Tuesday, May 26, 2009

Happy Birthday: ஜிரா வித் சில்க் ஸ்மிதா!

பிறந்த நாள் அதுவுமா என் தோழன் ஜிரா என்னும் ஜி.ராகவன், ஒரு பரங்குன்றின் மேல், பலத்த போதையில் மலையேறிக்கிட்டு இருந்தாரு! புதுச் சொக்கா, புது IPod! பிறந்தநாள் பரிசுகள் பளபளக்க, IPod-இல் ஒரு செம கிக்கான ரொமான்டிக் பாட்டு!
"நடவிஞ்ச மயூராலு ஒச்சின மோமு ஒக்கடே!
ஈசருகி பாக மொழி செப்பின மோமு ஒக்கடே!"


1975-இல், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, நம்ம சில்க் ஸ்மிதா-க்குன்னே போட்ட தெலுங்குப் பாட்டாம்! இந்தப் பாட்டெல்லாம் எம்.எஸ்.வி-க்கு கூட இப்போ கிடைக்காது! ஆனா எங்க ஜிராவுக்கு மட்டும் எப்படியோ கிடைச்சிரும்! :)

ஜிராவுக்கு அன்னிக்கின்னு பார்த்து ரொம்ப ஆழ்ந்த சிந்தனை!
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்-ன்னு எகனை மொகனையாச் சொல்லுறாங்களே! அது நிஜமாலுமே உண்மையா?
* அப்படீன்னா திருப்பதி மலை மேல குமரன் தானே இருக்கணும்?
* சோளிங்கபுரம் மலை மேல குமரன் தானே இருக்கணும்?
* அட, சென்னைப் பரங்கிமலை மேல கூட குமரன் தானேப்பா இருக்கணும்?

இதை யாரு கிட்ட போயி எப்படிக் கேட்கறது-ன்னு தெரியாம தவியாத் தவிச்சிக்கிட்டு இருந்தாரு ஜிரா! அந்த நேரம் பார்த்து அங்கன வந்தாரு அவரோட உயிர்த் தோழன் சூரியச்சிவம்! :)



ஜிரா: "ஹேய், வா வா! நல்ல சமயத்தில் வந்தே! மொதல்ல இதுக்குப் பதில் சொல்லு! நீ தானே எனக்கு எப்பமே சந்தேக நிவாரணி!"

நண்பர்: "எலே ராகவா! நிவாரிணி, பவாரிணி-ன்னு எப்பமே பொண்ணுங்க பேராத் தான் பேசிக்கிட்டுத் திரிவியா? பொறந்த நாளு அதுவுமா என்ன ராசா ஒனக்குச் சந்தேகம்?"

ஜிரா: "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமா? அதை மொதல்ல சொல்லு"

நண்பர்: "இதுல என்னப்பா சந்தேகம்? அப்படித் தானே தமிழ் சினிமா முதற்கொண்டு எல்லா டயலாக்-லயும் சொல்லிட்டு வராய்ங்க! ஏதோ புதுசா கேக்குறாப்புல கேக்குற?"

ஜிரா: "அட போப்பா! உனக்குத் தெரியாது! இதுக்கும் ஏதாச்சும் சங்கத் தமிழ்ப் பாட்டை எடுத்துக் காட்டி, அவன் பதிவு போட்டாலும் போட்டுருவான்! எல்லாரும் வந்து கும்மி அடிப்பாய்ங்க! அவன் சொல்லுறதும் நம்பறாப் போலத் தான் இருக்கும்! எனக்கே என் மேல சந்தேகம் வந்துரும்! அதான் முன்னாடியே உன்னைக் கேட்டுக்கிடறேன்!"

நண்பர்: "உம்...நீ ஆன்மீகப் பதிவு எழுதறத நிப்பாட்டிட்டே! காதல் குளிர், காதல் சளி-ன்னு எழுதினா இப்படித் தான் ஆவும்! நீ ஏன் ஆன்மீகப் பதிவை நிப்பாட்டினே? அதைச் சொல்லு மொதல்ல!"

ஜிரா: "ஓய், இது என்ன புதுப்பழக்கம்? கேள்வி எல்லாம் கேக்குற? பதில் மட்டும் தான் நீ சொல்லணும்! கேள்வி எல்லாம் நான் தான் கேப்பேன்! சரியா??"

நண்பர்: "அப்படீயா நண்பா! இதோ...இந்தச் சின்ன மலையில் படியேறிப் போனா, ஒரு "குளுகுளு" குகை வரும்! அதுக்குள்ளாற போயி பாரு! குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருக்கானா?-ன்னு உன் கேள்விக்கு விடை கிடைச்சிரும்!"

ஜிரா: "சங்கரா, அது எப்படிடா இவ்வளவு கரெக்ட்டா சொல்றே? இதெல்லாம் உனக்கு மட்டும் எப்படிடா தெரியுது?"



நண்பர்: "அலோ! விஷயம் தெரியாம பேசாதே! இப்போ நீ நிக்கற இடம் என்னா-ன்னு தெரியுமா?
இந்தக் குகையில தான் அலெக்சாண்டர் நக்கீரரை அடைச்சி வச்சாரு! அப்போ நக்கீரர் பாடின மியூசிக்கல் தான் புகழ் பெற்ற "The Murugan River Troops"! (திரு-முருகு-ஆற்றுப்-படை)! சும்மா கும்முன்னு மிலிட்டிரி சாங்! அந்த Beat-ஐக் கேட்டு ஓடியாந்து தான், முருகன் நக்கீரனைக் காப்பாத்தினாரு! தெரிஞ்சிக்கோ!"

ஜிரா: "ஓ! மிலிட்டிரி பாட்டா? அதான் எனக்கு முருகனை ரொம்ப பிடிச்சிருக்கு போல! நமக்கு எப்பமே மிலிட்டிரி-ன்னா தான் பிடிக்கும்! சாப்பாட்டில் கூட!"

நண்பர்: "சரி சரி போதும்! மிலிட்டிரி ஏப்பம் எல்லாம் அப்பறம் விட்டுக்கலாம்! மொதல்ல குகைக்குள்ளாற போயி உன் கேள்விக்குப் பதில் தெரிஞ்சிக்கிட்டு வா"

ஜிரா: "நீ உள்ள வரலையா?"

நண்பர்: "நீ உள்ளாற போயிட்டா, யாரு குகைக்குக் காவல் இருக்கறதாம்? எவன்-ன்னா தெரியாம குகையை மூடிட்டா, நீ உள்ளாற மாட்டிப்பியே!"

ஜிரா: "ஹேய்....Thanksடா! இங்கு உன்னை நான் பெறவே...என்ன தவம்...செய்து விட்டேன்"

நண்பர்: "போதும் போதும்; சட்புட்டுனு பதில் தெரிஞ்சிக்கிட்டு சீக்கிரமா வந்துடுப்பா ராசா!"


ஜிரா குளுகுளு குகைக்குள் நுழைகிறார். ஓம் ஓம்-ன்னு குகை முழுக்க சவுண்டு டிஜிட்டல் டால்பியில் கேட்குது! ஜிரா பயபக்தியுடன் கன்னத்துல போட்டுக்கறாரு! குகைக்குள்ளே குளிர்! வெறும் குளிர் தான்! காதல் குளிர் இல்ல! ஜிராவுக்கு மயிர்க் கூச்செறிகிறது! மயில் கூச்செறிகிறது!

ஆகா! ஆங்கே பெரிய, கரிய, மயில் வாகனத்தில்...வாவ்...ஜிராவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை! ராஜ கம்பீர நாடாளும் நாயகன் நம்ம முருகப் பெருமானா அது?


ஜிரா: "பச்சைக் கலாப - மயில் மேல் அமர்ந்து
இச்சைக்கு இனித்திடும் இகபர வேலா!
இன் தமிழ்ச் சீலா! வள்ளியின் லீலா!
என் சிவ பாலா! மருகனே மாலா!

(மனதிற்குள்: ச்சே! இதுக்குத் தான் அவன் கூட ரொம்ப பழகக் கூடாது-ன்னு சொல்லறது! மால்...மாலா-ன்னு வந்துருது பாரு!
வேணாம்! வேற எதுனா ரைமிங்கா போடுவோம்...ஆங்... அது தான் சரி.... )
கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா"

குரல்: "வாட்?..."

ஜிரா: "அடடா! நீயா முருகா என்னைத் தேடி வந்து காட்சி கொடுப்பது?"

குரல்: "ஹேய்! நான் ஒன்னியும் தேடி வரவில்லை! நீ தான் என்னைத் தேடி குகைக்குள்ளே வந்து, கோக்கோ கோலா-ன்னு கேலி பேசிக் கொண்டிருக்கிறாய்!"

ஜிரா: "ஆகா! கோபித்துக் கொள்ளாதே சண்முகா! தமிழோடு நீ மட்டும் தான் விளையாடணுமா?

கோ-ன்னா = உலகம்!
கோ-கோ-ன்னா = உலகை ஆளும் அரசே-ன்னு அர்த்தம்!
கையில் கோல் வேற வச்சிக்கிட்டு நிக்குறியா! கையில் வேல் இருந்தா வேலா! கோல் இருந்தால் கோலா!
அதான் கோ-கோ-கோலா-ன்னு... உணர்ச்சி வசப்பட்டு செந்தமிழில் முந்துற முழங்கிவிட்டேன் முருகா! "

குரல்: "அடப்பாவி! நீ மச்சியாள் குச்சியாள்-ன்னு பேசுவே-ன்னு முன்னமே சொல்லி இருக்காய்ங்க! ஆனா முருகனுக்கே கோக்கோ கோலா கொடுத்து, கோக்கோ கோலாவுக்கு புதுப்புது அர்த்தங்கள் கொடுத்துட்டியேப்பா!"


ஜிரா: "முருகா! சற்று இரு! என் தோழனையும் உள்ளே அழைக்கிறேன்! வெளியே காட்டிக்கலீன்னாலும் அவனுக்கு உன் மேல ரொம்பவே ஆசை! இரு, அவனும் உன்னைக் கண்ணாரக் கண்டு களிக்கட்டும்!"

குரல்: "வேணாம்! வேணாம்! அவன் சொல்லித் தான்....நானே இங்கே...அவனே இங்கே...நீயே இங்கே...."

ஜிரா: "என்ன முருகா இப்படித் தடுமாறுகிறாய்? தமிழ்க் கடவுள் தடுமாறலாமா? தடம் மாறலாமா? என்ன ஆயிற்று உனக்கு?
சரீரீரீரீ...அப்பவே கேக்கணும்-ன்னு நினைச்சேன்! உன்னோட குரல் ஏன் பெண் குரல் போல இருக்கு? முருகன்-னா இவ்வளவு மென்மையா?"

குரல்: "ஹேய்! உனக்கு எதுக்கு இந்த வேண்டாத ஆராய்ச்சி எல்லாம்? கள்ளியிலும் பால் வடியும்! என்னிலும் பெண்குரல் கேட்கும்! "கள்ளி மே தூத்" படம் பார்த்ததில்லையா நீ?
சரி போகட்டும்! உனக்குப் பிறந்த நாள் பரிசு அளிக்கச் சொல்லி எனக்குக் கட்டளை! என்ன வேண்டும்? கேள் ஜிரா!"

ஜிரா: "முருகா! உன் கிட்ட சொல்றத்துக்கு என்ன? வெட்கத்தை விட்டுச் சொல்றேன்! எனக்கு சில்க் கூடப் பேசணும் பழகணும்-ன்னு ரொம்ப நாளா ஆசை! அதுவும் அவங்க சின்னப் பாப்புவா வந்து, என்னைப் பாவா, பாவா-ன்னு கூப்பிடணும்-ன்னு ரொம்ப நாள் ஆசை!"

குரல்: "என்னே உன் தமிழ்த் தாகம்!"

ஜிரா: "இந்தக் கிண்டல் தானே வேணாங்குறது!"

குரல்: "சரி, சரி! சில்க்கை உமக்குத் தந்தோம்! என்னருகில் வா!
வா...ஜிரா...வா!
வா...பாவா...வா! "

ஜிரா: "வாட்! முருகா! ஏமி செப்தாவு நூவு? ஒள்ளு பாக லேதா? என்னைப் பார்த்து ஏன் பாவா என்று அழைக்கிறாய்? சரவண பவா தானே? சரவண பாவா இல்லையே!"

குரல்: "ஜிரா! என்னை நன்றாகப் பார்! நான் அழைத்த பாவா-வில் குற்றமா?"

ஜிரா: "ஹேய்! ஹேய்...உங்க கண்ணு! அந்தக் கண்ணு!......ஹேய், நீங்க சில்க் தானே?"



குரல்: "என்ன பாவா, அதைக் கண்டு பிடிக்க உங்களுக்கு இம்புட்டு நேரம் ஆச்சா? அதான் பொண்ணு குரல்-ன்னு அப்பவே சந்தேகமாக் கேட்டீங்களே! ஹாங்....அப்பறம் என்னவாம்?"

ஜிரா: "ஆஆஆ...நீ....நீங்க எப்படி முருகனா வந்தீங்க?"

சில்க்: "ஏன்...வரக் கூடாதா? ஸ்ரீதேவி முருகனா வந்தா மட்டும் படம் பாக்குறீங்க! இந்த சில்க்கு முருகனா வேசம் கட்டக் கூடாதா? தப்பா ஜிராஆஆ?"

ஜிரா: "சேச்சே! தப்பே இல்ல! ஆக்சுலி உங்க கண்ணு போலவே தான் முருகன் கண்ணும் இருக்கும்! உங்களைப் போலவே முருகனும் ரொம்ப சாஃப்ட்!
முருகன் இடுப்பு கூட உங்களைப் போலவே வளைஞ்சி ஒடிசலாத் தான் இருக்கும்! என்ன... அவரு கையில கூர் வேல்! உங்க கண்ணுல கூர் வேல்! அவ்ளோ தான் வித்தியாசம்!"

சில்க்: (மனதிற்குள்) அடப்பாவி ஜிரா! இப்படிக் கம்பேர் பண்ணி அந்த முருகனையே கவுத்துட்டியே! இதுக்கு அந்த கேஆரெஸ் பய புள்ள எவ்ளோ தேவலாம்! :)

ஜிரா: "என்னது கேஆரெஸ்-ஸா? அவனை உங்களுக்கு முன்னமே தெரியுமா? இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்தது அவன் தானா? அவனை....."

சில்க்: "ச்சீச்சீ! பாவம் அவரு! அவரும் பாவா தான்! அவரை ஒன்னும் சொல்லாதீங்க!
சரி....பொறந்த நாள் அதுவுமா என்னைப் பார்க்க வந்துட்டு வெறுங்கையோட போனா எப்படி? சின்னப் பாப்பு வச்சிருக்கும் திருப்பதி உண்டிக்கு டப்பு இச்சி பாவா! ஈ திருப்பதி உண்டி-ல உங்க கையால காணிக்கை வேஸ்கோண்டி பாவா!"

ஜிரா: "ஆகா! அப்படியே செஞ்சிட்டாப் போச்சி! சின்னப் பாப்புக்கு பிடிச்ச பெருமாள் தான் எனக்கும் ரொம்ப பிடிக்கும்! You know what? I actually like PerumaaL very much! :) சின்னப் பாப்புவுக்காகவே நான் கண்ணன் பாட்டு வலைப்பூவில் இருந்திருக்கேன் தெரியுமா? இந்தாங்க ஜிராவோட திருப்பதிக் காணிக்கை, 1008 Euros!" :)

சில்க்: "வாவ்! ஜிரா! நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு....."

ஜிரா: "ஆமாங்க..." (மனசுக்குள் கறுவிக் கொண்டே...ஆனா அவனுக்கு மட்டும் நான் நல்லவன் இல்ல...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)

சில்க்: "குகைக்குள்ள ஏதோ கேள்வி கேட்கணும்-ன்னு வந்தீங்களே ஜிரா! உங்க கேள்விக்கு பதில் தெரிஞ்சிடுச்சா? குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் தானே?"

வெளியில் இருந்து தோழன்: "சேச்சே! யாரு சொன்னா? குன்று இருக்கும் இடமெல்லாம்.....ஒங்களைப் போல....குமரி இருக்கும் இடம்!"
.......
ஓடும் சத்தம் கேட்க..... "டேய், ஓடாதே! நில்லுடா.....டேய்...." என்று ஜிரா நண்பனைத் துரத்திக் கொண்டு ஓட...

சில்க்: "ஹிஹி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா!"
நாமும்: "ஹிஹி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜிரா!"
May-27-2009! Happy Birthday Ragava! கோழிக் கொடியேந்தும் கோக்கோ கோலா! :)

இன்னிக்கி நடக்கும் மொத்த பார்ட்டிக்கும் பில்லு கட்டிய சந்தோசம், புள்ள முகத்துல :))

Read more »

Monday, May 25, 2009

தமிழ் ஈழம்: அடுத்து என்ன?

கால் நூற்றாண்டுப் போராட்டம், கணப் பொழுதில் முடிவுக்கு வந்து விட்டது! கோபம், வெறி, போர், உரிமை, நியாயம் என்ற பல உணர்ச்சிகளும், துரோகம் என்ற ஒரே உணர்ச்சியில் அத்தனையும் மங்கிப் போய் முடிந்து விட்டன! தமிழினம் வாங்கி வந்திருக்கும் பிரத்யேகமான வரம்/சாபம் இது! :(((
செம்மொழி செம்மொழி-ன்னு சொன்னாங்க! ஆனா இம்புட்டுச் சிவப்பா இரத்தம் தோய்ந்து இருக்கும் இந்தச் "செம்"மொழி-ன்னு அப்ப யாருக்கும் தெரியாமப் போனது தான் கொடுமை!!


இந்த இருபத்தைந்தாண்டு ஈழப் போரிலிருந்து வருங்காலத் தமிழ்ச் சந்ததியாகிய நாம் என்ன பாடம் படிக்கப் போகிறோம்?

* இன்றைய முதிய தமிழ்த் தலைமுறை, தமிழ்த் தலைவர்கள் நடந்து காட்டிய வழி தான் நமக்குமா?
* இல்லை...இளைய தமிழ்த் தலைமுறைக்கு, தானே சிந்தித்து எடுக்கும் ஆக்கப்பூர்வமான தனி வழியா?

ஆனால் இவை அத்தனைக்கும் முன்னதாக.....ஒரு நிமிடம்...
வன்முறையோ, மென்முறையோ,
அதைத் தனிப்பட்ட காரணத்துக்காகச் செய்யாமல், தன் குடும்ப முன்னேற்றத்துக்காகச் செய்யாமல்...
தன் இனத்தின் பொருட்டே களம் கண்ட ஒரு மனிதரின் மரணம்...புலிகள் இயக்கத்தாலேயே உறுதி செய்யப்பட்ட பின்பும், நம்பச் சற்றுக் கடினமாகத் தான் உள்ளது! :(

பேரம் பேசவே தெரியாத ஒரு "தீவிரத்" தமிழன்,
தலைவர். திருவேங்கடம். வேலுப்பிள்ளை. பிரபாகரனுக்கு வீர வணக்கம்! இதய அஞ்சலி!

உயர்ந்தோர்/ சான்றோர்/ நல்லோர்/ தலைவர்கள் இவர்களின் மறைவின் போது ஏற்றப்படும் மோட்ச தீபம் ஏற்றுவோம்!
இன்று வரை இறந்து பட்ட எம்முடை அனைத்து ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்த மோட்ச தீபம் ஏற்றுவோம்!

பிரபாகரன் மரணிக்கவில்லை என்று இன்னமும் நம்பும் சிலரும், அவர் மரணித்து விட்டார் என்று ஒப்புக் கொள்ளும் பலரும்...எது எப்படியோ போகட்டும்!
ஆனால், நீ இன்னமும் உயிருடன் இருந்தால்...அங்கேயே இருந்து கொள்! வெளியில் இப்போதைக்கு வந்து விடாதே! நீ மரணித்ததாகவே இருக்கட்டும்!

தமிழர் மீண்டும் உரிமை பெறுவார்கள் என்று இலங்கை அரசு "அறிவித்து" உள்ளது! இது பொய்யாகும் பட்சத்தில், தமிழகத் தலைவர்களும் அவர்கள் வாரிசுகளுமா களத்தில் இறங்கப் போகிறார்கள்?
அப்போது களத்தில் இறங்கத் தமிழருக்கென்று ஒருவன் தேவையில்லையா? நீ அப்போது வந்தால் போதும்! அது வரை.....உறக்கம் கொள்!



இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில், 30 லட்சம் பேர் தமிழர்கள்! இன்னொரு பத்து லட்சம் பேர் உலகின் பல தேசங்களில் வாழ்கிறார்கள்!
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று உலக நாடுகளை நம்ப வைத்து, வேலையும் முடித்துக் கொண்டாகி விட்டது! இனி மிஞ்சியிருப்பது தமிழர்களே! தீவிரவாதிகள் அல்ல அல்லவா? இனியாவது உலக நாடுகள் முன்னணிக்கு வந்து குரல் கொடுக்க வேண்டும்!

அதான் பேச்சுவார்த்தைக்கென்று போராளிகள் எவரும் இல்லையே! அரசாங்கத்திடம் தானே இனி நேரடிப் பேச்சு? அதனால் அரசாங்க-அரசாங்க அளவிலாவது இனி தாராளமாக முன் வரலாமே? முன் வர வேண்டும்! இந்தியா.....முன் வந்தே ஆக வேண்டும்!

ஈராக் மறு சீரமைப்பு என்று விதம் விதமாகப் பேசுபவர்கள், போர் முடிந்த பின், பொதுத் தொண்டு நிறுவனங்களை ஈராக்கில் அனுமதித்தார்களே! நட்பு நாடுகளை அனுமதித்தார்களே! அதே போலத் தானே ஈழமும்? தமிழக அரசும், இனி இது பற்றி "பேசவாவது" செய்ய வேண்டும்!


தமிழ் ஈழம்: அடுத்து என்ன?

1. தமிழக அரசு, இலங்கைத் தமிழர்களுக்கென்று ஒரு தனி அமைச்சகமோ, அட்லீஸ்ட் ஒரு வாரியமாவது ஏற்படுத்தி, கண்காணிப்புக் குழுவை உடனே உருவாக்க வேண்டும்!

இனி ஈழத் தமிழர்கள் சார்பாகப் பேச ஒருவர் கூட இல்லை! அதனால் இலங்கை அரசு அல்லாத இன்னொரு அதிகாரப் பூர்வ அமைப்பு தேவை!

இவர்கள் இலங்கையில் போய் பெருசா எதுவும் செய்திடப் போவதில்லை தான்! சட்டம் இயற்றப் போவதில்லை தான்! ஆனால் இலங்கை அரசுக்கு தமிழர்கள் சார்பாக ஆலோசனை சொல்லும் அமைப்பாக வாச்சும் செயல்படலாம்!
இலங்கை அரசின் நடவடிக்கைகளைச் சீர் தூக்கிப் பார்க்கும் அமைப்பாக இது இருக்க வேண்டும்! மாதம் ஒரு முறை, சட்டப் பேரவைக்கு, இதன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்! இதை இந்திய அரசுக்கும் சமர்பிக்க வேண்டும்!

சும்மா வெறுமனே "காப்பாத்துங்க காப்பாத்துங்க"-ன்னு தந்தி கொடுப்பதற்குப் பதில், இது தான் பிரச்சனை நம்பர் #10. அதுக்கு இது தான் தீர்வு, ஆனால் அதை இலங்கை அரசு நைசாக கண்டு கொள்ளவில்லை-ன்னு சொல்லக் கூடிய ஆக்கப்பூர்வமான வாரியமாக இயங்குவது எவ்வளவோ மேல்!

இதே அமைச்சகம் இலங்கையிலும் தேவை!
இவ்வளவு வாய் கிழியப் பேசும் இலங்கை அரசு, தமிழில் உரையாற்றும் ராஜபட்சே - இதெல்லாம் இப்போதைக்கு வெறும் பேச்சு தானே!
தமிழர் புனர் நிர்மாணத்துக்கென்றே ஒரு தனி அமைச்சகம் உருவாக்குமா இலங்கை அரசு?


2. Internally Displaced People-ஆம்! என்னமோ பேர் கொடுத்துக்கிட்டு போங்க! ஆனால் முகாம்களில் உள்ள அவங்க பேர், ஊர், குடும்பம், இதர விவரங்கள் அனைத்தும் ஐ.நா-விடமும், செஞ்சிலுவைச் சங்கத்திடமும் பகிரப் பட வேண்டும்! நாளை முகாமை விட்டு வெளியே போகும் போது கணக்கெடுக்க எளிதாக இருக்கும்! இலங்கை அரசின் மேலும் குறைந்தபட்ச நம்பகத்தன்மை வரும்!

3. இவர்கள் எத்தனை நாள் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பர் என்று முன் கூட்டியே சொல்லி, அந்த நாள் முடிவதற்கு முன்பாக இயல்பு வாழ்க்கைக்குத் திருப்பப்பட வேண்டும்! இதற்கு அரசிடம் உடன்படிக்கையோ, உறுதிமொழியோ வாங்க வேண்டும்!

4. ஒவ்வொரு பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்துக்கும் நிவாரணத் தொகை கொடுத்தே ஆக வேண்டும்!

நம்மூரில் வெள்ளம்/புயல் வந்தாலே, குடும்பத்துக்கு பத்தாயிரம் நிவாரணம், அது இது-ன்னு சொல்வாய்ங்க! இறந்தவர்க்கு ஒரு லட்சம்-ன்னு எல்லாம் நிர்ணயம் பண்ணுவாங்க! ஆனால் ஈழத் தமிழர்கள் பட்டது நூறு புயலைக் காட்டிலும் கொடுமையானது!

இந்தப் பணம், முகாம்களை விட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்களுக்கு முதல் ஆதாரமாக இருக்கும்! இதற்கு உலக வங்கியிடம் முயற்சித்துப் பணம் பெற வேண்டும்! இந்தியாவும் இதைத் தூண்ட வேண்டும்! பொருளாதார மேதை மன்மோகன் சிங் மற்றும் ப. சிதம்பரம் போன்றவர்கள் இதைக் கூடச் செய்யலைன்னா எப்படி? :((



5. பாழடைந்த தமிழ் நகரங்களைப் புனர் நிர்மாணிக்கும் பணியில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தினால் வேலை விரைவாக முடியும்!

இதை எல்லாம் தான் ஐ.நா-வில் எழுப்பலாமே? பாதுகாப்பு கவுன்சிலில் தான் அரசியல் எழுப்ப முடியாது! சீனாவும் ரஷ்யாவும் தடுக்கும்! இது போன்ற விஷயங்களை எழுப்பலாமே! அதான் UN-Rehab ன்னு அதுக்குன்னு கவுன்சில் இருக்கே!

6. ஈழத் தமிழருக்கு அவர்கள் குரலை எடுத்து ஒலிக்க அரசியல் கட்சிகள் தேவை! தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்-ன்னு வாய் கிழியப் பேசும் தமிழகக் கட்சிகள், ஈழத்தில் இப்போ போய் ஒரு பிராஞ்ச் ஓப்பன் பண்ண முன் வருவாங்களா? :))

சொல்ல வந்தது என்னவென்றால், புனர் நிர்மாணப் பணிகளுக்கு இடையில், மக்கள் தேர்ந்தெடுத்து நடத்தும் மாநில அரசாங்கத்தை அமைக்க, தேர்தல் திட்டங்கள் உடனடியாகத் தேவை!



7. ஈழத் தமிழர்கள் முகாமை விட்டு போன பிறகு என்ன பண்ணுவாங்க? எங்கிட்டு வேலை பார்ப்பாங்க? வேலை வாய்ப்பு? வெறுமனே சாஃப்ட்வேர் கம்பேனியா அவிங்களுக்கு ஆரம்பிக்க முடியும்?

சத்யம் கம்ப்யூட்டர்ஸ்-இல் எப்படி அரசு தலையிட்டதோ, அதே போல் இங்கும் தலையிட வேண்டும்! இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களும், தமிழகத் தொழிலதிபர்களும் கை கோர்க்க வேண்டும்! நாராயண மூர்த்தி போன்ற முன்னோடிகள் முன் ஓடி வர வேண்டும்!

ஒரு திட்டம் உருவாக்கிக் கொடுத்து, பெரிய அளவில் இல்லை என்றாலும், சிறு சிறு நிறுவனங்கள் துவங்க முன் வர வேண்டும்! கால் சென்ட்டர் துவங்கலாமே? காற்றாலைகள், அசெம்ப்ளி ப்ளாண்ட் என்று பலவற்றைச் செய்யலாம்! செய்ய முடியும்! மனம் தான் வேண்டும்!


8. மருத்துவத் தேவை இப்போது ஈழத்தில் அதிகம்! உடல் ஊனமுற்றோர், செத்தும் சாகாமால் இருப்போர், இவர்களை பொதுத் தொண்டு நிறுவனங்கள் தத்து எடுத்துக் கொள்ள வேண்டும்! சத்ய சாயி அமைப்பு, அன்னை தெரேசாவின் அமைப்பு போன்றவர்களிடம் இவர்களை அடையாளம் கண்டு ஒப்புவியுங்கள்! திருப்பதியில் இருக்கும் தேவஸ்தானத்தின் ஊனமுற்ற குழந்தைகள் நடைபயில் நிலையத்தில் (BIRRD) கொண்டு ஒப்புவியுங்கள்! கட்டைக் கால்களை விட்டு, மெல்லிய கால்-கருவி கொண்டு, நடக்கச் செய்து வருகிறார்களே!

9. பல லட்சம் ஈழக் குழந்தைகளின் கல்வி?

இவர்கள் எல்லாரும் வருங்காலத்தில் புலம் பெயரத் தான் வேணுமா? அது தான் அவர்கள் விதியா? இவர்கள் எதிர்காலம் தான் என்ன? பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம்? எரிந்து போன நூலகம்?
UNICEF, இதற்கென்றே ஈழத்தில் தனியாக ஒரு முகாம் அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் ஈழப் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடே செய்யலாம்!

10. ஈழத்தின் தொன்மையான வழிபாட்டுத் தலங்கள் சீரமைக்கும் பணியை World Heritage Foundation-இடம் கொடுத்து விடலாம்!
மக்களுக்கும் ஒரு பிடிமானம் வேண்டுமல்லவா? அவர்களுக்கு அரசியல் நம்பிக்கையில் அமைதி கிடைக்கிறதோ இல்லையோ, ஆண்டவன் நம்பிக்கையில் அமைதி கிடைக்கட்டும்!


இறுதியாக,
தமிழகத்தில்.....தலைநகரில்....ஈழத்துப் போராளிகள், உயிர் துறந்த தமிழ் மக்கள் என்று அத்தனை பேருக்கும் பொதுவான நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புங்கள்!
மாமன், மச்சான், மச்சினிக்கெல்லாம் நினைவுச் சின்னம் இருக்கு! உலகின் பல திசைக்கும் பரவித் துடித்த இந்த வரலாற்றுத் தியாகங்களுக்கு தக்க மரியாதை செய்யவாவது தமிழக அரசு இனி முன் வரட்டும்! நாளைய தலைமுறைக்கு, ஈழத்துக்கு இது வரை கொடுத்த பலியும் வலியும் தெரியட்டும்!

வாழ்வின் அடிப்படையே மானமுள்ள வாழ்வுரிமை தாங்க!
வாடகை வீட்டில் குடி இருக்கும் போதே வீட்டுக்காரரின் சின்னச் சின்ன அடாவடிகளைக் கூட தாங்கிக் கொள்ள மறுக்கிறோம்! Rent Control-ன்னு சட்டம் பேசறோம்!

வாழ்வின் அடிப்படையே மானமுள்ள வாழ்வுரிமை!
* அதற்காக இன்னொரு நான்கு லட்சம் தமிழர்களைக் காவு கொடுத்து,
* ஐந்தாம் ஈழப் போரை நடக்க விட்டு,
அந்த வாழ்வுரிமையை வாங்கும் அளவுக்கு இனி போக விட மாட்டோம்
என்ற சிந்தனை......இங்குள்ள தமிழினத் தலைவர்களுக்கு வரட்டும்! தமிழனுக்கும் கொஞ்சம் வரட்டும்!


மக்களே, பதிவில் சொல்லாது விட்ட இன்ன பிற யோசனைகளையும் சொல்லி உதவுங்கள்!
Read more »

Thursday, May 14, 2009

தமிழ்மணம்-5000! எந்த வலைப்பூ?

தமிழ்மணத்தில் 5000-வது வலைப்பூ...திரட்டப்பட்டுள்ளது! அது யாருதா இருக்கும்? எந்த வலைப்பூவா (பதிவா) இருக்கும்?
தமிழ்மணத்தின் 5000-வது பதிவு ஒரு ஆன்மீகப் பதிவு டோய்! :)
Hip Hip! Hurrah! Cheers! அரச மீனவன் பாட்டிலை ஓப்பன் பண்ணி ஆன்மீகப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்து சொல்லுங்க மக்கா!:)))


5000 வலைப்பதிவுகள் கொண்ட முதல் திரட்டி (தமிழில்) தமிழ்மணம் தான்! - இது வியத்தகு வளர்ச்சி! பெருமை மிக்க வளர்ச்சி!

இதனுடன் வளர்ந்தது வெறும் தமிழ்மணம் என்னும் ஒரு திரட்டி மட்டுமல்ல!
* தமிழ் வளர்ந்தது!
* தமிழில் எழுதும் பழக்கம் வளர்ந்தது!
* தமிழில் படிக்கும் பழக்கம் வளர்ந்தது!
* சண்டையிட்டாலும், தமிழில் சண்டையிடும் பழக்கமுமாய் வளர்ந்தது! :)

தமிழ் இணையச் சமூகம்! நிஜ சமூகத்தில் என்ன இருக்கோ, நல்லதோ, அல்லதோ, எல்லாமே இங்கும் இருக்கும்! ஆனால் தொடர்ந்து இனிமையான, சுவாரஸ்யமான பயணம் செய்வதில் தான் எல்லாமே இருக்கு!

60% சினிமா,
20% சிறுகதை,
10% தொடர்கதை,
5% துணுக்கு,
5% ஆறு வித்தியாசம் இத்யாதிகள்....
என்று மட்டுமே இருந்த தமிழ்ப் பத்திரிகை உலகில்...வருடும் தென்றலாய் ஒரு மாற்றம்!
அந்தந்தத் துறைஞர்கள், அதில் வல்லுநரோ இல்லையோ, துறை தோறும், துறை தோறும் தமிழில் எழுதுவது என்பது....ஒரு மகத்தான மாற்றம் அல்லவா?!!!

தமிழில் பல துறைகளும் ஒன்று சேரும் இடமாய் அல்லவோ இது வளர்ந்தது!
* ஆன்மீகம் முதல் அறிவியல் வரை...
* புகைப்படக் கலை முதல் பதிவர் புத்தகங்கள் வரை...
பல கப்பல்கள், படகுகள் ஒன்று சேர்ந்த இடம்! True Tamizh Portal! தமிழ்மணம் மெய்யாலுமே ஒரு தமிழ்த் துறைமுகம்!

பின்னாளில் பல திரட்டிகள்...தேன்கூடு, சங்கமம், தமிழிஷ் என்று பலவும் வந்தாலும்...தமிழ்மணம் ஒரு முன்னோடி!
இன்று தான் பல பிரபல பத்திரிகைகளும் நாளிதழ்களும் பின்னூட்டம் காண்கின்றன! ஆனால் அது பிளாக்கரில் இருந்தாலும், பின்னூட்டம்-ன்னா தமிழ்மணம் என்பது தானே ஆதி கால அரிச்சுவடி? :))

தமிழ்மணம் இன்னும் வளர்ச்சி பெற வேண்டும்! அதற்கு வாழ்த்துக்கள்!
முன்னோடிகள் முன்னாடி தான் ரெண்டு பெரிய சவால்கள் எப்பமே வரும்!
1. ஓய்வு பெறும் வயது :)
2. புதிய ஜனனம்! புதிய பிறப்பு!

தமிழ்மணம் என்பது நடிகர் திலகம் போலவோ சச்சின் டெண்டுல்கர் போலவோ தனி ஆள் கிடையாது, முதலாம் தெரிவைக் கைக்கொள்ள!
இரண்டாம் தெரிவான புதுமையைக் கைக்கொள்ள வேண்டும்! புதிய திரட்டிகளைத் தூக்கிச் சாப்பிட என்னென்ன செய்யலாம் என்று 2020 கணக்கைப் போட்ட வண்ணம் தமிழ்மணம் இருக்க வேண்டும்! அதற்கும் வாழ்த்துக்கள்!

பதிவர் பட்டறை, கருத்தரங்கு, FETNA என்பதை எல்லாம் தாண்டி, தமிழர்களின் ஒட்டு மொத்த குரலாய் தமிழ்மணம் மாற முடியுமா?
ஈழத்தில் இறுதிக் கட்டத்தைக் காணும் இந்த அவல நேரத்தில்...
இணைய உலகில் சாதிக்க முடிந்த தமிழனால், நிஜ உலகில் சாதிக்க முடியாமல் போனதே! - இது ஏன்?


* ஒரு திரட்டி பதிவுகளை மட்டும் தான் திரட்ட முடியுமா?
* வெள்ளை மாளிகை முன்போ, ஜார்ஜ் கோட்டை முன்போ, உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வைத் திரட்ட முடியாதா?
* ஒரு நாளைக்கு ஒரு பதிவர் என்ற முறையில் உண்ணாவிரதச் சங்கிலியை, உலகத்தின் அதிகார மையங்கள் முன் அரங்கேற்ற முடியாதா?
* அண்ணாவின் நூற்றாண்டில், தமிழர்கள் தினம் பத்து பேராய், இந்திக்கு மதம் மாறுவோம் என்று தமிழக அரசை மிரட்ட முடியாதா?
* பல திரட்டிகளும் ஒன்று சேர்ந்து, வெறுமனே உணர்ச்சிகளை மட்டுமன்றி, வசைபாடல்கள் மட்டுமன்றி, வெற்றிக்கான யோசனைகளைத் திரட்டித் தர முடியாதா?

திரட்டி - எழுத்தை மட்டுமே திரட்டுமா?
இந்தக் கேள்விக்கான விடை தெரியும் போது, தமிழர்களின் ஒட்டு மொத்த இணைய வெற்றிக்கு, தமிழ்மணம் போலவே, அந்தப் பதிலும் ஒரு முன்னோடியாய் இருக்கும்! அது வரை, ஈழம் இதயத்தில் முள்ளாய் இருக்கும்!


தமிழ்மணம் வலைப்பதிவுகளின் புள்ளிவிபரம்: (May 14, 2009, 20:00:00)

மொத்தப் பதிவுகள்: 5006
கடந்த ஒரு மாதத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 9150
கடந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 2308
கடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 316
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்: 305
பின்னூட்ட நிலவரம் காட்டப்படும் பதிவுகள்: 1599
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள்: 1749

தமிழ்மணத்தில் 5000வது வலைப்பூ...திரட்டப்பட்டுள்ளது! அது யாருதா இருக்கும்?-ன்னு கேட்டோம்-ல்ல? ஹிஹி!
தமிழ்மணத்தின் 5000வது பதிவு ஒரு ஆன்மீகப் பதிவாய் அமைஞ்சதில் என்னா ஒரு ஒற்றுமை பாத்தீங்களா? இனி எவனாச்சும் "ஏன் கேஆரெஸ்,ஆன்மீகப் பதிவு மட்டுமே எழுதறீங்க?"-ன்னு கேட்கட்டும் பார்க்கலாம்! :))

நம்ம அகில உலக ஆன்மீக சூப்பர் ஸ்டார், தமிழ்மண ஆரம்ப காலகட்டப் பின்னூட்டப் பிதாமகர், குமரனே அந்தப் பெருமைக்கு உரியவர்! :)

தமிழ்மணத்தின் 5000வது வலைப்பூ = உடையவர்!

கருவறைக்குள் தமிழையும், தமிழரையும் திரட்டிய ஒரு திரட்டி!
1000 ஆண்டுகளுக்கு முன்பே, ஆன்மீக அரசாங்கத்தில், ஒடுக்கப்பட்ட ஒரு மொழியையும் அதன் மக்களையும், அதே அரசாங்கத்துக்குள் நுழைத்துக் காட்டி, திருப்பு முனை ஏற்படுத்தியவர்!
இராமானுசர்!
அன்னார் பற்றிய வலைப்பூவே, 5000ஆவது வலைப்பூவாக அமைந்தது மட்டிலா மகிழ்ச்சி!
அவரைப் போலவே இதுவும் தமிழ்மணத் திருப்புமுனையாய் அமைய வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

Windows 7.0 இல், ஓம் என்னும் பிரணவத்தை, ஒருங்குறியில் ஓரெழுத்தாக கொண்டு வர முயன்ற நம் நா.கணேசன் ஐயா, தமிழ்மணம்-5000 பற்றிய சேதி சொன்னதில் இருந்து மட்டிலா மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
Read more »

Thursday, May 07, 2009

நரசிங்கத்தின் முன்னே பிரகலாதனா? அனுமனா?

பிரகலாதக் குழந்தைக்காக அல்லவா ஓடோடி வந்தான் இறைவன்? இரணியன் எந்த இடத்தைக் காட்டி குழந்தையை என்ன கேள்வி கேட்பானோ? அது பதிலுக்கு என்ன சொல்லுமோ? என்று பதபதைத்து, பார்க்குமிடம் எங்குமொரு நீக்கமற நிறைந்தது யாருக்காக? = பிரகலாதனுக்காகவா? அனுமனுக்காகவா? அட, அனுமன் எப்படிப்பா நரசிம்ம அவதாரத்தில் வந்தாரு? :)

இன்று சுதர்சன-நரசிம்ம ஜெயந்தி (May-07-2009)!
சுதர்சனம், நரசிம்மம் இரண்டுமே "உதித்த" நாள்! ஒரு திரு சிம்மம் வந்தாங்கு, "உதித்தது" உலகம் உய்ய!
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சுவாதியில் வருவது நரசிம்ம ஜெயந்தி! சாந்தமே உருவான சுவாதி நட்சத்திரக் காரவுங்க, அந்த சுவாதியிலா உக்கிரமே உருவான நரசிம்மர் உதித்தார்? :)

ஹிஹி! உண்மை என்னான்னா, பலர் நினைப்பது போல நரசிம்மம் உக்கிரமே அல்ல! நரசிம்ம பூசை பண்ணவே பல பேரு பயப்படுவாய்ங்க! சுத்த பத்தமா இருக்கணும்! ஏதாச்சும் தெரியாம தப்பு ஆயிட்டாக் கூட உக்கிரமா ஆயிடுவாரு, நமக்குத் தீங்காயிரும்-ன்னு தாங்களா நினைச்சிக்கிட்டு தயங்குவாங்க! இந்தப் பயமே தேவையில்லை!

ஏன்னா நரசிம்மப் பெருமாள் (ஆளரிப் பெருமாள்) அவ்வளவு அழகு, அவ்வளவு கருணை, அவ்வளவு வாத்சல்யம்! குளிக்காம கூட நரசிம்ம பூசை பண்ணி இருக்காங்க! மரத்தின் கீழ் சதா யோகத்தில் இருந்த நம்மாழ்வார் குளித்து விட்டா நரசிம்ம பூசனை செய்கிறார்?
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி - "எங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!
என்று பயந்து பூசிக்காமல், அகம் கரைந்து ஆளரியைப் பூசிக்கிறார் நம்ம மாறன்!

கல்யாணம் ஆகப் போவுது! மணப்பந்தலில் உட்கார்ந்து இருக்கும் அந்த இளம் பொண்ணு, "உக்கிரமான" நரசிம்மத்தை நினைக்குமா? "ரொமான்டிக்" கண்ணனை நினைக்குமா? ஹிஹி! இந்தப் பொண்ணு நரசிம்ம-ஆளரியைத் தான் நினைக்கிறாள் பாருங்க! :)
"அரி-முகன்" அச்சுதன் கைமேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!


இதில் இருந்து என்ன தெரிகிறது? ஐயோ நரசிம்ம உபாசனையா? நரசிம்ம பூஜையா?-ன்னு நீங்களா கண்டதையும் மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு பயப்படாதீர்கள்!
"என்ன பயந்துட்டியா? வாடா, என் கிட்டக்க வா" என்று கைகாட்டிக் கூப்பிடும் கோலம் தான் இன்றும் திருவல்லிக்கேணியில்! ஆஹ்வான ஹஸ்தம்! ஆ-வா என்னும் கைகள்!
அன்பே உருவான ஆளரி! அழகிய சிங்கன்! தெள்ளிய சிங்கன்!
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே!


பிரம்மனே,
* உன்னால் படைக்கப்பட்ட எந்த உயிராலும்
* வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ
* பகலோ, இரவோ
* வானமோ, பூமியோ
* மிருகமோ, மனிதனோ
* எந்த ஆயுதத்தாலும்...
* உயிருள்ளதோ, உயிரற்றதோ
* சிறு தேவதையோ, பெரு தேவதையோ
* தேவரோ, அசுரரோ...யாராலும் நான் சாகக் கூடாது!

எல்லா பதிவையும் ஒன்னாத் திரட்டி, ஒரே பக்கத்தில் தெரிய வைப்பது போல்...
எல்லா வரத்தையும் ஒன்னாத் திரட்டி, ஒரே லபக்கில் வாங்க நினைத்த நம்ம "அறிவாளி" தான் இரணியகசிபு! அவன் தான் திரட்டிகளின் ஆதி காலத் தந்தையோ? :)
"ஓ* இரணியகசிபுவே நம" என்று அகில உலகத்தையே உருட்டி மிரட்டி சொல்ல வைத்தாகி விட்டது! ஆனால் தன் இரத்த சம்பந்தத்தை மட்டும் சொல்ல வைக்க முடியவில்லை!

ஜய விஜயர்கள் இறை அடியார்கள் ஆயிற்றே! அவர்களுக்கு முகமன் சொல்லிட்டு, பணிவாகக் கேட்டறிந்து பெருமாளைச் சேவிப்போம்-ன்னு இல்லாமல், திமிராய் உள்ளே நுழைந்த சனகாதி முனிவர்கள்!

அன்றைக்கு அடியார்களுக்கு ஒரு முறை முகமன் சொல்லத் தவறியவர்கள், இன்று அன்றாடம் "இரணியகசிபுவே நம" என்கிறார்கள்! :))
இறைவன், எதை எதை, எப்படியெல்லாம் கோர்த்து விடுகிறான் பாருங்கள்! அவதாரம்-பிரகலாதன்-இரண்யகசிபு-ஜய விஜயர்கள் என்று அத்தனைக்கும் நடுவில், பணிவை மறந்த முனிகளுக்கும் தக்கதொரு பாடம்!

இதனை இதனான் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்! அவனிடமா கணக்கு போட்டு வாங்கிய வரம் செல்லும்? நீ dy/dx என்ற சிறு கணக்கு போட்டால், அவன் lim x->infinity என்ற பெருங்கணக்கு போட்டு விடுவானே! :)
* உன்னால் படைக்கப்பட்ட எந்த உயிராலும் = பிரம்மனுக்கும் மேலே ஒரு பகவான் உண்டு என்பதை பாவம் இரணியன் அறியவில்லை போலும்!
* வீட்டுக்கு உள்ளேயோ, வெளியேயோ = வாயிற்படியில்
* பகலோ, இரவோ = அந்தி மாலையில்
* வானமோ, பூமியோ = தொடைகளின் மேலே
* மிருகமோ, மனிதனோ = மிருக+மனிதன் = ஆள்+அரி

* எந்த ஆயுதத்தாலும் = கை நகத்தில் சுதர்சனாழ்வார் வந்து அமர...
* உயிருள்ளதோ, உயிரற்றதோ = வளரும் ஆனால் உயிர் அற்றதான நகங்களில்
* சிறு தேவதையோ, பெரு தேவதையோ = தெய்வங்களுக்கே தெய்வம் ஆனாலும் தெய்வம் என்ற சொல்லில் கூட அடைபடாதவன்
* தேவரோ அசுரரோ = தேவருக்கும் அசுரருக்கும் பொதுவில் நிற்கும் எம்பெருமான்...

ஆகா! அந்தக் குழந்தை கும்பாபிஷேகம் செய்த பின்னரா அவன் தூணில் சான்னித்யம் ஆனான்? மனத்தில் ஆழமாகச் சான்னித்யம் ஆனதால் அன்றோ, மற்றுள்ள அரக்க வீட்டிலும் சான்னித்யம் ஆனான்!
துஷ்ட நிக்ரஹ, சிஷ்ட பரிபாலனம் முடிந்தது! 24 நிமிடங்கள்! கடிகை நேரமே நிகழ்ந்த மிகக் குறுகிய கால அவதாரம் இது ஒன்றே!



இந்த குறுகிய கடிகை நேரத்தில் "உக்கிரம்" எங்கேயிருந்து வந்தது?
உக்கிரத்தைத் தணிக்க பதில் உக்கிரம் கொண்ட சரப மூர்த்தி, பல நாள் சண்டையிட்டு, நரசிங்கத்தைக் குத்திக் கிழித்தார் என்பதெல்லாம் பின்னாளைய புனைவு! அடித்து அடித்து இல்லாததை உண்மையாக்கும் கும்மி டெக்னிக்குகளில் இதுவும் ஒன்று! இன்னொரு சமயம் இது பற்றி விரிவாகச் சொல்கிறேன்!

* பிரம்மாவுக்கோ, ஆராயாமல் கொடுத்த குற்ற பயம்!
* ரிஷிகளுக்கோ, உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்கள் கர்ம யோகைத்தைக் கைவிட்ட குற்ற பயம்!
* தேவர்களுக்கோ, தங்கள் சுயநலம் பற்றிய குற்ற பயம்!
அவரவர் செய்த குற்றங்களுக்கு அவரவர் மனசாட்சியே குத்தியதால், எம்பெருமான் "உக்கிரமாய்" தெரிகிறான்!
ஆனால் கண்ணாடிக்கு ஏது உக்கிரம்? நீ எதுவோ, அதுவாகவே கண்ணாடியும் தெரிகிறது! கண்ணாடனும் தெரிகிறான்! :)

எல்லாரும் சூழ்ந்து கொண்டு குட்டிப் பிரகலாதனை மறைக்கிறார்களே! அதனால் அல்லவோ நரசிங்கம் பிடரியை உலுக்கி அங்கும் இங்கும் தேடுகிறது? இதுவா "உக்கிரம்"? சொல்லப் போனால் நரசிம்மத்துக்கு அசதியும் வருத்தமும் தான் அப்போது வந்ததாம்!

அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே


பந்தனை =அசதி, வருத்தம்! எதுக்கு பகவானுக்குப் போயி வருத்தம்?
குழந்தைக்குத் தந்தை இன்றிப் போனதே என்று வருத்தம்! அந்தத் தந்தை தன் சுய பிரதாபத்துக்குக் குழந்தையைப் பல வழிகளில் கொல்லத் துணிந்தான்!
அன்றோ தந்தையின் பாசம் இல்லாமல் போனது!
இன்றோ தந்தையே இல்லாமல் போனது!
அதான் பந்தனை = வருத்தம்! அந்த வருத்தம் தீரப் பல்லாண்டு பாடுவோம் என்கிறார் பெரியாழ்வார்! ஒரு ஜென்மத் தந்தைக்குப் பதிலாய் ஒவ்வொரு ஜென்மத் தந்தையாய் தானே இருக்க முடிவு செய்து விட்டான் இறைவன்!

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்...

இப்படி மற்ற சுயநலமிகள் எல்லாம் "உக்கிரம்" கண்டு பயப்பட...இறைவனோ "பந்தனை" என்னும் அசதியில் பக்தனுக்காக வாட...
பக்தனையும்-இறைவனையும், ஆச்சார்யனே(ளே) சேர்த்து வைக்கிறான்(ள்)!
பிரகலாதனுக்கு, இறைவனை, அலைமகளான மகாலக்ஷ்மியே ஆச்சார்யனாய் இருந்து பகவானைக் காட்டி வைக்கிறாள்!

லக்ஷ்மீ நாத சமாரம்பாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் என்பதல்லவோ குருபரம்பரை சுலோகம்! அவள் தானே ஆதி குரு! அதான் கூட்டத்தில் இருந்து குழந்தையை விலக்கி, அவனை முன்னே செல்விக்கிறாள் செல்வி!

"உன்னைத் தான்-ப்பா திரும்பிப் பார்த்து, திரும்பிப் பார்த்து தேடுறாரு! அதை உக்கிரம் என்று தப்பாக நினைச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க எல்லாரும்! நீ எதுக்கும் கவலைப்படாமல் முன்னே போ" என்று ஆற்றுப்படை செய்து வைக்கிறாள் அன்னை!
பிரகலாதனும் இறைவனுக்கு அருகில் சென்று, அணைப்பைப் பெற்று, பக்த சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ஆகி விட்டான்! இதோ அந்த முந்தைய பதிவு!


சரி, இதில் அனுமன் எங்கு வந்தான்?
இராமாவதாரம் நரசிம்மத்துக்குப் பல யுகம் கழித்து அல்லவா? அப்புறம் எப்படி-ன்னு யோசிக்கறீங்களா? அதுக்கு திருக்கடிகை என்னும் ஊருக்குப் போகணும்! வரீங்களா?
சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கபுரமே அந்தத் திருக்கடிகை! கரிகாற் சோழன் அமைத்த கடிகைக் கோட்டம்!

ஆளரி அவதாரம் நிகழ்ந்த போது சப்த ரிஷிகள் பயந்து நடுங்கி, எம்பெருமானின் வடிவழகைச் சேவிக்க முடியாமல் கோட்டை விட்டார்கள் அல்லவா? அதனால் மனம் வருந்தி மீண்டும் சேவிக்க விழைந்த போது, கடிகாசலம் என்னும் சோளிங்கபுர மலையிலே, யோகத்தில் இருக்கும் கோலத்தில், யோக நரசிம்மனாகக் காட்சி கொடுக்கிறான்! விஸ்வாமித்ரரும் இங்கே பிரம்ம ரிஷி பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறார்!

முனிவர்கள் இங்கே தவம் இயற்ற, இந்திரத்துய்மன் என்னும் மன்னன் அவர்கள் தவத்தைக் காக்கின்றான்! ஆனால் முனிவர்களுக்கு காலன், கேயன் என்ற இரு அசுரர்களின் தொல்லை அளவுக்கு மீறிப் போகிறது!
மன்னனால் வெறுமனே போர்ப் படைகளை மட்டும் வைத்துக் கொண்டு அசுரனின் மாயப் படையை ஒடுக்க முடியவில்லை! முனிவர்களைக் கலைத்து விஷயத்தைச் சொல்லவும் அவனுக்கு விரும்பவில்லை! யோக நரசிம்மரிடமே முறையிடுகிறான்!

இராமாவாதார முடிவில் இறைவனுடன் செல்லாமல், அடியார்களோடு அடியாராக, இங்கேயே தங்கி விட்டான் அல்லவா அனுமன்? அந்தப் பெரும் பக்திக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும் இராமனால்?
சீதையின் உயிரைக் காத்து, இலக்குவன் உயிரைக் காத்து, பரதனின் உயிரைக் காத்து, இதனால் இராமனின் உயிரையே காத்த ஒரு சிறிய திருவடி,
சுயநலமான மோட்சமும் வேண்டாம், எனக்கு அடியவர் தொடர்பே போதும் என்கிறது! இவனுக்கு என்ன செய்து நன்றிக் கடன் தீர்ப்பது?

சோளிங்கபுரம் - அனுமன் - மூலவர்


பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி என்று பிரகலாதனைப் பல யுகங்கள் முன்பே பட்டாபிஷேகம் செய்தாகி விட்டது! அனுமனுக்கு என்ன பட்டாபிஷேகம் செய்து வைப்பது? ஆங்! அது தான் சரி!
ஒவ்வொரு அவதாரத்திலும் தன்னை விட்டுப் பிரியாத சங்கு சக்கரங்களையே அனுமனிடம் கொடுத்து விடுகிறான்! தன் அடையாளத்தையே பக்தனின் அடையாளமாகவும் ஆக்கி விடுகிறான்!

அதை வைத்துக் கொண்டு இந்திரத்துய்ம மன்னனுக்கு உதவுமாறு, இறைவனே அனுமனைச் சோளிங்கபுரம் அனுப்பி வைக்கிறான்! பணி முடிந்ததும், அனுமனும் யோக நரசிம்மனைப் பார்த்தவாறு, யோக ஆஞ்சநேயனாக அமர்ந்து விடுகிறான்!
சின்ன மலையின் மேல் சிறிய திருவடியும், பெரிய மலையின் மேல் நரசிம்மனும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்கின்றனர்! அவர்கள் பார்த்துக் கொள்ளும் சாளரமும் (ஜன்னல்) இன்றும் உள்ளது!

இராமனை அன்றி வேறு ஒருவரையும் வணங்காதவர், கண்ணனைக் கூட வெறுமனே மதித்து விட்டு வணங்காது சென்றவர், அனுமன்! நரசிம்மப் பெருமாளான ஆளரியை மட்டும் வணங்கி வீற்றிருக்கிறார்!
இன்றும் அனுமனின் கைகளில் சங்கு சக்கரங்களைக் காணலாம்! அனுமன் சங்கு சக்கரங்கள் ஏந்திக் காட்சி தருகிறான்! ஒரு அடியவன் பகவானின் ரூபமாகவே ஆகிவிட்ட அபூர்வக் காட்சி, இங்கு மட்டுமே காண முடியும்!

சோளிங்கபுரம் - அனுமன் - உற்சவர்


இப்படி பக்தர்களுக்காகத் தன்னையும், தன் உடைமைகளையும் கூடக் கொடுத்து விடும் ஆளரிப் பெருமான் உக்கிர ரூபி அல்ல! சக்கர ரூபி! அக்காரக் கனி!
யோக ஆஞ்சநேயன் முன்னுறை, பிரகலாதக் குழந்தை உடனுறை ஆளரிப் பெருமாள் திருவடிகளே சரணம்!


குறிப்பு:
நண்பர் ரிஷான் மிக மோசமான உடல்நிலையில் இருந்ததை அறிவீர்கள். நச்சுணவு ஆகிப் போய் நீலம் பாய்ந்து இருந்ததாக அவர் தம் சகோதரி பஹீமா ஜெகானும் குழுமத்தில் சொல்லி இருந்தார்.
ரிஷான் நன்முறையில் உடல் நலம் தேறி, முன்பு போல் ஓடோடி வர, மருத்துவக் குளம் கொண்ட தக்கான், சோளிங்கபுரம் நரசிம்ம பெருமாளுக்கு அடியோங்கள் பிரார்த்தனைகள்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP