Wednesday, August 12, 2009

ஓம் நமோ "Dash"! துன்பத்தில் கடவுளைக் கூப்பிடாதே!-2

துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு மட்டும் கூப்புட்டுறவே கூப்புட்டுறாதீங்க! அவரு ஆராய்ஞ்சி தான் அருளுவாரு! உங்க வேலை ஒன்னுமே நடக்காது! ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-ன்னு அவரைப் பற்றிப் பதிவுகளில் சொல்லிச் சிலாகிச்சவங்க கிட்டயே அவரோட வேலையக் காட்டீருவாரு! :))

துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு என்று கூப்பிடாதவனே உண்மையான பக்தன்!-ன்னு சென்ற பதிவில் முடிச்சி இருந்தேன்!
அதை நான் டகால்ட்டி பண்ணுவதற்காகச் சொல்லலை, ஆழ்வாரே சொல்றாரு-ன்னும் சொல்லி இருந்தேன்! துன்பம் வரும் போது இறைவனைக் கூப்பிடக் கூடாதா? வித்தியாசமா-ல்ல இருக்கு? ஏன்-னு பார்க்கலாமா?


துஞ்சும் போது அழைமின், துயர் வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம்!

* தூங்கும் போது கூப்பிடுங்கள்! = இது எப்படி-ப்பா? குறட்டையிலா கூப்பிட முடியும்? :)
* துயர் வந்தால் வாய் விட்டுக் கூப்பிடாதீர்கள்! நினைச்சாப் போதும்! = ஹா ஹா ஹா!
* துயரமே இல்லாதவங்க = இவிங்க வாய் விட்டுத் தாராளமாக் கூப்பிட்டுக்கலாம்! நன்றாம்!
* நாம சேர்த்து வச்சிருக்கும் வினைகளுக்கு விஷம் போல கசக்கும்! நமக்கோ இனிக்கும்! = நாராயணா என்னும் நாமம்!

இப்படிப் பாடுவது ராபின்ஹூட் ஆழ்வார் என்னும் என்னோட இலக்கிய ஹீரோவான திருமங்கை மன்னன்! :)
* துஞ்சும் போது = "நினைமின்"! துயர் வரில் = "அழைமின்"!-ன்னு சொன்னா ஓக்கே!
* துஞ்சும் போது = "அழைமின்"! துயர் வரில் = "நினைமின்"!-ன்னு மாத்திச் சொல்றாரே? ஏன்?


வெளிநாட்டில் இருக்கும் புள்ளைக்கு ஒரு சின்ன விபத்து! ரயில் வண்டில ஏறும் போது இடுக்குல காலைக் கொடுத்துட்டான்! மருத்துவமனை, கால்கட்டு, அது, இது-ன்னு ஏக களேபரம்! ஆனா வூட்டுல அம்மா அப்பா கிட்ட இது பற்றி மூச்சே விடலை! ஏன்?

இது நிறைய பசங்க பண்றது தான்! அம்மா அப்பா பக்கத்துல-யும் இல்லை! எங்கேயோ இருக்காங்க! எதுக்கு அவிங்களுக்கு வீண் டென்சன்?-ன்னு சொல்லிக்க மாட்டானுங்க! கமுக்கமா இருந்துருவானுங்க! ஆனா உள்ளுக்குள்ள மட்டும் ஓரமா ஒன்னு ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்!

* ஜூரம் வந்து வாயெல்லாம் கசப்பா இருக்கு! இந்நேரம் அம்மா இருந்திருந்தா, சூடா இடியாப்பம் பண்ணிக் கொடுத்து இருப்பாங்க! பாத்து பாத்து கவனிச்சி இருப்பாங்க-ல்ல?
* முன்ன ஒரு நாள், கால் வலியில் துடிச்ச போது, அப்பா எனக்குக் கால் அமுக்கி விட்டாரே? எங்கே தடுக்கப் போறேனோ-ன்னு, நான் தூங்கிட்டாப் பிறகு, மெல்ல எழுந்து வந்தாரு! எவ்ளோ நேரம் பிடிச்சி விட்டாரோ? பாத்ரூம் போக எழும் போது தான் தெரியவே தெரிஞ்சிச்சி!

இப்படியெல்லாம் உள்ளுக்குள் ஒளிஞ்சி இருந்தாலும், பசங்க வெளீல சொல்றதில்லையே! ஏன்?
* துயர் வரில், அம்மா-அப்பாவைப் பசங்க அழைக்கறதில்லையே? - ஒன்லி நினைமின் தான்! ஏன்?
* துஞ்சும் போது மட்டும் "அம்மா"-ன்னு அனத்தறாங்களே! அழைமின்! ஏன்? :)


அதே தான் ஆழ்வாரும் சொல்றாரு! = துஞ்சும் போது "அழைமின்"! துயர் வரில் "நினைமின்"! புரியுதா மக்கா?
எம்பெருமான் நமக்கு சாஸ்வதமான அம்மா அப்பா ஆச்சே!
ஆனா நாமளோ வாலிப மிடுக்குல, சுய சம்பாத்தியத்துல, சுய கெளரவம் எல்லாம் இப்போ நமக்கு வந்தாச்சி! எனக்கு முளைச்சி மூனே மூக்கா இலை விட்டாச்சி! :)

* குழந்தையா இருந்த போது = துஞ்சும் போது நினைச்சோம்! துயர் வரில் அழைச்சோம்!
* ஆனா இப்போ அப்படி இல்ல! உல்ட்டாவா பண்ணுறோம்! = துயர் வரில் நினைக்கிறோம்! துஞ்சும் போது அழைக்கிறோம்! :)

அதே தான் இறைவனிடத்திலும்! மூனு இலை விட்டாச்சி!
நமக்கு-ன்னு பதிவு போடும் அளவுக்கு "அறிவு", "ஞானம்"-ன்னு பலதும் வந்துரிச்சி-ல்ல?
எத்தனை பின்னூட்டம் பார்க்கறோம்? எத்தனை மனுசங்களைப் பாக்குறோம்? எத்தனை சண்டை போடறோம்? எக்ஸ்பீரியன்ஸ் மாமே எக்ஸ்பீரியன்ஸ்! :)


* ஞான யோகம் = நிறைய படிச்சி வச்சிருக்கேன்! பல விஷயம் "அறிந்தேன்"! ஆனால் "உணர்ந்தேனா"?
* கர்ம யோகம் = நிறைய கர்மா பண்ணுவேன்! சடங்கு தெரியும்! நானே கை போட்டு பல வேலை பண்ணுவேன்! "செய்தேன்" ஆனால் ஒழுங்கா "நெய்தேனா"?



இப்படி நாமளே முயன்று, நாமளே சுயமா அறிவைத் தேடி, ஞான/கர்ம வளர்ச்சி அடைஞ்சிட்டதனால, அம்மா அப்பாவான எம்பெருமானை வாய் விட்டுக் கூப்பிட ஏதோ ஒன்னு லேசாத் தடுக்குது! :)
- முருகாஆஆஆ-ன்னு சத்தமா எப்படிக் கூப்புடுறதாம்? சேச்சே! ஷேம்! ஷேம்! :)
- கோவிந்தாஆஆஆ-ன்னு வாய் விட்டு எப்படி அழைக்கறதாம்? அதெல்லாம் பஜனை கோஷ்டிக் காரங்க வேணும்-ன்னா பண்ணுவாங்க! :)

* நாமளோ ஞான/கர்ம யோகத்துல-ல்ல இருக்கோம்? தீர்வை "நாமளே" தேடிப்போம்! ஏதாச்சும் பரிகாரம், பிலாஸபி, பிரம்ம சத்யம் ஜகன் மித்யா-ன்னு இருக்கும்! அதைச் செய்வோம்!
* நேதி நேதி, அஹம் பிரம்மாஸ்மி-ன்னு, தத்துவக் கடல்-ல விழுந்து குளிப்போம்! சூப்பராப் பதிவுல கூடிக் கூடிப் பேசுவோம்!
* ஆனால் "கோவிந்தா"-ன்னு கூச்சம் இல்லாம பப்ளிக்கா அழைக்கிறது தான் கொஞ்சம் கஷ்டம்! நாலு பேரு ஒரு மாதிரி நினைச்சிப்பாங்க!
* அவன் உள்ள உகப்புக்கு எல்லாம் நடந்துக்க முடியாது! மெஜாரிட்டி ஆளுங்களோட ஒத்துப் போகணும்-ல்ல? ஒதுக்கி வச்சீருவாங்களே! கோயில்-ல மாலை மரியாதை பரிவட்டம் எல்லாம் கெடைக்க வேணாமா? :)

அதுக்காகப் பிள்ளைகளுக்குப் பாசமில்லாம எல்லாம் இல்ல! ஜஸ்ட் மூனே முக்கா இலை படுத்தும் பாடு! அதான் ஆழ்வார் சொல்கிறார்......
பரவாயில்லை! துயர் வரில் கூப்பிடக் கூச்சமா இருக்கா? சரி, கூப்பிட வேணாம்! "நினைத்துக் கொள்ளுங்கள்"! துஞ்சும் போது "அழைத்துக் கொள்ளுங்கள்"!
- ஆனால் தயவு பண்ணி, அது அழைத்தோ இல்லை நினைத்தோ, அவனைக் "கொள்ளுங்கள்"! அவனைக் "கொள்ளுங்கள்"!

உலகம் அளந்தானை "அளக்க" முடியாது! "கொள்ளத்" தான் முடியும்! அதனால்
* உளமாறக் கொள்ளுங்கள்!
* உளம் ஆறக் கொள்ளுங்கள்!
* உளம் மாறக் கொள்ளுங்கள்!

அவன் எங்கோ இருக்கும் பரமாத்மா = இறைவன் என்று சாஸ்திர பூஜையோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்!
உங்களுக்கும் அவனுக்கும் உறவு என்று அவனுடன் கொள்ளுங்கள்! "உறவு கொள்ளுங்கள்"!

* அவன் = அ
* நீங்கள் = ம்
* "உ"றவு கொண்டால் வருவது உ!
=> அவன்-உறவு-நீங்கள்! => அ-உ-ம்! => ஓம்!

உன் தன்னோடு-உறவேல்-நமக்கு.....இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்!


துயர் இலீர், சொல்லிலும் நன்றாம் = துயரம் இல்லாதவர்கள், "நாம தான் ஜாலியா இருக்கோமே? இப்ப எதுக்கு இறைவனைப் போய் நினைக்கணும்? எல்லாம் வயசான காலத்தில் பாத்துக்கலாம்! இப்போ ஜஸ்ட் என்ஜாய் மாடி"-ன்னு **மட்டும்** இல்லாம, அவன் பேரைச் சொல்லிப் பழகுங்கள்! துயர் இலீர் சொல்லிலும் நன்றாம்!

துயர் வரில் "நினைமின்" = துயரம் வந்துருச்சே! அய்யோ அய்யோ-ன்னு குதிக்காம, நாம என்ன தப்பு பண்ணோம்-ன்னும் கொஞ்சம் "நினைமின்"! கூடவே அவனையும் "நினைமின்"!

* அன்பன் ஆஞ்சநேயன்! வாலில் நெருப்பு வைத்த போது, "அய்யோ நெருப்பு, நெருப்பு! உன் வேலையாத் தானே வந்தேன்? துயர் வந்துருச்சே"-ன்னு குதிக்கலை! துயர் வரில் நினைமின்! நினைத்தான்!
* ஆசைப் பிரகலாதன்! மலையில் உருட்டித் தள்ளிய போது, "அய்யோ அய்யோ, உன் பேரைத் தானே சொன்னேன்? துயர் வந்துருச்சே"-ன்னு குதிக்கலை! துயர் வரில் நினைமின்! நினைத்தான்!

இப்படி "நினைத்தால்"....அவன் "நினைப்பாக" இருந்தால்....

துஞ்சும் போது "அழைமின்" = தூங்கும் போதும் உங்களை அறியாமல் அவனை அழைப்பீர்கள்! :)
பாரீசில், நான் யாரையோ அப்படித் தான் தூக்கத்தில் அழைச்சேன்-ன்னு என் தோழன் அப்பறமாச் சொன்னான்! :))

துயர் வரில் "நினைமின்"! துஞ்சும் போது "அழைமின்"! நாராயணா என்னும் நாமம்!


"நாராயணாய" என்றால் என்ன? - இன்னிக்கி பார்க்கத் துவங்கி விடலாமா?

இதோ துவங்கி விடுகிறேன்! அதற்கு முன்.......
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு!
கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன்
***நற்றாள்*** தொழாஅர் எனின்!
------------------------------------------------------------------------------------

* நாரணம் (தமிழில்)
= நாரம் + அணம்
= நீர் + அருகில் = நீர்மைக்கு அருகில்


* நாராயணம் (வடமொழியில்)
= நாரம் + அயணம்
= உயிர்கள் + இடம் = உயிர்கள் தஞ்சமாகும் இடம்

------------------------------------------------------------------------------------

1.
நீர் இன்றி அமையாது உலகு! = நாரணம்!
அதே போல் நீர்வண்ணன்-இறைவன் இன்றி அமையாது உலகு!!
------------------------------------------------------------------------------------
2.
நீர், தானே உணவாகவும் இருக்கும்! மற்ற உணவுகளையும் அது தான் விளைவிக்கிறது!
துப்பு ஆர்க்குத், துப்பு ஆயத், துப்பு ஆக்கித், - துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை என்பது குறள்!

* தானே உணவாகி = துப்பு ஆய
* மற்ற உணவுக்கும் காரணமாகி = துப்பு ஆக்கி

அதைப் போலவே இறைவன்-எம்பெருமான், தானே உலகுக்குக்
* காரணமாகவும் இருக்கிறான்!
* காரியமாகவும் இருக்கிறான்!
தானே வழியும் சீவனுமாய் இருக்கிறான்! = நாரணம்!
------------------------------------------------------------------------------------
3.
நீருக்கு ஒரு முக்கியமான குணம் இருக்கு!
* அதுக்கு வடிவம் என்று எதைச் சொல்வது? = எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தை அது பெற்று விடும்!
* அதே போல் நீர் வண்ணனாகிய நாரணனும் = எதில் ஊற்றுகிறீர்களோ, அந்த வடிவத்தைப் பெற்று விடுவான்!

அது மீனா, ஆமையா, பன்றியா, மிருகமா, குள்ளனா, கண்ணனா-காதலனா? எதில் ஊற்றுகிறீர்களோ அது!
தமர் உகந்தது எவ்வுருவம், அவ்வுருவம் தானே! = நாரணம்!
------------------------------------------------------------------------------------
4.
நீர் எதிலும் அடங்கி விடும்! நீருக்குள்ளும் எதுவும் அடங்கி விடும்!
Water is an Universal Solvent!
Proteins, DNA, Polysaccharides என்று அணுக் கூறுகள் கூட கரைந்து விடும்!

அதே போல் புண்யாத்மா/பாபாத்மா என்று பேதமும் இல்லாமல்...
சாதி, மத, ஆண், பெண், என்று எந்தப் பேதமும் இல்லாமல்...
அனைவரும் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

வணங்கியவன்/வணங்காதவன் என்ற தடையே இல்லை! அவனை அண்டினார்க்கு மோட்சம்! அவனை ஸ்வீகரிக்காதவர்கள் எல்லாருக்கும் வெறும் நரகமே போன்ற பேச்சுக்களே இல்லை! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

இப்படி அனைத்தும் எம்பெருமானின் அநுபூதிக்குள் கரைய வல்லவை = நாரணம்!
Coz, Narayanan is an universal solvent!
------------------------------------------------------------------------------------
5.
நீர் = திடப்பொருளாகவும்(Solid), நீர்மைப் பொருளாகவும்(Liquid), வளிப் பொருளாகவும்(Gas), நம் கண் முன்னாலேயே பார்க்கலாம்!
Water exists in all states! Narayanan exists in all states!

மற்ற வேதிப் பொருட்கள் State Change ஆக, அதிக வெப்பம்/குறைந்த அழுத்தம் என்று பலதும் தேவைப்படும்! ஆனால் நீர் மட்டும் எளிதில் ஆவியாகும், கட்டியாகும்! மீண்டும் நீராகவும் ஆகும்!
அது போல் எம்பெருமானும் அடியவர்கள் வெப்பத்துக்கு/நிலைக்கு ஏற்றவாறு தன்னை எளிதாக மாற்றிக் கொள்வான்! அப்படி மாறினாலும், அவன் அவனாகவும் இருப்பான்!

நீரைப் போலவே எல்லா நிலைகளிலும் இருப்பதால் = நாரணம்!


நாரம் என்பது அனைத்துக்கும் மூலமான நீர்!
அண்ட நீர் (பிரளய ஜலம்) முதற்கொண்டு அண்டத்தின் அனைத்து நீர் ஆதாரங்களும் ஆதாரம் என்பதே நாரம்!

H2O என்று இன்று சொல்கிறோம்!
இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்சிஜன் அணு என்று கூறு பிரித்துக் காட்டுகிறோம்! ஆனால் வேதங்கள் அன்றே இப்படிக் கூறு பிரித்துக் காட்டுகின்றன!
பிராணம் (O) ஏவம், அன்யத் (H2) த்வயம் என்று வேதமும் சொல்கிறது!
பிராணம் (O) ஏவம் = உயிர் வளி ஒன்று!
அன்யத் (H2) த்வயம் = மறு வளி இரண்டு!
"ஆபோ நாரா" என்று நாரம்-நீர் பற்றிய வேத சூக்தமும் உண்டு = நாராயண சூக்தம்!

* அவன் பேரும் நீர்! வண்ணமும் நீர்! உறைவதும் பாற்கடல் நீர்!
அவனுடன் "அலை" மகளும் அலை(நீர்)!
* ஏன் அவனை நீரான், நீர்மையான், "நாரா"-யணன், நீர்-வண்ணப் பெருமாள்-ன்னு, எல்லாம் நீராகவே காட்ட வேண்டும்?
* எதற்குப் பிரசாதமாக தீர்த்தம் என்னும் "நீர்" கொடுக்க வேணும்?
* ஏன் பெருமாளுக்கு எல்லாமே நீராகவே அமைந்துள்ளது?

* தமிழில் நாரம் என்பதன் விளக்கம் என்ன?
சங்கத் தமிழில் "நாராயணா என்னாத நா என்ன நாவே?" - என்று இளங்கோ அடிகள் கேட்கிறாரே! வேறு எங்கெல்லாம் "நாரணம்" என்ற சங்கத் தமிழ்ச் சொல் வருகிறது? (தொடரும்......)
Read more »

Sunday, August 09, 2009

காவடிச் சிந்தை முதலில் போட்டது யார்?

யாரு காவடிச் சிந்தைத் தமிழ் இலக்கியத்தில் மொதல்ல போட்டிருப்பாங்க-ன்னு நினைக்கறீங்க? = ஹிஹி! ஹைய்யோ என்னைய அடிக்க வராதீக! :)

ராபின்ஹூட் ஆழ்வார்-ன்னு நான் கலாட்டா பண்ணும், திருமங்கை ஆழ்வார் தான், இதை லேசு மாசா அறிமுகப் படுத்திட்டுப் போயிருக்காரு! இவரு காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு!

என்னா? ஆச்சரியமா இருக்கா? வழக்கம் போல கேஆரெஸ் வைணவ டகால்ட்டி பண்ண ஆரம்பிச்சிட்டான்-ன்னு தோனுதா! ஹிஹி!
இது மாதவிப் பந்தல் இல்லை! என் தோழனும் நானும் இருக்கும் "இனியது கேட்கின்" வலைப்பூ!

இன்னிக்கி-ன்னு பார்த்து, இங்கே இந்தக் காவடிப் பதிவைப் போட வச்சதும் என் ஆசை முருகப் பெருமானே! இதோ காவடிப் பதிவு! இங்கு சென்று வாசித்து காவடி தூக்குங்கள்! :)
Read more »

நான் - வீடு - வாசப்படி!

"ஹேய் டார்லிங்! என்னடீ இது மாயம்? ஒரு வாரம் டூர் போயிட்டு, இப்பத் தான் வீட்டுக்குள்ளாறயே நுழையறேன்! இன்னும் கதவைக் கூடத் தட்டல! காலிங் பெல் கூட அடிக்கல! அதுக்குள்ளாற எப்படி, நான் தான் வந்து நிக்குறேன்-ன்னு தெரியும்? படீர்-ன்னு கதவைத் தொறக்கற?"

"ஓ...அதுவாங்க! நீங்க பிரேசில் போகும் போது, காலை-ல ஷேவ் பண்ணீங்களே? அப்போ உங்க கழுத்தைப் பிடிச்சி முத்தம் கொடுத்தேனே? அதை முத்தம்-ன்னா நினைச்சீங்க? ஹிஹி!
அப்போ உங்க கழுத்துச் செயின்-ல ஒரு காமிரா செட் பண்ணி அனுப்பிச்சேன்! அது தான் உங்கள சரியாக் காட்டிக் கொடுத்துரிச்சி! நீங்க ரியோ-ல அடிச்ச லூட்டி உட்பட இப்ப வந்து நின்ன எல்லாத்தையும்!" :)

"அடிப்பாவி! நான் என்ன வேல்-முருகனா? இல்லை வேவு-முருகனா? விளையாடாதே! உண்மையச் சொல்லுடீ வள்ளீ, என் கள்ளீ!"

"உக்கும்! இந்தப் பேச்சுக்கு எல்லாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல!
அது இல்லீங்க! நீங்க போனதுக்கு அப்புறம்.....அப்புறம்......
உங்க ஞாபகமாகவே இருந்துச்சா? நீங்க எப்போ திரும்பி வருவீங்க வருவீங்க-ன்னு பாத்துப் பாத்து, பூத்துப் பூத்து,

என் கண்ணும் மனமும் படியிலேயே தங்கிருச்சி...
நான் வாசப்படியாவே மாறிட்டேனா?
வாசப் பொடி பூசும் நான், வாசப் படி ஆகிப் போனேன்!"


"ஆகா!"

"அதான் நீங்க திரும்பி வந்த போது, "படியாய்க் கிடந்த நான்",
நீங்க கதவைத் தொட்ட மாத்திரத்தில், கதவு திறந்து விட்டது!" :)


என்னேடி?
தட்டு முன்பு தாழ் திறந்து விட்டாயே? என்று உரைத்தான்!
விட்டுப் பிரியாதார் மேவும் ஒரு பெண் நான்!
பிரிந்தார் வரும் வரைக்கும் பேதை - தெருவில்
கருமரத்தாற் செய்த கதவு!


இது பாவேந்தர் பாரதிதாசன் காட்டும் வாசற்படி கவி ஓவியம்!
குலசேகராழ்வார் காட்டும் வாசற்படி கவி ஓவியம் போலவே!



பிறக்கிறோம்! பிறக்கிறோம்! பிறக்கிறோம்!

எப்படிப் பிறக்கிறோம்? = எல்லாருக்கும் தெரியும்!
எதுக்குப் பிறக்கிறோம்? = யாருக்குமே தெரியாது! :)

* நாம் பிறந்தது நமக்கே ஞாபகம் இருக்கா? = சத்தியமா இல்லை! :)
* இறைவனுடனான உறவு நமக்கு ஞாபகம் இருக்கா? = சத்தியமா இல்லை! :)
அட நாம பொறந்ததே ஞாபகம் இல்லை! அப்பறம் தானே இதெல்லாம் ஞாபகம் இருக்கறதுக்கு?

* நாம் பிறந்தது நமக்கே "ஞாபகம்" இல்லை என்பதால் = "நாம் இல்லை" என்று ஆகி விட மாட்டோம்! :)
* இறைவனுடனான உறவு நமக்கு "ஞாபகம்" இல்லை என்பதால் = "அவனும் இல்லை" என்று ஆகி விட மாட்டான்! :)

ஆனாலும் அடுத்தவங்க பிறப்பதைப் பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்! நாமளும் அப்படித் தான் பிறந்திருப்போம்-ன்னு நம்பறோம்! :)
அறிவியல் வேற இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கு! அதனால் "புரிந்து" கொள்கிறோம்!

அதே போல்...
அடியவர்கள், இறைவனுடன் உறவு கொள்வதைப் பார்க்கிறோம்! நமக்கும் அப்படித் தான் உறவு-ன்னு நம்பறோம்! :)
ஆன்மீகம் வேற இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கு! அதனால் "புரிந்து" கொள்கிறோம்! :)

ஆன்மீகம் சொல்லிக் கொடுத்திருக்கு-ன்னு தான் சொன்னேன்! மதம் சொல்லிக் கொடுத்திருக்கு-ன்னு சொல்லலை! மதம் வேறு! ஆன்மீகம் வேறு!
* மதம் = Religion! ஆன்மீகம் = Spirituality!
* மதம் = இறைவனை நிறுவனப்படுத்தும்! ஆன்மீகம் = நம்மை நிலைநிறுத்தும்!

மீண்டும் அதே கேள்வி!
* எப்படிப் பிறக்கிறோம்? = எல்லாருக்கும் தெரியும்!
* எதுக்குப் பிறக்கிறோம்? = யாருக்குமே தெரியாது! :)


சரி, கேள்வியை மாத்திப் போடுவோம்!
எதுக்குப் பிறக்கிறோம்-ன்னு கேட்க வேணாம்!
எப்படி இருப்பதற்காகப் பிறக்கிறோம்? = இன்பமாய் இருக்கப் பிறக்கிறோம்!

அவன்: "உம்ம்ம்...எப்படி இன்பமாய் இருக்கப் போறடீ? ரொம்ப கஷ்டமாச்சே! இன்பமும் துன்பமும் மாறி மாறி வருமே!"

அவள்: "ஆமா! வரும் தான்!"

அவன்: "மாறி மாறி வந்தா, அதுல எப்படிடீ இன்பமா இருக்க முடியும்?"

அவள்: "வீட்டு வாசப் படியா மாறிடுவேன்! அப்படி மாறிட்டா என்னாளும் இன்பம் தான்!"

அவன்: "வாட்? என்ன உளற்றே? அது என்னா வாசப்படி? அது எப்படி நீ வாசப்படியா மாறுவே?"



சில சமயம் வீட்டை விட்டு வெளியே போனா மழை வரும், இடி-மின்னல் வரும்! அப்போ வீட்டுக்குள்ள வந்தா இன்பம்! அமைதி!
=> வெளியே = துன்பம்! உள்ளே = இன்பம்!

சில சமயம் வீட்டுக்கு உள்ளாறவே ஒரு சிலரோட இடி-மின்னல் கேட்கும்! :) அப்போ வீட்டை விட்டு வெளியே போனாத் தான் நிம்மதி! :)
=> உள்ளே = துன்பம்! வெளியே = இன்பம்!

ஆனால் வீட்டு வாசப்படி? = அது வீட்டுக்கு உள்ளேயும் இல்ல! வெளியேயும் இல்ல! அதனால் அதுக்கு என்னாளும் இன்பம் தான்!

வாசப்படியின் முக்கியமான குணம்...
* பலரும்/பலதும், உள்ளே வர இடம் கொடுத்துக் கொண்டு,
* பலரும்/பலதும், வெளியே போக இடம் கொடுத்துக் கொண்டு,
வாசப்படி வாசப்படியாய் இருக்கும்!

வாசப்படிக்கு வேறெதுவும் முக்கியம் இல்லை!
அது உள்ளேயும் வராது! வெளியேயும் போவாது!
அது "ஒன்றே ஒன்றை" மட்டும் பார்த்துக் கொண்டு என்னாளும் நிலைச்சி இருக்கும்! அதனால் அதுக்கு என்னாளும் இன்பம் தான்!

அப்படி என்னாத்த தான், இந்த வாசப்படி பார்த்துக்கிட்டு இருக்கும்?
= வாசல் "படி" யாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே!


முடிச் சோதியாய் உன் முகச் சோதி!
துய்ய தாமரைக் கண்கள்!
கோல நீள் கொடி மூக்கு!

சங்கினோடும், நேமியோடும்,
செங்கனி வாய் ஒன்றினோடும்,
துவர் இதழ்! பவழ வாய்!
மோவாயில் பொட்டு அழகு!
மை வண்ண நறுங் குஞ்சி குழல் பின் தாழ...
மகரம் சேர் குழை இருபால் இலங்கி ஆட...

மாயனார் திரு நன் மார்பும்...
மரகத உருவும் தோளும்...
ஆய சீர் முடியும் தேசும்...
அடியேற்கு அகலலாமே!

நெடியோனே! வேங்கடவா! உன் கோயிலின் "வாசல்",
"படி" யாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே!
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே!


காட்டுச்செடி போல என்னை வல் வினைகள் சுற்றிக் கொள்ளட்டும்! பரவாயில்லை! அதைத் தீர்க்கும் சாக்கிலாவது நீ என்னிடம் வருவாய் அல்லவா?

உனக்கு மிகவும் விருப்பமான அடியார்கள் என் மேல் அனுதினமும் ஏறிச் செல்வார்கள்!
உனக்கு விருப்பமானதைப் படி ஏற்றுவதே என் விருப்பமும் கூட!
= உன் உள்ள உகப்பே, என் உள்ள உகப்பு!

மண்ணவர் மட்டுமா? வானவரும் அரம்பையரும் கூட படியேறிச் செல்வார்கள்!
ஈசன் வானவர்க்கு அன்பன் எனில், அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
வானவரைக் கீழே இறக்கி, மண்ணவரை மேலே ஏற்றுகிறாய்!

எல்லாரும் உன்னைக் காண, என்னைக் கடந்து செல்வார்கள்!
அவர்கள் கிடந்து இயங்குவார்கள்! நானோ இயங்காமல் கிடப்பேன்!

அவர்கள் இயங்கும்படி, நானோ இயங்காப் படி!
அவர்களை இயங்கும் படிச் செய்யும் இயங்காப் படி!


* நடை சாத்தினாலும் சார்த்தா விட்டாலும்...
* எவ்வளவு கூட்டம் அலை மோதினாலும்...
* எத்தனை பெரிய அரசியல் தலைவர் வந்தாலும்...
* எவ்வளவு கருப்புப் பணம் கொட்டிய பணக்காரர் வந்தாலும்...
* அவர்கட்காகத் தரிசனத்தை நிறுத்தி வைத்தாலும்...
* சாஸ்திரம் சொல்லிற்றே என்று கிரகண காலத்தில் பூட்டினாலும்...
என்னை-உன்னிடம் இருந்து பூட்டி வைக்க முடியுமா?
இந்த "இயங்காத படி" அல்லவா உன்னிடம் இயங்கிக் கொண்டிருக்கும்?

படிமேல் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பேச மாட்டேன்!
படியாய் உனக்கென்று வெறுமனே "கிடப்பேன்"! "கிடப்பேன்"!

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியோனே வேங்கடவா! நின் கோயிலின் வாசல்,
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து, உன் பவழ வாய் காண்பேனே!


* ஒரு வேளை நான் மலராய்ப் பூத்து இருந்தால்? = உன்னை ஒரு நாள் மட்டும் அலங்கரித்து இருப்பேனோ?
* ஒரு வேளை என்னை உரித்துப் பட்டாய் நெய்து இருந்தால்? = உன்னை ஒரு வாரம் மட்டும் அலங்கரித்து இருப்பேனோ?
* ஒரு வேளை நான் தங்க வைர ஆபரணமாய் இருந்திருந்தால்? = உன்னை ஒரு வருஷம் மட்டும் அலங்கரித்து இருப்பேனோ?

* உன் திருமேனி சம்பந்தம் எனக்கு இல்லை போலும்! பரவாயில்லை! அதனால் என்ன?
* உன் இடையறாச் சம்பந்தம், உன்னைக் கண்களால் கைது செய்யும் "படி"யாய் வாய்த்ததே!

என் பால், நீ நோக்காயே ஆகிலும், உன் பற்றல்லால் பற்றில்லேன்!
உனக்கென்று படியாய்க் "கிடப்பேன்"!
என்னை நீ வேண்டாயே ஆயிடினும், மற்ற ஆரும் பற்றில்லேன்!
உனக்கென்று படியாய்க் "கிடப்பேன்"!

உயிரில்லாமல்-உயிருடன் "கிடப்பேன்"! உயிர்ப்புடன் "கிடப்பேன்"!
இயங்காமல் இயங்கி, உனக்கென்று "கிடப்பேன்"!
"கிடப்பேன்"! "கிடப்பேன்"! "கிடப்பேன்"! "கிடப்பேன்"!
உன் இதய-வாசல் படி-யாய்க் கிடந்து, உன் பவழ வாய் காண்பேனே!
அடியேன், குலசேகரன் படி, இரவிசங்கரன் படி, உன்னுடைய வாசப்படி!
Read more »

Thursday, August 06, 2009

ரகசியம்: ஓம் நமோ "Dash" என்றால் என்ன?-1

மக்களே கொஞ்ச நாளைக்கு முன் "ஓம்" என்றால் என்ன?-ன்னும், "நமோ" என்றால் என்ன?-ன்னும் பார்த்தோம் அல்லவா?
அதன் தொடர்ச்சியாக "Dash" என்றால் என்ன?-ன்னு இப்போது பார்க்கலாமா?

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் ஸ்ரீ சக்ர புரி தொடர் துவங்கியுள்ளது! தொடர், விறுவிறு-ன்னு சிவ தாண்டவம் போல், ஆனந்த மயமாகப் போக வாழ்த்து சொல்லிட்டு,
எப்படி திருவண்ணாமலையே ஸ்ரீ சக்ர மயமாகக் காட்சி அளிக்குதோ,
அதே போல், ஸ்ரீ சக்ர மயமாய் அமைந்துள்ள ஒரு மந்திர அடுக்கைப் பார்க்கலாம்! வாங்க!

ஓம் நமோ "Dash" என்றால் என்ன?

"என்னாது? 'Dash'ஆ? என்னா வெளையாடுறீயா கேஆரெஸ் நீயி?
* நாடினேன்! நாடி நான் கண்டு கொண்டேன்! 'நாராயணா' என்னும் நாமம்-ன்னு ஆன்றோர்களும் ஆழ்வார்களும் சொன்னதை,
* மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
* முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தை,
'Dash'-ன்னு சொல்ல, உனக்கு எம்புட்டுத் திமிரு இருக்கும்?"

"அட...இதுல என்னாங்க திமிரு இருக்கு? நானே ஒரு அப்பாவிப் பய புள்ள! என் முகத்தைப் பாருங்க! பாவமா இல்ல? :)
நானே, பெருமாள் இப்பல்லாம் என் கிட்ட ஈவு இரக்கமே இல்லாம நடந்துக்கறாரு! என் முருகனுக்கு என் மேல் இருக்கும் கருணை-ல, அவருக்குக் கால் பங்கு கூட இல்லையே-ன்னு நொந்துகிட்டு இருக்கேன்! நீங்க என்னடா-ன்னா திமிரு-ன்னு சொல்றீங்க!" :(

"ஓ...அதான் அவர் மேல் இருக்கும் கோவத்துல Dash போட்டீயா? அவரு பேரை வாயால் கூடச் சொல்ல மாட்டீங்களோ? இதெல்லாம் டூ மச்!"

"ஹைய்யோ...அப்படியெல்லாம் இல்லீங்க!
தலைப்பில் "ரகசியம்"-ன்னு போட்டிருக்கேனே! பாக்கலீங்களா?அதான் 'Dash'ன்னு சொன்னேன்! மந்த்ர ரகஸ்யம்! ரகசியம்-ன்னா வேற யாருக்கும் சொல்லீறக் கூடாது-ல்ல? அதான்!"

"இறைவனோட மந்திரம் ரகசியமா? என்னப்பா சொல்லுற நீயி?"


* ரகசியம்-ன்னா யாருக்கும் சொல்லக் கூடாது!
* வேதம்/மறை-ன்னா எல்லார் கிட்ட இருந்தும் மறைச்சி வைக்கணும்!

இது தான் பொருளா? இறைவனை "மறை"த்து வைக்க முடியும்-ன்னு நீங்க நினைக்கறீங்களா? பூமியிடம் இருந்து சூரியனைக் கூட மறைக்கலாம்! அண்டவெளியை மறைக்க முடியும்-ன்னு நினைக்கறீங்களா? :)

தாய்ப்பாலைக் குழந்தை கிட்ட இருந்து மறைக்க முடியுமா? குழந்தையை நினைத்தால் அவளுக்குத் தானே சுரக்காதா?
அதே போல், அவன் குழந்தைகளான நமக்கு, அவனால் தாய்ப்பாலை மறைச்சி வைக்கத் தான் முடியுமா?

நான்மறைகளை மறைத்து வைக்கணும் என்பது காலத்தால் ஏற்பட்ட ஒரு வழக்கம்!
அதாச்சும் தராதரம் இல்லாமல் "கண்டவனுக்கும்" சொல்லீறக் கூடாது என்று பின்னாளில் ஏற்பட்ட ஒரு வழக்கம்! "தகுதி" அறிந்து தான் சொல்லிக் கொடுக்கணும் என்பது சாஸ்திர விதி!

இதைக் காரணமாகக் காட்டி, ஒரு சிலருக்கு மட்டுமே வேதங்களில் அதிகாரம் இருந்து வந்தன! அவர்கள் சொன்னதே வேத வாக்கு!
வேதங்களில் அனைத்து மக்களுக்கும் உள்ள நன்மை பலரையும் சென்றடைய முடியாமல், ஒரு அதிகார வட்டத்திற்குள்ளேயே முடங்கிப் போனது!

அப்போது தான் தமிழ் வேதமான திருவாய்மொழி உதயமாயிற்று! வேதம் தமிழ் செய்து தந்தவர், வேளாள குல முதல்வரான மாறன் என்னும் நம்மாழ்வார்!

வேதத்துக்கு இன்னார் தான் சொல்லலாம் என்ற வரைமுறைகள் உண்டு!
இப்படி, இந்த நேரத்தில், இவர்கள், இந்தத் திசை பார்த்து = இப்படியெல்லாம் தான் சொல்லணும், பெண்கள் சொல்லக் கூடாது போன்ற சில நியமங்கள் உண்டு!
ஆனால் "நமாமி திராவிட வேத சாகரம்"-ன்னு போற்றப்படும் தமிழ் வேதத்தைச் சொல்ல சாதி, ஆண்/பெண், கால/தேச வர்த்தமானங்களோ வரைமுறைகளோ எதுவும் இல்லை!


வேதங்களை மட்டுமல்லாது, திருமந்திரங்களையும் "ரகஸ்யம்" என்றும் சிலர் போற்றிப் பாதுகாத்தனர்!
அதில் "ஓம்" என்ற பிரணவம் மகா "ரகஸ்யம்" என்றும் சொல்லி வைத்தனர்!
அதன் பொருள் சிவபெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் தவிர உலகில் வேற ஒருத்தருக்குமே தெரியாது என்றும் கதை சேர்த்தனர்!
ஆனால் உண்மை அப்படியல்ல! என் முருகனுக்கு நற்பொருளை மறைக்கத் தெரியாது என்பதை "ஓம்" பதிவில் பார்த்தோம்!

அதே போல் "திருமந்திரம்" என்ற பெயரால் போற்றப்படும் ஒரே மந்திரம் - அஷ்டாட்சரம் - திரு-எட்டு-எழுத்து = "ஓம் நமோ நாராயணாய"!
இதுவும் "ரகஸ்யம்" என்றே வைக்கப்பட்டு வந்தது! அதன் பொருள் அவ்வளவு சுலபமாகப் பாமரர்க்குக் கிட்டி விடாது!

ஏன் இப்படி? ஏன் இதை "ரகஸ்யம்"-ன்னு சொல்லணும்?
ரகசியம் = யாரிடமும் சொல்லக் கூடாது என்பது தான் பொருளா?

ரகசியம் = நுட்பம்!
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன-ன்னு கேட்கிறோமே! அப்படின்னா என்ன அர்த்தம்?
வெற்றியின் "நுட்பம்", வெற்றிக்கு "வழி"-ன்னு தானே பொருள்? வெற்றியைச் சொல்லக் கூடாது-ன்னா பொருள்? :)
தகராலய ரகசியம், வேதியியல் ரகசியம், காதல் ரகசியம்-ன்னு எத்தனையோ ரகசியங்கள் இருக்கு! அதுக்கெல்லாம் "நுட்பம்"-ன்னு தானே பொருள்!

இதைத் தான் "ரகஸ்யம்"-ன்னு சொல்லி வச்சாங்க வேத காலத்து ரிஷிகள்!
ஆனா நம்மாளுங்க அதுக்கு மீனிங்கை லோக்கலா எடுத்துக்கிட்டு, மந்திரங்களைப் பொத்திப் பொத்தி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க! :)

ஆன்மீகத்தை லோக்கலா எழுதினா மட்டும் கோவம் வருது!
ஆனா "ரகஸ்யம்" என்பதற்கு லோக்கலாப் பொருள் எடுத்துக்கறோமே-ன்னு தங்கள் மேலேயே அவிங்களுக்கு கோவம் வருமா? :)
ஹா ஹா ஹா! நியாயம் என்பது இது தானோ? - நெஞ்சுக்கு நீதி! :))

* "ரகசியம்" = நுட்பம் என்பதைத் தன் குருவுக்கே புரிய வைத்து,
* "ரகஸ்யத்தை", ஒரு உள்ளம், ஊருக்கே போட்டு உடைத்தது அல்லவா?
* "தான்" என்று பார்க்காது,
* "தான் ஒருவன் நரகம் புகினும்", அடியார்கள் அத்தனை பேரும் வீடு புகுவார்கள் என்று ஒரு உள்ளம் எண்ணியது அல்லவா?

"தான்" என்று பார்க்காது...
அந்த "நான்" "மறை"வது தானே "மறை"?
அதுவல்லவோ ரகஸ்யம் = நுட்பம்?
* நான்-மறையைக் கற்றவனா ஞானி?
* "நான்" மறையக் கற்றவனே ஞானி!


காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!


* "ரகசியத்தை", கோபுரத்தின் மேல் இருந்து, ஊருக்கே "கூவிய" அந்த உள்ளம்!
* அந்த உள்ளம் "கூவியதையே",
* இனி வரும் தொடர் பதிவுகளில் அடியேனும் "கூவப்" போகிறேன்!

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!


ஓம் நமோ நாராயணாய என்றால் என்ன?

அதில்
1. ஓம் என்றால் என்ன?
2. நமோ என்றால் என்ன?
என்று முன்னரே பார்த்து விட்டோம்!
3. அப்போ "நாராயணாய" என்றால் என்ன?

* "நாராயண" என்று சொன்னால் போதாதா? எதுக்கு "ஆய"-ன்னு சேர்த்து, "நாராய+ணாய"-ன்னு சொல்லணும்?
* நாரணன் என்பது தமிழ்ச் சொல்லா? வடமொழிச் சொல்லா?
* நம சிவாய என்பதற்கும் திரு-எட்டு-எழுத்துக்கும் என்ன சம்பந்தம்?
* ஸ்ரீமன் நாராயணாய-ன்னு சேர்த்துச் சொல்லலாம் அல்லவா? ஏன் வெறுமனே நமோ நாராயணாய-ன்னு சொல்லணும்? பெண்மைக்கு மதிப்பில்லையா? :)
இந்தத் தலையாய மந்திரத்தில் மகாலட்சுமி இருப்பது போல் தெரியலையே! ஆணாதிக்க அவரு மட்டும் தானா? அவருக்குக் கால் பிடிச்சி விடத் தான் அன்னையா? :)
.....
.....
இப்படிப் பலவும் பார்ப்பதற்கு முன்னாடி....
முக்கியமா ஒன்னு தெரிஞ்சிக்கோங்க!
துன்பம் வரும் போது, "நாராயணா" என்று கூப்பிடாதவனே உண்மையான பக்தன்! :)

ஹா ஹா ஹா! அட, இது அடியேன் டகால்ட்டி இல்லீங்க! :)
ஆழ்வார் வாக்கு!

ஆகா! கஷ்டம் வரும் போதாச்சும் கடவுளை நினைப்பாங்க! நீ அது கூட வேணாங்கிறியா கேஆரெஸ்?
துன்பம் வரும் போது, "நாராயணா"-ன்னு கூப்பிடாதவனே உண்மையான பக்தன்! எப்படி?
(....தொடரும்!)

மறைந்த காஞ்சி முனிவருக்கு, "ராமானுசம்" என்னும் திருமலைச் சடாரி அருளப்பாடு சார்த்தப்படுகிறது!

Read more »

Sunday, August 02, 2009

மதுரையம்பதி: சந்தியா வந்தனம்! சந்திப்பு வணக்கம்!

சந்தியா வந்தனமா? பந்தல்ல ஏதுடா இது வம்பு-ன்னு யாரும் பயந்து போயிறாதீக! காதல் படத்துல பரத் கூட நடிச்சாங்களே "சந்தியா"...அந்த சந்தியாவை வந்தனம் பண்ணப் போறீயா கேஆரெஸ்-ன்னும் கேட்டு கீட்டு வைக்காதீக! :)

அடியேன் "மெளலி அண்ணா" என்று அப்போது அழைத்த, இப்போதும் அழைத்துக் கொண்டிருக்கும், எப்போதும் அழைக்கப் போகும்...
நம்ம மதுரையம்பதி-சந்திரமெளலி அவர்களின் பிறந்த நாள் இன்று! (Aug-02)

அன்னையின் புகழ் பாடுபவர்-ன்னா ஆடி மாசம் தானே பொறக்கணும்!
அடியேனும் தோழி பிறந்த மாசத்தில் தானே அண்ணனைக் கலாய்க்கணும்! :)
மெளலி அண்ணாவின் பிறந்த நாள் சிறப்புப் பதிவே இது!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி அண்ணா! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)

அப்படியே, அண்ணி, அன்னிக்கு உங்க வீட்டில் எனக்கு-ன்னு பண்ணாங்களே...
காரவடை, அடை அவியல்...அதை இன்னிக்கும் பண்ணச் சொல்லுங்க! தட்டில் வைக்காம, அதே போல் நறுக்கு வாழையிலையில் வைத்துத் தரச் சொல்லுங்க! :))


சந்தியா வந்தனம்-ன்னா என்னா-ன்னு மேலோட்டமா பார்க்கலாமா? ஆனா...அதுக்கும் முன்னாடி...

மாதவிப் பந்தலில் இறைவனைப் "பாவிப்பது" பற்றியே அதிகம் பேசப்படுகிறது!
* கர்மாக்கள் பின்னே! பகவான் தான் முன்னே!-ன்னு
* பந்தலில் அடிக்கடிச் சொல்வதால்....
கர்மாக்கள் எல்லாம் தேவையே இல்லை! குப்பையில் போடுங்கள்! - என்று அர்த்தமா? அப்படி-ன்னு எடுத்துக் கொள்ளப் படுகிறதா என்ன? :)

அட, பாவனா-வையெல்லாம் பாவிக்கறோம், வால் பேப்பரில் போட்டு வைக்கிறோம், அவிங்கள பார்த்திரா விட்டாலும் நம்ம உறவுக்காரப் பொண்ணு போல பாவிக்கறோம்! கனவுல எல்லாம் வராங்க! :)
பாவனா-வையெல்லாம் பாவிக்க முடியும் போது, பகவானைப் பாவிக்க முடியாதா என்ன? :)

முடியும்! முடியும்! என்ன......கொஞ்சம் பழகிப் பார்க்கணும்! பழகினாத் தானே காதல் கத்திரிக்காய் எல்லாம்? சூப்பர் ஸ்டார், சிவாஜி படத்துல சொல்லுறாப் போல, "பழகலாம், வரீங்களா?" :)

பகவானை "உண்மையாக" பாவிப்பது என்பதும் கிட்டத்தட்ட காதலிப்பது போலத் தான்!
* சட்டப்படியான திருமணங்கள் உண்டு!
* ஆனால் எந்த ஊரிலும் "சட்டப்படியான காதல்"-ன்னு இருக்கா? :)


அதனால் சட்டங்களைச் "சற்று" பின்னுக்குத் தள்ளி,
பகவானை மட்டுமே முன்னுக்குத் தள்ளும் போது....


காதலை ஏற்றுக் கொள்ளாத வீடுகளில் கொஞ்சம் கோவம் வருது! :)
அது போலத் தான் ஆன்மீகப் பெரியவர்கள்/பதிவர்கள் அடியேன் மீது கொண்டுள்ள சிலச்சில கோவங்களும்! :))


ஆனா, நீங்களே சொல்லுங்க! இந்தக் கேஆரெஸ் பய புள்ள என்னைக்குத் தான் சொன்ன பேச்சைக் கேட்டிருக்கான்? சாஸ்திரத்தை மதிச்சி நடந்து இருக்கான்? :)
யார் மதிச்சாலும் மதிக்கா விட்டாலும், இவன் மதிக்க வேணாமா? மத்தவங்க ஆயிரம் பேசட்டும்! ஆனா இவன்...இவனே இப்படியெல்லாம் பேசலாமா? :)

ஆன்மீகத்தை "வேற வேற மாதிரி" எழுதி வம்பு பண்ணறான்!
மனசுல பெரிய கோகுலத்துக் கண்ணன்-ன்னு நினைப்போ?
இந்திரனுக்குப் பண்ணி வந்த பூசையை நிறுத்தி, மலைக்கு பண்ணச் சொன்ன நினைப்போ?
மலையைக் குடையாப் பிடிக்க முடியுமா இவனால? குடை--மிளகாயைக் கூடப் புடிக்க முடியாது! ஆமாம்! :)

* கர்மாக்கள் பின்னே! பகவான் தான் முன்னே!-ன்னு
* பந்தலில் அடிக்கடிச் சொல்வதால்....

கர்மாக்கள் எல்லாம் தேவையே இல்லை! தூக்கிக் குப்பையில் போடுங்கள்! - என்று அர்த்தம் இல்லை!

செய்யற தப்பையெல்லாம் செஞ்சிட்டு, உடன் பிறவாச் சகோதரிகள் போல...பரிகாரம் பண்ணிக்கலாம் என்ற மனோபாவம்....பரிகாரம் என்ற பேரில்...யாகம், ஹோமம், துணியை நெருப்பில் போட்டு பொசுக்கல்-ன்னு
"சுயநலமான கர்மாக்களை" மட்டுமே பல பதிவுகளிலும் சுட்டிக் காட்டுவது! இவற்றுக்குப் பேரு = காம்யார்த்த கர்மாக்கள்!
இவற்றை ஒரு நல்ல சரணாகதன் செய்ய மாட்டான் என்பது அடியேன் சொல் அல்ல! ஆசார்யர்கள் வாக்கு!!

ஆனால் நித்ய கர்மாக்களும், நைமித்திக கர்மாக்களும் மிகவும் அவசியமானவை!
அதையும் புரிந்து கொள்ள வேணும்! அதிலும் இறைவனுக்கே முதலிடம்! வெறும் சடங்குக்கு அல்ல!

* காதல் கணவனே முக்கியம்! = இறைவன்!
* வீட்டுக் கடமைகள் அவன் நலத்துக்கே! ஒப்புக்குச் செய்வதில்லை! = நித்ய கர்மாக்கள்!
* பேராசையான வைர நகை, ஆடித் தள்ளுபடி ஷாப்பிங் = காம்யார்த்த கர்மாக்கள்!

புரிந்ததா? புரிந்ததா? புரிந்ததா? :)
இப்போ நித்ய கர்மாவான சந்தியா வந்தனம்-ன்னா என்னா-ன்னு மேலோட்டமா பார்க்கலாமா? Once again, Happy Birthday Mouli Anna! :) )



சந்தி-ன்னா சந்திப்பு! இரு எதிர் வேளைகள் சந்திப்பது ஒரு சந்தி! சூரியன் நிலை மாறும் நிலை!
* காலைச் சந்தி = பிராதக் காலச் சந்தியா வந்தனம்
* மதியச் சந்தி = மாத்யான்னிகம்
* மாலைச் சந்தி = சாயம் சந்தியா வந்தனம்

இந்த மூன்று வேளையும் சந்தியா வந்தனம் அதாவது சந்திப்பு வணக்கம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திர விதி! சாஸ்திரமா? அப்படீன்னா?

அதாச்சும் சாஸ்திரம் சாஸ்திரம்-ன்னு தனியா ஒரு புத்தகம் எல்லாம் இல்லை! வேதம், உபநிடதம், இன்னும் பல நூல்களில் சொல்லியுள்ள விதிமுறைகளை ஒன்னாத் திரட்டி வைச்சா அதுக்குப் பேரு சாஸ்திரம்!
சாசனாத் இதி சாஸ்திரஹ! = Code of Conduct! இதைச் செய் என்று சாசனம் செய்வது சாஸ்திரம்!

எதுக்குச் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்? ஏன்?

வேதத்தில் சொல்லி இருக்கு! விதிச்சி இருக்கு! அதனால் செய்யணும்!
யஜூர் வேதம், தைத்ரீய ஆரண்யகத்தில், இரண்டு அனுவாகையில் சொல்லி இருக்கு! இது சாஸ்திர விதி! - அப்படின்னு இதைச் சிலர் விதிக்கப்பட்ட ஒன்றாய்ச் சொல்லலாம்!
உண்மை தான்! ஆனால் விதி-ன்னாலே கதி கலங்கி ஓடுபவர்கள் தான் இந்தக் காலத்தில் நிறைய! Break the Rules! :)

பாவம்! மனுசனைச் சொல்லியும் குற்றமில்லை! ஆபிசில் விதி, ரோட்டில் விதி, அட வீட்டில் கூட விதியே-ன்னு வாழறவன்!
விதிச்சபடியே லொங்கு லொங்கு-ன்னு வாழறவன் கிட்ட போய்,
இறைவன் கிட்டேயும் விதிகள்-ன்னு பேசும் போது, அவனால சத்தியமா முடியலை!
Frozen Idli சாப்பிட்டுச் சாப்பிட்டு, அம்மா கையால நல்ல இட்லி கெடைக்காதா-ன்னு உட்காரும் போது, விதியை நீட்டினா? :))

எதுக்குச் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்? விதியாக இல்லாமல், விவரமாகப் பார்க்கலாமா?

சூரிய வணக்கம் என்பது தொன்று தொட்டு பலரும் செய்து வருவது தான்! ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்! அதுவே சந்தியா வந்தனம்!

கிராமத்தில் வேளாளர்களும், விவசாயிகளும், இருட்டிலேயே கழனிக்குப் போய், உழ ஆரம்பிப்பார்கள்! அப்போது அவர்கள் கண் முன்னே பொல பொல-ன்னு விடியும் போது அவர்களும் சூரிய வணக்கம் செய்வார்கள்!
என்ன, அவர்கள் செய்வது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்! கைகளால் கண்களைக் குவித்து, சூரிய நாராயணா என்றே வாய் விட்டுச் சொல்லுவார்கள்! அதையே தான் வேதமும் சொல்கிறது!

சத சவித்ரு மண்டல மத்ய வர்த்தே! நாராயணஹ!
சரசிஜாசனா, சாம்னி விஷ்டஹ!
கேயூரவான்! மகர குண்டலவான்! கிரீடே! ஹாரீ! ஹிரண்மய வபுர்!
தித சங்கு சக்ரஹ!
சங்கு சக்ர கதாபாணே, துவாரகா நிலைய அச்சுத
கோவிந்த புண்டரீகாட்சா, ரக்ஷமாம் "சரணாகதம்"!

இது தினப்படி சூரிய வணக்கம் செய்யும் போது, சைவ/வைணவ, சாதி/மத பேதமின்றி அனைவரும் சொல்வது!
தினப்படி செய்யும் சந்தியா வந்தனமே, "சரணாகதம்" என்றல்லவோ பேசுகிறது!



சத சவித்ரு மண்டல மத்ய வர்த்தே! நாராயணஹ!
= சூரிய மண்டல மத்தியில் இறைவன் எழுந்தருளுகிறான்!
அவன் எழுந்தவுடன், உயிர்களும் எழுகின்றன! உலக இயக்கமே ஆரம்பிக்கிறது!

* ஓரறிவு ஈரறிவுச் செடிகளுக்கான Photosynthesis முதல்,
* ஐந்தறிவு ஆறறிவுக்கான உணவு தேவைப்பட ஆரம்பிக்கிறது! இரவில் இல்லாத உடை கூட பகலில் தேவைப்படுகிறது! :)

இப்படிப் பிரத்யட்சமான ஒரு இயக்கம் துவக்கம்! அதுவே சந்தியா வந்தனம்!

வெளியில் ஒளி மயமாக எழும் சூரியனை, நமக்குள்ளே உள் வாங்கிக் கொள்ளும் முறை தான் சந்தியா வந்தன முறைகளில் சொல்லப்பட்டிருக்கு!
* ரஜோ குண, தமோ குணங்களில் தூங்கிக் கிடந்த உயிர்,
* இன்றைய பொழுதுக்கு எழுந்து கொள்ளும் போது,
* அதுக்கு ஆற்றல், புத்துணர்ச்சி, நினைவு, இயக்கம் என்று அனைத்தும் தரவல்லவை இந்தச் சூரிய வணக்கம்!

சூரிய வணக்கம்-ன்னா, அய்யோ, சூரியனே ஒரு கோள் தானே, அதையா போயிக் கும்பிடுவாங்க?-ன்னு விபரீதப் பகுத்தறிவு பேசக் கூடாது! :)
அதான் வெறுமனே சூரியன்-ன்னு சொல்லாம, அந்த மண்டலத்தில் உலகத்துக்கே உயிர்ப்புச் சக்தியாய் இருக்கும் இறைவன் = சவித்ரு மண்டல மத்யவர்த்தே என்று சொன்னார்கள்!



சந்தியா வந்தனம் என்பது அந்தணர்களுக்கு மட்டும் தானே? மற்றவர்கள் செய்வாங்களா என்ன?

மற்றவர்களும் செய்வார்கள்! ஆனால் அவரவர் வழிகளில்! உழவர்கள் செய்வதைச் சொன்னேன்! அனைவருக்கும் பொதுவானது தான்! அந்தணர்கள் செய்வதில் இருந்து வழிமுறைகள் மாறுபட்டு இருக்குமே தவிர, மற்றபடி ஒன்றுமில்லை!

ஆழ்வார்கள் நாலாயிரமே சந்தியாவந்தனத்தில் தான் தொடங்குகிறது! வெய்ய கதிரோன்-வையம் தகளியாய் என்றே துவங்குகிறார்!

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
= தமஸோ மா ஜ்யோதிர் கமய!

சூரியன், இந்திய ஜோதிட நூல்களில், உடல் நலத்தின் தேவதையாகவும் வைக்கப்பட்டு உள்ளான்! அதனால் ஞாயிறு மூலமான வழிபாட்டுக்கு இன்னும் ஏற்றம்! மேலும் சந்தியா வந்தனத்திலேயே பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியும் இதனாலேயே வைத்துள்ளார்கள்!

கையில் நீர் எடுத்துக் கொண்டு, துதிகளைச் சொல்லி, நீரினைத் தூவி அவனுக்கே அளிப்பது என்பது சந்தியில் வழக்கம்! = இதுக்கு அர்க்கியம்-ன்னு பேரு!
காயத்ரி என்னும் மந்திரத்தை ஜபித்து, இந்த அர்க்கியம் கொடுக்க வேண்டும்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல, அவன் தந்த நீரினை அவனுக்கே தருதல்!

நீர் இன்று அமையாது உலகு! எனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு!


இப்படி எல்லாரும் நீரைச் சூரியனை நோக்கித் தூவுதல், சூரியனைப் பிடிக்க வரும் மந்தேகர் என்னும் இராட்சசர்களை விரட்டவே என்று ஒரு கதை இருந்தாலும்...
உண்மையான பொருள் என்னன்னா....மந் தேஹம் = ம + தேஹம் = நம் உடம்பு!
நம் உடம்பில் இரவில் தங்கி விட்ட ரஜோ தமோ குணங்களை விரட்டி,
சத்வ குண சம்பன்னான சூரியனை/இயங்கும் ஆற்றலை
நம்முள் உள் வாங்கிக் கொள்வதே தாத்பர்யம்! = அகச் சோதி!


ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் சந்தியா வந்தனம் செய்வார்கள்!
கிராமத்தில் ஒரு வகை-ன்னா, அந்தணர்களுக்குள்ளேயே விதம் விதமான வகைகள்! நிறைய வேறுபடும்! இருந்தாலும் அடிப்படை ஒன்று தான்! அதன் முக்கியமான கட்டங்களை மட்டும் பட்டியல் இடுகிறேன்!


சந்தியா வந்தன நிலைகள்:

1)
நீர் பருகல்: ஆசமனம்
மூச்சுப் பயிற்சி: பிராணயாமம்
உறுதி மொழி: சங்கல்பம்

2)
சரணாகதி: சாத்விகத் தியாகம்
நீரால் தூய்மை: புரோக்ஷணம்

3)
நீர் அளித்தல்: அர்க்கியம் என்னும் அர்க்கியப் பிரதானம்

4)
நன்றி உரைத்தல்: கேசாவாதி தர்ப்பணம்

5)
துதிகள்: காயத்ரி ஜபம்
ஓம்:
பூர் - புவ - ஸ்வஹ = சக்தி கொடுப்பதுவே! துன்பம் அழிப்பதுவே! இன்பம் தருவதுவே!
தத் - சவிதுர் - வரேண்யம் = அப்படிப்பட்ட ஒளியே! சிறப்பே!
பர்கோ - தேவஸ்ய - தீமஹி = வினை அறுப்பதுவே! தெய்வம் அதுவே! தருவதுவே!
தியோ - யோ - ந - ப்ரசோதயாத்: = சிந்தையை, எதுவே, எங்களுக்குத் தூண்டுவதுவே!
உனக்கு வணக்கம்! ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

(குறிப்பு: திருப்பாவையில் இது ஒவ்வொன்றுக்கும் ஒரு வரி அமைத்து உள்ளாள்! அதனால் தான் வேதம் அனைத்துக்கும் வித்து - கோதைத் தமிழ்!
எப்படி வேதத்துக்கு வித்து = இந்தக் காயத்ரியோ
அப்படி தமிழ் வேதத்துக்கு வித்து = கோதைத் தமிழ்!
இன்னொரு நாள் சொல்கிறேன்! இல்லையேல் விரும்புவோர் இங்கேயே முயன்று பாருங்கள்! :)

6)
இறைவன் இருப்பை உணர்தல்: உப ஸ்தானம்

7)
சந்தி கால தேவதைகளுக்கு வணக்கம்: சந்தியாதி தேவதா வந்தனம்
முன்னோர் வழிவழி உரைத்தல்: அபி வாதனம்
திசை காத்தல்: திக் வந்தனம்

8)
மீண்டும் துதிகள்: காயத்ரி ஜபம்
மீண்டும் நீர் அளித்தல்: அர்க்கியம் என்னும் அர்க்கியப் பிரதானம்

9)
நிறைவு: இறைவனின் தலங்களை மனத்தில் எண்ணிப் பார்த்துக் கொள்ளுதல்! உருவம் கடந்த இறைவன், நம் பொருட்டு, நமக்காகத் தலங்களில் எழுந்து இருக்கும் நன்றிக்காக எண்ணிப் பார்க்க வேண்டும் என்று, உடையவர் இதைச் சந்தியா வந்தனத்தில் விதியாகப் பின்னாளில் சேர்த்து விட்டார்! ஆனால் இது வைணவர்கள் மட்டுமே சொல்வது! அனைவருக்கும் பொதுவல்ல!

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாசம் = திருவரங்கம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் = திருமலை
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோ ஜ்வல பாரிஜாதம் = திருக் கச்சி
ஸ்ரீ-சம் நமாமி, சிரசா யது சைல தீபம்! = யது கிரி என்னும் மேலக் கோட்டை!

எழுந்து கொள்ளல்:
அன்றாட கடமைகளுக்கு எழுந்து கொள்ளல்! அதற்கு முன் சவித்ரு மண்டல மத்ய வர்த்தனான இறைவனை உள் வாங்கிக் கொள்ளுதல்!

பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே, கர்த்தவ்யம் தைவ மான்னிஹம்!
கோசலை குமாரா ஸ்ரீராமா, பொழுது புலர்கின்றதே!
தெய்வீகத் திருச் சடங்குகள் செய்ய, எழுந்தருள் புருஷோத்தமா!

மேலே சொன்னவை சந்தியா வந்தனத்துக்கான அறிமுகம் மட்டுமே!
சந்தி for Dummies-ன்னு வச்சிக்கோங்களேன்! :)
விதியே-ன்னு செய்யாமல், மதியே-ன்னு செய்தால் தான் சிறப்பு!


முன்பே சொன்ன வண்ணம்,
காதல் கணவனான எம்பெருமான் உள்ளம் உவக்குமாறு நடத்தல் முக்கியம்! = இறைவன் திரு உள்ள உகப்பு!
ஒவ்வொரு செயலிலும், ஒன்றை ஆதரித்தாலோ, எதிர்த்தாலோ...எதைச் செயினும்...
இதைச் செய்தால் எம்பெருமான் திருமுகம் உவக்குமா? வாடுமா?
என்ற கேள்வியை நம்மிடமே கேட்டுக் கொண்டால்...

சந்தியா வந்தனங்கள் ஜொலிக்கத் துவங்கி விடும்!
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன, அவை தருவித்து அருள் பெருமாளே! - என்ற திருப்புகழ் சொல்லி, இந்தப் பிறந்தநாள் பதிவை நிறைவு செய்கிறேன்! ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
Read more »

Saturday, August 01, 2009

அஞ்சு முகமா? ஆறு முகமா? - "முருகா" என்று ஓதுவார் முன்!

அதாச்சும்-ங்க, ரொம்பவும் பயந்து போகும் போது, மனசு படக் படக்-ன்னு அடிச்சிக்கும்! நம்மவங்களே நம்மள இப்படி பேசிட்டாங்களே-ன்னு மனசு கிடந்து அடிச்சிக்கும் போது, என்ன பண்றோம்-ன்னே தெரியாது!

ஏதோ அழுது கொண்டே செய்யப் போக,
அந்தப் புரியாத நிலையிலும், திடீர்-ன்னு "ஏதோ ஒன்னு" மட்டும் புரியும்!
கரெக்டா எங்கே போய் நிக்கணுமோ அங்கே தானாகவே போய் நிற்போம்! அப்படி நின்ற இடம்?

அப்படி நின்ற இடம்? = பெருமாள் கோயிலா? இல்லை! இல்லவே இல்லை! அது என் முருகன் சன்னிதி!


அஞ்சு முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் = சின்ன வயசில் இருந்தே இந்தப் பாட்டு என்னுடன் ஒட்டிக் கொண்ட பாட்டு! எப்போ பயம் வந்தாலும், உதடு தானாக முணுமுணுக்கும் பாட்டு!

திருவண்ணாமலையில், முருகன் சன்னிதி காட்டிக் காட்டித் தான் அம்மா எனக்குச் சோறு ஊட்டுவாங்களாம்! ஒவ்வொரு வாய்க்கும் ஒவ்வொரு சிற்பம் காட்டணும்! அப்போ தான் சாப்பிடுவேனாம்!
"அஞ்சுமுகம்-ஆறுமுகம்!" இந்தக் கோயில்ல தான் இந்தப் பாட்டை மொதல்ல கேட்ட ஞாபகம்-ன்னு நினைக்கிறேன்!

உங்களில் பல பேருக்கும் தெரிஞ்ச பாட்டு தான்!
நக்கீரர் எழுதிய பாட்டு-ன்னு சிலர் சொல்லுவாய்ங்க! ஆனா சங்க காலப் பாடல் போலவே இருக்காது! ரொம்ப சிம்பிளாத் தான் இருக்கும்!
இதோ: அப்-பயம் நீக்கி, அபயம் தர வல்ல பாட்டு:

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!


இந்த எளிமையான பாட்டுக்கு பொருள்? கொஞ்சமாப் பார்க்கலாமா?
எளிமையான பாட்டுக்கு ஏகாந்தமான அர்த்தம் இருக்கு!
அதைத் தெரிஞ்சிக்கிட்டீங்க-ன்னா இந்தப் பாடல் அப்படியே உங்க கூடவும் ஒட்டிக் கொள்ளும்! என் ஆசை முருகன் என்னுடன் ஒட்டிக் கொண்டதைப் போலவே!

* அஞ்சி பயப்படும் போது அஞ்சும் முகம் தோன்றினால், ஆறுமுகம் தோன்றும்!
* கடுமையான (மனப்) போராட்டத்தில், "அஞ்சேல்" (பயப்படாதே) என்று வேல் தோன்றும்!
* நெஞ்சில் ஒரு கால் நினைத்தால், இரு காலும் தோன்றும்!
* தோன்றுமா? என்ன தோன்றும்? = விடிவு தோன்றும்! விடி-வடி வேலன் தோன்றும்!
* யார் முன்னே தோன்றும்? = முருகாஆஆஆஆஆஆ என்று ஓதுவார் முன்!

இதான் பாட்டுக்கு மேலோட்டமான பொருள்!
ஆனா...இவ்வளவு தானா?
இதுவா பயத்தைப் போக்கவல்ல பாட்டு? மேலே வாசியுங்கள்!



இந்தப் பாடல் திருமுருகாற்றுப்படை வெண்பாக்களுள் ஒன்று! திருமுருகாற்றுப்படை எழுதிய நக்கீரர் தான் இதையும் எழுதினாரா-ன்னு சரியாகத் தெரியலை! பின்னாளில் சேர்ந்தும் இருக்கலாம்!
முருகாற்றுப்படை முழுவதும் சங்கத் தமிழ்ச் சொற்கள் சரளமாகப் புழங்கும்! அகராதி வச்சித் தான் ஆற்றுப்படையைப் படிக்கணும்! ஆனால் இந்தப் பாட்டுக்கு மட்டும் அப்படி அல்ல! பார்க்கலாமா பாட்டை?

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் = அஞ்சி நடுங்கும் என்னுடைய முகம் தோன்றும் போது, ஆறு முகமும் தோன்றும்!

மனுசனுக்குப் பயம் வந்தா முகம் வெளிறும்! பார்த்து இருக்கீங்களா?

கண்ணாடி முன்னாடிப் போய் நில்லுங்க!
நீங்க ரொம்பவும் பயந்து போன ஒரு நிகழ்ச்சியை மனசில் ஓட்டினீங்க-ன்னா அந்த "அஞ்சு முகம்" வந்து போகும்! அப்போ கண்ணாடியில் பாருங்க! :)

* நியூயார்க் நகரத்து ஒதுக்குப்புற இரவில், மூனு பேரு துப்பாக்கி எல்லாம் காட்டி, வெறுமனே இருவது டாலரும், கைக்கடிகாரமும் பறித்த கதையா இருக்கலாம்!
* இல்லை, ஏதோ ஒரு பதிவர் உங்களுக்கு விடுத்த பயங்கர மிரட்டலா இருக்கலாம்! :)
* இல்லை, மலைச்சறுக்கில் அதல பாதாளத்தில் விழுந்த கதையா இருக்கலாம்!
* இல்லை, மனத்துக்குப் பிடித்தவர்கள் உங்கள் கண் முன்னே பட்ட அவஸ்தையா இருக்கலாம்!

நிஜ உலகில், எத்தனை எத்தனை பயங்கள்? உங்களில் பயப்படாதவர்-ன்னு யாராச்சும் இருக்கீங்களா?
அச்சம் என்பது மடமையடா-ன்னு பாடும் அரசன் கூட, தனிமையில் ஓநாய்களிடம் சிக்கினால்?
வீரம் என்பது என்ன? = பயப்படாதது போல் காட்டிக் கொள்வது! - என்பார் பெர்னாட் ஷா! :)

ஏன் பயம் வருகிறது? துன்பம் வரும் போதா பயம் வருது? இல்லை!
= இழக்கப் போகிறோம் என்று நன்றாகத் "தெரிய வரும்" போது தான் பயம் வருகிறது!

எப்படிப் பயம் போகும்?
= இழப்போமோ? மாட்டோமோ?-ன்னு தெரியாவிட்டாலும், நமக்கு-ன்னு ஆதரவான ஒரு முகம் நம் கண்ணுக்குத் தெரியும் போது, பயம் போகும்!

* பயந்து ஓலமிடும் குழந்தை, தாய் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் பயம் நீங்கும்!
* எதுக்கோ பயப்படும் பெற்றோர், புள்ள வந்த மாத்திரத்தில் சற்று பயம் நீங்குவர்!
* சிக்கித் தவிக்கும் காதலி, காதலன் முகம் தெரிந்த மாத்திரத்தில் பயம் நீங்குவாள்!

அதே போல், அஞ்சு முகம் தோன்றும் போதே, ஆறு முகமும் தோன்றும்!
அறு-முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே பயம் அறும்!
அது என்ன ஆறு முகக் கணக்கு? எதுக்கு ஆறு முகம்? ஒரு முகம் போதாதா? - நீங்க சொல்றீங்களா? நான் சொல்லட்டுமா? - இன்னொரு பதிவில்! :)


அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்! = இதுக்கு இன்னொரு நுட்பமான பொருளும் இருக்கு!
சிவ பெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் இருப்பான்! சைவ சித்தாந்தப்படி, சிவன் வேறு, முருகன் வேறு அல்ல!

* அஞ்சு முகம் = சிவ பெருமான்!
ஈசானம், தத்புருடம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் என்ற ஐந்து முகங்கள்!
* ஆறு முகம் = முருகப் பெருமான்!
ஈசானம், தத்புருடம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் என்ற ஐந்து முகங்கள் கூடவே அதோமுகம் என்ற மறைந்த ஆறாவது முகம்!

இப்படி ஈசன் காட்டாத ஒரு முகம்! அந்த முகத்தையும் காட்ட வைத்தது முருக முகம்!
அதோ முகம் என்று காட்ட வைத்த அதோமுகம்!
அதனால் தான் அஞ்சு-முகம் (சிவன்) தோன்றில் ஆறு-முகம் (முருகன்) தோன்றும் என்றும் கொள்ள வேணும்!


வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்!

வெஞ்+சமர் = கடுமையான போர்!
உலகத்திலேயே கடுமையான போர்க்களம் எதுங்க? = மனசு தான்! :)
மனக் களம் வென்றவர்கள் போர்க் களமும் வெல்வார்கள்!
மனப் போராட்டத்தை வென்றுவிட்டால் வேறு போராட்டமே இல்லை! :)))

அப்படி மனப் போராட்டத்தில்-வெஞ்சமரில்.....
அஞ்சேல்-பயப்படாதே-ன்னு வேல் தோன்றும்!

* அஞ்சு முகம் தோன்றிய போது, ஆறு முகம் தோன்றி விட்டது! பயம் போய் விட்டது!
* ஆனால் ஆறு முகம் காப்பாற்றுமா? காப்பாற்றும் சக்தி அதுக்கு இருக்கா? அதான் அடுத்த வரியில் வேலைக் காட்டுகிறார்!
வெற்றி வேல் என்பதால், மனப் போராட்டத்தில் வெற்றி! அஞ்சேல் என வெற்றி வேல் தோன்றும்!


நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்!

அது என்ன "ஒரு கால்"? அப்படின்னா என்ன?
* மழை வருமா? = ஒருகா வரலாம்! வராமலயும் போவலாம்!
* அவன் மீண்டும் என்னோடு பேசுவானா? = ஒருகால் பேசலாம்! பேசாமலயும் போகலாம்!

ஆக, ஒரு கால்-ன்னா = "ஒரு வேளை"!
இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்!
உறுதியற்ற நிலைமை வரும் போது நாம "ஒரு கால்" போடறோம்! ஆங்கிலத்தில் May Be!

ஒரு கால் நினைக்கில் = நாம "May be"-ன்னு அவனை ஒப்புக்கு நினைச்சாக் கூட
இரு காலும் தோன்றும் = இரு காலும் தோன்றும்!

அது என்ன "இரு கால்"? அப்படின்னா என்ன?
* இரண்டு காலங்களிலும் தோன்றுவான்! = நிகழ் காலத்திலும் தோன்றுவான்! எதிர் காலத்திலும் தோன்றுவான்!
= இகத்திலும் தோன்றுவான், பரத்திலும் தோன்றுவான்!
= இப்போதும் தோன்றுவான், எப்போதும் தோன்றுவான்!
= இப்போ தோன்றிக் கண்ணீர் துடைப்பான்! எப்பவும் தோன்றி இன்பம் அளிப்பான்!

* ஒரு கால் நினைக்கில், "இரு காலும்" தோன்றும்
= அவனை "ஒரு கால்" நினைக்கில், அவன் "இரு காலும்" (இரண்டு திருவடிகளும்) எனக்கு முன்னே வந்து தோன்றும்!

Will You Be With Me?
= "May" Be! என்று நாம் இவ்வளவு நாள் பழகிய உற்றவர்களே கூடச் சொல்லீருவாங்க!
Will You Be With Me?
= "Will" Be! என்று என் முருகன் மட்டும் சொல்லுவான்!

* His Will, Will Be With Me!
* Whoever be with me or not, He Will-Will be with Me!



முருகா என்று ஓதுவார் முன்! = அன்று முருகாஆஆஆஆஆ என்று நான் வட அமெரிக்க மலை ஒன்றில் கேவிய போது...
* அவன் முகம் தோன்றும்!
* அவன் வேல் தோன்றும்!
* அவன் கால் தோன்றும்!

தோன்றி.....
* இங்கு சொன்னதை அங்குச் சேர்த்து விடு என்றேன்! சேர்த்து விட்டான்! சொன்ன வண்ணம் செய்த பெருமான்!
* ஆராய்ந்து அருளேலோ-ன்னு "அவரைப்" போல இல்லாமல், ஆ...வா என்று அருளி விட்டான்!

அஞ்சு முகம் தோன்றில் = "ஆறு முகம்" தோன்றும்!
வெஞ் சமரில் அஞ்சேல் என = "வேல்" தோன்றும்!
நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் = "இரு காலும்" தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்
!

என் செந்தூர் முருகாஆஆஆஆஆ! என்னைச் சேர்த்துக் கொள்!
Read more »

Saturday, July 25, 2009

கோதையின் பிறந்தநாள்: Kissing For Dummies

மக்களே, என் மனத்துக்கினிய தோழி, என் மன்னவன் காதலி,
தென் பாண்டித் தெள்ளமுது, பேரழகுப் பெட்டகம்,
தமிழன்னையே விரும்பிச் சுவைக்கும் தமிழ் பேச வல்லாள், காதலர்க்கு நல்லாள்
...அவளுக்கு இன்று பிறந்த நாள் (Jul-25-2009, ஆடிப் பூரம்)!

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
திருப் பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
தோள் மேல் கை போட்டுப் பேச வல்ல தோழியே!
நாள் எல்லாம் உன் நட்பில் நானும் வாழி வாழியே!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்-டீ, கோதை!
Happy Birthday dee, my sweet lil' village girl! :)

அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, இன்னும் பல நூற்றாண்டு இரு!


பின்னிய கூந்தல் கருநிற நாகம்..
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்


மற்ற ஆழ்வார் பாடல்களை எல்லாம் கோதை பாடியிருந்தா எப்படிப் பாடி இருப்பா? சும்மா கற்பனைக் குதிரையில் போய் வருவோமா?
வாங்க மக்கா! ஆடல் மா என்னும் வெண் புரவி காத்துக்கிட்டு இருக்கு! :) மொதல்ல அரங்கத்தில் இருந்தே ஆரம்பிப்போம்!

இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே!
- இது தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பாடல்! இதையே என் தோழி ஆண்டாள் பாடினா?

இச்சு தா, இச்சு தா! கன்னத்துல இச்சு தா-ன்னு "ரன்" படப் பாடல் போல பாடலாம் தான்! ஆனால் பாசுரச் சந்தம் வரணும்-ல்ல? இலக்கிய மருவாதை-ன்னு ஒன்னு இருக்குல்ல? :)

இருப்பதிலேயே சுவையான சுவை எது? = "இச்-இச்" சுவை!
அதான் ஆண்டாள் "இச்" சுவையைப் பாடுகிறாள்! :)
"இச்" சுவையைத் தவிர, இந்திர லோகத்துச் சுகமே கொடுத்தாலும் வேணவே வேணாம் என்கிறாள்! :)

"இச்" சுவை தவிர யான் போய், இந்திர லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன், அரங்க மா நகர் உளானே!


காதல் விளையாட்டை...முத்தத்திலேயே துவங்கி, முத்தத்திலேயே முடிப்பது என்பது ஒரு பெரிய கலை!
ஏழு ஜென்ம பந்தத்து முத்தம் கொடுப்பது எப்படி?
கோதை கிட்டயே கேட்கலாம் வாரீகளா?
Here we go...முத்தம் For Dummies :)



1. முதலில் கோச்சிக்கணும்! அதாச்சும் கோச்சிக்கறது போல நடிக்கணும்! :) ஏன்னா, கோவம் தீர்க்கக் கொடுக்கப்படும் முத்தத்துக்குச் சுவை அதிகம்! :)

அட, வேங்கடத்தில் உலாவும் கொழுத்த மேகங்களே! போயி உங்க ஆளிடம் சொல்லுங்க! திரு-வேங்கடம்-உடையானை இந்த உலகத்தில் ஒருத்தனும் மதிக்க மாட்டான்!
எப்பவும் அவனே கதி என்று கிடந்த என்னை, அவன் கேவலமா நினைச்சிட்டான்-ல்ல? இவ இளிச்ச வாயி, அன்பைத் தானாவே கொடுத்துருவா-ன்னு நினைச்சிட்டான்-ல்ல?

கதி என்றும் தான் ஆவான்,
கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல்
வையகத்தார் மதியாரே!



2. இப்போ கோவம் தணிக்க அவன் வந்தாகணும் இல்லையா? அப்போ என்ன பண்ணனும்? உடனே "இச்" கொடுத்துறதா? நோ நோ! :)

அவன் ஆடையைப் பிடித்து இழுத்து அவனை வம்பு செய்யணும்! அது என்ன எப்பமே அவன் தான் சேலையை ஒளிக்கணுமா? அவன் இடுப்புத் துணியை நான் ஒளிச்சி வச்சா என்ன?

அவன் இடுப்புத் துணியின் வாசத்தில் அவன் வாசம் வீசுகிறதே! அந்தத் துணியைப் பிடித்திழுத்து என் மேல் சுற்றிக் கொள்கிறேன்!
அவனுக்குத் தெரியாமல், அவன் ஆடையை, அவன் சூட்கேசில் இருந்து களவாடி, என் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறேன்! :)

பெண்ணின் வருத்தம் அறியாத,
பெருமான் அரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை,
வாட்டம் தணிய வீசீரே!



3. அடுத்து??? ஆளு கிட்டக்க கிட்டக்க வரான்! கண்ணு படக் படக்-ன்னு அடிச்சிக்குது! இதயம் தடக் தடக்-ன்னு அடிச்சிக்குது!
ச்சே! என்ன வீரம் பேசினாலும், அவன் கிட்டக்க வரும் போது மட்டும் மனசு லாஸ்ட் மினிட் கூட்டணிக் கட்சியா மாறிடுதே! :)

அய்யோ! என் உதடே! அவன் கிட்டக்க போயிறாதே! அதுக்கப்புறம் நானோ கண்ணை மூடிக்குவேன்! அதுனால அவனைச் சரியாப் பார்க்க முடியாது போயிடும்!

* அவன் முடியைக் கோதி விடும் குழல் அழகு!
* தொடர் வண்டியில் என்னுடன் விசில் அடித்து வரும் வாய் அழகு!
* என்னை முழுங்குவது போல் பார்க்கும் கண் அழகு!
* அவனுடைய தொப்புளில் (கொப்பூழ்) நான் விடும் பம்பரம் அழகு!

அதையெல்லாம் நான் முத்தம் கொடுப்பதற்கு முன்பே பார்த்து விடுகிறேன்! அதுக்கு அப்பறமா என் மூடின கண்ணு மூடினது தான்! :)
எனவே, இதழொடு இதழ் கலக்கும் முன், கண்ணோடு கண் கலக்கட்டும்!
* முதலில் மேலோர் = கண்கள்!
* அப்பறம் தான் கீழோர் = இதழ்கள்!

எழிலுடைய அம்மனை மீர்! என் அரங்கத்து இன் அமுதர்,
குழல் அழகர்! வாய் அழகர்! கண் அழகர்! கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர்! எம்மானார்! எம்மானார்!




4. ஹைய்யோ! அவன் பச்சைக் கர்ப்பூர நெடி என் பச்சை உடம்பை என்னமோ பண்ணுதே! அவன் கிட்டக்க வந்துட்ட்ட்ட்ட்ட்டான்! அவன் உதடுகள் கிட்ட்ட்ட்ட்ட்டக்க வந்துரிச்சி!

என்ன டூத் பேஸ்ட் யூஸ் பண்ணுவான்-ன்னு தெரியலையே?
சரியான வெண்ணையா இருப்பானோ??? வெண்ணைய் வீச்சம் அடிக்குதே!
Pepsodent Butter-ன்னு புது பிராண்ட் ஏதாச்சும் வந்திருக்கா என்ன? :)

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பு ஒசித்த மாதவன் தன் "வாய்ச் சுவையும்+நாற்றமும்"
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே!

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!
அண்ணலும் தேக்கினான்! அவளும் தேக்கினாள்!

சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடய
"வாய்த் தீர்த்தம்" பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே!


அடியார்க்கு நீர்த் தீர்த்தம்! எனக்கோ அவன் வாய்த் தீர்த்தம்!
* முதல் தீர்த்தம் = பிரதமம் கார்ய சித்தயர்த்தம்! = உன்-என் வாழ்வில், செயல் வெற்றி!
* இரண்டாம் தீர்த்தம் = த்வீதீயம் தர்ம ஸ்தாபனம்! = உன்-என் வாழ்வில், அறன் வலியுறுத்தல்!
* மூன்றாம் தீர்த்தம் = த்ரிதீயம் மோக்ஷ ப்ரோக்தம்! = உன்-என் வாழ்வில், வாழ்வாங்கு வாழல்!


5. முத்தம் கொடுத்து முடித்த பின்னர், தேன் உண்ட மயக்கத்தில்,
"ஆகா, வாழ்வின் பயனை அடைந்தேன்"-ன்னு தப்பித் தவறிக் கூட டயலாக் விட்டுறாதே!
லேசு மாசா, "I am not that satisfied, But ’twaz Just Okay" என்பது போல் ஒரு லுக்கு விடணும்! :)

அப்போ தானே அடுத்த முறை, இன்னும் அறிவா அழகா வேறு மாதிரி முயல்வான்? :)
ஞாபகம் வச்சிக்க மனசே! வேடனுக்குத் தானே சென்று விழும் பறவையை விட, வேட்டையாடி விழும் பறவை மேலத் தான் காதல் அதிகம்!
அதனால் நீ அவனிடம் விழ நினைச்சாலும், வேட்டை நாடகம் நடத்தி, அப்புறமா விழு! :)

மாலாய்ப் பிறந்த நம்பியை,
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்கள் உரைப்பானை,
இங்கே போதக் கண்டீரே?

ஏலாப் பொய் சொல்லும் என் செல்லப் Porkki-ன்னு கொஞ்சம் திட்டி அனுப்பு!
அப்போ தான் ஏக்கமாப் போவான்! அப்போ தான் அடுத்த முத்தச் சுவை இன்னும் சுவை பெறும்! :))


கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!


"அடியே! கோதை! அவனைக் கட்டிக்கிட்டா எங்கேடி இருப்பாய்? அவனுக்கு-ன்னு தனியா வீடு-ன்னு கெடையாது! வெளியில் இருந்து பார்க்க வேணும்-ன்னா ரொம்ப பணக்கார மலைவீடு போல இருக்கும்! ஆனா மொத்தமா முப்பது நிமிஷம் கூடத் தூங்க விட மாட்டானுங்க! :)
108 வீடு வீடாச் சுத்தணும்! வேர்வை பொங்கி வழியும் அவன் கரு-அறையில்! ஏசி கூட இருக்காது! கரென்ட் கூட இருக்காது! பாம்புப் படுக்கை! சொர சொர-ன்னு இருக்கும்! என்னடி பண்ணுவ?"

Kothai Says:
"Just a small room, power cuts ok...
Even with a lil' candle light,
His sight is tight that makes me light!

Soothing music from the street
My windows open, welcome beat...
Gentle breeze that brings in ease

High Definition in his Eyes...
Sub Woofer as he Whispers...
Home Theater in his Prank
That makes me really crank...
Armani, CK, Obsession
Are dull and dumbest possession!
His fragrance comes and fascinates
The "Smell of my Lover" oscillates!

Thatz my home, Thatz my home!
His arms have rooms that are large enough!
Thatz my home! Thatz my home!

* எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
* "உன்" தன்னோடு உற்றோமே ஆவோம்!
* "உனக்கேஏஏஏ" நாம் ஆட் செய்வோம்!
* மற்றை நம் காமங்கள் மாற்று!

அவனுக்கு என்னை "விதி!"
என்ற இம் மாற்றம் நான் கடவா வண்ணமே நல்கு!



இவள் விசித்திர விறுவிறு காதல், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு,
பல கோடி நூறாயிர முத்தங்களுடன் வாழியே! வாழியே!!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP