தமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்! - 3
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!
செங்கனி மேலாடும் மாமரம் யாவும், ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்!
நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடீ! வேறெங்கு சென்றபோதிலும் இந்த ஸ்ரீரங்கம் ஏதடி?
பூலோக வைகுந்தம் என்னும் திருவரங்கத்தில், இன்று வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!
மோக்ஷ ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லுவார்கள்!
கீதை பிறந்ததும் இன்று தானே!
மூலவர் அரங்கநாதனுக்கு முத்தங்கி சேவை! உற்சவர் நம்பெருமாளுக்கோ ரத்னாங்கி சேவை!
நம்மைக் கடைத்தேற்றி, நம் விதி மாற்ற வந்தார் ஒருவர் - மாறன் சடகோபன்!
அவர் நம்முடைய ஆழ்வார், நம்மை உடைய-ஆழ்வார், நம்மாழ்வார்!
அவருக்காக இன்று மட்டும் திறக்கப்படும் வைகுந்த வாசல்.
குருநாதரின் தாளைப் பற்றிக் கொண்டு, தாயுடன் ஒட்டிக்கொண்ட குட்டியைப் போல், நாமும் நுழையலாம், வாங்க!
அவருடன் சேர்ந்து, நாம் எல்லாரும் நுழைவதே சொர்க்கவாசல் சேவை! உண்மையில், சொர்க்க வாசல் என்பதை விட வைகுந்த வாசல், பரமபத வாசல் என்று சொல்வது தான் பொருத்தமானது!
விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!
நல்லோர் நெஞ்சமெல்லாம் நிறைய, நாதன் அரங்கன் அவன், சிம்ம கதி போட்டு வரும் அழகே அழகு!
அவன் நடை அழகு! திருக் குடை அழகு!
கீழே கண்குளிரக் கண்டு களியுங்கள் அரங்கனை!
முன் அழகன், பரமபத வாசல் சேவை
பாயுநீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திருநன் மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர்இதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியோர்க்கு அகல லாமே
முன்னிலும் பின் அழகன், திருக்குடை அழகு!
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே!
அரங்கன் அடி முடி ஜொலிக்கக் காட்டப்படும் தசாவதாரக் கற்பூர தீப சேவை!
சரி, கதைக்கு வருவோம்!
சுவாமி புறப்பாடு மாலையில் நடந்து கொண்டு இருக்கிறது! வீதியுலா வருகிறான் இறைவன்! கூடவே நம்ம பிள்ளைப் பெருமாள் ஐயா அரங்கனுக்கு வியர்க்குமே என்று வெண்சாமரம் வீசிக் கொண்டு வருகிறார்;
கதிரவன் மறையும் நேரம்! பிள்ளையின் தோளில் யாரோ தட்டுகிறார்கள்! சடக்கென்று திரும்பிப் பார்க்கிறார்; வேற யாரு, நம்ம ரங்கன் தான்!
* பிள்ளைவாள், சந்தி செய்யும் நேரம் வந்து விட்டதே! நீங்க செய்யப் போகலியா?
அது எப்படி சுவாமி? நீங்க புறப்பாடு வந்து கொண்டு இருக்கிறீர்களே!
* அதனால் என்ன? என்னைத் நடுத்தெருவில் அப்படியே வைத்து விட்டுப் போங்கள்! சந்தியை முடித்து விட்டு வாருங்கள், மீண்டும் புறப்பாடு தொடரலாம்!
இது என்னடா இது? ரங்கனுக்குப் பைத்தியம் கியித்தியம் பிடித்து விட்டதா? என்ன உளறுகிறார் சுவாமி? யாராச்சும் சுவாமியை நடுத்தெருவில் விட்டுவிட்டு சந்தி செய்யப் போவார்களா?
* என்ன பிள்ளைவாள் யோசிக்கிறீர்? எனக்குச் சித்தம் கலங்கி விட்டது என்றா? ஹா ஹா! உம் கேள்விக்கு இப்போது விடை கிடைத்திருக்குமே!
விளங்கவில்லை சுவாமி! நான் தான் ஞான சூன்யம் என்று அப்போதே சொன்னேனே!
* சரி, நானே சொல்கிறேன். கேளுங்கள்!
சந்தி என்பது தினசரி தர்மம்; சுவாமிப் புறப்பாடு என்பது விசேட தர்மம்!
இன்று மாலை வேளையில் இந்தப் பெரிய தர்மத்துக்காக, அந்தச் சிறிய தினசரி தர்மத்தை ஒத்தி வைக்கிறீர் அல்லவா? - ஆமாம் சுவாமி!
* ஆனால் இப்படி தசரதரோ, பீஷ்மரோ, துரோணரோ செய்யவில்லை!
* தத்தம் தினசரி தர்மம் காப்பாற்ற வேண்டும் என்ற "நன்னலமான தன்னலத்தில்", பொதுநலனை எப்படியோ அவர்கள் மறந்து போனார்கள்! ஒருவருக்கோ கைகேயிக்குத் தந்த வாக்கு தர்மம் பெரிதாய்த் தோன்றியது! மற்றவருக்கோ உண்ட வீட்டுத் தர்மம்!
அதனால் என்னையே அம்போ என்று விட்டுவிட்டுப் போய் விட்டார்கள்!
அவர்கள் சிந்தித்துச் செயல்பட நானும் கொஞ்சம் நேரம் தந்தேன்! ஆனால் பாவம், அவர்களால் தர்ம சங்கடத்தில் இருந்து மீண்டுவர முடியவில்லை!
என்ன, புரிந்தாற் போல் இருக்கிறதா பிள்ளைவாள்? - லேசாகப் புரிகிறது ரங்கா!
* ததிபாண்டன் பொய் தான் சொன்னான்; ஆனால் அவனுக்குப் பழி வந்தாலும் பரவாயில்லை என்று, எனக்காகத் துணிந்து சொன்னான்.
முன்பு கோபியர்கள் தங்கள் பாதம் பட்ட மண்ணை என் தலையில் பூசினார்கள் அல்லவா?
அவர்களுக்குப் பாவம் வந்தால் கூட பரவாயில்லை, என் நோய் தீர்ந்தால் போதும் என்ற ஒரு வாஞ்சை!
துரியோதனன் கூட அவன் காலடி மண்ணை என் தலையில் போடுவேன் என்று தான் கர்ஜித்தான்! இரண்டு வினைகளும் ஒன்று தானே! நோக்கம் தான் வேறு!
நீங்களே சொல்லுங்கள், அடியவன் என்னை மனத்தில் சுமந்தால், அவன் பாரத்தினை அடியேன் சுமக்க மாட்டேனா!
பிள்ளை வாய் அடைத்துப் போய்விட்டார்!
ஒன்றுமே பேச முடியவில்லை! கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்!
சுவாமி நீங்களே, உங்கள் திருவாயால், உங்களைப் போய் அடியேன் என்று சொல்கிறீரே. இது அழகா?
* பிள்ளாய், அடியவர்களுக்கு அன்பன் நான்;
அப்படி என்றால் அடியார்க்கு அடியான் தானே! உன் மனம் ஒப்பவில்லை என்றால், நீ மகாலக்ஷ்மியிடம் வேண்டுமானால் கேட்டுப் பார்!
அவள் காருண்ய லக்ஷ்மி, அவள் என்ன சொல்வாள் என்று பிள்ளைக்குத் தெரியாதா என்ன?
* ஜகத்குருவே நான் தான்! ஆனால் எனக்கே ராமானுஜர் குருவாக அமைய வில்லையா? அது போல் தான் அன்பருக்கு நான் அடியேன் ஆவதும்!
ராமானுஜர் முறைப்படுத்திக் கொடுத்தது தானே, நீங்கள் இப்போது என்னை அழைத்துச் செல்லும் இராப்பத்து உற்சவம்?
சரி யோசனையை விடுங்கள்! "அனுபவிக்குனும்; ஆராயக் கூடாது!" என்பது வலைப் பெரியோர் வாக்கு!
* வாருங்கள், தீந்தமிழ்ப் பாசுரங்கள் தொடங்கட்டும்!
ஆமாம், நம்மாழ்வாருக்கு ஓலை அனுப்பினேனே திருவரங்கம் வரச் சொல்லி! இன்னுமா அவர் வரவில்லை?
குருகூரில் இருந்து கிளம்பி விட்டாராம் சுவாமி! இதோ வந்து விடுவார்!
* சரி, எங்கே நான் அனுப்பிய இன்னொரு ராஜ ஓலையைப் படியுங்கள்!
"யாமே, உபய நாச்சியார்களோடு, ரத்ன சிம்மாசனத்தில் கொலுவிருந்து,
பகல்பத்து-ராப்பத்து நாட்களில், எல்லாத் தமிழ் வேதங்களையும்
செவிகுளிரக் கேட்கச் சித்தம்!
அது போழ்தினிலே எவ்வொருவரும் யாது மந்திரங்களையும், பாடல்களையும் தனியே சாற்ற வேண்டாம்!
கோதைத்தமிழ் மட்டுமே இதற்கு விலக்கு!
- (ராஜ முத்திரையுடன்) அரங்கத்தான் ஆணைப்படி!
* சரி, பல்லக்கைக் கொலு மண்டபத்துக்குத் தூக்கச் சொல்லுங்கள்!
நீங்களும் அங்கு வந்து என்னைச் சந்தியுங்கள்!
அப்படியே ஆகட்டும் ரங்கா, மன்னிக்கவும்; பேரரசே ரங்கராஜா!
யார் அங்கே?
அருள்பாடி ஸ்ரீபாதம் தூக்குவோஓஓஓஓஓஓஓஓஓர் - எங்கே?
அடியோம் இந்தோஓஓஓஓஓஓஓஓஓம்!