மதுரையம்பதி: சந்தியா வந்தனம்! சந்திப்பு வணக்கம்!

அடியேன் "மெளலி அண்ணா" என்று அப்போது அழைத்த, இப்போதும் அழைத்துக் கொண்டிருக்கும், எப்போதும் அழைக்கப் போகும்...
நம்ம மதுரையம்பதி-சந்திரமெளலி அவர்களின் பிறந்த நாள் இன்று! (Aug-02)
அன்னையின் புகழ் பாடுபவர்-ன்னா ஆடி மாசம் தானே பொறக்கணும்!
அடியேனும் தோழி பிறந்த மாசத்தில் தானே அண்ணனைக் கலாய்க்கணும்! :)
மெளலி அண்ணாவின் பிறந்த நாள் சிறப்புப் பதிவே இது!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி அண்ணா! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)

அப்படியே, அண்ணி, அன்னிக்கு உங்க வீட்டில் எனக்கு-ன்னு பண்ணாங்களே...
காரவடை, அடை அவியல்...அதை இன்னிக்கும் பண்ணச் சொல்லுங்க! தட்டில் வைக்காம, அதே போல் நறுக்கு வாழையிலையில் வைத்துத் தரச் சொல்லுங்க! :))
சந்தியா வந்தனம்-ன்னா என்னா-ன்னு மேலோட்டமா பார்க்கலாமா? ஆனா...அதுக்கும் முன்னாடி...
மாதவிப் பந்தலில் இறைவனைப் "பாவிப்பது" பற்றியே அதிகம் பேசப்படுகிறது!
* கர்மாக்கள் பின்னே! பகவான் தான் முன்னே!-ன்னு
* பந்தலில் அடிக்கடிச் சொல்வதால்....
கர்மாக்கள் எல்லாம் தேவையே இல்லை! குப்பையில் போடுங்கள்! - என்று அர்த்தமா? அப்படி-ன்னு எடுத்துக் கொள்ளப் படுகிறதா என்ன? :)
அட, பாவனா-வையெல்லாம் பாவிக்கறோம், வால் பேப்பரில் போட்டு வைக்கிறோம், அவிங்கள பார்த்திரா விட்டாலும் நம்ம உறவுக்காரப் பொண்ணு போல பாவிக்கறோம்! கனவுல எல்லாம் வராங்க! :)
பாவனா-வையெல்லாம் பாவிக்க முடியும் போது, பகவானைப் பாவிக்க முடியாதா என்ன? :)
முடியும்! முடியும்! என்ன......கொஞ்சம் பழகிப் பார்க்கணும்! பழகினாத் தானே காதல் கத்திரிக்காய் எல்லாம்? சூப்பர் ஸ்டார், சிவாஜி படத்துல சொல்லுறாப் போல, "பழகலாம், வரீங்களா?" :)
பகவானை "உண்மையாக" பாவிப்பது என்பதும் கிட்டத்தட்ட காதலிப்பது போலத் தான்!
* சட்டப்படியான திருமணங்கள் உண்டு!
* ஆனால் எந்த ஊரிலும் "சட்டப்படியான காதல்"-ன்னு இருக்கா? :)
அதனால் சட்டங்களைச் "சற்று" பின்னுக்குத் தள்ளி,
பகவானை மட்டுமே முன்னுக்குத் தள்ளும் போது....
காதலை ஏற்றுக் கொள்ளாத வீடுகளில் கொஞ்சம் கோவம் வருது! :)
அது போலத் தான் ஆன்மீகப் பெரியவர்கள்/பதிவர்கள் அடியேன் மீது கொண்டுள்ள சிலச்சில கோவங்களும்! :))
ஆனா, நீங்களே சொல்லுங்க! இந்தக் கேஆரெஸ் பய புள்ள என்னைக்குத் தான் சொன்ன பேச்சைக் கேட்டிருக்கான்? சாஸ்திரத்தை மதிச்சி நடந்து இருக்கான்? :)
யார் மதிச்சாலும் மதிக்கா விட்டாலும், இவன் மதிக்க வேணாமா? மத்தவங்க ஆயிரம் பேசட்டும்! ஆனா இவன்...இவனே இப்படியெல்லாம் பேசலாமா? :)
ஆன்மீகத்தை "வேற வேற மாதிரி" எழுதி வம்பு பண்ணறான்!
மனசுல பெரிய கோகுலத்துக் கண்ணன்-ன்னு நினைப்போ?
இந்திரனுக்குப் பண்ணி வந்த பூசையை நிறுத்தி, மலைக்கு பண்ணச் சொன்ன நினைப்போ?
மலையைக் குடையாப் பிடிக்க முடியுமா இவனால? குடை--மிளகாயைக் கூடப் புடிக்க முடியாது! ஆமாம்! :)
* கர்மாக்கள் பின்னே! பகவான் தான் முன்னே!-ன்னு
* பந்தலில் அடிக்கடிச் சொல்வதால்....
கர்மாக்கள் எல்லாம் தேவையே இல்லை! தூக்கிக் குப்பையில் போடுங்கள்! - என்று அர்த்தம் இல்லை!
செய்யற தப்பையெல்லாம் செஞ்சிட்டு, உடன் பிறவாச் சகோதரிகள் போல...பரிகாரம் பண்ணிக்கலாம் என்ற மனோபாவம்....பரிகாரம் என்ற பேரில்...யாகம், ஹோமம், துணியை நெருப்பில் போட்டு பொசுக்கல்-ன்னு
"சுயநலமான கர்மாக்களை" மட்டுமே பல பதிவுகளிலும் சுட்டிக் காட்டுவது! இவற்றுக்குப் பேரு = காம்யார்த்த கர்மாக்கள்!
இவற்றை ஒரு நல்ல சரணாகதன் செய்ய மாட்டான் என்பது அடியேன் சொல் அல்ல! ஆசார்யர்கள் வாக்கு!!
ஆனால் நித்ய கர்மாக்களும், நைமித்திக கர்மாக்களும் மிகவும் அவசியமானவை!
அதையும் புரிந்து கொள்ள வேணும்! அதிலும் இறைவனுக்கே முதலிடம்! வெறும் சடங்குக்கு அல்ல!
* காதல் கணவனே முக்கியம்! = இறைவன்!
* வீட்டுக் கடமைகள் அவன் நலத்துக்கே! ஒப்புக்குச் செய்வதில்லை! = நித்ய கர்மாக்கள்!
* பேராசையான வைர நகை, ஆடித் தள்ளுபடி ஷாப்பிங் = காம்யார்த்த கர்மாக்கள்!
புரிந்ததா? புரிந்ததா? புரிந்ததா? :)
இப்போ நித்ய கர்மாவான சந்தியா வந்தனம்-ன்னா என்னா-ன்னு மேலோட்டமா பார்க்கலாமா? Once again, Happy Birthday Mouli Anna! :) )

சந்தி-ன்னா சந்திப்பு! இரு எதிர் வேளைகள் சந்திப்பது ஒரு சந்தி! சூரியன் நிலை மாறும் நிலை!
* காலைச் சந்தி = பிராதக் காலச் சந்தியா வந்தனம்
* மதியச் சந்தி = மாத்யான்னிகம்
* மாலைச் சந்தி = சாயம் சந்தியா வந்தனம்
இந்த மூன்று வேளையும் சந்தியா வந்தனம் அதாவது சந்திப்பு வணக்கம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திர விதி! சாஸ்திரமா? அப்படீன்னா?
அதாச்சும் சாஸ்திரம் சாஸ்திரம்-ன்னு தனியா ஒரு புத்தகம் எல்லாம் இல்லை! வேதம், உபநிடதம், இன்னும் பல நூல்களில் சொல்லியுள்ள விதிமுறைகளை ஒன்னாத் திரட்டி வைச்சா அதுக்குப் பேரு சாஸ்திரம்!
சாசனாத் இதி சாஸ்திரஹ! = Code of Conduct! இதைச் செய் என்று சாசனம் செய்வது சாஸ்திரம்!
எதுக்குச் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்? ஏன்?
வேதத்தில் சொல்லி இருக்கு! விதிச்சி இருக்கு! அதனால் செய்யணும்!
யஜூர் வேதம், தைத்ரீய ஆரண்யகத்தில், இரண்டு அனுவாகையில் சொல்லி இருக்கு! இது சாஸ்திர விதி! - அப்படின்னு இதைச் சிலர் விதிக்கப்பட்ட ஒன்றாய்ச் சொல்லலாம்!
உண்மை தான்! ஆனால் விதி-ன்னாலே கதி கலங்கி ஓடுபவர்கள் தான் இந்தக் காலத்தில் நிறைய! Break the Rules! :)
பாவம்! மனுசனைச் சொல்லியும் குற்றமில்லை! ஆபிசில் விதி, ரோட்டில் விதி, அட வீட்டில் கூட விதியே-ன்னு வாழறவன்!
விதிச்சபடியே லொங்கு லொங்கு-ன்னு வாழறவன் கிட்ட போய்,
இறைவன் கிட்டேயும் விதிகள்-ன்னு பேசும் போது, அவனால சத்தியமா முடியலை!
Frozen Idli சாப்பிட்டுச் சாப்பிட்டு, அம்மா கையால நல்ல இட்லி கெடைக்காதா-ன்னு உட்காரும் போது, விதியை நீட்டினா? :))

எதுக்குச் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்? விதியாக இல்லாமல், விவரமாகப் பார்க்கலாமா?
சூரிய வணக்கம் என்பது தொன்று தொட்டு பலரும் செய்து வருவது தான்! ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்! அதுவே சந்தியா வந்தனம்!
கிராமத்தில் வேளாளர்களும், விவசாயிகளும், இருட்டிலேயே கழனிக்குப் போய், உழ ஆரம்பிப்பார்கள்! அப்போது அவர்கள் கண் முன்னே பொல பொல-ன்னு விடியும் போது அவர்களும் சூரிய வணக்கம் செய்வார்கள்!
என்ன, அவர்கள் செய்வது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்! கைகளால் கண்களைக் குவித்து, சூரிய நாராயணா என்றே வாய் விட்டுச் சொல்லுவார்கள்! அதையே தான் வேதமும் சொல்கிறது!
சத சவித்ரு மண்டல மத்ய வர்த்தே! நாராயணஹ!
சரசிஜாசனா, சாம்னி விஷ்டஹ!
கேயூரவான்! மகர குண்டலவான்! கிரீடே! ஹாரீ! ஹிரண்மய வபுர்!
தித சங்கு சக்ரஹ!
சங்கு சக்ர கதாபாணே, துவாரகா நிலைய அச்சுத
கோவிந்த புண்டரீகாட்சா, ரக்ஷமாம் "சரணாகதம்"!
இது தினப்படி சூரிய வணக்கம் செய்யும் போது, சைவ/வைணவ, சாதி/மத பேதமின்றி அனைவரும் சொல்வது!
தினப்படி செய்யும் சந்தியா வந்தனமே, "சரணாகதம்" என்றல்லவோ பேசுகிறது!
![]() | ![]() |
சத சவித்ரு மண்டல மத்ய வர்த்தே! நாராயணஹ!
= சூரிய மண்டல மத்தியில் இறைவன் எழுந்தருளுகிறான்!
அவன் எழுந்தவுடன், உயிர்களும் எழுகின்றன! உலக இயக்கமே ஆரம்பிக்கிறது!
* ஓரறிவு ஈரறிவுச் செடிகளுக்கான Photosynthesis முதல்,
* ஐந்தறிவு ஆறறிவுக்கான உணவு தேவைப்பட ஆரம்பிக்கிறது! இரவில் இல்லாத உடை கூட பகலில் தேவைப்படுகிறது! :)
இப்படிப் பிரத்யட்சமான ஒரு இயக்கம் துவக்கம்! அதுவே சந்தியா வந்தனம்!
வெளியில் ஒளி மயமாக எழும் சூரியனை, நமக்குள்ளே உள் வாங்கிக் கொள்ளும் முறை தான் சந்தியா வந்தன முறைகளில் சொல்லப்பட்டிருக்கு!
* ரஜோ குண, தமோ குணங்களில் தூங்கிக் கிடந்த உயிர்,
* இன்றைய பொழுதுக்கு எழுந்து கொள்ளும் போது,
* அதுக்கு ஆற்றல், புத்துணர்ச்சி, நினைவு, இயக்கம் என்று அனைத்தும் தரவல்லவை இந்தச் சூரிய வணக்கம்!
சூரிய வணக்கம்-ன்னா, அய்யோ, சூரியனே ஒரு கோள் தானே, அதையா போயிக் கும்பிடுவாங்க?-ன்னு விபரீதப் பகுத்தறிவு பேசக் கூடாது! :)
அதான் வெறுமனே சூரியன்-ன்னு சொல்லாம, அந்த மண்டலத்தில் உலகத்துக்கே உயிர்ப்புச் சக்தியாய் இருக்கும் இறைவன் = சவித்ரு மண்டல மத்யவர்த்தே என்று சொன்னார்கள்!

சந்தியா வந்தனம் என்பது அந்தணர்களுக்கு மட்டும் தானே? மற்றவர்கள் செய்வாங்களா என்ன?
மற்றவர்களும் செய்வார்கள்! ஆனால் அவரவர் வழிகளில்! உழவர்கள் செய்வதைச் சொன்னேன்! அனைவருக்கும் பொதுவானது தான்! அந்தணர்கள் செய்வதில் இருந்து வழிமுறைகள் மாறுபட்டு இருக்குமே தவிர, மற்றபடி ஒன்றுமில்லை!
ஆழ்வார்கள் நாலாயிரமே சந்தியாவந்தனத்தில் தான் தொடங்குகிறது! வெய்ய கதிரோன்-வையம் தகளியாய் என்றே துவங்குகிறார்!
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று = தமஸோ மா ஜ்யோதிர் கமய!
சூரியன், இந்திய ஜோதிட நூல்களில், உடல் நலத்தின் தேவதையாகவும் வைக்கப்பட்டு உள்ளான்! அதனால் ஞாயிறு மூலமான வழிபாட்டுக்கு இன்னும் ஏற்றம்! மேலும் சந்தியா வந்தனத்திலேயே பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியும் இதனாலேயே வைத்துள்ளார்கள்!

கையில் நீர் எடுத்துக் கொண்டு, துதிகளைச் சொல்லி, நீரினைத் தூவி அவனுக்கே அளிப்பது என்பது சந்தியில் வழக்கம்! = இதுக்கு அர்க்கியம்-ன்னு பேரு!
காயத்ரி என்னும் மந்திரத்தை ஜபித்து, இந்த அர்க்கியம் கொடுக்க வேண்டும்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல, அவன் தந்த நீரினை அவனுக்கே தருதல்!
நீர் இன்று அமையாது உலகு! எனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு!
இப்படி எல்லாரும் நீரைச் சூரியனை நோக்கித் தூவுதல், சூரியனைப் பிடிக்க வரும் மந்தேகர் என்னும் இராட்சசர்களை விரட்டவே என்று ஒரு கதை இருந்தாலும்...
உண்மையான பொருள் என்னன்னா....மந் தேஹம் = ம + தேஹம் = நம் உடம்பு!
நம் உடம்பில் இரவில் தங்கி விட்ட ரஜோ தமோ குணங்களை விரட்டி,
சத்வ குண சம்பன்னான சூரியனை/இயங்கும் ஆற்றலை
நம்முள் உள் வாங்கிக் கொள்வதே தாத்பர்யம்! = அகச் சோதி!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் சந்தியா வந்தனம் செய்வார்கள்!
கிராமத்தில் ஒரு வகை-ன்னா, அந்தணர்களுக்குள்ளேயே விதம் விதமான வகைகள்! நிறைய வேறுபடும்! இருந்தாலும் அடிப்படை ஒன்று தான்! அதன் முக்கியமான கட்டங்களை மட்டும் பட்டியல் இடுகிறேன்!
சந்தியா வந்தன நிலைகள்:
1)
நீர் பருகல்: ஆசமனம்
மூச்சுப் பயிற்சி: பிராணயாமம்
உறுதி மொழி: சங்கல்பம்
2)
சரணாகதி: சாத்விகத் தியாகம்
நீரால் தூய்மை: புரோக்ஷணம்
3)
நீர் அளித்தல்: அர்க்கியம் என்னும் அர்க்கியப் பிரதானம்
4)
நன்றி உரைத்தல்: கேசாவாதி தர்ப்பணம்
5)
துதிகள்: காயத்ரி ஜபம்
ஓம்:
பூர் - புவ - ஸ்வஹ = சக்தி கொடுப்பதுவே! துன்பம் அழிப்பதுவே! இன்பம் தருவதுவே!
தத் - சவிதுர் - வரேண்யம் = அப்படிப்பட்ட ஒளியே! சிறப்பே!
பர்கோ - தேவஸ்ய - தீமஹி = வினை அறுப்பதுவே! தெய்வம் அதுவே! தருவதுவே!
தியோ - யோ - ந - ப்ரசோதயாத்: = சிந்தையை, எதுவே, எங்களுக்குத் தூண்டுவதுவே!
உனக்கு வணக்கம்! ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
(குறிப்பு: திருப்பாவையில் இது ஒவ்வொன்றுக்கும் ஒரு வரி அமைத்து உள்ளாள்! அதனால் தான் வேதம் அனைத்துக்கும் வித்து - கோதைத் தமிழ்!
எப்படி வேதத்துக்கு வித்து = இந்தக் காயத்ரியோ
அப்படி தமிழ் வேதத்துக்கு வித்து = கோதைத் தமிழ்!
இன்னொரு நாள் சொல்கிறேன்! இல்லையேல் விரும்புவோர் இங்கேயே முயன்று பாருங்கள்! :)
6)
இறைவன் இருப்பை உணர்தல்: உப ஸ்தானம்
7)
சந்தி கால தேவதைகளுக்கு வணக்கம்: சந்தியாதி தேவதா வந்தனம்
முன்னோர் வழிவழி உரைத்தல்: அபி வாதனம்
திசை காத்தல்: திக் வந்தனம்
8)
மீண்டும் துதிகள்: காயத்ரி ஜபம்
மீண்டும் நீர் அளித்தல்: அர்க்கியம் என்னும் அர்க்கியப் பிரதானம்
9)
நிறைவு: இறைவனின் தலங்களை மனத்தில் எண்ணிப் பார்த்துக் கொள்ளுதல்! உருவம் கடந்த இறைவன், நம் பொருட்டு, நமக்காகத் தலங்களில் எழுந்து இருக்கும் நன்றிக்காக எண்ணிப் பார்க்க வேண்டும் என்று, உடையவர் இதைச் சந்தியா வந்தனத்தில் விதியாகப் பின்னாளில் சேர்த்து விட்டார்! ஆனால் இது வைணவர்கள் மட்டுமே சொல்வது! அனைவருக்கும் பொதுவல்ல!
ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாசம் = திருவரங்கம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் = திருமலை
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோ ஜ்வல பாரிஜாதம் = திருக் கச்சி
ஸ்ரீ-சம் நமாமி, சிரசா யது சைல தீபம்! = யது கிரி என்னும் மேலக் கோட்டை!
எழுந்து கொள்ளல்:
அன்றாட கடமைகளுக்கு எழுந்து கொள்ளல்! அதற்கு முன் சவித்ரு மண்டல மத்ய வர்த்தனான இறைவனை உள் வாங்கிக் கொள்ளுதல்!
பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே, கர்த்தவ்யம் தைவ மான்னிஹம்!
கோசலை குமாரா ஸ்ரீராமா, பொழுது புலர்கின்றதே!
தெய்வீகத் திருச் சடங்குகள் செய்ய, எழுந்தருள் புருஷோத்தமா!

மேலே சொன்னவை சந்தியா வந்தனத்துக்கான அறிமுகம் மட்டுமே!
சந்தி for Dummies-ன்னு வச்சிக்கோங்களேன்! :)
விதியே-ன்னு செய்யாமல், மதியே-ன்னு செய்தால் தான் சிறப்பு!
முன்பே சொன்ன வண்ணம்,
காதல் கணவனான எம்பெருமான் உள்ளம் உவக்குமாறு நடத்தல் முக்கியம்! = இறைவன் திரு உள்ள உகப்பு!
ஒவ்வொரு செயலிலும், ஒன்றை ஆதரித்தாலோ, எதிர்த்தாலோ...எதைச் செயினும்...
இதைச் செய்தால் எம்பெருமான் திருமுகம் உவக்குமா? வாடுமா?
என்ற கேள்வியை நம்மிடமே கேட்டுக் கொண்டால்...
சந்தியா வந்தனங்கள் ஜொலிக்கத் துவங்கி விடும்!
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன, அவை தருவித்து அருள் பெருமாளே! - என்ற திருப்புகழ் சொல்லி, இந்தப் பிறந்தநாள் பதிவை நிறைவு செய்கிறேன்! ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!