Wednesday, August 15, 2007

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்! அறுபதாண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன தான் சர்ச்சை என்று பார்க்கலாம் வாங்க!
அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!

அதற்கு முன் நீங்கள் எல்லாரும், சர்வேசன் கேட்டபடி பாடி விட்டீர்களா?
பாடவில்லை என்றால், மனசுக்குள்ளவாச்சும் ஒரு முறை பாடிப் பாருங்களேன்! இதோ உதவிக்கு ராணுவத்தின் இசை முழக்கம். 52 விநாடிகள்!



தாகூர் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களுக்குச் சொந்தக்காரர்!
உலகில் வேறு எவர்க்கும் இந்தப் பெருமை உள்ளதா என்று தெரியவில்லை!
ஒன்று, நம் இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கன மன
இரண்டு, பங்க்ளாதேஷ் எனும் வங்காள தேசத்தின் கீதம் - அமர் ஷோனார் பாங்க்ளா

யாருக்கும் ரவீந்தரநாத தாகூரின் கவித்துவத்தின் மீதோ, தேச பக்தியின் மீதோ ஐயம் கிடையாது!
ஜாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டித்து, தமக்குக் கொடுக்கப்பட்ட சர் பட்டத்தை உதறி எறிந்தவர் தான் தாகூர்.
தாகூரின் சாந்தி நிகேதன் பலகலைக் கழகத்துக்கு, அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட்டது தான் ஆங்கிலேய அரசு!
பின் ஏன் இந்த சர்ச்சை? இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரம் அப்படி!

Dec 1911-இல் இது எழுதப்பட்டது! இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட பாடல் ஜன கன மன!
அந்த நேரம் தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் கூட! அந்தக் காலக்கட்டத்தில் இருந்த காங்கிரசின் நிலை வேறு! பூர்ண சுதந்திரம் எல்லாம் அப்போது கிடையாது! அப்போது தான் வங்காளப் பிரிவினையை (Partition of Bengal), காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் வாங்கயிருந்த நேரம்!

அப்போது தான் கல்கத்தாவில் (கொல்கத்தாவில்) காங்கிரசின் மாநாடு நடந்தது! Dec 27, 1911 அன்று இரண்டாம் நாள் கூட்டத்தில் இந்த ஜன கன மன பாடல் துவக்க வணக்கமாகப் பாடப்பட்டது.
அந்த நாளில், ஜார்ஜ் மன்னரையும் அரசியையும் வரவேற்று, வரவேற்புப் பத்திரம் வாசித்தார்கள்! வங்காளப் பிரிவினையின் வாபசுக்கு நன்றி தெரிவித்தார்கள்! கூடவே ராம்புஜ் சவுத்தரி என்பவர் மன்னரை வரவேற்றுப் பாடிய ஹிந்திப் பாடலையும் பாடினார்கள். போதாதா?
பனை மரத்தின் கீழே நின்று பாலையே குடித்தாலும்...கள் என்று சொல்வார்களே...அந்தக் கதை ஆகி விட்டது!

அன்றைய ஆங்கில அரசுப் பத்திரிகைகள் ஸ்டேட்ஸ்மேன், இங்க்லீஷ் மேன் போன்றவை, இந்த நிகழ்ச்சியைக் கவர் செய்யும் போது, ஏதோ மன்னர் ஜார்ஜை வரவேற்க, பிரத்யேகமாக எழுதிப் பாடப்பட்ட பாடல் என்று நினைத்து எழுதி விட்டன. வங்காள மொழி என்று கூடத் தெரியாமல், சில பத்திரிகைகள் இதை ஹிந்திப் பாடல் என்று கூட எழுதின. இதை அறிந்து தாகூரே அப்போது வருத்தப்பட்டார்.



ஒரு பாடலைப் பற்றிப் பலர் விமர்சிக்கலாம்.
ஆனால் அதன் அடி நாதத்தில், யாரை வைத்துப் பாடப்பட்டது என்பது, அதனை ஆக்கிய கவிஞனின் மனசாட்சிக்குத் தான் முதலில் தெரியும். எனவே தாகூரின் மனநிலை என்ன என்பதையும் நாம் முதலில் படிக்க வேண்டும்!

ஜன கன மன, அதி நாயக = மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்யும் நாயக...அவர்கள் வாழ்வையும் விதியையும் நிர்ணயிக்கும் பாக்ய விதாதா....என்று மக்கள் மனங்களில் ஆட்சி செய்வதாக, எந்த ஒரு மானிட அரசனையும் பாடியதாக இல்லை.

அரசனையும் அரசியையும் சேர்த்தே தான் எல்லா இடத்திலும் வரவேற்றார்கள். ஆனால் இங்கோ பாடலில் அரசியைப் பற்றிய குறிப்பே இல்லை!
நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்தி தான். மொத்தம் ஐந்து பத்திகள் தாகூர் எழுதினார்!
மூன்றாம் செய்யுளில் இறைவனை நேரிடையாகவே சொற்களால் குறிக்கிறார் தாகூர்! கடவுளைச் சாரதியாகக் கொண்டு, காலங்காலமாக ஓடும் நாடு என்னும் தேர் - அதன் வீழ்ச்சியும் எழுச்சியும் பற்றிப் பேசுகிறார்.

ஆங்கிலக் கவிஞர் யீட்ஸ் (Yeats) பின்னாளில் தன் பெண் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜன கன மன ஆக்கப்பட்டதின் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். இது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழிலும் வெளிவந்தது!
"அன்று அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட தாகூர், அருமையான பாடல் ஒன்றை இயற்றினார்.
இறைவனை நோக்கி எழுதப்பட்ட பாடல் இது. காங்கிரசாரிடம் கொடுங்கள். மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று தாகூர் சொன்னார்".
இதைக் கேட்ட நண்பர் ஒருவர், யீட்ஸ்-இடம் இந்தத் தகவலைச் சொன்னதை பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள்!
ஆனால், குற்றக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கி விட்ட பின், மனதுக்குச் சமாதானம் ஆவது? ஒன்றாவது!

கேட்வே ஆப் இந்தியா (Gateway of India) என்ற இந்தியாவின் நுழைவாயில், மும்பையில் உள்ளது.
இது ஜார்ஜ் மன்னரையும், மேரி அரசியையும் வரவேற்கக் கட்டப்பட்டது தான்! அந்த வாயிலில் அவ்வாறே எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு இருக்கும்!
"Erected to commemorate the landing in India of their Imperial Majesties King George V and Queen Mary on the Second of December MCMXI"
இதைப் போய், எப்படி "இந்தியாவின் நுழைவாயில்" என்று சொல்லலாம்? என்று பேசிக் கொண்டா இருக்கிறோம்?

1911-இல் பாடப்பட்டாலும், இதற்கு இசை அமைக்கப்பட்டது என்னவோ 1918-இல் தான்!
தாகூரும், ஆந்திரா-மதனப்பள்ளியில் உள்ள தியோசாபிகல் கல்லூரி தம்பதிகள் - ஜேம்ஸ் எச் கசின் (James H Cousin) இருவரும், சேர்ந்து தான் பாடலுக்குப் பண் அமைத்தார்கள் (Notation)! அதற்குப் பின்னர் தான் பாடல் பெரும் ஹிட் ஆனது!
சுருக்கமான அதே சமயம் கம்பீரமான இசை கொண்ட பாடல் என்பதால் மேலும் பிரபலமானது. ஜெயஹே ஜெயஹே என்பது இன்னும் தூக்கிக் கொடுத்தது.

நேதாஜியின் இந்திய தேசியப் படை (INA), இதைத் தனது கீதமாகக் கொண்டது!
1946-இல் காந்தியடிகளும் ஜன கன மன, துதிப்பாடல்களைப் போல தேசியத்துடன் இணைந்த பாடலாக ஆகி விட்டது என்று கூறி மகிழ்ந்தார்.


Capt Ram Singh Thakur playing the National Anthem
in the presence of Mahatma Gandhi.




அதே நேரம், பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் எழுதிய வந்தே மாதரம் பாடலும் நல்ல ஹிட்! தாகூரே இந்தப் பாடலை வரவேற்று பல இடங்களில் பேசியுள்ளார்.
ஆனால் அதில் மதம் குறித்த சில வெளிப்படையான சொற்கள் இருப்பதால், தேசிய கீதமாக அதை ஆக்கக் கூடாது என்று சில தேசியவாதிகள் பிரச்சனை எழுப்பினார்கள்.
இதனால் வலதுசாரி தேசபக்தர்கள் சிலரும், எதையோ எதிர்க்கப் போய், தாகூரின் கீதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது தான் பரிதாபம்!

மேலும் Band வாத்தியத்தில் வந்தே மாதரம் இசைப்பது சற்றே கடினம்.
Band இசை என்பது ராணுவத்துக்கு மிகவும் தேவையான ஒன்று! நாட்டின் கீதத்தை உள்நாடு, வெளிநாடு என்று பல இடங்களில், Band-இல் வாசிப்பது இன்றியமையாத வழக்கம்!

கவிஞர் இக்பாலின் சாரே ஜஹான் ஸே அச்சா என்ற அருமையான பாடலும் போட்டியில் இருந்தது. அது சற்றுப் பெரிய பாடல். ஆனால் இசையோ அமர்க்களம்!

சுதந்திரம் பெற்ற பின், இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), தேசிய கீதத்தை முடிவு செய்தது!
இதோ சபை விவாதங்களின் சுட்டி!
ஜன கன மன தேசிய கீதமாக உதித்தது!
அதே சமயம், வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தின் ஆத்ம நாதம் - எனவே இது தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டு, தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு அளிக்கப்பட்டது!

இன்று உலகின் பல இசைக்கருவிகளில் நம் தேசிய கீதத்தை இசைக்க இயலும்! அதுவும் Band இசை! அதில் வெளுத்த வாங்க நம் தேசிய கீதத்தை மிஞ்ச எந்த கீதத்தாலும் முடியாது!
அமெரிக்க கடற்படை (US Naval Band) நம் கீதத்தை வாசிப்பதை இங்கு கேளுங்கள்!


2005இல், தேசிய கீதத்தில் இன்னொரு புதிய சர்ச்சை முளைத்தது.
சிந்து என்று கீதத்தில் வருகிறதே! அது இப்போது பாகிஸ்தானில் அல்லவா உள்ளது? அதைப் போய் நாம் எப்படிப் போற்றிப் பாட முடியும்?
"சிந்துவை" எடுத்து விட்டு, "காஷ்மீரம்" என்ற சொல்லைப் போட்டு விடுங்கள் என்று வாதிட்டார்கள்!

உச்ச நீதிமன்றம் வழக்கைக் கேட்டு விட்டு,
சிந்து என்பது கலாச்சாரம், பண்பாடு, மக்கள் ஆகிய இவற்றைத் தான் குறிக்கும்.
வெறும் பல ஆயிரம் ஏக்கர்கள் கொண்ட மண்ணை மட்டும் அல்ல!
சிந்து நதியும், சிந்தி மக்களும் இந்தியக் கலாச்சாரத்தில், பெரும் பங்கு வகிப்பவை!
எனவே தேசிய கீதத்தைத் துளியும் மாற்றத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளித்தது!


ஒரு பாடலின் ஆத்மா-வைப் பார்ப்பதை நாம் அனைவரும் கொஞ்சம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

அதில் வரும் வார்த்தைகளையோ, இல்லை கால கட்டத்தையோ "மட்டும்" பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை!

வரும் தலைமுறையை, அது எப்படி உற்சாகப்படுத்தும் என்ற சிந்தனை இங்கு மிகவும் முக்கியம்! அப்படி எல்லாம் பார்த்தால்,
ஜன கன மன அதி நாயக - மக்களின் மனங்களில் அதி நாயகமாக, என்றென்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டு தான் இருக்கும்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே!!!



சில சுட்டிகள்:
தேசிய கீதம் - தமிழில், பொருளுடன்! நண்பர் குமரன், முன்னொரு முறை இட்ட இடுகை
வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

வெள்ளைக்கார பெண்ணொருத்தி, சொல் ஒரு சொல்லாய், சொல்லிக் கொடுக்கும் ஜன கன மன!


சியாச்சென் (Siachen) பனிப்பாறைகளில் - ஜன கன மன முழக்கம்!


ஜன கன மன - பல வாத்தியங்களில் முழக்கம்!


References:
Meaning of the National Anthem at Nation Portal of India, Government of India.
http://india.gov.in/knowindia/national_anthem.php


Are we still singing for the Empire? - by Pradip Kumar Datta
http://www.sacw.net/DC/CommunalismCollection/ArticlesArchive/pkDatta092004.html

How the anthem was set to music? - An article from The Hindu -
http://www.hindu.com/mag/2006/03/19/stories/2006031900120400.htm

Tagore's undying allegiance to India & Jana Gana Mana
http://homepages.udayton.edu/~chattemr/janaganamana.html

Capt Ram Singh Thakur playing the National Anthem in the presence of Mahatma Gandhi.
http://www.tribuneindia.com/2002/20020504/windows/main2.htm
Read more »

பூரம்2: கோவிலில், காதலியின் மடியில் காதலன்!

வாங்க இன்னிக்கி வில்லிபுத்தூருக்குப் போயி ஊர் சுத்தலாம்! அப்படியே காதலியின் மடியில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து விட்டு வரலாம்!
மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டு-ல இருந்து மருதைக்காரய்ங்க பஸ் ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க! மதுரையில் இருந்து ட்ரெய்னில் விருதுநகருக்கு போயி, அங்கிருந்தும் வில்லிபுத்தூருக்கு வரலாம்-ல!

இன்று திருவாடிப் பூரம்!
ஆண்டாள் அவதார தினம்! (இந்த ஆண்டு, Aug 15, 2007)
Happy Birthday Kothai! அடியே கோதை, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அவள் பிறந்த நாள் அன்னிக்கி, ஊரே ஒரே கோலாகலம்! பெரிய தேரு வேற! விதம் விதமா விழா!
* ஐந்து கருட சேவை
* மடித்தல சேவை
* புஷ்ப பல்லக்கு
* ஆண்டாள் திருத்தேர்
* முத்துக்குறி் உற்சவம்...

இப்படிப் பல கொண்டாட்டங்கள்...
வாங்க மண் வாசனையோடு, ஜாலியா ஊர் சுத்தலாம்! இந்தப் பதிவில் விளக்கங்கள் எல்லாம் அவ்வளவா கிடையாது...
வில்லிபுத்தூரும், விழாவும், விதம் விதமான படங்களும் தான்!

வில்லிபுத்தூர் கோபுரம் - தமிழக அரசு முத்திரை



கி.பி. 716 - நள வருடம் - ஆடி மாதம் - எட்டாம் நாள் - சுக்ல பட்சம் - பஞ்சமி திதி - செவ்வாய்க் கிழமை - பூர நட்சத்திரம் - துலா லக்னம்
ஆண்டாள் ஐந்து வயதுக் குழந்தையாய், பூமித் தாயின் அம்சமாய்,
பட்டர் பிரான் கண்டெடுக்க, திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள்!

அப்படி என்ன, அவளை எல்லாரும் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுறாங்க?
பெரியாழ்வார் பொண்ணு என்பதாலா? - இல்லை!
பேரழகி என்பதாலா? - இல்லை!
காதல் கவிதைகளில் வித்தகி என்பதாலா? - இல்லை?
பெரிய பெருமாளையே மணந்து கொண்டதாலா? - இல்லை! இல்லை! இல்லை! பின்ன எதுக்கு அவளுக்கு மட்டும் இவ்வளவு பெருமை?

மேலே சொன்னது எல்லாம் அவரவர் தன்னலம். அவரவர் சொந்தப் பெருமை. அவ்வளவு தான். வெறும் காதல் கவி சொல்லவா ஆண்டாள் வந்தாள்?
ஆன்மீகத்தின் கடமை என்ன? அது உலகத்து மக்களுக்கு என்னவெல்லாம் செய்யணும்?

பாதகங்கள் தீர்க்கணும் - தீர்த்த பின்,
பரமன் அடி காட்டணும் - காட்டிய பின்,
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - காட்டிய திருவடியை என்றும் இடையறாது பற்றிக் கொள்ள, வேதத்தைக் காட்டி உதவி செய்யணும்!
இந்த மூன்றையுமே செய்தது கோதைத் தமிழ்! அதான் அவளுக்கு அவ்வளவு பெருமை!

பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும்,
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைத் தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

பெருமான் கீதையில் விரித்து விரித்துக் கஷ்டப்பட்டுச் சொன்னதை எல்லாம் இவள், முப்பதே பாட்டில் நமக்குக் காட்டிக் கொடுத்து விட்டாளே! அதுவும் எளிய, இனிய, புரியும் தமிழில்!
அவன் தன்னைத் தானே வணங்குமாறு எல்லாரையும் அழைத்தான் - யாரும் வரவில்லை!
அவள் அந்தக் காதலனை வணங்குமாறு எல்லாரையும் அழைத்தாள் - அனைவரும் வந்தார்கள்!
ஆதலால், கீதையா, கோதையா என்றால், கோதையே சிறப்பு! :-)

நடையலங்காரம்

ஜடையலங்காரம்


கோதை பிறந்த ஒரே காரணத்துக்காக, கோவிந்தனே வந்து வாழும் ஊர் ஆகி விட்டது, வில்லிபுத்தூர்!
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்...


மொத்தம் ஒன்பது நாள் ஆடிப்பூர உற்சவம்.
வழக்கம் போல் கொடி ஏற்றம், சேனை முதலியார் புறப்பாட்டுடன் தொடங்குகிறது விழா! ஐந்தாம் நாள் விழா மிகவும் சிறப்பு!
ஏன் என்றால் ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையைக் காணலாம்!
பெரியபெருமாள் என்னும் வடபத்திரசாயீ
ரங்கமன்னார்
சுந்தரராஜப் பெருமாள்
ஸ்ரீநிவாசப் பெருமாள்
திருத்தங்கல் அப்பன்...ஆகிய ஐந்து பெருமாள்களும் தத்தம் கருட வாகனத்தில் ஒரு சேரக் காட்சி!

ஏழாம் நாள் - இந்த நாள் ஒரே ரொமாண்டிக் நாள் :-)
ஏன் என்று கேட்கிறீர்களா?
எத்தனை பேர் காதலியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கீங்க? கூச்சப்படாம சொல்லுங்க பார்ப்போம்! அப்படிப் படுத்துக் கொண்டே என்னவெல்லாம் காதல் கதைகள் பேசுவீங்க? என்னவெல்லாம் சீண்டி விளையாடுவீங்க? நீங்களே பாருங்க இந்த உலக மகா ஜோடியை!

மடி மீது தலை வைத்து, விடியும் வரை...தூங்குவோம்!

ரயில்வே ஸ்டேஷன் (தொடர்வண்டி நிலையம்) அருகில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாளும் ரங்கமன்னாரும் எழுந்தருளி, இப்படி மடித்தல சேவை (சயன சேவை) சாதிக்கிறார்கள்!

ஒன்பதாம் நாள் (ஆடிப்பூரம் அன்று) திருத்தேர்! இது மிகவும் பெரிய தேர்! ஆயிரம் சிற்பங்கள் கொண்டது! எட்டுச் சக்கரம், ஐந்து அடுக்கு, 81 தூண்கள் கொண்ட தேர்!

பத்தாம் நாள் - விழாவின் ஹைலைட் - Dance Drama - அரையர் சேவை!
முத்துக்குறி உற்சவம் என்பார்கள் இதை. சிங்கம்மாள் குறடு என்ற ஒரு இடத்தில் தான் இது நடக்கும்!
தலைவியின் அம்மா, தன் பெண், பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று ஏக்கப்படுவாங்க! அடே இரக்கம் இல்லாத பெருமாளே-ன்னு காய்வாய்ங்க.

வாணுதல் இம் மடவரல், உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரந்தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம் இல்லீரே.


பின்னர், காட்டுவிச்சி என்னும் குறத்தி வந்து முத்துக்குறி சொல்லுவா. அது இன்னா முத்துக்குறி? முறத்தில் முத்தைப் பரப்பி, பாடிக்கிட்டே, எண்ணி என்ணிக் குறி சொல்லுவா!
மாலையில் தொடங்கி இரவெல்லாம் விடிய விடிய நடக்கும்!

பின்னிய கூந்தல் கருநிற நாகம்..

தட்டொளி-கண்ணாடி சேவை


சவுரித் திருமஞ்சனம்

அரையர்களே, தங்களை அலங்கரித்துக் கொண்டு, தாளங்கள் தட்டி, தமிழ்ப் பாசுரங்கள் இடையே முழங்க, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்!
இதுக்குன்னே ஆண்டாள் போட்டு வரும் ஆடை என்ன தெரியுமா? நீங்களே பாருங்க! (இந்தக் காலச் சுடிதார் போல ஒரு உடை :-)



ஆண்டாளுக்குச் சார்த்தப்படும் மாலையோடு, ஒரு பொம்மைக் கிளியும் சார்த்தப்படுகிறது. இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவல்லிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;
இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி.

நாமும் அந்தக் கிளியாய், அவள் தோளில் என்றும் தங்கி, கோதைத் தமிழ் பேட்போம்!
வில்லிபுத்தூர் விழா பார்த்து முடிச்சாச்சு! பேக் டு மதுரை! எல்லாரும் வண்டியில் ஏறி உட்காருங்க!

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து,
ஆழ்வார் திருமகளா ராய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

(திருமஞ்சனப் படங்களுக்கு மிகவும் நன்றி: adiyen b_senthil)

Read more »

Thursday, August 09, 2007

பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை!

ஆசை, தோசை, அப்பளம், வடை என்று குழந்தைகள் விளையாடும் போது சொல்வதைக் கேட்டுள்ளீர்களா? சில சமயம் பெரியவங்க கூட ஆசை தோசை என்பார்கள்! ஏன்? ஆசைக்கும் தோசைக்கு என்ன கனெக்சன்?
சரி, அதெல்லாம் விடுங்க.
இங்கே எத்தனைப் பதிவர்கள், தங்கச்சி ஆசைப்பட்டுக் கேக்க, ஒரு அண்ணனாய் நீங்க வாங்கிக் கொடுத்திருக்கீங்க?
வாங்கிக் கொடுத்தீங்களா,இல்லை நல்லா ஓங்கிக் கொடுத்தீங்களா?:-)

பாசமலர் சிவாஜி-சாவித்திரி, "தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாட்டு பாடும் டி.ராஜேந்தர் லெவலுக்கு எல்லாம் நீங்க இறங்கி யோசிக்க வேண்டாம்! தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்திருக்கீங்களா? இல்லையா??
நீங்க பேச்சிலர்-னா, சும்மா, கூச்சப்படாமச் சொல்லுங்க!
கல்யாணம் ஆகியிருந்தா, சும்மா, பயப்படாமச் சொல்லுங்க! :-)

ஆனா இன்னிக்கி நாம பாக்கப் போற கதை, கொஞ்சம் வித்தியாசமானது!
தங்கையோ எட்டாம் நூற்றாண்டு!
அண்ணனோ பதினோராம் நூற்றாண்டு!

ச்சே....இது எப்படிச் சாத்தியம்? அச்சோ....என்னை அடிக்க வாரீங்களா?
வ.வா.ச-வில் எழுதுவதால், இங்கேயும் கலாய்க்கத் தொடங்கி விட்டேன் என்று கும்ம வரீங்களா? பொறுமை! பொறுமை! மேலே படியுங்கள்!


அவள் ஒரு தங்கை - மாலை இட்ட மங்கை - நளினம் கொஞ்சும் நற்குண நங்கை! பாண்டி நாட்டாள் - தமிழ்ப் பாட்டாள்!
காதல் கவிதைகள் புனைவதில் அவளை மிஞ்ச உலகில் யாரும் கிடையாது!
அவளுக்கு அப்பா மட்டும் தான். அம்மா இருந்திருந்தால் அவள் வயதுக்குப் பல விஷயம் பேசி இருப்பாள். ஆனா அதுக்காக மனசுக்குப் பூட்டு போட்டு வைக்க முடியுமா?...அதுவும் கவிதைகள் ஊற்றெடுக்கும் கங்கை உள்ளத்துக்கு?

அவள், தன் மனதை, ஒரு மன்னனுக்குப் பறிகொடுத்தாள்.
அவனோ குழல் அழகன், கண் அழகன், வாய் அழகன்,
கொப்பூழில் எழு கமலப் பூ அழகன்! தன்னை அன்பால் நாடி வந்த எவரையும், எந்தப் பேதமும் காணாது காப்பவன்!
ஆனால் அவனை அடைவது என்னமோ அவ்வளவு சுலபமான விஷயமாகத் தெரியவில்லை! கழுவும் மீனில் நழுவும் மீன் என்பார்களே! அது போல!

பாடி ஆகி விட்டது, மாலை சூடி ஆகி விட்டது!
தூதும் விட்டு விட்டாள், நோன்பும் நோற்று விட்டாள்!
ஹூஹூம்....ஒன்றுமே நடக்க வில்லை! தந்தையின் உதவியும் அவளுக்குப் பெரிதாக உதவவில்லை! எல்லாம் காதல் படுத்தும் பாடு!
அவன் வியர்வையிலும், எச்சிலிலும் கூடத் துளசி மணமே தெரிந்தது அந்தப் பேதைப் பெண்ணுக்கு!

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை அல்லவா? காதலுக்கும் தெய்வம் தானே துணை! ஓ...அதனால் தான் கோவில்களில் இப்போதெல்லாம் அதிக அளவில் இளைஞர், இளைஞி கூட்டங்களோ? கற்பூர ஜோதிக்குப் பதில் காதல் ஜோதிகளோ? :-))


மதுரைக்கு அருகில் உள்ள ஊர், திருமால் இருஞ் சோலை; அழகர் கோவில்-னு சொன்னா இன்னும் நல்லாத் தெரியும்! ஏற்கனவே காதலில் வெற்றி பெற்ற முருகன் கூட அங்கு தான் இருக்கிறான்! சரியான இடம் தான் மருதகாரய்ங்களுக்கு!
அங்கு தோசைப் பிரசாதம் மிகப் பிரபலம்!
அங்கு ஆசைப் பிரசாதம் பெற, வேண்டிக் கொள்கிறாள் இந்தப் பேதை!

"கள்ளழகரே, கள்ளழகரே! என் காதலைக் கனிவித்துக் கொடு!
உனக்கு நூறு தடா சர்க்கரைப் பொங்கலும், நூறு தடா வெண்ணையும் நேர்ந்து விடுகிறேன்!
(தடா என்றால் பாத்திரம் என்று அர்த்தம்...நீங்க அரசியல் பற்றியெல்லாம் ஏதும் தப்பா நினைச்சிக்காதீங்க :-)
நீ உண்ட பின், அதை உன் அடியவர்கள் எல்லாம் உண்டு, சேஷமாக வாழட்டும், சேமமாக வாழட்டும்! "
நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்
சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங் கொலோ

(- நாச்சியார் திருமொழி)

வெண்ணெய், அதை உருக்கி நெய், அதையே ஊற்றி அக்கார அடிசில்! - என்ன சாமர்த்தியமான வேண்டுதல் பாருங்க :-)
அக்காரம்=சர்க்கரை; அடிசில்=சோறு/பொங்கல்;
அக்கார அடிசில் = சர்க்கரைப் பொங்கல்!
இதைக் கேட்டவுடன் சர்க்கரையாய்க் கரைந்து விட்டார் கள்ளழகர்...
அவ்வளவு தான்...கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, என்று அவள் கேட்டதைக் கொடுத்து விட்டார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?
மருத கள்ளழகரை வேண்டிக்கிட்டா காதலில் உடனே வெற்றி!

பதிவுலக நண்பர்களில் காதலர்கள் யார் யாரு இருக்கீங்க? கை தூக்குங்க பார்க்கலாம்! மதுரை அழகர் கோவிலுக்கு டிக்கெட் எடுக்கணும்ல; அதான் கேட்டேன்! :-))


ஆனாப் பாருங்க....ஊர் மெச்ச, உலகம் போற்ற, நம்பிக்கு மாலையிடவில்லை நங்கை! அதான் தம்பதிகள் ஏற்கனவே மாலை மாற்றிக் கொண்டார்களே வில்லிபுத்தூரில்...இன்னும் என்ன? :-)
திருவரங்கத்தில் நம்பியிடம் சர்க்கரைப் பொங்கலாய் கரைந்து விட்டாள் நங்கை!
அவன் பாம்புப் படுக்கையில் மெல்லத் தன் காலை வைத்து,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி....அவன் மலர் மார்பைச் சேர்ந்து விட்டாள்.
பாம்பின் மேல் நாம் எல்லாம் கால் வைத்தால் பதறுவோம்! படையும் நடுங்குவோம்! ஆனால் அவள் ஏதோ ஏக்கமாய் முணுமுணுத்துக் கொண்டே ஏறிவிட்டாள்! அந்த ஏக்கத்தைக் கண்ட பச்சை மாமலைப் பாம்புக்கு, "மனதில் ஓர் எண்ணம்"!

சரி....அப்போ அவளுடைய வேண்டுதல்? - அவ்வளவு தான், அம்போ!!!
காந்திக் கணக்கு என்பார்களே - அதுவா? :-)
அம்மா இருந்திருந்தா நிறைவேத்தி வைச்சிருப்பா! அப்பாவுக்கு மகளைப் பிரிந்த துக்கமும், பாட்டெழுதும் பணியுமே சரியாகப் போய்விட்டது!


மூன்று நூற்றாண்டுகள் கழிந்து விட்டன!
ராமானுசர் வந்துதித்த கால கட்டம். அவர் ஆதிசேஷன் என்னும் அந்தப் பாம்பின் அம்சம்.
பழுத்த துறவி...ஆனால் படிப்பதோ காதல் கவிதை! - திருப்பாவை என்னும் காதல் கவிதை! திருப்பாவை ஜீயர் என்றே பெயர் அவருக்கு!

அரங்க மாநகரத்தில் அன்று பெருவிழா.
கோவிலில் அரங்கனுக்குத் தமிழை ஓதுகிறார்கள். அப்போது இந்த நாச்சியார் திருமொழியையும் சேர்த்துத் தான் ஓதுகிறார்கள்! "நூறு தடா" என்னும் வரிகள் வரும் போது ராமானுசருக்கு "தடார்" என்று ஒரு கலக்கம்!
அச்சோ! கோதையே சொன்னதைச் செய்யாமல் போனாளே! வாய்ச் சொல் வீரமோ என்று உலகத்தார் யாராச்சும் நாளை சொல்லி விட்டால், பழி யாருக்கு?
பதறினார்....துண்டை உதறினார்....எழுந்தோடினார்!
- எங்கே? நேரே மதுரை அழகர் கோவிலுக்குத் தான்!

நூறு தடா வெண்னெய், நூறு தடா சர்க்கரைப் பொங்கல்.....
கல்யாண சீர் வரிசைப் பாத்திரங்களில் எப்படி நிரப்புவார்களோ, அப்படி நிரப்பினார்கள். சுந்தர ராஜப் பெருமாள் என்னும் மாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாளின் நேர்ச்சையாக,
அவள் பெயரும் நட்சத்திரமும் சொல்லிக், கோதையின் சார்பாகச் சமர்பித்தார் அண்ணல்! - வேண்டுதல் நிறைவேறியது! கோதையின் வாக்கும் மெய்யானது!
காதலே ஜெயம்! ஜெயிக்க வைத்த மதுரை நம்பிக்கு ஜெயம்! என்று அனைவரும் ஆனந்தப்பட்டார்கள்.

ஆனால் ராமானுசருக்கு மட்டும் ஏனோ, ஆண்டாளைப் பார்க்க வேண்டும் போல் ஒரு உணர்வு!
"அம்மாடி...உன் ஆசை இதோ பூர்த்தியாகி விட்டது. இன்னும் என்ன ஒரே ஆழ்ந்த சிந்தனை? சிரி தாயி..." என்று சொல்ல வேண்டும் போல் ஒரு உந்துதல்...மதுரையில் காணிக்கையைச் செலுத்தி முடித்து, வில்லிபுத்தூருக்கு மீண்டும் ஒரே ஓட்டம்!

வில்லிபுத்தூர் கோவிலுக்குள் அவர் நுழைந்தது தான் தாமதம். அவருக்கு என்ன உணர்ச்சிகள் மனத்தில் ஓடினவோ, அதே உணர்ச்சிகள் அனைத்தும் கல்லில் சிலையாய் நிற்கும் ஆண்டாளுக்கும்!
"நம் கோயில் அண்ணன் வந்தாரே", என்று அர்ச்சகர் மேல் ஆவேசித்துச் சொன்னாள்! கருவறையில் இருந்து ஓடி வருகிறாள்...அர்ச்சகரின் உருவில்!..தன் புதிய அண்ணனை வரவேற்க! எல்லாருக்கும் ஒரே திகைப்பு!
அந்த அர்ச்சகருக்கு நல்ல நாளிலேயே தமிழ் அவ்வளவாக வராது! இன்றோ மடை திறந்த வெள்ளமாய் கவி பாடி ஓடி வருகிறார். வருபவள் அவளே அல்லவா?

அர்த்த மண்டபம் தாண்டியும் வந்து விட்டாள்...ராமானுசரைக் கையால் பிடித்து அழைத்து, அண்ணா என்று அன்பு காட்டினாள் கோதை!
எட்டாம் நூற்றாண்டுத் தங்கையும், பதினோராம் நூற்றாண்டு அண்ணனும் அளவளாவி மகிழ்ந்தார்கள்!

எதுக்கு ஆண்டாள் ராமானுசரைப், போயும் போயும், அண்ணா என்று கூப்பிட வேண்டும்?
ரக்ஷா பந்தன் - அதாங்க ராக்கி - கையில் கட்டி விடுவாங்களே - ஒடனே சிஸ்டர் ஆயிடுவாங்களே...அப்ப அண்ணன்கள் எல்லாரும் என்ன பண்ணுவாய்ங்க? தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பாங்க!
அட, நம்மூரு கல்யாணத்துல கூட எடுத்துக்குங்க!
மணப்பெண்ணின் சகோதரன் தான், காசி யாத்திரைக்குக் கூட வரான், கால் கழுவி விடறான், பொரி வார்த்து பெண்ணைக் கொடுக்கறான்! - இப்படியான அண்ணன் தங்கை உறவு காலம் எல்லாம் தொடரும் ஒன்று!
ஒவ்வொரு பண்டிகைக்கும் அண்ணன் வீட்டுச் சீரைக் கேட்கும் தங்கச்சிங்க யாராச்சும் இருக்கீங்களா? :-)

காதலுக்குக் கண் தானில்லை! - ஆனால்
அன்புக்கோ காலமே இல்லை!! - நூற்றாண்டாவது? ஒன்றாவது?

இன்றும் வில்லிபுத்தூர் ஆலயத்தில் அர்த்த மண்டபதையும் சேர்த்து தான், கருவறையாகவே கருதப்படுகிறது! அங்கு ஆண்டாள் கால் பதித்த காரணத்தால்! அதற்கு முன்பே நாம் எல்லாம் நின்று விட வேண்டும், அதற்கு மேல் அனுமதி இல்லை!

இப்படி ஆண்டாளுக்கே அண்ணன் ஆன காரணத்தால் தான்....அவள் மேல் பாடப்பட்ட வாழித் திருநாமம் என்னும் பாட்டில்,
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே என்று பாடினார்கள்!
பெரும்பூதூர் மாமுனி = ராமானுசர்
அவருக்கு பின் ஆன தங்கை = ஆண்டாள்...திருவடிகளே சரணம்!


அடியே கோதை...
இன்னும் கொஞ்ச நாளில் உன் பிறந்த நாளடி! திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்த அழகியே...உனக்கு மட்டுமா பிறந்த நாள்? எங்கள் பாரத தேசமும் இதே நாளில் தானே அன்று புதிதாகப் பிறந்தது!
(இந்த ஆண்டு Aug 15, அன்று ஆடிப் பூரம் வருகிறது)
அதை ஒட்டி, ஆடிப் பூரம் - தொடர் பதிவுகளாய் - உன்னைப் பலப்பல கோணங்களில் காண ஆசை! அதுக்கு வில்லிபுத்தூர் வரப் போகிறோம்!
இதோ, உனக்கு பிறந்த நாள் பரிசுகளாய், பதிவுகள், தொடரும்...
Read more »

Wednesday, July 18, 2007

நீங்க குளிக்கணும்னா உக்கமும் தட்டொளியும் தேவையா?

உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி! நீங்கள் குளிப்பதற்கு இவை இரண்டும் தேவையா? ஆம் என்றால் ஏன்? - இது தான் இன்றைய கேள்வி!
கேள்வியை வேணும்னா கொஞ்சமா மாற்றி யோசிச்சுப் பாருங்க! நம்மைக் காலங் கார்த்தால அம்மா எழுப்பி விடறாங்க...என்ன செய்வீங்க?

அடப் போம்மா-ன்னு முரண்டு புடிச்சித் திரும்பிப் படுப்பீங்க! விடாப்பிடியா எழுப்பறாங்க!...........சரி...எழுந்தாச்சு!
எத்தனை பேர், நேராக் கண்ணாடி முன்னாடி போய் நின்னு, தலைமுடியை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவீங்க?
டேய் சங்கரா, சந்து முனையில் போய் ஒரு குடம் தண்ணீர் புடிச்சிக்கிட்டு வாடா-ன்னு சொல்லுறாங்க! இப்ப என்ன செய்வீங்க? கண்ணாடி முன்னாடி போவீங்களா, மாட்டீங்களா? மறைக்காம உண்மையச் சொல்லுங்க! :-)


இன்னும் காய்ச்சல் தீரலையா? இன்னுமா உளறிக் கொண்டு இருக்கே? என்று கேட்கத் தோணுகிறதா? பொறுமை! பொறுமை!!
நம்ம நாமக்கல் சிபி, திருப்பாவைப் பாசுரங்கள் பொங்கப் பொங்க, ஒரு தொடர் கதை போட்டிருக்காரு! அவசியம் பாருங்க! அதைப் பார்த்தவுடன், என் உள்ளம் ஏனோ கிறங்கத் தொடங்கி விட்டது! இனிய தமிழ் என் உள்ளத்தில் பொழிந்து வழிகிறது!

அது ஏனோ தெரியவில்லை, ஆண்டாள் என்றாலோ, திருப்பாவை என்றாலோ, அப்படி ஒரு ஈர்ப்பு, காந்த சக்தி!
காதலா? பக்தியா?
இன்பத் தமிழா? இறை அன்பா? இசையா?
ஒரு பெண்ணின் கனவா? கதையா? அழகா? அலங்காரமா? - எது? எது?
இன்று பூர நட்சத்திரம் (ஆடிப் பூரம், அவள் பிறந்த நாள், அடுத்த மாதம்...) ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காணலாம் வாங்க!


எல்லாப் பெண்களும், சிற்றஞ் சிறுகாலே, மார்கழி நீராடப் போறாங்க!
ஒருவர் இன்னொருவரை அழைக்க, இன்னொருவர் இன்-இன்னொருவரை அழைக்க....
இப்படியே எல்லாரும் பாடிக்கிட்டே போறாங்க...போயி கண்ணன் வீட்டு வாசலில் நிக்கறாங்க!
பலமாக் குரல் கொடுத்து, எல்லாரையும் எழுப்பறாங்க!

கேள்வி நம்பர் 1:
பெண் அடியவர்கள், அன்பர்கள் எல்லாம் இன்னும் நீராட வில்லை!
நீராடாமலேயே, தமிழ் வேதமான, பிரபந்தத்தை ஓதுகிறார்கள்! கண்ணன் ஆலய வாசலிலும் குளிக்காமலேயே நிற்கிறார்கள்! - ஆண்டாளே இப்படிச் செய்யலாமா? இது சரியா? சொல்லுங்கள்!:-)))
நீங்க உங்க வீட்டில் இப்படிப் பண்ணா, குளிக்காம கோவிலுக்கு வந்தா, அம்மா அப்பா மனைவி உங்களை சும்மா விடுவார்களா?:-)))


எல்லாரும் கண்ணனின் காதலி, நப்பின்னையை எழுப்பறாங்க! எழுப்பி.....
நப்பின்னை நங்கையே, கண்ணன் எங்கள் தலைவன்! உமக்கும் எமக்கும் அவனே நாயகன்!
அவன் தன்னுடைய அன்பினால் எங்களை எல்லாம் நீராட்ட வேண்டும்!
எங்கள் பிறவி என்னும் பிணியை அவன் அருள் என்னும் நன்னீர் கொண்டு கழுவி, எங்களைக் கடைத்தேற்ற வேண்டும்.
அவனை எழுப்பி, எங்களுடன் அனுப்பி வையம்மா...
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

(திருப்பாவை - 20ஆம் பாசுரம் - முப்பத்து மூவர் என்று தொடங்கும் கவிதை - பாடலைக் கேட்க, சொடுக்கவும்)


உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி!
விசிறியும் கண்ணாடியும் கையில் கொடுத்து, எங்களை நீராட்ட அவனை அனுப்பி வை, தாயே!
கேள்வி நம்பர் 2:
நீராடுவதற்கு எதற்கு விசிறியும் கண்ணாடியும்?
கேள்வி நம்பர் 3:
அப்படியே தேவை என்றாலும், இந்தக் கண்ணாடியும் விசிறியும் யாருக்குத் தேவை?
அவனுக்கு நீ கொடுத்து அவனை அனுப்பி வை என்கிறார்களே!
அப்படிக் கொடுத்து அனுப்பி வைப்பது, அவனுக்கா? எங்களுக்கா??

இது பற்றிப் பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே! நீங்கள் அறிந்தவரை உங்கள் கருத்து என்ன என்று சொல்லி தெளிவு படுத்துங்களேன், ப்ளீஸ்!
அன்புக்கு நன்றி!
Kannabiran Ravi Shankar


இது பற்றி அன்பு நண்பர் ஜி.ராகவன், ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட திருப்பாவை தொடரில், பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறுத்த குறுக்குடைய நப்பின்னை நாயகியே துயில் எழுவாய்! அப்படியே உனது மணவாளன் கண்ணனுக்கு விசிறிடுவாய். அந்தக் குளிர் காற்று தீண்டவும் அவன் எழுவான். அப்படி எழுகையில் அவன் முகம் காட்டக் கண்ணாடியைத் தருவாய். அவன் இப்பொழுதே எழுந்தால் தான் பாவை நீராடி அருள் பெறுவாய் எம்பாவாய்!

ராகவனின் இந்தச் சிந்தனை வித்தியாசமான ஒன்று! - அது மிக நன்று!
இருப்பினும் சீர் தூக்கிப் பார்த்தேன்! ஏனோ சரியாகப் பிடிபடவில்லை!

1. நீங்க தூங்கும் போது உங்களுக்கு விசிறினா, நீங்க மேலும் தூங்குவீங்களா? இல்லை எழுந்து கொள்வீர்களா? - ஹிஹி...குளிர் காற்றில் இன்னும் இழுத்துப் போர்த்தித் தான் தூங்குவீங்க இல்லையா? அப்படியிருக்க, ஒருவரை விசிறி எழுப்ப முடியுமா?

2. எழுப்பி விட்டவுடன், கண்ணாடி பார்த்து தலை திருத்திக் கொள்வீர்களா?

3. எழுந்தவுடன் தருவதற்குப் பல பொருட்கள் உள்ளன! பெட் காபி (:-), பல் விளக்கம், குளிக்க எண்ணெய் இல்லை முகப் பூச்சு, நெற்றித் திலகம்....இதை எல்லாம் சொல்லாமல், உக்கமும் தட்டொளியையும் மட்டும் ஏன் ஆண்டாள் சொல்ல வேண்டும்?

4. நோன்புக்கு வேண்டிய நெய்யுண்ணோம், பாலுண்ணோம் எல்லாம் பட்டியல் இட்டுச் சொல்கிறாள். கோல விளக்கு, கொடி, விதானம், ஆலின் இலை எல்லாம் அருளேலோ என்று வாய் விட்டுக் கேட்கிறாள்! அப்படி இருக்க உக்கமும் தட்டொளியும் கேட்பது கூட நோன்புக்குத் தானா?

இதுக்கு மேல நண்பர்கள் நீங்க தான் வந்து சொல்லணும்! அம்மா கோதை! எதுக்கும்மா இதையெல்லாம் நீ கேட்ட?
உக்கம் = விசிறி = Hair Dryer
தட்டொளி = கண்ணாடி = Hand Mirror, அதான் சின்னப் பெண் Makeup kit போலக் கேட்டிருப்பாள் என்று வீட்டில் சொல்லறாங்க! இத நான் எங்க போய் சொல்ல! நீங்களே சொல்லுங்க! :-)))
Read more »

Monday, July 16, 2007

ஒளவையே! புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?

ஒளவையே! புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன? - இந்த டயலாக் எங்கு வருகிறது என்று நினைவுக்கு வருகிறதா? திருவிளையாடல் திரைப்படத்தில்!
என்ன அப்பிடிப் பாக்கறீங்க?...."நாரதரே, அம்மை அப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன?" என்று கேள்வி கேட்பார் பிள்ளையார்! - அதுக்குப் பதில் என்ன சொல்லப்படும்?.....ஞாபகம் வருகிறதா?

அம்மை அப்பன் தான் உலகம், உலகம் தான் அம்மை அப்பன்!
அதே போல,
புதினாத் தொகையல் தான் புதினாச் சட்னி!
புதினாச் சட்னி தான் புதினாத் தொகையல்!
என்று சொல்லலாமா....கூடாதா?

- இது தான் இப்போது பேண்டேஜ் பாண்டியனுக்கு எழுந்துள்ள பெருத்த சந்தேகம்!

ஐயோ இவனக்கு என்ன ஆச்சு, திடீர்-னு என்று பாக்கறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க....
ஒரு வாரமா பாக்டீரியாக் காய்ச்சல் காய்ச்சி எடுக்க, படுத்த பாம்புப் படுக்கையா நானும் கெடக்க,
வெறும் பிரட்டும், சூப்பும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது!
எண்ணெய் வாசமே கூடாது என்று மருத்துவர் உத்தரவு வேறு! (அவர் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டது தனிக் கதை...அதை பாஸ்டன் பதிவர்கள் வந்து எழுதுவார்கள் :-)

அப்போது தான் காரமா, உறைப்பாச் சாப்பிட ஆசை வந்தது! அம்மா செய்யும் புதினாச் சட்னி, புதினாத் தொகையல் நினைவுக்கு வந்தது!
புதினா மருத்துவக் குணங்கள் கொண்டது எனறு அமெரிக்க நாசா விண்வெளிக் கழகமே சொல்லி இருக்காமே! அதான் அதையே சாப்பிடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்! - ஆனா, அங்கு தான் வந்தது வினை!

தாளிக்கலாமா? கூடாதா?? - எண்ணெய்ப் பிரச்சனை! - ச்சே இந்த அமெரிக்காவில் எப்பமே இப்பிடித் தான்....அடுத்தவன் வீட்டு/நாட்டு எண்ணெய்ப் பிரச்சனைக்கும் அமெரிக்கவுக்கும் அப்படி ஒரு ராசி போல! :-)

சரி...என்ன செய்வது என்று தெரியாமல் நம் ஆருயிர் நண்பர் CVR இடம் விஷயத்தைச் சொன்னேன்! சர்வ வல்லமை படைத்த பாலாஜி இருந்திருந்தால் அவரைக் கேட்டிருக்கலாம்! ஆனால் அவரோ ஊரில் இல்லை! சரியென்று CVR-இடம் சொன்னால், அவர் பதறிப் போய் விட்டார்! நான் உங்களுக்கு ஆவியில் சுட்ட இட்லி கொண்டு வருகிறேன் என்று ஆறுதலாகச் சொன்னார். ஆகா என்ன பாசம்! என்ன பாசம்!

சற்று நேரத்துக்கு எல்லாம் ஒடோடி வந்தார் மனுசன்!.......Frozen Idli பாக்கெட்டோடு!
"நல்லாப் பாத்துக்குங்க" என்று மேலும் கீழும் இட்லிப் பாக்கெட்டைக் காட்டி விட்டு, மீண்டும் அவர் பைக்குள்ளேயே போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்!

எனக்கு ஒரே அழுகையா வந்து விட்டது! உடம்பு சரியில்லீன்னா, ஆப்பிள் பழங்களோடு வந்து பார்ப்பார்கள்! ஆனா இவரு ஒரு கூடை ஆப்பிளைக் கூட வாங்கி வராம,
'ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட்' ன்னு பாட்டு பாடிட்டு கிளம்பிட்டாரு!
எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது! சரி நாமே புதினாவைச் செய்து விட வேண்டியது தான் என்று களத்தில் இறங்கி விட்டேன்! இதோ செய்முறை! சாரி, நான் செஞ்ச முறை!



தேவையானவை:
புதினா 2 கொத்ஸ் (கொத்துவின் pluralஐச் சொன்னங்க! கொத்ஸ் நீங்க கோச்சிக்க மாட்டீங்கன்னு, தெரியும்)
கொத்தமல்லி 1 கொத்து (இலைகளைக் லேசாத் தண்ணீரில் கழுவிக் கொள்ள மறக்காதீங்க)
தக்காளி1
சின்ன வெங்காயம்3
புளி காய்ச்சல்1/4 கப்
உ.பருப்பு/க.பருப்பு2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்3 தேக்கரண்டி
காய்ஞ்ச மிளகாய்3
உப்பு அவங்க அவங்க சூடு சொரணையைப் பொறுத்த அளவு :-)

கொஞ்சம் வித்தியாசமாப் பண்ணனும்-னா......

மாங்காய்

அரை மாங்காய், "வெட்டி" வைத்துக் கொள்ளவும்! வெட்டியையும் சமைக்கும் போது கூட வைத்துக் கொள்ளலாம்! :-)

மேலே CTRL+A- எல்லாம் பண்ணிப் பார்த்து, எதுவும் தேடி ஏமாந்து போகாதீங்க! இது கொத்தனார் கிண்டிய உப்புமா பதிவு போல இல்ல! :-)

சரி, மேட்டருக்கு வாங்க!
1. Frying Pan-இல் எண்ணெய் விட்டு, உ/க பருப்புகளைப் பொன்னிறமாக வறுத்துக்கோங்க.
2. கூடவே வெங்காயம், மிளகாயும் வறுத்து வைச்சுக்கோங்க.
3. புதினா,கொத்தமல்லி இலைகளைக் கொட்டி, நீர் எல்லாம் போகுமாறு, கொஞ்சமா இலைகள் சுருங்குமாறு வறுத்துக்கோங்க. தண்ணி எல்லாம் சேர்க்கத் தேவையே இல்லை! (தாகத்துக்கு குடிக்கிற தண்ணியைச் சொன்னேன்-பா)

அய்யோ....வாசனை இப்பவே தூக்குதே! நாலு இலையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டேன்! :-)

4. இப்ப தனியாக, இன்னொரு Panஇல் தக்காளி வதக்கிங்கப்பு!
5. மாங்கா பத்தைகளை சும்மா அரை நிமிடம் அப்படி லைட்டா வதக்கிங்க!
6. எல்லாம் கூல் ஆவட்டும்! சிவாஜி ஸ்டைலில் கூல் பேபி கூல்!

7. எல்லாத்தையும் மிக்சியில் கொட்டி, புளிக் காய்ச்ச்ல், உப்பு சேர்த்து அரைச்சிக்கங்க!
8. வேணும்னா, இன்னொரு வாட்டி, உ/க பருப்பு வறுத்து, தாளிச்சி கொட்டிக்கங்க!
9. ஐட்டம் ரெடி...பத்தே நிமிஷம் தான்!
வாழ்க்கையில சந்தோசமான விஷயம் எல்லாம் சீக்கிரமாவே நடந்து முடிஞ்சிடுது பாத்தீங்களா?! (ஆன்மீகப் பதிவு எஃபெக்டு நடு நடுல வந்துடுது, நான் என்ன செய்ய!:-)

10. சரி...இனிமே தான் மேட்டரே! இப்ப நாம செஞ்சதுக்குப் பேரு என்னா? தொகையலா? சட்னியா??.....அதைக் கரீட்டாச் சொல்லிட்டு அப்புறம் வாங்க...
தட்டுல துண்டு இலை பரப்பி, அதுல நெய் தடவி....
அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைச்சு,
இந்தப் புதினா மேட்டரையும் சேர்த்து வச்சித் தாரேன்!

ஒளவையே! - புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?


பின் குறிப்பு:
மொக்கை நன்றே மொக்கை நன்றே
பிச்சை புகினும் மொக்கை நன்றே
என்று தமிழ் மூதாட்டி சொன்ன வழியில் என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்! மறந்து விடாதீர்கள் - தொகையலுக்கும், சட்னிக்கும், மொத்தம் ஆறு வித்தியாசங்கள் சொல்லணும்!

பின் பின் குறிப்பு:
மாதவிப் பந்தலில் மொக்கைப் பதிவு ஒன்று கூட போடாத உன்னை எல்லாம் Blogger என்று ஒப்புக் கொள்ளவே முடியாது என்று நண்பர் சபித்து விட, அ
தனால் மிகவும் பயந்து போய், தொகையலும் சட்னியும் அரைத்துச் சாப்பிட்டு எழுதியதே இந்தப் பதிவு!:-)
படங்களுக்கு நன்றி:
SeeC

Read more »

Wednesday, July 04, 2007

புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு!

இதோ...விடைகளும், வின்னர்களும்

மோனா, பொன்ஸ், ஜெயஸ்ரீ - 10/10
ஆதித்தன், பினாத்தல் சுரேஷ், ஜி.ராகவன், சத்தியா - 9/10
மனதின் ஓசை, ஸ்ரீதர் வெங்கட் - 8/10
------------------------------------------------------------------------
விடைகள் கீழே...bold செய்யப்பட்டுள்ளன. விரிவான விளக்கங்கள், பின்னூட்டத்தில்! நின்றவர்க்கும், வென்றவர்க்கும் வாழ்த்துக்கள்!!!

பரிசேலோர் எம்பாவாய்!

பொன்னியின் செல்வனுக்கு, ஓவியர் மணியம் வரைந்த இரண்டு படங்கள்:
இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
1. காதல் ஜோடிகள்: குந்தவை-வந்தியத்தேவன், நந்தினி-பழுவேட்டரையர்
2. வீரநாராயணபுரம் ஓவியம் - இது விண்ணகரக் கோவில் என்று நூலின் முதலிலேயே வந்து விடும். அதன் வசனம், சாம்பிளுக்கு இதோ!

//ஸ்ரீமத் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸ்ரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.
அத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-
"பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம்//


படங்களுக்கு நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளை-tamilheritage.org


பொன்னியின் செல்வன் பற்றி நாள் கணக்கில் பேசலாம், பதிவுக் கணக்கில் பேசலாம்! சரி..........மீள் பதிவு மாதிரி, பொன்னியின் செல்வனை மீள் படிப்பு படிச்சா என்னவென்று தோன்றியது!
சரியான சோம்பேறியாச்சே நானு, எங்கிருந்து படிக்கப் போகிறேன்?
அதான் ஒரு பத்து கேள்வி கேட்டுப்புட்டு, பதில் ஒன்றும் பிடிபடலைன்னா, உடனே புத்தகமும் கையுமா உட்காருவதா ஒரு முடிவெடுத்து விட்டேன்!

இதைப் படமாக எடுப்பது பற்றியெல்லாம் பலர் பேசினார்கள்! வந்தியத் தேவனா யாரு நடிக்கலாம்?
என்னைக் கேட்டா, எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பதிவரின் பெயரைத் தான் ரெக்கமண்டேஷன் செய்வேன்!

நீங்க யாரையாச்சும், இல்லாக்காட்டி உங்களையே ரெக்கமண்டேஷன் செய்து கொள்வீர்களா? The Lord of The Rings படமாகுது.....பொன்னியின் செல்வன் ஆக முடியாதா?
நம்ம குருநாதர் Dubukku எப்பயோ ஒரு முறை சொன்னது ஞாபகம் வருது!
"பொன்னியின் செல்வனை ஒரே படமாக எடுப்பது என்பது, பதினெட்டு முழம் புடவையை எடுத்துக் கழுத்தில் "டை" யாக கட்டிக் கொள்வது போல"

பார்ப்போம், எத்தனை தூரம் நந்தினியும் குந்தவையும் நினைவில் இருக்கிறார்கள் என்று!
சேந்தன் அமுதனுக்கும் பழுவேட்டரையருக்கும் என்ன தொடர்பு என்று!
இலங்கையின் பட்டினங்கள் பெயர் நினைவுக்கு வருகிறதா என்று!

இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-)
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு பொன்னியின் செல்வன்!

1

"திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரசோழ பராந்தகரின் மகாமான்ய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மாதி ராஜர் வருகிறார்! பராக்! பராக்!....."


இந்த அநிருத்தப் பிரம்மராயரின் இயற்பெயர் என்ன?

1


அ) அருண்மொழிப் பட்டன்
ஆ) ராமன் கிருஷ்ணன்
இ) வைணவதாசர்
ஈ) கிருஷ்ணன் ராமன்

2

ஆதித்த கரிகாலனின் நெருங்கிய நண்பர்கள் இருவர். அதில் ஒருவன் இவன். இவன் பெயர் என்ன? இவன் தங்கை தான் வந்தியத் தேவனை விரும்பினாள். ஆனால் இறுதியில் மாண்டாள். அவள் பெயர் என்ன?

2


அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி
ஆ) கந்தமாறன் - மணிமேகலை
இ) பினாகபாணி - வானதி
ஈ) முருகையன் - பூங்குழலி

3

இலங்கையில் முதன் முதலாக, பூங்குழலியின் உதவியோடு, நாகத் தீவில் இறங்கினான் வந்தியத்தேவன்.


பின்னர் இளவரசர் அருண்மொழி இருக்கும் நகரத்தை நோக்கிக் கிளம்பினான். எந்த நகரம்?

3


அ) யாழ்ப்பாணம்
ஆ) அனுராதபுரம்
இ) மாதோட்டம்
ஈ) திருக்கேதீசுவரம்

4

சுந்தர சோழர் அடிக்கடி கனவில் கண்டு பயப்படும் ஊமை ராணியின் பெயர் என்ன?

4


அ) மந்தாகினி தேவி
ஆ) செம்பியன் மாதேவி
இ) வானவன் மாதேவி
ஈ) இலாட மாதேவி

5இன்று தமிழ்மணத்தில் போலிகளின் பிரச்சனை இருப்பது போல பொன்னியின் செல்வன் -இலும் ஒரு போலி பாத்திரம் இருந்தது? - ஒரு போலி இளவரசனாய் வலம் வரும் அவர் யார்?

5

அ) குடந்தை வைத்தியர் மகன்
ஆ) மதுராந்தகத் தேவர்
இ) மதுராந்தக உத்தம சோழர்
ஈ) சேந்தன் அமுதன்

6

தீப்பொறி கண்களும் தொங்கும் மீசையுமாக மணியம் வரைந்த பெரிய பழுவேட்டரையர் பற்றிப் படித்திருக்கிறோம்.


அவரைக் கொன்றது யார்?

6

அ) சின்னப் பழுவேட்டரையர்
ஆ) இடும்பன் காரி இ) பெரிய பழுவேட்டரையர்
ஈ) நந்தினி

7

மாய மோகினி, எவரையும் கவரும் வல்லமை கொண்டவள், பேரழகி, சாகசக்காரி....நம்ம நந்தினி, கதையின் கடைசியில் என்ன ஆனாள்?...... தப்பி ஓடினாள்.

ஆம்; பழுவூர் இளைய ராணி நந்தினி தேவியும் மறைந்து விட்டாள். இனி அவளை இக்கதையிலே நாம் காண மாட்டோம் என்கிறார் கல்கி.


அவள் மலைக்குகையில் யாரிடம் இருந்து தப்பி ஒடினாள்?

7


அ) ரவிதாசன்
ஆ) குந்தவை
இ) பழுவேட்டரையர்
ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்

8

கல்கி, தம் புதினத்தின் நடுநடுவே சைவ, வைணவ, பெளத்த ஆலயங்கள் பற்றிக் குறிப்புகள் பலவற்றைக் கொடுப்பார். கிழவன் சிவனார், கிழவி உமையவளை நான் பாட மாட்டேன் என்று சுந்தரர் கோபித்துக் கொண்டு போன தலம் பற்றி ஒரு குறிப்பு வரும்! பின்னர் உமையவளை மட்டும் இளையவளாக பிரதிட்டை செய்வார்கள். சுந்தரர் வந்து பாடுவார்!


இதே போல் யாரோ பாடமாட்டேன் என்று சொன்னதால் தான் கிழவன் பழுவேட்டரையன் இளையவள் நந்தினியைப் பிடித்தானோ என்று, ஆதித்த கரிகாலன் கிண்டல் செய்வான்! அது எந்தத் தலம்?

8


அ) திருவையாறு
ஆ) நாகைப் பட்டினம்
இ) விருத்தாச்சலம் ஈ) ராமேஸ்வரம்

9

ஆழ்வார்க்கடியான் செய்யும் அடிதடி வம்பு தும்புகள் எல்லாம் படிக்கும் போது ஒரே சிரிப்பாய் இருக்கும். ஆனால் அவன் தமையனார் (அண்ணா) ஒரு சிவ நெறிச் செல்வர்! சோழ தேசத்து ராஜகுருவாகவும் இருந்தவர். யார் தெரிகிறதா?

9


அ) திருநாரையூர் நம்பி
ஆ) ஈசான சிவபட்டர்
இ) குடந்தை சோதிடர்
ஈ) திருக்கோவிலூர் மலையமான்

10

கதையின் கடைசியில் சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்! அருண்மொழி தானே பட்டமேறப் போவதாகப் பிரகடனம் செய்து விட்டு, திடீர் என்று விழாவில், மகுடத்தை சேந்தன் அமுதன் தலையில் அருண்மொழியே சூட்டி விடுகிறார். அப்போது சேந்தன் அமுதன் மறுப்பேதும் சொல்லாமல் இருக்க, அவர் தோள்களை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது யார்?

10


அ) சின்னப் பழுவேட்டரையர்
ஆ) பூங்குழலி
இ) பிரம்மராயர்
ஈ) வந்தியத் தேவன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!


1 அ) அருண்மொழிப் பட்டன் ஆ) ராமன் கிருஷ்ணன் இ) வைணவதாசர் ஈ) கிருஷ்ணன் ராமன்

2 அ) பார்த்திபேந்திரன் - பூங்குழலி ஆ) கந்தமாறன் - மணிமேகலை இ) பினாகபாணி - வானதி ஈ) முருகையன் - பூங்குழலி

3 அ) யாழ்ப்பாணம் ஆ) அனுராதபுரம் இ) மாதோட்டம் ஈ) திருக்கேதீசுவரம்

4 அ) மந்தாகினி தேவி ஆ) செம்பியன் மாதேவி இ) வானவன் மாதேவி ஈ) இலாட மாதேவி

5 அ) குடந்தை வைத்தியர் மகன் ஆ) மதுராந்தகத் தேவர் இ) மதுராந்தக உத்தம சோழர் ஈ) சேந்தன் அமுதன்

6 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) இடும்பன் காரி இ) பெரிய பழுவேட்டரையர் ஈ) நந்தினி

7 அ) ரவிதாசன் ஆ) குந்தவை இ) பழுவேட்டரையர் ஈ) பாண்டிய ஆபத்துதவிகள்

8 அ) திருவையாறு ஆ) நாகைப் பட்டினம் இ) விருத்தாச்சலம் ஈ) ராமேஸ்வரம்

9 அ) திருநாரையூர் நம்பி ஆ) ஈசான சிவபட்டர் இ) குடந்தை சோதிடர் ஈ) திருக்கோவிலூர் மலையமான்

10 அ) சின்னப் பழுவேட்டரையர் ஆ) பூங்குழலி இ) பிரம்மராயர் ஈ) வந்தியத் தேவன்

Read more »

Thursday, June 28, 2007

நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா?

அது என்ன இவருக்கு மட்டும் பெரியாழ்வார்? "பெரிய" ஆழ்வாரா இவரு?

ஆழ்வார்கள் பன்னிரண்டு பேரில் இவருக்கு மட்டும் என்ன அப்படி உசத்தி? பக்தர்களுடைய பக்தியில் உன் பக்தி உசத்தி, என் பக்தி கொஞ்சம் தாழ்த்தி என்றெல்லாம் பாகுபாடு கிடையாதே!
அப்படி இருக்க, எம்பெருமானிடம் ஆழ்ந்தவர்களான ஆழ்வார்கள் இடையே, பெரிய/சிறிய அடைமொழிகள், ஏற்றத் தாழ்வுகள் எப்படி வரலாம்? - பார்ப்போம் வாருங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (Jun 26, 2007)
அதே போல், ஆனி மாதம் அனுஷ நட்சத்திரம் - நாதமுனிகள் பிறந்த தினம் - (Jun 28, 2007)
மேலும் ஆனி மூலம் - மாணிக்கவாசகர் குரு பூஜையும் கூட!

- இன்று நாம் எல்லா ஆழ்வார்களின் பிரபந்தமும் படிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த நாதமுனிகள் தான்! தொலைந்த பொக்கிஷத்தை மீட்டுத் தந்தவர்!
பல நூற்றாண்டுகள் முன்னரே, வைணவ ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தவர்! இசைப்பாட்டு பாடித் துதிக்கும் அரையர் சேவை என்னும் முறையை அறிமுகம் செய்தவர்! இவருக்கும் பெரியாழ்வாரிடம் அப்படி ஒரு ஈடுபாடு! பார்க்கலாம் வாருங்கள்!


ஆழ்வார்களில், வைணவத்துக்குத் தத்துவக் கரையைக் கட்டி வைத்தவர் நம்மாழ்வார்! அவர் திருவாய்மொழி தான் எல்லாவற்றுக்கும் சாரம்!
வேதத்தையே தமிழ் செய்த மாறன் சடகோபன் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

அவருக்கு அடுத்து திருமங்கை ஆழ்வார். இவர் ஒரு பெரும் நிறுவனத்துக்கு மேலாளர் போல், வைணவம் என்றும் செழித்திருக்கச் செய்தவர்;
பாசுரங்கள் பாடி விட்டதோடு மட்டும் நில்லாது, அடிப்படை வசதிகள் (Basic Infrastructure) செய்து வைத்தவர்! - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

ஆழ்வார்களிலேயே முதலாமவர் பொய்கையாழ்வார்.
திருக்கோவிலூரில் அவர் பாடிய பாசுரம் தான் முதல் பிரபந்தம்! அவருடன் கூடச் சேர்ந்து பாடினர் பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்கிற இருவரும்! - ஆனால் இவர்களுக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

பெருமாளையே படுக்கையை விட்டு எழுப்பி, மணிவண்ணா, என்னைப் பின்தொடர்ந்து வா, என்று அதிகாரமாய்க் கட்டளையிட்டவர் திருமழிசை ஆழ்வார் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

இறைவனையே ஆண்டவள் ஆண்டாள்!
சரி இவளுக்காவது "பெரிய" பட்டம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை! அவளே "பட்டர் பிரான் கோதை சொன்ன" என்று பெரியாழ்வாரின் Initialஐயே தனக்கும் போட்டுக் கொள்கிறாள்!

One and Only One! - பெரிய ஆழ்வார், பெரியாழ்வார் மட்டுமே!
விஷ்ணு சித்தன் இவர் தம் இயற்பெயர்! பட்டர்பிரான் என்பது சிறப்புப் பெயர்!
திருவரங்கம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லாமே "பெரிய" என்று தான் அடைமொழியப்படும்!
பெரிய கோவில் - திருவரங்கம்
பெரிய திருவடி - கருடன்
பெரிய அவசரம் - திருவரங்க நிவேதனம்
பெரிய பெருமாள் - அரங்கநாதன்
பெரிய பிராட்டி - அரங்கநாயகி
அந்த வரிசையிலே, அவனுக்குப் பெண் கொடுத்த பக்தரும்
பெரிய ஆழ்வார் - பெரியாழ்வார்!

மதுரை நகரம். மல்லி வாசம். கூடல் அழகர்!

பாண்டியன் சபையிலே பரமாத்மா யார் என்று பரத்துவ நிர்ணயம் செய்து,
கிழி அறுத்து, வெற்றி வாகை சூடினார் பட்டர்பிரான்; அரசனின் அன்பு வற்புறுத்தலால் யானை மேல் ஏறி, நகர் வலம் வருகிறார்!
முன்னே பின்னே யானை மீது ஏறியிருந்தா தானே! அப்படி வலம் வரும் அளவுக்குப் பணபலம்/படைபலம் உள்ளவர் அல்லவே!
ரொம்பவும் கூச்சப்பட்டு அமர்ந்து கொண்டு, திருவெட்டெழுத்து ஓதிய வண்ணம் வருகிறார், விஷ்ணுவைச் சித்தத்தில் வைத்த விஷ்ணுசித்தன்.

தன் பிள்ளை ஊர் மெச்ச வரும் காட்சியைக் காண, எந்தத் தாய்க்கும் தகப்பனுக்கும் தான் மனசு துடிக்காது?
மின்னல் போல் பளிச் என வானத்தில் தோன்றி, சூரியன் போல் பிரகாசித்தார் பெருமாள். கருட சேவையாக! காணக் கிடைக்காத காட்சி...

மன்னனைக் கண்டால் புலவருக்கு என்ன தோன்றும்? - பரிசு, பொற்கிழி, பொன்னாடை?
மந்திரியைக் கண்டால் மாவட்டத்துக்கு என்ன தோன்றும்? - கமிஷன், காண்ட்ராக்ட்?
காதலியைக் கண்டால் காதலனுக்கு என்ன தோன்றும்? - டேய், வாயில வாட்டர் ஃபால்ஸ் வருது பார்! வாயை மூடு என்ற சிவாஜி பட வசனம் :-)
தாயைக் கண்டால் குழந்தைக்கு என்ன தோன்றும்? - பால், பட்சணம், கொஞ்சல்?

எல்லாம் சரி!....ஆனால் தாய்க்குக் குழந்தையைக் கண்டால்?... அதே தான் பட்டர் பிரானுக்கும் தோன்றியது!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா, உன் - செவ்வடி செவ்வி திருக்காப்பு!


நான் இருக்கேன் உனக்குப் பிரிவின்றி - ஆயிரம் பல்லாண்டு!
இலட்சுமி மார்பில் இருந்து காப்பாள் - ஆயிரம் பல்லாண்டு!
வலப்பக்கம் சக்கரமும், இடப்பக்கம் சங்கும் எப்போதும் காக்கும் - ஆயிரம் பல்லாண்டு!
கடவுளைக் கண்ட மாத்திரத்தில், கை கூப்பக் கூட இல்லை!......மாறாக, "ஆகா...பேரழகுப் பெட்டகமே! நல்லா இரு! அமோகமா இரு! பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழு! என்று கடவுளுக்கே ஆசீர்வாதமா?



அட, இது என்ன பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு?
உள்ளேயும் மரணம் கூடாது, வெளியேயும் கூடாது...இல்லாக்காட்டி
என்னை மிஞ்சுவார் எவரும் இருக்கக் கூடாது...இல்லாக்காட்டி
ஏழடுக்கு மாளிகையில்....என் பேரனுக்குப் பேரன்....தங்கக் கிண்ணத்துல பால் குடிக்கறத பாக்கணும் - இப்படி எல்லாம் வரம் வாங்கறத வுட்டுபுட்டு,
வரம் தரும் வரதராஜனையே நல்லா அமோகமா இரு-ன்னா என்னா அர்த்தம்?
- பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரேப்பா! தனக்கென்று மோட்சம் கூடக் கேட்கவில்லை! வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!


ஐயோ, குழந்தை ஊர் அறியத் தோன்றியதே! அந்த அழகே வெட்கப்படும் அழகனாயிற்றே அவன்! தோள் கண்டார் தோளே காண்பாரே!
என்ன கண்ணேறு படப்போகுதோ? திருஷ்டி கழிக்கணும் மொதல்ல! திருவந்திக்காப்பு செய்ய வேணும் உடனே!

அடேய் சக்கரமே, அடேய் சங்கே, அடே கருடா...
தூங்கிட கீங்கிடப் போறீங்க...குழந்தையைப் பத்திரமா பாத்துக்கோங்கடா!
என் கண்ணனுக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆச்சுது...உங்கள சும்மா விடமாட்டேன்!
எவ்வளவு 'தில்' இருந்தா, சகல சக்தி படைத்த சக்கரத்தாழ்வாரையே, இப்படி மிரட்டுகிறார் நம்ம பட்டர் பிரான்? - அதான் இவர் பெரிய ஆழ்வார்!

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே! சங்கே!
அறவெறி நாந்தக வாளே! அழகிய சாரங்கமே! தண்டே!
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்!
பறவை அரையா! உறகல் பள்ளியறைக் குறிக்கோண்மின்!


இப்படித் தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார் ஆனார்!
எந்த ஆழ்வாரின் பிரபந்தங்களை ஓதுவதற்கு முன்னரும், இந்தத் திருப்பல்லாண்டை சொல்லி விட்டே, மற்றவற்றை ஓத வேண்டும் என்பது கோவில் மரபு ஆகி விட்டது! அது மட்டுமா?......................


மற்ற ஆழ்வார்கள் எல்லாம், கண்ணன் வராவிட்டால்....
ஒன்று தூது அனுப்புவார்கள், இல்லை இப்படி என்னை வதைக்கிறானே பாவீ.... என்று வசைமாரி பொழிவார்கள்!
ஆனால் யசோதை மட்டும் தான்,
"கண்ணனை வீட்டுக்குள் பூட்டியும் வைக்க முடியாது. அப்படி செய்தால் உலக அனுபவம் அவனுக்கு இல்லாமல் போய்விடும்! அய்யோ வெளியில் சென்றானே, இன்று எந்தப் பாவி எந்த ரூபத்தில் குழந்தையைச் சூழ்ந்தானோ" - என்று தினம் தினம் செத்துப் பிழைத்தாள், ஓராயிரம் முறை!

அப்படியே தான் பெரியாழ்வாரும் செத்து செத்துப் பிழைக்கிறார், கண்ணனைப் பற்றிய கவலையில்!
அவன் பிறந்த நாளை அக்கம் பக்கத்தார்க்கு நேரடியாகச் சொன்னால், கம்சன் கண்டு பிடித்து விடுவானோ என்று பயப்படுகிறார்! அதனால் "அட்டத்தின் பத்தாம் நாள் வந்து தோன்றிய அச்சுதன்" என்கிறார்!

ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாம் நாள் எது? - முன்னிருந்து கணக்கு போட்டா ரோகிணி - பின்னாடி இருந்து கணக்கு போட்டா திருவோணம்! கம்சனும் அவன் ஆளுங்களும் குழம்பட்டும்! நாம குழந்தையின் பிறந்த நாளைக் கொஞ்சம் மறைஞ்சே கொண்டாடுவோம் - என்று அப்படி ஒரு பரிவு பட்டர் பிரானுக்கு!

ஷைலஜா ஒரு பதிவில் கதை போல் சொல்லி இருந்தார்கள்; மிக வயதான ஒரு அம்மா, புகைவண்டி Upper Berth-இல் தூங்கும் தன் "ஐம்பது வயதுக் குழந்தை", எங்கே புரண்டு விழப் போகிறானோ என்று பயந்தார்களாம்!
எத்தனை முறை நம் வீட்டிலேயே, நம்ம அம்மா,
"டேய்...பாத்து போய் வாடா, ரோடு க்ராஸ் பண்ணும் போது ஜாக்கிரதை!", என்று இந்த வயதிலும் சொல்லுகிறார்கள்! :-)

- இப்படிப்பட்ட தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார்!
- ஏனையோர் தங்களைத் தலைவியாக்கிக் கொண்டு, தலைவனைச் சேர விரும்பி இருக்க, இவர் மட்டும் கடமையை மட்டுமே கைக்கொண்டு, கைங்கர்யம் புரிந்ததால் பெரிய ஆழ்வார்!

- ஜனகன் வில் தூக்கும் போட்டி வைத்து பின்னர் தான் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். ஆனால் இவரோ போட்டா போட்டி எல்லாம் எதுவும் வைக்காது, பெருமாளை ரொம்பவும் வருத்தாது, மகளைத் தானே கொண்டு போய்க் கொடுத்தார். அவன் செல்வம் செழித்திருக்க, திருவை அவனுக்குக் கொடுத்ததால் பெரிய ஆழ்வார்!

- பெருமாளுக்கே தாய் ஆனதால் பெரிய ஆழ்வார்!
- ஆண்டாள் பூமித் தாயின் அம்சம்! அந்த தாய்க்கே தந்தை ஆனதால் பெரிய ஆழ்வார்!
- இப்படி இவர் ஒருவரே,
அவனுக்குத் தாயுமாகி, அவளுக்குத் தந்தையும் ஆனதால் பெரிய - பெரிய ஆழ்வார்!


கீழே பாட்டைப் பாருங்கள்! இந்தப் பாட்டு தான், ஏன் "பெரிய" ஆழ்வார் என்பதற்கு முக்கியமான பிரமாணம்!
இதைப் பாடியவர், மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சார்யர்! - திருவரங்கக் கோயிலில் தமிழ் வழிபாட்டுக்கு இடைஞ்சல் வந்த போது, தமிழைத் தாங்கிப் பிடித்தவர்! நீங்களே ஒரு முறை வாய் விட்டுப் படியுங்கள்!

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வஅளவு தானன்றி -
பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
"பெரிய"ஆழ்வார் என்னும் பெயர்!


மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
இவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!
தாய் போல் பொங்கும் பரிவு! தாய்ப்பால் பொங்கும் பரிவு! - அதனாலேயே அவர் பெரிய ஆழ்வார்!

விருத்திபெறு வில்லிபுத்தூர் விளங்கவந்தான் வாழியே!
பெருமைமிகு ஆண்டாளைப் பெற்றபிரான் வாழியே!

பட்டர்பிரான் வாழியே! பட்டர்பிரான் வாழியே!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!!

Read more »

Tuesday, June 26, 2007

அ என்றால் 8!

எல்லாரும் விதம் விதமா எட்டு போட்டுட்டாய்ங்க! கடைசியா எட்டு போடறவங்களுக்கு ஒரு ஈசியான வேலை என்னன்னா அடுத்த எட்டுக்கு யாரைக் கூப்பிடலாம்-னு மண்டைய போட்டு ரொம்ப உடைச்சிக்க வேணாம்.

ஏன் என்றால் ஏற்கனவே பல பேர் உடைச்சிட்டு போயிட்டுருப்பாங்க!
தேர்தல் நாள் அன்று சாயந்திரமா ஓட்டு போடப் போனா, எதுனா மிஞ்சுமா? உங்க ஓட்டு உங்களுக்குச் சிரமம் இல்லாம ஏற்கனவே அரங்கேறி இருக்கும்!

அன்பர் SK ஐயா, குட்டிப் பிசாசு என்னும் சுட்டி அருண், தளபதி CVR, மற்றும் கதாநாயகன் சந்தோஷ் அவர்கள் எல்லாருக்கும் ஒரு வாயி நன்றி சொல்லிட்டு, இதோ நம்ம எட்டு!

அட இன்னிக்கி தேதி June 26...இதன் கூட்டுத் தொகையும் 8-ப்பா! ச்சே...
சொல்ல வந்தது என்னன்னா...ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம்
பெரியாழ்வார் திருநட்சத்திரம்...அதான்பா Birthday!
இன்னிக்கி இந்தப் பதிவ போட்டதனால, நாளைக்கு பெரீய்ய்ய்ய்ய் ஆழ்வாரைப் பற்றித் தனியா பதிவு போட்டுடறேன்! :-)


௧.1
எட்டு-ன்னதும் மொதல்ல ஞாபகத்துக்கு வர்றது எட்டெழுத்து தானுங்கோ!
அதுக்குத் திரு எட்டு எழுத்து-ன்னும் ஒரு பேரும் உண்டுங்கோ! அஷ்டாக்ஷரம் என்று வடமொழியில் சொல்லுவாங்க...ஆனா எதுல எப்படிக் கூட்டினாலும் எட்டு எழுத்து தான் வரும்!

எது என்னான்னு நீங்களே பின்னூட்டத்தில் சொல்லுங்கோவ்!
அதைத் தான்
"குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும், நீள் விசும்பு அருளும், அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும், மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்.....என்னும் நாமம்"
என்று பாடினார்கள்!


௨.2
எங்க ஆயா சின்ன வயசுல, யானையில போட்டு என்னை ஆட்டுவாங்க!....அட நீங்க ஒண்ணு...யானை எங்க வீட்டுச் செல்லப் பிராணி கிடையாது.
தூளி, தொட்டில் என்பதைத் தான் ஊர் வழக்குல யானை-ன்னு சொன்னேன்!
அவங்க அப்பிடி ஆட்டும் போது, ஏதாச்சும் பாட்டு பாடிக் கொண்டே ஆட்டுவாங்க. பாதி நேரம் திருப்பாவை தான்! நான் தூங்குறாப் போலத் தெரிஞ்சிச்சுனா பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத்திடுவாங்க!

நான் அப்பவே கொஞ்சம் அதிகப் பிரசங்கி போல! பாட்டிக்கு மறந்து போச்சாக்கும்-ன்னு நெனச்சி, மீதிப் பாட்டை நானே fill in the blanks செய்வேனாம்! அதுல அவுங்களுக்கு ஒரே புளகாங்கிதம்! தன் இறுதி நாட்களில் கூட அதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்! இதுனால என் தங்கச்சிக்கு ஒரே stomach burning என்பது தனிக்கதை :-)


௩.3
எங்க கிராமத்துக் கோவிலில், திறந்த வெளி அதிகம். நிறைய பூச்செடிகள்!
கஜேந்திர வரதராஜப் பெருமாள். நல்ல ஜம்முன்னு காம்ப்ளான் பாய் மாதிரி இருப்பாரு, சிரிச்ச முகமாய்!

ஆனா ஊன்னா...நம்மள கூப்பிட்டு அங்கே மண்டபத்துல உக்கார வைச்சிடுவாங்க! ஏன்னா தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாக் கூட திருப்பாவை படபடவென்று கொட்டுவேனாம். இத்தனைக்கும் மூனாங் கிளாஸ் தான்!
ஆனா அந்த மண்டபத்தில் உட்காரறது ரொம்ப கஷ்டம்ங்க! ரொம்ப கொசுத் தொல்லை இருக்கும்! ஓங்கி உலகளந்த உத்தமன் Bare Bodyன்னு ஆரம்பிச்சாலே போதும்...Bare Body இல் கொசு கடிச்சு Red Body ஆகிடும். :-)

அப்ப தான் ஒரு நாள், டார்டாய்ஸ் கொசு வர்த்திச் சுருள் ஒண்ணு வீட்டுல வாங்கியாந்து கொளுத்தினாங்க. அப்ப தான் அதை முதல்முறையா பார்க்கிறேன். ரொம்ப பிடிச்சு போச்சு! ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சிட்டு காலையில் எழுந்திரிச்சி பாத்தா ஒண்ணுமே இருக்காது!


ஒரு நாள் மாலை, அர்ச்சனைத் தட்டுக் கூடையில், நாலைஞ்சு டார்டாய்ஸ் எடுத்து போட்டுக்கினு கோயிலுக்கு புறப்பட்டு விட்டேன்! கூடையில் ஏற்கனவே அம்மா கொஞ்சம் பூ வைச்சிருந்தாங்க. நான் போய் கூடையை அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் கூடையில் கொசுவர்த்தியைப் பாத்துட்டு என்னடா இது-ன்னு ஒரு அதட்டல் போட்டார்.

நானும் ரொம்ப பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, "சாமீ...இங்க கொசுக் கடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கொஞ்ச நேரம் இருக்குற நமக்கே இப்படின்னா...பாவம் பெருமாள்! எவ்ளோ நேரம் நிக்கறாரு. அவரைக் கொசு கடிக்கக் கூடாதுன்னு தான் வீட்டில் இருந்து எடுத்தாந்தேன். கொளுத்தி வைங்க சாமீ" என்று சொன்னேனாம்!

மனுசன் நான் ஏதோ விதண்டாவாதம் பண்றதா நினைச்சிட்டாரு போல! உடனே பளார்!
வீட்டுக்கு வந்து அங்கும் போட்டுக் கொடுத்து விட்டார். என்னை வீட்டில் எல்லாரும் விசாரிக்க, நான் ஒரே அழுகை! இதுவும் சக்கரம் மாதிரி தானே இருக்கு, வைச்சா என்ன குறைஞ்சு போயிடுவாருன்னு justification வேறு செய்து கொண்டிருந்தேன் போல!

நல்ல வேளை...விஷயம் கேள்விப்பட்டு குருக்கள் மனைவி வந்தாங்க. என்னைக் கட்டி அணைத்து, "குழந்தை என்னமா சுவாமி மேல அக்கறையா கொண்டாந்திருக்கான். அவனைப் போயி எல்லோரும் வையறீங்களே"ன்னு சொல்லி அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க! நானும் அழுகைய நிறுத்திச் சமாதானம் ஆனேன்!
ஆனா இன்னிக்கி வரைக்கும் யாரும் கொசுவர்த்தியைக் கொளுத்திக் கோவிலில் வைக்கலை என்பது எனக்கு ஒரு வருத்தம் தான்! :-)


௪.4
பள்ளி/கல்லூரி நாட்கள் மறக்க முடியாதவை!
அதிலும் "அடியேன்" பெரியார் கொள்கைகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகத்தில் இருந்த நாட்கள்.

சென்னை, தினத்தந்தி அலுவலகம் அருகே உள்ள பெரியார் திடலில் தான் ஐயா பெரியாரின் நினைவிடமும், தி.க அலுவலகமும்!
வீரமணி ஐயாவிடம் நேரடியாவே பேசலாம்! ரொம்ப பந்தா எல்லாம் கிடையாது!
கம்பராமாயணம், பெரிய புராணம், ஆழ்வார் பிரபந்தங்கள் - எல்லாம் தமிழ்க் கருவூலங்கள் - இவை எரிக்கப்படக் கூடாதுன்னு அவரிடம் வாக்குவாதம் எல்லாம் செஞ்சிருக்கேன்!


ஆனாலும் அவை ஒரு போராட்டத்தில் எரிக்கப்பட்ட போது, எனக்குள் தோன்றியது முதல் விரிசல்!
பின்பு கல்லூரியில் பேராசிரியர் மதி சீனிவாசன் அவர்கள் பார்வை பட்டு, எப்படியோ அரங்கனிடம் மீண்டும் வந்து சேர்ந்தேன்!
சென்னைப் பல்கலையில், துறைத் தலைவர் டாக்டர் M.A வேங்கடகிருஷ்ணன் அவர்கள், சாதி வித்தியாசங்கள் எதுவும் பாராது, ராமானுசர் வழியில் அரவணைத்துக் கொண்டதும், திருவரங்கத்து நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணும் நற்பேறு ஏற்படுத்திக் கொடுத்ததும்...
...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது நூற்றுக்கு நூறு உண்மை!
குலதெய்வம் முருகன். சென்றது பெரியார் கழகம். மீண்டது பெருமாளிடத்தில்! :-)


௫.5
கல்லூரி ஆண்டு மலருக்கு பல பிரபலங்களைப் பேட்டி கண்டது மறக்க முடியாத ஒன்று!
அண்ணாச்சி ராஜகோபால் (அதாங்க நம்ம சரவண பவன் அண்ணாச்சியே தான்), பத்திரிகையாளர் சோ, தமிழறிஞர் அவ்வை நடராஜன், இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்று பலரைப் பேட்டி கண்டோம். அப்போது தான் கல்லூரிக்கு வெளியே கிடந்த, போட்டி நிறைந்த professional life பற்றி ஒரு பார்வை கிடைச்சுது!

நான் எங்கள் Batchக்கு Placement Representative ஆகவும் இருந்தேன். எங்கள் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களும் அதிகம். ஆங்கிலம் சரளமாக வரவும், Campus நேர்காணல், ஆளுமை வளர்ச்சி (Personality Development) ன்னு பல முயற்சிகள்!
Day Scholarஆக இருந்த நான் பாதி நாள் ஹாஸ்டல் வாசம் செய்து வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டேன்!
இறுதியாக எங்கள் பேட்சில் 29/30 placement கிடைத்தது. இது ஒரு பெரிய மகிழ்ச்சி, அனைவரின் இல்லங்களிலும்!

பி.கு: எங்கள் கல்லூரியில் தான் அப்துல் கலாம் ஏரோனாட்டிக்கல் பயின்றார். So, எங்க சீனியருப்பா அவரு!


௬.6
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது, இந்திய-அமெரிக்க உறவுகளில் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. பல நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. அவர் இந்தியாவுக்கு வந்த போது எங்கு பார்த்தாலும் ஒரே craze. நாடாளுமன்றத்தில் கூட உறுப்பினர்கள் அவருடன் கை குலுக்க ஒரே போட்டா போட்டி.
அது என்னடான்னு அப்புறம் பார்த்தா தான் தெரிஞ்சுது...மோனிகாவைப் பிடித்த கையை இவர்களும் பிடிக்க ஒரே ஆர்வக் கோளாறு என்று :-)

அவர் ஓய்வு பெற்ற போது, இந்திய-அமெரிக்க நல்லுறவு மலர்ந்தது பற்றி அவருக்குச் சும்மானா ஒரு கடுதாசி போட்டேன்! அமெரிக்கா வந்த புதுசு அப்போ. தமிழ்மணம் எல்லாம் கிடையாது அல்லது எனக்குத் தெரியாது! அப்புறம் அதை மறந்தே போயிட்டேன்!
திடீர்ன்னு ஒரு நாள் தபால்காரர் என்னைக் கூவி அழைத்தார். என்னடானு பார்த்தா வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு கடிதம்.

சரி சும்மானா நன்றி என்ற வாழ்த்து அட்டையா இருக்கும்னு நினைத்துப் பிரிச்சா,
தலைவர் ஒரு பக்கப் பதில் கடிதம் எழுதி, கையெழுத்து போட்டு அனுப்பி வைச்சார். ஆகா..ன்னு ஒரு போதை ஏறி அடங்க ஒரு மூணு நாள் ஆச்சுது!


௭.7
குழந்தைகள் நலத் திட்டங்களில் அதிக அக்கறை கொண்டது நியூயார்க் வந்த பிறகு தான்!
Multiple Sclerosis நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி, மற்றும் அதற்கு நிதி சேர்க்க நியூயார்க் five borough சைக்கிள் டூர் என்று ஓடுகிறது...
இதோ சுட்டி!



௮.8
வெட்டிப்பயல் பாலஜியும் நானும் விடிய விடிய ஒரு நாள் காரசாரமாக தொலைபேசிக் கொண்டிருந்தோம். இரவு பத்து மணிக்குத் தொடங்கிய பேச்சு மறு நாள் வைகறை 4:30 மணிக்குத் தான் நின்றது!
அப்படி என்னடா பேசிக்கிட்டீங்கன்னு கேக்குறீங்களா?

ஹிஹி...அது என்னன்னா பேச்சுக்கு பேச்சும் ஆச்சு, வைகுண்ட ஏகாதசிக்கு ஏகாதசியும் ஆச்சு என்று அந்த ஏகாதசிக்கு அவரும் என்னுடன் சேர்ந்து கொண்டார். இப்போது நினைத்தாலும் கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது!


அப்பாடா...எட்டு எட்டுன்னு எட்டியாச்சுப்பா!
அடுத்த திட்டம்.....எட்டு முறை சிவாஜி பாக்க வேண்டியது தான்! (ஏற்கனவே ரெண்டு முறை பார்த்தாச்சு...அய்யோ கொத்தனார் என்னைக் கொத்த வரா மாதிரியே இருக்கே! :-)

அப்பறம், மறக்காம காப்பி & பேஸ்ட்
விளையாட்டின் விதிகள்: (உங்களின் தலைவிதிகள்:-)
1. ஆடுபவர் தன்னைப் பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.) அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும் -
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் - இது எல்லாம் optional தான் - நிறைய பேரு இதை மதிக்கலை. ஸோ...கண்டுக்காதீங்க! :-)

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும். - முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)

நான் அழைப்பது:
செல்வன்
சிவபாலன்
வாத்தியார் ஐயா
தமிழ் சசி
நா.கண்ணன்
சாத்வீகன்
அன்புத் தோழி
திராச
Read more »

Thursday, June 21, 2007

அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்!

நாள்: நவம்பர் 20, 2003
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
(pdf version of this post)

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
- இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!

இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!
முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்!

அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன்.
ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர்.
அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார். நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.

இனி என்ன? நேரே தரிசனம் தான்!

ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!

"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!

இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!

முன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்....
திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு
என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.
ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!

அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,
இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்;
அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!

துலுக்கா நாச்சியார் என்ற இஸ்லாத்தின் பெண்மணி, இறைவனைக் கண்டு மோகித்த போது, உள்ளே அனுமதி மறுத்தாரா இராமானுசர்?
இல்லையே! அவளுக்குத் தனிச் சந்நிதி அல்லவோ கண்டார்!
அவர் வழி வந்த ஜீயர்கள், அரசியல் அவலத்தால் அன்பர்கள் அல்லல்படக் கூடாது என்று இந்த மாற்று வழி கண்டனர்!

பின்னர் காலம் உருண்டோடியது!
முகம்மதிய சுல்தான்களின் ஆட்சி எல்லாம் போயே போய் விட்டது! ஆனால் வழக்கத்தை மட்டும் மாற்ற யாருக்கும் தோன்றவே இல்லை! மறந்தே போனது!

மடத்தில், பூனையின் தொல்லை அதிகம் இருந்ததால், அதைத் தூணில் கட்டிவிட்டு பாடம் எடுத்தார் ஒரு குரு.
அவருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில், பூனைகள் தொல்லையே மடத்தில் சுத்தமாய் இல்லை.
இருந்தாலும் எங்கிருந்தோ தேடிப் பிடித்து, ஒரு பூனையைக் கொண்டு வந்து தூணில் கட்டி விட்டுத் தான் பூசைகளை ஆரம்பித்தார்களாம்:-)
அந்தக் கதை ஆகி விட்டது!

இது போன்ற விடயங்கள் இப்போது பெரும் பிரச்சனையாகக் கிளம்பி, ஆளாளுக்கு அரசியல் பண்ணத் துவங்கி விட்டார்கள்!
அரசியல் சட்டங்கள் கூட மாற்றமும் திருத்தமும் பெறுகின்றன.
ஆனால் அவை எப்போது செல்லும் என்றால்,....
அதை மக்கள் பிரதிநிதிகள், தாங்களாகவே அவையில் கொண்டுவர வேண்டும்.

அதே போல் தான், கால வழக்கமாக ஏற்பட்ட ஆலய விதிகளும்;
அவை திருத்தப்படலாம்.
ஆனால் அவற்றை வெளியில் இருந்து திணித்தால் வம்பு தும்புகள் தான் பறக்கும். அவரவரே செய்ய வேண்டும்!

ஆன்மிகப் பெரியவர்களும், மடங்களும், ஆலய நற்பணி மன்றங்களும் சேர்ந்து கலந்துரையாடினால் ஒரு நல்ல வழி கிடைக்கும்!
எல்லாரையும் கூட்டுவது சிரமம் என்றால்...பெருமைக்குரிய மடங்கள் ஒரு சிலவாவது, இதற்கு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்!
ஒன்றைப் பார்த்து படிப்படியாக இன்னொன்றும் தெளிவு பெறும்!

இராமானுசர் வழியில், அனைத்துச் சாதி-அர்ச்சகர்கள் பயிற்சித் திட்டம் போன்ற நல்ல மறுமலர்ச்சிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்,
முதல்வர் கலைஞரின் மதிப்பைப் பெற்ற திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர், மற்றும் பரனூர் அண்ணா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் போன்றோர் இது போன்ற முன்முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்!
- இவர்கள் எல்லாம் ஒரு unifying Force என்னும் ஒருங்கிணைப்பு சக்தியாகச் செயல்பட்டால், இதை எளிதில் தீர்த்து விடலாம்!

சரி, நாம் அப்துல் கலாமுக்குத் திரும்பி வருவோம்!


நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.

வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?

கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.

அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!

அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)



வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...

யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!

கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!

பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!


அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!

வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP