கேஆரெஸ் சிவம்! துளசி சிவம்! பதிவர் சிவம்! பரமம் சிவம்!
குமரன் சிவம்! கோவி கண்ணன் சிவம்! எஸ்.கே. சிவம்! மெளலி அண்ணன் சிவம்!
தேவும் சிவம்! வெட்டிப் பயலும் சிவம்! ஆயில்ஸ் சிவம்! அந்த அதிஷா சிவம்!
கானா சிவம்! கொத்த னாரும் சிவம்! துர்கா சிவம்! மை ஃபிரெண்டும் சிவம்!
பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்! பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்!!
அடப்பாவி கேஆரெஸ்! நல்லாத் தானே இருந்தே? என்ன ஆச்சுறா உனக்கு?
சுப்ரபாதம் போட்ட கையோடு, இப்படிச் சூடா வெண்பொங்கல் கணக்கா கொழ கொழ-ன்னு ஆயிட்டே? - அப்படின்னு பாக்கறீங்களா மக்களே? ஹா ஹா ஹா!
ஆல் பிகாஸ் ஆஃப் திஸ் குமரன்! இருங்க, அதுக்கு முன்னாடி ஒரே ஒரு சிவத்தை விட்டுபுட்டேன்! அவிங்களையும் சொல்லிடறேன்!
கீதா சிவம்! ஓ! அது அவங்க பேர்-ல ஏற்கனவே இருக்கா! சரி சரி!
கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! :)
மேட்டர் என்னான்னா, நம்ம கூடலார்-குமரனார் ஒரு பதிவு போட்டிருக்காரு! நானே சிவன்! நானே சிவம்-ன்னு!
அதைப் படிச்சதிலிருந்து, எனக்கு வேற வேலையே ஓடலை! அப்படியே ஒட்டிக்கிச்சி! ஏன்னா, நான் ரொம்ப நாளாய், அதுவும் நாத்திகனில் இருந்து ஆத்திகனாய் மாறிய காலம் தொட்டு, மிகவும் விரும்பிப் படிக்கும் பாட்டு அது!
இல்லை, இல்லை-ன்னு தான் அந்தப் பாட்டில் வரும்!
இல்லை-ன்னு சொல்லும் நாத்திகத்தை விட்டு வர, எனக்கு இந்த "இல்லை-இல்லை" பாட்டு தேவைப்பட்டுதோ என்னமோ? :)
ஆத்ம ஷட்கம் (நிர்வாண ஷட்கம்) என்பது அதற்குப் பெயர்! விடுதல் ஆற்றுப்படை-ன்னு, தமிழில் மொழி பெயர்த்து இருக்கேன்! :)
நிர்வாணம் = விடுபடுதல்! விடுபட்ட நிலை
ஷட்கம் = ஆறு பாடல்கள்
அதான் நிர்வாண ஷட்கம் = விடுதல் ஆறு! விடுதல் ஆற்றுப்படை!
ஆறு செய்யுளும் இருக்கு! நமக்கு ஆற்றுப் படையாகவும் இருக்கு!
இது ஜகத்குரு ஆதி சங்கரரின் அருளிச் செயல்!
பல தத்துவங்களை உள்ளடக்கிய பாட்டு! அத்வைதம் என்றால் என்ன என்று படிக்கத் துவங்குபவர்கள், இதைப் படிச்சிட்டுத் துவங்கினா, அத்வைதத்தின் நுண்ணிய கருத்துகள் பலவும் மிக எளிதாகப் புலப்படும்! ஏன் தெரியுமா?
ஆதி சங்கரரே, இதைப் பாடி விட்டுத் தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சாராம்!
அடியேன் சங்கரனும், இதைப் படிச்சிட்டு தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சேன்!
வாங்க, எப்பமே கதையைச் சொல்லிட்டுக் கருத்தைச் சொல்லுறது தானே என் கெட்ட பழக்கம் :)
ஆதி சங்கரர், என்ன தான் கருவிலே திரு உடையவர் என்றாலும், ஒரு நல்ல குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்! அப்போது தான் முதலை வாயில் இருந்து தப்பித்து, தாயின் இசைவோடு ஆபத் சன்னியாசம் பெற்று இருந்தார்! அது தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட சன்னியாசம்! முறையான ஒன்று அல்ல!
அப்படியே நடந்து நடந்து, இமயமலையில் உள்ள பத்ரிநாத் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார் சங்கரர்! கோவிந்தன் துணைகொண்டு ஞானம் பெற வேண்டும்! பரந்து விரிந்த ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம் போலும்!
திருவதரீ என்றும் பத்ரிகாச்ரமம் என்றும் சொல்லப்படுவது பத்ரிநாத்! 108 திவ்யதேசங்களிலே ஒன்றாக வைத்துப் போற்றப்படுவது! அதரி என்றால் இலந்தைப் பழ மரம்!
அதனடியில் பத்ரி நாராயணனாக, ஞான குருவாக இறைவன் வீற்றிருக்கிறான்! யோக முத்திரை காட்டியபடி! அவனுடன் மகாலக்ஷ்மி, சேனை முதலியார் என்று ஆசார்ய பரம்பரை!
கூடவே கருடன், வியாழன், நாரதர், குபேரன், உத்தவர், நர-நாராயணர்கள்!
பத்ரிநாதப் பெருமாள் ஞான குருவாக அமர்ந்து உபதேசிப்பதை, அர்த்த பஞ்சக ஞானம் என்று குறிப்பிடுவார்கள்!
1. ஜீவாத்மா எது?
2. பரமாத்மா எது?
3. ஜீவாத்மா எதை அடையணும்?
4. அடையும் வழிகள் என்ன?
5. அடையும் வழியில் தடைகள் என்ன?
சங்கரர் தப்த குண்டம் என்று சொல்லப்படும் சுடு நீர் ஊற்றிலே குளித்து விட்டு, பத்ரீநாதனை மனதால் சேவித்துக் கொண்டார்! பின்னாளில் அந்த ஆலயத்தின் இறைவனை ஆற்றில் இருந்து தாம் தான் எடுத்து மீட்கப் போகிறோம் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை! தன் அடி மன வேட்கையான ஒரு நல்ல குருவை அடையணுமே என்று வேண்டிக் கொண்டு, இமயமலையின் மேல் நடக்க ஆரம்பித்தது தான் தாமதம்...
கண் முன்னே அந்த ஞான குரு! பெயர் கோவிந்த பாதர்!
அடியேனைத் தங்கள் சீடனாய் வரிக்க வேண்டும் என்று இந்தப் பிள்ளை வேண்ட,
யாரப்பா நீ? என்று வந்தது ஒரே ஒரு கேள்வி!
சங்கரர் அதுகாறும் மனத்தில் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் மள மளவென்று மழை போல் பொழியத் துவங்கி விட்டார்!
* நான் மனம் இல்லை! நான் புத்தி இல்லை!
* நான் சினம் இல்லை! நான் சித்தம் இல்லை!
* நான் வான் இல்லை! மண் இல்லை! வளி இல்லை! ஒளி இல்லை!
* நான் அதுவும் இல்லை! நான் இதுவும் இல்லை! நேதி! நேதி!
எதுவுமாக இல்லாத நான், "நான் யார்?" என்பதை அறியவே தங்களை நாடி வந்துள்ளேன் குருவே என்று மொழிந்தார்!
தன் காலடிக் கதையைச் சொல்லிக் காலடியில் வீழ்ந்தார் அண்ணல்!
"நான் இல்லை! நான் இல்லை!" என்று சங்கரர், குருவிடம் சொன்ன முதல் சுலோகம் இதுவே! ஆத்ம ஷட்கம்! நிர்வாண ஷட்கம் என்றும் பெயர்!
கோவிந்தபாதருக்கு இந்தப் பிள்ளையின் ஞானத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு உண்டாகிவிட்டது! உடனே சன்னியாசத்தை முறையாக அளித்து, தன் சீடனாகச் சேர்த்துக் கொண்டார்!
அத்வைத நான்கு மகா வாக்கியங்களையும், அபேத சுருதிகளையும் சொல்லித் தர ஆரம்பித்தார்! அத்வைத விசாரணையும் படிப்பும் படிப்படியாகத் துவங்கியது!
பின்னாளில் ஞானம்-கர்மம்-பக்தி என்று மூன்று மார்க்கத்துக்குமே ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கப் போகும் சங்கரனின் பாடம் துவங்கியது இப்படித் தான்!
(* கோவிந்த பாதரை பத்ரிநாத்தில் சந்திக்காமல், நர்மதை நதிக் கரையில் சந்தித்தார் என்று சொல்வாரும் உண்டு)
குமரன் பதிவு இதோ! சொல்-ஒரு-சொல்லாய், பொருளும் கொடுத்திருக்காரு!
ஆறே ஆறு பாட்டு தான்! வாய் விட்டுப் படிக்கும் போது, சந்தம் தானா வந்துரும்!
இதைச் சந்தம் மாறாமல் தமிழ்ச் செய்துள்ளேன் அடியேன்!
சொல்லும் பொருளும் இசையும் சேர்ந்து வருதா என்று நீங்களே பார்த்துச் சொல்லுங்களேன்!
மந்திர ஒலி வடிவில் - வேகமாக! (கேட்டுக்கிட்டே படிங்க)
விடுதல் ஆற்றுப்படை
* அதுவும் இல்லை! இதுவும் இல்லை! நேதி! நேதி!மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்
மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை!
சினம் தங்கு செவி நாக்கு கண்களும் இல்லை!
வானாகி மண்ணாகி வளி ஒளியும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!
(சிதானந்தம் = சித்தம்(ஞானம்) + ஆனந்தம்; சச்சிதானந்தம்/திருச்சிற்றம்பலம் என்பது போல் சித்+ஆனந்தத்தை மட்டும் தூய தமிழில் ஆக்காது, சிதானந்தம் என்றே வைத்து விட்டேன்! சிவோஹம் = சிவ + அஹம்)
ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
உயிர் மூச்சு மில்லை! ஐங் காற்றும் இல்லை!
எழு தாதும் இல்லை! ஐம் போர்வை இல்லை!
கை கால்கள் இல்லை! சினை வினையும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!
(ஐங்காற்று: ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று
எழு தாது: ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை
ஐம் போர்வை: அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)
ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
விரு வெறுப்பில்லை! மையல் பற்றும் இல்லை!
கரு கருவம் இல்லை! அழுக் காறும் இல்லை!
அறம் பொருள் நல்லின்ப வீடும் நானில்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!
ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
வினை வேட்கை இன்பங்கள் துன்பங்கள் இல்லை!
மறை வேத தீர்த்தங்கள் வேள்விகள் இல்லை!
துப்பில்லை துப்பாக்கித் துப்பாரும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!
(துப்பில்லை=உணவில்லை; துப்பாக்கித் துப்பாரும் இல்லை=உணவை உருவாக்கலும் இல்லை! உண்டு துய்ப்பவனும் இல்லை!)
ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
மரணங்கள் கரணங்கள் சாதிகள் இல்லை!
தாய் தந்தை இல்லை! தரும் பிறப்பில்லை!
உற்றார்கள் சுற்றார்கள் குரு சீடர் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!
அஹம் நிர்விகல்போ நிராகார ரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்
மாற்றங்கள் இல்லை! பல தோற்றங்கள் இல்லை!
எங்கெங்கும் எங்கெங்கும், எதிலும் நான் நானே!
தளையில்லை! தடையில்லை! தரும் முத்தி இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!
இதி ஸ்ரீ மத் சங்கராச்சார்ய விரசித, நிர்வாண ஷட்கம் சம்பூர்ணம்!
சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்! சிவோஹம்!
(***கார்த்திகைச் சோமவாரம் சிறப்புப் பதிவு***)
இசை வடிவில்: