! பாவம்!

அவள் நிலையைப் புரிந்து கொள்கிறார் சங்கரர்!
அவளுடன் விவாதித்து அவள் ஆத்மாவுக்குத் தத்துவ உபதேசமாய் எதுவும் செய்யாமல்......உடனே விஷ்ணு புஜங்கம் பாடுகிறார்!

விசுத்தம் சிவம் சாந்தம் அத்யந்த ஹீனம்
பரம் பிரம்ம யம் வேத தஸ்மை நமோஸ்து!

- என்று சிவபெருமானும் அதே விஷ்ணு புஜங்கத்திலேயே வைத்துத் துதிக்கப் படுகிறார்! சிவ கணங்கள் கை கூப்புகின்றன! பெருமாளின் மெட்டும் சிவ தாண்டவ மெட்டாகவே இருக்கிறது!

முகே மந்த ஹாசம்! நகே சந்திர பாசம்!
கரே சங்கு சக்ரம்! சுரேசாதி வந்தியாம்!
புஜங்கே சயானாம்! பஜே பத்ம நாபம்!
நமஸ்தே! பிரபன்னார்த்தி! ஹரீம் நமஸ்தே!


அதோ!
அவரைப் போலவே தாங்களும் சங்கு சக்கரம் தாங்கிக் கொண்டு,
மந்தகாசம் பூத்து,
அவரின் சாரூப சேவகர்கள், ஜய விஜயர்களான தூதர்கள் வந்து நிற்கிறார்கள்!

அந்த மந்தகாசத்தைப் பார்த்து, இன்முகத்தைக் கண்டு, அன்னை இப்போது பயம் இல்லாமல் அவர்களுடன் செல்கிறாள்!

தான் வேண்டிய போது வந்த பூத கணங்களை வணங்கிச் சங்கரர் நன்றி தெரிவிக்கிறார்!
"எங்கு சென்றாலும் அந்தத் திருவடி நீழல் "ஓன்றில்" தானே இளைப்பாறுதல் இருக்கப் போகிறது" என்று கணங்களும் ஜயவிஜயர்களும் சிரித்த வண்ணம் செல்கின்றனர்!!

மாசில் வீணையும் மாலை மதியமும்
ஈசன் எந்தை இணையடி நீழலே!
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு!



துறவி இறுதி காரியங்கள் செய்யக் கூடாது என்று சிலர் புத்தக நூல்களைக் காட்டி வாதாடுகிறார்கள்! ஆனால் சாஸ்திர வேதாந்த சங்கரர் அதைப் பொருட்படுத்தவில்லை!
வாக்களித்த வண்ணம் தாமே அனைத்தும் செய்கிறார்!
துறவும், காதலும், அன்பும் - எல்லாமே நிலைகள் தான்!
எதற்கும் எதுவும் தடையாக இருக்காது எம்பெருமானுடைய புத்தகத்திலே!


இன்று (17-July-2009),
நம் குமரனின் தந்தையார் - இறைத்திரு. நடராஜன் மல்லி சுந்தரராமன்
அவர்கள் மறைந்த பத்தாம் நாள்! அதற்கான தேறுதல் பதிவே இது! விவரப் பதிவு இங்கே!

நேற்று மதுரைக்குத் தொலைபேசும் போது, குமரனின் தம்பி, திரு. விஷ்வேஷ் அவர்களிடம் மட்டுமே பேச இயன்றது! அவரும் இந்தப் பத்தாம் நாள் தேறுதலை உறுதி செய்தார்! குமரன் சோர்வுடன் தூங்குவதாகவும் சொன்னார்!

நான் அண்ணா என்று அழைக்காவிட்டாலும், அடியேனின் மூத்தவரான, நம் ஆன்மீகச் செம்மல் குமரன்.....
* பத்தாம் நாள், தேறுதல் நாள் அன்று, மனம் தேறி,

* மேலும் பல நல்ல ஆக்கங்கள் நமக்குக் கொடுத்து,
* மகன் தந்தைக்காற்றும் உதவி...இவன் தந்தை எந்நோற்றான் கொல்? - எனும் சொல்! என்று யாவும் நல்லனவே நடக்க,
* அவர்கள் குல தெய்வம், திருப்பரங் குன்றத்து முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு அமைகிறேன்! நாராயண! நாராயண!


இந்தத் தேறுதல் நாளில் வழக்கமாக ஓதப்படும் தமிழ் வேதம் இதோ:

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே.

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே.

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுகென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

Read more »

Monday, July 13, 2009

புதிரா? புனிதமா?? - நாயன்மார்கள்!

முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்ட் செய்யப்பட்டுள்ளன! விளக்கங்கள் பின்னூட்டத்தில் அறிந்தவர்கள் கொடுக்கலாமே? சின்ன அம்மணி-க்கா? முகில்?? அடிச்சி ஆடுங்களேன் :)

அஞ்சலிப் பதிவென்பதால் வெற்றியாளர்-ன்னு யாரும் இல்லை!
சின்ன அம்மணி-க்கா தான் முதல் முயற்சியில் அதிகம் சொன்னது!
Followed by லோகன் & முகிலரசி! வாழ்த்துக்கள்!

வென்றார்க்கும், விளையாட்டில் நின்றார்க்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நாயன்மார்களின் நல்லருள் இசையும்-தமிழும்-இறையும் ஓங்கட்டும்!


மக்கள்ஸ்! எப்படி இருக்கீக? புதிரா புனிதமா போட்டு ரொம்ப நாள் ஆச்சுது! மதுரை மீனாட்சி விழாவில் போட்டதோடு சரி! பதிவர் அல்லாத ரெண்டு மூனு பேரு இன்னிக்கி மின்னஞ்சல்-ல மெரட்டவே மெரட்டீட்டாங்க! போடறீங்களா இல்ல, உங்கள பத்தியே நாங்க புதிரா புனிதமா, போடட்டுமா?-ன்னு :)

இந்த அளவுக்கெல்லாம் விட்டா, அப்புறம் என் கதி அதோ கதி தான்! "அதோ" கதி என்று பெருமாள் மட்டுமே எனக்கு இப்பத்திக்குத் தாங்கலா இருக்காரு! அதுனால எந்த மறுபேச்சும் பேசாம, இதோ...புதிரா புனிதமா! இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! = நாயன்மார்கள்!

இன்று.....உள்ள உறுதி அதிகம் கொண்ட நாயன்மார் ஒருவரின் குருபூசை! ஆனி மாதம் ரேவதியில் (Jul-14-2009)!

இறைவனோடான தோழமை ஒருத்தருக்கு! தன் இச்சையான காதலுக்கும் இறைவனையே தூது அனுப்புகிறார்! ஆனால் தோழமையால் செய்தது "அந்த" இன்னொரு தொண்டருக்குப் புரியவே இல்லை.....உம்ம்ம்ம்.....புரிஞ்சிக்க மாட்டேன்-ன்னு அடம் பிடிக்கிறார்!

ச்சீ...ஈசனைத் தாழ்த்திப் பிறழ்த்தி விட்டாயே என்று ஒரு நினைப்பு!
தோழமை புரியவில்லை! எப்பமே இறைவனை உசரமான பீடத்தில் ஏற்றி வைத்தே பழக்கம் அல்லவா!

இதைப் புரிய வைக்க ஈசனும் விளையாடினார்! தீராத நோயைக் கொடுத்து, தோழன் தடவினால் நோய் தீரும் என்று சொன்னார்!
ஆனால் இவருக்கோ, "நோயே தீரலை-ன்னாலும் பரவாயில்ல! ஆனா அவன் மட்டும் வரவே வேணாம்!" :)

ஆனால் தம்பிரான் தோழரோ இந்த வெறுப்பைப் பொருட்படுத்தவில்லை! தன்னை வெறுத்தாலும், அடியவர் என்னும் பாசத்தால் அவர் இடத்துக்குச் செல்கிறார்!
இந்த "மாபாவி" சிவ வேடம் பூண்டு வருகிறானே, அவனை வரவேற்கணுமே என்ற வெறுப்பில், தன் சூலை நோயைத் தானே குத்திக் கொண்டு இறந்து போகிறார்!

தம்பிரான் தோழர் அரண்மனை வந்து, இந்தக் கோரக் காட்சியைக் கண்டு வெதும்பி, தன்னையும் மாய்த்துக் கொள்ள வாளெடுத்த போது,
ஈசன் அருளால், அந்த வெறுப்பாளர் பொறுப்பாளராய் உயிர் பெற்று எழ,
தம்பிரான் தோழரின் மாசில்லா அன்பைப் புரிந்து கொண்டு தழுவிக் கொள்கிறார்!
அந்த வெறுப்பாளரான பொறுப்பாளர் தான் ஏயர் கோன் கலிக்காமர்! அவரின் குரு பூசையே இன்று!

அதான் வாங்க ஆடுவோம், புதிரா புனிதமா! - நாயன்மார்கள்! விடைகள்: நாளை இரவு....நியூயார்க் நேரப் படி!


குறிப்பு: இந்தக் குரு பூசையின் போது.....
அடியேனின் மூத்தவரான, நம் ஆன்மீகச் செம்மல் குமரன்......அவர் தம் திருத் தகப்பனார்,
இறைத் திரு. நடராஜன் மல்லி சுந்தரராமன்
அவர்களின் மறைவுக்கு இந்தக் குருபூஜைப் பதிவைக் காணிக்கையாக்கி அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்!

தொடர்பான பதிவு இங்கே! பத்தாம் நாள் தேறுதல், தனிக் கதைப் பதிவாகவும் இடுகிறேன்! நாராயண நாராயண!



1

அறுபத்து மூவருள், கால வரிசையால் வந்த முதல் நாயன்மார் யார்?

அறுபத்து மூவர் வரிசையில் முதலில் சொல்லப்படும் நாயன்மார் யார்?

1
அ) திருநீலகண்டர்/ காரைக்கால் அம்மை

ஆ) ஞானசம்பந்தர்/ திருநீலகண்டர்

இ) காரைக்கால் அம்மை/ திருநீலகண்டர்

ஈ) தில்லை வாழ் அந்தணர்/ ஞான சம்பந்தர்

2

ஆழ்வார்களின் தலைவராகக் கருதப்படுபவர் வேளாளர் குல முதல்வரான நம்மாழ்வார்!

நாயன்மார்களின் தலைவராகக் கருதப்படுபவர் யார்?

2
அ) ஞானசம்பந்தர்

ஆ) அப்பர் சுவாமிகள்

இ) சுந்தரமூர்த்தி நாயனார்

ஈ) மாணிக்கவாசகர்

3

திருக்கைலாய வாசலில் உள்ளே நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட நாயனார் யார்?

பின்னர் எந்த நாயன்மார் பரிந்துரையின் பேரில் உள்ளே நுழைய முடிந்தது?

3
அ) ஒளவையார்/சுந்தரர்

ஆ) மங்கையர்க்கரசி/ சம்பந்தர்

இ) நந்தனார்/ தில்லை வாழ் அந்தணர்

ஈ) சேரமான்பெருமாள்/ சுந்தரர்

4

சில பேருக்கு இறைவன் மேல் பிடிப்பு! ஒரு சிலருக்கோ பூஜா புனஸ்காரங்கள் மேல் பிடிப்பு! இறைவன் கண்ணில் ரத்தம் வந்தாலும் சற்றே வேடிக்கை பார்க்கக் கூட முடியும்! உடல் பதறாது! ஆனால் பூசைப் பொருள் களங்கமானால் மட்டும் மனம் பதறும்! - இது தான் கர்மப் பிடிப்பால் வரும் டேஞ்சர்! :))

நெற்றிக் கண்ணனுக்கே கண்ணீந்த கண்ணப்ப நாயனாரின் உண்மையான பெயர் என்ன?

கண்ணப்பரின் மாமிச பூசையைக் கண்டு கலங்கிய சிவபக்தர் பேர் என்ன?

4
அ) ?/ சிவபாதசேகரர்

ஆ) திண்ணன்/ சிவ கோசரியார்

இ) ?/ காளத்தியப்ப குருக்கள்

ஈ) ?/ நமிநந்தியடிகள்

5

நல்ல சைவக் குடும்பத்தில் பிறந்து, வைணவப் பதிவு போடும் பசங்களும் இருக்கானுங்க! :)

இவரும் வைணவ ஆயர் குலத்தில் பிறந்து, சிவபிரானைத் துதித்தவர்! அதுவும் கண்ணனைப் போல் புல்லாங்குழல் வாசித்து வாசித்தே துதித்தவர் - யார் இந்த நாயன்மார்?

5
அ) ஆனாய நாயனார்

ஆ) கணம்புல்ல நாயனார்

இ) சேரமான் பெருமாள் நாயனார்

ஈ) காரி நாயனார்

6

பிறவியிலேயே பார்வையற்ற நாயன்மார் யார்?

இவர் தொண்டினைத் தடுத்து, இவரின் மண்வெட்டியைப் பிடுங்கிய சமணர்கள் பின்னர் பார்வை இழந்து, திருவாரூர் மன்னனால் ஊரை விட்டு நீக்கப்பட்டார்கள்!

6
அ) முருக நாயனார்

ஆ) தண்டியடிகள்

இ) சுந்தரர்

ஈ) எறிபத்த நாயனார்

7

"சற்றே விலகி இரும் பிள்ளாய்" - நந்தனாருக்காக நந்தியை விலகி இருக்கச் சொன்ன ஈசன் பெயர் என்ன? எந்தத் தலம்?

7
அ) நடராஜர்/ தில்லை

ஆ) திருமூலநாதர்/ தில்லை

இ) சிவலோகநாதர்/ திருப்புன்கூர்

ஈ) அம்பலவாணர்/ திருப்புன்கூர்

8

அறுபத்து மூவர் பட்டியலில் இந்த இரண்டு பேரும் இல்லை! அதிலும் முதலாமவர் இல்லாதது மிகப் பெரும் வியப்பு! ஆனால் இவர்கள் பாடியவை மட்டும் தேவாரத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன!

யார் இவர்கள்?

8

அ) மாணிக்கவாசகர்/ திருமூலர்

ஆ) சேரமான் பெருமாள்/ நக்கீரர்

இ) சேந்தனார்/ இசை ஞானியார்

ஈ) மாணிக்கவாசகர்/ சேந்தனார்

9

சமணர்/பவுத்தராய் இருந்து பின்னர் நாயன்மார் ஆன இந்த இருவர் யார்?

9
அ) குலச்சிறை நாயனார்/ மெய்ப்பொருள் நாயனார்

ஆ) அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார்

இ) அப்பர் சுவாமிகள்/ மெய்ப்பொருள் நாயனார்

ஈ) திருமூலர்/ பூசலார்

10

சங்கப் புலவர்கள் சிலரைப் பின்னாளில் "நைசாக" நாயன்மாராக ஆக்கவில்லை என்றாலும், அவர்கள் எழுதியதாகக் "கருதப்படும்" நூல்களை, தேவாரத் திருமுறைக்குள் கொண்டு வந்து வைத்துள்ளார்கள்! ஒரு சிலர், இவர்கள் சங்கப் புலவர்களே இல்லை! அதே பேர் கொண்ட வேறு புலவர்கள் என்றும் கூறுவார்கள்!

திருமுறையில் இடம் பெறும் இந்தப் "கருதப்படும்" புலவர்கள் யார்?

10
அ) நக்கீரர்/கபிலர்

ஆ) கபிலர்/பரணர்

இ) பரணர்/ காக்கைப் பாடினியார்

ஈ) திருவள்ளுவர்/ நக்கீரர்



கடைசியா ஒரு கேஆரெஸ் திருவிளையாடல்! பத்துக்கும் சரியான பதில் சொன்னாக் கூட, இந்த போனஸ் கேள்விக்கு மட்டும் நீங்க சரியான பதில் சொல்லலீன்னா, ஆள் மொத்தமாவே அவுட்டு! பரமபத விளையாட்டுக் கடைசீ நேரப் பாம்பு போல! என்ன ஓக்கேவா? :)

11. நந்தனாரை அவர் பேர் சொல்லி வரிசைப்படுத்தாமல், என்ன சிறப்புப் பெயரால், நாயன்மார் வரிசையில் வைத்துள்ளார்கள்? = திருநாளைப் போவார் நாயனார்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) திருநீலகண்டர்/ காரைக்கால் அம்மை ஆ) ஞானசம்பந்தர்/ திருநீலகண்டர் இ) காரைக்கால் அம்மை/ திருநீலகண்டர் ஈ) தில்லை வாழ் அந்தணர்/ ஞான சம்பந்தர்

2 அ) ஞானசம்பந்தர் ஆ) அப்பர் சுவாமிகள் இ) சுந்தரமூர்த்தி நாயனார் ஈ) மாணிக்கவாசகர்

3 அ) ஒளவையார்/சுந்தரர் ஆ) மங்கையர்க்கரசி/ சம்பந்தர் இ) நந்தனார்/ தில்லை வாழ் அந்தணர் ஈ) சேரமான்பெருமாள்/ சுந்தரர்
4 அ) ?/ சிவபாதசேகரர் ஆ) ?/ சிவ கோசரியார் இ) ?/ காளத்தியப்ப குருக்கள் ஈ) ?/ நமிநந்தியடிகள்
5 அ) ஆனாய நாயனார் ஆ) கணம்புல்ல நாயனார் இ) சேரமான் பெருமாள் நாயனார் ஈ) காரி நாயனார்
6 அ) முருக நாயனார் ஆ) தண்டியடிகள் இ) சுந்தரர் ஈ) எறிபத்த நாயனார்
7 அ) நடராஜர்/ தில்லை ஆ) திருமூலநாதர்/ தில்லை இ) சிவலோகநாதர்/ திருப்புன்கூர் ஈ) அம்பலவாணர்/ திருப்புன்கூர்
8 அ) மாணிக்கவாசகர்/ திருமூலர் ஆ) சேரமான் பெருமாள்/ நக்கீரர் இ) சேந்தனார்/ இசை ஞானியார் ஈ) மாணிக்கவாசகர்/ சேந்தனார்
9 அ) குலச்சிறை நாயனார்/ மெய்ப்பொருள் நாயனார் ஆ) அப்பர் சுவாமிகள்/ சாக்கிய நாயனார் இ) அப்பர் சுவாமிகள்/ மெய்ப்பொருள் நாயனார் ஈ) திருமூலர்/ பூசலார்
10 அ) நக்கீரர்/கபிலர் ஆ) கபிலர்/பரணர் இ) பரணர்/ காக்கைப் பாடினியார் ஈ) திருவள்ளுவர்/ நக்கீரர்

11. நந்தனாரின் சிறப்புப் பெயர் = _____
Read more »

Monday, July 06, 2009

அருணகிரிநாதர் செய்த மர்ம டகால்ட்டி! - 2

யார் காது காலி ஆச்சு? அருணையா? வில்லியா? சென்ற பதிவு இங்கே!
சில சமயம், குற்றத்தை ஒரேயடியா அடக்கணும்-ன்னா, நாமளே "சிறு" குற்றம் பண்ணாத் தான் ஆச்சு! ஓவர் ஸ்பீடில் போற ஒருத்தனை, போலீசும் ஓவர் ஸ்பீடில் போய்த் தானே பிடிக்கணும்! இதுக்காகப் போலீசை கொறைபட்டுக்க முடியுமா? :)

கண்ணன் செய்த பல செயல்களும் இப்படித் தான்! அதையே தான் அருணகிரியும் செய்யறாரு! வாயில் நுழையாத வெட்டு வெடுக்குப் பாடலைப் பாடறாரு! பொருளை அதிகம் முன்னிறுத்தாது, சொற்களைப் போட்டு பயமுறுத்தும் டெக்னிக்! :)

திதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!


இந்தப் பாட்டு கந்தர் அந்தாதியில் வரும் பாடல்! "தகர" வர்க்கப் பாடல்! "த" என்னும் எழுத்திலேயே மொத்தப் பாடலும் இருக்கும்! காளமேகம் தான் இப்படி எல்லாம் ரொம்பப் பாடுவாரு!

வில்லி-க்கோ சுத்தமாப் பொருள் தெரியலை! அங்கொன்னும் இங்கொன்னுமா கொஞ்சம் தெரிஞ்சாலும், முழுப் பொருளும் சொல்லணும்-ல?
வெட்கம் பிடுங்கித் திங்க, தோல்வியை ஒப்புக் கொள்கிறார்! எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே இங்கு இல்லையம்மா! அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்தானிந்தோம்-ன்னு சந்திரமுகி பாட்டு தான் இங்கும்! :)



திதத்தத் தத்தித்த = "திதத்த தத்தித்த" என்னும் தாளம் போட்டு
திதி தாதை = நடனம் செய்யும் தந்தை சிவபெருமானும்
தாத = மறைக் கிழவனாகிய பிரம்ம தேவனும்

துத்தி = புள்ளி வைத்திருக்கும் (படம் எடுக்கும்)
தத்தி = பாம்பு (ஆதி சேடன்)
தா தி = அந்த இடத்தில், நிலையாக இருந்து

தத்து = தளும்புகின்ற
அத்தி = கடல் (பாற் கடலையே தன் கைவசம் வைத்திருந்தாலும்)
ததி = தயிர் (ஆயர்ப்பாடியின் தயிர்)
தித்தித்ததே = தித்திப்பா இருக்கு-ன்னு
து = உண்டானே வாரி வாரி (அந்த அழகிய கண்ணன்!)

துதித்து = இவர்கள் எல்லாம் போற்றும்
இதத்து ஆதி = இதம் தருவதில் ஆதியே! அன்பர் இதத்தாதீ!

தத்தத்து = தந்தம் உடைய
அத்தி = ஐராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை = கிளி போல் கொஞ்சும் தெய்வயானைக்கு
தாத = தாசனே! தேவானை தாசனே முருகா!

தீதே துதை தாது = தீமை நிறைந்த இரத்தமும் மாமிசமும்
அதத்து உதி = மரணமும் பிறப்பும்
தத்து அத்து = ஆபத்தும் நிறைந்த
அத்தி தித்தி = எலும்பு மூடிய பை (உடல்)

தீ தீ = நெருப்பால் தகிக்கப்படும்
திதி = அந்நாளிலே
துதி தீ = உன்னைத் துதிக்கும் அடியேனின் புத்தி
தொத்தது = உனக்கே தொத்துப்பட (ஆட்பட) வேணும்!

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல்! "திதத் தத்தத்" என்று நான்கு அடிகளிலும் திரும்பத் திரும்ப வருது! இந்த வகைக் கவிதைக்குப் பேரு மடக்கு/யமகம்! இப்படி மடக்கு பாடி மடக்கி விட்டார் நம்ம அருணகிரியார்! :)

இப்போ, பதம் பிரிச்சி......
திதத்தத் தத்தித்தத் திதி தாதை, தாத, துத்தித் தத்தி, தா
தி, தத்து அத்தித் ததி தித்தித்ததே! துத் துதித்து, இதத்தா
தி, தத்தத்து அத்தித் தத்தை தாத! திதே துதை தாது, அதத்து
(உ)தி, தத்து அத்து அத்தி தத்தி, தீ தீ திதி, துதி தீ தொத்ததே!




தம் காதை அறுத்துக் கொள்ளுமாறு அருணகிரியிடம் குனிந்து காதைக் காட்டுகிறார் வில்லி! சரக்க்க்க்க்க்க்! ஆகா, அருணகிரி மனசுக்குள்ள கறுவிக்கிட்டே காதை அறுத்துட்டாரா என்ன?

அருணகிரி வில்லியின் காதில் சொன்னதே சரக்க்க்க்க்-ன்னு அறுத்துப் போட்டாப் போல் தான் இருந்தது! என்ன சொன்னாரு? = "பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள்...பெருமாளே!"

வில்லிக்கு சப்த நாடியும் ஒடிங்கிற்று! மெச்சத் தகு பொருளா? எது "மெச்சத் தகு பொருள்"?
பெருமாளே-ன்னு வேறு, அதுவும் முருகப் பழமான இவரே சொல்றாரே! ஒன்னும் புரியலையே! விழித்த படி, பேந்த பேந்த பார்க்க...

செவி அறுப்பது தம் நோக்கம் அல்ல! செவிக்கு உணவு தருவதே தம் நோக்கம்!
இனி புலவர்களைத் தமிழின் பேரால் வம்புக்கு இழுக்காமல், தமிழுக்கும் வைணவத்துக்கும் உண்மையான தொண்டு செய்ய வேண்டும் என்று சொல்லினார் அருணகிரி!
கம்பராமாயணம் அளவுக்கு விரிவாக, மகாபாரத நூல் தமிழில் இல்லை! ஆதலால் அதைத் தமிழ் செய்யுமாறும் அப்போதே யோசனை வழங்கினார்!

இன்கவி பாடும் பரம கவிகளால்,
தன்கவி, தான் தன்னைப், பாடுவியாது,
இன்று நன்கு வந்து, என்னுடன் ஆக்கி, - "என்னால் தன்னை",
வன்கவி பாடும் என் வைகுந்த நாதனே!


ஆழ்வார் பாசுரமாச்சே! இதை அருணகிரி மனப்பாடமாச் சொல்றாரே! இது என்ன அதிசயம்!
ஆகா ஓகோ ஜாலங்களை விட, ஆக்கப் பூர்வமான பணியே அரியின் பணி என்றும் ஆழ்வார் சொல்லில் இருந்தே எடுத்துக் காட்டுகின்றாரே!
வாயடைத்துப் போய் நின்றார் வில்லி! இது வரை தான் படித்தது எல்லாம், "எதைப் பிடிக்கப் படிக்கறோம்"-ன்னு தெரியாமலே படித்தது தானோ? ஐயோ!

வில்லி நெடுஞ்சாண் கிடையாக அருணகிரியார் கால்களில் வீழ்கிறார்!


முருகனைப் பாடுவதற்கென்றே வந்தவர் அருணகிரி! "யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்" என்று பாடியவர்!
அவர் எதுக்கு ஒவ்வொரு திருப்புகழிலும், "பெருமாளே! பெருமாளே!" என்று முடிக்க வேண்டும்? இப்படி இது வரை யாரும் செய்தாற் போலத் தெரியலையே! இவரு மட்டும் ஏன் இப்படி?

பெருமாள் = பெரும் + ஆள், பெரிய தலைவன் - என்று முருகனைத் தான் பெருமாளே என்று குறிப்பிடுகிறார் என்பது ஒரு சிலர் வாதம்! :)
அப்படிப் பார்த்தால், முருகன் = அழகானவன் - என்று கருப்பா சிரிப்பா அழகா இருக்குற கண்ணனைக் கூட முருகா-ன்னு கூப்பிடலாமே? :)

பொதுவாக, மக்களிடையே அதிகம் பரவி விட்ட ஒரு கடவுளின் பெயரை, இன்னொரு தெய்வத்துக்குப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை! அதுவும் அதிகப்படியாகப் புழங்க மாட்டார்கள்!
* முருகன் = அழகன் என்று கண்ணனைக் குறித்தாலும், முருகன்-ன்னா எப்பவுமே சேயோன் தான்!
* பெருமாள் = பெரிய ஆள் என்று முருகனைப் பாடினாலும், பெருமாள்-ன்னா எப்பவுமே மாயோன் தான்!

அப்புறம் ஏன் அருணகிரி இந்த டகால்ட்டியைச் செய்கிறார்? :) ஹா ஹா ஹா!

எத்தனை பேருக்கு "முத்தைத் தரு பத்தி" திருப்புகழ் தெரியும்? கையைத் தூக்குங்க பார்ப்போம்! அந்தப் பாட்டை நல்லாக் கவனிச்சிருந்தா, இந்தக் குழப்பமே வராது! :)
இது என் மனத்துக்கு இனிய இராகவன் என்னும் பதிவர். ஜிரா அவர்கள் ரொம்ப நாளாக் கேட்டுக்கிட்டு இருக்குற வெளக்கம்! :) அருணகிரியார் குரு பூசை அன்று தான் இது கை கூடணும்-ன்னு இருக்கு போல!

முத்தைத் தரு பத்தித் திருநகை-ன்னு முதன் முதலாகப் பாடுகிறார் அருணகிரி! அதுவும் முருகனே "முத்து" என்ற முதற் சொல்லெடுத்துக் கொடுக்கிறான்! முத்து என்பது அருணகிரியின் அம்மா பேரும் கூட!

அப்படிப்பட்ட முதல் முதல் பாட்டில் யாரைப் போற்றியிருப்பாரு? முருகனைத் தானே! அவன் லீலைகளை ஒவ்வொன்னா அடுக்கிச் சொல்லிக்கிட்டே வரலாம் தானே? என்ன பண்றாரு-ன்னு நீங்களே பாருங்க!


முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கு ஒரு வித்துக் குருபர ...... என ஓதும்

முக்கண் பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து முவர்க்கத்து அமரரும் ...... அடி பேண


* முத்து போல புன்னகை பூக்கும் அத்திக்கு (தேவானைக்கு) இறைவனே! சத்திச் சரவணா!
* மோட்சம் என்னும் முத்தியைக் காட்ட ஒரு விதை நீ! குரு நீ!
* ஈசனுக்கே ஓங்காரம் கற்பித்து, அதை அரியும் அயனும் உடன் கேட்க, மூவரும் தேவரும் அடி பேணும், ஞான குரு நீ!

குருவாய் வருவாய்-ன்னு, உபதேசம் வைத்துத் தன்னை ஆட்கொண்டதால், இப்படிப் குருவாக முதலில் பாவித்துப் பாடுகிறார்! அடுத்து என்ன பாட வேண்டும்? எத்தனையோ இருக்கே! நெற்றிப் பொறி, கார்த்திகைப் பெண்கள், ஆண்டிக் கோலம், சூர சங்காரம், வள்ளித் திருமணம் - இதையெல்லாம் பாட வேண்டாமா? அதுவும் முருகனைப் பாடும் முதல் முதல் பாட்டாச்சே!

பத்துத் தலை தத்தக் கணை தொடு = இராவணனைக் கணை தொடுத்த இராகவப் பெருமாள்!
ஒற்றைக் கிரி மத்தைப் பொருது ஒரு = மத்தாக நின்ற கூர்மப் பெருமாள்!
பட்டப் பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் = சக்கரத்தால் சூரியனை மறைத்த கண்ண பெருமாள்!

பத்தற்கு இரதத்தைக் கடவிய = பக்த-நண்பனுக்காகத் தேரோட்டும் கீழ் மட்ட வேலையைக் கூடச் செய்யத் தயங்காத கண்ண பெருமாள்
பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள் = இப்படி பச்சைப் புயலான "மாயோன் மெச்சும் சேயோனே"
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ...... ஒருநாளே = என்னை ரட்சித்து அருள்! ரட்சித்து அருள்!

ஹிஹி! திருப்புகழ் ஆரம்பமே எப்படி இருக்கு பாருங்க! எதுக்கு இவரு பெருமாளின் அவதாரங்களை எல்லாம் லிஸ்ட்டு போடணும்?
இன்னும் முருகனையே முழுக்கச் சொன்னபாடில்லை! தந்தைக்கு உபதேசம் செய்த குரு-ன்னு காட்டியதோடு சரி! அதுக்குள்ளாற எதுக்கு இந்த வீண் வேலை எல்லாம்? இது என்ன திருப்புகழா? இல்லை திருமால் புகழா?? :))

ஏதோ சில பாடல்களில் அங்கொன்னும் இங்கொன்னுமாகச் சொன்னாரு-ன்னா, சரி, ஏதோ மத நல்லிணக்கம் ஏற்படுத்தச் சொல்றாரு-ன்னு எடுத்துக்கலாம்!
* ஆனால் ஒவ்வொரு திருப்புகழிலும் இப்படியே பண்ணா, என்ன அர்த்தம்?
* அதுவும் முதல் திருப்புகழிலேயே இப்படிப் பண்ணா, என்ன அர்த்தம்?
அருணகிரி என்ன நினைச்சிக்கிட்டு இருக்காரு மனசுல? கேட்க ஆளில்லை-ன்னு நினைச்சிட்டாரா? :)

ஞாபகம் வச்சிக்கோங்க! இந்த முதல் திருப்புகழ் முருகனே கொடுத்தது!
ஆக.....இப்படிப் பாடணும்-ன்னு நினைச்சது யாரு? - இது அவருக்காத் தோன்றியதா? இல்லை முருகனே கொடுத்ததா?

"பச்சைப் புயல் ***மெச்சத் தகு பொருள்*** - பெருமாளே" என்பது தான் இதற்கு விடை!......மெச்சத் தகு பொருளா? அப்படீன்னா??.....எதுக்கு மெச்சணும்? யாரை மெச்சணும்?.......... (தொடரும்)

அருணகிரியார் குரு பூசை அதுவுமாக, அருணகிரி திருவடிகளே சரணம்!!!
Read more »

Sunday, July 05, 2009

"வைணவத் திமிர்" அடக்கிய முருகன் பாட்டு! - 1

என்ன மக்களே, எப்படி இருக்கீக? தலைப்பைப் பார்த்து என்னமோ ஏதோ-ன்னு பயந்து போயிறாதீங்க! ஒரு சிலர், மகிழ்ந்தும் போயிறாதீங்க :)))

யாருப்பா அது? யாரு திமிரை யாருப்பா அடக்கினாங்க? அது என்னா பாட்டு-ன்னு கேக்கறீங்களா மக்கா?
* அவர் ஒரு வைணவக் குடும்பத்தைச் சார்ந்தவர்!
* அவர் திமிரை அடக்கியது ஒரு சைவ அறிஞர்!
* அந்தப் பாட்டு ஒரு முருகப் பெருமான் பாட்டு!

ஆகா! சைவ அறிஞரா? வைணவத் திமிரா? கேட்கவே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே! மேல சொல்லு! மேல சொல்லு!
அதை நீயே வேற சொல்றியே கேஆரெஸ்? ஆகா! இப்ப தான் கோடைக்கு குளுமையா இருக்கு! :)

இந்த மாதிரி பதிவைத் தானே, நாங்க ஒரு க்ரூப், உன் கிட்ட இருந்து எதிர்பார்த்தோம்?
எப்பமே ஆழ்வார், வைணவம்-ன்னு பதிவு போட்டு "ஒசத்தியா காட்டினா" எப்படி? ஒன்னு, நீ அடக்கி வாசிக்கணும்! இல்லே எங்களையும் ஒசத்தியாக் காட்டணும்! :))
அதுக்காகத் தானே உன் கூட முன்னாடி சண்டையெல்லாம் போட்டோம்? ஆனா ஒன்னும் முடியலை-ன்னு விட்டுட்டோம்!

ஆகா! கொஞ்சம் லேட்டானாலும் இப்போ "திருந்திட்ட" போல இருக்கே! சொல்லு சொல்லு, சீக்கிரம் கதையைச் சொல்லு! :)))))



ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும், அவற்றையெல்லாம் உளமறிய ஒப்புக் கொண்டு, அதிலிருந்து நெஞ்சார மீண்டு, அகம் கரைந்த முருக பக்தர் = அருணகிரிநாதர்!
"காமமே" வாழ்க்கை என்று இருந்தவர் தான்,
"முருகன் காதலே" வாழ்க்கை என்றும் மாறினார்!

இன்று அருணகிரியார் குரு பூசை (July-06,2009)!
நினைவு நாள் = ஆனி மூலம்! அதை ஒட்டிய இரண்டு தொடர் பதிவுகள்! ஓக்கேவா? :)


சமயப் பூசல்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர் அருணகிரி! ஆனாலும் அதில் முடிந்த அளவு சிக்கிக் கொள்ளாத தமிழ்ப் பெருமுனிவர்! எப்படி அவரால் மட்டும் இது முடிந்தது?

* ஏனென்றால் அவருக்கு நன்றாகத் தெரியும்...."அந்தப் பூசல்கள் எல்லாம் முருகனுக்காக அல்ல! முருகன் பேரைச் சொல்லிக் கொண்டு ஒரு அமைப்பாகத் திரிபவர்களுக்காக!"
* இறைவன் தானே நம்மைக் காப்பாற்றுபவன்? ஆனால், ஏதோ தாங்கள் தான் வாதிட்டு, "இறைவனையே காப்பாற்றுவதாக" எண்ணிக் கொள்ளும் போது தான், இத்தனை ஆட்டங்களும்!

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ?
இறைவனை விற்று மதத்தைக் காப்பாற்றிய கதைகள் தான் இத்தனையும்!


தரையில் நடப்பவனுக்குத் தான் மேடு பள்ளங்கள்! விமானத்தில் பயணிக்கும் போது அல்லவே! அது போல் உயரப் பயணித்த அருணகிரிக்கு சமய மேடு பள்ளங்கள் தெரியவில்லை!
* அதனால் தான் திருப்புகழ் ஒவ்வொன்றன் முடிவிலும் அருணகிரியார் "பெருமாளே! பெருமாளே!" என்று அனுபவித்து முடித்தார்! - ஆகா! இது என்ன திருப்புகழா? இல்லை திருமால் புகழா?? :)

ஏன் இப்படி முருகனைப் போயி பெருமாளே-ன்னு முடிக்கணும்? முன் பின் கேட்டிராத ஒன்றாக அல்லவா இருக்கிறது? அந்த ரகசியத்தையும் அவர் வாயாலேயே அடுத்த பதிவில் பார்க்கப் போகிறோம்! :)



தென் பெண்ணை ஆறு பாயும் திருமுனைப்பாடி நாடு! அங்கு பிறந்தவர் தான் வில்லிபுத்தூரார் என்ற பெருங் கவிஞர்! வில்லிபாரதம் என்று தமிழில் மகாபாரதம் பாடியவர்!
ஆனால் அவரைத் திருத்தி அப்படி மகாபாரதம் பாட வைத்தவரே நம்ம அருணகிரி தான்! :)

அந்த 14-15 நூற்றாண்டுக் காலத்தில், சிற்றிலக்கியங்கள் பெருத்துப் போன காலம்! சும்மா தமிழும், கொஞ்சம் யாப்பும் கற்றிருந்தால் போதும்! உடனே "புலவர்"!
யாரு வேணும்-ன்னாலும் என்ன வேணும்-ன்னாலும் எழுதலாம்! அட என்னைய போல பைசா பெறாத திடீர் "பதிவர்"-ன்னு வச்சிக்குங்களேன்! திடீர் பதிவர் போல, திடீர் புலவர்! :)

கன்னித் தமிழை, மன்னனின் அந்தப்புர லீலைகளுக்கு எல்லாம் "உலா" எழுதி அடகு வைத்த காலம்-ன்னு கூடச் சொல்லலாம்! :)
இப்பேர்ப்பட்டவர்கள் கையில் சமயமும் தத்துவமும் சிக்கினால் என்ன ஆகும்? குரங்கு கையில் பூமாலை தான்!

ஆழ்வார்களும் நாயன்மார்களும் போற்றி வளர்த்த "தெய்வத் தமிழை", "சண்டைத் தமிழ்" ஆக்கிய பெரும் பெருமை, அந்தச் சிற்றிலக்கியக் காலத்துப் "புலவர்கள்" பலரைச் சாரும்! :(

தங்களுக்குள் ஏற்பட்ட உயர்வு தாழ்வுச் சண்டைகளுக்கு, சமயத்தைச் சூப்பர் கேடயமாகப் பயன்படுத்திய காலம்! சமயமும் தெரியாது, பக்தியும் தெரியாது!
ஆனால் எல்லாம் தெரிந்தது போல, செந்தமிழில் எதுகை மோனையோடு, அடுக்குத் தொடரில் பிச்சி வாங்கிய காலம்! "ஓண்டிக்கு ஒண்டி வரீயா?" என்பதை டீஜென்ட்டான தமிழில் கேட்ட காலம்! :)

வில்லிபுத்தூராரும் நெத்தியில ஒப்புக்கு நாமம் போட்டுக்கிட்டு, அப்படி ஒரு டைப்பாகத் தான் இருந்தாரு! :)
பெருமாள் பக்தியை விட, அவருக்குச் சைவ எதிரிகள் நிறைய! :))



மன்னனிடம் சென்று "காகைக்கா காகூகை, கூகைக்கா காகாக்கை" ன்னு எல்லாம் தமிழில் விளையாட்டு காட்டுவாரு!
மன்னன் பரிசில் தந்தாலோ அதை மறுத்து, வித்தியாசமான பரிசு ஒன்றைப் பெற்றுக் கொண்டார்! = காது அறுக்கும் குறட்டு (கருவி)! :)

வாதம் செய்ய புலவர்களை அழைப்பார்! கையில் குறடு இருக்கும்! குறட்டைக் காதில் வைத்துக் கொண்டே வாதம் தொடங்கும்!
அவர் காட்டும் தில்லாலங்கடித் தமிழ் வித்தையில், பல பேர் மயங்கி விடுவார்கள்! இல்லை தோற்று விடுவார்கள்! உடனே...."சரக்க்க்க்க்"! ஒரு காது மட்டும்!

"எலே நீ தானே வில்லியிடம் வாதிட்டது?"-ன்னு கேட்டுப் பாருங்கள்! "காது காது" என்பார்கள்! தெலுங்கில் "இல்லை இல்லை"-ன்னு சொல்றாங்க-ன்னு நினைச்சிக்காதீங்க! :)
மெய்யாலுமே "காது காது" என்று தமிழில் தான் சொல்றாங்க! அப்படி ஒரு பீதி அலையைக் கெளப்பி இருந்தாரு நம்ம வில்லி என்கிற வில்லன் :))

ஆழ்வார்களின் சொற்களை அறியாது, சும்மானா தமிழை மட்டுமே நுனிப்புல் கணக்காக் கரைச்சிக் குடிச்சிட்டு, "மதம்" பிடிச்சி இருந்தாரு வில்லி ஐயா!
* "சமைத்து"ப் பக்குவப் படுத்துவது = சமயம்!
* "மதம்" பிடிக்கச் செய்வது = மதம்!

"அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ"-ன்னு அடியார்களைத் தானே முதலில் நிறுத்தி இருக்காங்க-ன்னு யோசிச்சிப் பார்க்க அவருக்கு நேரம் இல்லை!
இதனால் பெருமாளின் திருவுள்ளம் உகக்குமா?-ன்னு நினைச்சிப் பார்த்தா தானே? இவிங்க உவப்பே தான் சரியா இருக்கே இவிங்களுக்கு?!

பொதுவாக அந்தக் காலத்து வாதில் தோற்றவர்களை, கொடுமைப் படுத்துவதோ, கழுவில் ஏற்றுவதோ, கழுவில் ஏற விடுவதோ, வைணவ வரலாற்றில் மட்டும் 99.99% இல்லவே இல்லை என்பது வரலாற்று உண்மை!
பாகவதா-அபசாரம் என்னும் "அடியார் பழித்தல்", பகவானைப் பழித்தலை விடக் கொடிது என்பதே வைணவத்தின் முதன்மைக் கொள்கை! ஆனால் ஒரே ஒரு வில்லியின் காதறுத்த செயல் மட்டுமே விதிவிலக்கான விபரீதம்! தனக்கு அடங்காத வைணவப் புலவர்களையும் காது அறுத்துள்ளார் என்பது தான் இன்னும் வேடிக்கை! :((



திருமுனைப்பாடிக்குச் சென்ற அருணகிரியார், வைணவர் உட்பட பல தமிழ்ப் புலவர்களும் அஞ்சி நடுங்குவதைப் பார்த்தார்! வெறுமனே வாதம்-ன்னா அவரும் கண்டுக்காமல் போயிருப்பார்! ஆனால் இது காதறுக்கும் விபரீதமா-ல்ல இருக்கு? தமிழ் என்ன ஒருவரின் குலச் சொத்தா, ஏக போக உரிமை கொண்டாட?

சீத்தலைச் சாத்தனார் என்பவர் தான், பிறரின் தமிழ்த் தவறுகளுக்கு, தன்னைத் தானே குட்டிக் கொள்வார்-ன்னு சொல்லுவாய்ங்க! இங்கே எதிர்மறையா இல்ல நடக்குது?

வில்லியைத் தேடிச் சென்றார் அருணகிரி! வந்த அந்தக் கந்தவரையும் வாதுக்கு அழைத்தார் வில்லி!
குறட்டு உள்ள துரட்டியை அருணகிரியின் காதில் வைத்தார்! ஐயகோ! முருகனின் காதிலேயே துரட்டியா?
ஆனால் அருணகிரியோ, இது வரை யாருமே கேட்காததைக் கேட்டார்! - "எனக்கும் ஒரு துரட்டி கொடுங்க!" :)

அந்தாதியை வில்லி பாடுவது! அதற்கு அருணகிரி பொருள் சொல்ல வேணும்!
பொருள் சொல்லலீன்னா "சரக்க்க்க்க்" செய்யலாம்!
அதே போல் முறை மாற்றி, அருணகிரி பாட, வில்லி பொருள் சொல்லணும்!
அதான் ஆளுக்கு ஒரு காது தானே! இவரும் "சரக்க்க்க்க்" செய்யலாம்!
வில்லியும் ஒப்புக் கொண்டார். சபாஷ்.....சரியான போட்டி! :)

ஒருவர் காதில் இன்னொருவர் துரட்டி வைத்துக் கொண்டனர்! பல பாடல்கள் பிச்சிக்கிட்டு பறக்குது! எல்லாம் ஒரே எகனை மொகனை சீண்டல் பாடல்கள் தான்!
* தத்துவத்தை வாதம் செய்யுங்கடா-ன்னா, தத்து பித்து-ன்னா வாதம் செய்யறீங்க?
* கருத்தைக் கருத்தாகப் பாருங்கடா-ன்னா, கத்தி முனையா நடத்தறீங்க?

இதற்கு மேலும் வாதத்தை வளர்த்துச் செல்ல அருணகிரி விரும்பவில்லை! ஒரு பாடலைப் பாடிப் பொருளைக் கேட்டாரு!
அந்தப் பாடலில் அனைவருக்கும் செல்லமான எம்பெருமான் கண்ணபிரானையும் நடுவில் வைத்தாரு! அவ்ளோ தான்! ஆல் ஃப்ளாட்! :)

திதத் தத்தத் தித்தத் திதி தாதை தாததுத் தித்தத் திதா
திதத் தத்தத் தித்த திதித் தித்த தேதுத்து தித்தி தத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாத தத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!

ஹிஹி! என்ன மக்கா! எழுத்துக் கூட்டிச் சத்தமா, வாய் விட்டு ஒருகா படிங்க பார்ப்போம்!
மொதல்ல படிக்க நாக்கு வரணும்! அப்பறம் தானே பொருள் சொல்றது எல்லாம்?
அய்யோ! யாரு காது போச்சு? காது! காது!...(தொடரும்)
Read more »

Thursday, July 02, 2009

வைணவத்தைத் "தழுவிய" திருச்செந்தூர் முருகன்!

திருச்சீர் அலைவாய்! வெள்ளை அலைகள் முப்போதும் தாலாட்டும் என் முருகச் சிற்றூர்! "அலைபாயுதே கந்தா - என் மனம் அலைபாயுதே" என்னும் படிக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா இன்று! (Jul-02, 2009)

திருச்செந்தூர் கொஞ்சம் வித்தியாசமான படை வீடு!
மற்ற படை வீடுகளெல்லாம் மலைகளில் இருக்க, இப்படை வீடு மட்டுமே, கடலோரத்தில்! குறிஞ்சிக் கடவுளான முருகன், நெய்தற் கடவுளாய் மாறிய மர்மம் என்னவோ? :)
அலையாழி அறிதுயில் மாயவனின் அலையாழிகளால் சீராட்டி விடும் சீராளன் தான் என் முருகப் பெருமானோ?

என்னுடைய "திருமாலும் தமிழ்க் கடவுளே!" - பதிவுகளுக்காக, சில முருக பக்தர்கள் என்னை விரட்டி விட்டாலும், செந்தூர் முருகன் என்னை விரட்டி விடுவானோ?
அன்று அப்படித் தானே பகழீ, பகழீ என்று ஓர் வைணவனை ஓடி வந்து "தழுவிக்" கொண்டான் பைந்தமிழ்ப் பெருமான்?
சைவமும் வைணவமும் மனிதருக்குத் தான்! மனசுக்கு அல்லவே! என் மனசுக்கு அல்லவே! பார்க்கலாமா கதையை?


சேதுபதிகள் ஆண்ட இராமநாதபுரம்! அங்கு சன்னாசி எனும் கிராமத்தில் ஒரு வைணவக் கொழுந்து! காமங்-கோட்டைச்-சேகரம் என்னும் சதுர்வேதி மங்கலத்தில் அந்த வாலிபன் வட வேதமும் சொல்லுவான்! ஆழ்வார்கள் ஆழ்ந்து அருளிய, தீந்தமிழ்ப் பாசுரமும் தெளிய ஓதுவான்! அவன் பெயர் = பகழி!

அது என்ன பகழி? புகழி-ன்னு ஒரு பொண்ணு எனக்குப் பள்ளிக்காலத்தில் தோழியா இருந்தா! இன்னிக்கு ஐரோப்பாவின் அரண்மனையில் புகழ் பெற்று இருக்குறா புகழி! ஆனா அது என்ன பகழி? பகழி??

வான் எலாம் பகழி! வானின் வரம்பு எலாம் பகழி! மண்ணும்
தான் எலாம் பகழி! குன்றின் தலை எலாம் பகழி! சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி! நின்றோர் உயிர் எலாம் பகழி! வேலை
மீன் எலாம் பகழி! ஆக வித்தினன் வெகுளி மிக்கோன்
- என்று கம்பன் கவி!

பகழி = அம்பு!
இன்னும் வெவரணையாச் சொல்லணும்-ன்னா, அம்புக்குக் கீழே, அடிப் பாகத்தில் இறக்கை இருக்குமே! பார்த்து இருக்கீயளா? அதுக்குப் பேரு = பகழித் திரள்!
அம்பை, காற்றுக்கு எதிரா விரைந்து செலுத்த உதவும் அந்த இறக்கைக்குப் பேரு தான் பகழி!

"பகழிக் கூத்து" நடக்கிறதாம்!
ஒரு பகழி, ரெண்டு பகழி அல்ல! வான் எலாம் பகழி! வானின் வரம்பு எலாம் பகழி-ன்னு ஒரு பகழிக் கூத்தே நடக்கிறது! வெள்ளை இறகுகள் களமெங்கும் அப்படிப் பறக்குது!

* இப்பேர்ப்பட்ட பகழிக் கூத்தை நடத்துவன் யார்? = என் இராகவப் பெருமாள்!
அவனே "பகழிக் கூத்தன்"! அந்த அழகான தமிழ்ப் பெயரையே, நம்ம வாலிபனுக்கும் இட்டார்கள் பெற்றோர்!

புள்ள, அருமையாத் தமிழ் கற்று வளருது! பின்னே நம்மாழ்வாரைப் படித்து வளரும் புள்ளையாச்சே! தமிழுக்குச் சொல்லவா வேணும்? திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார் அல்லவா!



பகழி, தமிழைப் பயிலும் போதே, தமிழ்க் கடவுளரான மாயோனையும், சேயோனையும் சேர்த்தே பயில்கிறான்! அதுவும் அவிங்க ஊரான, சேதுபதி ஆண்ட, திருச்செந்தூர் பட்டினத்துக் கடலின் மேல் பகழிக்குக் கொள்ளை ஆசை! அந்தக் கடலுக்குச் சொந்தக்காரனான "கந்தக்காரன்" மீதும் கொள்ளை ஆசை!
வைணவப் பையனாச்சே, செந்தூரு இவனுக்குச் சொந்தூரு ஆகுமா? சரிப்படுமா-ன்னு எல்லாம் பகழி வீட்டுலயும் யாரும் கேட்கலை! சும்மா ஜாலியா விட்டுட்டாங்க போல! :)
ஆனா என்ன ஒன்னு, தமிழையும் பாசுரத்தையும் நல்லாக் கவனிச்சிக்கிட்ட பகழிக்கு, வயிற்றைத் தான் கவனிச்சிக்கிடத் தெரியலை! வேளைக்குச் சாப்பிட்டாத் தானே?

எப்பவும் பாட்டு-ன்னு உட்கார்ந்து கிட்டு இருந்தா, பசி அடங்கீருமா?
"வாய்க்கு வடை இல்லாத போது, வயிற்றுக்கும் பொங்கல் ஈயப்படும்"-ன்னு இருக்க வேணாமோ? அதானே மடப்பள்ளி வைணவ லட்சணம்? :)
அல்சர் கணக்கா, பெரும் வயிற்று நோய் வந்துரிச்சி நம்ம பகழிக்கு!

என்னென்னமோ மருத்துவம் பார்த்தும், மூலிகை அரைச்சிக் குடிச்சியும் போகலை!
அம்மா அப்பா பெருமாளுக்கு வேண்டிக்கறாங்க! வைத்திய வீரராகவப் பெருமாளோ சென்னைத் திருவள்ளூர் பக்கம் இருக்காரு! பகழியோ எங்கேயோ தென்கோடியில இருக்கான்! யார் தான் மருத்துவன்?

அப்போ தான் பகழி நினைப்புக்கு ஒரு வாசம் வருகிறது, திருச்செந்தூர் "இலைத் திருநீறு"!

பன்னீர் விபூதி என்று நீட்டு நீட்டு பன்னீர் மரத்து இலையில் மடித்துத் தரப்படும் செந்திலாண்டவனின் மருந்து!
திருமுருகனோ கண்ணுக்கு விருந்து! அவன் திருநீறோ புண்ணுக்கு மருந்து!

பகழி கடலில் விளையாடும் போதெல்லாம், கோயில் அந்தணர்கள், பல பேருக்குப் பன்னீர்-இலை விபூதி கொடுப்பதைப் பார்த்து இருக்கிறான் அல்லவா?
அந்த ஞாபகம் வந்து விட, வயிற்று வலி இன்னும் அதிகம் ஆகியது! பின்னே, வழி தெரிந்து விட்டால், அதை உடனே அடையத் தோணும்-ல? சென்றான் பகழி செந்தூர்!


செந்தூர் முருகப் பெருமானே ஒரு Baby Beauty! அவன் மீது Baby Tamizh பாடத் துவங்கி விட்டான் நம்ம பகழி! :)
திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் என்னும் அழகு தமிழ்க் கவிதை தோன்றிற்று! இலைத் திருநீறும் அவன் வயிற்றிலே ஊன்றிற்று!
பாலையாய் எரிந்த வயிற்றில் பால் வார்த்தான் பால முருகன்! குளிர்ந்தான் பகழி!

ஆனா ஒரே ஒரு தப்பு நடந்து போச்சு! மருந்து வாங்கப் போன பகழி சாதாரணமாப் போயிருக்கணும்! ஆனா வைணவராச்சே! ஐயா நாமத்தோட போயிட்டாரு!
அதுவும் ஒரு நாமம் இல்ல! பன்னிரெண்டு நாமம் போடறவங்க போல! மேனியின் ஒவ்வொரு மூலையிலும் நாமம்!

கூட்டத்தில் பகழி மட்டுமே வித்தியாசமாகத் தெரிகிறார்! சரி, போனாப் போவுதுன்னு, போத்திமாருங்க (அர்ச்சகர்), எல்லாருக்கும் கொடுக்கறாப் போல, பன்னீர் விபூதி மட்டும் கொஞ்சம் கொடுத்து வுட்டுட்டாங்க!
இவரும் போனதுக்குச் சிம்ப்பிளா ஒரு பாட்டு பாடிட்டு வந்திருக்கலாம்! ஆனால் ஒரே தமிழ்ப் பாட்டில் அடங்கிடுமா ஆறு முகமும்? நம்ம பகழிக்கு அப்ப தான் பாட்டு பிச்சிக்கிட்டு வருது!

கொத்துஞ் சுமந்த பசுஞ்சாலிக்
குளிர் முத்தினுக்கு விலை உண்டு!
கொண்டல் தரு நித்திலம் தனக்குக்
கூறும் தரம் உண்டு, உன் கனிவாய்

முத்தம் தனக்கு விலை இல்லை!
முருகா முத்தம் தருகவே!!முத்தம் சொரியும் கடல் அலைவாய்
முதல்வா முத்தம் தருகவே!!


என் முருகனின் தேனிதழ் இதழோடு-இதழ் கலக்கும் இன்பத்தை வாயால் சொல்லவும் முடியுமா? இதழ் மெல்லவும் முடியுமா? மெண்டு அள்ளவும் முடியுமா?


இவ்வளவு அழகான பிள்ளைத் தமிழை, அங்கு ஏறெடுத்தும் பார்க்கவில்லை! "நாமக்காரன் பாடியது நமக்கு எதுக்கு-ங்காணும்?" என்று ஒரு வித வெறுப்பு! உதாசீனம்!

திருச்செந்தூர் ஆலய நிர்வாகத்தைக் கைக்குள் வைத்திருக்கும் போத்திமார்கள் மற்றும் திரி-சுதந்திரர்கள் (முக்காணிகள்) பகழியின் நெற்றி நாமத்தை மதிக்கா விட்டாலும், தமிழை மதிக்கலாம்! ஆனால், "உம், உம், நடையைக் கட்டு" என்று பகழியை "ஜருகண்டி" செய்கிறார்கள்! பகழிக்கோ அருகில் சென்று பார்க்க ஆசை! ஆனால் நெட்டித் தள்ளுகிறார்கள்!

காசுள்ளவர்களை எல்லாம் முன்னே அனுப்பும் போது, தமிழுள்ள பகழியை முன்னே அனுப்ப மட்டும் மனம் வரவில்லை! போதாக்குறைக்கு "நாம" பயம் வேறு!
முருகப் பெருமானை மனங்குளிரத் தரிசனம் செய்யக் கூட முடியவில்லை! ஏதோ எட்டக்க இருந்து ஏங்கி ஏங்கிப் பார்த்ததோடு சரி!
பகழிக்கு கோயில் மரியாதையா தேவை? அவரு தான் முருகனின் இதழ் மயக்கத்தில் இருக்காரே! யாருக்கு வேணும் மரியாதையும் மதிப்பும்?
பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை மொத்தமாகப் பாடி முடித்து, வெளியில் சென்று விட்டார் பகழி! நோய் நீங்கிய அசதியில், அடியார் கூட்டத்தோடு கூட்டமாக, அப்படியே மண்டபத்தில் படுத்தும் விட்டார்!

முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பவன், இங்கே வையாத பாச உள்ளத்தைக் கண்டு கொள்ள மாட்டானோ? உள்ளத்தில் நல்ல உள்ளம் என்றுமே உறங்காதோ? முருகாஆஆஆஆஆஆஆ!
செந்தூரான் வங்கார மார்பில் அணி மாணிக்கப் பதக்கம், உறங்கும் பகழியின் மார்பில் வந்து ஏறியது! அவரோ ஆழ்ந்த குறட்டையில்!
உதய மார்த்தாண்ட பூசைக்கு நடையைத் திறந்தவர்கள், முருகனைக் கண்டார்களோ இல்லையோ, பெரிய மாணிக்கப் பதக்கத்தைக் காணவில்லை என்பதை மட்டும் நன்றாகவே கண்டார்கள்! ஊரெங்கும் ஆள் போட்டுத் தேடி அலுத்துப் போய், சண்முக விலாச மண்டபத்துக்கு வந்தால்........

தூங்கும் பகழியின், வங்கார மார்பில், அணியாக மின்னுகிறது!
பகழியின் மேனி எங்கும் முருகன் சூடிக் களைந்த மாலைகள்! - உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்தது உண்டு! தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்!
"ஆகா, அண்ட வந்த இந்த நாமக்காரனைக் கிட்டக்க கூட விடாம, வெரட்டு வெரட்டு-ன்னு விரட்டினோமே! அப்படி இருக்க, எப்படி இப்படி?"-ன்னு போத்திகள் விழிக்க...
நல்ல வேளை திருட்டுப் பட்டம் கட்டாமல், உண்மையைப் புரிந்து கொண்டார்கள்! நல்ல எடையுள்ள புஜங்க மாணிக்கப் பதக்கத்தைக் கழட்டணும்-ன்னாலே, அந்தத் திருகாணிக்கு-ன்னே செஞ்ச பிரத்யேக சாவி வேணுமே! அப்படி இருக்க, இவன் மார்பில் பதக்கம் வந்தது என்றால்........?

பகழியை எழுப்பி, மன்னிப்பும் கேட்டனர்! சாவி போட்டு அந்தப் பதக்கத்தை மீட்டு எடுத்துக் கொண்டனர்! பகழி வேண்டாமென மறுத்தும், வீதியுலா நடத்தி, செந்தூர்க் காதலனிடம், மிக அருகில் கொண்டு போய்ச் சேவித்தும் வைத்தனர்!
சந்தனம், பன்னீர் இலைத் திருநீறு, மாலை, பரிவட்டம் என்று ஆரவாரம் காட்ட, பகழியோ வேறு விதமான வெட்கத்தில் நெளிந்தார்! என்ன வெட்கமா? ஹிஹி...

முயலும் படிவாழ் திருச்செந்தூர், முருகா முத்தம் தருகவே!
மொழியும் சமயம் "அனைத்தினுக்கும்" முதல்வா முத்தம் தருகவே!!



முருகப் பிள்ளைக்கு இன்று குடமுழுக்கு இனிதே நடந்தேறட்டும்!

அவன் திருமுகத்தை ஆசை ஆசையாகப் பார்க்கும் போதெல்லாம்,
அந்தச் சந்தனக் காப்பை இதழோரம் வழித்து எடுக்க,
அந்த வழிப்பில் வழிந்து, அப்படியே என்னை ஊடுருவிப் பார்த்துச் சிரிப்பான்!

போதும்-ப்பா ராசா! செந்தூர் முருகா, என்னைச் சேர்த்துக் கொள்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP