வங்கம் புறப்படத் தயாராகி விட்டது! ங்ங்ங்கூம் என்ற சத்தம்!
ஆனால், மனிதன் எழுதிய விதிகள், மனங்களுக்குத் தெரிவதில்லையே!
ஒருநாள்...
காதல் பறவை ஒன்று...
ஆறுதல் தேடி,
வங்கத்தின் கூம்பிலே...
பாய்மரக் கொம்பிலே வந்து அமர்ந்து விட்டது!
ஒரு நாள், பல நாள் ஆக...
பறவைக்குத் தெரியாது, இப்போது ங்ங்ங்கூம் என்ற சத்தம், "
இடத்தைக் காலி பண்ணு" என்ற பொருளில் எழுப்பப் படுகிறது என்று...
பாய் மரம் = பாய்களையும் துணிகளையும் கட்டிய மரம்!
பாய்ந்த = பாய்கின்ற = பாயும் மரம் என்பதா? இல்லை!
பாய் மரம் = வினைத் தொகையா? வினை விதைக்கும் தொகையா?
பாய் மரம் = பாய்கள் கட்டிய மரம்!
காற்று பட்டு பாய்கள் உந்த, கடலில் செல்லும் கலம்!
காற்றின் போக்கே, கலத்தின் போக்கு என்று ஆக்கி விட முடியுமா?
பாய்களைப் பல விதமாகத் திருப்பி, காற்றை ஒட்டியும் வெட்டியும் கலம் செலுத்தும் வித்தையை, இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே அறிந்து வைத்திருந்த தமிழினம்!
வங்கக் கடல் கடைந்த = சங்கத் தமிழ் மாலை!
அந்த வங்கம் (கப்பல்), இத்தனை நாள் துறைமுகத்தில் தான் இருந்தது!
பாய்மரம் காற்றிலே சடசடக்க, கூம்பிலே கிண்கிணிகள் ஒலியொலிக்க...என்னவொரு இனிய சத்தம்!
துள்ள்ள்ளி வந்து அமர்ந்தது அந்தப் பறவை!
இப்போது பறவையின் பாடலும் சேர்ந்து கொள்ள, அங்கே தினமுமே திருப்புகழ் ஒலி தான்!
பாய்மரக் கப்பலும் பறவையை ஏற்றுக் கொண்டு இடமளித்து விட்டது! யாரும் விரட்டவில்லை!
பாய்மரத்தின் கூம்பே, கூடாகிப் போனது! உழைப்புக்கு மட்டும் ஊருக்குள் பறக்கும்! இரை தேடி, அதையும் கப்பலுக்குத் தான் கொண்டு வரும்! வழியில் சாப்பிட்டுவிடாது!
உண்பதும், உறங்குவதும், உறவாடுவதும், உழைப்பதும்...எல்லாமே வங்கம் என்னும் அந்தக் கப்பலை ஒட்டியே!
அதுவே கூடு = வீடு = வீடுபேறு!
வீடு பேற்றில் திளைத்த பறவைக்கு...கப்பலின் ங்ங்ங்கூம் சத்தம் கூட இசையாகவே தான் பட்டு விட்டதோ?
நள்ளிரவு தாண்டிய சிற்றஞ் சிறு காலை!
திடீரென்று விழித்த பறவைக்கு...திகைப்பு, அதிர்ச்சி, பயம்!!!
எங்கு பார்த்தாலும் கடல்...சுற்றிலும் கடல்...
இரவிக் கடலோ, பிறவிக் கடலோ, யாருக்குத் தெரியும்?
எங்கெங்கு காணினும் நீலமடா!
மரங்களின் பச்சை, நிலத்தின் சிவப்பு, மேகத்தின் வெண்மை என்று நேற்று வரை கண்டதெல்லாம், இன்று ஒன்றுமே காணவில்லை!
பறவைக்குப் பசி எடுக்கிறது! எங்கு போய் உணவு தேடுவது?
கிழக்கில் பறந்து பார்க்கிறது! காணோம்!!
மேற்கில் பறந்து பார்க்கிறது! மாயோம்!!
தெற்கிலே தென்படவில்லை! வடக்கிலே வாழ்க்கையும் இல்லை!
பறவையின் கண்ணிலே...முதன் முதலாக...முந்நீரில் கண் நீர்!
பாய்மரத்தின் படபட இசை போய் விட்டது!
காதைக் கிழிக்கும் காற்று தான் இப்போதெல்லாம் அடிக்கிறது!
சிலுசிலு மணியோசைகள் போய் விட்டன!
ஓ-வென ஓதைக்கடல் தான் இப்போதெல்லாம் ஆர்ப்பரிக்கிறது!
பறவை என்ன பரவை நாச்சியாரா? உடல்-அழகிலே சுந்தரர் மயங்க, காமத்துக்கு கடவுளே தூது செல்ல?
பறவை ஒரு பேதை! உடல்-அழிந்து, காரைக்கால் அம்மை ஆவது தான், இவளுக்கு மட்டும் ஈசனின் விதி போலும்?
பறவை எங்கெங்கோ பறந்து பார்க்கிறது! உம்ம்ம்ம்! எங்குமே நீலம் தான்!
எங்கே தான் போகும்? இனி எங்கே தான் போகும்?
எதில் தன் ஆன்மாவைக் கண்டதோ...
அதே இடத்திற்கே மீண்டும் வருகிறது! அதுவே அதற்கு = "இடம்"!
அந்த வங்கத்தின் கூம்பே அதற்கு, அப்போதும் = "இடம்"!
அந்த வங்கத்தின் கூம்பே அதற்கு, இப்போதும் = "இடம்"!
வெங்கண் திண், களிறு அடர்த்தாய், விற்றுவக்கோட்டு அம்மானே
எங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல்லால்?
எங்கும் போய்க் கரைகாணாது, எறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே! மாப்பறவை போன்றேனே!
- (குலசேகர ஆழ்வார்)
முருகா...
பிறவி கொடுத்தார்கள் என் தாயும் எந்தையும்! = நப்பின்னை நங்கையும் நாரணத் தந்தையும்!
ஆனால் அந்தப் பிறவி...எனக்கல்ல! = உனக்கு! = உன்னை அடையவே எனக்கு!
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை!
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டேன் நான்!
என்பால் நோக்காயே ஆகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்!
நீ வேண்டாயே ஆயிடினும் மற்றாரும் பற்றில்லேன்!
எங்கும் போய்க் கரை காணேன்! எறி கடலில் கரை காணேன்!
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே! - முருகா உன்
அங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே!
செந்தூரில் அலையலையாய்ச் சிரிக்கும்...
என் உயிருக்குள் உயிரே,
உன்னைப் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குடா...
உனக்குத் தொல்லை இல்லாமல்...
அதே சமயம்,
திரை போட்டாலும், தீட்டு கழித்தாலும்
அழகு நடிகருக்கும், அரசியல்வாதிக்கும் சிறப்பு வழி செய்தாலும்...
எவருமே என் கண்ணை, உன்னிடம் இருந்து அகற்றிடா வண்ணமாய்
உன்னைக் கண்டபடிக் கண்டு, பசியாறிக் கிடப்பேனே!
என் செந்தூர் வீட்டின், செல்லக் கருப்பட்டியே...
என் பிறப்புக்கு இது தான் என்று ஒரு நாளுண்டா?
முருகா - உன் அங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே!
உன் வீட்டு வாசல், படியாய்க் கிடந்து.....
செந்தூர் வீட்டு வாசல், படியாய்க் கிடந்து.....உன் பவள வாய் காண்பேனே!