Friday, February 26, 2010

(பழைய * பதிவு) - "அவள்" கண்களா? "அவன்" கண்களா? - 2

அவள் கண்ணைக் காட்டிலும் அழகிய சிறை உலகத்தில் வேறு இல்லவே இல்லை என்று சாதித்தான் தனுர்தாசன்! என்ன நினைச்சாரோ தெரியலை! அவன் கையைப் படக்-கென்று பிடித்து...இழுத்துக் கொண்டு வருகிறார்...கூடவே அவளும்...ஈடு கொடுத்து ஓடி வருகிறாள்!

சிலர் பதறுகிறார்கள்! "ஐயோ, இவன் மல்யுத்தம் செய்யும் முரடானாச்சே! இவனைத் தொட்டதும் இல்லாமல், ஆலயத்துக்கு வேறு ஜோடியா இழுத்துக்கிட்டு வராரே! இவர் வந்ததில் இருந்து எல்லாமே தலைகீழா-ன்னா நடக்கிறது??? இவரைக் கேட்பார் எவருமே இல்லியா?"

இந்தக் கதையின் முந்தைய பாகம் இங்கே!
அந்தப் பதிவு வந்து ஒன்னரை வருஷம் ஆச்சு! அப்போ அடியேனின் தமிழ்மண நட்சத்திர வாரம்! :)
அந்தப் பதிவில் நடைபெற்ற ஒரு சிலரின் கும்மிகளால், கதையை எழுதி வைத்திருந்தாலும், அப்போது வெளியிடவில்லை! இன்று...இதோ...அந்தப் (பழைய)நட்சத்திரப் பதிவு! :)

இதை இன்னிக்கி வெளியிட வேண்டிய அவசியம் என்னா-ன்னு கேட்கறீங்களா?
இன்று தான் அந்தக் கதை நாயகனின் பிறந்த நாள்! (மாசி ஆயில்யம்! Feb 26, 2010) - Happy Birthday Dhanur Daasa! :)
பிள்ளை உறங்கா வில்லி தாசனே! - பின்னாளில் திருவரங்க ஆலயத்துக்கே "மேலாளன் ஆன வேளாளனே"! உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



இருள் மயங்கும் வேளை! அருள் முயங்கும் வேளை!
அவன் கையைப் படக்-கென்று பிடித்துக் கொண்டார்...விறுவிறு என்று இழுத்துக் கொண்டு வருகிறார்...கிடுகிடு கிடுவென்று...

தெற்கு வாசல் தாண்டி, ஆலிநாடன் வீதி தாண்டி,
ரெங்க விலாச மண்டபம் தாண்டி, கருட மண்டபம் தாண்டி,
ஆர்ய படாள் வாசல் தாண்டி, சந்தனு மண்டபம் தாண்டி,
மேலப் படிகள் ஏறி, கிளி மண்டபம் தாண்டி,

இதோ வந்தாகி விட்டது காயத்ரி மண்டபத்துக்கு!
24 காயத்ரி எழுத்துக்களும் 24 தூண்களாய்த் தாங்கும் பேரமைதிக் கருவறை!
அதன் மேல் அந்த ஓங்கார விமானம்!
ஓம் என்பது போலவே வளைந்து நெளிந்த....பிரணவாகார ரங்க விமானம்!

குறுகிய வாசல்! உள்ளம் உருகிய வாசல்!
நெய் தீப மணமும், துளசீ மணமும் துளைக்கின்றது!
வட-தென் காவேரிக் குளிர்ச்சி உள்ளேயும் சிலிர்க்கிறது!
வீணை ஏகாந்தம் இந்த இரவிலும் இசைக்கிறது!

ஆயர்ப்பாடி வெண்ணெய் வீச்சம் கருவறையில் வீசுகிறது!
பச்சைக் கர்ப்பூர நெடி...அன்று கோதையின் பச்சை உடம்பை என்னமோ பண்ணியதே! இன்று என் உடம்பையும் என்னமோ செய்கிறதே!!!

தனுர்தாசனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
"அவளை விட அழகிய கண்ணைக் காட்டுறேன்-ன்னு சொன்னவரு, இங்கே கூட்டிக்கிட்டு வராரே! மாடத் தெரு ஆடலாளியைக் காட்டுவாரு-ல்ல நினைச்சோம்"! - அந்தப்புரம் என்று எண்ணி வந்தவன் நொந்தப்புரம் ஆனான்!
ஆனால்...ஒரே விநாடி தான்....திரை விலகியது.....அய்யோ.....

கரிய..பெரிய..உரிய..விரிய..சரிய..தெரிய..அரிய..உருவம்!!
ஜென்ம ஜென்மத்துக்கும்....
மெல்லிய தீபம், அசைத்து அசைத்துக் காட்டப்படுகிறது!
பாதத்தில் ஜொலிக்கும் தீபம்....சிறிது சிறிதாக மேலேறுகிறது!!

* திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
* சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே
* உந்தி (தொப்புள்) மேலதன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
* திருவயிற்று உதர பந்தனம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

"தனுர்தாசா...என்ன சிலையாக நின்று விட்டாய்? என்ன காண்கிறாய், சொல்?"

* ஆர மார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
* கண்டம் (கழுத்து) கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே
* செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

"என்ன தடுமாறுகிறாய்? அருகில் இதற்கென்றே உள்ள இரண்டு திருமணத் தூண்களைப் பிடித்துக் கொள்! விழுந்து விடாதே! சொல், சொல்...என்ன செய்கிறது?"

பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!
பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!!





அரங்கனின் பெருந்தாமரைக் கண்களின் நேராக நேத்ர தீபம் சுழல்கிறது!
நாமும் சுழல்கிறோம்!
நம் மனசென்னும் ஆழியுட் புக்கு...முகந்து கொண்டு ஆர்த்து ஏறி, ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழையாய்...
நேத்ரானந்த தீப சேவை!

ஒன்று மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்,
இன்று மறப்பேனோ ஏழைகாள்? - அன்று
கருவரங்கத்து உட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கத்து மேயான் திசை!!!

"என்னது? பெரியவாய கண்களா?
அடேய்....நீ கண்டாயா? கண்டு என்ன செய்தாய்? சொல்! தனுர்தாசா....சொல்!"

"கண்டேன்! கண்டேன்! நாடி நான் கண்டு கொண்டேன்!
என்னையே பார்க்கும் கண்கள்! என்னையே விழுங்கும் கண்கள்!
இல்லை இல்லை! உலகையே விழுங்கும் கண்கள்!
ஐயோ! கரியவனின் பெரிய வாய கண்கள்!"

கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும், முடிவில்லதோர் எழில்
நீலமேனி...ஐயோ....நிறை கொண்டது என் நெஞ்சினையே!


"என்னது ஐயோ-வா? எதற்கு ஐயோ என்று சொல்கிறாய்?"

"தாங்க முடியவில்லை சாமீ! நடுங்குகின்றேன்! என்ன செய்தீர்கள் என்னை?
என் கண்கள் அந்தக் கண்களோடு ஒட்டிக் கொண்டது போல் இருக்கே!
வைத்த கண்ணை மீண்டும் எடுக்க முடியவில்லையே!
அந்தக் கண்களே வெள்ளைப் பாற்கடல் போல் இருக்கே!
அந்த வட்ட விழி - நட்ட நடு - கருமணியில்.....நானும் தெரிகிறேனே!"

"ஓ! அந்தக் கண் மேல் உந்தன் கண்ணை வைத்து விட்டாயா?
இனி, அவனும் உன் மேல் கண்ணை வைத்து விட்டான்!
இனி, உன்னைக் கன்ணுள் வைத்துத் தாங்குவான்!
இனி, என்ன செய்யப் போகிறாய் தனுர்தாசா?"

என் அமுதினைக் கண்ட கண்கள்,
மற்று ஒன்றினைக் காணாவே!
மற்று ஒன்றினைக் காணாவே!!
மற்று ஒன்றினைக் காணாவே!!!

திரையிடப்பட்டது! முறையிடப்பட்டது!
அரங்கனில் கிறங்கினான்! அங்கேயே உறங்கினான்!


மல்யுத்த வீரன், மல்லாண்ட திண்தோள் தனுர்தாசன், இராமானுசரின் சீடர்களுள் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான்!
குருவை...அவன் தேடிப் போகவில்லை! அவனைத் தேடி...குரு வந்தார்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இன்று போலி குருக்களைத் தேடி, போலியாய் அலையும் பலரும் கவனத்தில் கொள்ள வேண்டியது இது!
குருவைத் தேடித் தேறவும் முடியுமா? குரு போலியா இல்லையா என்று கண்டுபிடிக்கும் ஞானம் இருந்திருந்தால் நீயே குருவாக ஆகியிருப்பாயே!
அந்த ஞானமே இல்லாத போது, நீ எதை வைத்து ஒரு குருவைச் சோதிக்க முடியும்?

உன் பேராசைகள் நிறைவேறுமா என்று மை போட்டுப் பார்க்கவல்ல குருவைத் தேடி அலைகிறாயா?
பேராசையாக அலைந்தால், பேராசிரியர் தான் கிடைப்பார்!
பேர் ஆசிரியர் - பேருக்கு ஆசிரியர் - பேராசைப் பேராசிரியர்!


அதனால் "நல்ல" குருவை எடை போட்டுத் தேடி "அலையாதே"!
தாகமாய் இரு! தண்ணீர் கிடைக்கும்!!
மாணவனாய் இரு! ஆசான் கிடைப்பார்!!
குரு இல்லை என்றால்...வாழ்க்கைப் பாடங்களையே...இறைவன் உனக்கு குருவாக ஆக்குவான்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


தனுர்தாசன் பெரிய பண்டிதன் கிடையாது! முரட்டு மல்லன்!
அவனைச் சேர்த்துக் கொண்டு் அரசவை வாதப் போரில் எல்லாம் வெல்ல முடியாது!
ஆனாலும் குழாத்தில் அவனையும் சேர்த்துக் கொண்டார் இராமானுசர்!
பயன் அன்று ஆகிலும், பாங்கு அல்லன் ஆகிலும், திருத்திப் பணி கொள்வது தானே குருவின் சிறப்பு!

சீடனின் உள்மனம் குருவுக்குத் தெரியும்! அங்கு கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இல்லவே இல்லை! இது தெரியுமா, அதைப் படிச்சிருக்கியா என்றெல்லாம் ஒன்னுமே கேட்கவில்லை!
முக்கியமாக "உன் குலம்-கோத்திரம் என்ன? கலை-ஆசார்யன் என்ன?" என்ற கேள்வி எல்லாம் எழவே இல்லை!
சீடர்களுள் சீடராய்ச் சேர்த்துக் கொண்டார்!
தனுர் தாசன் என்று இருந்தவனை, "பிள்ளை உறங்கா வில்லி" என்னும் தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொடுத்து, தீட்சையும் அளித்து விட்டார்!

ஆனால் அவனுக்கு குடும்பம்-ன்னு ஒன்னு இருக்கே!
என்ன தான் அவள் நடன மங்கையாக இருந்தாலும்,
சாத்திரத் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆயினும்...
அவள்-அவன்...இருவரும் ஆருயிர் காதல் துணைகள் ஆயிற்றே!
ஹேமாம்பா என்ற அவளுக்கும் "பொன்னாச்சி" என்று தீட்சை அளித்து விட்டார்!

இருவரையும் இராமானுசர் பிரிக்கவில்லை! அதே சமயத்தில் தம்பதிகளை மடத்திற்குள்ளே சேர்க்காமல், தனி இல்லத்தில் குடியிருத்தினார்!
காதலன்-காதலி இருவருமே தொண்டில் சிறந்து, சிறிது நாளில் பலரின் நன்மதிப்பையும் பெற்றனர்!


என்ன தான் வில்லியைச் சேர்த்துக் கொண்டாலும், அவன் கட்டை உருவம், நாலாம் வருணம் என்ற எண்ணம் சில சீடர்கள் மனத்தில் உறுத்தலாகவே இருந்தது போலும்!

அவனிடம் அதிகம் பேசிக் கொள்ளாமல் ஒட்டி உறவாடாமல், "தங்களுக்குள் மட்டும் தனிக் கோஷ்டியாக" இருந்தனர்!
மனதுக்குள் சிரித்துக் கொண்ட இராமானுசர், அவர்களை அடக்கித் திருத்த வேறு வழிகளைக் கையாண்டார்...

தினமும் ஆற்றில் குளிக்கப் போகும் முன், அந்தணச் சீடனின் தோள் பற்றி நடப்பார்!
குளித்து முடித்த பின், வில்லியின் தோள் பற்றி நடந்து வருவார்!
அச்சோ...குளிச்சி முடிச்ச பிறகும் இப்படித் தீட்டாயிடுத்தே-ன்னு சொல்லாத முடியாத படிக்கு,
பேச்சால் பேசிக் கொண்டிராமல், செய்கையால் சாதியின் வாயை அடைப்பது, இராமானுசருக்கு, கை வந்த கலை!

"சுவாமி, நீங்க அந்த வில்லிக்கு ரொம்பவே இடம் கொடுக்கறீங்க"

"ஏன்? கொடுத்தா தப்பா சிஷ்யர்களே? வில்லியின் பண்பட்ட மனம் இங்கே யாருக்காச்சும் இருக்கா?"

"அப்படி என்ன பண்பட்டுட்டான் அவன் மட்டும்?"

"சொல்கிறேன்...இப்போது போய்த் தூங்குங்கள். பின்னிரவு ஆகி விட்டது!"

சீடர்கள் தூங்கச் சென்றார்கள்! சிறிது நேரம் கழித்து உடையவர் தானே சென்று, அத்தனை பேரின் மேலாடையிலும் கத்திரிக்கோலால் சிறு சிறு துண்டுகள் போட்டார்!
தீராத விளையாட்டுப் பிள்ளை! உடையவர் மடத்திலே சீடருக்கு ஓயாத தொல்லை! :)

மறுநாள் காலை...மடத்தில் சுப்ரபாதமா ஒலித்தது? இல்லையில்லை!
கேட்கக் கூசும் வசவு வார்த்தைகள் ஒலித்தன!
சீடர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருந்தனர்.

"சீடர்களே, சாதாரண ஒரு நூல் துண்டுக்கா இத்தனை பேச்சு பேசுகிறீர்கள்? தகுமா இது?
பல நூல் கற்ற நீங்கள், சில "நூலுக்கு", உயர் நூலை அடகு வைத்தீர்களே!
ஆக, உங்கள் யாவருக்கும் இது நாள் வரை.......
வாய் தான் மறையோதிற்றா? மனம் ஓதவில்லையா?"

"குருவே!"

"சரி சரி, உங்களைச் சோதிக்க நான் தான் ஆடைகளைக் கத்தரித்தேன்! நீங்கள் பேசிய இழிசொல் அத்தனையும் என்னையே சேரட்டும்!
உம்ம்ம்..முரட்டு மல்லன் வில்லி கூட இப்படி எல்லாம் பேசியதில்லை!"

"ஆசார்யரே...அய்யோ...மதி இழந்தோம்! கேவலமாய் நடந்து கொண்டோம்! மன்னியுங்கள்! இப்போதே வில்லியிடம் சென்று மன்னிப்பு கோருகிறோம்!"

"வேண்டாம்! அவன் லட்சணம் என்ன என்பதையும் ஒரு கை பார்த்து விடுவோம்!
இன்று இரவு வில்லியை நான் மடத்துக்கு அழைத்துப் பேசப் போகிறேன்!
அந்தச் சமயம் பார்த்து நீங்கள் அவன் வீட்டுக்கு மாறுவேடத்தில் சென்று, பொன்னாச்சியின் நகைகளை திருடிக் கொண்டு வாருங்கள்!"

"என்ன! திருட்டா? குருவே..."

"உம்...சொன்னதைச் செய்யுங்கள்! ஆசார்யரின் ஆக்ஞை!"



வில்லி அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான்! கையில் நகை மூட்டை!

"சாமீ, உங்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, என் வீட்டில் யாரோ சில கொள்ளையர்கள் புகுந்து களவாடியுள்ளனர்!
உறங்கிக் கொண்டிருந்த பொன்னாச்சி எழுந்து பார்த்து அலற நினைத்தாள் போலும்!
ஆனால் கொள்ளையர்கள் நாமம் தரித்து, திருச்சின்னங்கள் தாங்கி இருப்பதைப் பார்த்து அமைதியாகி விட்டாள்!

படுத்துக் கொண்டிருந்தவள், சரி தன் மேலுள்ள நகைகளையும் எடுத்துக் கொள்ளட்டுமே என்று திரும்பிப் படுத்தாள் போல!
ஆனால் அவள் அசைவு கண்டு அவர்களோ பயந்து ஓடி விட்டார்கள்!

இது என்ன சோதனை சுவாமி? பூலோக வைகுந்தம் என்று சொல்வீர்களே!
அரங்கத்திலா இப்படித் திருட்டு நடக்கிறது?
அதுவும் அடியார்கள் போல் தோற்றம் அளிப்பவர்கள் இப்படிச் செய்வது நமக்கு அல்லவா இழுக்கு??

அதான் பொன்னாச்சியின் சம்மதத்தோடு அத்தனை நகைகளையும் மூட்டை கட்டி எடுத்து வந்து விட்டேன்! இதை ஏற்றுக் கொண்டு அந்த ஏழைப்பட்ட அடியார்களிடம் கொடுத்து விடுங்கள்!
அன்னதானம் போன்ற திருப்பணிகளும் செய்ய வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்! அப்படிச் செய்தால் திருட்டு ஒழிந்து, நம் இயக்கம் காப்பாற்றப்படும்".

இராமானுசர் மற்ற அத்தனை சீடர்களையும் திரும்பி ஒரு பார்வை பார்க்க...
அனைவருக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது!
இத்துப் போன மேல் துண்டுக்குச் சத்தம் போட்ட நாம் எங்கே?
சத்தம் போட்டுத் தாக்குவதே தொழிலாகக் கொண்டிருந்த வில்லி எங்கே?

சீடர்கள் அத்தனை பேரும்...குலம் பார்க்காது...
வில்லி தாசனின் காலில்...
நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்க,
நடந்த நாடகத்தை ஏதுமறியா வில்லி விழி விழியென விழித்தான்!

இராமானுசர் நடந்தது அத்தனையும் அவனுக்கு விவரித்தார்! இனி அடியவர் கூட்டத்தில் எவரும் குல விசாரிப்பு செய்யக் கூடாது என்பதை அப்போதே சட்டமாக இயற்றினார்!

"அடியவரைக் குலப் பரிசோதனை செய்பவன், பெற்ற தாயை...யோனிப் பரிசோதனை செய்தவனுக்கு ஒப்பாவான்!!!"
என்று அவர் அதிரடியாக முழங்கியதைக் கேட்டு ஸ்ரீரங்கமே அதிர்ந்து போனது!
அப்படி ஒரு வார்த்தை எம்பெருமானார் இராமானுசர் வாயில் இருந்து வரும் என்று எவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!

கொஞ்ச நாளில், வில்லி சிறந்த மாணாக்கனாகத் தேறி வைணவ நூல்களை இயற்றும் அளவுக்குத் திறமை பெற்றான்! திருவரங்க கோயில் கொத்தின் மேலாளன் ஆனான்!
பொன்னாச்சியோ மகளிர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து, ஊர் ஊராகச் சென்று ஆழ்வார் பாசுரங்களை நாட்டியம் செய்து பாடிப் பரவினாள்! அவர்கள் காதல் ஈரப் பாசுரம் போல் ஈரமாகவே வளர்ந்தது!

மேலிருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் - கீழிருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்!


எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
பொன்னாச்சி உடனுறை பிள்ளை உறங்கா வில்லி தாசன் திருவடிகளே சரணம்!!
Read more »

Thursday, February 25, 2010

சிங்கத்தையே சிம்மாசனத்தில் அமரச் சொன்ன ஆண்டாள் !! ஏன் ??



'ங்களால் இனிமேல் ஆவதொன்றும் இல்லை. நீயே அருள் கூர்ந்து எங்களை நோக்கினால் தான், சாபம் போல் உள்ள எங்கள் துக்கம் தீரும்!' என்று கண்ணனை வேண்டுகின்றனர் பாவையர் .... ’அங்கண்மா ஞாலத்து’ என்று தொடங்கும் 22-ம் திருப்பாவைப் பாசுரத்தில்.

கண்ணனுக்கும், கோபிகையருக்கும் உரையாடல் அடுத்த (23-வது) பாசுரத்திலும் தொடர்கிறது ...

***

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து, உறங்கும்*
சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி*
மூரி நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டு*
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!* உன்
கோயில் நின்று இங்கனே போந்தருளி* கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!
திருப்பாவை-23

'மழைக் காலத்தில், மலைக் குகையில் தன் பேடையுடன் சேர்ந்து இருந்து உறங்கும் சீர்மையான சிங்கம், வெயில் காலம் வந்து விட்டதை உணர்ந்து, நெருப்புப் பொறி பறக்கும் கண்களை விழித்து, பிடரி மயிர்கள் எழும்படி எல்லாப் பக்கங்களிலும் அசைந்து, உதறி, உடல் ஒன்றாகும்படி நிமிர்ந்து, கர்ஜனை செய்து, வெளிப் புறப்பட்டு வருவது போல,

காயாம்பூ நிற வண்ணனே! நீ உன் திருக்கோயிலில் இருந்து, இவ்விடத்திலே எழுந்து அருளி, அழகிய சிம்மாசனத்தில் உட்கார்ந்து, நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அருள வேண்டும்!'

(மாரி - மழை, மழைக்காலம்; முழைஞ்சு - குகை; மன்னி - நிலைத்து, பிணைந்து; கிடந்து - படுத்து; சீரிய - வீரம் நிறைந்த; வேரி மயிர் - வாசனையுள்ள பிடரி மயிர்; மூரி நிமிர்ந்து - உறங்கியதால் வளைந்த உடல் நிமிர்ந்து; போதருமா - வருமாறு; பூவைப்பூ - காயாம்பூ, ஊதா நிறமுள்ள பூ; போந்து அருளி - வந்து அருளி; கோப்பு - அழகு, கட்டுப்பாடு)

***

பேய்ப்பெண்: கண்ணா! மழைக்காலம் (மாரி) வந்து விட்டது! இது, பிரிந்தவர் கூடும் காலம்! அப்படியிருக்க, நாங்கள் மட்டும் உன்னை விட்டுப் பிரிந்து இருக்கலாமா?

(மழைக்காலம், ஸுக்ரீவன் தான் ராமனுக்குச் செய்த வாக்குறுதியை மறந்து, கிஷ்கிந்தையில் தன் மந்திகளுடன் சேர்ந்திருந்த காலம்;

ராமனும், மால்யவான் எனும் மலையில் உள்ள குகையில் தங்கி இருந்ததாக, ஆண்டாள் ராமாயணத்தில் கூறுகின்றாள்)

கண்ணன் (படுக்கையில் இருந்தே): ம்ம்ம்ம்....


நாயகப் பெண்: கண்ணா! உனக்கே இது நல்லா இருக்கா? நாங்கள் இங்கு நீ இல்லாம தவிக்கிறோம்! ஆனால் நீயோ, மலைக் குகையில் (மலை முழைஞ்சில்) சிங்கம் தன் பேடையுடன் உறங்குவது போன்று, நப்பின்னையின் ஸ்பர்ஸ சுகத்தாலே (மன்னி), நன்கு உறங்குகிறாய் (கிடந்து)!

(சிங்கம் உறங்கும் பொழுது கூட, நாம் அருகில் செல்ல பயப்படுவோம்! அது போல, இவர்களும் தள்ளி இருந்தே கண்ணனிடம் பேசுகிறார்கள்!)

தேசமுடையாள்: கண்ணா! நீ இவ்வளவு நேரம் நப்பினையுடன் சேர்ந்து (மன்னி) இருந்தது போதும்! எங்களையும் கொஞ்சம் கவனி!


கண்ணன் (சிரிப்புடன்): நான் 'மன்னி’' ருந்தேனா! எப்படி?

(மன்னி’ - ஆணும், பெண்ணும் பொருந்தி இருத்தல், எதுவும் செய்யாமல் அமைதியாகப் படுத்து இருத்தல், என்ற இரு பொருள் உண்டு!

இந்தப் பாசுரத்திற்கு, முதல் அர்த்தமே அதிகம் பொருந்தும் - இவன், ’நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன்’ ஆயிற்றே! 45-ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் உரையும் அப்படியே!

பொருத்தம்’ என்பது, உடலளவில் மட்டுமல்ல - உள்ளம், உரை, செயல் அளவில்! இப்படி இருப்பவர்கள், இன்று வரை இரண்டே தம்பதியர் தான் - லக்ஷ்மி நரசிம்மன், சிவன் பார்வதி! எப்படி என்று பார்க்கலாமா?)

***

இடம்: திருக்கடையூர்
நேரம்: உதை வாங்கும் நேரம்

(ஒரு சிறுவன், கோயிலுக்குச் சென்று கொண்டிருக்கிறான்! அவன் பக்கத்தில், நாலைந்து முரட்டு ஆசாமிகள், கையில் கயிற்றுடன்)


யம தூதர்கள்: டேய் சிறுவா! நீ தானே மார்க்கண்டேயன்?

மார்க்கண்டேயன் (அவர்கள் உருவத்தைப் பார்த்து, பயத்துடன்): ஆமாம்! உங்களுக்கு என்ன வேண்டும்?

யம தூதர்கள்: நீ தான் வேண்டும்! இன்றுடன் உன் ஆயுள் முடிகிறது! உன்னை அள்ளிட்டு வரச் சொல்லி உத்தரவு!

(அவர்கள் விரட்ட, அவன் கோயில் சன்னிதிக்குள் ஓடிச் சென்று, லிங்கத்தைக் கட்டிக் கொள்கின்றான்; யமதூதர்கள் குழம்பி, யமனிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றனர்; யமனே நேரில் புறப்பட்டு வருகின்றான்)


யமன்: அடே சிறுவா! நீயே வரயா, நான் கயிறு போடணுமா?

(மார்க்கண்டேயன் பதில் பேசாது, இன்னும் இறுக்கமாக லிங்கத்தைக் கட்டிக் கொள்ள, யமனுக்குக் கோபம்! கயிறு போடுகிறான். அது சிவன் மீதும் சேர்த்து விழுகிறது! இதைக் கவனியாது யமன் கயிற்றை இழுக்க, சிவன் மிகவும் கோபமாக, அங்கே தோன்றுகிறார்)

சிவன்: நானே யமனுக்கு யமன்! எனக்கே யமனா!

யமன் (பயந்து): பிரபோ! மன்னியுங்கள்! இழுக்க நினைத்தது மார்க்கண்டேயனை! வந்ததோ நீர்! மார்க்கண்டேயனை என்னிடம் விட்டு விடுங்கள்!

சிவன் (கோபத்துடன்): அவன் என் பக்தன்! அவனை விட்டு விடு!

யமன்: பிரபோ! இன்றுடன் மார்க்கண்டேயன் First Innings ஒவர்! Follow-on பண்ணினால் தான் அடுத்த Innings!

சிவன் (கண்கள் சிவக்க): நீ எனக்குப் போட்டே கயறு! நான் உன்னை ஆக்குவேன் பயறு!


(கோபத்துடன், யமனை, இடது காலால் உதைக்கிறார்; யமன், அலறியபடியே சற்று தூரம் சென்று விழுகிறான்

எழுந்த யமன், கிள்ளிப் பார்த்துக் கொள்கிறான். சிவனிடம் உதை வாங்கிய அந்தக் கணத்தில், 'செத்தோம்' என்று நினைத்தவனுக்கு, 'உயிருடன் இருக்கிறோமா' என்ற சந்தேகம்! நடந்தவற்றை நினைத்துப் பார்க்கிறான்! பொறி தட்டுகிறது!

தன் மீது பட்ட திருவடிகள், மெதுவாக இருந்தது! கொலுசு அணிந்திருந்தது! விஷயம் புரிய, சிவன் அருகில் செல்கிறான்)

யமன்: பிரபோ! அர்த்தநாரீஸ்வரா! என்னை உதைக்க நினைத்தது நீயாக இருந்தாலும், உதைத்தது அன்னை! என்னுயிர் தப்பியது! என்னே அவள் கருணை!



எண்ணம் நீ, செயல் அவள்! சொல் நீ, உணர்ச்சி அவள்! உடல் நீ, உயிர் அவள்!

இருவருக்கும் என் வணக்கங்கள்! என் பிழையை மன்னியுங்கள்!

(அவனும், அவளும் 'மன்னி' இருக்கும் அர்த்தநாரீஸ்வரனை வணங்கி, மார்க்கண்டேயனை விட்டுச் செல்கிறான் யமன்)

(மார்க்கண்டேயர் கதையை இங்கு சொல்வதற்கு, ஒரு காரணம் உள்ளது:

நரசிம்ம புராணத்திலும், மார்க்கண்டேய வரலாறு விரிவாக உள்ளது! ஆனால் அதில் யமன், யமாஷ்டகத்தைச் சொல்லி, விஷ்ணுவிடம் மார்க்கண்டேயருக்காக சாகாவரம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது [Ch 7-10]. இந்த யமாஷ்டகமும், ம்ருத்யுஞ்சய ஸ்லோகத்திற்குச் சமமாகக் கருதப் படுகிறது)

***

(கண்ணன், பாவையர் உரையாடல் தொடர்கிறது ...)

கோதுகலப் பாவை: சிரிக்காதே கண்ணா! எரிச்சலா வருது!

கண்ணன் ('வைகுந்தத்தில் தான் தூங்க சுதந்திரம் இல்லை; இங்குமா!' என்று நினைத்து): ஏஏஏஏன்?

மாமான் மகள்: முதலில், உனக்காக ஏங்கும் உன் பக்தர்கள் வந்துள்ளோம் என்று புரிந்து கொள் (அறிவுற்று)!

கண்ணன் (இன்னும் படுத்துக் கொண்டே): சரி! அப்புறம்?

அம்மன்: உன் அடியவர்கள் துன்பம் அடைகிறார்கள் என்று கோபப்படு (தீ விழித்து)!

அனந்தலுடையாள்: கண்ணா! நாங்கள் என்ன கதையா சொல்கிறோம்? முதலில், தூங்கும்போது கலைந்த உன் அழகிய வாசனை உடைய (வேரி) திருமுடியை (மயிர்) சரி செய்து (பொங்க, எப்பாடும் பேர்ந்து, உதறி) கொள்!

கண்ணன் (சில நொடிகள் கழித்து): ஆச்சு! இன்னும் ஏதாச்சும் இருக்கா?

அருங்கலம்: கண்ணா! உறக்கத்தால் வளைந்த உன் உடலை நிமிர்த்து (மூரி நிமிர்ந்து), படுக்கையில் இருந்து எழுந்திரு!

கண்ணன்: காபி எங்கே? அது வந்தால் தான் சோம்பேறித்தனம் போகும்!

பொற்கொடி: நாங்கள், உன்ன பார்க்காமல் நொந்து Noodles ஆயிட்டு இருக்கோம்! உனக்கு மட்டும் காப்பி கேக்குதா? எழுந்திரு!

(கண்ணன், சலிப்புடன், எழுந்து கட்டிலில் உட்கார்ந்து கொள்கிறான்)

கண்ணன்: இப்போது திருப்தியா!


புனமயில்: கண்ணா! சிங்கம் கர்ஜனை (முழங்கி) செய்வதைக் கேட்ட உடனேயே, அதன் எதிரிகள் அடங்கும்! நீயும் படுக்கையில் இருந்து கிளம்பி (புறப்பட்டு) அது போல வா (போதருமா போலே)!

***

றங்கிய சிங்கம் செய்வதாக ஆண்டாள் சொன்னவை:

அறிவுற்று, தீ விழித்து, வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து, உதறி, மூரி நிமிர்ந்து, முழங்கி, புறப்பட்டு, போதரும்

இரணியன் தூணைத் தட்டியவுடன், அதில் இருந்த நரசிம்மன், இந்த 9 செயல்களையும் செய்து, பக்தனைக் காப்பாற்ற வெளியே வருகின்றானாம்!

(சிங்கத்தின் இந்தச் செயல்களுக்கு, 'ஸிம்ஹவனகுப்தி ந்யாயம்' என்ற பெயர் உண்டு)

இந்த 9 செயல்களையும் குறிக்கவே, அஹோபிலத்தில் உள்ள நவ நரசிம்மர்கள் என்று பெரியோர் கூறுவர்!

***

(கண்ணன், கோபிகைகள் உரையாடல் தொடர்கிறது)

கண்ணன்: எதற்குப் புறப்படவேண்டும்? இங்கேயே சொன்னால் என்ன?

செல்வப் பெண்டாட்டி: காயாம்பூ நிறத்தவனே (பூவைப்பூ வண்ணா)! எது பேசினாலும், இங்கிருந்து வேண்டாம்! நீ இங்கேயே இருந்து சொன்னால், ’அது படுக்கைப் பேச்சு! போது விடிஞ்சாப் போச்சு!'

கண்ணன்: வேறு எங்கே வரணும்?

நற்செல்வன் தங்கை: நீ முதலில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திரு! பின் கேட்கிறோம்!

கண்ணன் (விளையாட்டாக): Chair கொண்டாந்தீங்களா?

போதரிக் கண்ணினாள்: கண்ணா! சாதாரண மனிதர்களுக்குத் தான் Chair, Sofa எல்லாம்!

அரசர்களுக்கு, சிங்காசனம் (சிங்காசனம்)!

தேவர்களுக்கு, மேன்மையுடைய சிங்காசனம் (சீரிய சிங்காசனம்)!

ஆனால் நீயோ தேவர்களுக்குத் தலைவன்! எனவே உனக்காக, ஒரு அழகான, மேன்மையுடைய சிங்காசனம் (கோப்புடைய சீரிய சிங்காசனம்) கொண்டு வந்தோம்!


கண்ணன் (விளையாட்டு பயத்துடன்): ஐயோ! சிங்கத்தின் மேல் உக்காரணுமா? பயமாயிருக்குப்பா! வேணாம்ப்பா!

***

இடம்: மாந்தோப்பு
நேரம்: பைத்தியம் முற்றும் நேரம்

(தோப்புக் காவலன், ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கிறான்; ஒரு வழிப்போக்கன் அங்கு வருகிறான்)

காவலன்: ஏம்ப்பா! மாம்பழம் நிறையத் தொங்குகிறதே! பறித்துச் சாப்பிட்டுச் செல்லுங்கள்!

வழிப்போக்கன் (வாயை பிளந்து கொண்டு): சும்மாவேவா!

(வழிப்போக்கன் பறிக்க முயற்சிக்க, காவலன் எழுந்து, உதவி செய்ய அருகே வருகிறான்)

காவலன் (அருகே வந்தவுடன்): இப்படி ஒரு அக்கிரமம் உண்டோ? யார் வீட்டுத் தோப்பில் யார் பறிப்பது? உன் சொத்தா இது? போ இங்கிருந்து!

(காவலன், இப்படித் தொடர்ந்து, உட்காரும்போது சாப்பிடச் சொல்லியும், பறிக்கும் போது விரட்டியும் வந்ததைக் கண்ட சிலர், இவனுக்குப் பைத்தியம் என்கின்றனர்.

ஒரு வயதானவர் மட்டும், அவன் உட்கார்ந்த இடத்தைத் தோண்டச் செய்கிறார்! அங்கே, ஒரு சிங்காசனம் இருந்தது! அது தான் விக்கிரமாதித்தன் சிங்காசனம்!


நீதி, நேர்மை, தானம், தர்மம் சிந்தனைகளுடனே அதன் மீது அரசாட்சி செய்தான், விக்கிரமாதித்தன்! இந்தச் சிங்காசனமே போஜ ராஜனுக்குக் கிடைத்தது!)

***

(கண்ணன், பாவையர் உரையாடல் தொடர்கிறது ...)

பாவை: கண்ணா! நீயோ, ஏலாப் பொய்கள் உரைப்பவன்! உன்னை உடனே நம்ப முடியாது! ஆனால், சிங்காசனத்திற்கு என்று ஒரு தன்மை உண்டு! அதில் அமர்ந்து பதில் சொன்னால், நீதி, தானம், தர்மம், நியாய சிந்தனை, எல்லாம் இருக்கும்!

எனவே, நீ சிங்காசனத்தில் அமர்ந்து சொன்னால் தான் நீ சொல்வதை நாங்கள் நம்ப முடியும்!

கண்ணன் (கோபத்துடன்): என்னை நம்பவில்லை என்றால் என்னிடம் ஏன் வந்தீர்கள்?

மந்திரப் பட்டாள்: கண்ணா! கோபிக்காதே! இதுவரை, நீ உறங்கிய அழகு, அமர்ந்த அழகு, இரண்டையும் பார்த்துவிட்டோம்! நீ நிற்கும் அழகையும் நடக்கும் அழகையும் நாங்கள் ரசிக்க வேண்டும்! அதற்காகத் தான் இந்த ஏற்பாடு!

கண்ணன் (கோபம் தணிந்து): சரி! அந்த ஆசனம் எங்கே உள்ளது!

கோபிகைகள் (மொத்தமாக): வாசலில்!

கண்ணன் (சந்தேகத்துடன்): என்ன! எல்லோரும், ஒரு மார்க்கமாகவே வந்தது போல் தெரியுது?

நங்கை: படுக்கையில் இருந்து (உன் கோயில்) எழுந்து நின்று (நின்று), நடந்து வந்து (போந்து) சிங்காசனத்தில் அமர்ந்து (கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து) கொள்! தயவு செய் (அருள்)!


(திருநீர்மலை எனும் திவ்ய தேசத்தில், இந்த நான்கு கோலங்களையும் ஒருங்கே தரிசிக்கலாம்)

***

இடம்: தசரதன் அரண்மனை
காலம்: நடக்கும் காலம்

(தசரதன், சுமந்திரன் மூலம் ராமனைக் அழைக்கிறான்)

தசரதன்: ராமா! நலமா!


ராமன்: தந்தையே! தாங்கள் நலம் தானே!

தசரதன்: எல்லாம் நலம்! எல்லோரும் சௌக்கியம்! சரி! போய் வா!

ராமன்: சரி தந்தையே!

(திரும்பிச் செல்கின்றான், ராமன்)

தசரதன்: ராமா! ஒரு நிமிடம் இங்கே வா!

ராமன் (திரும்பி வந்து): தந்தையே! தங்கள் உடல் நலம் சரியாக இருக்கிறதா?

தசரதன்: நான் இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறேன்! நீ போ! போகும் போது, அப்படியே இன்னும் ஒரு முறை இங்கே வந்து, என்னைப் பார்த்து விட்டுப் போ!

ராமன் (’இன்று என்னாயிற்று இவருக்கு' என்று குழம்பினாலும்): சரி தந்தையே!

(அப்படியே, இன்னும் ஒரு முறை வந்து செல்கிறான்)

கௌசலை: உங்களுக்கு என்ன ஆயிற்று இன்று?

தசரதன்: உனக்குமா புரியவில்லை?

ராமன் எதிரில் வரும்போது, அவன் முன்னழகு, யானையின் நடை அழகு! அதனை ரசித்தேன்!

அவனைத் திரும்பிப் போகச் சொன்னது, சிங்க நடை போன்ற அவன் பின்னழகை ரசிக்க!


அவனைத் திரும்பி வரச் சொன்னது, அவன் திரும்பும்போது, புலி போன்ற அவன் நடை அழகை ரசிக்க!

இன்னுமொரு முறை வரச் சொன்னது, சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள!

கௌசலை: என்ன சந்தேகம்?

தசரதன்:ராமனைச் சிங்க நடை என்று சொல்ல வேண்டுமா, அல்லது, சிங்கத்தை ராம நடை என்று சொல்ல வேண்டுமா?’ என்ற சந்தேகம், என் மனதில் வெகு நாளாக உண்டு! அதைத் தீர்த்துக் கொள்ள!

***

ம்பெருமான் நடக்கும் அழகை - குறிப்பாக, அரங்கன் நடையை - வர்ணிக்க இயலாது.


(காஞ்சிக் குடை, அரங்க நடை, திருப்பதி வடை, மேல்கோட்டை முடி என்பர் பெரியோர்)

இன்று, குலசேகரர் திருநட்சத்திரம்! எனவே, அவர் வர்ணித்த ராமனின் நடையைத் தான் அடியேன் மேலே கூறினேன். இதோ அந்தப் பாசுரம்:

வா, போகு, வா, இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ* மலராள் கூந்தல்*
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா* விடையோன் தன் வில்லைச் செற்றாய்*
மா போகு நெடுங்கானம் வல்வினையேன்* மனம் உருக்கும் மகனே!* இன்று
நீ போக, என் நெஞ்சம்* இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே!
- பெருமாள் திருமொழி (9-4)

('இப்படி அழகான நடை நடக்கும் உன்னையும், சீதையையும், காட்டிற்குப் போ! 14 வருடங்கள் வராதே என்றேன்!' என்று தசரதன் புலம்புவதாக ஆழ்வாரின் நடை!)

***

(பாவை உரையாடல் தொடர்கின்றது ...)

கண்ணன் ('எல்லோரும் ஒரு Plan-ஓட தான் வந்தீர்களா' என்று நினைத்து): அமர்ந்தாயிற்று! இப்போது சொல்லுங்கள்! என்ன வேண்டும் உங்களுக்கு?


நாணாதாள்: உனக்குத் தெரியாதா கண்ணா?

கண்ணன் ('ஆஹா! புதுசா ஒரு Bit-ஆ இன்று' என்று நினைத்து): நீங்கள் தானே வந்தீர்கள்! நீங்களே சொல்லுங்கள்!

நாவுடையாள்: கண்ணா! நாங்களோ சிறுமிகள்! அதுவும், அறிவொன்றும் இல்லாத ஆய்ப்பாடியில் பிறந்த சிறுமிகள்! எங்களுக்கு, வலக்கை எது, இடக்கை எது என்றே தெரியாது!

கண்ணன் (அவள் கைகளைப் பிடித்து): இதோ! இது வலக்கை! இது இடக்கை!

இளங்கிளி: கண்ணா! எப்போதும் Joke தான் உனக்கு! Be Serious! ’நாங்கள் அறிவிலிகள்! எங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியாது' என்று சொல்ல வந்தோம்!

நீ, ஒரு கையில் வைரத்தையும், ஒரு கையில் குச்சி மிட்டாயையும் காண்பித்து, எது வேண்டும் என்று கேட்டால், நாங்கள் குச்சி மிட்டாயைத் தான் எடுத்துக் கொள்வோம்!

ஆண்டாள் எனும் பாவை (குறுக்கே புகுந்து): நாங்கள் வந்த காரியம் எது (யாம் வந்த காரியம்)? எங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று ஆராய்ந்து பார்க்கும் (ஆராய்ந்து), என்ற பொறுப்பு உன்னுடையது!

எங்களுக்கு எது நல்லதோ அதை நீ அருள வேண்டும் (அருள்)! நாங்கள் கேட்டதைத் தான் நீ கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் அல்ல!

(தசாவதாரங்களையும் ஆண்டாள் திருப்பாவையில் சொல்லி இருந்தாலும், நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று ஆராயும் பொறுப்பை நரசிம்மனிடமே விட்டது மிக விசேஷம்!)

***

சில வியாக்கியான கர்த்தாக்கள், இதை, க்ருஷ்ணாவதார ரகசியம் என்பர்:

மாரி - பாற்கடலில்
மலை ... சிங்கம் - உறங்கும் எம்பெருமான்
அறிவுற்று ... போலே - அவதார நேரம் வந்தது என்று தெரிந்து
நீ ... இருந்து - அங்கிருந்து, பூமிக்கு வா என்று
யாம் ... அருள் - பூமாதேவி (ஆண்டாள்) முறையிடுகின்றாள்

அடுத்த பதிவில், ஆண்டாளின் அடுத்த பிரபந்தமான நாச்சியார் திருமொழி தொடரும்!

- நாச்சியார் நரசிம்மர் தொடர்வார்

Read more »

Tuesday, February 16, 2010

திவ்யதேசங்கள் 108 இல்லை 109 ??


எம்பெருமான் இருக்கும் இடத்தில் நோய்களுக்கு இடமில்லை என்று, 'நெய்க்குடத்தை (5-2)' என்று தொடங்கும் திருமொழி மூலம் அருளிச் செய்கின்றார்.

இதில் 4-ம் பாசுரத்தில், நரசிம்மன் இருக்கும் இடத்தை வர்ணிக்கின்றார்!

***

மங்கிய வல்வினை நோய்காள்!* உமக்கும் ஓர் வல்வினை கண்டீர்!*
இங்குப் புகேன்மின்! புகேன்மின்!* எளிதன்று கண்டீர்! புகேன்மின்!*
சிங்கப் பிரானவன் எம்மான்* சேரும் திருக்கோயில் கண்டீர்!*
பங்கப் படாதுய்யப் போமின்!* பண்டன்று; பட்டினங் காப்பே.
நெய்க்குடத்தை 5-2-4

மங்கிய வலிமையான வினையான நோய்களே! உங்களுக்கும் ஒரு தீய வினை வந்து விட்டது! இங்கே கட்டாயம் நுழையாதீர்கள்! நுழைவது நிச்சயம் எளிது அல்ல! எனவே நுழையாதீர்கள்! சிங்க அவதாரம் எடுத்த என் தலைவன் வந்து சேர்ந்த திருக்கோயிலாகும் இது! நீங்கள் அவமானப் படாமல் இருக்க, உயிர் வாழ, ஓடி விடுங்கள்! என் உடல் பழைய நிலமையில் இல்லை. இது நரசிம்மன் வாழும் பட்டினம்! நன்கு காக்கப் பட்டுள்ளது!

(மங்கிய - மழுங்கிய; புகேன்மின் - நுழைய வேண்டாம்; பங்கம் - அவமானம்; பண்டன்று = பண்டு + அன்று; பழையது அன்று; பட்டினம் - பட்டணம், உடல்; காப்பு - காக்கப் படும், பட்டது; கண்டீர் - நிச்சயம்)

'மங்கிய வல்வினை நோய்காள்' என்கின்றார் ஆழ்வார்! எது மங்கியது? தீவினையா? நோய்களா? இல்லை வேறு ஏதாவதா?

***

ரு மடம்! அதில், ஒரு குருவும், சில சீடர்களும்!

ஒரு சமயம், குருவுக்குக் பயங்கரக் காய்ச்சல்! கண் திறக்க முடியாமல், நாள் முழுவதும் படுத்திருக்கிறார்!

எல்லாச் சீடர்களின் முகத்திலும் ஒரு கேள்விக் குறி! மறுநாள் குருவே வழக்கம் போல ஆராதனை செய்வாரா, அல்லது வேறு யாருக்காவது இந்தப் பாக்கியம் கிடைக்குமா? தனக்குக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கலந்த கேள்விக்குறி, அவர்கள் முகங்களில்!

மறு நாள் அதிகாலை! குரு, கஷ்டப்பட்டு எழுந்து நேரே சந்நிதியின் முன்பு வருகிறார்! கீழே உட்கார்ந்து ஏதோ மந்திரம் சொல்லி, கையிலிருந்து நீர் வார்த்து, ஒரு பாத்திரத்தில் விடுகிறார். குரு திடீரென்று, பழையபடி 'Normal'.

காலைக் கடன்களை முடித்துவிட்டு, வழக்கம் போல், பூஜை செய்கிறார் குரு! சீடர்களின் முகம், 'காற்றடித்த பலூன்கள்' போல்! சீடர்கள், அரக்கப் பரக்க ஓடி வருகின்றனர், பூஜைக்காக!


பூஜை முடிந்தவுடன், பாத்திரத்தில் வைத்திருந்த நீரை, மறுபடியும் குடித்து விடுகிறார் குரு! மீண்டும் பயங்கரக் காய்ச்சல்! உட்காருவதற்கே கஷ்டப் படுகின்றார்!

பார்த்துக் கொண்டிருந்தனர் சீடர்கள் - அறிந்தும், அறியாமலும்!

ஒரு சீடன்: குருவே! சந்தேகம் ஒன்று!

குரு: கேள்!

அதே சீடன்: நீங்கள் நீர் வார்த்தது எதை?

குரு: நான் செய்த பாபத்தை! நான் முன் பிறப்பில் செய்த வினைகள், இந்தப் பிறவியில் என் உடம்பையும் ஆத்மாவையும் வருத்தும் நோயாக வந்தன. பூஜை செய்வதற்காக, என் யோக சக்தியினால் அதை என் உடம்பில் இருந்து இறக்கி வைத்தேன்!

இன்னொரு சீடன்: ஆஹா! என்ன அற்புதம்! அப்படியானால் அந்த நீரைத் தூக்கி எறிந்து விட்டால், காய்ச்சலே வராதே! இந்த வித்தையை ஏன் நீங்கள் எங்களுக்குச் சொல்லித் தரவில்லை?

குரு (முனகலுடன்): ஐயோ! உன்னைச் சீடனாக அடைய நான் ஏதோ பெரும் பாவம் செய்திருக்க வேண்டும்!

குரு (எல்லோரையும் பார்த்து): இப்பொழுதும் என்னால் அந்த நீரை எறிந்து விட முடியும்! ஆனால், அதனுள் கரைந்திருந்த பாவத்தை என்னால் எறிந்து விட முடியாது! அந்த முன்வினைப் பாவத்தைக் கழிக்க, என் ஆன்மா ஏதாவது உடலுடன் மீண்டும் ஒரு பிறவி எடுத்தே ஆக வேண்டும்! தெரிந்ததா!

(புரிந்து விட்டது போல், சீடர்கள் எல்லோரும் தலையாட்டுகின்றனர்)

***

நான் முன்பு செய்த பாவங்களே, இப்போது என் நோய்கள் (வல்வினை நோய்காள்) என்கின்றார் பெரியாழ்வார்!

உங்களால் இதுவரை மங்கியது (மங்கிய), என் உடல் அல்ல, என் ஆன்மா!' என்கின்றார்!

இனிமேல், நீங்கள் மங்குவீர்கள்! ஏனென்றால், உங்களையே மங்கச் செய்கின்ற ஒரு தீவினை வந்து விட்டது (உமக்கோர் வல்வினை கண்டீர்)!

நாராயணனை 'வல்வினை' என்கின்றாரே ஆழ்வார்! இது நியாயமா?

அவன் தீவினை தான் - நல்லவனுக்கு நல்லவன்! கெட்டவனுக்குக் கெட்டவன்! தீவினைக்குத் தீவினை!

பெரியாழ்வாரின் தெய்வமான நரசிம்மன், திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்து விட்டானாம் (சேரும் திருக்கோயில் கண்டீர்)!

அவன் வந்தது எந்தத் திருக்கோயில்? எந்தத் திவ்விய தேசம்?

***

இடம்: வைகுந்தம்
நேரம்: Pilgrimage போகும் நேரம்

(மங்கையார், தன் Laptop-ஐ மடியில் வைத்துக் கொண்டு, Excel-ல் ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றார். அவர் ரொம்ப நேரமாக ஏதோ யோசிப்பதைக் கண்ட தொண்டரடிப்பொடியாழ்வார், அருகே செல்கின்றார்)


அடிப்பொடிகள்: மங்கையாரே! என்ன ரொம்ப யோசனை? கணக்கு ஏதாவது உதைக்கிறதா?

மங்கையார்: இரண்டு பூலோக வாரங்களுக்கு முன், திருநாங்கூரில் உள்ள 11 கோயில்களிலும் உள்ள எம்பெருமான் திருமணி மாடக் கோயிலுக்கு வந்து, 11 கருடன்கள் மேல் இருந்து சுமார் 2 லட்சம் மக்களுக்கு தரிசனம் தந்தான்! என் காலத்தில் இந்த உத்ஸவம் இல்லை! எனவே அவனைத் தரிசிக்க அங்கு சென்றிருந்தேன். மிகவும் அருமை!

அடிப்பொடிகள்: ஆஹா! நமக்கெல்லாம் எப்போதாவது ஒரு முறை தான் கருட சேவை! அதுவும் அவசரமாக! ... சரி! அதற்கும் நீர் போடும் கணக்கிற்கும் என்ன சம்பந்தம்?

மங்கையார் (கடுப்புடன்): அங்கு அடியவர்கள் போன்று தோற்றமளித்த சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன், கையில் '108 திவ்ய தேசங்கள்' என்ற புத்தகம் வைத்துக் கொண்டு, பல கோயில்களுக்கு எதிரே 'Tick Mark' செய்திருந்தான்.

மெதுவாக விசாரித்ததில், அவன் பெயர் ரங்கன் என்றும், அவன் குறியிட்டது, அவன் 'பார்த்த' திவ்ய தேசங்கள் என்றும் தெரிய வந்தது!

நான் எழுதிய பாசுரங்களை மீண்டும் Count பண்ணினேன் - எவ்வளவு திவ்ய தேசங்கள் நான் பார்த்திருக்கிறேன் என்று! எப்படிக் கணக்குப் போட்டாலும் 85 தான் வருகிறது! Excel-ல் எதோ Bug உள்ளது என்று நினைக்கிறேன்.

பூதத்தாழ்வார் (அங்கே வந்து): அதெல்லாம் ஒன்றுமில்லை! நீங்கள் 85 தான் பார்த்தீர்கள்!

(இதற்குள் மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் வந்து சேர்கின்றனர்)

மதுரகவியார்: இதெல்லாம் எனக்குக் கவலையே இல்லை! ஒரு தேசத்தின் மேலும் பாடாமலேயே எனக்கும் உங்களைப் போல் ஆழ்வார் பட்டம்!

பேயாழ்வார்: நம் எல்லோரையும் விட அந்தப் பொடியன் அதிகமாகப் பார்த்திருக்கிறானா? நாமும் 106-ஐயும் பார்த்து விடவேண்டும்!

(மற்ற எல்லா ஆழ்வார்களும், பூமிப் பிராட்டியும் இதை ஆமோதிக்க, அங்கு திவ்ய தேச Tour Planning நடக்கிறது ... மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு மனதாக, மங்கையாரை Tour Coordinator ஆக Volunteer செய்கின்றனர்)

***

இடம்: வைகுந்தம்
நேரம்: பூலோக மறுநாள் காலை


(எல்லா ஆழ்வார்களும், பூமாதேவியும் கிளம்பத் தயாராக, எதிரே குழப்பம் வர, எல்லோரும் குழம்புகிறார்கள்)

பூமாதேவி: வாருங்கள் நாரதரே! வேறு இடம் கிடைக்க வில்லையா?

நாரதர்: நாராயணா! தாயே! விளையாட்டு வேண்டாம்! ... சரி ... எல்லோரும் எங்கே கிளம்புகிறீர்கள்?

மங்கையார்: திவ்ய தேசங்களைப் பார்க்கப் போகிறோம்!

நாரதர்: Loan Application போட்டது அலுவலகத்திலா அல்லது வங்கியிலா?

(மங்கையார், பேந்தப் பேந்த விழிக்கிறார்)

நாரதர்: என்ன ஸ்வாமி! முழிக்கிறீர்! நீங்கள் செல்வது, கலியுலகத்திற்கு! 12 பேர் செல்வதானால், இதற்கெல்லாம் நிறைய Vitamin-M(oney) தேவைப்படுமே? அது இல்லாமல் எதுவும் நடக்காது! தரிசனத்திற்குக் கூட காசு கொடுத்து டிக்கட் வாங்கித் தான் உள்ளே செல்ல வேண்டும்!

Office Loan - ஸ்ரீதேவியிடம் கை மாத்து; Bank Loan - குபேரனிடம் கடன்!

குலசேகரர்: ராமா! நீ ஆண்ட ராஜ்ஜியத்திலா இப்படி?

நாரதர்: போகும்போது, இங்கேயிருந்து தண்ணீர் எடுத்துண்டு போங்கோ! அங்கேயெல்லாம், காசு குடுத்துத் தான் தண்ணீர் வாங்கணும்! அதுவும் நல்ல தண்ணின்னா காசு நிறைய!

மதுரகவி: நதிகள் எல்லாம் பூமியில் இப்போது இல்லையா? முன்பெல்லாம், நதி அருகே தானே கோயிலும் இருக்கும்?

நாரதர் ('உண்மையிலேயே உங்களுக்கு ஒன்றும் தெரியாதா?' என்று நினைத்து): Dam கட்டி, எல்லா நதிகளும் காலி! னதியில் இருக்கும் மண்ணைக் கூட விடுவதில்லை! மேலும், நாம் வெளியேற்றும் தண்ணீருக்குக் கூட காசு குடுக்கணும்! ஏதோ Pay-and-Use ஆம்!

பூதத்தார்: என்ன இது அநியாயம்! அதுக்குக் கூட Freedom கிடையாதா?

நாரதர்: அதிருக்கட்டும்! நீங்கள் எல்லோரும் எந்தக் கலை? வடகலையா? தென்கலையா?

பேயாழ்வார்: ஆடல், பாடல் போல் அதுவும் ஒரு புதுக் கலையா?

நாரதர் (தன் தலையில் அடித்துக் கொண்டு): நாராயணா! அவன் உங்களுக்கு ஒண்ணும் சொல்லிக் குடுக்கலையா? அது தான் ஸ்வாமி! நீங்கள் நெற்றியில் போடும் திருநாமம், Y-யா அல்லது, U-வா?

உதாரணத்திற்கு, நீங்கள் பெருமாள் நெற்றியில் Y போட்ட கோயிலுக்குச் சென்றால், நீங்களே பாடிய பாசுரமாக இருந்தாலும், உங்கள் நெற்றியில் U போட்டிருந்தால், உங்களைப் பாசுரம் சொல்ல விடமாட்டார்கள்!

எனவே, கோயிலுக்குத் தகுந்தால் போல் மாற்றிப் போட்டு, உள்ளே போங்கள்! Best, ஒத்தை நாமம் மட்டும் போட்டுச் செல்லுங்கள்!

மேலும் உங்கள் பாசுரத்திற்கு, நீங்களே நினைக்காத அர்த்தத்தையும் சிலர் உங்களுக்குச் சொல்ல முயற்சிக்கலாம்! அவர்களையெல்லாம் மன்னித்து விடுங்கள்!

பாணனார்: கோவிந்தா!

நாரதர்: Ticket வாங்கியாச்சா?

(பாணாழ்வார் புரியாமல் முழிக்க, நாரதர் சிரிக்கிறார்)

நாரதர்: நீங்களே போய்த் தெரிந்து கொள்ளுங்கள்! அங்கே போய், VIP தரிசனம் கிடைக்க முயற்சி செய்யுங்கள்! கொஞ்சம் கிட்டே இருந்து தரிசிக்கலாம். அது கிடைக்க, Vitamin-M போதும்!

நாரதர் (மீண்டும்): எப்படிச் செல்லப் போகிறீர்கள்?

மங்கையார்: நான் ஆடல்மானை குறையலூர் லாயத்தில் இருந்து வாங்கி, அந்தக் காலத்தில் பயணம் செய்தேன்! அங்கு சென்று, ஆளுக்கு ஒரு குதிரை கேட்டு வாங்கலாம் என நினைக்கிறேன்!

நாரதர் (பலத்த சிரிப்புடன்): ஆழ்வாரே! காமெடி பண்ணாதீர்கள்! இப்போது நீங்கள் செல்ல, Car அல்லது மினி-Bus வேண்டும்!

பெரியாழ்வார்: கால் நடையாகச் செல்ல முடியுமா?

நாரதர்: சரியாகச் சொன்னீர்கள்! ரோடு போடுகிறேன் பேர்வழி என்று, சாலைகளில் உள்ள மரமெல்லாம் காலி! நடந்து செல்ல, நடக்க, Platform-மும் கிடையாது! நீங்கள் நடந்து சென்றால், பின்னால் இருந்து வேகமாக வரும் வண்டிகள், உங்களை திரும்பவும் வைகுந்தத்திற்கே செலவில்லாமல் அனுப்பிவிடும்! ஒழுங்காக, Bus ஏற்பாடு பண்ணும்! தங்க ஏற்பாடு பண்ணியாச்சா?

பொய்கையார்: திருக்கோவலூர் மாதிரி, ஏதாவது விட்டுத் திண்ணை, அல்லது மடத்தில் தங்கிக்க வேண்டியது தான்!

நாரதர் ('நீங்கள் கோயில் பார்த்த மாதிரி தான்!' என்றெண்ணி): ஸ்வாமி! எல்லா இடத்திலும் மடங்கள் இல்லை! கோயிலும் முன்பு போல் எப்போதும் திறந்து இருப்பதில்லை!

சில மடங்களில், உணவு இலவசம் என்று சொன்னாலும், அங்குள்ளவர்களுக்குக் காசு கொடுக்க வேண்டும்! நீங்கள் மறப்பது போல் நடித்தாலும் அவர்கள் விடமாட்டார்கள்!

ஹோட்டல் தான் வசதி! ஆனால் ஒன்று, ஹோட்டலில் சாப்பிட்டால், ஆச்சாரம் பார்க்காமல், கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடுதல் நலம்! சில ஹோட்டல்களில், காப்பியில் கூட வெங்காயமோ அல்லது Non-Veg-ஜோ இருக்கலாம்! Quality என்ற பேச்சே கூடாது!

நம்மாழ்வார்: ஒண்ணுமே புரியலே உலகத்திலே!

நாரதர்: ஒரே நாள் போய்ட்டு வாங்கோ! எல்லாம் புரியும்! ... அப்புறம், எல்லோரும் ஆளுக்கு Mobile ஒன்றும், Roaming Connection-உம் வாங்கிக் கொள்ளுங்கள்!

மங்கையார்: கோயிலுக்குச் செல்ல Mobile எதற்கு?

நாரதர்: பல கோயில்களில் அர்ச்சகர், கூப்பிட்டால் தான் வருவார்! ஒரு நாள் முன்னாடியே சொல்ல வேண்டும்! பின் அவர் வீட்டுக்குச் சென்று, அவரையும் அள்ளிக் கொண்டு, கோயிலுக்குச் சென்று, தரிசனம் செய்து, அர்ச்சகரை அவரை வீட்டில் விட்டுச் செல்ல வேண்டும்! இல்லாவிடில் அவர் வரமாட்டார்!

நாரதர் (மீண்டும்): இன்னும் ஒண்ணு! சில கோயில்களில், யாராவது வந்து, 'உங்கள் பேரில் 12 வாரங்கள் விசேஷ பூஜைக்கு ஏற்பாடு செய்து, பிரசாதம் வீட்டிற்கு அனுப்புகிறேன்' என்று சொல்லி, பணம் பறிப்பர்! உங்கள் வீட்டிற்கு பிரசாதம் வருமோ தெரியாது! ஆனால் உங்கள் நெற்றியில் கண்டிப்பாக பட்டை நாமம் விழும்!

பொய்கையார்: க்ருஷ்ணா! இங்கேயே இருந்து உன்னைப் பார்ப்பது எவ்வளவோ மேல்!

(சொல்லி வைத்தால் போல் அவன், கருடனுடன் Entry ஆகிறான்)

நாராயணன்: ஆழ்வார்களே! எங்கே புறப்பாடு! தேவலோகத்தில் ஏதாவது வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா?

(மங்கையார், நிதானமாக எம்பெருமானுக்கு எடுத்துச் சொல்ல, அவர் கேலிச் சிரிப்புச் சிரிக்கிறார்)

நாராயணன்: என்னாயிற்று உங்களுக்கு? கார் கொண்டு சுற்றினாலும், கடைசி இரண்டையும் பார்க்க, அவர்கள் இங்கே தானே வரவேண்டும்? நீங்கள் தான் அதையும் பார்த்து விட்டீர்களே?

மழிசைப்பிரான்: ஸ்வாமி! இருந்தாலும், கீழே உள்ள அனைத்தையும் நாங்கள் பார்க்கவில்லையே!

மங்கையார்: நாராயணா! அடுத்த பூலோக School Vacation-ல் அந்தப் பையன் இன்னொரு Tour செல்வானாம்! அப்போது, 106-ஐயும் பார்த்து முடித்து விடுவானாம்!


நாராயணன் (அனைவரையும் பார்த்து):
ஆழ்வார்களே! கலி நிஜமாகவே உங்களையும் பிடித்து விட்டது! நீங்கள் எல்லோரும் பாடியதால் தானே அந்தக் கோயில்களை எல்லாம் அவர்கள் பார்க்கிறார்கள்! அவர்கள், எவ்வளவு புத்தகங்களை வாங்கி Tick செய்தாலும், அவர்களால் கீழே உள்ள அனைத்தையும் பார்க்க இயலாது! ஏனென்றால், பெரும்பாலோர் நீங்கள் பாடிய ஒன்றை - மிக முக்கியமானது - அவர்கள் மறந்து விடுகின்றனர்!

(எல்லா ஆழ்வார்களும் முழிக்கின்றனர்)

நாராயணன்: உண்மையான பக்தன், என்னைத் தேடி வரவேண்டியதில்லை! நானே அவனைத் தேடிச் செல்கிறேன்! அவனுக்கு என்னிடமும், என் அடியார்களிடமும் உள்ள பக்தி உன்னதமாக இருக்குமாயின், அவனுக்கு நானே தரிசனம் கொடுத்து, அவன் மனத்தின் உள்ளே நிறைந்து விடுகிறேன்!

உண்மையான பக்தன் மனமே நான் இருக்கும் கோயில்! அது தான் 109-வது திருப்பதி! நெஞ்ச நாட்டுத் திருப்பதி!

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்!* மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் -- மாயனுக்கு என்பர் நல்லோர்* அவை தன்னொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து* இன்று அவன் வந்து
இருப்பிடம்* என்றன் இதயத்துளே தனக்கு இன்புறவே.
இராமாநுஜ நூற்றந்தாதி-106

உங்கள் நெஞ்சங்களில், நான் எப்போதோ புகுந்தாகி விட்டது! ஆழ்வார்களாகிய உங்களைத் தன் மனத்துள் வைத்த இராமாநுஜன் என் பக்தன்! அவன் மனத்தினுள்ளே நானும், நீங்களும் இருக்கின்றோம்!

அந்த இராமாநுஜனை எவன் மனத்துள் வைக்கின்றானோ அவன் மனத்துள், நானும், நீங்களும், இராமாநுஜனும்!

அப்படிப் பட்ட பக்தன் இருக்கும் இடம், வைகுந்தமே! அவன் திவ்ய தேசங்களைத் தேடிச் சென்று, Tick Mark போட வேண்டியதில்லை!

சும்மா ஏதோ 85, 90, 106 என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டு, நேரத்தை வீணடிக்காதீர்கள்!

(பாம்பின் மேல் ஏறிப் படுத்துக் கொள்கிறார் அவர்)

***

இடம்: பூலோகம், இன்றைய தென் தமிழ் நாடு
நேரம்: விரட்டப் படும் நேரம்

நோய்கள்: நாங்கள் யமனின் தூதர்களால் அனுப்பட்டுள்ளோம்! 'உங்கள் உடலை நசித்து, உயிர் இழக்கச் செய்ய வேண்டும்' என்பது எங்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளை!

பெரியாழ்வார்: இங்கே நீங்கள் கட்டாயம் நுழையக் கூடாது (புகேன்மின்! புகேன்மின்!)

('கண்டிப்பாக நுழைய வேண்டாம்' என்று சொல்ல, 'புகேன்மின்' என்று இருமுறை சொல்வது தமிழுக்கே உரிய அழகு! இன்றும், கர்நாடக மாநிலத்தில் உள்ள மேலக்கோட்டையில் தமிழ் பேசுபவர்கள், 'கட்டாயம் வரவேண்டும்' என்று சொல்ல, 'வரவே வரவேணும்' என்பர்!

இப்போதைய செந்தமிழ்: 'வரலேன்னா உன்னைக் கைம்மா பண்ணிருவேன்')

நோய்கள்: ஏன்?

ஆழ்வார்: என் உடலும், நெஞ்சமும், பழைய மாதிரி அல்ல! (பண்டு அன்று)

நோய்கள்: ஏன்?

ஆழ்வார்: அவை, இப்போது ஒரு புதிய ஊர் (பட்டினம்). பழையதை அழிக்கவே உங்களுக்கு அதிகாரம் தரப்பட்டது! புதியதை அல்ல! எனவே, ஓடி விடுங்கள் (புகேன்மின்)!

நோய்கள்: புதிதாக எங்களுக்குத் தெரியாமல் யார் நிர்மாணித்தது?

ஆழ்வார்: சிங்கப்பிரான்! அவன் என்னுள் புகுந்து விட்டான்! இனிமேல் இது அவனுடைய கோயில் (சேரும் திருக்கோயில் கண்டீர்)! இங்கு நுழைவது கஷ்டம் (எளிதன்று கண்டீர்)! எனவே நுழையாதீர்கள் (புகேன்மின்)!

நோய்கள்: நாங்கள் புகாமல் திரும்பிச் சென்றால், நமன் தமர் எங்களைக் கொன்று விடுவர்!

ஆழ்வார்: அவமானப் படாமல் (பங்கப் படாது), உயிர் வாழ (உய்ய) வேண்டுமென்றால் ஓடி விடுங்கள் (போமின்)! இங்கு காவல் (காப்பு) அதிகம்!

(அவை, 'புகுந்தால், இவன் அடிப்பான், புகாவிட்டால் அவன் அடிப்பான்' என்று புலம்புகின்றன)

***

நாராயணன் ஆழ்வார்களுக்குச் சொன்னது போல், பெரியாழ்வாரின் நெஞ்சமே இந்தப் பாசுரத்தில் சொன்ன திருக்கோயில்!

பெரியாழ்வாரைப் போல், பல ஆழ்வார்கள், தங்கள் நெஞ்சத்தையே, எம்பெருமான் புகும் கோயிலாக நினைத்து, பல பாசுரங்கள் இயற்றி உள்ளனர்.

நம்மாழ்வார், எம்பெருமான் தன் நெஞ்சில் புகுந்த விதத்தை, ஒரு அழகிய பாசுரம் மூலம் வருணிக்கின்றார்:

மாயப் பிரான்* என வல்வினை மாய்ந்து அற*
நேயத்தினால்* நெஞ்சம் நாடு குடி கொண்டான்*
தேசத்து அமரர்* திருக்கடித்தானத்தை*
வாசப் பொழில்* மன்னு கோயில் கொண்டானே.
திருவாய்மொழி-8-6-4

எம்பெருமான், தான் மட்டும் அல்லாது, தான் ஏற்கனவே கோயில் கொண்ட திருக்கடித்தானம் எனும் திவ்ய தேசக் கோயிலோடும், பரமபதத்தோடும், நம்மாழ்வாரின் 'நெஞ்சம் நாடு' குடி கொண்டானாம்!

(இந்தப் பாசுரத்துடன், பெரியாழ்வார் அனுபவித்த நரசிம்மர் பாசுரங்கள் முடிகின்றது. அடுத்த பாசுரத்தில், ஸ்ரீ ஆண்டாளை அழைக்கலாம்)

- நரசிம்மர் மீண்டும் வருவார்!

Read more »

Monday, February 08, 2010

நரசிம்ம சரணாகதி - 2


சரணாகத வத்ஸலனின் பெருமைகள் தொடர்கிறது ...

***

(மாவலி படையெடுத்து வர, இந்திரன், சுவர்க்கத்தை விட்டு Vivek Style-ல் Escape! இந்திரன் தாய் அதிதி, பயோ விரதத்தைக் கடைப்பிடிக்க, நாராயணன் தோன்றுகிறார்)

நாராயணன்: நான் பாட்டுக்கு படுத்திருந்தேன்! ஏன் என்னை எழுப்பினாய்!

அதிதி: பிரபோ! மாவலியினால் என் மகன் நாடோடியாகி விட்டான்! நீங்கள் மாவலியை அழிக்க வேண்டும்!

நாராயணன்: முடியாது! பிரகலாதன் வம்சத்தவரை நான் அழிப்பதில்லை என்று வாக்குக் கொடுத்துள்ளேன்!

அதிதி: அவனை சுவர்க்கத்தில் இருந்து விரட்டவாவது முடியுமா?

நாராயணன்: அதுவும் முடியாது!

அதிதி: ஏன்?

நாராயணன்: மாவலி, யாகம் செய்து, முனிவர்கள் ஆசியுடன் இந்தப் பலத்தைப் பெற்றுள்ளான்! தேவர்களின் பலம், அவனிடம் பலிக்காது!

அதிதி: உங்களால் முடியாது என்று உண்டோ? ஏதாவது செய்யுங்கள்!

நாராயணன் ('சூடேத்திக்கிட்டே இருக்காங்களே' என்ற முனகலுடன்): இழந்த சுவர்க்கத்தை வேறு விதமாகத் தான் பெற வேண்டும். இதற்கு நானே வழி செய்கிறேன்!'

(மறைந்து விடுகிறார் நாராயணன்)

***

இடம்: அதிதியின் மாளிகை
நேரம்: புரட்டாசி மாதம், சுக்கில பக்ஷம், துவாதசி, சிரவண நட்சத்திரம்

(காசியப முனிவருக்கும், அதிதிக்கும், மகனாகப் பிறக்கிறான் நாராயணன்)

காசியபர்: பிரபோ! உமக்குக் கோடி நமஸ்காரங்கள்! நீர் மாவலியிடம் இப்படியே சென்றால், அவனுக்கு உங்களை அடையாளம் தெரிந்துவிடும்!

நாராயணன்: தெரியாதா எனக்கு! நான் வேறு Uniform-ல் தான் செல்லப் போகிறேன்!


(உடனே வாமனனாக மாறிய நாராயணனுக்கு, காசியபர் பிரம்மோபதேசம் செய்து, முஞ்சியைக் கொடுக்கிறார்; பிரகஸ்பதி பிரம்ம சூத்திரத்தைக் கொடுக்க, சூரியன் காயத்ரி மந்திரத்தை உபதேசிக்க, சந்திரன் தண்டம் கொடுக்க, தாய் கோவணத்தைக் கொடுக்க, பிரம்மன் கமண்டலம் கொடுக்க, குபேரன் பிச்சைப் பாத்திரத்தைக் கொடுக்கிறான்!)

பிரமன்: பிரபோ! கொடுத்தே பழக்கப் பட்டவர் நீர்! யாசிப்பது உமக்குப் புதிது! எதற்கும் ஒரு 'Trial' பார்த்துக் கொள்ளுங்கள்!


(யார் முதல் பிச்சை அளிப்பது என்பதில் அங்கு பெரும் போட்டி! எம்பெருமானுக்கே கொடுப்பது பாக்கியமல்லவா? அடிக்கிறது Lottery, வருங்காலத் தங்கை பார்வதிக்கு!)

(வாமனன் புறப்பட எத்தனிக்க, ஸ்ரீதேவி ஜம்மென்று அவன் மார்பில் ஏறி அமர்ந்து கொள்கிறாள்!)

சூரியன் (ஸ்ரீதேவியைப் பார்த்து): ஐயோ! நீங்கள் செல்லாதீர்கள்! காரியம் கெட்டு விடும்!

ஸ்ரீதேவி: அதெல்லாம் முடியாது! அவரை விட்டு நான் விலக மாட்டேன்.!நான் கட்டாயம் உடன் செல்வேன்!

குபேரன் (ஸ்ரீதேவியிடம்): தாயே! நீங்கள் சென்றால், உங்கள் கருணைப் பார்வை மாவலி மேல் பட்டு விடும்! பின்னர் அவனிடம் இருக்கும் சொர்க்கத்தை பிடுங்க நாராயணனாலும் முடியாது!

(அங்கு வாக்குவாதம் முற்ற, திடீரென்று, 'Idea' என்று யாரோ கத்த, எல்லோரும் திரும்பிப் பார்க்கின்றனர்)

பூமாதேவி: பிரபோ! உங்கள் மேல், ஸ்ரீதேவியை மறைக்கும்படி, மான் தோலை அணிந்து செல்லுங்கள்!


(அனைவருக்கும் இந்த எண்ணம் பிடித்துப் போக, பூமாதேவியே க்ருஷ்ணாஜனம் அணிவிக்க, அவர் புறப்படுகிறார்!)

***

லியிடம் வாமனன் மூன்றடி நிலம் யாசித்து, உலகளக்கிறான்! வளர்ந்த போது கடுஞ்சொற்களைப் பலர் அள்ளி வீச, அதையும் பொறுத்துக் கொள்கிறான்!

மறைந்திருந்த ஸ்ரீதேவி, திருவடி வளரும் விதத்தை சற்று எட்டிப் பார்க்க, அவள் பார்வை, திருவடியில் நீர் வார்க்கும் பலியின் மீதும் படுகிறது! இதனாலேயே, அவனுக்கு இந்திர பதவி - சாவர்ணி மனுவில்!


(ஸ்வாமி தேசிகன் திருக்கோவலூர் உத்தமன் ஸ்ரீ தேஹளீஸன் மேல் 28 அற்புதமான ஸ்லோகங்கள் இயற்றியுள்ளார்! முடிந்தால் படியுங்கள்!)

தான் பிச்சை எடுத்தாவது, திட்டு வாங்கியாவது, பிறருக்கு உதவி செய்யும் அவனல்லவோ உத்தமர்களில் உத்தமன் - ஸர்வோத்தமன் - ஓங்கி உலகளந்த உத்தமன்?

தன்னைத் தேடி வருபவர்களின் பிரச்சனைகளை, தன்னுடையதாகவே நினைத்துக் கொள்கிறானாம்! அவற்றைத் தீர்த்து வைப்பதைத் தன் பேறாக நினைக்கிறானாம் அவன்!

இவன் உத்தம குணத்தை (ஸர்வ ஸ்வாமித்வத்தை), 'உலகேழும் அளந்தாய்' என்ற வார்த்தை (கதை) மூலம் சொல்கின்றார் பெரியாழ்வார்!

***

மார்க்கண்டேய முனிவர், நாராயணனைத் தரிசிக்கத் தவம் செய்கிறார். விஷ்ணு தோன்றி, 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்க, 'உன்னைக் கண்ட பின் எதுவும் வேண்டாம்' என்கிறார் முனிவர். வற்புறுத்தலின் பேரில் 'உலகத்தின் அறிவுக்கும், இயற்கைக்கும், பேதத்திற்கும் காரணமான உன் மாயையைக் காண வேண்டும்' என்று கேட்க, விஷ்ணு, OK சொல்கிறார்.

(மார்க்கண்டேயர், விஷ்ணு மாயையைக் காணவே தவம் செய்ததாகவும் கதை உண்டு)

சில நாள் கழித்து, திடீரென இடி, மின்னலுடன் பயங்கர மழை! தொடர்ந்து பெய்த மழையால், சமுத்திரங்கள் பொங்கி, எங்கும் வெள்ளக் காடு! இவர் ஆசிரமமும் முழுகியது! முனிவர், நீரில் இழுத்துச் செல்லப் பட்டு, பல நாட்கள் நீரில் அலைக்கழிக்கப் படுகிறார்.


ஓரிடத்தில், ஒரு பெரிய ஆல மரம். அதன் ஈசான்ய திசையில் ஒரு கிளையின் இலை மீது, ஒரு சின்னஞ்சிறு குழந்தை!

தாமரை மலர் முகம், சங்கு போன்ற கழுத்து, விசால மார்பு, அழகிய மூக்கு, கருணை ததும்புப் கண்கள், பவள வாய்! முத்தாய்ப்பாக, வலது கால் கட்டை விரலை, வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கிறது!

குழந்தையின் அழகில் தன்னை மறந்த முனிவர், திடீரென்று ஒரு குகைக்குள்ளே இழுக்கப் படுகிறார்! முடிவில், அண்ட சராரங்களும், தேவர்களும், பூமியும் தென்படுகின்றன! பூமியில், ஒரே வெள்ளம்! அதில் முனிவரின் ஆசிரமமும்! காட்சியை ரசிப்பதற்குள், மீண்டும் குகைக்குள் இழுத்துச் செல்லப் படுகிறார்! மீண்டும் ஒரே வெள்ளக் காடு!

சற்று நேரம் கழித்து, தான் கண்ட காட்சி மெதுவாகப் புரிகிறது முனிவருக்கு - குழந்தை, நாராயணனே என்றும், அவன் மூச்சுக் காற்றில் அவன் வயிற்றினுள்ளே சென்றதும், பின்னர் வெளியே வந்ததும்!

பிரளயத்தின் போது உலகங்களைத் தன் வயிற்றில் வைத்துக் காத்த காட்சி, எளிதில் கிடைக்காதது! மெய் சிலிர்க்கிறார்! குழந்தையைக் கட்டி அணைக்கத் தன் கையை நீட்ட, காட்சி மறைகின்றது! மீண்டும் தம் ஆசிரமத்தில் இவர் அமர்ந்திருக்கிறார்!

எம்பெருமான் வயிற்றில் 7 முறை உள்ளே சென்றதன் பலன் - 7 கல்பங்கள் உயிர் வாழும் பேறு மார்க்கண்டேயருக்கு!

(மீண்டும் நாராயணன் தோன்றி, முனிவர் இதுவரை அனுபவித்தது விஷ்ணு மாயையே என்று சொல்லி மறைந்ததாகக் கதை)

இப்படி, எல்லாம் தெரிந்தவனை, நம் அறிவையும், புலன்களையும், மறைக்கக் கூடிய மாயனை, எல்லாக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் - உலகமே முழுகினாலும் - நம்மைக் காப்பாற்றக் கூடிய ஸர்வக்ஞனை - அவன் சிறு குழந்தையாய் இருந்தாலும் சரி - சரணடைகின்றார் பெரியாழ்வார்!

அவனை, 'ஊழியாயினாய்' என்றழைக்கின்றார்!

***

துர்வாசர் கொடுத்த பூமாலையை இந்திரன் ஐராவதத்தினிடம் கொடுக்க, அது மாலையைக் காலால் நசுக்குகிறது!


வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம்! இன்னொன்று கொடுக்கிறார்! மாலை அல்ல - சாபம்!

வழக்கம் போல் இந்திரன் Care of Platform! அவனும் மற்ற தேவர்களும் வழக்கம் போல் பிரமனிடம் செல்கின்றனர்!

வழக்கம் போல் பிரமன் எல்லாருடனும் சிவனிடம் செல்கின்றனர்!

வழக்கம் போல் சிவனும், Redirect to நாராயணன்!

வழக்கம் போல் அவரும், 'நான் பார்த்துக் கொள்கிறேன்! நீங்கள் பாற்கடலைக் கடையுங்கள்!' என்கிறார்!

***

தேவர்களுக்குத் தேவை, நாடும், வீடும்! அசுரர்களுக்குத் தேவை அமிர்தம்! பாற்கடலைக் கடைய, எலிக்கும், பூனைக்கும் சமாதானம்!

அனைவரும் மந்தர மலையைத் தூக்கிச் செல்கின்றனர்! கனத்தைத் தாங்காமல் மலையை அவர்கள் கீழே போட, அடியில் இருந்த பலர் (இட்டிலிக்குத் தொட்டுக் கொள்ள முடியாத) சட்டினி ஆயினர்!

நாராயணன், தானே களம் இறங்குகிறார்! அவர் பல அவதாரச் செயல்களைச் செய்திருந்தாலும், அமுதம் கடந்த பொழுது அவர் செய்தவை கணக்கிலடங்காது!

நசுங்கியவர்களுக்கு, முதலில் உயிர் கொடுக்கிறார்!

தானே மலையைக் கையில் தாங்கி, பாற்கடலில் இறக்குகிறார்!

மலையைக் கடையக் கயிறானான் வாசுகி! (மலை போல், பல மூலிகைகளும், வாசனைத் திரவியங்களும் போடப் பட்டாதாக விஷ்ணு புராணம் கூறும்)

அசுரர்கள், பாம்பின் வாலைப் பிடிப்பது அவமானம் என நினைக்க, ஆரம்பிக்கிறது சண்டை! கடைசியில், தேவர்கள் வாலையும், அசுரர்கள் தலையையும் பிடிக்கின்றனர். கடைகின்றனர்!

மலை நிற்காது அங்குமிங்கும் ஆட, வாசுகியும் தவிக்கிறான். அவன் விடும் மூச்சுக் காற்றினால், தலைப் பக்கம் நின்ற அசுரர்கள் தவிக்கின்றனர். இதை முன்னமேயே அறிந்து தான் நாராயணன் ஒரு பெரும் உருவம் கொண்டு தேவர்கள் பக்கம் நின்றாரோ?

பகவான், ஆமை உருவெடுத்து, மலையைக் கீழே தாங்க, மலை மேல்புறம் ஆடுகின்றது!

(பகவான் யாரும் காண முடியாத இன்னொரு உருவம் எடுத்து, மலையின் உச்சியையும் பிடித்துக் கொள்வதாக, விஷ்ணு புராணம் கூறும்)

***

வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி,
கடல் வண்ணன் பண்டொரு நாள்
கடல் வயிறு கலக்க,

கடலில் இருந்து, முதலில் ஆலகால விஷம் தோன்ற, கருணையுடன் அதனை 'நீல கண்டன்' உட்கொள்கிறார்!

பின்னர் காமதேனு தோன்ற, முனிவர்கள் அதை எடுத்துக் கொள்கின்றனர். உச்சைசிரவஸ் எனும் வெள்ளைக் குதிரை வெளியே வர, பலி எடுத்துக் கொள்கின்றான்.

(ஸ்ரீமத் பாகவதம், அடுத்து ஐராவதம் எனும் யானை வெளி வந்தாகவும், இந்திரன் அதை எடுத்துக் கொண்டதாகவும் கூறுகிறது!

இந்த ஐராவதம் மாலையை மிதித்ததால் தானே கடல் கடைய வேண்டிய நிர்பந்தம்! மீண்டும் எப்படி இந்த யானை வெளியே வரும்? ஒரு வேளை இது வேறு யானையோ?

விஷ்ணு புராணத்தில், இந்த யானை வெளி வந்ததாகச் சொல்லப் படவில்லை)

பின்னர் கற்பக மரம் தோன்ற, அதையும் இந்திரன் எடுத்துக் கொள்கிறான்.

அடுத்து மிகவும் அழகான, மதி மயக்கம் செய்யக் கூடிய வாருணீ தேவி வெளிவர, அசுரர்கள் அவளை எடுத்துக் கொள்கின்றனர்!


(அடுத்து சந்திரன் தோன்றியதாகவும், சிவன் அவனை ஏற்றுக் கொண்டு, 'சந்திரசேகரன்' எனும் பெயர் பெற்றதாகவும் விஷ்ணு புராணம் கூறுகிறது)

அடுத்து, ஊர்வசி தோன்றுகிறாள். அவள் தேவர்களுடன் சென்று விடுகிறாள்!


பல அழகான தேவதைகளின் நடுவில் மஹாலக்ஷ்மி வெளி வர, அனைவரும் வாசுகியை விட்டு, அவளை அடைய ஆசைப்படுகின்றனர்! அவளோ, நாராயணனுக்கு மாலையிட்டு, அவன் மார்பில் சேர்கின்றாள்!

(சந்திரனைத் தொடர்ந்து அவதரித்ததாலேயே, மஹாலக்ஷ்மிக்கு, ‘சந்த்ர சகோதரி’ என்ற பெயர் உண்டு - லக்ஷ்மி அஷ்டோத்தர நாமம் 59)

அனைவரும் கடலைத் தொடர்ந்து கடைய, விஷ்ணு தன்வந்திரி அவதாரம் எடுத்து, அமிர்தத்துடன் வெளி வருகின்றார்!

இமைப் பொழுதில் அசுரர்கள் அமிர்தத்தைத் தட்டிச் செல்கின்றனர்! அதை மீட்க, மீண்டும் ஒரு அவதாரம்! இம்முறை, மோகினியாக!


மோகினியின் மாயையில் சிவனே மயங்கும்போது, அசுரர்கள் எம்மாத்திரம்! அவர்கள் மயங்க, மோகினி, தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கொடுக்கிறார்!

ராகு, கேது, தேவர்கள் வேடமிட்டு அமிர்தம் பெற்றதால், சக்ராயுதத்தால் அவர்கள் தலையை அறுக்கிறார் எம்பெருமான்!

அமிர்தம் உட்கொண்டதால் அவர்கள் சாகவில்லை! பிரம்மன் அவர்களை கிரகங்களாகச் செய்கிறார்!


(ராகு, கேது கதை, சற்றே வித்தியாசமாகவும் சொல்லப் படுவதுண்டு)


தேவேந்திரன், மஹாலக்ஷ்மியைத் துதிக்க அவள் அருளால் மீண்டும் ஐஸ்வர்யமும், ராஜ்ஜியமும் கிடைக்கின்றது.

(இந்த மஹாலக்ஷ்மி துதி, மிகவும் சக்தி வாய்ந்தது! நீங்களும் முடிந்தால் சொல்லுங்கள்!)

***

ரணடைந்தவர்களுக்குத் துன்பம் எனும்போது, தானே, கௌரவம் பார்க்காமல், பெரியவன், சிறியவன் என்ற வித்தியாசம் பார்க்காமல்,

கூர்மமாக, தன்வந்திரியாக, மோகினியாக, வேறு இரு ஸ்வரூபங்களாக (ஆணாக, பெண்ணாக, மிருகமாக, மற்றும் இருவராக),

எத்தனை அவதாரங்கள் தேவை என்றாலும் எடுத்து, தானே நேரில் வந்து, செய்ய வேண்டியதைச் செய்து முடிக்கிறான்! என்னே அவன் ஸெளசீல்யம்! இவனிடம் சரணடைந்து விட்டால் நமக்குக் கவலை இல்லையே!

பெரியாழ்வார், எம்பெருமானின் ஸெளசீல்ய குணத்தை, கடலைக் கடைந்த (கடலைக் கடைந்தானே) வைபவத்தின் மூலம் சொல்கின்றார்!

***

ருவரிடம் சரணடையச் செல்கிறோம்!

அவர் நம்மைப் பார்த்து, 'நீ ஏழை. உனக்கு உதவ மாட்டேன்!' என்றோ, 'உனக்குத் தகுதி இல்லை! எனவே உனக்கு உதவ மாட்டேன்!' என்றோ சொன்னால், எப்படி இருக்கும்?

நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கும்! குறையும், தேவையும் இருப்பதால் தானே, நாம் இன்னொருவரிடம் உதவிக்குச் செல்கிறோம்? இந்தக் குறையைக் காரணமாகக் கூறி, அவர் நம்மை நிராகரித்தால்?

மற்ற மனிதர்களும், மற்ற தேவதைகளும், நம்மை நிராகரிக்கலாம்! ஆனால், எம்பெருமான்?

கன்று தரையில் அமர்ந்து, புரண்டு, பின் தாயிடம் வருகின்றது! தாய்ப் பசு, 'நீ அழுக்கு' என்று அதனை ஒதுக்குவதில்லை. தன் நாவினால், தடவிக் கொடுக்கின்றது! அழுக்கையும் சேர்த்து! கன்றின் அழுக்கு, தாய்க்கு உதவி செய்யக் கிடைத்த பாக்கியம்!

அதே போல், நம்மிடம் எதுவும் இல்லாவிட்டாலும், 'எதுவும் இல்லை' என்ற தகுதியையே தகுதியாகக் கொண்டு, சரணடைந்தவர்களைக் காப்பவன் நாராயணன்! நம் குறையே நம் அதிருஷ்டம்! அவன் அதிருஷ்டம்!

இந்த வாத்ஸல்ய குணம், அவனுக்கு இருப்பதால், அவனை, ’பிரான்’ (பிறருக்கு உதவுபவன்) என்றழைக்கின்றார் பெரியாழ்வார்!

***

சாலையில் ஒரு விபத்து! ரத்த வெள்ளத்தில் ஒருவன்!

அந்த வழியில் செல்லும் பெரும்பாலோர், 'ஐயோ! பாவம்' என்று இரக்கப் படுவர்! சற்றே தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பர்!

99% பேர், இரக்கப்படுவதோடு நின்று விடுவர்! வெள்ளத்தில் கிடப்பவனுடைய பிரச்சனையை, தன்னுடையதாக எடுத்துக் கொள்வதில்லை! 'நமக்கேன் வம்பு?' என்று!

மேலும் சிலருக்கு, இரக்கம் இருக்கும்! ஆனால், ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவனுக்கு உதவுவதால், ‘பின்னால் வரும்’ பிரச்சனைகளைச் சமாளிக்கச் சக்தி இருக்காது!

பிரம்மன் வரம் கொடுத்தாலும், வதைக்க நரசிம்மன் ஒருவனால் தானே முடிந்தது!

சரணடைபவன் மோட்சத்தைக் கேட்டு விட்டால்? நாராயணன் ஒருவனாலேயே மோட்சத்தைக் கொடுக்க முடியும்!

ஆகவே, சொல்லப் பட்ட 9 குணங்களில் ஒன்று குறைந்தாலும், ஒருவன் 'சரணாகத வத்ஸலன்' எனும் தகுதியை இழந்து விடுகிறான்!

***

நம்பனே! நவின்றேத்த வல்லார்கள்* நாதனே நரசிங்கமதானாய்!*
உம்பர்கோன்! உலகேழுமளந்தாய்!* ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி*

கம்ப மா கரி கோள் விடுத்தானே!* காரணா! கடலைக் கடைந்தானே!*

எம்பிரான்! என்னை ஆளுடைத் தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே!


'நானோ ஏழை (ஏழையேன்)! உன்னிடம் அனைத்து குணங்களும் இருப்பதால், நீயே சரணாகத வத்ஸலன்! என்னைப் போன்றோருடைய குறைகளையே நீ உன் அதிருஷ்டமாகக் கொள்வாய்! நீ தான் என் தலைவன் (என்னை ஆளுடைத் தேனே)! என் துன்பத்தை நீக்கு (என் இடரைக் களையாயே)!

என்று பெரியாழ்வார் நரசிம்மனிடம் சரணடைகிறார்!

- நரசிம்மன் தொடர்வார்!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP