ஒளவையே! புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?
என்ன அப்பிடிப் பாக்கறீங்க?...."நாரதரே, அம்மை அப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன?" என்று கேள்வி கேட்பார் பிள்ளையார்! - அதுக்குப் பதில் என்ன சொல்லப்படும்?.....ஞாபகம் வருகிறதா?
அம்மை அப்பன் தான் உலகம், உலகம் தான் அம்மை அப்பன்!
அதே போல,
புதினாத் தொகையல் தான் புதினாச் சட்னி!
புதினாச் சட்னி தான் புதினாத் தொகையல்!
என்று சொல்லலாமா....கூடாதா?
- இது தான் இப்போது பேண்டேஜ் பாண்டியனுக்கு எழுந்துள்ள பெருத்த சந்தேகம்!
ஐயோ இவனக்கு என்ன ஆச்சு, திடீர்-னு என்று பாக்கறீங்களா? அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க....
ஒரு வாரமா பாக்டீரியாக் காய்ச்சல் காய்ச்சி எடுக்க, படுத்த பாம்புப் படுக்கையா நானும் கெடக்க,
வெறும் பிரட்டும், சூப்பும் சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது!
எண்ணெய் வாசமே கூடாது என்று மருத்துவர் உத்தரவு வேறு! (அவர் சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டது தனிக் கதை...அதை பாஸ்டன் பதிவர்கள் வந்து எழுதுவார்கள் :-)
அப்போது தான் காரமா, உறைப்பாச் சாப்பிட ஆசை வந்தது! அம்மா செய்யும் புதினாச் சட்னி, புதினாத் தொகையல் நினைவுக்கு வந்தது!
புதினா மருத்துவக் குணங்கள் கொண்டது எனறு அமெரிக்க நாசா விண்வெளிக் கழகமே சொல்லி இருக்காமே! அதான் அதையே சாப்பிடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்! - ஆனா, அங்கு தான் வந்தது வினை!
தாளிக்கலாமா? கூடாதா?? - எண்ணெய்ப் பிரச்சனை! - ச்சே இந்த அமெரிக்காவில் எப்பமே இப்பிடித் தான்....அடுத்தவன் வீட்டு/நாட்டு எண்ணெய்ப் பிரச்சனைக்கும் அமெரிக்கவுக்கும் அப்படி ஒரு ராசி போல! :-)
சரி...என்ன செய்வது என்று தெரியாமல் நம் ஆருயிர் நண்பர் CVR இடம் விஷயத்தைச் சொன்னேன்! சர்வ வல்லமை படைத்த பாலாஜி இருந்திருந்தால் அவரைக் கேட்டிருக்கலாம்! ஆனால் அவரோ ஊரில் இல்லை! சரியென்று CVR-இடம் சொன்னால், அவர் பதறிப் போய் விட்டார்! நான் உங்களுக்கு ஆவியில் சுட்ட இட்லி கொண்டு வருகிறேன் என்று ஆறுதலாகச் சொன்னார். ஆகா என்ன பாசம்! என்ன பாசம்!
சற்று நேரத்துக்கு எல்லாம் ஒடோடி வந்தார் மனுசன்!.......Frozen Idli பாக்கெட்டோடு!
"நல்லாப் பாத்துக்குங்க" என்று மேலும் கீழும் இட்லிப் பாக்கெட்டைக் காட்டி விட்டு, மீண்டும் அவர் பைக்குள்ளேயே போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்!
எனக்கு ஒரே அழுகையா வந்து விட்டது! உடம்பு சரியில்லீன்னா, ஆப்பிள் பழங்களோடு வந்து பார்ப்பார்கள்! ஆனா இவரு ஒரு கூடை ஆப்பிளைக் கூட வாங்கி வராம,
'ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட்' ன்னு பாட்டு பாடிட்டு கிளம்பிட்டாரு!
எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது! சரி நாமே புதினாவைச் செய்து விட வேண்டியது தான் என்று களத்தில் இறங்கி விட்டேன்! இதோ செய்முறை! சாரி, நான் செஞ்ச முறை!

தேவையானவை:
| புதினா | 2 கொத்ஸ் (கொத்துவின் pluralஐச் சொன்னங்க! கொத்ஸ் நீங்க கோச்சிக்க மாட்டீங்கன்னு, தெரியும்) |
| கொத்தமல்லி | 1 கொத்து (இலைகளைக் லேசாத் தண்ணீரில் கழுவிக் கொள்ள மறக்காதீங்க) |
| தக்காளி | 1 |
| சின்ன வெங்காயம் | 3 |
| புளி காய்ச்சல் | 1/4 கப் |
| உ.பருப்பு/க.பருப்பு | 2 தேக்கரண்டி |
| நல்லெண்ணெய் | 3 தேக்கரண்டி |
| காய்ஞ்ச மிளகாய் | 3 |
| உப்பு | அவங்க அவங்க சூடு சொரணையைப் பொறுத்த அளவு :-) |
கொஞ்சம் வித்தியாசமாப் பண்ணனும்-னா...... மாங்காய் | அரை மாங்காய், "வெட்டி" வைத்துக் கொள்ளவும்! வெட்டியையும் சமைக்கும் போது கூட வைத்துக் கொள்ளலாம்! :-) |
மேலே CTRL+A- எல்லாம் பண்ணிப் பார்த்து, எதுவும் தேடி ஏமாந்து போகாதீங்க! இது கொத்தனார் கிண்டிய உப்புமா பதிவு போல இல்ல! :-)
![]() | ![]() |
சரி, மேட்டருக்கு வாங்க!
1. Frying Pan-இல் எண்ணெய் விட்டு, உ/க பருப்புகளைப் பொன்னிறமாக வறுத்துக்கோங்க.
2. கூடவே வெங்காயம், மிளகாயும் வறுத்து வைச்சுக்கோங்க.
3. புதினா,கொத்தமல்லி இலைகளைக் கொட்டி, நீர் எல்லாம் போகுமாறு, கொஞ்சமா இலைகள் சுருங்குமாறு வறுத்துக்கோங்க. தண்ணி எல்லாம் சேர்க்கத் தேவையே இல்லை! (தாகத்துக்கு குடிக்கிற தண்ணியைச் சொன்னேன்-பா)
அய்யோ....வாசனை இப்பவே தூக்குதே! நாலு இலையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்டேன்! :-)
4. இப்ப தனியாக, இன்னொரு Panஇல் தக்காளி வதக்கிங்கப்பு!
5. மாங்கா பத்தைகளை சும்மா அரை நிமிடம் அப்படி லைட்டா வதக்கிங்க!
6. எல்லாம் கூல் ஆவட்டும்! சிவாஜி ஸ்டைலில் கூல் பேபி கூல்!
7. எல்லாத்தையும் மிக்சியில் கொட்டி, புளிக் காய்ச்ச்ல், உப்பு சேர்த்து அரைச்சிக்கங்க!
8. வேணும்னா, இன்னொரு வாட்டி, உ/க பருப்பு வறுத்து, தாளிச்சி கொட்டிக்கங்க!
9. ஐட்டம் ரெடி...பத்தே நிமிஷம் தான்!
வாழ்க்கையில சந்தோசமான விஷயம் எல்லாம் சீக்கிரமாவே நடந்து முடிஞ்சிடுது பாத்தீங்களா?! (ஆன்மீகப் பதிவு எஃபெக்டு நடு நடுல வந்துடுது, நான் என்ன செய்ய!:-)
10. சரி...இனிமே தான் மேட்டரே! இப்ப நாம செஞ்சதுக்குப் பேரு என்னா? தொகையலா? சட்னியா??.....அதைக் கரீட்டாச் சொல்லிட்டு அப்புறம் வாங்க...
தட்டுல துண்டு இலை பரப்பி, அதுல நெய் தடவி....
அஞ்சு காஞ்சிபுரம் இட்லி வைச்சு,
இந்தப் புதினா மேட்டரையும் சேர்த்து வச்சித் தாரேன்!
ஒளவையே! - புதினாத் தொகையல் என்றால் என்ன? புதினாச் சட்னி என்றால் என்ன?
பின் குறிப்பு:
மொக்கை நன்றே மொக்கை நன்றே
பிச்சை புகினும் மொக்கை நன்றே
என்று தமிழ் மூதாட்டி சொன்ன வழியில் என்னுடைய சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள்! மறந்து விடாதீர்கள் - தொகையலுக்கும், சட்னிக்கும், மொத்தம் ஆறு வித்தியாசங்கள் சொல்லணும்!
பின் பின் குறிப்பு:
மாதவிப் பந்தலில் மொக்கைப் பதிவு ஒன்று கூட போடாத உன்னை எல்லாம் Blogger என்று ஒப்புக் கொள்ளவே முடியாது என்று நண்பர் சபித்து விட, அதனால் மிகவும் பயந்து போய், தொகையலும் சட்னியும் அரைத்துச் சாப்பிட்டு எழுதியதே இந்தப் பதிவு!:-)
படங்களுக்கு நன்றி: SeeC






























