Showing posts with label நமோ. Show all posts
Showing posts with label நமோ. Show all posts

Thursday, June 25, 2009

"ஓம் நமோ" என்றால் இதுவே! - 5

விமானத்தில் எழுதிக் கொண்டே வரும் பதிவு என்பதால், நடுநடுவே ஏர் ஹோஸ்டஸ் கிட்ட கடலை போடுவதை, நீங்களே டீஜென்ட்டா, ஒட்டுக் கேட்காமப் படிக்கணும்-ன்னு கேட்டுக் கொள்கிறேன்! :)

"நமோ" என்றால் என்ன?-ன்னு லேசாப் பார்த்தோம்! சென்ற பதிவு இங்கே!
ஆனா பின்னூட்டங்களைக் கொஞ்சமாத் திசை திருப்பி, பிறந்த நாள் பையன் இராகவ், பதிவை ஹைஜாக் செய்து விட்டான்! :) அதனால் சுருக்கமா ஒரு தொகுப்புரையைப் பார்த்துட்டு, இன்னிக்கி மேட்டருக்குப் போவோம்!

* நம என்றால் ந+ம = இல்லை + எனது!
* எதுவும் எனதில்லை என்பது தான் நம!
நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களில் எல்லாம் ஓங்காரத்துவம் இல்லை என்றும் சென்ற பதிவில் பார்த்தோம்!

நம சிவாய என்பதில் எல்லாம் "நம"-ன்னு தானே இருக்கு! அப்புறம் எதுக்கு "நமோ"?
* எனது இல்லை = "நம" என்று சொன்னா போதாதா?
* எதுக்கு "நமோ"-ன்னு, "ஓ" போடணும்? எதுக்கு நமோ! நமோ!-ன்னு சுமோ காரில் ஒரேயடியா பறக்கணும்? :)


பல பிறவிகள், பிறவிச் சுழல்-ன்னு எல்லாம் சில பேரு தத்துவமா பேசுவாங்க!
"புல்லாகிப் பூண்டாய் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்....பிறந்து இறந்து இளைத்தேன்" என்பார் மாணிக்கவாசகர்!

அனாதி காலமாய் இந்தப் பந்தங்களில் மாட்டிக்கிட்டு இருக்கோம் அல்லவா?
இன்னும் அனந்த காலமும் மாட்டிக்கப் போறோம்! :)
ஆனா எதுனால மாட்டிக்கறோம்?-ன்னு மட்டும் கொஞ்சம் தெரிஞ்சிப்போம்!
தெரிஞ்சிக்கிட்டோம்-ன்னா அது நம்மள விட்டுரும்!
மாட்டிக்கிட்டாலும், ரொம்ப டார்ச்சர் கொடுக்காம விட்டுரும்! :)

எதுனால மாட்டிக்கறோம்-ன்னா....மம, மம, மம, மம, மம என்பதால் மாட்டிக்கறோம்! = எனது, எனது, எனது, எனது, எனது....
இந்தப் பதிவு எனது, பின்னூட்டம் எனது, பிளாக்கரே எனது, என் பதிவைப் படிக்கறவங்க எல்லாம் என் ஆளுங்க, இதைப் படிச்சிக்கிட்டு என் கிட்ட கோச்சிக்கறவங்க எல்லாம் என் விரோதிங்க! :)

சின்ன வயசுல பென்சில் எனது, பருவ வயசுல நயன்தரா காமிக்ஸ் எனது,
கல்லூரியில் அவ எனது, அவ கிட்ட போட்ட கடலை எனது! அவ கிட்ட கடலை போடற மத்தவங்க எல்லாரும் கூட எனது (என் எனிமி),
வேலைக்குச் சேர்ந்தாப் பொறவு போனஸ் எனது, கல்யாணம் ஆனப் பொறவு என் போனஸ் அவளுது, ஆனா அவ அப்பா சொத்து எப்படியும் ஒரு நாள் எனது..... :)

இப்படி இந்த மம-மம = எனது-எனது, என்ற லிஸ்ட்டு ரொம்பவே நீளம்! இதுல ஒருத்தன் கூட விதி விலக்கு அல்ல! சன்னியாசி உட்பட! :)

மூனு நாளைக்கு முன்னாடி பொண்டாட்டி கிட்ட கோச்சிக்கிட்டு போனாரு ஒரு சன்னியாசி! போன மூனாம் நாளே திரும்பி வந்தாரு! ஏன் போனீங்க, ஏன் வந்தீங்க-ன்னு அந்தம்மா கேட்டாக! வராண்டாவில் போன வார விகடன் இருக்கு பாரு! பக்கத்து வீட்டு பாண்டுரங்கன் ஓசி கேப்பான்! கொடுத்துறாத! அத சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்-ன்னு சொன்னாரு அந்தத் "துறவி"! :)

இப்படி மம, மம-ன்னு மாரடிச்சிகறதாலேயே மாட்டிக் கொள்கிறோம்! அப்போ இந்த டார்ச்சர்-ல இருந்து தப்பிக்க என்ன வழி?
* ந மம = நம! நம! நம!
இல்லை எனது! இல்லை எனது! இல்லை எனது!-ன்னு சொல்லிட்டா நம்மள விட்டுரும்! = அதான் நமஹ! அதான் நம!


அட போங்கய்யா! ஒங்க சம்பளத்தை ஒங்களது இல்லை-ன்னு சொல்லிருவீங்களா? பெருசா பேச வந்துட்டாங்க "நமஹ"-வைப் பத்தி!
யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம்! :)

இப்படி நம, நம, நம-ன்னு மனதறிய சொல்லுறது ரொம்ப கஷ்டம்! ஆனா வாயால சொல்லலாம்-ல? சொல்லிக்கிட்டே இருக்கலாம்-ல? சொல்லச் சொல்லக் கொஞ்சம் கொஞ்சமா ஓவர் அட்டாச்மென்ட் கொறையும்-ல? அதான் "ஓம் நமோ"! :)

பிறக்கும் போது உடம்பு மட்டும் தானே பொறந்துச்சு?
அக்காஃபீனா தண்ணி பாட்டில், செரிலாக் பால் பாட்டில், ஷேம் ஷேம்-மை மறைக்க லூயி பிலிப்ஃஸ்-ன்னு பலதும் ரெடிமேடா பேக் பண்ணி கொண்டு வந்தோமா என்ன? :)
அப்பறம் அம்மா பாலூட்டினாங்க! அப்பா துணி வாங்கிக் கொடுத்தாரு!

நாக்குல தேன் தடவினாங்க! சொக்கா போட்டாங்க! கொலுசு போட்டாங்க! பள்ளிக் கூடம் அனுப்பி வச்சாங்க! கல்யாணம் பண்ணி வச்சாங்க! (அ) பண்ணி வைக்கச் சொன்னோம்! :)
அப்பறம் எல்லாம் அப்படியே ஒவ்வொன்னா நடந்துச்சி! குழந்தை வந்துச்சி! :)
அப்பாலிக்கா Skoda காரு வந்துச்சி, 3 BHK வீடு வந்துச்சி, நடு வயதில், பாஸ் கிட்ட இருந்து ப்ரமோஷன் வந்துச்சி, கூடவே பெத்த புள்ளை கிட்ட இருந்து ஆப்பு வந்துச்சி! :)

அனுபவிச்சி, அனுபவிச்சி, கடைசீசீசீல.....புதுத் துணி போர்த்தி அனுப்பி வச்சிட்டாங்க! ஆனா அதையும் அங்கே சுடறவன் எடுத்துக்கிட்டான்!

உம்....பொறந்த போது எப்படி வந்தோமோ, அப்படித் தான் பொசுங்கற போதும் போறோம்!
ஆனா நடுவுல மட்டும், இத்தனையும் சேர்ந்துக்கிட்டு, சை-சை-ன்னு ஆடுது!

இதுக்கு, படாத பாடுபட்டு, இது என்னுடையது, இது என்னுடையது-ன்னு அபிமானப்பட்டு...
அப்படி உணர்ந்து விட்டோமானால், அது தான் நமஹ! நம = எனதில்லை!

* ஓம் ந"" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! எல்லாம் நாராயணனுடையது!

அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக உனக்கு எம்பெருமான் கொடுத்தது
!


தோடா! இதெல்லாம் பதிவுல பேசத் தான் நல்லா இருக்கும்! உபன்னியாசத்தில் வேணும்-ன்னா கை தட்டுவாய்ங்க! பேசி முடிச்சப்பறம் அவருக்குப் போட்ட பொன்னாடை/சால்வையைத் தூக்கிட்டு ஓடறேன்-ன்னு வையி! "சேச்சே! எனதில்லை! நாராயணனுடையது"-ன்னு சும்மா வுட்டுருவாங்களா? :)))

இம்புட்டு பேசறியே கேஆரெஸ்! இந்த மாதவிப் பந்தல் உனதில்லை-ன்னு சொல்லேன் பார்ப்போம்! விட்டுருவியா?
"நமோ! எனதில்லை மாதவிப் பந்தல்"-ன்னு பந்தலை, மதுரையம்பதி-மெளலி அண்ணா பேருக்கு எழுதி வையேன் பார்ப்போம்? :)

என்னாது? மெளலி அண்ணாவுக்கா? போங்கய்யா! குமரன், ஜீவா, ஜிரா-ன்னு எல்லாம் சொல்லலாம்-ல? கோவி கண்ணனுக்கு எழுதி வச்சாலும் வைப்பேன்! இல்லாங்காட்டி பதிவர் அம்பி-க்கு எழுதி வைச்சாலும் வைப்பேன்!
ஆனா மெளலி அண்ணாவுக்கு மட்டும் எழுதியே வைக்க மாட்டேன்! = ஓம் எனதில்லை மதுரையம்பதியுடையது! :)))

ஹிஹி! அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் எல்லாம், நம, நம-ன்னு சேர்த்துச் சேர்த்துச் சொல்லணும்? சும்மா கொஞ்ச நேரம் யோசிச்சிப் பார்த்தேன்! அட, விமானத்தில் விளக்கு அணைச்சிட்டாங்க! அதான்! :)

பொதுவா, எனக்குப் புரிபடாத எதையுமே பந்தலில் எழுத மாட்டேன்! சும்மா எங்கேயோ படிச்சிட்டு, யாரையோ திருப்திப்படுத்த, "அதை மட்டுமே ஏன் எழுதற, இதையும் தான் எழுதேன்?" - என்பதெல்லாம் நமக்கு ஒத்தே வராது! உணர்ந்து எழுதினா மட்டுமே பிடிக்கும்! அவ்ளோ தான்!

அதுனால, இந்த "ஓம் எனதில்லை"-ன்னு எழுத ரொம்ப சங்கடமா இருந்துச்சி!
பைசா பெறாத பந்தல் பதிவையே எனதில்லை-ன்னு சொல்ல கேஆரெஸ்-க்கு வக்கில்லை! இதுல என்ன பெருசா "ஓம் எனதில்லை"-க்கு நான் வந்து விளக்கம் கொடுக்கறது? :)
அப்போ நமஹ என்பது டுபாக்கூரா? எதுக்கு இப்படி மந்திரங்களில் நம, நம-ன்னு சொல்லணும்? - கொஞ்சம் போல யோசிக்க ஆரம்பிச்சேன்!



அலுவல் விஷயமா இந்த பிரேசில் பயணத்துக்குப் போனேன்-ல்ல? ரியோ டி ஜெனீரோ - Atlantic Copacabana ஹோட்டல்-ல மூனு நாள் தங்கி இருப்பேனா? ஒத்தை ஆளுக்கு அறையாகக் கொடுக்காமல், பெரிய Suite-ஆக கொடுத்திருந்தாய்ங்க! உம்...ஆனால் நெருக்கமான ஒரு மின்னஞ்சல் பார்த்துவிட்டு...எப்படா திரும்ப ஊருக்கு வருவோம்-ன்னு இருந்துச்சி!

அந்த மூனு நாளும் அந்த மாளிகை என்னுது தான்! அதுல மின்னுற மீன் தொட்டி, அலங்கார விளக்கு, வீடியோ கேம்ஸ், ஹோம் தியேட்டர்-ன்னு எல்லாமே என்னுது தான்! வேற எவனும் கை வைக்க முடியாது! ஆனா...?

* அந்த அலங்கார விளக்குக்கு ஏதோ ஒன்னு ஆயிரிச்சி, சரியா எரியாம அரையும் கொறையுமா எரியுது! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா?
* ஹோம் தியேட்டர்-ல கீறல் விழுந்துரிச்சி! ஐயோ-ன்னு மனசு அடிச்சிக்குதா? இதே நம்ம வீட்டுப் பொட்டிக்கு ஆகியிருந்தா???

வாடகைக்கு கொஞ்ச நாள் இருக்கப் போறோம்-ன்னு நல்லாத் தெரிஞ்சதால, அந்த அறையின் செல்வங்களை அனுபவித்தாலும், அதில் பாசம் பொத்துக்கிட்டு கொட்டலை!
அதுக்காக அறையில் அனுபவிக்காமலும் இருக்க முடியாது! :)
அதே சமயம், அறையில் ஓவர் ஒட்டுதலும் இல்லை!
இதோ இனி அந்த மீன் தொட்டியைக் கொஞ்சப் போவதில்லை! அதே போலத் தான் இந்த நமோ=எனதில்லை! :)

இப்போ சொல்லுங்க! நாம எல்லாருமே இங்கிட்டு வாடகை-க்கு இருக்கும் போது, ஓம்-நமோ-நாராயணாய = ஓம்-எனதில்லை-நாராயணனுடையது என்பது டுபாக்கூரா? :))


* ஓம் ந"ம" நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
* ஓம் ந"மோ" நாராயணாய = ஓம்! எனது "இல்லவே இல்லை"! நாராயணனுடையது!

அப்போ இத்தனையும் எனதில்லையா? = உனது தான்! ஆனால் உனதில்லை!
தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!

பொறந்த போது எப்படி வந்தாயோ, அப்படித் தான் பொசுங்கும் போது போகப் போகிறோம் என்றாலும் கூட...தாற்காலிகமாக, உலக வாழ்க்கைக்காக, உனக்கு எம்பெருமான் கொடுத்தது!
எனவே தாற்காலிகத்தை ஓவராக் கட்டிக் கொண்டு அழாமல்,
அவ்வப்போது, நம-நம-நம-ன்னு வாயால் ஆச்சும் சொல்லிக்கிட்டு இருந்தா...
அது ரொம்ப டார்ச்சர் கொடுக்காம நம்மள விட்டுரும்! :)


* உடல் (தேகம்) = பிரகிருதி (Matter)க்குச் சொந்தமானது!
* உயிர் (ஆத்மா) = பரமாத்மாவுக்குச் சொந்தமானது!
* அப்போ எனக்கு என்ன சொந்தம்? = "நான்" என்கிற "வெற்று" உணர்வு மட்டுமே சொந்தம்! :)))

பிருதா அகங்கரணம் பரம்! "நான்" என்ற அகங்காரம் மட்டும் தான் மீதி இருக்கு!!
அந்த "நான்" எம்பெருமானுக்கு உரியவன்!
நான் சேஷன்! எம்பெருமான் சேஷி
!

* "நான்" என்பது உடல் அல்ல! உடலும் அவருடையது! = அசித்து!
* "நான்" என்பது ஆத்மா/உயிர்! உயிரும் அவருடையது! = சித்து!
* இப்படி எதுவுமே என்னுடையது இல்லை! அவருடையது! = ஈச்வரன்!
இப்படி எல்லாமே அவருடையதாக இருக்க, "நான்" அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!

* நான் = "நானே" இல்லை!
* நான் = "அடியேன்"!


இராமானுசரின் சீடரான முதலியாண்டான் கொஞ்சம் சாதி அபிமானம் மிக்கவராக இருந்தாரு! கர்மப் பிடிப்பும் ஐயாவுக்கு ஜாஸ்தி! அவரைத் திருத்த எண்ணிய இராமானுசர், அவருக்குத் தாம் உபதேசிக்காமல், தன் ஸ்டிரிக்ட்டான குரு திருக்கோட்டியூர் நம்பியிடமே அனுப்பி வைத்தார்! அவரிடம் போன முதலியாண்டான்,
"*நான்* முதலியாண்டான் வந்திருக்கேன்" என்று சொல்ல...
நம்பியோ, "நான் செத்த பிறகு வாரும்" என்று சொல்லி விட்டார்!

உபதேசம்-ன்னு ஒரு பெரியவர் கிட்ட போனா இப்படியா? அவர் செத்த பிறகு எப்படி அவர் கிட்ட உபதேசம் பண்ணிக்கறது? "*நான்* செத்த பிறகு வாரும்"-ன்னு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாம சொல்றாரே என்று குழம்ப...
"நான்" என்ற சொல் செத்த பிறகு வாரும் - என்பது கொஞ்சம் லேட்டாகப் புரிந்தது! அடுத்த முறை, "அடியேன்" என்று சொல்ல, கதவு திறந்தது! :)

நான் = "நானே" இல்லை!
நான் = "அடியேன்"!

"இற்றைப் பறை" கொள்வாம் அன்று! காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், "உன்" தன்னோடு...


1. "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம்
அவனுக்கு உறவாக நான் இருக்கேன்! எனக்கு உறவாக அவன் இருக்கான்!

2. "நமோ" என்றால் என்னா-ன்னு பார்த்து விட்டோம்!
நமோ = எனதில்லை! நான் உட்பட எல்லாமே அவனுடையது!
எல்லாமே அவனுடையதாக இருக்க, இங்கே "நான்"-ன்னு அகம்பாவப் பட்டுக்க ஒன்னுமே இல்லை!

3. அப்போ, "நாராயணாய" என்றால் என்ன? (தொடரும்...)
Read more »

Friday, June 19, 2009

"ஓம் நமோ" என்றால் என்ன? - Part 4

வரிக்கு வரி "நமோ, நமோ"-ன்னு சொல்றாங்களே! ஏன்? ஒரே "நம நம"-ன்னு கை அரிக்கும் சில பேருக்கு! அந்த "நம நம" தான் "நமோ நமோ"-வா? :)
சென்ற தொடர் பதிவுகளில் "ஓம்" என்றால் என்னா-ன்னு பார்த்தோம்-ல? இன்னிக்கு "நமோ" என்றால் என்னான்னு பார்க்கலாம், வாரீயளா? சென்ற பதிவு இங்கே!

நாத விந்து கலாதி நமோ நம!
வேத மந்த்ர சொருபா நமோ நம!
ஞான பண்டித சாமீ நமோ நம!
-ன்னு ஒரு முழு அர்ச்சனையே செய்து முடிப்பார் அருணகிரியார்! பாட்டு முழுக்க "நமோ நம" தான்! எதுக்கு இத்தனை "நமோ நம"?

நம-ன்னா நமஸ்காரம் (அ) வணக்கம்-ன்னு சொல்லுவாய்ங்களே! எதுக்கு வரிக்கு வரி வணக்கம்? முருகன் என்ன அரசியல்வாதியா? அத்தனை முறை விழுந்து கும்பிடணுமா என்ன? அப்போ தான் என் பொடிப் பையன் அருள்வானா என்ன? :)



"நம" என்பதன் மேலோட்டமான பொருள் "வணக்கம்" என்பது தான்! நம = போற்றி!

ஓம் விநாயகாய நம!
ஓம் விக்னராஜாய நம!
ஓம் கெளரி புத்ராய நம!
ஓம் ஸ்கந்தா க்ரஜாய நம!
-ன்னு பிள்ளையார் கோயிலில் அர்ச்சனை நடக்கும்! சுண்டல் சாப்பிடும் போதாச்சும் கேட்டு இருப்பீங்க தானே? :)

ஆனால் "நம" என்றால் வெறுமனே "போற்றி" என்று மட்டும் பொருள் அல்ல!
ஒரு குறிப்பிட்ட தன்னலமான காரியத்துக்கு, நம்ம பேரைச் சொல்லி, அர்ச்சனை செய்யறோம்-ல? அப்போது சொல்லப்படும் "நம" என்பது வேண்டுமானால் "போற்றி"-ன்னு இருக்கலாம்! என் தோழி ஆண்டாளும் இந்த அர்ச்சனையைத் தமிழில் செய்து வைக்கிறாள்!

பூபாலக திரிவிக்ரமாய நம = அன்று இவ்வுலகம் அளந்தாய், அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நம = சென்றங்கு தென்னிலங்கை செற்றாய், திறல் போற்றி
என்று தமிழ் அர்ச்சனைக்கு வித்திட்டுச் செல்கிறாள்!

ஆனால் அரும்பெரும் மந்திரங்களை ஓதும் போது சொல்லும் "நம" என்பதற்கு, வெறுமனே "போற்றி" என்று பொருள் அல்ல!
நம = ந + ம = இல்லை + எனது!
* இங்கு எதுவுமே எனதில்லை என்பது தான் = ந+ம!
* எல்லாமே உனது என்பது தான் = ந+ம!


அட! என்னாங்க இது அநியாயமா இருக்கே? ஓம் நமோ நாராயணாய-ன்னு சொல்லச் சொன்னாய்ங்க! "எனக்கு" நல்லது நடக்கும்-ன்னு தானே அப்படிச் சொல்லச் சொன்னாய்ங்க?
இப்போ திடீர்-ன்னு வந்து, "எனதில்லை! எனதில்லை"-ன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன விளையாட்டா? இந்த இருவது ரூவா அர்ச்சனைத் தட்டு கூட "எனது" தானே! "என்" காசில் தானே வாங்கினேன்? அப்பறம் "எனதில்லை"-ன்னா எப்படி? போங்கய்யா, நல்ல போங்கா இருக்கே! :))


அதுக்கும் முன்னாடி, இன்னொன்னும் பார்த்திடுவோம்!
சென்ற பதிவில், எல்லா மந்திரத்துக்கும் முன்னாடி, "ஓம் ஓம்"-ன்னு சேர்த்துச் சேர்த்து சொல்றாங்களே? அது ஏன்?-ன்னு கேட்டோம்-ல? எதுக்கு "ஓம்" என்கிற முன்னொட்டு (Prefix)?

பிரணவம் (எ) ஓங்காரம் சேரும் போது தான், மந்திரம் முழுமை அடைகிறது! இல்லீன்னா முழுமை அடையாது!
ஓம் + நம சிவாய! ஓம் + சரவண பவ!
இப்படி எல்லாத்தோடவும் "ஓம்" சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! பூரணத்துவம் பெறும்!

ஓங்காரம் சேர்க்கும் போது மட்டுமே, நமக்கும்-இறைவனுக்குமான உறவு, அந்த மந்திரத்தில் ஏறுகிறது!
நம சிவாய என்று சொல்லும் போது, அவன் பேரை மட்டுமே சொல்கிறோம்! அது நாம சங்கீர்த்தனம்! திருப்பெயர்த் துதி!
ஆனால் பேரைப் பாடும் அதே நேரத்தில், அவனுக்கும் நமக்குமான உறவை கெட்டிப் படுத்திக் கொள்ள வேணாமா?

* ஓம் = அ + உ + ம் = அவன்->உறவு->நாம் -ன்னு சென்ற பதிவுகளில் பார்த்தோம்!
* ஓம் = எனக்கு நீ, உனக்கு நான் என்கிற உறவு!
* இந்த உறவை, அவன் பேரோடு சேர்த்துச் சொல்லும் போதே, நாமும்-அவனும் இன்னும் இறுகுகிறோம்!

எங்கம்மாவை ஜோதீஸ்வரி-ன்னு எல்லாரும் கூப்பிடுவாங்க! நான் கூட செல்லமா ஜோதீ-ன்னு தான் கூப்பிடுவேன்! :)
ஆனா உறவு? = அம்மா-ன்னு கூப்பிடும் போது தானே?
ஜோதி-ன்னு கூப்பிட்டாலும், "அம்மா"-ன்னு கூப்பிடும் போது எப்படி உறவு குழைந்து கெட்டிப் படுகிறதோ, அதே போல்,
சங்கரா, சிவா, நமசிவாய-ன்னு கூப்பிட்டாலும், "ஓம்" என்று சேர்க்கும் போதே உறவு கெட்டிப் படுகிறது! புரிகிறதா? :)


* திரு ஐந்தெழுத்து என்னும் பஞ்சாட்சரம் = ந + ம + சி + வா + ய
* திரு ஆறெழுத்து என்னும் சடாட்சரம் = ச + ர + வ + ண + ப + வ
அப்பாவை விட புள்ளைக்கு ஒரு எழுத்து கூட! ஒரு படி பெருமையும் கூட! :)

இந்த மந்திரங்களோடே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கணும்! அப்போ தான் முழுமை அடையும்! ஆனால் ஒரே ஒரு மந்திரத்துக்கு மட்டுமே, இப்படி "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்க வேண்டிய அவசியமே இல்லை!
அந்த மந்திரத்துக்குள்ளேயே பிரிக்க முடியாதபடி, ஒன்னா ஒட்டிக்கிட்டு இருக்கு! அது என்னா மந்திரம்-ங்க?

ஓம் + ந மோ + நா ரா ய ணா ய
திரு எட்டெழுத்து, அஷ்டாட்சரம் என்று சொல்லப்படும் இந்த மந்திரத்துக்கு மட்டும் தான் இப்படி பிரிக்க முடியாத உறவு!

ஓம் + ந மோ + நா ரா ய ணா ய

(1)----(2)--(3)----(4)--(5)--(6)--(7)--(8)
என்பதில் ஓம்-ஐ தனியாக் கழட்டி விட்டு எண்ணிப் பாருங்க! Count & See?
எட்டெழுத்து என்பது போய், ஏழு எழுத்து-ன்னு ஆயிரும்! :)
அஷ்டாட்சரம் என்பது தானே மந்திரம்? சப்தாட்சரம்-ன்னு யாராச்சும் சொல்லுவாங்களா? :)

ஆக, ஓங்காரத்தை, அஷ்டாட்சரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது! பொருளே போயிரும்!
ஓங்காரம் உள்ளேயே இருப்பதால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி! Or else meaningless!

ஆனா மற்ற மந்திரங்களுக்கு இப்படி இல்லை!
* ச ர வ ண ப வ = 6! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவாறெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!
* ந ம சி வா ய = 5! இதில் "ஓம்" வெளியில் இருந்து தான் சேர்க்கணும்! திருவைந்தெழுத்தில் இயற்கையாக "ஓம்" என்பது இல்லை!

ஆனால் திரு எட்டெழுத்தில் மட்டுமே, "ஓம்" என்பதை வெளியில் இருந்து சேர்க்கத் தேவையில்லாத படிக்கு, மந்திரத்தோடே ஒட்டி உறவாடுகிறது! இயற்கையாகவே ஓங்காரம் என்னும் DNA அமைந்து விட்டது!
அதான், "உன்றன்னோடு-உறவேல்-நமக்கு" என்று DNA மகத்துவம் காட்டுகிறாள் கோதை! அந்த DNA-வை "ஒழிக்க ஒழியாது" என்றும் பாடுகிறாள்!

முப்பத்து மூவர் அமரர்க்கு, முன் சென்று, கப்பம் தவிர்க்கும் கலியே என்று இதன் தாத்பர்யம்!
அதாச்சும் நமக்கு ஒரு ஆபத்து-ன்னா யார் "முன்னாடி" ஓடி வருவாய்ங்க? = அம்மா தானே? "உறவு" தானே?

ஏதோ யாகம், ஹோமம்-ன்னு பண்ணின புண்ணியத்துக்கு அந்தந்த அதி தேவதைகள், அக்னி, இந்திரன்-ன்னு வந்து யக்ஞ பலன் கொடுக்கலாம்!
ஆனா முப்பத்து மூவரும் வருவதுக்கு முன்னாடியே, "முன் சென்று", கப்பம் தவிர்ப்பது எது? = கலி (ஒலி)! = ஓம் + ந மோ + நா ரா ய ணா ய!


குறிப்பு:
இதனால் "நம சிவாய, சரவண பவ என்னும் மந்திரங்களுக்கு எல்லாம் ஓங்கார உள்ளுறை இல்லை! அதனால் ஒரு படி கம்மி!" என்று ஒரு சிலர் வழக்கம் போல தப்பர்த்தம் எடுத்துக்க கூடாது! எப்பமே கணக்கு போட்டு, ஆன்மீகம் பண்ணும் மனப் போக்கு உள்ளவர்கள் தான் இப்படி எடுத்துக்கிடுவாங்க! :))
அந்தந்த மந்திரத்துக்கு அந்தந்த பெருமையும் மகிமையும் கட்டாயம் உண்டு!
"ஓங்காரம் என்னும் பிரிக்க முடியாத உறவைக் காட்ட வந்த மந்திரம் = திரு எட்டெழுத்து" என்று மட்டுமே கொள்ள வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!

* "ஓம்" என்று சொல்லி, அவன்-நாம் உறவை இறுக்கிக் கொண்டாகி விட்டது!
* "நமோ" என்று சொன்னால், "எனது இல்லை" என்று வருகிறதே! = அப்படின்னா எது எனதில்லை? எது என்னுடையது?

வாட்? எது உனதா? ஆசை-தோசை! :)
உடலோ பிரகருதிக்கு (matter) சொந்தமானது! பஞ்ச பூதமாகி விடும்!
ஜீவனோ இறைவனுக்குச் சொந்தமானது!
உடம்பும், உயிருமாத் தானே இருக்கே? உடம்பு பிரகருதிக்குச் சொந்தமான பொருள்! ஜீவன் பரமாத்மாவுக்குச் சொந்தமான பொருள்! அப்போ எனக்கு???

உடம்பும், உயிரும் தவிர்த்து மீதி என்ன இருக்கோ, அதான் உனக்குச் சொந்தம்!

மீதி என்ன இருக்கு? = பிருதா அகங்கரணம் பரம்!
தான் என்ற நினைப்பு = அகங்காரம் தான் மீதி இருக்கு! அது மட்டும் தான் உனக்குச் சொந்தம்! :)

எல்லாம் அற என்னை "இழந்த" நலம், சொல்லாய் முருகா! சுர பூபதியே!
உடம்பும் உன்னுது கிடையாது! உயிரும் உன்னுது கிடையாது! மீதி இருக்குற "தான் என்கிற உணர்வு மட்டுமே உனக்குச் சொந்தம்! So,"ந + மோ" என்றால் என்ன?.....(தொடரும்)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP