Tuesday, June 26, 2007

அ என்றால் 8!

எல்லாரும் விதம் விதமா எட்டு போட்டுட்டாய்ங்க! கடைசியா எட்டு போடறவங்களுக்கு ஒரு ஈசியான வேலை என்னன்னா அடுத்த எட்டுக்கு யாரைக் கூப்பிடலாம்-னு மண்டைய போட்டு ரொம்ப உடைச்சிக்க வேணாம்.

ஏன் என்றால் ஏற்கனவே பல பேர் உடைச்சிட்டு போயிட்டுருப்பாங்க!
தேர்தல் நாள் அன்று சாயந்திரமா ஓட்டு போடப் போனா, எதுனா மிஞ்சுமா? உங்க ஓட்டு உங்களுக்குச் சிரமம் இல்லாம ஏற்கனவே அரங்கேறி இருக்கும்!

அன்பர் SK ஐயா, குட்டிப் பிசாசு என்னும் சுட்டி அருண், தளபதி CVR, மற்றும் கதாநாயகன் சந்தோஷ் அவர்கள் எல்லாருக்கும் ஒரு வாயி நன்றி சொல்லிட்டு, இதோ நம்ம எட்டு!

அட இன்னிக்கி தேதி June 26...இதன் கூட்டுத் தொகையும் 8-ப்பா! ச்சே...
சொல்ல வந்தது என்னன்னா...ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம்
பெரியாழ்வார் திருநட்சத்திரம்...அதான்பா Birthday!
இன்னிக்கி இந்தப் பதிவ போட்டதனால, நாளைக்கு பெரீய்ய்ய்ய்ய் ஆழ்வாரைப் பற்றித் தனியா பதிவு போட்டுடறேன்! :-)


௧.1
எட்டு-ன்னதும் மொதல்ல ஞாபகத்துக்கு வர்றது எட்டெழுத்து தானுங்கோ!
அதுக்குத் திரு எட்டு எழுத்து-ன்னும் ஒரு பேரும் உண்டுங்கோ! அஷ்டாக்ஷரம் என்று வடமொழியில் சொல்லுவாங்க...ஆனா எதுல எப்படிக் கூட்டினாலும் எட்டு எழுத்து தான் வரும்!

எது என்னான்னு நீங்களே பின்னூட்டத்தில் சொல்லுங்கோவ்!
அதைத் தான்
"குலம் தரும், செல்வம் தந்திடும், அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும், நீள் விசும்பு அருளும், அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும், மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன்.....என்னும் நாமம்"
என்று பாடினார்கள்!


௨.2
எங்க ஆயா சின்ன வயசுல, யானையில போட்டு என்னை ஆட்டுவாங்க!....அட நீங்க ஒண்ணு...யானை எங்க வீட்டுச் செல்லப் பிராணி கிடையாது.
தூளி, தொட்டில் என்பதைத் தான் ஊர் வழக்குல யானை-ன்னு சொன்னேன்!
அவங்க அப்பிடி ஆட்டும் போது, ஏதாச்சும் பாட்டு பாடிக் கொண்டே ஆட்டுவாங்க. பாதி நேரம் திருப்பாவை தான்! நான் தூங்குறாப் போலத் தெரிஞ்சிச்சுனா பாட்டையும் ஆட்டத்தையும் நிறுத்திடுவாங்க!

நான் அப்பவே கொஞ்சம் அதிகப் பிரசங்கி போல! பாட்டிக்கு மறந்து போச்சாக்கும்-ன்னு நெனச்சி, மீதிப் பாட்டை நானே fill in the blanks செய்வேனாம்! அதுல அவுங்களுக்கு ஒரே புளகாங்கிதம்! தன் இறுதி நாட்களில் கூட அதைச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்! இதுனால என் தங்கச்சிக்கு ஒரே stomach burning என்பது தனிக்கதை :-)


௩.3
எங்க கிராமத்துக் கோவிலில், திறந்த வெளி அதிகம். நிறைய பூச்செடிகள்!
கஜேந்திர வரதராஜப் பெருமாள். நல்ல ஜம்முன்னு காம்ப்ளான் பாய் மாதிரி இருப்பாரு, சிரிச்ச முகமாய்!

ஆனா ஊன்னா...நம்மள கூப்பிட்டு அங்கே மண்டபத்துல உக்கார வைச்சிடுவாங்க! ஏன்னா தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாக் கூட திருப்பாவை படபடவென்று கொட்டுவேனாம். இத்தனைக்கும் மூனாங் கிளாஸ் தான்!
ஆனா அந்த மண்டபத்தில் உட்காரறது ரொம்ப கஷ்டம்ங்க! ரொம்ப கொசுத் தொல்லை இருக்கும்! ஓங்கி உலகளந்த உத்தமன் Bare Bodyன்னு ஆரம்பிச்சாலே போதும்...Bare Body இல் கொசு கடிச்சு Red Body ஆகிடும். :-)

அப்ப தான் ஒரு நாள், டார்டாய்ஸ் கொசு வர்த்திச் சுருள் ஒண்ணு வீட்டுல வாங்கியாந்து கொளுத்தினாங்க. அப்ப தான் அதை முதல்முறையா பார்க்கிறேன். ரொம்ப பிடிச்சு போச்சு! ராத்திரி சக்கரத்தைப் பத்த வச்சிட்டு காலையில் எழுந்திரிச்சி பாத்தா ஒண்ணுமே இருக்காது!


ஒரு நாள் மாலை, அர்ச்சனைத் தட்டுக் கூடையில், நாலைஞ்சு டார்டாய்ஸ் எடுத்து போட்டுக்கினு கோயிலுக்கு புறப்பட்டு விட்டேன்! கூடையில் ஏற்கனவே அம்மா கொஞ்சம் பூ வைச்சிருந்தாங்க. நான் போய் கூடையை அர்ச்சகரிடம் கொடுக்க, அவர் கூடையில் கொசுவர்த்தியைப் பாத்துட்டு என்னடா இது-ன்னு ஒரு அதட்டல் போட்டார்.

நானும் ரொம்ப பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு, "சாமீ...இங்க கொசுக் கடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. கொஞ்ச நேரம் இருக்குற நமக்கே இப்படின்னா...பாவம் பெருமாள்! எவ்ளோ நேரம் நிக்கறாரு. அவரைக் கொசு கடிக்கக் கூடாதுன்னு தான் வீட்டில் இருந்து எடுத்தாந்தேன். கொளுத்தி வைங்க சாமீ" என்று சொன்னேனாம்!

மனுசன் நான் ஏதோ விதண்டாவாதம் பண்றதா நினைச்சிட்டாரு போல! உடனே பளார்!
வீட்டுக்கு வந்து அங்கும் போட்டுக் கொடுத்து விட்டார். என்னை வீட்டில் எல்லாரும் விசாரிக்க, நான் ஒரே அழுகை! இதுவும் சக்கரம் மாதிரி தானே இருக்கு, வைச்சா என்ன குறைஞ்சு போயிடுவாருன்னு justification வேறு செய்து கொண்டிருந்தேன் போல!

நல்ல வேளை...விஷயம் கேள்விப்பட்டு குருக்கள் மனைவி வந்தாங்க. என்னைக் கட்டி அணைத்து, "குழந்தை என்னமா சுவாமி மேல அக்கறையா கொண்டாந்திருக்கான். அவனைப் போயி எல்லோரும் வையறீங்களே"ன்னு சொல்லி அவுங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க! நானும் அழுகைய நிறுத்திச் சமாதானம் ஆனேன்!
ஆனா இன்னிக்கி வரைக்கும் யாரும் கொசுவர்த்தியைக் கொளுத்திக் கோவிலில் வைக்கலை என்பது எனக்கு ஒரு வருத்தம் தான்! :-)


௪.4
பள்ளி/கல்லூரி நாட்கள் மறக்க முடியாதவை!
அதிலும் "அடியேன்" பெரியார் கொள்கைகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகத்தில் இருந்த நாட்கள்.

சென்னை, தினத்தந்தி அலுவலகம் அருகே உள்ள பெரியார் திடலில் தான் ஐயா பெரியாரின் நினைவிடமும், தி.க அலுவலகமும்!
வீரமணி ஐயாவிடம் நேரடியாவே பேசலாம்! ரொம்ப பந்தா எல்லாம் கிடையாது!
கம்பராமாயணம், பெரிய புராணம், ஆழ்வார் பிரபந்தங்கள் - எல்லாம் தமிழ்க் கருவூலங்கள் - இவை எரிக்கப்படக் கூடாதுன்னு அவரிடம் வாக்குவாதம் எல்லாம் செஞ்சிருக்கேன்!


ஆனாலும் அவை ஒரு போராட்டத்தில் எரிக்கப்பட்ட போது, எனக்குள் தோன்றியது முதல் விரிசல்!
பின்பு கல்லூரியில் பேராசிரியர் மதி சீனிவாசன் அவர்கள் பார்வை பட்டு, எப்படியோ அரங்கனிடம் மீண்டும் வந்து சேர்ந்தேன்!
சென்னைப் பல்கலையில், துறைத் தலைவர் டாக்டர் M.A வேங்கடகிருஷ்ணன் அவர்கள், சாதி வித்தியாசங்கள் எதுவும் பாராது, ராமானுசர் வழியில் அரவணைத்துக் கொண்டதும், திருவரங்கத்து நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணும் நற்பேறு ஏற்படுத்திக் கொடுத்ததும்...
...அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது நூற்றுக்கு நூறு உண்மை!
குலதெய்வம் முருகன். சென்றது பெரியார் கழகம். மீண்டது பெருமாளிடத்தில்! :-)


௫.5
கல்லூரி ஆண்டு மலருக்கு பல பிரபலங்களைப் பேட்டி கண்டது மறக்க முடியாத ஒன்று!
அண்ணாச்சி ராஜகோபால் (அதாங்க நம்ம சரவண பவன் அண்ணாச்சியே தான்), பத்திரிகையாளர் சோ, தமிழறிஞர் அவ்வை நடராஜன், இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்று பலரைப் பேட்டி கண்டோம். அப்போது தான் கல்லூரிக்கு வெளியே கிடந்த, போட்டி நிறைந்த professional life பற்றி ஒரு பார்வை கிடைச்சுது!

நான் எங்கள் Batchக்கு Placement Representative ஆகவும் இருந்தேன். எங்கள் கல்லூரியில் கிராமப்புற மாணவர்களும் அதிகம். ஆங்கிலம் சரளமாக வரவும், Campus நேர்காணல், ஆளுமை வளர்ச்சி (Personality Development) ன்னு பல முயற்சிகள்!
Day Scholarஆக இருந்த நான் பாதி நாள் ஹாஸ்டல் வாசம் செய்து வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டேன்!
இறுதியாக எங்கள் பேட்சில் 29/30 placement கிடைத்தது. இது ஒரு பெரிய மகிழ்ச்சி, அனைவரின் இல்லங்களிலும்!

பி.கு: எங்கள் கல்லூரியில் தான் அப்துல் கலாம் ஏரோனாட்டிக்கல் பயின்றார். So, எங்க சீனியருப்பா அவரு!


௬.6
பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது, இந்திய-அமெரிக்க உறவுகளில் ஒரு நெருக்கம் ஏற்பட்டது. பல நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. அவர் இந்தியாவுக்கு வந்த போது எங்கு பார்த்தாலும் ஒரே craze. நாடாளுமன்றத்தில் கூட உறுப்பினர்கள் அவருடன் கை குலுக்க ஒரே போட்டா போட்டி.
அது என்னடான்னு அப்புறம் பார்த்தா தான் தெரிஞ்சுது...மோனிகாவைப் பிடித்த கையை இவர்களும் பிடிக்க ஒரே ஆர்வக் கோளாறு என்று :-)

அவர் ஓய்வு பெற்ற போது, இந்திய-அமெரிக்க நல்லுறவு மலர்ந்தது பற்றி அவருக்குச் சும்மானா ஒரு கடுதாசி போட்டேன்! அமெரிக்கா வந்த புதுசு அப்போ. தமிழ்மணம் எல்லாம் கிடையாது அல்லது எனக்குத் தெரியாது! அப்புறம் அதை மறந்தே போயிட்டேன்!
திடீர்ன்னு ஒரு நாள் தபால்காரர் என்னைக் கூவி அழைத்தார். என்னடானு பார்த்தா வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு கடிதம்.

சரி சும்மானா நன்றி என்ற வாழ்த்து அட்டையா இருக்கும்னு நினைத்துப் பிரிச்சா,
தலைவர் ஒரு பக்கப் பதில் கடிதம் எழுதி, கையெழுத்து போட்டு அனுப்பி வைச்சார். ஆகா..ன்னு ஒரு போதை ஏறி அடங்க ஒரு மூணு நாள் ஆச்சுது!


௭.7
குழந்தைகள் நலத் திட்டங்களில் அதிக அக்கறை கொண்டது நியூயார்க் வந்த பிறகு தான்!
Multiple Sclerosis நோய் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி, மற்றும் அதற்கு நிதி சேர்க்க நியூயார்க் five borough சைக்கிள் டூர் என்று ஓடுகிறது...
இதோ சுட்டி!



௮.8
வெட்டிப்பயல் பாலஜியும் நானும் விடிய விடிய ஒரு நாள் காரசாரமாக தொலைபேசிக் கொண்டிருந்தோம். இரவு பத்து மணிக்குத் தொடங்கிய பேச்சு மறு நாள் வைகறை 4:30 மணிக்குத் தான் நின்றது!
அப்படி என்னடா பேசிக்கிட்டீங்கன்னு கேக்குறீங்களா?

ஹிஹி...அது என்னன்னா பேச்சுக்கு பேச்சும் ஆச்சு, வைகுண்ட ஏகாதசிக்கு ஏகாதசியும் ஆச்சு என்று அந்த ஏகாதசிக்கு அவரும் என்னுடன் சேர்ந்து கொண்டார். இப்போது நினைத்தாலும் கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது!


அப்பாடா...எட்டு எட்டுன்னு எட்டியாச்சுப்பா!
அடுத்த திட்டம்.....எட்டு முறை சிவாஜி பாக்க வேண்டியது தான்! (ஏற்கனவே ரெண்டு முறை பார்த்தாச்சு...அய்யோ கொத்தனார் என்னைக் கொத்த வரா மாதிரியே இருக்கே! :-)

அப்பறம், மறக்காம காப்பி & பேஸ்ட்
விளையாட்டின் விதிகள்: (உங்களின் தலைவிதிகள்:-)
1. ஆடுபவர் தன்னைப் பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.) அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும் -
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் - இது எல்லாம் optional தான் - நிறைய பேரு இதை மதிக்கலை. ஸோ...கண்டுக்காதீங்க! :-)

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும். - முக்கியமாக இப்படி உங்களை அழைத்தவரைத் திட்டி, சாபம் எல்லாம் வுடக் கூடாது! :-)

நான் அழைப்பது:
செல்வன்
சிவபாலன்
வாத்தியார் ஐயா
தமிழ் சசி
நா.கண்ணன்
சாத்வீகன்
அன்புத் தோழி
திராச
Read more »

Thursday, June 21, 2007

அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்!

நாள்: நவம்பர் 20, 2003
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
(pdf version of this post)

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
- இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!

இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!
முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்!

அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன்.
ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர்.
அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார். நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.

இனி என்ன? நேரே தரிசனம் தான்!

ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!

"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!

இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!

முன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்....
திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு
என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.
ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!

அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,
இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்;
அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!

துலுக்கா நாச்சியார் என்ற இஸ்லாத்தின் பெண்மணி, இறைவனைக் கண்டு மோகித்த போது, உள்ளே அனுமதி மறுத்தாரா இராமானுசர்?
இல்லையே! அவளுக்குத் தனிச் சந்நிதி அல்லவோ கண்டார்!
அவர் வழி வந்த ஜீயர்கள், அரசியல் அவலத்தால் அன்பர்கள் அல்லல்படக் கூடாது என்று இந்த மாற்று வழி கண்டனர்!

பின்னர் காலம் உருண்டோடியது!
முகம்மதிய சுல்தான்களின் ஆட்சி எல்லாம் போயே போய் விட்டது! ஆனால் வழக்கத்தை மட்டும் மாற்ற யாருக்கும் தோன்றவே இல்லை! மறந்தே போனது!

மடத்தில், பூனையின் தொல்லை அதிகம் இருந்ததால், அதைத் தூணில் கட்டிவிட்டு பாடம் எடுத்தார் ஒரு குரு.
அவருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில், பூனைகள் தொல்லையே மடத்தில் சுத்தமாய் இல்லை.
இருந்தாலும் எங்கிருந்தோ தேடிப் பிடித்து, ஒரு பூனையைக் கொண்டு வந்து தூணில் கட்டி விட்டுத் தான் பூசைகளை ஆரம்பித்தார்களாம்:-)
அந்தக் கதை ஆகி விட்டது!

இது போன்ற விடயங்கள் இப்போது பெரும் பிரச்சனையாகக் கிளம்பி, ஆளாளுக்கு அரசியல் பண்ணத் துவங்கி விட்டார்கள்!
அரசியல் சட்டங்கள் கூட மாற்றமும் திருத்தமும் பெறுகின்றன.
ஆனால் அவை எப்போது செல்லும் என்றால்,....
அதை மக்கள் பிரதிநிதிகள், தாங்களாகவே அவையில் கொண்டுவர வேண்டும்.

அதே போல் தான், கால வழக்கமாக ஏற்பட்ட ஆலய விதிகளும்;
அவை திருத்தப்படலாம்.
ஆனால் அவற்றை வெளியில் இருந்து திணித்தால் வம்பு தும்புகள் தான் பறக்கும். அவரவரே செய்ய வேண்டும்!

ஆன்மிகப் பெரியவர்களும், மடங்களும், ஆலய நற்பணி மன்றங்களும் சேர்ந்து கலந்துரையாடினால் ஒரு நல்ல வழி கிடைக்கும்!
எல்லாரையும் கூட்டுவது சிரமம் என்றால்...பெருமைக்குரிய மடங்கள் ஒரு சிலவாவது, இதற்கு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்!
ஒன்றைப் பார்த்து படிப்படியாக இன்னொன்றும் தெளிவு பெறும்!

இராமானுசர் வழியில், அனைத்துச் சாதி-அர்ச்சகர்கள் பயிற்சித் திட்டம் போன்ற நல்ல மறுமலர்ச்சிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்,
முதல்வர் கலைஞரின் மதிப்பைப் பெற்ற திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர், மற்றும் பரனூர் அண்ணா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் போன்றோர் இது போன்ற முன்முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்!
- இவர்கள் எல்லாம் ஒரு unifying Force என்னும் ஒருங்கிணைப்பு சக்தியாகச் செயல்பட்டால், இதை எளிதில் தீர்த்து விடலாம்!

சரி, நாம் அப்துல் கலாமுக்குத் திரும்பி வருவோம்!


நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.

வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?

கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.

அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!

அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)



வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...

யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!

கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!

பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!


அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!

வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
Read more »

Wednesday, May 30, 2007

வைகாசி விசாகம்: தமிழும் சைவமும் விரும்பிய வைணவப் பெருமாள்!

சங்கப் பலகையில் ஓலையை வைத்தவுடன், அது என்ன செய்தது? அள்ளியதா இல்லை தள்ளியதா? இதோ முந்தைய பதிவு.

தள்ளியது!...
என்ன தள்ளியதா? - ஆமாம்...பலகையின் மீது ஏற்கனவே இருந்த நூல்களை எல்லாம் கீழே தள்ளிக் கொண்டது!
திருவாய்மொழியை மட்டும் அள்ளிக் கொண்டது!
இதைக் கண்ட மக்கள் எல்லாரும் "ஆகா"காரம் செய்ய, ஆகாரம் ஆனது மன்னுயிர்க்கு எல்லாம், இந்தத் திருவாய்மொழி!

சங்கப் புலவர்கள் எல்லாரும் திகைத்துப் போய் விட்டனர்.
இது தமிழ் மறை தான் என்று முழு மனதுடன் ஒப்புக் கொண்டனர்.
தமிழ்ச் சங்கம் இதை ஏற்றுக் கொண்டு, தனது நூற் களஞ்சியத்திலே சேர்த்துக் கொண்டது!
சங்கப் புலவரின் தலைவர், மதுரகவிகளை அணைத்துக் கொண்டார்!
தவறுக்கு வருந்தி, கண்ணிர் மல்கி, ஒரு ஆசு கவி பாடிச் சிறப்பித்தார்!

ஈ ஆடுவதோ கருடற்கு எதிரே?
இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ?
நாய் ஆடுவதோ உறு வெம்புலி முன்?
நரி, கேசரி முன் நடை ஆடுவதோ?

பேய் ஆடுவதோ அழகு ஊர்வசி முன்?
பெருமாள் வகுளா பரணன் அருள்கூர்ந்து,
ஓவாது உரைஆயிரம் தமிழ் மாமறையின்
ஒரு சொற் பெறுமோ உலகில் கவியே!!

(கருடனுக்கு முன் ஈ ஆடுமோ? சூரியனுக்கு முன் மின்மினி தான் ஆடுமோ?
புலி முன் நாயும், சிங்கத்தின் முன் நரியும் தான் ஆடிடுமோ?
ஊர்வசி முன் பேய் ஆடுமோ?
வகுளாபரணன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வார் ஓதிய ஆயிரம் பாடல் கொண்ட திருவாய்மொழி. அது வேத நெறிகளின் சாராம்சம்!
மானுடம் உய்ய வந்த அதுவே தமிழ் வேதம்!
அதன் ஒரு சொல்லுக்கு ஈடாகுமோ, உலகில் உள்ள கவி?)

நம்மாழ்வார் புளியமரக் காட்சித் திருகோலம் - ஆழ்வார் திருநகரி

புலவர்கள் அனைவரும் முழு மனதுடன், விழாவை மீண்டும் நடத்திக் கொடுத்தனர்!
அன்றில் இருந்து இன்று வரை, முன்பு சொன்ன கட்டியத்தை உரக்கச் சொல்லிக் கொண்டு தான், எல்லா ஆலயங்களிலும் நம்மாழ்வார் புறப்பாடு நடைபெறுகிறது!


அட, எல்லாம் சரி!
திருவாய்மொழி வைணவப் பாட்டாச்சே! அதைப் போய் மற்ற மதங்களும் சமயங்களும் எப்படிப் படிப்பாங்க?
இப்படித் தான் சில சைவர்கள் கேட்டார்களாம்,
இடைக்காட்டுச் சித்தர் என்னும் சிவநெறிச் செல்வரிடம்.
இவர் யாருன்னு தெரிகிறதா? தாண்டவக் கோனே, தாண்டவக் கோனே என்று முடியும் சித்தர் பாடல்கள் வருமே! அவரே தான் இவர்! பழுத்த சைவர்!

அவரு, ஒரு படி மேலே போய்,
"ஐயா...இது தமிழ் வேதம். வேதத்துக்கு சிவன் என்றோ, திருமால் என்றோ, அம்பாள் என்றோ பிரிவு உண்டா?...வாங்க எல்லாரும் படிக்கலாம்", என்று கேட்டவர்களுக்கு வகுப்பே எடுக்கத் துவங்கி விட்டாராம்!
அவர் செய்த திருவாய்மொழித் தனிப்பாட்டைப் (தனியன்) பாருங்க!

ஐம்பொருளும் நாற்பொருளும் முப்பொருளும் பெய்து அமைந்த
செம்பொருளை, எம் மறைக்கும் சேண் பொருளை - தண் குருகூர்
சேய்மொழி அது என்பர் சிலர், யான் இவ்வுலகில்
தாய்மொழி அது என்பேன் தகைந்து


(பரம்பொருளின் பரம், வியூகம் முதலான ஐந்து நிலைகளும்
வேதத்தின் நான்கு நிலைகளும் ,
தத்துவத்தின் சித், அசித், ஈஸ்வரன் (பசு,பதி,பாசம்) என்னும் மூன்று நிலைகளும்
ஒருங்கே பொழிந்த நூல் இந்தத் திருவாய்மொழி! எம்மறைக்கும் அது செம்மறை!
அது குருகூர் சடகோபனின் (நம்மாழ்வார்) தமிழ் மறை!
அது ஒரு குழந்தை பாடிய மொழி என்பார்கள் சிலர்! ஆனால் இடைக்காடர் நான் சொல்கிறேன்.
அது சேய் மொழி அல்ல! எல்லாத் தத்துவங்களுக்கும் தாய் மொழி!)


இப்படிச் சைவ நெறிச் சீலர்களின் மனங்களையும் கவர்ந்தவர் நம்ம நம்மாழ்வார்!
முருகனின் வைகாசி விசாகத்தில் பிறந்த அந்தக் கொழுந்து.
அது செய்த தமிழைச், சைவரும் விரும்பியதில் வியப்பில்லையே!
இறைவனே இப்படித் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தருகிறார்! நாம் தான் மெத்தப் படித்து விட்டு, சொத்தை வாதங்கள் செய்து கொண்டு இருக்கிறோம்!
சொத்தை வாதங்களால், பெருஞ் சொத்தை இழந்து கொண்டிருக்கிறோம்! :-)

நம்மாழ்வார் அடிநிலையில் இருக்கும் சடாரி


இடைக்காடர், சைவத்தில் இருந்து கொண்டு வைணவத்தைப் புகழ்ந்தார்...சரி தான்!
அதே போல், வைணவம் சைவத்தைப் புகழ்ந்துள்ளதா?
- இது நல்ல கேள்வி!
வைணவத் தத்துவத்துக்கே தலைவரான நம்மாழ்வார், சிவபெருமானை வணங்கி வாழ்த்துவதைப் பாருங்கள்!

அற்றது பற்று எனில் உற்றது வீடு என்று பாடிய நம்மாழ்வார், அந்தப் பற்றை எப்படி அறுத்தார்?
பெருமாள், பிரமன், சிவன் என்று அனைவரையும் அழுது தொழுது, பற்றை அறுத்து, வீடு பெற்றாராம்!
இதை, இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்ல, அக்காலத்தில் எவ்வளவு துணிவு இருந்திருக்க வேண்டும்?:-)

அது என்ன பற்று?
இருப்பதிலேயே மிக பயங்கரமான பற்று, உன் சமயம் தாழ்த்தி, என் சமயம் உசத்தி என்ற பற்று.
வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ளா விட்டாலும்,
அடி மனம் அதை அசை போட்டு மகிழ்வதில் ஒரு ஆனந்தம் காணுமாம்! அந்தப் பற்று... அது அற்றது பற்று எனில், உற்றது வீடு!

அவாவற சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன்
சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.


இது திருவாய்மொழியின் நிறைவுப் பாடல்! அதில் மறக்காமல் சிவனையும் சேர்த்துப் பாடித், தமிழ் மறையைப் பொது மறை ஆக்குகிறார் நம்ம ஆழ்வார்!
முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா என்றும் அதற்கு முன்னால் பாடிப் பரவுகிறார்!


பொதுவாக வைணவர்கள் தீவிரப் பற்றாளர்கள் என்ற ஒரு வழக்கு உண்டு! அவர்கள் மதுரைக் கோவிலுக்குப் போனாலும்,
மீனாட்சியை மட்டும் தரிசித்து விட்டு, வந்து விடுவார்கள் என்றும் சொல்லுவர்.
அதெல்லாம் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒரு சிலரே! மிக மிகச் சொற்பம்!
உண்மை என்னவென்றால், திருச்சின்னங்களான சங்கு சக்கர முத்திரை பதித்துக் கொண்டவர்கள், அந்த விரதப்படி, சிவனார் ஆலயங்களில் வீழ்ந்து வணங்க மாட்டார்கள்! அவ்வளவு தான்!

ஒருமுறை வாரியார் சுவாமிகள், காஞ்சி மாமுனிவர் - மகா பெரியவருடன் கலந்துரையாடப் போய் இருந்தார்.
பெரியவரைக் கண்டவுடன், அவர் காலில் வீழ்ந்து வணங்க முற்பட,
பெரியவர் பதறிப் போய், வாரியாரைத் தடுத்து நிறுத்தினார்.
"மார்பிலே சிவலிங்க மணியைத் தரித்திருக்கும் வீரசைவன் நீ...சிவாலயங்கள் தவிர இப்படிப் பிற இடங்களில் கீழே விழுந்து, சிவலிங்கம் நிலம்பட வணங்கக் கூடாது.
இது தெரிந்தும் என் முன்னே நீ விழலாமா?", என்று வாரியாரைச் செல்லமாகக் கடிந்து கொண்டாராம்.
இதே தான் சங்கு சக்ர முத்திரை பதித்துக் கொண்டவர்க்கும்!

ஆனால் "வைணவர்கள் எல்லாம் தீவிரப் பற்றாளர்கள், பா", என்று சொல்லிச் சொல்லியே, வைணவரிடம் காரியம் சம்பாதித்துக் கொண்டு,
ஆனால் மனத்தளவில் மறந்தும் புறந் தொழாச் சைவர்களும் உண்டு :-)
இப்படித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் சைவர், வைணவர் இருவருக்குமே...ஏன்.....மற்ற எல்லாருக்குமே,
நம்மாழ்வார் சொல்லிக் கொள்வதைக் கேளுங்கள்!

சங்கர நாராயணர்

வணங்கும் துறைகள் பல பலவாக்கி, மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தொறும்
அணங்கும் பலபல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண், வேட்கை எழுவிப்பனே


வணங்கும் துறைகள் = ஒரு மாபெரும் குளம்/ஏரி...
அதன் ஒவ்வொரு பக்கமும் ஒரு துறை...
தனக்குச் சொந்த ஊர் என்பதால், அந்த ஊர்த் துறையில் வசதியாகத் தண்ணீர் எடுத்துக் கொள்கிறான் ஒருவன்!
அதற்காக, பக்கத்துத் துறையின் தண்ணீரைப் பழித்துப் பேசுவானா?
அப்படியே பழித்துப் பேசினால், அது அந்தத் தண்ணீரின் குற்றமாகி விடாதா?
அதே ஏரியின் தண்ணீர் தானே இங்கும்? அதனால் தான் "வணங்கும் துறைகள்" என்றார் ஆழ்வார்!

அப்படி நீரின் பிழை இல்லையானால், அது யாரின் பிழை?
"மதி விகற்பால்" பிணங்கும் சமயம் = அவரவர் மதி விகற்பு. அவரவர் அறிவுக்கு எட்டிய வரை கற்பனையான வாதம். தான் தோன்றித் தனம்

அவை அவை தொறும், "அணங்கும் பலபல ஆக்கி" = இது போதாதென்று அதற்குள்ளேயே இன்னும் பலப் பலக் கருத்துகள்/கொள்கைகள்.
தென்கலை/வடகலை...வீரசைவம்/சைவ சித்தாந்தம்...இப்படிப் பலப்பல!

நின்கண் வேட்கை எழுவிப்பனே = இவ்வளவு பிரிவுகளுக்கு இடையேயும், உன் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, வேட்கை எழுவிப்பனே!

இது தான் திருவாய்மொழியின் சாரம்!
இப்போது சொல்லுங்கள், திருவாய்மொழியையும் நம்மாழ்வாரையும் வைணவத்துக்குள் மட்டும் அடக்கி வைக்க முடியுமா?

முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நன்னாளும் இன்று தான்!
புத்த பிரான் ஞானம் பெற்ற புத்த பூர்ணிமாவும் இன்று தான்!
இந்நாளில் தோன்றிய நம்மாழ்வார், எந்நாளும் காட்டிய வழி இது!

இந்த வைகாசி விசாகத்தில்,
நம்மையே ஏமாற்றித் திரியும் நம் மனதினுடைய ஓரத்தில்...இதை போட்டு வைப்போம்! எப்பவாச்சும் இருட்டில் மாட்டிக் கொள்ளும் போது, நந்தா விளக்காய் ஒளி கொடுக்கும்!

மன்னு பொருள் நால் வேதம் தமிழ் செய்தான் வாழியே!
மகிழ் மணக்கும் குருகையர் கோன் மலர் அடிகள் வாழியே!!
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!


என்னங்க, இந்தப் பதிவில் தத்துவக் கருத்துக்கள் மிகுந்து விட்டனவா?
அடுத்த பதிவில்...
நம்மாழ்வார், ராமானுசரை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கண்டு எடுத்து விட்டார். அந்தக் கதையையும், இன்னும் சில தித்திக்கும் பாசுரங்களையும் பார்ப்போம்!
Read more »

Sunday, May 27, 2007

திராவிட வேதம்! தமிழ் மறை நாதம்!

அட, என்னாப்பா சொல்லுற நீ! கழகம், கட்சி, கொடி இது எல்லாம் தெரியும்! தமிழகத்தில் புதிய கட்சிகள் கூட "திராவிட" என்னும் சொல்லை, பெயரில் கட்டாயாம் கொண்டுள்ளன! ஆனா...அது இன்னா திராவிட வேதம்?
யாராச்சும் புதுசா, புரட்சிகரமா எழுதி இருக்காங்களா? அவங்களுக்குத் தமிழக அரசு சிறப்புகள் செய்து இவ்வாறு பட்டம் அளித்துள்ளதா?

அட, அது இல்லப்பா இது!...நான் சொல்லும் திராவிட வேதம் எட்டாம் நூற்றாண்டுக்கும் முன்னர்!
அட, அப்பவே இப்படி எல்லாம் செஞ்சிருக்காங்களா?...யாருப்பா அது? என்ன தான் விடயம்? சொல்லேன்!

திராவிடக் குழந்தை ஒன்று பிறந்துச்சுப்பா. அதுக்குப் பேரு மாறன்!
(நீ உடனே பெயரை மட்டும் வைத்துக் கொண்டு, அவசரப்பட்டு, வேறு கணக்குகள் போடாதே! :-)
பாரேன்...திராவிடக் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அவதரித்த தினத்தில் தான் அதுவும் பிறந்தது. வைகாசி விசாகம்!

உழவுத் தொழில் புரியும் வேளாளர் குடியில் பிறந்த குழந்தை அது! நாலாம் வருணம் என்று சொல்லுவார்களே...அது!
நாலாம் வருணம் தான், நால் வேதமும் தமிழ் செய்தது!
அதைத் தான் இன்று அந்தணர்கள் முதலான எல்லோரும், முதலிடம் கொடுத்து, முழங்கிப் பாடுகிறார்கள்!

அட, அப்படியா விடயம்? மேற்கொண்டு சொல்லு!

அந்தக் குழந்தையின் கதையைப் பிறகு சொல்கிறேன். இப்ப வேறொரு கதை கேளூ! அதுக்கு முன்னாடி ஒரு விடயம்.
மாறன் என்ற அந்தக் குழந்தை தான், இன்று பலராலும் வணங்கிப் போற்றப்படும் நம்மாழ்வார்!
அவர் செய்த திராவிட வேதம் தான் திருவாய்மொழி! தமிழ் வேதம் என்றும் போற்றப்படுகிறது!

ஆகா! இவரைப் பற்றி நானும் கொஞ்சம் கேள்விப்பட்டுள்ளேனே!
பிறவியில் இருந்தே பேசாமல் இருந்து, பின்னர் யாரோ ஒரு அந்தணர் இவர் காலடியைப் பற்றினாராமே! அவருக்குச் சொல்வது போல், பல பாசுரங்களைப் பொழிந்தவர் தானே இவர்? இவருக்குச் சடகோபர் என்று பெயரும் உண்டா?

ஆமாம்பா...சடகோபர் தான்!
இன்றும் கோவிலுக்குப் போனால், தலையில் சடகோபம்/சடாரின்னு வாங்கிக்கறயே! அவரே தான் இவர்!
இறைவனுடைய திருப்பாதங்களின் அம்சமாய் வந்தவர்;
இன்றும் கூட அந்த மென் மலர்ப் பாதங்களை, நமக்காகக் கொண்டு வந்து,
நம் தலையின் மீது வைத்து, நம்மை எல்லாம் ஆட்கொள்பவர்!
சரி, நாம் கதைக்கு வருவோம்!


மதுரைக்கு அருகே உள்ள ஊர், அழகர் கோவில். அழகர் ஆற்றில் இறங்குவாரே அந்தக் கோவில் தான்! திருமால் இருஞ் சோலை என்று பெயர்!
அந்த மலையின் கீழே அழகர்! மலையின் மேலே அழகன்!
பழமுதிர் சோலை என்னும் படைவீட்டில், மலையின் மேல் முருகன்!
அந்த மதுரையம்பதியில், அன்று வைகாசி விசாகத் திருவிழா!
நம்மாழ்வார் பாசுரங்களை எல்லாம் சொல்லி, பெருமாள் கோவிலில், சிறப்பு ஊர்வலம்.
அதை முன்னின்று நடத்துகிறார் ஆழ்வார்களில் கடைசி ஆழ்வாரான மதுரகவி ஆழ்வார்!

தன்னுடைய ஆசிரியர், குருநாதரான நம்மாழ்வார், மண்ணுலகை விட்டு நீங்கிய பின்,
அவர் அருளிய பாசுரங்களை எல்லாம் தொகுத்துப் பாடி வருகிறார்!
அவருக்குப் பெருமாள் பக்தி அதிகம்! அதை விட குரு பக்தி, மிக மிக அதிகம்!!
நம்மாழ்வாரின் திருமேனியும், பாசுரங்களையும் பல்லக்கிலே சுமந்து, பெருமாள் கோவிலில், வீதியுலா அழகாக நடைபெறுகிறது!

"வேதம் தமிழ் செய்த மாறன்
தமிழ் மறைப் பெருமாள் எழுந்து அருளுகிறார்...
திருமால் திருவடி நிலையர்
சடாரி சடகோபர் பொன்னடி சாத்துகிறார்
..."
என்று கட்டியம் கூறிக் கொண்டு, பல்லக்கு தூக்கிச் செல்கிறார்கள்!


அந்த விழாவுக்கு வந்திருந்தார்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்கள் சிலர்!
அவர்கள் எல்லாருக்கும், மனத்துக்குள் பெரும் குழப்பம்!
"அது எப்படி பொத்தாம் பொதுவாக, தமிழ் மறை என்று நீங்கள் கூறலாம்?
அப்படிக் கூற என்ன ஆதாரம்?
தமிழ்ச் சங்கம் ஏற்றுக் கொண்டதா உங்கள் திருவாய்மொழி நூலை?
சங்கத்தில் அரங்கேறியதாகவும் தெரியவில்லையே!
அப்படி இருக்க, இதை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்!"

துவங்கியது சர்ச்சை!
மதுரகவிக்கோ மனம் கலங்கியது! "இது ஆழ்வார் தத்துவ மார்க்கமாக அருளியது! அதனால் தான் மற்ற நூல்கள் போல, அரங்கேற்றம் என்றெல்லாம் செய்ய முடியாமற் போனது!
விழா முடியட்டும்!
அடியேன் நானே வந்து, தமிழ்ச் சங்கத்தில், நூலை முன் வைக்கிறேன்.
விவாதங்களும், நூல் ஆராய்ச்சியும் செய்து பின்னர் ஒரு முடிவுக்கு வராலாம்", என்று கூறினார்.

ஆனால் சங்கப் புலவர்களோ விடுவதாக இல்லை! "நெற்றிக் கண்ணே திறப்பினும், குற்றம் குற்றமே!
கண் மூன்று கொண்டானுக்கே அஞ்சாத நாங்கள், கண்ணன் பாட்டுக்கா அஞ்சுவோம்?
சங்கப் பலகையில் இதை வைத்து விட்டுத் தான் மறுவேலை!
எப்போது தமிழ் மறை என்று கொண்டாடுகிறீர்களோ, அப்போதே சங்கத்தின் ஒப்புதல் தேவை!
நாளையே வந்து சங்கப் பலகையில் இதை வையும்!
அது, நூலை அள்ளுகிறதா, இல்லை தள்ளுகிறதா என்று ஒரு கை பார்த்து விடலாம்!"

விழா பாதியில் நின்றது!
மதுரகவி துடிதுடித்துப் போனார். என்ன செய்வது என்று அறியாது கண்கலங்கினார்!
யாராய் இருப்பினும், தமிழ் காக்கும் சங்கத்தை மீறத் தான் முடியுமா? அப்படியே மீறுவது தான் அழகாகுமா?
ஆனால் அவர் கவலை எல்லாம், தன் ஆசானின் நூலை, சாதாரண மாணாக்கன்... தான் எப்படி திறம்படச் சங்கத்தில் வைக்க முடியும் என்பதே!

இரவு தூக்கமின்றிக் கழிந்தது!
பெருமாளை இறைஞ்சாமல், தன் ஆசிரியரை இறைஞ்சி நின்றார் மதுரகவிகள்!
ஆழ்வார்களிலும் ஒருவர், ஆசாரியர்களிலும் ஒருவர் - அது யார் இரண்டிலுமே இருப்பது என்றால், ஒருவர் மட்டும் தான்! - நம்மாழ்வார் தான் அவர்!

பெருமாளின் படைத்தலைவரான சேனை முதலியாரின் அம்சம் அல்லவா அவர்!
இறைவன் திருமகளுக்கு உபதேசிக்க,
அதை நம் அன்னை, சேனை முதலியாருக்கு அல்லவா உபதேசித்து அருளினாள்!
இப்படி அன்னையிடமே பாடம் கேட்ட அன்பர் ஆயிற்றே!

வயோதிகப் புலவர் ஒருவராக மதுரகவியின் முன் வந்து நின்றார், நம்மாழ்வார்!
"மதுரகவிகளே, கலங்காதேயும்! இதோ பாடங்களைக் கூறுகிறேன்...மீண்டும் கேட்பீராக" என்று சொல்லி, மயர்வறு மதி நலம் அருளினார்.
"நாளை காலை, முழு நூலையும் கூடச் சங்கப் பலகையில் நீங்கள் வைக்க வேண்டாம்...
இந்த ஒற்றை ஓலையே போதுமானது! நான் வருகிறேன்", என்று ஒரு ஓலையைக் கிள்ளிக் கொடுத்து மறைந்து விட்டார்!

மதுரகவிக்கு உடல் நடுங்கியது! கை கூப்பினார்!
அழுவன், தொழுவன், ஆடிக் காண்பன், பாடி அலற்றுவன்,
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்....

மறு நாள் காலை...காரிருள் அகன்றது காலை அம் பொழுதாய்!
சங்கத்தில் திரண்டனர் மக்கள் எல்லாரும்!
மதுரகவிகள் செஞ்சொற் பிரவாகமாய், திருவாய் மொழி பொழிந்து அருளினார்!
சங்கப் புலவர்களும் தன்னை மறந்தனர்!
ஆனாலும் அவர்கள் இன்னும் "தன்னை" இழக்க வில்லையே!

மதுரகவிகளே! எல்லாம் சரி தான்; ஆனால் இது சங்கப் பலகை ஏறுமோ?
- மாறன் ஏறு அல்லவா இது; இதோ ஏறட்டும் புலவர்களே!
சங்கப் பலகையில் வைத்தனர், அந்த ஒற்றை நறுக்கு ஓலையை!
அதில் எழுதி இருந்த வரிகள்...

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே


நாடீர் நாள்தோறும் வாடா மலர்கொண்டு
பாடீர் அவன்நாமம் வீடே பெறலாமே.

அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே.

நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்திப்பத்து அடியார்க்கு அருள் பேறே


சங்கப் பலகை என்ன செய்தது? அடுத்த பதிவில் பார்க்கலாம்!


வரும், May 30 2007, வைகாசி விசாகம்.
முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள்! - அன்று தான் நம்மாழ்வாரின் அவதார தினமும் கூட!
அதை ஒட்டி, ஒரு மூன்று தொடர் பதிவுகள் இட எண்ணம்!

நம்மாழ்வார் பற்றிய குறிப்புகள் மட்டுமன்றி,

அவர் செய்தருளிய தமிழ், ஆலயங்களில் எப்படி எல்லாம் கோலோச்சுகிறது!
பின்னால் வந்த ஆசாரியார்களும், கவிஞர்களும், மற்ற சாதியினரும், அந்தணர்களும், மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரும்,
வைணவர், வைணவர் அல்லாதோர் எனும் பாகுபாடுகள் எதுவும் இல்லாது,
மானுடக் கண்ணோட்டத்தில் எப்படி எல்லாம் பாடித் திளைக்கிறார்கள் என்றும் பார்க்கலாம், வாங்க!
Read more »

Monday, May 21, 2007

அ(ச்)சைவப் புதிரா? புனிதமா?? - 5

இதோ...விடைகளும், வின்னர்களும்
கீதா சாம்பசிவம் 9/10
ஜெயஸ்ரீ, குமரன் 7/10
ப்ரசன்னா, திராச 6/10

விடைகள் கீழே...bold செய்யப்பட்டுள்ளன.
விரிவான விளக்கங்கள், பின்னூட்டத்தில்!
நின்றவர்க்கும், வென்றவர்க்கும் வாழ்த்துக்கள்!!!

பரிசேலோர் எம்பாவாய்!

இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
(திருக்கடவூரிலே அம்மையும் அப்பனும்)!
பாலாம்பிகை உடனுறை மிருத்யுஞ்ஜய சுவாமி
(மிருத்யு=எமன், ஜெய=வெற்றி) = கால சம்கார மூர்த்தி
படத்தைக் கூர்ந்து கவனித்தால், ஈசனின் காலடியில் எமதர்மனும், அருகே மார்க்கண்டேயரையும் தரிசிக்கலாம்.


என்ன...தரிசித்து மகிழ்ந்தீர்களா?


இந்தப் புதிரா புனிதமாவில், ஒரே ஒரு பதிவர் மட்டும் விலக்கி வைக்கப் படுகிறார்!
ஆகா...இது என்ன அநியாயம்! யார் எந்தப் பதிவர்?
ஏன் விலக்கி வைக்கப் படுகிறார்? என்ன குற்றம் செய்தார்?

....ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா...
கேள்விகள் எல்லாம் கேட்காதீங்க!
இது சைவப் புதிரா புனிதமா!
அதுனால "அச்சைவம்" சாப்பிடறவங்க அவசியம் கலந்துக்கணும்! :-)

ஓவர் டு நம்ம மருத்துவர் ராமநாதன்!
அவர் தான்பா குவிஸ் மாஸ்டரு! அதான் அவர் மட்டும் போட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாரு!
சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்!
(கவனிக்கவும்: நியுயார்க் நேரப்படி....ரஷ்ய நேரப்படி அல்ல! :-)

ராமனின் தலீவா (நாதா), பரிசுத் தொகை எவ்வளவுன்னு நீங்களே செப்பிடுங்க!


1

அகத்தியருக்கு தமிழிலக்கணம் அறிவித்த பெருமான் எழுந்தருளியுள்ள ஊர்?

1

அ) குற்றாலம்
ஆ) தலைக்காவிரி
இ) இன்னாம்பூர்
ஈ) மதுரை

2

'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி' நின்ற மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் முக்தியளித்த தலம்?

2

அ) திருக்கடையூர்
ஆ) ஒப்பிலியப்பன் கோவில்
இ) திருவையாறு
ஈ) திருச்சேறை

3

பெருமாள் கோயில்களில் அங்கப்பிரதட்சணம் செய்வர். ஆனால் இந்தியாவில் இந்த சிவன் கோயிலில் மட்டுமே அங்கப்பிரதட்சணம் செய்யும் மரபு இருக்கிறது.

காசிக்கு ஒரு வீசை மேல் என்று எல்லா சிவக்ஷேத்திரங்களும் சொல்லிக்கொண்டாலும் இந்த ஊரே சிவலிங்கமென நால்வர் முதல் ஆதிசங்கரர் வரை இவ்வூரை தனிச்சிறப்புடன் புகழ்ந்திருக்கின்றனர்.

3

அ) ராமேஸ்வரம்
ஆ) சிவபுரம்
இ) திருவாடானை
ஈ) திருவாதவூர்

4

சுந்தரரைக் கல்யாணத்தின் போது தடுத்து ஆட்கொண்ட ஊர்?

4

அ) திருவாரூர்
ஆ) திருவொற்றியூர்
இ) திருவெண்ணெய் நல்லூர்
ஈ) திருமழபாடி

5

நந்தானாருக்காக, "சற்றே விலகி இரும் பிள்ளாய்" என்று சிவன் நந்தியை விலகுமாறு பணித்தது இங்கே தான்..

5

அ) சிதம்பரம்
ஆ) சீர்காழி
இ) திருப்புன்கூர்
ஈ) திருவானைக்கா

6நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்திய சரபேஸ்வரர் தலம் எங்கே?... மிகவும் உக்ர மூர்த்தி.6

அ) திருபுவனம்
ஆ) தாராசுரம்
இ) அகோபிலம்
ஈ) திருக்காளத்தி

7

பாம்பு கடித்து இறந்தவரை உயிர்த்தெழச் செய்ய, சம்பந்தர் பதிகம் பாடிய தலம்...

7

அ) கும்பகோணம் - ஆதிகும்பேஸ்வரர்
ஆ) காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர்
இ) செம்மங்குடி - தாந்தோன்றீஸ்வரர்
ஈ) திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்

8பொதுவாய் இராமரைப் பாடும் தியாகராஜர், இத்தலத்திலுள்ள சுந்தரேசுவரரை தரிசித்து ஐந்து கீர்த்தனைகள் பாடியிருக்கிறார். மிகவும் பிரபலமானவை.8

அ) கோவூர்
ஆ) திருவையாறு
இ) திருவானைக்கா
ஈ) மதுரை

9

அனுமன் கொண்டு வந்த லிங்கமும் ராமேஸ்வரத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது...பெயர் என்ன?

9

அ) ராமலிங்கம்
ஆ) விஸ்வலிங்கம்
இ) ஹனுமத்லிங்கம்
ஈ) உத்தரலிங்கம்

10திருமலை திருப்பதியின் கீழே கோவில் கொண்டு, அருவிச் சாரலில், பெருமாளைச் சேவித்து மகிழ்ந்திருக்கும் ஈசன் யார்?

10

அ) சேஷகிரீஸ்வர சுவாமி
ஆ) கபிலேஸ்வர சுவாமி
இ) சுந்தரேஸ்வர சுவாமி
ஈ) கோவிந்தராஜ சுவாமி




இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!



1 அ) குற்றாலம் ஆ) தலைக்காவிரி இ) இன்னாம்பூர் ஈ) மதுரை

2 அ) திருக்கடையூர் ஆ) ஒப்பிலியப்பன் கோவில் இ) திருவையாறு ஈ) திருச்சேறை

3 அ) ராமேஸ்வரம் ஆ) சிவபுரம் இ) திருவாடானை ஈ) திருவாதவூர்

4 அ) திருவாரூர் ஆ) திருவொற்றியூர் இ) திருவெண்ணெய் நல்லூர் ஈ) திருமழபாடி

5 அ) சிதம்பரம் ஆ) சீர்காழி இ) திருப்புன்கூர் ஈ) திருவானைக்கா

6 அ) திருபுவனம் ஆ) தாராசுரம் இ) அகோபிலம் ஈ) திருக்காளத்தி

7 அ) கும்பகோணம் - ஆதிகும்பேஸ்வரர் ஆ) காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர் இ) செம்மங்குடி - தாந்தோன்றீஸ்வரர் ஈ) திருமருகல் - இரத்தினகிரீஸ்வரர்

8 அ) கோவூர் ஆ) திருவையாறு இ) திருவானைக்கா ஈ) மதுரை

9 அ) ராமலிங்கம் ஆ) விஸ்வலிங்கம் இ) ஹனுமத்லிங்கம் ஈ) உத்தரலிங்கம்

10 அ) சேஷகிரீஸ்வர சுவாமி ஆ) கபிலேஸ்வர சுவாமி இ) சுந்தரேஸ்வர சுவாமி ஈ) கோவிந்தராஜ சுவாமி


Read more »

Thursday, May 10, 2007

108 - பதிவுலகம் - காலக் கண்ணாடி!

எட்டு எட்டா, மனுசன் வாழ்வைப் பிரிச்சிக்கோ!
நூத்தி எட்டா, தேங்காய நீ ஒடைச்சிக்கோ!!
- இப்படி நம்ம சூப்பர் ஸ்டார், ஒரு பாட்டு பாடியிருக்கார் அல்லவா?
அதான் இன்னிக்கி 108! இந்தப் பதிவும் 108ஆம் பதிவு!

நம் பதிவுலக நண்பர்கள் எல்லாரும் 200, 500, 1000 என்று பல பிறைகளைக் கண்டு, வெற்றி முரசு கொட்டியுள்ளனர்.
அது நிச்சயம் போற்றத்தகு சாதனை தான்! ஆனா நாம அப்படி இல்லீங்க!
ஏதோ திருமலைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல...
பதிவு தொடங்கி, ஆடி அசைஞ்சி 100 படி எட்டிய போது....
இதுக்கெல்லாம் போயி பதிவு போட்டுக்குணுமா, என்று எதுவுமே சொல்லாம அப்படியே விட்டுட்டேன்.

ஆனா 108 ஆம் படி வந்த போது,
சரி நம்ம எல்லார் நலனுக்காகவும், ஒரு 108 தேங்காய் உடைக்கலாம்னு தோணிச்சு!
அப்படியே நம் பதிவுலக நண்பர்கள் எல்லாருக்கும், ஒரு வாய் நன்றியாச்சும் சொன்னாப் போல இருக்கும்-ல! அதான் துணிஞ்சு இந்தப் பதிவு போட்டுட்டேன்!

புரட்டாசி மாதம் புரட்டத் துவங்கினேன்.
ஆறு மாசத்திலே வெறும் நூறு தானா? - அட போப்பா!
(நடுவுல 2 மாசம் காணாமப் போயிட்டேன்; நம்ம பாலாஜி தான் கஷ்டப்பட்டு, காணாமல் போனவர் பற்றி அறிவிச்சாரு; வழி தவறிப் போன வெள்ளாட்டை மந்தையில் கொண்டாந்து சேத்தாரு :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலாஜி!
மொதல் தேங்காய் உங்களுக்கு ஒடைச்சிடறோம் :-)


மொத மொதல்ல, எழுதலாம்னு உக்காந்த போது, தமிழ் மணம் ரொம்பவே சூடா இருந்த காலம்! (இப்ப மட்டும் என்னவாம்-ங்கிறீங்களா? :-)
கொஞ்சம் தயக்கமாத் தான் இருந்துச்சு.
கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாமோ என்று தோன்றியது!
சரி இனிப்பைச் சுடும் போது கூடச் சூடாகத் தானே இருக்கு;
அதுக்காக அதிரசம், மைசூர்பாகு எல்லாம் வேணாம்னு சொல்லிடறமா என்ன? - அப்பிடின்னு துவங்கி விட்டேன்! சரி துவங்கியாச்சு;
என்னாத்த எழுதலாம் அண்ணாத்த?


நாம இப்ப இருக்கிற ஊரில், குழந்தைகளுக்கு வார இறுதிக் கதை சொல்லணும்னா, பெரும்பாலும் ஒரு பொடியனைத் தான் சுத்து வட்டாரத்தில் கூப்பிடுவாங்க.
அதுவும் நமது பண்பாடு, வரலாறு பத்திய கதைன்னா உடனே ஓலை வந்துடும் அந்தப் பொடியனுக்கு. அந்தப் பொடியன் தான் அடியேன்!
இந்தக் குட்டிப் பசங்களும்...என்ன தான் அழுது கலாட்டா பண்ணாலும் கூட,
நம்ம கிட்ட வந்தா மட்டும் பச்சக்குனு ஒட்டிக்குங்க!
(பின்ன Lord of the Rings-இல் ராமரையும், Spiderman-இல் அனுமனையும் கலந்தடிச்சுக் கதை சொன்னா...!)

அப்ப தான் ஒரு அம்மா-அப்பா, (பெயர் குறிப்பிடக் கூடாது-ன்னு கட்டளை)
இது போல, ஏன் நீங்க பதிவுல எல்லாம் எழுதக் கூடாது-ன்னு கேட்டு, நமக்கும் Blogger-ன்னு பேரை மாத்தி வைச்சாங்க!
ரொம்பவும் அடர்த்தியா உள்ள பலாப் பழ விஷயங்களைக், கொஞ்சம் சுளை உரிச்சு கொடுத்தா, அதுவும் கதைகளா கொடுத்தா...
சொந்த வீடு விட்டு அயல் வீட்டில் வாழும் மக்களுக்குச் சொல்லிக்கிறா மாதிரி இருக்குமே-ன்னு சொன்னாங்க!
சரி, நமக்குத் தான் இது போல விட்டலாச்சாரியா விஷயம் எல்லாம் ரொம்ப பிடிக்குமேன்னு துவங்கியாச்சுப்பா!


சும்மானாங் காட்டியும் Hello Worldன்னு ஒரு கணக்கை ஓப்பன் செய்து கொண்டு வெறுமனே வேடிக்கை பாத்துக் கொண்டு இருந்தேன்.
சில பதிவுலக ஜாம்பவான்கள் அப்பல்லாம் அனானி ஆப்ஷனை வைக்கலை;
பெயர், நட்சத்திரம், கோத்திரம்ன்னு சொன்னா தான் அர்ச்சனை பண்ண முடியும் போல!

சரின்னு அதுக்காகவே ஒரு அக்கவுண்டு ஒபன் பண்ணா, நண்பர்கள் எல்லாம் ஒரே திட்டு!
டேய் அவனவன் ஆர்குட்-ல அக்கவுண்டு ஒபன் செய்து, என் கடன் ஸ்கிராப் வாங்கிக் கிடப்பதே-ன்னு இருக்காங்க! நீ என்னடான்னா இப்படி இருக்கியேன்னு ஒரு எகத்தாளம் வேறு! :-)

அடியேன் முதல் நன்றி நம்ம செல்வனுக்கும், திராச ஐயாவுக்கும்.
யாராச்சும் பதிவு போடறதுக்கு முன்னாடியே பின்னூட்டம் போட முடியுமா?
இவங்க ரெண்டு பேரும் அப்படித் தான் செஞ்சாங்க!
இதுல கண்ணகி சிலை - மாதவிப் பந்தல்ன்னு சும்மா கேலி வேறு :-)
அதுக்கப்புறம் பல வலைப்பூக்களைப் பூத்தாலும், திராச ஐயா தான் எப்பவுமே முதல் போணி பண்ணுவாரு!

நம்ம குமரன் வந்து முதல் பதிவைப் பிரதி பாத்துக் கொடுத்தாரு. டீச்சர் வந்து அன்பாக விசாரிச்சாங்க...SK ஐயா அன்பாகப் பேசினாரு. நம்ம ஜிரா செந்தமிழில், இனிக்க இனிக்க ஜீரா ஊத்திக் கொடுத்தாரு. சுப்பையா சார் தலைப்பை மாத்திப் போடுன்னு சொன்ன காலகட்டம்.

ஒளவைப்பாட்டியை, பெரியார் தமிழில் அவ்வைப்பாட்டி என்று நான் எழுதப்போய்,
அதை அவ் வைப்பாட்டி-ன்னு படிச்சா நான் என்னத்த சொல்ல! :-)
அதுவும் இந்த மாதிரி சொல்-கில்லி ஆடறதுல பல பேர் நல்லவங்க வல்லவங்கன்னு சொன்னாங்க.
என்னடா இதுன்னு...முதல் பதிவுலயே ஒரு பயம் வந்திடுச்சு.
ஆதியே, அந்தமேன்னு பதிவு எழுதப் போய்,
நமக்கு முதல் பதிவே ஆதியும் அந்தமுமாய் போயிடுமோ? :-)


ஆனாப் பாருங்க, எப்பவும் வந்து உதவுற ஆளே இப்பவும் கை கொடுத்தாரு!
சரி உனக்காக ஒரு பத்து நாள் பிரம்மோற்சவம் கொண்டாடிக்கறேன்....
நீ அதைப் பத்தி எழுதிக்கோன்னு வேலை போட்டுக் கொடுத்தாருப்பா அந்தப் புண்ணியவான்!
அன்று துவங்கி...இன்று வரை....நீங்க தான் சொல்லோணும்!
மொக்கையா, இல்லை இன்னும் மொக்கையா எழுதணுமா என்று! :-)

சரி, முக்கியமா எல்லாப் பதிவர் சந்திப்புகளிலும் கேட்கப்படும் கேள்வியை, இங்கும் முன் வைக்கிறேன்.

1. வலைப்பூக்களில், ஆன்மீக வலைப்பூக்கள் தேவையா?

2. ஆன்மீகம் என்பது உணர்வு பூர்வமாக வரும் ஒன்று. அதை எழுதினால் மக்கள் படிக்கிறார்களா?

எது எப்படியோ,
வாசித்துச் செல்லும் அன்பருக்கும்
வாசித்துச் சொல்லும் அன்பருக்கும்
வாசியா நின்ற அன்பருக்கும்
இந்நேரத்தில், இந்த வலைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு,
அடியேனின் நன்றிகள் பல!

எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு என்பார்கள். அனைவருக்கும், பேர் சொல்லி நன்றி சொல்ல எனக்கும் ஆசை தான், சுப்பையா சார் போல! பின்னூட்டில் முயல்கிறேன்!
இப்போது, "அந்தரிகி வந்தனமுலு!"



கருத்துக் களம் எதுவாயினும், கட்சிகள் எதுவாயினும்
பிரிவுகள் பலவாயினும், உறவுகள் பலவாயினும்
நம் பதிவர்களிடையே...ஒன்று மட்டும் தான் ஒற்றுமை, இணைப்பு எல்லாம்! - என்ன அது?

இலக்கியங்களைக் காலத்தின் கண்ணாடி என்பது போல,
பதிவுகளைச் சமுதாய வாழ்க்கையின் கண்ணாடி என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு கண்ணாடியில் எல்லாமும் தெரிய வேண்டும்.
சிலதை மட்டும் காட்டி, சிலவற்றை மறைத்தால்
- அது கண்ணாடி அன்று! தொலைக்காட்சி ஆகி விடும்! :-)

பத்திரிகைகளுக்கும் பதிவுலகிற்கும் என்ன பெரிய வேறுபாடு என்றால்
பத்திரிகை கூட உண்மையான கண்ணாடி ஆகி விட முடியாது. விளம்பரத்துக்காகவேனும் ஏதோ சில மறைமுகக் கட்டுப்பாடுகள் இருக்கலாம்.

ஆனால் பதிவுலகம் தான்,
தமிழ்ச் சமுதாயக் கண்ணாடியாகவும், கல்வெட்டாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடிகிறது!
இப்படி உண்மையான பத்திரிகைச் சுதந்திரம், பதிவுலகில் தான் இருக்கிறது!


இந்தப் பண்பாட்டுக் கண்ணாடியில் தான்,
நாளும், காட்சிகள் படைக்கின்றோம்!
நாளை, மாட்சிகள் படைத்திடுவோம்!

அதை மட்டுமே வேண்டுதலாக வைத்து...
நம் எல்லாப் பதிவர்களுக்கும்
நலமும் இன்பமும் நல்குமாறு
நீங்காத தமிழ்ச் செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!



தலைப்பை 108-ன்னு வச்சிட்டு, 108 பற்றி ஒண்ணுமே சொல்லலைன்னா எப்பிடி?
நம்ம பண்பாட்டில், பல சமயங்களில்,

108 ஆகத் தான் சில பல நல்ல காரியங்களைச் செய்வது வழக்கம்!

108 வைணவத் திருப்பதிகள் - திவ்ய தேசங்கள்
108 நடன முத்திரைகள் - ஈசனின் நடனக் குறிப்பு, தஞ்சைப் பெரிய கோவிலில் காணலாம்!

108 சக்தி பீடங்கள்
108 போற்றிகள் - வழக்கமாகச் செய்யும் அர்ச்சனை எப்பவும் எந்தக் கடவுளுக்கும் 108 தான்

108 நட்சத்திர பாதங்கள் (27 நட்சத்திரம் x 4 பாதம்)
108 அம்சங்கள் (12 ராசிகள் x 9 அம்சங்கள்)
108 மணிகள் கொண்ட ஜபமாலை, 108 இதழ்கள் கொண்ட தாமரை
108 கூறுகள் சீன மருத்துவத்தில்

மற்றும் ஜென், சமணம், பெளத்தம், ஜோதிடம் இப்படி எல்லாவற்றிலும்!
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சூரியனின் விட்டம்
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தொலைவு = 108 x சந்திரனின் விட்டம்
- ஏன் இப்படி எல்லாமே மேஜிக் நம்பர் 108?

சுருக்கமாப் பார்ப்போம்.
(1) x (2x2) x (3x3x3) = 1x4x27 = 108

(3x3x3) =
ஆணவம், கன்மம், மாயை என்னும் 3 மலங்களை ஒழித்து,
சத்வ, ரஜோ, தமோ என்னும் 3 குணங்களையும் கடந்து,
நேற்று, இன்று, நாளை என்னும் 3 காலங்களிலும்

(2x2) =
அறம்,பொருள் என்னும் 2 கடமையும் --x-- இன்பம், வீடு என்று 2 பயனையும்

(1) = 1 ரே மனத்துடன்,
ஒருமுகமாக
எம்பெருமானுக்'கே' அர்ப்பணிக்கிறேன் என்பது தான் 108-இன் சாராம்சம்!

Read more »

Thursday, May 03, 2007

புதிரா? புனிதமா?? - 4

விடைகளும், வின்னர்களும் (வென்றவர்களும்)
ஜெயஸ்ரீ 10/10
குமரன் 10/10
இராமநாதன் 10/10

பரிசேலோர் எம்பாவாய்!
வென்றவர்க்கும் மற்றும்
உடன் நின்றவர்க்கும்
இதோ கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்க!
(கம்பன் பிறந்த ஊரான, தேரழுந்தூர், ஆமருவியப்பன்-தேவாதிராஜப் பெருமாள் வண்ணப்படம்)

அடுத்த பதிவு கொஞ்சம் தாமதம் ஆகலாம்-ஏனென்றால் அது ஒரு ஸ்பெஷல் பதிவு!


கொஞ்ச நாளுக்கு முன்னாடி காணாமல் போன பதிவர் பற்றிய அறிவிப்பில், நம்ம வெட்டிப்பயல்,
புதிரா புனிதமான்னு இந்தப் பதிவுக்கு வந்தவங்க பல பேருக்கு ஆப்பு - அவரையும் சேர்த்துத் தான் - என்று குறிப்பிட்டிருந்தார்.

சரி, பொங்கல் வைச்சு ரொம்ப நாளாயிடுச்சேன்னு,
நியுஜெர்சி பதிவர் சந்திப்பு முடிந்த கையோடு,
இதோ அடுத்த ஆப்பு - சாரி, புதிரா புனிதமா!
இந்த முறை ஆப்புடு பொருள் - கம்ப ராமாயணம்.


(ஹிஹி...ஜெயஸ்ரீ எள்ளா, உளுந்தா - எதைப் போடலாம்னு கம்ப ராமாயணப் பாடல்களைப் போட்டு, மனசில் ஆசையைக் கிளறி விட்டுட்டார்)

சரியான விடைகள் நாளை மதியம்/மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு ராமா!


1

இராமாயணத்தை முதன் முதலாக, ஒரு கதையாக அமைத்து, "வாயால்" சொன்னவர் யார்?

1

அ) வால்மீகி
ஆ) வசிஷ்டர்
இ) கம்பர்
ஈ) நாரதர்

2

இவன் இராமனால் கொல்லப்பட்டவனுக்கும் பிள்ளை; இராமனின் தம்பிக்கும் பிள்ளை. அதாச்சும் இரண்டு பேருக்கும் ஒரே பெயர்;

இவன் யார்?

2

அ) மேகநாதன்
ஆ) அங்கதன்
இ) சுபாகு
ஈ) குசன்

3

வால்மீகியின் மூல நூலில் குறிப்பிடாத ஒரு அவதாரக் கதையை,

கம்பராமாயணத்தில் குறிப்பிடுகிறார் கம்பர். அது எந்த அவதாரம்?

3

அ) பரசுராமர்
ஆ) வாமனர்
இ) நரசிம்மர்
ஈ) கல்கி

4

இலங்கேஸ்வரன் இராவணனின் தாய்-தந்தையர் பெயர் என்ன?

4

அ) ப்ரிதி-புலஸ்தியர்
ஆ) கைகசி-புலஸ்தியர்
இ) சுமாலி-மால்யவான்
ஈ) கைகசி-விஸ்ரவசு

5

கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல் என்று தெரியும். அவர் சொந்த ஊர் எது?

(கம்ப ராமாயணத்திலேயே இந்த ஊர் பாட்டிலே சொல்லப்படுகிறது!)

5

அ) தேரழுந்தூர்
ஆ) சீர்காழி
இ) திருவெண்ணெய் நல்லூர்
ஈ) திருவரங்கம்

6எந்த மலையின் மீதிருந்து அனுமன் முதலில் இலங்கைக்குப் பறந்தான்?6

அ) கந்தமாதானப் பர்வதம்
ஆ) மகேந்திரகிரி
இ) மைனாக பர்வதம்
ஈ) தண்டகாரண்யம்

7

அசோக வனத்தில் உள்ள சீதைக்கு அறிவுரை சொல்ல, மருத்தன் என்னும் அரக்கனை ஏவினான் இராவணன். அயோத்தியைக் கூடப் போரில் வென்று விட்டதாகச் சொல்லச் சொல்லுகிறான்.

அதுவும் ஒருவரைப் போல் மாய வேடம் போட்டுக் கொண்டு; யார் வேடத்தில்?

7

அ) திரிசடை
ஆ) விபீஷணன்
இ) ஜனகன்
ஈ) பரதன்

8கும்பகர்ணனும், இந்திரசித்தும் முறையே யாரால் கொல்லப்பட்டார்கள்?8

அ) இராமன்-இலக்குவன்
ஆ) இலக்குவன்-இராமன்
இ) சுக்ரீவன்-இலக்குவன்
ஈ) இலக்குவன்-அனுமன்

9

இராமன் போரில் வெற்றி பெற்ற பின், சீதையிடம் சேதி சொல்ல,

யார் முதலில் சென்றார்கள்?

9

அ) திரிசடை
ஆ) இலக்குவன்
இ) அனுமன்
ஈ) விபீஷணன்

10

பெரும் நெருப்பில் இருந்து தம்பியைக் காத்தான் ஒரு அண்ணன்! பின்னர் அவனால் தான் கதைக்கே ஒரு பேருதவி கிட்டியது!

அந்த அண்ணன்-தம்பி யார்?

10

அ) இராமன்-இலக்குவன்
ஆ) இராவணன் - விபீஷணன்
இ) சம்பாதி-ஜடாயு ஈ) வாலி-சுக்ரீவன்


இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!


1 அ) வால்மீகி ஆ) வசிஷ்டர் இ) கம்பர் ஈ) நாரதர்

2 அ) மேகநாதன்ஆ) அங்கதன் இ) சுபாகு ஈ) குசன்

3 அ) பரசுராமர் ஆ) வாமனர் இ) நரசிம்மர் ஈ) கல்கி

4 அ) ப்ரிதி-புலஸ்தியர் ஆ) கைகசி-புலஸ்தியர் இ) சுமாலி-மால்யவான் ஈ) கைகசி-விஸ்ரவசு

5 அ) தேரழுந்தூர் ஆ) சீர்காழி இ) திருவெண்ணெய் நல்லூர் ஈ) திருவரங்கம்

6 அ) கந்தமாதான பர்வதம் ஆ) மகேந்திரகிரி இ) மைனாக பர்வதம் ஈ) தண்டகாரண்யம்

7 அ) திரிசடை ஆ) விபீஷணன் இ) ஜனகன் ஈ) பரதன்

8 அ) இராமன்-இலக்குவன் ஆ) இலக்குவன்-இராமன் இ) சுக்ரீவன்-இலக்குவன் ஈ) இலக்குவன்-அனுமன்

9 அ) திரிசடை ஆ) இலக்குவன் இ) அனுமன் ஈ) விபீஷணன்

10 அ) இராமன்-இலக்குவன் ஆ) இராவணன் - விபீஷணன் இ) சம்பாதி-ஜடாயு ஈ) வாலி-சுக்ரீவன்


Read more »

Sunday, April 22, 2007

துலுக்கா நாச்சியாரும், லுங்கி அலங்காரமும்! - 2

சுல்தானி பீவியின் விளையாட்டுப் பொருள் ஆனான் அல்லவா நம்ம பெருமாள்? ஆனால் இப்போது கதை மாறி அவன் வழக்கமாய் ஆடும் விளையாட்டை ஆடுகிறான்; பார்க்கலாமா? இதற்கு முந்தைய பாகம் இங்கே!

இராமானுசர் எவ்வளவு கேட்டும், விக்ரகத்தைத் தர மாட்டேன் என்று அடம் பிடித்தாள் சுல்தானி. சின்ன வயசுப் பெண் தானே!
அரசனுக்கோ தர்ம சங்கடம். தருகிறோம் என்று ஜம்பமாய் சொல்லி விட்டோமே! ஆசை வார்த்தைகள், வேறு பொம்மைகள் என்று காட்டினான் - எதற்கும் மசியவில்லை சுல்தானி. பெண்ணை மிரட்டினான்! உறுமினான்!

வேண்டாம் என்றார் உடையவர். "குழந்தே! சரி, நீ தர வேண்டாம். உன் கையிலேயே வைத்துக் கொள்! ஆனால் அதுவாய் என்னிடம் ஓடி வந்தால் நான் எடுத்துக் கொள்ளட்டுமா?"

"இந்தத் தாத்தாவுக்கு கிறுக்கு பிடித்து விட்டது போலும். வாப்பாவைக் கேட்டாலே மிரட்டி வாங்கிக் கொடுத்து விடுவார். பாவம் தாத்தா, நல்லா ஏமாறப் போகுது"
- சிரி சிரி என்று சிரித்துக் கொண்டாள். சரி சரி என்று தலை சரித்துக் கொண்டாள்!

இராமானுசர், இறைவனை மனதில் துதித்து, "என்ன திருவிளையாட்டோ இது! இருப்பிடம் ஏகுவீர் பெருமானே", என்று பிரார்த்தித்தார்.
தன் கருணை பொழியும் கண்களால், பெருமாளையே அன்புடன் பார்த்துக் கடாட்சித்து,
எந்தை வருக, ரகுநாயகா வருக, என்கண் வருக, எனது ஆருயிர் வருக!
வாரும் செல்வப் பிள்ளாய், வாரும் செல்வப் பிள்ளாய்...என்று அழைக்க....

nuja4

இராமானுசரின் மடியில் செல்வப் பிள்ளை

ஆ...என்ன அதிசயம்!
செல்வப் பிள்ளை விக்ரகம், அவள் மடியை விட்டு நீங்கி, சாவி கொடுத்த பொம்மை போல்,
சிறு சிறு அடியாய், குடு குடு நகர்ந்து, இராமானுசரின் கரங்களுக்குள் வந்து விட்டதே!

நன்றி மன்னா! குழந்தாய், நாங்க வருகிறோம்! - இராமானுசர் சொல்ல, அவருடன் கோஷ்டியும் கிளம்பி விட்டது! இது என்ன, கண் முன்னே கண் கட்டு வித்தையா? சபையில் எல்லாரும் வாயடைத்துப் போய் நிற்க, சுல்தானிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!

நீங்களே பாருங்கள் செல்வப் பிள்ளையை, அவன் திருமுகத்தை, அவன் பொம்மையாக இருந்து தேய்ந்து போன தழும்புகளை!

49704388.P1010092



அன்று முதல் சுல்தானி, பித்துப் பிடித்தவள் போல் ஆகி விட்டாள்.
ஊண் இல்லை, உறக்கம் இல்லை! Teddy Bear-ஐக் கட்டியணைத்து உறங்க முடியவில்லை! பெற்றோர் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்!
அதை விட விசேடமான பொம்மைகள், ஆட்டம் போடும் பதுமைகள்! - ஹூம்...ஒன்றும் சரி வரவில்லை!
பார்த்தான் அரசன்; இராமானுசர் குழாத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான்!

ஆனால் காலம் கடந்து விட்டதே! அவர்கள் எல்லையை விட்டு எப்போதோ போய் விட்டார்களே! "மோசக்காரர்கள், கொள்ளையர்கள், கண்கட்டி வித்தைக்காரர்கள்" - அரசன் சீறினான்!
கொள்ளையடித்த பொருள் கொள்ளை போனால் கொள்ளையர்கள் மற்றவரைக் கொள்ளையர்கள் என்று கூவுவது வாடிக்கை தானே! :-)

"வேண்டாம் வாப்பா, நானே போய் அந்தத் தாத்தாவிடம் கேட்டு வாங்கி வருகிறேன்! என்னுடன் சில ஆட்களை மட்டும் அனுப்புங்கள்"
கிளம்பி விட்டாள் சுல்தானி; அவள் கிளம்பக் கேட்டு, பக்கத்து நாட்டு இந்து இளவரசன் ஒருவன், குபேர் என்று பெயர், அவள் பின்னாலேயே கிளம்பினான் பாதுகாப்பாக!
ஏன்? - ஏன்னா அவனுக்கு இவள் மேல் ஒரு-காதல்! ஒரு-தலைக் காதல்!!


அங்கு என்னடாவென்றால் மேலக்கோட்டை நெருங்கும் போது ஒரு சோதனை! வழியில் வழிப்பறிக் கள்வர்கள்!
நாமக்காரப் பசங்க, ஆண்டிகள் தானே என்று விட்டுவிட்டனர்; சற்று தொலைவு போனதும் தான் இராமானுசர் கையில், துணி மூடியுள்ள, ஜொலிக்கும் மூர்த்தியைப் பார்த்தார்கள்.
அடடா, பெருமாளைத் துரத்திக் கொண்டு பின்னே செல்ல இத்தனை கொடியவரா, இல்லை இவர்கள், கொடி-அடியவரா?

ஒரு கிராமத்துக் குடியிருப்புக்குள் அந்தக் கோஷ்டி புகுந்தது. அதுவோ ஒரு புலையர் சேரி!
உடையவர் ஒரு குடிசையில் உதவி கேட்டு உள்ளே புகுந்தார்.
உடன் வந்த மற்றவர்க்கோ தயக்கம்! ஆனாலும் உடையவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது?
சேரி மக்கள் கொள்ளையரைத் திசை திருப்பி அனுப்பி விட்டனர்;
இராமானுசர் வெளியில் வர, துணிக்குள் என்ன சாமீ, என்று ஆர்வமாய்க் கேட்டனர் சேரி மக்கள்!

2006040603530201melkote


துணிக்குள் இருக்கும் செல்வப் பிள்ளையைப் பார்த்தவுடன், சேரி மக்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! குடிசைக்குள் ஓடிப் போய், கம்பங்கூழும், வாழைக்காயும் எடுத்து வந்து கண்ணனின் காலடியில் வைத்தனர். இவர்களின் தூய அன்பைக் கண்டு இராமானுசர் கண் கலங்கினார். "வாருங்கள் என்னுடன் கோவிலுக்கு; செல்வப் பிள்ளையை நிறுத்தி வைக்கலாம்" என்று அழைத்தார்.

நடுநடுங்கி விட்டனர் சேரி மக்கள்; இராமானுசர் கூட வந்தவர்கள் சில பேருக்குக் கூட இது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை! ஆனால் இந்தச் "சீரங்கத்துச் சாமியார்" விடுவதாக இல்லை! கணவன் நாரணனைக் காத்ததால், அவன் மனைவி, லட்சுமியின் வீட்டார் இவர்கள்; திருவின் வீட்டார்!

தீட்டுக் குலம் என்பதை மாற்றித், திருக்குலம் என்று ஆக்கினார். திருக்குலத்தார் என்று பெயரும் சூட்டினார்.
800 ஆண்டுகள் பின்பு வந்த காந்தியடிகள் ஹரி-ஜன் (ஹரியின் மக்கள்) என்று சொல்வதற்கு முன்பே, சொல்லிச் சென்றார் இராமானுசர்.
வைக்கம் கோவில் நுழைவு செய்த தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே,
செயலில் செய்து காட்டிய தீரர் ஆனார் இராமானுசர்.


மேலக்கோட்டை திருநாராயணன் ஆலயத்தில், உற்சவர் செல்வப் பிள்ளையின் விக்ரகம் குடி கொண்டாகி விட்டது! வழிபாடுகளும் தொடங்கி விட்டன!
பின்னால் துரத்திக் கொண்டு வந்த சுல்தானி...அரசனின் செல்வப் பெண், துரும்பாய் இளைத்துப் போய் விட்டாள்; கலைந்த கூந்தலும் ஒட்டிய தேகமுமாய் அவளைப் பார்த்தால் ராஜகுமாரி என்றே சொல்ல முடியாது!
வந்து சேர்ந்தாள், நொந்து நூலாய்!

49203441_Thirunarayana
கண்ணன் காலடியில்...


உற்சவர் ஆகி விட்ட தன் கண்ணனைப் பார்த்து விட்டுக் கண் கலங்கினாள், சுல்தானி. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! கத்திக் கலாட்டா செய்ய வில்லை. ஆனால் கண்ணீரும் நிற்கவில்லை!
இரு கை தலை மேல் குவித்தாள்!
மூர்ச்சை ஆனாள். மயங்கி ஒடுங்கி, கீழே விழுந்தாள்! உயிர் பிரிந்தாள்!

அனைவரும் பயந்து விட்டார்கள்! இராமானுசருக்குச் சேதி சொல்லப்பட்டது!
கண் கலங்கினார்; அவருக்குத் தெரியும் அவள் கதி என்னவாயிற்று என்று!
கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே

யான் உனைத் தொடர்ந்தாள்; சிக்கெனப் பிடித்தாள்; எங்கு எழுந்து அருளுவது இனியே?
புகல் ஒன்று இல்லா அடியாள், அவன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து விட்டாள்!

அவளுக்கு வேண்டிய மரியாதைகள் குறைவின்றிச் செய்யப்பட்டன.
அவளைப் பின் தொடர்ந்து வந்த காதலன் குபேர் கதறி அழ, அவனைத் தேற்றி, மனச்சாந்தி பெற, பூரி ஜெகன்னாதர் ஆலயம் அனுப்பி வைத்தனர்.

அவள் சிறிய உருவத்தினை, மூலவரின் திருவடிகளில் செய்து வைத்தார், இராமானுசர்!
இன்றளவும் ஆலயத்தில் ஸ்ரீ பாத தரிசனத்தின் போது, அவளுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள்!
துலக்கராய்ப் பிறந்து, துழாய் மாலை வாசனை அறியாத போதும்,
பரந்தாமனிடத்தல் தன்னையே பறி கொடுத்தவள் - அதனால்
சுல்தானி பீவி என்பவள் நாச்சியார் ஆனாள்! வெறும் நாச்சியார் இல்லை!
துலுக்கா நாச்சியார்!! பீவி நாச்சியார்!!!


மேற்கண்ட கதையை வரலாற்றுப் பூர்வமாக அறிய முடியவில்லை.
என்றாலும் குரு பரம்பரைக் கதைகள் இவளைப் பற்றியும் இராமானுசர் காலத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வுகள் பற்றியும் குறிப்புகள் செய்கின்றன.
இவளின் பெருமாள் ஈடுபாடு இராமானுசரை மிகவும் ஈர்த்து விட்டது. அதனால் இவளுக்கு என்று பல நியமங்களைக் கோவில் பூசைகளில் செய்து வைத்தார்.

திருவரங்கத்தில் உள்ள துலுக்கா நாச்சியாரும் இவள் தான். இராமானுசர் இவள் பக்தியை மெச்சி, வைணவத் தலைநகரமாம் திருவரங்கத்தில் இவளுக்கு என்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தினார் என்று சொல்கின்றனர்.
ஆனால் அங்கு உள்ளவள் தில்லி சுல்தான் மகள் என்று கருதுவோரும் உண்டு!
மதுரை, கீழ்த்திருப்பதி போன்ற ஆலயங்கள் திருச்சுற்றில், இவளுக்கு என்று தனிச் சன்னிதிகள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டன.
இன்னும் ஆந்திரக் கோவில்களில் இவளை பீவி நாஞ்சாரம்மா என்று தான் வழிபடுகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில், ஐந்தாம் பிரகாரத்துக்கு முன்பு, கிளி மண்டபம் அருகே, இவள் சன்னிதி உள்ளது! வரையப்பட்ட படமாகத் தான் அவள் சன்னிதியில் இருக்கிறாள்!
அந்த மண்டபத்தில் முகம்மதியக் கலாச்சாரங்கள் பற்றிய சில சிற்பங்களும் காணப்படுகின்றன. இராமானுசர் ஓவியமும் அங்கு உள்ளது!

பகல் பத்து உற்சவத்தின் போது,
பெருமாள் இவள் சன்னிதிக்கு, கைலி வஸ்திரம் (லுங்கி) அணிந்து வருகிறான்.
மூலவருக்கும் கூட லுங்கியால் அலங்காரம் செய்யப்படுகிறது;
வட இந்திய உணவான ரொட்டி, வெண்ணெய், பருப்புப் பொங்கல் நிவேதனம் செய்யப்படுகிறது!

இப்படி அனைவரையும் பெருமாளிடத்தில் அரவணைத்துச் சென்றவர் இராமானுசர்.
அவர் அவதாரத் திருநாள் இன்று! அவர் மறைந்த நாளும் இன்றே!
சித்திரைத் திருவாதிரை (Apr 22, 2007) - இராமானுச ஜெயந்தி அன்று அன்னாரின் தொண்டு உள்ளத்துக்கு, அனைவரும் தலை தாழ்த்தலாம் வாருங்கள்!

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே!
சீர் பெரும்பூதூர் இராமானுசன் திருவடிகள் வாழியே!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!!
Read more »

Friday, April 20, 2007

புதுஜெர்சியில் பதிவர்கள் ஆடப்போகும் கிரிக்கெட்!

இன்று அட்சய திருதியையாமே? இந்த நாளில் எது செய்தாலும், இரு மடங்காகத் திரும்பி வருமாமே! ஒரு பவுன் தங்கம் வாங்கினா, இரண்டு பவுன் வருமா?

* வரும் டா, வரும்! இப்ப எனக்கு நல்லா வருது!
அட, இதெல்லாம் சுத்த டுபாக்கூர்-பா; நகைக்கடை முதலாளிகள் எல்லாம் ஒண்ணா உக்காந்து யோசிச்சு, அடிச்சு ஆடும் கும்மிப்பா, கும்மி!

அட, அப்ப எது தான்பா சரி?
அட்சய திருதியை அன்று என்ன தான் செய்யணும்? நீயே சொல்லேன்!

* ஆங், இது கேட்டியே, நியாயமான கேள்வி. இதைப் பதிவர்கள் கிட்ட போய்க் கேள்! அவங்க தான் கரெக்டா சொல்லுவாங்க!

அதாச்சும், இந்த விசேடமான நாளில்,
நாம எவ்வளக்களவு மத்த பதிவுகளில் பின்னூட்டம் போடுறமோ,
அதை விட இரண்டு மடங்காய்,
நமக்குப் பின்னூட்டங்கள் கொட்டிக்கிட்டு வரும்!

புரியுதா? இது தான் அட்சய திருதியையின் மகிமை! :-)
அதுனால, சும்மா காலங்காத்தால நகைக்கடை முன்னாடி போய் நிக்காம,
ஒழுங்கா எல்லாப் பதிவுக்கும் போயிட்டு வா! இன்னா...புரிஞ்சுதா?

* ஆ..மெய்யாலும் தான் சொல்லுறியாப்பா?
ஆமாம்பா, கருட புராணத்தில் சொல்லியிருக்கு; தெரியுமா?
வேணும்னா, அம்பி கிட்ட கேட்டுக்குறியா? பதிவர் அம்பி இல்லப்பா....நம்ம அந்நியன் அம்பி!

* அட, அப்படியே, இதெல்லாம் செய்தாக் கூட பெருசா என்ன பிரயோஜனம், பிரதர்?
அதான் நாப்பது பின்னூட்டம் மேல அலவுட் இல்லை என்று ஆண்டவன் விதி எழுதிட்டானே! :-) பாவம்...எத்தனை பதிவர்கள் இது பற்றி நொந்து போய், இன்னும் பதிவு போட்டுக்கினு இருக்காங்க தெரியுமா?
அட்சய திருதியை அன்று நான் இருவது பின்னூட்டம் தான் போடுவேன்;
அது டபுள் ஆகி நாப்பது வந்தாப் போதும்! :-)


என்னடா இது இம்மாம் பில்டப்பு என்று பாக்கறீங்களா?
அதான், நாள் நெருங்குதுல!

கொற்றவன் கொத்தனார் தலைமையில், புது ஜெர்சியில்,
பதிவர்கள் எல்லாம் ஒன்று கூடி, மட்டையடி அடிக்கப் போறாங்களாமே!
அதுக்குத் தான் இந்த வெள்ளோட்டப் பதிவு!
(நன்றி: mid-day.com ponnappa cartons)


ஏற்கனவே, எல்லாரும்,
தமிழ்மணத்தில் நீங்க எதிர்பார்ப்பது என்ன?
என்கிற பதிவு பார்த்திருப்பீங்க! பலப்பலக் கருத்துக்களை விவாதம் செஞ்சிருப்பீங்க! அது எல்லாத்தையும் எங்கே வந்து சொல்லி அசத்தணும்-னு தெரிய வாணாமா?

அதாகப்பட்டது,
2007, ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 28 ஆம் நாள்,
("சர்வே"-ஜித் வருடம், சித்திரை மாசம், 15ஆம் தேதி)
ஆஸ்திரேலியாவும், இலங்கையும்
சம்பந்தி மரியாதை செய்து கொள்ளப் போகும் நன்னாளில்,


பிற்பகல் 2:00 மணியில் இருந்து, எல்லார் தெம்பும் தீரும் வரை
ஆட்டம் நடைபெறப் போகுதுங்க!

ஃபோர், சிக்ஸர் என்று வீரர்கள் சக்கையடி அடிக்கப் போறாங்க என்று காத்துவாக்கில் ஒரு செய்தி பரவுகிறது!
பதிவர்கள் மட்டுமல்லாது, பதிவைப் படிப்பவர்கள், பின்னூட்டம் இடுபவர்கள் - இவர்களும் வரப் போறாங்க!

தமிழ் கூறும் நல்லுலகம் என்பதால்,
மாநாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக தெலுங்கில் நடைபெறாது என்று
வெட்டிப்பயல் அவர்களின் பரிபூரண சம்மதத்துடன் உத்தரவாதம் இச்சானு! :-)

மைதானம்:
510 Thornall Street
Edison NJ 08837
மைதானத்தின் படத்துக்கும், செவிக்கு உணவுக்கும்(:-0)
இங்கு க்ளிக்கவும்!


தொடர்புக்கு:
elavasam@gmail.com
shravan.ravi@gmail.com
மின்னஞ்சல் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். செல்பேசி எண்ணும் பகிர்ந்து கொள்ளலாம்.


//அதுசரி
ஆடியோ ரிகார்டிங் (open/secret),
போட்டா கிராப்பி (flash/secret),
விடியோகிராப்பி (handycam/spycam) எல்லாம் உண்டா... இல்லை,
வெறும் போண்டா டீயுடன் நடக்கும் கற்கால மீட்டிங்கா?//

முதல் மூன்று கிடையாது என்று "வழக்கம் போல" சொல்லிட வேண்டியது!
கடைசிக் கேள்விக்கு, வடை....
சாரி விடை,
பட்டாணி சுண்டலுடன் பொற்கால மீட்டிங்!

யார் எல்லாம் வருகிறார்கள்? (துளசி டீச்சர் - ஹெல்ப் ப்ளீஸ், அட்டண்டன்ஸ்)
பத்மா அர்விந்த்
தமிழ் சசி
பாஸ்டன் பாலா
சங்கர் குமார் (VSK)
ஷைலஜா
Vishytheking
வெட்டிப்பயல்
தென்றல்-இவர் வசந்தமும் கூட!
கோபிநாத்
CSRK
எடிசன் ரங்கா
இலவசக் கொத்தனார்
கண்ணபிரான் ரவி
.
.
.
என்று பட்டியல் வளர்கிறது!

Floralia 2007 - பூக்கள் உற்சவம் என்பதாலும்,
தலைவர் இலவசம் என்பதாலும்
எல்லாருக்கும் "இலவசமாகப்" "பூ" சுத்தப்படும்! :-)


வருக! வருக!!
வருக! வருக!!
Read more »

Sunday, April 15, 2007

அழகிகள் ஆறு பேர்!

ஆழகுகள் ஆறு பற்றித் தான் எழுத வேண்டுமா? அழகிகள் ஆறு பேர் பற்றி எழுதினால் என்ன?
ஆகா - இப்படின்னு தெரிஞ்சிருந்தா அழைத்திருக்கவே மாட்டேனே என்று நண்பர் குமரன் சொல்லி விடுவாரா என்ன? :-))
நன்றி குமரன்!

"அழகுன்னு இன்னாப்பா?", என்று யாரையாச்சும் கேட்டுப் பாருங்கள்! உடனே பதில் வருவது சற்றுக் கடினம் தான்.
ஆனா ஒரு ஃபோட்டோவைக் காட்டி, இவங்க அழகா இருக்காங்களான்னு கேளுங்க. - உடனே பதில் வரும்!
(ஃபோட்டோவில் உள்ளவர் அப்போது உடன் இருக்கக் கூடாது என்பதை நான் சொல்லவும் வேணுமா என்ன? :-)

ஃபோட்டோவில் உள்ளவர் பெரிய தலைவராகவோ, பிரபலமானவராகவோ இருக்கலாம். இல்லை சும்மானாச்சும் எங்கோ புடிச்ச ஃபோட்டாவாகவோ கூட இருக்கலாம்.
புற அழகோ, அக அழகோ, ஏதோ ஒன்று - இது அழகுன்னு கண்டிப்பா சொல்ல முடியும்!

கன்னடத்துப் பைங்கிளி ஐஸ்வர்யா ராய் கண்களை அழகு என்று ரசிப்பவரும் உண்டு!
கல்கத்தா அன்னை, தெரேசாவின் முகத்தைப் பேரழகு என்று ரசிப்பவரும் உண்டு!!

என்னைக் கவர்ந்த ஆறு அழகிகள் (அழகுகள்) இதோ!
இவர்கள் அறுவரும் தமிழ் அழகிகள்,
அல்லது தமிழ் சார்ந்த அழகிகள் என்பது கூடுதல் சிறப்பு!!

1.
சில பேருக்கு இளமையில் அழகு! சில பேருக்கு வயசானா அழகு! அதுவும் வயசு ஆக ஆக, இன்னும் அழகு ஜொலிக்கும்!
அழகுடன், முகத்தில் ஒரு ஐசுவரியம் மின்னும்!
அந்த அழகுடன் பணிவும் சேர்ந்து கொண்டால்?
தமிழிசையை வளர்க்க்கும் ஆவலும் முயற்சியும் சேர்ந்து கொண்டால்?
படோபடம் இல்லாமல், அலட்டல் இல்லாமல், நகைக் கடையே மேனியில் மின்னாமல்,
"விநயம்" என்ற ஒற்றைச் சொல் இவர்களுக்கு அழகு சேர்க்கிறது என்று சொல்லலாம் அல்லவா?
MS AMMA
பணிவே அழகு! - எம்.எஸ்.சுப்புலட்சுமி

2. நாட்டியம் அழகு தான், எப்போதும்!
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ?
ஆனால் அந்த நடனத்தை வளர்க்க, அதுவும் நடனக் கலைஞர்களை மரியாதையுடன் சமூகம் நடத்த ஒருவர் வழி வகுத்தார் என்றால்?
சென்னையில் கலா ஷேத்ரா என்ற அமைப்பு நிறுவி, மெய்யாலுமே கலைப்பணி செய்வது அழகு தானே!
போதாது என்று சுதந்திரப் போரில், அவர் கணவருக்கும் உதவியாய் இருப்பதும் அழகு தானே!
நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகுங்களேன் என்று பிரதமர் மொரார்ஜி கேட்க, அதை அவர் மறுத்து விட்டாரே! - அம்மா, இது உங்களுக்கே அழகா? :-)
ARUNDALE
நடனம் அழகு! - ருக்மிணி தேவி அருண்டேல்

3.
உலகில் ஒரு தமிழ்ப் பெண்மணி, ஹில்லாரி கிளண்டனை விடச் சக்தி வாய்ந்தவர் என்று பட்டியல் இடப்பட்டால்?
உலகிலேயே சக்தி வாய்ந்த பெண்மணிகளில் நாலாவது இடம் தரப்பட்டால்?
அமெரிக்க அரசைப் பற்றி இவர் பேசிய பேச்சு நடுவிரல் சர்ச்சை (Middle finger Controversy) என்று ஆனது. தேசத்தை வெள்ளையர்கள் ஆண்ட காலம் போய், பல வெள்ளையர்களை ஒரு தேசிப் பெண்மணி ஆளுகிறார் என்பது மிடுக்கு அல்லவா?
சென்னையில் பிறந்த 57 வயது அழகு என்று சொல்லலாமா?
NOOYI
மிடுக்கு அழகு! - இந்திரா நூயி

4.
ராமோன் மேக்சாசே விருது ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு - அதுவும் நற்பணிக்கு!
சென்னையில் பிறந்து, IAS-இல் கொடி கட்டிப் பறந்து, பின்னர் சமூகப் பணிக்காக அதை ராஜினாமா செய்தால், அது அழகாகுமா?
Social Work and Research Center என்ற நிறுவனத்தில் அவர் கணவருடன் சேர்ந்து,
இந்தியக் கிராமங்களில், குறிப்பாக பெண்ணடிமை அதிகம் காணப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குடி பெயர்ந்து, பணிகள் செய்வதற்கு என்ன பெயர்?

காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தது பெண்ணுரிமைக்கு அழகா?
அண்மையில் வந்த தகவல் அறியும் உரிமை (Right to information) சட்டம், இவர் மூலமாக ராஜஸ்தானத்தில் வெற்றி பெற்று, பின்னரே தேசிய அளவில் பரவியது அல்லவா?
Aruna Roy
நற்பணி அழகு! - அருணா ராய்

5.
பால் வடியும் பால முகம் என்பார்கள்; ஆனால் ஒரு பாலனுக்குச் சொன்னதை, தாய்க்கும் சொல்ல முடியுமா? சொல்ல முடியும்!
முகம் பொழி கருணை போற்றி என்று முருகனைப் பற்றி வரும்.
அது அன்னை வேளாங்கண்ணிக்கும் மிகவும் பொருந்தும்! புன்னகை சற்றே தான் இழையோடும்!
மோனாலிசா புன்னகை பற்றிச் சொல்பவர்கள், இந்தப் புன்னகையைப் பார்க்கவில்லையோ என்று கூட சில சமயம் எண்ணுவேன்!
நோய்கள் தீர்க்கும் தாயின் கருணையும் ஒரு அழகு தானே!
VELANKANNI
கருணையே அழகு! - அன்னை வேளாங்கண்ணி

6.
Last but not the least என்பார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்?
ஆங்...இறுதியாக,ஆனால் உறுதியாகச் சொல்வது, யாரை என்றால்....
செந்தமிழ்ச் செல்வி, நம்ம தீஞ்சுவைக் கோதை.
தமிழைத் தான் மட்டும் பாடியது அன்றி, ஊரையே பாட வைத்தது அழகு தானே!

இவள் சூடிக் களைந்ததைத் தான் இறைவனே விரும்புகிறான் என்றால், - இவள் அக அழகு தான் என்ன!!
எல்லோரையும் மயக்குபவன் மால் என்றால், அந்த மாலையே மயக்கும் கோதை - இவள் புற அழகு தான் என்ன!!

தொங்கல் மாலை, முத்து மகுடம், பச்சைக் கிளி, இச்சை மொழி எல்லாமே அழகு தானே!
படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்!
ஆண்டாள் என்று வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!
அப்போதும் அந்த அழகு தெரியும்! அழகுத் தமிழ் புரியும்!!

ANDAL AZHAGU
ஆண்டாள் - தமிழை ஆண்டாள்!
அழகே அழகு! - ஆண்டாள் அழகு!!





(பின் குறிப்பு:திருமலையில் ஸ்ரீதேவியைக் கண்டேன், பழனியில் தேவயானியைக் கண்டேன், என்றெல்லாம் பதிவைப் படித்து விட்டு, ஸ்ரீதேவி தான் அழகு என்று சொல்வேனோ என்று யாராச்சும் எண்ணியிருந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல :-)
ஆனா அவங்களும் ஒரு அழகு தானேப்பா! என்ன வெட்டிப்பையலாரே - சரி தானே :-)


நண்பர்கள்,
சிவமுருகன், யோகன் அண்ணா, கீதா சாம்பசிவம் (கீதாம்மா)
அவர்களை, அழகு விளையாட, அன்பாக அழைக்கிறேன்!

துளசி டீச்சர் அழைப்பு - அப்படியே இருக்கட்டும்! கொத்ஸ் ஏற்கனவே அழைத்து விட்டாராம்! ஆனாலும் அழைத்தவர்களை வாபஸ் வாங்குவதெல்லாம் நம்மளால முடியாதுப்பா!
பின்னே என்னவாம், டீச்சரின் வகுப்பில், வீட்டுப்பாடம் பண்ணாம வரலாம்னு ஒரு ஐடியா யோசிச்சா...விடமாட்டாங்க போல இருக்கே! :-)))
Read more »

Wednesday, April 11, 2007

சுல்தானி பீவி, நாச்சியார் ஆனாரே!

சுல்தானி பீவி, நாச்சியார் ஆனார்! - அட, இது என்ன மதமாற்றமா?
கட்டாய மத மாற்றத் தடைச்சட்டம் பாயவில்லையா? காட்டுக் கூச்சல்கள் எதுவும் ஓயவில்லையா? :-)

இருங்க, இருங்க...நீங்க பாட்டுக்குன்னு பேசிக்கினே போனா எப்படி?
யாருங்க இந்த சுல்தானி பீவி? அவங்க ஏன் நாச்சியார் ஆனாங்க?
நமக்குத் தெரிஞ்ச நாச்சியார், நம்ம வல்லியம்மா என்கிற பதிவர் தானே! அவங்க தான் வலைப்பூவுக்குத் நாச்சியார்-ன்னு பேரு வைச்சிருக்காங்க.

அது சரி. கேக்கணும்னு நினைச்சேன்.
இந்த நாச்சி நாச்சி-ங்கறாங்களே, நாச்சி-ன்னா என்னாங்க?
ஆச்சி, பேச்சி போல இந்த நாச்சியும் வட்டார வழக்கா? தமிழ் மாதிரி தான் தெரியுது்;
ஆனா இந்தக் காலத்துல சொன்னா, ஏதோ கிராமத்தான், காட்டான்-ங்கிற மாதிரி பாக்குறாங்களே!

வாங்கய்யா வாங்க! நியாயமா, சொல் ஒரு சொல் பதிவுல போய் நீங்க கேக்கோணும்.
உங்களுக்கு நாச்சி-ன்னா அவ்வளவு சீப்பா போயிடுச்சா?

ஆண்டாள் நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார், நிலமங்கை நாச்சியார், திருவிளக்கு நாச்சியார், திருவாதிரை நாச்சியார், பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்...
இதுல ஒருத்தராச்சும் கேள்விப்பட்டு இருக்கீங்களா?
பொன்னியின் செல்வன் குந்தவை நாச்சியார் - இவங்க என்ன கிராமமா - பட்டணமா?

நாயன்=ஆண் பால்; நாச்சி=பெண் பால்
நாயன், நாச்சி
நாயனார், நாச்சியார்!
நாயன்மார், நாச்சிமார்!
தலைவன், தலைவி - அப்பிடின்னு பொருள்!
இன்னொரு வாட்டி பேசினீரு, வாட்டி எடுத்துடுவோம், ஞாபகம் வைச்சிக்குங்க!:-)

சரிப்பா..சரிப்பா...கோச்சிக்காதே! நீ சுல்தானி நாச்சியாருக்கு வா; அது என்ன கதை?


இந்தக் காலத்தில் ஒரே சாதியில் கல்யாணம் பண்ணிக்கறத்துக்கே ஆயிரம் நொள்ளை, சொள்ளை சொல்லறாங்க!
கொஞ்சம் நிறைய பாசம் வச்சி வளர்த்துட்டுங்கன்னா, வேற சாதி வேற மதம்-ன்னு வரும் போது, ஒரு இறுக்கமும் கூடவே வந்து விடுகிறது.
என்ன தான் வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், உள்ளுக்குள் ஆரம்பத்தில் ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்கிறது!
ஆனா அதையெல்லாம் மீறி வருபவர்கள், இப்பல்லாம் கொஞ்சம் அதிகம்.

ஆனா ஒரு ஆயிரம் ஆண்டுக்கு முன்னே, முகம்மதியப் பெண் ஒருத்தி, இந்துப் பையன் ஒருவனைக் காதலித்தால்?
அதுவும் அவனைப் பற்றி ஒன்றுமே கேள்விப்படாமல், காதலித்தால்?
அதுவும் அவனிடம் எதுவுமே பேசாமல், காதலித்தால்?
சாட்டிங், ஆர்குட் இவை எல்லாம் எதுவும் கிடையாது அப்போது.

அவன் உருவத்தை மட்டுமே வைத்து நெஞ்சு நிறைய காதல்!
சரி அவன் இருக்கும் ஊருக்கே வந்து பேசலாம்-ன்னு அந்தப் பொண்ணு கிளம்பி வந்தா, பையன் தெய்வமாய் நிக்கறான்!
வந்தவளும் உயிரை விட்டுத் தெய்வமாக நின்று விட்டாள்!
பையன் பெயர் = சம்பத்குமாரன் என்கிற திருநாராயணப் பெருமாள்
பெண்ணின் பெயர் = சுல்தானி பீவி என்கிற துலுக்கா நாச்சியார்
(சூரத்தானி பீவி என்றும் அழைக்கிறார்கள்)


மைசூரில் இருந்து தும்கூர் செல்லும் வழியில் ஜக்கனஹள்ளி. அதற்கு அருகே உள்ள ஊர் தான் Melkote என்னும் மேலக்கோட்டை.

சோழ அரசன் சொந்த ஊரில் மத வெறி கொண்டு அலைகிறான்.
இறைப்பணி இடையறாது நடக்க வேண்டுமே என்று இராமானுஜர் திருவரங்கத்தில் இருந்து இந்த ஊர் பக்கம் வருகிறார்.
ஊர்க் கோவில் மண்மேடாய் கிடக்கிறது. மக்களைக் குறை சொல்ல முடியுமா? பாவம், அவர்களே தவிச்ச வாய்க்குத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்!

பார்த்தார் இராமானுஜர்! அகண்ட காவிரியைப் பார்த்துப் பழகியவர் ஆயிற்றே!
முதலில் மக்கள் பணி! பின்பு மாயவன் பணி!!
தொண்டனூர் என்னும் பக்கத்து ஊரில் நீர் தேக்கி வைக்க பெரிய ஏரி ஒன்றை வெட்டுவிக்கலாம் என்று ஏற்பாடுகள் செய்கிறார். தொண்டனூர் நம்பி என்ற அவர் சீடர், இதற்குப் பெரிதும் உதவி!
பின்பு இந்த வறண்ட ஊரில், கல்யாணி குளம் என்ற குளம் ஏற்படுத்தி, அடிக் கால்வாய் மூலமாக அதில் நீர் நிறைத்தார்.
பின்பு நீர்வண்ணனையும் மனக் குளத்தில் நிறைத்தார்!

57971640.17KalyaniKolam

கோவில் பணிகள் கிடுகிடுவென்று தொடங்கின!
மண்ணில் புதையுண்ட மூலவர் விக்ரகம் - திருநாராயணப் பெருமாளைக் கண்டு எடுக்கிறார்.
ஒரு காலத்தில் சிறப்பாய் விளங்கிய ஆலயம் இப்படிக் கவனிப்பார் இன்றி ஆகி விட்டது! பேசாமல் விட்டு விட்டு வேறு செழிப்பான கோவிலுக்குப் போய் வசதியாகச் சாப்பிட்டுக் கொண்டே பணி செய்யலாமே! அவருக்கு வயது வேறு 80ஐ நெருங்குகிறது! ஆனால் உடையவர் இராமனுஜருக்கு மனசு வருமா?

புதிதாக ஆயிரம் ஆலயங்கள் எழுப்பவதற்கு முன், சிதிலமானவற்றைச் சீரமைக்கலாம் இல்லையா? பெற்ற தாய்க்கு வைர அட்டிகை வாங்கித் தருவதற்கு முன், அவள் கிழிந்த புடைவைக்கு வழி காணலாம் இல்லையா?
கோவில் சீரமைப்பு முழு வீச்சில் நடக்கிறது.

* மூலவரைப் போல் உற்சவர் ஒருவர் இருக்க வேண்டுமே! எங்கே அந்தத் திருவுருவம்?
# பிஜப்பூர் சுல்தான் முன்னொரு படையெடுப்பில் வந்து பல செல்வங்களையும் சிலைகளையும் கவர்ந்து கொண்டு போய் விட்டான் ஐயா. இனி கேட்டாலும் அந்த ராமப்ரியன் என்ற தங்க விக்ரகம் கிடைக்காது - மக்கள் எல்லாரும் சொல்கிறார்கள்.
(இது பிஜப்பூர் சுல்தான் இல்லை, தில்லி சுல்தான் என்று சொல்பவரும் உண்டு).

இராமானுஜர் ஒரு கணம் சிந்திக்கிறார். தாமே சுல்தானிடம் போய் உற்சவரைப் பெற்று வருவதாகச் சொல்கிறார். வயதான காலத்தில் கால் கடுக்க நடந்து சுல்தானின் மாளிகையை அடைகிறார்.
சுல்தான் முதலில் சற்று ஏளனமாகப் பேசினாலும், பின்பு இராமானுஜரின் அன்பையும் அறிவுக் கூர்மையும் கண்டு சற்றே மனம் மாறுகிறான்.
வேறு எந்தப் பொருளும் தரமாட்டேன். இந்தப் பொம்மையை மட்டும் தான் தருவேன்! சம்மதமா நாமக்காரப் பெரியவரே?

மன்னா, மற்ற செல்வம் எல்லாம் கேட்க மாட்டேன்.
செல்வத்துள் செல்வம் மட்டுமே எனக்கு வேண்டும்.
செல்வப் பிள்ளை அவன். சம்பத்குமாரன் என்பது தான் அவன் முழுப் பெயர். இருந்தாலும் செல்வப் பிள்ளை என்று தான் ஆசையாய் அழைக்கிறோம்! அவனை மட்டும் தருவாய் அப்பனே!

சரி பெரியவரே, கொள்ளைப் பொருட்கள் சேமிக்கும் கூடாரத்தில் தேடச் சொல்கிறேன்.....
ஆகா....என்ன? ஆட்கள் எவ்வளவு தேடியும் எங்கும் கிடைக்கவில்லையா! எங்கே போய் இருக்கும்? நான் களவாடிய பொருளையே களவாடிய களவாணிப் பயல்கள் யார்?
ஆங்....ஞாபகம் வந்து விட்டது. என் ஆசை மகள் லச்சமார் சுல்தானி, அதை அந்தப்புரத்துக்கு அல்லவா விளையாட எடுத்துப் போனாள்?

sultani


இராமானுசருக்கு கண் கலங்கி விட்டது.
"நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்பது போய்,
"நீ ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்று மாற்றிப் பாட வேண்டியது தானோ!
பருவ மங்கை சுல்தானி, தந்தையின் சபைக்கு வருகிறாள்;
இராமானுஜருக்கோ கண்கள் எல்லாம் கரியவன் மேலேயே உள்ளது. ஆனால்....

அப்பா, இது என் ஆசை பொம்மை மட்டும் இல்லை;
இதன் அழகைப் பாருங்களேன்! இதழில் எப்படி குறுஞ்சிரிப்பு சிரிக்கிறது!
நான் எங்கு சென்றாலும், இதை எடுத்துக் கொண்டு தானே செல்வேன்.
இதை எப்படி வாப்பா என்னால் தர முடியும்?
போங்க வாப்பா! தர முடியாது!
தூங்கும் போது கூட, இதை கட்டிக் கொண்டு தானே தூங்குவேன்!

அடப் பெருமாளே! கடைசியில் உன் கதி இந்தக் காலத்து Teddy Bear போலவா ஆக வேண்டும்! :-)
அவள் தான் கரடிப் பொம்மை போல் கட்டிக் கொண்டு தூங்கினால், ஏ ராமப்ரியனின் சிலையே, உனக்கு அவளை விட்டு எழுந்து, நடந்து வர கூடத் தெரியாதா?
நடந்த திருக்கோலம் என்பார்களே! இது தானா உலகளந்த உன் பராக்கிரமம்?

(விக்ரகம் மீண்டும் ஊர் வந்து சேர்ந்ததா? சுல்தானி பீவி எப்போது நாச்சியார் ஆனார்?
மேலக்கோட்டையில் இருந்த விக்ரகம் இது என்றால், திருவரங்கத்தில் எதற்கு பீவிக்குக் தனிச் சந்நிதி? - எல்லாம் அடுத்த பதிவில்!)
Read more »

Monday, April 02, 2007

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! - 2

"அரங்கன் கதி அதோகதி. முடிஞ்சாருடா மனுசன்!", என்று சிலர் கண்ட கனவெல்லாம் ஒரு நொடியில் என்ன ஆனது?
சென்ற பதிவில், மட்டையால் பெருமாள் அடி வாங்குவதைக் கண்டு, ஒரு சிலர் மட்டும் தான் பரிதாபப்பட்டார்கள். மற்றவர்கள் எல்லாரும் தாயார் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்! அவர்கள் எல்லாருக்கும் இன்று ஆப்பு! :-)

முகத்தை வெடுக் என்று திருப்பிக் கொண்ட பெண்டாட்டி, அரை நொடியில் "அத்தான், உங்கள் சிரித்த முகம் பார்த்துக் கொண்டு, உங்க பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளட்டுமா?" என்று கொஞ்சினா என்ன செய்வீங்க!

வாழை மட்டையால் பெருமாளைப் பெண் வீட்டார் தாக்க, பார்த்தார் பெருமாள்! Total Surrender! பரிபூர்ண சரணாகதி செய்தார்!
ஆகா...சரணாகதி வாங்குறவரே சரணாகதி செய்ய வேண்டிப் போச்சா? யாரிடம்? மாறன் சடகோபன் என்ற நம்மாழ்வாரிடம்!
நல்லா இருக்கு கதை! சாமி தான் பக்தனைக் காப்பாத்தணும்! இங்க என்னடான்னா பக்தன் சாமியக் காப்பாத்த ஓடோடி வருகிறான்.

நம்மாழ்வாரின் பல்லக்கு வீட்டு வாசலுக்கு வந்து சேர்கிறது! பெருமாள் பக்தனை ஓரக் கண்ணால் பாத்து, "பார்த்தாயா என் நிலையை?" என்று பாவமாய்க் கேட்கிறார்.
அடி வாங்கிய பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்!
அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?
வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே இவருக்குத் தாளவில்லையே! இவரா புள்ளின் வாய் கீண்டான்? பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்? :-)

திருமேனி அலங்காரம் எல்லாம் கலைந்து போய், பரிதாபமாய் நிற்கும் பெருமாளைக் கண்டவுடன், ஆழ்வார் கண்கலங்கி விடுகிறார்.
நேரே ஓடிப்போய் தாயாரின் திருக்கதவைத் தட்டுகிறார்.

"என்னம்மா இது? ஆயிரம் இருந்தாலும் கணவனை இப்படி வெளியில் நிறுத்திக் கதவடைக்கலாமா? எதுவா இருந்தாலும் உள்ளே அழைத்து, அப்புறம் சிவக்கவோ, சினக்கவோ தெரியாதாம்மா உனக்கு?

உன்னைச் சொல்லி என்ன செய்வது?
இதே பாண்டி நாட்டுப் பெண்ணாய் இருந்தால் இப்படிச் செய்வாளோ?
"அன்பாக" அல்லவோ "ஆண்டிரு"ப்பாள்!
சோழ நாட்டுப் பெண் என்று காட்டி விட்டாயே", என்று ஒரே போடாகப் போட்டார் பாருங்க!
ஏன்னா அவரு பாண்டி நாடு! அவருக்குத் தெரியாதா அக்கரைக்கு இக்கரை சிகப்புன்னு! மதுரையில் ஆட்சி யாருன்னு! :-)



கதவின் பின்புறம் மெல்லிய சிணுங்கல், விசும்பல்; இரண்டாம் முறை!
"சரி, விடு...
நீ சொல்லித் தானே அம்மா, இவர் உறையூர் வல்லியை மணந்தார்?
உன்னிடம் மார்பில் கை வைத்துக் கேட்டாரே! அப்போ சரியென்று சொல்லிவிட்டு, இப்போ இப்படிச் செய்தால் எப்படி? இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா?"
- இதை அப்படியே கட்டியம் என்று அழகுத் தமிழில் கவிதை சொல்லி வாசிப்பார்கள் அரையர்கள்;
"அவமானப் படுத்தலாமா?" என்று சொல்லும் இடத்தில் வார்த்தை வராமல் நெஞ்சு அடைக்கும் அந்த அரையருக்கு!

மீண்டும் சிணுங்கல்; மூன்றாம் முறை!
"பார், கல்யாணம் முடித்த கையோடு, கல்யாண விருந்து கூட உண்ணாமல், உன் மனம் பதைக்குமே என்று ஓடி வந்தான் அரங்கன்.
உன் பிறந்த நாள் வேறு இன்று!
அதை மறக்காமல் ஒடி வந்தவன், பசி மயக்கத்தில் விழுந்து தடுமாறி விட்டான்; மேனியெல்லாம் ஒரே காயமாகி..."

கதவுகள் திறந்து விட்டன..."அச்சச்சோ...என்னங்க...என்னாச்சு...." என்ற குரல் குழைந்து விட்டது!
பெருமாள் ஓடியே வருகிறான். அரங்க நாயகியை ஒரு கண்ணாலும், ஆழ்வாரை மறு கண்ணாலும், கண்டு மென்னகை பூக்கிறான்.
கள்ளச் சிரிப்பில் கரையாதார் யார்?



இருந்தாலும் ஒரேயடியாக எந்தப் பெண்ணாச்சும் சமாதானம் ஆனதாகச் சரித்திரம் உண்டா? கொஞ்சம் முரண்டு பிடித்தால் தானே கட்டுக்குள் இருக்கும்! "ஆழ்வாரே வந்து சொன்னதால், சரி போனாப் போகட்டும்!"
"நம் பால் அன்பினர் ஆன நம்-ஆழ்வார் சொன்னதாலே உம்மை ஏற்றுக் கொண்டோம்", என்று தாயார் கட்டியக் கவி சொல்கின்றது!

பின்பு கணவனும் மனைவியும் பூப்பந்து விளையாடிக் கொண்டே, பங்குனி உத்திர மண்டபம் எழுந்தருளுகிறார்கள்.
அரங்க நாயகி படி தாண்டாப் பத்தினி!
கணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்; உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, "ஏன் இவ்வளவு நாழி?" என்று தான் கேட்பாள்.
அதனால் தான் பங்குனி உத்திர விழா, அவள் வீட்டின் உள்ளேயே நடக்கிறது!

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்!
அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க,
இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை!

Divyadampathi

2004043001390601

(சேர்த்தியைச் சேவிக்கும் இராமானுஜர்)

அதனால் அன்பர்கள் கூட்டம் அலை மோத, அதிலும் புதுமணத் தம்பதிகள் அலைமோத, அர்ச்சனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
இராமானுஜர் முன்பொரு நாள், இதே உத்திர நன்னாளில் பாடி அருளிய கத்ய த்ரயம் என்ற கவிதையை மாலை வேளையில் ஓதுகிறார்கள்.
சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் - இவை மூன்றுமே கத்ய த்ரயம்!
இது ஒரு வசன கவிதை. இதை நீட்டியும் சுருக்கியும் ஓதும் அழகே, கேட்பவரை மயக்கி விடும்.

1. தாயாரும் பெருமாளும், ஒரு சேர இருக்கும் இந்த நாளுக்காகக் காத்திருந்து, தாயாரின் தாள் பற்றிச் சரணாகதி செய்கிறார் இராமானுஜர் - இது சரணாகதி கத்யம்
2. பின்னர் அரங்கனிடம் மற்றை நம் காமங்கள் எல்லாம் மாற்றி என்றென்றும் நம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறார் - இது ஸ்ரீரங்க கத்யம்
3. உடனே பெருமாள் இருந்த இடத்தில் இருந்தே, அவருக்கு வைகுந்தம் காட்டியருள்கிறார். அதை இராமானுஜர் அப்படியே நமக்கெல்லாம் விளக்கிக் காட்ட - இது வைகுந்த கத்யம்.

76374780_XZzbuFHr_DSC00209

உனக்கும், உன் சம்பந்தா சம்பந்தங்களுக்கும் மோட்சம் அருளினோம் என்று பெருமாள் உறுதி சாதிக்க, இராமானுஜர் அரங்கன் சேவடியில் தலை தாழ்த்துகிறார். பின்பு,
18 முறை திருமஞ்சனம் (நன்னீராட்டு) நடைபெறுகிறது
18 * 6 கலசங்கள் = 108 கும்ப ஆராட்டு, விடிய விடிய!
மறுநாள் பங்குனித் தேர்.
உற்சவம் இனிதே நிறைகிறது!

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே,
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP