தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part1
என்னடா இது...சம்பந்தமே இல்லாமல், தயிர்க்காரி, மோட்சம்-ன்னு "உளறுகிறேன்"-ன்னு பார்க்கறீங்களா? அது எப்பமே பண்ணுறது தானே! :)
தும்பையூர்!
எங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்!
ஆரணி தொகுதி! திருவண்ணாமலை மாவட்டம்!
செய்யாறு-தும்பையூர் சாலையில் இன்னிக்கி ஒரு பொறியியல் கல்லூரி கூட இருக்கு!(Ramana Maharishi College of Engg)
அது என்ன தும்பையூர்?
தும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட!
அந்தத் தும்பையூரில் தான் கொண்டி, தயிர்க்காரியாக பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்தாள்! சற்றே பேரிளம் பெண், ஆனால் அழகி!
வாழ்வைத் தொலைத்து விட்டவள் போலும்! எதிலும் பிடிப்பில்லாமல், அவன் ஒருவனையே பிடித்துக் கொண்டிருந்தாள்!
தும்பையூர் கொண்டி! பேரே நல்லா இருக்கு-ல்ல? :)
திருமலை அடிவாரம்! = அடிப்படி!
ஏன் இந்தச் சீடன் எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா பொருள் சொல்லுறான்? இப்படிச் செஞ்சா, யாருக்கும் பிடிக்காதே! :)
பாவம்.....பாட்டை, வெறும் பாட்டாப் பார்க்கத் தெரியலை அவனுக்கு!
குலம் தரும், செல்வம் தந்திடும்,
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்,
அருளோடு பெருநிலம் அளிக்கும்..
"சுவாமி, நிப்பாட்டுங்க, நிப்பாட்டுங்க!"
"எதுக்குப்பா நிறுத்தச் சொல்லுற? எவ்வளவு அருமையான பாட்டு, இந்தப் பாட்டைத் தான் பலர் தலையில் வச்சி கொண்டாடுகிறார்கள்! இரு முடிச்சிடறேன்! அப்பறமா நீ கேள்வி கேளு, சரியா?"
வலம் தரும், மற்றும் தந்திடும்,
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டுகொண்டேன்,
நாரணா என்னும் நாமம்!
"ஆகா! சமயமாகப் பார்க்காமல், தமிழாகப் பார்த்தால் கூட, ரொம்ப அருமையா இருக்கு குருவே! பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரு சொல்லா?"
"ஆமாம் ஆமாம்!"
"உண்மை தான் குருவே! அம்மாவைக் கூட ஒரு கால கட்டத்தில் பிடிக்காமல் போகலாம்! ஆனால் "அம்மா என்னும் சொல்"?
பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்!"
அது போலத் தான் "அவன் என்னும் சொல்"!
அவன் பேரே என்னையும் தாங்கும்! அவன் பேரே என்னையும் தாங்கும்!
"இப்படி உணர்வு பூர்வமா, பாட்டில் ஒன்றுகிறாயேப்பா! என்னால் உனக்குப் பெருமையா? உன்னால் எனக்குப் பெருமையா? ஆகா!"
"அதை விடுங்கள் குருவே! எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியலை! ஏதோ "தரும் தரும்"-ன்னு வரிசையா அடுக்கறாங்களே! அது என்ன-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா? தனம் தருமா? கல்வி தருமா?? என்ன தரும்?"
"ஓ அதுவா?
* குலம் தரும்-ன்னா = அடியார்கள் என்னும் குலம்/அவர்கள் உறவைத் தரும்!
* செல்வம் தந்திடும் = கல்விச் செல்வம், செல்வச் செல்வம், வீரச் செல்வம்! "நீங்காத செல்வமும்" தரும்!
* அடியார் படு துயர் ஆயின எல்லாம், நிலம் தரம் செய்யும் = அடியார்களின் துயரத்தை எல்லாம், நிலத்தில் போட்டு நசுக்கி, மீண்டும் எழ விடாமல் செய்யும்!"
"அருமை! ஏதோ தரையில் பூச்சியைத் தேய்ப்பது போல் நம் துயரைத் தேய்க்கும் - நிலம்தரம் செய்யும்....அழகான உவமை அல்லவா!"
"* நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"
"ஆகா! நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! இதுக்குத் தான் அப்பவே நிப்பாட்டச் சொன்னேன்!
"உம்ம்ம்ம்............அது வந்து....அது வந்து....."
"சொல்லுங்க சுவாமி! எனக்கு அங்கே தான் கவிதைத்-தடை ஏற்படுகிறது!"
"ஒரு வேளை இப்படியும் இருக்கும்ப்பா...
* நீள் விசும்பு அருளும் = இந்திர லோகமாகிய சொர்க்கம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"
"ஆகா.....அப்படி இருக்காது சுவாமி! புண்யம், பாவம் இரண்டுமே விலங்கு-ன்னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க! ஒன்னு பொன் விலங்கு, இன்னொன்று இரும்பு விலங்கு!
கேவலம், இந்திர லோகத்தையா "நாரணா" என்னும் சொல் கொடுக்கும்? நாரணா-ன்னு சொன்னா, உனக்குப் பொன்னால் விலங்கு செய்து பூட்டப்படும் என்று சொல்வது போல் இருக்கு! அப்படி இருக்காது சுவாமி!"
"ஆகா! ஆரம்பித்து விட்டாயா? இப்படி எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா விளக்கம் சொன்னால் எப்படி-யடா?"
"மன்னிச்சிக்குங்க சுவாமி! புதுசாச் சொல்லணும்-ன்னு திட்டம் போட்டு எல்லாம் சொல்லலை! ஒரு நல்ல கவிதைக்கு மனத் தடை இல்லாமல் இருக்கணும் என்ற ஆசையில் தான் கேட்கிறேன்!"
"சரி, இப்ப என்ன தான் பண்ணனும்-ங்கிற?"
"இந்திரலோகம் கொடுக்கும்-ன்னு சொல்லி, அதுக்குப் பக்கத்திலேயே உயர்ந்த மோட்சம் கொடுக்கும்-ன்னு கொண்டாந்து வைப்பாரா ஆழ்வார்?
அன்பர் மனசுக்கெல்லாம்.....
சொர்க்க வாசல் என்பதே....
அவன் வீட்டு வாசல் தானே சுவாமி?"
"உம்ம்ம்ம்ம்.....அதான் முன்னாடியே நானும் சொன்னேன்!
அடிவாரம்...பெரிய புளிய மரத்தின் கீழே...குண்டுக் கல் பாறையில்...அருவி கொட்டும் ஓசையில்....
"சாமீ.....சாமீங்களா...ஏதோ ரெண்டு பேரும் பெரிய விஷயமாப் பேசிக்கிட்டு இருக்கீங்க போல! என் பேரு தும்பையூர் கொண்டி!
தயிர்க் காரி! திண்ணாமலை பக்கம்! இங்கே திருப்பதிக்கு யாத்திரையா வந்தேன்!
ஆனாத் திருப்பதியை விட்டுத் திரும்பிப் போவ மனசு வரலை! கொஞ்ச நாளா, இங்கேயே தங்கி, தயிர் கடைஞ்சி வித்து, பொழைப்பு ஓட்டிக்கிட்டு இருக்கேனுங்க...."
"சரிம்மா! இதையெல்லாம் எதுக்கு என் கிட்ட வந்து சொல்லுற? பார்க்க லட்சணமா வேற இருக்க! இந்தக் காட்டில் தனியா வரலாமா? தயிர் வாங்கக் கூட இங்கே யாரும் இல்லீயே!"
"அது இல்லீங்க! நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன்! இந்த நடுவயசுப் புள்ளையா ஒருத்தர் இருக்காரே! இவரு தான் இராமானுசரா?"
"ஆமாம், அதுக்கென்ன இப்போ? என் பேரு திருமலை நம்பி! அவரோட குரு!"
"அதில்லீங்க...உங்களுக்கும், உங்க கூட இங்கே தங்கி இருக்கவங்களுக்கும், நானே தயிர் ஊத்தட்டுமா தினமும்? நல்ல தயிரு, கெட்டியா, வாசனையா இருக்கும்-ங்க!
நல்லா, தளதள-ன்னு கறந்த பசும் பாலை, ஒறைக்கு விட்டு, தண்ணியெல்லாம் வடிச்சி, கெட்டியா, சுத்த பத்தமா கொடுப்பேன் சாமீ! இந்தத் தும்பையூர்த் தயிர்க்காரி பற்றி எல்லாரும் நல்லபடியாத் தான் சொல்வாங்க"
"இல்லம்மா, மடத்தில் பால் வேறு ஒருவர் அளக்கிறார்! தயிரெல்லாம் நாங்களே கடைந்து கொள்வோம்! வெளியில் வாங்கும் வழக்கமில்லை!"
"குருவே, இவர்களைப் பார்த்தால் ஏதோ கண்ணனின் யசோதாவைப் பார்ப்பது போல் இருக்கு! பாவம், தயிர் அளந்து விட்டுப் போகட்டுமே! நம் ஆட்களுக்கும் இராமயண பாடம் படியெடுக்க நேரம் கிடைத்தால் போலவும் இருக்கும்!"
"சரி! தினப்படிக்கு மூன்று படி தயிர்! அளந்து விட்டுப் போம்மா! மாசம் பிறந்ததும் பணம் வாங்கிக்கோ!"
தும்பையூர் கொண்டி (மனசுக்குள்): "உங்களிடம் பணம் வாங்கப் போவதில்லீங்க! வேறு ஏதோ வாங்கப் போகிறேன்!"
(தொடரும்....)