Showing posts with label தில்லை. Show all posts
Showing posts with label தில்லை. Show all posts

Sunday, February 08, 2009

சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன?

Update:(Mar-24,2009,10:30am)
* நந்தனார் மனு, தமிழக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!

* நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். கனிமொழி அவர்களிடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!

* Mar-21 அன்று, நாமக்கல் சிபி அண்ணா, இதை அலுவலகத்தில் சேர்ப்பித்தார்!

* இம்முயற்சியில் பெரிதும் உதவிய தமிழ் உலகம் குழுமம்-மணியம் ஐயா மற்றும் ஆல்பர்ட், நாக. இளங்கோவன் ஐயா, மதுமிதா அக்கா, அதிகாலை.காம் நவநீதன், அபி அப்பா மற்றும் அனைத்து ஆர்வலர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றி! ஒப்பமிட்டவர்க்கெல்லாம் ஓங்கிய நன்றி!

தேர்தல் காலமே ஆனாலும், செல்பவர் காதுக்கும், கருத்துக்கும் இது சென்று சேர்ந்து விட்டால்...
பிறகு சிறிது சிறிதாக உருப் பெறும்! தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டுவோம்!

திருநாளைப் போவார், நந்தனார் திருவடிகளே சரணம்! திருச்சிற்றம்பலம்!

......Previous updates and the post below:

தில்லையில் இப்போதே நந்தனார் சிலையை மீள்-நிறுவி வி்ட்டால்...
பின்னர் யாராலும் அதன் மீது மீண்டும் கை வைக்க முடியாது! - கண்டிப்பா ஒரு தயக்கம் இருக்கும்!

இதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு!
http://www.petitiononline.com/Chid2009/petition.html

உங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக!
அடியேன்,
அம்பலவாணர் பேரால், மிக மிக நன்றி! திருச்சிற்றம்பலம்!


Update:(Feb-12,2009,12:15pm)
Tried a small pictorial representation.(Based on gopala krishna bharathi, u.ve.sa accounts and malarmannan’s article in thinnai)

"பழைய" நந்தனார் சிலை பற்றிய குறிப்புகள்:
1. ஆளுயரச் சிலை
2. கைகளில் கடப்பாரையோடு
3. கூப்பிய கரம்
4. தோளில் மண்வெட்டி
5. நின்ற திருக்கோலம்

* மீண்டும் வடிவமைக்க நேர்ந்தால் இந்தக் குறிப்பு சற்று உதவும்-ன்னு நினைக்கிறேன்!
* இருந்த இடம்: நிருத்த சபை நடராஜரைப் பார்த்தவாறு, தெற்குத் தூணில்! (நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது!)


தில்லையில் நந்தனாருக்கு
உங்கள் கையொப்பம்!


பல மாற்றுக் கருத்துடை அன்பர்களும் தங்கள் கையொப்பம் இட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி! நன்றி! நன்றி!!
இந்த நன்முயற்சியை மேலும் முனைப்பாக்க, எல்லாத் தரப்பினரும், தயங்காது யோசனை சொல்லுங்கள்!

* அன்று தில்லைக்குள் வர, நந்தனார் வரவேற்கப்பட்டரா? என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்!
* இன்று தில்லைக்குள் வர, நந்தனாரை முழுமூச்சாய் வரவேற்போம்! பூரண பொற் குடம் எடுப்போம்!




பதிவு:

திருச்சிற்றம்பலம்! தில்லையம்பல நடராஜப் பெருமானின் காரியங்களை, "தான் வைத்ததே சட்டம்" என்று தனிப்பட்ட முறையில் நடத்திக் கொள்ளாமல், பொதுவில் நடத்த, நீதிமன்ற உத்தரவு ஆகியுள்ளது என்று அனைவரும் அறிவீர்கள்! (Feb-2, 2009)

அடியார்கள் முயற்சி கைக்கூட, இறைவன் திருவுள்ளம் சேர, இது வாராது வந்த வெற்றி! நெஞ்சுக்கு நீதி! முயற்சி திருவினை ஆக்கும்!
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்!
- என்று ஐயன் சொன்னது, மெய்யாலுமே அம்பலம் ஏறி உள்ளது! தில்லை அம்பலம் ஏறி உள்ளது!

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்...
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!!!


இவை வெறும் வரிகள் அல்ல! அம்பலவாணனை ஒவ்வொரு கோணத்தில் (angle) இருந்தும் பார்த்தவர்களுக்கு, இந்தக் குமிழ் சிரிப்பு கட்டாயம் தெரிந்திருக்கும்!
ஆண்களையும், பெண்களையும் ஒரு சேர ஈடழிக்க வல்ல குமிழ் சிரிப்பு! தீட்சிதர்கள் மொழியில் சொல்லணும்-ன்னா ஜகன் மோஹனாகாரம்!

இனி என்ன? அவ்வளவு தானா?
தீட்சிதர்களின் ஆதிக்கம் ஒடுங்கியதாலேயே, நல்ல விடயங்கள் எல்லாம் தானாய் நடந்து விடுமா என்ன? இனி என்ன செய்யணும் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா? இது தொடர்பாகச் செய்ய வேண்டிய சில ஆக்கங்கள் பற்றி, முன்பு இட்ட பதிவு இதோ!

மேற்சொன்ன பதிவைப் பிரதி எடுத்து, அப்போது இரு தரப்புக்கும், அஞ்சல் (தபாலில்) அனுப்பி இருந்தேன்! சென்ற அக்டோபர் மாதம், அம்மா-அப்பா மணிவிழாவுக்கு இந்தியா சென்றிருந்த போது, தில்லை செல்லும் வாய்ப்பும் கிட்டியது!
அப்போது மதிய வேளை! தீட்சிதர் ஒருவரிடம்/இருவரிடம் பதிவுலகக் கருத்துக்கள் பற்றி லேசாப் பேச்சு கொடுத்த போது, நான் தான் அப்படி தபால் அனுப்பிச்ச ஆளு-ன்னு தெரியாம, என் கிட்டயே, என்னைத் திட்டித் தீர்த்தார்! இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது! :)

ஆனால் சென்ற விஷயம் அம்மா-அப்பா விழா என்பதால், நானும் எதுவுமே பதில் பேசவில்லை! "சமத்துப் பிள்ளையா" இருந்து விட்டேன்! கடைசியா முடிக்கும் போது, நான் தான் அந்த மாதவிப் பந்தல்-ன்னு சொன்னேன்! சொன்னது தான் தாமதம்....முகம் மாறியது! ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவரும் சிரித்து விட்டார்! :))))

தாங்கள் வைத்ததே சட்டம்! 100% Obedience! மறுப்புரை, கருத்து விவாதங்கள் - இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத ஜனநாயகவாதிகள் நம் தீட்சிதப் பெருமக்கள்!
கருத்துக்களைப் பேசக் கூடக் கூடாது, பேசினால் கோபித்துக் கொள்வோம் என்ற போக்குள்ளவர்களிடம், அரசும் தொழில் முறை ரீதியாகவே (Professionalism) நடந்து கொள்ளல் நலம்!



ஜூனியர் விகடன் செய்தி: (Feb-11-2009)
அறநிலையத் துறை அதிகாரிகள் புடை சூழ, விழுப்புரத்திலிருந்து அறநிலையத் துறை இணை ஆணையர் திருமகள், சிதம்பரத்துக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில் அதிகாரிகளில் சிலரிடம், தீட்சிதர்கள் எதிர்ப்பைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். உடனே அதிரடிப்படை போலீஸாரும், வஜ்ரா மற்றும் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

இந்தப் பரபரப்பின் 'க்ளைமாக்ஸா'க இரவு ஒன்பது மணி அளவில் அதிகாரிகள் கோயிலுக்குள் நுழைந்தனர். அதேநேரம், நானூறுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் அதிகாரிகளை வழிமறித்தனர்.
அவர்களின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நீதிமன்றத் தீர்ப்பையும், அரசு உத்தரவையும் கொடுத்த இணை ஆணையர் திருமகள், "ஒழுங்கா வழிவிடுங்க..." என்றார்.
சில நிமிட வாக்குவாதத்துக்குப் பிறகு அரசிடம் கோயிலை ஒப்படைக்க தீட்சிதர்கள் சார்பாக சம்மதித்துக் கையெழுத்திட்டார் சிவக்குமார்.
உடனடியாக தில்லை காளியம்மன் கோயிலின் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாரையே நடராஜர் கோயிலுக்கும் செயல் அலுவலராக நியமித்து ஆணை பிறப்பித்தார் திருமகள். அன்றிரவே, கோயில் அலுவலகச் சுவர்களில், இந்தத் தகவல் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.

மறுநாள் மூன்றாம் தேதி கோயிலுக்கு வந்த செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், கீழக் கோபுரம் அருகே இருந்த ஒரு இடத்தில் அலுவலகத்தை அமைத்து நிர்வாக வசதிக்காக பத்து தற்காலிகப் பணியாளர் களையும் நியமித்தார்.

இந்நிலையில் நம்மிடம் பேசிய தீட்சிதர்கள், "தலைமுறை தலைமுறையாகக் கோயிலை நம்பியே வாழ்ந்து வருகிறோம். அரசு இவ்வளவு வேகமாகச் செயல்படுவதைப் பார்த்தால், எங்களை கோயிலை விட்டே அப்புறப்படுத்தி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. நாங்கள் மேல் முறையீடு செய்யப் போகிறோம்.
அதன் தீர்ப்பு வரும் வரை, இப்படி தடாலடியான காரியங்கள் செய்வதை அரசு கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்..." என்றனர்.
(பத்திக்கும் படத்துக்கும் நன்றி: ஜூனியர் விகடன்)


சரி...........விகடன் செய்தியைப் பார்த்ததில் இருந்து, நமக்கே இருக்கும் உள்ளுணர்வில் இருந்து, அடுத்த கட்டம் நன்றாகத் தெரிகிறது! = மேல் முறையீடு! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த வழக்கு மேலும் நீட்டிக்கும்! இடைக்காலத் தடை கேட்டுப் பெற்றால் கூட ஆச்சரியம் இல்லை!

அதனால் அரசு செய்ய வேண்டியது என்ன? உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

1. ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை
2. நிர்வாகம் தொடர்பானவை

என்னென்னு கிடு கிடு-ன்னு பார்க்கலாமா? நீங்களும் விட்டுப் போனவற்றைச் சொல்லுங்கள்! தொகுத்து தமிழக அரசுக்கும், இணை ஆணையர் திருமகளுக்கும், மின்னஞ்சலில் கூட அனுப்பி வைக்கலாம்!


ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை:

1. நந்தனார் என்னும் திருநாளைப் போவார் நாயனார் சிலையை உடனே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்! நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு, அவர் திருவுருவச் சிலை முன்பு இருந்தது! அப்புறம் "மாயமானது"!
எங்கு இருந்ததோ, அங்கேயே நந்தனாரை நிறுவி, வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!
பழைய சிலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை! உடனேயே புதிய சிலை ஒன்றினைத் தக்க ஸ்தபதி செய்து கொடுப்பார்!
இதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு செய்து முடித்தால் மிகவும் நலம்! மிகவும் சுலபமான வேலை தான்! அதிக நேரமில்லை!

வருகிற Feb-23 மகா சிவராத்திரி! - அதற்குள் நந்தனார், நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு இருப்பது பெரும் சிறப்பு!

தமிழக ஆலயங்களின் வருவாய், தமிழக அரசுக்குப் பல வழிகளில் துணை செய்கிறது! எனவே இந்த நற்செயலை (சத் காரியத்தை), உடனே செய்து கொடுக்க,
* தமிழக அரசு நன்றிக் கடன் பட்டுள்ளது என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
* முதல்வர் கலைஞர் இதைத் தன் தனிப்பட்ட பணியாக எடுத்துச் செய்து கொடுத்தால், தில்லைத் தெய்வத் தமிழில், அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்!

நந்தனார் சிலை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்: கோபால கிருஷ்ண பாரதியின் கீர்த்தனைகள், உ.வே.சா குறிப்புரைகள் மற்றும் அரசு அலுவலர்களின் கட்டுரைகள்!
இந்தத் திண்ணைக் கட்டுரையையும் அவசியம் வாசிக்கவும்!

2. திருக்கோயில் ஓதுவார்கள், இப்போது கீழிருந்து தேவாரப் பதிகங்களை ஓதுகிறார்கள்!
ஆறுகால பூசையின் போது, தீட்சிதர்கள் தங்கள் வழிபாடுகளை முடித்த பின்னர், மணி அடிப்பார்கள்! பின்னர் ஒரு ஓதுவார், தமிழ்ப் பதிகம் ஓத ஆரம்பிப்பார்!
ஆனால் கருவறைக்கு (சிற்றம்பலம்) வெளியே உள்ள பொன்னம்பல மேடையில் இருந்து அல்ல! அந்த மேடையின் படியிறங்கி, கீழே வளாகத்தில் ஒரு ஓரமாய் நின்று ஓதுவார்!

இனி அவரைப் பொன்னம்பல மேடையில் ஏறிப் பதிகம் பாடச் சொல்ல, ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்! அவர் தனியாகப் பாடாமல், உடன் இன்னொருவர் துணைக்கு நின்றால் நலம்! பொது மக்களும் கூடவே தேவாரம் பாடினால், இன்னும் இன்னும் நலம்!

3. ஆலய வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், ஓலைச் சுவடிக் குறிப்புகள், இன்னும் இதர வரலாற்று ஆதாரங்களை, உடனே டிஜிடைஸ் (Digitization) செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்! தொல்பொருள் துறையின் உதவியை நாடி, குறைந்த பட்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் பயக்கும்!

4. சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளியை, தில்லையில் துவக்க வழி வகை உள்ளதா என்று அறநிலையத் துறை ஆராய வேண்டும்! இதற்கான பூர்வாங்க முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்!

5. சைவத் திருமடங்கள் - திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம், காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இன்னும் பல மடத் தலைவர்கள் ஒன்று கூடி, தமிழக அரசுக்கு வழிகாட்டுச் செயல் முறை (Policy Guidelines) ஒன்றை வகுத்துக் கொடுக்க வேண்டும்!

வைணவத் தலைநகரம் திருவரங்கம்! அதே போல் சைவத் தலைநகரம் தில்லை!
திருவரங்கத்தில் கோயில் ஒழுகு என்ற தினப்படி நடத்தை விதிமுறைகளை இராமானுசர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்து வைத்தார்! அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியான ஒழுகு முறைகள்! இன்னிக்கும் அது நடைமுறையில் இருக்கு!

தமிழ் வழிபாடு, தமிழ் விழாவான பகல் பத்து-இராப் பத்து, கருவறைக்குள் அர்ச்சகர்களே முன்னின்று சொல்ல வேண்டிய தமிழ்ப் பாசுரங்கள் என்னென்ன = என்று அனைத்தும் அதில் இருக்கு!
It is a kind of Code Book! Koil Ozhugu!
அதைத் திருவரங்க ஜீயர்களிடம் கேட்டுப் பெற்று, ஒரு உசாத் துணை (Reference) போலப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இது யோசனை தான்! கட்டாயம் இல்லை! ஆனால் அது போல ஒரு செயல்முறை Code Book-ஐத் திருமடங்கள் உருவாக்கித் தரவேண்டும்!

6. நடராஜப் பெருமானின் ஆலயக் குடமுழுக்கு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! கடைசியாக நடந்தது 1987! இருபத்தி இரண்டு வருடங்கள் ஓடி விட்டன!
மூச்சுக்கு மூச்சு, கர்மானுஷ்டானம், கர்மானுஷ்டானம், என்று வாய் கிழியப் பேசும் தீட்சிதர்கள், 22 ஆண்டுகளாக குடமுழுக்கு இல்லாமல், ஒரு ஆலயம் நடத்தி வருகிறார்கள்!

ஆலயக் குடமுழுக்கு படோபடத்துக்கு அல்ல! சன்னிதிகள் சீரமைப்பிற்கே! வீட்டுக்கே அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாச்சும் வெள்ளை அடிக்கிறோம்! இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தானே? எனவே அரசு குடமுழுக்குக் குழுவை உடனே அமைத்தல் வேண்டும்!


நிர்வாகம் தொடர்பானவை:
1. கோயிலின் பொருள் ஆதாரங்களை, தனித்த ஆய்வாளர்கள் (Independent Evaluator) கொண்டு கணக்கெடுத்து, அதை வெள்ளை அறிக்கையாகப் பொது மக்கள் முன் வைப்பது!

2. ஆலய அளவில், சிறிது காலத்துக்குத் தினப்படி சந்திப்புகள் (Daily Status Meeting) நடத்துவது!

3. தீட்சிதப் பிரதிநிதிகளுடன் ஆணையர் அமர்ந்து பேசி, கொள்கை முடிவுகள் இன்னின்ன என்று தெளிவாக விளக்கி விடுவது!
அவர்கள் எதிரியாகப் பார்க்கப்பட மாட்டார்கள்! எனவே பழைய கசப்பை மறந்து பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோருவது!

4. ஆயிரம் தான் இருந்தாலும், தீட்சிதர்களும் இறைவனுக்குப் பணி செய்யும் வேலையில் இருப்பவர்கள் தான்! அவர்கள் எதிர்காலம், அவர்கள் மாத ஊதியம், அறநிலையத் துறையில் அவர்களுடைய ஊழியர் நிலை என்ன - இது போன்றவற்றையும் தெளிவாக விளக்கி விடுதல் நலம் பயக்கும்!

5. தில்லை நடராஜப் பெருமானின் திருக்கூத்தைப் பார்த்தாவாறு, அந்த மண்டபத்துக்கு வெளியேயே, மிக அருகில் கோயில் கொண்டுள்ளார் கோவிந்தராசப் பெருமாள்! மண்டபத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால், நேராக நடராசரையும், இடப் பக்கம் திரும்பி, பெருமாளையும் சேவிக்கலாம்!

இந்தப் பெருமாள் கோயில் மட்டும் ஏற்கனவே அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கு! அதனால் அதன் ஊழியர்களையே, ஆரம்ப கால அவசரப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
தேவை: சில விரைவான நடவடிக்கைகள்! மேல் முறையீடுகளுக்கு முன்பாக, குறிப்பாக நந்தனார் சிலை நிறுவுதல்!


தில்லை பற்றிய கருத்துச் சண்டைகள் நிறையவே நடந்துள்ளன! ஆனால் இப்போது கடமை நேரம்!
உங்களுக்குத் தோன்றும் வேறு யோசனைகள் என்ன? முன் வையுங்களேன், நண்பர்களே, சக பதிவர்களே!
* அவசரத் தேவை!
* நெடுங்காலத் தேவை!
* ஆன்மீக விடயம்!
* நிர்வாக விடயம்!

ஒன்றாகத் தொகுத்து, அறநிலையத் துறைக்கும், உதவி ஆணையர் திருமகள் அவர்களின் மின்னஞ்சலுக்கும் யோசனைகளாக அனுப்பி வைக்கலாம்! என்ன சொல்றீங்க?

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!
Read more »

Sunday, December 21, 2008

திருப்பாவை vs திருவெம்பாவை!

திருவெம்பாவை என்றால் என்ன? திரு+வெம்+பாவை? ஈசன் மேல் கொண்ட காதல் வெப்பத்தால், சூடான பெண்ணொருத்தி, சூடான பதிவு போட்டு பாடுவதா? ஹா ஹா ஹா!
அப்படி இல்லீங்க! அது திரு+எம்+பாவை தான்! "எங்கள் பெண்ணே (எம் பாவாய்), நோன்பு எடு" என்று சொல்வதே திருவெம்பாவை! மேன்மை கொள் சைவ சமயத்தின் பாவைப் பாடல்!


இன்னிக்கி மத்தியானம் நல்ல தூக்கம்! மாலையில் ஒரு குழந்தைக் காப்பக கிறிஸ்துமஸ் வேலை வேற இருந்திச்சி!
பனிப்பொழிவு என்பதால் என்னால அடுப்பைப் பத்த வைக்க முடியலை! :)
மூனு மசால்தோசை, சுடுசோறு, தக்காளி குருமா, சேனைக்கிழங்கு வறுவல், மிளகு ரசம், தாளிச்ச மோரு...ப்ளஸ் பிஸ்டாச்சியோ ஐஸ் க்ரீம்!
அன்னமிட்ட பக்கத்து வீட்டு அக்காவே - இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)

சாப்பிட்டு போட்டு, கட்டையைச் சாய்ச்சது தான்! செம தூக்கம்! எழுந்து பார்த்தா...OMG! மாலை நிகழ்ச்சிக்கு ஏற்கனவே லேட்டு! ச்சே! எப்போ பதிவை எழுதி, எப்போ போடுறது? போதாக் குறைக்கு மாணிக்கவாசகர் வேற இன்னிக்கி ப்ளான்-ல இருந்தாரு! என்னாத்த பண்ண?

பெண்களுக்குத் தான் எப்பமே காத்துக் கிடப்பது ரொம்ப பிடிக்குமாமே! :)
"அலோ கோதை, நீ கொஞ்சம் காத்துக்கிட்டு இருக்கீயாடீ? மாணிக்க-வாசகரை வாசகம் பண்ணிட்டு அப்பாலிக்கா உன் கிட்ட வாரேன்!
அமெரிக்க நேரப்படி நாளை காலையில் தானே அடுத்த திருப்பாவை? அது வரைக்கும் மொட்டை மாடியில் கொஞ்சம் வெயிட் மாடி!

மீ சைவம் பர்ஷ்ட்! வைணவம் நெக்ஸ்ட்! இல்லீன்னா மம்மி வில் பீட் மீ! :) முருகனைக் கொஞ்சலீன்னா, அடுத்த முறை இந்தியப் பயணத்தில் அவரைக்காய் பொரிச்ச கூட்டு கட்!
சைவக் குடும்பத்தில் பொறந்துட்டு, இந்தப் பெருமாளை வச்சிக்கிட்டு படும் பாடு இருக்கே! Sorry, dee கோதை! See u in the Morning" :)))


திருப்பாவை = பெண் ஒருத்தியே, கண்ணன் பால், தன் உணர்ச்சிகளைக் கொட்டுகிறாள்!
திருவெம்பாவை = ஆண் ஒருவர், அகத்துள்ளே பெண்ணாகி, ஈசன் பால் தன் உணர்ச்சிகளைக் கொட்டுகிறார்!
ஏன் பெண் ஆக வேண்டும்? இப்படிப் பெண்ணாக மாறிச் சொன்னால் அது இயற்கையாக இருக்குமா? கோதை என்ற பெண் வடிக்கும் உணர்ச்சிகளை ஒரு ஆணால் வடிக்க முடியுமா?
ஏன் பெண் ஆக வேண்டும்? ஆணாகவே இருந்து உணர்ச்சிகளைச் சொல்ல முடியாதா?
ஏன் அப்படிச் சில ஆன்றோர்கள் செய்யவில்லை? ஏன் நாயகி பாவமாகப் பாடினார்கள்?
ஏன், ஆண்களுக்கு அழுவத் தெரியாதா என்ன? இங்கு பதிவுலகில் உள்ள பல ஆண்களைக் கேட்டுப் பாருங்க! நெஜமாலுமே ஜூப்பரா அழுவாங்க! :)))

ஹிஹி! நாயகி பாவத்துக்குக் காரணம் இருக்குங்க! ஒரு நோக்கமும் இருக்கு! நல்ல நோக்கம் தான்! :) இன்னொரு சமயம் சொல்கிறேன்! இன்னிக்கு திருவெம்பாவைப் பாட்டு மட்டும் ஒன்னு பார்ப்போம்!
என்னை மிகவும் கவர்ந்த திருவெம்பாவைப் பாட்டுகள் இரண்டு! அதில் இது ஒன்று! இன்னோன்னு ரொம்பவே சர்ச்சைக்குரிய பாட்டு! மார்கழி நிறையும் போது சொல்கிறேன்! அது வரை அது என்னான்னு ஊஊஊகிச்சி வைங்க! :)

இரண்டு பாவைகளுக்கும் அடிப்படை ஒன்று தான்!
* திருவெம்பாவை = என்ன குறையும் இலோம், ஏலோர் எம்பாவாய்!
* திருப்பாவை = நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
இறைவனைப் பற்றினால் எந்தக் குறையும் இலோம் என்பது சைவப் பாவை! இறைவனின் பற்று ஒன்"றே" நீங்காத செல்வம் என்பது வைணவப் பாவை!

இப்போ பாவைக் கட்டமைப்புகளைக் கொஞ்சம் பார்க்கலாமா?
* அது (திருவெம்பாவை) ஈசன் மேல் பாடியது, இது(திருப்பாவை) கண்ணன் மேல் பாடியது!
* அது ஆண் (மாணிக்கவாசகர்) பெண்ணாகப் பாவித்துப் பாடினார்! இது பெண் (ஆண்டாள்) பாடினாள்!
* அது இருபது பாடல்கள்! இது முப்பது பாடல்கள்!
* அது திருவண்ணாமலையில் ஈசனைப் பாடியது! இது எந்தவொரு தலத்து இறைவன் மேலும் பாடப்படவில்லை!
* அதில் அண்ணாமலை, தில்லை என்று தலங்கள் வரும்! இதில் தலத்தின் பெயர்கள் எங்குமே வராது! பொதுவான கண்ணன்-காதல்-பாடல்! அவ்வளவே!
இன்னும் ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க மக்களே!
மற்றபடி இரண்டுக்கும் உள்ள சொற்செட்டுகள், இயற்கை வர்ணனைகள், சமூகப் பார்வை, வானியல் குறிப்புகள், பேச்சு/வட்டார வழக்கு, இறை நுட்பம் - இதெல்லாம் சைவ ஆன்றோர்களும், வைணவச் சான்றோர்களும் வந்து பேசி மகிழ்விக்கட்டும்! நாம பாட்டுக்குப், பாட்டுக்குப் போகலாம் வாங்க! :)


கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்!
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்!
கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை!
கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?


வாழி ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்!

கோழி கூவுது! குருகு கூவுது! ஏழிசைச் சங்க நாதம் எங்கும் கேக்குது! குற்றமில்லாத பரஞ்சோதியின் பரங்கருணையைப் பாடுறோமே? உன் காதில் விழவில்லையா? நல்லா இருடீ! இப்படியா தூங்குவ? எழுந்து வாசலைத் திற!

எம்பெருமானான சக்கரம் சுழலும் பெருமாள், சிவபெருமான் மேல் எம்புட்டு அன்பு வச்சிருக்கான்! அதில் நீ கொஞ்சமாச்சும் வச்சிருக்கியா?
ஊழிக் காலத்தில் அழிக்கும் கடவுளாக ஈசன் நிற்கிறான்! ஆனால் காக்கும் காலத்தில் ஏழைப் பங்காளனாய் இருக்கானே! அவனைப் பாடவோம்! எழுந்து வா, போகலாம்!


இப்போ கொஞ்சம் பிரிச்சி மேயலாமா? (அப்படியே உங்க கிராமத்துக் காலைக் காட்சிக்கும் போங்க பார்ப்போம்!)
கோழி சிலம்ப = கோழி கூவும்! அது என்னா சிலம்பும்?
சிலம்பில் பரல்கள் கம்மி! கொலுசு மாதிரி கிடையாது! அதுனால நடக்கும் போது சத்தம் வரும், ஆனா தொடர்ந்து ஜல்ஜல் வராது! விட்டு விட்டு வரும்! அதே போலத் தான், கோழியும் விட்டு விட்டுக் கூவுது! தொடர்ந்து கூவித் தூக்கத்தைக் கெடுத்துச்சினா, நீங்க அந்தக் கோழியை என்ன பண்ணுவீங்க-ன்னு எனக்குத் தான் நல்லாத் தெரியுமே! :)

சிலம்பும் குருகு எங்கும் = குருகு-ன்னா ஒரு வகையான நீர்ப்பறவை! கொக்கு போல! திரு+குருகூர் என்று நம்மாழ்வார் பிறந்த தலத்தைச் சொல்றோம்-ல? குருகுகள் இருக்கும் ஊர் குருகூர்! இங்கன கோழி கூவ, அதைக் கேட்டு குருகு கூவுது! Chain Reaction போல! :)

ஏழில் இயம்ப இயம்பும், வெண் சங்கு எங்கும் = ஏழிசை சரிகமபதநி! அந்த ஏழிசையும் காலையில் பூபாளமாய் ஒலிக்க, கூடவே வெண் சங்கு எங்கும் ஒலிக்குது! கோயில்களில் காலையில் சங்கு ஊதுவது மங்கல மரபு! இன்னிக்கித் தான் சங்கு ஊதறது-ன்னா வேற மாதிரி பொருள் ஆயிரிச்சி! :)

கேழில் பரஞ்சோதி! கேழில் பரங்கருணை! = ஆகா! நம்ம வள்ளலார் சொல்வது போலவே இருக்கே! அருட் பெருஞ்சோதி! தனிப் பெருங்கருணை!
கேழ் = ஒப்புமை! ஒப்பில்லாத சோதியான்! ஒப்பில்லாத கருணையான்!

சிவபெருமான் வரப்பிரசாதி, பக்த கோலாகலன்! சோதனைகள் நிறைய கொடுத்தாலும், தவத்தில் வென்று விட்டால் அள்ளி அள்ளிக் கொடுப்பவர்!
இந்தப் பெருமாள் அப்படி அல்ல! மகா கஞ்சன்! :) அவ்வளவு சீக்கிரம் பெயராது! "ஆராய்ந்து" அருளேலோ ரெம்பாவாய் தான்! ஏதோ தாயார் அவன் மார்பில் இருக்கா! நாம எல்லாரும் பொழைச்சோம்!

கேழில் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ? = இப்படி ஈசனின் பெருமைக்குரிய பொருட்கள் - ஜடாமகுடம், கங்கை, பிறைச் சந்திரன், திருநீறு, நாகாபரணம், புலித்தோல், மழு-மான், கையில் தீ, எடுத்த பொற்பாதம், சூலம், டமருகம்(உடுக்கை), ரிஷபக் கொடி, நந்தி தேவர் - என்று பாடினோமே! ஒன்னு கூடவா நீ கேக்கலை? அடிப் பாவீ!

வாழி = நல்லா இரு!
ஈதென்ன உறக்கமோ? வாய் திறவாய்! = அப்படியென்ன தூக்கம்? கதவைத் திற!

ஹிஹி! இந்தக் காலத்தில் நண்பன் மேல ரொம்ப கோவம் வந்தாச் சொல்றோமே! = நல்லா இருங்கடே! அதே தான்! வாழி என்கிறார்! :)
சிவபிரானை இம்புட்டு பாடுறோம்? நீ பாட்டுக்குனு ஏதோ தூங்கிக்கிட்டு இருக்க? நல்லா இரு டீ! சீக்கிரம் கதவைத் தொற! தொறந்து, கேஆரெஸ் பதிவுல போயி, நமசிவாய வாழ்க!-ன்னு பின்னூட்டம் போட்டுட்டு வா! :)


ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ? = இந்த வரிகளை நல்லபடியா நோக்கணும் என்று அனைவரையும் கேட்டுக்கறேன்! மாணிக்க வாசகரின் ஒரு வாசகம் என்றாலும் அது திருவாசகமான வரிகள் இவை!
ஆழியானான பெருமாள், ஈசன் மேல் வைத்திருக்கும் அளவிலா அன்பில், ஒரு சிறு பங்காவது நீ வச்சிருக்கியா? - என்று கேட்கிறார் மாணிக்கவாசகர்!
யாரை? திருவண்ணாமலை வீதியில் இருக்கும் ஒரு பொண்ணையா? இல்லை! நம்மை! என்னை! உங்களை! ஏன்?

சைவத்தைக் காக்கிறேன் பேர்வழி என்று சிவத்தை மறந்து விடுகிறோம்! சிவன் பால் மாசற்ற அன்பைத் தருவதில்லை! மனசின் கலப்படப் பாலை ஊற்றுகிறோம்! நமக்காக அமைத்துக் கொண்ட கட்டமைப்பைக் காக்கும் பொருட்டு, சைவத்தைப் பிடிச்சிக்கறோம்! சிவனை மறக்கிறோம்!

* இல்லையென்றால் தில்லையில், பொன்னம்பலத்தில், எண்ணெய் ஊற்றி வழுக்கி ஓடச் செய்வார்களா? "அய்யோ! நம் பிள்ளை ஆடும் அம்பலமாச்சே! ஆடும் அம்பலத்தில் அம்பலவாணப் பிள்ளை வழுக்கி விழுந்தால் என்ன ஆகும்" என்ற துளி பாசம் வந்ததா?
உள்ளே வரும் காவலரைத் தடுக்கணும்-ன்னா, தான் படுத்து, தன் மேல் ஏறிப் போங்கள்-ன்னு சொல்லலாமே? ஹிஹி! பாசம் பரஞ்சோதிக்கா வைத்தாய்? என்று இடித்துக் கேட்கிறார் மணிவாசகப் பெருமான்! :(
* "தேவாரத் திருப்பதிகங்களை அம்பலத்தில் பாடி விட்டுப் போகட்டுமே! வீண் அவப்பெயர் மட்டும் அல்லாமல், வளரும் தலைமுறை இதையெல்லாம் பார்த்துவிட்டு, நாத்திகர்கள் அல்லவா ஆவார்கள்? சிவ துவேஷத்திற்கு நாமே காரணம் ஆகலாமா?" - இப்படி எல்லாம் யோசிக்கவே மாட்டார்கள் இந்தக் கர்ம சீலர்கள்! கர்மானுஷ்டானம்! யார் கர்மம்? சிவபெருமானோட வேலையா? இல்லையில்லை! தங்கள் வேலை! தங்கள் கர்மம்! ஏன்? நம்ம கட்டமைப்பைக் காத்துக்கிடணும்! சிவன் என்னவானா நமக்கு என்ன? :(

* அது என்ன நந்திக்குப் பின்னால் இருந்து தான் தமிழ் பாடணும்-ன்னு ஒரு குருட்டு வாதம்? அதான் நந்திக்கு முன்னால் இருந்து, ஈசனே பாடி விட்டாரே! "மாணிக்கவாசகன் சொல்லச் சொல்ல, நாமே எழுதியது" என்று பொன்னம்பலத்தில் தானே தமிழில் திருக்கடைக்காப்பு இட்டார்? பொன்னம்பலம் என்ன நந்திக்குப் பின்னா? அப்புறம் என்ன? பொன்னம்பலத்தில் அவர்களும் தமிழ் பாடட்டும்! கருவறைச் சிற்றம்பலத்துக்குள் நாமும் தமிழ் பாடுவோம் என்ற எண்ணம் வருமா? வராது! சுட்டுப் போட்டாலும் வராது! :(

* ஏன்? = தங்களை முன்னுக்குத் தள்ளி, இறைவனைப் பின்னுக்குத் தள்ளும் போக்கு!
தங்களையும், தங்கள் பூஜா முறைகளையும், தங்கள் கர்ம அனுஷ்டானங்களையும் காத்துக் கொள்வோம்! ஈசனை அவரே பார்த்துக் கொள்வார்! அவர் சன்னிதியில் நாமே எண்ணெய் ஊற்றினால் என்ன? பெட்ரோல் ஊற்றினால் தான் என்ன? சிவோஹம்! சிவோஹம்!

அதான் மாணிக்கவாசகப் பெருந்தகை நெத்தியடி அடிக்குறாரு! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ? --- ஆழியானாகிய பெருமாள், நம் ஈசனிடம் வைத்த பாசத்தில், ஒரு சிறு பங்கு இருக்கா உங்க கிட்ட? என்று கேட்கிறார் மாணிக்க வாசகர்!
இந்த மணி வாசகத்தை மட்டும் மன்னன் படிச்சிருந்தான் என்றால், தில்லையில் கோவிந்தராசரை அப்புறப்படுத்தியே இருக்க மாட்டான்! :(
என்ன செய்வது! காலம் காலமாக, தனிப்பட்ட மனிதர்களின் சுய லாபங்களும், சுய பிரதாபங்களும் முன்னே! ஈசனும் அம்பிகையும் பின்னே! ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?


ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை = (ஆக்கல், காத்தல், அழித்தல்) ஊழிக் காலத்தில் அழிக்கும் கடவுளாய் நிற்கும் சிவபிரானை! "ஒருவனை"! ஊழியின் போது வேறு எவரும் கிடையாது! சிவபிரான் ஒருவரே! அவரே தனியாக இருந்து அழிக்கிறார்! அதனால் "ஒருவனை" என்கிறார்!
ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய் = அது என்ன ஏழைப் பங்காளன்? சிவபெருமான் அரசியல் கட்சி எதுவும் தொடங்கலையே? அவிங்க தான் ஏழைப் பங்காளன் என்பார்கள்! :) இதுக்கு என்னவா இருக்கும்-ன்னு திருவாசக உரைகளைத் தேடினேன்!
ஏழை = உமை அன்னை! அவளைத் தன் பங்கில் கொன்டவன்! = ஏழைப் பங்கு ஆளன்!

ஏன் உமையன்னையை ஏழை-ன்னு சொல்லணும்? ஏந்திழை-ன்னு இருக்குமோ? ஏழை-ன்னு சுருங்கிருச்சோ? அவ மலையரசன் மகளாச்சே! அவளா ஏழை? மதுரையின் அரசியாச்சே! அவளா ஏழை? யோசிச்சிப் பார்த்தேன்! ஆமாம் அவள் ஏழை தான்! இல்லாதவள் தான்! ஏன்னா Wealthy Accumulate! Poor Spend!

பக்தர்களின் குறைகளை மனசுக்குள்ளாற தேக்கி வச்சிக்கத் தெரியாது அவளுக்கு! போனாப் போகட்டும், போனாப் போகட்டும்-ன்னு, தன்னருளைச் செலவு செய்து கொண்டே இருப்பாள் உலகன்னை! ஜகன் மாதா! அவள் ஏழையே தான்! ஏழை பங்கு ஆளனையே பாடேலோர் எம்பாவாய்!

ஆழியான் பெருமாளின் அன்பைப் பெற்று விளங்கும் அம்பலவாணன் திருவடிகளே சரணம்! திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!
Read more »

Thursday, March 06, 2008

சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்!

அன்புள்ள ஆறுமுகச்சாமி ஐயா!
சிவராத்திரித் திருநாள் அதுவுமாய், வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!

இந்தத் தள்ளாத வயதிலும், தனி ஒரு ஆளாகத் துவங்கி, பின்னர் சில மெய்யான இயக்கங்களின் உதவியுடனும் போராடி வென்று உள்ளீர்கள்! மிகவும் பாராட்டுதல்கள்!
பல ஆன்மீக அமைப்புகளும் திருமடங்களும் தீர்த்து வைக்காத பிரச்சனையைத், தனி ஒரு மனிதராக/சிறு இயக்கமாகக் கைக்கொண்டு போராடி இருக்கீங்க! ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கீங்க!

இந்த வெற்றி என்றும் நிலைத்திருக்க வேண்டும்!
ஒவ்வொரு முறையும் நீங்கள் வந்து பாடினால் தான், தமிழ் கருவறைக்குள் நுழைய முடியும் என்று ஆகி விடக் கூடாது!
உங்களுக்குப் பிறகு யார்?
அடியேன் சில பார்வைகளை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விழைகின்றேன்!
உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையில், இவற்றைக் கருணை கூர்ந்து கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!


1. இந்நேரம் சிறையில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கலாம்! சிறையில் இருந்த போது, தமிழ் ஆர்வலர்கள் சிலர் சிற்றம்பலத்தில் ஏறிப் பதிகங்கள் பாடியுள்ளதையும்,
முன்பு எதிர்த்த தீட்சிதர்கள் இப்போது பிரச்சனை எதுவும் செய்யாமல், பாடியவர்களுக்கு மாலை மரியாதைகள் செய்துள்ளதையும் பத்திரிகைகளில் பார்த்தோம்! நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்!

2. தாங்கள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவுடன், உங்கள் மனமெல்லாம் ஆடல்வல்லானைக் காண வேண்டும் என்றே இருக்கும்! பதிகம் பாடிச் சேவிக்க உங்கள் மனம் துடியாய்த் துடிக்கும்! அறிவேன்!

ஆனால்...அத்தி பூத்தாற் போல் அமைதி பூத்துள்ளது!

எனவே...போராட்ட கோஷங்கள் ஏதுமின்றி, ஆரவாரங்களைக் குறைத்துக் கொண்டு, அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, தில்லை அம்பலத்துக்கு வாருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

முன் கூட்டியே தங்கள் வருகையை அறிவித்து விடுங்கள்! காவல்துறைக்கு உதவியாய் இருக்கும்!
தீட்சிதர்களும் பழைய கசப்புடன் உங்களை எதிர் நோக்காது, குறைந்த பட்சம் தங்களை மனத்தளவில் தயார் செய்து கொள்வார்கள்!

3. இந்த முறை தங்கள் ஆலய வழிபாடு அமைதியாக நடக்க வேண்டும் என்பதே என் அவா! அதுவும் சிவராத்திரி அதுவுமாய் அமைதி தேவை!
முன்பு நடந்தது போல், மோதலில், தரிசனத் தடை ஏதும் நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உள்ளது!

பொன்னம்பல மேடையில் நீங்கள் பதிகம் ஓதித் தொழுதவுடன், (முடிந்தால்) மலர் மாலைகளைக் கொணர்வித்து, 
வழிபாட்டுப் பொறுப்பில் உள்ள தீட்சிதர்களிடம் உங்கள் கைகளால் கொடுக்கவும்! - குறைந்த பட்ச நல்லெண்ண முயற்சியாக இது அமையும்!
பாக்களால் நீங்கள் அலங்கரியுங்கள்!
பூக்களால் அவர்கள் அலங்கரிக்கட்டும்!

4. இத்துடன் இரு தரப்பும் வீம்புக்குச் செய்யும் சில செயல்களை நிறுத்திக் கொள்ளுதல் நலம்! உங்களை ஆதரித்த இயக்கங்கள், குறிப்பாக அரசியல் கட்சிகளுக்கு நன்றி கூறி விடையளித்து விடுங்கள்!
குறிப்பாக முதல்வர் கலைஞருக்கும், காவல்துறைக்கும், அறநிலையத் துறைக்கும் நன்றி அறிவிப்பு செய்யுங்கள்! போராட்டம் ஓய்ந்தது என்றும் அறிவித்து விடுங்கள்!
இனி அரசியல் சாராத சமூக இயக்கங்கள் உங்கள் பக்கத்துணை இருந்தாலே போதும்!


5. இனி நீங்கள் தினமும் பொன்னம்பல மேடையேறிப் பதிகம் பாடிக் கொண்டிருக்கத் தேவையில்லை! அதை விட பெரிய பொறுப்பு உங்களுக்குக் காத்துக் கொண்டுள்ளது! என்னவென்று அடுத்த பத்தியில் சொல்கிறேன்!

தற்சமயத்துக்கு உங்கள் சீடர்கள் எவரிடமாச்சும் இந்தப் பாடும் பொறுப்பைக் கொடுத்து விடுங்கள்! முதல் கொஞ்ச நாட்களுக்கு உங்கள் சீடர்களின் கால அட்டவணையை அனைவரும் அறியக் கொடுத்து விடுதல் இன்னும் நலம்!

இன்னின்ன வேளைகளில் பொன்னம்பலம் மேல் நின்று அவர்கள் பதிகம் பாடுவார்கள் என்பதை முன்னரே அறிவித்து விடுங்கள்!அதன் பிறகு சிறிது சிறிதாக மைய நீரோட்டத்தில் இந்த வழக்கம் கலந்து விடும்!

எவ்வளவு நாள் தான் நீங்கள் ஒருவரே இதை எல்லாம் செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள்? உங்களுக்குப் பிறகு தொடர்ந்து யார் செய்யப் போகிறார்கள்?
அரசியல் கட்சிகள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் கழண்டிக் கொள்ளும்! பிரச்சனைகள் இல்லாத இடத்தில் அவர்களுக்கு வேலை இருக்காதே?

மனதில் வையுங்கள்:
தமிழில் ஆன்மீகத்தை வளர்க்கணும், பக்தி இயக்கத்தைச் செழிக்கச் செய்யணும் என்பது அவர்களின் குறிக்கோள் அல்ல!
சமயப் புரட்சி, சமயத்தின் உள்ளேயே இருந்து வந்தால் தான்... காலமெல்லாம் நிலைத்து நிற்கும்!
6. இனி உங்களுக்குப் பெரிய பொறுப்பு-ன்னு சொன்னேன் அல்லவா? இது தான்! 
= சிவாலயங்களில் தமிழ் வழிபாடு!

இதை நீங்கள் மணி கட்டினால் இன்னும் நலமாக இருக்கும்!
ஏன் என்றால் இப்போது நீங்கள் ஒரு வெற்றியாளர்! உங்கள் வாக்குக்கு இனி மதிப்பு அதிகம்!

முடிந்தால் அனைத்து சைவ மடத் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்று எழுதுங்கள்! சிவாலயங்களில் தமிழ் வழிபாடு எந்தெந்த வகையில் அமையலாம் என்பதைக் கூடிப் பேசி, ஒரு பொதுக் கருத்துக்கு வரவேண்டும்; இதற்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு அவர்களை வேண்டவும்!

அக்கூட்டத்தில் காய்தல், உவத்தல் இன்றி அனைத்துச் சாதியனரையும், அவர்கள் சார்ந்த திருமடங்களையும் அழைத்துப் பேசவும்!
நீங்கள் ஆகம முறைகளில் வல்லவர் இல்லை என்றாலும் பரவாயில்லை! அந்தந்தத் திருமடத் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்! நீங்கள் ஒரு இணைக்கும் பாலமாக செயல்பட்டாலே ஒரு பெரிய ஊட்டமாக இருக்கும்!

ஒவ்வொரு பூசைக்கும் உண்டான தெய்வத் தமிழ் மறைகளை வரையறுத்து, அவற்றைக் கூட்டுப் பரிந்துரையாகச் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், ஆலய நிர்வாகத்தின் முன்னர் வையுங்கள்!
அதிகாலைப் பள்ளியெழுச்சி முதற்கொண்டு, உச்சிகாலம், அர்த்தசாமம் முதலான ஒவ்வொரு வழிபாட்டுக்கும் பொது வரையறைகள் வகுக்கப்பட வேண்டும்! பாடல்களும் பதிகங்களும் ஏற்கனவே கொட்டிக் கிடக்கின்றன! தொகுப்பு தான் தேவை!

பூசை வேளைகளில், வடமொழி வேதங்களை சிவாச்சாரியர்கள் முழங்குவது போல், இப்படி வகுக்கப்பட்ட தமிழ் மறைகளை ஓதும் நடைமுறை....கொஞ்சம் கொஞ்சமாக வழக்கத்தில் கொண்டு வந்துவிட வேண்டும்!
இராமானுசரால், வைணவ ஆலயங்களில் உள்ளது போல், it will completely integrate with the system!
மன்னிக்கவும்...வேகத்தில் ஆங்கிலம் வந்திருச்சி! இந்த நடைமுறைகள் அனைத்தும், சிவாலய நீரோட்டத்திலும் இணைந்து, இயைந்து விடணும்!

7. மேற்சொன்ன ஆக்கங்கள் எல்லாம் படிக்கவும் பார்க்கவும் எளிதே தவிர, ஒரே நாளில் மாற்றம் வந்துவிடாது என்பது அடியேனுக்கும் தெரியும்!
ஆனால் அதற்கான முயற்சிகளுக்கு மணி கட்டும் தருணமிது!
நல்ல சமயமடா! - இதை நீ நழுவ விடுவாயோ என்கிற பாடல் தான் நினைவுக்கு வருது! இதற்கான ஆரம்ப வேலைகளை நீங்கள் துவக்கி வைத்தால்...அடியோங்கள் உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்போம்!

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டர் தொகையில் வருவது போல...
திருவாரூர் பிறந்தவர் தம் அடியார்க்கும் அடியேன்என்ற வரிசையில்.....
ஆறுமுகச் சாமியின் அருள்முயற்சிக்கு அடியேன்
ஆன்றதமிழ் ஓதுவார் தம் அடியார்க்கும் அடியேன்

என்று சேர்த்துப் பாடி மகிழ்வோம்!

வெறுப்பு சிவம் ஆகாது! மொழி வெறுப்பும் சிவம் ஆகாது!
அன்பே சிவம்! அருளே சிவம்!
உங்கள் இந்த வெற்றி்க்கும், இனி வரப் போகும் வெற்றிக்கும், வைணவ முறையில் சொல்லுவதைப் போல் வாழ்த்து சொல்லி முடிக்கிறேன்!
அடியார்கள் வாழ, (அரங்க) தில்லை நகர் வாழ,
(சடகோபன்) 
அப்பர் தண்டமிழ் நூல் வாழ - கடல் சூழந்த
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


தில்லையம்பல தீட்சிதப் பெருமக்களே,
சிவராத்திரித் திருநாள் அதுவுமாய், வணக்கம்! வாழிய நலம்! அனேக நமஸ்காரங்கள்! :-)

தெரிந்தோ, தெரியாமலோ பல சம்பவங்கள் நடந்து விட்டன! அவப் பெயர்கள் பரவி விட்டன!
Good Judgement comes from experience!
and experience comes from Bad Judgement!

உங்கள் நலமும், சமய நலனும் மேம்பட ஒரு பொன்னான வாய்ப்பாக இந்தச் சம்பவங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!

வரலாற்றில் நுழைந்து, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், நீங்கள் தில்லை வாழ் அந்தணர்கள் தானா? என்றெல்லாம் இப்போது நான் பேசப் போவதில்லை!
You can never go into the past and apply today's corrections for yesterday!

ஆனால் "தமிழ் விரோதி" என்று முத்திரை தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மேல் குத்தப்பட்டு விட்டது!
அதைத் துடைத்து எறிவது தான், தற்போது உங்கள் முதல் பணியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்! கீழே சொல்லியுள்ள சில கருத்துக்களைப் படித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

1. இப்போதெல்லாம், உங்கள் வாயால் தமிழ்ப் பதிகங்களைப் பாடுகிறீர்கள்! - ஆனால் எங்கே?....
கருவறைக்கு வெளியில்! = ஒவ்வொரு இரவும் பெருமானின் திருவடி, பள்ளியறைக்கு எழுந்தருளும் போது பாடப்படும் பதிகங்கள் தமிழ்ப் பதிகங்களே!
பின்னர் எப்படி இந்த அவப்பெயர் உங்களுக்கு வந்தது என்று யோசித்துப் பார்த்தீர்களா? உங்கள் முரட்டுப் பேச்சுகளும் செய்கைகளும் தான் பாதிப் பிரச்சனைக்குக் காரணம்!

பொதுப் பிரச்சனைகளில் உங்கள் நிலைப்பாட்டை அன்புடனும் பொறுப்புடனும் விளக்க வேணும்! தமிழில் அன்பே சிவம் என்பது உங்களுக்கும் தெரியும்! உங்க பாஷையில் சொல்லணும்னா..
மாதாச பார்வதீ தேவி
பிதா தேவோ மகேஸ்வரஹ
பாந்தவா சிவ பக்தாய = என் பந்துக்கள், உற்றார் உறவினர் எல்லாம் சிவனடியார்கள் என்று தான் உங்கள் ஸ்லோகமும் சொல்கிறது!
பின்னர் ஏன் இத்துணை காழ்ப்பு?

2. பொன்னம்பல மேடை கருவறைக்குச் சமானம்! அதனால் தான் மற்றவர்கள் அங்கு ஏறிப் பாடக் கூடாது என்பது உங்கள் வாதம்.
ஆனால் தட்சிணை/கட்டணம் பெற்றுக் கொண்டு பக்தர்களை அந்த மேடையில் ஏற்றுகிறீர்கள் அல்லவா? அப்புறம் எப்படி அது கருவறை ஆகும்?

சிற்றம்பலம்-சிதம்பர ரகசியம்-அம்பலவாணர்-சிவகாமி
அதே மேடையில் பெரிய புராண அரங்கேற்றம் எல்லாம் நிகழ்ந்துள்ளதே!

பீடத்தில் உள்ள நடராஜப் பெருமான் இருக்கும் குறுகலான சிற்றம்பலம் மட்டுமே கருவறை! பொன்னம்பலம் அல்ல!
சிற்றம்பலம் நுழைவேன் என்று ஆறுமுகச் சாமியோ வேறு எவருமோ கோரவில்லை! - இதை நினைவில் வையுங்கள்!

3. சரி, தள்ளு முள்ளு சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரி விட்டீர்கள்! நீங்கள் பொன்னாடை போர்த்தி தமிழ் ஆர்வலர்களுக்கு மதிப்புச் செய்த காட்சியைப் பத்திரிகைகளில் பார்த்தோம்! மிக்க மகிழ்ச்சி! இங்கிருந்தே உங்கள் course correctionஐத் துவக்கினால் நலம்!

4. அடுத்த முறை ஆறுமுகச்சாமி வரும் போது, கோயிலில் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்பு செய்யுங்கள்! = இது ஒரு குறைந்தபட்ச நல்லெண்ண முயற்சியாக அமையும்!
அடியார்கள் பிரச்சனைக்காக இறைவனே தூது நடந்த கதை உண்டு! அதனால் இவருக்குப் பூர்ண கும்பம் அளிப்பதை மரியாதைக் குறைச்சலாக நினைக்க வேண்டாம்!

அவர் மேடையில் பாடி முடித்து விட்டுப் போகட்டும்!
என் பேராசை: அவர் பாடும் போது, அவருடன் சேர்ந்து நீங்களும் பாடினால், அடியேன் மிக மிக மகிழ்வேன்!

5. இதற்குப் பிறகு, நீங்கள் பெரிதும் மதிக்கும் வைதீக மடத் தலைவர் + தமிழ்ச் சமயத் தலைவர் = இருவரின் முன்னிலையில்-இரு தரப்பும் சந்தித்துப் பேசுங்கள்!
பிரச்சனைகள் என்னென்ன, அவற்றின் குறைந்த பட்சத் தீர்வு (common minimum program) என்ன என்பதை அடையாளம் கண்டு பட்டியல் போடுங்கள்!
எது ஐதீகக் குறைச்சல் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்பதைத் தெளிவாக முன்வையுங்கள்!
இதன் முடிவுகளை தமிழக முதல்வருக்கு இரு தரப்பும் நேரில் சென்று விளக்குங்கள்!

6. இதைச் சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்! முடிந்தால் ஆலயப் பொறுப்பை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்!
அதற்கு ஈடாக உங்கள் தேவைகளை அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்! நீங்களாகக் கொடுக்கும் போது உங்கள் மதிப்பு கூடத் தான் செய்யும்!

இதே போல், பல சண்டைகளுக்குப் பிறகு, திருவரங்கத்துக் கோயில் சாவியை அதன் தலைமை அர்ச்சகர் என்ன செய்தார் தெரியுமா? இராமானுசரிடம் கொடுத்துவிட்டுப் பொறுப்பை ஒப்படைத்த கதை தெரியும் அல்லவா?
அதைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள்! காலமெல்லாம் போற்றப்படுவீர்கள்!

உங்கள் அடுத்த தலைமுறையில் எத்தனை பேர் பூசை செய்ய வரப் போகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? விருப்பம் இல்லையென்றால் அவர்கள் மேல் பூசைப் பொறுப்பைத் திணிக்காதீர்கள்!

7. Men may come and Men may go! But Nataraja Peruman should go on forever!

எக்காரணம் கொண்டும் இனியொரு முறை தில்லைச் சன்னிதியில் போலீஸ் தடியடி, நீங்களும் எண்ணெய் எறிந்து வீசுவது - இது எல்லாம் நடக்கவே கூடாது!
பொன்னம்பலம் "நடன" அம்பலம்! "ஆட்டம் போடும் அம்பலம்" அல்ல!

போலீஸ் இவ்வளவு களேபரத்திலும், சட்டையைக் கழட்டி விட்டுத் தான் உள்ளே செல்கிறார்கள்! அவர்களுக்கே அவ்வளவு அக்கறை என்றால், தில்லைக் கோயிலை நிர்வாகம் செய்யும் உங்களுக்கு பத்து மடங்கு பொறுப்பு அதிகம்!

நீங்கள் சீர் குன்றினாலும், நடராஜப் பெருமானின் ஆலயம் சீர் குன்றக் கூடாது!
உங்கள் பெயர் பங்கப் பட்டாலும், நடராஜப் பெருமானின் திருப்பெயருக்குப் பங்கம் வரக்கூடாது!
இப்படி நீங்கள் நினைப்பது உண்மையானால், அதற்காகச் சில தியாகங்களைச் செய்ய உங்கள் மனத்தைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்!
அதுவே ஈஸ்வர கடாட்சமாக உங்களைக் காக்கட்டும்! சிவோஹம்!
Read more »

Monday, December 24, 2007

தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை?

அன்று தில்லை நடராசன் சன்னிதியில் ஒரே கூச்சல், குழப்பம்!
"அச்சச்சோ, நடராஜப் பெருமானுக்குத் தீட்டாயிடுத்தே! எந்தச் சண்டாளன் களியைத் தின்னுட்டு, இப்படி மீதியை, ஸ்வாமி மேல் வீசினானோ தெல்லியே! ஏங்காணும்...நோக்கு ஏதாச்சும் தெரியுமா?"

"ஓய், என்னைக் கேட்கறீரா? நேத்து ராக்கால பூஜை முடிச்சி, நடையைச் சாத்தினது நீர் தானேய்யா! இன்னிக்கு காலம்பற வந்து நடையைத் தொறக்கறேன்! அச்சோ! ஸ்வாமி மேல் என்னது இது திட்டு திட்டா விழுந்து கிடக்கே? அபசாரம், அபசாரம்!
நேற்று ராப்பூஜையில் என்னய்யா பண்ணீர் நீர்? திருவிழா நேரம்-னா நடை சாத்தக் கொஞ்சம் தாமதம் ஆகத் தான் செய்யும். அதுக்காகப் பசி தாளாம, அம்பலத்தில் களியை ஒளிச்சி வச்சித் தின்னறதா? நீரெல்லாம் என்னய்யா ஒரு தீட்சிதர்?"

"அய்யோ, இப்படி அபாண்டமாப் பேசாதீங்கோ! நம்மவா களி தின்னும் வழக்கம் எல்லாம் கிடையாதே! நான் எப்படிங் காணும் களியைப் போயித் தின்னிருப்பேன்? பழியைப் போட்டாலும் பொருந்தப் போடணும் ஓய்!
இது வேற எவனாச்சும் செஞ்ச வேலையாத் தான் இருக்கும்! ஹூம்...திருவாதிரை ஆருத்ரா அபிஷேகத்தின் போதா இப்படி எல்லாம் நடக்க வேண்டும்?"

"நாமத் தான் அம்பலத்தில் ஒருத்தனையும் விடமாட்டோமே! வேறு எவன் ஐயா வந்து வீசியிருக்க முடியும்?
ஏற்கனவே நாம போடுற சுத்தபத்த ஆட்டத்தை எல்லாம் பார்த்துட்டு, ஜனங்கள் ரொம்பவே நொந்து போயிருக்கா. இப்போ இது வேறயா?
கண்டராதித்த சோழர் வந்திருக்காராமே ஊருக்கு! இங்க வந்து, "நல்லா இருக்குய்யா உங்க சுத்தமும், ஆச்சாரமும்" ன்னு கேட்கப் போறாரு! என்ன சொல்லப் போறீரு?"

- சிதம்பரத்து தீட்சிதர்கள் இருவர், கோயிலில் இப்படிப் பேசிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும், மிகவும் பயந்து போய் இருந்தார்கள்! அதற்குள் கண்டராதித்த சோழன், பொன்னம்பல நாதனைத் தரிசிக்க ஓடோடி வந்து விட்டான்! என்ன இன்னிக்கி இவ்வளவு சீக்கிரம், இப்படி ஆவலுடன் ஓடி வருகிறான்?



அதற்கு முந்தைய நாள் இரவு!
"செம்பியன் மாதேவி, ஒவ்வொரு ராத்திரியும் பூசை முடித்த பின், என் காதுகளுக்கு நடராஜப் பெருமானின் சதங்கை ஒலி கேட்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் அது இன்று கேட்கவில்லை! என் வழிபாட்டில் தான் ஏதோ குறை உள்ளது போலும்! அப்படித் தானே?"

"கண்டராதித்தரே, உங்களைப் போல் சிவநெறிச் செல்வரைக் கணவராகப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! எதற்கு வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்! இன்று கேட்காத சதங்கை ஒலி நாளை கேட்கும் பாருங்கள்! வாருங்கள், சாப்பிட்டு உறங்கப் போகலாம்!"

"இல்லை மாதேவி, எனக்கு மனம் சரியில்லை! உணவு வேண்டாம்! நீ போய் வா! நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்!"

கவலையில் சோழனுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை! புரண்டு புரண்டு படுத்தான். சிற்றஞ் சிறுகாலே தோன்றிய உறக்கத்தில், ஒரு கனவு! ஆகா...இது என்ன!.....ஈசனே அல்லவா கனவில் பேசுகிறார்!
"ஆதித்தா...இன்று இரவு சேந்தன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்! அதான் இங்கு உன்னிடம் வரவில்லை! உனக்கு என் சதங்கை ஒலியும் கேட்கவில்லை!
சேந்தன் தெரியுமல்லவா உனக்கு?"

"தெரியாதே சுவாமி!"

"பட்டினத்துப் பிள்ளையின் கணக்குப் பிள்ளை அவன்! பட்டினத்தான் துறவு பெற்ற பின், அவன் சொத்துக்களை எல்லாம் ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டான். அரசனுக்கு கொடுக்கவில்லையாம். செய்யாத குற்றத்துக்குச் சிறைவாசம் அனுபவித்து விட்டு, இப்போது தில்லைக்கு வெளியில் பரம ஏழையாக உள்ளான். அவன் வீட்டுக்குத் தான் ஒரு முதியவனாய் இன்று போய் எட்டிப் பார்த்தேன்...."


"சேந்தனாரு இருக்காருங்களா சாமீ...தினமும் சிவன் அடியாரு ஒருத்தருக்காச்சும் சாப்பாடு போட்டுட்டுத் தான் சாப்பிடுவாராமே! யப்பா...இன்னிக்கி இந்தப் பேய் மழையில இங்கனாச்சும் ஒதுங்கினேனே!"

"வாங்க பெரியவரே! அடியேன் தான் சேந்தன்! இப்படி உட்காருங்க"

"ஓ...நீ தான் சேந்தனா! பார்க்கவே பரம ஏழையா இருக்கேயே! உனக்கு ஏன்பா இந்த அன்னதானம் எல்லாம்? உனக்கே இன்னொருத்தரு அன்னதானம் பண்ணனும் போல இருக்கே!"

"எங்கள் ஈசனும் பரம ஏழை தானே, ஐயா!
ஏழைப் பங்காளன், அவன் உலகத்துக்கே படி அளக்கவில்லையா? அது போலத் தான், நானும்!"

"உக்கும்...இந்தப் பேச்செல்லாம் நல்லா வெவரணையாத் தான் பேசுறாங்க இந்தச் சிவனடியாருங்க! ஆனா பேசறத்துக்கு மட்டும் தான் வாயின்னு நெனச்சிக்காதீங்க சேந்தனாரே! சோறு திங்கறத்துக்கும் சேத்து தான் வாயி! உமக்கே சோத்துக்கு இருக்கான்னு தெரியலை! இதோ, வெறகுக்கட்டை வேற மழையில விக்காம இங்கேயே போட்டிருக்க போல!
அட நடராசா! இது தெரியாம இன்னி ராவுக்கு இவன் வூட்டாண்ட வந்துட்டோமே! பஞ்ச வீட்டில் பெருசா என்ன கொடுத்துவிடப் போறாங்க? பசி வேற வயித்தக் கிள்ளுது! ச்சே..."

சேந்தன், மனைவியைப் பார்க்க...அம்மையார், சமையலறை பக்கம் போனார். எஞ்சியிருந்த கொஞ்சம் அரிசி நொய்யில், களி தயாரித்தார்.
சேந்தன் கொல்லையில் இருந்த காஞ்ச கீரையைப் பறித்துத் தர, கீரைக்குழம்பு தயாரானது.
வயசாளிக்குக் களியும் குழம்பும் ஊத்த, கெடைச்ச மட்டும் லாபம்-னு சாப்புட்டு போட்டுக் கெளம்பினாரு! அப்போ தான் அது நடந்திச்சி...

"அட இன்னும் கொஞ்சம் களி மீதி இருக்கே பாத்திரத்தில்! எனக்கு நாளைக்கு ஆகுமே"-ன்னு வெக்கமில்லாம கேட்டாரு வயசாளி அண்ணாச்சி! சேந்தனும் அவர் மனைவியும் ஏதாச்சும் சாப்பிட்டாங்களா-ன்னு ஒப்புக்குக் கூடக் கேக்கலை!
இந்தக் காலத்துல சில ஆம்ஸடர்டாம்-நியுயார்க் பசங்க, சாப்படக் கூப்புடற வீட்டுல இருந்தே, பார்சல் கட்டிக்கிட்டு வரலையா?:) கட்டிக்கிட்டு வந்து, ரெண்டு நாளுக்கு மைக்ரோவேவ்-ல வச்சி சாப்புடறதில்லையா? அது போலவே சிவபெருமானும் பண்ணியிருக்காரு டோய்!
மிச்ச மீதிக் களியைத் தன் இடுப்புத் துண்டில் கொட்டிக்கொண்டு ஆளு எஸ்கேப்பு!



சிற்றம்பலம்-சிதம்பர ரகசியம்-அம்பலவாணர்-சிவகாமி

"கண்டராதித்தா, சேந்தன் வீட்டுக் களி தான் என் ஆடையில் இருக்குன்னு தெரியாம "ஆச்சார சீலர்கள்" சிலர் ஆலயத்தில் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! நீ சென்று அவர்களைக் கவனி! சேந்தனை நாளை தேர்த் திருவிழாவில் உனக்கு அடையாளம் காட்டுகிறேன்...."

அச்சோ...கனவு கலைந்தது...சோழன் அலறி அடித்துக் கொண்டு ஆலயம் வருகிறான்!
களியின் மகிமை கோயிலில் சொல்லப்பட்டது! தீட்சிதர்கள் ஓரளவு அமைதி ஆனார்கள்! ஆனாலும் இந்தக் கதையை அவர்கள் மனம் முழுமையாக நம்பவில்லை போலும்! ஆனாச் சொல்வது அரசன் ஆயிற்றே!

தாஙகள் சொல்லும் கதையை ஊர் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ஊர் சொல்லும் கதையை, தான் நம்ப வேண்டாமோ? நம்பாதவரையும் வேறு ஒன்று செய்து நம்ப வைப்பவன் அந்த நடராசன் அல்லவா?

மக்கள் எல்லாரும் யார் அந்தச் சேந்தன்? யார் அந்தச் சேந்தன் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருக்க...தேர் திருவிழா தொடங்கியது.

ஆடல் வல்லான் சிற்றம்பலத்தை விட்டு, பொன்னம்பலத்தின் வழியாக, ஆனந்த நடனம் செய்து கொண்டே வெளியே வருகிறான். தில்லையில் மூலவரே உற்சவரும் ஆகிறார்! தேர் புறப்பட்டு வீதிகளில் சுற்றிய வண்ணம் உலா வருகிறது!
அதைத் தொடாதே, இப்படி நில்லு என்ற அதட்டல் எல்லாம் கோயிலுக்குள் தான் போலும்! வீதியில் அந்த வில்லங்கங்கள் ஏதும் இல்லாது, மிகவும் நிம்மதியாய், மக்களோடு மக்களாய் உலா வருகிறான் இறைவன்.

இதோ நிலைக்கு வரப் போகிறது தேர்! அச்சோ, சக்கரம் பூமியில் இறங்கியது. தேர் நகரவில்லை! என்ன இது காலையில் இருந்து ஒரே அபசகுனமாய் நடந்து கொண்டே இருக்கே-ன்னு தீட்சிதர்கள் முணுமுணுக்க...
அபசகுணம் இல்லை இது! அடியவர் சகுணம்...அன்பின் சகுணம்; அதைக் காட்ட எண்ணிவிட்டான் அம்பலத்தான்.

யானைப் படைகளின் உதவியுடன் தேரை மேலே தள்ளினர் வீரர்கள். ஹூஹூம்...ஒன்றும் முடியவில்லை.
"சேந்தனே, தேர் நகரப் பல்லாண்டு பாடு" என்று ஒரு குரல்.
கூட்டத்தோடு கூட்டமாக இருந்த சேந்தனார், இதைக் கேட்டுத் திடுக்கிட்டார்...
கூட்டம், குரல் கேட்டு வழிவிட்டது! இவனா சேந்தன்? இவனா சேந்தன் என்று எல்லாரும் திரும்பிப் பார்க்க...
இவன் வீட்டுக் கம்பங் களியா, இன்று காலை பெருமானின் மேல் விழுந்து கிடந்தது என்று தீட்சிதர்கள் ஒரு பார்வை பார்க்க...
சேந்தனுக்கு நா எழவில்லை! பா எழுந்தது!!

மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்! வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்செய் மண்டபத்து உள்ளே புகுந்து, புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாளுமை கோன், அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே!
- (9ஆம் திருமுறை)

மக்கள் எல்லாரும் இப்போது தேரை இழுக்க, தேர் மீண்டும் வலம் வந்தது.
மந்திரங்களுக்கு கட்டுப்படாத இறைவன், மனத்துக்குக் கட்டுப்பட்டான்!
அபிஷேகத்தால் குளிராத இறைவன், அன்புக்குக் குளிர்ந்து போனான்!
கண்டராதித்தர் ஓடியே வந்து சேந்தனாரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

தீட்சிதர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை! கண்ணுக்கு முன் எல்லாம் நடந்து முடிந்து விட்டது! சேந்தனின் சிவபக்தி ஊர் அறிந்த ஒன்றாகி விட்டது!
ஆனால் சேந்தன் என்றுமே அதே சேந்தன் தான்! நடந்த அற்புதத்தை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் மிட்டா மிராசு செய்யவில்லை! தனி வழியில் தரிசிக்கவில்லை! சிதம்பர ரகசியத்தைப் பணங்கொடுத்து பார்க்கவில்லை! சித்சபையில் சிறப்பு கேட்டு சீண்டிப் பார்க்கவில்லை! கூட்டத்தோடு கூட்டமாக நின்று சேவிக்கும் அதே சேந்தன் தான் அவன்!

அவன் வீட்டுக் களியை நடராசன் உண்டான். நாமும் உண்கிறோம்!
கீழ்த்தட்டு மக்களின் அன்றாட உணவை இன்று தீட்சிதர்கள் உண்கின்றனர். தனவந்தர்கள் உண்கின்றனர். அடியவர்கள் எல்லாம் திருவாதிரைக் களி என்று அன்புடன் உண்கின்றனர்!

ஏழையின் சொல் அம்பலம் ஏறியது!
ஏழையின் சோறு அம்பலம் ஏறியது!


சாதாரண அம்பலம் அல்ல! பொன்னம்பலம் ஏறியது! சிற்றம்பலம் ஏறியது!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!



Dec 24, 2007
இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! திருவாதிரைக் களி நாள்!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP